Monday 29 April 2019

வானமர்தல்

உன் விழிகளை நோக்குகிறேன்
சுடர் போன்ற
மலர் போன்ற
சிறு மணி போன்ற
உன் விழிகளை
எல்லையற்றது வான் நீலம்
நீர்மை கொண்ட மேகம்

கரைகிறது அகம்
சொல் மொழியாமல்
உரையாடாமல்

வானில் பறக்கும் புள்
மண்ணமர்கிறது
ஒரு துளி வானமாய்

Sunday 28 April 2019

அந்தர மலர்

உன் கை விரல்களால்
உன்னிடம் இருக்கும் எந்திரத்தின்
boltஐ  இறுக்கும் போது
தளர்த்தும் போது
கத்தியைக் கொண்டு
மெல்லிய சத்தத்துடன்
பீன்ஸ் நறுக்கும் போது
ஸ்கூட்டி  ஆக்ஸிலரேட்டரை
அதிவேகமாய்ச் சுழற்றி
தொடுவானம் நோக்கி செல்லும்
முனைப்புடன் விரையும் போது
ஒரு குழந்தையைக் கையில் வைத்திருப்பது  போல
கார் ஸ்டியரிங்கை சீராக்கும் போது
மூக்குத்தி வைரம் என ஒளிரும்
ஸ்மார்ட் ஃபோனின் டார்ச்சை ஏற்றும் போது
உன் முகம் கொள்ளும் அழகு
வான் மார்க்கமாகச் செல்லும் தேவதை ஒருத்தி
ஒரு கணம் நின்று புன்னகைத்துப் புறப்பட்டாள்
மரத்திலிருந்து  புவிக்கு இறங்கிய மலர்
அந்தரத்தில் சுழன்றதைக்
கண்ட கவிஞன்
பலநாள் கழித்து எழுதினான்
அது குறித்து
ஒரு  கவிதையை

Saturday 27 April 2019

சொல்லப்பட்டவை

உனது தோடு
நீ மகிழும் தருணங்களைச்
சொன்னது
உனது வளையல்கள்
நீ
செயல்களை
மிக நுட்பமாய் செய்ய எண்ணுவதைச்
சொன்னது
உனது மோதிரம்
மென்மையான அகம் கொள்ளும்
தூய்மையைச்
சொன்னது
உனது கொலுசு
நீ பூரித்துக் கொண்டாடும்
நிகழ்வுகளைச்
சொன்னது
உனது மௌனங்கள்
உன்னிடம் சொல்லப்பட்ட
பிரியங்களைச்
சொல்லின


ஒரு காதலைச் சொல்லும் போது

ஒரு காதலைச் சொல்லும் போது
நீரடிவாரத்தில்
பின்னிச் சுழன்று பிணைந்திருக்கும்
கையில் ஒட்டிய ரத்தமென
பிசுபிசுக்கும்
அன்றாடத்தின்
கோடுகளும் கணக்குகளும்
உருவாக்கும் எல்லையிலிருந்து
நிகழ்கிறது
ஒரு வெளியேற்றம்
ஒரு விடுபடல்
ஒரு விடுதலை

ஒரு கண்ணாடி டம்ளரின்
ஐஸ் கட்டிகள் மிதக்கும்
ஐஸ் வாட்டரின்
சில்லென்ற தட்பம்
உணரும் உள்ளங்கையளவு
ஜீவன்
எழுகின்றது
நீரளவுக்கு மேல் நிற்கும் மலரென
அதன் மேல் பறக்கும் சிட்டுக்களென
இன்னும் உயரப் பறக்கும் மேகம்
ஆகாய விண்மீன்

Friday 26 April 2019

வருத்தம்

சாதாரணங்களின் தளத்தில்
மலர்ந்திருக்கும் மலராகவே
நீ
எப்போதும் உணரப்பட்டாய்
*
இந்த உலகின்
அளவற்ற கண்ணீரின்
மறுபக்கமாகவே
மலர்களைப்
புவியிறக்கின
தெய்வங்கள்
*
மலரின் புன்னகை
மலரின் சொற்கள்
மலரின் மௌனம்
மலரின் பிரியங்கள்
*
ஒரு மலரை
எப்படி கையாண்டாலும்
உருவாகிறது
பிழையின் பதட்டம்
*
மலர்கள்
துயருறும் போது
வருந்துகின்றன
தெய்வங்கள்

பெருந்தன்மை

எதையும் புரிந்து கொள்ளாத
எப்போதும் ஐயப்படும்
எதற்கும் தயங்கும்
எதிலும் ஆர்வம் இல்லாத
எங்கும் நம்பிக்கை கொள்ளாத
சாமானிய வெளியில்
நிகழும் எல்லா கிரீச்சிடல்களையும்
நீ
எப்போதும்
மௌனமாகக் கடந்து செல்கிறாய்

மௌன மார்க்கம்

அவள்
தன் சொற்களை
வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு
பழகிக் கொண்டாள்
தன் அன்பை
தன் பிரியங்களை
தன் காதலை

நூறாண்டுகளாய்
நின்றிருக்கும்
அந்த மரம்
ஏதேனும் உரையாடியதா
கூடடையும் பறவைகளிடம்
சாலையிடம்
வாய்க்காலிடம்

விண்ணகம் நோக்கி செல்கிறது
தினமும்
மௌன மார்க்கமாக

மேகம் மலை வானம்

ஒரு குளிர்காலத்தில்
மலைப்பாதையில்
குளிர் அடர் நீர்
கொட்டும் அருவியில்
தலை வழிந்தோடும்
குளியலாடி
தூய்மை கொண்ட உள்ளங்கைகளால்
அள்ளிப் பருகும் நீர்
வழியே
உள்
நிறைகிறது
மேகம்
மலை
வானம்

உலகம் யாவையும்

உன்னை
விலகியிருக்கும் போது
விலகியிருக்கிறேன்
யாவற்றிலுமிருந்து
உன்னுடன்
இருக்கும் போது
என்னுடன்
இணைந்திருக்கிறது
உலகம் யாவையும்

நள்ளிரவின் ஒலி

தாலாட்டெனக் கேட்கும்
மின்விசிறியின் ஓசை
சுவிட்ச் நிறுத்தப்பட்ட
சில வினாடிகளில்
அறைக்குள் நுழைகிறது
நள்ளிரவின் ஒலி
சில்வண்டுகள்
டியூப் லைட் ஃபிரேமில்
உள்ளிருக்கும் பல்லி

எங்கும் வியாபித்திருக்கிறது
உறக்கம்
படுக்கையின்  மேல்
அசைவின்றி இருக்கிறேன்

அடர்த்தி கூடியிருக்கிறது இந்த இரவு
ஞாபகங்கள் காட்சியாக மிதக்கின்றன
நீ உறங்கிக் கொண்டிருப்பது
ஆசுவாசம் தருகிறது
உனது கனவுகளில் இனிமை நிறையட்டும்
உனது உடல் முழுமையாக ஓய்வு பெறட்டும்

காத்திருப்பின் தவம் கொள்கிறது இரவு
அசைந்தால் தவம் கலையக் கூடும்
என்னைப்  போல
நள்ளிரவின் ஒலி கேட்டு
அசையாதிருக்கின்றன
நட்சத்திரங்கள்

இந்த நீண்ட இரவின்
என் ஒவ்வொரு கண் இமைப்பிலும்
அறையில் மிதக்கும் ஞாபகங்களில்
ஒரு துளி சேர்கிறது
கடிகையின் வினாடிகளைப் போல

Thursday 25 April 2019

பெருமழை

உன்னிடமிருந்து அகன்று கொண்டிருந்தேன்
கரை வழியப் பாய்ந்த நதி பாதத்தில் அனலாய் தகித்தது
கோடையின் நிலத்தின் மேல் வட்டமிட்டன பருந்துகள்
வெளுத்த தரையில் நின்றிருந்த மரங்கள் சோராமல் வான் பார்த்தன
கொதிக்கும் பாறைகள்
சப்பாத்திக் கள்ளிகள் முட்செடிகள்
நம்பிக்கை இழக்காத கீரிகள் காத்திருந்து சாலையைக் கடந்தன
மண்ணிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டேயிருந்தது எறும்பு நிரை
உனது மென்பாதங்கள் நினைவில் இருந்து அகன்றன
மனமெங்கும் நிறைந்த துயர்
பாதையில் தீண்டிய முட்களால் சிந்தப்பட்டது குருதி
தாகத்துக்கு அலையும் தோறும்
ஒவ்வொரு கணத்திலும்
நினைவில்
நீங்கிக் கொண்டேயிருந்தது
உன் உள்ளங்கையின் ரேகைகள்
மூச்சை மட்டும் பற்றி
உடல் பிரக்ஞை அகற்றி
சென்று கொண்டேயிருந்தேன்
நரகங்களே எதிர்ப்பட்டாலும் கடக்கும் வெறியுடன்
எரிவிண்மீன் என
எப்போதாவது உன் புன்னகை
காட்சியாய்த் தெரிந்தது
உணர்ச்சி வசப்படாது
ஒரு கணம் கலங்காது
வறண்ட விழிகளால்
நிலம் நோக்கிக் கொண்டேயிருந்தேன்
கோடையின்
வெப்பமும் வறட்சியும்
நிறைந்தது
அகமெங்கும்
பாறைகள்
பிளந்த நிலங்கள்
ஆழ்ந்த ஆழங்கள்
தீராப்பசி
கட்டுக்களிலிருந்து இப்போதே விடுபட எண்ணும் மனம்
தாகம் மட்டுமே உணர்வென ஆகி
வீழ்ந்தது
மண்ணில்
மூடிய இமைகளில் கரும் இருள்
இருளின் முடிவற்ற சுழல்கள்
ஒரு பதட்டம்
எல்லாம் இவ்வளவு தானா
என்னும் பதட்டம்
இதுதான் முடிவா என்னும் வெறுமை
இனி செய்ய ஏதுமில்லை
என்னும்
கையறு நிலை
நினைவுகள் அற்றுப் போன
உணர்வுகள் முற்றும் வறண்ட
கணத்தில்
சேற்றின் செந்தாமரையென
நீ
அகத்தில் எழுந்தாய்
மாசற்ற முகம் கொண்டு
நோக்கினாய்
புழுதி மணம் எழ
முதல் மழைத்துளி
என் மேல் விழுந்தது
பாலை நிலமெங்கும்
பெய்யத் துவங்கியது
உயிரின்
ஓயாப் பெருமழை

