Friday 31 July 2020

தாகம்

குளக்கரை
அஸ்தமன சூரியன்
சலசலக்கும் கெண்டைகள்
நீர் மலர்கள்
தாவரக் கொடிகள்
காற்றில் நிற்கும் மீன்கொத்தி
தொலைதூரப் பயணி
உள்ளங்கைகளில் ஏந்திக் கொள்கிறான்
சூழலின் ஒரு பகுதியை
தீர்கிறது
ஒரு தாகம்

மங்களம்

அந்தி மழை பொழிந்ததற்கு
மறுநாள்
சுள்ளெனச் சுடுகிறது
சூரியக்கதிர்
மகவுகளெனத் தாவுகின்றன
புதுத் துளிர் பச்சைகள்
வான் நோக்கி
காத்திருப்பவனை ஆசிர்வதிக்கிறது
இலையில் இருந்து
சொட்டும்
ஒரு துளி மழை
ஈரமான சாலையில்
முன்னகர்கின்றன
சீரடிகள்

Wednesday 29 July 2020

மகாத்மாவின் அன்னை

நேற்று எனது நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். என் மீது மிகுந்த பிரியமும் அக்கறையும் கொண்டவர். கிராமத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அவரிடம் விளக்கினேன். சமீபத்தில் வெளியான ‘’பிரிவு’’ சிறுகதை குறித்து அவருடைய அபிப்ராயங்களைத் தெரிவித்தார். 15 நாட்கள் முன்பு பேசிய போது என்ன புத்தகம் வாசிக்கிறீர்கள் என்று கேட்டார். மகாராஷ்ட்ராவின் வரலாறு குறித்த நூல் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அதனைக் கூறினேன். இப்போதும் அந்த புத்தகத்தையே வாசித்துக் கொண்டிருப்பதாக பதிலளித்தேன். 

இன்று விடிகாலை விழிப்பு வந்து விட்டது. நேற்றைய உரையாடல் என் மனத்தில் இருந்தது. என் நூலகத்தைத் துழாவினேன். ஒரு சிறு நூல் கையில் கிடைத்தது. அதனை முழுமையாக வாசித்தேன். எனது இப்போதைய மனநிலைக்கு மிகவும் முக்கியத்துவம் கொண்ட நூலாக உணர்ந்தேன். அது எப்போதும் துணையிருக்கும் நூலும் ஆகும். 

மகாத்மா ஹரிஜன், யங் இந்தியா நூல்களில் பகவத்கீதை குறித்து எழுதிய கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு இச்சிறு நூல். நூலின் பெயர் : கீதை - என் அன்னை.

மகாத்மாவின் சொற்களை நாம் படிக்கும் போது உணரும் விஷயம் அவர் கூறுபவை அவரது அனுபவத்திலிருந்து எழுந்து வந்தவை என்பதே. அவர் எந்த விஷயத்தையும் முழுமையாக சிந்திக்கக் கூடியவரே. எனினும் அவரது எழுத்துக்களில் தனது சொந்த அனுபவத்தின் சாரத்தை வெளிப்படுத்துகிறார். அந்த அனுபவத்தை ஆதியோடு அந்தம் படிப்படியாக விளக்குகிறார். அதனால் ஓர் ஆரம்ப மாணவனிலிருந்து அறிஞர் வரை அனைவரின் வினாக்களுக்கும் அதில் விடை இருக்கிறது. 

மகாத்மா இந்தியர்கள் அனைவரும் பகவத்கீதையைப் பயில வேண்டும் என்று கூறுகிறார். அன்றாட வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மனிதர்களின் வெவ்வேறு விதமான முயற்சிகளுக்கு அந்நூல் துணை செய்யும் என்பதில் உறுதியாக இருக்கிறார். நாடு முழுவதும் பகவத் கீதை முற்றோதல் செய்யப்பட வேண்டும் என்ற விருப்பம் காந்திக்கு இருக்கிறது. சிறுவர்களின் இளைஞர்களின் மனத்திற்குள் கீதையின் பிரதி நுழைந்து விட வேண்டும்; அது நெருக்கடியான வாழ்க்கைத் தருணங்களில் வழிகாட்டும் என்ற புரிதல் காந்திக்கு இருக்கிறது.

இந்தியாவில் வேத காலத்திலிருந்து தொடர்ந்து வரும் கல்விமுறைகளில் ஒன்று பிரதியை மனனம் செய்தல். வேதம் எழுதாக் கிளவி. ஒலி ஒழுங்காகவே தலைமுறை தலைமுறையாக கைமாற்றப்பட்டு வந்தது. இன்றளவும் அந்த முறை தொடர்கிறது. மறை ஓதப்படுதல் போல கீதையும் மனனம் செய்து ஓதப்பட வேண்டும் என காந்தி விரும்புகிறார். மனனம் செய்யும் போது பிரதி மனதினுள் ஒத்திசைவாகச் சென்று விடும். குறிப்பிட்ட வாழ்க்கைத் தருணங்களின் போது அப்பிரதியின் சில சொற்கள் அகத்தில் எழுந்து வழிகாட்டும். ஒரு பிரதியை புறவயமாக அணுகி விளக்கங்களுடன் புரிந்து கொள்வது என்பது முறை. அதை விடவும் சக்தி வாய்ந்த வழிமுறை மனனம் செய்தல். கீதையைப் பாராயணம் செய்வதுடன் நமது நெருக்கடியான வாழ்க்கைத் தருணங்களில் அதன் ஒளியில் பயணிக்க வேண்டும் என காந்தி விரும்புகிறார்.

நமது இன்றைய வாழ்க்கைமுறையில், முதலாளித்துவம் வாழ்க்கையை தனிநபர்வாதத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. தனிநபர்வாதம் பொருள் சார்ந்த வாழ்க்கையை நோக்கி அனைத்தையும் திருப்புகிறது. இந்த காலகட்டத்தில் கீதையின் செயல் யோகம் உலகம் உய்வு பெற சிறப்பான மார்க்கம். செயல் மூலம் கற்றல் நிகழும். கர்மயோகம் ஒருவனை ஞானியாகவும் ஆக்கும். செயல் மூலம் உன்னதமான உணர்வுகளை உண்டாக்க முடியும். கர்மயோகம் ஒருவனை பக்தனாகவும் ஆக்கும். கர்மம் - ஞானம் - பக்தி என்ற மூன்றும் செயல் மூலம் சாத்தியமாகும்.

பகவத் கீதையை மகாத்மா தன் அன்னை என்கிறார். 

Tuesday 28 July 2020

புதிர் - விடை

முதல் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைக்கிறோம்.

அதன் இரண்டு மடங்கை சதுரங்கக் கட்டங்களில் வைத்துக் கொண்டே சென்றால் கடைசி கட்டத்தில் நெல்மணிகளை வைக்க

பூமியில் உள்ள நிலம் முழுவதையும்

பூமியின் ஒட்டுமொத்த சமுத்திரப் பரப்பையும்

சந்திர மண்டலம் முழுமையையும்

நெல் விவசாயம் செய்து கிடைக்கும் மொத்த மகசூலையும் 64 வது கட்டத்தில் வைக்க வேண்டியிருக்கும். 

Sunday 26 July 2020

பிரிவு

சொல்வனம் இதழில் சமீபத்தில் எழுதிய சிறுகதை ஒன்று வெளியாகி உள்ளது. அதன் இணைப்பு

பிரிவு

Saturday 25 July 2020

ஒரு புதிர்

இந்த புதிரைச் சிறு வயதில் வாசித்தேன்.

இந்த புதிரை விடுவிக்க முயன்று பாருங்கள்.

ஒரு சதுரங்கப் பலகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 64 கட்டங்கள் இருக்கும்.

முதல் கட்டத்தில் ஒரு அரிசியை வையுங்கள். இரண்டாவது கட்டத்தில் அதன் இரண்டு மடங்கான இரண்டு அரிசியை வையுங்கள். மூன்றாவது கட்டத்தில் அதன் இரண்டு மடங்கான நான்கு அரிசியை வையுங்கள். பின்னர் எட்டு அரிசி. அதன் பின்னர் பதினாறு அரிசி மணிகள். இப்படி வைத்துக் கொண்டே செல்லுங்கள்.

1, 2, 4, 8, 16, ...

கடைசி கட்டத்தில் எத்தனை அரிசி மணிகள் வைக்க வேண்டியிருக்கும்?

இந்த புதிருக்கான விடையைக் கண்டடைந்தவர்கள்  ulagelam(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். 

Wednesday 22 July 2020

ஆடிப்பிறை

இன்று ஆடிப்பிறை. வானில் பிறை கண்டேன். ஆடிப்பிறை காண்பது அபூர்வமானது என்பார்கள். ஆடியில் அந்தி மழை பொழியும். அந்தி மழை என்பது மாலை ஆறு மணி அளவில் பெய்யத் துவங்கி சிறு சிறு தூரலாக ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் பெய்யும். அதனால் ஆடியில் மாலைகளில் வானம் மூட்டமாய் இருக்கும். அதனால் ஆடிப்பிறை காண்பது அபூர்வம் என்று கூறியிருக்கலாம் என்று படுகிறது. ஊரைச் சுற்றி சில கிராமத்துச் சாலைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருப்பேன். மாலைப் பொழுதுகளில் அங்கே சென்று வானத்தை நோக்கியவாறு அமர்ந்திருப்பேன். இது பல வருடப் பழக்கம். இன்று அவ்வாறான ஒரு சாலையில் நின்று கொண்டு பிறையைக் கண்டேன். பிறை தென்படத் துவங்குவதிலிருந்து மறையும் வரை காண்பது மனம் கரையும் ஓர் அனுபவம். 

நாம் எப்போதும் புழங்கும் இடத்தில் நம் மனம் ஒரே விதமாக இயங்குகிறது. அதை விட்டு சற்று விலகிச் சென்றால் நாம் ஓர் விடுபடலை உணர்கிறோம்.

மாற்றத்துக்கான பணிகள் எப்போதும் நிகழ்ந்தவாறே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

வாழ்வின் உண்மைகளை அறிவதும் இறைமையை உணர்வதும் அழகின் அனுபவமும் ஒன்றே என்ற புரிதல் சிறு அளவில் இந்த நாட்களில் இருக்கிறது. 

சத்யம் சிவம் சுந்தரம்

ஈஸ்வர ஹிதம்

ஒரு காட்சி

காவிரிப் படுகையில் ஆற்றங்கரையில் ஒரு கிராமம்.

பிரம்ம முகூர்த்தத்தில் நான்மறையைக் குறிக்கும் நான்கு மணியோசை ஒலிக்கப்படுகிறது.

கீற்றுக் கொட்டகை ஒன்றில் நூற்றுக்கணக்கான மாடுகள் மணியோசை கேட்டு தங்கள் கழுத்துமணியை அசைக்கும் ஓசை இனிமையாகப் பரவுகிறது.

கொட்டகையின் நுழைவாயிலில் ஆனைமுகத்தானின் சிற்றாலயம். அதில் நெய் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

காலை ஐந்து மணிக்கு நூற்றுக்கணக்கான அக்கிராமத்தின் பெண்கள் ஆவின சாலையில் திரள்கின்றனர்.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் முப்பது பாடல்களை இசைக்கின்றனர். பின்னர் சம்பந்தர் தேவாரத்திலிருந்து திருநீற்றுப் பதிகம் பாடுகின்றனர். 
அதன் பின்னர் ஸ்ரீகுமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையால் கலைமகளைத் துதிக்கின்றனர். அபிராமி அந்தாதியால் உமையவளைத் தொழுகின்றனர். 

பெண்களால் மாடுகள் அருகில் உள்ள மைதானத்தில் விடப்படுகின்றன. 

மாட்டுக் கொட்டகை சாணம் அள்ளப்பட்டு தூய்மை செய்யப்படுகிறது. சாணத்தை சிறு சிறு ராட்டிகளாக தட்டி அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் காய வைக்கின்றனர். சில நாட்கள் முன்பு காயவைக்கப்பட்டு உலர்ந்த ராட்டிகள் பணியாளர்களால் நெற்பதர் மூட்டம் இடப்பட்டு தீயிலிடப்படுகின்றன. முன்னர்  தீயிலிடப்பட்ட ராட்டிகள் பதர் நீக்கப்பட்டு திருநீறாக மாற்றப்படுகின்றன. 

பெண்கள் மீண்டும் காலை 10 மணி அளவில் மாட்டுக் கொட்டகைக்கு வருகின்றனர். மாடுகள் நின்றிருந்த இடத்தில் அமர்ந்து ஒரு மணி நேரம் இராட்டையில் நூல் நூற்கின்றனர். 

ஆவின சாலையில் ஒரு ஆயுர்வேத மருத்துவமனை இருக்கிறது. அதன் பெயர் ‘’ஆரோக்கிய நிகேதன்’’.  அதில் ஓர் ஆயுர்வேத மருத்துவர் இருக்கிறார். காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அவர் பணியாற்றுகிறார்.  நோயுற்ற கிராம மக்கள் தினமும் அதில் ஆயுர்வேத சிகிச்சை பெறுகின்றனர். 

வாழ்க்கையின் அன்றாடச் செயல்பாடுகளுக்கு உதவக் கூடிய கல்வியை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என கிராமத்தின் குழந்தைகள் வந்து பயின்று செல்லும் கல்விச்சாலை ஒன்று அங்கே அமைக்கப்படுகிறது. எளிய பாரம்பர்ய தொழில்நுட்பங்களில் அங்கே குழந்தைகளுக்குப் பயிற்சி தரப்படுகிறது. 

ஆவின சாலைக்கு அருகில் ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. அதில் கால்பந்து, பாட்மிட்டன், கைப்பந்து, மற்றும் கிரிக்கெட் ஆட வசதி செய்து தரப்படுகிறது. ஊரின் குழந்தைகள் அங்கே தினமும் யோகாசனம் பயில்கின்றனர். காலை அந்தியிலும் மாலை அந்தியிலும் கிராமத்தின் குழந்தைகள் கதிர் வணக்கம் செலுத்துகின்றனர். 

