Monday 31 December 2018

ஒரு புதிய துவக்கம்

தோன்றித் தோன்றி மறையும் உலகம். தோன்றி மறையும் இன்பங்கள். தோன்றி மறையும் துன்பங்கள். வாழ்வென்னும் பேரொழுக்கில் மிதந்து சென்று கொண்டேயிருக்கிறது மானுடம். எத்தனையோ திருப்பங்கள். எத்தனையோ எதிர்பாரா சுழல்கள். ஒரு கணமும் இடைநில்லாமல் பயணிக்கிறது மானுடம். 

சாராம்சம் என்பது சாராம்சத்துக்கான தேடலே என்கிறார் ஆதிசங்கரர்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அதாவது
ஒற்றுமை பரவலாக ஏற்கப்பட்டு
ஒருங்கிணையும் சாத்தியங்கள் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு
பேதத்தை முன்நிறுத்தும் யுக்திகள்
தொலைதூரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு
சுமைதாங்கி கற்கள் அனைத்தும்
இறக்கப்பட்ட சுமைகளுடன் இருக்கையில்
அன்றும்
ஒரு பூங்காவில்
காற்றில் நிற்கும் பட்டாம்பூச்சி
சிறகுகளை அசைத்தது
குளத்தின் படிக்கட்டுக்கு அருகில்
மேற்பரப்பில் மிதக்கும்
அரிசிப் பொறியை
ஆர்வத்துடன் மீன்கள் தின்றன
அன்றும்
வெள்ளி முளைத்தது
அந்தி சாய்ந்தது

Sunday 30 December 2018

காலசந்தி

நீ
நிறைந்திருக்கும் வெளி
ஓர் அந்தியைப் போல
மெல்ல நுழைந்து
ஆழ் இரவாய்
அடர்கிறது
விண் மீன்கள் உதிரும்
மணியொலிகள் எழும்
பொழுதில்
நீ
பிரசவிக்கிறாய்
ஒரு மலரை
அதன் இதழிலிருந்து
ஒரு சூரியனை

மழையாவது

அன்பையும் சொல்லையும் இணைப்பது எப்படி என்பது இன்னும் தெரியாமலே இருக்கிறது
உனக்கு என்ன பரிசு தருவது என்பதை முடிவுசெய்ய முடியாமல்
வெறும் கைகளுடன் வந்து சேர்கிறேன்
எவ்வளவு
உணர்ந்த பின்னும்
உச்சரிக்கப்பட்ட
எத்தனை
சொற்களுக்கு அப்பாலும்
அகம் நொறுங்கும் வலியின் சத்தம்
ஒரு பேப்பர் வெயிட் தரையில் விழுவதாகவோ
உடையும் கண்ணாடி வளையல்களைப் போலவோ
அணிலின் இடையறாத கிரீச்சிடலாகவோ
மனதைப் பிசைகிறது
மேகத்துக்கும்
மண்ணுக்கும்
இடையில் இருப்பது தானே
மழை

உடனிருத்தல்

இவ்வளவு பிரம்மாண்டமான ஏரி
ஆங்காங்கே பறக்கின்றன தும்பிகள்
நீ ண்டிருக்கிறது கரை
துடுப்புகள் அமிழ
தெறிக்கிறது
ஒலி
தண்ணீர்
நகரும் படகில்
நீ மௌனம் சூடுகிறாய்
அஸ்தமனத்தின் மௌனம்
உன் நெற்றிப் பொட்டு
அந்திச் சூரியனின் செங்குழம்பில்
ஒரு துளியாகிறது
உன் விழிக் கோள ஈரம்
வானின்
கார்மேகமாகிறது

Saturday 29 December 2018

பரந்த
மிகப் பரந்த
கூடத்தில்
உன்னைத் தவிர யாருமற்ற
வீட்டில்
அந்த அந்திப் பொழுதின்
மௌனம் நிறையும்
சாநித்யத்தில்
உன் விரல்கள் மீட்டும்
வீணையின்
அதிர்வில்
ஒரு நுண் கணத்தில்
சிற் றகல் சுடர்
மெல்ல
அசைந்து
மீள்கிறது
நீ புன்னகைக்கிறாய்

Tuesday 25 December 2018

புள்ளே
புள்களின் கொற்றவனே
உன்னை வணங்குகிறேன்

முடிவிலியில் சயனிக்கும்
இறைவனை
தோள்களில்
சுமந்து கொண்டு
புறப்பாட்டுக்கு
வெளியே வரும்
உன்னைக்
கண்ட போது
உன் கண்களும்
உன் முக பாவனையும்
எனக்கு குதூகலம் தந்தன
உன்னை
அம்மாவிடம்
யார் என்று கேட்டேன்
கருடன்
என உன் பெயர்
அறிமுகம் ஆனது

