Monday 31 January 2022

சாமானியனின் குரல்

என் கவனத்துக்கு நேரடியாக வரும் விஷயங்கள் குறித்து ஏதேனும் செய்ய முயல்வது என்ற தீர்மானத்தில் இருக்கிறேன்.  சமூக விழிப்புணர்வு என்பது சமூகத்தின் அங்கமான மக்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து அறிந்திருப்பதும் உணர்ந்திருப்பதும் சிந்திப்பதும் தான். எந்திர கதியான தன்மை கொண்ட பழக்கம் என்பது மக்கள் வாழ்க்கைமுறையை பெருமளவு கட்டமைத்து விடுகிறது. அதிலிருந்து விடுபட்டால் மக்கள் தங்கள் துயரிலிருந்து சிறிதளவாவது மீள்வர். அந்த சிறிதளவு மீட்சியையாவது அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே எனது செயல்முறைகளின் அடிப்படை. 

எனது தொடர்பில் இருக்கும் கிராமத்து மக்கள் பல விஷயங்கள் குறித்து என்னிடம் சொல்வார்கள். கேட்பார்கள். 

அவர்களால் எளிதாக செய்யக் கூடிய விஷயங்களை அவர்களுக்கு ஒருங்கிணைத்துக் கொடுத்தாலே அவர்கள் அதனை முன்னெடுத்துச் செல்வார்கள். இன்று மாலை ஒரு விவசாயியை அஞ்சல் அலுவலகத்தில் தற்செயலாகப் பார்த்தேன். ‘’ சார் ! நீங்க கொடுத்த தேக்கு கன்னு இப்ப 15 அடி உய்ரம் வளந்துருக்கு’’ என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. ‘’ஊர்ல மத்தவங்க மரம் எப்படி வளந்திருக்கு?’’ என்றேன் . எல்லாம் நல்லா இருக்கு என்றார். 

பல விதமான பணிகள். அதன் மறுபக்க உண்மையான பல விதமான கடுமையான அலைச்சல்கள். தனியாக பல விஷயங்களை செய்து கொண்டிருப்பதாக எப்போதாவது தோன்றும். நான் பணி என இறங்கி விட்டால் தீவிரமாக மிகத் தீவிரமாகப் பணியாற்றக் கூடியவன். என் சொந்த வேலையாக இருந்தாலும் அப்படித்தான். பொது வேலையாக இருந்தாலும் அப்படித்தான். 

நேற்று ஒரு தென்னந்தோப்பு ஒன்றில் என் நண்பர் ஒருவரிடம் என் பொது வேலைகள் குறித்து கூறிக் கொண்டிருந்தேன். அந்த தோப்பின் காவலர் நாங்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். நாங்கள் கிளம்பும் சமயத்தில் என்னிடம் சொன்னார். ‘’ சார்! நீங்க சரின்னு நினைக்கற விஷயத்தை தயங்காம செய்ங்க சார்.  ஜனங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினக்கறவங்களே கொறச்சல். செய்யணும்னு முடிவு செஞ்ச ஒருத்தரால கூட பல பேர் வாழ்க்கைல மாற்றம் கொண்டு வர முடியும் ‘’ என்றார். 

Friday 28 January 2022

தினமணி செய்தி

கிராமத்தில் நிகழ்ந்த குடியரசு தினம் குறித்த செய்தியை இன்றைய தினமணி இதழ் (நாகப்பட்டினம் பதிப்பு) வண்ணப்படத்துடன் செய்தியாக வெளியிட்டுள்ளது.  

Thursday 27 January 2022

தீபங்களுடன் குடியரசு தினம்

தடுப்பூசிக்காகச் செயல் புரிந்த கிராமத்தில்,  இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டில் நிகழும் குடியரசு தினம் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை ஒட்டி கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் ஒரு மரக்கன்று வழங்கப்பட்டது. அதனை அவர்கள் குடியரசு தினத்தன்று காலையில் அவர்கள் வீட்டு வாசலிலோ அல்லது தோட்டத்திலோ நட்டனர். இதன் மூலம் அந்த கிராமத்தில் குடியரசு தினத்தன்று ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்கள் ஏற்றி குடியரசு தினத்தைக் கொண்டாடினர். தீபங்கள் ஏற்றும் நிகழ்வில் கிராமத்தின் எல்லா குடும்பங்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 









Monday 24 January 2022

உலகினும் பெரிது

இன்று ‘’காவிரி போற்றுதும்’’ உவகையும் பெருமிதமும் கொள்ளும் விதத்தில் ஒரு செயல் நிகழ்ந்துள்ளது. குடியரசு தினத்தை ஒட்டி ஒரு கிராமத்துக்கு ஆயிரம் பூமரக் கன்றுகள் வழங்குவதாக முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. நாம் வழக்கமாக மரக்கன்றுகளை வாங்கும் நர்சரியில் இருந்த ஆயிரம் பூமரக் கன்றுகள் சட்டென விற்பனையாகி விட்டன. எனவே ஒரு புதிய ஊரில் இருந்து வாங்க வேண்டிய நிலைமை. எனக்கு கன்றுகளை கண்ணால் பார்த்து தேர்ந்தெடுத்தால் தான் திருப்தி. எனக்கு இங்கே கிராமத்தில் அதிகமான பணிகள் இருந்ததால் செல்ல முடியாத நிலை. புதுக்கோட்டையில் ஒரு நர்சரியில் ஆர்டர் செய்தோம். தொகையை இங்கிருந்து அவர்கள் கணக்கில் செலுத்தினோம். புதுக்கோட்டையிலிருந்து பூமரக் கன்றுகள் வர வேண்டும். 

புதுக்கோட்டையில் இருக்கும் எனது நண்பரும் நுட்பமான இலக்கிய வாசகரும் இயற்கை விவசாயம் பசுப் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னெடுப்பவருமான திரு. சிதம்பரம் அவர்களுக்கு காலையிலேயே ஃபோன் செய்து விபரத்தைச் சொன்னேன். விஷயத்தை முழுமையாக கிரகித்துக் கொண்டார். 

இன்று மதியம் நான் இங்கிருந்த அனுப்பிய வாகனத்துடன் புதுக்கோட்டையில் இணைந்து கொண்டு மூன்று நர்சரிகளுக்கு அந்த வாகனத்தை கூட்டிச் சென்று நான்கு மணி நேரத்துக்கு மேல் உடனிருந்து இருப்பதிலேயே ஆகச் சிறந்த பூமரக் கன்றுகளை ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார். ‘’காவிரி போற்றுதும்’’ சார்பில் நண்பருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தானும் ‘’காவிரி போற்றுதும்’’ பகுதி தானே தனியாக ஏன் நன்றி சொல்ல வேண்டும் என்பார் நண்பர். 

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

என்கிறார் பேராசான். 
 

முதல் நபர்


இன்று ஒரு கிராமத்தின் பகுதியாக இருக்கும் குக்கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒருவரைச் சந்திக்க வேண்டும். அந்த பகுதியில் 250 குடிசை வீடுகள் உள்ளன. நான் சந்திக்கச் சென்றவர் வீட்டில் இருந்தார். பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தேன். கிராமத்திற்குச் செய்யும் சேவை  நாட்டுக்குச் செய்யும் சேவை என்பதே ''காவிரி போற்றுதும்’’ பணிகளின் அடிப்படை.  மக்களைச் செயலாற்றச் செய்து அதன் மூலம் மக்களை இணைத்து கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் வளர்ச்சியை உருவாக்குவதே ‘’காவிரி போற்றுதும்’’ செயல்முறை. 