கோசாலை , கல்விச்சாலை, ஆரோக்கிய நிகேதன் அனைத்துமே சூரிய ஒளி மின்சாரம் பெறுகின்றன. 

மாலை அந்தியில் மாடுகள் கொட்டகைக்குத் திரும்புகின்றன. 

இரவு கிராமத்தைச் சூழ்கையில் மாடுகளின் கழுத்து மணியோசை மெல்ல எழுகிறது. 

Tuesday 21 July 2020

நீறு பூத்த நெருப்பு

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

-திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம்

இன்று காலை எனக்கு ஒரு புது யோசனை உதித்தது.

ஓர் ஆங்கிலக் கவிதை உள்ளது.

ஒரு சிறு குன்றை ஏறிக் கடக்கும் ரயில் என்ஜின் பாடும் பாடல்.

I think, I can, I think, I can

ஏறிக் கடந்த பின்

I knew i can, I knew i can

என்று பாடும்.

மனத்தில் முழுமையாக கிராம முன்னேற்றம் குறித்த எண்ணங்களே ஓடிக் கொண்டிருக்கின்றன. எனக்கு அது ஒரு விதமான புது அனுபவமாக இருக்கிறது. நடைமுறை சாத்தியமான விஷயத்தை முன்வைத்தால் மக்கள் வரவேற்கிறார்கள் என்பதை நேரடியாக உணர்ந்தது காரணமாக இருக்கலாம்.

காந்தியப் பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பாவிடம் வயல்களில் உழவுக்கு டிராக்டர் பயன்படுத்துவது குறித்து கேட்ட போது அவர் டிராக்டர் சாணி போடுமா என்று கேட்டதாகக் கூறுவார்கள். அது மிகவும் பொருள் பொதிந்தது. நமது நாட்டில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆவினங்கள் விவசாயத்தின் ஒரு பகுதியாக – முதன்மையான முக்கியமான பகுதியாக – இருந்திருக்கின்றன. பசுவின் பாலை விடவும் வெண்ணெய், நெய் போன்ற பாலிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களே அதிக அளவில் உணவுப் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. கிருஷ்ணனின் கிராமமான கோகுலத்தில் ஆய்ச்சியர் மோரைக் கடைந்து வெண்ணெய் எடுக்கும் சித்திரம் மகாபாரத காவியத்திலேயே உள்ளது. மேலைச் சிந்தனைகள் மீது நமக்கு இருந்த வழிபாடு நமது விவசாயத்தில் டிராக்டர் போன்ற எந்திரங்களை அதிகமாக்கி ஆவினங்களுக்கும் விவசாயத்துக்குமான தொடர்பை பெருமளவு குறைத்தது.

மரக்கன்றுகள் நட உள்ள கிராமத்தில், மரக்கன்றுகள் நட்டு முடித்த பின், இந்த எண்ணத்தை மக்களிடம் சொல்லி அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று இதனைச் செயல்படுத்தலாம் என இருக்கிறேன். I think I can.

1. ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்வோம். அதில் 500 குடும்பங்கள் உள்ளன எனக் கொள்வோம்.

2. ஒரு ஏக்கர் பரப்புள்ள ஒரு பொது இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது. அதில் ஒரு பெரிய கொட்டகை அமைத்து அதில் கறவை நின்று போன 500 நாட்டுப் பசுமாடுகளைப் பராமரிப்பது.

3. ஒவ்வொரு மாட்டுக்கும் கொட்டகையில் 6 அடிக்கு 10 அடி என தனித்தனியான இடம் ஒதுக்கப்படும்.

4. பசுக்கள் இலக்கமிடப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் இன்ன மாடு என்பது அடையாளப்படுத்தப்படும்.

5. கொட்டகைக்குப் பக்கத்திலேயே மூன்று ஏக்கர் அளவில் பகலில் மாடுகள் உலவுவதற்கு ஓர் இடம் உருவாக்கப்படும்.

6. பசுக்கள் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை மட்டுமே கொட்டகையில் இருக்கும். பகலில் பக்கத்தில் உள்ள வேலியிடப்பட்ட இடத்தில் உலவிக் கொண்டிருக்கும்.

7. காலை 6 மணிக்குக் கொட்ட்கைக்கு வரும் ஒருவர் தனக்குரிய மாட்டுக்கு 20 கிலோ பசுந்தீவனம் கொண்டு வர வேண்டும். பசுந்தீவனம் சந்தையில் கிலோ ரூ. 2 என்ற அளவில் கிடைக்கிறது. அதனை பசுமாட்டுக்கு அளிக்க வேண்டும். அவர் கொண்டு வரும் பசுந்தீவனம் எடை போடப்பட்டு குறித்துக் கொள்ளப்படும். தனது மாட்டை கொட்டகைக்கு அருகில் உள்ள வெளியில்  அந்த மாடு கட்டப்பட்டிருக்கும் 60 சதுர அடி பரப்பைத் தூய்மை செய்து அதில் இருக்கும் சாணத்தை சிறு சிறு ராட்டிகளாகத் தட்டி காய வைக்க வேண்டும். இந்த பணிகள் காலை 6 மணிக்குத் தொடங்கினால் அதிகபட்சம் ஒரு மணி நேரம் தேவைப்படும். எத்தனை ராட்டிகள் தட்டப்பட்டுள்ளது என்பதும் குறித்துக் கொள்ளப்படும்.

8. போதிய பணியாளர்களைக் கொண்டு கொட்டகையில் மாடுகளுக்குத் தண்ணீர் வைக்கப்படும். அவற்றின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும். திறந்த வெளியில் மாடுகள் இடும் சாணம் சமமாகப் பிரிக்கப்பட்டு ராட்டிகள் தயாரிக்க வழங்கப்படும். ராட்டிகள் தீயிலிடப்பட்டு திருநீறாக மாற்றும் பணியை சில பணியாளர்கள் மேற்கொள்வார்கள்.

9. ஒரு நாட்டு மாடு ஒரு நாளைக்கு 10 கிலோ சாணமிடும். அந்த சாணத்திலிருந்து ஒரு கிலோ திருநீறு தயாரிக்க முடியும். ஒரு கிலோ திருநீறின் விலை ரூ. 400.

10. ஒவ்வொருவரும் மாட்டுக்கு அளிக்கும் உணவின் விலை ரூ. 40. பணியாளர்களின் நிகர ஊதியம் ஒரு மாட்டுக்கு ரூ.10 எனக் கொள்வோம். நெற்பதர் முதலிய செலவுகள் ரூ. 50 எனக் கொள்வோம். ஒரு மாட்டுக்கு தினமும் ஆகும் செலவு ரூ. 100. ஒரு கிலோ விபூதி மூலம் கிடைப்பது ரூ. 400. நிகர லாபம் ரூ. 300.

ஒரு சுவாரசியமான விஷயம்

ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யப்படும் நிலம் சராசரியாக 500 ஏக்கர். ஒரு போகத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ. 20,000 லாபம் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். இரண்டு போகம் ஆகவே லாபம் ரூ.40,000. 500 ஏக்கருக்கு லாபம் ரூ. இரண்டு கோடி.

500 நாட்டுப் பசுமாடுகளைக் கொண்டு திருநீறு தயாரிக்கும் விஷயத்தில் ஒரு மாட்டிலிருந்து ஒரு நாளைக்கு லாபம் ரூ. 300. 500 மாட்டிலிருந்து ஒரு நாளைக்கு லாபம் ரூ. 1,50,000. 500 மாட்டிலிருந்து ஒரு வருடத்தில் லாபம் ரூ. ஐந்து கோடியே நாற்பத்து ஏழு லட்சத்து ஐம்பதாயிரம்.

500 நாட்டுப் பசுமாடுகள் உருவாக்கும் செல்வம் விவசாய வருமானத்தைப் போல இரண்டரை மடங்கு.

வினாக்களும் விடைகளும்

1. இது சாத்தியமா?

எல்லா புதிய முயற்சிகளும் முன்னெடுப்புகளும் யோசனைகளும் இது சாத்தியமா என்ற வினாவை எப்போதும் எதிர்கொள்ளவே செய்கின்றன. இது சாத்தியமே. கிராம மக்கள் வீட்டுக்கு ஒருவர் என ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே கொடுக்கின்றனர். ஒரு மணி நேர உடல் உழைப்பையும் 20 கிலோ பசுந்தீவனமும் நெற்பதரும் மட்டுமே கொடுக்கின்றனர். அவர்கள் ஈட்டும் லாபம் ஒரு நாளைக்கு ரூ. 300. இது விவசாயிகளுக்கு லாபம் தருவது எனவே 100 சதவீதம் சாத்தியமானது.

2. உற்பத்தியாகும் அவ்வளவு விபூதிக்கும் விற்பனை வாய்ப்பு எப்படி?

ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பமும் இந்த விஷயத்தில் தங்கள் பங்களிப்பை வழங்கி பயன் பெற உள்ளனர். இந்த முயற்சியை ஆவினங்களை நேசிப்பவர்களும் திருநீறு அணிபவர்களும் பெருமளவில் வரவேற்பர். தேவை மிக அதிகமாகவே உள்ளது. உற்பத்திதான் குறைவு.

3. கிராமத்துக்கு வெளியில் இருப்பவர்கள் எவ்விதம் இதில் பங்கேற்கலாம்?

பசுப் பாதுகாப்பிலும் விவசாயிகள் நலனிலும் அக்கறை உள்ளவர்கள் இதில் பங்கு பெற விரும்பினால் உற்பத்தியாகும் திருநீறை வாங்கிக் கொண்டாலே போதுமானது.

4. இதில் வேறு ஏதாவது வணிக நோக்கங்கள் உள்ளனவா?

ஒரு கிராமத்தின் மக்களே முழுமையாக இதில் ஈடுபடப் போகிறார்கள். முழுக்கப் பயன் பெறப் போவதும் அவர்களே.

கிராமியப் பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இதை மேலும் செழுமையாக்க ஆலோசனை தரலாம்.

தொடர்புக்கு: ulagelam(at)gmail(dot)com




Monday 20 July 2020

மரபும் தமிழ்ச் சமூகமும்

உலகில் ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு மரபு உண்டு. அது பல்வேறு காரணிகளால் உருவாகி வருவது. எந்த சமூகமும் மானுடம் மேலான நிலையை அடைய தங்களால் ஆன முயற்சிகளை முன்னெடுத்தவாறே உள்ளன. மானுடத்துக்கு உலகின் எல்லா சமூகங்களும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளன. கீழைச் சமூகங்கள், மேலைச் சமூகங்கள், அராபியா, அமெரிக்கா என பல்வேறு நிலப்பகுதிகள் வரலாற்றின் எல்லா காலகட்டங்களிலும் பங்களிப்பு அளித்துள்ளன. சமயம், ஆன்மீகம், இலக்கியம் போன்ற விஷயங்கள் தவிர மருத்துவம், வணிகம், சட்டம், தொழில்நுட்பம், விவசாயம் போன்ற உலகியல் சார்ந்தவற்றிலும் கூட எல்லாருடைய பங்களிப்பும் அடங்கியுள்ளது. மானுடம் வளர்ச்சி என்னும் நிலையை நோக்கி வரலாற்றில் மிக மெதுவாகவேனும் நகர்ந்தவாறே இருக்கிறது. பெரும் போர்கள் நிகழ்ந்திருக்கலாம். தனிமனிதர்களின் ஆதிக்க ஆசை பல்லாயிரம் சாமானியர்களை சாவின் கைகளுக்கு அளித்திருக்கலாம். நினைத்துப் பார்க்க முடியாத பயங்கரங்களை மனிதர்கள் செய்திருக்கலாம். ஆனாலும் இருளில் ஏற்றப்படும் சிறு தீபமென ஓர் ஒளி வரலாற்றின் நீண்ட பாதையில் ஏற்றப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. 

வரலாறு என்பது பெரும் பிரவாகம். நாம் எண்ணும் ஓர் எளிய வரைபடமாக அது இருக்க வேண்டிய அவசியமில்லை. அதன் மர்மங்களும் முடிச்சுகளும் எப்போதும் இருக்கும். எனினும் வரலாறு ஓர் ஆசிரியனாக நமக்கு பாடம் நடத்தியவாறே இருக்கிறது. 

ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு சமூகப் பழக்கம் இருக்கிறது. ஜப்பான் கடலால் சூழப்பட்ட நாடு. ஒரு தீவு. மலைத்தொடர்களும் எரிமலைகளும் மிகுந்த நாடு. கடலலைகளும் மலையுச்சிகளும் நிறைந்திருக்கும் நாட்டின் மக்களுடைய அகம் மௌனத்தால் நிரம்பியிருக்கும். அதன் இன்னொரு உண்மையென பெரும் கொந்தளிப்பாலும் நிரம்பியிருக்கும். ஜென், ஓவியங்கள், பகோடாக்கள், தேனீர் திருவிழாக்கள் என ஒரு ஜப்பான். உலகின் பல பகுதிகளை தன் ராணுவ வல்லமையால் மானுடம் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளைச் செய்த இன்னொரு ஜப்பான். 

கலை, அறிவியல், தொழில்நுட்பம் என பல துறைகளில் உலகிற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை அளித்த ஐரோப்பா. காலனி ஆதிக்கத்தால் உலக நாடுகளை நூற்றாண்டுகளாகச் சுரண்டி அவற்றில் இன்று வரை நிலவும் வறுமைக்கான மூல காரணமாக விளங்கும் இன்னொரு ஐரோப்பா. 

