Tuesday 8 May 2018

வசுதைவ குடும்பம்


நிலங்களில் சஞ்சரிக்கும்
பயணி
விளையாட்டு
மைதானத்தில்
முதலில்
கேட்டான்
‘உலகம் ஒரு குடும்பம்’

மன மண்ணில்
விதையாய்
விருட்சமாய்
எழுந்தது
அச்சொல்

டிராக்டர் உழும் வயல்கள்
நீர் பீறிடும் மோட்டார் கொட்டகைகள்
குவித்துப் போட்டு உருளைக்கிழங்கு ஏற்றும் லாரிகள்
மூடை வெங்காய மண்டிகள்
முள்ளங்கி வயல்கள்
உப்பளங்கள்
மோட்டார் படகுகள்
விமான நிலையங்கள்
எஸ்கலேட்டர்கள்
என்ஜின் லோகோக்கள்
சுங்க சாவடிகள்
டூ வீலர் ஒர்க் ஷாப்கள்
ஷாப்பிங் மால்கள்
செருப்புக் கடைகள்
பொக்கே ஷாப்கள்
பத்திரிக்கை கட்டு ஏற்றும் லோடு வண்டிகள்
ராணுவ சோதனைச் சாவடிகள்
பதுங்கு குழிகள்
கசாப்புக் கடைகள்
ஆயுதபாணிகளின் பயிற்சி முகாம்கள்
சிறைச்சாலைகள்
ராக்கெட் ஏவுதளங்கள்
வேதி ஆலைகள்

எங்கும் பயணித்து

மைதானம் மீண்டான்

பெரு விரி வெளியில்
நடை பயிலா குழந்தை
மானுடரையும்
கோள்களையும்
மதியையும்
ஞாயிறையும்
சக ஆட்டக்காரர்களாய் கொண்டு
துவங்கியது
ஓர் ஆட்டத்தை