Thursday 31 March 2022

நாற்றங்கால்

’’காவிரி போற்றுதும்’’ குறித்த எண்ணம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே மார்ச் மாதத்தில் உருவானது. இரண்டு ஆண்டுகள் ஆகி உள்ளன. கணிசமான அளவு செயல்கள் ஆற்றப்பட்டுள்ளன என்றே நினைக்கிறேன். இருப்பினும் இன்னும் இன்னும் என மனம் வேகம் கொள்கிறது. மக்கள் பணியாளன் அனுபவத்தில் உணரும் உண்மை என ஒன்று உண்டு. எந்த செயலுக்கும் அடிப்படை அந்த செயலைச் செய்ய வேண்டும் என்ற உணர்வே. எனவே மக்கள் பணியாளன் எப்போதும் தன் குழுவிடம் அகத்தில் அந்த உணர்வு எப்போதும் சுடரும் படி பார்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டே இருப்பான்.  

இந்த இரண்டு ஆண்டுகளில் பொதுப் பணிகளில் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். செயல் புரியும் கிராமத்தில் சில விவசாயிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அங்கிருந்த விவசாயி ஒருவர் என்னைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் சொன்னார் : ‘’ சாருக்கு பொறுமை ரொம்ப அதிகம். யார் எது சொன்னாலும் முழுசா கேட்டுக்கறாரு. யாரும் கடுமையா ஏதும் சொன்னாக் கூட சாருக்கு கோபம் வர்ரதில்லை. சொல்ல வேண்டிய விஷயத்தை அமைதியா எடுத்துச் சொல்றாரு. நாம யாரைப் பத்தியாவது புகாரா சொன்னாக் கூட யாரைப் பத்தியும் எதிர்மறையா நினைக்காதீங்க சொல்லாதீங்கன்னு சொல்றாரு. மெல்ல மெல்ல செஞ்சாலும் தான் நினைச்சதை செஞ்சுடராரு.’’ 

நாம் மக்களை இணைப்பதற்காகப் பணி புரிகிறோம். நம்மை ஏற்காதவர்கள் நம்மை வெறுப்பவர்கள் கூட நம்மவர்களே. அவர்களுக்கும் சேர்ந்து யோசிக்க வேண்டிய செயலாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. மக்கள் பணியாளன் அந்த உணர்வுடன் எப்போதும் இருப்பான். 

நான் முதலில் பணி புரிந்த கிராமத்துக்கு இரண்டு நாட்கள் முன்னால் சென்றிருந்தேன். அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் வீட்டு வாசல் முன்னால் வைப்பதற்காக அளித்திருந்த மலர்ச் செடிகள் சிறப்பாக வளர்ந்து பூ பூத்துக் கொண்டிருக்கின்றன. அரை அடி நீளத்தில் அளித்த அச்செடிகள் இன்று ஆறடி உய்ரம் வளர்ந்திருப்பதைப் பார்க்கும் போது இவை நாம் அளித்த செடிகள் தானா என்று நமக்கே ஐயம் உருவாகிறது. 

‘’காவிரி போற்றுதும்’’ முதலில் ஒரு கிராமத்தில் கணக்கெடுப்பு மேற்கொண்டு 20,000 மரக்கன்றுகளை அந்த கிராமத்துக்கு அளித்த பின் அடுத்து அதே பணியை பத்து கிராமங்களுக்கு 2,00,000 மரக்கன்றுகள் என முன்னெடுப்பது எனத் திட்டமிடப்பட்டிருந்தது. அதுதான் நம் ஆரம்ப திட்டம். அதன் பின்னர் சூழலைப் பொறுத்து பல்வேறு பணிகள் இணைந்தன. பல்வேறு தளங்களில் செயல்கள் விரிவாயின. எனினும் என்னுடைய மனம் மரக்கன்றுகள் விஷயத்தில் மையம் கொண்டு சுழன்றவாறு இருந்தது. 2,00,000 மரக்கன்றுகளை ஒரு நர்சரி அமைத்து சொந்தமாக உண்டாக்க குறைந்தபட்சமாகக் கூட கணிசமான தொகை தேவைப்படும். என்ன செய்வதென்ற யோசனையிலேயே நாட்கள் சென்றது. 

நான் எந்த ஒரு விஷயம் மனதில் இருந்தாலும் அதனைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பேன். நாள்கணக்காக யோசித்துக் கொண்டிருக்கும் போது அந்த விஷயம் குறித்து ஒரு புதிய யோசனை உண்டாகும். அது மிக எளிமையான ஒன்றாக இருக்கும். இது என் அனுபவம். இரண்டு நாட்களுக்கு முன் அந்த கிராமத்துக்குச் சென்று ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு யோசனை உண்டானது. 

நான் முன்னர் திட்டமிட்டது 2,00,000 மரக்கன்றுகளை உண்டாக்க 2,00,000 நர்சரி சேப்ளிங் பைகள் தேவை என. அவை இருந்தால் தான் அவற்றில் மண்ணும் உரமும் இட்டு விதையிட்டு மரக்கன்றுகளை உண்டாக்க முடியும் என்பதால் 2,00,000 நர்சரி சேப்ளிங் பைகளை கொள்முதல் செய்வதுதான் முதல் பணியாக இருந்தது. அதற்கான நிதி இருப்பு இல்லை என்பதால் பணி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. 

மின்னல் தெறிப்பென ஒரு எண்ணம் உண்டானது. ஒரு நிலத்தில் 80 அடி நீளமும் 80 அடி அகலமும் கொண்ட ஒரு பரப்பை எடுத்துக் கொள்ள வேண்டியது. அதனைச் சுற்றி 15 செமீ உயரத்துக்கு செங்கல்லால் கட்டு வேலை போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது 80 அடி நீளம் 80 அடி அகலம் 15 செமீ உயரம் கொண்ட இடம் தயாராகி விடும். அதில் சாண எருவையும் செம்மண்ணையும் மணலையும் கலந்து நிரப்பிக் கொள்ள வேண்டும். இந்த பரப்பின் மேல் 7 அடி உயரத்தில் படுதா கூட போட்டுக் கொள்ளலாம். வெயில் உக்கிரமாக விதைகள் மேல் படாமல் இருக்க. 

50,000 நெல்லி விதைகள், 50,000 கொய்யா விதைகள், 50,000 பலா விதைகள், 50,000 நாவல் விதைகளை நாம் தயார் செய்திருக்கும் பரப்பில் விதைக்க வேண்டும். இவை முளைத்து 10 செமீ உய்ரம் அளவுக்கு வர ஐம்பது நாட்கள் ஆகும். காலை மாலை சீராக தண்ணீர் தெளித்து பராமரித்தால் போதும். 

இந்த ஐம்பது நாட்களில் 10 கிராமங்களில் விவசாயிகளுக்கு யாருக்கு எவ்வளவு தேவை என்று கணக்கெடுத்து விடலாம். காகிதப் பைகளில் நாற்றங்காலிலிருந்து எடுத்து மரக்கன்றுகளை வைத்து சில மணி நேரங்களில் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி விடலாம். விவசாயிகள் காகிதப் பையுடனே கூட மரக்கன்றுகளை நடவு செய்ய முடியும். காகிதம் மக்கக் கூடிய பொருள். 

நம் கிராமங்களின் குழந்தைகள் உணவில் பழங்கள் இடம் பெற வேண்டும் என்பதால் நெல்லி, கொய்யா, பலா, நாவல் என நான்கு பழ மரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். 

‘’காவிரி போற்றுதும்’’ நண்பர்களான இயற்கை விவசாயம் செய்யும் நண்பர்களுக்கும் இந்திய அரசின் விவசாய நிறுவனங்களில் ஆராய்ச்சிப் பணியில் இருக்கும் நண்பர்களுக்கும் இந்த யோசனையை அனுப்பி அவர்கள் அபிப்ராயம் கேட்டுள்ளேன். 

வாசகர்களுக்கு இந்த யோசனையை செழுமைப்படுத்த ஆலோசனைகள் இருந்தால் ulagelam(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  

Tuesday 29 March 2022

தீர்வுகளின் பாதை

நான் காந்திய வழிமுறைகளில் நம்பிக்கை உள்ளவன். காந்திய வழிமுறைகளில் பிரதானமான ஒன்று மனிதன் மீது மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்தல். அதனை அவர் இந்தியர்களின் ஆன்மீகத்திலிருந்து உருவாக்கிக் கொண்டார். இந்தியாவில் இந்தியத் தொன்மங்களில் அதற்கான முன்னுதாரணங்கள் அதிகமாகவே உள்ளன. இராமாயணத்தில் இராவணனிடம் தூதுவனாக அனுமனை அனுப்புகிறார் ஸ்ரீராமர். அதன் பின்னர் அங்கதனை அனுப்புகிறார். இராவணன் நிராயுதபாணியாக இருக்கும் போதும் சிந்திக்க ஒருநாள் அவகாசம் அளிக்கிறார். மகாபாரதத்தில் பாண்டவர்கள் சஞ்சயன் என்ற அந்தணரைத் தூதுவராக அனுப்புகிறார்கள். அதன் பின்னர் ஸ்ரீகிருஷ்ணன் தானே தூதனாகச் செல்கிறார். கௌரவர் தரப்புடன் தொடர்ந்து உரையாடுகிறார். மகாத்மா காந்தி இவற்றிலிருந்து எதிரிக்கு சிந்திக்க அவகாசமும் வாய்ப்பும் அளிப்பதை தனது வழக்கமாகக் கொண்டார். எதிர்த்தரப்புடன் அவர் தொடர்ந்து உரையாற்றினார். எதிர்த்தரப்பு என்பது ஒற்றைப்படையானது அல்ல என்பதையும் அதில் பலர் பலவித மனோபாவத்துடன் இருக்கக் கூடும் என்பதையும் அங்கும் நீதி அறிந்தவர்கள் இருப்பார்கள் என்பதையும் காந்தி உணர்ந்திருந்தார். அவர்களிடம் தன் தரப்பைத் தொடர்ந்து முன்வைத்த வண்ணம் காந்தி இருந்தார்.  

