Tuesday 31 October 2023

வயிற்று நெருப்பு

மண்ணைத் தோண்டும் வேலையும் மண் சுமக்கும் வேலையும் மூட்டை சுமக்கும் வேலையும் கடுமையானவை. உடலின் ஆற்றலை கடுமையாக எடுத்துக் கொள்பவை. லாரியிலிருந்து இறங்கும் 50 கிலோ 75 கிலோ எடையுள்ள மூட்டைகளை லாரியிலிருந்து இறக்கி முதுகில் சுமந்து கொண்டு குடோனுக்குக் கொண்டு செல்லுதல் என்பது மிகவும் கடுமையான பணி. அத்தகைய சுமை தூக்கும் தொழிலாளர்கள் உணரும் பசி தீவிரமானது. பல நாள் பழக்கத்தின் விளைவாக அவர்கள் உடல் பசி தாங்கிக் கொண்டே வேலை செய்ய பழகியிருக்கும். உண்ணாவிரதம் இருந்த நாட்களில் பசியை உணர்ந்த போது நான் அவர்களைப் போல எந்த கடுமையான வேலையையும் செய்ததில்லை என்பதையும் செய்யவில்லை என்பதையும் நினைத்துக் கொண்டேன். எல்லா உடல் உழைப்புப் பணிகளும் கடுமையானவைதான். வயலில் நாற்று நடுவதாக இருந்தாலும் ; களை பறிப்பதாக இருந்தாலும் ; செங்கல் சுமப்பது ; ஜல்லி சுமப்பது; எந்த உடல் உழைப்பு பணியும். 

தமிழ்நாட்டில் உடல் உழைப்புத் தொழிலாளர்கள் தினமும் உழைக்கிறார்கள். அவர்கள் வயிறு எவ்வளவு கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல இருக்கும் என்பதை மிகச் சிறு சதவீதம் உண்ணாவிரத அனுபவம் மூலம் அறிகிறேன். அவர்கள் வயிற்றுக்குத் தர வேண்டியது உணவு. ஆனால் அவர்கள் தினமும் உழைத்து முடித்து ஊதியம் பெற்றதும் செல்லும் இடம் தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் சாராயக்கடை. 90 சதவீத தொழிலாளர்கள் தங்கள் பசித்த வயிற்றில் இடுவது   சாராயத்தை. சாராயம் அவர்கள் வயிற்றை அழிக்கும். உடலை அழிக்கும். வாழ்வை அழிக்கும். 

பசித்தீ பற்றி எரியும் தொழிலாளர் வயிற்றில் உணவு சென்று சேர வேண்டும் ; ஆனால் சாராயம் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது.  

Monday 30 October 2023

உண்ணாவிரத நிறைவு - ( நாள் 7)

 கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
-திருக்குறள் (படைச்செருக்கு) (772)
***

21 நாட்கள் திட்டமிட்ட உண்ணாவிரதத்தை இன்றுடன் நிறைவு செய்கிறேன். 

பசி மிகக் கடுமையாக இருந்தது. கடும்பசியுடன் லௌகிகப் பணிகளையும் செய்ய மிகவும் சிரமமாக உணர்ந்தேன். இன்று உணவருந்தி விரதத்தை நிறைவு செய்து கொண்டேன். 

ஒவ்வொரு நாள் ''‘உண்ணாவிரத நாட்குறிப்புகள்’’ என எழுதியிருந்தாலும் இந்த 7 நாட்களின் மொத்த அனுபவத்தை அதன் சாரம் என நான் உணர்வதை பதிவு செய்ய வேண்டும் எனத் தோன்றியது. எனக்கே அது பெரிய அளவில் உதவிகரமாக இருக்கக்கூடும். 

சில ஆண்டுகளுக்கு முன், 6 நாட்கள் உணவருந்தாமல் இருந்தேன். அதன் பின்னர் ஒருமுறை. இப்போது 7 நாட்கள். ஒவ்வொரு முறையும் எனக்கு லௌகிகப் பணிகள் அதிக அளவில் இருந்த சமயத்திலேயே இந்த விரதங்களை மேற்கொண்டேன். இந்த முறை உணவருந்தும் வேளை வரும் போது சில எளிய மூச்சுப்பயிற்சிகள் செய்தேன். அவை அந்த வேளைக்கு வயிற்றின் ஜீரண் சுரப்பிகளை அமைதிப்படுத்தின. உணவருந்தும் வேளைகளில் பசி இல்லை ; ஆனால் அந்த வேளையின் பசி அடுத்த சில மணி நேரங்கள் கழித்து ஏற்பட்டது. பசி கடுமையாக இருந்தது. உண்ணாவிரதமே பசியை உணர்வதற்காகத்தான். அந்த விதத்தில் பசியை மீண்டும் உணர்ந்தது ஒரு முக்கியமான விஷயமே. 

வயிறு காலியாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் இந்த உண்ணாவிரதம் மூலம் உணர்ந்து கொண்டேன். யோகாசனங்கள் செய்ய வயிறு காலியாக இருக்க வேண்டும் என்பது ஓர் அவசியத் தேவை. நாம் காலை எழும் போது வயிறு காலியாக இருக்கிறது. மதிய உணவை 2 மணிக்கோ 3 மணிக்கோ அருந்துவோம் எனில் மாலையில் வயிறு காலியாவதற்குள் தேனீர் அல்லது காஃபி அருந்தி விடுவோம். பின் இரவு உணவுக்கான நேரம் வந்து விடும். இது ஒரு நடைமுறை நிதர்சனம். இந்த 7 நாட்களில் எப்போதுமே காலி வயிறு தான் என்பதால் எந்த நேரமும் பயிற்சிகளுக்கு ஏதுவாய் இருந்தது புதிய புதுமையான அனுபவமாக இருந்தது. 

பால் , காஃபி, தேனீரை இந்த விரதத்துக்குப் பின் முழுமையாக தவிர்த்து விடலாம் என இருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை எனக்கு பெரும்பயன் அளிக்கும் ஒரு விஷயம் இது. 

உணவருந்துவதால் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியை உடலை வலிமைப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த விரதத்தின் மூலம் கண்டுகொண்டேன். நாம் புத்தகங்களில் படித்திருப்போம். எத்தனையோ பேர் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் நமக்கு என அனுபவம் ஆகும் போது தான் ஒரு விஷயம் குறித்து நாம் ஒரு முடிவுக்கு வருகிறோம். ஓட்டப்பயிற்சி பலவகைகளில் உடலை வலிமைப்படுத்துவது என்று தோன்றுகிறது. ஓட்டத்துக்கான பயிற்சி எடுத்து பலமுறை தோல்வியுற்றிருக்கிறேன். கொஞ்ச தூரம் ஓடினாலே மூச்சு திணறும். வியர்த்துக் கொட்டும். இம்முறை மீண்டும் முயல இருக்கிறேன். ஓட்டப்பயிற்சி எடுப்பது நீண்ட தூரம் நடப்பதற்கும் மலையேறுவதற்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் அதனைப் பழக விரும்புகிறேன். 

விரத காலத்தில் ஒருமுறை ஒரு விஷயத்துக்காக சினம் ஏற்பட்டது. அப்போது சினத்தை வெளிப்படுத்தினேன். அப்போது வயிற்றின் சுரப்பிகள் அடைந்த மாற்றத்தைக் கவனித்த போது அயர்ந்து போனேன். சினம் கொள்ளும் போது உடலின் அத்தனை ஆற்றல் செலவாகிறது. சினம் தவிர்த்தல் என்னும் பண்பைப் பழகிக் கொள்ளுதல் எத்தனை நலம் பயப்பது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன். 

நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் ஓர் அற்புதப் பரிசு. ஓர் அற்புதமான பரிசு கிடைத்தால் அதனை எத்தனை மகிழ்வுடன் உற்சாகத்துடன் அணுகிக் கொண்டாடுவோமோ அத்தனை கொண்டாட வேண்டியவை நம் ஒவ்வொரு நாளும். 

விரத காலத்தில் 110 நாட்கள் உண்ணாவிரதமிருந்த குழந்தை குறித்த செய்தியை அறிய நேர்ந்ததை நல்நிமித்தமாகவே உணர்கிறேன். அந்த குழந்தையை வணங்குகிறேன். 

அடியேன் எளியவன். அடியேன் மிக எளியவன். இச்சொற்களையே அடியேனைப் பற்றி கூறிக் கொள்ள இயலும். வேறு எதுவும் இல்லை. 

உண்ணாவிரத தினங்களில் எனக்காக இறைமையிடம் பிரார்த்தித்துக் கொண்ட எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.  வாழ்த்து தெரிவித்த ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி. 

ராம நாமத்தை வாழ்நாள் முழுதும் உச்சரித்த மகாத்மா காந்தியை இக்கணம் எண்ணிக் கொள்கிறேன். 



ஒரு குழந்தையின் 110 நாள் உண்ணாவிரதம்

மும்பையில் உள்ள ஒரு குடும்பம். பெற்றோரும் இரு மகள்களுமாக நான்கு பேர் வீட்டின் உறுப்பினர்கள். தந்தை வணிகர். தாயார் இல்லத்தரசி. பத்தாம் வகுப்பு படிக்கும் அவர்களின் பதினாறு வயது மகள் 110 நாட்கள் நீர் மட்டும் அருந்தி உண்ணாவிரதமிருந்திருக்கிறார். முதலில் 16 நாட்கள் விரதமிருக்கத் திட்டமிட்டிருக்கிறார். திட்டமிட்டவாறு 16 நாள் விரதம் நிகழ்ந்திருக்கிறது. மேலும் உண்ணாவிரதத்தைத் தொடர விரும்புவதாக தனது குருநாதரிடம் தெரிவித்திருக்கிறார். குருவின் அனுமதியின் பேரில் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்திருக்கிறார். விரத தினங்களில் முழுமையாக வழிபாட்டிலும் பாராயணத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.  

அந்த குழந்தையை வணங்குகிறேன். 

உண்ணாவிரத நாட்குறிப்புகள் - வாசகர் கடிதம்

 அன்புள்ள பிரபு அண்ணா,


தங்கள் உண்ணாவிரத நாட்குறிப்புகளை தினமும் வாசிக்கிறேன். 

‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக சலூன்களுக்கு நூல்களை வழங்கியது ஓர் நற்செயல். அதற்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

21 நாள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என முடிவெடுத்து செயல்படுத்தி வருவதற்கும் எனது வாழ்த்துக்கள். 

நான்கு நாட்களாக நானும் இரவு உணவைத் தவிர்த்து விட்டேன். பசி என்பதையும் பசி என்றால் என்ன என்பதையும் உணர முடிகிறது. 

அன்புடன்,
கதிரவன் 

Sunday 29 October 2023

உண்ணாவிரத நாட்குறிப்புகள் - (நாள் 6)

 இன்று மிகவும் சோர்வாக உணர்ந்தேன். வயிறு வலிப்பது போன்ற உணர்வு. இந்த வயிற்றுவலி இத்தனை நாட்களாக இல்லை. இன்று ஆரம்பித்து ஒவ்வொரு நிமிடமும் வலியாக இருந்தது. தண்ணீரை வாயருகே கொண்டு சென்றாலே குமட்டல் ஏற்படுகிறது. 

சுபாவம்

 எங்கள் பகுதியில் சற்று அதிக அளவில் வீதிநாய்கள் உள்ளன. ஆங்காங்கே வீட்டில் இருப்பவர்கள் அதற்கு உணவு தருவார்கள். அவை எப்போதும் ஒன்றுடன் ஒன்று பூசலிட்டுக் கொண்டிருக்கும். ஒன்றைப் பார்த்தால் இன்னொன்று ஓயாமல் குரைக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் மொத்த பகுதியும் அவற்றின் ஆளுகைக்குக் கீழ் வரும். எல்லைத் தகராறுகள் ஏற்படும். ஆக்கிரமிப்புகள் நிகழும். உறக்கம் கலைந்த யாராவது ஒருவர் வீதிக்கு வந்து அவற்றைத் துரத்தி விட்டால் பின்னர் குரைப்புகள் ஓயும். 

எங்கள் பகுதி வீதிநாய்களில் பல எனது நண்பர்கள். அவற்றை என்னால் அடையாளம் சொல்ல முடியும். 

சமீப நாட்களில் எங்கள் பகுதியில் சில பூனைகள் தென்பட்டன. அங்கும் இங்கும் கண்ணில் பட்டன. 

நேற்று ஒரு காட்சியைப் பார்த்தேன். ஒரு பூனை. அதனை ஒரு நாய் கண்டுவிட்டது. ஒரு உறுமலை எழுப்பியது. குரைப்பு அல்ல ; உறுமல். அந்த உறுமல் கேட்டவுடன் மற்ற நாய்கள் அங்கே வந்து விட்டன. பத்து நாய்களுக்கு மேல். பத்து நாய்களின் உடல் மொழியைத் தொலைவில் இருந்து கண்ட பக்கத்து தெரு நாய்களும் இணைந்து கொண்டன. இருபது நாய்கள். இந்த இருபது நாய்களும் நின்ற விதத்தில் அவை யாரைத் தலைவனாக ஏற்கின்றன என பார்வைக்கே தெரிந்தது. சில தளபதி நாய்கள் உருவாயின. வீரர் நாய்கள் உருவாயின. அவை அமைத்திருந்தது ஒரு வேட்டை வியூகம். 

முன்னே ஒரு நாய். அதன் பின் நான்கு நாய்கள். அதன் பின் பதினைந்து நாய்கள். அவை வியூகம் அமைத்திருந்த முறை எப்படியெனின் அந்த பூனை இந்த நாய்களின் வியூகத்துக்குள் சிக்கிட வேண்டும் என்பது போல. 

