Wednesday 30 September 2020

உன்னை ஆராதிக்கும்
காதலின்
பிரியத்தின்
அன்பின்
வெள்ளமென
உன்னைச் சூழும்
மலர்களின் மணத்தை
உன்னிடம் கொண்டு சேர்க்கும்
மகரந்தம் முளைத்த காடாகும்
சொல் விதைகளை
தூவிக் கொண்டிருக்கிறேன்
அக நில மெங்கும் 

பாத ரசம்

மென் பாதம்
அணி சூடுகிறது
மென் பாதங்கள்
முத்தமிடப்படுகின்றன
அகனமர்கின்றன
மலர்கின்றன
சென்னி சூடப் படுகின்றன
முடிவின்மையின் பரப்பில்
பாதையாகின்றன

இராவணன் மந்திரப் படலம்

 சுட்டது குரங்கு; எரி சூறை ஆடிடக்

கெட்டது கொடிநகர்; கிளையும் நண்பரும்

பட்டனர்; பரிபவம் பரந்தது எங்கணும்;

இட்டது இவ் அரியணை இருந்தது என் உடல். (6209)

ஒரு குரங்கு என் நகருக்குத் தீ இட்டது. தீ என் நகரைச் சூறையாடியது. எனக்கு உயிரானவர்களும் எனக்கு இனியவர்களும் இறந்தனர். எங்கும் பரவியிருக்கிறது அவமான உணர்ச்சி. இடப்பட்ட இந்த அரியணையில் வெறுமனே கிடக்கிறது எனது உடல்.

அரக்கர் அரசு பெருந்திறன் கொண்டது. ஆனால் அதற்கு ஒரு குரங்கு அழிவு செய்தது. அழிவு செய்தது தெய்வங்களோ தேவர்களோ யக்‌ஷர்களோ அல்ல. ஒரு குரங்கு. அக்குரங்குடன் சேர்ந்து நகரைச் சூறையாடியது அக்னி தேவன். அரக்கருக்கு அஞ்சும் தேவர்களில் ஒருவன். நெருக்கமானவர்கள் மரணித்தனர். எங்கும் அவமானத்தின் சுவடுகள். உயிர் போன்ற நகர் அழிந்ததால் வெறுமனே உடல் மட்டும் கிடக்கிறது.

சலிப்பு, சோர்வு, அவமானம் ஆகியவற்றை இராவணன் வெளிப்படுத்துகிறான்.

 

வெள்ளி அம் கிரியினை விடையின் பாகனோடு

அள்ளி விண் தொட எடுத்து ஆர்த்த ஆற்றலாய்!

சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள்வலிக்கு

எள்ளுதி போலும் நின் புயத்தை எம்மொடும். (6222)

 

‘’இராவணா! கைலாயத்தை காளை வாகனனான சிவபெருமானுடன் விண் வரை தூக்கிய ஆற்றல் படைத்தவன் நீ. சுள்ளிகள் மத்தியில் வசிக்கும் குரங்கையா நீ இப்போது பெரிதாக நினைக்கிறாய்.’’

மலை பெரிது. அதனினும் பெரிது இமயத்தின் கைலாயம். அதில் வாழும் காளை வாகனனான சிவனை மலையுடன் பெயர்த்து உயர்த்தியவன் இராவணன்.

மிருகங்களில் திறன் படைத்தது காளை. காளையுடன் ஒப்பிடும் போது குரங்கு ஒன்றுமில்லை எனக் காட்ட சிவன் காளை வாகனன் எனக் குறிப்பிடப்படுகிறது.

 

எரி உற மடுப்பதும் எதிர்ந்துேளார் பட

பொரு தொழில் யாவையும் புரிந்து போவதும்

வருவதும் குரங்கு; நம் வாழ்க்கை ஊர் கடந்து

அரிதுகொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல்? (6232)

ஒரு வானரம் ‘’போவதும் வருவதும்’’ போல நம் நகரை எரியிட்டது. எதிர்த்தவர்களைக் கொன்றது எனில் நம்மால் கடல் கடந்து சென்று அதன் படையை அழிக்க முடியாதா?

 

ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய்;

கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன்

தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ?

பாவியர் உறும்பழி இதின் பழியும் உண்டோ! (6246)

 

‘’ஓவியம் போன்ற நகரின் அழகை அழிய விட்டாய். அரசப்பண்பை மீறி ஒரு பெண்ணை – இன்னொருவன் மனைவியை – சிறைபிடித்தாய். பெரும் பாவத்தையும் பழியையும் உண்டாக்கும் இச்செயல்களை நீ செய்கிறாய்..

 

என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய்

வன் தொழிலினாய் முறை துறந்து சிறை வைத்தாய்

அன்று ஒழிவது ஆயின அரக்கர் புகழ்; ஐயா!

புன்தொழிலின் நாம் இசை பொறுத்தல் புலமைத்தோ! (6248)

மேன்மையான வாழ்க்கை வாழும் பத்தினிப் பெண் மீது ஆசை கொண்டாய். எந்த முறையிலும் அடங்காது அவளைச் சிறை வைத்தாய். அன்றே அழிந்தது நம் குலத்தின் புகழ்.

 

ஆசு இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம்

மாசு இல் புகழ் காதல் உறுவேம்; வளமை கூரப்

பேசுவது வீரம் இடை பேணுவது காமம்;

கூசுவது மானிடரை; நன்று நம கொற்றம். (6249)


நீ வீரத்தைப் பேச்சில் வைத்துள்ளாய். உன் மனமெங்கும் காமம் உள்ளது. மனிதர்களைக் கண்டு அச்சப்படும் நிலைக்கு வந்துள்ளாய். இதுவே நம் அரசின் அவலம்.

 

 

ஊறு படை ஊறுவதன் முன்னம் ஒரு நாளே

ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம்

வேறு பெயராதவகை வேரோடும் அடங்க

நூறுவதுவே கருமம்என்பது நுவன்றான். (6253)


அவர்கள் இப்போது ஒரு வெற்றியைப் பெற்றுள்ளார்கள். அவ்வெற்றிப் பெருமிதம் அவர்களின் முழுப் படைக்கும் தொற்றி அவர்கள் பெருநம்பிக்கையுடன் இங்கு வருமுன் நாம் கடல் கடந்து சென்று அவர்கள் எதிர்பாராத விதமாகத் தாக்கி அவர்களை முற்றழிக்க வேண்டும்.

 

நன்று உரை செய்தாய்! குமர! நான் அது நினைந்தேன்;

ஒன்றும் இனி ஆய்தல் பழுது; ஒன்னலரை எல்லாம்

கொன்று பெயர்வோம்; நம கொடிப் படையை எல்லாம்

இன்று எழுக என்கஎன இராவணன் இசைத்தான். (6254)

கும்பகருணன் சொல்வதில் உள்ள படைநகர்வின் சூழ்கையை உணர்ந்த போர்வீரனான இராவணன் அவ்வாறே செய்வோம் என்றான்.

 

எந்தை நீ யாவும் நீ எம் முன் நீ தவம்

வந்தனைத் தயெ்வம் நீ மற்றும் முற்றும் நீ

இந்திரப் பெரும்பதம் இழக்கின்றாய் என

நொந்தனென் ஆதலின் நுவல்வது ஆயினேன். (6270)

 

வீடணனுடைய மகத்தான ஆளுமையைக் காட்டும் பாடல் இது. தனது சகோதரன் தவறிழைக்கிறான். தவறு நிகழ்ந்து விட்டது. அதனை திருத்திக் கொள்ளும் வாய்ப்பு இராவணனுக்குக் கிடைக்க வேண்டும் என நினைக்கிறான். அவனுக்கு எது அறம் என்பதை எடுத்துக் கூறுகிறான். இராவணன் மீது பேரன்பு கொண்டவன் இராவணன் என்பதை எடுத்துக் காட்டும் பாடல் இது.


நீ

என் தந்தை

நீயே

எனக்கு யாவும்

என் தமையன்

நீ

என்னால் வணங்கப்படும் தெய்வம்

நீ

என் முழு வாழ்க்கையும்

நீ

உன் வீழ்ச்சி என் கண்ணில் தெரிவதால்

எச்சரிக்கிறேன்

 

கோநகர் முழுவதும் நினது கொற்றமும்

சானகி எனும் பெயர் உலகின் தம்மனை

யானவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர்

வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ? (6272)

 

உனது தலைநகரும் உனது அரசாங்கமும் அன்னை ஜானகி கற்பின் திண்மையால் எரிந்தது. அது ஒரு குரங்கால் நிகழ்ந்ததாக எண்ணாதே.