அன்பின் கணம்

மொழியப்படுகையில்
அன்பின் மொழி
தயங்கம் கொள்கிறது

உள்ளங் கைகளால் அள்ளப்படும்
அன்பின் நீரை
கசியாமல் காப்பது எவ்வாறு

விலகிச் செல்வதும்
அன்பின் வழிமுறைகளால்
ஒன்றா

அன்பின் நிலத்தில்
தனிமை கொண்டவர்கள்
நிரம்பியிருக்கிறார்கள்

அன்பின் கடல் முன்
நின்றிருக்கின்றனர்
நூறு நூறாயிரம்
தினமும்

அன்பின் கணத்திற்காகக்
காத்திருந்த யுகங்கள் எத்தனை
இன்னும்
காத்திருக்கப் போவது
எத்தனை யுகங்கள்

என்னால் சிலவற்றைச் சொல்ல முடியும்

என்னால் சிலவற்றைச்  சொல்ல முடியும்
உன் முகத்தில் இருக்கும் களங்கமின்மையை
சிறியன சிந்தியாத உன் மனத்தை
எந்நிலையிலும் நீ  கொள்ளும் நம்பிக்கையை
இடரிலும் துயரிலும் உன் கண்களில் தேங்கும் நீரின் முதற்துளியை
சாமானியத்தின் இராட்சசக் கரங்கள் சூழும் போது
நீ கொள்ளும் அச்சத்தை
சாதாரணமாக உன்னில் நிறையும் அமைதியை
முடிவற்ற அழகில் நீ  அடையும் மலர்ச்சியை
உன் குரல் மீட்டும் யாழினும் இனிய இன்னிசையை

என்னால் சிலவற்றைச் சொல்ல முடியும்

மலராதல்

வயல்வெளி ஓர
பாய்ச்சல் மடைகளில்
அவை வீற்றிருக்கின்றன
அல்லி மலர்கள்

மின்விசிறிக்கு நேர் கீழே
அமர்ந்து
முகவாயை
மார்பில் வைத்து
முகம் மறைய
தரையில் படறவிட்டிருக்கும்
அழகான இளம் பெண்ணின்
ஈர அடர் கூந்தல்
என
துவண்டிருக்கின்றன
தடாகத்துத் தாமரை மலர்கள்

எதிர்பாராமல்
நுழைந்து விடுகிறோம்
நாகலிங்கத்தின்
மணம் நிறையும்
எல்லையில்

கோடையை
நேசிக்கின்றன
காற்றில் உருளும்
வேப்பம் பூக்கள்

மலர் பார்த்தல்
ஓர் அனுபவம்
மலராதல்
ஒரு பெறும் பேறு

மீனம்

விண்மீன்கள் தனித்திருக்கின்றன
அதனதன் இயல்பில்
திறந்த விழி கொண்டு
ஓயாமல் பார்க்கின்றன
தம்மைப் பார்க்கும்
கண்களை

Wednesday 24 April 2019

பேபி அத்தை

பேபி அத்தையை உங்களுக்குத் தெரியாது
அவர் இப்போது இல்லை

என் பால்யத்தில்
அம்மாவுக்கு அடுத்து
எனக்குப் பிடித்த ஒருவர்

பேபி அத்தையின் கைப்பக்குவம்
அம்மாவின் சமையலை விடவும்
நன்றாக இருக்கும்
சட்னி பொடி எண்ணெய்
பார்த்துப் பார்த்து பரிமாறுவார்

அப்போது
நான் பேசுவதை
மற்றவர்கள் பேசுவதைக் கேட்பது போல
கவனம் கொடுத்துக்  கேட்டவர்கள்
அம்மாவும்
பேபி அத்தையும்

விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் போது
என்னைப் பார்த்தால்
பேபி அத்தையின் முகம் பூரிக்கும்
என்  பெயர் சொல்லி அழைக்கும்
மகிழ்வான அந்த குரல்
இன்னும் கேட்கிறது எனக்கு

எப்போதும்
கொடுத்துக் கொண்டே இருந்தார்
மாம்பழம்
நிலக்கடலை
மோர்
லெமன் ஜூஸ்

பேபி அத்தை இப்போது இல்லை
பிரியமாய் அழைக்கும்
அவர் குரல்
இப்போதும் இருக்கிறது
அங்கேயே

தினமும்

ஓர் உண்மையை அப்படியே ஏற்கும்
ஒவ்வொரு கணத்தையும்
துளித்துளியாய்
முழுமையாய்
இனிமையாய்
உணரும்
ஒவ்வொரு மூச்சும்
அலையென எழுந்து
அருவியென விழும்
இந்த பூமியின் பரப்பெங்கும்
மெல்ல
உறுதியாக
நடந்து கொண்டிருக்கும்
பயணம்
சாத்தியமாகும்
தினம்
உதிக்கிறது
தினமும்

முடிவற்ற பாதை

ஓயாமல் உரையாடிக் கொண்டிருந்தேன்
நதிப்படுகையின் கூழாங்கற்களைச் சேகரித்து வந்திருந்தேன்
பனையின் அடியில் விழுந்து கிடந்த
தூக்கணாங்குருவிக் கூடொன்றைக் கொண்டு வந்தேன்
முற்றத்தின் தானியங்களுக்குப் பழகியிருந்த
சிட்டுக்குருவி ஆசையாய் அழைத்து வந்தது
புள்ளினங்களை
ஓர் எளிய கூரையில் அமர்ந்திருந்த விழல்
பொழிந்து கொண்டிருந்தது மென் குளிர்மையை

நான் நீங்கிச் சென்று கொண்டிருக்கிறேன்
முடிவற்ற பாதையில்

வாழ்க்கை

குறிப்பு:

இந்த அறிக்கை
தெளிவின்றி
சீராக இல்லாமல்
புரிந்து கொள்ள இயலாததாய்
குழப்பம் ஏற்படுத்தக் கூடியதாய்
இருக்கிறது

இந்த விஷயத்தைக் குறித்து
மேலும்
அறிக்கை அளிக்க
முற்படாமல் இருப்பது
நலம்
என
பரிந்துரைக்கப்படுகிறது

குதூகலம்

ஒரு மழைத்துளி அகம் குளிரச் செய்யும் எனில்
ஒரு மலைக்காட்சி உள்ளத்தை உற்சாகப்படுத்தும் எனில்
மெய் தீண்டும் கடலலை துயரங்களைக் கரைக்கும் எனில்
மாலை நேரத்தின் தொலைதூர சூரியன் நிலத்தை ஒளிர வைக்கும் எனில்
முதல் விண்மீன் கை நீட்டி அழைக்கும் எனில்
இந்த வாழ்க்கை
ராட்டினத்தில் சுழலும் குழந்தைகள்
எழுப்பும்
குதூகல சத்தம்

வண்ண மலர்

காலைப்பனி நீங்கும் காட்டில்
நிறைகிறது
ஆழ்மௌனம்
முதுகெலும்பென நீண்டிருக்கும்
மரங்கள்
நிழல்களின் சாலையில்
நிகழ்ந்து கொண்டேயிருக்கும்
பயணம்
நீ எங்கோ
உறைந்திருக்கிறாய்
சிறுசுனையின் மலர்
கொள்ளும்
வண்ணம்

Tuesday 23 April 2019

விண் மண்

வறண்டிருக்கும் சிறு காடு
சுழன்று சுழன்று உயர்கிறது
மலைப்பாதை
மேகங்கள் கூடியிருக்கும் வானம்
சட்டென திகைக்கும் உன் முகம்
வனத்தின் மௌனமாய் சில்வண்டுகள்
சின்னஞ் சிறிய ஸ்டிக்கர் பொட்டில்
பொழிகிறது
முதல் மழைத்துளி
உன் அகம் குளிர
வானம் பார்க்கிறாய்
அகம் குளிர்ந்து
கொட்டத் துவங்குகிறது
ஓயாப் பெருமழை

ஒளி

ஓயாமல் தேடி
அலைவுற்றுத்
திரிந்து
கண் இருள
கால் சோர
தீராத்தாகத்துடன்
காண விரும்பியது
ஒரு புன்னகையின்
மேல் ஒளிரும்
ஒரு மூக்குத்தியின்
ஒளி

பரிணாமம்

உனது இருப்பை
ஒரு மலராக்கினேன்
புவியெங்கும்
அன்றலர்ந்த மலர்களின்
நறுமணமாய்
நீ ஆனாய்

உனது இருப்பை
ஒரு நிலவாக்கினேன்
கிரணங்களின் எடையில்
நெகிழும் தென்றலாய்
நீ மிதந்தாய்

உனது இருப்பை
ஒரு விதையாக்கினேன்
நா உணரும்
எல்லா சுவையாகவும்
நீ ருசித்தாய்

Monday 22 April 2019

நடை

எனது நண்பர் ஓர் அறக்கட்டளையைச் சென்னையில் நடத்துகிறார். கல்வி சார்ந்த பணிகளில் ஆக்கபூர்வமாக செயல்படுகிறது அந்த அறக்கட்டளை. அதன் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக ஒரு சமணத் துறவியை அழைத்திருக்கிறார். துறவி அப்போது மைசூரில் இருந்திருக்கிறார். நண்பர்  மற்ற அறக்கட்டளை பொறுப்பாளர்களுடன் மைசூர் சென்று நேரில் விபரம் சொல்லி தங்கள் அழைப்பை ஏற்குமாறு கேட்டுக் கொண்டனர். துறவி சம்மதித்து நிகழ்ச்சி நடக்கும் நாள், நேரம், இடத்தை ஒரு காகிதத்தில் எழுதி தனது சிறிய துணிப்பையில் வைத்துக் கொண்டார். இவர்கள் விடைபெற்றுக்  கிளம்பினர். துறவியிடம் அலைபேசி இல்லை. ஆதலால் அவரை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள முடியாது. நிகழ்ச்சி நாள் நெருங்கியது. அதற்கு முதல் நாள் மைசூரில் துறவியைச் சந்தித்த இடத்திற்கு ஃபோன் செய்து துறவி ரயிலில்  வருகிறாரா எந்த  ரயில் நாங்கள் அவரை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்து தங்க வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர் இங்கே இல்லை; சென்று பல நாட்கள்  ஆகிவிட்டதாக பதில் சொல்லியிருக்கின்றனர். ஏற்பாட்டாளர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மற்ற சிறப்பு விருந்தினர்கள் இருப்பதால் துறவி வரவில்லையானாலும் சமாளித்து விடலாம் என முடிவு செய்து மற்ற  ஏற்பாடுகளைப்  பார்த்துள்ளனர். 