நான் அரசாங்கம் என்னும் அமைப்பின் மீது எதிர்மறையான எண்ணம் கொண்டவன் அல்ல. அரசு சரியான விதத்தில் இயங்கினால் அதனால் சமூகம் பலன் பெறும் என நம்புபவன் நான். அரசாங்கத்தின் இயக்கம் என்பது பொது மக்களின் விழிப்புணர்வையும் கடமை உணர்வையும் முக்கியப் பகுதிகளாகக் கொண்டது என்னும் புரிதல் எனக்கு உண்டு. 

2014ம் ஆண்டு மத்திய அரசு பொது மக்கள் புகார் அளிக்க pgportal(dot)gov(dot)in என்ற இணையதளத்தை உருவாக்கியது. மத்திய அரசின் அரசுத் துறைகள் குறித்தும் மாநில அரசின் அரசுத் துறைகள் குறித்தும் பொது மக்களுக்கு புகார் ஏதும் இருப்பின் வீட்டில் இருந்தவாறே இந்த தளத்தில் புகாரைப் பதிவிடலாம். இந்த தளம் அந்த புகாரை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு அனுப்பும். புகாருக்கான தீர்வை அளிக்க முயலும். இன்ன தீர்வு நிகழ்ந்தது என்ற தகவலை 45 நாட்களுக்குள் புகார் அளித்தவரிடம் தெரிவிக்கும். புகார் அளித்தவர் தமது புகார் பெற்ற தீர்வில் தனக்கு திருப்தி இருக்கிறதா என்பதை அதில் தெரிவிக்க வேண்டும். திருப்தி என்றால் மட்டுமே அது முழுமை பெறும். திருப்தி இல்லை என்று தெரிவிக்கப்பட்டால் இன்னும் மேலான கவனம் அளிக்கப்படும். புகார் அளித்தவர் தனது அபிப்ராயத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு இருப்பது இந்த முறையில் ஒரு சாதகமான் அம்சம். 

இது ஒரு இணைய தளமாக உள்ளதால் பொதுமக்கள் எந்த விஷயங்களில் அதிகமாக புகார் அளிக்கிறார்கள் என்பதை தரவுகளின் அடிப்படையில் எளிதாக மத்திய அரசு அறிய முடியும். அதற்கான தடுப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட முடியும். எத்தனை சதவீத புகார்கள் புகார் செய்தவர்கள் திருப்தியடையும் விதத்தில் தீர்க்கப்பட்டுள்ளன என்பதையும் தரவுகளின் அடிப்படையில் அறிய முடியும். 

இந்த இணைய தளத்தில் புகார் அளிக்கப்படுகிறது என்றால் அதிகாரிகள் அந்த புகாருக்கு மிக அதிக கவனம் கொடுக்கிறார்கள் என்பது ஒரு நடைமுறை உண்மை. பொதுமக்களின் பல புகார்களுக்கு இந்த தளம் தீர்வளித்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். 

Sunday 27 March 2022

மிகப் பெரிய உடற்பயிற்சிக்கூடம்

இந்த உலகம் ஒரு மிகப் பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கே நாம் நம்மை வலிமை படைத்தவர்களாக்கிக் கொள்ளவே வந்திருக்கிறோம்.  
-சுவாமி விவேகானந்தர்

பதினைந்து நாட்களுக்கு முன்னால் பக்கத்து ஊர் ஒன்றில் ஒரு கால்பந்து போட்டி நடந்தது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் போட்டி. நண்பர்கள் அதனைக் காண வருமாறு அழைத்திருந்தனர் என்பதால் சென்றிருந்தேன். சிறுவர்கள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டது மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இந்திய மரபு குழந்தைகளை கிருஷ்ண சொரூபம் என்கிறது. கிருஷ்ணன் தன் நண்பர்களுடன் ஆடிய ஓயாத விளையாடலை நாம் இன்றும் கதைகளாக நம் சமூக நினைவில் வைத்திருக்கிறோம். ஒரு கிராமத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் கால்பந்து, ரிங் பால், வாலிபால், பேட்மிட்டன் என அவர்கள் விரும்பும் விளையாட்டுப் பொருட்களை அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் அந்த மைதானத்தில் கால்பந்து ஆடும் சிறுவர்களை ஆர்வத்துடன் கவனித்தேன். 

விளையாட்டு அவர்களை முழுமையாகத் தன்னுள் உள்ளிழுத்துக் கொள்கிறது. கூட்டுச் செயல்பாடு, கூர் மதி, அவதானம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவை விளையாட்டின் மூலம் உருவாகின்றன. உடல் வலிமை பெறுகிறது. உள்ளம் வலிமை பெறுகிறது. 

நேற்றும் இன்றும் இங்கே ஒரு கால்பந்து போட்டி ஏற்பாடாகி இருந்தது. நண்பர்கள் சில நாட்களுக்கு முன்னால் தகவல் சொன்னார்கள். பதின்மூன்று வயதுக்கு உட்பட்டவர்களின் போட்டி. முந்நூறு பேர் வரை கலந்து கொள்ளக் கூடும் என்று சொன்னார்கள். வெளியூர்களிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் சிறுவர்கள் வருவார்கள் என்று கூறினர். அந்த சிறுவர்களுக்கு இரண்டு நாட்களுக்கான உணவை வழங்க எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். ’’காவிரி போற்றுதும்’’ நண்பர்களுடன் பேசி அவர்களுடன் இணைந்து இந்த செயலை மேற்கொள்வதாக உறுதி அளித்தேன். 

மழைக்காலத்தில், ஒரு கிராமத்தின் குடிசைப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு ஆறு நாட்களுக்கு உணவளித்த அனுபவம் இருப்பதால் இந்த இரண்டு நாள் உணவளித்தலை எளிதில் ஒருங்கிணைக்க முடியும் என நம்பிக்கை இருந்தது. எந்த ஒரு விஷயத்திலும் இரண்டாவது அடியெடுப்பு என்பது முக்கியமானது. முதல் அடியெடுப்பின் அளவுக்கே முக்கியமானது. ஒரு விஷயம் நிலை பெற இது மிகவும் அவசியமானது. 

‘’காவிரி போற்றுதும்’’ நண்பர்கள் உற்சாகத்துடன் துணை நின்றனர். சமையலுக்குத் தேவையான வாடகைப் பாத்திரங்களுக்கான செலவை ஒருவர் ஏற்றார். சமையல் ஆட்கள் ஊதியத்தை ஒருவர் ஏற்றுக் கொண்டார். இரண்டு நாளுக்கும் தேவையான காய்கறிகளை ஒருவர் வாங்கித் தந்தார். எரிவாயு உருளையை ஒரு நண்பர் வழங்கினார். மளிகைப் பொருட்களின் செலவை ஒரு அலுவலகத்தில் பணி புரியும் நான்கு பொறியாளர்கள் இணைந்து ஏற்றுக் கொண்டனர்.  

மைதானத்தில் இருந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், வீரர்களின் பெற்றோர், பார்வையாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இந்திய மரபில் உணவை அளிப்பவரினும் உணவை ஏற்பவரே முக்கியமானவர். சுவாமி சித்பவானந்தர் ‘’கல்வி’’ என்றொரு நூலை இயற்றியுள்ளார். அதில் ஒரு ஊரில் உள்ள பள்ளியில் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள் எனில் அந்த மாணவர்களுக்கு உணவு அளிக்கும் கடமை அந்த ஊரைச் சேர்ந்தது என்கிறார். மேலும் அந்த மாணவர்களின் உணவுக்கான தானியங்கள் அந்த ஊரால் அளிக்கப்பட வேண்டும் என்றும் அந்த தானியங்களைக் கொண்டு அந்த பள்ளியின் மாணவர்களே உணவைத் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். பாத்திரங்களைத் தூய்மையுடன் பேணல், சமையல் செய்தல், பரிமாறுதல், சமைத்த சாப்பிட்ட இடத்தை தூய்மையுடன் வைத்திருத்தல் என அனைத்து செயல்களையும் தெய்வ வழிபாடென மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். சுவாமிஜி சொல்வது மேலான ஒரு நிலை. மேலான ஒரு உணர்வு. 

நூற்றுக் கணக்கான மாணவர்கள் கால்பந்து போட்டியில் உற்சாகமாக ஈடுபட்டதும் ஆர்வமாக உணவருந்தியதும் பெரும் நிறைவைத் தந்தது. 

அந்த குழந்தைகளின் மகிழ்ச்சி நிறைந்த முகங்கள் வாழ்க்கை மேல் மேலும் நம்பிக்கையைக் கொடுத்தன. 

Friday 25 March 2022

வான் புவி

 இன்று காலை
ஒரு குழந்தையைச் சந்தித்தேன்
சொற்களால் சில நிமிடங்கள் உரையாடினோம்
அக்குழந்தையின் முகத்தின் ஒளிர்வைக் கண்ட போது
ஒவ்வொரு பாராட்டுக்கும் 
முகத்தில் பரவும் மகிழ்ச்சி ரேகைகளைக் கண்ட போது
இனிமையான
சங்கீதமென ஒலித்த 
அக்குழந்தையின் மொழி உச்சரிப்புகளைக் கேட்ட போது
இந்த உலகம் மலர்களால் ஆனது என்றும்
இந்த உலகம் ஒரு மலர் என்றும்
தோன்றியது
அகம் கரையும் அனுபவங்களில்
மலரும் மலர்
உருவம் கொண்டதா
அருவம் ஆனதா

Tuesday 22 March 2022

பணிதல்

கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். அதனால் எனது வாழ்க்கைமுறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நான் சிந்திக்கும் விதத்தில் - செயலாற்றும் விதத்தில் - மனிதர்களைப் புரிந்து கொள்ளும் விதத்தில் என நிறைய மாற்றங்கள் அகவயமாகவும் புறவயமாகவும் நிகழ்ந்துள்ளன. எந்த விஷயத்தையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு விரிவான பின்புலத்தில் வைத்து சிந்தித்தல், புரிந்து கொள்ளும் திறனில் கூர்மையாயிருத்தல், உறுதியான நிதானமான அணுகுமுறையில் செயல்களை ஆற்றுதல், எந்நிலையிலும் சோர்வடையாமல் இருத்தல் ஆகிய தன்மைகளை எனது  இயங்குமுறையாகக் கொண்டிருக்கிறேன். 