 

தீ இடைக் குளித்த அத் தயெ்வக் கற்பினாள்

வாய் இடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ?

நோய் உனக்கு யான்என நுவன்றுளாள் அவள்

ஆயவள் சீதை பண்டு அமுதில் தோன்றினாள். (6278)

 

பெண் சாபம் உன்னை நோயெனப் பீடித்துள்ளது என்பதை உணர்ந்து கொள்.

 

இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச

வசையும் கீழ்மையும் மீக்கொளக் கிளையொடும் மடியாது

அசைவில் கற்பின் அவ் அணங்கை விட்டு அருளுதி இதன்மேல்

விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான். (6296)

 

இராவணா! புகழும் மேன்மையும் நற்பண்பும் நம்மிடமே இருக்கட்டும். இழிவும் பழியும் நிறைந்த கீழ்மை நமக்கு வேண்டாம். சீதையை நாம் விடுவித்து விடுவோம்.

Tuesday 29 September 2020

மங்களம்

பற்றி எரியும் மண்
நாகம் உறையும் புற்று
இள விரல்களால்
தீயைத் தீண்டி
மஞ்சள் தடவுகிறாள்
குங்குமம் அப்புகிறாள்
பெண் குழந்தை
சிவந்திருக்கும் உள்ளங்கையில்
ஒட்டிக் கொண்டு வருகிறது
குருதிச் சிவப்பும்
மஞ்சள் வானமும்
ஒரு துளி தீயும்

Monday 28 September 2020

கடல் காண் படலம்


பொங்கிப் பரந்த பெருஞ் சேனை, புறத்தும் அகத்தும், புடை சுற்ற-
சங்கின் பொலிந்த தகையாளைப் பிரிந்த பின்பு, தமக்கு இனம் ஆம்
கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வுற்று இதழ் குவிக்கும்
கங்குல் பொழுதும், துயிலாத கண்ணன்-கடலைக் கண்ணுற்றான். (6188)

’கண்ணன் கடலைக் கண்ணுற்றான்’ . கம்ப சித்திரங்கள் எளிமையையும் ஆழத்தையும் ஒருங்கே கொண்டவை. 

கடல் போன்ற படை சூழ்ந்து நிற்க, சங்கு வளையல்களால் அழகு பெறும் சீதையைப் பிரிந்திருக்கும் - நாளின் ஒரு பொழுதில் தாமரை இதழ் குவிக்கும் ஆனால் சீதையைப் பிரிந்த பின் கணமும் கண் துயிலாத- தாமரைக் கண்ணன் கடலைக் கண்டான்

வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த
பழிக்கும், காமன் பூங்கணைக்கும் பற்றாநின்றான் பொன் தோளைச்
சுழிக்கும் கொல்லன் ஒல் உலையில் துள்ளும் பொறியின் சுடும் அன்னே!
கொழிக்கும் கடலின் நெடும் திரைவாய்த் தனெ்றல் தூற்றும் குறுந்து திவலை. (6190)

தென்றல் அலையின் குறுந்திவலைகளை இராமன் மேல் தெளிக்கிறது. அத்துளிகள் சீதையைப் பிரிந்திருக்கும் இராமனை தீப்பொறிகள் எனச் சுடுகிறது.

பள்ளி அரவில் பேர் உலகம் பசுங்கல் ஆகப் பனிக் கற்றை
துள்ளி நறு மென் புனல்தெளிப்பத் தூ நீர்க் குழவி முறை சுழற்றி,
வெள்ளி வண்ண நுரைக் கலவை வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு
அள்ளி அப்பத் திரைக் கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி. (6195)

கடல் இராமன் துயர் நீக்க தன் அலைக்கைகளால் நுரையை சந்தனமெனத் திரட்டுகிறது.

கொங்கைக் குயிலைத் துயர் நீக்கி, இமையோர்க்கு உற்ற குறை முற்ற,
வெம் கைசிலையன் தூணியினன் விடாத முனிவின் மேல் செல்லும்
கங்கைத் திருநாடு உடையானைக் கண்டு நெஞ்சம் களி கூர
அம் கைத் திரைகள் எடுத்து ஓடி, ஆர்த்தது ஒத்தது அணி ஆழி. (6196)

கங்கை நதியின் தலைவனைக் காண கடல் ஆர்ப்பரித்து விரைந்தது.

இன்னது ஆய கருங்கடலை எய்தி அதனுக்கு எழுமடங்கு
தன்னது ஆய நெடுமானம் துயரம் காதல் இவை தழைப்ப
என்னது ஆகும் மேல்விளைவு? என்று இருந்தான் இராமன்; இகல் இலங்கைப்
பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம். (6197)

பெருங்கடல் முன் நிற்கிறான் இராமன். அவனது துயரம் அதனை விட எழுமடங்கு பெரிதாக இருக்கின்றன. அடுத்த செயல் என்ன என எண்ணி கடலை நோக்கியிருந்தான் இராமன்.







யுத்த காண்டம் ( கடவுள் வாழ்த்து)

ஒன்றே என்னின் ஒன்று ஏ ஆம்,
    பல என்று உரைக்கின் பல ஏ ஆம்,
அன்றே என்னின் அன்றேயாம்,
    ஆமே என்னின் ஆம் ஏ ஆம்,
இன்றே என்னின் இன்றேயாம்,
    உளது என்று உரைக்கில் உளதேயாம்,
நன்றே நம்பி குடிவாழ்க்கை!
    நமக்கு இங்கு என் ஓ! பிழைப்பு? அம்மா! (6186)


திங்கள்

இல்லம் திரும்புபவர்கள்
நம்பிக்கை
கொள்கிறார்கள்
இனிமையின் கனவுகள்
இன்னும்
இன்னும்
என நிறைகின்றன
அகத்தில்
நிறைய நம்பிக்கைகள்
நிறைய திட்டங்கள்
நிறைய சந்தோஷங்கள்
வழித்துணையாக
எப்போதும்
திங்கள்

Sunday 27 September 2020

ஒளிர் கதிர் காலையை
குருதியெனப் பரந்து நிறையும் நிமிடங்களை
வைர கணங்களை
தாமரை 
இலை மேலான
ஒரு துளியை
ஒரே
ஒரு துளியை
இலையின் கீழ் உறையும்
ஒரே
ஒரு
பெருந்துளியை
சிட்டுக்குருவி ஒன்றின் பாய்ச்சல்களை
ஒரு
மலர்ச் சிரிப்பை
தாகம் தீர்க்கும்
கையளவு 
நீரை
இவ்வளவுதான் வாழ்க்கை
என
உன்னிடம்
ஒப்படைத்து விடுகிறேன்
வேறென்ன

உன்னைக் காதலிக்கிறேன்
உன்னை நேசிக்கிறேன்
உன் மீது பிரியம் கொள்கிறேன்
உன் நினைவுகளில் எப்போதும் மூழ்குகிறேன்
எங்கும் உன்னைக் காண்கிறேன்
உன் புன்னகையை அகம் சூடுகிறேன்
உன்னிடம் அர்ப்பணிக்கிறேன்
உன்னைச் சரண் அடைகிறேன்
நீ
நீ
நீ
உன்னிடம் வந்து சேர்கிறேன்

ஞாயிறு

ஐயங்களை
சஞ்சலங்களை
தயக்கங்களை
குழப்பங்களை
சூழும் சின்ன இடர்களை
ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை
என்றாக்கி
பிறக்கிறது
அலை தொடும்
முதல்
சூரியக்கதிரிலிருந்து
ஒரு தினம்
ஒரு நம்பிக்கை 

Friday 25 September 2020

 அந்திப் பொழுதில்
மண் சாலையில்
வீடு திரும்பிக் கொண்டிருக்கிறவன்
பாரமின்மையை உணர்கிறான்
ஓய்வுக்கான நீண்ட இரவு 
நட்சத்திரங்களுடன்
கைப்பையில் 
இனிப்புகள்
பச்சைக் காய்கறிகள்
நடந்து செல்கின்றன
சமையலறை வாசம் நோக்கி
மனதில் எதுவுமில்லை
அமிழ்ந்திருக்கும் 
உயிர் முளைக்கும்
கணம்
நாளின் எக்கணம்
பிள்ளையை
பள்ளியில் விட்டு விட்டு
வீடு திரும்பியவளின்
பாதையெங்கும்
முளைத்திருந்தன
பச்சைப் பசும் புற்கள்
உவகையின் வண்ண மலர்கள்
வானின் வெண் மேகங்கள்