அந்த பூனை இருந்தது ஒரு வீட்டின் முன்பக்கம் . அந்த வீட்டின் கார் பார்க்கிங் கதவு திறந்திருந்தது. திறந்த கதவின் வழியாகத்தான் நாய்கள் வியூகம் வகுத்தன. பூனைக்கு என்ன நடந்திருக்கிறது என்பது தெரிந்து விட்டது. இருபது நாய்கள் சூழ்ந்திருக்கின்றன. ஆபத்தை முழுமையாகப் புரிந்து கொண்டது. மிதமான வேகத்தில் அங்கே நின்றிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றின் என்ஜின் பகுதிக்குக் கீழே சென்று மறைந்தது. ஒரு நாய் முன்னே வந்தது. வேறு வழியின்றி அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து மறைந்திருப்பதாய் நாய்கள் நினைத்தன. ஒரு நாய் மட்டும் முன்னே வருவதைக் கண்டதும் பூனை மறைந்திருந்த நேரத்தில் தான் அவதானித்திருந்த தப்பிக்கும் வழி ஒன்றை நோக்கி மிக அதிக வேகத்தில் ஓட்டம் எடுத்தது. முன்னே சென்ற நாய் துரத்தியது. இருபது நாய்கள் திரண்டு சூழ்ந்திருக்கும் போது அவற்றின் வேகத்தைக் குறைத்து காக்க வைத்தது பூனையின் தந்திரம். முதல் நாய் முன்னே வந்த போதே அனைத்து நாய்களுக்கும் சூழ்ந்து கொள்ள சமிக்ஞை கொடுத்திருந்தால் அனைத்தும் பூனையைச் சுற்றி வளைத்திருக்கும். ஓட்டம் எடுத்த பூனை நாலரை இஞ்ச் சுவர் ஒன்றில் தாவி ஏறி வேகமாக ஓடியது. முக்கால் அடி சுவராக இருந்தால் நாயும் ஏறியிருக்கும். நாலரை இன்ச் சுவர் சிறியது என்பதால் நாய்க்கு அது வசதிப்படாது. முன்னே சென்ற நாய் நின்று விட்டது. அது நின்ற பின் பின்னால் இருந்த நாய்களில் இரண்டு வேகமாக ஓடிப் போய் பார்த்தது. அதற்குள் பூனை எங்கோ போய்விட்டது. வேட்டையின் உடல்மொழியைத் துறந்து நாய்கள் வழக்கம் போல் ஆகின. தலைமை நாய் வேட்டைப் பிரதேசத்தில் இருந்த தூண் ஒன்றில் காலைத் தூக்கி சிறுநீர் கழித்து இது தன் பிரதேசம் என நிறுவியது. 

அனைத்தும் வீதிக்கு வந்தன. 

அந்த வீட்டு பெண்மணி வாசலுக்கு வந்தார். தன் வீட்டின் முன் அமைதியாக குரைத்துக் கொள்ளாமல் இருபது நாய்கள் நிற்பது அவருக்கு வியப்பை அளித்தது. கார் பார்க்கிங் கதவை சாத்தி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார். 

வேட்டைக்கான வாய்ப்பு கிட்டாத போது அவை பூசலிட்டுக் கொள்கின்றன. வேட்டை வாய்ப்பு உருவாகும் போது அவற்றின் ஆதி சுபாவத்தை அடைகின்றன. 

இந்த மொத்த சம்பவமும் ஒரு நிமிடத்தில் நடந்திருக்கும். இதைப் பார்த்த நான் சுபாவம் குறித்து யோசித்தேன்.  

ராமன் பெயர்

மகாத்மா காந்தி தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் ராமனின் பெயரை உச்சரித்துக் கொண்டேயிருந்தவர். 

பெற்றோருக்கு மகனாகவும் தம்பிகளுக்கு அண்ணணாகவும் மனைவிக்கு கணவனாகவும் குடிகளுக்கு அரசனாகவும் சிறப்பாக தனது கடமையையும் பொறுப்புகளையும் ஆற்றியவன். சிறு குழந்தையிலிருந்தே அவன் மாவீரனாகவும் திகழ்ந்தான். மாவீரனான அவன் பெரும் ஞானி. அடுத்த நாள் முடிசூட்டு விழா என இருந்த நிலையில் வனத்துக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை வந்த போது அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டவன். 

நாம் பலமுறை கேட்டறிந்த சம்பவமாயினும் எவ்வித அல்லலோ வருத்தமோ இன்றி பொருட்செல்வத்தைத் தவிர்த்து விட்டு செல்வது என்பது ஒரு மாபெரும் செயல். ஒரு ஞானி மட்டுமே அச்செயலை ஆற்ற முடியும். 

ஞானியால் மட்டுமே எல்லா உயிர்களையும் சமமாக நேசிக்க முடியும். எல்லா உயிர்களுக்கும் அபயம் அளிக்க முடியும். 

அதர்மம் அவனை துன்புறுத்தியது. துன்புற்றான். பின் மீண்டு அதர்மத்தை அழித்தான். 

பொருட்செல்வத்தின் எல்லைகளை உணர்ந்திருத்தல், அதர்மத்தை எதிர்த்தல் , உயிர்களுக்குத் தஞ்சம் அளித்தல் ஆகிய குணங்கள் அவனை மானுடரின் நினைவில் எப்போதும் வைத்திருக்கிறது. 

அவன் பெயர் உச்சரிக்கப்படும் தோறும் இந்த மேலான இயல்புகள் நினைவுபடுத்தப்படுகின்றன. 

விரத நாட்களில் காலை மாலை இரவு என தினமும் குறிப்பிட்ட நேரம் ராமன் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தேன்.  

Saturday 28 October 2023

அன்புள்ள நண்பனுக்கு

அன்புள்ள நண்பனுக்கு,

நலமாக இருக்கிறாயா? நான் நலமாக இருக்கிறேன். 

இன்றுடன் ஐந்து நாட்கள் உண்ணாமல் இருந்திருக்கிறேன். இன்று மிகவும் சோர்வாக இருந்தது. சோர்ந்தது உடலா மனமா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. மனச்சோர்வு இருக்கும். லௌகிகமான பல பணிகள் இருக்கின்றன. பல பொறுப்புகள் இருக்கின்றன. முழுக்க முழுக்க நான் மட்டுமே செய்யக் கூடிய பணிகள். உடல் சோர்வும் இருக்கிறது. மாடிப்படி ஏறினால் கூட உடல் சோர்வடைவதை உணர முடிகிறது. 

அகம் விதவிதமான உணர்வுகளால் கொந்தளிக்கிறது நண்பா. ஜூரம் வந்து படுத்திருக்கும் போது நம் அகம் யோசிக்கும் அல்லவா. அதைப் போன்ற சிந்தனைகள். உடன் உடல் சரியாகி எழுந்து நாம் செய்ய வேண்டிய பணிகளைச் செய்ய வேண்டும் என்று நினைப்போம். அதைப் போன்ற எண்ணம். என்னால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

இந்த 21 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்ற முடிவை ஏன் எடுத்தேன். இப்போது இருக்கும் மனநிலையில் எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. நீண்டநாள் விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். விரதத்துக்கு முன் விரதத்துக்குப் பின் என வாழ்க்கை இரண்டாக மாறும் என்று எதிர்பார்த்தேன். உலகில் எல்லா சமயங்களும் உண்ணாவிரதத்தை வலியுறுத்துகின்றன. இந்த 5 நாட்கள் எனக்கு எவ்வளவோ விஷயங்களை உணர்த்தியுள்ளன. என் மனம் பயணிக்கும் பாதையை உன்னால் எளிதில் கண்டு கொள்ள முடியும் என்பதால் உன்னிடம் இவற்றைக் கூறுகிறேன். 

பசியுற்று இருக்கும் இந்த காலத்தில் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் மகத்தானவை என்பதை உணர்கிறேன் நண்பா. அகங்காரம் என்பது பெருஞ்சுமை. அதனைக் கைவிட்டோம் என்றால் அகமெங்கும் நிறையும் இனிமையை உணர முடியும். 

அகங்காரம் நம் உடல் இயக்கத்தைச் சூழ்ந்து கொள்கிறது. நம் மனம் முழுதும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. இவ்வளவு பெரிய உலகைக் காண முடியாமல் திரைக்குள் இருப்பவர்கள் என ஆகிறோம். 

நாம் ஒவ்வொரு விஷயத்தையும் அறிய நேரும் போதும் அகங்கார அறியாமையின் சுமைகள் சிலவற்றைக் குறைத்துக் கொள்கிறோம். வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அறிதலுக்குத் தயாராக இருப்பவன் இனிமை கொண்டவனாக இருப்பான். 

நீ அறிவாய். நான் என்றுமே வாழ்க்கை மேல் மனிதர்கள் மேல் பெரும் பிரியமும் நம்பிக்கையும் கொண்டவன் என்பதை. நம்மையும் நம் சக மனிதர்களையும் நுகர்வு எல்லா திசைகளிலும் சூழ்ந்துள்ளது. மிதமிஞ்சிய நுகர்வு சமூகமெங்கும் நோய்மையைப் பரப்புகிறது. உடல் சார்ந்த நோய்மைகள், உள்ளம் சார்ந்த நோய்மைகள். இந்த நோய்மை நீக்கப்பட வேண்டும் நண்பா. எல்லா மனிதர்களும் இனிய ஆரோக்கியமான வாழ்வு சாத்தியமாக வேண்டும் நண்பா. சாத்தியமாக்கும் பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது.

அன்புடன்,
பிரபு 

 

உண்ணாவிரத நாட்குறிப்புகள் - (நாள் 5)

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது பூர்வீகம் ஊரிலிருந்து 25 கி.மீ தொலைவில். பணி நிமித்தம் இங்கே இருக்கிறார். அவரது பெற்றோர் பூர்வீகத்தில் வசிக்கின்றனர். அவர்களை அடிக்கடி சென்று பார்த்து வருவார். அவ்வப்போது நானும் அவருடன் செல்வதுண்டு. நான் விரதமிருப்பது அறிந்து என்னைக் காண வந்திருந்தார். ஊருக்குச் சென்று பெற்றோரைச் சந்திக்க உள்ளேன் என்று சொன்னார். ஒரு சிறிய பயணம் செய்யலாமே என்ற ஆர்வத்தில் நானும் உடன் வருகிறேன் என்று சொன்னேன். நண்பரின் காரில் நாங்கள் இருவரும் புறப்பட்டோம். 

ஐந்தாம் நாளான இன்று சோர்வாக இருக்கிறது என்று நண்பரிடம் சொன்னேன். காரில் பயணிக்கும் போது நிறைய மனிதர்களைக் காண நேர்வது சற்று உற்சாகம் அளிக்கக்கூடும் என்பதால் இந்த பயணத்தை விரும்பினேன். நான் விரும்பியது போல நிகழவும் செய்தது. நண்பருடன் உண்ணாவிரதம் குறித்து உற்சாகமாக பேசிக் கொண்டு சென்றேன். 

நண்பரின் தந்தை ஒரு தேவார ஓதுவார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் சிங்கப்பூர் ஆலயம் ஒன்றில் தினமும் தேவாரம் பாட இவரை அழைத்திருந்தார்கள். இவரும் சென்றிருந்தார். அவரை எனக்கு பல ஆண்டுகள் தெரியும். சிங்கப்பூர் சென்று வந்ததும் மிகவும் உற்சாகமாக இருந்தார். தினமும் காலை , மதியம், மாலை, இரவு என நான்கு வேளையும் பல தேவாரப் பதிகங்களைப் பாடுவதும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தேவாரம் குறித்து எழுப்பும் வினாக்களுக்கு விடையளித்து சம்பாஷிப்பதும் பெரும் மகிழ்ச்சியை அவருக்குத் தந்திருக்கின்றது என்பதை உணர முடிந்தது. சிங்கப்பூரில் சுயமாக சமையல் செய்து மூன்று வருடமும் சாப்பிட்டிருக்கிறார். இங்கிருந்து செல்லும் போது அவருக்கு சமையல் தெரியாது. சிங்கப்பூரில் அவரே சமைத்து உண்ண வேண்டிய கட்டாயம். சமையல் கற்றுக் கொண்டார். 

யக்‌ஷ பிரசன்னத்தில் யக்‌ஷன் யுதிர்ஷ்ட்ரனிடம் கேட்கிறான். ‘’யுதிர்ஷ்ட்ரா ! உலகில் கவலையில்லாத மனிதன் யார் ?’’ . யுதிர்ஷ்ட்ரன் அதற்கு பதில் சொல்கிறான். ‘’எந்த மனிதன் சுயமாக சமைத்து உண்கிறானோ அவன் கவலை இல்லாதவன்’’ 

எனக்கு நானாக சமைத்து உண்ண வேண்டும் என்ற எண்ணம் உண்டு. பலரிடம் சமையல் குறித்து கேட்டிருக்கிறேன். அவர்கள் சர சர என்று கூறுவார்கள். அவர்கள் பல வருட பழக்கத்தை எளிதில் சொல்லி விடுவார்கள். ஒரு எளிய சமையல் நடைமுறையை சொல்லித் தர வேண்டும். அப்போது தான் அதனை செய்து பார்த்து நம்மால் செய்ய முடிகிறது என்ற நம்பிக்கை வந்து செய்து பார்க்க முடியும். ஒரு சில முறை செய்து சமைக்க வருகிறது என்ற நம்பிக்கை உண்டானால் மேலும் மேலும் சமையலில் நேர்த்தியைக் கொண்டு வரலாம். நண்பரின் தந்தையிடம் சாம்பார் வைப்பது எப்படி என்று கேட்டேன். அவர் சமீபத்தில் கற்றுக் கொண்டவர் என்பதால் எளிமையாக அதனை என்னிடம் சொன்னார். 

‘’முதலில் துவரம்பருப்பை தூய்மை செய்து கொண்டு ஒரு பாத்திரத்தில் அதனை இட்டு அதிக அளவில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். துவரம்பருப்பு வேகும் போது அதிக தண்ணீர் எடுத்துக் கொள்ளும். எனவே அதிக தண்ணீர் தேவை. அந்த தண்ணீரிலேயே கொஞ்சம் எண்ணெய் மஞ்சள்தூள் சேர்க்க வேண்டும். பாத்திரத்தை குக்கரில் வைத்து சூடாக்கவும். குக்கரை மூட வேண்டாம். துவரம்பருப்பு வேகும் நேரத்தில் வாணலியில் எண்ணெய் எடுத்துக் கொண்டு சூடாக்கவும். லேசாக சூடானவுடன் அதில் கடுகு , வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆக வேண்டும். பின்னர் தாளித்த பொருட்களை நன்றாக வெந்திருக்கும் துவரம்பருப்பில் சேர்த்து கொதிக்க வைக்கவும் வாழைக்காய், அவரைக்காய், வெண்டைக்காய் என காய்கறிகளை வெட்டி கொதிக்கும் துவரம்பருப்பில் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். நன்றாகக் கொதிக்க விடவும். அடுப்பில் இருந்து இறக்கும் போது பெருங்காயப் பொடி தூவிக் கொள்ளவும்’’ 

சாம்பார் தயாரிக்க இந்த முறை எளிதாக இருக்கிறது என நான் எண்ணினேன். 

உண்ணாவிரதம் முடிந்த பின்னர் சுயமாக சமைத்து சாப்பிட வேண்டும் என இருக்கிறேன். உலகில் கவலையில்லாத மனிதனாக இருக்க. 
 

Friday 27 October 2023

உண்ணாவிரத நாட்குறிப்புகள் - (நாள் 4)

உடல் சோர்வைத் தீவிரமாக உணர்கிறேன்.

இன்று கட்டுமானப் பணியிடத்துக்கு மணல் லோடு வந்தது. லாரியை எதிர்கொள்ள பணியிடத்திலிருந்து சற்று தள்ளி உள்ள மெயின் ரோட்டில் காத்து நின்றிருந்தேன். அலைபேசியில் வந்து விடுவதாக சொன்ன நேரத்தை விட மிகத் தாமதமாக வண்டி வந்தது. அப்போது மிகச் சோர்வாக உணர்ந்தேன்.   