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா அதன் எழுதப்பட்ட வரலாறு தொடங்கும் காலத்திலிருந்தே தன்னை புதுப்பித்துக் கொண்டும் மானுடத்துக்கு தனது பங்களிப்பை வழங்கியவாறும் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்தியாவின் சிறப்பு அதன் மரபு. மறைகள் இறைத் துதிகளிலிருந்து இறைமை, யாவும் எங்கும் நிறைந்திருக்கிறது என்னும் புரிதல் வரை நீளக் கூடியவை. சமணம் அஹிம்சையை இறைமையை உணர்வதற்கான ஒரு வாயிலாகக் காண்கிறது. சமணம் புலால் மறுத்தலை ஓர் உணவுப் பழக்கமாக மட்டும் எண்ணவில்லை. அதை கருணைக்கான ஒரு பாதையாக அமைக்கிறது. சமணம் இந்தியாவின் எல்லா சமூகங்களையும் அணுகிய போது புலால் மறுத்தலை போதித்தது. பல சமூகங்கள் வேட்டைச் சமூகங்களாக இருந்த போது புலால் மறுத்தலை தத்துவார்த்தமாக ஏற்றுக் கொண்டு வாரத்தின் சில நாட்கள் புலால் உண்ணாமல் இருக்குமாறும் வருடத்தின் சில குறிப்பிட்ட மாதங்கள் புலால் தவிர்க்குமாறும் சமணம் கேட்டுக் கொண்டது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலும் நாட்டின் வெவேறு சமூகங்கள் இந்த பழக்கத்தைப் பின்பற்றுகின்றன. அவர்கள் இப்போது சமண நெறியைப் பின்பற்றவில்லையெனினும். பௌத்தம் மனிதனின் உச்சபட்ச சாத்தியமான புத்த நிலையை எடுத்துரைத்தது. உயிர்களின் துயருக்கு மருந்தாக இருந்தது புத்தரின் சொற்கள்.

இந்தியாவில் எல்லா சமயங்களுமே அறத்தை வலியுறுத்தின. வன்முறையை தவிர்க்கக் கூறின. நீதி எங்கும் நிலை பெற விரும்பின. மருத்துவம், பயிர்த் தொழில், வானியல் ஆகியவற்றில் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக இந்த மண்ணில் உயிர்த்திருந்த சாரமான ஒரு மரபு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. மேலைச் சமூகங்களில் மத அதிகாரம் என்பது அவை உருவான கூறுகளில் முதன்மையானது. பெரும்பான்மையானதும் அதுவே. ஒரு கிராமம் நிலச் சுவான்தாருக்கு உரியது. அங்கே இருக்கும் வழிப்பாட்டு இடத்தை அவர் பேணுவார். வழிபாட்டு இடம் மதத் தலைமை அமைப்பால் நிர்வகிக்கப்படும். மன்னரின் முடியாட்சியை மதத் தலைமை பீடமே முடிவு செய்யும். இந்தியா இன்று வரையுமே எந்த ஒரு மதத் தலைமையாலும் கட்டுப்படுத்தப் பட்டதில்லை. விஜயநகர சாம்ராஜ்யம்  இந்த மண்ணின் மரபை மீட்டெடுக்க ஒரு துறவியின்  வழிகாட்டுதலால் உருவாக்கப்பட்டது. அவர்கள் மாத்வர்களை, வீர சைவர்களை, சைவர்களை, சமணர்களை ஆதரித்திருக்கிறார்கள். சமூகங்களை அமைதிப்படுத்தவும் நல்வழிக்கு இட்டுச் செல்லவுமே சமயங்கள்.

இந்தியாவின் எல்லா சமயங்களுமே இயற்கையின் ஒரு பகுதியே மனிதன் என எடுத்துரைக்கின்றன. அறமே எல்லா சமூகங்களும் பொதுவாக இருக்க முடியும் என அறுதியிடுகின்றன. தியாகத்தை மேலான விழுமியமாக முன்வைக்கின்றன.

அவை வெவ்வேறு விதமான பழக்கங்களாக இங்கே பதிந்து போய் உள்ளன. அந்த பல்லாயிரம் ஆண்டு விருட்சம் எப்போதும் உயிர்ப்புடன் திகழ வேண்டும். 


Sunday 19 July 2020

காவிரி முழுக்கு

இன்று மதியம் நண்பர் ஃபோன் செய்தார். ஆற்றில் நீராடுவோம் என அழைத்தார். காவிரியில் நிரம்ப தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு நீர் மிகை. காவிரியில் முழுகினோம். இந்த வாரம் மரக்கன்றுகள் நடுவதால் இந்த முழுக்கு காவிரியின் ஆசி கோரிய ஒன்று. நதியும் மரமும் ஒளியும் வானும்  இறைமையின் கண் கண்ட வடிவங்கள். இவற்றில் உறையும் இறையைக் கண்டது நம் மரபு. இயற்கையுடன் உணர்வுபூர்வமான தொடர்பை உருவாக்கிக் கொள்ளுதலே ஒட்டு மொத்த மானுடமும் சென்று சேர வேண்டிய இடம். அந்த உணர்வை பல்லாயிரம் ஆண்டுகளாக பல தலைமுறைகளாக பேணிக் காத்து நம் கையில் அளித்திருக்கின்றனர் நம் முன்னோர்.

Saturday 18 July 2020

அமைதி கொள் நண்பா

சாம் இன்று இல்லை.

வீதியில் சில நாட்களாக நாய்க்குட்டிகள் மடிந்து விழுகின்றன. வைரஸ் தாக்குதல்.

சாம் உடன் பிறந்த குட்டியொன்று நேற்று இரவு இறந்து போனது. சாம் அதன் உடல் அருகிலேயே அமர்ந்திருந்தது. உணவு உட்கொள்ளவில்லை. வேறு எந்த கவனமும் இல்லை. அதன் அருகில் இதுவும் படுத்துக் கொண்டது. வயிறு லேசாக உப்பியிருந்தது. மூச்சு குறைந்து கொண்டே வந்தது. அருகில் சென்றால் தீனமாகப் பார்த்தது. 

இந்த உலகைத் தன் சின்னஞ்சிறு செயல்களால் உற்சாகமாக்கிய சாம் இன்று விடைபெற்றது. 

நீ இருந்த குறுகிய காலத்தில் இனிமையான நினைவுகளை பலருக்கு உண்டாக்கினாய். 

முடிவிலியான காலத்தில் அமைதி கொள் நண்பா.

அமைதி கொள்.

Friday 17 July 2020

ஏகம் சத்

நான் பணி புரியும் கிராமத்தில் என்னை மக்கள் பலவிதமாக புரிந்து வைத்துள்ளார்கள். அவர்களுக்கு நான் ஒரு வனத்துறை அதிகாரி. சிலர் என்னை விவசாயத்துறையைச் சேர்ந்தவனாக எண்ணிக் கொள்கிறார்கள். தோட்டக்கலைத்துறையைச் சார்ந்தவன் என்பது இன்னும் பலரின் எண்ணம். ஊரக மேம்பாட்டுத் துறை என்றும் சிலரின் அபிப்ராயம். 

ஒவ்வொரு விவசாயியையும் அவர்கள் வீட்டில் சந்திக்கும் போது எல்லாரிடமும் நான் பேசத் துவங்குவது ‘’வணக்கம். என்னுடைய பெயர் பிரபு. கட்டிட கட்டுமானம் என்னுடைய தொழில். நண்பர்களுடன் இணைந்து மரம் நடுகிறோம். ‘’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தான் பேசவே துவங்குவேன். அதற்கே இப்படி. இதுநாள் வரை கிராமத்தில் யாரும் என்னை ஒரு கட்டிடப் பொறியாளனாக நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. பலருக்கு நான் ஒரு அரசு அதிகாரி தான். 

என்னுடைய அலைபேசி எண்ணை எல்லாரிடமும் தந்துள்ளேன். அவர்களிடமிருந்து அழைப்பு வரும். 

’’வணக்கங்க. நான் சுப்ரமணியன் பேசறன்’’

‘’வணக்கங்க.’’

‘’நாம நேத்து பேசிக்கிட்டிருந்தது போல ...’’ சுப்ரமணியன் கட கட என்று ஆரம்பிப்பார். 

’’அண்ணனுக்கு ஊர்ல எந்த தெருவுல வீடு’’

‘’என்ன சார்! நேத்து சாயந்திரம் நம்ம வீட்டுல டீ சாப்டீங்களே. பெரிய தெரு சார் நம்ம வீடு’’

‘’ஓ! நீங்களா! அந்த பச்சை பெயிண்ட் அடிச்ச வீடு. வீட்டு வாசல்ல ஒரு செம்பருத்தி பூ பூத்திருக்கே. அந்த வீடுதானே!’’

’’ஆமா சார் அந்த வீடுதான்’’

ஒரு ஊரில் எத்தனை சுப்ரமணியம் , எத்தனை நடராஜன், எத்தனை ராமச்சந்திரன், எத்தனை சதீஷ்.

அத்தனை பேர் எண்ணையும் அலைபேசியில் ஏற்றினால் அதன் மெமரி நிறைந்து விடும். டைரியில் குறித்து வைத்திருப்பேன். மரம் நடுதல் குறிப்புகள் தொடர்பாக தினம் சிலருக்கு ஃபோன் செய்வேன். 

‘’சார் ! இன்னைக்கு காலைல தான் சார் குளக்கரைல நாம பேசிக்கிட்டிருந்தோம்’’

‘’அதாவது நான் எல்லாருக்கும் ஃபோன் செஞ்சு ஞாபகப்படுத்துறன். அந்த வரிசைல உங்க பேரும் வந்திருக்கு.’’

அடுத்த எண்ணுக்கு அழைப்பேன். 

‘’சார் ! குளக்கரைல நானும் தான் சார் கூட இருந்தேன்’’ அடுத்த நபரும் சொல்வார். மேலும், ‘’இதுக்கு முன்னாடி நீங்க கூப்பிட நம்பர் என்னோட தம்பியோடது. அவன் இப்ப பக்கத்துல தான் இருக்கான்’’

எனக்கு எல்லாரையும் தெரியும். ஆனால் இன்னும் முழுமையாக பெயரும் முகமும் இணைந்து ஞாபகத்தில் பதிவாகவில்லை. அழைப்புகள் வந்தால் ஊரில் எந்த தெரு என்று கேட்பேன். தெருவின் பெயர் சொன்னதும் ஓரளவு ஞாபகப்படுத்திக் கொள்வேன்.

நேற்று மாலை கிராமத்துக்குச் சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். கிராமத்துக்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவுள்ள இடத்தில் ஒருவர் லிஃப்ட் கேட்டார். நான் வண்டியில் ஏற்றிக் கொண்டேன்.

உற்சாகமாக பேச்சை ஆரம்பித்தார்.

‘’சார்! எனக்கு உங்களை நல்லாத் தெரியும்’’

’’அப்படியா! ரொம்ப சந்தோஷம்’’ நான் மையமாக சொல்லி வைத்தேன். மனம் இவர் யாராயிருக்கும் என்று தேடியது. சற்று பொருத்தால் அவரே சொல்வார் எனக் காத்திருந்தேன்.

‘’சார்! நீங்க இந்த பக்கம் அடிக்கடி வருவீங்க. தினமும் நீங்க போறதை நான் பாத்துருக்கன். உங்களை எனக்கு நல்லா தெரியும்’’

‘’நீங்க விவசாயம் செய்யறீங்களா அண்ணன்?’’

‘’ஆமா சார். ஒரு ஏக்கர் நிலம் இருக்கு. மோட்டார் ரீவைண்டிங் கடை வச்சிருக்கன்’’

‘’பிஸினஸ் எப்படி போகுது?’’

‘’நமக்கு தினம் ரெண்டு மோட்டாராவது வந்துரும் சார். நல்லா போய்ட்டிருக்கு’’

‘’சார் நீங்க எல்லாருக்கும் மரக்கன்னு தர்ரீங்களா?’’

‘’ஆமாம்’’

‘’என்னோட சொந்தக்காரர் ஒருத்தர் நீங்க கணக்கெடுக்கற கிராமத்துல இருக்கார். அவர் சொன்னார். என் வயல்லயும் மரம் நடலாம்னு ரொம்ப நாளா நினைச்சுட்டிருக்கன். எனக்கும் தருவீங்களா?’’

‘’முதல்ல அந்த கிராமத்தை முழுமையா முடிச்சுட்டு அடுத்த கிராமத்துக்கு வர்ரதா இருக்கோம். பரவாயில்லை. நீங்க ரொம்ப ஆர்வமா இருக்கீங்க. உங்களுக்கு எத்தனை மரம் வேணும்?’’

’’எனக்கு 40 தேக்கங்கன்னு தாங்க சார்”

’’என் நம்பர் குறிச்சுக்கங்க. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அந்த கிராமத்துல கொடுக்கறோம். அப்ப அங்க வந்து என்ன்னைப் பாருங்க. இல்லன்னா ஃபோன் செய்ங்க. வாங்கிக்கலாம்’’

‘’சார்! எனக்கு ஒரு சந்தேகம்?’’

‘’கேளுங்க’’

‘’நீங்க கிராமத்துல ஓ.சி, பி.சி, எம்.பி.சி, எஸ்.சி எல்லாருக்கும் மரம் கொடுக்கறீங்களா?’’

’’அண்ணன்! நாங்க ஒரு கிராமத்துக்கு சில விஷயங்களை முழுமையா செய்ய நினைக்கறோம். ஒரு தாலுக்காங்கறது அளவுல ரொம்ப பெருசு. மாவட்டம் அதை விடப் பெருசு. மாநிலம் இன்னும் பெருசு. நாங்க ஒரு சின்ன டீம். எங்களால ஒரு கிராமத்துல முழுமையா வேலை செய்ய முடியும். அதனால இப்ப ஒரு கிராமத்தை எடுத்துருக்கோம். அதுல இருக்கற ஒவ்வொரு வீட்டுக்கும் போயிருக்கோம். விவசாயம் பல பேரோட பசியைப் போக்குற தொழில். அதனால அதுல ஈடுபட்டிருக்கற அத்தனை பேரும் விவசாயிகள் தான். எல்லாரும் சேந்து வேலை செய்யறதாலதான் உலகமே பசியாற முடியுது. அதனால வயல்ல வேலை செய்யற எல்லார் மேலயும் எங்களுக்கு பெரிய மரியாதை இருக்கு. கிராமத்துல 100க்கு 96 வீட்டுக்கு நான் நேரா போயிருப்பன். அவங்க ஊர்ல இல்லாம இருந்தாதான் கணக்கெடுப்பு விட்டிருக்கும்.’’

