Saturday 31 December 2022

ஆண்டு நிறைவு

தை மாதத்தில் ஒரு கட்டுமானப் பணியைத் துவக்குகிறேன். அந்த மனையில் புல் மண்டி இருந்தது. எனது நண்பர் ஒருவர் ’’ஸ்வதர்மா கோசாலை’’ என்ற கோசாலையை நடத்தி வருகிறார். அதில் கிர், காங்கரேஜ், தார்பார்க்கர் வகை நாட்டு மாடுகள் இருபது உள்ளன. நண்பர் ரசாயன உரங்கள் இல்லாமல் முற்றிலும் பசுஞ்சாணத்தை உரமாகப் பயன்படுத்தி விவசாயம் செய்கிறார். அவ்வப்போது அந்த கோசாலைக்கு நான் செல்வதுண்டு. 

இன்று ஆண்டின் நிறைவு நாள் என்பதால் நினைவில் நிற்கும் விதமாக ஏதேனும் செயல் புரியலாம் என எண்ணினேன். கட்டுமான இடத்தில் வளர்ந்திருக்கும் புல்லை அறுத்துக் கொண்டு போய் கோசாலையில் உள்ள மாடுகளுக்குக் கொடுக்கலாம் என எண்ணினேன். புல் அறுக்கும் இரண்டு அரிவாள்களை ஏற்பாடு செய்து கொண்டு மனைக்குச் சென்றேன். உதவிக்கு ஒரு நண்பரும் வந்திருந்தார். இருபது மாடுகளுக்குத் தேவையான அளவு கணிசமான புல்லை அறுத்துக் கொண்டோம். நண்பர் பெரிய அளவில் உதவினார். சாக்குப்பையில் புல்லைக் கட்டி எடுத்துக் கொண்டேன். இரு சக்கர வாகனத்தில் ஸ்பீடாமீட்டர் பெட்ரோல் டேங்க் மேல் சாக்குப்பையை வைத்தேன். கட்டுமானத் துறையில் இருப்பதால் எந்த பொருளையும் வண்டியில் கட்டி எடுத்துச் செல்லும் பழக்கம் உண்டு. வழக்கமாக செல்லும் வேகத்தைக் குறைத்துக் கொண்டால் எத்தனை எடை கொண்ட பொருளாக இருந்தாலும் எடுத்துச் சென்று விடலாம். கோசாலைக்கு சென்று அங்கே உள்ள மாடுகளுக்கு புல்லை அளித்தேன். கட்டுமான இடத்தில் இன்னும் நிறைய புல் இருப்பது நினைவுக்கு வந்தது. நாளை பணியாளர் எவரையேனும் காலைப் பொழுதில் நியமித்தால் அங்கே உள்ள புல் அத்தனையையும் அறுத்து கோசாலை மாடுகளுக்கு அளிக்கலாம் என்று தோன்றியது. ஏதாவது ஒன்றை செய்யத் துவங்கினால் அது அடுத்த பணிக்கான துவக்கத்தை தானே உருவாக்கி விடும். இதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். 


 3 ஏக்கரில் தேக்கு பயிரிட்டிருக்கும் நண்பரின் வயலுக்குச் சென்றேன். நண்பரும் நானும் சேர்ந்து மழைக்காலம் முடிந்ததற்குப் பின்னால் இருக்கும் நிலை குறித்து தேக்குக் கன்றுகளை ( இப்போது மரங்கள் என்று சொல்ல முடியும்) பார்வையிட்டவாறு விவாதித்தோம். 


பசுக்கள் மனிதர்களிடம் மிகவும் பிரியம் மிகுந்த ஜீவன்கள். அவற்றுடன் செலவிட்ட நேரம் என்பது மனத்துக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதனால் ஆண்டு நிறைவு இனிமையாய் அமைந்தது. 

Friday 30 December 2022

மாநதி

இன்று ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ பயணக் கட்டுரையை வாசித்து விட்டு ஒரு வாசகர் அலைபேசியில் அழைத்து தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். நம் நாட்டில் நாம் இந்தியர்கள் நம்மால் முழுமையாக வகுத்துக் கூறி விட இயலாத விதத்தில் நம் மண்ணுடன் உணர்வுபூர்வமாக இணைந்துள்ளோம். பூமாதேவி நம் மீது எப்போதும் கருணையும் பிரியமும் காட்டும் தெய்வம் என்பதை மகவாயிருப்பதிலிருந்து கேட்டு வளர்கிறோம். நமது மரபு நம் மண்ணை நம் நிலத்தை நம் கிராமத்தை நம் நகரத்தை நம் நாட்டைக் ‘’கர்ம பூமி’’ என்கிறது. செயல்களால் உயிரின் நிறைநிலையை உணரச் செய்யும் பூமி. நம் நாட்டில் காலை எழுந்தவுடன் நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஏழு நதிகளை நினைத்துக் கொள்ளச் சொல்வார்கள். கங்கை யமுனை சரஸ்வதி சிந்து காவேரி நர்மதா கோதாவரி. நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஏழு நகரங்களை நினைத்துக் கொள்ளச் சொல்வார்கள். அயோத்தி மதுரா மாயா காசி காஞ்சி அவந்தி துவாரகா. 

பாரதி நம் நாட்டைப் பற்றிக் கூறுகையில் ‘’பூரண ஞானம் பொலிந்த நன்னாடு ; புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு’’ என்கிறான். இமயம் முதல் குமரி வரை இந்த நாட்டின் ஒவ்வொரு துளியும் அதனை உறுதி செய்கிறது.  

Wednesday 28 December 2022

நன்றி

என்னுடைய வலைப்பூவின் வாசகர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். ‘’காவிரி போற்றுதும்’’ தொடர்பான சிறு சிறு பணிகளைக் கூட நான் பதிவு செய்வேன். எனினும் 14 மரங்கள் தொடர்பான எந்த விஷயத்தையும் நான் 15 மாதங்களுக்கு மேலாக பதிவு செய்யாமல் இருந்தேன்.  மென்மையான அகம் கொண்ட எவருக்கும் அந்த 14 மரங்கள் வெட்டப்பட்ட விதம் அதிர்ச்சியளிக்கக்கூடும் என்பதால் அதனைப் பற்றி எதுவும் எழுதாமல் இருந்தேன். தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலை உண்டான போது அதைப் பற்றி எழுத வேண்டியதாயிற்று. அது எழுதப்பட்டதிலிருந்து இன்று வரை பலர் என்னைத் தொடர்பு கொண்டு ‘’நாங்கள் உடனிருக்கிறோம்’’ என்று தெரிவித்து வருகிறார்கள். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளை தங்கள் பணியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் எனக்கு மிக நெருக்கமான நண்பர்கள். கணிசமானோர் இந்த விஷயத்தை அறிந்த பின் என்னுடன் தொடர்பு கொண்டு நண்பர்கள் ஆனவர்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை பேரின் அன்பும் அக்கறையும் பிரியமும் கரிசனமும் என்னை மேலும் பொறுப்புள்ளவனாக ஆக்குகிறது. 

நாம் பலவிதங்களிலும் இந்த விஷயத்துக்குத் தொடர்ந்து நியாயம் கேட்கப் போகிறோம். 

Tuesday 27 December 2022

கீழ்சூரியமூலை / திருக்கோடிக்காவல்

உ.வே.சா வின் ‘’என் சரித்திரத்தில்’’ கீழ்சூரியமூலை என்ற கிராமம் குறிப்பிடப்பட்டிருக்கும். அவரது அன்னையின் ஊர் கீழ்சூரியமூலை. அங்கே வசித்த தனது பாட்டனார் கிருஷ்ண சாஸ்திரிகள் குறித்து உ.வே.சா அவர்கள் தனது ‘’என் சரித்திரம்’’ நூலில் குறிப்பிடுகிறார். அதிகாலையிலிருந்து உச்சிப் பொழுது வரை சிவ நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்து விட்டு உச்சிப் பொழுதுக்குப் பின் உணவு உண்பதை தனது வழக்கமாக வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தவர் கிருஷ்ண சாஸ்திரிகள் என உ.வே.சா சொல்கிறார். ஒருநாள் தனது இயல்பான ஆர்வத்தின் விளைவால் தனது பாட்டனாரைப் போல் தானும் சிவ நாமம் சொல்கிறார். அதனைக் கவனித்த கிருஷ்ண சாஸ்திரிகள் சிறுவனாக இருந்த உ.வே.சா வுக்கு ‘’மிருத்யுஞ்சய மந்திரம்’’ உபதேசித்து சூர்ய அஸ்தமனத்துக்குப் பின் அதனை உச்சாடனம் செய்யுமாறு கூறுகிறார். உ.வே.சா தன் வாழ்நாள் முழுவதும் அதனைப் பின்பற்றுகிறார். 

கீழ்சூரியமூலையில் ஒரு சிவாலயம் உள்ளது. இன்று அந்த ஆலயத்துக்கு சென்றிருந்தேன். சூரியன் சிவபெருமானை வணங்கிய தலம். எல்லா சிவாலயங்களிலும் நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு திசையைப் பார்த்த வண்ணம் இருக்கும். திருவாரூரில் மட்டும் நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே திசையைப் பார்த்து இருக்கும். கீழ்சூரியமூலையில் சூரியன் நடுவில் இருக்க மற்ற எட்டு கிரகங்களும் சூரியனை நோக்கி உள்ளன. இந்த ஆலயத்தில் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றுவது விசேஷமானது என்று அங்கே இருப்பவர்கள் சொன்னார்கள். சொர்ண பைரவர் சன்னிதியும் இங்கே உள்ளது. மஹாலஷ்மி தாயாருக்கும் ஒரு சன்னிதி உள்ளது. நான் சென்ற போது கோயில் குருக்கள் பூசனைகளை நிகழ்த்தி விட்டு சென்றிருந்தார். அவரது எண்ணை ஆலயத்தின் அருகில் இருப்பவர்களிடம் பெற்றுக் கொண்டு நாளை மீண்டும் வருகிறேன் எனக் கூறி விட்டு வந்தேன். புதர் மண்டி ஆலயம் நாகங்களால் சூழப்பட்டு மூடப்பட்டிருந்தது என்றும் வெளியூரில் வசிக்கும் பக்தர் ஒருவர் கனவில் சிவபெருமான் தோன்றி இந்த இடத்தைக் குறிப்புணர்த்தியதாகவும் அவர் இந்த ஊருக்கு வந்து இந்த ஆலயத்தை மறுநிர்மாணம் செய்ததாகவும் ஊர்க்காரர்கள் கூறினார்கள். ஆலயத்தில் ஒரு பெரிய வன்னி மரம் இருக்கிறது. 

ஊர் திரும்புகையில் வழியில் உள்ள திருக்கோடிக்காவல் என்ற ஊரின் சிவாலயத்துக்குச் சென்றேன். அங்கே உள்ளூர்க்காரரான ஒரு பக்தரை சந்தித்தேன். இந்த ஊரை ‘’ருத்ர பூமி’’ என்று சொல்கிறார்கள். சிவனுக்கு உகந்த வில்வம், வன்னி , இலுப்பை ஆகிய மரக்கன்றுகளை இந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்க முயற்சி மேற்கொள்வோமா என்று கேட்டேன். சிவ பக்தரான அந்த உள்ளூர்வாசி மிகவும் ஆர்வம் காட்டினார். ஓரிரு நாளில் அவரை நேரில் சந்திப்பதாகக் கூறி விட்டு வந்தேன். 

 

தமிழ் இதழியலின் இன்றைய நிலை

எனக்கு மிகச் சிறு வயதிலிருந்தே தமிழ் செய்தித்தாள்கள் வாசிக்கும் வழக்கம் உண்டு. வீட்டில் தினமணி வாங்குவார்கள். நான் தமிழ் எழுத்துக்களை எழுத்துக் கூட்டி படிக்கத் துவங்கியதும் அப்பா அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்கும் போது நான் தினமணியின் தலைப்புச் செய்திகளை அப்பாவுக்கு படித்துக் காட்டுவேன். அப்பா காலை 8.30 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருப்பார். ஆகையால் தலைப்புச் செய்திகளை என்னை வாசிக்கச் சொல்லி கேட்டுக் கொள்வார்; நான் வாசிக்கும் போது அப்பா காலை உணவு அருந்திக் கொண்டிருப்பார். அந்த நேரத்தில் தலைப்புச் செய்திகளை மட்டும் காதால் கேட்டு விட்டு அலுவலகம் சென்று விடுவார். மாலை அல்லது இரவு வீடு திரும்பியதும் செய்தித்தாளை விரிவாக வாசிப்பார். அப்பாவுக்கு செய்தித்தாளின் தலைப்புச் செய்திகளை வாசிக்கத் தொடங்கிய நான் பின்னர் ஆர்வத்தின் காரணமாக முழு செய்தித்தாளையும் வாசிக்கத் தொடங்கினேன்.  

அப்பொழுதெல்லாம் செய்தித்தாளில் செறிவான விஷயங்கள் இடம் பெற்றிருக்கும். எவ்விதமான செய்தி வெளியாக வேண்டும் என்பதில் ஒரு விதமான சுயதணிக்கை இருக்கும். ஒரு விஷயத்தின் வெவ்வேறு தரப்புகளுகளின் கருத்துக்களும் வெளிப்பட இடம் தரப்பட்டிருக்கும். நான் தினமணி வாசிக்கத் துவங்கிய போது திரு. ஐராவதம் மகாதேவன் அதன் ஆசிரியராக இருந்தார். அப்போது எனக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பின்னாட்களில் தெரிந்து கொண்டேன். தினமணி கதிர் என்ற இணைப்பு வரத் துவங்கிய காலம் அது. தினமணி கதிரில் வெளியாகும் தொடர்களை ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். 

இன்று ஒரு சில விதிவிலக்குகள் தவிர, மற்ற தமிழ் இதழ்கள் அனைத்தும் கட்சிப் பத்திரிக்கைகள் போல் ஆகி விட்டன. லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைகிறோம் என்ற தார்மீகப் பொறுப்பு இன்றி இதழியலை ஒரு வணிகமாகக் கருதும் போக்கு பத்திரிக்கையாளர்களிடம் பெருகி விட்டது. இதழியலில் அடிப்படையான தரம் என்பது மிகக் குறைவாக உள்ளது. பத்திரிக்கைகளின் இடத்தை இன்று இணைய காட்சி ஊடகங்கள் எடுத்துக் கொண்டிருப்பது நலம் பயக்கக் கூடியதா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

Monday 26 December 2022

தொகுத்துக் கொள்ளுதல்

2022ம் ஆண்டின் நிறைவுப் பகுதியில் நிற்கிறோம். இந்த ஆண்டு செய்தது என்ன என்பதைத் தொகுத்துக் கொள்ளவும் அடுத்த ஆண்டு செய்ய இருப்பது என்ன நிர்ணயித்துக் கொள்ளவும் இந்த தருணம் பயன்படுகிறது. 