உடல் ஆற்றலை செலவழிக்கும் தருணங்களை விரதப் பொழுதுகளில் உணர முடிகிறது. காலை எழுந்ததும் ஒரு புதிய தினம் என்பதால் உடல் உணவை எதிர்பார்க்கிறது. குளித்து விட்டு அமைதியாக தரையில் அமர்ந்து விட்டால் ஜீரண சுரப்பிகள் சற்று அமைதியாவதை உணர முடிகிறது. 

வழக்கமாக குடிக்கும் தண்ணீரை விட சற்று அதிகமாக நீர் அருந்துகிறேன். 

மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் சற்று குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது. 

காலையிலிருந்து இரவு வரை சில கிரமங்களை உருவாக்கிக் கொள்ள இருக்கிறேன். 

அடுத்து வரும் நாட்களுக்கு மௌனம் சிறந்த துணையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. 

எனது விருப்பங்கள்

எனக்கு நிறைய விருப்பங்கள் உண்டு. அவற்றில் பெரும்பான்மையானவை பயணங்கள். இன்னும் எனது ஆகப் பெரிய பயணங்களைத் துவங்கவில்லை என்றே என் மனம் நம்புகிறது. எனது தொழில் நான் நெடுநாட்கள் ஊரில் இல்லாமல் இருக்க அனுமதிக்காது. இருப்பினும் பெரும் பயணங்கள் என் விருப்பமாக உள்ளன.  

‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் எனக்கு மிக முக்கியமானவை. அவற்றை என் கடமை என்று எண்ணியே செயல்படுகிறேன். செயல் புரியும் கிராமத்தில் நாம் எண்ணும் வண்ணம் சில செயல்கள் நிகழ்ந்திருப்பினும் மனம் இன்னும் இன்னும் என வேகத்தை எதிர்பார்க்கிறது. 

எனது விருப்பங்கள்

(1) நர்மதை நதி உற்பத்தியாகும் இடத்திலிருந்து சமுத்திரத்தில் சங்கமிக்கும் இடம் வரை பயணித்து நதியை படகின் மூலம் கடந்து மீண்டும் உற்பத்தியாகும் இடத்துக்கு வந்து சேரும் ‘’நர்மதா பரிக்ரமா’’ என்னும் பாதயாத்திரையை நிகழ்த்த வேண்டும் என்பது எனது நெடுநாள் விருப்பம். 2500 கி.மீ நடைப்பயணம். யாத்திரையைத் தொடங்குவதற்கு முன் மூன்று மாதங்கள் நடந்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் 10 கி.மீ மாலையில் 10 கி.மீ நடந்து பழகினால் பரிக்ரமாவின் போது சிரமம் இன்றி நடக்க முடியும். 21 நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தவுடன் காலையும் மாலையும் 10 கி.மீ நடந்து பயிற்சி எடுக்க உள்ளேன்.

(2) ராமேஸ்வரத்திலிருந்து காசி வரை ஒரு நடைப்பயணம் மேற்கொள்ள விருப்பம். 

(3)  ஆண்டுக்கு ஒருமுறை மலையேற்றம் ஒன்று மேற்கொள்ள வேண்டும்.

(4)  ஆண்டுக்கு ஒருமுறை இந்திய நிலமெங்கும் ஒரு மோட்டார்சைக்கிள் பயணம். 

(5) 42 கி.மீ மாரத்தான் ஓட்டத்துக்குப் பயிற்சி எடுத்து முதலில் ஒரு மாரத்தான் ஓட்டத்தை ஓடி நிறைவு செய்ய வேண்டும். பின்னர் ஆண்டுக்கு ஒன்று.   

Thursday 26 October 2023

ருசிகரம்

 மூன்று நாட்களாக எழுதிய பதிவுகளில் பாதி வயிறு உண்பது குறித்து எழுதியிருந்தேன். பாதி வயிறு உண்கிறோமோ வயிறு முட்ட உண்கிறோமோ என்பதை விட நாம் எவ்விதமான உடல் உழைப்பை தினமும் அளிக்கிறோம் என்பது முதன்மையானது. தினமும் 5 கிலோ மீட்டர் நாம் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வோம் எனில் நாம் வயிறு நிறைய உண்ணலாம். மூன்று வேளையும் உணவு அருந்தலாம். உடல் உணவின் மூலம் எத்தனை ஆற்றலை உருவாக்குகிறதோ அதற்கு ஏற்றாற் போல ஆற்றல் செலவழிக்கப்பட வேண்டும். குறைவான உடல் உழைப்பு கொண்டவர்கள் உணவின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது. 

நான் நாடெங்கும் பயணித்தவன். பலவிதமான உணவு வகைகளை உண்டவன். எல்லா விதமான ருசியான உணவுகளையும் கொண்டாடுபவன் நான். 

அவரைக்காய், கொத்தவரங்காய், வாழைக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், மாங்காய், கீரை, கீரைத்தண்டு , பூசணிக்காய், பீர்க்கன்காய், பரங்கிக்காய், சுரைக்காய் ஆகிய காய்கறிகளை விரும்பி உண்ணக்கூடியவன் நான். கோஸ் பொறியல் எனக்கு மிகவும் பிடிக்கும். மைசூர் பகுதிகளின் மசால் தோசை நான் விரும்பும் ஒன்று. வட இந்திய உணவுகளில் ‘’நாண்’’ மிகவும் பிடித்த உணவு. அதன் தொடுகறியாக பன்னீர் பட்டர் மசால். காளான் உணவுகளும் பிடிக்கும். ‘’தால் ஃபிரை’’ பிடிக்கும். 

இன்று காலை மரவள்ளிக் கிழங்கின் ஞாபகம் வந்தது. சற்று அழுத்தமான கிழங்கு வகை என்பது காரணமாக இருக்கலாம். வயிற்றில் நீண்ட நேரம் இருக்கக்கூடியது என்பதால் அந்த ஞாபகம் உண்டாகியிருக்கலாம். 


உண்ணாவிரத நாட்குறிப்புகள் - ( நாள் 3)

கட்டுமானத் தொழிலில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கு உகந்த ஏதுவான செயல்முறையை கைக்கொண்டிருப்பார்கள். எங்கள் நிறுவனத்தின் இயங்குமுறை என்பது சில மாறா நியதிகளைக் கொண்டது. பணியின் தரம் ஆகச் சிறந்ததாக ஒவ்வொரு நாளும் நிகழ வேண்டும் என்பது எங்கள் முதன்மை நியதி.  பணியாளர்கள் எவராயினும் அவர்களுக்கு தின ஊதியம் அன்றன்றே வழங்கப்பட்டுவிட வேண்டும் என்பது எங்கள் இரண்டாம் நியதி.  பணியிடத்துக்கு மெட்டீரியல் சப்ளை செய்பவர்களுக்கு அவர்கள் சப்ளை செய்த உடனே பணியிடத்திலேயே பேமெண்ட் வழங்கப்பட வேண்டும் என்பது எங்கள் மூன்றாம் நியதி. எனது தந்தை எனக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் வகுத்தளித்த நியதிகள் அவை. அவற்றை மந்திரமாகவே நாங்கள் கொள்கிறோம். 

இப்போது ஒரு வணிக வளாகத்தின் கட்டுமானம் நடந்து கொண்டிருக்கிறது. ஒருநாளைக்கு குறைந்தது மூன்று வேளையாவது கட்டுமானப் பணியிடத்தில் இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டிய நிலை. செங்கல் வரும் ; சிமெண்ட் வரும் ; ஜல்லி வரும். பொறுப்பாளனாகிய நான் அங்கிருந்து அவற்றின் அளவையும் எண்ணிக்கையையும் உறுதி செய்ய வேண்டும். பின்னர் மெட்டீரியலுக்கான பேமெண்ட் அளிக்க வேண்டும். 

எளிய செயல் எனத் தோற்றம் அளித்தாலும் நாள் முழுமையையும் கோரும் பணிகள் இவை. இங்கும் அங்கும் அலைந்து கொண்டேயிருப்பதாக இருக்கும். 

கட்டுமானப் பணி நிகழ்ந்து கொண்டிருக்கையில் எவ்வாறு விரதமிருப்பது என யோசித்தேன். விரதமிருக்க வேண்டும் என்று அகத்தில் உணர்வு தோன்றி நிலை பெற்றிருக்கும் தருணமே சிறப்பானது என்பதால் விரதத்தைத் துவக்கினேன். 

பணியிடத்தில் இருக்கும் போது சிறுது சோர்வு இருந்தது. எனினும் சற்று முயன்று சோர்வைக் கடந்தேன். 

இந்த முதல் மூன்று நாட்களின் அனுபவத்தை அடுத்த 18 நாட்களுக்கான அடித்தளமாகக் கொள்ள வேண்டும். உணவு ஞாபகத்தைக் கடந்து செல்வது என்பது நடந்திருக்கிறது. இனி மௌனத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பேசும் போது உடலின் ஆற்றல் அதிகம் செலவாவதை உணர முடிகிறது. 

இன்று எனது அறையில் அகல்விளக்கு ஒன்றில் ஒரு தீபம் ஏற்ற உள்ளேன். இந்திய மரபில் தீபம் என்பது இறைமையின் நுண் வடிவம். தீப ஒளியின் சான்னித்தியத்தில் இருப்பது என்பது நலம் பயப்பது. 

உன் பெயர் அமிர்தம்

ராமா ராமா ராமா
நீ அமிர்தம்
உன் பெயர் அமிர்தம்

எளிய உயிர் நான்
வலிமை குறைந்தவன்
திறன் குறைந்தவன்
தனியாக இருக்கிறேன்
அச்சத்துடன் இருக்கிறேன்
அச்சம் இல்லாத ஒரு கணம் இல்லை
மீட்பு இல்லை என்ற அச்சம்
மீள முடியாது என்ற அச்சம்

ஏன் இங்கு வந்தேன்
எனக்குத் தெரியாது ராமா
எங்கே சென்று கொண்டிருக்கிறேன்
அதுவும் தெரியவில்லை

அச்சங்களை நான் அறிவேன்
பயங்களை நான் அறிவேன்
வலி எனக்குத் தெரியும்
வாழ்நாள் எல்லாம் வலிகளை உணர்ந்திருக்கிறேன்
சிறிய வலிகள்
பெரிய வலிகள்
சிறிதும் பெரிதுமான வலிகள்
பெரிதும் பெரிதுமான வலிகள்
ராமா ராமா ராமா
நீ அமிர்தம்
உன் பெயர் அமிர்தம்

மகத்தானவன் நீ
பெரியவன் நீ

அறிவு குறைந்த 
வலிமை குறைந்த
திறன் குறைந்த
சாரம் இல்லாத
இந்த உயிரை
உன் கருணையால் காப்பாற்று
உன் கருணையால் வாழ வை

உன்னிடம் நெருங்க நினைத்து
மார்க்கம் அறியாது
விலகிச் செல்லும்
அறிவிலி இது

வலிக்கிறது ராமா
மிக அதிகமாக வலிக்கிறது

உன் உலகில்
ஒரு சிறு துகளாக இருக்கிறேன்
உன் கருணை சாம்ராஜ்யத்தில்
சிறு துகளின் இடம் போதும்

உறவென்று ஏதுமில்லை
துணையென்று யாருமில்லை

போதும் ராமா போதும்
வலிகள் போதும்
துயரம் போதும்
துக்கம் போதும்
நீ பெரியவன்
நீ மகத்தானவன்

உன் கருணைப் பெருக்கு
உன் கருணை மழை
ஏதோ ஒருவிதத்தில்
இச்சிறு உயிரைத் தீண்டட்டும்

ராமா ராமா ராமா
நீ அமிர்தம்
உன் பெயர் அமிர்தம் 

Wednesday 25 October 2023

விஜயதசமி முதல் தீபாவளி வரை

விஜயதசமி தொடங்கி தீபாவளி வரை நீர் மட்டும் அருந்தி உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளேன். இந்த நாட்களின் பெரும்பாலான பொழுதுகள் மௌனமாயிருக்கவும் உத்தேசம் கொண்டுள்ளேன்.  

உண்ணாவிரத நாட்குறிப்புகள் - (நாள் 1)

 உண்ணாவிரத நாட்குறிப்புகள் (நாள் 1)

விஜயதசமி அன்று துவங்கும் செயல் முழுமையடையும் என்பது நமது நாட்டின் நம்பிக்கை. 2016ம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை மேற்கொண்ட மோட்டார்சைக்கிள் பயணத்தைத் துவக்கினேன். 22 நாட்கள் நீடித்த அப்பயணம் நிறைவான அனுபவமாயிருந்தது. இப்போது மனதில் எண்ணினால் கூட பயணித்த பிரதேசங்களை நினைவில் மீட்டிட முடியும் என்னும்படியான உளப்பதிவுகள் அவை. லெபாக்‌ஷி, ஹம்பி, நாகபுரி, ஜெய்ப்பூர், தில்லி, மீரட் ஆகியவை மயிலாடுதுறைக்கு அண்டை ஊர்கள் என நினைக்கத்தக்க அளவில் அகநெருக்கம் கொண்டுள்ளன. மானுடப் பெருவெள்ளத்தின் பிரவாகத்தை அப்பயணத்தில் கண்டேன். உலகின் மகத்தான கனவுகள் காணப்பட்ட நாட்டில் அலைந்து திரிந்திருக்கிறோம் என்ற உணர்வே பேருவகையை அளிக்கிறது. உலகின் மகத்தான மனிதர்கள் வாழ்ந்த மண்ணில் பயணித்திருக்கிரோம் என்னும் பெரும்பேறு எளியவனான அடியேனுக்கு வாய்க்கப் பெற்றது. 

அந்த பயணத்தின் போது நான் ஒரு விஷயத்தை அவதானித்தேன். ஒரு நாளைக்கு 250 கி.மீ பயணித்தாலும் உடல் வழக்கமாக உட்கொள்ளும் அளவு உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்தேன். வெயில், முகத்தில் மோதும் காற்று , மணிக்கணக்காக இரு சக்கர வாகனம் இயக்குதல் என பல அம்சங்கள் இருப்பினும் பசி பெரிதாக இல்லை என்பதை உணர்ந்தேன். புதிய நிலக்காட்சிகளையும் புதிய மனித முகங்களையும் காண்பதின் மகிழ்ச்சி உடலில் பசி இல்லாமல் செய்திருக்கக் கூடும். உடலும் மனமும் துல்லியமான ஒருங்கிணைப்புடன் அப்போது இருந்தன. தாபாக்களில் ஒரு ரொட்டியும் ஒரு ‘’தால் ஃபிரை’’யும் ஆர்டர் செய்வேன். ஒரு ரொட்டி என்பது இரண்டு துண்டுகள். பருப்புக் கூட்டு தொடுகறி. இரு எலுமிச்சைத் துண்டுகள் அளிப்பார்கள். பல நாட்கள் இது மட்டுமே உணவு. இரவில் வாழைப்பழங்களை மட்டும் உண்டு விட்டு பல நாட்கள் இருந்திருக்கிறேன். எங்கோ ஓரிடத்தில் ருசிக்காக பலவகை உணவுகள் ஆர்டர் செய்து உண்டதுண்டு. அதுவும் பயணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி என. பயணத்தில் உருவான உணவு குறித்த அவதானம் மனதில் ஒரு ஓரத்தில் இருந்தது. 