‘’மேல்ஜாதி கீழ்ஜாதி இருக்கத்தானே சார் செய்யுது’’

‘’அண்ணன்! மனுஷங்க எல்லாரும் ஒன்னு தான். ஒரு மரம் இருக்கு. அதுல வேர் இருக்கு. கிளை இருக்கு. இலை இருக்கு. காய் இருக்கு. பழம் இருக்கு. பூ இருக்கு. இது எல்லாம் சேந்து தான் மரம். இதுல ஒன்னு இல்லன்னா இன்னொன்னு இல்ல. ஒன்னு பெருசு இன்னொன்னு சிறுசுன்னு சொல்ல முடியுமா? இது எல்லாம் ஒன்னுன்னு பாக்கறதுதான்ன அறிவு. பிரிச்சுப் பாத்து மேல கீழன்னு சொல்றது அறியாமை.’’

’’யோசிச்சுப் பாத்தா நீங்க சொல்றது உண்மை தான் சார். மரத்தை வச்சே விளக்கமா சொல்லீட்டீங்க.’’

‘’மரத்தை உவமையா வச்சு இப்படி விளக்கினவர் ஒரு ஞானி. அவர் பேரு நாராயண குரு’’




Tuesday 14 July 2020

ராஜாஜியின் கல்வித் திட்டம்


நண்பர்கள் நான் ஏன் ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ஆதரிக்கிறேன் எனத் தொடர்ந்து கேட்ட வண்ணமிருந்தனர். அவர்களிடம் நான் சில விஷயங்களைக் கூறி விட்டு என்னுடைய தரப்பை முன்வைத்தேன். நான் கூறுபவற்றை உள்வாங்கினால் மட்டுமே என்னுடைய தரப்பை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலும். 

1. நான் கல்வித்துறையில் நிபுணன் அல்ல. என்னுடைய அவதானங்கள் ஒரு படைப்பாளியாக நான் முன்வைப்பவையே. 

2. கல்வி குறித்த காந்தியின் - காந்தியவாதிகளின் பார்வை என் மனத்துக்கு மிகவும் உவப்பானது. 

3. இந்தியாவின் கல்விமுறை குறித்து திரு. தரம்பால் அவர்கள் எழுதிய ‘’தி பியூட்டிஃபுல் ட்ரீ’’ நூலை நான் வாசித்திருக்கிறேன். 

4. உலகெங்கும் மாற்றுக்கல்வி குறித்து உருவாகி வந்துள்ள சிந்தனைகள் மேல் எனக்கு மதிப்பும் ஆர்வமும் உண்டு.

5. தமிழ்நாட்டில், தமிழ் வழியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன் என்பதும் பொறியியல் பயின்றதும் தமிழ்நாட்டில் என்பதும் தமிழ்நாட்டின் கல்வி குறித்த என்னுடைய பார்வைகளுக்கு வலு சேர்க்கும் என்று நான் கருதுகிறேன். 

6. இந்திய நிலமெங்கும் நான் பயணித்திருக்கிறேன். நான் பயணித்த இடங்களில் பள்ளி மாணவர்களிடமும் கல்லூரி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் நான் கல்வி குறித்து உரையாடியிருக்கிறேன். 

ஒரு நாட்டின் - ஒரு மாநிலத்தின் கல்விக் கொள்கை என்பது பல்வேறு புவியியல், சமூக, பொருளியல், அரசியல் சூழ்நிலைகளைச் சார்ந்தவை. கல்வி குறித்த எந்த விஷயத்தையும் அவற்றின் பின்னணியிலேயே காண முடியும். காண வேண்டும். நமது நாடு விடுதலை பெற்ற போது நாம் 21 வயது ஆன இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தோம். இந்தியர்களுக்கு கல்வியறிவு அளிப்பது என்பது தேசத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிகவும் முக்கியமான விஷயமாக இருந்தது. ஒரு ஜனநாயக அரசு அமைந்துள்ள சூழலில், அதன் புவியியல் உலக அரசியலின் ஒரு முக்கியமான கேந்திரமாக இருக்கையில் மைய ஆட்சிக்கும் அதன் மக்களுக்கும் ஒரு தொடர்பு இருக்க வேண்டியது மிகவும் அவசியமான நிலையில் இந்தியா தன் கல்விக் கொள்கையையும் கல்வி குறித்த தன் செயல்பாடுகளையும் உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. இந்தியாவின் புவியியல் மிகவும் வேறுபட்டது. அஸ்ஸாமில் பிரம்மபுத்ரா கரையில் இருக்கும் ஒரு கிராமத்தின் பள்ளி இயங்கும் சூழலுக்கும் ஆந்திரப் பிரதேசத்தில் ராயலசீமாவில் ஒரு பள்ளி இயங்குவதற்கும் பாரிய வேற்றுமைகள் உண்டு. இருப்பினும் இழுத்துப் பிடித்தாவது நாடு முழுதுக்கும் பொதுவான சில அம்சங்களுடன் கல்விமுறையை செயலாக்க வேண்டியிருந்தது. அதிலும் நமது கொள்கை வகுப்பாளர்கள் பலர் சோவியத் ஆதரவாளர்களாக இருந்தார்கள். சோவியத் மாதிரியே அவர்கள் மனத்துக்கு ஏற்றதாக இருந்தது என்பதும் நிதர்சனம். இந்தியாவின் கல்விக் கொள்கையை வகுப்பதிலும் செயலாக்குவதிலும் காந்தியவாதிகள் முக்கிய இடம் பெறுவதை அன்றைய மைய அரசு உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நேரு தொழில்நுட்பத்தை மித மிஞ்சி வழிபடும் நிலையில் இருந்தார். பாரம்பர்யமான கல்வி அமைப்புகள் மீது அவருக்கு பெரும் ஒவ்வாமை இருந்தது. பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் காந்திய வழிமுறைகள் மீதும் அவருக்கு அந்த ஒவ்வாமை நீடித்தது. 

இன்று இணையம் நூல்களை கணிணி மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு வந்து சேர்க்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம். 1950கள் எப்படி இருந்திருக்கும்? அச்சுப்புத்தகம் மட்டுமே ஒரே வழி. கிராமம் நகரம் வேறுபாட்டை சரி செய்ய வேண்டும். நாட்டின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். தொழில்துறையில் செயல் புரியக் கூடிய திறன் வாய்ந்த தொழிலாளர்கள் தேவை. உலக அரசியல் நெருக்கடிகள். இந்த நிலையில் நம் நாட்டுக்கான ஒரு முறையை - நம் மாநிலங்களுக்கான ஒரு முறையை நாம் உருவாக்கியிருக்க வேண்டும். ராஜாஜி உருவாக்க முயன்றது அவ்வாறான ஒன்று.

ராஜாஜியின் கல்வித் திட்டம் எவ்வாறு இந்தியத் தன்மையிலானது?

1. நாளின் பெரும் பகுதியை ஒரே பணிக்குச் செலவிடும் முறை என்பது ஐரோப்பாவுக்கானது. இந்தியாவில் விவசாயிகளின் வாழ்க்கை காலைப்பொழுதில் கருக்கலிலேயே துவங்குவது. பின்னர் மாலை அந்தியில் சில பணிகளுடன் நிறைவு பெறுவது. 

ராஜாஜி பள்ளி நேரத்தை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை என்று ஆக்கினார். அதை இரண்டு ‘’ஷிஃப்ட்’’ ஆகப் பிரித்தார். காலை 9-1 என ஒரு ஷிஃப்ட். மதியம் 1-5 என இன்னொரு ஷிஃப்ட். 

தமிழ்ச்சமூகத்தில் பெரும்பாலானோர் விவசாயிகள். இரண்டு ஷிஃப்ட் இருக்குமெனில் அவர்கள் காலையிலோ மாலையிலோ தங்கள் வாழ்க்கைக்கல்வியாக அவர்கள் பெற்றோர் மேற்கொள்ளும் தொழில்களில் அவர்களுக்கு உதவவும் கூடும்; அதன் மூலம் அவர்கள் கல்வியின் ஒரு பகுதியாக ஒரு தொழிலைக் கற்கவும் கூடும் என்ற வாய்ப்பை உருவாக்க விரும்பினார். 

ராஜாஜி காந்திய வழிமுறைகளில் நம்பிக்கை கொண்டவர் என்பதையும் காந்தியம் விவசாயம், நெசவு, தூய்மைப் பணி, தோல் பதனிடும் பணி, தையல், காகித பைண்டிங், தச்சுப்பணி என அனைத்திலும் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டது என்பதையும் இதனுடன் சேர்த்து யோசிக்க வேண்டும். 

2. எந்த காலகட்டத்திலும் ஒரு சமூகத்தின் பொருளியலில் மாற்றம் ஏற்படுத்துவதும் கல்வியில் மாற்றம் ஏற்படுத்துவதும் நேரடியான மற்றும் மறைமுகமானத் தொடர்புகளுடனே இருந்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு உருவான போது கேரள மாநிலத்தவர் பலர் அங்கு சென்றனர். ஒப்பு நோக்க மகாராஷ்ட்ரா கேரளாவை விட வளைகுடாவுக்கு பக்கம். அங்கேயிருந்து சென்றவர்கள் கேரளாவை விடக் குறைவு. ஆனால் மும்பை நகருக்கும் வளைகுடா நாடுகளுக்கும் தொடர்பு அதிகம். 

3.  சமூகத்தின் எல்லா பிரிவினரும் பொருளியல் நலன்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதும் அதற்காகச் செயல்படுவதுமே உண்மையான சமூகநீதி. ராஜாஜி நேரு நம்பிய சோஷலிசம் இந்தியாவின் சிக்கல்களைத் தீர்க்காது என உணர்ந்து லைசன்ஸ் - பர்மிட் - கோட்டா ராஜ்யத்தை எதிர்த்து தனது சித்தாந்தத்தை முன்வைத்தார்.

மாணவர்களுக்கு சமூகக் கல்வி பெற வாய்ப்பையும் மேலும் கூடுதலான நேரத்தையும் அளித்தல், மொழிக்கல்வியையும் தொழிற்கல்வியையும் பள்ளியில் அளித்தல்,  ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்குதல், சமூகக் கல்வியும் தொழிற்கல்வியும் மொழிக்கல்வியும் உடைய மாணவர்கள் மூலம் சமூகத்தின் பொருளியல் நிலையை உயர்த்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதே ராஜாஜியின் கல்வித் திட்டம். இன்றைக்கும் இத்தகைய முறைக்கான ஒரு தேவை இருக்கிறது என்பதே யதார்த்தம். 

Monday 13 July 2020

’’காவிரி போற்றுதும்’’ - ஒரு கடிதம்

அன்புள்ள பிரபு,

'காவிரி போற்றுதும்' போன்ற பதிவுகளை வாசிக்கையில் குற்றவுணர்ச்சியும் ஊக்கமும் ஒருசேர எழுகின்றன.

குற்றவுணர்ச்சி - இதெல்லாம் நடக்கும்போது (அதுவும் முன்னெடுப்பது நம் வயது ஆள் என்பதுவும் கூடுதல் விவரம்) 'நாமும் இது போல செய்யாமல் இருக்கிறோமே' என்ற உணர்வால்.
ஆனால் அதைவிட முக்கியம்  பெருமிதமும் ஊக்கமும் - நீங்கள் ஒரு அற்புதமான கதைசொல்லி என்பதை அந்த இடுகை எங்கே துவங்கி (தைத்ரீய உபநிஷத்) எப்படிச் சென்று, எதையெல்லாம் தொட்டு விரிந்து, விவரிக்கவேண்டியவைகளை துல்லியமாக விளக்கிச் செல்கிறது போன்ற விவரங்களில் உணரமுடிகிறது.

அந்த இடுகையில் இலக்கியம் இருக்கிறது, இது போன்ற விஷயங்களில் நம் அருமையான முன்னோடி காந்தி இருக்கிறார், இதையெல்லாம் விட மக்களுக்கு எளிதில் புரிகின்ற மொழியில், அவர்களுக்கு வரும் அனைத்து ஐயங்களுக்கும் விடையளிப்பதன் மூலம் நல்லதொரு மேலாண்மை கட்டுரையாகவும் திகழ்கிறது. குறிப்பாக, அவர்கள் வீட்டிலேயே அந்த மரக்கன்றுகளை நடலாம் என்பது நல்லதொரு உத்தி - இதனாலேயே, அதற்கு நீரூற்றுவதென்பது மக்களுக்கு ஒரு 'வேலையாக'த் தோன்றாது (நாள்தோறும் தண்ணீர் தேவைப்படும் தாவரங்களுக்கு இது மிக முக்கியம்). அதே சமயம் 'நம்ம வீட்டு மரம்' என்பதும் ஒரு நெருக்கத்தைக் கொடுக்கும்

சற்றே யோசித்தால் இவ்வளவு விரிவாக இல்லையெனினும் அனைவரும் அவரளவிற்கு ஏதேனும் செய்யவியலும் என்பது உறைத்தே இருந்தாலும், நம் சோம்பேறித்தனத்தாலும், எளிதில் சோர்வுறும் தன்மையாலும் நாம் இவற்றைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறோம். இந்நிலையில் உங்கள் செயல் மிகவும் போற்றத்தக்கது.

உங்கள் மற்ற இடுகைகளையும் வாசித்தேன் - மிக முக்கியமான, அடிப்படையான விஷயங்களைத் தொட்டு எழுதியிருக்கிறீர்கள் (அறிவுரையளிப்பது யாருக்கு, தண்டுவடத்தின் முக்கியத்துவம் - அதனாலேயே நிமிர்ந்து அமர்வது எவ்வளவு எளிதான ஆனால் முக்கியமான ஒன்று).

அன்றைய நம் உரையாடலை யோசித்துக்கொண்டிருந்தேன்.

மால்கம் ஆதிசேஷய்யா, அவரின் பங்களிப்பு போன்ற விஷயங்களையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் ஒரு தொலைபேசி உரையாடலில் பேசக்கூடிய சாத்தியங்களே அருகி வரும் இக்காலங்களில் உங்களுடனான சம்பாஷணை ஒரு உற்சாகத்தை தந்தது (மேலும் இது போன்ற விஷயங்கள் ஊரடங்கில் முடங்கிக் கிடக்கும் சமயங்களில் நடப்பது கூடுதல் சந்தோஷம்).