 சிறு குன்றின்
மேலேறி நிற்கிறோம்
இன்னும்
மூச்சு வாங்குகிறது
உனக்கு
வியர்வை அரும்பும் உன் முகம்
தாமரை பூத்த தடாகம்
என்கிறேன்
ஒன்றும் சொல்லாமல்
சூரியச் சிவப்பை மட்டும் காண்கிறாய்
அன்னை விரல்களென 
உன் முகத்தை
வருடிக் கொண்டிருக்கின்றன
அந்திக் கதிர்கள்
தூய மௌனம் நிரம்புகிறது
குன்றெங்கும்
சட்டென
விசும்புகிறாய்
மெல்ல அழுகிறாய்
ஒன்றும் சொல்லாமல்

Wednesday 23 September 2020

புள்ளரையின் கோவில் - ஒரு விமர்சனக் கட்டுரை - முனைவர் ராஜம் ரஞ்சனி

 சொல்வனம் 230 இதழில், முனைவர் ராஜம் ரஞ்சனி எனது ‘’புள்ளரையன் கோவில்’’ சிறுகதையை முன்வைத்து எழுதிய விமர்சனக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு

பாசுரங்களில் கசியும் வாழ்க்கை - புள்ளரையன் கோவில் சிறுகதையை முன்வைத்து

ஜனனி ஜன்மபூமி

 சத்சங்கம் என்னும் செயல்பாடு இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. இந்திய கிராமங்கள் முற்றிலும் சத்சங்கங்களாக செயல்பட்டிருக்கின்றன. பயணிகளுக்கு உணவளிக்கும் அன்ன சத்திரம் அமைத்தல், கல்விச்சாலைகளை நிறுவுதல், குடிநீர்க் கிணறு வெட்டுதல், விவசாயத்துக்கு உதவும் ஆவினங்களை பராமரித்தல், தண்ணீர்ப் பந்தல் அமைத்தல் என பல்வேறு செயல்பாடுகள் குமரியிலிருந்து காஷ்மீரம் வரை நிகழ்ந்திருக்கின்றன. நிகழ்கின்றன. இணைந்து ஆற்றப்படும் ஒரு நற்செயல் நாம் அறியாமலேயே நம்மை பல்வேறு விதமான தளைகளிலிருந்து விடுவிக்கிறது. யோகம் என்பது யாவும் ஒன்றாய் இருப்பதை உணரும் நிலையே. 

இன்று ஒரு சத்சங்கம் குறித்து யோசித்தேன். 

பிறந்தநாளைக் கொண்டாடுவது இப்போது பெரிய அளவில் நடக்கிறது. ஒருவரின் பிறந்தநாளை ஒரு நல்நிமித்தமாகக் கொண்டு அன்றைய தினத்தில் சில நற்செயல்களை முன்னெடுக்க இந்த சத்சங்கத்தின் மூலம் முயலலாம் எனத் திட்டமிட்டேன். 

இதில் குறைந்தபட்சம் 365 உறுப்பினர்கள் இணைக்கப்படுவார்கள். அனைவருக்கும் எளிதான ஒரு தொடர்பு வலைக்குள் அவர்கள் கொண்டு வரப்படுவார்கள்.  வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்குப் பிறந்த நாள் எனக் கொள்வோம். சத்சங்கம் சார்பாக ஒவ்வொரு நாளும் கீழ்க்காணும் செயல்கள் நடக்கும். 

1. பிறந்தநாள் கொண்டாடுபவருக்கு அன்று காலை சத்சங்கம் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்படும். இரண்டு நாட்கள் முன்னதாகவே அவருடைய பிறந்தநாள் நெருங்குவது சத்சங்க உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படும். 

2. ஒவ்வொரு தினமும் இராமாயணத்திலிருந்து ஒரு சுலோகம் சத்சங்கத்தில் வெளியிடப்படும். இராமாயணம், பாகவதம், பகவத் கீதை, தேவாரம், பிரபந்தம், திருவாசகம் என ஒரு பாடல் அல்லது சுலோகம் வெளியிடலாம். 

3. அன்றைய தினத்தில் பிறந்த தேசத் தலைவர்களின் பிறந்த நாள் பகிரப்படும். 

4. தினமும் வறியவர் ஒருவருக்கு குறைந்தபட்சம் ஒருவேளை உணவு வழங்கப்படும். 

5. நாட்டுப் பசுமாடு ஒன்றுக்கு இரண்டு கட்டு கீரை வழங்கப்படும். 

6. காக்கை குருவிகளுக்கு தினமும் தானியங்கள் வழங்கப்படும். 

7. திருக்குளத்தின் மீன்களுக்கு ஒரு கைப்பிடி அவல் போடப்படும்.

8. ஆலயம் ஒன்றில் ஒரு தீபம் ஏற்றப்படும். 

9. பொது இடத்திலோ அல்லது ஒரு விவசாயின் தோட்டத்திலோ நெல்லி, கொய்யா, பலா, மா என ஏதேனும் ஒரு மரக்கன்று வழங்கப்படும். 

உறுப்பினர் சத்சங்கத்தில் இணைத்துக் கொள்ள ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்) நன்கொடையாக அளிக்க வேண்டும். தினம் ஒருவரின் பிறந்தநாள் எனக் கொண்டால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் தினமாகிறது. அவரது நன்கொடை அன்றைய தினத்தில் மேலே குறிப்பிட்ட நற்செயல்கள் மூலம் அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அமையும். அவரது நன்கொடை மூலம் அவரது பிறந்தநாளில் ஒரு மரம் நடப்படுகிறது. ஆலயம் ஒன்றில் தீபம் ஏற்றப்படுகிறது. மீன்களும் காக்கை குருவிகளும் ஆவினமும் உணவு பெறுகிறது. வறியவர் ஒருவர் ஒருவேளை உணவு பெறுகிறார். 

பசியை வேள்வித்தீ என்றும் அதில் இடப்படும் உணவை அவி என்றும் அன்னமளித்தலை ஒரு வேள்வி என்றும் கூறுகிறது இந்திய மரபு. ஒருவரின் பிறந்த தினத்தில் பல உயிர்களுக்கு உணவளிக்கும் நிறைவான செயல் மேற்கொள்ளப்படுகிறது. 

365 உறுப்பினர்களில் 7 நபர்கள் சத்சங்கத்தின் செயல்பாடுகளை ஆற்றுவர். ஒருவர் வருடம் முழுதும் தினமும் சென்று ஆலயத்தில் தீபம் ஏற்றுவார். அது அவர் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் விநாயகர் கோவிலாக இருக்கலாம். ஒரு கிராமக் கோவிலாக இருக்கலாம். ஒரு தொன்மையான ஆலயமாக இருக்கலாம். இன்னொரு நபர் தன்னுடைய வீட்டில் உணவு தயாரித்துக் கொடுப்பார். அதனை ஒருவர் எடுத்துச் சென்று வறியவர் ஒருவருக்கு வழங்குவார். பசு மாட்டுக்கு உணவளிப்பதை ஒருவர் செய்வார். பட்சிகளுக்கு உணவளிப்பதை இன்னொருவர் செய்வார். மரக்கன்றை ஒருவர் வழங்குவார். சத்சங்கத்தின் மின்னணுத் தளத்தை ஒருவர் மேற்பார்வை செய்வார். ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் ஒருவர் ஒருங்கிணைப்பார். 

கூடுதலாக, செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் பண்டிகை தினங்கள் ஆகியவற்றில் உறுப்பினர்கள் சிலரோ பலரோ கந்த சஷ்டி கவசம், கோளறு பதிகம், திருப்பாவை, லலிதா சஹஸ்ர நாமம் ஆகியவை பாராயணம் செய்தால் அத்தகவல் அன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடுபவருக்குத் தெரிவிக்கப்படும். 

ரூ. 100 என்பது இன்றைய தேதியில் எளிய தொகையே. எனினும் உறுதியும் அர்ப்பணிப்பும் அதனுடன் இணையும் போது அது பல நற்செயல்களை நல்விளைவுகளை உண்டாக்குகிறது. 