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் நானாவித விஷயங்கள் குறித்தும் சிந்தித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறேன். இயல்பாகவே படைப்பூக்கம் கொண்ட மனம் என்னுடையது. கற்பனை எனது அறிதல் முறையாக இருந்திருக்கிறது. கற்பனை கொண்ட மனம் என்னை நூல்களை வாசிக்கச் செய்தது. ஓர் இலக்கிய வாசகன் என்னும் எண்ணமே பெரும் பெருமிதத்தை அளித்தது. மிக அதிக எண்ணிக்கை கொண்ட நூல்கள் என்று கூறமுடியா விட்டாலும் கணிசமான எண்ணிக்கையில் நூல்களை வாசித்திருக்கிறேன். 

அதன் பின்னர் ஓர் கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினேன். எனது நலம் விரும்பிகள் மிகவும் விசனப்பட்டார்கள். உணர்ச்சிகரமான மனமும் கற்பனையில் மிதக்கும் குணமும் கொண்ட எனக்கு திட்டவட்டமான தன்மை கொண்ட வணிகம் சரி வருமா என்ற ஐயம் அவர்களுக்கு இருந்தது. ஓர் செயலை நிகழ்த்த இடம், பொருள், ஏவல் என்ற மூன்று விஷயங்கள் கவனம் கொள்ளப்பட வேண்டும் . இந்த மூன்றும் சரிசமமான இடத்தில் உறுப்புகளாக உள்ள துறை கட்டிடக் கட்டுமானம். துறை குறித்தும் துறையின் இயங்குமுறை குறித்தும் எனக்கு சரியான புரிதல் ஏற்பட்டது என்னுடைய நல்லூழ் என்றே சொல்ல வேண்டும். என் தொழில் சார்ந்த பணிகள் குறித்து எனக்கு திருப்தி இருக்கிறது. என் தொழில் எனக்கு முழுமையான சுதந்திரத்தையும் அளிக்கிறது. 

இந்திய நிலத்தில் சில மோட்டார் சைக்கிள் பயணங்களை மேற்கொண்டேன். அந்த பயணம் என்னை எழுத்தை நோக்கி இட்டுச் சென்றது. பயணக் கட்டுரை எனது முதல் எழுத்து. அதன் பின் கவிதை, சிறுகதை, கட்டுரை, கம்ப ராமாயண ரசனைத் தொடர் என தொடர்ந்து எழுதினேன். வலைப்பூ துவங்கி தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எழுதி வருகிறேன். 

அதன் பின்னர் சமூகப் பணிகள் சிலவற்றில் ஈடுபட்டேன். உலகம் ஒரு குடும்பம் என்கிறது இந்திய மரபு. உலகின் அனைத்து உயிர்களும் நலம் பெற்று வாழ வேண்டும் என்பதே இந்திய மரபின் பிரார்த்தனையாக இருக்கிறது. நம் மரபும் நம் மரபின் ஆசிரியர்களும் காட்டிய வழியில் எனது சமூகப் பணிகளை வடிவமைத்துக் கொள்கிறேன். இதில் என் பங்களிப்பு என்பது எதுவுமே இல்லை. நான் வெறும் கருவி மட்டுமே. 

இன்று காலை செய்ய வேண்டும் என யோசித்து நிலுவையில் வைத்திருக்கும் பணிகளை பட்டியலிட்டேன். பதினெட்டு பணிகள் நிலுவையில் இருந்தன. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிறு பணியிலிருந்து பெரும் பணிகள் வரை. இந்த பணிகள் உண்மையிலேயே அளவில் பெரியவை. ஒரு மனிதனின் செயல் திறனுடன் ஒப்பிடுகையில் இந்த பணிகள் பலமடங்கு பெரியவவை. இருப்பினும் இவற்றை ஆற்றும் போது ஒருநாள் கூட நான் சோர்ந்தது இல்லை. ஒருநாள் கூட நான் பாரமாக உணர்ந்தது இல்லை. ஏனென்றால் இந்த பணிகளின் மூலம் பலர் என்னுடன் உணர்வுபூர்வமாக இணைந்துள்ளார்கள். பலருடன் நான் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறேன். அந்த இணைப்பு அளிக்கும் சக்தியே என்னை - எங்களை - நம்மைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.    

’’மை நஹி - தூ ஹி’’ என ஒரு வாசகம். ‘’நான் அல்ல - எல்லாம் நீயே’’ என்பது அதன் பொருள்.  

Saturday 19 March 2022

''காவிரி போற்றுதும்’’ - மீண்டும் செயல் களத்தில்

மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு என்ற பேரூராட்சியின் ஒரு பகுதியாக இலுப்பைப்பட்டு என்ற சிறு கிராமம் உள்ளது. வட காவேரியான கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் அமைந்திருக்கும் கிராமம். அம்மை அமுதகரவல்லியாகவும் அப்பன் நீலகண்டனாகவும் உள்ள சிவத்தலம். சுந்தர மூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலம். பஞ்ச பாண்டவர்கள் இங்கே வந்து சிவனை வழிபட்டதாக ஐதீகம். ஆலயத்தினுள் விருட்சி, நந்தியாவட்டை ஆகிய பூசனைக்கு உகந்த மலர்களால் ஆன பூத்துக் குலுங்கும் ஓர் எழிலுறு நந்தவனம் உள்ளது. 

சில வாரங்களுக்கு முன், எனது நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு யோசனையை முன்வைத்தார். இந்திய மரபில், ஒவ்வொருவருக்கும் ஜென்ம நட்சத்திரம் உண்டு. அந்த நட்சத்திரத்துக்குரிய மரக்கன்றுகள் என குறிப்பிட்ட சில மரக்கன்றுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

வானத்தை சிவ சொரூபமாகவும் புவியை சக்தி சொரூபமாகவும் உருவகப்படுத்திக் கொள்கிறது நம் மரபு. உயிர்க்குலங்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையும் வானுக்கும் மண்ணுக்குமான அன்பாலும் பிணைப்பாலுமே நிகழ்கிறது என்பது இந்தியர்களின் புரிதல். 

இந்திய வானியல் அடையாளப்படுத்தும் விண்மீன் திரள்கள் 27. அவற்றுக்கு உரியதென வகுக்கப்பட்டுள்ள மரங்களின் எண்ணிக்கையும் அதுவே. அந்த மரங்கள் அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. நமது பாரம்பர்ய மருத்துவத்தில் உணவாகவும் மருந்தாகவும் பயன்படக் கூடியவை. 

ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திரத்துக்குரிய மரக்கன்றுகளை அவரவர் நடுவதும் அவற்றுக்கு நீர் வார்ப்பதும் அவற்றின் நிழலில் சில நிமிடங்கள் இருப்பதும் பலவிதமான நன்மைகளை அளிக்க வல்லவை என்பது நம் முன்னோரின் நம்பிக்கை. ஒரு கிராமத்தில் உள்ள மக்களுக்கு இந்த மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகளை அளிப்பது ஓர் நற்செயலாக இருக்கும் என நண்பர் எண்ணினார். அதனை என்னிடம் தெரிவித்தார். அது மிகவும் பயனுள்ள யோசனை என்று எனக்குப் பட்டது. ஏதேனும் ஒரு கிராமத்தில் இதனை செயல்படுத்திப் பார்க்கலாம் என எண்ணினேன். 

ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் இலுப்பைப்பட்டு என்ற கிராமத்தினைத் தேர்ந்தெடுத்தேன். ஊரின் பெயரில் இலுப்பை மரம் இருந்தது ஒரு காரணம். உயிர்களுக்கு மருத்துவனாக நீலகண்டன் விளங்குவதும் அன்னை பிறவாமை என்னும் அமுதளிக்கும் அமுதகரவல்லியாகவும் கோயில் கொண்டிருந்தது இன்னொரு காரணம். அந்த ஆலயத்தின் தல விருட்சம் இலுப்பை. அந்த ஊர் அதனால் தான் அந்த பெயர் பெற்றது. 

நண்பர் யோசனையைச் சொன்னவுடன் இந்த கிராமம் பொருத்தமாக இருக்கும் என்று யூகித்தேன். அந்த ஊரின் ஆலயத்துக்குச் சென்று எண்ணம் நல்விதமாய் செயலாக வேண்டும் என வேண்டிக் கொண்டேன். ஊர்க்காரர்கள் ஓரிருவரிடம் எண்ணத்தைச் சொன்னேன். அவர்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர். பின்னர் சிவ ராத்திரி தினத்தன்று அந்த ஊருக்குச் சென்று சிவாலயத்தில் சில மணி நேரங்கள் இருந்தேன். 

கடந்த வாரம், செய்ய உத்தேசித்துள்ள செயல் குறித்தும் 27 நட்சத்திர மரங்களின் மருத்துவ குணங்கள் குறித்தும் ஒரு பிரசுரத்தைத் தயார் செய்து கொண்டேன். பொதுவாக நான் புதிய பணிகளை ஞாயிற்றுக்கிழமை அன்று துவக்குவது வழக்கம். ஆதவனின் தினம் என்பதால். நாளை அங்கே பணி துவக்குகிறேன். 