மிக்க நன்றி பிரபு

அன்புடன்,
உலகநாதன்

ஆடிப்பூரம்


மரக்கன்றுகளை வழங்குவதற்கு ஆடிப்பூரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். தமிழ்க்கவியான ஆண்டாளின் பிறந்த நாள் ஆடிப்பூரம். இந்த வருட ஆடிப்பூரம் ஆடிவெள்ளியன்றும் வருகிறது. திருப்பாவை இனிமையான முப்பது பாடல்களில் இந்திய நிலப்பரப்பை - ஆன்மநேயத்தை முன்வைக்கிறது. எல்லா தமிழ்க் குடும்பங்களிலும் ஏதோ ஒரு விதத்தில் திருப்பாவைப் பாடல்கள் சென்றடைந்துள்ளன. குழந்தைகள் தவழும் ஒவ்வொரு ஊரும் கோகுலமே என்ற உணர்வை திருப்பாவை இசைக்கும் போது அடைகிறோம். உலகம் ஒரு குடும்பம் என்கிறது இந்திய மரபு. 



Saturday 11 July 2020

அமர்க


உடலை லகுவாக வைத்திருப்பவர்கள் யோகாசனங்களை சொல்லித் தரும் ஆசிரியர்களாக இருப்பார்கள். இன்னொருவருக்கு சொல்லித் தர அந்த ஆசனத்தை தான் செய்து காண்பிக்க வேண்டும் என்பதால் அவர்களும் தொடர்ச்சியான பயிற்சியில் ஈடுபட்டிருப்பர். சிறுவர்களுக்கு ஆசனங்கள் சொல்லித் தருவதற்கும் பெரியவர்களுக்கு ஆசனங்கள் சொல்லித் தருவதற்கும் பாரிய வேறுபாடு உண்டு. சிறுவர்களின் உடல் வளைக்கும் முறைக்கு வளையும். பெரியவர்கள் உடல் அவ்வாறு எண்ணியவாறு வளையாது. நம் உடல் தசைகளுக்கு ஞாபகங்கள் உண்டு. மூளையின் விருப்பத்தை – கட்டளையை செயல் புரிய ஒரு முன்நிகழ்வு தசைகளுக்கு இருக்க வேண்டும். வயதான பின் அதை உடலில் உருவாக்கிக் கொள்வது சிறிது கடினம். இளம் வயதில் எளிதில் உருவாக்கி விடலாம். குழந்தைகள் ஆடிக் குதித்து விளையாடும் போது உடலின் எல்லா தசைகளும் முழுமையான ரத்த ஓட்டம் பெற்று அவை அவற்றின் செயல் சாத்தியங்களின் அதிகபட்சத்தை அடையும். அதனால் குழந்தைப் பருவத்தில் குழந்தைகள் நன்றாக விளையாடுகிறார்களா என்று பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். இன்று குழந்தைகள் கையில் ஸ்மார்ட்ஃபோனைக் கொடுத்து அவர்களை உடல் இயக்கம் இல்லாமல் ஆக்குகின்றனர் பெற்றோர்.

உடலைப் பழக்குவதன் மூலம் மனநிலையை மாற்ற முடியும். மனத்தில் ஏதேனும் ஒரு சஞ்சலம் எனில் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்தோமெனில் அந்த சஞ்சலத்தைக் கடந்து விட முடியும். பேட்மிட்டன் போன்ற விளையாட்டை ஒரு மணி நேரம் விளையாடுவோமெனில் ஒரு துயரத்தைக் கூட கடந்து விட முடியும். நமது வாழ்க்கைமுறை எல்லாவற்றையுமே பணம் சார்ந்ததாக எண்ணிக் கொள்ள பழக்கி விட்டிருக்கிறது. பொருட்செல்வம் முக்கியமானது தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்காக நம் ஆரோக்கியம், மனநிலை, பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்தையும் பலி தரத் தேவையில்லை. லௌகிகத்துக்காக நாம் எல்லாவற்றையும் ஒத்தி வைக்கிறோம். உடலும் மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றைப் பழக்குவதன் மூலம் மற்றொன்றை நாம் விரும்பியவாறு அமைத்துக் கொள்ள முடியும். 

எனக்கு ராணுவ கமாண்டோக்கள், விளையாட்டு வீரர்கள், மலையேறுபவர்கள், நடனக் கலைஞர்கள் ஆகியோர் உடலைப் பராமரிக்கும் விதம் குறித்து எப்போதுமே ஆச்சர்யம் உண்டு. கமாண்டோக்கள் 5 நிமிட பயிற்சி என ஒன்றைச் செய்வார்கள். அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ‘’டிரில்’’ என்ற கட்டளை வரும். ஒரு நிமிடத்துக்குள் 40 தண்டால் எடுப்பார்கள். அடுத்த ஒரு நிமிடத்துக்கு குட்டிக்கரணங்களைத் தொடர்ந்து அடிப்பார்கள். பின்னர் படுத்தவாறு பாதங்களை ஊன்றி முழுங்காலை உயர்த்தி தலையால் முழங்காலைத் தொடர்ச்சியாகத் தொடுவார்கள். பின்னர் ஒரு நிமிடம் வேகமான ஓட்டம். அடுத்து ஒரு நிமிடம் தொடர்ச்சியாகக் குதிப்பார்கள். அவர்களின் வழக்கமான பயிற்சியுடன் இதைப் போல சிலவற்றை அவ்வப்போது இணைப்பார்கள். ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் இதைப் போல 6 லிருந்து 10 முறை செய்வது போல் இருக்கும். எனக்கு இவ்வாறான பயிற்சிகள், இவ்வாறு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் ஆகியோர் மீது பெரும் மதிப்பு உண்டு. 

என்னுடைய மோட்டார்சைக்கிள் பயணத்தில் நான் ராணுவ அதிகாரிகளைச் சந்தித்ததுண்டு. அவர்கள் தனியே நாடெங்கும் பயணம் செய்யும் செயலை மனப்பூர்வமாகப் பாராட்டுவார்கள். எனக்கு மிகவும் கூச்சமாக இருக்கும். எனது கூச்சத்தை அவர்களிடம் வெளிப்படுத்துவேன். பல நாட்கள் தொடர்ச்சியாக மோட்டார்சைக்கிள் ஓட்ட உடல் மனம் தாண்டிய சில விஷயங்கள் தேவை. அவை உங்களிடம் இருப்பதால்தான் உங்கள் பயணம் சாத்தியம் என்பார்கள். பெரிய நிலப்பரப்பை, தினமும் புதிது புதிதான மனித முகங்களை, எண்ணற்ற பறவைகளை, ஏகாந்தமான நீர்ப்பரப்புகளைக் காண்பதால் ஏற்படும் பரவசமே என்னை இட்டுச் செல்கிறது என்பேன். இது எவருக்கும் சாத்தியம் என்று அவர்களிடம் பதில் சொல்வேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், நான் ஒருவரைச் சந்தித்தேன். அவரைச் சந்திப்பது அதுவே முதல் முறை. அவர் கட்டிடப் பொறியியல் படித்திருந்தார். இந்திய ஆட்சிப் பணி தேர்வுகளுக்கானத் தயாரிப்புகளை மேற்கொண்டிருந்தார். கல்லூரி முடித்த பின் மூன்று ஆண்டுகளாக தயாரிப்புகள் செய்து கொண்டிருந்தார். ஒரு மாலைப் பொழுது முழுவதும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். விடை பெறும் போது உங்கள் மனநிலைக்கு மன அமைப்புக்கு ஆட்சிப்பணியை விட வணிக மேலாண்மை உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்ற எனது அபிப்ராயத்தைச் சொன்னேன். அவர் ஆட்சிப்பணித் தேர்வுகளுக்கான தயாரிப்புகளை நிறுத்து விட்டார். சி. ஏ. டி தேர்வுகளுக்குத் தயார் செய்து ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் சேர்ந்து விட்டார். அவர் வீட்டில் அனைவருக்கும் ஆச்சர்யம்; எப்படி அவரது இந்த திறன் என் கண்ணுக்குத் தெரிந்தது என. என் மனதில் பட்டது அவ்வளவு தான். யாரிடமும் அபிப்ராயம் சொல்வதற்கு முன் இப்போதெல்லாம் ரொம்ப யோசித்துத்தான் சொல்கிறேன். 

அறிவுரை கூறுவதில் ஒரு சூட்சுமம் உள்ளது. யார் நாம் சொல்வதைக் கேட்பார்களோ அவர்களிடமே அறிவுரை சொல்ல வேண்டும். இந்த பின்னணியில் எனக்கு யோகா மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் எவ்வாறு எவ்விதமான உடற்பயிற்சியும் இல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள் என நினைத்துக் கொள்வேன். தன்னைப் பற்றி அறிந்தவர்களால் பிறரைப் பற்றியும் அறிய முடியும்.

இன்று காலை எனது நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் என் நண்பரின் சிறிய தந்தை. அதனால் நானும் அவரை சித்தப்பா என அழைப்பேன். அவர் வீட்டில் அனைவருமே என் நண்பர்கள். அவருக்கு  சமீபத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இப்போது உடல்நிலை சீராகி வீட்டில் இருக்கிறார். 

என்னைக் கண்டதும் மகிழ்ந்தார். 

‘’பிரபு! உயிர் பிழைத்தது பெரிய காரியமாயிடுச்சு.’’

‘’சித்தப்பா! ஏன் இப்படி சொல்றீங்க. உங்களுக்கு நெஞ்சு வலி வந்ததுண்ணு உங்களுக்குத் தெரியும். இப்ப உடம்பு சரியாயிடுச்சுன்னு தெரியும். அது தெரிஞ்சா போதும் உங்களுக்கு. இல்லாததெல்லாம் மனசுல நினைக்காதீங்க.’’

‘’வெயிட் எதுவும் தூக்கக் கூடாதுன்னு சொல்றாங்களே?’’

‘’ஆமாம் சித்தப்பா. சட்டென ஒரு வெயிட்டை தூக்குனீங்கன்னா ரத்த ஓட்டம் மாறுபடும். அதனால தூக்கக் கூடாது. நீங்க வெயிட் லிஃப்டிங் காம்படிஷன் போகப் போறீங்களா? வெயிட் தூக்கறது மேல ஏன் இவ்வளவு ஆர்வம்?’’

‘’பைக் ஓட்டக் கூடாதுன்னு சொல்றாங்களே?’’

‘’ரோட்ல மேடு பள்ளம் இருக்கும். அதனால’’

‘’இன்னொருத்தரை எதிர்பார்த்து இருக்கறாப் போல இருக்கு’’

‘’லௌகிக வாழ்க்கையில எல்லாருமே ஒருத்தர் இன்னொருத்தரை சார்ந்து தான் சித்தப்பா இருக்கோம்.’’

சித்தி வந்தார்கள். 

‘’எப்பவும் இதே புலம்பல் தான் பிரபு. சித்தப்பாவை ஃபிரீயா இருக்கச் சொல்லுங்க’’

‘’சித்தப்பா! பகல் பொழுதுல என்ன செய்யறீங்க?’’

‘’இந்த சோஃபால படுத்துக்கறன். டி.வி பார்த்துக் கிட்டு இருக்கன்.’’

‘’சதா சர்வ நேரமும் டி.வி தான்’’ சித்தியின் குரல் சமையலறையிலிருந்து வந்தது. 

‘’சித்தப்பா உங்களுக்கு நான் ஒரு யோகாசனம் சொல்லித் தரேன். அதைச் செய்ங்க’’

‘’பிராணாயாமமா?’’

‘’அதெல்லாம் இல்லை. ரொம்ப சிம்பிளான பயிற்சி.’’

அடுப்பங்கரையில் இருந்து ஒரு தடுக்கை எடுத்து வந்து போட்டு அதில் அமர்ந்தேன். 

‘’சித்தப்பா நாம தரையில ஒக்காந்து சாப்பிடுவோம்ல அந்த மாதிரி ஒக்காரணும். கைகளை மேல் முகமா வச்சுக்கங்க. உடம்பை டைட் பண்ண வேண்டாம். ரிலாக்ஸா ஒக்காருங்க. முதுகை வளைக்காதீங்க. நேரா வச்சுக்கங்க. முதுகுத் தண்டுல மட்டும் கவனம் இருக்கட்டும். வளைய வேண்டாம். குனிய வேண்டாம். நேரா வைங்க. கண்ணை மூட வேண்டிய அவசியம் இல்லை. இது தியானம் இல்லை. டி.வி மட்டும் பாக்க வேண்டாம். இப்படியே ஒக்காந்திருங்க. உங்களைச் சுத்தி இருக்கற எல்லா சத்தமும் கேட்கும். கேட்கட்டும். கவனம் ஸ்பைனல் மேல மட்டும்’’

நான் எழுந்து விட்டேன். தடுக்கை எடுத்த இடத்தில் கொண்டு போய் வைத்து விட்டு சோஃபாவில் அமர்ந்து கொண்டேன். பலரிடம் தினமும் நடைப்பயிற்சி செல்லுமாறு கூறியிருக்கிறேன். யோகா டெமோ செய்வது அனேகமாக முதல் முறை. தவழும் குழந்தை கூட சில நாட்களில் அமர்ந்து விடுகிறது. நான் சொல்லிக் கொடுத்தது ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் தெரிந்த ஒன்றைத் தானோ? உலகின் 700 கோடி மனிதர்களும் அறிந்த ஒன்றில் சித்தப்பாவுக்கு அறிமுகம் தர வேண்டுமா? என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. 

ஐந்து நிமிடம் ஆனது. சித்தப்பா தடுக்கை கொண்டு வந்து போட்டு அமர்ந்தார். எனக்கு பெரிய குதூகலமாகி விட்டது. நான் அளித்த பயிற்சி மீது அவருக்கு நம்பிக்கை வந்து விட்டது. 

தடுக்கின் மேல் உடலை இறுக்கி உட்கார்ந்தார். தோள்களில் இறுக்கம். கழுத்தில் இறுக்கம். கைகளையும் இழுத்துப் பிடித்தது போல வைத்திருந்தார். முதுகை வளைத்தார். 