ரூ.100 பிரிக்கப்படும் விதம்:

உணவு - ரூ.60

பசுவுக்கான கீரை - ரூ.10

பறவைகளுக்கான தானியம் - ரூ.10

மீனுக்கான பொரி - ரூ. 10

மரக்கன்று - ரூ. 5

தீபம் ஏற்றுதல் - ரூ. 5


தினமும் உணவு தயாரிக்க சத்சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்படும். உணவு விலைக்கு வாங்கப்படாது.

இந்த சத்சங்கத்துக்கு ’’ஜனனி ஜன்மபூமி’’ எனப் பெயரிடலாம் என இருக்கிறேன். இவ்வாறு இராமாயணத்தில் இராமன் கூறுகிறார். இதனை பாரதி ‘’பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்’’ எனக் குறிப்பிடுகிறார்.

நண்பர்களுடன் பேசியுள்ளேன். ஆர்வமாயிருக்கின்றனர். 

நண்பர்களுடன் விவாதித்த போது அவர்கள் ஒரு வினாவை எழுப்பினர். 365 நபர்களின் பிறந்த நாள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளாக இருக்குமா? ஒரே பிறந்தநாள் கொண்ட பலர் இருப்பார்களே என்றனர். சத்சங்கத்தின் குறைந்தபட்ச எண்ணிக்கை மட்டுமே 365. உறுப்பினர் எண்ணிக்கையை அதிகமானால் ஆண்டின் நாள் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் என்ற வீதம் வரும் என்று பதில் சொன்னேன். முயற்சித்து அவ்வாறு செய்து கொள்ளலாம் என்று சொன்னேன். ஒரே நாளில் நான்கு பேரின் பிறந்தநாள் வந்தால் நான்கு மரக்கன்று நடலாம்; நால்வருக்கு உணவளிக்கலாம். ஆவின் உணவை அதிகமாக்கலாம்.

இந்த செயல்பாடு குறித்து மேலும் ஏதேனும் ஆலோசனைகளை வழங்க விரும்புபவர்கள் ulagelam(at)gmail(dot)com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு  கேட்டுக் கொள்கிறேன்.

 தீயென மேலெழுகிறாய் என்றேன்
அப்படியா என்றாய்
மழையென நிறைகிறாய் என்றேன்
அப்படியா என்றாய்
நிலமெனப் பொருத்துக் கொள்கிறாய் என்றேன்
அப்படியா என்றாய்
மென் காற்றின் இனிமை உன் இயல்பு என்றேன்
அப்படியா என்றாய்
நீ
எனக்கு வானம்
என்றேன்
நீ
ஒரு துளி கண்ணீர் சிந்தினாய்

Tuesday 22 September 2020

 சீராகப் பெய்யும் மழையொன்றில் நனைவதைப் போல
ஒளியும் நீரும் காற்றும் மணலும் இணைந்திருக்கும்
ஓர் அற்புதமான கடற்கரை அந்தி போல
ஏரியின் பெரும் நீர்ப்பரப்பில் மிதந்தலையும் படகுகள் போல
வாய்க்காலின் சேற்றுப் பரப்பில் ஆங்காங்கே நிற்கும் நீர்மலர்கள் போல
சிட்டுக்குருவியொன்று கடந்து செல்லும் கணத்தைப் போல
உனது நினைவுகள்


கனிந்த அகம்
அளிக்கும் அமைதி
நீ அறிவாய் தானே
ஒரு புன்னகையின்
மாசின்மை
தரும்
நம்பிக்கை
எத்துணை பெரிது தெரியுமா
உன் நற்சொல் ஓடங்களில்
கடக்கப்படுகின்றன
அன்றாடத்தின் பெருநதிகள்
உனது நினைவுகளை
ஒரு மயிற்பீலியாக
எடுத்துக் கொண்டு
பயணிக்கிறேன்
உனக்கு
ஒரு கனியையோ
ஒரு தளிரையோ
ஒரு மலரையோ
அளிக்க விரும்புகிறேன்
முடிவின்மை முன்
முடிவின்மை என

Monday 21 September 2020

 முடிவில்லாத இனிமையில்
கேட்டுக் கொண்டிருக்கிறது
சிற்பத்தில் ஒலிக்கும் இசை
நூற்றாண்டுகளைத் தாண்டிய
பெருவிருட்சத்தின் கிளை ஒன்றில்
சுள்ளிக் கூட்டிலிருந்து
சில நாட்கள் முன்
வெளிவந்த 
சிறகு முளைக்காத புள்
ஒடுங்கிக் கொள்கிறது
வானத்தின் சிறகுகளில் ஒடுங்கியிருக்கும்
தாய்ப்புள்ளின் அணைப்புக்குள்
அன்னை மடியமர்ந்து
வேடிக்கை பார்க்கிறது
குழவி
லீலா வினோதங்களை
காலை ஒளியில் பூக்கும்
இந்த கடல் தான்
எவ்வளவு
பெரிய மலர்
 உனக்கு
மலர் அளிப்பதினும்
உன்னை மலர்த்தோட்டங்களில்
உலவச் செய்ய விரும்பினேன்
எல்லையற்ற அலைகடல் முன்
உன்னைக் கொண்டு நிறுத்தினேன்
பொன் ஒளிரும் வானின் ஒளி
உன் அகமெங்கும்
நிறைய விரும்பினேன்
அந்தியின் மாயம்
உன்னைத் தன் கைகளில்
ஏந்திக் கொள்ள விழைந்தேன்
நம்பிக்கைகளை 
எப்போதும் அளிக்கும் தென்றல்
உன் புறமெங்கும்
வீச
விருப்பம் கொண்டேன்
என்னிடம் எதுவுமில்லை
நான் எதுவுமில்லை
 விழுந்து கொண்டிருக்கும்
இலைக்கு
எத்தனை குதூகலம்
மலர்தலின் வெடிப்பு
எவ்வளவு
நுண்மை
புத்தம் புதிய தளிரில்
எத்தனை மென்மை
குட்டி நாய்களுக்குத்தான்
மோப்பத்தில்
எவ்வளவு ஆர்வம்
அதிகாலைக் குளிர்ச்சியில்
நதியில்
மூழ்கி எழுபவன் 
அக
நிச்சலனம்
மொழியை 
நுட்பமாக்குவது போல்
மௌனத்தை
எப்படி 
நுட்பமாக்குகிறாய்
 உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது
உன்னிடம் கேட்டுக் கொள்ளும் போது
உனக்குத் தருகையில்
உன்னிடமிருந்து பெறுகையில்
சொற்கள் ஏதுமின்றி
உடன் நடக்கும் போது
உன் நினைவுகளில்
மூழ்கியிருக்கும் போது
மிகப் பெரிய இவ்வுலகின்
சிறு சிறு பரப்புகளில்
பூத்திருக்கும் சில மலர்கள்
கிளையமர்ந்து கிரீச்சிடும்
சில பறவைகள்
மென் பூசலிடும் தடாக மீன்கள்
உருவாக்குகின்றன
ஓர் ஒத்திசைவை
 ரயில் கடந்து செல்ல
காத்திருக்கும்
ஒரு லெவல் கிராஸிங்கில்
சற்று முன்னால்
நின்றிருக்கும்
வாகனத்தில்
அன்னை மடியில்
அமர்ந்திருக்கும்
இன்னும் பேசத் துவங்காத குழந்தை
முகம் பார்த்துப்
புன்னகைக்கிறது
அதிகாலை கணங்களின்
அடர்த்தி கொண்ட 
மௌனங்களின்
மொழிக்கு 
அப்புன்னகை
மூலம்
வந்து சேர்கிறேன்

Sunday 20 September 2020

செங்கண் சிம்மம்

 

எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும், அயனும்,

கற்றை அம் சடைக் கடவுளும் காத்து, அளித்து, அழிக்கும்

ஒற்றை அண்டத்தின் அளவனோ? அதன்புறத்து உலவா

மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான். (6317)

 

எப்போதும் இருப்பவனாகிய விஷ்ணுவும், நான்முகன் பிரம்மனும், சடாதாரியான சிவனும் ஆக்கி, காத்து, அழிக்கும் அண்டத்திலும் மற்ற அண்டங்களிலும் தன் பெயரும் புகழும் ஒலிக்க வாழ்ந்தான் இரணியன்.

