Tuesday 30 April 2024

எண்ணும் எழுத்தும்

 தீர்த்தனின் அன்னை சார்டட் அக்கவுண்டண்ட். தீர்த்தனின் தந்தை கட்டிடப் பொறியாளர். ஆகவே தீர்த்தனின் பெற்றோர் எண்களுடன் அணுக்கமும் பயிற்சியும் தேர்ச்சியும் திறனும் கொண்டவர்கள். தீர்த்தனின் தந்தை இலக்கிய வாசகர். தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குறிப்பிடத்தகுந்த அளவில் வாசித்து வருகிறார். கணவனின் ஆர்வத்தால் தீர்த்தனின் அன்னையும் இலக்கிய வாசிப்பை மேற்கொள்கிறார். 

தீர்த்தனுக்கு இயல்பாகவே கணிதமும் மொழியும் வசப்படும் வாய்ப்புகள் மிக அதிகம். 

இன்று அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது அவர்களிடம் ஒரு விஷயம் சொன்னேன். தீர்த்தனுக்கு மொழிப்பாடமாக சமஸ்கிருதம் போதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். சென்னையில் வசிப்பதால் அங்கே சமஸ்கிருதம் பயில வாய்ப்புகள் அதிகம். மொழி அறிமுகம் குழந்தைகளுக்கு ஐந்து வயதுக்குள் நிகழும் எனில் அந்நிகழ்வு மகத்தானது. 

சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம், ஏதேனும் ஒரு ஐரோப்பிய அல்லது ஆசிய மொழி என நான்கு மொழிகளில் தீர்த்தனுக்கு அறிமுகமும் பரிச்சயமும் செய்து வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டோம். 

தங்கள் வீட்டுக் குழந்தை கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே நம் நாட்டின் குடும்பங்களின் விருப்பமாக அனாதி காலமாக இருக்கிறது 

தீர்த்தன் - அஞ்சனக் கருமுகில் கொழுந்து


சென்ற மாதம் என் சகோதரன் எனத்தக்க எனது நண்பன் சென்னையிலிருந்து திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையை வணங்க வந்திருந்தான். நண்பனுடன் திருக்கருகாவூருக்கும் பட்டீஸ்வரத்துக்கும் சென்றிருந்தேன். 

இரண்டு தினங்களுக்கு முன்னால் சென்னையில் நண்பனின் மனைவிக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்து ஆண் மகவு பிறந்திருக்கிறது. அன்னையும் மகவும் நலமுடன் உள்ளனர். 

இன்று நண்பனிடம் பேசிக் கொண்டிருந்த போது குழந்தைக்குப் பெயர் முடிவு செய்திருக்கிறீர்களா என்று கேட்டேன். தீர்த்தன் என்ற பெயரின் மரூஉ ஆன ‘’திராத்’’ என்ற பெயரை சூட்ட உள்ளோம் என்று சொன்னான். 

நம் நாட்டில் காலை விழித்தெழுந்ததும் ‘’கங்கை யமுனை சரஸ்வதி சிந்து காவேரி நர்மதா கோதாவரி ‘’ என்ற ஏழு புண்ணிய நதி தீர்த்தங்களை நினைத்து அவற்றின் பெயரைக் கூறி வணங்கும் மரபு இன்றும் உண்டு. குழந்தை திராத் பெயர் கூறி அழைக்கப்படும் போதெல்லாம் இந்த 7 புண்ணிய நதிகளின் பெயரையும் கூறும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. 

குழந்தை ஸ்ரீராமனின் பிறப்பை கம்பன் 
ஒரு பகல் உலகு எலாம்  உதரத்துள் பொதிந்து.
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை. அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை.
திரு உறப் பயந்தனள் - திறம் கொள் கோசலை.

என்கிறான்.  

சொல்

 சொல் அளிக்கும் பரவசம் எத்தகையது என்பதை வாசகன் அறிவான். படைப்பாளியும் அறிவான். தனது முதல் வாசிப்பில் சொல் அளித்த பரவசம் வாசகனுக்கு வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்குமெனில் அவன் நல்லூழ் வாய்க்கப் பெற்றவன். சொல்லின் தெய்வத்தால் ஆசியளிக்கப்பட்டவன். 

Monday 29 April 2024

பாத யாத்திரை

 காவிரி வடிநிலம் அமையப் பெற்ற சோழ தேசத்தில் எனது வாழ்க்கை பயணிக்கிறது. காவிரியும் அதன் கிளை நதிகளின் பாய்ச்சலுமே இந்த மண்ணை உயிர்த்தன்மையுடன் இயங்கச் செய்கிறது. இந்த மண்ணின் உயிர்த்தன்மையை உணர்த்தும் விதமாக ஊருக்கு ஊர் ஆலயங்களை நிறுவி இறைவனைப் பதிட்டை செய்தனர் சோழர்கள். நான்கு கிலோமீட்டருக்கு ஒரு ஆலயம் என பிரதேசமெங்கும் ஆலயங்கள். 