பிரபந்தம் அறிந்த நாளில்
நீ எப்படி ஆழ்வார்
என்று கேட்டேன்

பின்னர்
பலப்பல நிலங்களில்
வான் பார்த்த போது
பெருவட்டமாய்
சுற்றிக் கொண்டிருந்தாய்

உச்சி மரங்களில்
அமைக்கப்பட்டிருந்த
உன் கூடுகளும்
உன் நிமிர்வும்
உன் தீர்க்கப் பார்வையும்
உன்னைப் புள்ளாகவும்
உன்னைக் கொற்றவனாகவும்
இரண்டுமாகவும்
இரண்டுமான ஒன்றாகவும்
காட்டின

மண்ணிலிருந்து விண்ணுக்கு
நீ எழுவதைக் காணும்தோறும்
அகம் எழுக
அகம் அழுக
என பிராத்திக்கிறேன்
என் இறையாய் உன்னிடம்

Wednesday 19 December 2018

சயனத் திருக்கோலம்

அடர் மேகங்கள் குழைந்து
கடலில்
மிதந்தன
அலை தொடா மேகம்
ஒன்றிலிருந்து
விண்ணுக்கு எழுந்தது
ஒரு தாவரத் தண்டு
அதன் உச்சியில்
காலாதீத மலர்
தேன் கொத்தும்
சிட்டின்
அலகில்
ஆங்காங்கே
ஒட்டிக் கொண்டு
அங்கங்கே
சிந்துகிறது
அலகிலாப்
பிரபஞ்சம்

Tuesday 18 December 2018

பணி நிமித்தம்
ஊர் நீங்கிச் செல்லும்
நண்பனுக்கு
விடை கொடுக்கும் முன்
நுரை பொங்கும் அலை கடலின்
கரையில்
பாதங்கள் கரைய
நின்றிருந்தோம்

புதிதாய் நிகழும்
ஒரு புதிய துவக்கம்
எதிர்பார்ப்புகளின்
சாத்தியக் கூறுகளை
அதிகரித்துக் கொண்டே
சென்றது

விளையாட்டுச் சிறுவன்
ஒருவன்
விரல்களிலிருந்து
விடுபட்ட
பலூனை
காற்றில் துழாவி
ஓடிக்கொண்டிருந்தான்

அத்தருணம்
அக்கறைகளை வெளிப்படுத்தவோ
பிரியத்தைச் சொற்களாக்கவோ
உணர்வுகளைப் பகிரவோ
முழுக்க
தோதாய் இல்லாமல் இருந்தது

விடை கொடுக்க
நீட்டிய
கரத்தை
என் கரங்களுக்குள்
வைத்துக் கொண்டேன்

வீடு திரும்பிய பின்
ஒட்டிக் கொண்டு
வந்து சேர்ந்த
கடல் மணல் போல்
ஈரமாயிருந்தன
நட்பின் நினைவுகள்

Monday 17 December 2018

பிசுபிசுக்கும்
இலைகள்
மூடிய தடாகத்தில்
பார்வையில் படாத மீன்கள்
சலம்புகின்றன
நீர் ஒலியாய்

அந்தரத்தில் தெறிக்கும்
துளிகள்
ஒளிக்கதிர் வாங்கி
அமர்ந்து
பின்னர் நகர்கின்றன
ஆழத்து மீன்களாய்

Sunday 16 December 2018

பின்னர்
அனைத்தும்
எதிர்பார்த்தபடி நடந்தது
சிலர் மகிழ்ந்தார்கள்
சிலர் கண்ணீர் சிந்தினார்கள்
ஒரு சிலர் குருதி கூட கொட்டப்பட்டது
ஒரு முடிவு
அல்லது
ஒரு தற்காலிக முடிவு
ஏற்படுத்தப்பட்டிருந்தது
நடமாட்டம் நின்றிருந்த
இரவு நேரக் கடைத்தெருவில்
மெல்ல
மெல்ல
நடந்து கடக்கிறான்
ஒரு நாடோடி
நூதனமான ஒரு நாடோடி
பனி பெய்யும் பொழுதில்
காலை நடையில்
திருத்தமான பெண் முகம் போல்
அழகாய்
ஆர்வமாய்
நம்பிக்கையாய்
புன்னகைக்கின்றன
ஈரத் தரையில்
இடப்பட்டிருக்கும்
வெண்ணிறக் கோலங்கள்