வீடு வீடாகச் செல்ல வேண்டும். மரங்களின் மருத்துவ குணங்களைச் சொல்ல வேண்டும். மரம் நடும் போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். ( எனது அனுபவத்தில், உண்மையில் இந்த மரம் நடும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது. விவசாயிகள் பயிர்களுக்கு மட்டுமே பார்த்து பார்த்து தண்ணீர் வைக்க வேண்டும் ; மரங்கள் தானாக வளரும் என்ற மனப்பதிவில் உள்ளனர். குறைந்த பட்சம் இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது மரங்களுக்கு தண்ணீர் விடுவது நல்லது. ). அந்த கிராமத்தில் 300 வீடுகள் இருக்கக் கூடும். ஒரு நாளைக்கு 40 குடும்பத்தினரைச் சந்தித்தால் ஒரு வாரத்தில் கணக்கெடுப்பு நிறைவு பெறும்.  

இன்று காலை அந்த கிராமத்துக்குச் சென்று சிலரைச் சந்தித்தேன். நாளை வருவதாய் சொல்லி விட்டு வந்தேன். அப்போது அந்த ஊரின் பொது இடம் ஒன்றை என்னிடம் காட்டினர். அது 10,000 சதுர அடி கொண்ட இடம். முறையான வேலியிட்டிருந்தனர். அதில் தென்னை மரங்கள் நட விருப்பம் கொண்டிருப்பதாகக் கூறினர். ஒரு தென்னை மரத்துக்கும் இன்னொரு தென்னை மரத்துக்கும் இடையே இருபது அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். அவ்வாறெனில் 10,000 சதுர அடியில் 25 தென்னை மரங்கள் நட முடியும். 25 தென்னம்பிள்ளைகளை நான் வழங்குகிறேன் என்று கூறினேன். அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. 

கேரள மாநிலத்தில் ஒரு வழக்கமுண்டு. தென்னம்பிள்ளைகளை ஓர் இடத்திலோ அல்லது வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ வைத்து அந்த தென்னம்பிள்ளைகளின் முன்னிலையில் இராமாயணம் 7 நாட்கள் சொல்வார்கள். (சப்தாஹம்) . பின்னர் அந்த தென்னம்பிள்ளைகளை நடுவார்கள். அதே போலக் கூட ஒரு ஏற்பாட்டை இங்கே செய்யலாம் என நினைத்தேன். 

கணக்கெடுப்பு  நிறைவு பெறும் போதுதான், 27 நட்சத்திர வகையில் ஒவ்வொரு வகையிலும் எத்தனை தேவை என்பது தெரியவரும். அதன் பின்னர், அவற்றை ஏற்பாடு செய்வது எவ்வாறு என்று யோசிக்க வேண்டும். கணக்கெடுப்பு உற்சாகமான பணி. பலரைச் சந்திக்க முடியும். ஆர்வமாக வினா எழுப்புவார்கள். ஊக்கம் அளிப்பார்கள். பணியில் துணையிருப்போம் என உறுதி கொடுப்பார்கள். அவர்களில் ஒருவனாக உணர்வுபூர்வமாக ஏற்றுக் கொள்வார்கள். அந்த மக்களின் அன்பே வாழ்க்கையில் நான் பெற்ற பேறு. 

Thursday 17 March 2022

அனாயாசம் - வாசகர் கடிதம்

அன்புள்ள பிரபு,

கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.கனிகளில் நெல்லிக்கனி சிறப்பானது.சித்தப்பாவும் சிறப்பான மனிதர்;அரிய மனிதர் ;அதியமான் அவ்வைப்பாட்டிக்கு அருளிய நெல்லிக்கனியை ஒத்தவர்; வாழ்வுக்கும் நிழல் தரும் நிழலாக அனைவருக்கும் திகழ்ந்தவர்.


கதை நீண்ட நாள் நினைவில் நிற்கும்

அன்புடன்,
ராஜ்

Wednesday 16 March 2022

உறுதி ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் நாளை சென்னை கிளம்ப வேண்டும். காலை 5 மணிக்கு ஊரில் இருப்பார். இரவு 10 மணிக்கு ஊருக்கு வந்து விடுவார். 99 சதவீதத்துக்கும் அதிகமான பயணங்களை இவ்வாறு தான் திட்டமிடுவார் என்றாலும் ஊருக்குப் போகிறோம் என்றால் ஒரு பரபரப்பு  அவரைத் தொற்றிக் கொண்டு விடும். முதல் நாளிலிருந்தே அங்கும் இங்கும் செல்வார். வருவார். கிளம்பும் வரை நிச்சயம் இல்லையே என நினைப்பார்.  காலை உணவு எங்கே மதிய உணவு எங்கே போகும் வேலை நல்லபடியாக நடக்க வேண்டுமே என பலவிதமாக யோசிப்பார். பேருந்து ரயில் கார் என எவ்விதம் பயணித்தாலும் கிட்டத்தட்ட அதே யோசனை தான். 

அமைப்பாளர் இன்று சென்னையில் இருக்கும் பயிற்சி நிறுவனத்துக்கு ஃபோன் செய்தார். 

‘’வணக்கங்க’’ என்று சொல்லி விட்டு தனது வழமையான பாணியான ஊர்ப்பெயரை முதலில் சொல்லி தன் பெயரை பின்னர் சொல்லி ‘’பேசறன்’’ என்றார். 

சென்னை வடக்கில் கும்மிடிப்பூண்டி தெற்கில் வண்டலூர் மேற்கில் பூந்தமல்லி மட்டும் சென்றிருப்போரை மட்டுமே பாதிக்கு பாதிக்கு வாசிகளாகக் கொண்டிருக்கும் பிரதேசம். 

அமைப்பாளரின் அழைப்புக்கு பதில் சொன்ன பெண்மணி அமைப்பாளரின் ஊர்ப்பெயரை முதன் முதலாகக் கேள்விப்படுகிறார் என்பது அவர் சில வினாடிகள் யோசித்து மறுசொல் பேசியதிலிருந்து அமைப்பாளர் புரிந்து கொண்டார். 

‘’என்னோட ஃபிரண்டோட சன் சிவில் என்ஜினியரிங் படிச்சிருக்கான். அவனை உங்க இன்ஸ்டிடியூட்ல சேக்கணும். ‘’

‘’நல்ல விஷயம் ‘’ என்று அபிப்ராயப்பட்டார் அந்த பெண்மணி. 

அந்த பெண்மணி ஐப்பசி மழை போல விபரங்களைக் கொட்டினார். 

‘’ஓ.கே. ஓ.கே. ஸ்டூடண்ட்டோட அப்பாவும் நாளைக்குக் கூட வரார். அவர்ட்ட இந்த விஷயங்களைச் சொல்லிக்கங்க’’

‘’ஸ்டூடண்ட் செல் நம்பர் சொல்ல முடியுமா?’’

‘’என்கிட்ட ஆர்டினரி ஜி.எஸ். எம் ஃபோன் தான் இருக்கு. இந்த கால் -ஐ கட் பண்ணிட்டு நம்பர் பாத்து சொல்லட்டுமா?’’

‘’இல்ல சார் . அது முடியாது. நீங்க அடுத்த கால் பண்ணா கால் எனக்கு வரும்னு சொல்ல முடியாது. ‘’

விஞ்ஞானம் என நினைத்துக் கொண்டார் அமைப்பாளர். 

‘’ஸ்டூடண்ட்டோட அப்பா நம்பர் எனக்கு பை ஹார்ட்டா தெரியும். அதச் சொல்லட்டுமா?’’

‘’ஓ.கே சொல்லுங்க’’

அமைப்பாளர் எண்ணை சொல்லி விட்டு ‘’என்னோட தம்பி உங்க இன்ஸ்டிடியூட்ல படிச்சான். இப்ப ஸ்டேட் பேங்க்ல மேனேஜரா இருக்கான்.’’

‘’ஓ அப்படியா. அவர் பேரு என்ன? ‘’

‘’அதாவது தம்பின்னா ‘’ஹீ இஸ் மோர் தென் எ பிரதர் ; மோர் தென் எ ஃபிரண்ட்’’ என்று தனது நண்பனை சகோதரனை நினைத்து அந்த கணத்திலும் நெகிழ்ந்தார். என்றாலும் பேரைச் சொல்லவில்லை. ‘’அவன் இப்ப மைசூர்ல மேனேஜரா இருக்கான்’’.

பெண்மணி அமைப்பாளர் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். 

‘’எனக்கு இன்னொரு தம்பி இருக்கான். அதாவது’’ என்றார் அமைப்பாளர். 

‘’மோர் தென் எ பிரதர்; மோர் தென் எ ஃபிரண்ட்’’ என்றார் அந்த பெண்மணி. 

‘’எக்ஸாக்ட்லி. அவன் சென்னைல ஸ்டேட் பேங்க்ல மேனேஜரா இருக்கான்’’

‘’உங்க சென்னை ஃபிரண்ட் அதாவது பிரதரை நாளைக்கு அட்மிஷன் அப்ப வரச் சொல்லுங்களேன்’’

‘’ஃபினான்ஷியல் இயர் எண்டிங் டைம். இப்ப அவன் லீவு போட முடியாது.’’

’’நீங்க நாளைக்கு எத்தனை மணிக்கு இன்ஸ்டிடியூட் வருவீங்க?’’

‘’இங்க ஊர்ல காலைல 5 மணிக்கு கிளம்பறோம். கார்ல வரோம். 11 மணிக்கு வந்துடுவோம்’’

‘’வெல்கம். உங்க அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிக்கிறோம்’’ என்றார் பெண்மணி. 

பணி செய்து கிடத்தல் ( நகைச்சுவைக் கட்டுரை)

’’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளர் காலையில் எழுந்ததும் அவர் அன்று செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்று யோசிக்கிறார். அவர் செய்ய வேண்டிய பணிகளைக் காட்டிலும் மிச்சம் வைத்திருக்கும் பணிகள் அதிகம் இருப்பது அவருக்குத் திகைப்பைத் தருகிறது.  