இந்த ஆலயங்களுக்குப் பாத யாத்திரையாக செல்ல வேண்டும் என்று ஒரு விருப்பம் ஏற்பட்டது. ஒவ்வொரு தாலுக்காவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சீர்காழி தாலுக்கா எனில் ஒரு சனிக்கிழமை அன்று இரவு சீர்காழி சென்று ஆலயம் அருகே தங்கி விட வேண்டும். மறுநாள் ஞாயிறு காலை நீராடி பிரம்மபுரீஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து நடந்து சென்று தாளபுரீஸ்வரை வணங்க வேண்டும். அதன் பின்னர் காழிச் சீராம விண்ணகரத்தில் திருவிக்ரமப் பெருமாளைச் சேவித்து விட்டு திருமயிலாடி சென்று முருகனை வணங்க வேண்டும்.  

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆலயங்கள் திறந்திருக்கும். மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை ஆலய நடை சாத்தப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் சென்று சேரும் ஆலயத்தில் இருக்க வேண்டும். மாலை துவங்கி இரவு வரை நடைப்பயணமும் வழிபாடும். 

ஞாயிறு இரவு ஊர் திரும்பி விட வேண்டும். 

அடுத்த வாரம் சனிக்கிழமை இரவு முதல் வார ஞாயிறு இரவன்று பயணத்தை நிறைவு செய்த தலத்திலிருந்து யாத்திரையை மீண்டும் துவக்க வேண்டும். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மானுடத் தலைமுறைகளுக்காக அமைக்கப்பட்ட ஆலயங்களை நோக்கி நடந்து செல்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு சிற்றடியும் ஆலயங்களை அமைத்த முன்னோர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி என்று தோன்றியது. 

இது ஒரு எண்ணம் ; விருப்பம். எவ்விதம் செயலாக்குவது என்பதை யோசிக்க வேண்டும்.

பால பருவம்

பள்ளிகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கி விட்டது. சிறுவர் சிறுமிகளின் நடமாட்டத்தைப் பகல் பொழுதில் சற்று அதிகமாகக் காண முடிகிறது. வீதிகளில். கோவில்களில். கடைத்தெருவில். தாத்தா பாட்டி வீடுகளுக்கு வெளியூரிலிருந்து வந்திருக்கின்றனர். சிலர் தாத்தா பாட்டி வீடுகளுக்குச் சென்றிருக்கின்றனர். பள்ளி செல்ல அவசியமில்லை என்னும் மகிழ்ச்சி எல்லா குழந்தைகளின் முகத்திலும். 

வீதியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது இரண்டு சிறுவர்கள் என்னை நிறுத்தினார்கள். இருவருக்கும் 8 வயது இருக்கும். ஒரு வீட்டின் வாசலில் ஒரு பூமரம் பூத்துக் குலுங்கிக் கொட்டியிருந்தது. இந்த இருவரும் போவோர் வருவோரிடம் தாங்கள் பூமாலை வணிகம் செய்வதாகவும் பூமாலைகள் வேண்டுமெனில் தங்களிடம் சொல்லவும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு விளையாட்டு. 

அந்த சிறுவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.  

Saturday 27 April 2024

கணபதி

 

தமிழகத்தில் மிக அதிகமாக மக்கள் நேசிக்கும் வணங்கும் தெய்வம் எது ? பிள்ளையார் தான் தமிழக மக்களால் மிக அதிகமாக நேசிக்கப்படும் தெய்வம். குடும்ப உறவுகளை மிக நெருக்கமாக உணரும் தமிழ்க் குடும்பங்கள் சிவக் குடும்பத்தின் மூத்த பிள்ளையான கணபதி மீது பிரியம் கொள்வது இயல்பான ஒன்றே. ஆனையை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. வலிமை ஆற்றல் பராக்கிரமத்தின் சின்னம் ஆனை. ஆனையின் இயல்பும் குழந்தையின் மனமும் கொண்டவர் கணபதி. சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் என எந்த வழிபாடாயினும் அதில் முதல் வணக்கம் கணபதிக்கே. 

மானுடன் குழந்தையின் முன் மனம் இளகியிருக்கிறான். ஆனையிடமிருந்து அதன் அம்சத்தின் ஒரு துளியையேனும் பெற விரும்புகிறான். 

சதுர்த்தி கணபதிக்கு உரிய தினம். மூஷித வாகனன் எளிய அருகம்புல் சமர்ப்பணத்தைக் கூட மிகப் பிரியமாக ஏற்றுக் கொள்பவன். 