 

பாழி வன் தடம் திசை சுமந்து ஓங்கிய பணைக்கைப்

பூழி வன்கரி இரண்டு இருகை கொடு பொருத்தும்;

ஆழம் காணுதற்கு அரியவாய், அகன்ற பேர் ஆழி

ஏழும் தன் இருதாள் அளவு  எனக் கடந்து ஏறும். (6318)

 

ஒவ்வொரு திசையிலும் இருந்து இந்த அகிலத்தைச் சுமக்கும் யானைகளை கைக்கு ஒன்றாக ஏந்தி மோத விட்டு மகிழ்பவன் இரணியன். கடல்கள் ஏழினையும் நீந்திக் கடப்பவன்.

 

சாரும் மானத்தில், சந்திரன் தனிப்பதம் சரிக்கும்;

தேரின் மேவி நின்று இரவிதன் பெரும்பதம் செலுத்தும்;

பேரின் எண்திசைக் காவலர் கருமமும் பிடிக்கும்;

மேரு மால்வரை உச்சிமேல் அரசு வீற்றிருக்கும். (6320)

 

இரவில் நிலவின் பாதையில் உலா செல்பவன். கதிரவனின் தேரில் பகலில் பயணிப்பவன். இந்திரன், வாயு, அக்னி, வருணன், ஈசானன், நிருதி, குபேரன், யமன் ஆகியோர் ஆற்றும் பணிகளைத் தானே தான் ஒருவனாய் செய்யக்கூடிய ஆட்சித் திறன் படைத்தவன் இரணியன்.

 

 

‘தாமரைக் கண்ணன் தழல் கண்ணன் பேர் அவை தவிர,

நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில,

தூம வெங் கனல் அந்தணர் முதலினர் சொரிந்த

ஓம வேள்வியுள் இமையவர் பேறு எலாம் உண்ணும். (6322)

 

எல்லா உலகங்களிலும் நிகழ்ந்த வேள்வியில் தேவர்கள் பெற வேண்டிய அவிர் பாகத்தைத் தானே பெற்று வாழ்ந்து வந்தான் இரணியன்.

 

மரபின், மாபெரும் புறக்கடல் மஞ்சனம் மருவி,

அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி,

பரவும் இந்திரன் பதியிடைப் பகல்பொழுது அகற்றி

இரவின் ஓலக்கம் நான்முகன்  உலகத்துள் இருக்கும். (6324)

 

தினமும் பெருங்கடலில் நீராடி நாகலோகத்தில் காலை உணவருந்தி விட்டு பகலில் இந்திரன் தலைநகரான அமராவதியில் இருந்து விட்டு இரவு பிரம்மலோகம் வருபவன் இரணியன்.

 

.‘மருக்கொள் தாமரை நான்முகன் முதலிய வானோர்

குருக்கேளாடு கற்று, ஓதுவது, அவன் பெருங் கொற்றம்;

சுருக்கு இல் நான்மறை தொன்றுதொட்டு உரைதொறும் தோன்றாது

இருக்கும் தயெ்வமும்இரணியனே!  நம! ‘என்னும். (6327)

 

பிரம்மலோகமும் புவியுலகும் அவன் பெயரையே மந்திரம் என ஓதின.

 

பெண்ணின், பேர் எழில் ஆணினின், அலியினின், பிறிதின்,

உள் நிற்கும் உயிர் உள்ளதின், இல்லதின், உலவான்;

கண்ணின் காண்பன, கருதுவ, யாவினும் கழியான்;

மண்ணின் சாகிலன், வானினும் சாகிலன்; வரத்தால். (6329)

 

பெண்ணாலோ, அழகு படைத்த ஆணாலோ, அலியாலோ, பிராணிகளாலோ பிராணிகள் இல்லாத வேறு உயிராலோ, பார்வையால் அறியப்பட்ட உயிர்களாலோ புவியிலோ வானத்திலோ தனக்கு மரணம் நிகழக்கூடாது என்ற வரம் பெற்றவன் இரணியன்.

 

தேவர் ஆயினர் ஏவரும் திரிதரும் இயக்கர்

யாவர் ஆயினும் எண்ணவும் துதிக்கவும் இயன்ற

கோவை மால் அயன் மான் இடன் யாவரும் கொல்ல

ஆவி தீர்கிலன்; ஆற்றலும் தீர்கிலன் அனையான். (6330)

 

தேவர்களாலோ யட்சர்களாலோ ராட்சதர்களாலோ இரணியனை அழிக்க இயலவில்லை.

 

நீரின் சாகிலன்; நெருப்பினும் சாகிலன்; நிமிர்ந்த

மாருதத்தினும், மண்ணின் மற்று எவற்றினும், மாளான்;

ஓரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்பச்

சாரும் சாபமும், அன்னவன் தனைச் சென்று சாரா. (6331)

 

இரணியன் நீராலும் நெருப்பாலும் காற்றாலும் மண்ணில் எவற்றாலும் சாகடிக்க முடியாத நிலையை வரமாகப் பெற்றவன். எவர் அளிக்கும் சாபமும் தன்னை அணுகக் கூடாது என்ற வரம் பெற்றவன் இரணியன்.

 

உள்ளில் சாகிலன்; புறத்தினும்  உலக்கிலன்; உலவாக்

கொள்ளைத் தயெ்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா;

நள்ளில் சாகிலன்; பகலிடைச் சாகிலன்; நமனார்

கொள்ளச் சாகிலன்; ஆர் இனி அவன் உயிர் கொள்வார்? (6332)

 

வீட்டினுள்ளோ வீட்டின் வெளியிலோ அவனுக்கு மரணம் இல்லை. தெய்வங்களின் எந்த படைக்கலனாலும் அவனுக்கு அழிவு இல்லை. எனில் அவனை எப்படி அழிக்க இயலும்?

 

பூதம் ஐந்தொடும் பொருந்திய  உணர்வினில் புணரா

வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் விளியான்;

தாதை தன்னைத்தான் தனிக்கொலை சூழினும் சாகான்;

ஈது அவன் நிலை; எவ் உலகங்கட்கும் இறைவன். (6333)

 

அவன் தற்கொலைக்கு முயன்றால் கூட சாக மாட்டான் என்ற நிலை கொண்டவன். இவ்வளவு நுணுக்கமான வரம் பெற்றதால் அவனைக் கட்டுப்படுத்தும் கூறே இன்றி இறைவனென தன்னை எண்ணி வாழ்ந்திருந்தான் இரணியன்.

 

ஆயவன் தனக்கு அருமகன், அறிஞரின் அறிஞன்,

தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயன்,

நாயகன் தனி ஞானி, நல்அறத்துக்கு நாதன்,

தாயினி மன்னுயிர்க்கு அன்பினன், உளன் ஒரு தக்கோன். (6334)

 

இரணியனின் மகன் பிரகலாதன். அறிஞர்களுக்கெல்லாம் அறிஞன். தூய உள்ளம் கொண்டோரிலும், தூய ஒலியால் மட்டுமே ஆன வேதத்தினும் தூயவன். ஞானிகளின் முதன்மையானவன். நல்லறங்களின் தலைவன். உலக உயிர்கள் அனைத்தையும் தாயன்புடன் நேசிப்பவன்.

கம்பன் தன் படைப்பில் வாழ்வின் மேன்மையான தருணங்களையும் மேலான மனிதர்களையும் உச்சமாக வர்ணிக்கிறான். ராமன், சீதை, தசரதன், இலக்குவன், பரதன், குகன், அனுமன், ஜடாயு,  என அனைவரையும் தன் சொற்களால் உயர்ந்து ஏத்துகிறான். அவை அனைத்திலும் உச்சம் பிரகலாதனைப் போற்றும் கம்பனின் சொற்கள்.

 

வாழியான் அவன்தனைக் கண்டு மனம் மகிழ்ந்து உருகி,

ஆழி ஐய! நீ அறிதியால் மறைஎன அறைந்தான்

ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான், உலகம்

ஏழும் ஏழும் வந்து அடிதொழ, அரசு வீற்றிருந்தான். (6335)

 

பிரகலாதன் மேல் பெரும் பிரியம் கொண்ட இரணியன் அவனை வேதம் பயில பாடசாலைக்கு அனுப்பி வைத்தான்.

 

என்று, ஓர் அந்தணன் எல்லையில், அறிஞனை ஏவி,

நன்று நீ இவற்கு உதவுதி மறைஎன நவின்றான்.