பலரின் விருப்பத்தின் படி பல நண்பர்கள் வற்புறுத்தலின் படி 2023ம் ஆண்டு எனது இலக்கியப் படைப்புகளை நூலாகக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளேன். ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ பயண நூல் வெளியாகிறது. என்னுடைய சிறுகதைத் தொகுப்பு கொண்டு வர திட்டம் உள்ளது. எனது கவிதைத் தொகுப்பும் கொண்டு வர வேண்டும். கம்பன் காவியம் குறித்து எழுதிய ‘’யானை பிழைத்தவேல்’’ நூல் வடிவம் பெற வேண்டும். என்னுடைய கட்டுமானத் தொழிலில் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து எழுதிய கட்டுரைகள் ‘’எமக்குத் தொழில் ‘’ என்ற தலைப்பில் வெளிவர சாத்தியம் உள்ளது. ‘’அன்னை நதி’’ என்ற பெயரில் ஒரு நூல் வெளியாக வாய்ப்பு உள்ளது. வலைப்பூவில் வெளியான ஹாஸ்யக் கட்டுரைகளை நூலாக்கும் எண்ணமும் உள்ளது. நூல்களைக் கொண்டு வருவதில் எனக்கு இருக்கும் தயக்கத்தை தங்கள் தொடர் வற்புறுத்தலால் ஓரளவு அகற்றியிருப்பவர்கள் நண்பர்கள். அவர்கள் அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்பது தெரியவில்லை. அவர்கள் இந்த கணம் என்னை நெகிழச் செய்கிறார்கள். என் மீதும் என் படைப்புகளின் மீதும் அவர்கள் காட்டும் பிரியமே எனக்குத் தொடர்ந்து இயங்குவதற்கான உத்வேகத்தை அளிக்கிறது. 

2023ம் ஆண்டில் நண்பர் சுனில் கிருஷ்ணன் 1111 மணி நேர வாசிப்பு சவாலை அறிவித்திருக்கிறார். 365 நாளில் 1111 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்பது சவால். 365 நாளிலும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது வாசிக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. புத்தகங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் இனிமையை உணரச் செய்திருக்கும். மேலும் மேலும்  தீவிரமாக  நூல்களை வாசிக்கும் எவரும் ‘’கற்றது கைம்மண் அளவு ; கல்லாதது உலகளவு’’ என்பதை உணர முடியும். அதனை இன்னும் தீவிரமாக உணர மேலும் ஒரு வாய்ப்பு. தமிழ்ச் சூழலில் வாசிப்பை முன்னெடுக்கும் எந்த ஒரு விஷயமும் மிகவும் முக்கியமானதே. நூல் வாசிப்புக்கென குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்வதை இந்த சவால் வாசகர்களிடம் ஒரு பழக்கமாக மாற்றும். வாசிக்காமல் நிலுவையில் இருக்கும் நூல்களை இந்த சவாலைப் பயன்படுத்தி வாசிக்கலாம். புதிதாக நூல்களை வாங்கியும் வாசிக்கலாம். இந்த இரண்டு வாய்ப்புகளையும் நான் பயன்படுத்தப் போகிறேன். 

இன்று செயல் புரியும் கிராமத்துக்கு நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். இந்த ஆண்டு ஜனவரி - 26 குடியரசு தினத்தன்று ‘’காவிரி போற்றுதும்’’ சார்பில் கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் ஒரு நந்தியாவட்டை மரக்கன்று வழங்கப்பட்டது. அதனை மக்கள் அனைவரும் குடியரசு தினத்தன்று காலை 7 மணிக்கு தங்கள் வீடுகளுக்கு முன்னால் நட்டார்கள். அன்று மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்கள் ஏற்றினார்கள். ஒரு கிராமமே இணைந்து இவ்விதமாக குடியரசு தினத்தைக் கொண்டாடியது மகிழ்ச்சி அளித்தது. இந்த நிகழ்வை ‘’காவிரி போற்றுதும்’’ ஒருங்கிணைத்தது. 2023ம் ஆண்டிலும் இவ்விதமாக ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என கிராமத்தில் உள்ள பெரியவர்கள் ‘’காவிரி போற்றுதும்’’மிடம் கேட்டுக் கொண்டார்கள். எவ்விதம் செய்வது எனத் திட்டமிட வேண்டும். 

செயல் புரியும் கிராமத்தில் உள்ள 3 வயதிலிருந்து 13 வயது வரை உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் ரிங் பால், பேட்மிட்டன் மட்டை, பேட்மிட்டன் பந்து, கைப்பந்து , கால்பந்து ஆகியவற்றை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. சிறு வயதில் குழந்தைகள் விளையாட்டுக் களத்தில் ஓடி ஆடி விளையாடிப் பழக வேண்டும். சிறு வயதில் அவர்கள் விளையாட்டின் மூலம் அடையும் மகிழ்ச்சியும் உடல் உறுதியுமே அவர்கள் வாழ்வின் அடித்தளமாக அமையும். இதனை 2023ம் ஆண்டின் துவக்க மாதங்களிலேயே செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. கணக்கெடுப்பு விரைவில் தொடங்கும். 

விவசாயிகளை வலிமை கொண்ட பொருளியல் சக்தியாக மாற்றுவதே ‘’காவிரி போற்றுதும்’’மின் அடிப்படைப் பணி. தை மாதம் அறுவடை முடிந்த பின்னர் கிராமத்தில் விவசாயப் பணி பெரிதாக இருக்காது. சித்திரை மாதம் தான் உழவு தொடங்கும். அந்த இடைவெளியில் ஒவ்வொரு ஒரு ஏக்கரிலும் 15 தேக்கு மரக்கன்றுகள் நடும் வகையில் ஒரு மேட்டுப்பாத்தி எடுத்து ஒவ்வொரு விவசாயிக்கும் 15 தேக்கு மரக்கன்றுகள் வழங்குதல் என்னும் இலக்கை நிறைவேற்ற வேண்டும். கிராம மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என வானத்தின் தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறேன். 

Sunday 25 December 2022

பனிநீர்

தமிழில் இயங்கக்கூடிய படைப்பாளிகள் இதனை உணர்ந்திருப்பார்கள். தமிழ் உயர்தனிச்செம்மொழி. 2500 ஆண்டுகளாக இந்த மொழியில் இலக்கியம் படைக்கப்பட்டு இத்தனை ஆண்டுகளாக அது வாசிப்பிலும் இருந்து வருகிறது. இன்று எழுதும் ஒரு எழுத்தாளனுக்கு சொற்களை அளித்தவர்கள் உலக இலக்கியப் பரப்பில் பேராசான்களாக இருக்கும் தமிழ் மூதாதைப் படைப்பாளிகள்.  இது ஒருபுறம். இன்னொரு புறம் இன்றைய உலகில் வாசிப்பு மிக மிகக் குறைவாக இருக்கும் சமூகங்களில் தமிழ்ச்சமூகமும் ஒன்று என்பது. தமிழ் மக்களின் வாசிப்பின்மை என்பது தமிழ்ச்சமூகத்தை சிந்திக்கும் திறன் இன்மை என்னும் இடத்துக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது. அது உருவாக்கும் தடைகளை இலக்கியப் பரப்பில் இயங்குபவர்கள் நாளும் உணர்கிறார்கள். 

இன்று ஒரு எழுத்தாளர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். தமிழ் செவ்வியல் படைப்புகள் மேல் பேரார்வம் கொண்டவர் அவர். அந்த படைப்புகளை நவீன இலக்கிய வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும் எனத் தீவிரமாக இயங்குபவர். அவரது தீவிரமும் உறுதியும் அபாரமானது. பெரும் படைப்பூக்கம் கொண்ட இயல்பைக் கொண்டிருக்கும் அவர் தமிழுக்கு சிறப்பான படைப்புகளை அளிப்பார் என அவரது மொழியும் கூறுமுறையும் நம்பிக்கை அளிக்கிறது. 

கம்பனுடைய வாழ்வில் ஒரு சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. கம்பர் காலைப் பொழுதில் உலாவச் செல்கிறார். அப்போது ஒரு விவசாயி ‘’மூங்கில் இலை மேலே தூங்கும் பனிநீரே’’ என்று பாடுகிறார். அந்த வரியை மட்டும் பாடி விட்டு விவசாய வேலையில் ஈடுபடத் துவங்கி விடுகிறார். அடுத்த வரி என்னவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்ள கம்பனுக்கு ஆர்வம். தானே அடுத்த வரியை பொருத்தமாக ஊகித்து விடலாம் என்ற எண்ணத்துடன் வீடு திரும்பி விடுகிறார். அன்றைய நாள் பொழுது அன்றைய இரவு என யோசித்து யோசித்துப் பார்த்தும் அவரால் அந்த பாடலை முழுமை செய்ய முடியவில்லை. மறுநாள் அதிகாலையிலேயே முதல்நாள் உலாவிய பாதையில் சென்று அந்த விவசாயியின் வயலில் காத்திருக்கிறார். அந்த விவசாயி வந்து தனது வேலைகளைத் துவக்கி கொஞ்ச நேரம் செய்து விட்டு முதல் நாள் பாடிய பாட்லைப் பாடுகிறார். ‘’மூங்கில் இலை மேலே தூங்கும் பனிநீரே’’ எனப் பாடி விட்டு சற்று இடைவெளி விட்டு ‘’தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே’’ என அடுத்த வரியைப் பாடுகிறார். 

ஆர்ப்பரிக்கும் அலைகடலிடம் பொங்கிப் பாயும் நதிகளிடம் பெரு மலர்த் தடாகங்களிடம் பிரியம் காட்டும் கதிரோன் மூங்கில் இலை மேல் அமர்ந்திருக்கும் சின்னஞ்சிறு பனிநீரிடம் சற்று கூடுதலாகவே  பிரியத்தைக் காட்டுகிறான் என எண்ணிக் கொண்டேன்.    

மக்களும் அதிகாரமும் ஊழலும்

பல ஆண்டுகளுக்கு முன்பு , தினமணி கதிரில் இந்த விஷயத்தை வாசித்தேன். அமெரிக்க அரசு அலுவலகங்களின் இயங்குமுறை குறித்து அமெரிக்கா சென்று இந்தியா திரும்பிய ஒருவர் எழுதியிருந்த குறிப்பு அது. 

அதாவது, அமெரிக்க அரசு அலுவலகங்களுக்கு ஒருவர் சென்றால் அவரிடம் அந்த அலுவலக ஊழியர் அல்லது அதிகாரி Good Morning என்று முகமன் கூறி What can i do for you? என்று கேட்பாராம். எந்த விஷயத்துக்காக வந்தோம் என்பதைத் தெரிவித்தால் அந்த பணி அவரால் செய்து தரக் கூடியது என்றால் Yes , Please என்று கூறி அதனைச் செய்யத் துவங்குவாராம். அந்த பணி அவரது அதிகார எல்லைக்குள் இல்லையெனில் Sorry என்று வருத்தம் தெரிவித்து விட்டு அவர் அணுக வேண்டிய அலுவலகத்தையும் அங்கே சந்திக்க வேண்டிய அதிகாரியையும் குறிப்பிட்டு அனுப்பி வைப்பாராம்.  

தமிழ்நாட்டில் ஒரு சாமானியன் அரசு அலுவலகம் நோக்கி செல்வது என்பது அதிகமாக மின்சாரக் கட்டணம் செலுத்த, மின்சார இணைப்புக்கு விண்ணப்பிக்க, இரு சக்கர வாகனம் பதிவு செய்ய, சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, பட்டா பெயர் மாற்றம் செய்ய என இவ்வகையான காரணங்களுக்காகத்தான். இந்த காரணங்களுக்காக அரசு அலுவலகம் செல்லும் சாமானியர்கள் அந்த அலுவலகங்களில் நடத்தப்படும் விதம் என்பது மிகக் கொடுமையானது. சாமானியர்கள் தங்கள் சுயமரியாதை இழுக்குக்குள்ளாகிறது என எண்ணும் விதமாக மேற்படி அலுவலகங்களில் நடந்து கொள்வார்கள். 

பத்து முறை அந்த அலுவலகத்துக்கு மீண்டும் மீண்டும் திரும்பி வரும் வண்ணம் இழுத்தடிப்பார்கள். பத்து முறை வந்தாலும் என்ன பணியை உத்தேசித்து ஒருவர் வந்திருக்கிறாரோ அதற்கான விண்ணப்பத்தை வழங்க மாட்டார்கள். வந்தவர் அலுத்துப் போய் இந்த பணியை முடித்துக் கொடுக்க எவ்வளவு தொகை தேவையோ சொல்லுங்கள் ; அதனைக் கொடுத்து விடுகிறேன் என சொல்ல வைப்பார்கள். அந்த பணத்தையும் இழுத்தடித்தே வாங்குவார்கள். அதன் பின்னும் தாமதமாகவே பணியை முடிப்பார்கள். 

ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று புதிய நடைமுறைகள் உருவாக்கப்பட்டால் அதில் இருக்கும் பொதுமக்களுக்கு உதவும் விஷயங்கள் அனைத்திலும் ஏதேனும் இடர்களை உருவாக்கி புதிய நடைமுறையை மேலும் சிக்கலாக்கி விடுவார்கள். 

சொத்து வரி பெயர் மாற்றம் என்பது ஒரு சாதாரண நடைமுறை. ஒருவர் ஒரு சொத்தை வாங்குகிறார் என்றால் அந்த சொத்துக்கான நகராட்சி சொத்து வரியை தனது பெயருக்கு மாற்றிக் கொள்வதற்கானது. பழைய உரிமையாளர் கடைசியாக செலுத்திய சொத்து வரி ரசீதின் நகல், சொத்து பரிமாற்றத்தின் பத்திரப் பதிவு ஆவணம் ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால் அவற்றைப் பரிசீலித்து புதிய உரிமையாளர் பெயருக்கு சொத்து வரியை மாற்றம் செய்ய்யும் நடைமுறை. அதிகபட்சம் மூன்று நாட்களில் செய்ய முடியும். ஆனால் இந்த எளிய நடைமுறை செய்து முடிக்கப்பட 90 நாட்கள் ஆகிறது. ரூ. 5000 வரை லஞ்சம் பெறப்படுகிறது. 

முன்னர் பழைய உரிமையாளர் பெயரில் சொத்து வரி இருந்தால் கூட சொத்து வரி நிகழ்காலம் வரை செலுத்தப்பட்டிருக்கிறதா என்பதை மட்டுமே பார்ப்பார்கள். சொத்து வரி பெயர் மாற்றத்தை விருப்பம் இருப்பவர்கள் மட்டும் செய்து கொள்வார்கள். இப்போது புதிதாக அதில் கட்டட அனுமதி வாங்க வேண்டும் எனில் சொத்து வரி பெயர் மாற்றம் செய்து ஆக வேண்டும் என்பது கட்டாயம். எனவே கட்டட அனுமதிக்காக சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதால் லஞ்சத் தொகையும் ஐந்து மடங்கு கூடி விட்டது. 

பத்திரப்பதிவு நிகழ்ந்து 15 நாட்களுக்குள் தானாகவே பட்டா மாற்றம் நிகழ்ந்து விடும் என பத்திரப் பதிவுத் துறை இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால் வருவாய்த்துறையினர் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். பட்டா மாற்றம் செய்து கொடுக்க ரூ.5000 வரை கேட்கிறார்கள். 

தமிழ்நாட்டில் ஒரு சொத்தாவது வாங்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் சாமானியனின் வாழ்நாள் கனவு. கூடிக் கொண்டே போகும் நிலத்தின் விலையை அவன் குடும்பத்தினரின் அணிகலன்களை அடமானம் வைத்து தான் அதுநாள் வரை சேமித்த அத்தனை சேமிப்பையும் முன்வைத்து கடன் வாங்கி கொடுத்திருப்பான். இனி கையில் பெரிதாக ஏதும் இல்லை என்னும் நிலையில் இருக்கும் ஒரு சாமானியனிடம் அவனுக்கு சாதாரணமாக நிகழ வேண்டிய சொத்து வரி பெயர் மாற்றத்துக்கும் பட்டா மாற்றத்துக்கும் ரூ. 11,000 லஞ்சமாகக் கேட்பது என்பது மிகக் கொடுமையானது.   