Saturday 15 December 2018

யார் இவர்கள்

யார் இவர்கள்

உடன் நடந்து செல்லும்
யார் இவர்கள்

கீரைக்கூடையைத் தலையில் ஏற்ற கை கொடுக்கச் சொல்லும் பெண்மணி
தள்ளுவண்டியில் ரேடியோ கேட்டுக் கொண்டே காய்கறி விற்கும் முதியவர்
ரயில் நிலையத்தில்
கையில் ஒரு குழந்தையைப் பிடித்துக் கொண்டு
இடுப்பில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு
அவசரமாக டிக்கெட் எடுத்து
ரயில் நோக்கி விரையும் இளம்பெண்
மோட்டார் வாகனத்தில்
நானாவித அலுவல்களால்
ஊரைச்
சுற்றி சுற்றி
வருபவர்கள்
நீலச் சீருடை அணிந்த
பச்சைக் கொடி காட்டும்
அதிகாரி
மைதானத்தில் ரயிலுக்கு இணையாக ஓடி
கை காட்டி மகிழும்
குழந்தைகள்

யார் இவர்கள்
நான் இவர்கள்
என்றும் பார்க்கும்
மைதானத்தில்
செத்தப்பட்ட புல்வெளியில்
வட்டக் கோலம் போல
அமர்ந்திருகிறது
வெண்ணிற
தடுப்பு மருந்து

செருப்புக் கால்கள்
நடந்து
நடந்து
வெளுத்துக் கிடக்கின்றன
எப்போதும்
பச்சையாய்
முளைக்கும்
இளம்புற்கள்

ஒல்லியான மனிதன்
ஏந்தியிருக்கும்
பதாகையில்
வண்ண வண்ணமாய்
கூலிங் கிளாஸ்களும்
கைக்கடிகாரங்களும்

ஒட்டும் பஞ்சு மிட்டாய்
இனிப்பின்
அளவுக்கே
புதிரும்
இருக்கிறது
ஒரு குச்சியில்
நுரை போல
மிட்டாய்
கொள்ளும்
சுற்று

எல்லாரும் பக்கத்தில் இருந்தாலும்
சிறுவர்கள்
பரஸ்பரம்
லேசாக
அஞ்சவே செய்கின்றனர்
பச்சக் காளியையும்
பவளக் காளியையும்

மனிதர்களை விட
திணறித் திணறியே
நகர்கிறது
சாமியும்
ஊர்வலத்தில்

வாணம்
மேலேறும்
சீறும் சத்தம்
எல்லார் மனதிலும்
இருக்கிறது
அடுத்த ஆண்டு வரை

யாருமற்ற மைதானத்தில்
முதலில்
எட்டிப் பார்க்கிறது
ஒரு முந்திரிக்கொட்டை புல்

Friday 14 December 2018

இன்னும் சற்று தூரம்

இன்னும் சற்று தூரம் தான் இருக்கிறது
நாம் சென்று சேர வேண்டிய இடம் வந்து விடும்
பாட்டி வீடு
மாமா வீடு
சித்தி வீடு
அருண் இருப்பான்
செல்வி இருப்பாள்
லீவுக்கு ஊருக்கு வந்த பசங்க இருப்பாங்க
தீமிதி
திருவிழா
பலூன் வாங்கித் தரேன்
பஞ்சு மிட்டாய் வாங்கித் தரேன்
இன்னும் கொஞ்ச நாள்ல
நம்ம கஷ்டம்லாம் சரியாயிடும்

நம்பிக்கையின்மையிலிருந்து
நம்பிக்கைக்கு
அம்மாக்கள்
நடந்து கொண்டேயிருக்கிறார்கள்

நம்மையும் கூட்டிக் கொண்டு

Thursday 13 December 2018

என்னால் உங்களுக்கு

என்னால்
உங்களுக்கு
என்ன தர இயலும்?

என் சொற்கள்
மனதில் மிதக்கும் சொற்களை
என் சொற்களை

ஓர் ஓலைக் கிளியாக்கித் தருகிறேன்

சப்பரமாக்கித் தருகிறேன்

கண்ணாடி வளையல்களாக்கித் தருகிறேன்

பதநீராக்கித் தருகிறேன்

விதைகளாகத் தருகிறேன்

ஒரு பேப்பர் வெயிட்டாகத் தருகிறேன்

ஒரு தீக்குச்சியாகத் தருகிறேன்

அல்லது

ஒரு வானவில்லைத் தருகிறேன்

என்னால்
உங்களுக்கு
என்ன தர இயலும்?  