இன்று காலை ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு சலூனுக்கு ஏழு நூல்கள் கொண்ட தொகுப்பை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அமைப்பாளருக்கு சலூன்காரரின் முகம் நினைவில்லை. அங்கே சென்றால் ஞாபகம் வரக்கூடும்! பத்து நாளாக சலூன்காரர் அமைப்பாளரிடம் கூடுதலாக ஒரு செட் புத்தகம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அமைப்பாளர், ‘’அண்ணன் ! பலவிதமான வேலைல இருக்கன் அண்ணன். கோச்சுக்காதீங்க. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை ஞாபகப்படுத்துங்க’’ என்று சொல்லியிருந்தார். சலூன்காரர் பதினைந்து நாளில் மூன்று தடவை ஞாபகப்படுத்தி விட்டார். அமைப்பாளர் கையில் உபரியாக சில செட் புத்தகங்கள் உள்ளன. ஆனால் அவருடைய பிரச்சனை அதில்லை. சலூன்காரர் , ‘’சார் ! நீல கலர் பேக் டிராப்ல சுவாமி விவேகானந்தர் ஃபோட்டோ கொடுத்தீங்கல்ல. அத ஒரு கஸ்டமர் எனக்கு வேணும்னு கேட்டார். கொடுத்திட்டன். இப்ப எனக்கு ஒன்னு வேணும் சார்’’ என்றார். அமைப்பாளருக்கு மக்கள் சுவாமிஜி மேல் அவ்வளவு பிரியமாக இருப்பது சந்தோஷம் தான் என்றாலும் இப்போது அவர் கையிருப்பில் ஃபோட்டோ இல்லை. வேலை முழுதாக முடியாது. பெண்டிங் இருக்கும். என்ன செய்வது என்று யோசித்து எந்த முடிவும் எடுக்காமல் பத்து நாளாக இருந்து விட்டார். அடுத்த ஃபோன் கால் வருவதற்குள் சலூன் கடைக்காரரை சந்திப்பது தான் உசிதம் என இன்று காலை புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். சலூன்காரருக்கு அமைப்பாளரைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். சலூன்காரர் ‘’சார் ! ஃபோட்டோ கேட்டிருந்தனே ‘’ என்றார். நாளைக்கு மெட்ராஸ் போறன். அப்ப அவசியம் வாங்கிட்டு வரேன். என்று அமைப்பாளர் வாக்குறுதி தந்து விட்டார். 

சலூனில் ஷேவ் செய்து கொள்ள அமர்ந்திருந்தார் அமைப்பாளர். அப்போது ‘’ஹைனஸ்’’ என்ற இரு சக்கர வாகனத்துக்கு நாளிதழில் விளம்பரம் வந்திருந்தது. ஹோண்டா நிறுவனத்தின் வாகனம். அமைப்பாளர் ஹீரோ ஹோண்டா ஆதரவாளர். ஆனால் இப்போது அந்த கூட்டு நிறுவனம் ஹீரோ என்றும் ஹோண்டா என்றும் தனித்தனியாகி விட்டது. அமைப்பாளர் எலெக்ட்ரிக் வாகனத்துக்கு மாறிவிடலாமா என்று யோசிக்கிறார். ‘’பைமோ’’ என்று ஒரு வாகனம். அமைப்பாளருக்கு அந்த பெயர் பிடித்திருப்பதால் அதனை வாங்கலாம் என்று நினைக்கிறார். திடீரென இன்னும் சிக்கனமாக சைக்கிள் வாங்கி வைத்துக் கொண்டால் என்ன என்று எண்ணுகிறார். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் என்பது அமைப்பாளரின் எண்ணம். ஹைனஸ்ஸிலிருந்து சைக்கிளுக்கு பைமோ நெக்ஸான் மார்க்கமாக ஏன் தன் மனம் பயணிக்கிறது என்பதை அமைப்பாளரால் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று அமைப்பாளர் வழக்கம் போல் முடிவு செய்தார். 

மெட்ராஸ் போக வேண்டியிருப்பது ஒரு தனிக்கதை. ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. அமைப்பாளரின் நண்பர் ஒருவரின் மகன் சிவில் எஞ்சினியரிங் படித்து விட்டு வேலை கேட்டு அமைப்பாளரிடம் வந்தார். இளைஞர். வெயிலில் நிற்கும் வேலை வேண்டாம் என்ற முன்முடிவுடன் இருக்கிறார் அந்த இளைஞர். பங்குனி வெயிலில் பாடாய் கிடப்பவர் அமைப்பாளர். அவரிடம் ஒரு இளைஞர் வெயிலில் நிற்காமல் சிவில் எஞ்சினியரிங் துறையில் வேலை கேட்டால் அமைப்பாளருக்கு எப்படி இருந்திருக்கும் என்பது எவராலும் யூகிக்கத் தக்கதே. ‘’அங்கிள்! எனக்கு வெயில்ல நிக்கற சைட் ஒர்க் வேணாம். நான் ஆஃபிஸ்ல கம்ப்யூட்டர்ல டிராயிங் போடறன். எனக்கு அந்த வேலைதான் வேணும்’’. சென்னையில் இருக்கும் தன்னுடைய சகோதரன் என எண்ணும் அளவு நெருக்கம் கொண்ட நண்பனிடம் விஷயத்தைக் கொண்டு போனார் அமைப்பாளர். ‘’அண்ணன்! அந்த பையனை பேங்க் எக்ஸாம் எழுதச் சொல்லுங்க. அது தான் அவனுக்கு சரியா இருக்கும்’’. சென்னை நண்பன் சிவில் எஞ்சினியர் தான். மழைக்குக் கூட சிவில் சைட் பக்கம் ஒதுங்காமல் வங்கி அதிகாரி ஆகி விட்டான் என்பது அமைப்பாளருக்கு அப்போது தான் நினைவில் வந்தது. இளைஞனிடம் அதைச் சொன்னார் அமைப்பாளர். சென்னையில் ஒரு கோச்சிங் செண்டரில் சேர்ந்து படி என்று சொன்னார் அமைப்பாளர். ‘’அங்கிள்! என்னை கோச்சிங் செண்டரில் சேத்து விடுங்க.’’ இளைஞன் சொன்னான். ‘’பேரண்ட்ஸ் என்ன பிள்ளை வளக்கறாங்க. காலேஜ் முடிச்ச பையன் எல்.கே.ஜி ஸ்டூடண்ட் போல இருக்கானே’’ என அமைப்பாளர் எண்ணினார். ஆனால் அவரால் வெளியில் சொல்ல முடியாது. அமைப்பின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர் இளைஞனின் தந்தை. ‘’தம்பி! எனக்கு பலவிதமான ஒர்க்ஸ் இருக்கு. கார் எடுத்துக்கிட்டு காலைல 5 மணிக்கு இங்க கிளம்பறோம். பதினோரு மணிக்கு சென்னைல இருக்கோம். இன்ஸ்ட்டியூட் அட்மிஷனை ஒரு மணிக்குள்ள முடிக்கறோம். ‘’சங்கீதா’’ல லஞ்ச். நைட் 8 மணிக்கு ஊருக்கு வந்துடறோம். அப்பாவையும் கூட வரச் சொல்லு.’’ இளைஞனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அடுத்த நாளே புறப்பட வேண்டியிருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தன் மற்ற பணிகளைத் திட்டமிட்டார் அமைப்பாளர். அந்த வேலையை தள்ளி வைக்க ஒத்திப் போட எத்தனை சாத்தியம் இருக்கிறதோ அத்தனையையும் பயன்படுத்தினான் இளைஞன். கடைசியாக நாளை காலை 5 மணிக்கு கிளம்பலாம் எனச் சொல்லியிருக்கிறான். அதுவும் தள்ளிப் போகுமோ என்ற பீதி அமைப்பாளருக்கு இருக்கிறது. 

சென்னை போக வேண்டிய வேலை இருக்கிறது என்று தனது நண்பரிடம் இரண்டு நாட்கள் முன்னால் சொன்னார் அமைப்பாளர். ‘’பிரபு! விகடன் பப்ளிகேஷன்ஸ்ல ‘பொன்னியின் செல்வன்’ கிளாசிக் எடிஷன் போட்டிருக்காங்க. அத எனக்கு ஒரு செட் வாங்கிட்டு வந்துடுங்க. ‘’

அமைப்பாளருக்கு  கோவை செல்ல  வேண்டிய வேலை ஒன்று பெண்டிங் இருக்கிறது. திருச்சி செல்ல வேண்டிய வேலை ஒன்றும் பெண்டிங். 

இவற்றை யோசித்த போது செயல் புரியும் கிராமத்துக்கு போய் ஒரு வாரமாகிறதே ஃபோன் செய்யலாம் என்று ஃபோன் செய்தார். ‘’சார் ! என்ன சார் எங்க ஊருக்கே வர மாட்டீங்கறேங்க’’ . அமைப்பாளர் பரிதாபமாக , ‘’போன வாரம் வந்திருந்தேனே அண்ணன்’’ என்றார். கிராமவாசி, ‘’ஒரு வாரம் ஆயிடுச்சு . உங்களைப் பாக்க முடியலையே’’ என்று வருத்தப்பட்டார். 