நிலம் என்பது ஸ்திரமானது. அதனால் தான் அதனை ‘அசையாச் சொத்து’ எனக் கருதுகிறோம். நிலத்துடன் தங்கள் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்டவர்கள் மனம் ஒரே விதமான செயல்முறைக்குப் பழகியிருக்கும். அதுவே இயல்பானது. அதில் சிற்சில மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என ‘’காவிரி போற்றுதும்’’ நம்புகிறது. அந்த நம்பிக்கையின் திசையில் பயணிக்கிறது. 

கிராம மக்கள் சந்திக்கும் சிக்கல்களாக பல விஷயங்களை ‘’காவிரி போற்றுதும்’’ அவதானிப்பதுண்டு. கிராம மக்களே தாங்கள் எதிர் கொள்ளும் இடர்களாக சில விஷயங்களை நம்மிடம் சொல்வதுண்டு. அவற்றைப் பரிசீலித்து செய்து கொடுக்க தொடர்ந்து முயல்வேன். 

நான் சந்திக்கச் சென்ற நபர் ஒரு சிக்கலை என்னிடம் சொன்னார். அதாவது , அவர்கள் குடியிருப்பு ஒரு பெரிய கால்வாயின் கரையில் உள்ளது. குடியிருப்புக்கு இட்டுச் செல்லும் பாதை ஒன்று மட்டுமே அவர்கள் இடத்துக்குச் செல்வதற்கு ஒரே வழி. அதே வழியாகவே திரும்பி வர வேண்டும். வேறு திசைகளில் எந்த சாலையும் கிடையாது. இந்த சாலையிலிருந்து தோராயமாக 500 மீட்டர் தூரத்தில் அவர்களுடைய மயானம் அமைந்துள்ளது. மண் சாலை. மழை பெய்தால் கணுக்கால் புதையும் அளவுக்கு சேறாகி விடுகிறது. இறந்தவரின் உடலைக் கொண்டு செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது என்று கூறினார். நான் அந்த இடத்தைப் பார்ப்போம் என்று சொல்லி அவருடன் புறப்பட்டேன். இடத்தினைப் பார்வையிட்டேன். 

’’கலெக்டர் கவனத்துக்கு கொண்டு போனீங்களா?’’

‘’ஊராட்சில தீர்மானம் போட்டு யூனியனுக்கு அனுப்பியிருக்கு சார்’’

‘’கலெக்டருக்கு ஒரு கடிதம் எழுதுவோம். அதுல இந்த பகுதி மக்கள் ட்ட மட்டும்னு இல்லாம ஒட்டு மொத்த கிராமத்திலயும் ஆயிரம் பேர்ட்ட கையெழுத்து வாங்கி அனுப்புவோம்.’’

‘’பொதுவா எங்க ஏரியா பிரச்சனைகள எங்க ஏரியா காரங்கதான் பாத்துப்பாங்க. ‘’

’’அதாவது நாம ஒரு விஷயம் செய்யணும்னு முயற்சி பண்றோம்னா நமக்கு எல்லா விதமான சப்போர்ட்டும் தேவை. நாம ஒரு நியாயமான விஷயத்தை முன்வைக்கிறோம். அதுக்கு நியாய உணர்வு இருக்கற பல பேரு தங்களோட ஆதரவைத் தருவாங்க. ஒரு விஷயத்துக்கு பல பேரோட ஆதரவு இருக்குன்னு ஆகும் போது நாம முன்வைக்கிற விஷயம் அதுக்கு சாத்தியமான ஒரு வழில தீர்வை அடைஞ்சுடும்.’’

பேசிக் கொண்டே அந்த 500 மீட்டர் தூரத்தைக் கடந்து அந்த மயானம் வரை சென்று விட்டோம். அந்த மயானத்தைப் பார்வையிட்டேன். 

‘’தூரம் அதிகமாயிருக்கு. அப்ரோச் ரோடு போட இவ்வளவு தொகை ஆகும்னு  பஞ்சாயத்து யூனியன்ல எஸ்டிமேட் எதுவும் போட்டிருக்காங்களா? உங்களுக்கு விபரம் தெரியுமா?’’

‘’தெரியல சார்’’

‘’நான் அடுத்த வாரம் மெஷரிங் டேப் எடுத்துட்டு வரேன். இந்த ரோடோட நீளம் அகலத்தை துல்லியமா அளந்துக்கறன். ஸ்ட்ரக்சர் டெமாலிஷ் பண்ண டப்ரீஸ் டிராக்டர்ல கொண்டு வந்து போட்டு நடந்து போக ஏற்பாடு செய்ய முடியுமான்னு பாக்கறன்.’’

‘’ரொம்ப கஷ்டமா இருக்கு சார். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க’’

‘’என்னால முடிஞ்சத நிச்சயம் செய்றேன்.’’

‘’சார் நான் பல பேர்ட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டேன். இந்த இடத்தை நேராப் பாக்கணும்னு ரோட்டில இருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி இருக்கற இந்த இடத்தை நேரடியா வந்து பாத்த முதல் நபர் நீங்க தான்.’’

‘’நம்ம எல்லாருக்குமே காசி ரொம்ப உசந்த புண்ணியமான இடம். அந்த காசியே ஒரு பெரிய மயானம் தான். மணிக்கர்ணிகா காட் மயானத்தோட முதல் பிணத்தின் சாம்பல்ல தான் காசி விஸ்வநாதருக்கு அதிகாலை அபிஷேகம் நடக்குது. இறந்த ஒருத்தரோட உடல் ஆறு மணி நேரத்துக்குள்ள எரியூட்டப்படணும்னு இந்தியாவோட யோக மரபு சொல்லுது. பலவிதத்திலயும் நாம முயற்சி செய்வோம்’’ என்று சொன்னேன். 

Saturday 22 January 2022

விதி மீறல் (நகைச்சுவைக் கட்டுரை)

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. 

அப்போது தரைவழித் தொலைபேசிகளே முக்கிய தகவல் தொடர்பு சாதனமாக இருந்த நேரம். ஊரில் ஒரு நண்பரை அவர் வீட்டுக்குச் சென்று அழைத்துக் கொண்டு அதன் பின் இன்னொரு நண்பர் வீட்டுக்குப் போய் அவரையும் கூட்டிக் கொண்டு பூம்புகார் செல்வதாகத் திட்டம். இரண்டாவது நண்பரின் கையில் அன்று இரு சக்கர வாகனம் இல்லை. அவருடைய வாகனத்தை அவரது சகோதரர் எடுத்துச் சென்று விட்டார். எனவே நான் சென்று அவரை என்னுடன் கூட்டிக் கொண்டால் தான் நாங்கள் மூன்றாவது நண்பரைச் சென்றடைய முடியும். இரண்டாம் நண்பரைக் காண சென்று கொண்டிருந்த போது எங்கள் மூவருக்கும் பொதுவான நண்பர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு ‘’லிஃப்ட்’’ கொடுத்தேன். பூம்புகார் செல்ல உத்தேசித்துள்ளோம் என்று சொன்னேன். அவரும் எங்களுடன் வர விருப்பம் தெரிவித்தார். அவரையும் அழைத்துக் கொண்டு இரண்டாம் நண்பரின் வீட்டுக்குச் சென்றேன். என்ன செய்வது என்று ஆலோசித்தோம். 

