Sunday 30 June 2019

புத்தகமும் கையும்

கைகளுக்கு அழகு எது? ஓர் இலக்கிய வாசகன் புத்தகத்தை ஏந்தி வாசித்திருத்தல் என்றே சொல்லுவான். வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள் ஒரு புத்தகத்தை ஏந்துவதற்கும் மற்றவர்கள் ஏந்துவதற்குமே வித்யாசம் உண்டு. வாசிப்பில் ஆர்வம் உள்ளவனுக்கு புத்தகம் வசப்படுகிறது. அதன் மூலம் அவனுக்கு வாழ்க்கையே வசப்படுகிறது. நான் சிறுவயதில் எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருப்பேன். பெரிய நூலகங்களைப் பற்றி வாசிக்கும் போது இந்த உலகின் எல்லா புத்தகங்களையும் வாசித்து விட முடியுமா என்று தோன்றும். உலகின் எல்லா புத்தகங்களையும் எவராலும் வாசித்திட முடியாது. ஆனால் நமக்கு ஆர்வம் இருக்கும் துறைகளின் முக்கியமான புத்தகங்களை வாசித்திட முடியும். புத்தகம் மூலம் ஆசான்கள் நம்முடன் உரையாடுகின்றனர். விவாதிக்கின்றனர். வழிகாட்டுகின்றனர். அது எவ்வளவு பெரிய பேறு! இன்னும் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்த ஏக்கம் எனக்கு இப்போதும் இருக்கிறது. மடிக்கணினியில் எழுதினாலும் இப்போதும் அச்சுப் புத்தகங்களையே அதிகம் வாசிக்கிறேன். சமீபத்தில் கிண்டில் பாதி. புத்தகம் பாதி. 

Saturday 29 June 2019

நீர்த்தேசம்
சென்று திரும்பும்
நாடோடிகள்
பார்வையில்
நிற்கிறது
கலங்கரை விளக்கம்
நீருக்கும்
நிலத்துக்கும்
வானுக்கும்
நடுவே

Friday 28 June 2019

சரணம்

கானகச் சாலையில் நடந்து கொண்டிருந்தேன்
ஒடித்த சிறுகிளைகளை தூக்கி எறிந்து விளையாடிய
ஆனைக்கூட்டம்
என் துயரங்களை கிளையுடன் சேர்த்து பந்தாடியது
சட்டெனக் கடந்த கீரியொன்று
ஒரு கணம் நோக்கி
ஒரு அவசரவேலை என்றபடி
கடக்கையில்
யார் இவன்
என
நினைவின் அடுக்குகளில்
துழாவியது
எனது அடையாளங்களை
உகிர்களால் கொத்தின
வான் பறந்த பறவைகள்
அருவி நீரில்
குளிர்ந்து கிடக்கும்
அசையாப் பாறையிடம்
சரணடைந்தேன்
மலைச்சரிவில் கண்ட
அஸ்தமன சூரியன்
ஒளியாய் நிரம்பிய
அகத்துடன்

Thursday 27 June 2019

எதிர்பார்த்திருந்த மழை
ஒரு மாலை அந்தியில் பெய்யும் போது
நாம் பலவற்றைத் தொகுத்துக் கொள்கிறோம்
நம்பிக்கையளிப்பதாகவே எதிர்காலம் இருக்கிறது
இன்னும் கேட்காத மன்னிப்புகளை
கேட்பதற்கான சொற்களைத் தேர்ந்து கொள்கிறோம்
பிரியங்களின் வகைவகையான மலர் மணங்கள்
சூழ்ந்து கொள்கின்றன
ஈரக் காற்றெங்கும் மிதக்கிறது இருப்பின் இனிமை
வெம்மையைக் குளிரச் செய்யும் அன்பின் ரசவாதம்
மழை கற்றது எப்படி
விரல் கோர்த்து நிகழும் நெசவின் மாபெரும் நெசவாளன் யார்

Wednesday 26 June 2019

அந்தரப் பயணம்

மழை பெய்யும் இந்த இரவில்
உன்னை நினைத்துக் கொள்கிறேன்
மழையின் காலடிகள் சீராக நடக்கின்றன மண்ணில்
இந்த கணம்
மண்ணின் தவத்திற்கு கனிந்த
மலரென
நீ
உறங்கிக் கொண்டிருப்பாய்
நான் மழையுடன் பயணிக்கிறேன்
அந்தரத்தின்
முடிவிலா மர்மங்களை நோக்கி

Tuesday 25 June 2019

அசையும் தீச்சுடர்

உச்சி சூரியனை மறைக்கும்
கன்னங்கருமேகமென
அடர்ந்திருக்கும் கூந்தல்
படிந்திருக்கிறது
சொல் கேட்கும்
சாதுவான பிள்ளையென
மாசற்ற உன் முகம்
அவ்வப்போது
மலராகிறது
நீ புன்னகைக்கும் போதெல்லாம்
மெல்ல உயர்ந்து அமரும்
உன் மென் தோள்கள்
அடையாளப்படுத்துகின்றன
மூச்சின் தியானத்தை
காற்றில் அசையும்
தீபத்தின் முன் நிற்பது போல்
அசைந்து உரையாடும்
உன் முன் நிற்கிறேன்

Monday 24 June 2019

நடுநிசி மழை

நகரம் மழையை எதிர்பார்க்கிறது
நண்பகலில்
உனது அறையின் வெம்மையைத் தாண்டி
வாசலுக்கு வந்ததும்
தன்னிச்சையாக
வானத்தைப் பார்க்கிறாய்
அசையும் மர இலைகளுக்கு
அப்பால் தெரியும் வானம்
மேகங்களின்றி பளிச்சென்றிருக்கிறது
அனல்காற்று வீசும்
பரபரப்பான சாலையை
மெல்ல கடக்கிறது
உனது வாகனம்
ஏன் அனல் ஏறிக் கொண்டே போகிறது
என்ற
மெல்லிய அச்சம் சூழ்கிறது
உன்னை
சட்டென நிகழ்ந்து விடும்
பல விஷயங்களின்
தாறுமாறான இயல்பால்
திகைக்கிறாய்
எப்போதோ
உள்ளங்கைகளில்
முகம் பொத்திக் கொள்கிறாய்
துயர் மிகும் பொழுதைக்
கடந்து உறங்குகையில்
நடுநிசியில்
உணரும் குளுமையால்
எழுந்து
சாளரங்களின் வழியே
பார்க்கிறாய்
எல்லாரும் உறங்கும் நகரில்
நீ
மட்டும் பெருமூச்சுடன் பார்த்திருக்க
பெய்து கொண்டிருக்கிறது
மழை

Sunday 23 June 2019

இன்னொரு நிலவு

குன்றுகள் சூழ்ந்த சிறு நகரில்
கொன்றை மலர்கள் கொட்டிக் கிடக்கும்
மேகங்கள் கருப்பாய் நகராமல் நிற்கும்
அந்தி மாலையில்
சிந்தும் லேசான தூறலுக்கு
உன் கை விரல்களால்
முகம் மறைக்கையில்
நிறைவை நோக்கி நகரும்
இன்னொரு
நிறையா நிலவாய்
சாலையில்
நீ
நடந்து கொண்டிருக்கிறாய்

Saturday 22 June 2019

அன்பு

என் நினைவுகளை உதிர்க்கிறேன்
என் அடையாளங்களை உதிர்க்கிறேன்
எல்லையற்ற கடல் மேல்
நின்றிருக்கும்
உன்னை நோக்கி
வந்து கொண்டிருக்கிறேன்