Monday 14 March 2022

அனாயாசம்

 சமீபத்தில் எழுதிய சிறுகதை ‘’அனாயாசம்’’ இன்று சொல்வனம் இதழில் வெளியாகி உள்ளது. அதன் இணைப்பு : 


அனாயாசம்

Sunday 13 March 2022

ஷீரடி டயரி

நூல் : ஷீரடி டயரி . ஆசிரியர் : பாபா சாகேப் கபர்தே பதிப்பகம் : ஸ்ரீ சாயிபாபா சம்ஸ்தான் டிரஸ்ட், ஷீரடி. மொழிபெயர்ப்பு : சொக்கலிங்கம் சுப்பிரமணியன்

ஒரு ஞானி என்பவர் வெள்ளம் பெருக்கெடுத்தோடும் பெருநதியைப் போன்றவர். எளிய மனிதர்கள் கரையில் நின்று நதியைக் காண்பவர்களே. அவர்கள் உள்ளங்கைகளில் நீரள்ளி அருந்தி தங்கள் தாகத்தை தணித்துக் கொள்ளலாம். நதியில் நீராடி தூய்மையுறலாம். கோடானுகோடி மக்களுக்கு நதி அவ்வாறே அர்த்தமாகிறது. கோடானு கோடி மக்களால் நதி அவ்வாறே புரிந்து கொள்ளப்படுகிறது. 

மகாராஷ்ட்ராவின் முக்கியமான அரசியல் தலைவராகவும் ‘’லோகமான்ய’’ பால கங்காதர திலகரின் நம்பிக்கைக்குரிய சகாவாகவும் இருந்த திரு. கபர்தே அவர்கள் ஷீரடி சென்று சாயிபாபாவுடன் சில வாரங்கள் தங்கி இருக்கிறார். அப்போது அவர் எண்ணிய எண்ணங்களை உணர்ந்த அனுபவங்களை டைரிக் குறிப்புகளாக எழுதியுள்ளார். 

ஞானியின் வாழ்வு என்பது எளிய மனிதர்களால் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளக் கூடியது அல்ல. ஒரு மறைஞானியின் (Mystic) வாழ்வு என்பது மேலும் சூட்சுமமானது. 

கபர்டேவின் சொற்கள் வழியே வாசகன் அதனை உணர்கிறான். 

 

Friday 11 March 2022

கால்சியம்

இன்று இரவு ஒரு பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டியிருந்தது. பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். வேலைகளை முடித்து விட்டு வண்டியை மேலே ஏற்றி கதவைப் பூட்டி விட்டேன். அவ்வாறு செய்து விட்டால் மறுநாள் தான் மீண்டும் வெளியே செல்வேன். கறாரான விதி கிடையாது. ஒரு பழக்கம் அவ்வளவே. எனினும் இன்று விதிவிலக்காகக் கிளம்பினேன்.  

வீட்டிலிருந்து 100 மீட்டர் சென்றிருப்பேன். எனக்கு பரிச்சயமான ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தார். நான் கடந்து சென்று விட்டேன். ஒரு சில வினாடிகளில் அவர் கடைத்தெரு செல்ல கையில் வாகனம் இல்லாமல் நிற்கிராரோ என்ற எண்ணம் தோன்றியது. வண்டியைத் திருப்பிக் கொண்டு அவரிடம் சென்றேன். ‘’சார் ! பிளே கிரவுண்ட்க்கு எதிர இருக்கற ஜெராக்ஸ் கடைக்குப் போறன். நீங்க கடைத்தெரு போகணுமா? நான் டிராப் செய்யட்டுமா?’’என்று கேட்டேன். அவர் மகிழ்ச்சியுடன் ஏறிக் கொண்டார். 

‘’சார்! சாரி சார். நான் உங்களைப்  பாத்தன் ஆனா வாக்கிங் போறீங்கன்னு நினைச்சுக்கிட்டன். அதனால தான் தாண்டிப் போயிட்டன்.’’

‘’வாக்கிங் காலைல போறன் தம்பி. இன்னைக்கு ஏ.டி.எம் ல பணம் எடுக்கணும். அதனால தான் வந்தேன்.’’

அவரது மகன் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிகிறார். அவருடைய சௌக்கியத்தை விசாரித்தேன். 

நண்பர் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். 

‘’தம்பி! என்னோட முதுகுத் தண்டுவடத்தில லேசா ஒரு வலி இருக்கு தம்பி”

தண்டுவடம் ரொம்ப ‘’சென்சிடிவ்’’ என்றாலும் நான் மையமாக ‘’அப்படியா’’ என்றேன். அவர் ஆமோதித்து விட்டு அமைதியாக இருந்தார். நானும் எதுவும் பேசாமல் மௌனமாக யோசித்தேன். 

‘’உங்களுக்கு வலி எப்ப இருக்கு? நிற்கும் போது நடக்கும் போதா?’’

‘’இல்ல தம்பி! நாற்காலில ரொம்ப நேரம் ஒக்காந்திருந்து எழுந்திருக்கும் போது. தூங்கி எழுந்திருக்கும் போது’’

எனக்கு பிரச்சனை ரொம்ப பெரிதில்லை என்று தோன்றியது. 

‘’இது மேஜர் இல்ல. மைனர் இஸ்யூ தான். அதாவது, தண்டுவடத்தில ரத்த ஓட்ட்ம் ஒக்காந்திருக்கும் போதும் படுத்திருக்கும் போதும் கொஞ்சம் குறைவா இருக்கு. அத சீராக்கனும். தண்டுவடத்த இன்னும் கொஞ்சம் வலுவாக்கனும்.’’

‘’அதுக்கு என்ன செய்யணும் தம்பி’’

‘’தண்டுவடம் எலும்பு நரம்பு சதை ஜவ்வு எல்லாம் சேந்து இருக்கற ஒரு அமைப்பு. அது வலுவாகனும்னா உங்க உடம்புல கால்சியம் சத்து இன்னும் சேர்க்கணும்’’

‘’தம்பி அதுக்கு ஏதாவது மாத்திரை சொல்லுங்க . நான் சாப்பிடறன்.’’

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. 

‘’மருந்து நான் சொல்லக் கூடாது ஆனா எந்த எந்த உணவுல கால்சியம் அதிகம் இருக்குன்னு சொல்றன். அத சாப்பிடுங்க’’

‘’சரி தம்பி’’

‘’தினமும் முருங்கைக்கீரை சூப் குடிங்க. முருங்கைல கால்சியம் அதிகம். நெல்லிக்காய் சாப்பிடுங்க. சியவனப்பிரகாசம்னு ஒரு ஆயுர்வேத மருந்து இருக்கு. அதுல நெல்லிக்காய் தான் மெயின் சப்ஸ்டன்ஸ். காலைல வெறும் வயத்துல சாப்பிடணும். டேஸ்ட்டா இருக்கும். உங்களுக்கு சுகர் கம்ப்ளைண்ட் இல்லயே?’’

‘’இல்ல தம்பி’’

‘’அப்ப சரி. வெத்தல பாக்கு போடுவீங்களா?’’

‘’இல்ல தம்பி. அந்த கெட்ட பழக்கம் இல்ல’’

‘’வெத்தல பாக்கு போடறது கெட்ட பழக்கம் இல்ல. அதோட புகையிலை சேர்த்து போடறது தான் தப்பு. வெத்தலை பாக்கோட நாம சேக்கற சுண்ணாம்புல கால்சியம் அதிகம் இருக்கு. கால்சியம்னாலே சுண்ணாம்புதான். அதனால சொன்னேன்’’

’’நாளைக்கு காலைல உங்க வீட்டுக்கு வந்து நீங்க சொன்ன மருந்தை எழுதி வாங்கிக்கறன். அப்புறம் கடைல வாங்கி சாப்பிடறன்’’ என்றார். 

வித்துவான் தியாகராச செட்டியார்

 


நூல் : வித்துவான் தியாகராச செட்டியார் ஆசிரியர் : உ.வே.சாமிநாத ஐயர் பதிப்பகம் : டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை விலை : ரூ. 100

தமிழர் வரலாற்றில் உ.வே.சா அவர்களின் இடம் தனித்துவமானது. அவருடைய தமிழ்ப் பணிக்கு இணையாகவே அவரது ஆளுமையும் அவதானங்களும் தமிழ் வரலாற்றில் முக்கியமானவை. எந்த மொழியிலும் உரைநடை என்பது அந்த மொழியறிந்த பெருந்தளத்தை நோக்கிப் பேசுவது. அந்த வகையில் தமிழ் உரைநடை உருவாகி எழுந்த காலகட்டத்தில் அந்த எழுச்சிக்கான தனது பங்களிப்பை ஆற்றியவர்களில் முக்கியமான ஒருவராக உ.வே. சா இருந்துள்ளார். 

உ.வே.சா தன் வாழ்நாளில் முக்கியமானவர்களாக மூன்று பேரைக் கருதுகிறார். தனது தந்தை, தனது குருநாதர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் மற்றும் வித்துவான் தியாகராச செட்டியார். தனது சென்னை அகத்துக்கு வித்துவான் தியாகராச செட்டியாரின் நினைவாக ‘’தியாகராச விலாசம்’’ என்று பெயர் சூட்டியிருக்கிறார் என்பதிலிருந்தே அவருக்கு தியாகராசர் மேல் இருந்த அன்பு புலப்படும். 

வித்துவான் தியாகராச செட்டியார் லால்குடிக்கு அருகில் உள்ள பூவாளூரைச் சேர்ந்தவர். பூவாளூர் என்பது பூவாளியூர் என்பதன் திரிபு. வாளி என்ற சொல்லுக்கு அம்பு என்று பொருள். பூவாளி என்றால் மலர் அம்பு.  மன்மதன் சிவபெருமானை வணங்கிய தலம் ஆதலால் அந்த ஊர் பூவாளியூர் எனப்பட்டது என ஐதீகம். சிவனின் பெயர் திருமூலநாதன். காவிரிப்பூம்பட்டினத்தை கடல்கோள் கொண்ட போது அங்கிருந்த வணிகர்கள் நாடெங்கும் பரவுகிறார்கள். அந்த குழுக்களில் ஒன்று பூவாளியூரில் தங்கலாயிற்று. அவர்கள் பூவலூர் செட்டியார்கள் என பின்னாட்களில் அழைக்கப்படலாயினர். 