Saturday 24 December 2022

மரங்கள் - மனுக்கள்

14 மரங்கள் விஷயத்தில் அந்த விஷயம் தொடர்பான கோப்பின் நகலை வழங்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி தொடர்புடைய அலுவலகத்தின் பொது தகவல் அதிகாரியிடம் மனு செய்திருந்தேன். அந்த கோப்பு 8 பக்கங்கள் கொண்டது ; ரூ. 16 ஆர்.டி.ஐ கட்டணமாக அனுப்பினால் விபரம் அனுப்பப்படும் என பதில் வந்தது. அந்த சம்பவம் நடந்த பின் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தந்த மனுக்களின் எண்ணிக்கையே பதினொன்று. அதன் பின் அலுவலகங்களுக்குள் நடந்த தபால் போக்குவரத்தே இன்னும் பல இருக்கும். அவ்வாறான சூழ்நிலையில் முழுக் கோப்பும் 8 தாள்கள் கொண்டது எனக் கூறுவது உண்மைக்கு மாறானது. அந்த விபரத்தைத் தெரிவித்து  தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பொது தகவல் அதிகாரியின் உயர் அதிகாரிக்கு  முதல் மேல்முறையீடு செய்தேன். அந்த மேல்முறையீட்டை பரிசீலித்த அதிகாரி அந்த கோப்பு 34 தாள்கள் கொண்டது என பதில் அனுப்பினார். அதற்கு உரிய தொகையான ரூ. 68ஐ செலுத்தி அந்த விபரங்களைப் பெற்றேன். ( ரூ.136 அனுப்பியிருந்தேன்). அந்த கோப்பும் முழுமையானது அல்ல. அந்த கோப்பின் முக்கியமான சில பகுதிகள் அதில் இல்லை. 

மேற்படி மனுவை அனுப்பிய அலுவலகத்துக்கு கீழ் இயங்கும் ஒரு அலுவலகத்திடமும் அந்த கோப்பின் நகலைக் கோரியிருந்தேன். அவர்கள் முப்பது நாட்கள் ஆகியும் பதில் அனுப்பவில்லை. முதல் மேல்முறையீடு செய்தேன். அதற்கும் எந்த பதிலும் இல்லை. 

எனவே மேற்படி இரண்டு முதல் மேல்முறையீடுகள் குறித்து இரண்டாம் மேல்முறையீட்டை சென்னையில் உள்ள மாநிலத் தகவல் ஆணையத்துக்கு அனுப்ப இன்று தயார் செய்தேன்.

பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வெட்டப்பட்ட விஷயத்தில் ஒரு மாதம் முன்னால் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து மரக்கிரயமும் அதற்கு உரிய அபராதமும் விதிக்கப்பட்டு அந்த தொகை அரசுக்கணக்கில் செலுத்தப்பட்டு செலுத்தப்பட்ட விபரத்தை தனது அலுவலகத்துக்குத் தெரிவிக்குமாறு தனது துறை அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்.

சென்ற மாதம் மரக்கிரயமும் அபராதமும் செலுத்தப்பட்ட ரசீதின் நகலை வழங்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டம் படி இரண்டு அலுவலகங்களில் விபரம் கோரியிருந்தேன். முப்பது நாட்கள் ஆகியும் எந்த பதிலும் இல்லை. முதல் மேல்முறையீடைத் தயார் செய்தேன்.  

இன்று அந்த நான்கு மனுக்களும் தயார் செய்ய கணிசமான நேரம் ஆனது. நாட்கள் செல்ல செல்ல இந்த விஷயத்தின் தீவிரம் இல்லாமல் போய் விடும் என அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். நாம் நிகழ்ந்த பிழைக்கு குறைந்தபட்ச நியாயத்தைத் தான் எதிர்பார்க்கிறோம். நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். 

Friday 23 December 2022

இன்னிசையும் தமிழும்

’’நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்’’ என திருஞானசம்பந்தர் குறிப்பிடப்படுகிறார். கயிலை ஈசன் இசைக்கு உருகுபவன் என்கிறது நம் மரபு. சம்பந்தர் தமிழ் கேட்க இறைவன் கொண்ட ஆவலை தேவாரப் பதிகங்கள் எடுத்துரைக்கின்றன.  

திருப்பதியில் ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம். அங்கே உள்ள பட்டர்கள் அதிகாலையில் பெருமாள் சன்னிதியில் திருப்பாவை பாடுவார்கள். அவர்களில் பலர் நிலவியலின் காரணமாக தெலுங்கினைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். தமிழ் படித்து அறியாதவர்கள். ஆனால் பாடலாக திருப்பாவையைப் பயின்று 31 பாடல்களையும் பாடும் திறன் கொண்டிருப்பார்கள். ஆந்திரத்தின் கணிசமான விஷ்ணு ஆலயங்களில் இத்தகைய தன்மை இருப்பதைக் காண முடியும். 

மகாராஷ்ட்ராவில் பண்டரிபுரத்தில் விட்டலநாதன் ஆலயம் உள்ளது. விட்டலநாதன் மீது ஞானேஸ்வர், துகாராம் ஆகியோர் பாடிய இசைப்பாடல்கள் ‘’அபங்’’ எனப்படும். மராத்தியில் ‘’பங்’’ என்றால் ‘’குறை’’ என்று பொருள். ‘’அபங்’’ என்றால் ‘’எந்த குறையும் இல்லாதது’’ ‘’எந்த மாசும் இல்லாதது’’ என்று பொருள். மராத்தியில் உள்ள இந்த பாடல்கள் பக்தர்களால் பாடப்பட்டு வந்தன. பின்னர் அவை ஹிந்துஸ்தானி இசைக் கச்சேரிகளில் பாடப்பட்டன. மேலும் சமீப சில வருடங்களில் கர்நாடக இசைக் கச்சேரிகளிலும் இடம் பெற்றன. இதனைப் பாடுபவர்கள் அனைவரும் மராத்தி அறிந்தவர்கள் அல்ல; ‘’அபங்’’ஐ இசையாகப் பயின்றவர்கள். 

சமீபத்தில் காசி யாத்திரை , காசி பாத யாத்திரை - ஒரு பயண மார்க்கம் என்ற இரு கட்டுரையை எழுதினேன். அதனை ஒட்டி ஒரு எண்ணம் எழுந்தது. தமிழ்நாட்டுக்கு வெளியே 5000 கி.மீ தூரம் பயணப் பாதை அமைகிறது. ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதில் உள்ளன. பாத யாத்ரிகர்களின் சேவைக்காக 125 சத்திரங்கள் இந்த பாதையில் உருவாக்கப்பட்டால் பாத யாத்ரிகர்களின் சேவையுடன் இந்த சத்திரங்கள் வேறு சில பண்பாட்டுப் பணிகளையும் ஆற்ற முடியும். 

அதாவது இந்த 125 சத்திரங்களில் , சத்திரம் உள்ள ஊர்களில் உள்ள மக்களுக்கு தேவாரம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றைப் பாட பயிற்றுவிக்கும் விதத்தில் இசை வகுப்புகள் தொடங்கலாம். மேலும் நாதஸ்வரம், தவில் ஆகிய கர்நாடக இசைக் கருவிகளை இசைக்க பயிற்சி தரலாம். அடிப்படைத் தமிழ் கற்றுத் தரும் தமிழ் வகுப்புகளும் நடத்தலாம்.  தெலுங்கு, கன்னடம், ம்ராத்தி , ஹிந்தி ஆகிய மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் தமிழையும் இன்னிசையையும் ஞானசம்பந்தரையும் கொண்டு சேர்க்கும் விதமாக இருக்கும். மராத்தியின் ‘’அபங்’’ இந்தியாவெங்கும் சென்று சேர்ந்தது போல தேவாரத்தையும் திவ்யப் பிரபந்தத்தையும் இந்தியா முழுதுக்கும் கொண்டு சேர்க்க முடியும். 

ஒவ்வொரு சத்திரத்திலும் ஒரு தேவார ஆசிரியர் இருப்பார் ; இசை ஆசிரியர் இருப்பார்; தமிழ் ஆசிரியர் ஒருவர் இருப்பார். தேவார ஆசிரியரே கூட தமிழ் ஆசிரியராகவும் இருக்க முடியும். மேலும் பாத யாத்ரிகர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கும் பணியாளர்கள் இருப்பார்கள். இவ்வாறான ஒரு ஏற்பாடு சற்று முயன்றால் அமைக்கக் கூடிய ஒன்றே. 

உத்திரமும் துரும்பும்

எனது நண்பர் ஒருவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். பணியில் இருக்கும் போது ஒரு அரசு ஊழியர் சங்கத்தில் இருந்திருக்கிறார். அது ஒரு கம்யூனிச அமைப்பு. அதனை அவரே என்னிடம் கூறினார். கம்யூனிச அமைப்பில் இருந்தவர் என்பதால் தொடர்ச்சியாக அவர்களுடைய ஊழியர் கூட்டங்கள் மாநாடுகள் ஆகியவற்றில் பங்கு பெறுவதற்கு வாய்ப்பு இருந்தமையால் அரசு குறித்து சமூகம் குறித்து அவர்களுக்கே உரிய மேடை மொழியில் என்னிடம் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். 

அரசியல் குறித்த பேச்சு நட்பில் பூசலை உண்டாக்கும் என்பதால் நான் எவரிடமும் அரசியல் குறித்து பேசுவதில்லை. நண்பர் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகள் குறித்து பெருமிதத்துடன் கூறி என்னை விவாதத்துக்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டேயிருந்தார். நான் மென்மையாக நண்பர்களிடம் நான் அரசியல் குறித்து பேசுவதில்லை என்று சொன்னேன். அதன் பின்பும் அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர் முன்னர் செய்ததையே செய்து கொண்டிருந்தார். 

அவரிடம் நான் ஒரு விஷயத்தைக் கூறினேன். இருபதாம் நூற்றாண்டில் சோவியத் யூனியனில் ஸ்டாலினாலும் பிற கம்யூனிச ஆட்சியாளர்களாலும்  கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 62 கோடி என்பது  உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டேன். திகைப்புடன் ‘’62 கோடியா?’’ என்றார். ஆமாம் என்றேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். 

மேலும் இன்னொரு விபரம் கூறுவோம் என்று இருபதாம் நூற்றாண்டில் மா சே துங் சீன ஆட்சியாளராக இருந்த போது கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 35 கோடி என்பது தங்களுக்குத் தெரியுமா என்று கேட்டேன். அவர் எதுவும் பேசவில்லை. அவர் மனம் எவ்விதம் இயங்கும் என எனக்குத் தெரியும்.  அவரிடம் ஒரு விபரம் சொன்னேன். 

அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ரம்மல் என்பவர் மனித இனத்தில் எழுதப்பட்ட வரலாறு துவங்கிய காலத்திலிருந்து இருபத்து ஓராம் நூற்றாண்டு வரை நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் அதில் இறந்து போன மக்களின் எண்ணிக்கையையும் ஆதாரங்களுடன் அட்டவணைப்படுத்தியிருக்கிறார். அந்த அட்டவணையில் முதல் இரண்டு இடங்கள் ஸ்டாலின் மற்றும் மாவோ என்னும் இரு கம்யூனிச ஆட்சியாளர்களுக்கு கிடைத்திருக்கிறது என்று சொன்னேன். 

சோவியத் யூனியன் உடைந்த விதமும் அதிலிருந்த நாடுகள் சுதந்திரமடைந்ததும் அவ்வாறு சுதந்திரம் பெற்ற போது அந்த நாட்டு மக்கள் அடைந்த மகிழ்ச்சியும் சோவியத் யூனியன் என்பது எத்தனை மூர்க்கமான வன்முறை அமைப்பாக இருந்திருக்கிறது என்பதைக் காட்டியது. ‘’ நீங்கள் இன்னும் உலகம் சோவியத் யூனியன் உடைந்ததற்கு முன்னால் இருந்த நிலையை நினைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த தரவுகள் சோவியத் யூனியன் இருந்த போதே இங்கொன்றும் அங்கொன்றுமாக வெளியாகிக் கொண்டிருந்தன. சோவியத் யூனியனின் உடைவும் உடைந்த விதமும் அந்த தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்தன.’’ என்று சொன்னேன். 

மேலும் தொடர்ந்து சொன்னேன். ’’ஸ்டாலினிச அழிவுகள் குறித்து நீங்கள் இத்தனை ஆண்டுகளில் கேள்விப்படாமலேயே இருந்திருக்கிறீர்கள். ஏன் அப்படி ஆனது என்று யோசனை செய்து பாருங்கள்’’ 

நண்பர் அதன் பின்னர் என்னிடம் அரசியல் குறித்து எதுவும் பேசுவதில்லை. 


Wednesday 21 December 2022

சிறுதுளிகள் - பெருவெள்ளம்

 “உன் படைக்கலம் உனது மூன்றாவது கரமும் இரண்டாவது மனமும் முதல்தெய்வமும் ஆகட்டும்.’’ - வெண்முரசு 

அறிவு அற்றம் காக்கும் கருவி என்கிறார் திருவள்ளுவர். கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பெரும் படைப்பாளிகள் இயங்கிய உயர்தனிச்செம்மொழியான தமிழ் இன்று தனது மக்கள்தொகையில் கொண்டிருக்கும் இலக்கிய வாசகர்களின் எண்ணிக்கை என்பது பெரியது அல்ல; போதுமானதும் அல்ல. தமிழில் வாசிப்புச் சூழல் என்பது பெரிதாக மேம்பட வேண்டும். சாத்தியமுள்ள வழிகளில் எல்லாம் வாசிப்பும் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும்.  

தமிழ்நாட்டின் கல்வி அமைப்பில் நூல் வாசிப்புக்கு இடம் இல்லை. எனவே கல்வியின் ஒரு பகுதியாக நூல்களை வாசிக்கும் வாய்ப்பு தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வாய்ப்பதில்லை. மிக தற்செயலாகவே மிகச் சிலர் நூல்களை நோக்கியும் வாசிப்பை நோக்கியும் வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் நூல்களையும் நூல் வாசிப்பையும் முன்வைத்து பல்வேறு பண்பாட்டு முன்னெடுப்புகள் நிகழ வேண்டியது மிகவும் அவசியமானது. 

சில ஆண்டுகளுக்கு முன், தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரும் காந்தியவாதியுமான எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் முன்னெடுத்த ‘’ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்’’ மிக முக்கியமான ஒன்று. அந்த முன்னெடுப்பு தொடர்ந்து நிகழ வேண்டும். அது குறியீட்டுரீதியானது என்பதால் அதன் பயனும் விளைவுகளும் உடன் பிரத்யட்சமாகத் தெரியாது எனினும் அவற்றின் நெடுங்கால விளைவுகளை நம்மால் அனுமானிக்க முடியும். 

சுனில் தனது முதல் முயற்சியில் வலுவான ஒரு நல்ல துவக்கத்தை உருவாக்கினார். அது ஒரு நல்விதை. அதனை விருட்சமாக இப்போது மேலும் பல அம்சங்களுடன் வளர்த்தெடுக்க முடியும். திரு. சுனில் கிருஷ்ணன் பரிசீலனைக்கு சில விஷயங்களை முன்வைக்கிறேன். 