நிகழ்ச்சி நாள். நிகழ்ச்சி நேரம்  காலை பத்து மணி. குறித்த நேரத்துக்கு பதினைந்து நிமிடம் முன்பு துறவி விழா அரங்கில்  நுழைந்திருக்கிறார். அனைவருக்கும் மெத்த மகிழ்ச்சி. நிகழ்ச்சி துவங்கியிருக்கிறது. துறவியைப் பேச அழைத்திருக்கிறார்கள். துறவி பேச வந்ததும்  மைக்கை ஆஃப்  செய்து  விட்டு  பேசியிருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்நூறு  பேர் கலந்து கொண்ட கூட்டம். கடைசி  வரிசையையும் தாண்டி  வாசலில் இருந்த  வாட்ச்மேன் வரைக்கும்  அவர்  பேசியது தெள்ளத் தெளிவாகக்  கேட்டது என்றனர். தன்னால் தனது குரலை இந்த சிறிய  கூட்டத்தில்  உள்ள அனைவருக்கும் கொண்டு சேர்க்க முடியும் என்பதால் இப்பொழுது இந்த எந்திரத்தை சாராமல்  இருக்கிறேன்  என்று  விளக்கியிருக்கிறார். துறவி  தனது  பேச்சில் தான் மண்ணியலில்  ஆய்வு  முனைவர் பட்டம் பெற்றிருப்பதை சொல்லியிருக்கிறார். அனைவருக்கும் அதிர்ச்சி. கல்வி குறித்தும் சமணத்தின்  கல்விப் பார்வை குறித்தும் துறவி விரிவாகப் பேசியதாக நண்பர்  சொன்னார். மற்றவர்களும் பேச நிகழ்ச்சி முடிந்தது.

நண்பர் துறவியிடம் முந்தைய தினம்  தாங்கள் மைசூர் தொடர்பு  கொண்டதைக் கூறி துறவி  எங்கிருந்து  வருகிறார்  என்று கேட்டிருக்கிறார். தான் பெங்களூரில் இருந்து  வருவதாகக் கூறியிருக்கிறார் துறவி. எந்த  ரயிலில் வந்தீர்கள் என்று விசாரித்திருக்கிறார். தான் எங்கு சென்றாலும் வாகனங்களையோ எந்திரங்களையோ சாராமல் நடந்தே செல்வேன். அதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளேன்;  துறவு பெற்ற பின் எந்த வாகனத்திலும் ஏறியதில்லை என்று அவர் சொன்னதைக் கேட்டு திகைத்து விட்டார்  நண்பர்.

இடையில் ஒரு வெள்ளாடை. தோளில் ஒரு வெள்ளாடை. பையில் ஒரே ஒரு செட் இடையாடை மற்றும் தோளாடை. துறவியிடம் இது மட்டுமே இருந்திருக்கிறது.

துறவி கிளம்பியிருக்கிறார்.

நண்பர் அடுத்த நிகழ்ச்சி என்ன என்று  விசாரித்திருக்கிறார்.  

‘’அடுத்த வாரம் ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறேன். அங்கு செல்கிறேன்’’

அனைவரும் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அவரைப் பார்த்துள்ளனர்.

‘’ஹைதராபாத் சென்று விட்டு டெல்லி செல்ல வேண்டும்; அடுத்த மாதம் முதல் வாரத்தில் அங்கே ஒரு நிகழ்ச்சி’’ 

துறவி கிளம்பி விட்டார். 

Sunday 21 April 2019

உயிர் ஒளி

ஒரு வரைபடத் தாளில்
ஓரிடத்தில்
அதை அடி என்பதா
அதை முடி என்பதா
என இப்போது சொல்ல முடியாத
ஓரிடத்தில்
பல வண்ணம் கலந்த
ஒரு புள்ளியை இடுகிறேன்
பின்னர்
அவை எங்கும் நீண்டன
பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன்
நீளும் வழி தோறும்
அதன் ஒரு கை ஆழ்கடலில் துழாவியது
பாதத் தடங்கள் வானில் பதிந்தன
உச்சி மலைகளை நோக்கி உடல் நகர்த்தியது
விடாய் தீர குருதி கேட்டது
புலிக்குருளைகளின் கர்ப்ப ஈரமாய் பிசுபிசுத்தது
உலகெங்கும் உதிரும் கண்ணீர்த்துளிகளின் உப்பானது
மண்ணிலிருந்து பசும் தளிராய் முளைத்தது

என் திருப்திக்கு
அதற்கு
உன் பெயரை
இட்டுக் கொண்டேன்

Saturday 20 April 2019

நீ இல்லாத நான்

நீ இல்லாத வீட்டின்
பொழுதுகள் முடிவற்று நீண்டு இருக்கின்றன
காலக்கடிகை உன் கட்டுப்பாட்டில் வந்தது எங்ஙனம்
எவ்வளவு முயன்றும்
சோஃபாக்களை டீபாய்களை பிளாஸ்டிக் நாற்காலிகளை
முழுதாக ஒத்துழைக்கச் செய்ய முடியவில்லை
பொருந்திடாமல் லேசாகத் தவித்தன
வாஷ்பேசின்களை சுத்தமாகக் கழுவினேன்
அவை மௌனித்திருந்தன
சமையலறையில் கை தொடும் எப்பொருளும்
உத்தேசித்ததற்கு இரண்டு அடி தள்ளிப் போயின
தண்ணீர்க் குவளையும் டம்ளர்களும் மட்டும் எப்போதும் போல்
நீ இல்லாத வீட்டில்
நிரம்பியிருக்கின்றன உன் நினைவுகள்
எங்கும்
நானாக இல்லாமல் இருக்கிறேன்
நீ இல்லாத நான்
ஒரு கிராமத்துச் சாலையில்
அதிகாலையில்
கண்ட
ஒரு சூரிய உதயத்தை
மென் பசும் வாழைத் தோட்டங்களை
சேற்றில் நிற்கும் நாற்றுகளை
மேயக் கிளம்பும் ஆடு மாடுகளை
தலையில் பயணிக்கும் தண்ணீர்க் குடங்களை
ஓர் இளம்பெண்
சட்டென வரைந்த
வீட்டு வாசல் கோலத்தை
தேனீர்க் கடையின் அடுப்பு சத்தத்தை
கையோடு எடுத்துச் செல்கிறான்
அடையாளங்களற்ற
ஒரு யாத்ரிகன்

வண்ணங்களின் தினம்

சிவப்பு ஒளியும்
நீல வானமும்
கருமேகமும்
வெண் வெள்ளியும்
உதிக்கச் செய்கிறது
வண்ணங்களின்
ஒரு புதிய நாளை

Thursday 18 April 2019

நீ எங்கும் இருக்கிறாய்

இரண்டு ஜன்னல்கள் கொண்ட
நான்கு சுவர் உள்ள அறையில்
முழுவதும் உன் நினைவு
பரவியிருக்கிறது
என வெளியே சென்றேன்
நீ எங்கும் இருக்கிறாய்
வானில் மிதக்கும் புள்ளில்
குளத்தின் குளிர் நீரில்
அதன் படிகளுக்கருகில்
சில கணங்கள் மோனித்திருக்கும் மீன்களில்
எரியும் நெருப்பில்
நெற்கதிரில்
சூரியகாந்திப் பூவில்
அரச மர நிழலில்
அந்திப் பொழுதில்
வான்மீனில்
வெண்நிலவில்
நீ எங்கும் இருக்கிறாய்

அமிர்த வர்ஷிணி

நேற்று
வர்ஷிணியைச்
சந்தித்தேன்
நண்பர் வீட்டில்
மழலை மொழி பேசுகிறாள்
டிட்டு என்ற தேவதையையும்
டட்டு என்ற புலியையும்
பொம்மையாக்கி
வைத்துள்ளாள்
டிட்டுவும் டட்டுவும்
இருக்கும் உலகம்
எனக்கு
ஆர்வமளித்தது
நான் அவர்களுடன் இணைந்து கொண்டேன்
வந்து பார்த்த வர்ஷிணிக்கு
ஆச்சர்யம்
டட்டுவுக்கு தண்ணீர் வைக்கச் சொன்னாள்
கோடையல்லவா
நானும்
டிட்டு டட்டுவின்
நண்பன்
என்பதால்
வர்ஷிணி
என்னையும்
தன் நண்பனாக ஏற்றுக் கொண்டாள்
அவற்றைக் குறித்த
பெருமிதங்களை
பாராட்டுக்களை
புகார்களை
என்னிடம்
அவ்வப்போது
சொன்னாள்
தனித்தனியாக அடம் பிடித்தாலும்
டிட்டுவும்  டட்டுவும்
ஒருத்தருக்கொருத்தர்
சண்டை போடுவதில்லை
வர்ஷிணிக்கு அதில் ஒரு நிம்மதி
வர்ஷிணிக்கு
என்னைப் பற்றி
வேறு ஏதும் அறிய
வேண்டியிருக்கவில்லை
அவளின் நண்பன் என்பதைத் தாண்டி
டிட்டு டட்டுவின்  உலகில்  வாழ்பவன்
என்பதைத் தாண்டி

