Monday 31 October 2022

களையெடுப்பு - நிறைவு

இன்று காலை ஏழு மணி அளவில் விஜயதசமி அன்று தேக்கு நட்ட நிலத்துக்கு மீண்டும் சென்றேன். வயல்வெளியில் உள்ள பணி நேற்று மாலையே நிறைவு பெற்றிருந்தது. காவிரியின் கிளை நதியின் கரையில் உள்ள தேக்கஞ்செடிகளுக்கு மட்டும் களையெடுக்க வேண்டியிருந்தது. காலை ஒரு களைக்கொட்டு எடுத்துக் கொண்டு பைக்கில் புறப்பட்டேன். தேக்குச் செடிகளைப் பாதுகாக்கும் விதமாக மூங்கில்முள் வேலி அமைத்திருந்தார்கள். படலைத் திறந்து கொண்டு சென்று களைகளைக் கொத்திக் கொண்டிருந்தேன். நெல் வயல் திடலில் 50 கன்றுகள் உள்ளன. ஆற்றங்கரைத் திடலில் 20. இங்கே எண்ணிக்கை குறைவு என்பதால் விரைவாக வேலையை நெருக்கிக் கொண்டிருந்தேன். நிலத்தின் உரிமையாளர் தனது வயலைப் பார்வையிட வந்தவர் என்னைக் கண்டதும் ஆச்சர்யமடைந்தார். அவரிடம் நேற்று மாலையும் வருகை புரிந்ததைக் கூறினேன். அங்கே சில விவசாயிகள் குழுமினர். அனைவரும் கன்றின் வளர்ச்சியைக் கண்டார்கள். நான் பணி முடிந்ததும் ஐ.டி கம்பெனியில் பணி புரியும் என் நண்பரின் 3 ஏக்கரின் தேக்குத் தோப்புக்குச் சென்றேன். நண்பர் என்னை அழைத்திருந்தார். மழை பெய்ய கன்றுகள் சர சர என வளர்கின்றன. பள்ளிப் பாடத்தில் ‘’நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்’’ என்று படித்திருப்போம். அதன் அர்த்தம் என்ன என்பதை நேரடியாகக் காண்கிறேன். இரண்டு நாள் இடைவெளியில் சென்றால் கூட செடியின் வளர்ச்சி கண்களுக்குத் தெரிகிறது. இந்த மழைக்காலம் அமைதியாக அவதானித்தால் மட்டும் போதும் என பேசிக் கொண்டோம். இந்த வயலில் நண்பர் சில நாட்களுக்கு முன்னர் பணியாளரை அமர்த்தி களை எடுத்திருந்தார். 

என்னுடைய தொழில் தொடர்பான பணிகள் இருந்தன. எனவே விரைந்து வீடு திரும்பினேன். 

Sunday 30 October 2022

களையெடுப்பு

விஜயதசமியன்று ( 04.10.2022) செயல் புரியும் கிராமத்தில் ஒரு விவசாயியின் நிலத்தில் 70 தேக்கு மரக் கன்றுகளை நட்டோம். அந்த விவசாயியின் நிலம் நூறு மீட்டர் இடைவெளியில் இரண்டு இடங்களில் இருக்கிறது. ஒன்று காவிரியின் கிளை ஆறு ஒன்றினை ஒட்டி அதன் நேரடியான கரையில் உள்ளது. இன்னொன்று அவருடைய வயலில் இருக்கும் திடலில் உள்ளது.  மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது அந்த கன்றுகளைக் காண நான் அங்கு செல்வேன். அவ்வாறு செல்வது மிகவும் உற்சாகம் அளிக்கக் கூடியது. லேசாக துளிர் விடும். சிறு மகவு போன்ற மென்மை கொண்ட அந்த புதுத்துளிர்கள் எனக்கு நம்பிக்கை அளிக்கும். ஒவ்வொரு முறையும் மேலும் வளர்ந்திருக்கிறதா மேலும் வளர்ந்திருக்கிறதா எனக் கண்கள் ஆர்வமுடன் காணும். செடியின் வளர்ச்சி என்பது செடி துளிர் விட்டு மேலெழுவது மட்டுமல்ல ; அது வேர்பிடிக்கத் தொடங்குவதும் தான். முதலில் நடப்படும் எந்த செடியும் வேர்பிடிக்கத் தொடங்கும். மண்ணை அகழ்ந்து கொண்டு அதன் வேர்கள் முதலில் செல்லும். நன்றாக வேரூன்றித் தன்னை மண்ணில் நிலைநிறுத்திக் கொண்ட பின்னர் விண் நோக்கி எழத் தொடங்கும். வேர்கள் பரவிக் கொண்டிருப்பதை நம்மால் காண முடியாது. தளிர்களை நோக்கியே எல்லாருடைய கவனமும் இருக்கும். 

நட்ட தினத்திலிருந்து வாரத்துக்கு இரண்டு மூன்று முறையாவது மழை பெய்கிறது. ஆதலால் தேவையான தண்ணீர் செடிக்குக் கிடைக்கிறது. மழைநீரில் செடியின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைப்பதால் அதைத் தாண்டி இப்போது வேறு எந்த வெளியிலிருந்து இடப்படும் உரமும் தேவையில்லை. 70 செடிகளும் இரண்டு அடி நீளம் இரண்டு அடி அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழி எடுக்கப்பட்டு அதில் மக்கிய சாண எரு இடப்பட்டு ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் இடையே 12 அடி தூர இடைவெளி பராமரிக்கப்பட்டு நடப்பட்டுள்ளன. எட்டு கன அடி கொள்ளளவுக்கு இடப்பட்டுள்ள மக்கிய சாண எருவின் ஊட்டம் இன்னும் பல மாதங்களுக்குப் போதுமானது. இது மழைக்காலம் என்பதால் மழையின் ஊட்டமும் கிடைத்து விடும். 

நேற்று நிலத்தைப் பார்வையிட்ட போது களைச்செடிகள் வளரத் தொடங்கியிருப்பதைக் கண்டேன். விவசாயியிடம் களையெடுக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் களைக்கொல்லி அடிக்கலாமா என்று கேட்டார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அந்த விவசாயி களைக்கொல்லி வாங்க வேண்டும் . ஒரு ஆள் ஊதியம் கொடுத்து களையெடுக்கச் சொல்ல வேண்டும். விவசாயிக்கு குறைந்தபட்சம் ரூ. 1000 செலவாகும். இரண்டு நாட்கள் கழித்து முடிவு செய்து கொள்வோம் என முடிவெடுக்காமல் ஒத்திப் போட்டேன். ஆனால் இன்று காலை அந்த நிலத்துக்குச் சென்று செடிகள் நடப்பட்டுள்ள இரண்டு அடி நீள இரண்டு அடி அகல பரப்பில் மட்டும் இருந்த களைச்செடிகளை வேரோடு பிடுங்கி எறிந்தேன். அந்த நான்கு சதுர அடி பரப்பில் மக்கிய சாண எரு இடப்பட்டுள்ளதால் களைகளும் அந்த ஊட்டத்தைக் கொண்டு வேகமாக வளரும். தேக்கின் வளர்ச்சிக்கு அந்த நான்கு சதுர அடி பரப்பு மட்டும் களைகள் இன்றி இருந்தால் போதும். வயலில் இருக்கும் திடலில் உள்ள செடிகளுக்கு களை எடுத்துக் கொண்டு இருந்தேன். உண்மையில் எனக்கு அந்த பணி உற்சாகம் அளித்தது. அடிப்படையில் நான் நகரப் பின்னணியில் வளர்ந்தவன். மண்ணில் வயலில் இறங்கி வேலை செய்த பழக்கம் இல்லை. களையெடுத்தலில் இருந்து துவங்குவோம் எனத் துவங்கினேன். இன்று காலை மழை பெய்திருந்ததால் நிலம் சேறாக இருந்தது. மண் நெகிழ்ந்திருந்ததால் களைச்செடிகள் குறைந்த பிரயத்தனத்திலேயே கையோடு வந்தன. களைச்செடிகளின் வேரை நறுக்கி விட்டு தண்டுப் பகுதியை நான்கு சதுர அடி பரப்பிலேயே போட்டேன். அவை பசுந்தாள் உரமாக மாறும். மெல்ல ஒவ்வொரு செடியாக வேலை செய்து கொண்டிருந்தேன். கையெல்லாம் சேறாகி விட்டது. அது மிகவும் மகிழ்ச்சியே தந்தது. புதிதாக வேலை செய்வதால் உடல் வேர்த்துக் கொட்டியது. உடலின் அதிகப்படியான கலோரிகளை எரித்தது போலவும் ஆயிற்று ; களையெடுத்ததாகவும் ஆயிற்று ; ‘’காவிரி போற்றுதும்’’ பணியாகவும் ஆயிற்று என எண்ணினேன். ஒரு மணி நேரம் வேலை செய்திருப்பேன். அந்த நிலத்தின் விவசாயி வந்து விட்டார். அவருக்கு நான் சிரமப்படுகிறேனே என வருத்தம். சிரமம் இல்லை மகிழ்ச்சி தான் என்றேன். இதன் மூலம் நான் மண்ணுடனும் என் பணியுடனும் மேலும் உணர்வுபூர்வமான தொடர்பில் இருப்பதால் இது தினமும் அவசியமானது என்றேன். முக்கால்வாசி பணியை முடித்திருப்பேன். விவசாயி நாளை நெல்வயலுக்கு ஆட்கள் வேலைக்கு வருவார்கள். அவர்கள் வேலையின் நடுவே பத்து நிமிடம் இந்த பணியை செய்யச் சொல்கிறேன் என்றார். நாங்கள் இருவரும் புறப்பட்டோம். கிராமத்தில் ஒரு விவசாயி தேக்கு மரம் நடுவதில் ஆர்வமாக உள்ளார். அவர் விஜயதசமி அன்று நாங்கள் மரம் நடும் போது வந்திருந்தார். அவருடைய வீட்டுக்குச் சென்று அவரை என்னுடைய பைக்கில் அழைத்துக் கொண்டு வந்து செடிகளின் வளர்ச்சியைக் காட்டினேன். சிறப்பாக இருக்கிறது என அபிப்ராயப்பட்டார். மழைக்காலத்திலேயே அவர் நிலத்திலும் பணி தொடங்கச் சொன்னேன். விரைவில் துவங்குவோம் என்றார். அதே கிராமத்தில் சென்ற ஆண்டு ஒரு விவசாயியின் திடலில் 50 தேக்குக் கன்றுகள் கொடுத்து வளர்க்கச் சொன்னேன். வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து அவருக்கு ஆலோசனைகள் வழங்கினேன். அவை இப்போது பதினைந்து அடி உய்ரம் வளர்ந்துள்ளது. அந்த மரங்களையும் புதிதாக நட உள்ள விவசாயியிடம் காட்டினேன். வீடு திரும்பிய போது காலை மணி 10. ஏழு மணிக்குச் சென்றது பத்து மணி ஆகி விட்டதா என எண்ணினேன். செயல் புரியும் கிராமத்துக்குச் சென்று விவசாயிகளை சந்திக்கும் போது நேரம் போவதே தெரியாது. யாரிடமும் நான் பேசுவது தேக்கு - இடைவெளி - ஆழம் என இவைதான். 

காலையில் நெல் வயலில் இருக்கும் திடலில் மட்டுமாவது முழு வேலையையும் முடித்து விட்டு வந்திருந்தால் நாளை ஆற்றங்கரையில் இருக்கும் நிலத்தில் பணி செய்யலாமே என்ற எண்ணம் தோன்றிக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் செய்யத் துவங்கிய பணியை இரண்டாம் நாளும் தொடர்ந்து செய்ய வேண்டியது கட்டாயம். இரண்டாம் நாள் பணியை முழுமையாக நிறைவு செய்வது சிறப்பு. வீட்டில் களைக்கொட்டு இருந்தது. அது பயன்படும் விதத்தில் இருக்கிறது என்கிறது என்பதை உறுதி செய்து கொண்டேன். மாலை 3.30 மணி அளவில் மீண்டும் நிலத்துக்கு சென்றேன். களைக்கொட்டைக் கொண்டு களைகளை ஒரு கொத்து கொத்தினேன். ஆழம் வரை சென்று வேரை அறுத்தது. தண்டை மண்ணில் புதைத்தது. மேல்பரப்பையும் காற்று செல்லும் விதத்தில் இளகச் செய்தது. நெல் வயல் திடலில் இருக்கும் செடிகளின் களைகளை முழுமையாக நீக்கியது மகிழ்ச்சி தந்தது. நாளை ஆற்றங்கரை இடத்தில் உள்ள செடிகளின் களைகளையும் நீக்கி விடலாம். 

திரும்பி வரும் போது ஒரு விவசாயத் தொழிலாளரும் அவரது மனைவியும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர் என்னைப் பார்த்து எனது வண்டியை கைகாட்டி நிறுத்தினார். விஜயதசமி அன்று மரக்கன்றுகளை நட வந்த பணியாளர்களில் அவரும் ஒருவர். 

‘’சார் ! திடலுக்குப் போய்ட்டு வரீங்களா? நேத்து செடிகளைப் பாத்தேன் சார். எல்லாம் நல்லா துளுத்திருக்கு.’’

‘’ஆமா நல்லாத்தான் இருக்கு. இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. ஃபிரீயா இருந்தேன். அதான் களையெடுக்கலாம்னு வந்தேன்.’’

‘’நாளைக்கு நடவு வேலை இருக்கு சார். அப்ப பத்து ஆள் வேலை செய்வோம். பத்து நிமிஷத்தில இந்த வேலையையும் செஞ்சுடுவோம். ‘’

‘’பரவாயில்லை இந்த மாதிரி வேலை செய்யறது எனக்கு சந்தோஷமா இருக்கு’’

‘’சார் ! எனக்கு ஒரு 20 தேக்கு கன்னு கொடுங்க சார். ‘’

‘’நிச்சயமா. ஊர்ல இருக்கற எல்லா விவசாயிக்கும் அவங்க கேக்கற தேக்கு கன்னு கொடுக்கணும்னு தான் நாம வேலை செய்யறோம். இதுல தேக்கு நடறவங்களுக்கு பலன் கிடைக்கணும்னா ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் 12 அடி இடைவெளி இருக்கணும். ஒரு தேக்கஞ்செடி நடும் போது 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் குழி எடுத்து மக்கின சாண எரு போட்டு கன்னு நடனும்’’ . 

‘’நீங்க சொல்ற படியே செஞ்சுடறோம் சார்’’

இன்று இவரைச் சந்திக்க நேர்ந்தது ஒரு செடி ஒரு புதிய துளிர் விடுவது போல என எண்ணிக் கொண்டேன். 

Saturday 29 October 2022

கண்டாமணி

மார்க்கபந்து ஒரு சிறிய உணவகம் நடத்தி வருகிறார். சுகாதாரமான உணவை பார்த்து பார்த்து வழங்கும் அவருடைய கடையின் உணவில் அவரை அறியாமல் சிறு நஞ்சு கலந்து  விடுகிறது. அதனை மார்க்கபந்து கவனித்து விடுகிறார். ஆனால் அந்த உணவு ஒரே ஒரு நபருக்கு பரிமாறப்பட்டு விடுகிறது. அடுத்த நாள் காலை அந்த உணவை உண்டவர் இறந்து விடுகிறார். அவர் இறப்புக்கு சிறு நஞ்சு தான் காரணமா என அறுதியிட்டுக் கூற முடியாது. சிறு நஞ்சு சர்வ நிச்சயமாக இறந்து போனவர் உணவில் கலந்திருந்தது என்றும் கூறிட முடியாது. இப்படியான ஒரு நிலை. ஊர் சிவன் கோவிலுக்கு ஒரு கண்டாமணியை வாங்கி தானமாகக் கொடுக்கிறார். ஒவ்வொரு வேளை பூசனையின் போதும் கண்டாமணி ஒலிக்கிறது. அந்த ஒலி அவர் எதை மறக்க நினைக்கிறாரோ அதை அவர் நினைவில் கொண்டு வந்து விடுகிறது.   

குழந்தைக்கு ஜூரம்

ஓர் ஏழை ஆசிரியரின் குழந்தைக்கு உடம்பு சரியில்லை; ஜூரம் நெருப்பாய்க் கொதிக்கிறது. மருத்துவம் பார்க்க போதிய பணம் கையிருப்பில் இல்லை. பணபாக்கி தர வேண்டிய ஒருவரைப் பார்த்து பாக்கியை வாங்கி வரலாம் என எண்ணுகிறார். எனினும் அவருக்கும் இவருக்கும்  இனி முகத்தில் விழிக்கக்கூடாது என்று முடிவு செய்து அறிவித்த அள்வுக்கு மனஸ்தாபம். இருந்தாலும் சூழலின் தீவிரம் கருதி அங்கே செல்கிறார். சென்ற இடத்தில் சென்றவர் வீட்டில் அவர் மனைவி ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். மருத்துவர்கள் யாரும் வரும் நிலையில் இல்லை. ஆசிரியர் மூன்று மருத்துவர்களைச் சென்று பார்க்கிறார். மூவருமே வர மறுக்கின்றனர். தனது பால்ய நண்பரான மருத்துவர் ஒருவரை இரண்டு கிலோமீட்டர் தள்ளி சென்று பார்த்து நிலைமையை விளக்கி அழைத்து வருகிறார். ஆசிரியருக்காக வருகிறார் நண்பரான மருத்துவர். நோயாளியைப் பரிசீலித்து உடன் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர் சொல்ல ஒரு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். இந்த அலைச்சலில் தனது குழந்தைக்கு ஜூரம் என்ற விஷயமே ஆசிரியருக்கு மறந்து விடுகிறது. ஞாபகம் வந்து குழந்தையை நோக்கி வீட்டை நோக்கி நடக்கிறார் ஆசிரியர். தி.ஜா வின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று ‘’குழந்தைக்கு ஜூரம்’’.  