சமீபத்தில் சமணத் தலங்கள் சிலவற்றுக்கு செல்ல நேர்ந்தது. அங்கு தரிசித்த தீர்த்தங்கரர்களின் சிலைகள் அகத்தில் பல அலைகளை உண்டாக்கிக் கொண்டிருந்தன. நிறைநிலை எய்திய அவர்களின் பாதங்களை என் சென்னியில் சூடிக் கொண்டிருந்தேன். நாடெங்கும் சமணத் துறவிகளை எனது பயணத்தின் போது கண்டதுண்டு. நடந்து சென்று கொண்டேயிருப்பார்கள். எந்த வாகனத்திலும் பயணிக்காத நெறி கொண்டவர்கள். எத்தனை தொலைவாயினும் நடந்தே செல்பவர்கள். அவர்களைக் காண நேர்கையில் அகம் பணிந்து வணங்குவேன். கரம் உயர்த்தி ஆசீர்வதித்து கடந்து செல்வார்கள்.

மகாத்மா காந்தி மீது ஈடுபாடு கொண்டவன் என்ற வகையில் மகாத்மாவுக்கு சமண நெறிகள் மீதிருந்த தீராப்பற்றை அறிந்திருந்தேன். மகாத்மா பிறந்த பிரதேசமான குஜராத் வைணவமும் சமணமும் மிக மிக நெருக்கம் கொண்ட பகுதி. சமண தீர்த்தங்கரர்களில் ஒருவரான நேமிநாதர் கீதாசாரியன் ஸ்ரீகிருஷ்ணனுக்கு சகோதர முறை கொண்டவர். இருவரும் சம காலத்தவர்கள் ஆவர். ராம் ராம் ராம் என வாழ்நாள் முழுதும் ராம நாமத்தை ஜபித்தவர் மகாத்மா. தினமும் பகவத்கீதையை வாசித்தவர். மகாத்மா தனது வாழ்வில் உண்ணா நோன்பை ஒரு முக்கியமான பகுதியாக கொண்டிருந்தார். அவரது நீண்ட உண்ணா நோன்பு 21 நாட்கள் நீடித்தது. 

21 நாட்கள் நீடிக்கும் ஒரு உண்ணா விரதம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. உலகின் எல்லா சமயங்களும் உண்ணாவிரதத்தை வலியுறுத்துகின்றன. 

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆறு நாட்கள் சஷ்டி விரதம் மேற்கொள்ள விரும்பினேன். அதற்கு முன் ஒரு நாள் கூட உண்ணாமல் இருந்ததில்லை. என்னால் சில மணி நேரங்கள் கூட பசி பொறுக்க முடியாது என்பது ஓர் உண்மை. இருப்பினும் அந்த ஆறு நாட்களும் நீர் மட்டும் அருந்தி உண்ணா நோன்பிருந்தேன். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததும் உணவு அருந்தினேன். அது ஒரு நல்லனுபவமாக இருந்தது. அதன் பின் நவராத்திரி விரதம் இருக்க முயன்றேன். ஒன்பது நாட்கள் நீர் மட்டும் அருந்தி விரதமிருக்க வேண்டும். ஐந்து நாட்கள் மட்டுமே விரதமிருக்க முடிந்தது. அதன் பின் எந்த விரதமும் இருக்கவில்லை. ஒரு நாள் கூட. 

என் அம்மா என்னிடம் ஒரு விஷயம் சொல்வார்கள். விரதமிருக்க விரும்பினால் வாரத்தில் ஒரு நாள் மட்டும் உணவருந்தாமல் இருக்குமாறு சொல்வார்கள். ஒரு வருடத்தில் 52 நாட்கள் விரதமிருந்ததாகும் ; மேலும் எல்லோருக்கும் உகந்ததாகவும் இருக்கும் என்று. இந்த 21 நாட்கள் விரதத்தை நிறைவு செய்த பின் வாரம் ஒருநாள் விரதம் இருக்க உள்ளேன். 

உண்ணாவிரத நாட்குறிப்புகள் - (நாள் 2)

 நவீன வாழ்க்கை உணவு ஞாபகத்தை அதிகம் சுமக்கிறது. என்னுடைய அனுபவத்திலிருந்தே அதைக் கூறுகிறேன். காலை விழித்தெழுந்ததும் நமக்கு தேனீர் அல்லது காஃபியின் ஞாபகம் வருகிறது. காலை நமக்கு கேசரியின் ஞாபகமோ பிரதமனின் ஞாபகமோ வருவதில்லை. தேனீர் காஃபியை விட அவற்றை நாம் விரும்பியிருப்போம். ஆனால் காலை காஃபி தேனீர் தவிர்த்த வேறெந்த நினைவும் எழுவதில்லை. நமது உடல் அந்த ருசிக்கு பழகியிருக்கிறது. பாலின் ருசி. சர்க்கரையின் ருசி. சர்க்கரையை செரிக்கச் செய்ய ஜீரண சுரப்பிகள் அதிகம் சுரக்கத் தொடங்குகின்றன. நம் உடல் இயங்கத் துவங்குகிறது என்னும் உணர்வு நமக்கு ஏற்படுகிறது. காலை 6 மணி, காலை 11 மணி, மாலை 4 மணி என ஒரு நாளைக்கு மூன்று வேளை தேனீர் அல்லது காஃபியை நாம் உட்கொள்கிறோம். கிட்டத்தட்ட வாழ்நாள் பழக்கமாகவே இது நீடிக்கிறது. தேனீரும் காஃபியும் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகள் அல்ல. அவை ஜீரண சுரப்பிகளை அதிகம் சுரக்க வைத்து செரிமானம் ஆகுபவை. குறைவான உடல் உழைப்பு கொண்ட பணிகளில் இருப்பவர்கள் பால், காஃபி, தேனீர் ஆகியவற்றை முற்றிலும் தவிர்ப்பது நலம். நான் என்னுடைய வாழ்க்கையில் பலமுறை பால் , காஃபி , தேனீரைத் தவிர்த்திருக்கிறேன். மூன்று ஆண்டுகள் நான்கு ஆண்டுகள் பால் காஃபி தேனீர் அருந்தாமல் அதே போல் மூன்று முறை இருந்திருக்கிறேன். மூன்று முறைகளில் 12 ஆண்டுகள். எனினும் மீண்டும் அந்த பழக்கத்துக்கு ஆளானேன். எப்போதும் கிடைப்பது, தேனீர் அளித்து உபசரிப்பது என்பது ஒரு உபசரிப்பு வழக்கமாக நிலை கொண்டிருப்பது, எல்லாரும் அருந்தச் சொல்லி வற்புறுத்துவது என்பவை தொடர முடியாமல் போனதற்கு காரணங்கள். 


இன்றும் எளிய விலை கொண்ட உணவுப்பொருள் தேனீரும் காஃபியும் தான். ரூ. 10 மற்றும் ரூ. 15. நம் சமூகத்தில் அவை தொழிலாகவே நிலை கொண்டுள்ளன. பால் பாக்கெட் விற்பனையும் தேனீர்க்கடையும் இன்று லாபகரமான தொழில்கள். நம் வீடுகள் குலிர்சாதனப் பெட்டிகளில் பால் பாக்கெட்களை சேகரித்து வைக்கின்றன.

பால் காஃபி தேனீர் இவற்றுக்கு மாற்றாக எதை அருந்தலாம்? நிலக்கடலை ஜூஸ் பொருத்தமான மாற்றாக இருக்கக்கூடும். நிலக்கடலை புரதச்சத்து மிகுந்தது. எளிதில் செரிமானம் ஆகும். வென்னீரில் சுக்குப் பொடி கலந்து அருந்தலாம். உடலின் ஜீரண சக்தியை அதிகப்படுத்துவது. இந்த உபவாசத்துக்குப் பிறகு பால் காஃபி தேனீர் அருந்தப் போவதில்லை. 

தமிழ்ச் சமூகத்தின் காலை உணவாக இட்லி தோசை பொங்கல் உப்புமா உள்ளன. அவை எளிய உணவுகள் தான். தொடுகறியாக செய்யப்படும் சட்னிகள் காரம் குறைந்தவையாக இருப்பின் நலம். காலை உணவிலும் தொடுகறியிலும் எண்ணெய் அதிகம் சேர்க்காமல் இருப்பது நல்லது. வயிறு முட்ட உண்ணாமல் பாதி வயிறு உண்டால் போதும். நம் சமூகம் வயிறு முட்ட உண்பதையே பழக்கப்படுத்துகிறது. குழந்தைகளை அவ்வாறே பழக்குகிறோம். பல விதமான உணவுகள் என்பதே சமூக அந்தஸ்து என நம்புகிறோம். 

தமிழ்ச் சமூகம் தனது சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை உணவுக்காகச் செலவழிக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஊரெங்கும் பெருகும் பேக்கரிகள் அதற்கு உதாரணம். சிறு கிராமங்களில் கூட பேக்கரிகள் வந்து விட்டன. குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கேக் முக்கிய இடம் பெறுவது காரணம். 

மதிய உணவு பாதி வயிறு நிறையும் அளவில் உண்டால் போதும். வழக்கமாக உண்ணும் தொடுகறிகளின் அளவை இருமடங்காகவும் சோற்றின் அளவை பாதியாகவும் குறைத்துக் கொண்டால் போதும்.  

Wednesday 18 October 2023

நூதனம்

 லௌகிக வாழ்க்கையின் தன்மைகளில் ஒன்று நூதனம். அந்த நூதனம் பல சமயம் ஹாஸ்யமாக வெளிப்படுவதுண்டு. கலைஞனுக்கு எப்போதும் லௌகிகம் மேல் ஒரு மென்புன்னகை ஒன்று உண்டு. தி.ஜானகிராமன் போன்ற மகா கலைஞனுக்கு அது மேலும் கூடுதலாகவே இருந்திருக்கும். வீட்டின் பாதுகாப்பை பல கட்டங்களில் உறுதி செய்யும் ஒருவர் ரயிலுக்கு மாட்டுவண்டியில் புறப்பட்டுப் போகும் போது கைக்குழந்தையை தொட்டிலில் விட்டு விட்டு ரயில் நிலையம் செல்லும் வழியில் பாதி தூரத்தில் ஞாபகம் வந்து மீண்டும் வீட்டுக்கு வந்து மதிய ரயிலுக்குப் போக முடியாமல் சாயந்திர ரயிலில் செல்ல நேர்வது ; மாநகரப் பேருந்து ஒன்றில் சாராயம் குடித்த ஒருவன் சாராய போதையில் பத்து வருடம் முன்பு இறந்து போன தன் அன்னை குறித்து பிலாக்கணம் வைப்பது ; வணிகம் நொடித்துப் போன செட்டியார் ஒருவர் தனது உறவினரின் உதவியால் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெற்றிகரமான வணிகராக எழுவது , இந்திய அரசியல்வாதி ஒருவருக்கும் வெளிநாடு ஒன்றின் துணை அதிபருக்கும் விமானத்தில் நடக்கும் சந்திப்பு என சுவாரசியமான பல விஷயங்களை தனது பாணியில் பதிவு செய்கிறார் தி.ஜா , தனக்கே உரிய மென்மையான புன்னகையுடன். 

நூல் : அபூர்வ மனிதர்கள் (வாழ்வியல் சித்திரங்கள்) ஆசிரியர் : தி. ஜானகிராமன் விலை : ரூ. 125 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில். 

Tuesday 17 October 2023

வன மார்க்கம்

இந்திய நாட்டின் பேராலயங்களின் சிற்பங்களை நாம் காணும் போது நம்மால் ஒரு விஷயத்தை உணர முடியும். அவை கல்லில் சிற்பமாக வடிவம் பெறும் முன் சொல்லில் எழுந்துள்ளன என்பதை அறியலாம். கவிஞனின் சொல்லே கல்லில் சிற்பமாக எழுகிறது. இந்திய சிற்பவியலுக்கு அடிப்படையாக இந்தியாவின் புராணங்களும் இதிகாசங்களும் உள்ளன. அதாவது சிற்பவியல் கற்கும் எவரும் முதலில் இந்தியப் புராணங்களையும் இதிகாசங்களையும் கற்க வேண்டும். 

இராமாயணம் ‘’ஆதி காவியம்’’ எனப்படுகிறது. மகாபாரதம் நிகழ்ந்த காலத்திலேயே இராமாயணக் கதை பாடகர்களால் தொடர்ந்து பாடப்பட்டிருக்கிறது. பீமனுக்கு அனுமன் இராமயணக் கதையை சொல்வது போல் மகாபாரதத்தில் ஒரு பகுதி வரும். அதனைக் கொண்டு மகாபாரதம் இராமாயணத்தையும் உள்ளடிக்கியது என்பதைக் காணலாம். 

உலகின் முதல் காவியமான இராமாயணம் இயற்றப்பட்ட நாள் முதல் உலகெங்கும் பரவிய வண்ணம் உள்ளது. பெரும்பாலான இந்திய மொழிகளில் கவிஞர்களால் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. அவை அந்தத்த மொழிகளில் செவ்விலக்கியமாக நிலைபெற்றுள்ளன. தமிழின் கம்பராமாயணம் ஒரு எடுத்துக்காட்டு. துஞ்சத்து எழுத்தச்சனின் ‘’அத்யாத்ம ராமாயணம்’’ மலையாள மொழியின் முதல் இலக்கியமாகவும் அமைந்துள்ளது. 

இந்திய நிலப்பகுதிகள் மலைகள் நதிகள் குறித்த குறிப்புகள் இராமாயணத்தில் உள்ளன. பிரயாகை, சித்ரகூடம், தண்டகாரண்யம், கிஷ்கிந்தை, கோதாவரி நதி, சேது சமுத்திரம் ஆகியவை இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளாக மானிட சமூகங்கள் தொடர்ந்து வாழ்ந்து வரும் பகுதிகள் அவை. 