மக்கள் அவை

இன்று காலையில் சென்று வாக்களித்தேன். சிறு வயதிலிருந்தே, எனக்கு வரலாற்றில் ஆர்வம் இருக்கிறது. சமூகவியலிலும் ஆர்வம் உண்டு. அரசியலை அவற்றின் ஒரு பகுதியாகவே காண்கிறேன். எந்த சமூகத்துக்கும் ஆட்சிமுறைக்கும் அடிப்படையான அலகு மக்கள். பொது நியதிகளைக் குறித்த பிரக்ஞையுடன் இருத்தலும் அவற்றைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டுதலுமே சமூகம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம். இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் எந்த விதிமுறையையும் பின்பற்றுவதில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை என்பதைப் பழக்கமாகவே வைத்துள்ளனர். ஐரோப்பாவிலும்  அமெரிக்காவிலும் சமூகப் பிரக்ஞையை ஆரம்பப் பள்ளியிலிருந்தே உருவாக்குகின்றனர். இங்கே இந்த நாடு இப்போது வந்து சேர்ந்திருக்கும் நிலைமைக்காக தங்கள் உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்திருக்கும் ஆயிரக்கணக்கானோர் குறித்து பள்ளிப் பாடங்களில் போதிக்க வேண்டும். இன்று தமிழ்நாட்டின் கல்வி மிக அபாயகரமான நிலையில் இருக்கிறது. தேசம் குறித்த எதிர்மறை உணர்ச்சியை எவரும் எளிதில் தூண்டிவிட முடியும் என்ற நிலை இருக்கிறது. பட்டப் படிப்பு படித்தவர்களுக்குக்  கூட சமூக விஷயங்கள் குறித்த அடிப்படைப் புரிதல் இல்லை. அரசியல் கட்சிகளில் குண்டர்கள் மட்டுமே  இருக்க முடியும் என்ற  நிலை. பெரும்பாலான தமிழர்கள் மனதை ஜாதி மட்டுமே வியாபித்து இருக்கிறது. அதிகாரவர்க்கத்தின்  ஊழல் நம்மைச் சூழும் பெரும் துயரம். அரசியல்வாதிகளின் ஊழலை விடக் கொடியது அதிகாரவர்க்கத்தின் ஊழல். பொதுமக்கள் அரசாங்கத்தை  அணுகும் ஒவ்வொரு  துறையும் ஊழல் புரிவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலிருந்தும் அல்லற்பட்டு வெளியேறும் குடிமக்கள் தங்கள் சினத்தை ஒட்டுமொத்த நாட்டின் மேலும் திருப்புகின்றனர். அரசு யோசிக்க வேண்டிய விஷயம் இது.

தமிழ் மக்கள் தங்கள் பழக்கங்களையும் மனோபாவங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.

Wednesday 17 April 2019

அன்பின் உலகம்

மேற்கே செவ்வானம்
உச்சியில்
பௌர்ணமிக்கு ஒரு தினம் முந்தின நிலவு
பொக்கி எழுந்து கொண்டிருக்கிறது
அலை கடல்
மூழ்கி மூழ்கி
நீராடிக் கொண்டிருக்கிறான்
இளைஞன்
அலைகள் புரட்டித் தள்ளுகின்றன
அவனை
சகட்டுமேனிக்கு
கடல் மண்ணை உடலெங்கும்
பூசி பூசி
அலைகளுக்குள்
செல்கிறான்
அலை நீராட்டில்
தூயதாகி வருகிறான்
கணந்தோறும்
அன்பால் தூய்மையாகும்
உலகம்  போல

நன்றி

இன்று
கவிஞர்களை
நினைத்துக் கொண்டேன்
அவர்களுக்கு
நன்றி சொல்ல வேண்டும்
என்று
தோன்றியது

சிலர்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன்னால் வாழ்ந்தவர்கள்
பலர்
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால்
இன்னும் சிலர்
இந்த நூற்றாண்டில்
சென்ற நூற்றாண்டில்
சம காலத்தில்

ஏதேதோ நாடுகளில் வாழ்ந்தவர்கள்
நான் கேட்டேயிராத உச்சரிப்பைக் கொண்ட
மொழியைப் பேசியவர்கள்

கவிஞர்கள் சிலரை சந்தித்திருக்கிறேன்
ஆனால்
எல்லா கவிஞர்களுடனும் உரையாடிக் கொண்டிருக்கிறேன்

ஒவ்வொரு கவிஞரும் ஓரோர் உலகை உருவாக்குகின்றனர்
கவிதை உலகம் ஒவ்வொரு நிகழ்கணத்திலும் நிகழ்கிறது

கவிதை உலகில் எல்லாம் இருக்கிறது
கவிஞர்களும் இருக்கிறார்கள்

இன்று
கவிஞர்களை
நினைத்துக் கொண்டேன்
அவர்களுக்கு
நன்றி சொல்ல வேண்டும்
என்று
தோன்றியது

அவர்கள் உருவாக்கிய கவிதை உலகுக்காக

பாரதி கவிதைகள் வாசித்த
நண்பன்
என்னிடம் சொன்னான்
பாரதி
கண்ணம்மா கண்ணம்மா
என உருகுவதாக
பொறுமை கொண்ட பெண்ணுக்காக
சுடாமல் குளிர்ந்தது
நெருப்பு
என
பாட்டி
பேத்திக்கு
கதை சொன்னாள்

தென்றல் வீசும்
ஊரடிங்கிவிட்ட
பத்து மணி இரவின்
லாரிகள் அவ்வப்போது செல்லும்
நெடுஞ்சாலையின்
நடுவில்
நின்று கொண்டிருக்கிறது
ஒரு வெள்ளை நிற
குட்டி  நாய்க்குட்டி
அடுத்த கணம் பற்றிய
தயக்கமோ பயமோ
இல்லாது
பிரம்மாண்டமான
வானத்திற்குக் கீழே

Tuesday 16 April 2019

என்னிடம் மோட்டார்சைக்கிள் இருக்கிறது

என்னிடம் மோட்டார்சைக்கிள் இருக்கிறது
100சி.சி
சாதாரணமானது
அற்புதங்களை நிகழ்த்தக் கூடியது

வீட்டின்
சிறிய பரப்பிலிருந்து
ஆல் வீற்றிருக்கும் நெற்களங்களுக்கு
தொன்மையான பேராலயங்களுக்கு
நதியின் கரைகளுக்கு
புஷ்கரணிகளுக்கு
உடன் கூட்டிச் சென்று விடும்

அதனுடன் சேர்ந்து
அஸ்தமிக்கும் சிவப்பு சூரியனைப் பார்த்திருக்கிறேன்
ஒளிரும் வெண் திங்கள் கண்டிருக்கிறேன்
இரவில் பணியாளர் மட்டும் இருக்கும் லெவல் கிராசிங்கில்
எங்களைத் தாண்டிச் சென்றிருக்கிறது ரயில்

என்னிடம் மோட்டார்சைக்கிள் இருக்கிறது
சாதாரணங்களிலிருந்து
அசாதாரணங்களுக்கு
இட்டுச் செல்லும்
மோட்டார் சைக்கிள்

இயல்பு

மண்டபங்களில்
புறாக்கள் அசைக்கும் சிறகுகள்
அவ்வப்போது ஓசையெழுப்பும்
இப்போது
ஓரிருவர் நடமாடும்
ஆயிரம் ஆண்டு ஆலயம்

சிறிய பிளாஸ்டிக் கூடையில்
அகல் விளக்கு எண்ணெய் தீப்பெட்டி
எடுத்து வரும்
இளம்பெண்

தாயார் சன்னிதியில்
முகம் கனிய
தீபத்தட்டில்
அகல் வைத்து
சீராக எண்ணெயிட்டு
ஒரு மந்தணச் சொல் என
தீக்குச்சிக் குரல் ஒலிக்க
தீபம் ஏற்றி
கை கூப்புகிறாள்

இந்த உலகின்
அளவற்ற நன்மைகள்
அப்போது ஒலிக்கும்
எதிர்பாராத ஆலய மணியில்
தங்கள் இயல்புக்குத் திரும்புகின்றன


Monday 15 April 2019

உன் நினைவு
முதலில்
ஒரு தென்றலைப் போல
இனிமையாய்த்
தீண்டிச் சென்றது
அத்தீண்டலில்
நான் இருப்பதாய் நினைத்துக் கொண்டிருந்த
ரணங்கள்
இல்லாமல் ஆயின
பின்னர்
இரவில் படிக்கட்டில் கேட்கும்
ஆற்றுநீர்ச் சுழல்களின்
ஆடல்களின் ஓசையாய்க்
கேட்டுக் கொண்டிருந்தது
ஒரு குழந்தையைக்
கொஞ்சிக் கொண்டிருந்த போது
அதன் மழலைச்சொல்
உன்னை
நினைவில் முழுமையாகக்
கொண்டு வந்தது ஏன்
என்று யோசித்தேன்
அகல் தீபம் காற்றில்
அசையும் போது
உன்னை நினைத்து
எழுகிறது
உயிரின் பெரும் மூச்சு

மோட்டார்சைக்கிளுடன் உரையாடல்

ஆயத்தமாகு
புறப்படு
இந்த உலகில் இன்னும்
நாம் காணவேண்டிய நிலங்கள்
சந்திக்க வேண்டிய மனிதர்கள்
பார்க்க வேண்டிய காட்சிகள்
எத்தனை எத்தனையோ

உடன்
எவரும் வரலாம்
வராமலும் போகலாம்

நீயும்
நானும்
என்றுமிருப்போம்

உன்னை என்றுமே வேறொரு இருப்பாய் எண்ணியதில்லை
நெடுந்தொலைவுகளில்
ஓயாமல் என்னை  அழைத்துச் சென்ற போது
சில கணங்கள்
உன் அன்பை எண்ணி
கண்ணீர் சிந்தியிருக்கிறேன்

ஒரு புதிய பயணத்தைத் திட்டமிடுகிறேன்
தயாராய் இரு
விரைவில் புறப்படுவோம்
என் இனிய நண்பனே