ஐயரும் ஐயாறும் ( ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை)

எந்த ஒரு கலையையும் கலை உணர்வுடன் அணுகுவதே உத்தமமான மார்க்கம் என்று கலைஞர்கள் எண்ணுவார்கள்.  ஆராய்ச்சி என்ற பெயரில் கலை உணர்வுக்கு அன்னியமான விஷயங்களை கலையின் மேலும் கலைஞனின் மேலும் செலுத்துவதை கலைக்கும் கலைஞனுக்கும் நிகழ்த்தும் வன்முறையாகவே எந்த கலைஞனும் எண்ணுவான். அதனைக் குறித்து தி.ஜா ஹாஸ்யமாக எழுதிய சிறுகதை ‘’ஐயரும் ஐயாறும் ( ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை)’’.

வீடு

வீட்டினை அகம் என்ற சொல்லாலும் குறிக்கிறது தமிழ். அகத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இருப்பாகவும் வீடு திகழ்கிறது. விருப்பாயினும் வெறுப்பாயினும் அது அகத்தில் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. வீட்டினை இனிமையாக உணரும் ஒருவன் அந்த வீட்டில் தனக்கு ஒரு துரோகம் நிகழ்ந்த பின் அதனை நரகமாக எண்ணத் துவங்குகிறான். நரகமாக எண்ணிய பின்னும் அவன் ஏன் அங்கேயே இருக்கிறான் என்னும் கேள்விக்கான பதிலில் வாசக இடைவெளியைக் கொடுத்து நிறைவு செய்கிறார் தி. ஜா , ‘’வீடு’’ சிறுகதையில்.  

கள்ளி

நாற்பது அடி அகலமும் அறுபது அடி நீளமும் கொண்டது ஒரு மனை. தி. ஜா இந்த சிறுகதையில் ‘’ஏழு மனுஷ அகலம் பதினோரு மனுஷ நீளம்’’ என்கிறார். 

பட்டணம் மனிதர்கள் பிதுங்கி நெளியும் வெளி. பட்டணத்து மக்கள் விதவிதமாக நடந்து கொள்கிறார்கள். விதவிதமாக காரணம் சொல்கிறார்கள். தங்கள் வசதிக்கேற்றார் போல் விதவிதமான நியாயங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். இது எல்லா ஊருக்கும் பொருந்தக்கூடியது என்றாலும் பட்டணத்தில் இது ஒரு வீசம் கூட என்று எடுத்துக் கொள்ளலாம். 

கிருஷ்ணன் எளிய மனிதர். உதவி என்று கேட்பவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர். அவரிடம் கைமாற்றாக கடனாகப் பணம் வாங்கியவர்கள் பலவிதத்தில் பல காரணங்களால் திருப்பித் தராமல் இருக்கிறார்கள். யாருக்கும் இனி கடன் கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வருகிறார் கிருஷ்ணன். 

சுப்பண்ணா தனது மகன் பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டும் என்று சொல்லி உதவி கேட்டு மன்றாடுகிறார். கிருஷ்ணனிடம் கையில் பணம் இருக்கிறது. பலரிடம் பெற்ற அனுபவத்தால் சுப்பண்ணா நம்பும்படியாக தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி அனுப்பி விடுகிறார். 

அன்று இடிமின்னலுடன் மழை பொழிகிறது. பெருமழை. பேரிடி. கிருஷ்ணனின் மகள் அலங்காரத்துக்கென வளர்க்கும் அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்த கள்ளிச்செடியை மழையிலிருந்து பாதுகாக்க மாடிக்கு விரைந்து ஓடுகிறாள். 

எதற்கும் உதவாத ஒரு கள்ளிச்செடி இத்தனை கரிசனம் பெறுவதை கிருஷ்ணனை ஓர் அகமாறுதலுக்கு உள்ளாக்குகிறது. 

மழை சற்று ஓய்ந்ததும் குடையை எடுத்துக் கொண்டு போய் சுப்பண்ணாவிடம் அவர் கேட்ட தொகையைக் கொடுத்து விட்டு வருகிறார்.  

மரமும் செடியும்

தஞ்சை மாவட்டம் நீர் மிகுந்திருக்கும் மாவட்டம். பயிர் வளரத் தேவையாயிருக்கும் நீர் அதிகமாக இருக்கிறது என்பதும் சமயத்தில் மிகையாகப் பெய்யும் மழையால் பயிர் பாதிக்கப்படுகிறது என்ற அளவில் தண்ணீரின் இருப்பு இருக்கிறது என்பதும் இந்த மாவட்டத்தின் இயல்பு. மிகுந்திருக்கும் ஒன்றை தஞ்சை மாவட்டத்துக்காரர்கள் ‘’மிதந்து கிடக்கு’’ என்பார்கள். பொருளோ அதிகாரமோ கொண்டுள்ள ஒருவனை ‘’மிதக்கிறான்’’ என்பார்கள்.  

இந்த ‘’மிதப்பு’’ மிக நூதனமாக சில விஷயங்களை யோசிக்க வைக்கும் ; செய்ய வைக்கும். அவ்வாறான ஒரு விஷயம் நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் நடக்கவே நடக்காது என்றும் சொல்லி விட முடியாது. 

‘’மரமும் செடியும்’’ அவ்வாறான ஒன்று. 

Friday 28 October 2022

விளையாட்டுப் பொம்மை

ஒரு முதியவர். நாற்பது வருடம் அட்வகேட் தொழிலை நாணயமாகப் பார்த்தவர். ஒரு பெரிய குடும்பத்தின் பிதாமகர். இரண்டு தலைமுறையைத் தாண்டி மூன்றாவது தலைமுறையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எல்லா ஞாபகங்களும் தவறி விட்டன. எள்ளுப் பேரன்கள் எள்ளுப் பேத்திகள் தாத்தா முன் வந்து நான் யார்னு சொல்லுங்க பார்ப்போம் என்கின்றன. பெயரையும் பெற்றோரையும் மாற்றி மாற்றி சொல்கிறார் தாத்தா. ஒரு பேரன் ஒரு பென்சிலை தாத்தா முன் காட்டி இது என்ன என்கிறான். பென்சில் என சொல்லத் தெரியவில்லை தாத்தாவுக்கு. எழுத உதவும் பொருள் என்கிறார். எவ்வளவு விஷயங்கள் மறந்தாலும் தனது மனைவியின் ஞாபகம் அவருக்குத் துல்லியமாக இருக்கிறது. எல்லாரும் ஆச்சர்யப்படும் வகையில் அதனை வெளிப்படுத்துகிறார்.  

Thursday 27 October 2022

கங்கா ஸ்நானம்

படைப்பூக்க மனநிலை என்பது மிகவும் பிரத்யேகமானது. படைப்பாளியால் கூட அதனை இன்னதென்றும் இன்ன விதமானதென்றும் வரையறுத்திட முடியாதது. அவ்விதமான படைப்பூக்க மனநிலைக்குச் சென்று அவன் உருவாக்கும் படைப்பின் ஒவ்வொரு அணுவும் கலாபூர்வமானது. கலாபூர்வமாக ஒன்றுடன் ஒன்று தொடர்பில் உள்ளது. அதில் கண்ணுக்குத் தெரியும் தொடர்புகளும் இருக்கும். கண்களால் கண்டறிந்திட முடியாத தொடர்புகளும் இருக்கும். 

கங்கா ஸ்நானம் கதையில் சின்னசாமி காசியில் மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் காசிக்கு வந்து வாசம் புரியும் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட புரோகிதர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது அந்த புரோகிதர் தனது குழந்தைக்கு முடியிறக்க வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்ததாகக் கூறுகிறார். சின்னசாமி ஆச்சர்யப்பட்டு காசியிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கா என்று கேட்கிறார். எங்கு சென்றாலும் குலதெய்வம் என்பது அங்கேயே தானே இருக்கும் ; வைத்தீஸ்வரன் குடும்ப தெய்வம் ஆயிற்றே என்கிறார். தனது குடும்பத்தைச் சேர்ந்த தனது சகோதரிக்காக சின்னசாமி காசி வருகிறார் என்பதோடு இணைத்து யோசிக்க வேண்டிய வரி இது. 

சின்னசாமியை ஏமாற்றுகிறார் ஒருவர். அந்த ஏமாற்றம் பெருஞ்சுமையாய் அழுத்துகிறது சின்னசாமியை. நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணப்பட்ட விஷயம் என்றாலும் சின்னசாமிக்கு நிகழ்ந்த வஞ்சனை என்பது வலி மிகுந்ததே. அந்த வலியின் துயரம் நீங்க கங்கையில் மூழ்கி எழ வருகிறார். சின்னசாமியை வஞ்சித்தவரும் முதல் நாளே வந்து கங்கையில் மூழ்கி எழுகிறார். இருவரும் ஒரே இடத்தில் ஒருவரை ஒருவர் அறியாமல் தங்கியிருக்கின்றனர். முதலில் அதனை அறியும் சின்னசாமி தன்னை வஞ்சித்தவருக்காகவும் கங்கையில் முழுக்கு போடுகிறார். 

காலத்தின் நீளம் எல்லா உணர்வுகளையும் அணுவினும் அணுவாக ஆக்குகிறது. கங்கை விருப்பு வெறுப்பு இன்றி தன்னிடம் வரும் எல்லா மனிதர்களின் பாவத்தையும் பாவ போதத்தையும் தன் நகர்வால் அடித்துச் சென்ற படி இருக்கிறாள். கண்ணுக்குத் தெரியும் உணர்வுகள் கண்ணுக்குத் தெரியாத உணர்வுகள் அனைத்தையும். 

Wednesday 26 October 2022

துணை

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் தனது 28வது வயதில் அரசுப் பணியில் சேர்ந்தார். முப்பது வருஷம் சர்வீஸ் முடித்து ஓய்வு பெற்றார். பின்னர் இதுவரை முப்பத்து இரண்டு ஆண்டுகள் ஓய்வூதியம் பெற்றிருக்கிறார். இப்போது அவருக்கு வயது 90. அவர் ஓய்வூதியம் பெற்றிருக்கும் ஆண்டுகள் பணி புரிந்த ஆண்டுகளை விட அதிகம். பணியில் இருந்த போது கடைசியாகப் பெற்ற ஊதியத்தை விட அதிகமான தொகையை இப்போது ஓய்வூதியமாகப் பெற்றுக் கொண்டு இருக்கிறார்.  

இவ்வாறான வயசாளிகள் மிகுந்திருக்கும் குடும்பம் ஒன்றின் கதையை ஹாஸ்யமாகக் கூறியிருக்கிறார் தி. ஜா, ‘’துணை’’ சிறுகதையில். 

அக்பர் சாஸ்திரி

மாயவரம் ஜங்ஷனில் தொடங்கி திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் நிறைவடையும் தி. ஜா வின் சிறுகதை ‘’அக்பர் சாஸ்திரி’’. 

மதுரை கோவிந்த சாஸ்திரி ஒரு வழக்கறிஞர். பதினோரு ஏக்கர் நிலத்தை வைத்து பண்ணையமும் பார்ப்பவர். எட்டு குழந்தைகளின் தந்தை. பெரிய குடும்பத்தை வழிநடத்துபவர். பந்து மித்ரர்கள் என பெரும் குழாமை உடையவர். 

பண்ணையாரும் வழகறிஞருமாக இருப்பதால் மதுரை ரயிலில் ஏறும் அவர் அவருடன் பயணிக்கும் சக பயணிகளிடம் சகஜமான உரையாடலில் ஈடுபடுகிறார். உடலை நன்முறையில் பேணும் உபாயங்களில் கைதேர்ந்தவரான கோவிந்த சாஸ்திரி தனது  வயது என்ன இருக்கும் கேட்க சக பயணிகள் ஐம்பது வயது இருக்கக் கூடும் என யூகிக்கின்றனர். அறுபதாம் கல்யாணம் முடிந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது என்கிறார். அனைவரும் மலைக்கின்றனர். 

ஒவ்வொருத்தரும் தங்கள் உடல்நலக் குறைபாடுகளை அவரிடம் தெரிவிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஆயுர்வேத சித்த வைத்திய தீர்வுகளை அளிக்கிறார். எல்லாரும் நோட்டில் டைரியில் குறித்துக் கொள்கின்றனர். 

தன் வாழ்நாளில் ஒரு பைசா கூட டாக்டருக்குக் கொடுத்ததில்லை ; ஆஸ்பத்திரிக்குப் போனதில்லை என்கிறார் கோவிந்த சாஸ்திரி. கேட்கும் எல்லாரும் ‘’அப்பாடா எப்பேற்பட்ட வாழ்க்கை’’ என்கின்றனர். தனக்கு சாத்தியமானது எல்லாருக்கும் சாத்தியம் தான் என்கிறார் சாஸ்திரிகள். 

மாயவரத்துக்கும் திருவிடைமருதூருக்கும் இடையே இருக்கும் 25 கிலோ மீட்டர் கிலோ மீட்டர் தூரத்தில் தனது உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரமிக்க வைக்கும் சரித்திரத்தைத் தன் சக பயணிகளிடம் எடுத்துரைக்கும் சாஸ்திரிக்கு திருவிடைமருதூரில் என்ன நிகழ்ந்தது என்பது தான் கதை. 

எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று இது. ஐம்பது முறையாவது வாசித்திருப்பேன். ஒரு சிறுகதை ஏன் மீண்டும் மீண்டும் ஒரு வாச்கனை மீள்வாசிப்பு செய்ய வைக்கிறது என்னும் வினாவை வாசகன் எப்போதும் எழுப்பிக் கொள்கிறான். கலையின் மாயமும் அற்புதமும் அவ்வாறு வாசிக்க வைக்கிறது என்பது அதன் பல பதில்களில் ஒன்று.  

''காவிரி போற்றுதும்’’ - விரிவாதல்

’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. ஒரு கிராமம் என்ற சிறு அலகை தனது செயல்களமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு. ஒரு கிராமம் என்று கூறினாலும் அங்கிருக்கும் இரண்டாயிரம் பேருடனும் நேரடியாகத் தொடர்பு கொள்ள முனைகிறது ‘’காவிரி போற்றுதும்’’. ஒரு கிராமத்து மக்களின் முழுமையான நலன் என்னும்  விஷயத்தை தனது அகத்தில் இருத்திக் கொள்ள ‘’காவிரி போற்றுதும்’’ விரும்புகிறது. 

ஒரு ஊரில் பொது இடங்களில் சாத்தியமான எல்லா இடங்களிலும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதை தனது செயல் திட்டமாகக் கொண்டு முதல் படி எடுத்து வைத்தோம். எனினும் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் தேவையான மரக்கன்றுகளை வழங்குவது ஊரின் மரங்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது. ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் தேவையான மரக்கன்றுகளை வழங்கிய பின் ஊரின் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது மேலும் உகந்தது என்பதால் அந்த வழிமுறையைக் கைக்கொண்டோம். மரக்கன்றுகள் மூலம் நல்ல பயன் பெற மரக்கன்றுகளை எப்படி நட வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை உருவாக்க வேண்டியிருந்தது. அதனை நாம் செய்தோம். 

என்னுடைய பன்னிரண்டு வயதில் நான் பெங்களூர் நகருக்குச் சென்றிருந்தேன். பூத்துக் குலுங்கும் ஒரு மாநகரை அப்போது கண்டேன். அந்த மரங்களும் பூக்களும் அளித்த அக மகிழ்ச்சி என்பது இப்போதும் நினைவில் இனிக்கிறது. ஒரு கிராமத்தை அவ்விதமான பூக்கும் மரங்களின் பிராந்தியமாக ஆக்க வேண்டும் என்பது எனது விருப்பம். மக்கள் தொடர்பு மூலம் ஒவ்வொரு படிநிலையாகச் செல்ல வேண்டும் என்பதே யதார்த்த நிலை. 

தற்போது செயல் புரியும் கிராமத்தில் தை மாத அறுவடைக்குப் பின் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் இருபது தேக்கு மரக்கன்றுகளை அளித்து அவர்கள் வயலின் மிகச் சிறு பரப்பில் நட்டு வளர்க்க உடனிருந்து ஊக்கமளிக்க வேண்டும் என்பது இப்போது எனது முதன்மையான பணி. அஞ்சல் அட்டை மூலம் ஒவ்வொரு குடும்பமாக தொடர்பு கொண்டவாறு இருக்கிறேன். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. பரஸ்பர உரையாடல் மூலம் இந்த விஷயத்தை கிராமத்து மக்கள் தங்களுக்குள் பரப்பிக் கொள்கிறார்கள். 