Tuesday 23 April 2024

சித்திரை முழுநிலவு

 

இன்று சித்திரை முழுநிலவு நாள். காவிரிப்பூம்பட்டினக் கடற்கரைக்கு இன்று மாலை சென்றிருந்தேன். ஸ்ரீ ராம நவமி அன்று கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த திருவழுந்தூர் செல்ல வாய்த்தது. இன்று சிலப்பதிகாரக் காவியத்தின் தலைவி கண்ணகியின் மண்ணில் இருக்க முடிந்தது. கடலுக்கு மேல் முழு நிலவு எழுந்திருந்தது. கரையில் நூற்றுக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். சித்திரை முழுநிலவு அன்று பூம்புகாரில் நடக்கும் இந்திர விழா சிலம்பில் மிக முக்கியமான ஒரு இடம். கண்ணகி நிறைநிலை எய்தியதும் சித்திரை முழுநிலவு நாளில். சித்திரை முழுநிலவு எப்போதும் சிலம்புடனும் கண்ணகி நினைவுடனும் இணைந்தது. பாரதி யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் கண்டதில்லை என்கிறான். கம்பன் பிறந்த மண்ணிலும் இளங்கோ காவியம் நிகழ்ந்த மண்ணிலும் வாழ நேர்ந்தது எனது நல்லூழ் என்றே எண்ணுகிறேன். 

Friday 19 April 2024

ஓட்டு

 

இன்று காலை வழக்கமாக எழும் நேரத்துக்கு சற்று முன்னதாகவே எழுந்து விட்டேன். காலையிலேயே குளித்துத் தயாரானேன். திருச்சிற்றம்பலம் சொல்லி மூன்று முறை , திருஞானசம்பந்தர் அருளிய ‘’கோளறு பதிகம்’’ படித்தேன். ஊரும் நாடும் உலகமும் நலமடைய தமிழ்க் குழந்தை சம்பந்தர் இயற்றிய பதிகம்.

தேனமர் பொழில்கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் திகழ

நான்முகன் ஆதியாய பிரம்மா புரத்து மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே

என்பது சம்பந்தர் சொல். 

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் இன்று தொடங்குகிறது. ஒரு கணம் இந்தியப் பெருநிலத்தினை நினைத்துப் பார்த்தால் இந்த நடைமுறையின் பிரம்மாண்டம் புரியும்.

வீட்டிலிருந்து வாக்குச் சாவடி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. வாக்குச் சாவடிக்கு நடந்து சென்றேன். ஏன் என்று தெரியவில்லை. நடந்து செல்ல வேண்டும் என்று தோன்றியது. நடந்து செல்கையில் இதுவரை வாக்களித்த தேர்தல்கள் நினைவுக்கு வந்தன. அவற்றை எண்ணிய வண்ணம் சென்றேன். சாவடியை அடைந்த போது நேரம் 7.02. எனக்கு முன் ஒருவர் வாக்களிக்க தயாராக நின்றிருந்தார். சாவடியின் முதல் வாக்கை அவர் செலுத்தினார். இரண்டாவதாக நான் வாக்களித்தேன். 

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் லட்சக்கணக்கான பணியாளர்கள் இந்த ஒரு நாளுக்காக பல நாள் தயாரிப்புடன் பணி புரிகிறார்கள். பொதுமக்கள் அதிக அளவில் வாக்களிப்பதே அவர்கள் பணிக்கு அளிக்கப்படும் மரியாதை. 

காலை 7 மணிக்கே வெயில் அதிகமாக இருப்பதாகத் தோன்றியது. பகல் பொழுதில் இன்னும் உக்கிரமாக இருக்கக்கூடும். காலை நேரத்தில் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்தால் வாக்குப் பதிவு சதவீதம் அதிகம் இருக்கும்.  


Wednesday 17 April 2024

ராமனும் கம்பனும்


 இன்று ஸ்ரீராம நவமி. கம்பன் பிறந்த திருவழுந்தூரில் இன்று இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். காலைப் பொழுதில் திருவழுந்தூர் ஆமருவிப் பெருமாள் ஆலயம் சென்றேன். அங்கே கம்பனுக்கு ஒரு சிறு சன்னிதி உண்டு. அங்கே சென்று தமிழின் ஆகப் பெரிய கவிஞனை வணங்கினேன். 

திருவழுந்தூர் ஆலயக் கருவறையில் பெருமாளுடன் பிரகலாதன் இருப்பார். கம்பருக்கு நரசிம்ம சுவாமி மீது பெரும் ஈர்ப்பு அதனால் உண்டு. கம்பர் தனது இராமாயணத்தை ஸ்ரீரங்கம் ஆலய நரசிம்மர் சன்னிதிக்கு எதிரே அரங்கேற்றம் செய்தார் என்பது நாம் அறிந்ததே. 