இருளிடமிருந்து

இந்த அறையின்
கதவுகளைத் தாழிடு
திரைச்சீலைகளை இழுத்து விடு
ஜன்னல்களை மூடி விடு
நீண்ட இந்த இரவில்
வெளிச்சத்தின் ஒரு துளியும் எஞ்சாமல்
உலகின் ஒரு பகுதியின்
இந்த அறை மட்டும் இருக்கட்டும்
நாம் நம்மைச் சூழும்
இருளை அறிவோம்
இருளிடமிருந்து அறிந்து கொள்வோம்
பேதமற்று இருப்பது எப்படி என்பதை

சௌந்தர்ய அலைவுகள்

நூற்றுப்பாட்டி
மண்டபத் தூணில் சாய்ந்து
கண்கள் கனிய
பார்த்துக் கொண்டிருக்கிறாள்
ரத்ன அங்கி அணிந்த
சௌந்தர்ராஜனின்
ஊஞ்சல் சேவையை

பட்டர்
மெல்ல
மிக மெல்ல
ஆட்டுகிறார்
ஊஞ்சலை

பாட்டியின் நினைவுகளில்
அலைவுறுகின்றன
தலைமுறைகள்
ஒரு முழு வாழ்க்கை

அழகின் அரசன்
புன்முறுவல் பூக்கிறான்
பாட்டியைப் பார்த்து

அன்பின் வழிமுறைகள்

அன்பின் வழிமுறைகள்
விண் அகம் போன்று
எத்தனையோ
தெரிந்த
தெரியாத
அறிய முடியாத
அறுதியிட்டிர இயலாத
பெரிய
சிறிய
நுண்ணிய
சாத்தியங்களால்
ஆகியிருக்கிறது

மண்ணில் நிலைகொண்டுள்ள
தென்னை
தன் கீற்றுக்களால்
துழாவப் பார்க்கிறது
வான் பரப்பை

யாதினும் இனிய
மங்கையிடம்
தன்
காதல் மொழிகளை
சொல்லத் துவங்குகிறான்
ஒரு தீராக்காதலன்

Sunday 14 April 2019

புன்சிரிப்பின் ரசவாதம்

ஒரு கைக்குழந்தையைப் போல
உன்னை ஏந்திக் கொள்கிறேன்
நீ அவ்வளவு நம்பிக்கையுடன்
நீ அவ்வளவு ஆசுவாசத்துடன்
அத்தனை சுதந்திரமாய்
இருக்கலாம்

ஒரு சிறுமிக்கு அறிமுகப்படுத்துவது போல
இந்த ஊரை
இந்த பொழுதுகளை
இந்த நீர்ப்பரப்புகளை
இந்த உயிர்த்திரளை
அறிமுகம் செய்து வைக்கிறேன்

ஒரு அன்னையிடம்  சொல்வதைப் போல
இந்த வாழ்வைப் பற்றி
உன்னிடம்
அறிக்கையிடுகிறேன்

மலர்களை மலர வைக்கும்
உன் புன்சிரிப்பின்
ரசவாதம் என்ன

விண்மீன் இரவு

பகலின்
வெப்பம்  தகிக்கும்
உலகியல் பொழுதுகளுக்கு அப்பால்
ரொம்ப  தூரத்தில் சூரியன்
சிவப்பாய் 
அடங்கியிருக்கும் போது
புற்றிலிருந்து எறும்புகள் என
வெளியே வருகிறது
பெரும்பான்மை ஊர்
உனது அகல் சுடரின்
ஒளியிலிருந்து
மெல்ல நிறையத் துவங்குகிறது
விண்மீன்களின் இரவு

Saturday 13 April 2019

எளிய இனிய உலகம்

கடற்கரையில்
அலைகள் நனைக்கும் மணலில்
ஈரமணலை
உடலெங்கும் பூசிக் கொண்டு
படுத்து
வானம் பார்த்துக் கொண்டிருக்கிறான்
ஒருவன்
அவனை நீராட்டிக் கொண்டிருக்கின்றன
கடலின் அலைகள்

அறுவடைக் களம்
முழுதும்
பரவியிருக்கும்
நிழலுக்கு
மேலே விரிந்திருக்கும்
ஆலமரத்தின் அடியில்
கால்நீட்டி அமர்ந்து
ஆலிலைகளுக்கு
இடையே
பாயும் வெளிச்சம்
பார்க்கிறான்
ஓர் இளைஞன்

மாடித் தோட்டத்தில்
மாலை வெயிலில்
களைகளை நீக்கிக் கொண்டிருக்கிறாள்
ஒரு பெண்மணி

சிக்கலானதென
பொதுவாக
எண்ணப்படும்
உலகம்
பல சமயங்களில்
எளிதாக
மிக
இனிதாக
இருக்கிறது
பிரியங்களினும்
அதை நீ வெளிப்படுத்திய விதங்கள்
உனக்கு எப்போதைக்கும்
அணங்கின் சாயலைத் தருகின்றன
உனது சுற்றுப்புறங்களின் பாறைகள்
தினமும்
மெல்ல கரைந்து கொண்டிருக்கின்றன
உனது மாசின்மையால்
நம்பிக்கையை மட்டுமே அளிக்கின்றன
உனது மென் சொற்கள்
உன்னைச் சூழ்ந்திருப்பவை
புனிதப்படுத்தப்படுகின்றன
உன் கனிவால்
நீ கொள்ளும் துக்கத்தை
எப்படி வகைப்படுத்துவது
உனது கண்ணீர்த்துளி
மண்ணில் என்ன ஆகிறது

சிற்ப முகம்

வாகனத்தின் ஜன்னல் வழியே
வேடிக்கை பார்க்கும் பெண்ணிற்கு
காணும் அனைத்துக் காட்சிகளும்
ஆர்வமூட்டுகின்றன
நிழல் பரப்பிலிருந்து எழுந்திருக்கும் மரங்களை
வியப்புடன் நோக்குகிறாள்
கிளைகளில் வாசம் புரியும் பறவைகளுடன்
தன் புன்னகையை அனுப்பி வைக்கிறாள்
நீர் ஓடும் ஓடைகள் சத்தம்
அவளுக்குள் இன்னதென்று சொல்ல முடியாத
குதூகலத்தை அளிக்கிறது
வலசைப் பறவைகள் தினம்
முடிவற்றுப் பறப்பதில்
ஒரு மர்மம் இருப்பதாக
அவளுக்குத் தோன்றுகிறது
வாகனத்தைக் கடக்கும் ஆட்டு மந்தைகள்
கையில் நீண்ட கோல் கொண்ட நல் இடையர்கள்
லெவல் கிராஸிங்கில் சற்று நேரம் நின்றிருக்கும் போது
கடக்கும் ரயிலில்
கரம் அசைக்கும் குழந்தை
பயணிக்கும் ஒவ்வொரு முறையும்
வாழ்க்கை பற்றி அவள் நம்பிக்கையை
மீண்டும் உறுதி செய்து கொள்கிறாள்
பயணம் முடியும் போது
காட்சிகளை
அவசர அவசரமாக
மனச்சித்திரமாகத்
தீட்டிக் கொள்கிறாள்
அகம் திரும்பும் அவள்
முகத்தில்
கல்சிற்பத்தின் அமைதி

பெருங்கதை

பசியில்
வலியில்
வேதனையில்
பிரிவில்
உறவில்
கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றனர்
மனிதர்கள்
படைப்பாளி பார்த்துக் கொண்டிருக்கிறான்
மௌனமாக
பார்வையின் எல்லைகளுக்கு அப்பாலும்

ஆற்றங்கரை
பலாச மரத்தின்
பூக்களை நோக்கி வரும்
பறவைகளை
வைத்து
எழுதத் துவங்குகிறான்
ஒரு பெருங்கதையை

Friday 12 April 2019

அந்த ஹார்டுவேர் கடையின்
படிக்கட்டுகளில்
வாயிலுக்கு மேற்கே
பத்தடி தள்ளி
இரவு ஏழு மணிக்கு
படிகளில் தலை வைத்து
உறங்கிக் கொண்டிருக்கிறான்
சாராயம் குடிக்காத ஒருவன்
யாராலோ
எதனாலோ
புறக்கணிக்கப்பட்டதன்
நினைத்த
விரும்பிய
ஒன்று
மாறாகச் சென்றிருந்ததன்
துயரம்
அவன் முகத்தில்
அப்பட்டமாகத்
தெரிந்தது
பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட
யாரிடமாவது உதவி கேட்டிருக்கலாம்
மனைவிக்கு மருத்துவம் பார்க்க
பணம் தேவைப்பட்டிருக்கலாம்
இந்த உலகில்
நாம் நினைக்கும் பல
நடக்காமல் போவதில்
நம் எல்லோருக்கும்
அனுபவம் இருக்கக்கூடும்
ஹார்டுவேர் கடை வாடிக்கையாளர்கள்
மோட்டார் வாகனங்களை
பார்க் செய்கின்றனர்
என்ஜின்
தணியும்
இயங்கும்
சத்தம்
லாரி சர்வீஸிலிருந்து
சரக்கு
டெலிவரி ஆட்கள்
இரைச்சல்
எப்போதைக்குமான
கடைத்தெரு இயக்கம்
அவன் முகம்
அவற்றால் சலனப்படாமல்
அவற்றுக்கு அப்பால் இருந்தது
ஒரு கனவிலிருந்து விழித்தெழுவது போல
மனிதர்கள்
துயரிலிருந்து எழும் நாள் ஒன்று
வரும் தானே

மீட்சி

இந்த தனிமையை
எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்வது
இந்த துயரத்தை
யாரிடம் பகிர்ந்து கொள்வது
காலையின் விடிவெள்ளி அவ்வளவு தனியாக நின்றிருக்கிறது
அலைகளின் சங்கீதம் நள்ளிரவில் ஊருக்குள் வருகிறது
முன்நிசியில் எவருமற்ற மாடியில் தென்றல் உலவிச் சென்றிருக்கிறது
கருமேகத்திரள் மழை தருமா என ஏங்கிப் பார்க்கிறது மானாவாரி பயிர்
இன்னும் ஒரு சந்தர்ப்பம் வாய்க்க வேண்டும்
அடர்ந்த
பாதைகளற்ற
முடிவற்ற
பெருவெளியிலிருந்து