வங்க எழுத்தாளர் ‘’சீர்ஷேந்து மகோபாத்யாய’’ ராமன் வனவாசம் சென்ற பாதையில் பயணிக்க விரும்பி வங்காளத்திலிருந்து அயோத்தி வந்தடைகிறார். அவர் வங்க மொழியில் எழுதப்பட்ட இராமாயணத்தை வாசித்திருக்கிறார். அயோத்தி வந்தடைந்த போது அயோத்தியில் குழுமும் ஆயிரக்கணக்கான மக்கள் ‘’சீதாராம் சீதாராம்’’ என உணர்ச்சிகரமாக முழங்கிக் கொண்டிருப்பதைக் காண்பது அவருக்கு சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கிறது. துளசிதாசரின் ‘’ராம் சரித மானஸ்’’ நாட்டின் சாமானிய மக்களின் அகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை உணர்கிறார். ராமர், ராமாயணம் குறித்த நினைவுகளுடன் சிந்தனைகளுடன் பிரயாகை, சிருங்கிபேரம், சித்ரகூடம் ஆகிய ஊர்களுக்கு வந்து சேர்கிறார். அயோத்தியிலிருந்து சித்ரகூடம் வரை பயணித்த அனுபவத்தை ‘’ராமன் வனவாசம் போன வழி : ஒரு தேடல்’’ என்ற சிறு நூலாக எழுதியுள்ளார். 

நூல் : ராமன் வனவாசம் போன வழி : ஒரு தேடல் ஆசிரியர் : சீர்ஷேந்து முகோபாத்யாய மொழியாக்கம் : தி. அ. ஸ்ரீனிவாசன் விலை : ரூ. 130 பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 

Monday 16 October 2023

ஒளிர்தல்

 
சுடர் பிறக்கும் கணம் எது?
மலர் மலரும் கணம் எது?
மேகம் மழையென்றாகும் கணம் எது?
ஒளி கொண்டவை ஒவ்வொரு கணமும்
அவற்றில் 
பொன்னென ஒளிரும் கணங்கள் எவை?

Saturday 14 October 2023

பள்ளி வளாகம் - சட்ட விரோத மரம் வெட்டுதல் - புகார்

 இன்று பணி நிமித்தம் ஒரு கிராமத்துக்குச் செல்ல நேர்ந்தது. அந்த கிராமத்தில் இருந்த அரசுப்பள்ளியொன்றின் வளாகத்தில் இருந்த உயிர் மரத்தை இரும்பு ஆயுதங்கள் , இரும்புக் கருவிகள், கட்டிங் மெஷின், டிராக்டர் இவற்றைப் பயன்படுத்தி வெட்டிக் கொண்டிருந்தார்கள். அதனைக் காண நேர்ந்தது. அவர்கள் மரம் வெட்டத் துவங்கி இரண்டு மணி நேரம் ஆகியிருக்கலாம் என அங்கிருந்த சூழல் காட்டியது. அந்த பகுதியின் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அங்கிருந்து பத்து நிமிட பயண தூரத்தில் இருந்ததால் உடன் அங்கு சென்று பள்ளி வளாகத்தில் நடக்கும் விஷயத்தைக் கூறி மரம் வெட்டுதலை தடுத்து நிறுத்துமாறு கூறினேன். 

வீட்டுக்கு வந்து இது குறித்த ஒரு புகார் மனுவைத் தயாரித்து அனுப்பினேன். அதன் மொழிபெயர்ப்பைக் கீழே அளித்துள்ளேன். தமிழகத்தில் , அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்தில் அனுப்பப்படும் புகார் மனுக்கள் சற்று மேலதிக கவனத்துடன் அணுகப்படுகின்றன என்பது ஒரு நடைமுறை உண்மை. நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்படலாம் என்னும் சாத்தியக்கூறு அந்த மேலதிக கவனத்தை உருவாக்குகிறது. 

*******

அனுப்புநர்

&&&&&&

பெறுநர்

1. மாவட்ட ஆட்சியர்

2. வருவாய் கோட்டாட்சியர்

3. வட்டாட்சியர்

4. மாவட்டக் கல்வி அதிகாரி

ஐயா,

பொருள் : சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் குறித்த புகார்

பார்வை : ஊராட்சி ஒன்றியப் பள்ளி, &&&&& கிராமம், 14.10.2023

14.10.2023 அன்று , 11 மணி அளவில், மயிலாடுதுறை மாவட்டம், &&&&&& வட்டம், &&&&&& கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் இருந்த மரம் தோராயமாக 7 நபர்களால் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தது. இரும்பு ஆயுதங்கள், இரும்பு உபகரணங்கள், கட்டிங் மெஷின் மற்றும் டிராக்டர் ஆகியவை அவர்களால் மரம் வெட்ட பயன்படுத்தப்பட்டன. மரத்தின் கிளைகளை இழுக்க டிராக்டர் பயன்பட்டது. இந்த காட்சியை நான் அப்பகுதியைக் கடந்த போது கண்டேன். 

அதிர்ச்சியடைந்து நடந்த சம்பவத்தைக் குறித்து கூற வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். அங்கிருந்த ஊழியர்களிடம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் செயல் குறித்து கூறி அதனைத் தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். அங்கிருந்த ஊழியர்கள் வருவாய் ஆய்வாளரை அலைபேசியில் அழைத்து விஷயத்தைக் கூறி மரம் வெட்டுதலை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கையை உடன் மேற்கொள்ளுமாறு கூறினர். 

மேற்படி பள்ளி வளாகத்தில் மரம் வெட்ட வருவாய்த்துறையிடம் உரிய அனுமதி பெறப்பட்டதா என்பதை விசாரித்து அறியுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

அவ்வாறு அனுமதி பெறப்படவில்லையெனில் அங்கே மரம் வெட்டப்பட்டது ஒரு கிரிமினல் குற்றம் ஆகும். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், மரம் வெட்டியவர்கள், டிராக்டர் ஓட்டுநர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாவர். சட்டபூர்வமான நடவடிக்கை அவர்கள் மேல் மேற்கொள்ளப்பட வேண்டும். 

முதன்மையாக , கள்ளத்தனமாக மரம் வெட்டுதலுக்கு அளிக்கப்படும் ‘’சி’’ படிவம் உரிய விதத்தில் அளிக்கப்பட வேண்டும். உச்சபட்சமான அபராதம் விதிக்கப்பட வேண்டும். மரம் வெட்டுதலில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டர் வருவாய்த்துறையால் பறிமுதல் செய்யப்பட வேண்டும். 

இந்த மனுவின் மூலம், நிகழ்ந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறும் குற்றம் இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் வருவாய்த்துறையை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

தங்கள் உண்மையுள்ள,

*****

இடம் : 

நாள் : 14.10.2023

குற்றமும் தீர்ப்பும் : அரசியல் படுகொலையும் சி.பி.ஐ விசாரணையும்

 பத்திரிக்கையாளர் வி.சுதர்ஷன் எழுதிய ’’குற்றமும் தீர்ப்பும் : அரசியல் படுகொலையும் சி.பி.ஐ விசாரணையும்’’ என்ற நூலை வாசித்தேன். 

1987 ஆகஸ்ட் மாதத்தில் பெங்களூர் வந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் கொல்லப்படுகிறார். அவரது உடல் சேலம் அருகில் இருக்கும் ஓமலூரில் கண்டெடுக்கப்படுகிறது. ஓமலூரில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்ட போது அது கேரள வழக்கறிஞருடையது என அறியப்படவில்லை. வழக்கறிஞரின் குடும்பம் அவர் காணாமல் போய்விட்டதாகவே எண்ணிக் கொண்டிருக்கிறது. பல வாரங்கள் செல்கின்றன. ஓமலூர் அருகே கண்டெடுக்கப்பட்ட உடலின் ஆடைகளில் இருந்த காகிதங்களை ஆராய்ந்த போது அதில் பெங்களூர் தங்கும் விடுதி ஒன்றின் முகவரி இருக்கிறது. கர்நாடகக் காவல்துறை கேரள வழக்கறிஞர் கடைசியாக தங்கியிருந்ததாக கூறும் விடுதிகளின் முகவரிகளில் ஒன்று அது. ஓமலூர் அருகே கிடைத்த உடல் குறித்து தமிழ்நாடு காவல்துறை விசாரிக்கிறது. வழக்கறிஞர் காணாமல் போனது குறித்து கர்நாட்க காவல்துறை விசாரிக்கிறது. காணாமல் போன வழக்கறிஞர் குறித்த வழக்கு தொடர்பான தீவிர கவனத்தையும் அழுத்தத்தையும் கர்நாடக பார் கவுன்சிலும் செய்த்த்தாள்களும் உண்டாக்குகின்றன. தொடர் கவனம் காரணமாக வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உத்தரவிடுகிறது மாநில அரசு. 

சி.பி.ஐ விசாரணை அந்த வழக்கின் அறியப்படாத பல நிகழ்வுகளை நீதிமன்றத்தின் முன் வைக்கிறது. 

குற்றம் செய்தவர்களை குற்றத்துக்கு உடந்தையாயிருந்தவர்களை தேடிச் சென்று அவர்கள் மூலம் குற்றச் செயலில் ஈடுபட்ட மற்றவர்களைக் குறித்து அறிந்து அவர்களைச் சுற்றி வளைத்து ஒவ்வொருவர் தனித்தனியாகக் கொடுக்கும் வாக்குமூலத்திலிருந்து நிகழ்ந்த குற்றம் குறித்த முழுச் சித்திரம் இந்த வழக்கில் உருவாக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. 

இந்த குற்றம் நிகழ்ந்து சில ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த ராஜிவ் படுகொலை புலன் விசாரணைக்கு இந்த வழக்கின் அனுபவங்கள் சி.பி.ஐ க்கு பெரிதும் உதவியிருக்கின்றன. 

நூல் : ‘’குற்றமும் தீர்ப்பும் : அரசியல் கொலையும் சி.பி.ஐ விசாரணையும்’’ . ஆசிரியர் : வி. சுதர்ஷன் மொழிபெயர்ப்பு : ஈசன் விலை : ரூ. 200. பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில். 

Thursday 12 October 2023

புத்தகக் கண்காட்சி

 ஊரில் ஒரு புத்தகக் கண்காட்சி அமைத்திருந்தார்கள். சென்று பார்த்து வந்தேன். எனக்கு புத்தகங்களைப் பார்ப்பது என்பது மிகவும் பிடிக்கும். சின்ன வயதிலிருந்தே புத்தகத்தின் மீதான வசீகரம் என்பது மிகப் பெரியதாக இருந்திருக்கிறது. எங்கு புத்தகம் இருந்தாலும் அதனை எடுத்து முன் அட்டை பின் அட்டையைப் பார்த்து உள்ளே இருக்கும் பக்கங்களை மேலோட்டமாக ஒரு புரட்டு புரட்டுவது என்பது ஆகி வந்த பழக்கம். அவ்வாறு சில மாதங்களுக்கு முன் ஒரு புத்தகக் கண்காட்சியில் கண்ட புத்தகத்தின் பெயர் : Jerusalem : The Biography என்ற புத்தகம். அந்த புத்தகத்தின் முன் அட்டைப் படமும் பின்னட்டை வாசகங்களும் அதனை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கின. ஆனால் அப்போது வாங்கவில்லை. பின்னர் வாங்கிக் கொள்ளலாம் என இருந்து விட்டேன். சமீபத்தில் இணையத்தில் அந்த புத்தகம் குறித்து வாசிக்க நேர்ந்தது. அது ஒரு முக்கியமான புத்தகம் என அறிந்தேன். புத்தகங்கள் குறித்த ஆர்வத்துடன் இருப்பதும் புத்தகங்களுக்கு மனத்தில் எப்போதும் இடமளிப்பதுமே தொடர்ந்து புத்தகம் வாசிக்கவும் அறிவுச் செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பதற்குமான சிறந்த வழி. ’’கல்வி கரையில ; கற்பவர் நாள் சில ‘’ என்பது அனுபவ உண்மை. என்னிடம் 1000 புத்தகங்கள் இருக்கக் கூடும். எனினும் அவற்றில் நான் இன்னும் வாசிக்காத சில புத்தகங்களும் இருக்கும். இருப்பினும் எங்கேனும் புத்தகக் கடைகளிலோ புத்தகக் கண்காட்சிகளிலோ புதிய புத்தகங்களைக் காணும் போது ஒரு புத்தார்வம் ஏற்படவே செய்கிறது. 

எந்த புத்தகக் கண்காட்சி ஆயினும் அதனை முதலில் வலம் வருவேன். முதல் சுற்றில் புத்தகங்களைக் காண மட்டும் செய்வேன். வாசித்த பல நூல்கள் கண்ணில் படும். அந்த நூல்களை வாசித்த காலமும் வாசித்த சூழ்நிலையும் நினைவுக்கு வரும். அந்த நினைவுகளில் மூழ்கிய வண்ணம் ஒரு சுற்று முடிப்பேன். பின்னர் நான் வாங்க நினைக்கும் புத்தகங்களை இரண்டாம் சுற்றில் ஒரு பாக்கெட் நோட்டில் குறித்துக் கொள்வேன். பின்னர் சில நாட்கள் கழித்து மூன்றாம் சுற்றில் நூல்களை வாங்குவேன். புத்தகக் கண்காட்சிக்கு மூன்று முறை செல்ல ஒரு வாய்ப்பு என்பது நல்ல விஷயம். சென்னை புத்தகக் கண்காட்சியில் கூட இந்த முறைதான் பின்பற்றுவேன். ஒரே தினத்தில் ஊர் திரும்ப வேண்டும் என்றால் கூட காலை முழுதும் புத்தகங்களைப் பார்வையிடுதல். மாலைக்கு மேல் நூல்களை வாங்குதல். 

புனைவுகள் அளவுக்கே அ-புனைவுகளை வாசிக்கும் வழக்கம் எனக்கு உண்டு. அதனால் எனது வாசிப்பு பலதரப்பட்டதாக இருக்கும். 

என் கவனத்தில் வந்த புத்தகங்களின் பட்டியலை இங்கே சொல்கிறேன். சில நாட்களில் அங்கே சென்று நூல்களை வாங்குவேன். அப்போது வாங்கிய நூல்களின் பட்டியலை அளிக்கிறேன். வாசித்த நூலைக் குறித்து அவசியம் எழுதவும் செய்வேன். 

தி.ஜானகிராமனின் அ-புனைவு நூல்கள் சிலவற்றைக் கண்டேன். அவரது சிறுகதை, குறுநாவல், நாவல்கள் பரிச்சயமானவை. அவரது சிறுகதைகள் முழுத் தொகுப்பாகவே வந்திருக்கிறது. அவரது சிறுகதைகளில் பாதி கதைகள் குறித்து நான் குறிப்புகள் வடிவில் எழுதியிருக்கிறேன். இருப்பினும் தி.ஜாவின் வாசித்த பிரதி என்றாலும் அதன் மீது ஓர் ஈர்ப்பும் வசீகரமும் இருக்கவே செய்கிறது. 

நேதாஜி குறித்த நூல் ஒன்றைக் கண்டேன். அதில் சில பக்கங்களை வாசித்தேன். அந்த நூலை வாங்க வேண்டும் என எண்ணம் கொண்டேன். 

’’நகரத்தார் கலைக் களஞ்சியம்’’ என ஒரு நூல். நாட்டுக்கோட்டை செட்டியார் குறித்த நூல். அதில் இருந்த விவரங்களும் தரவுகளும் ஆர்வமூட்டின. அதனை வாசிக்க ஆர்வம் உண்டானது. 