Friday 21 June 2019

ஒன்றுதல்

யோகா இந்தியா உலகுக்கு அளித்த கொடை. ஆன்மீகப் பாதையில் செல்பவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த யோகா இப்போது அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியர்கள் செய்யக்கூடிய உடல் சார்ந்த வேலைகள் அதிகம். மாணவர்களும் மாணவிகளும் பள்ளிக்கு நடந்து செல்வார்கள். குடும்பப் பெண்கள் எந்திரங்களின் துணையின்றி வீட்டு வேலைகளைச் செய்வார்கள். இன்று அனைவருக்கும் எந்திரங்களின் துணையால் உடல் சார்ந்த பணிகள் குறைந்து விட்டன. உடலின் ஆற்றல் செலவு செய்யப்படாமல் இருப்பது உடலின் சமநிலையைப் பாதித்து உடல் மற்றும் மன நோய்மைக்கு இட்டுச் செல்லும். இன்று ஒவ்வொருவருக்கும் யோகா வந்து சேர்ந்திருக்கிறது. ஆரோக்கிய வாழ்வின் ஒரு பகுதியாக யோகாவைக் கொண்டால் கூட, அது அளிக்கும் பயன் அளப்பரியது. பெண்களுக்கும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் யோகா அளிக்கும் பலன் அற்புதமானது. தமிழ்ச் சூழலில், வேலைக்குச் செல்லும் பெண் காலை உணவையும் மதிய உணவையும் சேர்த்து சமைத்து விட்டு காலை உணவு உண்டு மதிய உணவை எடுத்துக் கொண்டு அலுவலகத்துக்கு காலை எட்டு மணிக்குப் புறப்பட்டால் வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிறது. வீட்டுக்கு வந்து இரவு உணவை அவர்களே தயாரிக்க வேண்டும் என்ற நிலை. வாழ்நாளின் பெரும்பகுதி இந்த காரியத்தைச் செய்வது என்பது ஒரு சோர்வளிக்கும் செயல்பாடு. அவர்களுடைய உடல்நிலையை சீராகப் பராமரிக்க அவர்கள் காலையிலும் மாலையிலும் 15 நிமிடங்கள் யோகா செய்வது நல்ல பலன்  தரும். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்  இந்தியர்களுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றால் வரக் கூடிய நோய்களே அவர்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட காசநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. இன்று அவ்வாறான நோய்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டன. இன்று சர்க்கரை நோயும் உயர் இரத்த அழுத்தமும் எலும்புத் தேய்மானமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான பிரச்சனைகளாயிருக்கின்றன.

இன்று மருத்துவத் துறை மிக மோசமான சீர்கேடான இடத்தை அடைந்துள்ளது. நூறு மருத்துவர்களில் ஓரிருவரே நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாகவும் நோய் தீர்க்கும் மருத்துவத்தின் புனிதத்தை உணர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். மற்றவர்கள் மருந்து கம்பெனிகளின் முகவர்களாக  செயல்படக் கூடிய நிலை இருக்கிறது. 

யோகப் பயிற்சிகள்  எளியவை.  எளிய யோகப் பயிற்சிகள் தொடர்ச்சியாக செய்யப்படும் போது அற்புதமான பலன்களைத் தரக்கூடியவை. நவீன வாழ்க்கை பொருளாதார சுதந்திரத்தை அளிக்கிறது. பொருளாதார சுதந்திரம் அளிக்கும் உபரி நேரத்தை தொலைக்காட்சியும் சமூக ஊடகங்களும் எடுத்துக் கொள்கின்றன.  அவை மனத்தை அடிமைப்படுத்தி நம்மை சிக்கலில் ஆழ்த்தக் கூடியவை. அவற்றிலிருந்து விடுபட்டு இருக்க  யோகப்பயிற்சிகள் உதவும்.

இந்திய அரசாங்கம் யோகாவை எல்லா  இந்தியர்களிடமும் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொள்கிறது. அது ஒரு பண்பாட்டுச் செயல்பாடு என்பதைத் தாண்டி உடல்நலம் மற்றும் சுகாதாரம் சார்ந்த செயல்பாடாகவும் அதனை முன்னெடுக்கிறது. பெண்களுக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் உடல்நிலையை சீராக வைத்திருக்க யோகா ஒரு வரப்பிரசாதம்.

மகாபாரதத்தில் யக்‌ஷப் பிரசன்னத்தில், யக்‌ஷன் யுதிர்ஷ்டிரனிடம் கேட்கிறான்.

லாபத்தில் சிறந்தது எது? (லாபா நாம் உத்தமம் கிம்?)

பதில்: ஆரோக்கியம் (லாபா நாம் சிரேயஸ்; ஆரோக்ய) 

Thursday 20 June 2019

சமத்துவம்

நான் வசிக்கும் பகுதியில் ஓர் இளைஞர் இருக்கிறார். எனது நண்பர். பொறியாளர். மும்பையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தார். பின்னர் சில வருடம் வளைகுடா நாடுகளில் பணி புரிந்தார். இப்போது சிங்கப்பூரில். அவ்வப்போது இங்கு வந்து செல்வார். ஒவ்வொரு முறை வரும் போதும் என்னைச் சந்திப்பார். ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருப்பார். 

என்னிடம் ஒருமுறை மும்பையில் தான் கலந்து கொண்ட திருமண விழாக்களைப் பற்றியும் அதன் விருந்துகளைப் பற்றியும் சொன்னார். அவ்விழாக்களின் ஒவ்வொரு கூறுகளையும் ஆர்வத்துடன் விரித்துரைத்தார். விழாவில் கலந்து கொள்பவர்கள் ஒவ்வொருவரையும் தனிக் கவனம் கொடுத்து வரவேற்பார்கள். விருந்து பரிமாறுபவர்கள் அவ்வளவு பொறுமையையும் நிதானமும் ஒழுங்கும் கடைப்பிடிப்பார்கள். எங்கும் மகிழ்ச்சி நிலவும். நான் கேட்டேன்: ஏன் நம் ஊரில் கூடத்தான் பெரும் செலவில் திருமணங்கள் நடக்கின்றன. அவற்றில் பெரும் விருந்துகளை ஏற்பாடு செய்கிறார்கள். எதை வேறுபாடு என்று கூறுகிறீர்கள் என்று கேட்டேன். அவருக்குத் தொகுத்துச் சொல்லத் தெரியவில்லை. அவர் சுட்டிக்காட்டியவற்றை நான் தொகுத்துக் கொண்டு அது குறித்து மேலும் விரிவாக யோசித்தேன்.

இங்கே இன்னும் நிலப்பிரபுத்துவ மனநிலை நீடிக்கிறது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் நில உரிமையாளன் தான் நில உரிமையாளனாக இருப்பதாலேயே எல்லா சிறப்புகளும் தனக்கே உரியவை தான் மட்டுமே அதிகாரத்துக்கான எல்லா தகுதியும் கொண்டவன் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பான். அவனது சமூகத் தொடர்புகளில் எப்போதுமே தான் மட்டுமே குறிப்புகள்  கூறும் இடத்தில் இருப்பவனாக தன்னை அமைத்துக் கொள்வான். அந்நிலையில் அவனுடன் தொடர்பு கொள்பவர்கள் அவன் நிலத்துடன் விவசாயத்தில் தொடர்பு கொண்டவர்களாக இருப்பார்கள். அவனிடம் உரையாடவோ விவாதிக்கவோ மாட்டார்கள். அவன் அளிக்கும் ஊதியத்தைப் பெற்றுக்  கொண்டு அவனுடன் மிகக்  குறைவான சொற்களில் உரையாடுவார்கள். எனவே நிலப்பிரபுத்துவ சமூகம் தேங்கிப் போனதாக இருக்கும்.  ஆழமான சாதி நம்பிக்கை, மாற்றத்தின் மீது நம்பிக்கையில்லாமல் இருத்தல், எப்போதும் அடுத்தவரை கீழாக எண்ணும் குணம் ஆகியவை ஃபியூடல்களின் ஆளுமையாகவே உருவாகி  விடும். இவர்களால் இவற்றின் சுமைகளை என்றுமே இறக்கிவைக்க  முடியாது. இவர்களுடன்  தொடர்பில் இருப்பவர்களும் மறைமுகமாக இம்மனநிலையின் சுமைகளை சுமக்கத் துவங்கி விடுவார்கள்.

வணிகர்களான பிரிட்டிஷார் உலகின்  பெரும்பகுதியை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். ஜப்பானியர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை உலகெங்கும் கொண்டு சென்று எலெக்ட்ரானிக் உலகை ஆண்டார்கள். இன்று கொரியர்கள் உலகெங்கும் தங்கள் வணிகங்களைக் கொண்டு சென்றிருக்கின்றனர். வணிகம் எப்போதுமே சில மேலான மதிப்பீடுகளைக் கோரியவாறு இருக்கும். ஆதலால் அவர்களுடைய சமூகப் புரிதலும் சமூக மதிப்பீடுகளும் எவரையும் விட மேலானதாக  இருக்கும். சமூகவியலிலும் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் நிகழும் மாறுதல்களை முதலில்  ஏற்றுக் கொள்பவையாக ஒப்புநோக்கில் வணிகச் சமூகங்கள் இருக்கின்றன.

மானுட சமத்துவத்தின் மேல் நம்பிக்கையில்லாத ஒருவரால் தன் விருந்தினரை முழு மனத்துடன் வரவேற்க முடியாது என்பதே நடைமுறை உண்மை. பின்னர்  அங்கே நிகழ்வது தந்திரங்களாகவே இருக்கும். தந்திரமான மனிதர் அவர் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் பிறரால் ஏற்கப்படவே மாட்டார். காலாவதியான மின்கலங்கள் போல உபயோகமற்றுப் போவார்கள்.

மும்பையில் குடும்ப விழாக்களில் மட்டுமாவது சமத்துவத்தை ஏற்கின்றனர் என்றார் நண்பர். 