Monday 10 December 2018

எங்கும் நிறைகிறாய்
நீ
இருள் ஆழங்களின்
அடியில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
மின்மினியின்
ஒளித்துகள் போல
இன்னும் நம்புவதற்கு
இருக்கிறதென
உனது சொல்கள்
எப்படியோ
சொல்கின்றன
புன்னகைக்கும் போது
உன் முகத்தில் தோன்றும்
உணர்வு
பல பல மடங்குகளாய்
பிறை ஒளியில்
தென்படுவதை
வானில்
தற்செயலாய்
கண்டேன்
நுரை அலைகள்
மணலில்
மோதிய போது
கடலில்
நடந்த
சில அடிகளில்
உணர்ந்த சூழ்கை
எப்படியோ
உன் அருகாமையை
நினைத்துக் கொள்ளச் செய்தது

உன்னிடம்
நான் இன்னும்
கண்ணீர்
சிந்த வேண்டியிருக்கிறது

உன்னிடம்
நான் இன்னும்
என் குருதியை
பலியிட வேண்டியிருக்கிறது.

தினமும்
நடக்கும்
நிழற்சாலையில்
ஒருநாள்
நேற்றில்லாத
ஒருநாள்
சாலையில்
ஒட்டிக் கொண்டு
கிடந்தன
காற்றில் அசைந்து கொண்டிருந்த
வேப்பிலைகள்
கருவறை
நீங்கிய
ஈரம் உலராத குழந்தைகள்
அழுகையொலி போல
மெல்ல எழுகின்றன
பனி நீங்கிய
வெயிலில்

Sunday 9 December 2018

திறந்திருக்கும்
ஆற்று வாயில்
நுழைந்து கொண்டே யிருக்கிறது
அலை கடல்
சட்டென
கவிந்து விட்ட
அந்த அந்தியில்
மணலில்
நடந்து வரும்
பெண்ணின்
வண்ண ஆடை
அவளின்
கட்டுப்பாடுகளைத் தாண்டி
திசை யெங்கும்
பறக்கிறது
நின்றிருக்கும் மரத்தின்
இலைகள் போல

Saturday 8 December 2018

கன்னத்தில்

சீண்டி
திட்டமிட்ட
வேட்டைக் கண்ணிகளை
வகுத்தமைத்து
வார்க்கப்பட்ட
வெவ் வேறு
படைக்கலன்களால்
நுட்பமாகத்
தாக்கி
மீளும் போது

உன்
விழிச் சுனைகளில்
பொங்கும் நீர்
பயணிக்கும் தடம்
கடல் வரை
நீள்கிறது

முத்தமிடும் போது
கன்னத்தில்
மெல்ல நகரும்
லாவா மணம்

Thursday 6 December 2018

சாகித்ய அகாதெமி விருது : எஸ். ராமகிருஷ்ணன்


எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியை அறிந்ததும், ஒரு படைப்பாளி சமூகத்தின் பண்பாட்டுச் சூழலில் பலவிதமான ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கிய படைப்பாளி தமிழ்ச்சூழலில் எத்தனை ஆண்டுகள் கடந்து சமூகம் அளிக்கும் கௌரவத்தைப் பெறுகிறார் என்று எண்ணிய போது மனம் ஒரு கணம் திகைத்தது. பல பழைய ஞாபகங்கள் மனதில் எழுந்தன. அவரது எழுத்துக்களை கல்லூரி நாட்களிலிருந்து வாசித்திருக்கிறேன். அட்சரம் இதழில் ‘’உலகில் காலூன்றாத எனது வீடு’’ என்ற கட்டுரையும் ‘’இரு குரல்கள்’’ என்ற சிறுகதையும் வாசித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. பாக்தாத் குண்டுவீச்சுக்கு ஆளான போது எஸ். ரா, ‘’ஷீரசாத் கதை சொல்வதை நிறுத்தி விட்டாள்’’ என்று எழுதினார்.

தமிழ் சிற்றிதழ் வாசகனான நான், ஆனந்த விகடனில் ஜெயமோகன் ‘’சங்கச் சித்திரங்களும்’’ எஸ். ராமகிருஷ்ணன் ‘’துணையெழுத்தும்’’ எழுதிய போது அவற்றைத் தொடர்ந்து வாங்கி தொடர் வெளியாகும் பக்கங்களைக் கத்தரித்து வைத்திருந்து தொடர் நிறைவுபெற்றதும் அவற்றைப் பைண்ட் செய்து கொண்டேன். பென்னி குயிக் குறித்து அவர் எழுதிய கட்டுரை ஒரு கட்டுமானப் பொறியாளராக என்னால் மறக்க இயலாதது.