’’ஒன்று கூடி சிந்தியுங்கள் ; சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள். உங்கள் மனம் ஒன்றாகட்டும் ‘’ என்பது மறைமுடிபின் பிராத்தனை. 

பலரும் ஆயிரம் மணி நேர வாசிப்பை எட்ட உதவும் சில யோசனைகள் : 

1. ஆயிரம் மணி நேர வாசிப்பு என்பது ஓர் இலக்கிய வாசகனுக்கு பெரும் கொண்டாட்டம். எந்த இலக்கிய வாசகனும் அந்த சவாலை ஏற்க வேண்டும் என்பதையும் தானும் வாசிக்க வேண்டும் என்பதையும் விரும்புவான். எனவே ஆக சாத்தியாமான எல்லா வாசகர்களையும் பங்கெடுக்க வைக்கும் விதமாக செயல்பாட்டின் வடிவமைப்பு உருவாக்கப்பட வேண்டும்

2. 2023ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் பலரும் ஒரு புதிய ஆண்டில் தங்களுக்கு நலம் பயக்கும் நற்செயல்கள் பலவற்றைத் துவங்க விரும்புவார்கள். அவர்களுக்கு இந்த ஆயிரம் மணி நேர வாசிப்பு என்பது வரப்பிரசாதமாக அமையும். ஒரு ஆண்டு - ஆயிரம் மணி நேர வாசிப்பு என்பது எவராலும் விரும்பப்படும் ஒன்றாக அமையும். எனவே வாசிப்பு சவால் ஒரு ஆண்டில் ஆயிரம் மணி நேர வாசிப்பு என்பதாக அமைந்தால் சிறப்பாக இருக்கும். 

3. ஒருவர் நூல்களை வாசிக்கும் முறையும் அவரது வாசிப்பு நேரத்தில் தாக்கம் ஏற்படுத்தும். நூல் வாசிப்பு நமது உணர்ச்சிநிலையையுடனும் மனநிலையையுடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டது என்பதால் அதில் எவ்விதம் ஒரு சமநிலையைப் பேணுவது என்பதற்கான எளிய வழிகாட்டல்கள் பங்கு பெறும் வாசகர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆண்டு முழுதும் எல்லா பங்கேற்பாளர்களும் விடுபடல் இன்றி பங்கேற்பதை அது உறுதி செய்யும். 

4. நூல் பரிந்துரைகள் வாசகர் கவனத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இந்த நூல் பரிந்துரைகள் சவாலில் பங்கேற்கும் வாசகர்களுக்கு மட்டும் இன்றி எல்லா வாசகர்களுக்குமே பயன் விளைவிக்கும். சங்க இலக்கியம், கம்பராமாயணம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், பன்னிரு திருமுறைகள், குமரகுருபரர், தாயுமானவர், உ.வே.சாமிநாத ஐயர், அயோத்திதாசர் படைப்புகள்,  பாரதி படைப்புகள், நவீன தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் முழுத் தொகுப்புகள், எழுத்தாளர் ஜெயமோகன் ‘’கண்ணீரைப் பின் தொடர்தல்’’ நூலில் குறிப்பிட்டுள்ள தேசிய புத்தக நிறுவனம் மற்றும் சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள நூல்கள், கார்ல் மார்க்ஸ்ஸின் ‘’மூலதனம்’’, தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதியுள்ள நூல்கள், சுவாமி சித்பவானந்தரின் நூல்கள்,  ஜெயமோகன் தனது இணைய தளத்தில் இந்திய வரலாறு குறித்து வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலாக அளித்த ‘’வரலாற்றை வாசிக்க’’ என்ற தலைப்பில் அளித்த பட்டியலில் உள்ள நூல்கள், அறிஞர் தரம்பாலின் நூல்கள், மகாத்மா காந்தி முழுத் தொகுப்பு, ராகுல் சாங்கிருத்யாயனின் நூல்கள், ருஷ்ய நாவல்கள், அமெரிக்க நாவல்கள், ஐரோப்பிய நாவல்கள், பொருளியல் நூல்கள், சூழியல் நூல்கள், தன்வரலாறுகள், சரிதங்கள் என வெவ்வேறு விதமான தன்மை கொண்ட நூல்களின் பட்டியல் சவால் துவங்கும் முன் பிரசுரிக்கப்படும் எனில் அந்த பட்டியலின் வசீகரம் பலரை ஈர்க்கக்கூடும். அந்த ஈர்ப்பு பலரை இந்த சவாலின் உள்ளே கொண்டு வரும். 

5. இந்த பெரும் பட்டியலில் தனக்கு உவப்பானதாக இருக்கும் ஒரு தொகுப்பை வாசகன் மனதில் உருவாக்கிக் கொண்டு அந்த நூல்களை வாசகன் வாசிக்கத் தொடங்குவான். அவனுடைய செல்திசையைத் தேர்ந்தெடுக்க அந்த பட்டியல் உதவும். 

6. 365 நாட்களில் ஆயிரம் மணி நேர வாசிப்பு என்பது சற்று முயன்றால் சாத்தியம்தான் என்ற எண்ணத்தை அனைவரிடமும் உண்டாக்கும். அது உண்மையும் கூட. 

7. இந்த 365 நாட்களில் 365 நாட்களும் வாசிப்பு நிகழ வேண்டும் என்பதை ஒரு முக்கிய விதியாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் பங்கேற்பாளர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது வாசிக்க வேண்டும் என்ற விதியையையும் அதில் இணைத்துக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத வாழ்க்கைச் சூழ்நிலைகளால் ஏதேனும் சில நாட்கள் தவறி விடுமாயின் அதனை ஈடு செய்ய தவற விட்ட ஒரு மணி நேரத்துக்கு ஈடு வாசிப்பாக இரண்டு மணி நேர வாசிப்பை மேற்கொள்ள வேண்டும். 

உதாரணத்துக்கு ஒருவரால் 365 நாளில் 25 நாள் வாசிக்க முடியாமல் போய்விட்டால் ஈடு வாசிப்பு என்ற கணக்கில் 50 மணி நேரம் வாசிக்க வேண்டும் என அமைத்துக் கொள்ளலாம். 

மேலும் ஈடு வாசிப்பை முன்கூட்டியே கூட நிகழ்த்தி வரவில் வைத்துக் கொள்ளலாம். 

8. விருப்பம் உள்ள வாசகர்கள் ஒரு நாளில் மூன்று மணி நேரம் வாசிக்கிறார்கள் என்றால் அதற்கும் ஒரு தனி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.  எல்லா வாசகர்களும் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் என்ற உறுதியை மேற்கொண்டிருப்பது போல இந்த வாசகர்கள் ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் என்ற உறுதியை மேற்கொண்டவர்கள். இவர்கள் வாசிப்பில் சில நாட்களைத் தவற விட்டால் அவர்களின் ஈடு வாசிப்பு மூன்று மணி நேரத்துக்கு ஆறு மணி நேரம். 

9. ஒவ்வொருவரும் எத்தனை மணி நேரம் வாசிக்கிறார்கள் என்பதை நிகழ்வின் அமைப்பாளர்கள் மட்டும் அறிந்தால் போதுமானது. அனைத்து பங்கேற்பாளர்களும் ஆண்டு முழுவதும் உற்சாகமாகப் பங்கு பெற அது உதவும். சவால் நிறைவு பெற்றதும் ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் வாசித்திருக்கிறார்கள் என்பதை அறிவித்தால் போதுமானது. 

10. வாசிப்பு சவாலின் பொது வாசிப்பு நேரமாக ஒரு நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம். உதாரணத்துக்கு காலை 5.30 லிருந்து 7 மணி வரை மேலும் இரவு 8 மணியிலிருந்து 9.30 மணி வரை என்னும் நேரத்தை வாசிப்பு சவாலின் பொது வாசிப்பு நேரமாக அறிவிக்கலாம். பங்கேற்பாளர்கள் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் அவரவர் இடத்தில் இருந்த படி மானசீகமாக பலருடன் இணையும் வாய்ப்பை இந்த பொது நேரம் வழங்கும். இந்த நேரத்தில் தான் வாசிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அவரவர்க்கு வசதியான நேரத்தில் வாசிக்கலாம். 

11. மாதத்தில் ஏதேனும் இரு தினங்களை முழு வாசிப்புக்கான தினங்களாக அறிவிக்கலாம். அந்த தினத்தில் 12 மணி நேர வாசிப்பை நிகழ்த்திக் கொள்ளலாம். காலை 5 மணியிலிருந்து 8 மணி வரை. காலை 10 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை. மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணி வரை. மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை. 

12. இந்த சவால் ஒரு கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளப்பட வேண்டியது. பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் துணையாயிருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து அனைவரும் சேர்ந்து ஒரு பெரும் இலக்கை எட்டும் வகையிலானது. பங்கேற்பாளர் முழு வருடமும் வருடத்தின் ஒவ்வொரு நாளும் இந்த வாசிப்பு நிகழ்வில் பங்கு கொள்வது என்பதே இந்த வடிவமைப்பின் சிறப்பு. ஒரே நோக்கம் நோக்கி ப்லரும் முன்னேறுகையில் இந்த விஷயம் மேலும் அடர்த்தியும் தீவிரமும் கொண்டதாகிறது. 

வாசகர்கள் பலருக்கு வெண்முரசை வாசிக்கத் துவங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். வெண்முரசு வாசகர்கள் பலருக்கு வெண்முரசை மீள்வாசிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கம்பன் பாடல்களை வாசிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள் இருப்பார்கள். ‘’ஸ்ரீமஹாபாரத பர்வங்கள்’’ ஐயும் அரசனின் மொழிபெயர்ப்பான மகாபாரதத்தையும் வாசித்து பூர்த்தி செய்ய சிலர் விரும்புவார்கள். ‘’மூலதனம்’’ முழுமையாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஒரு துவக்கத்துக்காகக் காத்திருப்பார்கள். ஓராண்டில் மகாத்மா காந்தியின் முழுத் தொகுப்பையும் வாசிக்கத் துவங்கினால் நிறைவு செய்ய முடியுமே என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்கள் பலர் இருக்கக் கூடும். 

இந்த எண்ணங்களும் விதிமுறைகளும் நிலவைச் சுட்டும் விரல் மட்டுமே. ஓராண்டில் பல வாசகர்களுக்கு ஆயிரம் மணி நேரம் வாசிப்பை சாத்தியமாக்க வேண்டும் என்பதே இதன் இலக்கு. 

Monday 19 December 2022

புது வெள்ளம்

டிசம்பர் 17,18 ஆகிய இரு தேதிகளும் கோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டேன். இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களுக்கு வழங்கப்பட்டது.  கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக டிசம்பர் கடைசி வாரம் நடைபெறும் விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டு வருகிறேன். 

தமிழ்ச்சூழலில் இவ்வளவு திட்டமிடலுடன் இத்தனை நேர்த்தியாக நடைபெறும் இன்னொரு நிகழ்வென எதனையும் கூறி விட முடியாது. வட இந்தியாவிலிருந்து வருகை புரியும் எழுத்தாளர்கள் வாசகர்கள் இத்தனை ஆர்வத்துடன் பங்கெடுக்கும் இவ்வாறான ஒரு நிகழ்ச்சியை தங்கள் வாழ்நாளில் கண்டதில்லை என்று சொல்கிறார்கள். வட இந்திய - வட கிழக்கு இந்திய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளை தமிழ் வாசகர்கள் வாசித்து விட்டு அவர்கள் படைப்புகளின் நுட்பங்களைச் சுட்டிக் காட்டி உரையாடும் போது - வினா எழுப்பும் போது அவர்கள் அடையும் உவகை என்பது மிகப் பெரியது. 

நமது மரபில் 14 ஆண்டுகளை ஒரு தலைமுறை எனக் கருதும் வழக்கம் உண்டு. இந்த விருது அளிக்கத் துவங்கிய போது எட்டு வயது சிறுவனாக இருந்த ஒருவன் இப்போது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து பொருளீட்டும் நிலைக்கு வந்திருப்பான். அவ்வாறான இளைஞர்கள் பலரை இந்த ஆண்டு காண முடிந்தது. இத்தனை இளைஞர்களும் ஆர்வமாக தமிழ் வாசிக்கிறார்கள் என்பது நம்பிக்கையளிக்கக் கூடிய ஒரு அம்சம். 

நிகழ்ச்சிகளுக்கு இடையில் இருக்கும் இடைவேளைகளில் வாசகர்கள் படைப்பாளிகள் எனப் பலருடன் உரையாடக் கிடைக்கும் வாய்ப்பு என்பது தமிழ்ச்சூழலில் அரிதானது. இந்த ஆண்டு நான் சந்தித்த பலரில் மூவரைக் குறித்து பதிவு செய்யலாம் என நினைக்கிறேன். மூவருமே இளைஞர்கள். 

ஒருவர் திருக்கோஷ்டியூர் திருப்பத்தூரைச் சேர்ந்த இளைஞர். பட்டப்படிப்பு படித்து விட்டு சர்வீஸ் கமிஷன் தேர்வுகளுக்கு தயார் செய்து வருகிறார். பிரிலிமினரி தேர்வுகளில் தேர்ச்சி அடைந்து விட்டு மெயின் தேர்வுக்கான தயாரிப்பில் இருக்கிறார்.  உ.வே.சா குடந்தைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த போது அதே கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த ம.வீ. ராமானுஜாச்சாரின் ‘’ஸ்ரீ மகாபாரத பர்வங்கள்’’ நூலை முழுமையாக வாசித்திருப்பதாகச் சொன்னார். சாந்தி பர்வத்தில் இன்னும் சில பக்கங்கள் மட்டுமே உள்ளன. ஓரிரு வாரத்தில் அந்த காவியத்தை வாசித்து நிறைவு செய்வேன் என சொன்னார். தமிழின் மகத்தான ஆக்கங்களில் ஒன்று அந்த மொழிபெயர்ப்பு. தன் வாழ்நாள் முழுதும் அந்த பணிக்காக அர்ப்பணித்து தனது சக்திக்கு அப்பாற்பட்ட பெரும் பொருள் செலவழித்து பெரும் இடர்களுக்குள்ளாகி ‘’ஸ்ரீ மகாபாரத பர்வங்கள்’’ நூலை மொழிபெயர்ப்பு செய்து கொண்டு வந்தவர் ம.வீ. ராமானுஜாச்சார். என்றும் தமிழ்ச் சமூகத்தின் வணக்கத்துக்குரியவர். 

இன்னொரு இளைஞர் சென்னையைச் சேர்ந்தவர். கம்ப ராமாயண வாசிப்புக்காக ஒரு வாசிப்பு குழுவை உருவாக்கியிருக்கிறார். வாரத்துக்கு மூன்று நாட்கள் அந்த குழு இணையம் மூலம் சந்திக்கிறது. அந்த குழுவில் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் வாச்கர்களுடன் சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகளில் வசிக்கும் தமிழ் வாசகர்களும் இருப்பதாகச் சொன்னார். கம்ப ராமாயணத்தில் ஒரு காண்டம் நிறைவு பெற்றதும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் முழு காண்டத்தையும் ‘’முற்றோதல்’’ செய்கிறோம் என்று சொன்னார். அதில் இசைத்தன்மை கொண்ட கம்பன் பாடல்களைப் பாடுவதும் உண்டு என்று கூறினார். பத்தாயிரம் பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்துக்காக ஒரு இளைஞர் இத்தனை ஆர்வத்துடனும் தீவிரத்துடனும் செயலாற்றுவது என்பது மகத்தானது. குழுவில் உற்சாகமாகப் பங்கு பெறும் உலகின் பல பகுதிகளில் வசிக்கும் கம்பனின் வாசகர்கள் பாராட்டுக்குரியவர்கள். 