சென்று மற்று அவன் தன்னொடும் ஒரு சிறை சேர்ந்தான்;

அன்று நான்மறை முதலிய  ஓதுவான் அமைந்தான். (6336)

 

ஓதம் புக்கு, அவன், “உந்தை பேர்  உரைஎனலோடும்,

போதத் தன் செவித்தொளை இரு கைகளால பொத்தி,

மூதக்கோய்! இது நல்தவம் அன்றுஎன மொழியா,

வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் பெயரினை விரித்தான். (6337)

 

பாடசாலை ஆசிரியர் அரசன் பெயரைக் கூறச் சொன்னார்.

 

ஓம் நமோ நாராயணாய! “ என்று உரைத்து, உளம் உருகி,

தான் அமைந்து, இரு தடக்கையும் தலையின்மேல் தாங்கி,

பூ நிறக் கண்கள் புனல் உக, மயிர் புறம் பொடிப்ப,

ஞான நாயகன் இருந்தனன்; அந்தணன் நடுங்கி. (6338)

 

’ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தை உள்ளம் உருகி உரைத்து விழிநீர் பெருகி மெய்சிலிர்த்து பரவசமாய் நின்றிருந்தான் பிரகலாதன்.

 

என்னை உய்வித்தேன்; எந்தையை உய்வித்தேன்; நினைய

உன்னை உய்வித்து, இவ் உலகையும்  உய்விப்பான் அமைந்து,

முன்னை வேதத்தின் முதல் பெயர் மொழிவது மொழிந்தேன்;

என்னை குற்றம் நான் இயம்பியது? இயம்புதி ‘‘ என்றான். (6340)

 

நாராயண நாமம் உச்சரிக்கும் என்னை, என் தந்தையை, உம்மை, இந்த உலகத்தை என அனைத்தையும் உய்விக்கும். அதனை உச்சரிப்பதில் என்ன பிழை என வினவினான்.

 

“‘தொல்லை நான்மறை வரன்முறை துணிபொருட்கு எல்லாம்

எல்லை கண்டவன் அகம் புகுந்து, இடம் கொண்டது என் உள்;

இல்லை, வேறு இனிப் பெரும் பதம்; யான் அறியாத,

வல்லையேல், இனி, ஓதுவி, நீதியின் வழாத. (6343)

 

“‘வேதத்தானும், நல் வேள்வியினானும், மெய் உணர்ந்த

போதத்தானும், அப்புறத்துள எப் பொருளானும்,

சாதிப்பார் பெறும் பெரும்பதம் தலைக்கொண்டு சமைந்தேன்;

ஓதிக் கேட்பது பரம்பொருள்; இன்னம் ஒன்று உளதோ? (6345)

 

அரசன் அன்னவை உரைசெய, மறையவன் அஞ்சி,

சிரதலம் கரம் சேர்த்திடா, “ செவித்தொளை சேர்ந்த

உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரைசெயின், உரவோய்!

நரகம் எய்துவென்; நாவும் வெந்து  உகும் ‘‘ என நவின்றான். (6352)

 

பிரகலாதன் உரைக்கும் நாமத்தைத் தன்னால் கூற இயலாது என ஆசிரியர் அரசனிடம் கூறினார்.

 

தொழுத மைந்தனை, சுடர்மணி மார்பிடைச் சுண்ணம்

எழுத, அன்பினோடு இறுகுறத்  தழுவி, மாடு இருத்தி,

முழுதும் நோக்கி, “நீ, வேதியன் கேட்கிலன் முனிய,

பழுது சொல்லியது என்? அது பகருதி ‘‘ என்றான். (6354)

 

சின்னஞ்சிறுவனான மைந்தனை அன்புடன் இறுகத் தழுவி மடியில் அமர வைத்து ஆசிரியரிடம் என்ன கூறினாய்; அதை என்னிடம் கூறு என இரணியன் கூறினான்.

 

“‘காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்

சேம வீடு உறச் செய்வதும் செந்தழல் முகந்த

ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்

நாமம்; அன்னது கேள்; நமோ நாராயணாய. (6357)

 

வாழ்வின் அனைத்து இனிமைகளையும் தர வல்லதும், அதன் பின் விண்ணக வாழ்வு அளிப்பதும், வேள்விப் பயன்களைத் தரக் கூடியதும் ஒரு பெயர். அதனைக் கேளுங்கள் தந்தையே. அது நமோ நாராயணாய.

 

“‘பரவை நுண் மணல் எண்ணினும்  எண்ண அரும் பரப்பின்

குரவர் நம்குலத்து உள்ளவர் அவன் கொ(ல்)லக் குறைந்தார்;

அரவின் நாமத்தை எலி இருந்து  ஓதினால், அதற்கு

விரவும் நன்மை என்? துன்மதி! விளம்பு ‘‘ என வெகுண்டான். (6365)

 

கடல் மண்ணை விட எண்ணிக்கையில் அதிகம் இருந்தவர்கள் அரக்கர்கள். அவர்களை விடாது அழித்தவன் ஸ்ரீஹரி. எலிகள் பாம்பின் பெயர் சொல்வது போல் நம்மை அழிப்பவனின் பெயரை நீ சொல்கிறாய்.

 

அளவையான் அளப்ப அரிது; அறிவின் அப்புறத்து

உளவை ஆய் உபநிடதங்கள் ஓதுவ;

கிளவியால் பொருள்களால் கிளக்குறாதவன்

களவை யார் அறிகுவார்? மெய்ம்மை கண்டிலார். (6376)

 

அளவீடுகளுக்கு உட்படாத எல்லையற்றவன். காரண அறிவால் முற்றறிய இயலாதவன். மொழிதலின் எல்லைகளுக்குள் அடங்காதவன் ஸ்ரீஹரி.

 

 

 

 ‘மூவகை உலகும் ஆய் குணங்கள் மூன்றும் ஆய்

யாவையும் எவரும் ஆய் எண் இல் வேறுபட்டு

ஓவல் இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை

தேவரும் முனிவரும் உணரத் தேயுமோ? (6377)

 

பாதாளம், புவி, வான் ஆகிய மூன்று உலகும் ஆனவன். சத்வ, ரஜோ, தமோ குணங்களானவன். யாதுமானவன். எல்லாருமானவன். முனிவரும் தேவரும் கூட அவனை முற்றறிந்ததில்லை.

 

 

வேறும் என்னொடு தரும்பகை பிறிது இனி வேண்டல் என்? வினையத்தால்

ஊறி, என்னுளே உதித்தது; குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால்;

ஈறு இல் என்பெரும் பகைஞனுக்கு அன்புசால் அடியென் யான்    என்கின்றான்;

கோறிர் ‘‘ என்றனன்; என்றலும் பற்றினர், கூற்றினும் கொலை வல்லார். (6395)

 

யார் எனக்குப் பகைவனோ அவனது பக்தன் என்கிறான். அவனைக் கொல்லுங்கள் என அரக்கர்களிடம் கூறினான் இரணியன்.

 

குன்று போல் மணிவாயிலின் பெரும் புறத்து உய்த்தனர், மழுக்கூர்வாள்,

ஒன்று போல்வன ஆயிரம் மீது எடுத்து ஓச்சினர், “உயிரோடும்

தின்று தீர்குதும் ‘‘ என்குநர், உரும் எனத் தழெிக்குநர், சின வேழக்

கன்று புல்லிய கோள் அரிக் குழு எனக் கனல்கின்ற தறுகண்ணார். (6396)

 

நூற்றுக்கணக்கான அரக்கர்கள் ஆயிரக்கணக்கான தங்கள் கொடிய ஆயுதங்களால் பிரகலாதனைத் தாக்கினர்.

 

தாயின் மன்னுயிர்க்கு அன்பினன் தன்னை, அத் தவம் எனும் தகவு இல்லோர்

என் மாத்திரத்து எய்தன எறிந்தன எறிதொறும் எறிதோறும்

தூயவன்தனைத் துணை என உடைய அவ் ஒருவனைத் துன்னாதார்

வாயின் வைதன ஒத்தன அத்துணை மழுவொடு கொலை வாளும். (6397)

 

இறைவன் அருள் பெற்ற பிரகலாதனை கொலைக்கருவிகளால் ஏதும் செய்ய முடியவில்லை.

 

எறிந்த, எய்தன, எற்றின, குற்றின,  ஈர்ந்தன, படையாவும்

முறிந்த, நுண்பொடி ஆயின, முடிந்தன; முனிவு இலான் முழுமேனி

சொறிந்த தன்மையும் செய்தில ஆயின; தூயவன் துணிவு ஒன்றா

அறிந்த நாயகன் சேவடி மறந்திலன்; அயர்த்திலன், அவன் நாமம். (6398)

 

பிரகலாதன் இறை நாமத்தை உச்சரித்த வண்ணம் இருந்தான். அவன் மீது வீசப்பட்ட ஆயுதங்கள் முனை முறிந்து போயின.