தேக்கு மரக்கன்றுகள் முழுமையான வெற்றி பெற குறைந்தது பதினைந்து ஆண்டுகள் ஆகும். ஆயினும் அதன் வெற்றிப்பாதையை ஓராண்டில் கணித்து விடலாம். மரம் பத்து அடி உயரத்துக்கு எந்த பக்கக் கிளையும் இல்லாமல் வளர்ந்து விட வேண்டும். இதற்கு ஆறிலிருந்து ஒன்பது மாதங்கள் மட்டுமே ஆகும். அதன் பின் முறையாக வாரத்துக்கு மூன்று நாட்கள் ஒரு குடம் தண்ணீர் ஊற்றினால் அதன் வளர்ச்சி என்பது பிரம்மாண்டமாக இருக்கும். மரத்திலிருந்து பயன் பெற முறையாக தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதை கிராம விவசாயியின் மனத்தில் பதிய வைக்க வேண்டியுள்ளது. இது ஒரு அடிப்படையான பணி. கிராம மக்கள் உழைக்கத் தயங்குபவர்கள் அல்ல. அவர்கள் உழைப்பின் மூலம் அவர்கள் பொருளியல் நலன் பெறும் வண்ணம் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு கிராமத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகளை 20 தேக்கு மரக்கன்றுகள் நடச் செய்தால் இந்த கிராமம் ஒரு மாதிரி கிராமமாக ஆகும். இதனை அடிப்படையாய்க் கொண்டு மேலும் பல கிராமங்களில் இந்த பணியை முன்னெடுக்க முடியும் என்பது நமது நம்பிக்கை. 

செயல் புரியும் கிராமத்தில் கல்வி சார்ந்த பணி ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என ‘’காவிரி போற்றுதும்’’ விரும்பியது. அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டது. கல்விப் பணிக்கு சாதகமான சூழல் உள்ளது என்பதைக் கண்டடைந்தது. அதனைத் துவங்குவதற்கான பொருத்தமான நேரத்துக்காகக் காத்திருக்கிறது. 

செயல் புரியும் கிராமத்தில் உள்ள குடிசை வீடுகளுக்கு சென்ற ஆண்டு மழைக்காலத்தின் போது ஆறு நாட்கள் ஒரு வேளை உணவு வழங்க ‘’காவிரி போற்றுதும்’’ ஏற்பாடு செய்தது. ஒரு கிராமத்தில் பணியாற்றும் போது அங்கே உள்ள மக்களின் அசௌகர்யமான நிலையில் அவர்களுடன் உடனிருக்க வேண்டும் என்று ‘’காவிரி போற்றுதும்’’ விரும்பியது. நண்பர்களின் ஆதரவாலும் ஒத்துழைப்பாலும் அதனை நிறைவேற்ற முடிந்தது. 

செயல் புரியும் கிராமத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் பேட்மிட்டன் ராக்கெட், பந்து, கைப்பந்து , கால்பந்து, ரிங் பால், கிரிக்கெட் மட்டை, பந்து ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது எனது விருப்பம். இன்று குழந்தைகளின் நேரத்தை முழுமையாக தொலைக்காட்சி எடுத்துக் கொள்கிறது. ஓடியாடி உடல் வலிமை பெற வேண்டிய வயதில் குழந்தைகள் டி.வி முன் முடங்கிக் கிடக்கின்றன. அதனை உணரும் நிலையில் இன்றைய பெற்றோர் இல்லை. சிறு வயதில் குழந்தைகள் கூடி விளையாடி கூடியிருத்தலின் மகிழ்ச்சியை உணர வேண்டும். அதற்காக ஊரின் எல்லா குழந்தைகளுக்கும் விளையாட்டுப் பொருட்களை அளிக்க வேண்டும் என்று விரும்பினேன். குழந்தைகள் என்ன கேட்கிறார்களோ அவை அத்தனையையும் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டேன். கணிசமான செலவாகும் யோசனை அது. வாய்ப்பு கிடைக்கும் போது நிறைவேற்ற திட்டம் உள்ளது. 

தளத்தில் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளை வாசிக்கும் நண்பர்கள் ஏதோ ஒரு விதத்தில் தாங்களும் பங்கு பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பார்கள். சிலர் உணவிடுதல் முக்கிய பணி என நினைப்பார்கள். சிலர் கல்விப்பணியை முக்கியம் என உணர்வார்கள். சிலர் பொது இடங்களில் மரம் நடுதல் முக்கியமானது என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். சிலருக்கு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் பணியில் ஈடுபாடி இருக்கும். ‘’காவிரி போற்றுதும்’’ நண்பர்களின் எல்லா எண்ணங்களையும் விருப்பங்களையும் ஈடுபாட்டையும் ஒன்றெனவே கொள்கிறது. சமூகத்துக்கு ஏதேனும் ஒருவகையில் ஆக்கபூர்வமான பங்களிப்பாற்ற வேண்டும் என எண்ணும் எவருக்கும் ‘’காவிரி போற்றுதும்’’ இடமளிக்க விரும்புகிறது.  ஒரு விஷய்த்தைப் பிழையின்றி செய்தல் என்பதும் சிறிய அளவில் செய்து அதனை அவதானித்து ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றைத் திருத்திக் கொள்வதும் காந்திய வழிமுறை. காந்திய வழிமுறையின் படியே ‘’காவிரி போற்றுதும்’’ முன்நகர்கிறது. 

‘’காவிரி போற்றுதும்’’ சாத்தியமான எல்லா வழிகளிலும் மக்களை இணைக்க விரும்புகிறது. இந்நிலையில் ‘’காவிரி போற்றுதும்’’ இப்போது இருப்பதை விட இன்னும் பெரிய அமைப்பாக மாற வேண்டும் என நண்பர்கள் விருப்பம் தெரிவித்தனர். நான் முன்னெடுக்கும் எல்லா செயல்களையும் நண்பர்களிடம் கூறி அவர்கள் அபிப்ராயத்தைக் கேட்டு செயல்முறையில் சில மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் செய்து கொண்டு செயலாற்றுவதை எனது வழிமுறையாகக் கொண்டுள்ளேன். ’’காவிரி போற்றுதும்’’ விரிவாதலுக்கான நேரம் உருவாகியிருப்பதாகவே தோன்றுகிறது. 

Tuesday 25 October 2022

நீதி மேலான நம்பிக்கை

மூன்று மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை அருகே உள்ள கிராமம் ஒன்றில் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கும் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவருக்கு உள்ளே இருந்த உயிர்மரம் ஒன்று அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரால் வெட்டப்பட்டு அதன் கிளைகள் விற்பனை செய்யப்பட்டன. சம்பவம் நடந்ததற்கு மறுநாள் நான் அந்த சாலை வழியாக சென்ற போது இவ்வாறு நிகழ்ந்திருப்பதைக் கண்டேன். அந்த கணத்திலிருந்து வெட்டப்பட்ட மரத்துக்கான நியாயத்தைக் கேட்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுகிறேன். 

ஆயிரக்கணக்கானோர் தினமும் பயணிக்கும் சாலைக்கு அருகில்  நிகழ்ந்திருக்கும் சம்பவம் என்பதால் அதனை அந்த கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரி தனது வருவாய்த்துறை மேலதிகாரிகளுக்கு அறிக்கையாக அளித்திருக்க வேண்டும். வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு ரூ.25,000க்கு மேல் இருக்கக் கூடும் என்பதால் கிராம நிர்வாக அதிகாரியின் மேலதிகாரிகள் அந்த தொகையை மரத்தை வெட்டிய நபர் மீது அபராதமாக விதிக்க வேண்டும். சாலையை ஒட்டி நடந்த செயல் என்பதால் மட்டும் அல்ல கிராமத்தில் எந்த ஒரு அரசுப் புறம்போக்கு நிலத்தில் இவ்வாறு நடந்திருந்தாலும் அது குறித்து அறிக்கை அளித்து மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவன செய்வது கிராம நிர்வாக அதிகாரியின் கடமை. 

சம்பவம் நடந்தது ஞாயிற்றுக்கிழமை. அதனை நான் காண நேர்ந்தது திங்கட்கிழமை. செவ்வாயன்று கிராம நிர்வாக அதிகாரிக்கு நடந்த சம்பவத்தைத் தெரிவித்து உரிய மேல்நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு கோரி மனு அனுப்பினேன். அந்த மனுவின் நகலை முதலமைச்சரின் தனிப்பிரிவு, வருவாய்த்துறை செயலாளர், வனத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித் துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு அந்த மனுவின் நகலை அனுப்பினேன். நிகழ்ந்த சம்பவம் குறித்து மேலிருந்து கீழ் வரை அனைவரின் கவனத்துக்கும் ஒரே சமயத்தில் வர வேண்டும் என்பதால் அவ்வாறு செய்தேன். 

இந்த சம்பவத்தை ஆயிரம் பேர் பார்த்துள்ளார்கள். இந்த மரம் ஐந்து மணி நேரத்துக்கும் அதிகமாக வெட்டப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட மரம் டிராக்டர் டிப்பரைக் கொண்டு வெளியே எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நிகழ்ந்ததற்கு பலரும் சாட்சி. சம்பவம் நடந்ததன் சுவடுகளைச் சுமந்து கொண்டிருக்கும் மரமே தான் வெட்டப்பட்டதற்கான சாட்சி. இத்தனை தடயங்களும் சாட்சிகளும் இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்படும் என நான் நம்பினேன். மாநில வருவாய்த்துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்வது ஒரு குடிமகனாக எனது கடமை என்பதால் அதனை வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரது கவனத்துக்கும் கொண்டு சென்றேன். 

இந்த சம்பவம் மீது எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கை என்ன என்று கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி விபரம் கோரினேன். மரம் வெட்டப்படவில்லை என வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் தகவல் அளித்தது. தகவல் அளித்த அதிகாரி மீது தகவல் பெறும் உரிமைச் சட்டம் படி கோரிய விபரத்துக்கு திசை திருப்பும் பதில் அளித்ததாக மாநில பொது தகவல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். 

மாவட்ட ஆட்சியருக்கும் வருவாய் கோட்டாட்சியருக்கும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மரம் வெட்டியவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது என்றும் அவ்வாறு குற்றம் இழைத்த ஒருவரை சட்டவிரோதமாகப் பாதுகாக்கும் அதிகாரிகள் மீது துறை மீதான நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு அனுப்பினேன். இந்த மனுக்களை ஆங்கிலத்தில் அனுப்பினேன். ஆங்கிலத்தில் மனு அனுப்பும் ஒருவர் உரிய மேல்நடவடிக்கை எடுக்காமல் போனால் நீதிமன்றத்தை நாட உத்தேசித்திருக்கிறார் என்பது அதன் மறைமுக அர்த்தம் என்பதால் அவ்வாறு செய்தேன். அதற்கு பலன் இருந்தது. 

பதினைந்து நாட்களுக்கு முன்னால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று விசாரித்தேன். இன்னும் ஒரு வாரத்தில் சம்பவ இடத்தை நேரில் பார்ப்பதாகக் கூறினார்கள். இன்று மீண்டும் சென்றிருந்தேன். ஒரு அரசு அலுவலகத்துக்கு செல்வது என்பது உவப்பான அனுபவம் இல்லை. எனினும் நான் மனிதர்கள் மேல் நம்பிக்கை வைப்பவன். எவரைப் பற்றியும் எதிர்மறையாக எண்ணக் கூடாது என நினைப்பவன். ஒரு தீமை எதிர்க்கப்பட வேண்டுமே தவிர தீமையைச் செய்பவர்கள் அதனை அறியாமையால் கூட செய்யலாம் என்பதால் அவர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என எண்ணுபவன். சட்டம் சுதந்திரமாகத் தன் கடமையை ஆற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன். 

மரம் வெட்டப்பட்டு முழுமையாக 90 நாட்கள் கடந்து போயிற்று. மனு கிடைக்கப் பெற்ற இரண்டு நாட்களுக்குள் உரிய அபராதம் விதித்திருக்க முடியும். அதிகபட்சம் போனால் ஒரு வாரத்துக்குள் எல்லா நடைமுறைகளும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். அபராதம் விதிக்கப்படுவதை மரத்தை வெட்டியவர் ஏற்கவில்லை என்றால் அவர் நீதிமன்றத்தை நாடி தனக்கு ஏதும் விளக்கம் இருப்பின் அதனை அளித்து தீர்வு பெறலாம். 

அபராதம் விதிப்பது வருவாய்த்துறையின் கடமை. அதனை அவர்கள் 90 நாட்கள் செய்யாமல் இருக்கிறார்கள் என்றால் அது யாரைக் காப்பாற்ற என்பதை எவருமே எளிதில் யூகிக்க முடியும். குற்றம் இழைத்தவரைக் காப்பாற்ற ஏன் அவ்வளவு முனைப்பாக இருக்கிறார்கள் என்ற இரண்டாவது யூகத்துக்கும் எவரும் எளிதில் சென்றிட முடியும். 

நாள் ஆக ஆக விஷயம் ஆறிப் போகும் என சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கின்றனர். இந்த விஷயத்தில் நாள் தள்ளிக் கொண்டே போவது குற்றம் இழைத்தவர்களுக்கு மிகவும் பாதகமான விஷயமே. சம்பவம் குறித்து மனு அனுப்பிய பின்னும் நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டாட்சியர் அலுவலகம் ஏன் அவ்வாறு ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று கூறியது என நீதிமன்றம் கேட்கும். இப்போது அபராதம் விதிக்கப்பட்டால் அந்த சம்பவம் நடந்தது என்பதை குற்றம் இழைத்தவரும் வருவாய்த்துறையும் ஒத்துக் கொண்டார்கள் என ஆகும். அவ்வாறெனில் இந்த 90 நாள் தாமதம் செயற்கையாக உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்பதையும் அது பட்டவர்த்தனமாக்கும். 

தமிழ்நாட்டில் 16,000 கிராமங்கள் இருக்கின்றன. அங்கே மரம் வளர்க்க வாய்ப்புள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் ஆகச் சாத்தியமான அளவில் மரக்கன்றுகளை நட வேண்டியுள்ளது. அது ஒரு பெருஞ்செயல். அரசு , தன்னார்வ அமைப்புகள், தனியார், பொதுமக்கள் என பலரும் இணைந்து சாதிக்க வேண்டிய விஷயம். ஒரு மரம் என்பது எத்தனையோ பட்சி பிராணிகளுக்கு உணவாய் வாழிடமாய் அமையக் கூடியது. அவை காக்கப்பட வேண்டும் என்பதால் தான் அதற்கு உரிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எவரும் எங்கும் எந்த கட்டுப்பாடுமின்றி மரம் வெட்டலாம் என்று ஆகும் என்றால் அதற்கு எந்த எல்லையும் கிடையாது. முடிவும் கிடையாது. 

ஒரு செயலைத் தொடங்கினால் அதன் இறுதி வரை சென்று பார்ப்பது என்பது எனது இயல்பு. ஆயிரம் பேர் செல்லும் சாலையில் எந்த ஒருவரும் மரம் வெட்டப்படுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற பொதுமக்கள் குறித்த எண்ணமே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை இதனைச் செய்ய வைத்திருக்கிறது. முதல் முறை அந்த மரம் வெட்டப்பட்டிருப்பதைக் கண்ட போது எனக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ அந்த உணர்வு 90 நாட்களுக்குப் பின் மேலும் பத்து மடங்கு கூடியிருக்கிறது. நாட்களைக் கடத்தினால் மனு அளித்தவர் சோர்ந்து விடுவார் என சம்பந்தப்பட்டவர்கள் எண்ணுவார்களேயாயின் அந்த எண்ணம் மெய்யாக வாய்ப்பில்லை. வெட்டப்பட்ட மரத்துக்கு நீதி கிடைக்கும் வரை இந்த விஷயத்தில் எனது செயல்கள் தொடரும். 

ஒரு ஜனநாயக அரசை அரசியல் சட்டமே ஆள்கிறது என்ற உறுதியான நம்பிக்கைக் கொண்டவன் நான். எனது ஜனநாயகக் கடமையை நான் செய்வதாகவே எண்ணுகிறேன். 

பின்குறிப்பு:

பிரதானமாக ஐந்து இடங்களில் வெட்டப்பட்டு அதன் கிளைகள் அகற்றப்பட்ட அந்த மரம் இப்போது மீண்டும் துளிர்க்கத் தொடங்கி உள்ளது. 

 

Monday 24 October 2022

உலகம் ஒரு குடும்பம்

உலகம் ஒரு குடும்பம் என்கிறது இந்திய மரபு. உலக உயிர்கள் அனைத்துமே விஷ்ணுவின் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதால் யாவும் யாவரும் ஒரே குலத்தவர் என்பது இந்திய நம்பிக்கை.  

நான் பண்டிகை தினங்களில் குறைவான பொழுது வீட்டில் இருந்து விட்டு அதிக நேரம் நண்பர்களைச் சென்று சந்திக்க வேண்டும் என்று நினைப்பேன். அன்றைய தினத்தில் பேருந்துகளையும் ரயில்களையும் போக்குவரத்துக்குப் பயன்படுத்துவேன். சாமானிய மக்களுடன் பண்டிகை தினத்தன்று இணைந்து இருக்க விரும்புவேன். சாமானிய மக்களுடன் இருக்கும் போது அவர்களுடன் உரையாடும் போதே என் பாதைக்கான வழிகளைக் கண்டடைகிறேன். 