மூன்றாம் நண்பரை இங்கே வரச் சொல்லி விடுவோம். நாம் அப்போது நான்கு பேராக இருப்போம். இரு வாகனங்கள் நம்மிடம் இருக்கும். வாகனத்துக்கு இருவர் என பூம்புகார் பயணிப்போம் என்றேன். ஆனால் மூன்றாம் நண்பரின் வீடு  பூம்புகார் சாலையில் இருக்கிறது. நாங்கள் இருக்கும் இடத்துக்கு அவர் எதிர் திசையில் வர வேண்டும் என்பதால் நண்பர்கள் இருவரும் அவருடைய இடத்துக்கு ஒரே இரு சக்கர  வாகனத்தில் மூன்று பேர்  செல்வோம் என்று கூறினர்.

‘’அது அஃபென்ஸ்’’ என்றேன் நான். 

‘’பிரபு ! நீங்க எப்பவுமே இப்படி தான். போற வழியில போலீஸ் பீட் எதுவும் கிடையாது. நாம பத்து நிமிஷத்தில் அவர் வீட்டுக்குப் போயிடலாம்’’

கட்டாயமாக என்னை வண்டியில் ஏற்றி புறப்பட்டனர். 

செல்லும் வழியில் ஒரு கல்யாண மண்டபத்துக்கு எதிரில் இருந்த ஒரு மரத்தின் நிழலில் வெள்ளைச் சீருடை அணிந்த போக்குவரத்துக் காவலர்கள் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். எங்களை அவர்கள் பார்த்து விட்டனர். நாங்கள் வண்டியை ஓரங்கட்டினோம். வண்டி என்னுடையது. அதனால் வண்டியின் ஆர். சி. புத்தக நகலையும் காப்பீட்டு நகலையும் நான் கொண்டு போய் காண்பித்தேன். வண்டியை ஓட்டிய நண்பர் அவருடைய ஓட்டுனர் உரிமத்தின் நகலைக் காண்பித்தார். மீண்டும் அவற்றை வண்டியில் கொண்டு வந்து வைத்துக் கொண்டோம். 

காவலர் எங்களைப் பார்த்து ‘’டூ வீலர்ல எத்தனை பேர் வருவீங்க’’ என்றார். 

‘’சாரி சார். நாங்க செஞ்சது தப்புதான்’’ என்றேன். 

காவல் ஆய்வாளர் ‘’ஏட்டையா ! என்ன விஷயம் ‘’ என்றார். அவரிடம் செல்லச் சொன்னார் காவலர். 

நான் அவரிடமும் சென்று ‘’சாரி சார்’’ என்றேன். 

‘’ஏட்டையா ஆர் . சி , லைசன்ஸ் செக் பண்ணீங்களா’’

‘’இருக்கு சார் ‘’ என்றார் தலைமைக் காவலர். 

‘’சொல்லுங்க’’ என்றார் எங்களைப் பார்த்து. 

மீண்டும் அவரிடம் ‘’சாரி சார்! நாங்க செஞ்சது தப்பு தான்’’ என்றேன். 

‘’நீங்க எந்த தப்பும் செய்யல தம்பி. எம்.ஜி. ஆர் முதலமைச்சரா இருக்கறதுக்கு முன்னாடி சைக்கிள்ல ரெண்டு  பேர் போனா தப்பு. சைக்கிள்ல டைனமோ லைட் இல்லாம போனா தப்புன்னு ரூல்ஸ். அவர் முதல்வரா இருந்த பீரியட்ல அந்த விஷயத்துக்கு அனுமதி கொடுத்திட்டாங்க. அதனால அது தப்பு இல்லாம ஆயிடுச்சு. இப்ப டூ வீலர்ல மூணு பேரு போகக்கூடாதுன்னு ரூல்ஸ் . நீங்க அந்த ரூல்ஸ் ஐ ஒபே பண்ணல. அவ்வளவு தான். நீங்க செஞ்சிருக்கறது விதி மீறல்’’ என்றார். 

நான் ஒன்றும் சொல்லாமல் இருந்தேன். மற்ற இரண்டு பேரும் எதுவும் பேசாமல் தள்ளி இருப்பதைக் கண்டு அவர்களை விசாரித்தார். 

‘’சார் பிரபு மூணு பேர் போக வேண்டாம்னு தான் சார் சொன்னார். நாங்க தான் கட்டாயப்படுத்திக் கூட்டிட்டு வந்தோம். ‘’ 

‘’அப்ப அவர் ஃபைன் கட்ட வேண்டாம். நீங்க கட்டுங்க’’ என்றார். 

‘’பூம்புகார் போகலாம்னு கிளம்பினோம் சார்’’ என நடந்ததைக் கூறினர். காவல் ஆய்வாளர் எங்களுக்கு அபராதம் ஏதும் விதிக்காமல் அனுப்பி வைத்து விட்டார். 


Thursday 20 January 2022

கோர்ட் ( நகைச்சுவைக் கட்டுரை)

இந்த சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் இருக்கும். 

நான் எனது இரு சக்கர வாகனத்தின் - வீட்டில் உள்ள மோட்டார் வாகனங்களின் காப்பீடை உரிய தேதியில் செலுத்தி வைத்திருப்பேன். காப்பீட்டு நகலும் வாகன பதிவு ஆவணங்களின் நகலும் வண்டியில் எப்போதும் இருக்கும். ஒருநாள் மதியம் வண்டியை வாட்டர் வாஷ் செய்ய வாட்டர் வாஷ் மையத்திற்கு எடுத்துச் சென்றேன். அப்போது ஆவண நகல்களை வீட்டில் வைத்து விட்டு சென்றேன். நனைந்து விடக் கூடாது என்பதற்காக. வீடு திரும்பியதும் மீண்டும் எடுத்து வைக்க மறந்து விட்டேன். 

அன்று இரவு, எனது நண்பர் ஒருவரை ரயிலேற்றிவிட ஜங்ஷன் சென்றேன். வீடு திரும்புகையில் நகரின் மையப்பகுதியில் காவல்துறை சோதனை நடந்து கொண்டிருந்தது. எனது வாகனத்தை நிறுத்தினார்கள். ஆவணங்களின் நகலைக் கேட்டார்கள். 

‘’டாகுமெண்ட்ஸ் வீட்ல இருக்கு.’’

‘’ஃபைன் கட்டுங்க’’

‘’எதுக்கு?’’

‘’ஆர் சி புக் ஜெராக்ஸ் இல்ல. இன்ஷ்யூரன்ஸ் ஜெராக்ஸ் இல்ல.’’

‘’இன்ஷ்யூரன்ஸ் கரண்ட்ல தான் இருக்கு. ஆர் சி ஜெராக்ஸ் வீட்ல இருக்கு. நான் காலைல கொண்டு வந்து தர்ரேன்.’’

மற்றவர்களை விசாரிக்கத் தொடங்கினர். 