மூன்றாவது இளைஞர் ஒரு கடலோர கிராமத்தில் வசிப்பவர். ஐந்து ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியத்துடன் பரிச்சயம் கொண்டிருக்கிறார். கணிசமான அளவு நவீன தமிழ் இலக்கிய நாவல்களையும் அ-புனைவுகளையும் வாசித்திருக்கிறார். தனது பாட்டனாருக்கு கடலில் ஏற்பட்ட - கடலுடன் ஏற்பட்ட  அனுபவம் ஒன்றைக் குறித்து என்னிடம் மிகத் தீவிரமாகக் கூறிக் கொண்டிருந்தார். என்னிடம் அவர் தெரிவித்த அந்த விஷயத்தை ஒரு குறுநாவலாக எழுதும் படி சொன்னேன். அவர் என்னிடம் சொன்ன விஷயம் ஒரு குறுநாவலுக்குரிய உள்ளட்க்கம் கொண்டது. அதனை நிச்சயம் ஒரு குறுநாவலாக எழுத முடியும். நான் கூறியதைக் கேட்டதும் மிகவும் உணர்ச்சிகரமாகி விட்டார். விரைவில் எழுதத் தொடங்குகிறேன் என்று என்னிடம் உறுதி அளித்தார். 

ஆடி மாதத்தில் காவிரியில் பொங்கி வரும் புதுவெள்ளம் போன்றவர்கள் இந்த மூன்று இளைஞர்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சாதித்திருப்பது என்ன என்ற வினாவுக்கு விடையாக விளங்கக் கூடியவர்கள். 


Friday 16 December 2022

கடைசி மணி

 அதிகாரம் என்பது முற்றிலும் கண்களால் கண்டிட முடியாத ஒரு மாயம். அதனை முற்றிலும் கண்டு இப்படித்தான் இவ்வாறுதான் என வகுத்திட முடியாது என்பதே அதன் மாய அம்சமும் கூட. இதன் பின்னணியில் தி. ஜா எழுதிய ஒரு ஹாஸ்யக் கதையே ‘’கடைசி மணி’’

மறுபிறவி

 ஒரு சாமானியத் தந்தை. அவருக்கு ஒரு தறுதலைப் பிள்ளை. பிள்ளை தந்தையைப் பலவிதங்களில் பாடாய் படுத்துகிறான். இருவருமே எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரின் சிக்கலுக்கும் ஒரு தீர்வு உண்டாகிறது. அந்த கதையே ‘’மறுபிறவி’’. 

Thursday 15 December 2022

நடராஜக் கால்

 ஜம்பத்துக்குப் பேர் போனது தஞ்சாவூர் மாவட்டம் ( பழைய தஞ்சாவூர் மாவட்டம்). அந்த மாவட்டத்துக்காரர்கள் ‘வெட்டி ஜம்பம்’ என்றும் சொல்வார்கள். ‘’வாய் ஜம்பம்’’ என்றும் மேலும் ‘’சிறப்பித்து’’ச் சொல்லப்படுவதும் உண்டு. அவ்வாறான ஒரு ஜம்பப் பேர்வழி ஒருவன் தன் வாய் வார்த்தைகளால் தன்னிடம் வந்தவரின் மனதில் ஏற்படுத்த விரும்பிய கிலேசம் எதிர்பாராத ஒரு குரலால் முறியடிக்கப்படுகிறது. அதுவே தி.ஜா வின் ‘’நடராஜக் கால்’’. 

Wednesday 14 December 2022

எருமைப் பொங்கல்

கலைஞனின் கலை உள்ளம் அவனை புதிது புதிதாக கதை சொல்லிப் பார்க்கச் சொல்கிறது. விதவிதமான வடிவங்களை முயற்சி செய்ய வைக்கிறது. எருமை ஒன்று தனது கதையைச் சொன்னால் அதன் நோக்கில் உலகமும் அதன் உலகமும் லௌகிகமும் எவ்விதம் இருக்கும் என்னும் கற்பனையே ‘’எருமைப் பொங்கல்’’ 

Tuesday 13 December 2022

ஊர்ப்பயணம் (நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளருக்கு தனது ஊரிலிருந்து நூறு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஊருக்குப் புறப்படுவது என்பது ஒரு விஷயமேயில்லை. ஒரு நாளில் கிளம்பி அதே நாளில் திரும்பி வந்து விடலாம். அதற்கு மேல் என்றால் அமைப்பாளர் சற்று தீவிரமாக யோசிப்பார். ஒருநாள் வெளியூரில் தங்க வேண்டுமென்றால் அவருடைய தயக்கம் பல மடங்கு கூடிவிடும். அமைப்பாளர் உள்ளூரில் மேற்கொள்ளும் வணிகம் அவ்வாறான தன்மை கொண்டது.  அவருடன் வணிகத் தொடர்பு உள்ளவர்களுக்கு அவர் வெளியூர் செல்வதில் எந்த சிக்கலும் இல்லை. அவர்கள் ஃபோன் செய்தால் அமைப்பாளர்,  ‘’வெளியூர் வந்திருக்கிறேன். இன்னைக்கு நைட் ஊருக்கு வந்துடுவன்’’ என்று சொல்ல வேண்டும். அந்த பதில் அவர்களுக்கு திருப்தி தந்து விடும். அமைப்பாளர், ‘’வெளியூர் வந்திருக்கன். நாளை மறுநாள் வந்திடுவன்’’ என்று சொன்னால் ஃபோன் செய்தவர் மிகவும் அமைதியிழந்து விடுவார். அவரை சமாதானம் செய்வதற்குள் அமைப்பாளருக்கு போதும் போதும் என்றாகி விடும். 

மற்றவர்கள்தான் அமைதியிழக்கிறார்கள் என்றால் அமைப்பாளரிடமும் அது இருக்கும். 

அமைப்பாளர் வெளியூர் கிளம்ப வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்று அவர் நினைப்பதற்கும் அவர் வெளியூர் கிளம்புவதற்கும் எந்த தர்க்கபூர்வமான தொடர்பும் இருக்காது. இருந்தாலும் அவற்றை செய்து வைத்து விட்டுதான் அமைப்பாளர் கிளம்புவார். 

1. அவருடைய இரு சக்கர வாகனம் பெட்ரோல் நிரப்பப்பட்டு இருக்க வேண்டும். ( இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் அவர் ரயில் நிலையத்துக்கோ அல்லது பேருந்து நிலையத்துக்கோ தான் எப்போதும் பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தில் செல்ல மாட்டார். அவரை அங்கே கொண்டு விட அவருக்கு ஒரு நண்பர் உண்டு. ஆனாலும் அமைப்பாளருக்கு அவர் ஊரில் இல்லையென்றாலும் இரு சக்கர வாகனம் பக்காவாக இருக்க வேண்டும். அவர் ஊரில் இருக்கும் போது அவ்வாறு பெட்ரோல் நிரப்பப்பட்டு இருப்பதில்லை என்பது ந்கைமுரண்)

2. அமைப்பாளர் தன்னுடைய காரை பயணம் கிளம்புவதற்கு முன்னால் துடைத்து பெட்ரோல் நிரப்பி வைப்பார். வண்டியை சோப் கலந்த நீரைப் பயன்படுத்தி முழுமையாகத் துடைத்து முடிக்க அவருக்கு 45 நிமிடம் ஆகும். ஒவ்வொரு முறையும் இதை நாம் ஊரிலிருந்து திரும்பி வந்ததும் செய்யலாமே என்று அவருக்குத் தோன்றும். இருந்தாலும் காரை பக்கா செய்யாமல் அவரால் புறப்பட முடியாது. 

3. வீட்டின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்வார். ஊரில் இருக்கும் போது இதைப் போன்ற லௌகிக விஷயங்களைப் பெரிதாகக் கவனிப்பதில்லை. இருந்தாலும் வெளியூர் செல்லும் போது கவனிப்பார்.

4, தனது எழுது மேஜை அடுக்கி இருக்க வேண்டும் என்று விரும்புவார். வெளியூரில் இருக்கும் நேரத்தில் பாதியையாவது இதற்கு அளித்தால்தான் அவர் விரும்புவது நிகழும். எனினும் அதனை மும்முரமாக செய்வார். 

இந்த வார இறுதியில் அமைப்பாளர் இரு நாட்கள் வெளியூர் செல்கிறார். அமைப்பாளரை அவரது நண்பர்கள் சிலர் ரயிலில் விழுப்புரம் வந்து விடுமாறு சொல்லியிருக்கிறார்கள். அங்கே அவரை காரில் பிக்-அப் செய்கிறார்கள். 

சுளிப்பு

’’முகம் அகம் காட்டும் கண்ணாடி’’ என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. முகமே மானுடர்களின் எல்லா உணர்வுகளையும் காட்டுகிறது. அதனால் உணர்வுகள் முகபாவங்களாகவும் மனிதர் நினைவில் ஆழ் மனத்தில் பதிவாகிறது. தான் மிகவும் நேசிக்கும் ஒருவரின் முகபாவத்தை வெளிப்படுத்துகிறான் ஒரு ஆரம்பப் பள்ளி சிறுவன் தன் ஆசிரியரிடம். இந்த சம்பவத்தைப் பின்புலமாகக் கொண்டு தி. ஜா எழுதிய சுவாரசியமான சிறுகதை ‘’சுளிப்பு’’ 

Monday 12 December 2022

தொழில்முனைவோன் படும் பாடு

 விக்டர் ஹியூகோ எழுதிய நாவலின் பெயர் ‘’லெஸ் மிஸரபிள்ஸ்’’. தமிழில் அது ‘’ஏழை படும் பாடு’’ என்று மொழிபெயர்க்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் வாரத்தின் முதல் நாளான ஒரு திங்கள் கிழமை தொடங்கும் போது சுயதொழில் புரியும் தொழில் முனைவோர்கள் படும் பாடு என்பது சொல்லி மாளாதது.  

இங்கே மாநில அரசு அலுவலகங்கள் தங்கள் முன் வரும் ஒரு காகிதத்தை அல்லது ஒரு மனுவை அல்லது ஒரு கோப்பை அல்லது ஒரு வேலையை எவ்விதம் செய்யாமல் ஒத்தி வைப்பது என்பதைப் பழகியிருப்பார்கள். உண்மைக்கு மாறான விஷயங்களைக் கூற பழகியிருப்பார்கள். வந்திருப்பவனைக் குழப்புவதற்கு என்னவெல்லாம் கூற வேண்டுமோ அதனையெல்லாம் சொல்வார்கள். ஒரு வாரம் துவங்குகையில் அங்கே சென்று நிற்பது என்பது அந்த வாரத்தையே ஒளியிழக்கச் செய்து விடும். 

பட்டா மாற்றம் செய்ய, சொத்து வரி பெயர் மாற்ற , நிலம் அல்லது மனையை அளந்து கொடுக்க , காலிமனை வரி விதிக்க என இவர்கள் கேட்கும் லஞ்சத் தொகை என்பது பெரும் அளவிலானது. நூறு ரூபாய் அரசுக்கட்டணம் எனில் அவர்கள் கேட்கும் லஞ்சம் என்பது ஐயாயிரம் ரூபாய் என்ற அளவில் உள்ளது. 

பல ஆண்டுகளுக்கு முன்னர் அதிகாரிகள் லஞ்சப் பணத்தை நேரடியாக கேட்டு வாங்கிக் கொள்வார்கள். இப்போதெல்லாம் லஞ்சப் பணத்தை குடிமக்களிடம் வாங்கி அதிகாரிகளுக்குக் கொடுக்க ஒவ்வொரு அலுவலகத்திலும் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல. அந்த அரசு அலுவலகத்தின் தற்காலிக ஊழியர்கள். இவர்கள் பணம் பெறுவதால் இவர்கள் தங்களை அதிகாரிக்கும் மேலாக கருதிக் கொண்டு மக்களை அலைக்கழிக்கிறார்கள். 

ஒரு மாநிலத்தில் தொழில்வளம் பெருக வேண்டும் எனில் அந்த மாநிலத்தில் லஞ்சம் தராமல் சாமானியர்களின் சாதாரண வேலைகள் நிகழ்கின்றன என்ற நிலை இருக்க வேண்டும். அது இப்போது தமிழ்நாட்டில் இல்லை. 

காசி பாத யாத்திரை - ஒரு பயண மார்க்கம்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் காசி யாத்திரை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உலகின் எல்லா பகுதியிலிருந்தும் ஒவ்வொரு நாளும் காசியை நோக்கி வந்தடைந்து கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் காசி யாத்திரை ஒவ்வொரு விதமாக நிகழ்ந்திருக்கிறது. காசி யாத்திரையை ராமேஸ்வரத்தில் துவங்குவது தென்னிந்தியர்களின் மரபு. அவ்வாறு ராமேஸ்வரம் துவங்கி ஒரு பாத யாத்திரை நிகழ்ந்தால் அந்த பயணத்தை எந்தெந்த திருத்தலங்களின் மார்க்கமாக அமைக்கலாம் என சிந்தித்துப் பார்த்தேன்.  

1. தனுஷ்கோடி

கம்ப ராமாயணத்தில் ‘’சேது’’ வின் புகழை கம்பன் மிக விரிவாக எடுத்துரைத்துள்ளான். இராம சேனை இலங்கை செல்ல தேர்ந்தெடுத்த வழித்தடம் என்பதால் இந்தியாவின் எல்லா பகுதிகளில் வசிக்கும் மக்களாலும் இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் எழுதப்பட்ட இலக்கியங்களாலும் ‘’சேது’’ வின் புகழை வியந்து சிறப்பிக்கப்படுகிறது. 

2. இராமேஸ்வரம்

ஜ்யோதிர்லிங்க தலங்களில் ஒன்று. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பதிகம் பாடப்பெற்ற தலம். இராமேஸ்வரம் ஆலயத்திலும் ஆலயத்தைச் சுற்றி உள்ள தீர்த்தங்களில் தீர்த்தமாடுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. மதுரை நாயக்க மன்னர்களாலும் ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி அரசர்களாலும் திருப்பணிகள் செய்யப் பெற்ற ஆலயம். ஒவ்வொரு நாளும் இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் ரயில் மார்க்கமாகவும் சாலை மார்க்கமாகவும் லட்சக்கணக்கானோர் வழிபாட்டுக்காக வந்து சேரும் இடம். 

3. திருப்புல்லாணி

முக்கியமான வைணவத் தலம். இராமாயணத்தில் குறிப்பிடப்படும் ஒரு முக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இடம். அனுமன் தன் ஆற்றலால் கடலைக் கடந்து அன்னை சீதை இருக்குமிடத்தை இலங்கையின் அசோகவனம் என அறிகிறான். வானர சேனைகள் இலங்கை நோக்கிச் செல்ல தயாராய் இருக்கின்றன. திருப்புல்லாணியில் இருக்கும் ராமன் சமுத்திர ராஜனை நோக்கி விண்ணப்பிக்கிறார். போர்ப்பாசறையில் தர்ப்ப சயனத்தில் இருக்கும் ராமன் திருப்புல்லாணியில் வழிபடப்படுகிறார். ஒரு வாரம் ஆகியும் சமுத்திர ராஜனிடமிருந்து எந்த பதிலும் இல்லாததால் திருப்புல்லாணிக்கு அருகில் உள்ள சேதுக்கரையில் சமுத்திரத்தில் சில அடிகள் எடுத்து வைத்து வில்லேந்தி ராம பாணத்தை பிரயோகித்து கடலை வற்றச் செய்கிறேன் என சீற்றம் கொள்கிறார். அந்த தருணம் சமுத்திர ராஜன் வெளிப்பட்டு ராமரை வணங்குகிறான். 