என் நண்பன் சூரிய நாராயணனுக்கு இந்த வருடம் தலை தீபாவளி. வீர நாராயண ஏரிக்கரை கிராமம் ஒன்றில் அமைந்திருக்கிறது அவனுடைய மாமனார் வீடு. மனைவியுடன் இரண்டு நாட்களுக்கு முன்பே வந்திருந்தான். இன்று மதியத்துக்கு மேல் கிளம்பி அங்கே செல்வதாக முடிவு செய்து கிளம்பிச் சென்றேன். தீபாவளி தினம் என்பதால் பத்தில் ஒரு பங்கு பேருந்துகளே இயங்கிக் கொண்டிருந்தன. மெல்ல சிதம்பரம் சென்று அங்கிருந்து இன்னொரு பேருந்து பிடித்து அவனுடைய மாமனார் ஊருக்குச் சென்று அவர் வீட்டைக் கண்டடைந்து சென்றேன். 

மிகச் சிறப்பான காஃபி கொடுத்து உபசரித்தார்கள். தீபாவளி இனிப்புகள் வழங்கினார்கள். வழக்கமாக தீபாவளி சமயத்தில் வீடுகளுக்குச் செல்லும் போது இனிப்புகள் அதிகமாக தட்டில் வைத்திருந்தால் அதனை ஒரு பாலிதீன் பையில் கட்டிக் கொடுத்து விடுமாறு கூறுவேன். வரும் வழியில் பேருந்தில் அருந்தலாம் அல்லது வீட்டுக்குக் கொண்டு வந்து மறுநாள் அருந்தலாம். அவ்வாறு சொன்னதும் வேறு இனிப்பை தனியாகத் தருகிறோம் இதனை இப்போது அருந்துங்கள் என்பேன். தனியாகத் தருவதுடம் இதனையும் சேர்த்துத் தாருங்கள் என்பேன். இந்த முறை சூரிய நாராயணன் மாமனார் வீட்டில் அளவாகவே கொடுத்தார்கள். முழுமையாக அருந்தினேன். 

நானும் சூரிய நாராயணனும் வீர நாராயண ஏரிக்கரையில் அமர்ந்திருந்தோம். நான் அவனை சில ஆண்டுகளுக்கு முன்னால் வீர நாராயண ஏரிக்கு அழைத்து வந்திருக்கிறேன். எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எனக்கு நெருக்கமான நண்பர்கள் ஊருக்கு வரும் போது அவர்கள் வீர நாராயண ஏரியை பார்க்காதவர்களாக இருந்தால் ஏரிக்கு அழைத்து வந்து காட்டுவேன். இப்போது வீர நாராயண ஏரிக்கரை கிராமத்தைச் சேர்ந்தவரை மணம் புரிந்திருக்கிறான் என்பது மகிழ்ச்சி தந்தது. 

பி. ஜி. கருத்திருமன் அவர்களின் ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ என்ற நூலை இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறான். பி.ஜி. கருத்திருமன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். திராவிட இயக்கம் கம்பராமாயணம் மேல் வசை மாரி பொழிந்து கொண்டிருந்த காலத்தில் - திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் சி. என். அண்ணாத்துரை கம்பராமாயண நூல் பிரதியை ஊருக்கு ஊர் தீ வைத்துக் கொளுத்தி தனது கட்சியினரையும் அவ்வாறே செய்யச் சொல்லிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தேசியத்திலும் பண்பாட்டிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த பி.ஜி. கருத்திருமன் அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகுக்கு எளிய முறையில் கம்பனைக் கொண்டு செல்ல கம்பனின் 12,000 பாடல்களில் தேர்ந்தெடுத்த 960 பாடல்களை தேர்ந்தெடுத்து இந்த நூலை எழுதினார். கம்பனில் நுழைய இந்த நூல் நல்லதொரு நுழைவாயில். இந்த நூல் குறித்து நான் சொல்வனம் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். ( யாமறிந்த புலவரிலே )

உலகெங்கும் அறிஞர் எனக் கூறப்படுபவர்கள் நூல்களை படைப்புகளை இலக்கிய ஆக்கங்களை மதிப்பவர்களாக இருப்பார்கள் என்பது வழக்கம். தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழின் ஆகப் பெரிய இலக்கிய சாதனையான கம்பராமாயணப் பிரதியை தீ வைத்துக் கொளுத்துங்கள் என்று கூறிய சி.என். அண்ணாத்துரையை அறிஞர் என்று சொல்வார்கள். 

அவருடைய பெயரே கம்பராமாயணக் காவியத்தின் தலைவனான ராமனின் பெயர். துரை என்ற தெலுங்கு வார்த்தைக்கு அரசன் என்று பொருள். அண்ணாத்துரை என்றால் அரசனான அண்ணன் என்று பொருள். இது இராமனைக் குறிக்கும் பெயர். இராமன் மூன்று தம்பிகளின் அண்ணனாக இருந்தவன். அரசனாகவும் இருந்தவன். 

கவிஞர் கண்ணதாசன் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது. அவருடைய வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய சம்பவம். சி. என். அண்ணாத்துரை கூறியதற்கேற்ப தனது வீட்டில் இருந்த கம்பராமாயணப் பிரதியைக் கொளுத்த முடிவு செய்து மண்ணெண்ணெய் டின்னை எடுத்து வந்து வைத்துக் கொண்டு தீப்பெட்டியையும் கையில் வைத்திருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. இன்னும் சில வினாடிகளில் இந்த நூல் தீக்கிரையாகப் போகிறது. அதற்கு முன் அந்த நூலில் என்ன தான் இருக்கிறது என வாசித்துப் பார்ப்போமே என வாசிக்கிறார். வாசிக்க வாசிக்க கம்பனால் வசீகரிக்கப்பட்டு அந்த நூலின் சிறப்பை உணர்ந்து கொள்கிறார். திராவிட இயக்கத்திலிருந்து தன்னை முழுமையாக வெளியேற்றிக் கொண்டு தேசிய கட்சியான் காங்கிரசில் இணைகிறார். 

பி.ஜி. கருத்திருமனின் நூலுக்கு காங்கிரஸ் தலைவர்களான காமராஜ், சி. சுப்ரமணியன், தூரன் மற்றும் குடியரசுத் தலைவர் திரு. ராதாகிருஷ்ணன் ஆகியோர் அணிந்துரை அளித்துள்ளார்கள். 

கம்பன் குறித்து பேசிக் கொண்டிருந்து விட்டு சூரிய நாராயணனின் மாமனார் வீட்டுக்குத் திரும்பினோம். 

எனக்காக குறுகிய நேரத்தில் இட்லி தயாரித்து வைத்திருந்தார்கள். நுட்பமான ருசி கொண்டிருக்க வேண்டும் என்பதால் தேங்காய் சட்னியை மிக்ஸியில் அரைக்காமல் அம்மியில் அரைத்திருந்தார்கள். இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டதும் பார்த்துப் பார்த்து ஒன்று ஒன்று செய்வதுமான அவர்களது இயல்பு என்னை நெகிழச் செய்தது. 

இவர்களைப் போன்றோரே எங்கும் எப்போதும் கிளம்பிச் செல்லலாம் என்ற நம்பிக்கையை அளிக்கிறார்கள். 

அவர்கள் பெரியபாளையத்தம்மனை வழிபடுபவர்கள். அவர்கள் வீட்டு பூஜை அறையில் இருந்த பாளையத்தம்ம்மனை வழிபட்டு விட்டு நள்ளிரவு 11.30க்கு ஊர் திரும்பினேன். 

ஹயக்ரீவம்


மந்த்ராலயம் சென்றிருந்த போது அங்கே சுவாமி ஸ்ரீராகவேந்திரர் 12 ஆண்டுகள் தவமியற்றிய பஞ்சமுக ஆஞ்சநேயர் குகைக்குச் சென்றிருந்தேன். அந்த குகையில் ஒரு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிற்பம் உள்ளது. ஆஞ்சநேயர், கருடன், வராகர், ஹயக்ரீவர், நரசிம்மர் என ஐந்து ரூபங்கள் இணைந்திருக்கும் சொரூபம் அது.  

யோக மரபு மானுடனின் ஆற்றல்களைக் கூராக்கிக் கொள்ள பிராணிகளின் உடல்மொழியை பயன்படுத்திக் கொள்கிறது. ஆசனங்கள் என்பவை பிராணிகளின் உடல்மொழியைக் கருவாய்க் கொண்டு வடிவமைக்கப்பட்டவையே. 

ஹயக்ரீவர் குதிரைமுகம் கொண்டவர். ஞானத்தை அருளுபவர். ஒன்றிலிருந்து இன்னொன்று என விரையும் மன ஆற்ற்லின் மீது ஆளுமை செலுத்தக் கூடியவர். நேற்று திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாளைச் சேவிக்க  சென்றிருந்தேன். தீபாவளிக்கு முதல் நாள் என்பதால் ஆலயத்தில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 

ஆலயத்தில் அதிக நேரம் இருக்க வாய்ப்பு கிடைத்தது. ஆலயங்களில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இருக்க வேண்டும் என நான் விரும்புவேன். 

ஆலயத்தில் ஒரு ராமர் சன்னிதி. ‘’நடையில் நின்றுயர் நாயகன்’’ என கம்பன் சொன்ன ராமன். கன்னங்கரு கல்லில் கருமை அடர்ந்து மின்னிக் கொண்டிருந்தான் ஸ்ரீராமன். 

தேவநாத சுவாமி சன்னிதிக்கு எதிர்ப்பக்கம் ஒரு சிறு குன்றின் மேலே ஹயக்ரீவ சுவாமிக்கு சன்னிதி உள்ளது. அங்கும் சேவித்தேன். இரவு ஊர் திரும்பும் போது மணி 11.45 ஆகி விட்டது. 

யாதினும் இனிய அண்ணா - வாசகர் கடிதம்

யாதினும் இனிய அண்ணா,


இனிய தீபாவாளி வாழ்த்துக்கள். உங்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. ஃபோன் ஸ்விட்ச் ஆஃப். நீங்கள் ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கலாம். அல்லது ’’காவிரி‌ போற்றுதும்’’ பற்றி யோசித்துக்கொண்டிருக்கலாம். அல்லது ஒருவர் மட்டும் அமர்வதான சோஃபாவில் ஏதும் செய்யாமல் அமர்ந்திருக்கலாம். தி.ஜாவை வாசித்துக்கொண்டிருக்கலாம். அம்மாவிடம் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக்கொண்டிருக்கலாம். ஒரு மைசூர் பாகு அல்லது அதிரசத்தை சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம். ஒரு கவிதை எழுதிக்கொண்டிருக்கலாம். இப்படி எதுவானாலும் யாதினும் இனிய அண்ணா, தீபாவளி வாழ்த்துக்கள்.

தீராக் காதலுடன்,

சூரிய நாராயணன்

***

இன்று எனக்கு இந்த கடிதம் வந்திருந்தது. கடிதத்தை எழுதியவன் என் நண்பன். என் உயிர் நண்பன். இலக்கிய வாசிப்பின் மூலம் நாங்கள் அறிமுகமானோம். அறிமுகமான முதல் நாளிலிருந்து எங்கள் பிரியமும் அன்பும் சுக்ல பட்ச நிலவென வளர்ந்து கொண்டேயிருக்கிறது. எனது கவிதைகள் தொகுக்கப்பட்டு தொகுப்பாக வெளிவர வேண்டும் என்று என்னிடம் தொடர்ந்து வற்புறுத்துபவன். 

‘’யாதினும் இனிய அண்ணா’’ என என்னை விளித்திருந்தான். இது கம்பனின் வரி. குகனை ஸ்ரீராமன் ‘’யாதினும் இனிய நண்ப’’ என்று அழைக்கிறான்.  தம்பியின் விளி என்னை அன்பின் மகிழ்ச்சியின் கணங்களில் நிறுத்தியது. 

’’ தம்பி! உன் அன்பால் என்னைக் குழந்தையாக்குகிறாய்.’’ என்று மட்டும் தான் என்னால் உன்னிடம் இப்போது சொல்ல முடியும்.   

படைத்தல்

படைத்தலின் வெளியில்
என் முன்
ஒரு சூரியன் இருக்கிறது
பல சூரியன்கள் இருக்கின்றன
உச்ச உயரம் பறக்கும் பறவைகள்
இளைப்பாறும்
விருட்சத்தின் கிளைகள் கொண்ட
அளவற்ற மண் இருக்கிறது
வாழ்வை 
ஓயாத நூதனங்களின் பரப்பெனக்
காணும்
குழந்தைகள் இருக்கிறார்கள்
அக்குழந்தைகளைக் கண்டு பூரிக்கும்
அன்னையர் இருக்கிறார்கள்
இம்மி கூட இடைவெளி இல்லாமல்
இலைகள் என நெருங்கிப் பூத்திருக்கும்
மரத்தின் கீழே
பரவசத்துடன்
காத்திருக்கும் காதலர்கள் இருக்கிறார்கள்
புன்னகை
கண்ணீர்
துயரம்
இனிமை
முதல் முறையாக 
ஒரு நான்கு வயது சிறுவனுக்கு
வீதியில்
தனியாக நடந்து பார்க்க 
ஒரு சிறு ஆர்வம்
குதூகலிக்கிறது

 

Sunday 23 October 2022

இனிமையும் ஒளியும் நிறைக


ஒரு கிராமம் என்பதை ஒரு தேசம் எனக் கொள்ள முடியும் என்கிறது மகாபாரதம். நம் நாட்டில் ஒரு கிராமம் என்பது ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்து அவர்கள் அமைதியான ஒரு வாழ்க்கை வாழும் சூழலை பல்லாயிரம் ஆண்டுகளாக பல தலைமுறைகளாக உருவாக்கி அளித்து வந்திருக்கிறது. இந்திய சரித்திரம் அறிந்தவர்களால் அதனை எளிதில் புரிந்து கொள்ள முடியும். கன்னியாகுமரி முதல் காஷ்மீரம் வரை எல்லா இந்தியக் கிராமங்களும் கிட்டத்தட்ட ஒரே முறையைக் கொண்டவையே. எல்லா கிராமங்களிலும் அன்றும் இன்றும் விவசாயம் தான் பிரதானமான தொழில். உணவு உற்பத்தியும் உணவு உற்பத்திக்கு உதவும் உபகரணங்களை உருவாக்கிக் கொள்ளுதலுமே கிராம மக்களின் ஜீவிதமாக இருந்திருக்கிறது ; இருக்கிறது. 

இந்த கிராமங்களை அடிப்படையாய்க் கொண்டே நம் நாட்டில் கல்வி, கலை, இலக்கியம், நுண்கலைகள், வானியல் என அனைத்துத் துறைகளிலும் மகத்தான சிறப்பான உச்சபட்சமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நம் நாடு உலகின் எல்லா துறைகளிலும் முதன்மை பெற்றிருந்தது என்பது வரலாறு. 

18ம் நூற்றாண்டு வரை கூட உலகப் பொருளாதாரத்தில் ஐம்பது சதவீதப் பங்களிப்பை நமது நாடு வழங்கியிருக்கிறது. இந்தியாவில் விளையும் பயிர்களை கொள்முதல் செய்ய இந்தியக் கைவினைப் பொருட்களை வாங்க உலகெங்கிலும் இருந்து வணிகர்கள் குவிந்தார்கள் என்பது வரலாறு. 

உலகெங்கிலும் ஆத்ம தாகம் கொண்டவர்கள் நாடி வரும் நாடாக நமது தேசம் இருந்திருக்கிறது. எல்லா வழிபாட்டு முறைகளையும் இன்னொரு பாதையாகவும் உண்மையை நோக்கிச் செல்லும் இன்னொரு வழியாகவும் எண்ணும் வழக்கம் உலகிலேயே மிக மிக அதிகம் இருந்த நாடு நம் நாடுதான். 

இந்த இடத்தில் பொதுவாக எழுப்பப்படும் கேள்வி ஒன்று உண்டு. இந்திய சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்திருக்கிறதே என்பதும் சுரண்டல் நிகழ்ந்திருக்கிறதே என்பதும் எப்போதும் எழுப்பப்படும் கேள்விகள். உலகில் எந்த ஒரு பகுதியிலாவது எந்த ஒரு சமூகத்திலாவது எந்த ஒரு நாட்டிலாவது பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருந்திருக்கிறதா என்பதும் எவ்விதத்திலாவது சுரண்டல் நிகழாத பகுதி உலக வரலாற்றில் எங்காவது இருந்திருக்கிறதா என்ற கேள்விக்கான பதிலின் மூலமே மேற்படி கேள்விகளை எதிர்கொள்ள முடியும்.  

ஆயிரம் ஆண்டுகளாக நம் நாடு அன்னியத் தாக்குதலுக்கு ஆளானது. ஆயிரம் ஆண்டுகளாக அன்னியத் தாக்குதலை தொடர்ந்து எதிர்த்து யுத்தம் செய்து கொண்டிருந்தது நமது தேசம். பிரிட்டிஷ் ஆட்சி நம்மைச் சூழ்ந்தது. இந்தியாவின் கிராம நிர்வாக அமைப்பு பெரும் தாக்குதலுக்குள்ளான காலகட்டம் அது. ரொக்கமாக வரி செலுத்துதல் என்பது ஐரோப்பிய நடைமுறை. இந்தியாவில் தானிய பண்டமாற்று முறை பன்னெடுங்காலமாக வழக்கத்தில் இருந்தது. பண்ட மாற்று முறையில் பரிவர்த்தனை ஆகும் தானியம் மிகக் குறுகிய காலத்தில் உணவாக மாறும் சாத்தியம் கொண்டது. அந்த முறை தகர்க்கப்பட்டு ரொக்கப் பரிமாற்றம் வந்தது. இந்தியாவுக்கு இந்திய மனநிலைக்குப் பொருந்தாத வரிவிதிப்பு முறைகளால் இந்திய கிராமங்கள் வீழத் தொடங்கின. மக்கள் வரிப்பணத்தை பிரிட்டனுக்குக் கொண்டு சென்றது பிரிட்டிஷ் அரசாங்கம். 