ஆரம்பம்

விடிகாலை
அலாரம் வைத்து எழுந்து
முகம் கழுவிக் கொண்டு
வெளியே வருகையில்
காம்பவுண்டு அருகே படுத்திருக்கும்
டோலி
பரவாயில்லையே
என்பது போல்
பார்த்து
முன்னங்கால்களை நீட்டி
நெட்டி முறிக்கிறது
வீட்டுக்கு கிழக்கே
இருக்கும் தென்னந்தோப்பைக்
கடக்கையில்
தினமும் அகவுகின்றன
நான்கு மயில்கள்
கரைதலுடன்
துவங்குகிறது
ஒரு நாள்
நமக்கும்
காகத்துக்கும்

Thursday 11 April 2019

ஓர் எளிய பதில்

உனக்குத் தெரிந்த வழிகளில்
உனக்குச் சாத்தியமாகியிருக்கும் யோசனைகளில்
உன்னால் முடிந்த அளவு
இவையெல்லாம்
ஏன் இப்படி
இருக்கின்றன
என்று எழுப்பிக் கொண்ட
வினாவுக்கு
இன்னும்
ஒரு எளிமையான பதில்
கூட
கிடைக்கவில்லை
என்பதன் துயரை
என்னிடம்
சொன்ன போது
நான் மௌனமாயிருந்தேன்

தயக்கம்

ஒரு தந்தைக்கு
தன் மகளிடம்
இந்த உலகம்
தீமைகளாலும் ஆனது
என்பதை
எப்படி சொல்வது
என்று
தயக்கமாகவே
இருக்கிறது

பொழுதுகள் ஐந்து

ஒரு மலைக்கிராமத்தில்
அசையும் திரைச்சீலைகளென
பனிப்பொழியும் காலையில்
முழுக்கைகளுக்கும் கம்பளி அணிந்து
லேசாக பெருமூச்செடுத்து
காலைநடையில்
உடன் வருகிறாய்

ஒரு மென்பகல் பொழுதில்
நெடுஞ்சாலையில்
எதிர்பாராமல் பழுதான வாகனத்தில்
பயணித்தவர்களுக்கு
உதவச் சொல்லி
அவர்கள் வீட்டின் பெண்களுடன்
விழுதுகள்
சற்று முயன்றால்
மண்ணைத் தொட இயலும்
மரத்தின் கீழே உரையாடி நிற்கிறாய்

உச்சி வேளை ஒன்றில்
ஒரு தொல் நதியின்
புராதான படித்துறை
ஒன்றில்
நிழலில் அமர்ந்து
ஓடும் நதியை
உற்சாகமாகப்
பார்த்துக் கொண்டிருக்கிறாய்

முன்மாலையில்
அலை எழும்
விரிந்த சமுத்திரத்தின்
முன்
அமைதியாய்
நிற்கிறாய்

இரவில்
அந்த சிற்றாலயத்தில்
தீபங்கள் ஒளிரும்
கருவறை முன்
எரியும் தீயென
வணங்கி நிற்கிறாய்

குடியேற்றம்

ஒரு பிரியத்தை
ஒரு அன்பை
ஒரு இனிமையை
ஒரு நன்மதிப்பை
ஒரு அகம் நிறைந்த வாழ்த்தை
ஒரு சமாதானத்தை
சொல்லும் போது
நாம் எண்ணியிராத
ஏதோ ஒன்று
அங்கே
குடியேறி விடுகிறது 

கருவறைத் தெய்வம்

நான் எல்லா மதத்தினரின் வழிபாட்டிடங்களுக்கும் செல்வதுண்டு. மனிதன் ஏதோ ஒரு விதத்தில் தான் என்பதைத் தாண்டி உணர முயற்சித்த இடங்களாகவே வழிபாட்டிடங்களைக் கருதுவேன். அங்கே செல்லும் போது அங்கங்கே என்ன நெறிகளோ அதனை பின்பற்றுவேன். 

கோயில்களுக்குச் செல்லும் போது ஒரு விஷயம் உணர்ந்தேன். தஞ்சைப் பிராந்தியத்தின் கோயில்கள் ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானவை. ஆயிரம் ஆண்டுகளாக இவ்விதமான வழிபாட்டு முறைகள் நிகழ வேண்டும் என ஒரு முறை உருவாக்கப்பட்டு அது தினமும் தொடர்ந்து இப்போது உள்ள காலத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. அங்கே நுழையும் ஒருவனுக்கு அதன் தொன்மையும் வரலாறும் அங்கே நிகழும் வழிபாட்டு முறைகளால் ஆழ்மனத்தில் பதிய வேண்டும். 

கோயில்களின் கருவறை என்பது இருள் சூழ்ந்தது. பிரபஞ்ச வெளியின் கருமையைக் குறிக்கும் வண்ணம் இருளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் தீபங்கள் மட்டுமே ஏற்றப்பட வேண்டும். அந்த தீபங்கள் சூரிய சந்திர நட்சத்திரங்களை குறிப்பவை. நமது புராணங்களின் படி, அண்டம் என்பது கருமையாலானது. அதிலிருந்து மற்ற நிறங்கள் தோன்றின. கருவறை நிறைந்திருக்கும் விஷ்ணுவும் லிங்க ரூபத்தில் இருக்கும் சிவனும் கருமையான கல்லாலேயே சிற்ப விதிகளின் படி செதுக்கப்பட்டுள்ளனர். இருட்கருமையாய் நிறைந்திருக்கும் இறையை தீப ஒளியின் மூலம் சில கணங்கள் காண்பதே ஆலய வழிபாட்டின் வழிமுறை. 

இன்று டியூப் லைட்டுகளின் வெளிச்சம் கருவறை முழுதும் நிறைந்து கிடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளாக பண்பாடைக் காத்தவர்களை விட இன்றைய சமூகம் எவ்விதத்தில் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொள்கிறது? சற்று முயன்றால் இவ்விஷயங்களைச் சரி செய்ய முடியாதா?

சுருதி

நீ
இல்லாத வீட்டில்
நீ இல்லாமல் இருப்பதை
அங்கும் இங்கும்
நீ நடக்கையிலெல்லாம்
கேட்கும்
கொலுசொலி மூலம்
நினைவுபடுத்திக் கொள்கிறேன்
தரை தொடும்
உன் பாதங்கள்
அணுக்கமாய் இசைக்கும் போது
அதன் பின்
கேட்கின்றன
உன் கொலுசுகளின் சங்கீதங்கள்
நீ
அளிக்கும் உணவில்
சுவை கூட்டுகின்றன
சமையலறையில்
மிக மென்மையாய்
கேட்கும்
உன் கண்ணாடி வளையல்களின்
கீதங்கள்
நீ துயருறும் பொழுதுகளில்
சிலமுறை
என்னால் வார்த்தைகளால் உனை மீட்க முடியவில்லை
உன்னிடம் சொல்ல வேண்டிய
ஆறுதல் மொழிகள்
மௌனம் கொண்டு
பாறையெனக் கனக்கின்றன
உன் விழிநீரின் முன்
செயலற்று நிற்கிறேன்
அப்போது
நீ இந்த உலகில்
அவ்வளவு
தனியாக இருக்கிறாய்

பெரும்பாலையின்
ஒற்றை மரம்
ஓசையற்று
நின்றிருக்கிறது

சரண விளி

ஒரு முக மலர்தல்
ஒரு புன்னகை
ஒரு இன்சொல்
ஒரு பார்வை
விழி மூடிய மௌனம்
ஒரு துளி கண்ணீர்

சரண்

நீ
காலையில் கடலெழும் சூரியனாக
பின்னர்
அந்தி நிலவாக
பின்னர்
மாலையின் முதல் நட்சத்திரமாக
பின்னர்
ஒரு விறகு அடுப்பின் நெருப்பாக
பின்னர்
நதியில் மிதக்கும் தீச்சுடராக
பின்னர்
சின்னஞ்சிறு அருமணியாக
மாறிக் கொண்டிருந்தாய்
உயிர்க்கடலின் ஒரு துளியாக
உன் பொட்டு
புருவங்களுக்கு இடையே
ஒளிரத் துவங்கியது


Wednesday 10 April 2019

ஆலோசனை

எந்தச் சூழலிலும்
நீ
என்னிடம்
சொல்வதற்கென
ஒரு ஆலோசனை
இருந்து கொண்டேயிருக்கிறது
இன்றைய அல்லது நாளைய தினத்துக்கான
உடைத் தேர்வு குறித்து
தினச் செயல்பாடுகளை
தொகுத்துக் கொள்வது குறித்து
நான் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள் குறித்து
காக்க வேண்டிய பொறுமை குறித்து
சினத்தை முகத்தில் காட்டாமல் இருப்பது குறித்து
உனது ஆலோசனைகளின் படி
இந்த உலகம்
அழகாக
நிம்மதியாக
எனக்கு
இருக்கிறது

நிறை அறை

என் அறையை
ஏதேனும் ஒரு விதத்தில்
மாற்றியமைத்துக் கொண்டும்
தூய்மைப்படுத்திக் கொண்டும்
இருக்கிறேன்
உனது கண்களின் வழியே
காணும் தோறும்
அறையில்
ஏதேனும் ஒன்று செய்ய வேண்டியதாகவே இருக்கிறது
தரையை இருவேளை பெருக்கினேன்
பின்னர் தண்ணீர் கொண்டு துடைத்தேன்
ஜன்னல் திரைச்சீலைகளை
ஒளி பளீரென பரவாமல்
மென்மையாக நிறைவது போல் அமைத்தேன்
கிருமிநாசினிகளால்
பாத்ரூம் தரையை தினமும் சுத்தம் செய்தேன்
தினமும் ஊதுவத்தி ஏத்தச் சொல்வாய்
சாம்பலை மறுநாள் வரை வைத்திருப்பதை
நீ விரும்ப மாட்டாய்
எப்போதும் கைக்கெட்டுமாறு தண்ணீர் பாட்டிலை
வைக்கச் சொல்வாய்
தண்ணீர் தீரப் போனால்
அலுப்பு படாமல்
சமையலறை சென்று
உடன் நிரப்பிக் கொண்டு வர வேண்டும்
ஒரு கணம் கூட
அறையில் ஓய்ந்து அமர
முடியவில்லை
இன்னும் நான் எத்தனை
சீராக்கப்பட போகிறேன்
உனது கண்கள்
எனக்கு
அவ்வப்போது வருவது எப்படி
உனது கண்கள்
எனது அறையில்
உனது மனம்
என் கண்களில்
நிறைவதன் சதவீதக் கணக்கு என்ன
என் அறையின் மையத்தில்
என் மையத்தைக் குறித்து
யோசிக்கிறேன்
எப்போதும்
என் அறைக்கே வந்திராத
புன்னகைக்கும் உன் முகம்
மட்டும்
நினைவில் எழுகிறது
அந்திச் சூரியனுக்கும்
கண்களுக்கும்
இடையே
நிறையும் மேகங்களைப் போல 