4. மதுரை

தமிழ் நிலத்தின் தொன்மையான முக்கியமான மாநகரங்களில் ஒன்று. மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் பாண்டிய மன்னர்களின் தலைநகர். சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் ஆகிய வழிபாட்டு முறைகளுக்கு முக்கியமான ஒரு தலம். சமணமும் பௌத்தமும் செழுத்து வளர்ந்திருந்த ஊர்களில் ஒன்று. உலக இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க நூலான சிலப்பதிகாரம் தனது மூன்று காண்டங்களில் ஒன்றாக மதுரைக் காண்டத்தைக் கொண்டுள்ளது. அன்னை மீனாட்சி உலக உயிர்களை அருளாட்சி செய்யும் நகரம். கலை , நுண்கலை என அனைத்திலும் சிறந்தது. 

5. அழகர் கோவில்

இந்தியாவின் பெரிய திருவிழாக்களில் ஒன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கள்ளழகர் அழகர் கோவிலிலிருந்து மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்குவதைக் காண ஒட்டு மொத்த தென் தமிழகமும் மதுரை வந்தடையும். 

இந்த கோவிலின் வாயிலில் குடி கொண்டு உள்ள ‘’பதினெட்டாம் படி கருப்பண்ண சாமி’’ தென் தமிழகத்தில் பலரின் குலதெய்வம். 

6. பழனி

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. தமிழ் மக்களால் மிக அதிகமாக மிக வாஞ்சையுடன் வணங்கப்படும் கடவுள் முருகன். இன்றும் முருகன் பெயர் கொண்ட ஒருவரேனும் பெரும்பாலான குடும்பங்களில் இருப்பார்கள். 

7. நெரூர்

பெரும் யோகியும் அத்வைதியுமான சதாசிவ பிரும்மேந்திரர் ஜீவ சமாதி அடைந்த இடம். 

8. காஞ்சி

‘’நகரேஷூ  காஞ்சி’’ என சிறப்பித்துச் சொல்லப்படுவது. ‘’அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா துவாரகா’’ ஆகிய ஏழு நகரங்களும் புனித நகரங்கள் என தினமும் இந்தியர்களால் நினைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாள் காலை விழித்தெழும் போதும் இந்த ஏழு புனித நகரங்களின் பெய்ரை சுலோகமாகக் கூறி அவற்றை வணங்கும் வழக்கம் இப்போதும் பல இந்தியர்களால் மேற்கொள்ளப்படுகிறது. 

சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் ஆகியவை செழித்திருக்கும் இடம். பௌத்தமும் சமணமும் சிறப்புற்றிருந்த தலம். கலை, இலக்கியம், நுண்கலை ஆகியவற்றின் உச்சம் நிகழ்ந்த இடம். தறி வேலைப்பாடுகளில் சிறந்த ந்கரம். பட்டுக்குப் பெயர் போனது. சைவக் குரவர்களாலும் ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற தலம். 

9. காளஹஸ்தி

கண்ணப்ப நாயனாருடன் தொடர்புடைய தலம். இறைவனுக்காக கண்ணப்பர் தன் கண்களை அளிக்கத் துணிந்த தலம். சிவபெருமான் வேட்டுவரான கண்ணப்பர் பக்தியுடன் அளித்த மாமிசத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்ட தலம். தனது பக்தனான கண்ணப்பர் சிவ லிங்கத்தின் கண்களில் ரத்தம் வழிந்த போது  அம்பால் தன் ஒரு கண்ணைப் பிடுங்கி லிங்கத்தின் கண்களில் வைக்க லிங்கத்தின் இன்னொரு கண்ணில் மீண்டும் ரத்தம் வருவதைக் கண்டு தனது இன்னொரு கண்ணை அம்பால் பிடுங்கப் போன போது சிவபெருமான் கண்ணப்பரின் இறை பக்தியால் நெகிழ்ந்து ‘’என்னப்ப கண்ணப்ப’’ என கூறிய திருவிளையாடல் நிகழ்ந்த தலம். 

சம்பந்தர், அப்பர், சுந்தரரால் பாடல் பெற்ற தலம். 

பஞ்ச பூத ஷேத்திரங்களில் சிவன் வாயு ரூபமாக விளங்கும் தலம். 

10. திருமலை - திருப்பதி

உலகெங்குமிலிருந்து தினமும் லட்சக்கணக்கானோர் ஸ்ரீநிவாசப் பெருமாளை வழிபட வந்து சேரும் புண்ணியத் திருத்தலம். 

11. ஸ்ரீசைலம்

சைவத்திலும் சாக்தத்திலும் மிக முக்கியமான ஒரு தலம். 

பன்னிரு ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று. 

சம்பந்தர், அப்பர், சுந்தரரால் பதிகம் பெற்ற தலம். 

கன்னட மொழி இலக்கியத்தின் கவிஞரான அக்கமாதேவியார் மல்லிகார்ஜூனரை வணங்கி வழிபட்ட தலம். 

கிருஷ்ண தேவராயராலும் சத்ரபதி சிவாஜியாலும் திருப்பணி செய்யப் பெற்ற தலம். 

12. ஓம்காரேஷ்வர்

பன்னிரு ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று. 

நர்மதை நதியை வலம் வரும் ‘’நர்மதா பரிக்கிரமா’’வை ஓம்காரேஷ்வரிலிருந்து துவங்குவார்கள். 

13. உஜ்ஜைன்

பன்னிரு ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று. 

பகவான் புத்தரின் வாழ்வுடன் தொடர்புடையது. 

இந்தியர்கள் தினமும் நினைக்கும் ஏழு புனித நகரங்களான ‘’அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா துவாரகா ‘’ என்ற ஏழு நகரங்களில் அவந்திகா எனக் குறிப்பிடப்படுவது உஜ்ஜைன். மகாகவி காளிதாஸ் உடன் தொடர்புடைய நகரம். 

14. பிரயாக்ராஜ்

கங்கையும் யமுனையும் அந்தர்வாகினியான சரஸ்வதியும் சங்கமிக்கும் இடம். இராமாயணத்தில் மிக முக்கியமான சிறப்பிடம் பெற்றுள்ள நகரம். 

15. காசி

உலகிற்கே ஆன்ம ஒளி அளிக்கும் நகரம். மகாபாரத காலத்திலிருந்து இந்திய இலக்கியங்களில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நகரம். பகவான் புத்தரின் வாழ்வில் முக்கிய இடம் வகிப்பது. இந்தியாவின் ஆன்மீகப் பண்பாட்டுத் தலைநகர். இந்தியாவின் எண்ணற்ற கலைஞர்களுடன் தொடர்புடையது. தமிழ்க் கவி பாரதி கல்வி பயின்ற தலம். துறவியும் தமிழ்ப் புலவருமான ஸ்ரீகுமரகுருபரர் சைவப் பணி மேற்கொண்ட இடம். இந்தியர்கள் புனித நகரமாகக் கருதும் ஏழு நகரங்களில் ஒன்று. சைவத்தின் முக்கிய பிரிவுகளான காளாமுகம் , காபாலிகம் ஆகிய மரபுகள் நீடித்திருக்கும் ஷேத்திரம். 

16. நாகபுரி

மகாபாரத காலத்திலிருந்தே இந்திய இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நகரம். 

17. அஹோபிலம்

நரசிம்மர் வழிபாட்டில் ஒரு முக்கிய நகரம். மிக முக்கியமான வைணவத் தலம். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம். 

18. நெல்லூர்

ஆந்திரத்தின் கடலோர நகரம்

19. மயிலாப்பூர்

உமையம்மை சிவபெருமானை புன்னை மரத்தடியில் மயில் வடிவில் பூசித்த தலம் என்பது ஐதீகம். சம்பந்தர், அப்பர் , சுந்தரரால் தேவாரப் பதிகம் பெற்ற தலம். ஒவ்வொரு ஆண்டும் அறுபத்து மூன்று நாயன்மார் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம். 

20. மரக்காணம்

ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சிவாலயம். சிவபெருமான் பூமீஸ்வரர். 

21. திருப்பாதிரிப்புலியூர்

சைவ சமயக் குரவரான திருநாவுக்கரசர் வாழ்வுடன் தொடர்புடைய தலம். சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடல் பெற்ற தலம்

22. பரங்கிப்பேட்டை

ஞானியும் யோகியுமான மகா அவதார் பாபாஜி அவதரித்த திருத்தலம். பாபாஜி சிறு வயதில் சிறுவனாக இருந்த போது வணங்கிய முருகன் கோவில் இப்போதும் உள்ளது. பாபாஜிக்கு ஒரு சிறு கோவில் பாபாஜி பக்தர்களால் எழுப்பப்பட்டுள்ளது. 

23. சிதம்பரம்

கலையின் இறைவனான கலையரசன் நடனமிடும் திருத்தலம். பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாயத்துக்கானது. இத்திருக்கோயில் அமைந்துள்ள திருத்தலமே புவியின் மையம் ஆகும். சைவ மரபில் கோவில் என்பது சிதம்பரத்தையே குறிக்கும். நாடெங்கும் உள்ள நடனக் கலைஞர்கள் தில்லையில் கோயில் கொண்டுள்ள கூத்தர்பிரானை வணங்கிச் செல்கிறார்கள். 

24. சீர்காழி

சைவ நாயன்மார்களில் முதன்மையானவரான திருஞானசம்பந்தர் அவதரித்த தலம். பசியால் அழுத குழந்தையான சம்பந்தரின் குரல் கேட்டு உமையம்மை சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்ததாக ஐதீகம். குழந்தை வாயில் பாலருந்தியதின் தடயங்களைக் கண்டு சம்பந்தரின் தந்தை உனக்கு பால் கொடுத்தது யார் என்று கேட்க ‘’தோடுடைய செவியன் விடையேறி தூவெண் மதி சூடி காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்’’ என்னும் தேவாரத்தை சம்பந்தர் சிறு  குழந்தையாயிருந்த போது பாடிய தலம். திருமுலைப்பால் விழா இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

25. வைத்தீஸ்வரன் கோவில்

தமிழ் நாட்டின் எல்லா பிராந்தியங்களிலும் உள்ள மக்களாலும் துதிக்கப்படும் தெய்வம். தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் கைக்குழந்தைகளின் முடி களைதல் சடங்கை வைத்தீஸ்வரன் கோவிலில் தான் நிகழ்த்துகிறார்கள். 

26. திருப்பனந்தாள்

ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்து திருச்சீரலைவாய் முருகப் பெருமான் அருளால் பாடும் திறன் பெற்று தருமபுரத்தில் தன் ஆசானைக் கண்டடைந்து அவரின் ஆக்ஞைக்கு இணங்க காசி சென்று கேதார கட்டத்தில் குமாரசாமி மடம் அமைத்து தமிழ்த் தொண்டும் இறைத் தொண்டும் புரிந்த துறவியும் புலவருமான ஸ்ரீகுமரகுருபரரின் ஸ்ரீகாசி மடம் அமைந்துள்ள இடம் திருப்பனந்தாள். 

27. திருவாவடுதுறை

தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளாக சமயப் பணியும் தமிழ்ப் பணியும் புரியும் திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ள ஊர். இந்தியா சுதந்திரம் பெற்ற போது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமருக்கு செங்கோல் அளித்த சிறப்பு பெற்ற ஆதீனம் திருவாவடுதுறை ஆதீனம். 

28. தருமபுரம்

தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களுள் ஒன்று. சமயப் பணியும் தமிழ்ப் பணியும் பல நூற்றாண்டுகளுக்கு மேற்கொண்டு வரும் ஆதீனம். 

29. திருவாரூர்

சைவத்திலும் சாக்தத்திலும் மிக முதன்மையான சிறப்பைப் பெற்ற திருத்தலம். கர்நாட்க சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகளுடன் தொடர்புடைய ஊர். ஆரூர் ஆழித்தேர் உலகப் புகழ் வாய்ந்தது. 

30. ஆவுடையார்கோவில்

தமிழ் இலக்கியத்தில் திருவாசகம் பெற்றுள்ள இடம் அலாதியானது. திருவாச்கம் பாடிய மாணிக்கவாசகர் தன் ஞானகுருவைக் கண்டடைந்து ஞானம் பெற்ற இடம் ஆவுடையார்கோவில். 

தனுஷ்கோடி அடைதல்.   

காசி பாத யாத்திரை திருநிறைவு. 

***

இந்த பயண மார்க்கத்தின் முக்கிய அம்சங்கள் :

1. இந்த பயண மார்க்கத்தில் சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் ஆகிய வழிபாட்டு முறைகளின் திருத்தலங்கள் இடம் பெற்றுள்ளன. 

2. இந்தியர்கள் தினமும் நினைத்து வழிபடும் புனித நதிகள் ஏழு. கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, காவேரி, நர்மதா, கோதாவரி ஆகிய நதிகளே அவை. இந்த பயண மார்க்கத்தில் சிந்து  நதியைத் தவிர மற்ற அனைத்து  நதிகளையும் தரிசிக்க முடியும். மேலும் தென்பெண்ணை, பாலாறு, வைகை, கிருஷ்ணா, துங்கபத்திரா ஆகிய நதிகளையும் தரிசிக்க முடியும். 

3. இந்தியர்கள் தினமும் நினைத்து வழிபடும் புனித நகரங்கள் ஏழில் இந்த பயணச் சுற்று காஞ்சி, அவந்திகா ( உஜ்ஜைன்) , காசி ஆகிய மூன்று நகரங்களைக் கடந்து செல்கிறது. 

4. பன்னிரண்டு ஜ்யோதிர்லிங்க தலங்களில் இந்த பயணச் சுற்றில் இராமேஸ்வரம், ஸ்ரீசைலம், ஓம்காரேஷ்வர், உஜ்ஜைன் மற்றும் காசி ஆகிய ஐந்து ஊர்களில் தங்கியிருந்து இறைவனை வழிபட முடியும்.   

5. இந்திய யோக மரபின் முக்கியமான குருமார்கள் வாழ்வுடன் தொடர்புடைய பல தலங்கள் இந்த பயணச் சுற்றில் அமைந்துள்ளன. ( சதாசிவ பிரும்மேந்திரர், அக்கமா தேவியார், மகா அவதார் பாபாஜி) 

6. சைவ சமயக் குரவர்கள் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடப் பெற்ற பல தலங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. திருவாசகத்துடம் தொடர்புடைய ஆவுடையார் கோவிலும் இதில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் மிக முக்கியமான சைவ ஆதீனங்களான திருவாவடுதுறையும் தருமபுரமும் இந்த பயணச் சுற்றில் உள்ளன. ஸ்ரீகுமரகுருபரர் காசியில் தோற்றுவித்த மடமான ஸ்ரீகுமாரசாமி மடத்தின் கிளையான திருப்பனந்தாள் இந்த பயணச் சுற்றில் உள்ளது. 