இந்திய சுதந்திரப் போரை மக்கள் இயக்கமாக மாற்றிய மகாத்மா காந்தி இந்திய கிராமங்கள் மீண்டும் வலிமை அடைய வேண்டும் என விரும்பினார். இந்தியாவின் நிலை முன்னேற்றம் காண வேண்டும் எனில் இந்திய கிராமங்களில் மாற்றம் நிகழ வேண்டும் என்பதற்காக பணிகளை முன்னெடுத்தவர் மகாத்மா காந்தி. அனைவருக்குமான வளர்ச்சி என்ற விஷயத்தை தொடர்ந்து வற்புறுத்தியவர். 

ஜனநாயகம் என்பது மக்கள் இணைவதற்கான அமைப்பு. ஒரு ஜனநாயக அரசை வழிநடத்துவது அந்த நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் விழுமியங்கள். எவர் ஆளும் பொறுப்புக்கு வந்தாலும் நாட்டை வழிநடத்துவது அரசியல் சட்டமே. ஆட்சி அதிகாரம் என்பது சமூகத்தில் சிறு பகுதியே என்பதே உண்மை. அளவில் சிறிய நாடுகளில் கூட அரசு என்பது அந்த சமூகத்துடன் ஒப்பிடும் போது மிக மிகச் சிறிய ஒன்றே.  இந்திய சமூகம் மிகப் பிரம்மாண்டமானது. குறைந்தபட்சம் ஆறாயிரம் ஆண்டு கால வரலாறு கொண்டது. பெரும் தீர்க்கதரிசிகளின் சொற்களை நூற்றாண்டுகளாக தலைமுறை தலைமுறைகளாக பண்பாடாக உருவாக்கி அளித்துக் கொண்டே செல்வது. ஸ்ரீகிருஷ்ணர். மகாவீரர், புத்தர் , சங்கரர், ராமானுஜர் என நீளும் ஞானிகளின் மரபைக் கொண்டது. இங்கே அரசோ அரசியல் அதிகாரமோ மிகப் பெரிய ஒன்று அல்ல. இங்கே மக்கள் மேன்மையுற பணியாற்றும் தன்மையே நம் நாட்டை உயிர்ப்புடன் பல நூற்றாண்டுகளாக வைத்திருந்திருக்கிறது. 

சுவாமி விவேகானந்தர் ஒருமுறை கூறினார். ‘’நான் ஆத்ம ஞானியுமல்லேன் ; தத்துவ ஞானியுமல்லேன் ; ஏழை ; ஏழைகளை நேசிக்கிறேன்; அவ்வளவுதான்’’ என்று.அவர் நாடெங்கும் முழங்கிய செய்தி என்பது மானுட சேவையே இறை வழிபாடு என்பதே. 

‘’காவிரி போற்றுதும்’’ குறைந்தபட்சம் ஒரு கிராமத்துக்காவது ஆகச் சாத்தியமான எல்லா வழிகளிலும் சேவை புரிய வேண்டும் என்று விரும்புகிறது. 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகளில் ஒருங்கிணைப்பை மட்டுமே அடியேன் மேற்கொள்கிறேன். செயல்கள் நிகழக் காரணம் ’’காவிரி போற்றுதும்’’ பணிகளுக்கு எல்லா விதமான ஆதரவையும் தொடர்ந்து நல்கும் நண்பர்களே. அவர்கள் என் மீது வைக்கும் நம்பிக்கையும் தொடர்ந்து காட்டும் பரிவும் இந்த கணம் என்னைக் கண் கலங்கச் செய்கிறது.  தங்கள் பெயரைக் கூட சொல்லக் கூடாது என்று கூறி அவர்கள் உடனிருக்கிறார்கள். அவர்களுக்கு என்றும் அடியேன் கடன்பட்டவன். அவர்கள் அனைவருக்கும் நன்றி. 

உலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் அமைதியும் சந்தோஷமும் கொண்டிருக்கும் நிலைக்கு உலகை உயர்த்த வேண்டிய பொறுப்பு மானுடத்துக்கு இருக்கிறது. நாம் இணைந்து அதனை சாதிக்க வேண்டும். 

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தீபாவளியில் நம் வாழ்வில் இனிமையும் ஒளியும் நிறையட்டும். 

விழிப்பு

செயல் புரியும் கிராமத்தில் ஒரு  விவசாயிக்கு சென்ற ஆண்டு 50 தேக்கு மரக்கன்றுகளை வழங்கியிருந்தேன். தடுப்பூசிக்காக பணி புரிந்த போது அறிமுகமானவர் அவர். என் மீது மிகுந்த அன்பு  கொண்டவர். அவருக்கு ஒரு திடல் இருந்தது. அதில் தண்ணீர் தேங்காது. எனவே தேக்கு நன்றாக வளரும். நான் அவரிடம் அந்த திடலில் தேக்கு பயிரிடுமாறு பரிந்துரைத்தேன். என் மீது கொண்ட பிரியத்தால் நான் சொல்கிறேன் என்பதற்காகவே அவர் அந்த திடலில் தேக்கு பயிரிட சம்மதித்தார். நான் கூறிய விபரங்கள் அவரை முழுமையாகத் திருப்தியடையச் செய்தன என்று சொல்ல முடியாது. என்றாலும் நான் எல்லாரிடமும் சொல்வதை அவரிடமும் சொன்னேன். ‘’காவிரி டெல்டா மண்ணுக்கு தேக்கு மரம் நன்றாக வளரும். டெல்டா மாவட்டங்களில் ஆற்றங்கரைகளில் அரசாங்கத்தால் நட்டு வளர்க்கப்படும் மரங்களின் வளர்ச்சியே அதற்கு கண்கூடான சாட்சி. நீங்கள் உங்கள் நிலத்தில் முழுமையாக தேக்கு  பயிரிட வேண்டும் என்பது அவசியமில்லை. உங்கள் நிலத்தில் ஒரு சதவீத பரப்பில் மட்டும் பயிரிட்டுக் கொள்ளுங்கள். மீதி உள்ள 99 சதவீத பரப்பில் நீங்கள் வழக்கமாக செய்வதை செய்து கொள்ளுங்கள். ‘’ நான் மீண்டும் மீண்டும் கூறிய பிறகும் அவர் நான் சொன்ன விஷயத்தை முழுமையாக உள்வாங்கவில்லை. என் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவும் பிரியத்தின் காரணமாகவும் மட்டுமே அவர் ஐம்பது தேக்கு மரங்களை நடத் தயாரானார். 

50 மரக்கன்றுகளை நான் அவருக்கு வழங்கினேன். இது ஓர் எளிய ஊக்கமளிக்கும் செயல் மட்டுமே. செயல் துவக்கத்தை விரைவுபடுத்த செய்யும் ஒரு வழிமுறை. மரக்கன்றுகள் வந்தடைந்து விட்டால் அதனை உடனே நடுவதற்குத் தேவையான ஆயத்தங்களை விவசாயிகள் மேற்கொள்வார்கள் என்பது ஓர் நடைமுறைப் புரிதல். 

குழி எடுக்கும் தினத்தன்று அங்கே சென்று ஒரு மரக்கன்றுக்கும் இன்னொரு மரக்கன்றுக்கும் 12 அடி இடைவெளி இருப்பதை உறுதி செய்தேன். விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் மரம் நட வேண்டும் என்ற ஆவலில் நெருக்கி நட்டு விடுவார்கள். நெருக்கி நடப்படும் தேக்கு மரங்கள் உயரமாக வளருமே அன்றி பருக்காது. தேக்கு மரம் உயரமாக வளர்வதால் பலன் இல்லை. பருத்து வளர வேண்டும். மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் என்னிடம் ஒருமுறை சொன்னார்:  ‘’ நமக்குத் தேவை அந்த தாவரத்தின் தண்டு மட்டும் தான். குறைந்தது பத்து அடி உயரத்துக்கு நேராக இருக்கும் தண்டு.’’ இரண்டு வாக்கியத்தில் அவர் சொன்னதை நான் முழுமையாகப் புரிந்து கொண்டேன். 

குழி எடுத்து மக்கிய சாண எரு இட்டு தேக்கு மரக்கன்றுகளை நடவு செய்தார். நான் குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது அந்த திடலுக்குச் சென்று மரக்கன்றுகள் எவ்விதம் வளர்கின்றன என பார்வையிடுவேன். அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம் தான். ஆனால் நான் அப்படி ஒரு நாளும் கேட்டதில்லை. அந்த மரக்கன்றுகளின் வளர்ச்சியில் கண்காணிப்பில் எனது நேரடியான பங்களிப்பு இருக்க வேண்டும் என்று எண்ணுவேன். மேலும் அந்த மரங்களுடன் எனக்கு உணர்வுபூர்வமான தொடர்பு ஒன்றை உணர்கிறேன். எனவே எத்தனை வாய்ப்பிருக்கிறதோ அத்தனை முறை  சென்று பார்ப்பேன்.  

மரங்களுக்கு வாரம் மூன்று நாட்களாவது தண்ணீர் விடுங்கள் என்று வற்புறுத்துவேன். தஞ்சைப் பிராந்தியத்தில் விவசாயிகள் மரங்கள் தண்ணீர் ஊற்றாமல் தானாக வளரும் என்ற நம்புகின்றனர். அவ்வாறு அவர்கள் பழகியிருக்கின்றனர். பழகிய ஒரு விஷயத்தில் மாற்றம் ஏற்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒரு செயல். மருந்து நோயைப் போக்கும் என மனிதன் அறிந்திருந்தாலும் மனிதன் மருந்தின் மீது வெறுப்பு கொள்கிறான். இது மனித சுபாவம். தண்ணீர் விடாமல் இருந்தால் மரத்தின் வளர்ச்சி குறைவுபடும். ஒரு குழந்தைக்கு ஒருவேளை உணவு கொடுத்தால் கூட அது வளரும். புஷ்டியாக வளராது. தேக்கு மரம் புஷ்டியாக வளர வேண்டும் என்றால் கோடைக்காலத்தில் அதற்கு தண்ணீர் வாரம் மூன்று முறையாவது தண்ணீர் ஊற்ற வேண்டும். விவசாயிக்கு இதனை பலவிதங்களிலும் விளக்க வேண்டும். மென்மையாக வற்புறுத்திச் சொல்லி உரிமையில் கடிந்து கொண்டு என பலவிதங்களிலும் இதனை நான் கூறியவாறு இருப்பேன். அந்த விவசாயி அதனை ஓரளவு நிறைவேற்றினார். நான் நினைத்த அளவு இல்லையென்றாலும் அதில் 80 சதவீத அளவுக்கு. 

மரக்கன்றுகள் குறிப்பிட்ட உயரம் வளர்ந்ததும் அவர்களுக்கு நம்பிக்கை வந்து விடும் என எதிர்பார்த்தேன். அவ்வாறே நடந்தது. இருப்பினும் மீண்டும் மீண்டும் அங்கு சென்று மரக்கன்றுகளைப் பார்ப்பேன். 

ஒரு செடிக்கு ஒரு கன்றுக்கு முறையாக தண்ணீர் ஊற்ற வேண்டும் என்னும் பழக்கம் விவசாயி மனதிலிருந்து நீங்கியிருக்கிறது என்றால் விவசாயம் எந்த நிலையில் இருக்கிறது என்னும் துயரம் உருவாகும். துயரான நிலை இருக்கிறது என்பதால் தான் அதனை நீக்க முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது என்பதால் துயரை மீண்டும் மீண்டும் நினைப்பது துயரை நீக்குவதற்கான வழி அல்ல ; துயரை நீக்குவதற்கான வழி நம்பிக்கையுடன் செயல்புரிவதே என என்னுடைய மனதுக்கு நானே தெம்பினை உருவாக்கிக் கொண்டு முயற்சிகளைத் தொடர்வேன். 

ஒரு தனிமனிதனாக நான் சோர்வுறும் இடம் சமூகப் பணியில் நிச்சயம் உண்டு. செயல் புரியும் கிராமத்தில் எல்லாரும் என் மீது பிரியம் காட்டுகிறார்கள். என் மீது அன்பு செலுத்துகிறார்கள். எந்த ஒருவரும் என்னிடம் கடுமையாக நடந்து  கொண்டதில்லை. கடுமையாகப் பேசியதில்லை. ஆனால் கிராமத்தில் செயல்கள் நிகழும் வேகம் என்பது மிகவும் மெதுவானது. அவர்கள் வாழ்க்கைமுறை அவ்வாறு அவர்களைப் பழக்கியிருக்கிறது. ஒரு செயல் செய்ய மூன்று நாட்கள் தேவை எனில் அதைச் செய்ய முப்பது நாட்கள் ஆகி விடும். மூன்று நாள் செய்ய வேண்டிய வேலையை முப்பது நாட்கள் செய்கிறார்களா என்றால் அப்படியில்லை ; செயலை 27ம் நாள்தான் துவக்குவார்கள். அதனை ஏன் முதல் நாளே துவக்கவில்லை என்றால் அவர்களுடைய சுபாவம் எதனையுமே ஒத்திப் போடுதல் தான். அதன் மூலவேர் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கைக் குறைபாடு. நான் அவர்களுக்கு நம்பிக்கையளிக்கவே முயற்சி செய்கிறேன். இருப்பினும் எனக்குத் தோன்றும் எப்போது நான் திட்டமிடும் பணியில் கணிசமான அளவேனும் நிறைவேறும் என்று. மிகவும் மெதுவாக நடக்கிறதே என்று. ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை கூறினார் . '' I walk slowly but I never walk backward'' என்று. அந்த சொல்லைத் துணையாகக் கொண்டு கடந்து செல்வேன். 

இந்திய மரபு ‘’பிரக்ஞை’’ என்ற ஒன்றை முன்வைக்கிறது. விழிப்பு என்றும் விழிப்பு உணர்வு என்றும் அதனைக் கூறலாம். பிரக்ஞையின் மூலமாக நான் உண்மையைச் சென்றடைய முடியும் ; வாழ்வின் சாரமான உண்மையை உணர முடியும் என்பது நம் மரபின் வழிமுறை. மனிதன் சாமானிய விசேஷ உண்மைகளை பிரக்ஞைபூர்வமாக அறிய வேண்டியவன். 

ஒரு விவசாயிக்கு மரத்தினால் பயன் அடைய மரத்துக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற பிரக்ஞையை நான் உருவாக்க முயல்கிறேன் என எண்ணிக் கொள்வேன். 

நேற்று மாலை அந்த விவசாயியின் திடலுக்குச் சென்றிருந்தேன். கடந்த பதினைந்து நாட்களாக இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை நல்ல மழை பொழிந்து வருகிறது. அத்தனை மரக்கன்றுகளும் செழுமையாக வளர்ந்திருந்தன. பத்து அடி உயரத்துக்கு மேல் அனைத்தும் சென்றிருந்தன. மரங்கள் நன்றாகப் பருக்கத் தொடங்கி உள்ளன. மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியை நீராகக் கொண்டு என் அகம் வளர்கிறது. 

Saturday 22 October 2022

உயிர்மொழி

ஊரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி ஆலயத்துக்கு சென்றிருந்தேன். பேராற்றல் கொண்டது வராகம். மண்ணைக் குத்திக் கிழிப்பது. இந்திய மரபில் மண்ணைக் குத்தி தோண்டும் செயல் விவசாயத்தின் அடிப்படை செயலாகக் கொள்ள்படுகிறது. ஏரை வணங்குதல் என்பது நாடெங்கும் உள்ள மரபு. பொன்னேரால் ஜனகர் நிலத்தை உழுத போது மண்ணிலிருந்து கண்டறியப்பட்டவள் மண்மகள் சீதை என்கிறது ராமாயண காவியம். வராக ரூபம் மனித முயற்சிக்கு சமூகச் செழுமைக்கு ஆசியளிக்கும் தெய்வம் என்பது நாட்டின் தொல்நம்பிக்கை. உலகின் மகத்தான சாம்ராஜ்யங்களில் ஒன்றான விஜயநகரப் பேரரசு வராகத்தைத் தன் கொடியில் கொண்டிருந்தது. விஜயநகரப் பேரரசின் பொன் நாணயங்களில் வராக ரூபம் பொறிக்கப்பட்டிருந்தது. இன்றும் பொன்னின் அளவை வராகன் எனக் கூறுவதற்கான காரணம் அதுவே. 

ஒரு சிறு கிராமத்தில் அமைந்திருக்கும் பேராலயம். அளவில் சிறிதென்றாலும் பேராலயம் என்று சொல்லத்தக்கது. பூவராக சுவாமி ஒரு குழந்தையைப் போல் இருக்கிறார். அவரது உடல்மொழி ஒரு குழந்தைக்கு உரிய ஒன்றாக இருக்கிறது. உடல் கிழக்கு திசை நோக்க முகம் தெற்கு திசையை நோக்கியிருக்கிறது. சுயம்புவாக பூமியில் கிடைத்த பெருமாள். 