நான் முதுகை நேராக்கினேன். அவரது இரு உள்ளங்கைகளையும் மேல் நோக்கி வைத்தேன். உடல் இறுக்கத்தை சற்று தளர்த்தினார். நான் மேலும் தளர்த்தச் சொன்னேன். சற்று லகுவாக அமர்ந்து விட்டார். சில நிமிடங்களுக்குப் பின் எழுந்தார். 

‘’சித்தப்பா! தண்டுவடம் தான் மூளையோட கட்டளையை உடம்பு முழுசுக்கும் கொண்டு போகுது. நீங்க அதுல கவனம் வச்சா அது ஸ்டாராங் ஆகும். தண்டுவடம் ஸ்டாராங்கா இருந்தா உடம்போட எல்லா சிக்கலும் தீர்ந்திடும்’’

‘’சும்மா ஒக்காரது தான் பயிற்சியா?’’ 

‘’சித்தப்பா! நாம ஒரு லட்சம் ரூபாய்னு நினைக்கறோம். ஆனா அது ஒரு விஷயம் கிடையாது. அதில ஒரு லட்சம் ஒரு ரூபாய் இருக்கு. இது அந்த மாதிரிதான். டெய்லி நீங்க இந்த பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமா செஞ்சா ஒரு ஒரு ரூபாயா சேத்து ஒரு லட்சம் ரூபாய் ஆக்கறாப்புல. படுத்துட்டு டி.வி பாத்துக்கிட்டு இருந்தா ஒரு லட்ச ரூபாயை ஒரு ரூபாய்க்கு கொண்டு வர்ராப் போல’’ 

சித்தப்பா ஒரு சந்தேகம் கேட்டார். 

‘’இந்த பயிற்சியை சாப்பிட்ட பிறகு செய்யலாமா?’’

நான் யோகா ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை எண்ணிப் பார்த்தேன். 

Friday 10 July 2020

சப்கோ சன்மதி தே பகவான்

நகரை ஒட்டியிருக்கும் ஒரு கிராமப் பகுதிக்கு இன்று மாலை சென்றிருந்தேன். அது நகரில் பல ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்ட மனைப்பிரிவு. அதனை ஒட்டி ஒரு வாய்க்கால் ஓடுகிறது. வாய்க்காலிலிருந்து கண்ணிகள் மனைப்பிரிவைத் தாண்டி இருக்கும் வயல்களுக்குச் செல்கிறது. கண்ணி பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் கிடக்கிறது. காவிரி வடிநிலம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக ( இந்த பகுதியில் குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளாக விவசாயம் நிகழ்ந்துள்ளதை நிலவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன) விவசாயம் நிகழ்ந்துள்ள பகுதி. காவிரி குடகு மலைகளில் பாறைகளை உருட்டிப் பிரட்டிக் கொண்டு சேர்க்கும் வளமான வண்டல் மண்ணால் உருவான பிரதேசம். முற்காலச் சோழர்கள், முத்தரையர்கள், பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் என பல்வேறு மன்னர்களால் பாசனக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு விவசாயம் செழித்த பிரதேசம் இது. பிரிட்டிஷார் கூட பல்வேறு பாசனத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியிருக்கிறார்கள். இந்த பிரதேசத்தின் விவசாயத்தின் உபரியே பேராலயங்களாகவும் தேவார இலக்கியமாகவும் அற்புதமான சிற்பங்களாகவும் இசையாகவும் உருமாறியுள்ளது. உலகப் பண்பாட்டுக்கு ஒரு சாரமான பகுதியை பங்களிப்பாய் வழங்கிய பிரதேசம் இது. எந்தரோ மகானு பாவுலு என்கிறார் தியாகராஜர். எத்தனை மாமனிதர்கள்! கண்ணகி, மணிமேகலை, திருஞான சம்பந்தர், காரைக்கால் அம்மையார், பரஞ்சோதி முனிவர், ராஜராஜன், குந்தவை நாச்சியார், ராஜேந்திரன், கம்பன், தியாகராஜர், முத்துச்சாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், அபிராமி பட்டர், உ.வே.சாமிநாத ஐயர், மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ... இன்னும் எத்தனை எத்தனை பேர். 

தமிழ்நாட்டிலேயே எத்தனையோ பகுதிகள் வானம் பார்த்த பூமிகள். வட கிழக்குப் பருவ மழைக்காக ஆண்டு முழுதும் ஏங்கிக் கிடப்பவை. தங்கள் ஆற்றல் முழுவதையும் திரட்டி வறட்சி தாங்கி வளரும் சோளத்தை விதைத்து உலர்ந்த தோகைகளுக்குள் உயிர்த்திரட்டிக் கொள்ளும் சோளக்கதிரை அறுவடை செய்வதற்காகக் காத்திருக்கும் பெரும் ஜனத்திரள் தமிழ்நாட்டிலேயே வாழ்கிறார்கள். 

காவிரி உற்பத்தியாகும் பகுதிகளில் ஒவ்வொரு ஊரிலும் கால்வாய்கள் வழியாக ஆற்று நீரை குளங்களில் தேக்கி விட முடியாது. அவை பாறைப் பகுதிகள். மலையை ஒட்டியிருப்பதால் ஊர் உயரத்தில் இருக்கும். ஊரின் தாழ்வான பகுதிகளை இணைத்தவாறு நதி பாய்ந்து வெளியேறி விடும். அண்டை ஊர்களுக்குக் கால்வாய் அமைப்பது என்பது பெரும் செலவேறிய பணி. காவிரி வடிநிலம் மேட்டிலிருந்து மெல்ல மெல்ல அளந்து வைக்கப்பட்டாற் போல தாழ்வான இடத்துக்கு வந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் நீளத்தை ஆறுகளாகவும், கிளை ஆறுகளாகவும், வாய்க்கால்களாகவும் பிரிந்து பாசன வசதி தந்து கடலில் சென்று கலப்பது. பாய்ச்சல் காலாகவும் வடிகாலாகவும் ஒரே கால்வாயே செயல்படும் என்பது ஒரு பொறியியல் அற்புதம்.  அமெரிக்காவின் மிசிசிபி - மிசௌரி படுகையுடன் ஒப்பிடக் கூடியது காவிரி வடிநிலம். 

நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவது போல காவிரி கைவிடப்பட்டுள்ளது. மேட்டூரில் தண்ணீர் திறந்து நான்கு வாரங்கள் ஆகி விட்டது. இன்னும் கடைமடைக்கு நீர் சென்று சேரவில்லை. மேட்டூரில் தண்ணீர் திறந்து ஒரே வாரத்தில் கடைமடைக்கு நீர் சென்று சேர வேண்டும். இது இயற்பியல் அடிப்படையிலானது. கால்வாய்களும் கண்ணிகளும் ஆக்கிரமிப்புகள் இன்றி முறையாகப் பராமரிக்கப்பட்டு இருக்குமானால் மேட்டூரில் தண்ணீர் திறந்து ஒரே வாரத்தில் கடைமடையில் நீர் பாயும். எந்த குளத்திலும் காவிரி நிரம்பவில்லை. இன்னும் ஜே.சி.பி எந்திரங்கள் கிளை ஆறுகளில் வேலை செய்து கொண்டிருக்கின்றன. 

நலம் நிறைய பிராத்தனை செய்து கொள்வது ஒரு நல்ல வழி. 

சப்கோ சன்மதி தே பகவான் என்பது மகாத்மாவின் பிராத்தனை.

மேலான அற்புதம்

சாம் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறான். தினந்தோறும் புதிது புதிதாக எதையேனும் அறிந்த வண்ணமும் உணர்ந்த வண்ணமும் இருக்கிறான். நிலம் என்பது அவனுக்குத் தோண்டப்பட வேண்டியது. மணற்கேணி என நிலம் அவனுக்கு அறிவின் ஊற்றாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. முன்னங்கால்களால் அவசர அவசரமாக எப்போதும் தோண்டியவாறிருக்கிறான். பின்னர் அந்த பள்ளத்தில் படுத்துக் கொள்வது. ஒற்றைச் செருப்பைக் கொண்டு போய் அதில் இட்டு நிரப்புவது. பழைய வாட்டர் பாட்டிலைக் கவ்வி கவ்வி இங்கும் அங்கும் கொண்டு போய் போடுவது. ஏதாவது வேலை இருந்து கொண்டேயிருக்கிறது அவனுக்கு. அவனது உற்சாகம் காணும் அனைவரையும் தொற்றக் கூடியது. இப்போது அவனது உலகில் குதூகலம் மட்டுமே இருக்கிறது. 

அவன் உணவு உண்ணும் வேகம் ஆச்சர்யம் தருகிறது. படர்ந்து மேலெழும் தீயென வளர்ச்சி கொள்கிறான். பால், சோறுணவு, பிஸ்கட் எதைக் கொடுத்தாலும் அள்ளி விழுங்குகிறான். தண்ணீர் குடிக்கும் அழகே அழகு. பசியையும் தாகத்தையும் வென்று கடந்து இப்புவியின் சாரங்கள் என்ன எனத் தேடுபவனாக மாறிக் கொண்டிருக்கிறான் சாம். 

நாய்களின் உலகம் அற்புதமானது. குட்டி நாய்களின் உலகம் மேலும் அற்புதமானது. இந்த உலகை மேலும் அற்புதமாக்கிக் கொண்டிருக்கிறான் சாம்.

Thursday 9 July 2020

நண்பா
உன்னிடம் வரும் போது
அல்லது
உன்னிடம் மீண்டும் வரும் போது
அல்லது
மீண்டு உன்னிடம் வரும் போது
சொற்களை விட 
ஆறுதலை விட
உனது அருகாமை
நம்பிக்கையளிக்கிறது நண்பா
ஏன் நம் அன்பின் வெள்ளத்தில் எப்போதாவது ஐயத்தின் நுரைகள் மிதந்தன
ஏன் நம் அன்பின் ஒரு சிறு பகுதியை வெளிப்படுத்த வேண்டாம் என முடிவு செய்தோம்
ஏன் நம் சொற்களில் சிறு அளவினேனும் வெளியேற்றத்துக்கான ஒரு பாதையை வைத்திருந்தோம்
ஏன் நாம் அவ்வப்போது சிறு - மிகச் சிறு அளவில் பரஸ்பரம் கைவிட்டோம்
ஏன் நாம் நம்மை முழுமையாக நம்பாமல் போனோம்
இவற்றால் நாம் வருந்தியதை ஏன் எப்போதும் வெளிப்படுத்தாமல் இருந்தோம்
நீ நம்பிக்கை அளித்திருக்கிறாய்
நீ எனக்காக கண்ணீர் சிந்தியிருக்கிறாய்
நாம் பரஸ்பரம் ஏன் நம் நேசத்தை நேசமாக எண்ண மறுத்தோம்

கிழக்கும் மேற்கும்

நாம் ஐரோப்பாவைக் குறித்து நன்மதிப்பு வைத்துள்ளோம். அவர்களுடைய தொழில்நுட்பம், எந்திரங்கள், மருத்துவம், சமூக நியதிகள், திட்டமிடல் ஆகியவை குறித்து நாம் வியக்கிறோம். உண்மையில் உலகமே வியக்கும் வண்ணம் அவர்கள் செயல்பாடுகள் இருந்ததா அல்லது இருக்கிறதா என்பதை பரிசீலித்துப் பார்ப்போம்.

நமது பாடப்புத்தகங்கள் நிரூபணவாத அறிவியலைப் போதிக்கின்றன. அறிவியல் என்ற அறிவுத்துறையில் அது ஒரு சிறு பகுதியே. குவாண்டம் இயற்பியல் நியூட்டன் இயற்பியல் அடிப்படைகளின் ஒரு பகுதியை மறுத்த வண்ணமே முன்னால் செல்கிறது. அறிவியல் என்பது தொடர் விவாதம். அதில் உலகின் எல்லா நாடுகளும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளன. நாடுகள் உருவாவதற்கு முன்னர் சமூகங்கள் உருவாவதற்கு முன்னர் ஆதி மனிதர்கள் காலத்தில் வரையப்பட்ட குகை ஓவியங்களில் வானியல் குறித்த வியப்பூட்டும் பல பதிவுகள் உள்ளன. உலகில் கீழை நாடுகளில் பலவிதமான எந்திரங்கள் புழக்கத்தில் இருந்தன. பிரிட்டிஷ் இந்தியா வந்ததற்கு பல காலம் பின்னரும் இன்று கூட சாத்தியப்படுத்த முடியாத நெசவு எந்திரங்களும் நெசவுத் தொழில்நுட்பமும் இந்தியாவில் இருந்தது.

உலகின் தொன்மையான மருத்துவ முறைகள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவை. மருத்துவ சேவையை ஆன்மீகத்தின் ஒரு பகுதியாக எண்ணும் மனப்பான்மை கொண்டவை இந்திய சமயங்கள். சமணமும் பௌத்தமும் நோய் அகற்றுதலை தங்கள் துறவிகளின் கடமைகளில் ஒன்றாகவே வலியுறுத்தின. இந்தியர்களின் வாழ்க்கைமுறையை உருவாக்கியதில் ஆயுர்வேத மருத்துவம் முக்கிய பங்கு வகித்தது. இன்றும் சாமானிய இந்தியர்களின் உணவுப்பழக்கத்தில் ஆயுர்வேதம் உடல்நலன் குறித்து பரிந்துரைக்கும் உணவுப்பொருட்கள் இருக்கின்றன.