தியாகராஜருக்கு சிறு வயதிலிருந்தே தமிழில் ஆர்வம் இருக்கிறது. அவருடைய தந்தை சிறந்த வணிகர் . தனது சொத்தான பெருத்த அளவிலான விவசாய நிலத்தை நல்ல முறையில் விவசாயம் பார்த்து நல்ல பொருள் ஈட்டி வந்தார். தனது தந்தையிடம் தியாகராஜர் தமிழ் படிக்க தனக்கிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார். முதலில் சம்மதிக்காத தந்தை பின்னர் திருச்சியில் தன் சகோதரர் வீட்டில் தங்கி தியாகராஜரை தமிழ் படிக்கச் சொல்கிறார். தமிழ் பயிலச் செல்லும் போது ‘’தமிழுடன் தம்பி கடையில் இருந்து வியாபாரத்தையும் கற்றுக் கொள்’’ என்று அறிவுறுத்தி அனுப்புகிறார். 

இந்த சரிதத்தை வாசித்த போது உ.வே.சா வின் ‘’என் சரித்திரமும்’’ ‘’மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரமும்’’ என் நினைவில் வந்தன. இந்த இரண்டு நூல்களிலும் தமிழ் அறிஞர்கள் படும் பொருள் கஷ்டத்தின் சித்திரம் காணக் கிடைக்கும். தியாகராஜருக்கு நிலபுலன்கள் இருந்ததால் பொருள் கஷ்டம் இல்லாமல் இருக்கிறார். அவரே உ.வே.சா வை கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்த்து விடுகிறார். உ.வே.சா வாழ்வில் அது முக்கியமான நகர்வு. முக்கியமான முடிவு. 

ஒரு சிகிச்சைக்காக செட்டியார் சென்னை செல்ல நேர்கிறது. அப்போது சென்னையில் பேசப்படும் தமிழும் மொழி வழக்கும் அவருக்கு பேராச்சர்யம் தருவதை பலரிடம் சொல்கிறார். 

திருச்சி, கும்பகோணம், சென்னை ஆகிய ஊர்கள் குறித்த காட்சிகள் இன்று வாசிக்கும் போது வியப்பளிக்கின்றன. 

Wednesday 9 March 2022

காகம் - வாசகர் கடிதம்

 அன்பின் பிரபு,

காகம் வாசித்தேன்.

ஒரு நிமிஷம்  திக்பிரமை நிலைதான்.

அந்த சமையலுக்கு முத்தாய்ப்பா அதே குரல், திவாகர் எப்படி உணர்ந்திருப்பார்... இதெல்லாத்துக்கும் மேல அம்மா காகத்துக்கு வெச்ச சாப்பாடு.

20 வருடங்களுக்கு முன்னதாக (அதற்கும் மேலாகவும் இருக்கலாம்) விகடனில் 'காக்கை மனிதர்' என்று ஒரு கதை. ஒரு வயதான தம்பதிகள், தங்கள் மகனால் புறக்கணிக்கப்பட்டு ரொம்பவும் சிரமதசையில் வாழ்ந்து கொண்டிருப்பர். ஆனாலும் தினமும் வரும் ஒரு காக்கை ஜோடிக்கு சாதம் வைப்பர். (அந்தக் காகத்திற்கு 'மணி' எனப் பெயர்  வைத்து காலில் மணியெல்லாம் கட்டி வைத்திருப்பர்). ஒரு நாள் அந்த அப்பாவிற்கு நெஞ்சுவலி வந்து இறந்து விடுவார், அதிர்ச்சியில் அம்மாவும் இறந்துவிடுவார். அக்கம்பக்கத்தவர்கள் சிலபேர் அவர்களை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்கையில் அந்த காகங்கள் மெல்ல மெல்லப் பெருகி ஒரு கட்டத்தில் அந்த பிண ஊர்வலத்தில் சுற்றிலும் காக்கைகளாக இருக்கும் அதிசயத்தைக் காண அந்த தெருவே கூடி விடும். முன்னோர்களே கூடி அவர்களுக்கு காரியம் செய்ததாக ஒரு குரல் ஒலித்து (ஆசிரியர் குரல்) எல்லார் மனதும் நிறைந்திருக்கும்.

ஏனோ உங்கள் கதையை வாசித்த பின் இதுவும் நினைவில் சேர்ந்து கொண்டது.

பிரபு, கதைக்கு ரொம்ப நன்றி.

அன்புடன்
வெங்கட்ரமணன்

நானாவித அலுவல்கள்

பலவிதமான பணிகள் நிறைந்துள்ளன. 

’’காவிரி போற்றுதும்’’ பணிகள் தொடர்பாக நண்பர்கள் சிலரைச் சந்திக்க வெளியூர் செல்ல வேண்டியுள்ளது. 

இரண்டு கிராமங்களில் கணக்கெடுப்புப் பணியைத் துவக்க வேண்டும். உத்யோகம் தொடர்பான வேலைகள் பகல் நேரத்தில் இருப்பதால் கிராமங்களில் கணக்கெடுப்பை காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மேற்கொள்ள வேண்டும். பணி முடிந்து 9.30 மணி அளவில் வீடு திரும்பி உத்யோக விஷயங்களை வழக்கம் போல் மேற்கொள்ளலாம். 

கணக்கெடுப்பை முழு நேரமாக மேற்கொண்டால் - ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற கணக்கில் - முழு கிராமத்தையும் நிறைவு செய்ய பத்து நாட்கள் ஆகும். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் என மேற்கொண்டால் முப்பது நாட்கள் ஆகும். மெதுவாக முன்னேறிச் சென்றாலும் முன்னே சென்று கொண்டிருப்பது நலம் பயக்கும் ஒன்றே. 

நேற்று ஒரு சிறுகதை எழுதினேன். 

பலவிதமான பணிகளில் ஈடுபடுவது அகத்தில் உற்சாகத்தை நிரப்புகிறது.   

Monday 7 March 2022

இரவு பகல்

இரண்டு நாட்களுக்கு முன்னால், இரவு 10.15க்கு ஒரு நண்பர் அலைபேசியில் அழைத்தார். அவரது உறவினர் ஒருவர் பயணித்த காருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது எனத் தெரிவித்தார். ஊரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள இடத்தில் விபத்து. வண்டியில் பயணித்தவர்களுக்கு இங்கேயிருந்து ஒரு வாடகை வாகனம் ஏற்பாடு செய்து அனுப்பினோம். பின்னர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து தெரிவித்து விட்டு வாகனத்தை பட்டறைக்கு எடுத்துச் சென்றோம். கார் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்த பட்டறை. நள்ளிரவு 1 மணி அளவில் வாகனத்தை அங்கே விட்டு விட்டு உடனிருந்தவர்களை ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்தில் பயணித்து ஊர் வந்து சேருமாறு சொல்லி விட்டு நானும் நண்பரும் இரண்டு மோட்டார்சைக்கிள்களில் பயணித்து ஊர் வந்து சேர்ந்தோம். அப்போது காலை 4 மணி. சில மணி நேரம் படுத்து உறங்கி விட்டு எழுந்து குளித்துத் தயாராகி மீண்டும் விபத்து நிகழ்ந்த பகுதியின் காவல் நிலையம் சென்று மனு ரசீது , சான்று பெற்றுக் கொண்டு பட்டறைக்குச் சென்று வாகனக் காப்பீடு தொடர்புடைய வேலைகளை முடித்து விட்டு மாலை 6 மணிக்கு ஊர் திரும்பினோம். வாகனம் ஒரு வாரத்தில் தயாராகும் என்றார்கள். கிட்டத்தட்ட இருபது மணி நேரம் தொடர்ச்சியாக அலைந்து கொண்டே இருந்தோம். எவ்வளவு பரபரப்பிலும் மனதின் ஒரு பகுதி எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறது - மிக அமைதியாக.  

Thursday 3 March 2022

பதில் கடிதம்

தகவல் பெறும் உரிமைச் சட்டம் (2005) குடிமக்களையும் அரசாங்கத்தையும் இணைப்பதை மிக அற்புதமாகச் செய்கிறது. தகவல் அளிக்கும் அலுவலருக்கு தான் அளித்த தகவல்களின் மேல் பொறுப்பு உண்டு என்பதும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகவல் அளிக்கவில்லை என்றால் தகவல் கேட்டவருக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்பதும் அந்த சட்டத்தை உயிர்ப்பான ஒன்றாக ஆக்குகின்றன.  

தகவல் பெறும் உரிமைச் சட்டம் படி தகவல் பெற ரூ.10 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை வங்கி வரைவோலையாகவோ கருவூல சலானாகவோ நீதிமன்ற வில்லையாகவோ அல்லது இந்திய போஸ்டல் ஆர்டராகவோ செலுத்தலாம். வங்கி வரைவோலை எனில் வரைவோலை கமிஷன் ரூ.30லிருந்து ரூ.45 வரை ஆகும். இந்திய போஸ்டல் ஆர்டரின் கமிஷன் ஒரு ரூபாய் மட்டுமே. தபால் அலுவலகங்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதாலும் பரவலாகப் பரவியிருப்பதாலும் அதனைப் பெறுவது மற்ற முறைகளினும் ஒப்பீட்டளவில் எளிதானது. 

இந்த சட்டத்தின் படி தகவல்களைக் கோரும் போது நான் போஸ்டல் ஆர்டர்களைகளைப் பயன்படுத்துவதை விரும்புவேன். சமீபத்தில் ஒரு அஞ்சல் அலுவலகத்தில் ரூ.10 போஸ்டல் ஆர்டர் வாங்கச் சென்றேன். அங்கே இருப்பு இல்லை. தலைமை தபால் நிலையம் சென்று வாங்கினேன். 

ரூ.10 க்கான இந்திய போஸ்டல் ஆர்டர் எல்லா கிளை அஞ்சல் அலுவலகங்களிலும் இருப்பு இருப்பதை உறுதி செய்வது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு உதவிகரமானது எனத் தெரிவித்து ஊரின் அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு சில நாட்கள் முன்னால் ஒரு கடிதம் எழுதினேன். நேற்று அவரிடமிருந்து ஒரு பதில் கடிதம் பதிவுத் தபாலில் வந்தது.