ஓர் இளம் தம்பதி குழந்தைப்பேறு வேண்டி பூவராக சுவாமியை வணங்க வந்திருந்தார்கள். அங்கே இருந்த சந்தானகிருஷ்ணன் சிலையை பட்டர் ஒரு தட்டில் வைத்து அவர்கள் இருவரையும் கிருஷ்ணனின் பாதங்களைத் தொட்டு வணங்கச் சொன்னார். கிருஷ்ணன் ஆனந்தமாக வெண்ணெயை ருசித்து உண்டு கொண்டிருக்கிறான். பின்னர் குழந்தைக் கிருஷ்ணன் தொட்டிலில் இடப்பட்டிருப்பதாக எண்ணி அந்த தம்பதிகள் இருவரையும் அந்த தட்டை தொட்டில் போல பாவித்து தொட்டிலாட்டச் சொன்னார். இருவரும் ஆட்டினார்கள். அப்போது அந்த கணம் சட்டென அங்கிருந்த அனைவருமே உணர்ச்சிகரமாகி விட்டதாக அனைவருக்கும் தோன்றியது. அந்த இளம்பெண் தொட்டிலாட்டிய போது யசோதையாக ஆனதாக எனக்குத் தோன்றியது. ‘’ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்’’ தவன் தானே ஸ்ரீகிருஷ்ணன். 

கோயிலின் ஒரு புறத்தில் சப்தமாதா ஆலயம் உள்ளது. பிராம்மி, இந்திராணி, வைஷ்ணவி, வராகி, கௌமாரி, மகேஸ்வரி, சாமுண்டி என இந்த ஏழு அன்னையரை வணங்கும் மரபு நாடெங்கும் உள்ளது. ஏழு என்ற எண் சிறப்பும் மகத்துவமும் கொண்டது. அங்கே பலர் அன்னையரிடம் தங்கள் பிராத்தனைகளை முன்வைத்துக் கொண்டிருந்தனர். 

தாயார் சன்னிதி தனியாக உள்ளது. அங்கே கோரைக்கிழங்கு பிரசாதம் கிடைத்தது. 

ஆலயத்தில் நாயக்கர் கால மண்டபம் ஒன்று உள்ளது. அங்கே அமர்ந்திருக்கும் போது ஆயிரம் ஆண்டுகளாக எத்தனையோ லட்சம் மக்கள் வந்து வழிபட்ட இறைமையை உணர்ந்து சென்ற இடத்தில் சில பொழுதுகள் இருக்க வாய்ப்பதற்க்கு இறைவனே காரணம் என எண்ணி இறைவனிடம் நன்றி சொன்னேன். 

இந்தியர்களின் வழிபாடு என்பதும் அவர்கள் கடவுளுடன் உணர்வுபூர்வமாக தங்களை பிணைத்துக் கொள்ளும் முறை என்பதும் தனித்துவமானது. அந்த பிணைப்பு அவர்களுக்கு மொழியின் மூலமாகவே உருவாகிறது. ராமனும் கிருஷ்ணனும் விநாயகரும் குமரனும் அவர்களுக்கு மொழி மூலமாகவே அறிமுகம் ஆகிறார்கள். அச்சு ஊடகம் என்பது உருவாகி நூறு ஆண்டுகளே ஆகிறது. அதற்கு முன் தெய்வ ரூபங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்திருக்க வாய்ப்பில்லை. தெய்வ விக்ரகங்கள் எல்லா வீடுகளிலும் இருந்திருக்க வாய்ப்பு கிடையாது. தெய்வச்சிலையை வீட்டில் வைத்து பூஜிக்க நியதிகள் அதிகம். அவ்வாறெனில் அவர்கள் வீட்டில் தீபத்தையே வணங்கியிருப்பார்கள். 

தங்கள் மொழி மூலமே தங்கள் கடவுளை உருவாக்கி தினமும் வணங்கியிருப்பார்கள். 

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே 

என்பது வினாயகப் பெருமான் குறித்த ஞானசம்பந்தரின் பாடல். 

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

என்பது அருணகிரி நாதரின் கந்தர் அனுபூதி. 

திருமுருக கிருபானந்த வாரியார் ஒவ்வொரு ஊரிலும் தனது உரையைத் தொடங்கும் போது இந்த இரண்டு பாடல்களையும் பாடி விட்டே தனது உரையைத் தொடங்குவார். 

மொழி மூலம் கடவுளை ஒவ்வொரு தினமும் உருவாக்கி அழைத்தல் என்பது மொழிக்கு நம் மரபு எத்துணை பெரிய இடம் அளித்திருக்கிறது என்பதற்கான சான்றாகும்.  

இன்று தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு மொழி அறிமுகம் என்பதே இல்லை. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் தமிழ் தெளிவாக வாசிக்கக் கூடிய எழுதக் கூடிய  குழந்தைகள் பத்து சதவீதமாவது இருக்குமா என்பது  ஒரு பெரும் ஐயம். தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் கற்றல் கற்பித்தல் என்பதை இழந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கே தேர்வுகள் என்பவை ஒப்புக்காக நடத்தப்படுபவையே. ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி. பதினான்கு ஆண்டுகள் எதுவுமே படிக்காமல் பொதுத்தேர்வுக்கு வந்து விட முடியும். பொதுத்தேர்வு விடை திருத்தல்கள் மதிப்பெண்ணை அள்ளிப் போடும் நடவடிக்கை. தங்கள் இயலாமை வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஆசிரியர்கள் அரங்கேற்றும் நாட்கம். இவ்வாறு படித்த ஒரு தலைமுறை உருவாகி அதன் வாரிசுகள் இப்போது பள்ளி செல்கின்றனர். தமிழ்நாட்டில் எந்த ஒரு பள்ளிக்கும் சென்று நான்கு மாணவர்களை வாசிக்கச் சொல்லி எழுதச் சொல்லி பரிசோதித்து நான் கூறும் கூற்று உண்மையா இல்லையா என எவரும் அறிந்து கொள்ளலாம். 

நம் பண்பாடு என்பது நம்  மொழியில் உள்ளது. எந்த சமூகமும் தனது மொழி மூலமாகவே தனது பண்பாட்டின் சாரத்தை அடைய முடியும். உலகில் தமிழ்ச் சமூகம் போல் தனது மொழியைப் பண்பாட்டை தானே அழித்துக் கொள்ளும் வேறொரு சமூகம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. 
  

ஒரு சின்ன வாக்குவாதம்

சரீர பலம் உள்ள ஒருவர் நாடகங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். தான் நடிப்பில் சிறந்த ஒருவர் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. அவருடைய எண்ணத்துக்கு மற்றவர்கள் ஒப்புகை அளிக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருக்கிறது. தான் எவ்வாறு சிறந்த நடிகன் என்பதற்கு அவர் தர்க்கபூர்வமாக சில காரணங்களை ஒவ்வொன்றாகச் சொல்கிறார். யாரும் சமாதானம் ஆகவில்லை. குறிப்பாக அவரது கடையின் பணியாளர். ‘’பெரிய வசிஷ்ட மகரிஷியா நீ’’ எனக் கேட்டு விட்டு ஒரு சின்ன வாக்குவாதத்தை முடித்து விட்டு கிளம்புகிறார் தன்னை ‘’பிரம்மரிஷி’’ என நினைத்துக் கொள்ளும் ஒருவர்.  

Friday 21 October 2022

பண்டிகைக்கு முன்னான தினங்கள்

எனது கட்டுமானத் தொழிலுக்கு ஒரு வசதி உண்டு. கட்டுமானம் நிகழும் களத்துக்கு அனைவருமே காலை வந்து விடுவார்கள். ஜல்லி காலையில் ஆறு மணிக்கு வரும். பொறியாளர்கள் ஜல்லி வருவதற்கு முன்னரே வந்து காத்து நிற்பார்கள். அதன் பின்னர் நீண்ட நேரம் கழித்து தொழிலாளர்கள் வருவார்கள். மாலை 6.30 அளவில் பணிகள் நிறைவு பெறும். களத்தில் தினமும் கட்டிடம் எழும்பிக் கொண்டே இருக்கும். எனவே ஒரு முறை சென்ற களத்துக்குள் மறுமுறை செல்ல முடியாது. நதியைப் போல கட்டிடம் நகர்ந்து  கொண்டிருக்கும். நதி கிடைமட்டமாக நகரும். கட்டிடம் செங்குத்தாக வளரும். களத்தில் அனைவருடைய கவனமும் பணி முன்னேற்றம் குறித்தே இருக்கும் என்பதால் களத்துக்கு வந்து விட்டாலே ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கிட முடியும். களத்துக்கு செல்லுதல் என்பதும் களத்தில் இருத்தல் என்பதுமே முதன்மையான பங்கைப் பெற்று விடும்.  

தொழிலுக்கு வந்த நாளிலிருந்து எனது பழக்கம் காலை எழுந்ததும் களத்துக்கு ஒருமுறை செல்வேன். கட்டு வேலை, பூச்சு வேலைக்கு முறையாகத் தண்ணீர் பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வேன். அன்றைய பணிகளுக்குத் தேவையான சிமெண்ட் முதலிய பொருட்களை எடுத்து வைக்கச் சொல்வேன். களத்தில் இருக்கும் பொருட்களின் ஸ்டாக்கை அவதானிப்பேன். இடத்தைக் கூட்டி தூய்மையாக வைக்கச் சொல்லி வற்புறுத்துவேன். பணி வெளியூரில் நடந்தால் காலை சரியாக எட்டு மணிக்கு அங்கே சென்று விடுவேன். எங்கள் தொழிலில் நாங்கள் இருக்கும் இடம் நோக்கியே எல்லாரும் வருவார்கள். மெட்டீரியல் சப்ளையர்கள், தொழிலாளர்கள் என அனைவரும். சப்ளையர்கள் அவர்களுடைய பணியாளர்களை களத்துக்கு அனுப்பி பணம் பெற்றுக் கொள்வார்கள் அல்லது இரவு ஏழு மணிக்கு மேல் அவர்கள் நிறுவனத்துக்குச் சென்று செட்டில் செய்வோம். 

எனது தந்தை தொழில் விஷயத்தில் அனைத்துமே மிகத் துல்லியமாக நிகழ வேண்டும் என விரும்பக் கூடியவர். பணியின் தரம் உன்னதத்துக்கு இம்மி கூட குறையக் கூடாது என்ற எண்ணத்தைத் தீவ்ரமாகக் கொண்டவர். அவரிடம் பயிற்சி பெற்றதால் என்னிடமும் அந்த விஷயங்கள் உள்ளன. 

எங்கள் தொழில்வலை என்பது ஊருக்குள்ளேயே அடங்கக் கூடியது. சிமெண்ட், ஸ்டீலில் பணியின் பெரும்பான்மையான பங்கு நிறைந்து விடும். கொத்து வேலை செய்பவர்கள், கம்பி வேலையாளர்கள், தச்சர்கள் என இவர்கள் தான் பணிக்களத்தில் அதிக நாட்கள் வேலை செய்பவர்கள். கம்பிப்பணி மற்றும் கொத்துப் பணியிலேயே பெரும்பான்மைப் பணி நிறைந்து விடும். எனவே களத்துக்கு வெளியே எங்களுக்கு வேலை என்பது மிகவும் குறைவு. அலைபேசி இல்லாமல் தொலைபேசியைக் கொண்டே எங்கள் பணியை நிர்வகித்திட முடியும். 

சில நாட்களாக தொழில் தொடர்பான சில பணிகள். ஒரு பணியினைத் துவங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறேன். பலவிதமான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. கடுமையான அலைச்சல். 

கடைத்தெரு மக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மக்கள் முகங்களில் பண்டிகை குறித்த ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் காண முடிகிறது. பண்டிகைகளின் போது தோரணங்கள் மூலம் வீடுகளை அலங்கரிக்கலாம். ஒவ்வொரு பண்டிகைக்கும் தென்னைத் தோரணங்கள் கட்டலாம். இதனால் கைவினைஞர்கள் பயன் பெறுவார்கள். எளிதானவை மாவிலைத் தோரணங்கள். நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். 

நான் பண்டிகை தினத்தன்று நண்பர்களை அவர்களுடைய வீட்டுக்குச் சென்று சந்திப்பதையும் ஆலயங்களுக்குச் செல்வதையும் பயணம் செய்வதையும் விரும்புவேன். பண்டிகைக்கு முன்பான தினங்களும் அவ்வாறானவை.

நேற்று எனக்கு இருந்த கடும்பணிக்கு அப்பாலும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி விபரம் கோரி இரண்டு மனுக்கள் அனுப்பினேன். மனு அனுப்புவது என்பது சாதாரணமாகத் தோன்றும். ஆனால் கணிசமான நேரத்தை எடுத்துக் கொள்ளும். கணினியில் தட்டச்சிட வேண்டும். அதனை விரைவாகச் செய்து விடுவேன். பின்னர் இணைய மையத்துக்கு அதனை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். அங்கு சென்று பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். அங்கேயே அந்த மனுவில் கையெழுத்திட வேண்டும். அதன் பின் ரூ. 10 க்கான மனு வில்லை வாங்க வேண்டும். அது வாங்க வேண்டிய இடம் இணைய மையத்திலிருந்து தள்ளி இருக்கும். அதனை வாங்கி வந்து மனுவில் ஒட்டி அந்த மனுவை நகலெடுக்க வேண்டும். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து காகித உறையில் மனுவை இட்டு உறைமேல் முகவரி எழுத வேண்டும். தபால் அலுவலகம் சென்று பதிவுத் தபாலில் அனுப்பி விட்டு அவர்கள் தரும் ரசீதை நகல் மனுவில் ஒட்டி கோப்பில் இட வேண்டும். மனுவை தட்டச்சிடத் தொடங்குவதிலிருந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகி விடும். ஒரு பிரிண்டர் வாங்கி விடலாம் என திட்டமிட்டுள்ளேன். ரூ. 5000 என்ற விலையில் கூட நகலெடுப்பானுடன் கூடிய பிரிண்டர் கிடைக்கிறது. வாங்கினால் நேரம் கணிசமாக மிச்சமாகும். 

நேற்று காலை செயல் புரியும் கிராமத்துக்குச் சென்று விஜயதசமி அன்று நடப்பட்ட தேக்கு மரக் கன்றுகள் எவ்விதம் உள்ளன என்று பார்வையிட்டு வந்தேன். அங்குள்ள நண்பர்களைச் சந்தித்து விட்டு வந்தேன். 

சனிக்கிழமையன்று காலை கிளம்பி ஊருக்கு வடக்கே இருக்கும் சில ஆலயங்களுக்குச் சென்று வரலாம் என ஒரு எண்ணம் உள்ளது. தில்லை தொடங்கி மரக்காணம் வரை.  ஞாயிறன்று ஊருக்கு மேற்கே இருக்கும் ஆலயங்களுக்கு சென்று வர எண்ணம். திட்டை தொடங்கி புன்னைநல்லூர் வரை. தீபாவளியன்று ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமியை வணங்கச் செல்ல வேண்டும் என எண்ணியுள்ளேன். ஈஸ்வர ஹிதம்.  

Thursday 20 October 2022

வெங்கிடு சார் ஏன் ஓடினார்?

வெங்கிடு ஓர் அப்பாவி. மன்னார்குடியில் குடியிருக்கிறார். மன்னார்குடி அக்கம்பக்கம் உள்ள கிராமங்களுக்கு மையமான ஊர். ஆஸ்பத்திரி, கோவில், கல்யாண மண்டபம் , பள்ளிக்கூடம் என பல விஷயங்கள் இருக்கும் ஊர். சொந்தக்காரர்கள் தொடர்ந்து விருந்துக்கு வந்து விடுகிறார்கள். பல நாட்கள் இருந்து விருந்துண்டு விட்டு ஏதேனும் குறை சொல்லி விட்டி போய் விடுகிறார்கள். இது பல வருடமாக வெங்கிடு சாருக்கு வாடிக்கையாகப் போய் விட்டது. இவரால் இதனைச் சமாளிக்க முடியவில்லை.  

பல நாட்கள் இருந்த விருந்தை ‘’ஒரு வழியாக’’ வண்டியேற்றி விட்டு விட்டு வீட்டில் ‘’அப்பாடா’’ என்று இருக்கும் போது ஒரு சிறுவன் பசி என்று பிச்சை கேட்கிறான். வீட்டில் உணவு ஏதும் இல்லை. சில்லரைக் காசுகளைத் தருகிறார். ஒரு கணத்தில் அவன் இவரை ஏமாற்றி இருக்கிறான் எனப் புரிந்து கொண்டு அவனைத் துரத்திக் கொண்டு தெரு தெருவாக ஓடுகிறார். அவன் சிறுவன். சிட்டாகப் பறந்து விடுகிறான். 

ஒரு பெட்டிக்கடையில் கடன் சொல்லி லைம் ஜூஸ் வெங்கிடு சார் குடிக்கும் போது சிட்டான பையன் அதே கடைக்கு வந்து கம்பீரமாக சோடா ஆர்டர் செய்கிறான். இருவரும் பரஸ்பரம் பார்த்துக் கொண்ட பின் சிட்டு ஓடுகிறான். வெங்கிடு துரத்துகிறார். வெங்கிடு ஓட்டத்தின் போது கீழே விழுகிறார். சிறுவன் அவர் அளித்த காசை அவரிடம் வீசி விட்டு ஓடி விடுகிறான். 