எல்லையின்மை

எல்லைகள்
சிலவற்றைக்
கடக்க முடியாமலே போகிறது
துயரத்துடன் சொன்னாய்
எல்லையற்ற அன்பின்
நிலப்பரப்பில்
நாம் பேசிக் கொண்டிருப்பதை
நினைத்துக் கொண்டு
உன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

Wednesday 19 June 2019

வரலாறும் கற்பனையும்

புறவயமாக எழுதப்பட்ட இந்திய வரலாறு என்பதை இந்தியாவில் பிரிட்டிஷார் எழுதத் தொடங்குகின்றனர். கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆவணங்களின் அடிப்படையில் அவர்களின் வணிகப்பரவலின் அடிப்படையில் அவர்கள் இந்த பணியைத் தொடங்குகின்றனர். பின்னர் ’’இந்தியவியல்’’ என்ற துறை கல்விப்புலத்தில் உருவாகிறது. இந்திய மொழிகளை சிற்பவியலை பயின்று இந்தியவியல் அறிஞர்கள் உருவாகின்றனர். அவர்கள் இந்திய இலக்கியங்களை, சிற்பவியலை, கல்வெட்டுக்களை, கட்டுமானங்களை பயின்ற பின்னர் அவற்றைத் தொகுத்து இந்திய வரலாற்றை தங்கள் கோணத்தில் யூகிக்கின்றனர். அது ஐரோப்பியப் பார்வை கொண்டுள்ளது. அதில் அவர்களின் அரசியல் அபிலாஷைகள் கலந்திருந்தன. பின்னர் இந்தியர்கள் இந்தியவியலைப் பயின்று இந்திய வரலாறை எழுத முயல்கின்றனர். இயல்பாக அவர்கள் ஐரோப்பியர்கள் எழுதியவற்றின் போதாமைகளையும் இடைவெளிகளையும் சுட்டிக் காட்ட முயல்கின்றனர். தங்கள் கோணத்தை முன்வைக்கின்றனர். இன்றுவரை இந்திய வரலாற்று ஆய்வாளர்களில் இந்த இரண்டு தரப்பும் வலுவாக இருக்கிறது. ஐரோப்பியப் பார்வையில் இந்திய வரலாற்றை அணுகுவது, இந்தியத் தன்மையுடன் அணுகுவது. 

கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்படும் இந்த துறையில் முன்வைக்கப்படும் விஷயங்கள் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன. பரிசீலிக்கப்படுகின்றன. வரலாறு எழுதப்படுவதன் முறைமைகள் சார்ந்து கூட ஒரு பிரத்யேக அறிவுத்துறை உருவாகியுள்ளது. வரலாறு மிகப் பெரியது. எழுதப்பட்ட வரலாற்றுக்கு இணையாகவே இன்னும் எழுதப்படாத வரலாறும் பயணிக்கிறது. வரலாற்றுத் துறையில் நிகழும் விவாதங்களை அரசியல் அவ்வப்போது பயன்படுத்துகிறது.

இந்திய ஜனநாயகம் உருவாகி நிலைபெற்ற காலகட்டம் சவாலானது. மதக் கலவரங்கள், பஞ்சம், வெளிநாட்டுத் தாக்குதல்கள், அன்னியத் தலையீடு மற்றும் உள்நாட்டுக் குழப்பங்கள் ஆகியவற்றைத் தாண்டி வந்துள்ளது. இந்தியாவில் இன்றும் ஊழல் மிகப் பெரிய சிக்கல். அதிகாரவர்க்கம் அரசைச் சுரண்டுவதை அதிகார முறைகேடுகளை எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்கிறது. அது பிரிட்டிஷ் ஆட்சிமுறையின் தொடர்ச்சி. இந்திய மனநிலை அதனை இயல்பாக ஏற்கிறது. இந்தியாவில் சிவில் விஷயங்களை அரசியலின் மையத்துக்குக் கொண்டு வந்தது மகாத்மா காந்தி ஒருவரே. அவரது அனைத்துப் போராட்டங்களும் அரசு எவ்விதம் இயங்க வேண்டும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டவை என்பதுடன் இதை இணைத்து யோசித்துப் பார்க்கலாம்.

இப்படி யோசித்துப் பார்ப்போம். இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்க்கை எவ்விதம் இருந்திருக்கும். நாம் வாழும் ஊரை எடுத்துக் கொள்வோம். 1969ல் ஊரின் மக்கள்தொகை எவ்வளவு? எத்தனை கால்நடைகள் இருந்தன? அதில் மாடுகள் எத்தனை? ஆலயங்களில் எத்தனை கால பூஜை நடந்தது? திருவிழாக்கள் அக்கோயிலில் ஆண்டுக்கு எத்தனை நடந்தன? அக்கோயிலின் குத்தகை வருமானம் என்ன? மக்கள்  அதிகமாக பாதிப்புக்குள்ளான நோய்கள்  என்ன? கல்வி நிலையங்கள் எத்தனை இருந்தன? மாணவர்களில் ஆண்கள் எத்தனை? பெண்கள் எத்தனை? ஊரில் விவசாய நிலத்தில்  சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் எத்தனை டன்? ஊரில் என்னென்ன தொழில்கள் நடந்தன? யார் யார் வருமானவரி செலுத்தினார்கள்? எவ்வளவு செலுத்தினார்கள்? எத்தனை பேருந்துகள் ஓடின? எத்தனை ரயில்கள் ஓடின? என்னென்ன ஊர்களுக்கு பேருந்துகள் சென்றன? சினிமா தியேட்டர்கள் எத்தனை? அதில் வருடத்துக்கு எத்தனை படங்கள் திரையிடப்பட்டன? வானொலி எத்தனை பேரிடம் இருந்தது? எத்தனை சைக்கிள்கள் இருந்தன? எத்தனை இரு சக்கர மோட்டார் வாகனங்கள் இருந்தன? எத்தனை நான்கு சக்கர வாகனங்கள் இருந்தன?  என்னென்ன காரணங்களால் ஊர்மக்கள் பயணம் செய்தார்கள்? அதிகமாக பயணம் செய்பவர்களாக யார் யார் இருந்தார்கள்? ஒரு விஷயம் கவனிக்க முடியும். இன்றைய சமூக வாழ்க்கையின் அடிப்படையில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த சமூக வாழ்க்கையை அறிய முயல்வதன் வழிமுறை இது. இன்று ஒரு கிராமத்தில் ஐந்நூறு குடும்பங்கள் இருந்தால் அதில் நானூறு குடும்பங்களிடம் டூ-வீலர் உள்ளது. அன்று டூ-வீலர் அந்த கிராமத்தில்  யாராவது ஒருவர் அல்லது இரண்டு பேரிடம் இருந்திருக்கும். பயணிக்க வசதி குறைவு என்பதால் பயணம் நிகழ்வதன் சாத்தியங்கள் குறைவாக இருந்திருக்கும். தரவுகளின் மூலம் வரலாறை கற்பனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும். வரலாற்றுத் துறை அவ்விதமே இயங்க முடியும்.

Tuesday 18 June 2019

நிறைவேற்றம்

சில சஞ்சலங்கள்
குழப்பங்கள்
பிடிபடா சூழ்நிலைகள்
சின்ன விக்னங்கள்
அவ்வப்போது சிலர் வந்து
சொல்லிவிட்டுப் போகின்றனர்
சித்தி விநாயகர்
மூஞ்சுறு முன்னால் நிற்க
அமைதியாக அமர்ந்து
யோசித்துக்
கொண்டிருக்கிறார்

Monday 17 June 2019

உன்னிடம் பேசுவதற்கு
ஒரு பிரத்யேக மனநிலையை
உண்டாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது
மென்மையான சொற்களைத்
தேர்ந்தெடுக்கத் தேவையிருக்கிறது
நுட்பமான உணர்வு நிலையில்
சஞ்சரிக்கும் அவசியம் ஏற்படுகிறது
பிரிவின் பாலைநிலத்தில்
இலைகளற்ற
ஓர் ஒற்றை மரத்தின் கீழே
நிற்கச் சொல்லி விட்டு
எங்கே
சென்றிருக்கிறாய்
எப்போது
வருவாய்