ஊரின் அனைத்து அஞ்சல் அலுவலகங்களுக்கும் ரூ.10 இந்திய போஸ்டல் ஆர்டரை இருப்பு வைத்துக் கொள்ள குறிப்பு வழங்கப்பட்டுள்ளது என பதில் கடிதம் எழுதியிருந்தார். 

இவரைப்  போன்ற அதிகாரிகள் அரசாங்கம் என்பது நம்முடையது ; நமக்கானது என்ற உணர்வை பொதுமக்களிடம் உருவாக்குகிறார்கள். 

அவருக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் நேற்று அனுப்பினேன்.  

Wednesday 2 March 2022

விழிப்புணர்வு

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். ஐ டி துறையில் பணிபுரிபவர். Work from home முறையில் பணிபுரிவதால் தனது பூர்வீக கிராமத்தில் கடந்த பல மாதங்களாக இருக்க வேண்டிய சூழ்நிலை. சென்ற ஆண்டு எங்கள் அறிமுகம் ஏற்பட்டது. ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் குறித்து நான் அவரிடம் அவ்வப்போது கூறுவேன். அவருடைய குடும்ப சொத்தாக நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. நெல் பயிரிடுகின்றனர். அவரது தந்தை விவசாயத்தை இத்தனை நாட்கள் கவனித்து வந்தார். தொடர்ந்து வீட்டில் இருக்கும் காலசூழ்நிலையால் நண்பருக்கு இப்போது தான் விவசாயத்தின் வரவு செலவு கணக்குகளைப் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ‘’காவிரி போற்றுதும்’’ குறித்து நான் கூறும் விஷயங்களிலிருந்து அவருக்கு தனது பூர்வீக நிலத்தில் தேக்கு பயிரிட வேண்டும் என்ற ஆவல் உண்டானது. 

‘’காவிரி போற்றுதும்’’ நெல் வயல் வரப்புகளில் மட்டுமே தேக்கு பயிரிட விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கிறது. எனினும் நண்பர் தனக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்திலும் முழுமையாகத் தேக்கு பயிரிட விரும்பினார். அதற்காக வயலில் நெடுக கிழக்கு மேற்காக இரண்டு அடி மேட்டுப் பாத்தி அமைத்து அதில் தேக்கு நட வேண்டும் என்று சொன்னேன். 

இங்கே மரம் வளர்ப்பில் உண்மையான பிரச்சனை மரங்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் விட வேண்டும் என்ற விழிப்புணர்வு விவசாயிகளிடம் இல்லாமல் இருப்பதே. ஆறு மாதம் வரை ஓரளவு தண்ணீர் ஊற்றுவார்கள். அதன் பின்னர் தானாகவே வளர்ந்து விடும் என்று இருப்பார்கள். அலட்சியம் காரணமல்ல ; அவர்கள் அப்படித்தான் நம்பிக் கொண்டிருப்பார்கள். ஆறு மாதம் வரை தண்ணீர் ஊற்றி அதன் பின்னர் ஊற்றாமல் இருந்தாலும் மரம் வளரும் தான். ஆனால் அதன் முழு சாத்தியத்தையும் முழுத் திறனையும் எட்டி வளராது. 

நண்பரிடம் இது போல பல விஷயங்களை அன்றாடம் பேசிக் கொண்டிருப்பேன். அவற்றிலிருந்து அவர் பல விஷயங்களைக் கிரகித்துக் கொண்டார். என்னிடம் முழு நிலத்திலும் தேக்கு பயிரிட தனது விருப்பத்தைக் கூறினார். முதலில் ஒரு ஏக்கர் முயற்சி செய்து பாருங்கள் என்றேன். ஒன்றுக்கும் நான்குக்கும் ஏற்பாடுகள் ஒன்று தான் என்று கூறினார். தகவல் தொழில்நுட்பத்துறையில் பணி புரிவதால் விஷயங்களை தர்க்கபூர்வமாகப் புரிந்து கொண்டார். 

மற்றவர்களிடமும் இது குறித்து ஆலோசனை செய்யுங்கள் என்று சொன்னேன். சிலரிடம் கேட்டிருக்கிறார். ‘’தேக்கு மரம் வெட்டும் போது அரசு அனுமதி பெறுவதில் சிக்கல் இருக்குமா?’’ என்ற ஐயத்தை எழுப்பியிருக்கின்றனர். உங்களிடம் அவ்வாறு கூறியவர்கள் எத்தனை தேக்கு மரம் வெட்ட அனுமதி கேட்டிருக்கின்றனர் என்று கேளுங்கள் என்றேன். உண்மைக்கு மாறான ஒன்றை பலரும் உண்மை என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சிலர் தேக்குக்குப் பதிலாக ஐரோப்பாவில் அதிகமாக விற்பனை ஆகும் மரம் ஒன்றை பரிந்துரைத்திருக்கிறார்கள். என்னிடம் கேட்டார். ‘’கழுத்துல போடற செயின் சரியா பிளேஸ் ஆகியிருக்கான்னு கண்ணாடில பாத்து சரி செய்யலாம். ஆனா கைல போட்டிருக்க காப்பை கண்ணால பாத்தாலே போதும்’’ . ’’தேக்கு மரம் வளர்ந்ததும் உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருக்கறவங்களுக்கு உங்க தெருவில இருக்கறவங்களுக்கு அடுத்த தெருவில இருக்கறவங்களுக்கு பக்கத்து ஊர்க்காரங்களுக்குன்னு அதோட தேவை ரொம்ப அதிகமா இருக்கும். நல்ல டிமாண்ட் உண்டுங்கறதால விலையை நீங்களே முடிவு செய்யலாம்’’ என்று சொன்னேன். 

இருந்தாலும் நண்பர் மனதில் ஒரு சிறு சஞ்சலம் இருந்தவாறே இருந்தது. 

நேற்று நண்பர் தனது வயலை சர்வேயரை வைத்து அளந்தார். அப்போது அந்த ஊரில் உள்ள பெரும் பண்ணையார் ஒருவர் விஷயம் கேள்விப்பட்டு அங்கே வந்தார். அவரிடம் தேக்கா அல்லது ஐரோப்பிய மரமா எதைத் தேர்ந்தெடுப்பது என்று தனது சஞ்சலத்தைக் கூறியிருக்கிறார். அவர் சர்வ நிச்சயமாக , ‘’தேக்குதான் தம்பி’’ என்று கூறி விட்டார். ’’ஐரோப்பிய மரம் போட்டா விலையை வியாபாரி தான் தம்பி தீர்மானிப்பார்.  தேக்கோட விலைய நாம தீர்மானிக்கலாம்’’ என்று கூறினார். 

நண்பரின் சஞ்சலம் நீங்கியது. 

அந்த கிராமம் முழுவதும் நண்பர் தேக்கு பயிரிடப் போவது செய்தியாகி விட்டது. அனைவரும் அவரிடம் நாங்களும் கொஞ்சம் நிலத்தில் முயற்சி செய்கிறோம் என்று கூறி நண்பரிடம் விபரம் கேட்டனர். 

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

ஒரு விஷயம் குறித்து முழுமையான விழிப்புணர்வு இருப்பது எந்த அளவு பயன் தரக் கூடியது என்பதை நேரடியாகக் காண இந்த சம்பவம் வாய்ப்பளித்தது. 

ஆற்றல்

2016ம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து ஒரு நீண்ட மோட்டார்சைக்கிள் பயணத்தைத் துவக்கினேன். அந்த பயணம் எனக்குப் பலவிதமான அகத் திறப்புகளை அளித்தது.  வாழ்க்கை குறித்த ஆழமான புரிதல்களை உருவாக்கியது. அதில் நான் நேரடியாக உணர்ந்த விஷயம் ஒன்று உண்டு. அந்த பயணத்தில் எப்போதும் ஒரு நாளில் வழக்கமாக உண்ணும் அளவு உணவை எடுத்துக் கொள்ளவில்லை. உணவின் அளவு கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்திருப்பதைக் கவனித்தேன். தினமும் 250 கி.மீ க்கு குறையாமல் பயணிக்க வேண்டும். புராதான இடங்களைக் காண வேண்டும். நான்கு மடங்கு ஆற்றலுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பேன். எனினும் எடுத்துக் கொள்ளும் உணவு குறைவுதான். ஒரு ரொட்டி ஒரு தால் ஃபிரை. எலுமிச்சைத் துண்டுகள் துணை உணவாக இருக்கும். அந்த உணவே போதுமானதாக இருக்கும். சில நாட்கள் இரவு உணவாக வாழைப்பழத்தை மட்டும் உண்டு விடுவேன். 

நமது வழமையில் உணவு நம் மனத்தில் ஏறி இருக்கிறது. நம் நினைவுடனும் ஞாபகங்களுடனும் இணைந்து இருக்கிறது. உடல் இயங்க உணவு தேவை. எனினும் நாம் உடலைத் தாண்டி மனத்துக்கு உணவைக் கொண்டு சென்று விட்டோம். 

உண்ணும் உணவு குறித்த விழிப்புணர்வு நமக்குத் தேவைப்படுகிறது. 

Tuesday 1 March 2022

பிள்ளைக் கனியமுது

 

வாழ்வின் கணங்கள்
பிரவாகிக்கும் நதி
ஆத்மதாகம் கொண்டுள்ளன
அனாதி ஜீவன்கள்
நீ இன்னும்
மொழியால்
பேசத் துவங்கவில்லை
நீ இன்னும்
நடக்கத் துவங்கவில்லை
உனது மென்மையான
உள்ளங்கைகளை
நெற்றி மேல் வைக்கிறாய்
அப்போது
உதிக்கின்றன
நிலவுகள்
வானிலும்
அகத்திலும்