ஒரு கான்ஸ்டபிள் என்னிடம் வந்து ‘’ சார் இருநூறு ரூபாய் ஃபைன் கட்டிடுங்க’’ என்றார். 

’’ஃபைன் எழுதிக் கொடுங்க. நான் கோர்ட்டில் கட்டிடறன்’’

கான்ஸ்டபிள் அவருடைய மேலதிகாரியிடம் சென்று சொன்னார். பின்னர் ஒரு அச்சிடப்பட்ட நோட்டை எடுத்து என்னுடைய பெயர் விலாசம் எழுதிக் கொண்டு அதன் ஒரிஜினலை என்னிடம் தந்து விட்டு கார்பன் காப்பியை நோட்டிலேயே தக்க வைத்துக் கொண்டார். நான் வீட்டுக்கு வந்து மேஜை மேல் வைத்து விட்டு உறங்கி விட்டேன். காலை எழுந்ததும் அதனை எடுத்து வாசித்துப் பார்த்தேன். அதில் அசல் ஆவணங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு காட்டப்பட வேண்டும் என்றிருந்தது. அபராதத் தொகை என எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆவணங்களைக் கொண்டு வரும் போது அவை நடப்பில் இல்லாமல் இருந்தால் அபராதம் காவல் நிலையத்தில் செலுத்தப்பட வேண்டும் என இருந்தது.  ஒரிஜினல் ஆவணங்களை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று அங்கே இருந்த துணை ஆய்வாளரிடம் அவற்றைக் காண்பித்து விபரம் சொன்னேன். அவர் இன்ஷ்யூரன்ஸ் நடப்பில் இருக்கிறதா என பார்த்தார். ஆர் சி புத்தக ஒரிஜினலையும் பார்த்தார். எல்லாம் சரியாக இருக்கிறது எனக் கூறினார். நான் அவருடைய பெயரைக் கேட்டேன். சொன்னார். அந்த படிவத்தின் பின்புறம் எழுதிக் கொண்டேன். அவரது அலைபேசி எண்ணையும் கேட்டு  எழுதிக் கொண்டேன். வீட்டுக்கு வந்து விட்டேன். அந்த படிவத்தை கிழித்துப் போட்டு விடலாமா என எண்ணினேன். இல்லை வேண்டாம் என மனத்தின் ஒரு பகுதி சொன்னது. என்னுடைய மேஜை டிராயரின் அடியில் அதனை வைத்தேன். 

ஆறு மாதம் கழித்து எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. கோர்ட்டிலிருந்து பேசுவதாகச் சொன்னார்கள். வண்டி ஒரிஜினல் இல்லாமல் சென்றது தொடர்பாக அபராதம் செலுத்த வேண்டும் . உடனே வாருங்கள் என்றனர். அப்போது ஊரில் கோர்ட்டுக்கு புதுக் கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தார்கள். எனவே அருகருகே இருந்த மூன்று கல்யாண மண்டபங்களை வாடகைக்குப் பிடித்து கோர்ட் இயங்கிக் கொண்டிருந்தது. எந்த கல்யாண மண்டபத்துக்கு வர வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அங்கே சென்றேன். 

ஒரு போலீஸ்காரர் ஃபைன் கட்டுகிறீர்களா என்று கேட்டார். 

எதற்காக என்று கேட்டேன். 

பதிவாகியிருக்கிறது அதற்காக என்றார். 

நான் என் பாக்கெட்டில் இருந்த படிவத்தை எடுத்தேன். போலீஸ்காரர் அதனை எதிர்பார்க்கவில்லை. ஆர் சி புத்தகத்தின் நகலையும் இன்ஸ்யூரன்ஸ் நகலையும் காண்பித்தேன். இரண்டும் நடப்பில் இருப்பதை சுட்டிக் காட்டினேன். மேலும் காவல்துறை படிவத்தில் அடுத்த நாளே சென்று காவல் துணை ஆய்வாளரை சந்தித்து அவரது பெயரையும் அலைபேசி எண்ணையும் எழுதி வைத்திருப்பதைக் காண்பித்தேன். 

’’ஒரு மினிமம் அமௌண்ட் ஃபைன் கட்டுங்க. ஃபைன் கட்ட முடியாதுன்னா ஒரு வக்கீல் வச்சு வாதாடுங்க.’’

‘’எதுக்கு வக்கீல். நானே நடந்ததை சொல்றன். ஆர் சி புக்கும் காப்பீடும் எனக்கு படிவம் தந்த நாள்லயே நடப்புல இருக்கு. சரியா சொன்னா அதுக்கு மூணு மாசம் முன்னாடிலேந்து நடப்புல இருக்கு. இப்பவும் கரண்ட் தான். அதாவது காவல்துறை படிவம் தந்த நாளைக்குப் பிறகு நான் இன்ஸ்யூரன்ஸ் கட்டல. அதுக்கு மூணு மாசம் முன்னாடியே கட்டியிருக்கன். ஃபைன் கட்ட சொல்ற இன்னைக்கும் எல்லாம் கரண்ட்ல இருக்கு. அதுனால இதை தள்ளுபடி செய்யணும்னு ஜட்ஜ் கிட்ட கேக்கறன்’’ என்றேன்.  

போலீஸ்காரர் சோர்ந்து விட்டார். 

‘’சார் ! நீங்க லா படிச்சவரா?’’

‘’இல்ல. சிவில் என்ஜினியரிங் படிச்சன். பி. ஈ’’

‘’நாங்க இந்த ஃபார்மை கேன்சல் செஞ்சுக்கறோம் சார்.’’ 

நான் கிளம்பி விட்டேன். 

இந்த உரையாடல் அனைத்தும் திருமண மண்டப வாசலிலேயே  அதாவது கோர்ட்  வாசலிலேயே நடந்தது. நான் கோர்ட்டின் உள்ளே செல்லவேயில்லை. 

Wednesday 19 January 2022

அசைவு

நீ என்றோ அணிந்திருந்த
கண்ணாடி வளையல்கள்
ஒலித்த ஒலி
இப்போது 
அருகில்
மிக அருகில்
என நெருங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு கையின் வளையல்களை
கன்னத்தில் வைத்துக் கொண்டாய்
ஒளி மின்னின
வளையல்கள்
கண்கள்
ஏன் கண் கலங்குகிறாய்
என்றேன்
ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை
எனக் கூறி
இல்லத்தின் மாடிப்படிகளில் 
ஏறினாய்
தரையிலிருந்து 
நட்சத்திரங்கள் மின்னும் வானத்துக்கு