Wednesday 19 October 2022

கோதாவரிக் குண்டு

மனிதர்கள் செலவழிக்கும் விதமும் பொருளீட்டும் அளவும் நேர் விகிதத்தில் இருப்பதில்லை. நடுத்தர வர்க்கத்துக்கு அனாதி காலமாக இருக்கும் சிக்கலே இதுதான். ஒரு நடுத்தரவர்க்க ஆசாமி பழைய ஆறு மாத செய்தித்தாளை பழைய பேப்பர்காரரிடம் எடைக்குப் போட்டு ஆறு ரூபாய் தேற்றுகிறார். அவரது மனைவியின் சினேகிதி அதில் ஒரு ரூபாயை தன் வீட்டின் கோதாவரிக் குண்டு பாத்திரத்தை அடகாக வைத்து கடனாக வாங்கிப் போகிறார். அன்று மாலை அந்தப் பெண்மணியின் கணவனை கடைத்தெருவில் பார்க்கிறார். அவள் கடனாக ஒரு ரூபாய் பெற்றது எதற்காக என அறிய நேரிடும் போது ஒரு மெல்லிய அதிர்ச்சி அவருக்கு உண்டாகிறது. சுவாரசியமான கதை.  

சி. பி. கி. ரா. ம். ஸ் - விளைவு

சி. பி. கி. ரா. ம். ஸ் குறித்து முன்னரே எனது தளத்தில் எழுதியிருக்கிறேன். இது மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் புகார் துறையின் இணையதளம். மக்களுக்கு அரசுத்துறைகள் மீது அரசு அலுவலகங்கள் மீது அல்லது அவர்களுக்கு நேரடியாகத் தொடர்புடைய விஷயங்கள் மீது புகார் ஏதேனும் இருப்பின் இந்த தளத்தில் நேரடியாகப் பதிவு செய்யலாம். மேலதிகாரிகள் பலருக்கு ஒரே நேரத்தில் இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரியிடம் இந்த விஷயம் சென்று சேரும். மேலதிகாரிகள் கவனம் இருப்பதால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை துரிதமாக நிகழும் வாய்ப்பு அதிகம். எந்த விதமான புகாராக இருந்தாலும் நாற்பது நாட்களுக்குள் பதிலளிக்கப்பட வேண்டும் அல்லது தீர்வு காணப்பட வேண்டும் என்பது இதன் கால நியதி. 

என்னுடைய முதல் புகாரை சி.பி.கி.ரா.ம்.ஸ் இணையதளம் மீது பதிவு செய்தேன். அதில் பதிவு செய்ய அந்த தளத்தில் உள்நுழைகையில் முகவரியைப் பதிவு செய்யக் கோரியது. கணிணியில் மாநிலம் பதிவு செய்தால் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களைக் காட்டும். அதில் மயிலாடுதுறை மாவட்டம் இல்லை. மயிலாடுதுறை புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் என்பதால் அதன் பெயர் இல்லை. பழைய மாவட்டமான நாகப்பட்டினத்தை குறிப்பிட வேண்டியிருந்தது. 

இந்த விஷயத்தை சுட்டிக் காட்டி மயிலாடுதுறையை மாவட்டங்களின் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோரியிருந்தேன். சி. பி. கி. ரா. ம். ஸ் தில்லி அலுவலகம் இதனை தமிழ்நாடு முதலமைச்சர் பிரிவுக்கு அனுப்பியது. வெகு நாட்கள் இருந்த பின் இரண்டு நாட்களுக்கு முன் தில்லிக்கு சென்னையிலிருந்து அனுப்பப்பட்டது. அதன் மீது எடுக்கப்பட்ட் முடிவுகள் என்ன என்று நாம் அவ்வப்போது அந்த தளத்திற்கு சென்று பதிவு எண்ணை உள்ளிட்டு அறிய முடியும். நேற்று இரவு கூட நிலவரம் என்ன என்று பார்த்தேன். நிலுவை என்ற பழைய நிலையே இருந்தது. 

இன்று ஒரு அலைபேசி அழைப்பு. சுட்டிக்காட்டப் பட்ட விஷயம் தீர்வு காணப்பட்டது என்று தெரிவித்தார்கள். நான் தளத்தில் சோதித்தேன். மயிலாடுதுறை மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. 

சற்று கூடுதல் அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டதால் ‘’சராசரி’’ என மதிப்பீடு அளித்தேன்.  

நாய்க்கர் திருப்பணி

தமிழ்நாட்டு மக்களுக்கும் வினாயகருக்கும் உள்ள உறவு மிக அலாதியான ஒன்று. இன்றும் தமிழ்நாட்டில் வீதிக்கு வீதி இருக்கும் ஆலயங்களில் வினாயகர் ஆலயங்களே மிகுதி. விநாயகர் ஒரு செயல் துவங்கும் போது - துவங்கி நிகழ்த்தும் போது - ஏற்படும் விக்னங்களை நீக்கி செயல் சீராக நடைபெற உதவும் கடவுள். தமிழ்நாடு பெரும்பாலும் விவசாய நாடு. மழை, நீர் பாய்ச்சல், பனி, அறுவடை , ஆள் தேவை என பல விஷயங்களை நூறு நாட்கள் இடைவெளியில் தாண்டி பயிர் வளர்த்து அறுவடை செய்யும் வெள்ளாமையை மேற்கொள்ளும் நாடு. ஒவ்வொரு நிலையிலும் விக்னங்களைக் கடந்து வர வேண்டிய தொழில்முறை. எனவே விவசாயிகள் எப்போதும் விநாயகர் துணையை நாடுவார்கள்.  

வினாயகர் எங்கும் எளிதில் இருப்பார். ஆற்றங்கரையில் குளக்கரையில் வீதி முக்கில். வயலில் தோட்டத்தில் என எங்கும் எளிதில் பொருந்திக் கொள்வார். பிரதிட்டை பூசனை ஆகிய வழிமுறைகள் எளிதானவை. வினாயகருக்கு அருகம்புல் சாத்தினால் போதும். ஒரு தீபம் ஏற்றினால் போதும். தினசரி என்பது அவருக்குக் கணக்கில்லை. எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். வெயில் மழை அவருக்கு ஒரு பொருட்டில்லை. 

தமிழ்நாட்டில் குறிப்பாக தஞ்சைப் பிராந்தியத்தில் ஒரு பழக்கம் உண்டு. எவரேனும் சிலர் வினாயகர் கோவில் கட்ட வேண்டும் என விரும்பினால் வெளியூரில் வெட்ட வெளியில் இருக்கும் வினாயகரை இவர்கள் ஊருக்குத் தூக்கி வந்து விடுவார்கள். வெளியூர் காரர்கள் பொழுது விடிந்து வினாயகர் இருக்கும் இடம் வெற்றிடமாக இருப்பதைக் கண்டால் வேறு வினாயகர் சிலையை செய்து பிரதிட்டை செய்து கொள்வார்கள். அவர்கள் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல வினாயகரே முடிவெடுத்து விட்டதாகவே அவர்கள் எண்ணுவார்கள். அதனால் தான் இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது என அந்நிகழ்வைப் புரிந்து கொள்வது அவர்களின் வழக்கம். 

இந்த விஷயத்தைப் பின்புலமாகக் கொண்டு தி.ஜா எழுதிய சிறப்பான கதைகளில் ஒன்று நாய்க்கர் திருப்பணி. 

சக்தி வைத்தியம்

ஜானகிராமன் என்ற அமரத்துவம் பெற்ற கலைஞனின் அமரத்துவமான கதைகளில் ஒன்று ‘’சக்தி வைத்தியம்’’. 

இந்தக் கதையில் ஒரு குழந்தை வருகிறான். ‘’குழந்தை’’ என்றே தி.ஜா சொல்கிறார். பெயர் குறிப்பிடாதது ஒரு புனைவு உத்தி. உலகின் எல்லா குழந்தைகளும் அவனுடைய சாயலைக் கொண்டவை அல்லது உலகின் எல்லா குழந்தைகளின் சாயலையும் அவன் கொண்டிருக்கிறான். 

இந்திய மரபு எட்டு வயது வரை எல்லா குழந்தைகளும் ஒன்றே என்கிறது. அதாவது எட்டு வயது வரை எந்த குழந்தைக்கும் எந்த சமூக அடையாளமும் கிடையாது. சமூக அடையாளம் என்றால் இன்ன குடும்பத்துக்கு உரியது என்றோ இன்ன குலத்தைச் சேர்ந்தது என்றோ இன்ன கடமைகளைக் கொண்டது என்றோ எந்த நியதியும் கிடையாது. ஒரு ஊரில் ஒரு குழந்தை இருக்கிறது என்றால் அந்தக் குழந்தையின் மீது அன்பு செலுத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அந்த குழந்தையை எவரும் சீராட்டலாம். இதன் காரணமாக குழந்தை எல்லாரிடமும் உரிமை எடுத்துக் கொள்ளலாம். எட்டு வயது வரையிலான பாலபருவம் குழந்தைகளுக்கு விளையாட்டுக்கும் கொண்டாட்டத்துக்கும் உரியது. எந்த ச்மூக அடையாளமும் சமூகப் பொறுப்பும் எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்குக் கிடையாது. கிருஷ்ணன் அப்படித்தான் இருந்திருக்கிறான். ராமன் அப்படித்தான் இருந்திருக்கிறான்.  

‘’சக்தி வைத்தியம்’’ கதையில் வரும் சிறுவன் வீட்டையும் பள்ளியையும் பாடாய் படுத்துகிறான். ஆங்கில ரைம் களை வீட்டில் இருக்கும் ஒவ்வொருத்தர் காதிலும் காட்டுக் கத்தலாய் கத்துவது தான் அவனது பிரத்யேகக் கொண்டாட்டம். கொல்லைக்கும் வாசலுக்கும் ஓடுவது கத்து கத்தென்று கத்துவது இதுதான் அவனது நித்யபடி வாழ்க்கை. மூன்று வயதுதான் ஆகிறது. சிறப்பாக ஓவியம் வரைகிறான். 

அவனது ஆங்கில ஆசிரியை ஒருநாள் அவனது வீட்டுக்கு வந்து அவன் அன்னையிடம் குழந்தையைக் கொஞ்சம் கண்டித்து வளருங்கள் என்று சொல்கிறாள். 

குழந்தையின் அன்னைக்கு மனது வலிக்கிறது. குழந்தையின் அன்னை ஏழு மகவுகளைப் பெற்றவள். அனைவருமே நுண்கலைகளில் சிறந்தவர்கள். மூத்த மகனுக்கு பதினாறு வயது . குழந்தைக்கு இப்போது மூன்று வயது. இன்னும் ஒரு கைக்குழந்தை இருக்கிறது. தனக்குத் தெரிந்த விதத்தில் நன்றாக வளர்த்திருக்கிறோமே ஆனால் இப்படி ஒரு பழி வந்து விட்டதே என வருத்தம் கொள்கிறான். ஆசிரியை புகார் சொல்லும் போது குழந்தை எங்கோ ஓடிச் சென்று விட்டான். திரும்பி வரும் போது ஒரு அட்டைப்பெட்டி நிறைய நந்தியாவட்டை மலர்களை கொண்டு வருகிறான். சுவாமிக்கு பூ கட்டிப் போடுங்கள் என்கிறான். அன்னை அவனை எண்ணி கண்களில் நீர்த்திரை கொள்கிறாள். 

சில நாட்கள் கழித்து , குழந்தையின் அன்னை ஆசிரியையைக் காண அவளது வீட்டுக்குச் செல்கிறாள். ஆசிரியையின் அன்னை ஆசிரியை குழந்தைகளையும் குடும்பத்தையும் பராமரிக்கும் விதம் குறித்து சோகமாக அங்கலாய்க்கிறாள். 

தமிழில் ஒரு பழமொழி உண்டு . ‘’ஒத்த புள்ள பெத்தவ எட்டு புள்ள பெத்தவளுக்கு பேறு பார்த்தது போல ‘’ என்று. அந்த பழமொழி இந்த சிறுகதையை வாசித்த போது நினைவில் வந்தது. 

தீர்மானம்

1957ம் ஆண்டு தி.ஜா எழுதியுள்ள சிறுகதை இது. தமிழ்ச் சமூகத்தில் இரு குடும்பங்கள் திருமண உறவு மூலம் இணையும் நிகழ்வு என்பது எளிய ஒன்று அல்ல ; பல்வேறு உள்சிக்கல்களால் ஆனது. பல்வேறு உணர்ச்சிகரங்கள் மோதிக் கொள்ளும் வெளி அது. ஒரு பணக்காரத் தந்தையின் மகளான சிறுமி சட்டெனத் தீர்மானித்து தனது புகுந்தக உறவினர்களுடன் அவர்கள் வீட்டுக்குச் செல்ல முடிவெடுக்கிறாள். தந்தை மகள் இருவருமே தீர்மானித்தால் அதனை நிறைவேற்றுபவர்கள். தந்தை மகள் அவர்களுடன் சென்று விட்டாள் என்பதை வீட்டிலிருந்த தனது சகோதரி மூலம் அறிந்து ஜட்கா வண்டி கட்டிக் கொண்டு தனது மகளுக்கு - தனது மகளுக்கு மட்டும் - உணவு கட்டிக் கொண்டு சென்று அவளை உண்ண வைக்கிறான். தந்தையின் மீது புகார் ஏதும் இன்றி அதனை உள்வாங்கிக் கொள்கிறாள் மகள்.  

Tuesday 18 October 2022

அட்சராப்பியாசம்

பொருள் பற்று மிகுந்த ஒருவன் பொருள் பற்றின் காரணமாக சித்த சுவாதீனம் இல்லாமல் போகிறான். சித்த சுவாதீனம் இல்லாத நிலையிலும் தனக்குத் தேவையானதை எத்தனை சிரமப்பட்டாலும் பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறான். அவனது இந்த சுபாவத்தை அவதானிக்கும் ஒருவர் அவன் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் முடிவு சொல்கிறார். 

முள்முடி

தி. ஜானகிராமனின் ஆகச் சிறப்பான கதைகளில் ஒன்று ‘’முள்முடி’’. 

அனுகூலசாமி ஓர் ஆசிரியர். நல்தந்தை. இனிய கணவர். ஒரு சிறுகதையில் அவரது இந்த மூன்று குணங்களையும் சிறு சிறு நுண் காட்சிகள் மூலம் சித்தரித்துக் காட்டுவதின் உணர்ச்சிகரம் ஜானகிராமனுக்கே உரிய பிரத்யேக பாணி. 

தமிழ்ச்சூழலில் ஒரு மனைவி கணவனை முற்றாக அறிவாள். கணவனின் அக இயல்பும் புற இயல்பும் மனைவிக்கு முழுதாகத் தெரியும். அறுபது வயதானதன் அனுபவம் நிரம்பப் பெற்றிருக்கும் ஒருவரை அவரது மனைவி பெருமிதத்துடன் காதலுடன் நோக்கி நேசம் கொள்வது என்பது அபூர்வமான தருணம். இந்த சிறுகதையில் அவ்வாறான ஒரு தருணத்தை தி. ஜா உருவாக்கிக் காட்டுகிறார். 

அனுகூலசாமியின் மகள் லூசியா அவள் சிறுமியாய் இருக்கும் போது அவளது ஆசிரியர் ஸ்கேலால் ஒருமுறை அடித்து விடுகிறார். அவளது உடலில் இருந்த கோடைக்கட்டி உடைந்து லூசியா துடித்துப் போய் விடுகிறாள். குழந்தைகளான பள்ளி மாணவர்களை அடிப்பதில்லை என்பதை சுபாவமாகக் கொண்டவர் அனுகூலசாமி. அவரது இந்த ‘’சுபாவத்தை சங்கல்பமாக ‘’ இந்த சம்பவத்துக்குப் பின் அவர் மாற்றிக் கொண்டதாக தி. ஜா குறிப்பிடுகிறார். 

ஓய்வு பெறும் நாளன்று மனித குமாரனின் நினைவு அனுகூலசாமிக்கு வருகிறது. சக மானுடருக்காகவும் இன்னும் பிறக்காத தலைமுறைக்காகவும் சிலுவையில் ஏறிய முள்முடி சூடிய சூடிய ஏசுவின் படத்தையும் ஒரு ஆட்டுக்குட்டியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருக்கும் ஏசுவின் படத்தையும் அனுகூலசாமி பார்க்கிறார். மன்னித்தலே மானுட விழுமியம் என வாழ்நாள் முழுவதும் சொன்னவனின் படங்கள். 

சிறப்பான விதத்தில் பிரிவுபசார விழா நடக்கிறது. 

விழா முடிந்து கொஞ்ச நேரம் கழித்து சின்னையா என்ற மாணவனையும் அவனது அன்னையையும் கிளாஸ் லீடர் அழைத்து வருகிறான். சின்னையா ஒரு வருடம் செய்த பிழை ஒன்றுக்காக முழுக் கவனமின்றி ‘’அவனுடன் யாரும் பேசாதீர்கள்’’ என அனுகூலசாமி கூறி விடுகிறார். அதை அனைத்து மாணவர்களும் சிரமேற்கொண்டு பின்பற்றி விடுகின்றனர். சின்னையா தனித்து விடப்படுகிறான். அவனை பிரிவுபசார விழாவுக்கு வரக் கூடாது என்றும் அவன் பங்களிப்பை அவன் தரக்கூடாது என்றும் கூறி விடுகின்றனர். அவன் மனத்தை அது வாட்டுகிறது. அவனுடைய அன்னையிடம் முறையிட்டு ஆசிரியரைப் பார்க்க கிளாஸ் லீடருடன் வந்திருக்கிறான். 