சதாசிவப் பண்டாரத்தார் , நீலகண்ட சாஸ்திரி ஆகியோரின் நூல்கள் இருந்தன. அவர்களின் நூல்களை வாசித்திருக்கிறேன். இருப்பினும் நான் வாசிக்காத சில நூல்கள் இருந்தன. 

குடவாயில் பாலசுப்ரமணியனின் நூல்கள் மிகப் பெரியவை. ஒவ்வொரு முறை காணும் போதும் இன்னும் வாசிக்காமல் இருக்கிறோமே என எண்ண வைப்பவை. 

ஓரிரு நாளில் சென்று நூல்களை வாங்கி வர வேண்டும். 

லாக்கர் ( நகைச்சுவைக் கட்டுரை)

 அமைப்பாளரின் நண்பர் ஒருவருக்கு நெருக்கமான உறவினர் ஆடுதுறையில் வசிக்கிறார். அவர் வீட்டில் வசித்த அவரது உறவினர் ஒருவர் ஓராண்டுக்கு முன்னால் காலமாகி விட்டார். அவர் திருமணமாகாதவர். அவரது சேமிப்புக் கணக்குக்கு அமைப்பாளரின் நண்பரின் நெருக்கமான உறவினரை வாரிசாக நியமித்திருந்தார். அவர் காலமானதும் ஒரு வருடம் கழித்து நாமினிக்கு அவர் சேமிப்புக் கணக்கிலிருந்த பணம் கிடைத்தது. காலமானவர் தனது வங்கி லாக்கரின் சாவியையும் உறவினரிடமே ஒப்படைத்திருந்தார். உறவினர் காலமாகி ஒரு வருடத்துக்குப் பின் நிகழும் நீத்தார் சடங்குகள் முடிந்த பின் அவரது வங்கிக் கணக்கு விஷயங்களைப் பார்த்துக் கொள்ளலாம் என இருந்து விட்டனர். ஒரு வருடம் கழித்து வங்கிக்குச் சென்ற போது அக்கவுண்ட் ஹோல்டரின் மரணம் சம்பவித்து ஏன் ஒரு வருடம் கழித்து வருகிறீர்கள் என கேட்டு அந்த விஷயத்தை வழக்கம் போல் நிலுவையில் வைத்து விட்டார்கள். பின்னர் ஒரு சிறிய போராட்டத்துக்குப் பின் அந்த தொகையை நண்பரின் உறவினர் கைவசப்படுத்தியிருக்கிறார். அவரிடம் வங்கி ஊழியர்கள் மரணித்த வாடிக்கையாளரின் லாக்கருக்கு வாடகை கட்டுங்கள் எனக் கேட்டு அந்த தொகையை வங்கி லாக்கருக்காக வரவு வைத்து ரசீது கொடுத்திருக்கிறார்கள். லாக்கரில் உள்ள உடைமைகளை கேட்ட போது அதில் யாருமே நாமினி இல்லை ; அதனை வழங்குவதில் நிறைய நடைமுறைகள் உள்ளன என வங்கியில் கூறியிருக்கின்றனர். நண்பரின் உறவினருக்கு பலரும் பலவிதமான அறிவுரைகள் கூறியிருக்கிறார்கள். எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்து விட்டு உறவினர் சோர்ந்து விட்டார். விஷயம் கடைசியாக அமைப்பாளர் கவனத்துக்கு வந்தது. அமைப்பாளர் நேற்று அவர் வீட்டுக்குச் சென்றார். 

அமைப்பாளரின் நண்பருக்கு சித்தப்பா அவர். எனவே அமைப்பாரும் அவரை சித்தப்பா என்றே அழைப்பார். 

நாற்காலியில் அமர்ந்தார் அழைப்பாளர். சித்தப்பா குடும்பமே அவர் எதிரில் அமர்ந்தது. சித்தப்பா, சித்தி, அவர்கள் மருமகள், கைக்குழந்தைகளான இரு பேரன்கள். கைக்குழந்தைகளான இரு பேரன்கள் அமைப்பாளருக்கு மற்றவர்கள் காட்டும் பிரியத்தைக் கண்டதும் இவர் குடும்பத்துக்கு முக்கியமான ஒருவர் என யூகித்து அமைப்பாளரிடம் மிகவும் சினேகம் பாராட்டத் துவங்கினர். இருவரும் ஓரிரு மழலைச் சொற்களையே உச்சரிக்கின்றனர் என்றாலும் தனக்குத் தெரிந்த சொற்களை அமைப்பாளரிடம் கூறி உரையாட அழைத்தனர்.  அமைப்பாளருக்கு அந்த இரு குழந்தைகளைக் கண்டதும் கண்ணதாசனின் ‘’சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ’’ என்னும் பாடல் மனதில் ஓடத் துவங்கியது. 

‘’ஒரு ஒயிட் பேப்பர் கொடுங்க’’ அமைப்பாளர் கேட்டார். 

சித்தி ஒயிட் பேப்பர் கொண்டு வந்து கொடுத்தார்கள். 

ஒயிட் பேப்பரில் பென்சில் வைத்து ஸ்கேலால் மார்ஜின் இட்டு தான் அமைப்பாளர் எழுத ஆரம்பிப்பார். அமைப்பாளருக்கு அவருடைய சின்ன வயதில் ஒயிட் பேப்பரில் மார்ஜின் போட்டுதான் எழுத வேண்டும் என்று யாரோ சொல்லி விட்டார்கள். அதை இன்றளவும் எள்ளளவும் பிசகின்றி பின்பற்றி வருகிறார். அமைப்பாளரின் எழுது மேஜையில் எது இருக்கிறதோ இல்லையோ ஸ்கேலும் கூரான ஹெச் பி பென்சிலும் இருக்கும் ; இப்போது மடிக்கணினியில்தான் எழுதுகிறார் என்றாலும்.

‘’மார்ஜின் போட ஸ்கேலும் பென்சிலும் வேணும்’’ அமைப்பாளர் கேட்டார். 

சித்தி பென்சிலை தேடி எடுத்து விட்டார்கள். ஸ்கேல் அகப்படவில்லை. ஆனால் மார்ஜின் போட அவர்கள் வேறொரு வஸ்துவை கொண்டு வந்தார்கள். அது அவர்கள் வீட்டு பூஜை ஷெல்ஃபில் இருந்தது. 

அமைப்பாளர் அதைப் பார்த்தவுடன் ‘’ஆ ! இது ரூலர். உங்க அப்பாவுடையதா ?’’ என்று கேட்டார். 

சித்திக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ‘’ஆமாம் . அப்பாவுடையது. அவர் இதைத்தான் மார்ஜின் போட யூஸ் பண்ணுவார்.’’ என்று கூறினார். 

ரூலர் என்பது தேக்கு மரத்தாலானது. உருளை வடிவம் கொண்டது. வழ வழ என பளபளப்பாக இருக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. 1980களில் கண்ணாடி ஸ்கேல் வந்த பின் ரூலர் பயன்பாடு குறைய ஆரம்பித்தது. 

சித்தியின் அப்பாவின் தொழில் ரியல் எஸ்டேட். கிரயப் பத்திரம் எழுதித் தருவது உண்டு என்பதால் அவர் வீடு எப்போதும் ஜே ஜே என இருக்கும் என சித்தி கூற அமைப்பாளர் கேட்டதுண்டு. அவர் பயன்படுத்திய ரூலரை அவருடைய ஞாபகமாக தனது வீட்டு பூஜை அறையில் வைத்திருக்கிறார் சித்தி. 

வெள்ளைக்காகிதத்தில் ரூலர் கொண்டு மார்ஜின் போட்டார் அமைப்பாளர். பேப்பரில் மார்ஜின் போட்டதுமே மனதில் அமைப்பாளருக்கு ஒரு நிதானம் கூடும். விஷயம் ஒரு ஒழுங்குக்குள் வருவதாக ஒரு நினைப்பு. 

பிள்ளையார் சுழி போட்டார். அதன் கீழே ‘’கணபதி துணை’’ என எழுதினார். வீட்டில் அனைவருக்குமே அதைக் கண்டதும் ஏதோ தெய்வ காரியம் என்ற உணர்வு ஏற்பட்டு விட்டது. 

’’இறந்தவருடைய அப்பா பெயர் என்ன? ‘’

சித்தப்பா பெயரைச் சொன்னார். அது தசரத குமாரர்களில் ஒருவர் பெயர். அப்பெயரை எழுதிக் கொண்டார். 

’’இறந்தவருடைய அம்மா பெயர் என்ன ?’’

சித்தப்பா சொல்ல அமைப்பாளர் அதனையும் எழுதிக் கொண்டார். பின்னர் இறந்தவர் பெயரையும் அவரது மற்ற விபரங்களையும் பேப்பரில் எழுதினார். எழுதி முடித்ததும் விஷயம் ஒரு வடிவத்துக்குள் இருப்பதாக அமைப்பாளருக்குத் தோன்றியது. 

அந்த விஷயத்துக்குள் சித்தப்பா குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் இருந்த ஒரு குடும்பப் பூசல் இருந்தது. அது குறித்து சித்தப்பா குடும்பத்தின் பேரக் குழந்தைகள் தவிர மற்ற மூவரும் தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டி தங்கள் அபிப்ராயங்களைக் கூறத் தொடங்கினர். 

அமைப்பாளர் ‘’ஸ்டாப் ! ஸ்டாப் ! ஸ்டாப்’’ எனக் கூறி அவர்கள் மூவரையும் மௌனமாக்கினார். 

‘’நான் சொல்றத கவனமா கேளுங்க. இப்ப ஃபேமிலி விஷயம் நாம டீல் பண்ற விஷயத்துக்குல்ல வராது. ஃபேமிலி விஷயத்துல நாம கவனம் செலுத்துனா பேங்க் விஷயத்துக்கு நாம கொடுக்க வேண்டிய கவனம் குறைஞ்சிடும். நாம முதல்ல பேங்க் ஐ டீல் பண்ணுவோம். அது முடிஞ்சப்பறம் மத்த விஷயத்தை சால்வ் பண்ணுவோம்’’ 

அமைப்பாளர் சொன்னதால் சரி என ஒத்துக் கொண்டார்கள். 

‘’இப்ப அந்த பேங்க் லாக்கர்ல என்ன இருக்குன்னு நமக்குத் தெரியாது. அதுல நகை இருக்கலாம். பணம் இருக்கலாம். எம்ப்டியா கூட இருக்கலாம். இந்த விஷயத்துல முதல் ஸ்டெப் அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கறது. எம்ப்டியா இருந்தா விஷயமே ஒன்னும் இல்ல. கொஞ்சமா நகையிருந்தாலும் யாரும் மெனக்கெட போறதில்லை. அதுனால அத முதல்ல தெரிஞ்சுக்கணும்’’

‘’பேங்க்ல லாக்கர்ல என்ன இருக்குன்னு சொல்ல மாட்டோம்னு சொல்றாங்களே’’ சித்தி சொன்னார். 

‘’நீங்க விஷயத்தை விளக்கி எழுத்துபூர்வமா கேட்டீங்களா?’’

‘’இல்லை . நேரா போய் பேசினோம்’’

‘’அந்த அதிகாரி கடமையைச் சரியா செய்றவரா இருந்தா உங்க கோரிக்கை என்னன்னு எழுத்துபூர்வமா கொடுங்கன்னு கேட்டிருக்கணும். அப்படி இல்லாம தர முடியாதுன்னு எப்படி சொல்லலாம். நாம முதல்ல நம்ம கோரிக்கையை பேங்க் மேனேஜருக்கு அனுப்புவோம்’’ 

சித்தி ‘’சரி’’ என்றார். 

’’வங்கி அதிகாரிகளையும் இரண்டு சாட்சிகளையும் வைத்துக் கொண்டு லாக்கரை ஓப்பன் பண்ணி அதுல உள்ள திங்க்ஸ் லிஸ்ட் ஐ முதல்ல கேட்போம். அப்புறம் அதை கிளைம் பண்ணுவோம். ஒருவேளை லாக்கர் எம்ப்டின்னா இந்த விஷயம் இதோட முடிஞ்சிடும். உள்ள ஏதாவது திங்ஸ் இருந்தா அத லிஸ்ட் பண்ணிக்குவோம். அதுவே விஷயத்தை ஒரு ஸ்டெப் ஃபார்வர்டு பண்ணிடும். அதுக்கு அப்புறம் தேவைன்னா கோர்ட்டுக்கு போய் நாம விஷயத்தை சால்வ் பண்ணிடலாம்’’

அமைப்பாளரின் திட்டமிடல் சரியாக திசையில் தான் இருக்கிறது என சித்தி குடும்பத்தினர் எண்ணினர். அமைப்பாளரும் எண்ணினார். 

‘’அப்புறம் ஒரு விஷயம். நாம மனுவை மேனேஜருக்கு மட்டும் அனுப்பக் கூடாது. மேனேஜர், சோனல் மேனேஜர், ஜெனரல் மேனேஜர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர்னு ஐந்து பேருக்கு அனுப்பிடுவோம். விஷயம் சீக்கிரமா ஒரு முடிவுக்கு வரும்’’

அனைவரும் ஒத்துக் கொண்டார்கள். மனுவை இன்னொரு பேப்பரில் தெளிவாக அமைப்பாளர் எழுதி சித்தப்பாவிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டார். 

‘’மனுவை 5 காப்பி ஜெராக்ஸ் எடுக்கணும்’’

‘’இன்னைக்கு லோக்கல்ல முழு கடையடைப்பு’’

‘’சரி ! நான் ஊருக்குப் போய் ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிடறன்’’ 

அமைப்பாளர் மனுவை உறையில் இட்டு அதனை மேஜை மீது வைத்து விட்டு ஆசுவாசமானார். ஆசுவாசமான சில நிமிடங்களில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. 

’’சித்தி ! எனக்கு ஒரு விஷயம் தோணுது. இந்த விஷயத்துல நான் அவுட் சைடர் தான். நான் பேங்க்குக்கு போய் சம்பந்தப்பட்ட ஊழியரோட விஷயத்தைச் சொல்லி பேசி பாக்கறன்’’

சித்தப்பா குடும்பத்துக்கு அது நல்ல யோசனை என்று பட்டது. சம்மதித்தினர். 

அமைப்பாளர் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு சென்றார். அங்கே இருந்த அதிகாரி அமைப்பாளருக்கு முன்னரே பரிச்சயம் ஆனவர். எவ்வாறெனில் அந்த ஊழியர் பணி புரிந்த வங்கிக் கிளையின் இன்னொரு ஊழியர் மீது பொது காரணம் ஒன்றுக்காக அமைப்பாளர் ஒரு புகார் கொடுத்து அந்த ஊழியர் அதிலிருந்து மீள படாத பாடு பட்டது அவருக்குத் தெரியும். 