7. இந்த மார்க்கம் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய இந்திய மாநிலங்களின் வழியே நிகழ்கிறது. தோராயமாக 5750 கி.மீ தொலைவு கொண்டது. காசி நோக்கி செல்லும் போது ஒரு வழியும் காசியிலிருந்து தனுஷ்கோடி திரும்பும் போது வேறொரு வழியும் கொண்டது என்பதால் இதனை ஒரு முழு சுற்றாகக் கருத முடியும். 

*******

ஆயா

ஔவையார் செங்கல்வராயனிடம் கொடியது கேட்கின் நெடிய வேல் வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது என்கிறார் . மேலும் அதனினும் கொடிது இளமையில் வறுமை என்றும் சொல்கிறார்.  

இளமையில் வறுமையைத் தவிர வேறெதையும் காணாத ஒருவன் ஒரு நேர்காணலுக்குச் செல்கிறான். நேர்காணல் குழு அவனிடம் ஒரு கதையைக் கூறுமாறு கூறுகிறது. சாமர்த்தியமாக அவன் தனது சொந்தக் கதையை வேறொரு கதை போல கூறுகிறான். அந்த கதை சொன்னதன் விளைவாக கதைசொன்னவன் எதிர்பாராத ஒரு விஷயம் நடக்கிறது. அது என்ன என்பதே தி. ஜா வின் சிறுகதை ‘’ஆயா’’

Sunday 11 December 2022

வளர்ச்சி

செயல் புரியும் கிராமத்தில் விஜயதசமி அன்று தேக்கு மரக்கன்றுகள் நட்ட வயலுக்கு இன்று காலை சென்றிருந்தேன். ‘’மரத்தை நட்டவன் தண்ணீர் ஊற்றுவான்’’ என தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது மிகவும் உண்மை. அனுபவபூர்வமானது. ஒரு மரத்தினை நடுதல் என்பதற்கு ஒரு மனிதனின் எண்ணமும் மனமும் முயற்சியும் தேவை. பறவைகளின் எச்சம் மூலம் மரத்தின் விதைகள் பரவிக் கூட மரங்கள் மண்ணில் முளைத்து வேர்விட்டு நிலைத்து விருட்சமாகின்றன. அவ்வாறு உருவாகும் மரங்களின் எண்ணிக்கையும் கணிசமானது. மரத்தினை நடுவதற்கு மரம் தான் மனிதனுக்கு வாய்ப்பு அளிக்கிறது. மரம் நடுதல் என்பது ஒரு பேறு. எந்த மனிதனும் ஒரு மரத்தை நடுவானாயின் அது எவ்விதம் வளர்கிறது என்பதை ஓர் ஆர்வத்தின் காரணமாகவேனும் கவனிப்பான். அது முழுமையாக வளர்வதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதால் மரத்தினை நட்ட சில மாதங்களுக்காகவாவது மரத்தினை நட்டவன் தண்ணீர் ஊற்றுவான். ஒரு மரக்கன்று செடியாக இருக்கும் போது மட்டுமே நம்மால் சிறு சிறு மாற்றங்களைக் கூட கவனிக்க முடியும். ஆறடி உயரத்துக்கு மேல் வளர்ந்து விட்டால் அதனை நம் மனம் ஒரு மரமாகவே கருதத் துவங்கி விடும். 

இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது கிராமத்தில் உள்ள தேக்கு மரக் கன்றுகளை பார்ப்பதற்கு சென்று வருவேன். அந்த வயலின் விவசாயி தனது நிலத்துக்கு தினமும் காலை மதியம் மாலை என மூன்று முறை வருவார். நான் மூன்று நாட்களுக்கு ஒருமுறை செல்வேன். இங்கே இப்போது சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் கன்று மேலும் வளர்ச்சி பெற்றிருக்கும் என நினைத்தேன். 

தேக்கின் இயல்பு என்பது அது முதலில் வேர் பிடிப்பதற்கு கணிசமான நாட்களை எடுத்துக் கொள்ளும். வேர் பிடிப்பதும் வளர்ச்சியின் ஒரு பகுதிதான் என்றாலும் செடி எப்போது உயர மேலெழும்பும் என்பதையே நம் மனம் எதிர்நோக்கும். அந்த கன்று தனது தன்மையைப் பொறுத்து வேர் பிடித்து விட்டதாக எண்ணத் தொடங்கிய பின் சட்டென மேலெழத் தொடங்கும். வேர் பிடித்த பின் அதன் வளர்ச்சி என்பது சர சர என நிகழும். 

மரங்களை நட்ட திடலுக்கு கிழக்கிலும் மேற்கிலும் உள்ள விவசாயிகள் தங்கள் திடலில் இருந்த புதர்களை நீக்கி வைத்திருப்பதைக் கண்டேன். மூன்று நாட்கள் முன்னர் சென்ற போது அவ்வாறான பணிகள் நிகழ்ந்திருக்கவில்லை. இடைப்பட்ட நாட்களில் தான் புதர்களை அகற்றியிருக்கிறார்கள். அண்டை நிலத்தில் வளரும் தேக்கு அவர்களுக்கு தாங்களும் தேக்கு பயிரிட வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியிருக்கக் கூடும். 

பெரிய இலைத்தொகுதிகளுடன் கணிசமான உய்ரம் வளர்ந்துள்ள தேக்கு மரக் கன்றுகளைக் கண்டது மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. 

Saturday 10 December 2022

உலக மனித உரிமைகள் தினம்

டிசம்பர் 10ம் தேதி ‘’உலக மனித உரிமைகள் தினம்’’. 

இந்தியாவில் அரசமைப்பில் உச்ச அதிகாரம் கொண்ட மேலிடம் என்பது அளவில் மிகவும் சிறியது. ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் அமையப் பெற்றிருக்கும் அரசு அலுவலகங்களே நாட்டின் குடிமக்கள் அரசுடன் தொடர்பு கொள்வதற்கான பொதுப்புள்ளிகள். இந்த அலுவலகங்களை நோக்கியே மக்கள் தினமும் ஏதேதோ காரணங்களுக்காக வருகிறார்கள். பெரும்பாலும் அரசு அலுவலகம் நோக்கி செல்வதை எவ்வளவு தள்ளிப் போட முடியுமோ அல்லது எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு தள்ளிப் போடுகிறார்கள் அல்லது அவ்வளவு தவிர்க்கிறார்கள். அதற்குக் காரணம் அரசு அலுவலக ஊழியர்கள் குடிமக்களை நடத்தும் விதம். அரசு அலுவலகத்துக்கு ஒருமுறை சென்ற ஒருவர் மீண்டும் ஒருமுறை அங்கே படியேறக் கூடாது என எண்ணும் விதமான அனுபவத்தையே அடைகிறார். கசப்பான அனுபவம் குடிமக்களுக்கு கிடைக்கப் பெறுவதற்கு காரணம் அரசு ஊழியர்களின் லஞ்ச நாட்டம். லஞ்சத்தின் மீதான அரசு ஊழியர்களின் நாட்டமே பொதுமக்கள் ஏன அரசு அலுவலகத்துக்கு வருகிறார்கள் என எண்ண வைக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இடைத்தரகர்கள் மூலம் அணுகச் சொல்லி குடிமக்களிடம் எதிர்பார்க்கிறது. 

நம் நாட்டின் குடிமகன் அரசு அலுவலகத்தில் நடத்தப்படும் முறை என்பது மிகவும் மோசமானது. இந்த இழிவான நிலைக்குக் காரணம் அரசு அதிகாரிகள். 

கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள், நில அளவையாளர்கள், நகராட்சி வரி வசூலிப்பவர்கள் , குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகள், வாகனப் பதிவு அதிகாரிகள், பத்திரப் பதிவுத் துறை போன்ற அலுவலகங்கள் குடிமக்களிடம் நடந்து கொள்ளும் முறை என்பது மிக மோசமானது. சாமானிய குடிமக்கள் இந்த அலுவலகங்களையே மிக அதிகம் தினமும் நாடுகிறார்கள். இந்த துறை அதிகாரிகளின் லஞ்ச நாட்டமே பொது மக்கள் தினமும் கசப்பான அனுபவத்தை அடையக் காரணமாகிறது. இந்த கசப்பான அனுபவத்தை ஒரு முறையேனும் பெற்ற ஒருவர் மீண்டும் அரசமைப்பு குறித்து நல்ல அபிப்ராயம் கொள்ள வாய்ப்பில்லை. 

லஞ்சமும் ஊழலும் மனித உரிமைகளுக்கு எதிரானவை. 

லஞ்ச ஊழல் இல்லாத நிர்வாகத்தில் தான் மனித உரிமைகள் காக்கப்பட முடியும்.  

Friday 9 December 2022

அருணாச்சலமும் பட்டுவும்

உறவுகளைத் துறந்திருக்க வேண்டும் என்ற விருப்பம் குறித்து எல்லாருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எண்ணியிருப்பர். அவ்வாறு எண்ணியவர்களில் 99.99% பேருக்கு அது சாத்தியமாவதில்லை என்பது அந்த விஷயத்தின் சுவாரசியம். இந்த பின்னணியில் தி.ஜா எழுதிய சிறுகதை ‘’அருணாச்சலமும் பட்டுவும்’’ 

தேடல்

வாழ்க்கை நூதனமானது. அது மிகப் பெரியது என்பதால் நூதனமானது. அது மிகப் பெரியது என்பதால் சிக்கலானது. மேற்படி இரண்டு கூற்றுகளின்  மறுபக்கமாக அதன் மிகப் பெரிய தன்மையே எதனையும் சாதாரணமாக ஆக்கக் கூடியதும் கூட.  

துரதிர்ஷ்டத்தின் விளைவால் மனைவியையையும் மகளையும் சந்திக்க இயலாமல் நீண்ட ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் ஒருவர் எதிர்பாராத நிகழ்வாக மகளைச் சந்திக்க நேர்கிறது. அந்த சந்திப்பு அவருக்கு எதிர்பாராத ஒன்றை அளிக்கிறது. 

இவ்வாறான சந்தர்ப்பத்தை சிறுகதையாக்கியிருக்கிறார் தி.ஜா. 

யாத்திரை

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கூட இந்தியாவில் யாத்திரை என்பது பாத யாத்திரை தான். ஒரு கிராமத்துக்குள் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை வரையான தூரம் மூன்று கிலோ மீட்டர் இருக்குமென்றால் அங்கு சென்று திரும்புவது என்பதே முக்கால் மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் பிடிக்கும் செயல். இன்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். இங்கே ஒரு வருவாய் கிராமம் மூன்று அல்லது நான்கு குக்கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு குக்கிராமத்திலிருந்து அதே கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு குக்கிராமத்துக்கு செல்லும் வழக்கம் மிகக் குறைவாகவே உள்ளது. அதற்கான தேவையோ அவசியமோ மிகவும் குறைவு. கடைகள் மற்றும் கோவில்கள் தான் பொதுப்புள்ளிகள். கிராம மக்கள் கடைகளுக்கும் கிராமக் கோவில்களுக்கும் வருவார்கள். அதன் பின்னர் சைக்கிள் கடைகள். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட  ஒரு குக்கிராமம் என்றால் அதில் ஒரு மளிகைக் கடையும் சைக்கிள் கடையும் இருக்கும். பேருந்துகள் செல்லும் பாதையில் உள்ள கிராமங்களில் பேருந்து நிறுத்தங்களும் அதை ஒட்டிய தேனீர்க்கடைகளும். வீட்டிலிருந்து  வயலுக்கு ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று முறை சென்று திரும்பினாலே ஒரு நாளைக்கு ஆறிலிருந்து பத்து  கிலோமீட்டர் நடந்து சென்றதற்கு சமம்.  

கடைத்தெரு என்பது தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களுக்கு இன்னும் பக்கத்தில் இருக்கும் சிறுநகரங்களும் நகரங்களும் தான். உண்மையில் தங்கள் அருகாமையில் இருக்கும் கிராம மக்களின் நுகர்வாலேயே நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் ஜீவிக்கின்றன. கிராமத்தில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை அருகில் இருக்கும் நகரத்துக்கோ அல்லது சிறுநகரத்துக்கோ சென்று வந்தால் அன்றைய பொழுது என்பது அவர்களுக்கு நிறைந்து விடும். இன்று கிராமத்தில் பலவிதமான கடைகள் வந்து விட்டன. ஒரு கிராமத்தில் ஐந்திலிருந்து ஏழு மளிகைக் கடைகள் இருக்கின்றன. நான்கு தேனீர்க்கடை இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று கணிணி மையங்கள் உள்ளன. அடகுக்கடைகள் இருக்கின்றன. சில கிராமங்களில் நகைக்கடைகள் கூட உள்ளன. சலூன்கள் இயங்குகின்றன.

திருவிழாக்களை தமிழ் மக்கள் மிகவும் விரும்புவதற்குக் காரணம் அந்த சமயத்தில் கிராமங்களிலும் நகரங்களிலும் கூடும் மக்கள் கூட்டமும் அதனை ஒட்டி பல்வேறு விதமான பொருட்கள் கிடைக்கக்கூடிய சந்தையும் தான். தமிழ்நாட்டில் திருவண்ணாமலை தீபம், காஞ்சிபுரம் கருட சேவை, சிதம்பரம் ஆருத்ரா, ஆனித்திருமஞ்சனம், திருவாரூர் தேர், மன்னார்குடி வெண்ணெய்த்தாழி உற்சவம், பழனி பங்குனி உத்திரம், மதுரை சித்திரைத் திருவிழா, திருச்செந்தூர் சூரசம்ஹாரம் என அனைத்து திருவிழாக்களிலும் அந்தந்த ஊர்களுக்கு அருகில் இருக்கும் கிராம மக்களே இலட்சக் கணக்கில் திரள்கிறார்கள். 

மகாராஷ்ட்ராவில் ‘’வர்கரி’’ என்ற சம்பிரதாயம் உண்டு. ஞானி ஞானேஸ்வர் பிறந்த ஊரான ஆலந்தி என்ற ஊரிலிருந்து அவர் வழிபட்ட விட்டல சுவாமி கோவில் கொண்டுள்ள பண்டரிபுரம் வரை உள்ள தூரமான 225 கி.மீ தூரத்தை பதினைந்து நாள் பாத யாத்திரையாக ஞானேஸ்வர் மற்றும் துகாராமின் ‘’அபங்’’ பஜனைகளைப் பாடிக் கொண்டு நடந்து கொள்வார்கள். ஆலந்திக்கும் பண்டரிபுரத்துக்கும் இடையேயான 225 கி.மீ தூரப்பாதை பிரதானப் பாதை. அதில் கிளைபிரியும் சாலைகள் வழியே வெவ்வேறு குழுக்கள் இணைந்து கொள்வார்கள். இந்த பாத யாத்திரை புரியும் குழு ஒவ்வொன்றும் தங்கள் ஞானகுருவான ஞானேஸ்வர் மகராஜ் அல்லது துகாராம்மின் பாதுகைகளை தங்கள் குழுவின் சார்பாக ஒரு வாகனத்தில் சுமந்து செல்வார்கள். இந்திய மரபில் ஞானாசிரியனின் பாதுகை என்பது பெரும் வணக்கத்துக்குரியது. ஞானப்பாதையில் நடந்த மாமனிதனின் சிறப்பு எத்தனை உயர்வானது என்பதைக் காட்டுவது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் ஒவ்வொரு குழுவுக்கும் ‘’திண்டி’’ என்று பெயர். அந்த குழுவிற்கு ஒரு தலைவர் இருப்பார். ஒரு இசைக்குழு இருக்கும். குருதேவரின் பாதுகைகளை சுமக்கும் வாகனம் ஒன்று இருக்கும். இந்த குழு பண்டரிபுரத்தில் உள்ள விட்டல் ஆலயத்தில் தங்களைப் பதிவு செய்திருப்பார்கள். ஒவ்வொரு குழுவும் அவர்கள் ஊரிலிருந்து எப்போது புறப்பட வேண்டும் எந்த நாள் எங்கு இருக்க வேண்டும் ; எந்த நாளில் எந்த நேரத்தில் பிரதானப் பாதையில் இணைய வேண்டும் என்பவை முன்னரே வழங்கப்பட்டு விடும். அவை அனைத்துமே துல்லியமாக திட்டமிட்டபடி நிகழும். இந்த நிகழ்வின் போது லட்சக்கணக்கானோர் இந்த பாதையில் பயணிக்கின்றனர். இந்த பயணத்தை உலக சாதனையாக ‘’கின்னஸ் சாதனை புத்தகம்’’ குறிப்பிடுகிறது. 