குளோஸ் கட்

சிறு வயதில் என்னைத் தந்தை சலூனுக்கு அழைத்துச் செல்வார். சலூன்காரரிடம் எனக்கு ‘’குளோஸ் கட்’’ பாணியில் முடி வெட்டக் கூறுவார். ஒவ்வொரு முறையும் இப்படியே சொல்வார். நான் சிறுவனாக இருந்ததால் அதன் அர்த்தம் தெரியாது. ஒருநாள் அதன் அர்த்தம் என்ன என்று கேட்டேன். இராணுவத்தில் பணி புரிபவர்கள் அனைவரும் தலைமுடியை ஒட்ட வெட்டியிருக்க வேண்டும். இந்த பாணி முடிவெட்டுதலுக்கு ‘’குளோஸ் கட்’’ என்று பெயர் என என் தந்தை கூறினார். கடற்படையில் பணி புரிபவர்கள் கிருதாவை சுத்தமாக மழித்து முடி வெட்டியிருப்பார்கள். அதற்கு ‘’நேவி கட்’’ என்று பெயர் என மேலதிக விபரமும் தந்தார்.  சற்று பெரியவனாகி சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டதும் முடி வெட்டிக் கொள்ள நானே செல்ல ஆரம்பித்தேன். சலூன் நாற்காலியில் ஏறி அமர்ந்ததும் மாறாச் சடங்காக ‘’குளோஸ் கட்’’ என்பேன். இது முப்பது வயது வரை நீடித்தது. நான் முடி வெட்டிக் கொள்ளும் சலூன் கடைக்காரர் சிங்கப்பூர் சென்று விட்டார். அதனால் ஒரு புதிய சலூனுக்கு சென்றேன். அவர் ‘’குளோஸ் கட்’’ ஐ விட சிறப்பான சில முறைகள் உள்ளன எனக் கூறி முடியை அளவாக வெட்டுவார். நான் சரி அப்படியே இருக்கட்டும் என விட்டு விட்டேன். அவ்வாறு ஒரு பத்து வருடம் ஓடிவிட்டது. 

சலூன்களுக்கு சுவாமி விவேகானந்தர் நூல்களை வழங்கிய போது சீர்காழியில் ஒரு கடைக்காரர் தனது சலூனுக்கு ஒரு பகவத்கீதை நூலை வழங்க முடியுமா என்று கேட்டார். நெடுநாட்கள் அங்கு செல்ல வாய்ப்பு இல்லாமல் இருந்தது. சில முறை நான் மறந்து விட்டேன். ஓரிரு முறை அவர் ஃபோன் செய்து நினைவுபடுத்தினார். நேற்று இரவு, இன்று காலை 7 மணிக்கு அங்கு செல்வதாக முடிவு செய்தேன். காலையில் அங்கு சென்றேன். சலூன் திறந்திருந்தது ஆனால் சலூன்காரர் அங்கே இல்லை. பக்கத்தில் இருந்த ஒரு தேனீர்க்கடையில் இருந்தார். சில மாதங்கள் முன்னால் பார்த்தது. முகம் ஒரு புகைமூட்டமாகவே நினைவில் இருந்தது. என் கையில் பகவத்கீதை புத்தகத்தைப் பார்த்ததும் அவருக்கு ஞாபகம் வந்து விட்டது. என் அருகில் மகிழ்ச்சியுடன் வந்தார். என்னைத் தேனீர் அருந்துமாறு சொன்னார். பிரியத்துடன் உபசரிக்கிறார் ; மறுத்தால் வருந்துவார் என்பதால் அவருடன் தேனீர் அருந்தினேன். பின்னர் இருவரும் சலூனுக்கு வந்தோம். பகவத்கீதையை அவரிடம் வழங்கினேன். 

எனக்கும் முடி வெட்ட் வேண்டியிருந்தது. வாடிக்கை சலூன் என்றால் சீர்காழி சாலையிலிருந்து அது ரொம்ப தூரம். எனவே இந்த கடையிலேயே முடி வெட்டிக் கொண்டு ஊருக்குச் சென்று விடலாம் என ‘’கட்டிங் & ஷேவிங்’’ என்றேன். சலூன் நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். சிறுவனாக இருந்த போது சொல்வதைப் போல ‘’குளோஸ் கட்’’ என்றேன். மெஷினை வைத்து கர கர என்று குளோஸ் கட் அடித்து விட்டார். ரொம்ப குறைந்து விட்டதோ என ஓர் ஐயம் எழுந்தது. சிறிது நேரம் ஆனதும் அப்படி இல்லை என்று தோன்றியது. 

எனது தொழிலுக்கு ‘’குளோஸ் கட்’’ மிகவும் உகந்தது. சற்று கறாரான ஆள் எனக் காட்டும் . தலையில் நீர் கோர்க்காது. சிகை பராமரிப்புக்கென நேரம் ஒதுக்கத் தேவையில்லை. சீப்பு கூட கையில் வைத்துக் கொள்ள வேண்டாம். 

சலூன் கடைக்காரர்களுக்கு வங்கிகள் அவசியம் முத்ரா லோன் வழங்க வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச கடன் தொகையான ரூ. 50,000 வழங்கலாம். ஒரு நகராட்சிப் பகுதிக்குள் 100 சலூன்கள் இருக்கும். செவ்வாய்கிழமை சலூன்கள் விடுமுறை . அன்று எல்லா சலூன்காரர்களுக்கும் ஒரு ‘’மீட்டிங்’’ நடத்தி முத்ரா லோன் குறித்து விளக்கி அவர்களில் யாருக்கு கடன் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு கடன் உதவி செய்யலாம். சலூன்கடைக்காரர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 வாடிக்கையாளர்களுக்காவது முடி வெட்டி விடுவார்கள். ஒரு நாளைக்கு அவர்கள் சம்பாத்தியம் குறைந்த பட்சம் 700லிருந்து 1000 வரை இருக்கும். தினமும் நூறு ரூபாய் அவர்களால் மிக எளிதாக திருப்பிச் செலுத்த முடியும் . தினம் நூறு ரூபாய் என எடுத்து வைத்து வார விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமையன்று வங்கியில் 700 ரூபாய் செலுத்தும் வகையில் அவர்களிடம் யோசனையை முன்வைக்கலாம். மாதம் மூவாயிரம் ரூபாய் கடன் கணக்கில் வரவாகும். வங்கிகளையும் சலூன் கடைக்காரர்களையும் இணைத்து இவ்வாறு ஒரு விஷயம் செய்யலாமா என்ற யோசனை எனக்கு உள்ளது. பார்க்கலாம். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முத்ரா லோன் குறித்து அவர்கள் விளக்குவார்கள். Word of Mouth முறையில் விஷயம் பல பேரை சென்று சேரும். 

புறப்படும் முன் அவருக்குத் தர வேண்டிய சிகை அலங்காரக் கட்டணத்தை அளித்தேன். ஏற்றுக் கொள்ள மறுத்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

‘’பாஸ் ! ஏன் பணம் வேண்டாம்னு சொல்றீங்க?’’

‘’இல்ல சார் ! வேண்டாம் சார்’’

‘’அதான் ஏன்னு கேக்கறன்’’

‘’நம்ம கடைக்கு புக் கொடுத்திருக்கீங்க. மாவட்டத்தில எல்லா கடைக்கும் கொடுத்திருக்கீங்க. நீங்க செஞ்சதுக்கு பிரதி உபகாரமா இருக்கட்டும்.’’

‘’உங்க அன்புக்கு நன்றி. ஆனா தயவு செஞ்சு பணம் வாங்கிக்கங்க. இல்லன்னா என் மனசு கஷ்டப்படும்’’ 

‘’உங்களுக்கு நான் ஏதாவது செய்யணும் சார்’’

‘’சீர்காழி பகுதியில சர்வீஸ் ஒர்க் ஆர்கனைஸ் பண்ற எண்ணம் இருக்கு. அப்ப எங்க கூட சேந்து ஏதாச்சும் செய்ங்க. நானே உங்க ஹெல்ப்பை கேக்கறன்’’

நான் அவர் பாக்கெட்டில் ரூபாயை வைத்து விட்டேன். 