Sunday 16 June 2019

ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்

இச்சம்பவம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்தது. நிகழ்ந்த தினம் ஆகஸ்ட்-15. எனது அண்டை வீட்டுக்காரர் ஒருவர் வீட்டுக்கு வெளியூரிலிருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களுடைய கார் எனது வீட்டுக்கு எதிரில் நின்று கொண்டிருந்தது. மாலை 4 மணி அளவில் அவர்களுடைய கார் புறப்படும் எஞ்சின் சத்தம் என் வீட்டில் முதல் தளத்தில் அமைந்திருக்கும் என் அறையில் கேட்டது. அன்று மதியம் அவர்கள் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் செல்வதற்கான சாலை மார்க்கங்களை என்னிடம் கேட்டறிந்திருந்தனர். மாலை 4.10க்கு என்னுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு. அண்டைவீட்டுக்காரர் அழைத்தார்.  அவர் பயணப்பாதை குறித்து ஏதேனும் ஐயம் கேட்கக்கூடும் என நினைத்தேன். அவர் பதட்டத்துடன் பேசினார். மயிலாடுதுறை மணிக்கூண்டு அருகே அவர்கள் காரும் காரில் பயணித்தவர்களும் இரு குடிகார நடைபாதை வியாபாரிகளால் மிக மோசமாகத் தாக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். பயணித்தவர்களில் மூன்று பேர் பெண்கள். நான் உடனடியாக என்னுடைய டூ-வீலரில் சம்பவ இடத்துக்குச் சென்றேன். அது நகரின் கடைத்தெருவின் மையப்பகுதி. நிமிடந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் இடம். நகரின் இதயப்பகுதி. அங்கே கண்ணாடித் துண்டுகள் உடைந்து சில்லுகளாக சிதறிக் கிடந்தன. அண்டை வீட்டுக்காரர் அங்கே இல்லை. நான் உடனடியாக காவல் நிலையம் சென்றேன். குடிகாரர்களால் தாக்கப்பட்ட  அவர்கள் அங்கிருந்தனர். தாக்கப்பட்ட அவர்கள் வாகனமும் அங்கிருந்தது. பெண்களுக்கு முகத்திலும் கழுத்திலும் நகக்கீறல். ரத்தக்காயம். வாகனத்தை ஓட்டியவர் தலையில் ரத்தக்காயம்.

நடைபாதை வியாபாரிகளான இரு குடிகாரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்கள் வாகனம் அந்த பகுதியில் சென்றிருக்கிறது. திடீரென இரு குடிகாரர்களும் சேர்ந்து குடிபோதையில் வாகனக் கண்ணாடியை எடைக்கல்லால் உடைத்து வாகனத்தின் உள்ளே இருந்தவர்களை வெளியே இழுத்து அடித்திருக்கின்றனர். இவர்கள் சுதாரிப்பதற்குள் அடி மூர்க்கமாக விழுந்திருக்கிறது. அவர்கள் இவ்வாறான வன்முறையை பார்த்துக் கூட அறியாதவர்கள். அவர்கள் மேல் நிகழ்ந்த தாக்குதலில் அவர்கள் அனைவரும் நிலைகுலைந்து போயினர். பிற நடைபாதை வியாபாரிகள், குடிகாரர்களான தாக்குதல் நடத்திய இரு நடைபாதை வியாபாரிகளையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அந்த இடத்தை விட்டு தலைமறைவாகும்படி சொல்லி அனுப்பி விட்டனர். கடைக்காரர் ஒருவர் காவல் நிலையத்துக்கு ஃபோன் செய்திருக்கிறார். காவல்துறையினர் ஜீப்பில் வந்து தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை காவல் நிலையம் அனுப்பி வைத்திருக்கின்றனர். 

நான் காவல் நிலையம் சென்ற போது இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் ஏதும் வேண்டாம்; குடிபோதையில் நடந்த பிழை என்றனர். நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். பாதிக்கப்பட்ட பெண்கள் நாங்கள் செய்த தவறு என்ன என்று கேட்டனர். நான் அதிர்ச்சியிலிருந்து சற்று மீண்டு அவர்களிடம் வீட்டுக்குச் செல்லலாம் என்று சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்தேன். வரும் வழியில் அவர்கள் காயங்களுக்கான மருந்தை வாங்கி வந்தேன். வீட்டில் அவர்கள் காயங்களுக்கு மருந்திட்டோம். பருத்தியில் மருந்திட்டு காயங்களில் ஒட்ட வைத்தேன். அனைவரும் சற்று ஆசுவாசமானார்கள். எங்களைத் தாக்கிய குடிகாரர்களுக்குத் தண்டனையே கிடையாதா என அரற்றிக் கொண்டிருந்தனர். நான் அதில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணியை அவர்கள் கைப்பட நடந்ததை விவரித்து ஒரு புகார் எழுதச் சொன்னேன். எழுதித் தந்தார்கள். நானும் அண்டைவீட்டுக்காரரும் அதை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்தோம். காவல் உதவி ஆய்வாளர் மாலை ஆறு மணிக்கு மேல் எவரையும் கைது செய்ய முடியாது; நாளை காலை வாருங்கள் என்றார். நீங்கள் ஒரு கொலைகாரனைத் துரத்திக் கொண்டு ஓடுகிறீர்கள். மாலை ஆறு மணியானதும் துரத்துவதை நிறுத்தி விடுவீர்களா என்று கேட்டேன். நடுத்தர வர்க்கத்துடன் இதுதான் பிரச்சனை என்றார். உங்கள் பிரச்சனையே இதுதானா அல்லது நடுத்தர வர்க்கம் என ஒன்று இருப்பதே உங்கள் பிரச்சனையா என்றேன். இந்த விவகாரத்தில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள் எனக் கேட்டனர். இன்று ஆகஸ்டு-15. இந்த நாடு விடுதலை பெற எத்தனையோ பேர் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் வாங்கித் தந்த சுதந்திரத்துக்கு மரியாதை கொடுக்க என்று சொன்னேன். புகாரை வாங்கி வைத்துக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து வாருங்கள் என்றனர். வீட்டுக்கு வந்து விட்டு ஒரு மணி நேரம் கழித்துச் சென்றோம். எங்கள் புகாரின் வலுவான பகுதிகளை பேனாவால் அடித்து திருத்தி எழுதியிருந்தனர். நாங்கள் கொடுத்த புகாரை நீங்கள் எப்படி திருத்தலாம்; அதற்கு உங்களுக்கு உரிமை கொடுத்தது யார் என்று குரலை உயர்த்தினேன். நாங்கள் புதிய புகார்தான் தருவோம் அல்லது நாளை காலை கோர்ட்டுக்குச் செல்வோம் என்றோம். அவர்கள் திருத்தி மாற்றி எழுதிய புகாரை கிழித்துப் போட்டோம். சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்து அந்த இரு குடிகாரர்களின் பெயர், தந்தை பெயர் விலாசம் ஆகியவற்றைக் கேட்டறிந்து நடந்த சம்பவத்தை சித்தரித்து மீண்டும் ஒரு புகாரை எழுதிக் கொடுத்தோம். ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் அந்த குடிகாரர்கள் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை நகல் வழங்கப்பட்டது.

எங்கள் பகுதியில் வசிப்பவர்கள், அண்டை வீட்டுக்காரரின் நண்பர்கள், அலுவலகத்தில் பணி புரிபவர்கள், வெளியூரிலிருந்து அலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் அனைவருமே குடிகாரர்கள் குடிபோதையில் செய்திருக்கிறார்கள்; இதை இத்தோடு விட்டு விடுங்கள் என பாதிக்கப்பட்டவர்களிடம் அறிவுரை கூறினர். ஏன் காவல்துறையுடன் மோதுகிறீர்கள் என்று கேட்டனர். அவர்களில் ஒருவர் கூட காவல்துறை குடிகாரர்களுக்கு ஆதரவாக செயல்படுவதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

குடிகாரர்கள் எவ்விதமான செயலும் ஆற்ற உரிமை வழங்கப்பட்டவர்கள் என நினைக்கும் சமூகத்தின் பிரக்ஞை எவ்விதமானது?