‘’உப பாண்டவம்’’ நாவல் வெளியான போது, அதை வாசித்த ஒவ்வொரு நாளுமே பெரும் பரவசத்தாலானது. ‘’ஒரு சொல்லாகத்தான் எனக்கு மகாபாரதம் முதலில் அறிமுகமானது’’ என்ற முன்னுரையிலிருந்தே அந்த நாவல் துவங்கி விட்டதாக எண்ணுவேன். ‘’துரியோதனன் இன்னும் யுத்த களத்திற்குள் பிரவேசிக்கவில்லை எனப் பதற்றமுறும் மனிதர்களில்’’ நானும் ஒருவனானேன். டெல்லியின் இந்திய இராணுவ குதிரைப்படையும் ஹரித்வாரின் படித்துறைகளும் ஒரு கனவாகவே அகத்தில் ஆழ்ந்தது.

உலக இலக்கியம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு இளம் வாசகர்களுக்கு வழிகாட்டப் போகிறவை. இந்தியாவின் பண்பாட்டுச் சாதனைகள் குறித்தும் இந்திய விடுதலைப் போராட்டம் குறித்தும் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் தமிழ் மக்கள் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. அவரது பயணக்கட்டுரைகளின் ஜீவனாக இருப்பது இந்திய ஒருமைப்பாடே. மண்ணும் மனிதர்களும் அவரது பயணக்கட்டுரைகளில் பதிவாகும் விதம் அலாதியானது.

கல்வி குறித்து அவர் எழுதியுள்ள விஷயங்கள் சமூகத்தாலும் அரசாலும் பரிசீலிக்கப்பட வேண்டியவை.

வாழ்த்துக்கள் திரு. எஸ். ராமகிருஷ்ணன்  

Wednesday 5 December 2018

பறவையின்
மிரண்ட விழிகளைப் போல
அங்கும் இங்கும்
அலைந்து கொண்டு
புராதான ஆலயத்தின்
மூடப்பட்டிருக்கும்
பொக்கிஷப் பெட்டியின்
இருளுக்குள் ஒளிரும்
ஆபரண ஒளியாய்
மறைந்திருந்து
ஒரு தற்காலிக விடுபடல்
அளிக்கும்
சிறிய அவகாசத்தில்
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
கை விடப்படுகிறது
நீர் ஈரம் காய்வதற்குள்
ஒரு கையில்
முளைக்கிறது
ஓடு
எப்போதாவது நிரம்பும்
ஓடு

Monday 3 December 2018

கடைத்தெரு நாற்சந்தியில்
முதற்பார்வைக்கு
கண்ணில் படாத
உள்ளடிங்கிய
ஷா நவாஸ்
வெற்றிலைக் கடையில்
வெள்ளி முளைக்கும் முன்பிருந்து
கேட்கிறது
சின்ன மௌலானா நாதஸ்வரம்

தாம்பூலப் பக்குவத்தில்
தன் டேப் ரிகாடரில்
ஒலியை தகவமைத்து
புலரியைப் போல
கடைத்தெருவில்
நிறைகிறார்
ஷா நவாஸ்

மிலிட்டரி பச்சையில்
மிடுக்கோடு
வீர வாள் தரித்திருக்கும்
கண்ணாடி போட்ட
சுபாஷ் போஸ்
படமும்
மலர்ந்திருக்கும்
வெற்றிலை அடுக்கும்
சீவல் மணமும்

அப்படியே
அங்கேயே
இருக்கின்றன
பல பல
வருடங்களாக
சின்ன மௌலானா
வாசித்த
நாகஸ்வர இசை
போல

Sunday 2 December 2018

சினேகம் கொள்ளும்
இந்த அதிகாலைப் பொழுது
தெரு முக்கில்

வாண வேடிக்கை போல
திடீரெனத் தோன்றும்
சேவலின் கூவலில்

வாலை
இங்கும் அங்கும்
அடித்துத் துடிக்கும்
கெண்டை மீன் போல
பளபளக்கும்
வெள்ளியில்

எதிர்ப்படும்
யாவற்றிலும்
காணக் கிடைக்கிறது
நம்பிக்கை

பனிநீர்
துளிர்க்கும்
தளிர்
நம்பிக்கை