’’உங்களுக்காக ஐம்பது ரூபாய் கொறச்சுக்க பிரியப்படறன் சார்’’

நான் ஒத்துக் கொண்டேன். ஐம்பது ரூபாய் திருப்பித் தந்தார்.   

Monday 17 January 2022

இயல்பு

சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு இயல்பு உண்டு. நான் எப்போதும் எதையாவது வாசித்துக் கொண்டு இருப்பேன். வாசிப்பின் விளைவாக நான் பல்வேறு உலகங்களில் பல்வேறு காலங்களில் சஞ்சரித்துக் கொண்டிருப்பேன். தமிழ்ச் சமூகத்தில் நூல்களை வாசிப்பவனுக்கென ஒரு தனிமை உருவாகி விடும். ஏனென்றால் தமிழ்ச் சமூகத்துக்கு நூல்களை வாசிக்கும் பழக்கம் இல்லை. பாடப்புத்தகம் மட்டுமே பள்ளியிலும் கல்லூரியிலும் பலர் படித்திருப்பார்கள். அதைத் தாண்டி வேறு நூல்களை வாசிக்கும் சமூகப் பழக்கம் இங்கே இல்லை.  நூல்களை வாசித்தல் அது குறித்து சிந்தித்தல் விவாதித்தல் ஆகியவை இங்கே நிகழ்வதில்லை. இங்கே வாசிக்கும் வழக்கம் உள்ளவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். இன்றும் கூட நான் ஒரு விஷயத்தைக் கவனிப்பதுண்டு. ஒரு நூலை முழுமையாக வாசிக்கவே இங்கே பலருக்குத் தெரியாது. ஒரு நூலை வாசிக்கும் போது அந்த நூலுக்கு முழுதாக நமது நல்லெண்ணத்தைக் கொடுக்க வேண்டும். வாசிப்பின் போதே எந்த எதிர்ப்பு உணர்வும் அந்த நூல் குறித்து மனதில் உண்டாகக் கூடாது. முழுமையாக வாசித்த பிறகு அந்த நூலை நாம் ஏற்கலாம் அல்லது ஏற்காமல் போகலாம். ஏற்கிறோம் என்றால் ஏன் ஏற்கிறோம் என்று நமக்குத் தெரிய வேண்டும். ஏற்கவில்லை என்றாலும் ஏன் அவ்வாறு நினைக்கிறோம் என்பது நமக்குத் தெரிய வேண்டும். சிறு வயதில் நான் நிறைய புத்தகம் வாசிப்பேன். எங்கள் வீட்டில் நூல் வாசிக்கும் சூழல் இருந்தது அதற்கு முக்கியக் காரணம். அப்போது புனைவுகளை அதிகம் வாசிப்பேன். அதன் பின்னர் சுய சரிதங்கள், வரலாறு ஆகியவற்றின் மீது ஆர்வம் திரும்பியது. நூல்கள் அடிப்படையில் மனிதர்களையும் மனித உணர்வுகளையும் மனிதனின் தவிப்புகளையும் குறித்துப் பேசுபவை. எனவே அவை மானசீகமாக மானுடத் திரள் நோக்கி வாசகனைச் செலுத்திய வண்ணம் இருக்கும். தமிழ்ச் சூழலில் இலக்கிய வாசகன் இன்னொரு சக வாசகனைக் கண்டடைவது என்பது அபூர்வமானது. அவ்வாறாகக் கண்டடைந்த வாசகனுக்கும் சக வாசகனுக்கும் ஒரே ரசனை இருப்பது என்பது அதனினும் அபூர்வமானது. எனவே தமிழ் இலக்கிய வாசகன் வாசிப்புப் பழக்கம் இல்லாத சக மனிதர்களுடன் கருத்துக்கள் குறித்து பேசுவது விவாதிப்பது என்பது மிகவும் அசௌகர்யமான செயலாகவே இருக்கும். இங்கே நூல் வாசிக்கும் யாரும் தங்களை வாசகர்களாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். எவ்வாறு அந்த தனித்தன்மையை மறைத்துக் கொள்வது என்பதைப் பயின்று விடுவார்கள். இருப்பினும் வாசகனின் நுட்பமான மனம் சக மனிதர்களிடமிருந்து விலகிச் செல்கிறோமா என்ற ஐயம் கொண்ட படியே இருக்கும். அவரவர்க்குரிய வழிமுறைகளில் அவரவர் இதனைக் கடந்து வருவார்கள். 

என்னுடைய பள்ளி நாட்களில் முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை, ராஜிவ் கொலை வழக்கு, டங்கல் திட்டம், புதிய பொருளாதாரக் கொள்கை, ராம ஜென்ம பூமி, மண்டல் கமிஷன் ஆகிய விஷயங்கள் பத்திரிக்கைகளில் விவாதிக்கப்படும். நான் அவை குறித்து எல்லா தரப்பையும் வாசிப்பேன். பெரியவர்களுடன் விவாதிக்க நேரும் போது அவர்கள் அந்த விஷயங்கள் குறித்து மேலோட்டமாகவே அறிந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் வாதங்களின் போதாமைகளை எடுத்துக் காட்டி நிறுவி விடுவேன். அது அவர்களுக்கு சங்கடங்களை உருவாக்கும். அனைவருடனும் முரண்பட்டு விடுகிறேனே என்று பெற்றோர் கவலை கொள்வர். 

லூயி ஃபிஷரின் ‘’ The life of Mahatma Gandhi'' நூலை வாசித்தது எனக்கு மக்கள், சமூகம், சமூகச் செயல்பாட்டாளன் சமூகத்தைப் புரிந்து கொள்ளுதல், சமூகத்தை அவன் நேசித்தல் ஆகிய விஷயங்கள் குறித்து ஒரு புரிதலை உருவாக்கியது. காந்திய வழிமுறைகள் அவற்றின் குறியீட்டுத் தன்மை ஆகியவை பெரும் ஈர்ப்பை உண்டாக்கின. அந்த நூலில் தண்டி யாத்திரை பற்றி எழுதும் போது லூயி ஃபிஷர் தண்டி யாத்திரை குறித்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அதனை நெப்போலியனின் இரண்டாவது திக்விஜயத்துக்கு ஒப்பானது எனக் கூறியதை வாசித்த போது அடைந்த சிலிர்ப்பு இன்றும் நினைவில் உள்ளது. 

பின்னர் நான் கட்டுமானத் தொழிலுக்கு வந்தேன். ஒரு மனை. அதில் ஒரு வீடு கட்ட வேண்டும். இதற்குள் எனது நாளின் பெரும்பகுதி அடங்கியது. ஒவ்வொரு நாளும் நிகழும் கட்டுமானப் பணியும் அதற்கான ஆயத்தங்களும் தொழிலாளர்களின் மன அமைப்பும் நிதிப் பழக்கங்களும் வாழ்க்கைமுறையும் அருகில் இருந்து அவதானிப்பதற்கு வாய்ப்பு இருந்தது. அதில் நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். Force of Habit எப்படி தொழிலாளர் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அறிந்தேன். அப்போது அவர்களுக்கு வங்கிக் கணக்குகள் கிடையாது. வங்கிக் கணக்கு இல்லை என்பதால் சேமிக்கும் வழக்கமும் கிடையாது. ஆயுள் காப்பீடு அவர்களிடம் இருக்காது. மருத்துவக் காப்பீடும் இருக்காது. சகாயமான ஊதியம் பெற்றாலும் சிரமத்தில் இருப்பார்கள். இவை வாழ்க்கை குறித்த நடைமுறைப் புரிதலை உருவாக்கின. வீடு மனை ஆகியவை அசையாச் சொத்துக்கள் என்பதால் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடனும் தொடர்பு கொள்ளவும் அவர்களின் மன ஓட்டத்தை அறியவும் வாய்ப்பு கிடைத்தது. 