ஏந்துதல்

உன் பிரியங்களை எப்போதும் மறக்க மாட்டேன்
விடைபெறும் போது சொன்னாய்

உனது பிரியங்கள்
நீ இல்லாத போதும்
நிலத்தில் புல்லென
பரவிக் கொண்டேயிருக்கின்றன

அதிகாலைப் பனியை
துளித்துளி நீராய்
உள்ளங்கைகளிளென
ஏந்தும்
பசும்புல்லாய்

Saturday 15 June 2019

சட்டென ஒன்று விடுபடுகிறது
ஒரு புதிய யாத்திரை
கைவிடுதல்
ஏதோ இழக்கப்பட்டிருக்கிறது
தயாராகின்றன
அல்லது
நிறைவு செய்யப்படாமல்
கிழித்தெறியப்படுகின்றன
அறிக்கைகள்
தவிர்த்த பாரங்கள்
முன்னிற்கின்றன
சுமப்பதின் யுக்திகள்
பிரயோகத்துக்காய்
நமரங்காள்
யுத்தங்களுக்கும்
துயர்களுக்கும்
விடைகொடுப்பது
எப்படி

Friday 14 June 2019

சந்தோஷம்

எங்கள் வீட்டில் சினிமா பார்க்கும் வழக்கம் மிகக் குறைவு. பதினைந்து வயது வரை வருடத்துக்கு இரண்டு சினிமா என்று பார்த்திருக்கிறேன். பதினைந்து வயதிலிருந்து பதினேழு வயது வரை பத்து படங்கள் பார்த்திருப்பேன். அதன் பின், பொறியியல் கல்லூரியில் படித்த நான்கு ஆண்டுகளில் மொத்தமே இரண்டு படங்கள் மட்டுமே பார்த்தேன். ஆக இருபத்தியோரு வருடங்களில் நாற்பத்து இரண்டு படங்கள். சராசரியாக ஆண்டுக்கு இரண்டு. அதன் பின்னர் கட்டுமானத் தொழிலுக்கு வந்த பின் சினிமா பார்ப்பது சற்று அதிகரித்தது என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு சினிமா பார்த்தேன். கட்டுமானத் தொழிலில் காலை ஏழு மணியிலிருந்து இரவு ஏழு மணி வரை தொடர்ச்சியாக வேலை இருக்கும். இங்கும் அங்கும் சென்று கொண்டேயிருக்க வேண்டும். வேலையில் ஓய்வு இடைவெளியே கிடையாது.  சொந்த தொழில் என்பதால் வார இறுதி நாட்களிலும் பணி உண்டு. எனவே மாலை ஏழு மணிக்கு மேல்தான் சற்று ஓய்வு இருக்கும். அப்போது இரவில் சினிமாவுக்குச் செல்வேன். எனக்கு சிறு வயதிலிருந்தே வாசிப்பில்தான் ஆர்வம். நான் சினிமா பார்ப்பதில் சற்று விலக்கம் கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு திராவிடக் கட்சிகளின் சினிமா அரசியல் உவப்பானதல்ல என்பதால் சினிமா குறித்து பெரிய அபிப்ராயம் இல்லை. பின்னாட்களில் கிராம்ஷி வெகுஜனக் கலை குறித்து கூறியவற்றை அறிந்த பின்னர் தான், வெகுஜன சினிமாவை அணுகும்முறை குறித்து புரிந்து கொண்டேன். இப்போது மீண்டும் சினிமா பார்ப்பது குறைந்து விட்டது. நான்கு மாதத்துக்கு ஒரு படம். டி.வி பார்த்தே பல மாதங்களாகி விட்டன. ஃபேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் நான் இல்லை.

இவை மிகவும் சந்தோஷப்பட வேண்டிய விஷயங்கள்.

எளிமை

மாலைப்பொழுதில்
இரவு லேசாகப் பரவிக் கொண்டிருக்கையில்
சட்டென
முகத்தைத் தொடும்
குளிர்க்காற்றில்
எதிர்பாராமல்
கரைகின்றன
சுமந்திருந்த பாரங்கள்

இந்த வாழ்க்கை
இந்த அளவு
மிக எளிய
ஒன்றுதானா?

Thursday 13 June 2019

ராஜிவ் படுகொலை புலனாய்வு

ராஜிவ் படுகொலையைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட நூல்கள் டி.ஆர்.கார்த்திகேயன் எழுதிய ‘’வாய்மையின் வெற்றி’’ மற்றும் கே. ரகோத்தமன் எழுதிய ‘’ராஜிவ் கொலை வழக்கு’’. இருவருமே வழக்கின் புலனாய்வில் இருந்தவர்கள். இருவரும் அந்த வழக்கைப் பார்க்கும் விதத்தில் சிறிய மற்றும் பெரிய வித்யாசங்கள் இருக்கின்றன.

அவர்கள் தங்களுக்கு விதித்திக் கொள்ளும் சுயகட்டுப்பாடுகளைத் தாண்டி வழக்கைப் பற்றிய அவர்களுக்கே உரிய சில அவதானங்கள் வெளிப்படவே செய்கின்றன. 

டி.ஆர்.கார்த்திகேயன் இந்திரா குடும்பத்துடன் தான் அறிமுகம் ஆகும் விதத்தையும் அவர்களுடனான தனது பழக்கத்தையும் சொல்கிறார். இந்திய அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு விஷயம் புலப்படும். இந்திய அதிகார வர்க்கம் காங்கிரஸ் மீது சற்று மனச்சாய்வு கொண்டது. நேரு குடும்பம் ராஜ தர்பார்களுக்கும் விருந்துகளுக்கும் பெரும் பழக்கம் கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சி இவ்வாறான தோரணைகளாலேயே நிலைபெற்றிருந்தது. அதனை இந்திய சமஸ்தான மன்னர்கள் ஏற்றிருந்தனர். இந்திய அதிகார வர்க்கத்துக்கு ஆட்சி என்றாலே தர்பார்களும் விருந்துகளும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தனர். மகாத்மா காந்தி இந்திய அரசியலுக்கு நுழைந்த பின்னர் அவர் அரசியலில் சாதாரண மக்களைக் கொண்டு வருகிறார். ஜனநாயகத்தின் ஆகப் பெரிய சாத்தியமே சாதாரணர்களின் பங்கேற்பே என்பதை நுட்பமாக நிறுவுகிறார். காங்கிரஸில் தன்னுடைய இடத்தை நேரு காந்தியின் ஆதரவு மூலம் அடைகிறார். நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆகிறார். பிரிட்டிஷ் வைஸ்ராய்கள் இருந்த இடத்தை நேரு குடும்பம் நிரப்புகிறது. பெரும் விருந்துகள், கொண்டாட்டங்கள் இவற்றினூடாக ஆட்சி இயங்க ஆரம்பிக்கிறது. இந்த எல்லைகளைத் தாண்டி நேரு அறிஞர்; மானுட சமத்துவம் மேல் நம்பிக்கை கொண்டவர் என்பதால் அவர் மக்கள் ஆதரவைப் பெறுகிறார். நேரு ஒவ்வொரு முறை தேர்தலில் மக்களைச் சந்திக்கும் போதும் காந்தியின் பெயரைச் சொல்லியே ஓட்டு கேட்கிறார். ஆதலால் காங்கிரஸின் பண்புகளில் ஒன்று அது அதிகாரிகளை மதிக்கும் என்பதும் நம்பும் என்பதும் அவர்கள் வழியாகவே அனைத்தையும் செயல்படுத்தும் என்பதும். எனவே நேரு குடும்பம் ஆட்சிப்பணியில் இருக்கும் அதிகாரிகளிடம் மிகவும்  இணக்கமாக இருந்திருக்கிறார்கள். .  இதனை பல வெளியுறவு அதிகாரிகள் தங்கள் சுயசரிதைகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். நேரு குடும்பத்தினர் தங்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து அவர்கள் பக்கம் பக்கமாக எழுதியுள்ளார்கள்.காங்கிரஸ்காரர்களுக்கு ஆட்சி நிர்வாகத்துக்கும் கட்சிக்கும் பெரிய வித்யாசமில்லை. சோஷலிஸ்டுகளின் கம்யூனிஸ்டுகளின் அரசியல் வேறு விதமானது. அவர்களுடைய ஆதரவு பின்புலம் அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள். அவர்கள் அதிகாரிகளுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருப்பதால் அவர்களால் அதிகாரவர்க்கத்தை நெருங்க முடியவில்லை.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஒரு தீர்வை ஏற்படுத்த முதலமைச்சர் குண்டு ராவுக்கு அப்போது கர்நாடகக் காவல்துறையின் முக்கிய பொறுப்பில் இருக்கும் டி.ஆர்.கார்த்திகேயன் உதவுகிறார். அவர் பணியின் முக்கியத்துவத்தை காங்கிரஸ் தலைமை அறிகிறது.  அப்போது ராஜிவ் கட்சிப் பொறுப்பில் இல்லை; இந்திராவின் ஒரு செய்தியுடன் வந்திருக்கிறார். அப்போது ராஜிவும் டி.ஆர். கார்த்திகேயனும் சந்திக்கிறார்கள். பின்னர் இந்திரா சுடப்பட்ட அன்று, டி.ஆர் கார்த்திகேயன் கல்கத்தாவில் இருக்கிறார். ராஜிவும் கல்கத்தாவில் இருக்கிறார். இன்னும் இறப்பு உறுதிசெய்யப்படவில்லை. அப்போது சில நிமிடங்கள் ராஜிவிடம் பேசுகிறார். இலங்கை பிரச்சனை தொடர்பாக இந்திய அரசு உண்மை நிலவரத்தைக் கண்டு அறிந்து தெரிவிக்க டி.ஆர். கார்த்திகேயனை அனுப்புகிறது. அப்போது இலங்கை சென்றதால் அச்சிக்கலின் ஊடுபாவுகளை நுட்பமாக அறிகிறார் கார்த்திகேயன்.

ராஜிவ் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும், டி. ஆர். கார்த்திகேயனின் மனம் இதனை விடுதலைப் புலிகள் செய்திருக்கக் கூடாது என்று எண்ணுகிறது. அவ்வாறு அதனை விடுதலைப் புலிகள் செய்திருப்பார்களேயாயின் இலங்கையில் தமிழர்களின் துயர் தீரவே தீராது என்று அவரது உள்ளுணர்வு சொல்கிறது. 

ராஜிவ் கொலை வழக்கில், மனித வெடிகுண்டு வெடிப்புக்குப் பின்னால், அந்த இடத்தை முற்றிலும் சீல் செய்து, புலனாய்வுக்கு உதவியாக அங்கிருந்த எல்லா பொருட்களையும் முறையாக சேகரித்து வைத்த தமிழ்நாடு போலிஸ் டி.ஜி.பி ராகவனின் பணியை கார்த்திகேயன் மகத்தானது என்கிறார். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வருடக்கணக்கான உழைப்பை அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

ரகோத்தமன் தனது நூலில், வழக்கில் சில அரசியல் தலையீடுகள் இருந்தன எனத் தெரிவிக்கிறார். சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கைது செய்து விசாரித்திருந்தால் இன்னும் சில உண்மைகள் வெளிவந்திருக்கும் என்கிறார் ரகோத்தமன்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போது, டி. ஆர். கார்த்திகேயன் பணி ஓய்வு பெற்றிருக்கிறார். எனினும் அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானியைச் சந்தித்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். அவரது கோரிக்கையை அத்வானி உடனே ஏற்கிறார். மேல் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை அளிக்கிறது.

Wednesday 12 June 2019

அடல் பிஹாரி வாஜ்பாய்

நான் இந்திய நிலமெங்கும் மோட்டார்சைக்கிளில் அலைந்திருக்கிறேன். தங்க நாற்கரச் சாலை கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவின் சமூக மற்றும் பொருளியல் முகத்தை மாற்றியமைத்தது என்பது வரலாறு. இந்தியாவின் முதன்மை நரம்புகளாகிய அச்சாலைகளில் சரக்கு வாகனங்கள் என்னும் குருதி பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதும் அதுவே நாட்டின் பொருளாதாரத்துக்கு ஜீவனாக இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அது வாஜ்பாய் அவர்களின் கனவுத் திட்டம். தேசத்தை ஒற்றுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு.

அதே போல முக்கியத்துவம் கொண்டது அவரது ‘’கிராமச் சாலைகள் திட்டம்’’.

’’செல்வம் சாலைகளை உண்டாக்கவில்லை; சாலைகள் தான் செல்வத்தை உண்டாக்குகின்றன’’ என்றார் தாமஸ் ஜெபர்சன்.
எனது மண்
ஓயாமல்
இமைக்காமல்
பார்க்கிறது
காற்றில் மிதக்கும் ஆயுதங்களை
கொதித்து
குளிரும்
குருதியை
நகரும் மேகங்களை
அவ்வப்போது
விண்ணின் தொலை நோக்குகளை

Tuesday 11 June 2019

வி. பி. சிங்

எனது தந்தை தீவிரமான காங்கிரஸ் ஆதரவாளர். அவரிடமிருந்தே எனக்கு சுதந்திரத்துக்குப் பின் இந்தியா சந்தித்த சவால்கள் குறித்த சித்திரங்கள் உருவாயின. அப்போது  தொழில்நுட்பத்தின் மீது தீராப் பற்று கொண்டிருந்தார்.  இப்போதும். தொழில்நுட்பமே நாட்டின் எல்லா சிக்கல்களுக்குமான தீர்வு என்று உறுதியாக நம்பினார். அந்த காலகட்டத்தின் இயல்பு அது. ‘’இருபத்து ஓராம் நூற்றாண்டை நோக்கி’’ என்பது அன்றைய ஆகப் பெரிய கோஷம். ஆதலால் அன்று காங்கிரஸுக்கு எதிரான அத்தனை சக்திகளும் பிற்போக்கு சக்திகளாக அடையாளம் காட்டப்பட்டன. அப்பா என்னிடம் அவரது எண்ணங்களைத் தொடர்ந்து சொல்வார். எனக்கு அவர் சொல்வது அத்தனையும் முக்கியமாகத் தோன்றும். எனது சித்தப்பா அப்பா சொல்லும் விஷயங்களில் இருக்கும் இடைவெளிகளை என்னிடம் சுட்டிக் காட்டுவார். அவற்றை நான் நானே யோசித்துக் கேட்பதாக அப்பாவிடம் கேட்பேன். அல்லது மனதுக்குள் வைத்துக் கொள்வேன். அப்பா வி.பி.சிங்கை கடுமையாக விமர்சித்தார். அவரது கடுமையான விமர்சனங்கள் மூலமே எனக்கு வி.பி. சிங் அறிமுகமானார். சிறுவனாயிருந்த எனக்கு வி.பி. சிங் முகத்தைப் பார்க்கும் போது அவர் நல்லவர்; நம்பகமானவர் என்ற எண்ணம் உண்டாயிற்று. 

அப்பா ஒருமுறை கடுமையாக வி.பி.சிங்கை விமர்சித்த போது, ‘’சில நாட்கள் முன்பு வரை அவர் காங்கிரஸ் தலைவர்தானே. கட்சியிலிருந்து விலகியதும் எல்லா தீமைக்கும் அவர் காரணமாகி விட்டாரா’’ என்று கேட்டேன். அப்போது எனக்கு ஒன்பது வயதிருக்கும் என்று நினைக்கிறேன். வி. பி. சிங் பிரதமரான போது நான் மகிழ்ந்தேன். அப்போது தூர்தர்ஷனில் ஆங்கிலச் செய்திகளிலும் தமிழ்ச் செய்திகளிலும் ‘’தேசிய முன்னணி’’ அரசாங்கம் குறித்த செய்திகள் வரும். அந்த அமைச்சரவையில் பிரதமரை அடுத்து நான் மிகவும் விரும்பியது ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸை. 

‘’பரீக்‌ஷா’’ ஞாநி வி. பி. சிங்கின் தமிழ்நாட்டு சுற்றுப்பயணங்கள் போது உடனிருந்து அவரது ஹிந்தி உரைகளை தமிழில் மொழிபெயர்ப்பவர். அதைப் பற்றி ‘’தீம்தரிகிட’’ இதழ்களில் எழுதியிருக்கிறார். கிண்டலும் பகடியும் வாக்கியத்துக்கு வாக்கியம் வெளிப்படும் உரைகள் அவை என்கிறார். அக்கட்டுரைகளில் வி.பி.சிங்கின் இயல்புகள் குறித்த தன் அவதானங்களை எழுதுகிறார் ஞாநி.

வி.பி.சிங் ஓர் ஓவியர். ஞாநியிடம் தமிழில் வி.பி.சிங் என்று எழுதிக் காட்டி தமிழில் தன் பெயரை இப்படித்தானே எழுத வேண்டும் என்று கேட்டாராம். ஞாநி வியப்புடன் எவ்வாறு அறிந்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். சுவரெழுத்துக்களில் பார்த்தேன். ‘’தேசிய முன்னணி’’ தேர்தல் சுவரெழுத்துக்களில் இரண்டு எழுத்து பெயருக்கு முன் வருவது எனக்குத்தான் என்பதால் இதுவே தமிழில் என் பெயரை எழுதும் முறை என்று அறிந்தேன் என பதில் சொல்லியிருக்கிறார்.

‘’மண்டல் கமிஷன்’’ பரிந்துரைகளை செயலாக்கியது அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கை. அவர் மீதும் அவர் அரசின் மீதும் எந்த ஊழல் புகாரும் இல்லை.

Monday 10 June 2019

பயணிகள் கவனத்திற்கு

எங்கள் வாகனங்கள்
உங்களை
நீங்கள்
செல்ல உத்தேசிக்கும் இடங்களுக்குக்
கொண்டு சேர்க்கும்

சேரிடங்களில்
உங்கள்
நல்ல உத்தேசங்கள்
இனிமையாக
நிறைவேற
வாழ்த்துக்கள்

Sunday 9 June 2019

ரயில் நிலைய நடைமேடையில்

ரயில் நிலைய நடைமேடையில்
ஓர் அன்னை
படிக்கச் செல்லும் குழந்தையை
வழியனுப்ப வந்திருக்கிறாள்
அவள்
மிகவும் சகஜமாக இருக்க
முயற்சி செய்கிறாள்
எனினும்
அவள் முகத்தில்
பிரிவுத்துயர்
வெளிப்படுகிறது

ராணுவ முகாமுக்குத்
திரும்பிச் செல்லும்
கணவனுக்கு
விடை கொடுக்க
குடும்பத்தினருடன்
வந்திருக்கிறாள்
முகமும்
கழுத்தும்
மஞ்சள் படிந்திருக்கும்
ஓர் இளம்பெண்
சிக்னல் கம்பத்தில்
ஆயத்த நிறம்
விழுந்ததும்
ஜன்னல் கம்பிகளைப்
பற்றிக் கொண்டிருக்கும்
அவள்
விரல்கள் மேல்
தன் கையை வைத்துக் கொள்கிறான்
கணவன்
அப்போது
மௌனமாக
அவனைப் பார்க்கும்
அவள் கண்களில்
துளிர்க்கிறது கண்ணீர்

தவிர்க்க இயலாத காரணங்களால்
சற்று தாமதமாக
வந்து சேர்ந்த இளைஞன்
தன் காதலியை
நடைமேடையில் நடந்து கொண்டு
பெட்டிகளில்
தேடிக் கொண்டேயிருக்கிறான்

ஒரு கணத்தில்
ரயில் நகர்ந்து செல்கிறது

எல்லாரும்
நீங்கிப் போன பின்னும்
சில கண்கள்
பார்த்துக் கொண்டேயிருக்கின்றன
தூரத்தில்
நகரும் ரயிலை

Saturday 8 June 2019

பிராட்கேஜ் பாலம்

புதிதாகக் கட்டப்பட்ட
பிராட்கேஜ் பாலம்
பெயிண்ட் வாசனை மாறாமல்
புத்தம் புதிதாக இருக்கிறது
இனிமேல் தான்
ரயில்கள் ஓடத் துவங்கும்
புல் அறுத்து
மூட்டை கட்டி
சைக்கிளில்
தினமும் பாலத்தைக் கடக்கும்
முதியவருக்கு
மூச்சு முட்டுகிறது
சைக்கிளை சிரமப்பட்டு ஏற்றி
தண்டவாளத்தைக் கடந்து செல்கிறார்
அந்தி சூரியன்
விடைபெறும் வேளையில்
தனியாக
தனிமையில் நிற்கிறது
பாலம்
பலரைப் போல
பலவற்றைப் போல

Friday 7 June 2019

ரயில் பயணங்கள்

மயிலாடுதுறை மெயின் லைனில் ஒரு முக்கியமான ஜங்ஷன். பல ஊர்களுக்கும் செல்லக்கூடிய ரயில்கள் அங்கு வந்து செல்லும். எனக்கு நான்கு ஐந்து வயதாகும் போதே அப்பா என்னை ஜங்ஷனுக்கு வாக்கிங் அழைத்துச் செல்வார். ரயில் நிலையம் என்பது மனதில் ஓர் ஆழமான படிமமாகி விட்டது. நடைமேடையில் இருக்கும் மர பெஞ்சுகள், சிமெண்ட் பெஞ்சுகள், நிலையத்துக்கு முன்னால் இருக்கும் பெரும்  மர நிழல்கள், மிகப் பெரிய தண்ணீர் டேங்க், சிக்னல் கம்பங்கள், லெவல்  கிராஸிங் கேட் என ஒவ்வொன்றின் மீதும் ஈர்ப்பு இருந்தது.  சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட பின்னர் விடுமுறை நாட்களில் தினமும் அங்கே சென்று விடுவேன். அப்பா ரயில் அட்டவணையை எப்படி பார்ப்பது என்று சொல்லித் தந்திருந்தார். அதனைப் பயன்படுத்தி ரயில் வரும் நேரத்தையும் நான் வீட்டிலிருந்து சைக்கிளில் செல்லும் நேரத்தையும் கணக்கிட்டு அதற்கேற்றவாறு கிளம்பி ரயில் வருகையில் ஜங்ஷனில் இருப்பேன். 24 மணி நேரத்தில் எந்த ரயில் எப்போது வரும் எங்கே செல்கிறது என்பதை 12, 13 வயதிலேயே மனப்பாடமாகச் சொல்வேன்.

பாஸஞ்சர் ரயில்களை மிகவும் விரும்புவேன். மயிலாடுதுறை - விழுப்புரம் பாஸஞ்சர், மயிலாடுதுறை - திருச்சி பாஸஞ்சர் , மயிலாடுதுறை - காரைக்குடி பாஸஞ்சர் ஆகியவற்றில் பயணம் செய்ய விரும்புவேன். சிதம்பரம், கடலூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்குச் சென்று வருவேன். அப்போது பஸ் கட்டணமும் ரயில் கட்டணமும் சமமாக இருந்ததால் பாஸஞ்சர் ரயிலில் பயணிப்பவர்கள் குறைவாகவே இருப்பர். மீட்டர்கேஜ் பெட்டிகள். உல்லாசமான மனநிலையை ரயில் பயணங்கள் உருவாக்கும்.

ஜே. ஜே சில குறிப்புகள் நாவலில் சுந்தர ராமசாமி ஜே. ஜே டைரிக்குறிப்புகளில் தீப்பெட்டி போன்ற சின்ன ரயில்வே ஸ்டேஷன்கள் என்று எழுதியிருப்பார். அந்த வார்த்தை அளித்த உற்சாகம் ரொம்ப நாட்கள் நீடித்தது.

இப்போதும் தொழில் நிமித்தமாக சென்னை மற்றும் திருச்சி செல்ல ரயிலையே தேர்வு செய்கிறேன். தில்லிக்கு ரயிலில் செல்வதால் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மற்றும் துரந்தோ ஆகியவை மனதுக்கு நெருக்கமாகி விட்டன. மோட்டார்சைக்கிள் பயணத்தில் ஆக்ராவிலிருந்து நாக்பூர் வரும் போது ரயில் பாதைக்கு இணையாக சாலையில் சில இடங்களில் பயணிக்க நேரும். சாலை மார்க்கத்தில் போபால் செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த சாலைப் பயணத்தில் ரயில்வே லைனைப் பார்ப்பது வேறு விதமான மனநிலையைத் தரும்.

இப்போதும் ரயிலைப் பற்றி நினைக்கும் போது, தோள்-பையில் ஒரு செட் மாற்று உடை மட்டும் எடுத்துக் கொண்டு கங்கையின் நிலம் எதற்காவது கிளம்பிச் சென்று பத்து நாட்கள் இருந்து விட்டு திரும்பி வரலாமா என்று தோன்றுகிறது.

Thursday 6 June 2019

அதிகாலை


கேரளாவில் விடிகாலைப்பொழுதுகளில் மக்கள் ஆலயங்களுக்குச் செல்லும் காட்சியைக் காண முடியும். இளைஞர்கள், இளம்பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என சகலரும் செல்வதைக் காண முடியும். அதிகாலையில் உள்ளூரில் இருப்பவர்கள் ஆலயம் செல்ல வேண்டுமெனில் அது பலநாட்களாக உருவான சமூக பழக்கமாக இருந்தால் மட்டுமே சாத்தியம். சமயம், நுண்கலை, கலை ஆகியவற்றில் ஆர்வமும் அறிமுகமும் பழக்கமும் கொண்ட ஊர்களில் மட்டுமே இது முழுமையாக நிகழ முடியும். இன்று தமிழ்நாட்டில் அதிகாலை வேளையில் பக்தர்கள் அதிகளவில் வழிபடும் ஆலயங்கள் வெளியூரிலிருந்து தரிசனத்துக்கு வருபவர்களாலேயே நிரம்பியிருக்கிறது. விதிவிலக்கு உண்டு.

அதிகாலையிலேயே ஆலயம் சென்று பரிவார மூர்த்திகளை வணங்கி காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வது தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் நிகழ்கிறதா என்பது ஐயமே. எங்கள் பகுதியின் பெரும்பான்மையான கிராமங்கள் ஆயிரம் ஆண்டு தொன்மையான ஆலயங்களால் ஆனவை. அவை இப்போதெல்லாம் காலை ஏழு மணி அளவில் மட்டுமே திறக்கப்படுகின்றன. பெண்கள் காலை பத்து மணிக்கு மேல்தான் வருகிறார்கள். சோழர்கள் சமூகத்த்தை ஆலயம் மூலமே தொகுத்தனர். இன்றும் ஆலயங்கள் மிகப் பெரிய விவசாய நிலங்களைக் கொண்டுள்ளன. அவற்றின் வருவாயை ஆலயம்  சார்ந்த கலைகளுக்கும் நுண்கலைகளுக்கும் செலவிடுவது ஒரு வரலாற்றுக் கடமை. இசை, நடனம் ஆகியவை எப்போதும் புரவலர்களாலேயே நிலைபெற்றுள்ளன.

நமது சமயம் எதையும் கட்டாயப்படுத்தவில்லை. அதனாலேயே அதனைக் காப்பதற்கு சமூகம் இன்னும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டியிருக்கிறது.   

Wednesday 5 June 2019

ராஜிவ் காந்தி


1991ம் ஆண்டு மே மாதம் 21ம் நாள். இரவு 9 மணி அளவில் மயிலாடுதுறையில் எங்கள் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. எங்கள் வீட்டில் நாங்கள் அனைவரும் வீட்டு மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அன்று காங்கிரஸ் தலைவரான ராஜிவ் காந்தி மயிலாடுதுறை வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அத்திட்டம் சில நாட்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவர் பேசுவதாக இருந்த மைதானம் எங்கள் வீட்டிலிருந்து சில நிமிட நடை தூரத்தில் இருந்தது.

ஒன்றேகால் மணி நேரத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது. தூர்தர்ஷன் செய்திகளைக் காண அப்பா தொலைக்காட்சியை இயக்கினார். அன்று ராஜிவ் பங்கேற்றிருந்த பொதுக்கூட்டத்தில் ஒரு பெரும் வெடிகுண்டு வெடித்தது என்ற செய்தியைக் கேட்டோம். மேலதிக விபரங்கள் தெரியவில்லை. ராஜிவ் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதும் அறிய முடியவில்லை. வானொலியிலோ தொலைக்காட்சியிலோ வேறு செய்தி அறிய முடியவில்லை. அம்மாவும் அப்பாவும் ராஜிவ் உயிர் பிழைத்திருப்பார் என்றே நம்பினார்கள்.

மறுநாள் காலையில், குண்டுவெடிப்பில் ராஜிவ் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டோம். அப்பா பெரும் துயரத்துடன் இருந்தார். இதனை விடுதலைப் புலிகள்தான் செய்திருப்பார்கள் என்று உறுதியாக நம்பினார். அந்த தேர்தலில் தி.மு.க எல்லா நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. அப்போதிலிருந்து தமிழ் மக்களின் ஆதரவை விடுதலைப் புலிகள் முற்றிலும் இழந்தார்கள் என்பதே வரலாற்று உண்மை.

அதன் பின், அடுத்த ஐந்து ஆண்டு காலத்துக்கு செய்தித்தாள்களிலும் தூர்தர்ஷன் ஆகாசவாணி வானொலிச் செய்திகளிலும் சிறப்புப் புலனாய்வுக் குழு, மல்லிகை மற்றும் மனித வெடிகுண்டு ஆகியவை அநேகமாக எல்லா நாளும் இடம் பெறும். ஒரு புலனாய்வு அலுவலகம் ‘’மல்லிகை’’ என்ற பெயர் தாங்கியிருப்பது அப்போது சிறுவனாயிருந்த எனக்கு நூதனமாக இருந்தது. ராஜிவ் கொலையாளிகள் புகைப்படங்களை தூர்தர்ஷன் தொடர்ந்து வெளியிட்டது. 

கொலைச்சதியில் ஈடுபட்டவர்களை புலனாய்வு அதிகாரிகள் நெருங்கியது அன்றாட செய்தியானது. பெங்களூரில் அவர்கள் இருந்த வீடு சுற்றி வளைக்கப்பட்ட விபரங்களும் வெளியானது. அன்று இன்று இருப்பதைப் போல காட்சி ஊடகம் அவ்வளவு வலுவானது அல்ல. பெரும்பாலும் அச்சு ஊடகமே செய்திகளை அளிக்கும் என்பதால் பொதுமக்களால் அவ்வழக்கு கவனிக்கப்பட்டது.

ஆர்.டி.எக்ஸ் மூலம் பயங்கரவாதிகள் இந்தியாவை ஆங்காங்கே தாக்கிக்  கொண்டிருந்தனர். எனினும் இந்தியா மெல்ல உறுதியாக மீண்டு பயங்கரவாதத்தை முறியடித்தது. வளர்ந்த நாடுகளே பயங்கரவாதத்தின் கொடுங்கரங்கள் முன் நாசவேலைகள் முன் செயலற்றுப் போகும் இடம் வருகிறது. இந்தியா வளரும் நாடு. இந்தியக் குடிமைச் சமூகம் பயங்கரவாதத்தின் எல்லா முகங்களையும் குறித்து சரியான புரிதலுடன் இருத்தலும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைவதுமே மிகச் சரியான பதிலடி.



Tuesday 4 June 2019

இணைதல்

அன்று
அந்த பிரதேசத்தை
காகங்கள்
வட்டமிட்டன
சில காகங்கள்
வீடுகளின் சுற்றுச்சுவர் மேல்
மரக்கிளைகள் மேல்
வீதியில் நின்றிருந்த வாகனங்கள் மேல்
அமர்ந்திருந்து கரைந்து கொண்டிருந்தன
இப்பவும்
தினமும் ஏதாவது ஒரு வீட்டில்
உருண்டை உணவு வைத்து
பித்ரு கடன் தீர்க்கின்றனர்
கூடி வந்த பித்ருக்கள்
கூறும் செய்தி என்ன
என்று
குழம்பி நின்றனர்
மக்கள்
குழந்தைகள்
பல் முளைக்கா வாயுடன்
வாய் நிறைய சிரிப்புடன்
கா கா கா
என்றன  

Monday 3 June 2019

ஆச்சர்யம்

அப்பா
வீட்டில்
ஒரு பிரத்யேக உலகை
உருவாக்கியிருக்கிறார்
அதனை
அக்கறை கொடுத்து
காக்கவும்
செய்கிறார்

பொழுது விடிந்ததிலிருந்து
ஓயாமல்
வீட்டில்
இங்கும் அங்கும் செல்கிறார்
மாடிக்கு ஏறுகிறார்
பால்கனிக்கு சென்று வருகிறார்

உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில்
மண்ணும் உரமும்
நிரப்புகிறார்
சமையல் கழிவுகளை
மக்கச் செய்து
அதில் இடுகிறார்

குறைவான நீரை
எல்லா செடிகளுக்கும்
தேவையான அளவு
பார்த்து ஊற்றுகிறார்

சணல் கயிற்றால்
பிளாஸ்டிக் நாடாவால்
மாடிக்கும்
தரைத்தளத்துக்கும்
ஆங்காங்கே
இணைப்பு அளித்திருக்கிறார்
அத்தடங்களில்
தளிர்கள் துளிர்க்கின்றன
பூக்கள் மலர்கின்றன
பீர்க்கங்காய்
திடீரென
ஒருநாள் காய்த்துத் தொங்குகிறது
பாகல் தோன்றுகிறது

அழகாய் உருவாகியிருக்கும்
அப்பாவின் உலகத்தை
ஆச்சர்யத்துடன்
பார்க்கிறேன்

அப்பாவைப் பார்ப்பது போலவே

Sunday 2 June 2019

அன்றலர்ந்த மலர்

ஒரு மலரின் முன்
நிற்கும் போது
ஓயாமல் பாயும்
குருதியில் நிறைகின்றன
வானின் மென் தீண்டல்கள்

நீயின்றி அமையாது

உனக்கு
இல்லம் குறித்து
நிறைய விருப்பங்கள்
நிறைய கனவுகள்
இருந்தன
நீ
அவற்றைப் பற்றி
மிகவும் பரவசமாய்
எப்போதும்
பேசிக் கொண்டிருந்தாய்
இல்லம் தினமும் மலர வேண்டும்
என்ற எண்ணம் உனக்கு இருந்தது
எனக்கு மலர் என்றாலே நீதான்
என சொல்ல நினைத்தேன்
சொல்லவில்லை
ஒரு லாப்ரடார் ரெட்ரீவர்
இருக்க வேண்டும்
என்றாய்
சுவரின் நிறங்கள் குறித்து
கதவின் வேலைப்பாடுகள் குறித்து
கைப்பிடிகள் குறித்து
உனக்கு பல ஆலோசனைகள்
நீ சொன்னவை அனைத்தையும்
நான் ஆமோதித்தேன்
விரைவில் திரும்பி வருவதாக
விடை பெற்றுச் சென்றாய்
நான் காத்திருந்தேன்
நீண்ட காலமாக
உன்னிடம்
நீயின்றி அமையாது
நீ விரும்பும் இல்லம்
என்று
சொல்வதற்காக

Saturday 1 June 2019

பார்த்த இடத்திலெல்லாம்

இந்த உலகில்
உன்னுடைய சாயலில்
இன்னும்
இன்னும்
இன்னும்
எத்தனை பேர் தான்
இருக்கிறார்கள்?