 

குழியில் இந்தனம் அடுக்கினர், குன்று என; குடம் தொறும் கொணர்ந்து எண்ணெய்

இழுது நெய் சொரிந்திட்டனர்; நெருப்பு எழுந்திட்டது, விசும்பு எட்ட,

அழுது நின்றவர் அயர்வுற, ஐயனைப் பெய்தனர்; ‘அரிஎன்று

தொழுது நின்றனன், நாயகன்  தாள் இணை; குளிர்ந்தது சுடுதீயே. ‘ (6400)

 

பெருங்குழியொன்று தோண்டி அதில் எண்ணெயும் நெய்யும் ஊற்றி தீ மூட்டி அத்தீயின் நாக்குகள் வான்வரை எழ அச்சிறுவனை அத்தீயினுள் வீசினர். மாயோனின் பாதமலர்களை நினைவில் நிறுத்தி சிறிதும் கலக்கமின்றி மாயோன் நாமம் உச்சரித்த வண்ணம் இருந்தான் பிரகலாதன். சுட்டுப் பொசுக்கும் ஆற்றல் கொண்ட தீ பிரகலாதனுக்குக் குளிர்ந்தது.

 

கால வெங்கனல் கதுவிய காலையில் - கற்புடையவள் சொற்ற

சீல நல் உரைச் சீதம் மிக்கு அடுத்தலின், கிழியொடு நெய் தீற்றி,

ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்தன்

கூலம் ஆம் என, என்பு உறக் குளிர்ந்தது, அக் குருமணித் திருமேனி. ‘ (6401)

 

சீதையின் பிராத்தனைக்காக அக்னி அனுமனுக்குக் குளிர்ந்தது போல பிரகலாதனுக்கும் தீ குளிர்ச்சியாய் இருந்தது.           

 

கையில் கால்களில் மார்பு கழுத்தில்

தயெ்வப் பாசம் உறப் பிணி செய்தார்;

மையல் காய் கரி முன் உற வைத்தார்;

பொய் அற்றானும் இது ஒன்று புகன்றான். (6407)

 

பிரகலாதன் கை கால்களைக் கட்டி மதயானை முன் இட்டனர்.

 

“‘எந்தாய்! பண்டு ஒர் இடங்கர் விழுங்க

முந்தாய் நின்ற முதற் பொருளே! “ என்று

உம் தாய் தந்தை இனத்தவன் ஓத

வந்தான் என்றன் மனத்தினன் என்றான். (6408)

 

முதலையால் தடாகத்தில் கவ்வப்பட்ட போது ’’ஆதிமூலமே’’ என அழைத்த உன் மூதாதை யானைக்காக அதனைக் காக்க வந்த இறைவனை மனத்தால் எண்ணியிருப்பவன் நான் என்றான்.

 

“‘ஊனோடு உயிர் வேறுபடா உபயம்

தானே உடையன் தனி மாயையினால்;

யானே உயிர் உண்பல்எனக் கனலா

வான் ஏழும் நடுங்கிட வந்தனனால். (6432)

 

இரணியன் பிரகலாதனை நானே கொலை செய்கிறேன் என்கிறான்.

 

வந்தானை வணங்கிஎன் மன்னுயிர்தான்

எந்தாய்! கொள எண்ணினையேல் இதுதான்

உந்தா; அரிது அன்று; உலகு யாவும் உடன்

தந்தார் கொள நின்றதுதான்எனலும். (6433)

 

உயிர் அனைத்தும் பரமனுடையது. அவன் விருப்பமின்றி எவராலும் எவர் உயிரையும் பறித்திட முடியாது.

 

“‘உலகு தந்தானும், பல்வேறு உயிர்கள் தந்தானும், உள் உற்று,

உலைவு இலா உயிர்கள் தோறும் அங்கு அங்கே உறைகின்றானும்,

மலரினில் வெறியும் எள்ளில்  எண்ணெயும் மான, எங்கும்

அலகு இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரிகாண் அத்தா (6435)

 

விசும்பெங்கும் நிறைந்திருப்பவன் ஸ்ரீஹரி.

 

மூன்று அவன் குணங்கள்; செய்கை மூன்று; அவன் உருவம் மூன்று;

மூன்று கண், சுடர்கொள் சோதி மூன்று; அவன் உலகம் மூன்று;

தோன்றலும் இடையும் ஈறும் தொடங்கிய பொருள்கட்கு எல்லாம்

சான்று அவன்; இதுவே வேத முடிவு : இது சரதம் ‘‘ என்றான். (6437)

 

சத்வ, ரஜோ, தமோ என அவன் குணங்கள் மூன்று. சிருஷ்டி, ஸ்திதி, சம்ஸ்காரம் என அவன் செயல்கள் மூன்று. அரன், மால், அயன் என அவன் தோற்றங்கள் மூன்று. சூரியன், சந்திரன், அக்னி என அவனது கண்கள் மூன்று. பாதாளம், வானகம், மண்ணுலகம் என அவனது உலகங்கள் மூன்று. உலகில் உள்ள அத்தனையும் அவனே. இதுவே வேதாந்தம். 

 

என்றலும் அவுணர் வேந்தன்  எயிற்று அரும்பு இலங்க நக்கான்,

ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன்என்றாய்;

நன்று, அது கண்டு பின்னர் நல்லவா புரிது; தூணின்

நின்றுளன் என்னின், கள்வன்,  நிரப்புதி நிலைமை ‘‘ என்றான். (6438)

 

அவன் எங்கும் இருக்கிறான் எனில் இந்த தூணிலும் இருக்கிறானா?

 

“‘சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினைச் சதகூறு இட்ட

கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந் நின்ற

தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மை

காணுதி விரைவின்என்றான்; ‘நன்றுஎனக் கனகன் சொன்னான் : (6439)

 

எங்கும் இருக்கிறான் எனில் அவன் உன் சொல்லிலும் இருக்கிறான். அப்படியானால் அவனை உன்னால் காட்ட முடியுமா?

 

“‘உம்பர்க்கும் உனக்கும் ஒத்து, இவ் உலகு எங்கும் பரந்துளானை,

கம்பத்தின் வழியே காண, காட்டுதி; காட்டாய் ஆகில்,

கும்பத்திண் கரியைக் கோள்மாக் கொன்றென, நின்னைக் கொன்று உன்

செம்பு ஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென் ‘‘ என்றான். (6440)

 

ஸ்ரீஹரியை இந்த தூணில் காட்டு ; இல்லையேல் உன்னைக் கொன்று தின்பேன்.

 

“‘என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று; யான் முன்

சொன்னவன் தொட்ட தொட்ட இடந்தொறும் தோன்றான் ஆயின்,

என் உயிர் யானே மாய்ப்பல்; பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்,

அன்னவற்கு அடியேன் அல்லேன் ‘‘ என்றனன் அறிவின் மிக்கான். (6441)

என் உயிரை உம்மால் எடுக்க முடியாது. நான் ஸ்ரீஹரி பக்தன்.

 

நசை திறந்து இலங்கப் பொங்கி, “நன்று, நன்றுஎன்ன நக்கு,

விசை திறந்து உருமு வீழ்ந்தது என்ன ஓர் தூணின், வென்றி

இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,

திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது, அச் செங்கண் சீயம். (6442)

 

இரணியன் ஒரு தூணைத் தாக்கினான். திசைகளைக் கிழித்துக் கொண்டு அண்டம் அதிர செங்கண் சிம்மம் சிரித்தது.

 

“‘நாடி நான் தருவென்என்ற  நல் அறிவாளன், நாளும்

தேடி நான்முகனும் காணாச் சேயவன் சிரித்தலோடும்,

ஆடினான்; அழுதான்; பாடி அரற்றினான்; சிரத்தில் செங்கை

சூடினான்; தொழுதான்; ஓடி  உலகெலாம் துகைத்தான், துள்ளி. (6443)

 

கருவிலிருந்த நாள் முதல் நாமமாய் உச்சரித்த தலைவன் தனக்காக வெளிப்பட்டதைக் கண்ட பிரகலாதன் பரவசமாகி நரசிம்மத்தைத் தொழுதான்.

 

பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை

வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்

அளந்தது; அப்புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்?