எல்லா நதிகளையும் புனிதமாகக் கருதுவது இந்திய மரபு. ’’கங்கா யமுனா சரஸ்வதி சிந்து காவேரி நர்மதா கோதாவரி’’ ஆகிய ஏழு நதிகளும் இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவராலும் தினமும் நினைக்கப்பட வேண்டும் என வகுக்கிறது நமது மரபு. நர்மதை நதியின் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து அது கடலில் சங்கமமாகும் துறை வரை 2000 கி.மீ நதியுடனே பயணித்து பின்னர் படகு மூலம் நதியைக் கடந்து சங்கமத் துறையிலிருந்து உற்பத்தி ஸ்தானம் வரை 2000 கி.மீ என மொத்தம் 4000 கி.மீ பாத யாத்திரையாக நடந்து செல்லும் நர்மதா பரிக்கிரமா மிகத் தொன்மையான காலத்திலிருந்து மக்கள் மேற்கொள்ளும் வழிமுறை. இந்த பயணத்தை மேற்கொள்ளும் யாத்ரியின் நலன்களை பயணத்தின் மீது நர்மதை அன்னையே பாதுகாப்பாள் என்பது இந்திய மக்களின் நம்பிக்கை. மார்க்கண்டேயர், மகாபலி, பரசுராமர், அனுமன், விபீஷ்ணன், கிருபர், அஸ்வத்தாமர் ஆகிய எழுவரையும் சிரஞ்சீவிகள் என இந்திய மரபு வகுக்கிறது. ஒவ்வொரு நர்மதா பரிக்ரமா யாத்ரியுடனும் இந்த சிரஞ்சீவிகளும் பயணத்தில் உடனிருப்பதாக இந்தியர்களின் நம்பிக்கை. குழுக்களாகவும் தனி நபர்களாகவும் இந்த புண்ணிய யாத்திரையை மக்கள் மேற்கொள்கின்றனர். இவர்களுடைய உணவு உறைவிடத் தேவையை நதிக்கரையில் வசிக்கும் மக்களே பார்த்துக் கொள்கிறார்கள். இந்த பயணத்தின் போது யாத்ரிகர்கள் பிச்சையெடுத்து உண்ண வேண்டும் என்பது அதன் விதிகளில் ஒன்று. ‘’அதிதி தேவோ பவ’’ என்பது இந்திய மரபு. வாசல் தேடி வந்து பிச்சை கேட்கும் ஒருவன் கடவுளுக்குச் சமமானவன் என்பது மறைகளின் கூற்று. எனவே பரிக்ரமாவாசிக்கு உணவளிப்பதை மிகுந்த உவப்புடன் நர்மதா நதி தீர மக்கள் செய்கின்றனர். 

நமது உடலும் மனமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெகுநாட்களுக்கு இருக்கையில் ஒரே விதமான இயங்குமுறையில் மீண்டும் மீண்டும் சென்று சிக்குகின்றன. பிறவிச்சுழல் என மரபில் கூறப்படுவது அதுவே. நம் உடல் ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. நாம் ஒரே இடத்தில் வெகுநாட்கள் இருந்தால் நம் சூட்சும சரீரம் அந்த இடத்துடன் தன்னை வலுவாகப் பிணைத்துக் கொள்ளும். அந்த பிணைப்பை அவ்வளவு எளிதில் உடைக்க முடியாது. ஒரே இடத்தில் இருந்தும் மனதை விரிவாக்கிக் கொள்ள இயலும். ஆனால் அது எல்லாருக்கும் இயல்வதல்ல. இலட்சத்தில் ஒருவருக்கே அது சாத்தியம். மனிதன் தன்னைச் சூழும் அகவயமான புறவயமான எல்லைகளை உடைக்க எல்லைகளைக் கடக்க பயணங்கள் உதவும். உலகின் எல்லா மதங்களும் புனித யாத்திரையை வகுத்திருக்கின்றன. ஜென் மரபில் பயணம் என்பது அகவிடுதலையின் குறியீடு. ஜென் குருமார்கள் பயணித்தவாறே இருக்கிறார்கள். ஜென் குருமார்களுடன் பயணிப்பது சீடர்களுக்கு கல்வியாகவும் அமைகிறது. ஜப்பானில் ஃபியூஜி மலை மீது ஏறுவது என்பது ஜென் மரபில் முக்கியமான ஒரு புனித யாத்திரை. 

இந்தியா துறவிகளின் தேசம். இந்தியா துறவிகளால் உருவாக்கப்பட்ட தேசம். ‘’சோறிடும் நாடு ; துணி தரும் குப்பை’’ என விட்டு விடுதலையாகிக் கிளம்பியவர்களே இந்த நாட்டின் பண்பாட்டு விழுமியங்களை உருவாக்கினார்கள். சேதுவிலிருந்து ஹிமாச்சலம் வரை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் தேச மக்கள் வடக்குக்கும் தெற்குக்கும் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.  

பயணிக்கும் ஒவ்வொருவர் உடலில் மனதில் சிந்தனையில் நயத்தகு நலம் பயக்கும் தன்மை ஒரு நீண்ட தூர  புண்ணிய பாத யாத்திரைக்கு உண்டு. தமிழ்நாட்டில் அவ்வாறான ஒன்று அதிக அளவில் நிகழ வேண்டும்.  

Thursday 8 December 2022

பரிமள ரங்கம்

 ஆதி ரங்கம்
அப்பால ரங்கம்
ஸ்ரீரங்கம்
சாரங்கம்
பரிமள ரங்கம்
பஞ்ச ரங்க ஷேத்திரங்கள்
பெருமாள் கோயில் பட்டர் சொல்கிறார்
பரிமள ரங்கன் 
ஆசுவாசமாக சயனித்திருக்கிறான்
நாபியில் பிரம்மா 
பாதத்தில் சந்திரன் 
காவிரித் தாயார்
கங்கைத் தாயார்
உடனிருக்க
அர்ப்பணமாகும் மலரின் பரிமளமும்
அர்ப்பணமாகும் துளசியின் பரிமளமும்
வீர சயனத்தை
மேலும் ஏதுவாக்குகின்றன
உற்சவர் 
ஐப்பசியில் காவிரி பார்க்க
புறப்படுகிறார்
மாசிமகத்துக்கு
காவிரிப்பூம்பட்டினம் காண
புறப்படுகிறார்
சயனத்திருக்கும் பெருமாளின் மூச்சொலியை
தன் குடும்பத்துடன் வந்திருக்கும்
ஏதோ ஒரு பாலன்
கேட்டு விடுகிறான்
கொஞ்சம் தயங்கி 
சொல்லவும் செய்கிறான்
யாரும் முழுதாக நம்புவதில்லை
பெருமாள் புன்னகைக்கிறார்
அவர் புன்னகைப்பதும் 
அந்த பாலனுக்குத் தெரிகிறது
அவன் அதை யாரிடமும் சொல்லவில்லை

Wednesday 7 December 2022

உயிரின் பிரும்மாண்டம்

உலகப் புகழ் பெற்ற அறிவியல் இதழ் ஒன்றில் வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரையை இன்று வாசித்தேன். கட்டுரையாளர்கள் இரு ஆயுர்வேத மருத்துவர்கள். இந்தியாவில் மருத்துவ சேவை புரிபவர்கள். தாங்கள் சிகிச்சையளித்த - மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்ட ஒரு மனிதரை- எவ்விதம் ஆயுர்வேத சிகிச்சை மூலம் சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள் என்பதை சின்னஞ்சிறு நுண் விபரங்களும் கூட விடுபட்டு விடாமல் படிப்படியாக விளக்கியுள்ளனர்.  

அறுபது வயது கொண்ட மனிதர் ஒருவர் கோவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறார். அலோபதி மருத்துவர்களிடம் ஆரம்ப சிகிச்சை மேற்கொள்கிறார். அவருக்கு சிகிச்சை மிகச் சிறு அளவிலேயே ஆரம்பத்தில் உதவுகிறது. சில நாட்களில் அலோபதி மருத்துவத்தால் அந்த உதவியும் அவர் உடலில் நிகழாமல் போகிறது. அவர் உடலில் ஆக்சிஜனின் அளவு குறைந்தபட்ச அளவுக்கு மிகக் கீழே சென்று விடுகிறது. சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் அளிக்கப்பட்டால் மட்டுமே அவர் உயிருடன் இருக்க முடியும் என்ற நிலை. தொடர்ந்து ஆக்சிஜன் தரப்படுகிறது. எனினும் அவருக்குத் தரப்படும் அலோபதி மருந்துகள் அவர் உடல்நிலையை சற்றும் மேம்படுத்தவில்லை. அவர் உணவு அருந்துவது குறைந்து கொண்டே போகிறது. எந்த உணவையும் உண்ணும் நிலையில் அவர் இல்லை. ஆக்சிஜன் மாஸ்க்கை மிக அசௌகர்யமாக உணர்ந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறிட முயல்கிறார். வேறு ஒரு மருத்துவமனைக்கு அவருடைய குடும்பத்தினர் அழைத்துச் செல்கின்றனர். அவருடைய நிலையைப் பார்த்து விட்டு வெளியிலிருந்து ஆக்சிஜன் தரப்படாமல் இருந்தால் அவர் மூன்று நாட்கள் மட்டுமே உயிருடன் இருக்க முடியும் என்று கூறிவிடுகின்றனர் மருத்துவமனையினர். எந்த அலோபதி மருந்தும் அவரது சூழ்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தவில்லையே என குடும்பத்தினர் கேட்கின்றனர். அந்த கேள்விக்கு மருத்துவமனையின் அலோபதி மருத்துவர்களிடம் எந்த பதிலும் இல்லை. மருத்துவமனை வேண்டாம் ; தன்னை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுங்கள் என குடும்பத்தினரிடம் மன்றாடுகிறார் அந்த மனிதர். குடும்பத்தினர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து விடுகின்றனர். நோய்வாய்ப்பட்ட மனிதரின் மகன் ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றினைத் தொடர்பு கொண்டு தனது தந்தையின் உடல்நிலை குறித்து எடுத்துரைக்கிறார். தனது தந்தைக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காக்குமாறு கேட்டுக் கொள்கிறார். ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவிட் சூழ்நிலை நிலவுவதால் ஆயுர்வேத வைத்தியர்கள் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு நோய்வாய்ப்பட்டவரால் நேரில்  வந்து சேர முடியாது என்னும் நிலை. இருப்பினும் அந்த இக்கட்டான நிலையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அந்த மனிதரின் ஜீவனைக் காக்க தங்கள் முழு முயற்சியையும் முழுத் திறனையும் அளிக்க அந்த இரு ஆயுர்வேத வைத்தியர்களும் தயாராகின்றனர். 

ஆயுர்வேதம் உடலின் மூன்று சமநிலைக்குலைவு காரணிகளாக வாதம், பித்தம், கபம் என்பவற்றை வகைப்படுத்துகிறது. திரிதோஷங்கள் என்று இவை அழைக்கப்படும். மனித உடல் ரசம், ரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மஜ்ஜை, சுக்ரம் என்ற ஏழு அடிப்படை அம்சங்களால் ஆனது என ஆயுர்வேதம் சொல்கிறது. சப்ததாதுக்கள் என இவை அழைக்கப்படுகின்றன. இந்த தாதுக்கள் அனைத்திலும் மேவியிருப்பது ‘’ஓஜஸ்’’ என்னும் உயிராற்றல். 

தங்கள் சிகிச்சையின் முதல் கட்டமாக நோய்வாய்ப்பட்டவரின் உயிராற்றல் ‘’ஓஜஸ்’’ ஐ தூண்டச் செய்யும் ஆயுர்வேத மருந்துகளை நோய்வாய்ப்பட்டவருக்கு அளிக்கின்றனர். அந்த முடிவு நோய்வாய்ப்பட்டவரின் உடல்நிலையில் நல்விளைவை உண்டாக்குகிறது. அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் காண்கிறது. நுரையீரலில் நிறைந்திருக்கும் சளியைக் கட்டுப்படுத்த ‘’வில்வாதி லேகியம்’’ தரப்படுகிறது. அதற்கான பலனும் உடனே கிடைக்கிறது. மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ மாட்டார் என அலோபதி மருத்துவர்களால் கணிக்கப்பட்ட ஒருவர் மூன்று நாட்களில் பாதிக்குப் பாதி என்ற அளவில் நிலை மீள்கிறார். நோய்வாய்ப்பட்டவரின் மகன் தனது தந்தைக்கு தொடர்ந்து வென்னீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அந்த வென்னீர் ஒத்தடமும் பெரும் பயன் தருகிறது. தொலை மருத்துவம் மூலமே இரு ஆயுர்வேத மருத்துவர்களும் நோய்வாய்ப்பட்டவரின் குடும்பத்தினருக்கு சிகிச்சைக் குறிப்புகளை அளிக்கின்றனர். அபாய கட்டத்தை நோயாளி கடந்ததும் அவரது உடல்நிலையை சகஜமாக்க மருந்துகளைப்  பரிந்துரைக்கின்றனர். அவர் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு வேகமாக முன்னேறத் தொடங்குகிறது. இருபத்து ஒரு நாட்கள் சிகிச்சைக்குப் பின் முழுமையான குணம் பெறுகிறார் அந்த மனிதர். 

மானுடர்களாகிய நாம் உயிர், உடல், வாழ்க்கை என்பதை வெவ்வேறாகப் புரிந்து கொள்கிறோம். அவை தனித்தனியானவை அல்ல. ஒன்றின் வெவ்வேறு வடிவங்களே அவை. அலோபதி என்பது உடலுக்கான மருத்துவம். ஆயுர்வேதம் உயிர் , உடல், வாழ்க்கை மூன்றுக்குமான மருத்துவம். அலோபதி மருத்துவன் உடலை மட்டுமே அறிகிறான். ஓர் ஆயுர்வேத மருத்துவன் உயிர் , உடல், வாழ்க்கை மூன்றையும் அறிகிறான். அலோபதி மருத்துவன் உயிரின் பிரும்மாண்டத்தின் முன் திகைத்து நிற்கிறான். ஆயுர்வேத மருத்துவன் உயிரின் பிரும்மாண்டத்தை உணர்ந்து புரிந்து அதன் முன் வணங்கி நிற்கிறான். உயிரின் பிரும்மாண்டம் ஆயுர்வேத மருத்துவனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறது.