Thursday 31 January 2019

மற்றுமோர்

ஓர் அற்புதம்
உணரப்படும்போது
நாம்
அதுவாகவே
ஆகிறோம்
என்பது
அதன்
மற்றுமோர்
அற்புதம்

தூய பூமி

நீ அறிந்திருக்க மாட்டாய்

நேரடியான அல்லது மெல்லிய நுட்பமான
வன்முறைகளை
ஓயாமல் பெருகும் குரோதங்களை
ஊற்றெடுக்கும் வற்றாத கண்ணீரை
சினத்தின் வெம்மைகளை
அச்சத்தின் கவசங்களை
துயரத்தின் பெருங்குரல் அரற்றல்களை
அபயம் கிடைக்குமா என பரிதவிக்கும் நெஞ்சங்களை
தாகம் கொண்ட ஜீவிதங்களை

பாதம் நோக்கும்
உன் உள்ளங்கையிலிருந்து
அன்பின் ஜீவநதிகள் பாய்கின்றன
அவற்றில்
மூழ்கி மூழ்கி
மேலெழுந்து
பறக்கின்றன
வானகப் புள்ளினங்கள்
அது கண்டு
கை கொட்டி
பரவசமாய்
உற்சாகமாய்
சிரிக்கின்றனர்
மழலைச் சிறுவர்கள்
அவர்கள் மகிழும் போதெல்லாம்
பிறக்கிறது
ஒரு தூய பூமி

உன்னைப் பற்றிய வரிகள்

நாம் சந்திப்பதற்கு முன்பே
உன்னைப் பற்றிய வரிகளை எழுதிவிட்டேன்
அவை அனாதி காலமாக எழுதப்படுகின்றன
நீல வானில்
வெண் மேகங்களில்
முழு நிலவில்
கூழாங்கற்களின் மேல் ஓடும் நதியில்
உன்னைப் பற்றிய சொற்கள் உருக்கொண்டன
மண்ணில் நிகழும் மகத்தான அனைத்தும்
சித்தரிக்கப்பட்ட போது
அவை உன் சாயலுடனிருந்தன
விசும்பு நோக்கி
மனித விழிகள் எழும் தோறும்
உன்னைப் பற்றிய வரிகளில்
புதிதாய் சில வார்த்தைகள் சேர்ந்து கொண்டிருந்தன
உன்னைப் பற்றிய வரிகள்
விதையாகின்றன
மலராகின்றன
உயிர்த் தீயாய் எழுகின்றன

Wednesday 30 January 2019

தெரிவு

இன்று காலை நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். மிக இளைஞர். நான் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்த வேண்டும் என எப்போதும் பரிந்துரைப்பவர். நான் அலைபேசிப் பயன்பாட்டை நிறுத்தி விட்டு தரைவழித் தொடர்பு தொலைபேசியைப் பயன்படுத்தினால் என்ன என்று சில நாட்களாக யோசித்து வருகிறேன். எனது தொழில் சார்ந்த பணிகள் ஊருக்குள்ளேயே பெரும்பாலும் அடங்கி விடும். தொழில் நிமித்தம் வெளியூர் செல்வதன் தேவை பெரும்பாலும் இல்லை. சட்டை பாக்கெட், பேண்ட் பாக்கெட் இரண்டுமே அலைபேசியை வைத்துக் கொள்ள வசதியாக இல்லை. எங்காவது வெளியூர் சென்றால் சார்ஜர் மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. கூடிய விரைவில் அதனைத் துறப்பேன் அல்லது வெளியில் எடுத்துச் செல்லாமல் தவிர்ப்பேன் என்றே நினைக்கிறேன்.
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் - என்பது பேராசானின் வாக்கு.

அவரிடம் கூறினேன்: மின்னணுப் பொருட்களிலிருந்து தள்ளி இருக்க எப்போதும் விரும்பியிருந்தாலும் மின்னஞ்சலை கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாகப் பயன்படுத்துகிறேன். அப்போதெல்லாம் தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது என்பது இயலாத காரியம். கணிணி எல்லார் கையிலும் இருக்காது. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையாவது மின்னஞ்சல் பார்க்கும் வழக்கம் இருந்தது. வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மின்னஞ்சலைக் கண்டு மகிழ்வர். பதில் அனுப்புவார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் மடிக்கணிணி வாங்கி பயன்படுத்தத் துவங்கினேன்.

நான்கு ஆண்டுகளாக மடிக்கணிணியில் எழுதுகிறேன். எழுதுவதும் இலக்கியத் தளங்களைப் பார்ப்பது மட்டுமே மடிக்கணிணியில் செய்கிறேன்; அல்லது அது மட்டுமே செய்யத் தெரியும். ஒரு முறை நண்பர் ஒருவரிடம் ‘’கட் காப்பி பேஸ்ட்’’ பயன்படுத்துவது எப்படி என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். வேர்டில் எழுதி இணையத்தில் ‘’கட் காப்பி பேஸ்ட்’’ செய்ய அது வசதியாக இருந்தது.

என்னினும் இளையோர்களைச் சந்திக்கும் போது அவர்கள் நான் தமிழில் அனுப்பும் மின்னஞ்சல்கள் குறித்து கேட்பார்கள். எப்படி தமிழில் எழுதுகிறீர்கள் என சொல்லித் தாருங்கள் என்று சொல்வார்கள். நான் சொல்லித் தருவேன்.

நாம் எதை முக்கியமாக நினைக்கிறோமோ அதைச் சென்றடைகிறோம். நாம் எதை முக்கியமாக நினைக்கிறோம் என்பதை நாம் தான் தெரிவு செய்கிறோம். 
என் கவசங்கள் கனக்கின்றன
நழுவி வீழ்கின்றன
கரங்கள் ஏந்தியிருக்கும் படைக்கலன்கள்
பாதங்களில் படியும் இரத்தச் சேறுடன்
நிலத்தில் நடக்கிறேன்
எக் கோணத்திலும் அன்னியமாய் பூங்காவின்
நீர்ச்சுனையில்
மூழ்கி எழுகிறேன்
கிளையிலிருந்து மண்ணுக்குப் பறக்கும்
மரமல்லிகளைக் கடந்து
புல்வெளியில் அமர்ந்திருக்கும்
உன் முன் வரும் நேரம்
தொலைவில் அதிரும் மணி
ஓசையாய் நிறைகிறது
எங்கும்
ரசவாதப் பொழுதுகளை அளக்கும்
கால அகாலங்களின்
கடிகார முட்கள்
சம்மட்டி அடி போல்
திக் திக் கென்று
இறுக்கமாக
விழும்
எந்த உலோகத்தால்
ஆக்கப்பட்டுள்ளன?

Tuesday 29 January 2019

மர்ஃபியின் பரிசுகள்

மர்ஃபி பரிசுகளை விரும்புகிறான்
அவன் கைகளில் அது வந்து சேர்வது வரை
பள்ளியில்
நடைபெறும் நிகழ்வுகளின் தொடர்
அவனுக்குப் புதிராக இருக்கிறது
அவனுக்கு மர்மமாக இருக்கிறது
அவனுக்கு சுவாரசியமாக இருக்கிறது
சில பரிசுகள் கைக்கு வராமல் இருப்பதிலும்
புதிரும் மர்மமும் இருப்பது
அவனுக்கு மேலும் சுவாரசியம் தருகிறது
வீட்டின் ஒவ்வொருவரிடமும் சென்று
கண்களை மூடச் சொல்லி
தான் பெற்ற பரிசை
அவர்கள் கைகளில் அளிக்கிறான்
அவர்கள் கொள்ளும் மகிழ்ச்சியில்
கூடுதல் மகிழ்ச்சி அடைகிறான்
நான் அவனிடம்
நீ
இனிமையை
உற்சாகத்தை
எப்போதும் பரிசளிப்பவன்
என்றேன்
அவன் புரியாமல் யோசித்தான்
இந்த தருணம்
பித்தேறிய கடவுளின்
ஒரு கண்ணீர்த்துளி
அவன்
சூடும் நிலவின்
ஒரு துண்டு வெளிச்சம்
அவன் முன் நிற்கும்
காளையின்
யுகாந்திரக் காத்திருப்பு
அவனுக்குப் பிரியமானவளின் சிறு புன்னகை

Monday 28 January 2019

அன்பின் வழியது

தும்பிகளெனப் பறக்கும்
உனது நினைவுகள்
மனதின் மலைப் பாறைகளை
உருகச் செய்து கொண்டிருந்தன

துயரத்தின் பாலை நிலங்களிலிருந்து
எழும் ஓயா அரற்றல்களை
ஆசுவாசப்படுத்தியது
உனது கருணை மேகங்கள்
பொழியும் மழை

முடிவிலி வரை நீளும்
கடலின் நுனியில்
ஒளிர்கிறது
உனது இருப்பின் புன்னகை

சிறு நுரையில்
தன்னை
உன் பாதத்தில் விட்டு விட்டு
பின்னால்
செல்கிறது
அலைகள் ஓயாப் பெருங்கடல்
உன்னிடம் சொல்வதற்கு
சில காட்சிகள் இருந்தன
கண்ணீர் இருந்தது
வடிவப்படுத்த இயலாத சில மகிழ்ச்சிகள் இருந்தன
உள்ளங்கைகளால் முகம் பொத்தி
சில மூச்சுகளின் ஆசுவாசத்துக்குப் பின்
கூறும்
துயர்களின் சிறு நிரல் ஒன்று இருந்தது
பிரியங்களின் பல ஆசிகள் இருந்தன
குறுந்திரையில்
அக்கணம் மலர்ந்து
மாரியாய்ப் பொழியும்
டிஜிட்டல் மலர்கள்
சொல்லும்
உணர்வுகளும்
தோன்றி மாயமாகின்றன
உன் முன்னால்
நீ புரியாமல்
வேறு என்ன என்கிறாய்
புதிதாய்ப் பிறந்திருக்கும்
அவ்வப்போது விழி திறக்கும்
கைக்குழந்தையைத்
தொட்டுப் பார்ப்பதைப் போல்
அணுகத் தொடங்குகிறேன்
எப்போதும்
எனைச் சூழ்ந்திருக்கும்
வாழ்வை

Sunday 27 January 2019

என்னிடம்
எந்த முகாந்திரமும் இல்லாமல்
வந்து சேர்ந்தது
ஒரு துளி விசும்பு

மகிழ்ச்சியளிக்கும் சிறு பரிசு ஒன்றைப் போல
உபயோகிக்க ஆர்வமூட்டும் ஓர் எளிய உபகரணம் போல
பகிர்ந்து கொள்ளும் பேருவகை ஒன்றைப் போல
மலர்ச்சாறுகளால் உருவான இனிய நறுமணம் போல

அது
என்னிடம் பொருந்திக் கொண்டது

அசையும் சிறு தீபம் ஒன்றை
இரு உள்ளங்கைகள்
காத்துக் கொள்வது போல
அதனை வைத்துக் கொள்கிறேன்

அச்சுடர்
ஒரு பருவத்தில்
விதையாகிறது
ஒரு பருவத்தில்
பசும் புல்லாகிறது
ஒரு பருவத்தில்
மலராகிறது
ஒரு பருவத்தில்
செங்கதிராகிறது 

Saturday 26 January 2019

கருணா சாகரம்

நான்

அன்பின் சாரல்களை
அன்பின் மழையை
மலர்ந்திருக்கும் அன்பின் தடாகங்களை
அன்பின் ஊற்றுக்களை
அன்பின் சிறு சிறு வாய்க்கால்களை
எதிர்பாராத அன்பின் காட்டாறுகளை
அன்பின் மென்னலை எழும் நதிகளை

கண்டிருக்கிறேன்

நீ
அன்பின்
பெருங்கடல்

Friday 25 January 2019

நீ ஊருக்குச் சென்றிருக்கும் போது
இந்த நகரம்
இந்த உலகம்
இந்த வாழ்க்கை
இன்னும்
கொஞ்சம் பெரிதாகி விடுகிறது
ஒளிந்து கொள்ள வாய்ப்பில்லாத
ஒரு குடோனில்
ஓடிக் கொண்டேயிருக்கும்
இருப்பதில் ஆகச் சிறிய சிறுவன்
என்ன செய்வதென்று யோசிக்கிறான்

Wednesday 23 January 2019

பிரயாகை

விசும்பின் அன்பு
ஆதி இன்றி
இறுதி இன்றி
பிரவாகிக்கிறது
வற்றாத நதியில்
படித்துறையில்
அன்னை
ஒக்கலில் அமர்ந்து
இறுக்கிக் கொண்டு
அவ்வப்போது
சட்டென
பார்க்கும்
குழந்தையை நோக்கி
புன்னகைக்கிறாள்
பேரன்னை
அவள் கரங்கள்
மெல்ல தீண்டுகின்றன
மகவின் மென் சிரஸை

Tuesday 22 January 2019

எத்தனை

எளிய
அழகான
இந்த உலகில்
ஓர் எளிய கூழாங்கல்லே
ஆசிர்வதிக்கப்பட்டதெனில்
மனிதன்தான்
எத்தனை
எத்தனை
அரிதானவன்

Monday 21 January 2019

ஓர் அற்புத மாயம்

சமீபத்தில்
ஒரு மாயக்காரனைத்
தற்செயலாய்
சந்தித்தேன்
அவன்
நுட்பமான
நூதனமான
மலர் மணங்களோடு
எப்போதும்
முறுவலித்திருந்தான்
என் கலைந்து கிடந்த மேஜையில்
ஓரிரு மாற்றம் செய்தான்
ஒழுங்குபடுத்தவே முடியாது
என
நான் எண்ணியிருந்த மேஜை
சங்கீதம் எழுப்பியது
மேஜையிடம்
நீ சங்கீதம் அறிவாயா
என்றேன்
நீ இப்போதுதான் அறிந்தாய்
என
வெட்கப்பட்டது

எனது மோட்டார்சைக்கிளைக் காட்டினேன்
பார்த்ததும்
அது உன்னை நேசிக்கிறது
என்றான்
அதனைப் பிரியமாகத் தொட்டான்
அவனிடம்
உன்னைச் சந்தித்தது மகிழ்ச்சி சகோதரா
என்றது

எனது நெடுநாள் இக்கட்டுகளை
அவனிடம்
சொன்னேன்

எளிதாகப் பிரித்து வைத்தான்

நீ அற்புதமானவன்
என்றேன்

நீ இப்போது அற்புதங்களை உணர்கிறாய்
என்றான்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

அன்று
நகரம் வழக்கம்போலவே இயங்கியது
யாரும் வான் பார்க்கவில்லை
கொட்டும் இலைகளும் மலர்களும்
பொது கவனத்தில் இல்லை
மின்சார விளக்குகளின் அடர்த்தியில்
அந்திப் பொழுது விலகி நின்றிருந்தது
ரெயில்வே நிலைய ஆலமரத்தில்
தினமும் கூடடையும்
பறவைகளின் பெரு ஒலியை
வியந்து பார்த்தான்
ஊருக்கு முதல் முறை
பாஸஞ்சரில்
வந்து சேர்ந்த பயணி
தீச்சுடர் ஒன்று ஒளிரும் அறையில்
அமர்ந்திருக்கிறாய்
நீ
சுவாசமே
தியானமாக

Sunday 20 January 2019

நீ இல்லாத பொழுதுகளில்
நிறைந்திருக்கிறது
இன்னதென்று
சுட்ட இயலாத
ஓர் இடைவெளி
ஒரு மாயக்கரம்
திடீர் திடீரென
கவிழ்க்கிறது
காலக் கடிகையை
அசைவுக்கும்
அசைவின்மைக்கும்
அப்பால் இருக்கும்
பிரபஞ்சத்தில்

இன்று
கதிருக்கும்
வானுக்கும்
இடையே
இருந்த மேகங்கள்
அந்திப் பொழுதில்
சூடியிருந்த
சிவப்பு
உன் மென் குரல் சங்கீதமானது
அந்திக்கும்
அந்திக்கும்
இடையே இருக்கும்
இந்த நீண்ட இரவின்
தனிமையில்
உணரும்
இசையைப் போல

Saturday 19 January 2019

காத்திருத்தல்

காத்திருக்கும் கணங்கள் மேலும் நூதனமாகியிருக்கின்றன
அசையா உடலில் பூமிப்பந்தைப் போல் விடாமல் சுழல்கிறது மனம்
அணி செய்து கொண்ட இளம்பெண்
ஆடிக்குள் எதையோ தேடிக் கொண்டிருக்கிறாள்
அதன்உள்தான் இருக்கிறது என்ற நிச்சயத்தோடு
நம்பிக்கையின் நிராகரிப்பின் சாத்தியங்கள்
கடல் போலும் நிலம் போலும் விரிகின்றன
அவற்றின் மேல் மிதக்கும் காற்றில்
எப்போதும் போல்
சிறகசைக்கின்றன
புள் இனங்கள்

Friday 18 January 2019

அழைப்பு வரலாம்

அழைப்பு வரலாம்

எங்கிருந்தும்
வான் மேகங்களிடமிருந்து
சில்லென்று கொட்டும் அருவிகளிடமிருந்து
கொக்குகள் நின்றிருக்கும் வயல்களிடமிருந்து
மந்தை ஆடுகள் ஏறிக் கொண்டிருக்கும் மலைப்பாதைகளிடமிருந்து
பொங்கிப் பிரவாகிக்கும் ஆற்றிடமிருந்து
ஆலமர அரசமர நிழல்களிடமிருந்து
துயரத்தின் பாலைவனங்களிடமிருந்து
கண்ணீரின் ஓயாப் பெருங்கடலிலிருந்து

எங்கிருந்தும்

அழைப்பு வரலாம்

உறக்கத்தில் சிரிக்கின்ற குழந்தை
புரண்டு படுக்கிறான்
சிரித்துக் கொண்டே

Thursday 17 January 2019

ஒரு மலைப்பாதையின் திருப்பத்தில்
இருக்கும் மர பெஞ்சில்
மேகங்கள் மிதக்கும் காற்றில்
நகரும் கடிகார முட்கள்
மோனத்தை
அளந்து கொண்டிருக்கும் பொழுதில்
நீ
மலராகவே இருக்கும் தினத்தில்
சிவப்பு சூரியனின் முன்னால்

நான்
உன்னிடம்
ஒன்றைச்
சொல்ல வேண்டும்

Wednesday 16 January 2019

ராதே கிருஷ்ணா

உன் இசை நிறையும்
அகத்தை
தூயதாக்கி வைத்திருக்கிறேன்
உன் பாதங்கள்
படியப் போகும் தாழ்வாரங்களில்
சிட்டுக்குருவிகள்
கிரீச்சிட்டு
சிறகடிக்கின்றன
நீ உலவும் பகுதிகளிலெல்லாம்
இனிமையின் இன் மணங்கள்
தீக்கங்குகளிலிருந்து
புகைந்து கொண்டிருக்கின்றன
தினம் தினம்
உனக்காகக் காத்திருக்கிறேன்
யுகம் யுகமாக

Tuesday 15 January 2019

ஆயிரம் கரங்கள்

தீ எழட்டும்
எப்போதும் விண் நோக்கியே
எழும்
தீ எழட்டும்
வானின் மேன்மைகளை
மண்ணின் உயிருக்குத்
தன் தளிர்க்கரங்களால்
கொண்டு சேர்க்கும்
தீயின்
ஆயிரம் ஆயிரம் கரங்கள்
எழட்டும்
எங்கள் எல்லைகளை அவியிடுகிறோம்
எங்கள் பேதங்களை அவியிடுகிறோம்
எங்கள் அறியாமையை அவியிடுகிறோம்
தீயே
எங்களைத் தூய்மைப்படுத்து
எங்களை ஆற்றல் கொண்டவர்களாக்கு
புவியெங்கும்
அன்பை நிலைபெறச் செய்

எனது மோட்டார்சைக்கிள்

எனது மோட்டார்சைக்கிள்
எப்போதும்
அமைதியாகக்
காத்திருக்கிறது
எனக்காக

அது
என்னை அறியும்
என்னை விடவும்
என்னைப் பற்றி
நன்றாக அறியும்

முதல் முறையாக
அதில் பயணித்த போது
நான் அடைந்த குதூகலத்தை
நாங்கள்
பரஸ்பரம்
இன்னும்
மறக்கவில்லை

எனது முனைப்புகளை
எனது ஆர்வங்களை
எனது செயல்பாடுகளை
எனது மனம் இயங்கும் விதத்தை
எனது சுபாவத்தை
அது
மிக நன்றாக அறிந்திருக்கிறது
எவரை விடவும்
எனினும்
ஒருநாளும்
என்னிடம் எதுவும் சொன்னதில்லை

அதன் மௌனத்திலிருந்து
நான் எத்தனையோ பெற்றிருக்கிறேன்
ஆலோசனைகளை
சம்மதங்களை
மேலான வாய்ப்புகளை

நான்
அதனை முறையாகப் பராமரிப்பவன் இல்லை
என்ற வருத்தம்
எனக்கு உண்டு
அதற்கு என் மீது புகார் எதுவும் இல்லை

அது இருக்கிறது
கடவுள் யார் மீதும் புகாரற்று இருப்பது போல
அது காத்திருக்கிறது
எனக்காக

கதிரோனே ஒளியோனே அறிவோனே

கதிரே
உன்னை வணங்குகிறேன்

வாழ்வு என்பதை நீயாய் நாங்கள் உணர்கிறோம்
உலகென்பது எங்களுக்கு உனது ஒளியாய் அனுபவமானது
உன் கருணையை நாங்கள் உணவாய் அருந்தினோம்
உன் அன்பு எங்கள் மேல் மழையாய்ப் பொழிந்தது

எங்களை நீ அறிவாய்

எங்கள்
எல்லைகளை
சிறுமைகளை
இச்சைகளை
பூசல்களை
தடைகளை

ஒவ்வொரு நாளும்
வெள்ளிக்குப் பின்
முளைக்கும்
உன் முதற் கதிர்

எங்களை
மன்னிக்கிறது
எங்களுக்கு
வாய்ப்பு தருகிறது

இன்று உன்னிடம் யாசிக்கிறோம்
உனது ஆற்றலை
உனது திறனை
முடிவிலா உன் அன்பை

Monday 14 January 2019

நீலோத்பலம்

அவள்
எப்போதும்
நீல நிறத்தை விரும்புகிறாள்
தன் வாழிடத்தை
அணி செய்யும் தோறும்
நீலத்தின் வெவ்வேறு தன்மைகளைப்
பயன்படுத்துகிறாள்
அவள் தேர்ந்தெடுக்கும்
மற்ற வண்ணங்களும்
நீலத்தின் சாயலை உள்வாங்கிக் கொள்கின்றன
அல்லது
நீலத்திற்கு மேலும் அழகு தருகின்றன

ஒருமுறை
ஹெலிகாப்டரில்
பயணித்த போது
ஜன்னல் திறந்து
வான் நீலத்தின் ஒரு துளியை
எடுத்துக் கொண்டாள்

அந்திச் சூரியனை நோக்கி
படகில் சென்ற போது
கடல் நீலத்தின் ஒரு துளியை
எடுத்துக் கொண்டாள்

அவற்றை ஒரு விதையாக்கி
தன் தோட்டத்தில்
இட்டு
தினமும் நீர் வார்த்தாள்

பின்னொரு பருவத்தில்
அச்செடி
அவள் இமைக்கும்
பொழுதெல்லாம்
நீலமாய்
மலர்ந்தது

Sunday 13 January 2019

அவளுக்கு
ஹெலிகாப்டர்
பரிசளித்தேன்

ஆர்வத்துடன் தனியே வான் பறந்தாள்
நீ எப்போது பைலட் லைசன்ஸ் பெறுவாய் என்றாள்
நீ பெற்றது எப்போது என்றேன்
பரிசாகப் பெற்ற கணத்திற்கு முதற்கணத்தில் என்றாள்

பின்னர் ஒரு ஜே.சி.பி பரிசளித்தேன்
என்னை இயக்கச் சொல்லி அருகமர்ந்தாள்
கிரேனை பறவை அலகாக்கி
பாறைகளையும் புதர்முட்களையும்
கொத்தி உடைத்தாள்

ஆள் கண்டு குரலெழுப்பும்
பறவை
ஒன்றை
அளித்தேன்
அன்னியர் கண்டு எழுப்பும் குரலை
நான் வரும்போது எழுப்ப அதற்கு பயிற்சி தந்தாள்

ஒரு மலையைப் பரிசளித்தேன்
அடிவாரம் நின்று
உச்சித் தேன் கேட்டாள்

மாலை அந்தியின் முதல் விண்மீனை அவளுக்களித்தேன்
அதிகாலையின் விடிவெள்ளியாய் என்னை இருக்கச் சொன்னாள்

மூங்கில் வெளிப்படுத்திய இசையை மட்டும் அளித்தேன்
அவள் புல்லாங்குழலை எனக்குப் பரிசளித்தாள்

Saturday 12 January 2019

அலைத்திரள்

இரவின் இறுதித் துளி
பகலாகப் பரிணமிக்கும்
சிட்டுக் குருவிகள் சிறகடிக்கும்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வாசலுக்கும்
கொண்டுவருகிறது
திரள் திரள் அலைகளாய்
இனிமைகளை
நம்பிக்கைகளை

அழகானது
இந்த வாழ்க்கை
இந்த உலகம்

எப்போதும்

Friday 11 January 2019

வாடிய பயிர்

உன் முகம் வாடும்
தருணங்களிளெல்லாம்
பெருஞ்சுமையால்
மூச்சிறைக்கிறேன்
உன் விழியில் திரளும்
துயரின்
ஒரு துளி கண்ணீர்
ஓயாத  பேரலைகளாக
ஓசையிடுகின்றன
உன் தனிமை
பாலை நிலத்தின்
பெருங்காற்றாய்
நகர்ந்து கொண்டேயிருக்கிறது

ஓர் ஆரம்பம்

எங்கோ
தொலைதூரத்தில்
ஐந்து மலைகள்
ஐந்து நதிகளுக்கு அப்பால்
கந்தக வெப்பம் அலையும்
பாலை நிலத்தில்
கடந்து செல்ல
ஒரு சிற்றூருக்குள் நுழையும்
மோட்டார்சைக்கிள் பயணியைப் பார்த்து
வியந்து
இமை அசைய
விழி மலர
புன்னகைக்கிறான்
ஒரு ஏழு வயது பாலன்

ஓவிய நோட்டில்
பென்சில் கோடுகளை
ரப்பர்
அழிப்பது போல
அப்புன்னகை
மனித எல்லைகளை
அழிக்கத்
தொடங்குகிறது

மர்ஃபி பார்த்த வானவில்

பிளாஸ்டிக் மட்டையையும்
ரப்பர் பந்தையும்
ஒவ்வொரு கைகளில்
எடுத்துக் கொண்டு
அரக்கப் பரக்க
வேர்க்க விறுவிறுக்க
உச்சி வெயிலில்
வந்தான்
மர்ஃபி
ரவுண்ட் வானவில்
ரவுண்ட் வானவில்
வாங்க
வந்து பாருங்க
அழைத்தான் ஒவ்வொருவரையும்
அவன் சகோதரி சொன்னாள்
என்னடா உளற்ர
காலை நேரத்திலும்
மாலை நேரத்திலும்
மட்டுமே
இங்கெல்லாம்
வானவில் வரும்
இப்ப எப்டி வரும்
அதுவும் ரவுண்டா எப்படி வரும்
எல்லாரும் சரிதானே என்றார்கள்
வந்து தான் பாருங்களேன்
மர்ஃபி கெஞ்சினான்
யாரும் வரவில்லை
நான் மட்டும் உடன் சென்றேன்
நகரின் மேல் ஒரு வட்ட வானவில்
மர்ஃபியை உச்சி முகர்ந்தேன்
எப்படி தெரிஞ்சது மர்ஃபி
நான் எப்பவுமே வானம் பார்ப்பேன்
உற்சாகமாய் மர்ஃபி சொன்னான்

மறுநாள்
மர்ஃபி பார்த்த வானவில்
அரிய நிகழ்வு
என தலைப்பிடப்பட்ட
பத்திரிகை செய்தியானது
ரவுண்ட் வானவில் பார்க்காத
ஊரே
அதை வாசித்தது

மர்ஃபி
வழக்கம் போல்
வெளியே கிளம்பினான்
பிளாஸ்டிக் மட்டை
ரப்பர் பந்துடன்

மதி நிறைந்த இரவு

மௌனத்தைப் போல
நிலவொளி பரவிச் செல்லும்
இந்த
நள்ளிரவில்
உறக்கம் நிறைகிறது
பிரதேசம் எங்கும்
எல்லா கடிகாரங்களும்
இயங்கும் ஒலியை
துளித் துளியாய்
கேட்டுக் கொண்டே
இருக்கின்றன
இரு செவிகள்
கால கால மாக

Thursday 10 January 2019

நுழைவு

ஓர் அற்புதத்தைப் போல
ஒரு பருவமழையைப் போல
ஒரு கைவிளக்கின் ஒளியைப் போல
தாகம் தீர்க்கும்
ஒரு டம்ளர் தண்ணீரைப் போல
இதம் அளிக்கும் ஓர் இன்சொல் போல
மாலை நிலவைப் போல
ஒரு வசந்தகாலம் போல

நீ
உள்நுழைகிறாய்

Tuesday 8 January 2019

இளவெயிலே வானகமே

விடிவெள்ளி போல
உனது முகத்திலிருந்து
நம்பிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறேன்
நட்சத்திரங்களின் மின்னும் ஒளியை
உனது ஆர்வம் நிறைந்த அசைவுகளில்
பெற்றுக் கொள்கிறேன்
மின்னல் மலர்
உன் புன்னகைகள்
அந்திச் சூரியனைப் போல்
ஓயாமல்
கருணை பொழிகிறது
உனது இருப்பு
வான் அகம் முன் நிற்பது
போல
உன் முன் நிற்கிறேன்

ஒரு சிறிய மகத்தான செயல்

ஒரு புதிய பேட்ரியைச் செருகி
ஒரு கடிகாரத்தை ஓடச் செய்யும் போது
நாளும் நமை சுமக்கும் டூ-வீலரை
துடைத்து வைக்கும் போது
சாலையில் காலைப்பொழுதில் நடக்கையில்
வழிந்து கொண்டிருக்கும் தண்ணீரை நிறுத்தும் போது
செல்லுமிடம் ஒன்றின் வாசலில்
மனிதர்கள் போல் பிரிந்து கிடக்கும்
செருப்புகளை
பள்ளியின் காலை பிரேயர் போல்
வரிசைப்படுத்தும் போது
கையில் உணவுடன் வீதிநாய்
எப்போது வரும் என பார்த்திருந்து
பலமுறை பேர் சொல்லி அழைக்கும் போது
ஒரு பெட்டிக்கடைக்காரரிடம் நன்றி கூறும் போது

நாம்
சிறிய
மகத்தான
செயல்
ஒன்றைச்
செய்கிறோம்

Sunday 6 January 2019

புத்தம் சரணம் கச்சாமி

உன்னைச் சூழ்ந்திருந்த காற்று
தன் அருட்கரங்களால்
தீண்டியது
என்னை
தொலைதூரத்தில்
தொலை ஆழத்தில்
அமிழ்ந்திருந்த
என்னை

அகங்காரம் உண்டாக்கும் வலியிலும்
அறியாமை  இருளிலும்
இச்சைகளின் முடிவிலா சுழலிலும்
உழன்று கொண்டிருந்த உயிர்க்கு
உன் அருள் முகம்
அமைதி தந்தது

உன் புன்னகை வதனம்
நோக்கி
நடக்கிறேன்
என் ஆணவங்களை
என் சிறுமைகளை
என் எல்லைகளை
உதிர்த்து விட்டு

மர்ஃபிக்கு இன்று விடுமுறை



மர்ஃபிக்கு இன்று விடுமுறை
காலையில் எப்போதும் போல் விழித்துக் கொண்டான்
ஆனாலும்
மீண்டும் தூங்கினான்
அவன் சகோதரி ஸ்கூலுக்கு கிளம்புவது குறித்து
மிக்க மகிழ்ச்சி அடைந்தான்
பார்ப்பவர்களிடமெல்லாம்
இன்னைக்கு எனக்கு ஸ்கூல் லீவு
என்றான்
சிலர்
அக்காவுக்கு
என்று கேட்பார்கள் 
என்று எதிர்பார்த்தான்
அவன் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை
அது குறித்து
அவ்வப்போது மகிழ்ந்தான்
டிஃபன் சாப்பிட்டு விட்டு
தன் பிளாஸ்டிக் மட்டையையும்
ரப்பர் பந்தையும்
எடுத்துக் கொண்டு
இன்று யார் யாருக்கு லீவாயிருக்கும்
என்ற எண்ணத்தோடு
அடுத்த தெருவில் இருக்கும்
மைதானத்துக்கு நடந்தான்

அதுவரை 
அவனையே பார்த்துக் கொண்டிருந்த
கடவுள்
தன் வேலைக்குக் கிளம்பினார்

பிராத்தனை

பனித்துளிகள் நுனியில் நிற்கும் புல்தரையால்
சிவப்பு சூரியனால்
அதிகாரமாய் விளிக்கும் காகக் கரைதல்களால்
அங்கும் இங்கும் சிறகடிக்கும் சிட்டுக்குருவிகளால்
அன்றலர்ந்த வண்ண வண்ண மலர்களால்
குழந்தைகள் போல் நோக்கும் இளம் பச்சைத் தளிர்களால்
எளிய கூழாங்கற்களால்
தீர்த்தக் கரையால்

ஆனதாக இருக்கிறது
உனது சன்னிதானம்

என்னிடம்
கண்ணீர் இருக்கிறது
கடுந்துயர் இருக்கிறது
பெருவலி இருக்கிறது

காட்டுத் தீயென
என்னைச் சூழ்ந்து
அழிப்பாய்
என
உன் முன் நிற்கிறேன்

Saturday 5 January 2019

நான் உன்னிடம் சொல்லவில்லை

அதை இன்னும்
நான் உன்னிடம் சொல்லவில்லை

அது ஓர் உண்மை
அது ஓர் உணர்வு
அது ஓர் ஒப்புதல் வாக்குமூலம்
அது ஒரு கனவு
அது ஒரு பிராத்தனை
அது ஒரு நுண்சொல்
அது ஒரு மகத்துவம்
அது ஒரு குறிப்பு
அது ஒரு நம்பிக்கை
அது ஒரு விதை
அது ஒரு விருட்சம்
அது ஒரு கனி
அது ஒரு துளி அமிர்தம்
அது ஒரு துளி இனிமை
அது ஒரு துளி அந்தி
அது ஒரு துளி வானவில்
அது ஒரு துளி மழை
அது ஒரு துளி ஒளி
அது ஒரு துளி விசும்பு

அதை இன்னும்
நான் உன்னிடம் சொல்லவில்லை

அன்பின் ரசவாதம்

நான் ஒரு ரசவாதி
கூழாங்கற்களை கோபுரங்கள் ஆக்கினேன்
மலரை நிலவாக்கினேன்
தீயைப் பசும் தளிர்களாக்கினேன்
அமிர்தத் துளிகளை குழந்தைகளாக்கினேன்
இசையை மழலைச்சொல் ஆக்கினேன்
மழைத் துளியை தானிய மணிகளாக்கினேன்
காற்றில் எழும் மென்பஞ்சை சிட்டுக்குருவிகளாக்கினேன்
நட்சத்திரங்களை குளத்து மீன்களாக்கினேன்
சூரியனை சோளக்கதிராக்கினேன்

உன்னை எண்ணும் தோறும்

கணந்தோறும்
என்னை
மாற்றிக் கொண்டேயிருக்கும்
உன் ரசவாதம்
என்ன

நிலைமனம்

உன் உடன் இருக்கும் பொழுதுகளில்
எங்கும் நிறைகிறது
இசை பரவும் சூழலின்
எடையின்மைகள்
வலி நீங்கும் கணத்தின்
நிம்மதிகள்
மன்னிக்கப்பட்டதன்
விடுதலை

உன்னை எண்ணும் போது
மண்ணிலிருந்து விண்ணுக்கு
சஞ்சரிக்கும்
விருட்சமென
அகம் எழுகிறேன்

அப்போது வீசும் காற்றில்
சலசலக்கும்
இலைகள்
கண்டு
மகிழ்கிறான்
ஓய்வெடுக்கும்
வழிப்போக்கன்

Friday 4 January 2019

அபூர்வா

உன்னால் விரும்பப்படும்
மலரின்
நறுமணம்
அபூர்வமானதாக இருக்கிறது

அதிகாலை வானத்தின்
மழைமேகங்களின்
அருவி நீர் அடர்த்தியின்
வழுவழுக்கும் தடாக மீன்களின் துள்ளலின்
சிட்டுக் குருவிகளின்
அலை நுரையின்
அணில் கடிக்கும் கனிகளின்
இளம்புற்களின்
பச்சைத் தளிர்களின்
பாலறா வாய்களின் புன்சிரிப்பின்
பாலை முழுநிலவின்

துளித் துளி
இனிமையால்
ஆனதாக
அந்நறுமணம் இருக்கிறது

உன் நிமித்தம்
அம்மலர் தேடி
அலையத் தொடங்குகிறேன்

அப்பால்

மலைகளில் உறைந்திருக்கும் அமைதியைப் போல்
கிராமத்துச் சாலைகளின் தனிமையைப் போல்
துடிப்பான சிறுவனின் உற்சாகமான சிரிப்பைப் போல்
குளக்கரை மலர்களின் தனித்துவம் போல்
சிற்கு விரித்து எழும் பறவைகள்
வானில் உணரும் சுதந்திரம் போல்
ஒரு வீட்டுப் பிராணியின் ஆசுவாசம் போல்
இருளில் சுடரும் ஓர் அகல் தீபத்தின் எளிமையைப் போல்
கார் மேகத்தின் கருணையைப் போல்
நிலவின் வடிவைப் போல்

உன்னை
எப்படியாவது
வகுத்து விட முடியுமா
என யோசித்துப் பார்க்கிறேன்

கரையில்
அலை தீண்டிய
பரப்புக்கு
அப்பால்
மணலில்
மிதந்து கொண்டிருந்தது
அலை நுரை 

பெயர்ச்சி

உன் உலோகக் கடிகாரத்தின்
முட்கள்
கொள்ளும்
சீர் இயக்கம்
உன் நாடிகளின்
ஒத்திசைவால்
உருவானதா
அல்லது
உன் அசைவுகளின்
ஒத்திசைவால்
உருவானதா

Thursday 3 January 2019

சூஃபி

மண்ணில் உறங்கிக் கொண்டிருக்கிறாய்
ஓர் அற்புதக் கணத்தில்
பேதம் உணராதிருந்த போது
உனது எரியும் நினைவுகள்
பனிமலையாய் உருகிக் கொண்டிருந்தன
நீரெனக் கனிந்து
ஒவ்வொரு கணமும்
நீ
மலரத் துவங்கினாய்
உன் நிலத்தில்
அரற்றும் அழுகுரல்கள் கேட்கின்றன
துயரின் கண்ணீர் சமர்ப்பணமாகிறது
வலியின் வேதனை முனகல்கள் எழுகின்றன
நம்பிக்கை கோரும் பிராத்தனைகள்
உச்சரிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன
நீ ஆற்றுப்படுத்தும் போது
நீண்ட பாலைகளின் காற்றில்
சிறுதுளியாய்
ரோஜா மணம் வீசுகிறது
அதில் கரைகிறது
மானுடப் பெருவெளி

எம் பாவாய்

உன் பார்வை
கருணை
என நான் அர்த்தப்படுத்தியிருந்தவற்றில்
மேலும் சிலவற்றை
சேர்த்தது
சிலவற்றை
முற்றிலும் மாற்றியமைத்தது

சீரான
உன் மூச்சில்
எப்போதாவது
உன் தோள்கள்
இலேசாக
அசையும் போது
ததும்பும்
அமுத கலசத்தின்
ஒரு சித்திரத்தை
மனம்
தீட்டிக் கொள்கிறது

புன்னகைக்கும்
உன் முகம் காட்டும்
உணர்வுகளில்
விதவிதமாய் பிறக்கின்றன
புதிய பிரபஞ்சங்கள்

உன்
சொல் தீ யில்
சாம்பலாகிறது
நான்
என்னும்
பாரம்

வருகை

உனக்கான
காத்திருப்பு
யுகயுகமாய் நீண்டது
உனக்காகக்
காத்திருக்கும் பொழுதில்
உணர்வை
ஓர் இனிய சொல்லாக்கும்
சாத்தியத்தை
முதன் முதலில்
கண்டடைந்தேன்
அதுவே பின்னர் நீதி என்றானது
தூ வெண் மதி என
நீதியின் ஒளி
ஆதுரம் தந்தது
உனக்காகக்
காத்திருக்கும் பொழுதில்
கைகள் அளையும்
மண்ணையும் கல்லையும்
நானாவித வடிவங்களாக்கினேன்
நிலம் தொடாத
எப்போதும்
நீரில் மிதக்கும்
கப்பல்கள்
புவியைச் சுற்றி வருகின்றன
விமானங்கள்
அதிலிருந்து வானில் எழுந்து
நிலத்தில் அமைகின்றன
இன்று காத்திருந்த
இருபத்து மூன்று
நிமிடங்களின்
ஒவ்வொரு கணத்திலும்
கனக்கின்றன
அந்தர யுகங்கள்
சீக்கிரம்
உன் சம்ஹாரங்களை
முடித்து விட்டு
வா

Wednesday 2 January 2019

ஒரு நல்ல காலைப்பொழுதில்

ஒரு நல்ல காலைப்பொழுதில்
பல நிகழ்ச்சிகளை
மனத்தில் ஓட்டிக் கொண்டிருந்தோம்
இனிமையான நினைவுகளின் அடர்த்தி
நினைக்கும் தோறும்
இன்னும் இன்னும் குறைவது
வியப்பளித்தவாறு இருந்தது

வெளிக்காட்டிக் கொள்ளாத காயங்களும்
சொல்லாக்காத துயரங்களும்
மண்ணில் விழாத நீராக
விழிகளில் தேங்கின

பேசிக் கொள்ளாமல்
தூரத்தில் இருந்தாலும்
ஒவ்வொரு எண்ணத்துக்கும்
ஒவ்வொரு செயலுக்கும்
நம்மைப் போலவே
எதிர்வினையாற்றும்
இருப்பை
என்ன செய்ய முடியும்
என்று யோசித்த போது
ஓர் இறுக்கமான சங்கிலியின்
பலமான ஒரு கண்ணி
விடுபட்டது

சில சமயம்
விடுபடல்கள் கூட
ஒரு காலைப்பொழுதை
ஒரு நல்ல காலைப் பொழுதாய்
உணரச் செய்கின்றன

ஒரு பயணம் நிகழும்

கிளம்பியிருக்கும்
ஒவ்வொரு பேருந்தையும்
தவிர்த்து விட்டு
சற்று தள்ளி நின்று
கவனத்தை அங்கேயே வைத்திருக்கும்
கணவன்
அருகில் வந்து
ஓரிரு வார்த்தைகள்
பேசும் போதெல்லாம்
கண்ணீர் மல்கும் தாயின்
அருகாமையில்
இருக்கும் சிறுவன்
சூட்கேஸ்களில் அமர்ந்து
எழுந்து
மெலிதாக எழும் அழுகுரல்
உண்டாக்கும்
அதிர்வுகளுக்கு
அப்பால்
பேருந்துப் பயணத்தில்
முகத்தில் மோதப் போகும்
காற்றையும்
நில்லாமல் ஓடும் மரங்களையும்
கற்பனை செய்கிறான்

அந்த கணவன்
எதற்காகக் காத்திருக்கிறான்?
உறுதியளிக்கப்பட்ட கடனுக்காகவா?
வந்து சேர வேண்டிய தொகைக்காகவா?
குடும்ப பிரச்சனையா?
நெருங்கியவர்கள் மரணமா?

சட்டென முடிவெடுத்து
மூவரும்
ஒரு பேருந்தில்
ஏறி அமர்கின்றனர்

துயரங்களிலிருந்து
துயரமின்மைக்கும்
ஒரு பயணம் நிகழும்

உனக்கான பரிசுப்பொருளைத் தேர்ந்தெடுக்கும் போது

உனக்கான பரிசுப்பொருளைத் தேர்ந்தெடுக்கும் போது
அது
என்னைப்
பற்றியதாகவோ
பரிசுப்பொருளைப்
பற்றியதாகவோ
இல்லாமல்
உன்னைப்
பற்றியதாக
இருக்க வேண்டியிருக்கிறது

உன்னைப் புன்னகைக்கச் செய்யக் கூடிய
உன்
தோற்ற எண்ண நகர்வுகளுக்கு
ஒத்திசையக் கூடிய
எளிய
இனிய
ஒரு பரிசுப்பொருளை
எப்போதும்
தேடிக் கொண்டிருக்கிறேன்

தயக்கத்துடன்
என்
இக்கட்டை
உன்னிடம்
சொன்னேன்

விழுந்து விழுந்து
சிரித்து
உன் தவிப்பை
பரிசுப்பொருளாய்
ஏற்றுக் கொள்கிறேன்
என்றாய்

அது
ஒத்திசைவு கொண்ட
இனிய
எளிய
ஒன்றா
என
எனக்குத் தெரியவில்லை

ஆனால்
கணந்தோறும்
அதனை
உனக்கு
அளித்துக் கொண்டிருக்கிறேன்

Tuesday 1 January 2019

விளி

இன்று

தாள்கரம்
வான் நோக்கி உயர்த்தியிருக்கும்
பயிரின்
நுனி விரலில்
அருமணியென ஒளிவிடும்
அதிகாலைப் பனிக்கு

புகை அசையும்
கிராமத்துச் சாலையின்
ஓரத்தில் இருக்கும்
சிற்றோடையில்
தூய்மை கொண்டு
வீற்றிருக்கும்
அல்லி மலருக்கு

காலையின்
முதல் நடைப்பயிற்சியாளன்
நடக்கத் துவங்கும் போது
வழக்கமாகக்
கூவும்
கோழிக்கு

தூரத்தில் கேட்கும்
ஆலயமணிக்கு

சொல்வதற்கென

நம்மிடம் சொல்வதற்கென

இருப்பது தான் என்ன?

ஒருநாள்

ஒருநாள்
உன்னை இயல்பாக ஏற்கலாம்

உன் மீதான ஊசி நுனியளவு வெறுப்பு இல்லாமல்
அநாதி காலமாய் நீ  அவ்வப்போது சிந்தும் கண்ணீர் அன்றில்லாமல்
எள்ளளவு வஞ்சமும் இன்றி
ஐயங்கள் அல்லது ஐயம் ஏதும் அற்று
வன்முறையின் களிம்பு இல்லாத

ஒருநாள்

ஒருநாள்
உன்னை இயல்பாக ஏற்கலாம்