‘’சார் நீங்களா?’’

‘’நானேதான். ஸ்மால் வேர்ல்டு பாருங்க’’ அமைப்பாளர் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னார். 

‘’நாங்க என்ன ரூல்ஸ்னு பாக்கறோம் சார்’’

‘’அப்ப இந்த விஷயம் ஆரம்பிச்சு இத்தனை நாளா இன்னும் ரூல்ஸ் என்ன புரொசிஜர் என்னன்னு பாக்கலயா?’’

’’ஒரே வேலை சார்’’

‘’அவங்க டிமாண்ட் ஐ மனுவா அனுப்பலாமான்னு கேட்டாங்க. நான் தான் ஒரு தடவை நேரா பேசிட்டு வரேன்னு சொல்லிட்டு வந்தன். அவங்க பேங்க் ரூல்ஸ்க்கு முழுமையா கட்டுப்படுவாங்க. என்ன புரொசிஜரோ அத ஃபாலோ பண்ணுவாங்க. இந்த விஷயத்துல சீக்கிரமா ஒரு முடிவு எடுங்க’’

அமைப்பாளர் சித்தி வீட்டுக்குத் திரும்பி வந்தார். மதிய உணவு தயாராக இருந்தது. அருந்தி விட்டு மனுவை 5 பேருக்கு அனுப்ப ஊருக்குக் கிளம்பினார் அமைப்பாளர்.  

Tuesday 10 October 2023

உண்ணா விரதம் ( நகைச்சுவைக் கட்டுரை)

 அமைப்பாளருக்கு சகோதரன் போன்றவனும் உயிர் நண்பனுமான வங்கி மேலாளர் அமைப்பாளருக்கு ஃபோன் செய்தார். 

‘’அண்ணன் ! உங்க தளத்துல 21 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போறதா சொல்லியிருக்கீங்க. அந்த பதிவை வாசிச்சேன். அடுத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்கறதே உங்களுக்கு வேலையா இருக்கு’’ 

மேலாளர் குரலில் கடும் கோபம் வெளிப்பட்டதை அமைப்பாளர் உணர்ந்திருந்தார். இந்த நேரத்தில் எது சொன்னாலும் சரியாக இருக்காது என்பதால் மௌனமாக இருந்தார். 

‘’இப்ப உங்களுக்கு ஒரு பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் நடந்துட்டு இருக்கு. ஒரு பெரிய ஒர்க் இன்னும் ஒரு மாசத்துல ஆரம்பிக்க இருக்கீங்க. இந்த நேரத்துல இதெல்லாம் தேவையா அண்ணன்?’’

அமைப்பாளர் அதற்கும் ஒன்றும் சொல்லாமல் இருந்தார். 

‘’எனக்கு நல்லா தெரியும் உங்களால பசி தாங்க முடியாது. சாப்பாட்டு ஞாபகம் இல்லாம உங்களால எத்தனை மணி நேரம் வேணும்னாலும் இருக்க முடியும். ஆனா சாப்பாடு ஞாபகம் வந்துட்டா உங்களுக்கு உடனே சாப்ட்டு ஆகனும். ‘’

மேலாளர் சரியாகவே அவதானித்திருக்கிறார் என அமைப்பாளர் எண்ணினார். 

‘’என்ன சைலண்ட்டா இருக்கீங்க. விரிவா விளக்கம் கொடுப்பீங்களே?’’

அமைப்பாளர் துவங்கினார் . ‘’ தம்பி ! நீ சொல்றது எல்லாமே நூத்துக்கு நூறு உண்மை ‘’

மேலாளர் மௌனமாக இருந்தார். அவர் விளக்கத்துக்கு செவி கொடுக்க தயாராக இருக்கிறார் என்பதை உணர்ந்து தான் நினைப்பதைக் கூற ஆரம்பித்தார் அமைப்பாளர். 

‘’முதல் விஷயம் நான் அறிவிச்சதால தான் உங்க அத்தனை பேருக்குமே விஷயம் தெரிஞ்சது. நான் இதைச் சொல்லாம முயற்சி செய்திருக்க முடியும்’’

‘’உண்மைதான்’’

‘’நண்பர்களும் நலம் விரும்பிகளும் இதை ஏத்துக்கவே மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். கவலைப்படுவீங்கன்னும் எனக்குத் தெரியும்’’

மேலாளர் மௌனமாக இருந்தார். 

‘’முதல்ல நான் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தறன். 21 நாள் உண்ணாவிரதம் இருக்கணும்னு நினைக்கறன். 3 நாளைக்கு மேல் முடியலைன்னா நான் உண்ணாவிரதத்தை முடிச்சுக்கறன்னு அறிவிச்சுடறன். 21 நாள் சொன்னமே 3 நாள்ல முடிச்சுக்கறனேன்னு ஃபீல் பண்ண மாட்டேன். ‘’

’’முடியலன்னா முடிச்சுக்க தானே வேண்டும். உங்களுக்கு வேற வழி இல்லையே ‘’ என்றார் மேலாளர். அவர் சொல்வது உண்மைதான் என எண்ணினார் அமைப்பாளர். 

‘’ நான் உனக்கு ஒரு வாக்கு கொடுக்கறன். எனக்கு ரொம்ப சிரமமா இருந்தா ஒரு நிமிஷம் கூட உண்ணாவிரததைக் கண்டினியூ பண்ண மாட்டேன். ‘’ 

மேலாளர் ஒன்றும் சொல்லவில்லை. 

‘’கே. எஸ் ஸும் நீங்களும் ஜெயின் டெம்பிள்ஸ் போயிட்டு வந்ததிலிருந்துதான் நீங்க இப்படி ஆரம்பிச்சிருக்கீங்க. அவன் நல்லா நார்த் இந்தியால ‘’நான் - கோபி மஞ்சூரியன்’’ சாப்டிட்டு இருக்கான்’’

‘’கே. எஸ் ஸை குத்தம் சொல்லாத. அவன் என்ன செய்வான்?’’

‘’அவன் உண்ணாவிரதம் பத்தி என்ன சொன்னான்?’’

‘’ஜெயின் டெம்ப்ள்ஸ்ல இருந்தப்பவே உங்களுக்கு மனசுல தோணிடுச்சுன்னு சொன்னான்’’. 

‘’இதெல்லாம் எதுக்கு அண்ணன்?’’

‘’ஒரு சேஞ்ச்க்குன்னு வச்சுக்க’’

‘’காந்தி ஜெயந்தி அன்னைக்கு ஃபாஸ்டிங் ஆரம்பிக்கணும்னு பிளான் பண்ணீங்க. அதுவே உங்களால முடியல். சைட் ஒர்க் இருந்துச்சு. நீங்க இருந்து ஆகணும். போஸ்ட் போன் பண்ணியிருக்கீங்க. உங்களுக்கு எப்ப ஒர்க் இல்லாம இருக்கும் சொல்லுங்க?’’

‘’உண்மைதான்’’ 

‘’ஃபாஸ்டிங் இருக்கறப்ப வெயில்ல வெளிய போகாதீங்க. வெளியில போறத குறைச்சுட்டு வீட்டுல இருங்க. நீங்க மனசால நினைக்கற அளவு விஷயம் ஈஸி இல்ல’’ 

‘’பாத்துக்கறன் தம்பி’’

‘’எனக்கு கொடுத்த வாக்கு ஞாபகம் இருக்கட்டும்’’

‘’எப்பவும் ஞாபகம் இருக்கும் தம்பி’’.  

அகவலிமை

 நாம் பல விஷயங்களுக்குப் பழகியிருக்கிறோம். சமூகப் பழக்கங்கள் பல நம்மைச் சூழ்கின்றன. நூறாண்டுகளுக்கு முன்னால் நம் தினசரி வாழ்க்கையில் காஃபி, தேனீர் ஆகிய பானங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. வீடுகளில் நம் உணவில் அவை இல்லை. பின்னர் பல்வேறு காரணங்களால் மக்கள் அதனைப் பழக ஆரம்பித்தனர். இன்று நாம் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை தேனீர் அல்லது காஃபி அருந்துகிறோம். நண்பர்கள் உறவினர்களை தேனீர் அல்லது காஃபி அளித்து உபசரிக்கிறோம். பால், சர்க்கரை, காஃபித் தூள் ஆகிய மூன்றுமே வயிற்றின் செரிமான சுரப்பிகளுக்கு அவ்வளவு உகந்தவை அல்ல எனத் தெரியவந்தாலும் நம்மால் தேனீர் , காஃபி பழக்கத்திலிருந்து எளிதில் விடுபட முடிவதில்லை. 

இந்த முறை 21 நாட்கள் உண்ணாவிரதத்துக்குப் பின் முழுமையாக பால், காஃபி, தேனீர் ஆகியவற்றைத் தவிர்க்கலாம் என இருக்கிறேன். 

21 நாட்கள் உண்ணாவிரதத்துக்குப் பின் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு மட்டும் எடுத்துக் கொள்ள உள்ளேன். காலை 7 மணிக்கு ஒரு வேளை. மாலை 5 மணிக்கு ஒரு வேளை. வாரத்தில் ஒருநாள் வியாழக்கிழமை முழுமையான உபவாசமிருக்க எண்ணியுள்ளேன். வாரம் ஒரு நாள் எனில் ஆண்டுக்கு 52 தினங்கள் முழுமையாக உணவு தவிர்த்த நாட்களாக அமையும். வீட்டில் இருக்கும் போது என்னால் சில நிமிடங்கள் கூட பசி பொறுக்க முடியாது என்பதே எனது இயல்பு. சில விஷயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். கடுமையாக முயற்சி தேவைப்படும் என்றாலும் அதனை அளிப்பதே சரி என்று படுகிறது. 

இந்த முயற்சிகள் அனைத்துமே மார்க்க சகாயமாக விளங்கக்கூடியவை என்பதை அறிவு ஏற்றுக் கொள்கிறது. உடலும் மனமும் ஏற்க வேண்டும். 

பெரிய லௌகிக முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். பொதுப்பணிகளில் ஆற்றுவதற்கென ஏகப்பட்ட பணிகளும் திட்டங்களும் உள்ளன. படைப்புச் செயல்பாடுகளையும் ஆற்றுகிறேன். முயற்சிகளையும் பணிகளையும் செயல்பாடுகளையும் தீவிரமாக்கிக் கொள்ள அகவலிமையைக் கூட்ட வேண்டும். இந்த 21 நாட்கள் அதற்கு உதவும் என்று கருதுகிறேன். 

ஆழி சூழ் உலகின் ஒவ்வொரு கணப்பொழுதும் அரியவை. இந்த உணர்வு வாழ்வின் கடைசிக் கணம் வரை இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 
 

Sunday 8 October 2023

எனது படைப்புகள் - தொகுப்பு -நூல் வடிவம்


எனது படைப்புகளைத் தொகுத்து நூல்களாகக் கொண்டு வரலாம் என்ற எண்ணம் உள்ளது. 

தமிழில் கவிதை, சிறுகதை, கட்டுரை, பயணக்கட்டுரை ஆகிய இலக்கிய வடிவங்களில் எனது படைப்புகள் உள்ளன. எனது கவிதைகள் தொகுக்கப்பட வேண்டும். இணைய இதழ்களிலும் அச்சிலும் வெளியான எனது சிறுகதைகளை ஒரு வரிசையில் அடுக்கி தொகுத்து வைத்திருக்கிறேன். தொகுக்கப்பட்ட அந்த சிறுகதைகளை ஒரு சிறுகதைத் தொகுப்பாகக் கொண்டு வர வேண்டும். கம்ப ராமாயணம் குறித்து ‘’யானை பிழைத்தவேல்’’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளையும் நூலாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்குப் பிடித்த திருக்குறள்கள் குறித்து ‘’ஆசான் சொல்’’ என்னும் தலைப்பில் குறிப்புகளை எழுதியுள்ளேன். அவையும் நூலாக வேண்டும். இந்திய நிலமெங்கும் மோட்டார்சைக்கிளில் பயணித்து எழுதிய பயணக்கட்டுரையான ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ நூலாக வேண்டும். எனது கட்டுமானத் தொழில் சார்ந்த அனுபவங்களைக் குறித்து எழுதிய குறிப்புகளை ‘’எமக்குத் தொழில்’’ என்ற தலைப்பில் தொகுக்க வேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது. ‘’காவிரி போற்றுதும்’’ குறித்து எழுதிய குறிப்புகளையும் நூலாக்க வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது. ஒரே நேரத்தில் இத்தனையையும் எவ்விதம் செய்வது என்னும் மலைப்பு நூலாக்கத்துக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் துவங்க இயலாமல் செய்கிறது. ஒரே நேரத்தில் ஏழு நூல்கள் கொண்டு வர வேண்டும் என்பது பெரும்பணி ; முதலில் சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வரலாமா என்று யோசித்தேன். ஏழு நூல்களையும் கொண்டு வருவதே பொருத்தமாக இருக்கும் என்றும் தோன்றுகிறது. எந்த முடிவும் எடுக்கப்படாமல் விஷயம் நிலுவையில் உள்ளது. 

நூல் அச்சு வடிவம் பெறுதல் என்னும் பதிப்புப்பணி தனி விதமானது. சில நண்பர்களின் படைப்புகள் சில நூல் வடிவம் பெறுவதில் எனது பங்களிப்பு சிறு அளவில் இருந்திருக்கிறது என்பதால் நூல்களின் உருவாக்கம் குறித்த அறிமுகமும் சிறு பரிச்சயமும் எனக்கு உண்டு. 

எழுதுவதுடன் என் பணி முடிந்து விட்டது என்றே நான் எண்ணுகிறேன். எல்லா எழுத்தாளர்களுக்கும் அவ்வாறு தோன்றும். எனது படைப்புகள் நான் எண்ணும் வண்ணம் வெளியாக நாளும் பொழுதும் கூடி வர வேண்டும். பார்க்கலாம்.   

Wednesday 4 October 2023

கான்கிரீட்டுக்குப் பின் ( நகைச்சுவைக் கட்டுரை)

 அமைப்பாளர் ரூஃப் கான்கிரீட் முடிந்த பின் ஒரு வார காலம் அவகாசம் கிடைக்கும் என எண்ணி சில தனிப்பட்ட விஷயங்களைத் திட்டமிட்டிருந்தார். ஒரு நாளும் இல்லாத திருநாளாக சிறு சிறு பணிகள் வருவதும் அவை முழுமையாக நிறைவு பெற கூடுதல் நாட்களை எடுத்துக் கொள்வதும் கான்கிரீட்டுக்குப் பின் சற்று கூடுதலாகவே நிகழ்கிறது.  3 ஏக்கரில் தேக்கு பயிரிட்டு தேக்கு பண்ணையை உருவாக்கியிருக்கும் ஐ டி கம்பெனி ஊழியர் தனது பண்ணைக்கு கான்கிரீட் காலம் அமைத்து அதில் கேட் போட வேண்டும் என்று அமைப்பாளரிடம் அவர் வணிக வளாகம் அஸ்திவாரப் பணிகளைச் செய்து கொண்டிருந்த போதிலிருந்து சொல்கிறார். தரைத்தளம் ரூஃப் கான்கிரீட்டே முடிந்து விட்டது. இப்போது தான் அந்த பணியைச் செய்யவிருக்கிறார். கேட் பட்டறையிலிருந்து சென்று விட்டது. நாளை ஜல்லி , மணல் இறக்கி பணி ஆரம்பிக்க வேண்டும். 