அனுகூலசாமி அதிர்ச்சி அடைகிறார். அவரது ஆசிரிய வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததில்லை. இப்போது அவர் செய்த ஓர் அறியாப் பிழை கவனத்துக்கு வந்திருக்கிறது. கொஞ்ச நேரம் முன்பு வரை அவர் மீது உரைக்கப்பட்ட பாராட்டுகள் மலர்கிரீடமாக இருந்தன; அதனை அவர் இப்போது முள்கிரீடமாக உணர்கிறார். 

இந்த சிறுகதையில் இரண்டு ஓவியங்கள் வருகின்றன. முள்முடி ஏந்திய மனிதகுமாரனின் ஓவியம். இன்னொன்று ஓர் ஆட்டுக்குட்டியை தன் மார்போடு அணைத்துக் கொண்டிருக்கும் மனித குமாரனின் ஓவியம். அந்த ஆட்டுக்குட்டி மந்தையிலிருந்து பிரிந்து தனித்து விடப்பட்டிருக்கும் ஆட்டுக்குட்டி. மந்தையில் பிரிந்து துயருறும் ஆடே மனித குமாரனின் நேசத்தை மேலும் பெறுகிறது. 

அனுகூலசாமியின் செயலால் ஓராண்டாக சின்னையா தனித்து விடப்பட்டு விட்டான். 

இந்த ஓவியங்கள் சிறுகதையை மேலும் அணுகி அறிய அடிக்குறிப்பு என்று எனக்குத் தோன்றியது. 

சின்னையாவுடன் எல்லா மாணவர்களும் பேசுங்கள் என அனுகூலசாமி கூறுகிறார் ; பொங்கிய அழுகையை சிரிப்பாக்கிக் கொண்டு.  

Monday 17 October 2022

யாதும் ஊரே

சென்னைவாசி ஒருவருக்கு கிராமத்தில் மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது. சென்னையில் மாத சம்பளம் வாங்கி நடுத்தர வாழ்க்கை வாழும் அவர் மனைவியுடன் மூன்று மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த கிராமத்துக்கு வருகிறார். பட்சிகளின் ஒலி நிறைந்திருக்கும் கிராமம். அந்த பட்சிகளின் பெயர்களையும் அவை எழுப்பும் ஒலிகளையும் விவரிக்கையில் நாம் ஜானகிராமன் பெருங்கலைஞன் என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறோம். செக்கு மாடு போல மாறாமல் வாழும் வாழ்க்கையை தற்காலிகமாக மாற்றியமைத்துக் கொண்டதில் சென்னைவாசிக்கு அகநிறைவு. 

ஊருக்கு ஒரு சந்நியாசி வருகிறார். காவி உடுத்தியவர். பிச்சை எடுத்து வாழ்பவர். சென்னைவாசி அவரை வீட்டுக்கு வரவேற்று உணவளித்து உபசரிக்கிறார். பக்கத்து கிராமத்தில் இராமாயணம் கதை சொல்கிறார்கள் என சென்னைவாசியின் கிராமத்தில் சிலர் புறப்படுகிறார்கள். அவர்களுடன் சென்னைவாசியும் துறவியும் புறப்படுகிறார்கள். 

இராமாயண உபன்யாசகர் துறவிக்குத் தெரிந்தவர். அவர் துறவியின் பூர்வாசிரம் கதையைச் சொல்கிறார். துறவியின் பூர்வாசிரமப் பெயர் சந்தானம். குழந்தைச் செல்வம் இல்லாதவர். ஐந்து வேலி நிலத்துக்கு சொந்தக்காரர். உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் போது தாயாதிகளின் சூழ்ச்சியால் ஆபத்சந்யாசம் வாங்கி விடுகிறார். எதிர்பாராதவிதமாக உடல்நிலை சீராகி விடுகிறது. வேறு வழியின்றி சந்யாச வாழ்க்கை மேற்கொள்வதாய் முடிவு செய்கிறார். இந்த கதையை உபன்யாச்கர் கூறும் போது துறவி கண்ணீர் சிந்துகிறார். 

அனைவரும் ஊருக்குத் திரும்புகின்றனர். சென்னைவாசி தன் மனைவியிடம் நடந்ததைச் சொல்கிறார். மனைவி சிரித்தவாறு ‘’துறவி அழுதாரா’’ எனக் கேட்டு அவரது தாயாதிகளோடு சமாதானம் செய்து வையுங்கள் ஊருக்கு வெளியில் இருந்து தனக்கு சொந்தமாய் இருந்த பண்ணையின் மேற்பார்வையைப் பார்க்கட்டும் என சிரித்தவாறே கூறுகிறாள்.  

Sunday 16 October 2022

ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள்


வங்க எழுத்தாளர் மைத்ரேயிதேவியின் ‘’நா ஹன்யதே’’ வங்க நாவலை வங்க மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த சு. கிருஷ்ணமூர்த்தியின் இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் ‘’ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள்’’.  ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் மாஸ்கோவின் தொழிலாளர்களுடன் சேர்ந்து ஜார் மன்னனின் ஆட்சியை அகற்றி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு லெனின் தலைமையில் ஆளத் துவங்கிய போது உலகெங்கும் இருந்து சிந்தனையாளர்களை தங்கள் நாட்டை தங்கள் நாட்டின் தலைநகரை தங்கள் கல்வி நிலையங்களைக் காண வருமாறு அழைத்தனர். அந்த காலகட்டத்தில் உலகெங்கும் இருந்த பல சிந்தனையாளர்கள் ரஷ்யாவிற்குச் சென்று ரஷ்யா குறித்த தங்கள் அவதானங்களை எழுதியிருக்கின்றனர். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் ரஷ்ய கம்யூனிச அரசாங்கம் டிராட்ஸ்கி போன்ற சிந்தனையாளர்களையும் ஆசிப் மண்டல் ஸ்டம் போன்ற கவிஞர்களையும் கொன்றொழித்தது என்பது வரலாற்றின் நகைமுரண் அல்லது கம்யூனிஸ்டுகளின் ஆட்சிப் பாணி. 

போல்ஷ்விக்குகள் ஆட்சியைக் கைப்பற்றி 13 ஆண்டுகளுக்குப் பின்னால் தாகூர் ரஷ்யா செல்கிறார். பொருளாதார நிபுணர் பி.சி. மகலனோபிஸ், அவரது மனைவி நிர்மல் குமாரி, ஓவியர் நந்தலால் போஸ், மேலும் சில கவிஞர்களுக்கு ரஷ்யா குறித்து ரஷ்யாவிலிருந்தும் ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பும் வழியில் அமெரிக்கா ஐரோப்பாவிலிருந்தும் கடிதம் எழுதுகிறார். 

தாகூர் இருபதாம் நூற்றாண்டில் மிக முக்கியமான இலக்கிய ஆளுமை. இலக்கியம் மட்டுமல்லாது கல்வி, க்லை, நுண்கலை , அரசியல் என வெவ்வேறு துறைகளில் செயலாற்றிய செயல்பாட்டாளர். 

நூலில் பல இடங்களில் சோவியத் யூனியனை மதிப்பிட 13 ஆண்டு காலம் போதுமா என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டு விடுகிறது. அதனைப் பல கடிதங்களில் அவர் வெளிப்படுத்துகிறார். சோவியத் யூனியன் சர்வாதிகாரப் போக்கைக் கொண்டிருப்பது ஆபத்தானது அபாயகரமானது என்ற எண்ணம் கொண்டவராக இருக்கிறார் தாகூர். இந்தியாவில் உள்ள குலங்கள் குடிகளினும் அதிக எண்ணிக்கையில் குலங்களையும் குடிகளையும் கொண்ட சமூகமாக ரஷ்யா இருப்பதை தாகூர் முன்வைக்கிறார். பொதுவாக இந்தியச் சமூகம் குறித்து பேசும் போது அதன் வெவ்வேறு குழுக்கள் குறித்துப் பேசுவதும் மேலைச் சமூகங்கள் மற்றும் ரஷ்யா குறித்துப் பேசும் போது அதனை ஒற்றைப்பட்டையான சமூகம் என முன்வைப்பதும் கம்யூனிஸ்ட்டுகளின் இயல்பு. நுண்ணுணர்வு மிக்க தாகூரின் கண்களுக்கு ரஷ்யச் சமூகத்தின் வேற்றுமைகளும் கண்ணுக்குத் தெரிகின்றன. 

கூர்மதி கொண்டவரான தாகூர் பிரச்சாரத் தளத்தில் இந்தியா குறித்த அவதூறுகள் பரப்பப்படும் போது அவற்றின் பொய்த்தன்மையை தர்க்கபூர்வமாக முறியடிக்கிறார் . உதாரணத்துக்கு, இந்தியாவின் சிக்கல்களுக்கு பெரிய காரணம் அதன் மக்கள்தொகைப் பெருக்கம் என்கிறது பிரிட்டன். ஆனால் தாகூர் 30 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 30 சதவீதம் கூடியுள்ளது ; ஆனால் பிரிட்டன் மக்கள்தொகை அதே காலகட்டத்தில் 60 சதவீதம் கூடியுள்ளது என்ற புள்ளிவிபரத்தை முன்வைக்கிறார். 

செல்வத்தை ஒரு மனிதத்தன்மையுள்ள ஒரு மனிதன் தான் கையாள வேண்டும்; எந்திரம் போன்ற இறுக்கமான ஓர் அமைப்பு செல்வத்தைக் கையாள்வது சமூகத்துக்கு அழிவைக் கொண்டு வரும் என்ற தாகூரின் தொலைநோக்கை அவரது கடிதங்களில் காண முடிகிறது. சோவியத் யூனியன் உடைவுடன் இணைந்து யோசிக்கத்தக்க வரி இது. 

இந்தியாவில் புண்ணியத்தலங்களை கடந்த நூற்றாண்டுகளில் மக்கள் நடந்து சென்று தரிசித்தது போல ஒவ்வொரு இந்திய மாணவருக்கும் தம் கல்வியின் ஒரு பகுதியாக ஐந்து ஆண்டுகள் நாடெங்கும் பயணிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்து அப்போதே அவர்கள் கல்வி நிறைவு பெறும் என்ற தன் அபிப்ராயத்தை முன்வைக்கிறார் தாகூர். 

பல மாதங்கள் ரஷ்யாவில் தங்கியிருந்த தாகூரின் கடிதங்களில் அவரது மனத்தின் முழுச் சமநிலையை உணர முடிகிறது. நூலில் அவரது கடிதத்தில் ஒரு வரி இவ்வாறு உள்ளது : 

‘’நடுக்கடலில் மிதந்து கொண்டிருக்கிறேன். அக்கரையில் எனக்கு என்ன காத்திருக்கிறது என்று தெரியாது. உடல் தளர்ந்திருக்கிறது. உள்ளத்தில் சோர்வு. காலியான பிச்சையோட்டைப் போல் பெரிய சுமை வேறெதுவுமில்லை. நான் அதைக் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டு எப்போது விடுதலை பெறப் போகிறேன்?’’

***
நூல் : ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள், பக்கம் : 126 விலை : ரூ. 100 , பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 98. 

பிறவி

எல்லா நாளும் பிறக்கிறது
முதல் சூரியக் கதிர்
எல்லா நாளும் பிறந்து 
மலர்கின்றன
வான் நோக்கும் மலர்கள்
ஒவ்வொரு கணமும் 
நகர்ந்து கொண்டேயிருக்கும் 
நதியின் பிறப்பு
எப்போதும் நிகழ்கிறது
கடலில் பிறந்தவள் திருமகள்
என 
கதைசொன்னாள்
ஓர் அன்னை
தன் குழந்தைக்கு 

Saturday 15 October 2022

சிலிர்ப்பு

தி. ஜானகிராமன் என்ற மகத்தான மாபெரும் கலைஞனின் ஆகச் சிறப்பான கதைகளில் முதன்மையானது ‘’சிலிர்ப்பு’’. 

பிறரைத் தான் என உணரச் செய்யும் கணம் மானுடர்களுக்கு எப்போதோ எப்படியோ வாய்த்து விடுகிறது. ஒரு கணமேனும் அதனை உணராத மானுடர்கள் என எவரும் இல்லை. 

ஆறு வயதும் பத்து வயதும் கொண்ட இரு குழந்தைகள் திருச்சிராப்பள்ளி - மாயவரம் பயணிகள் வண்டியில் பயணிகளாகப் பயணிக்கிறார்கள். வெள்ளை உள்ளம் கொண்ட மாசின்மையின் புனிதம் நிறைந்த இரண்டு குழந்தைகள். அந்த குழந்தைகளின் பெற்றோர் அன்றாடங்காய்ச்சிகள். அதன் விளைவாக அந்நிலையின் சிரமங்களை எதிர்கொள்ள அக்குழந்தைகளுக்கு நேர்கிறது. 

கும்பகோணம் வரை செல்லும் குழந்தை தன் அன்னையிடம் சென்று கொண்டிருக்கிறது. மாயவரம் செல்ல வேண்டிய குழந்தை தன் அன்னையிடமிருந்து பிரிந்து வந்து கொண்டிருக்கிறது. 

கல்லும் கரையும் வண்ணம் எழுதப்பட்ட கதை தி. ஜானகிராமனின் ‘’சிலிர்ப்பு’’. 

அடுத்த

மயிலாப்பூரில் வசிக்கும் கோபால் ராவ் ஒரு ஹோட்டல் சிப்பந்தி. கூடமும் அறையும் ஒன்றாக இருக்கும் ஒரு வீட்டில் மனைவி மற்றும் எட்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சில குழந்தைகள் அம்மாவின் பிரசவத்துக்கு உதவும் வயதில் இருக்கின்றன. சில குழந்தைகள் அம்மா பிரசவ வலியால் சிரமப்படுவதை புரிந்து கொள்ள இயலாத வயதில் உள்ளன. அண்டை வீட்டுக் காரர்களும் நண்பர்களும் ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்கிறார்கள். வண்டி வருவதற்குள் பிரசவம் ஆகி விடுகிறது. அடுத்த பிரசவத்துக்கு ஆம்புலன்ஸை முன்கூட்டியே வரும் விதத்தில் ஏற்பாடு செய்து விட வேண்டும் என்று சொல்கிறார் கோபால் ராவ் ! 

கதையில் இடம் பெறும் சில வரிகள் புன்னகைக்க வைப்பவை. 

‘’ஜனங்கள் நாலு எட்டு பதினாறு என்று பெருகினால் உணவுப் பொருள் நாலு ஆறு எட்டு என்று தான் பெருகுமாம். சரியாக ஞாபகம் இல்லை’’

‘’இந்த வாசுவோட நின்னு போயிடுச்சுன்னு நினைச்சன். பகவான் இன்னும் சோதிக்கிறார் மாமி. ‘’

‘’இந்த மாதிரி ஒரே ரூமில் குடித்தனம் பண்றவாளையும் நாப்பது சம்பளம் வாங்கறவாளையும் சோதிக்கா விட்டால் பகவான் என்று சொல்ல முடியுமா அவரை?’’

திண்ணை வீரா

ராமநாதபுரம் கலெக்டர் ஆஃபிஸில் பணி புரியும் கதைசொல்லி நண்பன் செந்திருவைக் காண்பதற்கு தஞ்சாவூர் ஜில்லா கிராமம் ஒன்றுக்கு வருகிறான். குத்தாலத்துக்கும் ஆடுதுறைக்கும் பக்கத்தில் இருக்கும் கிராமம். கதையில் ஊர் பெயர் இல்லை. கதையில் வரும் உரையாடலில் இந்த குறிப்பு வெளிப்படுத்தப்படுகிறது. கதைசொல்லி வானம் பார்த்த பூமியிலிருந்து வருபவன். அவனது கண்களுக்கு தஞ்சை மண் நிழலாகவும் நீராகவும் தெரிகிறது. உணவு தானியங்கள் வாசலுக்கு வாசல் குவிந்து கிடப்பதை ஆச்சர்யமாகப் பார்த்த வண்ணம் நண்பனின் ஊருக்கு வந்து சேர்கிறான். 

நண்பன் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு அசல் தஞ்சாவூர் நிலச்சுவான்தார் வசித்திருக்கிறார். திண்ணையில் இருந்தவாறே ஊரின் கொடுக்கல் வாங்கல் லெவி டெவி விஷயங்களைப் பைசல் செய்கிறார். அழுத்தமான குரல். தொடர் வார்த்தைப் பிரயோகங்கள். ‘’எட்டுக் கண்ணை விட்டெறிந்து ‘’ மேற்பார்வையையும் செயல் ஒருங்கிணைப்பையும் மேற்கொள்பவர். ஊர் மக்களிடம் ‘’திண்ணையிலிருந்து இப்ப எழுந்து வந்தன்னா’’ என ஒரு பயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். 

காலையிலிருந்து திண்ணையில் உட்கார்ந்திருப்பவர் மாலை விளக்கு வைத்ததும் வீட்டுக்குள் சென்று விடுகிறார். அவர் எவ்வாறு வீட்டினுள் நுழைகிறார் என்பதில் சிறுகதைத் திருப்பத்தை வைத்திருக்கிறார் தி.ஜா.