கிளர்ந்தது; ககனமுட்டை கிழிந்தது கீழும் மேலும். (6445)

 

பிளக்கப்பட்ட தூணிலிருந்து வெளியே வந்தது சிம்மம். திசையெல்லாம் நிரம்ப பேருரு கொண்டது. அண்டத்தையை இரண்டாக்குவது போல அடி வைத்தது.

 

கனகனும், அவனில் வந்த  வானவர் களைகண் ஆன

அனகனும் ஒழிய, பல்வேறு அவுணர் ஆனவரை எல்லாம்

நினைவதன் முன்னம் கொன்று  நின்றது அந்நெடுங்கண் சீயம்

வனைகழலவனும், மற்று (ம்) மடங்கலின் வரவு நோக்கி, (6458)

 

பிரகலாதனும் இரணியனும் தவிர மற்ற அசுரப்படையைக் கொன்று அழித்தது.

 

நின்றவன் தன்னை நோக்கி,  “நிலை இது கண்டு, நீயும்

ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே;

வன்தொழில் ஆழி வேந்தை வணங்குதி; வணங்கவே, உன்

புன்தொழில் பொறுக்கும் ‘‘ என்றான்  உலகு எலாம் புகழ நின்றான். (6460)

 

பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, நரசிம்ம உருவம் கொண்டு வெளிப்பட்டிருக்கும் ஸ்ரீஹரியைப் பணியுங்கள். அவர் எல்லா பிழைகளையும் மன்னிக்கக் கூடியவர் என்றான்.

 

“‘கேள், இது; நீயும் காண, கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல்

தோெளாடு தாளும் நீக்கி, நின்னையும் துணித்து, பின், என்

வாளினைத் தொழுவது அல்லால், வணங்குதல் மகளிர் ஊடல்

நாளினும் உளதோ? ‘‘ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான். (6461)

 

உன்னையும் கொல்வேன்; ஸ்ரீஹரியையும் கொல்வேன்.

 

ஆயவன் தன்னை, மாயன் அந்தியின், அவன் பொன் கோயில்

வாயிலில், மணிக் கவான்மேல், வயிர வாள் உகிரின், வானின்

மீ எழு குருதி பொங்க, வெயில் விரி வயிர மார்பு

தீ எழப் பிளந்து நீக்கி, தேவர்கள் இடுக்கண் தீர்த்தான். ‘(6468)

 

காலையும் அல்லாத மாலையும் அல்லாத அந்திப் பொழுதில் வீட்டின் உள்ளும் இல்லாத வீட்டின் வெளியிலும் இல்லாத வாசற்படியில் பூமியிலும் இல்லாத வானிலும் இல்லாத தன் மடி மேல் போட்டு இரணியனின் மார்பை தன் நகங்களால் கீறி அந்த ரத்தம் வானில் தெறிக்க வதம் செய்தார் நரசிம்மப் பெருமாள்.

 

முக்கணான் எண்கணானும், முளரி ஆயிரக் கணானும்,

திக்கண் ஆம் தேவரோடு முனிவரும், பிறரும், தேடிப்

புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார், புகுந்து மொய்த்தார்;

எக்கணால் காண்டும் எந்தை  உருவம்என்று இரங்கி நின்றார். ‘ (6469)

 

நரசிம்மரின் உக்கிர ரூபத்தைக் காண முடியாமல் தெய்வங்களும் தேவர்களும் சிதறி ஓடினர்.

 

பூவில் திருவை, அழகின் புனைகலத்தை,

யாவர்க்கும் செல்வத்தை, வீடு ஈனும் இன்பத்தை,

ஆவித் துணையை, அமுதின் பிறந்தாளை,

தேவர்க்கும் தம் மோயை, ஏவினார், பாற் செல்ல. (6478)

 

மலரில் வீற்றிருக்கும் செல்வியை, அழகின் வடிவத்தை, யாவராலும் வணங்கப்படும் செல்வத்தை, மோட்சம் அளிக்கும் கருணையை, உயிர்த்துணையாய் இருக்கும் ஒளியை, அமுதத்தை, தேவர்களுக்கு அன்னையை நரசிம்மத்திடம் செல்லுமாறு பணித்தனர்.

 

செந் தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும்

நந்தா விளக்கை, நறுந்தாள் இளங் கொழுந்தை,

முந்தா உலகும் உயிரும் முறை முறையே

தந்தாளை நோக்கினான், தன் ஒப்பு ஒன்று இல்லாதான். (6479)

 

செந்தாமரை மலராளை செங்கண் சிம்மம் பார்த்தது.

 

தீது இலா ஆக உலகு ஈன்ற தயெ்வத்தைக்

காதலால் நோக்கினான்; கண்ட முனிக் கணங்கள்

ஓதினார் சீர்த்தி; உயர்ந்த பரஞ்சுடரும்

நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான். (6480)

 

தேவர்கள் நரசிம்மத்தின் புகழ் பாடினர். நரசிம்மம் பிரகலாதனை நோக்கியது.

 

“‘உந்தையை உன்முன்னே கொன்று, உடலைப் பிளந்து அளைய,

சிந்தை தளராது, அறம் பிழையாச் செய்கையாய்

அந்தம் இலா அன்பு என்மேல் வைத்தாய்! அளியத்தாய்!

எந்தை! இனி இதற்குக் கைம்மாறு யாது? ‘‘ என்றான் (6481)

 

உன் தந்தையை உன் கண் முன் கொன்றேன். எனினும் என் மேல் நீ எல்லையற்ற அன்பு வைத்துள்ளாய். உன் அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என நரசிம்மம் கேட்டது.

 

“‘அயிரா இமைப்பினை ஓர் ஆயிரம் கூறு இட்ட

செயிரின் ஒரு பொழுதின் உந்தையை யான் சீறி,

உயிர் நேடுவேன் போல், உடல் அளையக், கண்டும்

செயிர் சேரா உள்ளத்தாய்க்கு, என் இனியான் செய்கேனே (6482)

அன்பில் பக்தியில் உறுதி கொண்ட உன் உள்ளத்துக்கு என்னால் என்ன செய்ய முடியும்.

 

“‘முன்பு பெறப் பெற்ற பேறோ முடிவு இல்லை;

பின்பு பெறும் பேறும் உண்டோ? பெறுவேனேல்

என்பு பெறாத இழிபிறவி எய்திடினும்

அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்என்றான் (6484)

 

சிறுவனான என் சொல்லை உண்மையாக்க நீ தூணிலிருந்து வெளிப்பட்டாய். என் சொல்லுக்கு நீ இரங்கி வந்த செயல் எப்பிறவியில் நான் பெற்ற பேறோ? அதற்கே நான் எத்தனை பிறவியெடுத்தாலும் நன்றி செலுத்த வேண்டும். உடலில் எலும்பு கூட இல்லாத எளிய புழுவாகப் பிறந்தாலும் உன் அன்பு எனக்குக் கிடைக்குமாறு அருள் புரிவாயாக.

 

“‘மின்னைத் தொழு வளைத்தது அன்ன மிளிர் ஒளியாய்!

முன்னைத் தொழும்புக்கே ஆம் அன்றோ மூ உலகும்?

என்னைத் தொழுது ஏத்தி எய்தும் பயன் எய்தி

உன்னைத் தொழுது ஏத்தி உய்க உலகு எல்லாம். (6486)

 

உன்னை மனத்தால் நினைப்பவர்கள் தொழுபவர்கள் என்னை நினைத்து என்னைத் தொழும் பயனைப் பெறுவார்கள்.

 

“‘நல் அறமும், மெய்ம்மையும், நான்மறையும், நல் அருளும்,

எல்லை இலா ஞானமும்,  ஈறு இலா எப்பொருளும்,

தொல்லை சால் எண்குணனும், நின் சொல் தொழில் செய்க;

நல்ல உரு ஒளியாய், நாளும் வளர்க நீ. (6488)

 

ஈது ஆகும், முன் நிகழ்ந்தது; எம் பெருமான்! என் மாற்றம்

யாதானும் ஆக நினையாது, இகழ்தியேல்,

தீது ஆய் விளைதல் நனி திண்ணம் ‘‘ எனச் செப்பினான்,

மேதாவிகட்கு எல்லாம் மேலாய மேன்மையான். (6491)

 

வீடணன் இராவணனிடம் இதுவே இரணியனுக்கு நிகழ்ந்தது என்று எடுத்துரைத்தான்.