அமைப்பாளரின் ஒரு நண்பர் தனது இடத்தில் ஒரு சிறு அறை ஒன்றை அமைத்துத் தர சொன்னார். அறை கட்டப்பட்டு விட்டது. பூச்சு வேலை செய்து டைல்ஸ் ஒட்டித்தர நண்பர் சொல்கிறார். தேக்குப் பண்ணை பணி முடிந்ததும் அதனையும் செய்ய வேண்டும். 

அமைப்பாளருக்கு ‘’கடலில் எப்போது அலை ஓய்வது ? எப்போது ஸ்னானம் செய்வது ?’’ என்னும் பழமொழி ஏன் கான்கிரீட்டுக்குப் பின் அடிக்கடி ஞாபகம் வருகிறது என்பது புரியவே இல்லை.    

Monday 2 October 2023

கான்கிரீட் பணியாளர்கள்

அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் என கட்டுமானம் இருவகையாக வகைப்படுத்தப்படும். எந்த கட்டிடமும் இந்த இரண்டு வகையான நிலைகளைக் கொண்டிருக்கும். அஸ்திவாரம் அதனை ஒட்டிய பணிகள் அடிக்கட்டுமானத்திலும் அஸ்திவாரத்துக்கு மேலே நிகழும் பணிகள் மேற்கட்டுமானத்திலும் சேரும். புவியை அகழ்ந்து புவி மட்டத்துக்கு கீழே சென்று பணி புரிவதால் அடிக்கட்டுமானம் சற்று கடுமையான பணி. புவி மட்டத்திலிருந்து எட்டு அடி ஆழம் செல்கிறோம் என்றாலும் அத்தனை அடி குழி தோண்டி அத்தனை மண்ணையும் வெளியே எடுத்துக் கொட்டுதல் என்பது பெரும் பணி. 

20 ஆண்டுகளுக்கு முன்னால், கட்டுமானப் பணிக்கு வந்த போது கான்கிரீட் பணியாளர்கள் பணி செய்யும் முறையை அறிந்து கொண்டேன். இவர்கள் 30லிருந்து 50 பேர் கொண்ட சிறு சிறு குழுவாக இருப்பார்கள். ஊரில் ஆறு அல்லது ஏழு இடங்களில் குடியிருப்பார்கள். இவர்கள் அனைவரும் சொந்தக்காரர்களாக இருப்பார்கள். 

குடும்பத்தில் இருக்கும் ஆண்கள், பெண்கள் அனைவரும் கான்கிரீட் பணியிலும் மண்ணைத் தோண்டும் பணியிலும் ஈடுபடுவார்கள். காலை 7 மணிக்கு பணிகளுக்குப் புறப்படுவார்கள். தூக்கு வாளிகளில் பழைய சோறு எடுத்துக் கொள்வார்கள். பணியிடத்துக்குச் சென்று அங்கே உணவருந்துவார்கள். பின்னர் பணியைத் துவங்குவார்கள். மிகக் கடுமையான உடல் உழைப்புப் பணி. கோடரி, மண்வெட்டி இவற்றைப் பயன்படுத்தி மண்ணை வெட்டி எடுப்பார்கள். இப்பணி புரியும் ஆண்கள், பெண்களின் உடல் வலிமை என்பது அளப்பரியது. சிறு சிரமமும் இல்லாமல் மண், ஜல்லி, மணல் ஆகியவற்றை அள்ளி சுமந்து கொட்டுவார்கள். அனேகமாக ஊரில் நடக்கும் எல்லா அடிக்கட்டுமான கான்கிரீட் பணிகள் சாலைப் பணிகளும் இவர்களின் மூலமே நிகழும். 

இவர்கள் நாள் முழுவதும் செய்யும் பணிகளை சாமானியர்களால் 10 நிமிடம் கூட செய்து விட முடியாது. மூச்சு திணறி மயங்கி விடுவார்கள். இந்த குழுக்கள் விஜயநகரப் பேரரசின் இராணுவத்தில் மிக முக்கியமான போர்வீரர்களாக இருந்திருக்கிறார்கள் என சரித்திரம் சொல்கிறது. 

கிட்டத்தட்ட ஊரின் எல்லா கட்டுமானத்திலும் இவர்களின் பங்களிப்பு இருப்பதால் இவர்களின் பொருளியல் நிலை நன்றாக உள்ளது. எனினும் ஒரு வருடத்தின் 365 நாட்களில் 300 நாட்களுக்கு அவர்களுக்கு பணி இருக்கும் என்பதால் பகல் பொழுதில் இவர்கள் குடியிருப்பு முழுவதும் காலியாகி விடும். மாலை பணி முடிந்து தான் வீடுகளுக்கு வருவார்கள். எனவே பெரிய வீடுகளைக் கட்டிக் கொள்ள மாட்டார்கள். சிறு குடிசைகளில் வசிப்பார்கள். இவர்களின் சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் இருக்கும். அங்கே ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய பரப்பளவில் அமைந்த வீடுகள் கட்டியிருப்பார்கள். 

இவர்கள் குடும்பங்களின் இளம் தலைமுறையினர் இப்போது தான் கல்விக்குள் வரத் துவங்கியிருக்கின்றனர். இவர்கள் குடும்பங்களின் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் கல்விப்பணி ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளேன்.  

Sunday 1 October 2023

கான்கிரீட்

 நகரில் ஒரு சிறிய வணிக வளாகம் ஒன்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுளேன். அந்த கட்டுமானப் பணியிடம் மிகவும் பரபரப்பாக வாகனங்களும் மக்களும் சென்று வரும் ஒரு கடைத்தெருவில் அமைந்துள்ளது. சாலையின் அகலமும் பெரியது அல்ல ; நடுத்தரமானது. அந்த கட்டுமானத்துக்கு மேற்கூரை கான்கிரீட் இன்று செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. கட்டுமானப் பொறியாளரின் வாழ்வில் பணியில் மேற்கூரை கான்கிரீட் பணி செய்யும் நாள் மிகவும் பரபரப்பானது. சிறிய கட்டிடமோ பெரிய கட்டிடமோ கான்கிரீட் பணி நாள் பொழுதில் நிறைவு பெற்றிட வேண்டும். அதாவது காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள். எனினும் காலை 6 மணிக்கு பணியாளர்கள் வருவது என்பது துர்லபம். காலை 9 மணி ஆகி விடும். காலை 9 மணிக்குப் பணி துவங்கினால் அது மிகவும் சீக்கிரம் தொடங்கப்பட்டதாக அர்த்தம். கான்கிரீட் போட கம்பி கட்டும் பணி முழுமை பெற வேண்டும். கம்பி கட்டும் பணி சிறிய பரப்பளவு என்றால் 5 நாள் நடக்கும். பெரிய பரப்பளவு என்றால் எட்டிலிருந்து பத்து நாள் நடக்கும். பெரிய பரப்பளவு என்றால் வாரக்கணக்கில் வேலை செய்ய மாட்டார்கள். ஆட்களை அதிகப்படுத்தி எட்டு நாட்களில் வேலையை முடித்து விடுவார்கள். கம்பிப் பணி நிறைவு ஆன பின் எலெக்ட்ரிகல் வேலை செய்பவர்கள் வந்து பி.வி.சி பைப் கூரையில் பதிப்பார்கள். பின்னர் கான்கிரீட் அன்று கான்கிரீட் போடுபவர்களும் கொத்து வேலை செய்பவர்களும் வருவார்கள். கட்டுமானப் பணியில் தச்சர்கள் தவிர மற்ற அனைவரும் பங்களிக்க வேண்டிய வேலை கான்கிரீட் வேலை. கூரை கான்கிரீட் முடிந்ததும் அடுத்த ஒரு வாரத்துக்கு கூரையின் மேற்பரப்பை ஈரமாக வைத்திருப்பதே வேலை. அந்த நாட்களில் வேறு எந்த கட்டுமானப் பணியும் செய்ய முடியாது. எனவே கான்கிரீட் முடிந்த ஒரு வாரம் எவருக்கும் பணி இருக்காது. கம்பி கட்டுபவர் கான்கிரீட் போடும் அன்று காலை வரை தனது பணிகளைச் செய்து கொண்டிருப்பார். எலெக்ட்ரிகல் வேலை செய்பவர்கள் அன்று காலை தான் வந்து மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் வேலை செய்வார்கள். கான்கிரீட் போடுபவர்கள் அன்று காலை தான் வந்து 10 அடி உயரத்துக்கு கான்கிரீட்டை மேலே ஏற்றுவதற்கான சாரம் முதலியவற்றை அமைப்பார்கள். சிறிய பரப்பிலான கட்டிட கான்கிரீட் என்றால் கூட குறைந்தபட்சம் 20 பேர் பணி செய்வார்கள். அன்றைய தினம் மிகவும் பரபரப்பானது. சிமெண்ட் மூட்டை அன்று காலை தான் கட்டுமான இடத்துக்கு வரும். இரண்டு மூன்று நாள் முன்னதாக ஜல்லி மணல் சொல்ல வேண்டும். கட்டுமான பணியிடத்தில் அதிக அளவில் ஜல்லி மணல் கொட்டி வைக்க இடவசதி இல்லையெனில் அவை கான்கிரீட் அன்று காலைதான் பணியிடத்துக்கு கொண்டு வர முடியும். கொஞ்ச நேரம் கொட்டி வைத்திருந்து பயன்படுத்தி விடலாம். 

நான் 4 நாட்களுக்கு முன்னால் ஜல்லி சொல்லியிருந்தேன். எனக்குத் தேவை 3 யூனிட். சப்ளையர் ஃபோன் செய்து 4 யூனிட் வண்டிதான் வருகிறது. 4 யூனிட் சப்ளை செய்யட்டுமா என்று கேட்டார். நான் சரி என்று சொன்னேன். ஆனால் அவருக்கு மருநாள் 6 யூனிட் லாரியில் ஜல்லி வந்து விட்டது. என்னிடம் நடந்ததைச் சொன்னார். நான் 6 யூனிட்டையும் பணியிடத்தில் கொட்டி விடுங்கள் என்றேன். ஜல்லி வந்த அன்றே எம் - சாண்ட் 3 யூனிட் வந்து விட்டது. பணியிடம் முழுக்க மெட்டீரியல்களால் நிறைந்து விட்டது. இன்று காலை சிமெண்ட் வந்தது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் மதியம் 2 மணிக்கு கான்கிரீட் பணியைத் துவங்கலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். ஞாயிறு மதியம் கடைத்தெரு சற்று ஓய்வாக இருக்கும் என்று கருதினோம். 

இன்று கம்பி கட்டும் பணியாளர்கள் காலை 6 மணிக்கு பணியிடத்துக்கு வந்து பணியைத் துவக்கி விட்டனர். நான் காலை 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தேன். உடன் குளித்துத் தயாராகி பணியிடம் செல்ல எண்ணியிருந்தேன். இருப்பினும் 6 மணிக்கே பணியாளர்களுக்கு ஃபோன் செய்ய என் மனம் ஒப்பவ்ல்லை. 6.40க்கு ஃபோன் செய்தேன். கட்டுமானப் பணியிடத்தில் இருப்பதாகவும் காலை 6 மணிக்கே வந்து விட்டதாகவும் கூறினர். உடன் தயாராகி பணியிடம் சென்றேன். பணிகள் நடந்து கொண்டிருந்தன. நான் சென்ற 5 நிமிடத்துக்குள் எலெக்ட்ரிக்கல் பணியாளர்கள் வந்து விட்டனர். அவர்களிடம் அவர்கள் செய்ய வேண்டியவற்றைக் கூறினேன். கான்கிரீட் வேலை செய்பவர்கள் 10 பேர் வந்து சாரம் அமைக்கத் தொடங்கினர். சிமெண்ட் கடைக்காரரிடமிருந்து ஃபோன் வந்தது. சிமெண்ட் வந்து கொண்டிருப்பதாக. சிமெண்ட் இறக்க வேண்டிய இடத்தை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினேன். அவரவர் பணியை அவரவர் செய்து கொண்டிருந்தனர். 

பணியிடத்துக்கு அருகில் ஒரு சிவாலயம் உள்ளது. அங்கே சென்றேன். இறைவனை கை கூப்பி வணங்கினேன். இறைவன் சர்வேஸ்வரன். சர்வத்துக்கும் இறைவன். மாந்தர் அனைவருமே அவன் முன் சிறு தூசி. அவன் முன் நிற்க நிற்க அந்த உணர்வு பெருக வேண்டும் என எண்ணுவேன். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என உச்சரிப்பேன். காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி என துதிப்பேன். 

பணி நடந்து கொண்டேயிருந்தது. உச்சி வெயில் 12 மணி ஆனது. அப்போது தான் துவங்கினோம். நாங்கள் உத்தேசித்திருந்த 2 மணிக்கு இரண்டு மணி நேரம் முன்னதாக பணி துவங்கப்பட்டது. மாலை 4 மணி வரை கான்கிரீட்டிங் பணி நடந்து நிறைவு பெற்றது. 

இப்போது கட்டுமானத் துறையில் ரெடி மிக்ஸ் கான்கிரீட் வந்து விட்டது. இருப்பினும் கான்கிரீட் மெஷின் வைத்து 4 மணி நேரம் நடந்த பணி 2 மணி நேரத்தில் நடந்திருக்கும். கான்கிரீட்டை பைப் வழியாக மேலேற்றும் பணியும் நேரமெடுக்கும் பணி தான். அதில் எதிர்பாராத இடர்கள் ஏற்பட்டாலும் மேலும் ஓரிரு மணி நேரம் தாமதம் ஏற்படும். எனவே இரண்டும் சமமான நேரம் எனக் கருதி பழைய முறை மெஷின் கான்கிரீட் பக்கம் எங்கள் மனங்கள் சாயும். 

இப்போது கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் தரைத்தள மேற்கூரை இன்று நடைபெற்றது. இன்னும் ஒரு மாதத்தில் முதல் தள மேற்கூரை கான்கிரீட் நிகழும். அதை காலைப் பொழுதிலேயே துவங்க வேண்டும் என எண்ணிக் கொண்டோம். 

ஒவ்வொரு கான்கிரீட்டையும் காலையிலேயே துவங்கிட வேண்டும் என கட்டுமானத் துறைக்கு வந்த நாள் முதல் நினைக்கிறோம். இன்றும் அவ்வாறே நினைத்துக் கொண்டோம்.