திருவழுந்தூர் ஆலயத்தில் சிறுவர்கள் சிலர் காலை நேரத்தில் திருப்பாவை பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பாராயணம் செய்ததைக் கண்ட போது செயல் புரியும் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு திருப்பாவை மனனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டேன். எளிமையான இனிமையான தமிழ் சொற்களால் ஆன 30 பாடல்கள். பாசுரம் பாடும் முறையில் பாட பயிற்சி தர வேண்டும். ஈஸ்வர ஹிதம். 

இன்று கம்பன் பிரதியில் ஒரு படலமாவது வாசிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஸ்ரீராமன் பிறக்கும் திருஅவதாரப் படலம் வாசித்திருக்க வேண்டும். எனினும் ‘’இரணியன் வதைப் படலம்’’ வாசித்தேன். பிரகலாதன் என்னும் குழந்தை குறித்த படலம் என்பது ஒரு காரணம். நரசிம்மர் தோன்றும் தருணத்தை விவரிக்கும் படலம் என்பது இன்னொரு காரணம். நரசிம்மர் இரணியனை சம்ஹாரம் செய்யும் செயலை விவரிக்கும் படலம் என்பது மற்றொரு காரணம். 

Sunday 14 April 2024

புத்தாண்டு தினத்தில்

இன்று காலை அமெரிக்காவிலிருந்து நண்பர் அழைத்திருந்தார். நமது தளத்தின் பதிவுகளை வாசிப்பது தினமும் உரையாடலில் இருக்கும் உணர்வைத் தரக்கூடியது ; கடந்த சில நாட்களாக புதிய பதிவு இல்லாததால் ஃபோனில் அழைத்தேன் என்று கூறினார். இந்த பிரியங்கள் தான் என்னை எழுத வைக்கின்றன. புதிய ஆண்டில் நண்பருடன் உரையாடியது உற்சாகமான துவக்கமாக அமைந்தது. 

தொழில் நிமித்தமாக வடலூர் அருகே உள்ள நண்பரை சந்திக்கச் சென்றேன். மயிலாடுதுறை - சிதம்பரம் சாலை என்பது நம்ப முடியாத அளவுக்கு மாற்றம் கண்டுள்ளது. மிக பிரும்மாண்டமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வளைவுகள் அனைத்தும் நேராக்கப் பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றில் ஒரு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுக்கு ஜி.எஸ்.டி மூலம் கிடைத்த வருவாயே இந்த மாற்றத்துக்குக் காரணம். ஜி.எஸ்.டி அமலாக்கத்தில் உறுதி காட்டிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பாராட்டுக்குரியது. 

வடலூர் செல்லும் வழியில் புவனகிரியில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆலயத்துக்குச் சென்று சுவாமியை வழிபட்டேன். வருடத்தின் முதல் நாளில் சுவாமி சன்னிதானத்தில் இருந்தது மனதுக்கு அமைதியாக உணர வைத்தது. 

நண்பரை அவருடைய வீட்டில் சந்தித்தேன். ஒரு மணி நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். நண்பர் மிக இனிய மனிதர். 

வடலூர் அருகே இருக்கும் சித்தப்பா வீட்டுக்குச் சென்றிருந்தேன். சித்தப்பா வீடு மிக அமைதியானது. வீட்டைச் சுற்றி பலவிதமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இரண்டு நாட்கள் இங்கே வந்து முழுமையாக தங்கியிருக்க வேண்டும் என எண்ணினேன். சித்தப்பா வீட்டுக்கு அருகே ஒரு குளம் உள்ளது. அந்த குளக்கரையில் நடுவதற்கு 6 ஆல மரக் கன்றும் 6 அரச மரக் கன்றும் வாங்கிக் கொண்டு அடுத்த வாரம் வருவதாக் கூறி விடை பெற்றுக் கொண்டேன். சுவையான மதிய உணவை சித்தி அளித்திருந்தார்கள். 

புதிய ஆண்டின் முதல் தினம் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருந்தது. 

இரவு 7 மணி அளவில் வீடு திரும்பினேன். 

Monday 1 April 2024

வசந்த காலம்

உக்கிரமான கோடை தனக்குள் வசந்த காலத்தை உட்பொதிந்திருப்பது ஓர் இனிய அற்புதம். கோடையில் சூரிய அஸ்தமனத்துக்கு முந்தைய இரண்டு மணி நேரம் என்பது இனிமையானது. இந்த காலத்தில் தான் மரங்கள் புதிய இலைகளைத் துளிர்க்கின்றன. மரங்களில் மலர்கள் மலர்கின்றன. 

இன்று வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு புரச மரம் ( பலாசம்) மலரத் தொடங்கியிருப்பதைக் கண்டேன்.