இந்தியாவின் பாரம்பர்யமான அறிவை அடுத்த தலைமுறைகளுக்குச் செல்லாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கம் அரசியல் காரணங்களுக்காக பிரிட்டிஷ் ஆட்சிக்கு இருந்திருக்கிறது. அதை பல பிரிட்டிஷ் ஆவணங்கள் எடுத்துரைக்கின்றன. அவர்கள் உருவாக்கிய பாடத்திட்டம் பல வகைகளிலும் நமது தேசம் குறித்து எதிர்மறையான சித்திரத்தை உருவாக்கியவாறே இருந்தது. ஐரோப்பாவைப் போல சொந்த மக்களையும் உலகையும் சுரண்டிய இன்னொரு கண்டம் இல்லை. ஐரோப்பிய அரசுகள் தங்கள் சொந்த பிரஜைகளின் உழைப்பை ஈவிரக்கமில்லாமல் சுரண்டினார்கள். அதற்கு மதத்தையும் மதத் தலைமையையும் பயன்படுத்தினார்கள். அவர்களுடைய வரலாற்றின் முக்கியமான பகுதியே அந்த சுரண்டலுக்கு எதிராக நிகழ்ந்த மக்கள் எழுச்சிகளே.

ஐரோப்பாவால் ஆசிய நாடுகள் மிக மோசமான சுரண்டலுக்கும் பொருளாதார ஒடுக்குமுறைக்கும் ஆளாயின. இருபதாம் நூற்றாண்டில் அவை அரசியல் விடுதலை பெற்ற பின்னரும் ஐரோப்பியர்கள் விட்டுச் சென்ற அரசமைப்பு முறைகளே இருந்தன. முற்றிலும் மாற்றியமைக்க முடியாத அவை நிர்வாகத்தை அந்த நாடுகளில் இன்று வரை மேலும் சிக்கலாக்குகின்றன.

மானுட வரலாறு என்பது மிக நீண்டது. நாம் முற்றும் அறிய முடியாத ஒரு பெரும் பயணம் அது. இந்தியா பல்லாயிரம் ஆண்டுகளாக மானுட ஞானத்துக்கு சாரமான பல பகுதிகளை வழங்கியுள்ளது. இந்திய மண்ணில் வாழ்பவர்கள் உணர வேண்டிய உண்மை அது. 

Wednesday 8 July 2020

காவிரி போற்றுதும்


அன்னம் பஹு குர்வித:
-தைத்ரீய உபநிஷத்

இன்றும் காவிரி வடிநில மாவட்டங்களின் (காவிரி டெல்டா) முக்கியமான தொழில் விவசாயமே. லட்சக்கணக்கான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். இங்கு நிகழும் அனைத்து வணிகங்களுக்குமான நுகர்வோர் விவசாயிகளே. அதாவது அவர்களின் வருவாயையும் உபரி வருவாயையும் கொண்டே எல்லா வணிகங்களும் லாபமீட்டுகின்றன. இங்கே விவசாயம் லாபமான தொழிலாக இருக்கிறதா என்ற கேள்விக்கு ‘’அப்படி கூறி விட முடியாது’’ என்பதே பதிலாக இருக்கிறது. எனக்கு எந்த பகுதியின் சமூகவியல் பொருளியல் செயல்பாடுகள் மீதும் ஆர்வமும் கவனமும் உண்டு. எல்லா பண்பாடுகளின் மீதும் ஆர்வம் உண்டு. சமூக மாற்றத்துக்கான செயல்களைப் புரிய வேண்டும் என்ற விருப்பமும் காந்திய வழிமுறைகளின் மீது நம்பிக்கையும் உண்டு.

நான் எப்போதுமே ஏதேனும் ஆக்கபூர்வமான சமூகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவேன். என்னால் இயன்ற சிறு பணிகளை அவ்வப்போது செய்வேன்.

சமீபத்தில் நண்பர்கள் சிலர், ஒரு குழுவாக இணைந்து சில சமூகச் செயல்பாடுகளை முன்னெடுக்க விரும்பினர். அதற்கு எனது ஆலோசனைகளைக் கேட்டனர். அவர்களில் சிலர் பொறியாளர்கள். சிலர் வணிகர்கள். சிலர் விவசாயிகள். அக்குழுவுக்குள் ஒருங்கிணைப்பு இருந்தது. நான் என் யோசனைகளை முன்வைத்தேன். அவர்கள் செயல்களில் துணை புரிந்தேன். எங்கள் குழுவுக்கு ’’காவிரி போற்றுதும்’’ என்று பெயரிட்டோம்.

சிலப்பதிகாரம், ‘’திங்களைப் போற்றுதும்’’ என்று துவங்குகிறது. இளங்கோ அடிகள் நிலவைப் பெண்மைக்கான – நீதி உணர்வுக்கான – குறியீடாக ஆக்கி அதனை குடிமக்கள் காப்பியத்தின் முதல் சொல்லாக்கினார். அதிலிருந்து ‘’போற்றுதும்’’ என்ற சொல்லையும் காவிரியையும் இணைத்து ’’காவிரி போற்றுதும்’’ என்று பெயரிட்டோம்.

எங்கள் ஊரைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் இருக்கும் கல்வி பயிலும் இளைஞர்களைச் சந்தித்து அவர்களிடம் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வை உருவாக்குவதும் அவர்களை அவர்கள் கிராமத்தில் அவர்கள் செய்யக்கூடிய செயல்பாடுகளைச் செய்வதற்கான ஊக்கத்தை அளிப்பதும் அவர்கள் செயல்களுக்கு அவர்களுக்கு கிராமத்திற்கு வெளியிலிருந்து ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதனை ஏற்பாடு செய்து கொடுப்பதும் எங்கள் பணிகள் என வரையறுத்துக் கொண்டோம்.

பொதுவாக சமூகப் பணிகள் ஆற்றுவதில் திட்டமிடலும் திட்டமிடலுக்குப் பின் படிப்படியாக செயல்களில் முன்னேறிச் செல்வதும் அவசியமானது. சமூகப் பணி சமூகம் பற்றி நாம் மேலும் புரிந்து கொள்வதற்கான இன்னொரு வாய்ப்பே. நாம் எண்ணுவது எண்ணியவாறே நடக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது; ஆனால் எண்ணியதை எண்ணியவாறு நிறைவேற்றுவதற்குத் தேவையான உழைப்பையும் நேரத்தையும் கொடுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சரியான பாதையில், மிக மெதுவாக முன்னகர்ந்தால் கூட  எண்ணியதை எய்தி விடலாம்.

அருகாமையில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றேன். இளைஞர்கள் ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் உரையாடினேன். எங்கள் நோக்கங்களைச் சொன்னேன். அவர்கள் ஆர்வமாயிருப்பதை அறிந்து கொண்டேன். அவர்களிடம் ஒரு விஷயத்தை முன்வைத்தேன்.

நமது மண் பலவகையான தாவர வகைகள் வளரும் இயல்பு கொண்டது. மண்ணில் வேரூன்றி விண் நோக்கி வளர்ந்தவாறிருக்கும் விருட்சத்தை தெய்வ வடிவமாகவே வழிபடும் மரபு நம்முடையது. இன்றும் நம் கிராமங்களில் ஆலமரமும் அரசமரமும் இருக்கிறது. அவை உயிர் ஆலயங்கள். ஒவ்வொன்றும் ஐம்பது வருடம், அறுபது வருடம் ஆனவை. இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் நடப்பட்டவை. நம் தலைமுறையில், கிராமத்தில் ஒரு சிலரேனும் ஆல், அரசு, வில்வம், கொன்றை, வன்னி ஆகிய மரங்களை பொது இடங்களில் நட்டு பராமரிக்க வேண்டும். ஒருபுறம், சிவனை நாம் கொன்றை மலர் சூடியவன் என வணங்குகிறோம். நமது மொழி இலக்கியங்கள் இறைமையை இயற்கையின் இனிய தன்மை கொண்டதாக முன்வைக்கின்றன. அந்த மரபின் தொடர்ச்சியாக நம்மை உணர கிராமங்களில் விருட்சங்கள் பொது இடங்களில் நடப்பட வேண்டும். மரத்தின் நிழலில் அமரும் மனிதன் வாழ்வின் மீது நம்பிக்கை கொள்கிறான். பட்சிகள் சிலம்பும் ஒலி வாழ்வை இனிமையாக்குகிறது. பட்சிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயத்துக்கு உதவுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்திருக்கும் மரபின் வாரிசுகளான நாம் நமது பங்களிப்பை ஆற்ற வேண்டும். இந்த விஷயங்களை அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதனை ஏற்றனர். எந்த நல்ல விஷயத்தையும் சமூகம் வரவேற்கிறது என்பது ஓர் உண்மை.

இந்த விஷயம் உண்மையில் நூதனமானது. மண்ணிலும் நீரிலும் நாள் முழுதும் நிறைந்து பொழுதெல்லாம் விவசாயம் செய்பவர்கள் விவசாயிகள். அவர்களுக்கு மரம் நடுவதைப் பற்றி நகரத்திலிருந்து சென்ற ஒருவர் எடுத்துக் கூறுவது என்பதில் உள்ள முரண் அந்த விஷயத்தைப் பற்றி மேலும் யோசிக்கச் செய்தது. அதற்கான காரணத்தைக் கண்டடைந்தேன். இப்பகுதியின் விவசாயிகள் நெற்பயிர் வேளாண்மைக்குப் பழகியவர்கள். பெரும்பாலானோர் இரண்டு போகம் பயிரிடுகிறார்கள். இப்போதெல்லாம் மூன்று போகம் என்பது அபூர்வம். உழவு, நாற்றங்கால் உருவாக்குதல், நடவு, களையெடுத்தல், நீர் பாய்ச்சுதல் மற்றும் அறுவடை என நூறு நாட்கள் ஒரு போகத்துக்கு வேலை இருக்கும். இன்னும் சரியாகச் சொன்னால், நூறு நாட்களில் முதல் முப்பது நாட்களுக்கு முழு நேரமாகவும் பின்னர் குறைவான நேரமும் அளிப்பதாக இருக்கும். வருடத்தின் 365 நாட்களில் கணிசமான நாட்கள் வேலையில்லாமல் இருக்கும். உளுந்து பயிர் நெல் அறுவடையை ஒட்டி விதைத்து விட்டு பெரிய பராமரிப்புகள் ஏதும் இன்றி அறுவடை செய்யக் கூடியது. நெல், உளுந்து என்பதே இப்பிராந்தியத்திய விவசாயத்தின் பொது மனநிலை. அறுவடை முடிந்த பின்னர், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்து விட்டு அடுத்த போகத்துக்கான பணியைத் துவங்கும் வரை எந்த விதமான பணியிலும் ஈடுபடாமல் இருப்பது என்பதே அவர்களின் வழமையாகி விட்டது.

கிராமத்தின் மக்கள்தொகையில் மிகப் பெரும் பகுதி விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களுமே. அவர்கள் ஈட்டும் வருமானத்தை நகர்ப்பகுதிகளில் உள்ள வணிக அங்காடியில் செலவு செய்து விடுகின்றனர். நகர்ப்பகுதியிலிருந்து கிராமத்துக்கு வரும் செல்வம் என்பது ஒப்பீட்டளவில் மிகக் குறைவே. கொங்கு மண்டலம் மஞ்சள் பயிரிடுவதன் மூலம் –பருத்தி பயிரிடுவதன் மூலம் – பணப்பயிர்கள் பயிரிடுவதன் மூலம் தன்னை வலுவான விவசாயப் பகுதியாக மாற்றிக் கொண்டுள்ளது.

கிராமங்களிலேயே இந்தியாவின் ஆன்மா உறைந்துள்ளது என்றார் மகாத்மா காந்தி. இந்திய நிலத்தில் பயணித்த ஒரு மோட்டார்சைக்கிள் பயணியாக நான் அதனை உணர்ந்திருக்கிறேன். இந்தியா மாற்றம் பெற வேண்டும் எனில் அம்மாற்றத்துக்கான பணி இந்திய கிராமங்களிலேயே நிகழ வேண்டும். ஒரு இந்திய கிராமத்தில் செயலாக்கப்படும் அல்லது நிகழ்த்தப்படும் அல்லது செய்யப்படும் சோதனை எல்லா இந்திய கிராமங்களுக்கும் பொருந்தும் என்பது ஒரு நடைமுறை உண்மை.

’’காவிரி போற்றுதும்’’ நண்பர்கள் கூடி எவ்விதமான பணிகளை முன்னெடுக்கலாம் என்று சிந்தித்தோம். விவாதித்தோம். அவற்றின் விளைவாக சில செயல்களை முன்னெடுக்க முடிவு செய்தோம். நண்பர்களில் சிலர் பொறியாளர்கள். சிலர் வணிகர்கள். சிலர் விவசாயிகள். இணைந்து செயல்படுவதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொண்டோம். எவ்விதமான சமூகப் பணியும் ஒருங்கிணைப்பைக் கோரும் என்பது ஒரு முக்கியமான புரிதல். பல விதமான பணிகள் இருக்கின்றன. நாம் எவ்விதமான பணிகளை மேற்கொள்ள உள்ளோம்; அதற்கு எவ்விதமான வேலை முறை உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்து கொள்வது அவசியம் என்பதை நண்பர்களுக்கு விளக்கினேன்.

காந்திய வழிமுறைகளில் ஒன்றான ‘’நுண் செயல்பாடு’’ என்பதை எங்களுக்கான வழிமுறையாக ஏற்றோம். நுண் செயல்பாடு அளவில் சிறியது. எனினும் பெருவலு கொண்டது. செயல்பாட்டாளர்களினுள்ளும் விரிவான புரிதலையும் ஆழமான ஈடுபாட்டையும் உருவாக்கக் கூடியது. ’’உருள் பெருந்தேரின் அச்சாணி’’ போன்றது.