மற்றவர்கள் பேசுவதை ஆழ்ந்து கவனிப்பதும் குறைவாக மிகக் குறைவாகவே பேசுவதும் லௌகிகத்தில் உபயோகமானது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். இலக்கிய வாசகனாக தனித்திருத்தல் என்னும் இயல்பு இதில் அதிகம் உதவியது. 

இவை அனைத்தும் நிகழ்ந்து கொண்டிருந்த போது நான் நிறைய வாசித்துக் கொண்டுமிருந்தேன். பலவிதமான கனவுகளும் கற்பனைகளும் மனத்தை நிரப்பிக் கொண்டிருந்தன. நாம் சிந்திக்கிறோம் என்ற உணர்வு இனியது ; சிந்தித்து செயல்படுகிறோம் என்னும் உணர்வு அதனினும் இனியது. 

ஒரு இந்தியப் பயணம் மேற்கொண்ட பின்னர் ஒரு பயணக்கட்டுரை எழுதினேன். அது பிரசுரமானது. அதன் பின்னர் சிறுகதை, கட்டுரை, கவிதை, கம்ப ராமாயண அறிமுக நூல் என எழுதினேன். வலைப்பூ தொடங்கி அனேகமாக தினமும் ஏதாவது பதிவிடுகிறேன். 

இந்நிலையில் சேவைப் பணிகள் சிலவற்றைத் திட்டமிட்டேன். செயல்படுத்தினேன். எனது இலக்கிய வாசிப்பும் சமூகப் புரிதலும் கட்டுமானத் தொழிலில் நான் அடைந்த லௌகிக விவேகமும் அவற்றுக்கு அடிப்படையாய் அமைந்தன. நண்பர்கள் என் மீது வைத்திருக்கும் பிரியமும் அன்பும் நம்பிக்கையும் அனைத்தையும் சாத்தியமாக்குகின்றன. உண்மையில் நான் ஒரு கற்பனை உலகில் ஆழ்ந்திருப்பவன். இன்றும் எனக்கு ஒரு பொது விஷயத்துக்காக என்றாலும் ஒருவரிடம் உதவி கேட்பதற்கு கூச்சமாகத்தான் இருக்கும். யாரும் சிரமமாக உணர்ந்து விடக் கூடாது என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். ஒருவரிடம் ஒரு ந்ல்ல விஷயத்துக்கு என்றாலும் அடிக்கடி நிதி கேட்கக் கூடாது என்று நினைப்பேன். ஆனால் என் தடைகளைத் தாண்டி எனக்கு நண்பர்கள் உதவுகிறார்கள். இப்போது அவ்வாறு உதவியளித்த பலரும் தங்கள் ஊர்களில் தாங்கள் பணி புரியும் ஊர்களில் ‘’காவிரி போற்றுதும்’’ செய்யும் பணிகளைப் போல் செய்கின்றனர். அவர்கள் நண்பர்களை ‘’காவிரி போற்றுதும்’’ உடன் இணைக்க விருப்பம் கொள்கின்றனர். 

சமீபத்தில் ஒரு விஷயம் நடந்தது. அதாவது தடுப்பூசிக்காகச் செயலாற்றிய கிராமத்தில் ஒரு மூதாட்டி தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போது செவிலியர்கள் 94 எனத் தொடங்கும் அவரது அலைபேசி எண்ணை 84 எனத் தொடங்கும் எண்ணாக பதிவு செய்து விட்டார்கள். அதனை சரி செய்து சான்றிதழ் பெற்றுத் தருமாறு என்னை அந்த மூதாட்டி கேட்டுக் கொண்டார். அதற்காக இரண்டு நாட்கள் வேலை செய்தேன். அப்போது அரசு மருத்துவமனையில் காத்திருக்க நேரிட்டது. காத்திருக்கும் நேரத்தில் நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். மருத்துவமனைக்கு வருபவர்களை கவனித்துப் பார்த்தால் அவர்கள் ‘’ஃபிஸிக்கல் ஆக்டிவிட்டி’’ கொஞ்சம் கூட இல்லாதவர்கள் என்பது பார்த்தாலே தெரிந்தது. இந்த நிலைக்கு ஒரு சமூகக் காரணம் உண்டு. தமிழ்நாட்டில் வீடுகளில் குழந்தைகளுக்கு மூன்று அல்லது நான்கு வயது வரை மட்டுமே விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தருகிறார்கள். அதன் பின் விளையாட்டு என்பதை பள்ளிக்கல்விக்கு இடையூறு என எண்ணி எந்த விளையாட்டுப் பொருட்கள் - அதாவது வாலிபால், ஃபுட்பால், பேட்மிட்டன் ராக்கெட், பேட்மிட்டன் பந்து, கிரிக்கெட் பந்து, டென்னிஸ் பந்து, ரிங் பால் என எதுவுமே வாங்கித் தருவதில்லை. ஏதேனும் ஒரு கிராமத்தில் வசிக்கும் எல்லா குழந்தைகளுக்கும் - 3 வயதிலிருந்து 17 வயது வரை - அவர்கள் விரும்பும் விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தர வேண்டும் என்ற விருப்பம் உருவானது. ஒரு கிராமத்தில் இந்த வயதில் அதிகபட்சம் 200 குழந்தைகள் வரை இருக்கக் கூடும். அவர்கள் அனைவருக்கும் இது வழங்கப்பட்டால் குழந்தைகள் ஓடியாடி விளையாடுவார்கள். பாரதி ‘’ஓடி விளையாடு பாப்பா’’ என்கிறார். இந்த விஷயத்தைச் செய்வது என முடிவு செய்தேன். 

நிதிக்கு என்ன செய்வது என்று யோசித்த போது வெளியூர் இல்லாமல் உள்ளூரில் இருக்கும் 200 நண்பர்களிடம் இந்த விஷயத்தை விளக்கி ஒவ்வொருவருவரையும் ஆளுக்கு ஒரு விளையாட்டுப் பொருள் என வாங்கித் தரச் சொல்லலாம் எனத் திட்டமிட்டேன். ஃபுட்பால், வாலிபால், ரிங் பால், பேட்மிட்டன் ராக்கெட் என ஒவ்வொருவர் ஒன்றை வாங்கித் தருவார்கள். இந்திய மரபு தெய்வம் இந்த மண்ணில் குழந்தையாக அவதரித்தது என்கிறது. ராமனும் கிருஷ்ணனும் இன்றும் இந்திய மக்களுக்கு குழந்தைகள் தான். அதனால் குழந்தைகளை மகிழ்ச்சி அடையச் செய்வது என்பது தெய்வங்களை மகிழ்ச்சி அடையச் செய்வதும் கூடத்தான். 