கலையும் சமூகமும்

நான் ஆலயங்களுக்குத் தொடர்ந்து செல்லும் பழக்கம் உள்ளவன். நான் வாழும் பிராந்தியம் ஆலயங்களால் நிறைந்தது. எனக்கு சின்ன வயதிலிருந்தே வரலாற்றின் மீது ஆர்வம் இருந்தது. சங்க காலத்தின் மதுரையில் பிற்காலச் சோழர்களின் நந்திபுரத்தில் விஜயநகரப் பேரரசில் சத்ரபதி சிவாஜியின் சைனியங்களில் குரு கோவிந்த சிம்மனின் படையணிகளில் என எப்போதும் ஒரு மானசீக உலகை உருவாக்கிக் கொண்டு அதில் உலவிக் கொண்டிருப்பேன். சட்டென நிகழ்காலத்திலிருந்து கடந்த காலங்களுக்குச் செல்வதற்கு ஆலயங்கள் உதவும். ஆயிரம் ஆண்டு கால ஆலயம் அதில் நாம் இருக்கும் போது தொல் காலங்களுக்கு இட்டுச் சென்று விடும். திருஞான சம்பந்தரை திருமங்கை ஆழ்வாரை அப்பரை சுந்தரரை குமரகுருபரரை மனதில் மிக அணுக்கமாக உணர ஆலயங்கள் துணை செய்திருக்கின்றன. இங்கு தான் சம்பந்தர் பதிகம் பாடியிருப்பார்; இங்கு தான் குமரகுருபரர் நடந்து சென்றிருப்பார் என பல இடங்களை கற்பனை செய்து கொள்வேன். தமிழ்ச் சமூகத்தின் கடந்த காலத்தை ஆலயங்களிலிருந்து தொடங்கி அறிந்திருக்கிறேன். தமிழ்ச் சமூகத்தின் அரசியலை, வாணிகத்தை, ஆட்சிமுறைகளை, கலையை, பண்பாட்டை.

இன்று பேராலயங்களில் ஓரிரு அர்ச்சகர்களே உள்ளனர். கிராமங்களில் இருக்கும் ஆலயங்களுக்கு வழிபட வரும் கிராமவாசிகள் மிகவும் குறைவாக உள்ளனர். பகல் பத்து மணிக்கு மேலும் மாலைகளிலும் பெண்கள் சிலர் வழிபட வருகின்றனர். கிராமங்களின் பகல் பொழுதுகளில் ஆண்கள்  எவரும் கோவிலுக்குள் வருவதில்லை. சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் மாலைப் பொழுதை தொலைக்காட்சி ஆக்கிரமிக்கிறது. இளைஞர்கள் இணையத்தின் தாக்கத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர். 

ஆலயங்களில் எலெக்டிரிக் மங்கள இசை ஒலிக்கிறது. 

தமிழ்நாட்டின் சமய நிறுவனங்கள் தங்கள் பொறுப்பில் உள்ள ஆலயங்களில் ஊதியத்திற்கு ஆட்களை நியமித்து தேவாரம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றை அந்த ஊரில் இருக்கும் குழந்தைகளுக்குச் சொல்லித் தரலாம். நியமிக்கப்படுபவர்களுக்கு மிக நல்ல ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆலயமும் குறைந்தபட்சம் முப்பது மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சி அளித்தாலே ஐந்திலிருந்து பத்து ஆண்டுகளில் சமூகத்தில் ஆலயங்கள் மற்றும் ஆலய பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க முடியும். ஆலயத்தின் ஒரு பகுதியாக இசையும் நடனமும் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

இன்று தமிழ்ச்சமூகத்தின் கலை உணர்வை பெருமளவில் பாதிக்கும் சக்தியாக பரப்பிய கேளிக்கை கலைகளே உள்ளன. அவற்றுக்கு மாற்றாக ஒன்றை ஆலயங்களை மையமாக வைத்தே உருவாக்க முடியும். 

கலைகளின் வழியாக பண்பாடு எழுச்சி பெறும். பண்பாடு எழுச்சி பெற்றால் சமயமும் சிறக்கும்.

கலைஞன் தான் நம்புவதை உறுதியாக பேசிக் கொண்டிருக்கிறான். அவன் எப்போதும் நம்பிக்கை இழப்பதேயில்லை.

வாழ்க்கை ஒரு திருவிழா

நேற்று எனது திருவாரூர் நண்பர் ஒருவருடன் மன்னார்குடி வெண்ணெய்த்தாழி உற்சவம் காண சென்றிருந்தேன். சென்ற வாரத்தில் திருவாரூரில் ஆழித்தேர் உற்சவம். மனம் தன் வழக்கமான இயங்குமுறையை சற்று தொலைவில் வைத்து விட்டு உற்சாகமாக இருந்தது. இவ்விழாக்களை முகாந்திரமாகக் கொண்டு பலவிதமான எண்ணங்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு எண்ணத்தின் பின்னாலும் சென்று கொண்டிருந்தேன். நம் சமூகத்தின் பொது வெளியை உருவாக்குவது சமயமே. நமது பண்பாடு சமயத்தை அடித்தளமாகக் கொண்டு சமயத்திலிருந்து எழுந்து வளரக் கூடிய தன்மை கொண்டது. விதையில் உறங்கும் மரத்தின் உயிர் போல நம் பண்பாட்டில் சமயம் இருக்கிறது. நமது சமயம் பல்வேறு விதமான பாதைகளையும் சமமாக பாவிக்கும் தன்மை கொண்டது. அவை அனைத்தையும் அங்கீகரிப்பது. இந்தியாவிற்கென தனிச்சிறப்பாக உள்ள பண்பாடு காக்கப்பட வேண்டும் எனில் இந்திய சமயங்கள் உயிர்த்தன்மையுடன் காக்கப்பட வேண்டும். 

தமிழ்ச் சமூகங்கள் கடந்த இருபதாண்டுகளில் பொருளாதார ரீதியாக எழுகின்றன. எல்லா கிராமங்களும் சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளன. எல்லா வீட்டுக் குழந்தைகளும் பள்ளிக்குச் சென்று கல்வி பயில்கின்றன. குடும்பக் கட்டுப்பாடை பெரும்பாலான குடும்பங்கள் ஏற்றுள்ளன. ஒரு குழந்தை இரண்டு குழந்தைகளே எல்லா வீட்டிலும் இருக்கின்றன. மூன்று குழந்தைகள் உள்ள வீடுகள் மிக அபூர்வமாகவே உள்ளன. மருத்துவ வசதி எல்லா கிராமங்களுக்கும் கிடைக்கிறது. இரு சக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் பெருகி விட்டன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததற்கு இப்போது வறுமை பெரிய அளவில் ஒழிக்கப்பட்டுள்ளது. 

பொருளியல் வளர்ச்சி பெறும் எந்த சமூகத்திலும் அதன் அடிநிழலாக சில தவிர்க்க முடியாத விளைவுகள் ஏற்படும். பொருளியல் வளர்ச்சி பெறும் சமூகங்கள் மதுவின் பின்னாலும் கட்டற்ற கேளிக்கையின் பின்னாலும் செல்லும் என்பது பொருளாதாரத்தின் அவதானங்களில் ஒன்று. இன்று தமிழ்ச் சமூகம் அவ்வாறான நிலையில் உள்ளது. 

தமிழகத்தின் முக்கியமான கோவில்கள் விஜயநகர ஆட்சிக் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு மக்களை இணைக்கும் மையங்களாக உருவாக்கப்பட்டிருந்தன. சிற்பம், ஓவியம், நடனம், இசை, நெசவு, இலக்கியம் ஆகியவை ஆலயங்களை மையமாக வைத்து பயிலப்பட்டுள்ளன. கலைஞர்கள் ஆலய வருவாயிலிருந்து பராமரிக்கப்பட்டுள்ளனர். ஒரு சமூகத்தின் கலை உணர்வு சிறப்பாக இருக்கும் போது மட்டுமே அச்சமூகம் முன்னேற்றத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறிச் செல்லும். 

இன்று கலைகள் அரசாலும் சமய நிறுவனங்களாலும் கைவிடப்பட்டுள்ளன. நாகஸ்வர வித்வான்கள், நடனக் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் சொந்த விருப்பத்தாலும் பொதுமக்கள் ஆதரவாலும் மட்டுமே இயங்கக் கூடிய நிலைக்குச் சென்றிருக்கின்றனர். இந்நிலை தொடருமென்றால் தமிழ்ச் சமூகம் கலை வறுமையால் தாழ்வுறும். 

தமிழகத்தின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான ஆலயங்கள் அனைத்திலும் மிக அதிக எண்ணிக்கையில் பூசகர்கள், நாகஸ்வர கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் ஆகியோர் உயர் ஊதியத்தில் நியமிக்கப்பட்டு அவர்கள் பராமரிக்கப்பட வேண்டும். அவர்கள் ஆலய வழிபாட்டு நேரம் போக மற்ற நேரத்தில் ஊரில் இருக்கும் ஆர்வம் மிக்க குழந்தைகளுக்கு சமயமும் இசையும் நடனமும் பயிற்றுவிக்க வேண்டும். 