கிராமங்களில் உள்ள பொது இடங்களில் மரக்கன்றுகள் நடுவது என்பதை எங்கள் செயல்பாடாகத் தேர்ந்தெடுத்தோம். ஒரு கிராமத்தில் 6 லிருந்து 7 தெருக்கள் இருக்கும். அதிகபட்சம் 250 மரக்கன்றுகள் வரை நட முடியும். ஆடு மாடுகள் மேயாமல் இருக்க அவற்றுக்கு நாமே வேலி அமைத்துக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். செய்யக்கூடிய எளிய பணியைத் தான் திட்டமிட்டிருந்தோம் என்றாலும் எனது மனம் முழு நிறைவடையவில்லை. நான் அது குறித்து எப்போதும் யோசித்தவண்ணம் இருந்தேன். விவசாயிகள் தங்கள் ஆயுள் முழுவதும் பயிரை வளர்ப்பதில் ஈடுபட்டிருப்பவர்கள்; மரம் செடி கொடிகளுக்கு மத்தியிலேயே எப்போதும் இருப்பவர்கள்; எங்கள் சிறிய குழுவுக்கு இது திருப்தியளிக்கும் பணி என்றாலும் மேலும் பெரிய அளவில் அந்த கிராமத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உறுதியாக இருந்தது. அப்போது என் மனத்தில் புதிதாக ஓர் எண்ணம் உதித்தது. எங்கள் குழுவின் நோக்கம் மரம் வளர்ப்பது; அது பொது இடத்தில் இருந்தால் என்ன அல்லது விவசாயிகளின் வீட்டுத் தோட்டத்தில் இருந்தால் என்ன என்று யோசித்தேன். பயன் தரக்கூடிய மரக்கன்றுகளை விவசாயிகளிடம் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டுக் கொள்ளுமாறு வழங்கி விடலாம்; மரத்தை ஆர்வத்துடன் அவர்கள் பராமரிப்பார்கள். நம்மாலும் ஒரு கிராமத்துக்கு பெரிய எண்ணிக்கையில் மரக்கன்றுகளை வழங்க முடியும் என எண்ணினேன். விவசாயியான எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து அவர் வீட்டுத் தோட்டத்தின் பரப்பளவு என்ன என்று கேட்டேன். 10,000 சதுர அடி என்றார். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் எத்தனை மரங்கள் உள்ளன என்று கேட்டேன். நான்கு வாழைமரங்கள் உள்ளன என்றார். அவர் தோட்டத்தின் பரப்பளவுக்கு கிட்டத்தட்ட நூறு மரங்கள் நட்டு வளர்க்க முடியும். மழைக்காலத்தில் நட்டால் பருவமழை பொழியும் நான்கு மாதங்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் கூட இருக்காது. தானாக வளர்ந்து விடும். அதன் பின் கோடையில் கூட தன் பாட்டை தான் பார்த்துக் கொள்ளும். கிராமத்தில் மற்ற வீடுகளில் அதிக அளவில் மரம் நட்டிருப்பார்களா என்று கேட்டேன். ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் இப்படித்தான் என்றார். ஒரு கிராமத்தில் 400 வீடுகள் இருக்கும் எனில் ஒரு வீட்டுக்கு 10 மரக்கன்றுகள் வழங்கினால் மொத்தம் 4000 மரக்கன்றுகளை அக்கிராமத்துக்கு வழங்க முடியும் என்பது எங்களுக்கு பேரார்வம் அளித்தது. 250 என்ற சிறிய எண்ணிக்கையிலிருந்து 4250 என்ற சற்றே பெரிய எண்ணிக்கைக்கு எங்கள் திட்டமிடல் சென்றது எங்களுக்கு உற்சாகம் தந்தது. என் மனம் மட்டும் இன்னும் ஏதோ இருக்கிறது என்பதைக் கூறியவாறு இருந்தது. நான் யோசித்துக் கொண்டேயிருந்தேன். ஒரு வருவாய் கிராமத்தின் பரப்பளவு சராசரியாக 1000 ஏக்கர். அதில் விளைநிலம் 500 ஏக்கர் இருக்கும். அதன் வரப்புகளில் அடர்ந்து வளராது உயரமாக வளரும் மரக்கன்றுகளை குறைந்தபட்சம் ஏக்கருக்கு 40 என்ற எண்ணிக்கையில் நட முடியும். இருவருக்கு பொதுவாக இருக்கும் வரப்பில் நடத் தேவையில்லை; ஒருவரின் சொந்த நிலத்தின் உள்வரப்பில் நட்டுக் கொண்டாலே போதும்; 500 ஏக்கர் நிலத்தின் வரப்புகளில் 20,000 மரக்கன்றுகளை நட முடியும். எங்கள் எண்ணிக்கை 24,250 க்குச் சென்றது. மியாவாக்கி என்ற ஜப்பானிய முறை ஒன்று உள்ளது. அரை ஏக்கர் பரப்பளவில் இரண்டடிக்கு இரண்டடி என்ற இடைவெளியில் அடர்த்தியாக பல்வேறு மரங்களை நட்டு பராமரிக்கும் முறை அது. அரை ஏக்கர் பரப்பளவில் 5000 மரக்கன்றுகள் நட முடியும். அதனையும் சேர்த்த போது மொத்த எண்ணிக்கை 29,250 ஆனது. 250லிருந்து 29,250. கிட்டத்தட்ட நூறு மடங்கு. நண்பர்கள் உற்சாகமானார்கள். இந்த எண்ணிக்கையை ஒரு கிராமத்தில் செயல்படுத்துவோம் என்றார்கள். நான் செயலாக்கத்துக்கான வழிமுறைகளை யோசிக்கலானேன்.

நாங்கள் விவாதித்து உருவாகிய வழிமுறைகள்:

1. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களிடம் விஷயத்தை எடுத்துரைக்க வேண்டும்.

2. அவர்கள் கேட்கும் மரக்கன்றுகளை வழங்க வேண்டும். அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் அளிக்க வேண்டும்.

3. ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்படும் எல்லா மரக்கன்றுகளும் நடப்பட வேண்டும்.

4. சொந்தமாக தரப்படும் மரக்கன்றுகளையும் பொது இடங்களில் நடப்படும் மரக்கன்றுகளையும் நல்ல முறையில் பராமரிப்போம் என்ற சொல்லுறுதியை கிராமத்தினர் அனைவரிடமும் பெற வேண்டும்.

5. அவர்கள் கேட்ட மரக்கன்றுகளை அவர்கள் வீட்டுக்கே கொண்டு சென்று வழங்க வேண்டும்.

6. மரம் வளர்ப்பதில் அவர்களுக்கு வல்லுனர்களின் ஆலோசனை தேவைப்பட்டால் அதை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

7. நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகள், பள்ளி, கோவில் என வாய்ப்புள்ள அத்தனை இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். எந்த விடுபடலும் இருக்கக் கூடாது.

கள ஆய்வு

வேளாண்மையில் ஆர்வம் உடைய விவசாயிகள் சிலர் எனது நண்பர்கள். அவர்களிடம் இது குறித்து விவாதித்தேன். அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். கிராமத்தில் ஒவ்வொரு குடும்பமாகச் சென்று கணக்கெடுக்கும் பணியை நான் மேற்கொண்டேன். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்கள் குழு குறித்து சொல்லி மரக்கன்றுகள் நடுதலை ஒரு சமூகச் செயல்பாடாக மேற்கொள்கிறோம்; உங்களுக்குத் தேவையான எத்தனை மரக்கன்றுகள் வேண்டுமானாலும் வழங்குகிறோம்; இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு எங்கள் நோக்கம் சிறப்பாக நிறைவேற உதவுங்கள் என்று கேட்டு அவர்கள் கூறிய மரக்கன்றுகளையும் எண்ணிக்கையையும் குறித்துக் கொண்டேன். கிராம மக்கள் பேரார்வத்துடன் பெரும் வரவேற்பு அளித்தனர். சிலர் சில ஐயங்களை எழுப்பினர். அவர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு நான் அளித்த விளக்கங்களும்:

1. நீங்கள் யார்? உங்கள் தொழில் என்ன? உங்கள் நண்பர்கள் யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
எனது பெயர் பிரபு. மயிலாடுதுறையில் வசிக்கிறேன். எனது தொழில் கட்டிட கட்டுமானம். எனது நண்பர்களும் மயிலாடுதுறையில் வசிக்கிறார்கள். சிலர் பொறியாளர்கள். சிலர் வணிகர்கள். சிலர் விவசாயிகள்.

2. நீங்கள் ஏன் எங்களுக்கு மரக்கன்றுகள் வழங்க வேண்டும்?
மரம் வளர்த்தலை ஒரு சமூகச் செயல்பாடாகவும் பண்பாட்டுச் செயல்பாடாகவும் நாங்கள் காண்கிறோம். உங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி அம்மரங்கள் வளர்வதால் நிகழும் நன்மைகளுக்காக நாங்கள் இதனைச் செய்கிறோம்.

3. இதனால் உங்களுக்கு என்ன லாபம்?
இதனால் சமூகம் பயன் பெறும். அதுவே எங்கள் நோக்கம். எங்களுக்குத் தனிப்பட்ட லாபம் ஏதும் இதில் இல்லை.

4. மரக்கன்றுகள் தரும் போது பணம் கேட்பீர்களா?
எங்களுக்கு நீங்கள் எந்த பணமும் தர வேண்டாம். வழங்கப்படும் மரக்கன்றுகளை நல்லவிதமாகப் பராமரித்து வளர்த்துக் கொண்டாலே போதும்.

5. மரக்கன்றுகள் வளர்ந்து பயன் தரும் போது உரிமை கோருவீர்களா?
எப்போதும் எந்த விதமான உரிமையும் கோர மாட்டோம். எங்களுக்கு சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் உதவும் விதத்தில் மரக்கன்றுகளை அதிக அளவில் நட ஆசை. பொது இடத்தில் இருப்பதை விட தேவைப்படும் விவசாயிகளின் தோட்டத்திலோ அல்லது வயலிலோ இருந்தால் சிறப்பான பராமரிப்பு அவற்றுக்குக் கிடைக்கும் என்பதால் இவ்வாறு செயல்படுகிறோம். உங்களுக்கும் பலன் ; சமூகத்துக்கும் பலன். இதுவே எங்கள் நோக்கம். மரக்கன்றுக்கு சாலையில் வளர்கிறோமோ அல்லது தோட்டத்தில் வளர்கிறோமோ என்ற பேதம் இல்லை. சாலையில் இருப்பதை விட தனிப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அது பயன்படும் எனில் எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியே.

கள ஆய்வின் போது நாங்கள் விவசாயிகளின் பரிசீலனைக்கு முன்வைத்த சில யோசனைகள்:

1. ஒரு கிராமத்தில் 400 வீடுகள் இருக்கிறது என எடுத்துக் கொள்வோம். இப்போது 10லிருந்து 15 வீடுகளில் எலுமிச்சை மரம் இருக்கக் கூடும். அதில் உருவாகும் பழங்கள் கிராமத்துக்குள் அவர்கள் அண்டை வீட்டாருக்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் உறவினர்களுக்குள்ளும் பகிரப்படும். 400 வீட்டிலும் ஒரு எலுமிச்சை மரம் இருக்குமாயின் அவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கு சீசனில் 300 பழங்கள் காய்க்குமெனில் அக்கிராமத்தில் 1,20,000 பழங்கள் உற்பத்தியாகும். அக்கிராமத்திலேயே இருக்கும் ஒருவர் அருகில் இருக்கும் பெரிய சந்தை ஒன்றில் விற்பனை செய்ய முடியும். ஆநிரைகளுக்கு தீவனமாகும் மர வகைகள் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்படும் போது அதன் உற்பத்தி ஊரின் பசுந்தீவனத் தேவையில் பெருமளவை பூர்த்தி செய்யும். மலர் மரங்கள் மூலம் சேகரமாகும் மலர்களை ஆலயங்களில் மாலைகளாக விற்பனை செய்ய முடியும்.
2. ஒரு ஏக்கர் நிலம் உள்ள ஒருவர் தன் உள் வரப்பில் 40 தேக்கு மரக்கன்றுகள் நடுவாரெனில் 15 ஆண்டுகளில் அவர் அதன் மூலம் ரூ.20,00,000 வருமானம் பெறுவார். இது அவர் அந்த ஒரு ஏக்கர் பரப்பில் 15 ஆண்டுகளாக இரண்டு போகம் நெல் பயிரிட்டு அடையும் வருமானத்தை விட அதிகம்.

3. இவற்றை எல்லா விவசாயிகளும் பலமுறை சிந்தித்திருப்பார்கள். பெரிய லாபம் இல்லாத ஒரு விஷயத்தை மீள மீளச் செய்வதன் சோர்வால் அவர்கள் ஆர்வம் குன்றியிருக்கின்றனர். ஒரு வெளிப்புற ஆர்வத்தை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களை அவர்கள் நன்மைக்காக அவர்களாக செயல் புரியும் ஒரு வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

4. இவற்றுடன் மரம் நடுவதால் நிகழும் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பலன்கள் எப்போதும் இருக்கவே செய்கின்றன.

5. தமிழ்நாட்டின் சராசரி மழைப்பொழிவைப் பயன்படுத்தி ஒரு கிராமத்தில் இத்தனை மரங்களை வளர்த்து விட முடியும். ஆவணி மாதத்தை ஒட்டி நடப்படும் கன்றுகள் அந்த ஆண்டின் பருவமழையைப் பயன்படுத்தியே வேர் பிடித்து நிலை பெற்று விடும். அதன் பின் தன் வளர்ச்சியைத் தானே பார்த்துக் கொள்ளும். அந்த சாத்தியத்தைப் பயன்படுத்திக் கொள்வது நம் கடமை.

6. ஒரே நாளில் ஊரின் எல்லா குடும்பங்களும் ஒரே நேரத்தில் மரம் நடுதல் என்பது மிக முக்கியமான ஒரு பண்பாட்டுச் செயல்பாடாக ஆகும். அக்கிராமத்தின் வரலாற்றில் அது ஒரு மிக முக்கிய நிகழ்வாக ஆகும்.

இந்தியாவுக்கென ஒரு பாரம்பர்யமான வாழ்க்கை முறை பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. இம்முறையில் சமூகத்தில் அனைத்து பிரிவினருக்குமான இடமும் நீதியும் உறுதி செய்யப்படுகிறது. முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. வெவ்வேறு விதமான வெளிப்புறத் தாக்குதலுக்கு ஆளான பின்னரும் இந்தியா தன்னை தகவமைத்துக் கொண்டு எழுந்துள்ளது. இந்தியா தன் பண்பாட்டுக் கூறுகளை மீட்டு எழுவது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒட்டு மொத்த உலகுக்குமே நன்மை பயக்கும்.

தொடர்புக்கு:
ulagelam(at)gmail(dot)com

*