ஒரு கல்விச்சாலையில் ஒன்றாய் கல்வி பயிலும் மாணாக்கர் மத்தியில் ஏற்படும் ஒருங்கிணைப்பு சமூகத்தில் சாதகமான விளைவுகளை உருவாக்கும். கலை கலைஞர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் தரும். சமூகம் முன்நகர வாய்ப்பு உருவாகும்.

Tuesday 9 April 2019

மணம்

மக்கள் நிறையும்
திருவிழா வீதிகளில்
எப்போதும் உனைச் சூழும்
தனிமை
இல்லாமல் இருக்கிறாய்
கோயில் யானையை எப்படியாவது தொட நினைக்கிறாய்
தேர் வடத்தினை முன்னே சென்று தொட்டுக் கும்பிடுகிறாய்
ஒவ்வொரு விளையாட்டுப் பொருளையும்
அது என்ன அது என்ன என்கிறாய்
வாங்கித் தரட்டுமா என்று கேட்கும் போது
நாணி முகம் சிவந்து புன்னகைக்கிறாய்
நெரிசல் மிகுந்திருக்கையிலும் அமைதியாக சாமி கும்பிடுகிறாய்
மலர் தொடுக்கும் கரங்கள்
மலர் மணம் பெறுவது போல
உன் மணம் பெற்றுக் கொள்கிறேன்
திருவிழாக்களில்
மேகங்களில் மிதக்கும்
கொற்றப்புள்ளின் அதிகாரத்தில்
அனலெரியும்
கோடையின் தேசம்
அதன்
நுண் பார்வையில்
நெளிகிறது
பாதாளங்களின் இருள்

Monday 8 April 2019

காணும் போது
ஏதோ ஒரு முறை
விழிகளால்
மண் நோக்கினாய்
படகில் திரும்பிக் கொண்டிருப்பவன்
கலங்கரை விளக்க ஒளி
கண்டு
இன்னும் விரைகிறான்
ஓயாத அலைகள் மேல்

சூடிக் கொடுத்த மாலை

மண்ணில் மலர்கள்
தவமிருந்தன
சூடிக் கொடுத்த மாலையின்
மணம் பெறுவதற்கு
மீன் கண்ணியின்
கிளி
செல்லும் வழியில்
கூறிச் சென்றது
ஆகமும் அகமும்
அன்பாய் ஆனவள்
மணம் அது
இறைவன்
அதை அவளிடம்
யாசித்துப் பெற்றான்
அவளை நினைத்துக் கொள்ளுங்கள்

அன்னையின் தலையில் பூத்திருக்கும் பூக்கள்
மணப்பது எவ்விதம் என்பது
புதிராகவே இருந்தது
கைக்குழந்தைக்கு

கூடு

நீயே
எப்போதும்
சரியாகப் புரிந்து கொள்கிறாய்
கேட்கப்படாமலே மன்னிக்கிறாய்
உபசார சொற்களை எதிர்பாராதிருக்கிறாய்
கடினமான
எந்த சூழ்நிலையிலும்
செய்ய வேண்டியதைச் செய்து கொண்டிருக்கிறாய்

உன் முகம் வாடும்
உன் கண்களில்
நீர் துளிக்கும்
நாள் ஒவ்வொன்றிலும்

புதிதாய்
சிறகு முளைக்கும்
சேய்ப்பறவையொன்று
இரை தேடச் சென்று
இன்னும் திரும்பாததன்
துயரத்தை
ஒலித்துக் கொண்டிருக்கிறது
ஒரு பறவைக் கூடு

Sunday 7 April 2019

பெயர்ப் பட்டியல்

பட்டியலில் பெயர்கள் பரவியிருக்கின்றன
வரிசை எண்ணுடன்
வித வித நோக்கங்களில்
கண்ணாடிக் கதவு போட்ட
அறிவிப்புப் பலகையில்
ஒட்டப்பட்டுள்ள
ரயில் முன்பதிவு பட்டியல்
அரசு பராமரிக்கும் திருக்கோயில்களின்
குத்தகை பாக்கி பட்டியல்
சம்பள பட்டியல்
பதவி உயர்வு பட்டியல்
போதிய வருகையில்லாமல்
பரீட்சை எழுத அனுமதிக்கப்படாதவர் பட்டியல்
மனிதர்கள்
சூழ்நிலை பொறுத்து
சாத்தியம் பொறுத்து
குழுவாய் இணைகிறார்கள்
குழுவிலிருந்து பிரிகிறார்கள்
பட்டியல் பெயர்கள் ஒன்றாகவே இருக்கின்றன
பிரியாமலும்
இணையாமலும்

கோலக் காலை

விடிவெள்ளிக்குக் கீழே
கண் விழிக்கத் துவங்கியிருக்கும் சிற்றூரில்
நீண்டிருக்கும் மண் சாலையில்
தினமும் நடக்கிறான்
காலை நடையாளன்
வாசலில் சாணமிட்ட குடிசை வீடுகளில்
கூரைக்கும் சாலைக்கும்
பறந்து பார்க்கின்றன
செந்நிற சேவல்கள்
நிற்க நேரம் இல்லாத
பெரிய வேலையற்ற இன்னொரு நாளைக்குள்
மெதுவாக வருகின்றன
சாலைக் குக்கல்கள்
புதிதாகக் கோலம் பயிலும்
சிறுமி
மாப்புள்ளிகளை வளையமிட்டு
உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்
ஒரு பொழுதை

Friday 5 April 2019

இறுதிக்குப் பின் யாத்திரை

தணிந்த
சிதை நெருப்பின்
சாம்பல் குவியலின்
வெண்ணிறப்  பொடி
மானசீகமாக
உரு தருகிறது
இல்லாத உடலுக்கு

இறுதி யாத்திரைக்குப் பின்
இன்னும் ஒரு வாய்ப்பளித்து
சமுத்திரம் வரை செல்கிறது
முற்றிலும் கரைந்து போக

முற்றிலும் கரைதலில்
ஒரு ஆசுவாசம்
இருக்கத்தானே செய்கிறது

Thursday 4 April 2019

கோடை மாலை

கோடை மாலையில்
நிழற்சாலையில்
கூடியிருக்கும் சந்தையில்
காய்கறி வாங்கி
வீடு திரும்பும் முகங்களில்
நிரவியிருக்கிறது
ஒரு விடுபடல்

நிலக்காற்று
கடல் மேல் அடையும்
குளிர்ச்சி

தரங்கம் பாடி

கடற்கரையில்
சவுக்குத் தோப்புக்கருகில்
மணல்மேட்டின் மேல்
அமர்ந்து
அலைகளின் சங்கீதம்
கேட்கிறான்
அலையும்
ஒற்றைப் பயணி

அந்தி வானின்
விண்மீன்கள்
அசைந்து கொடுத்து
ஒத்திசைகிறது
அலைகடல் நகர்வுக்கு

Tuesday 2 April 2019

மண் விண் அமுது

எல்லா இலைகளும் உதிர்ந்து
நீர்மையற்ற பரப்பில்
நின்று இருக்கும் மரம்
இடைவிடாது
வேர்களால்
துழாவுகிறது
ஆழங்களில் உறையும் உயிர்ப்பை

மழலைக் கிளைகள்
தீண்ட
நீட்டுகின்றன
முடிவற்ற
அமிர்த வான் நோக்கி 

Monday 1 April 2019

பிரியத்துக்குரியவர்களிடம்
இன்னும் முழுமையாக வெளிக்காட்டாத உணர்வுகள்
இன்னும் உச்சரிக்கப்படாமல் மனதில் பாதுகாத்திருக்கும் சொற்கள்
இன்னும் அளிக்காத வாக்குகள்
இன்னும் சிந்தாத கண்ணீர்
இன்னும் இன்னும் வளர்ந்து கொண்டேயிருக்கும் நம்பிக்கை
இன்னும் இன்னதென்று வடிவப்படுத்த முடியாத அன்பு

ஓயாப் பெருங்கடலுக்கும்
அந்திச் சூரியனுக்கும்
இடையே
வித விதமான
மேகங்கள்
மிதக்கின்றன
சைத்ரிகனின் கரம்
ஒரு வெள்ளைக் காகிதத்தில்
ஒரு சூரியனை
ஒரு சந்திரனை
சிறு சிறு மலைக் குன்றுகளை
ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நதியை
அதில் அலையும் மீன்களை
அந்தரத்தில் நிற்கும் கொத்திப் பறவைகளை
சிறு குழந்தைகளுடன் நின்றிருக்கும்
வாலைக் குழைக்கும் நாயை
ஒரு சிறு கீற்று வீட்டை
அதனுள் புகையும் அடுப்பங்கரையை
சில கணங்களில்
உருவாக்கி விடுவதைப் போல
நீ
ஒரு மாய உலகத்தை
உருவாக்கினாய்
பின்னர்
அதிலிருந்து எப்படி வெளியே வருவது
என்பதைப் பற்றி
நாம் யோசிக்கவேயில்லை

நில் கவனி செல்

ஒரு நெடுஞ்சாலையில்
கிளையில் பறவைகள் நிற்கும்
நிழலில் பிராணிகள் நிற்கும்
மண்ணில் ஆல் நிற்கும்
பேருந்து நிறுத்தம்
இல்லாத இடத்தில்
நின்று கொண்டிருக்கிறது
மூன்று எலுமிச்சைகள்
செருகப்பட்ட சூலம்
நடத்துனர்களும்
வாகன ஓட்டுனர்களும்
சிரத்தையாய்
முன்நின்று
வேண்டிக் கொள்கின்றனர்
வழித்துணையாய் உடன்வர
மரத்தின் மேல்
கவிந்து நின்றிருந்தது
வெண்மேகம்

ஏன் மறக்க வேண்டும்

ஏன் மறக்க வேண்டும்
சில பொழுதுகள் ஆயினும்
சில நாட்கள் ஆயினும்
சில மாதங்கள் ஆயினும்
நான்
என்பதில்
முழு உலகமும்
இணைந்த
மாசற்ற
தூய
நேரடியான
செயல்பாட்டை
ஏன் மறக்க வேண்டும்