Sunday 16 January 2022

பலவிதப் பணிகள்

ஜனவரி துவங்கியதிலிருந்தே பலவிதப் பணிகள் நிறைந்திருக்கின்றன. தொழில் சம்பந்தமான சில முக்கியப் பணிகளைச் செய்தேன். இப்போதெல்லாம் என்னை என் தொழில் சார்ந்த ஒருவனாக யாரும் எண்ணுவதில்லை. நினைவுபடுத்தினாலும்  யாரும் ஒத்துக் கொள்வதில்லை. நினைத்துப் பார்த்தால் எந்த மனிதனாலும் பலவிதமான பணிகளைச் செய்ய முடியும். பணி என்பது இந்த கணத்தில் நாம் என்ன ஆற்ற முடியுமோ அதனை ஆற்றுவதே. இந்த கணத்தில் நம்மால் செய்யக்கூடியதை முழுமையாகச் செய்தோம் என்றால் நம்மால் நிறைவை உணர முடியும். யக்‌ஷப் பிரசன்னம் ‘’திருப்தியை மிஞ்சிய செல்வம் இல்லை’’ என்கிறது. 

சென்ற வாரம் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். தடுப்பூசிக்காகப் பணி புரிந்த கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு மூதாட்டி என்னிடம் தனது சிக்கல் ஒன்றைக் கூறினார். அதாவது , அவர் முதல் தவணை போடும் போது 94 எனத் தொடங்கும் அவரது அலைபேசி எண்ணை 84 எனத் தொடங்கும் அலைபேசி எண்ணாக பதிவு செய்து விட்டார்கள். அவரது அலைபேசி எண்ணின் முதல் இலக்கம் மாறி விட்டது என்பதால் அவரால் தடுப்பூசிச் சான்றிதழ் பெற முடியவில்லை. அதனை என்னிடம் தெரிவித்தார். தடுப்பூசி போட்ட போது அளித்த சீட்டை என்னிடம் வழங்கினார். தடுப்பூசிச் சான்றிதழ் எடுத்துத் தர முடியுமா என்று கேட்டார். ரயிலில் பயணிக்க எதிர்காலத்தில் தடுப்பூசிச் சான்றிதழ் தேவை என்கிறார்களே என்றார். 

இன்னும் அறிவிப்பு வரவில்லை ; வரும் போது சரி செய்து கொள்ளலாம் என பதில் கூறலாம். ஆனால் எனக்கு அப்படி பதில் சொல்லி பழக்கமில்லை. ஒருவர் தனது சிக்கலை ஒருவரிடம் கூறும் போது அந்த சிக்கலிலிருந்து தான் விடுபட வேண்டும் என்று விரும்பியே அதனைப் பகிர்ந்து கொள்கிறார். அந்த உணர்வுக்கு மதிப்பு தர வேண்டும் என நான் நினைப்பேன். அதற்கு ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று தான் நான் முடிவெடுப்பேன். 

மூதாட்டியிடம் சீட்டைப் பெற்றுக் கொண்டதற்கு மறுநாள் தவறாகப் பதிவாகியிருந்த அலைபேசி எண்ணுக்கு ஃபோன் செய்து பார்த்தேன். அந்த எண் வேறொருவருக்கு சொந்தமானதெனில் அவரிடம் விஷயத்தை விளக்கி கோவின் இணையதளத்தில் அந்த எண்ணைப் பதிவு செய்தால் ஒரு ஓ. டி. பி வரும். அதனைத் தெரிவித்தால் அதன் வழியே தளத்தின் சான்றிதழ் பிரிவைத் திறந்து உள்சென்று சான்றிதழ் பெற்று விடலாம். ஆனால் அப்படி ஒரு அலைபேசி எண்ணே இல்லை என பதில் வந்தது. 

அடுத்த நாள் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். அவர்களிடம் விஷயத்தைச் சொன்னேன். நான் முயன்று பார்த்த வழிமுறையையே அவர்களும் கூறினர். நான் முயன்று விட்டேன். பயனில்லை என்றேன். எந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கணக்கில் இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று பார்த்து அந்த நிலையத்தின் செவிலியரிடம் பேசினர். அவர் அடுத்தடுத்து முக்கியமான நிறைய பணிகள் இருப்பதால் இந்த விஷயத்தை அடுத்த நாள் செய்யலாமா என்று கேட்டார். நான் நிலைமையைப் புரிந்து கொண்டு ஒத்துக் கொண்டேன். மீண்டும் மறுநாள் சென்றேன். காத்திருக்கச் சொன்னார்கள். 45 நிமிடங்கள் காத்திருந்தேன். சமூகப்பணி ஆற்றுபவர்கள் இவ்வாறான காத்திருப்புக்குப் பழகிக் கொள்ள வேண்டும்.  சமூகப் பணியாற்றுபவன் இன்னும் மேலான உலகத்துக்காக இன்னும் மேலான சகவாழ்வுக்காகக் காத்திருக்கிறான். அவ்வாறான நேரங்களில் நான் உடனிருப்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ன நோக்கத்துக்காக வருகிறார்கள் என கவனிப்பேன். அங்கே அவர்களுக்கு ஏதாவது செய்து கொடுக்க முடிந்தால் செய்து கொடுப்பேன். 

மருத்துவமனையில் காத்திருந்த போது எனக்கு ஒன்று தோன்றியது. நம் மாநிலத்தில் உடலை ஆரோக்கியமாக உறுதியாக வைத்திருக்கும் பழக்கம் விளையாட்டு வீரர்களுக்கான பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இருக்கிறது. மற்ற மாணவர்களுக்கு உடற்பயிற்சி பழக்கம் இல்லை. ஒரு கிராமத்தில் 100 - 150 குழந்தைகள் இருப்பார்கள் எனில் அவர்களுக்கு கால்பந்து, ரிங் பால், பேட்மிட்டன் பந்து , பேட்மிட்டன் மட்டை ஆகியவற்றை நாம் வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்களை தினமும் விளையாடச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவானது. உருவான எண்ணம் எனக்கு உற்சாகமூட்டியது. அடுத்தடுத்து என்ன நிகழக் கூடும் என்று கற்பனை செய்தேன். ஒரு மாதம் அந்த குழந்தைகள் அந்த பந்துகளுடன் விளையாடுவார்கள். பின்னர் அவர்களைச் சந்தித்து  அவர்களுக்கு உடல்நலன் உடற்பயிற்சி ஆகிய விஷயங்களைக் குறித்து எடுத்துக் கூறி தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள உதவ வேண்டும்.  இன்னொரு புறம் 100 குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்க நிதிக்கு எங்கே போவது என்ற எண்ணம் மனதில் இன்னொரு பக்கம் உருவாகி பல வினாக்களை எழுப்பியது. அந்த எண்ணத் தொடரை வெட்டி விட்டு முதல் தொடரிலேயே பயணித்தேன். ஒரு சமூகச் செயல்பாட்டாளன் என்றுமே கற்பனையை இழக்கக் கூடாது. இன்றில்லா விட்டாலும் என்றாவது நாள் அது செயலாகும் . 

45 நிமிடக் காத்திருப்புக்குப் பின் ‘’சார் ! இன்னும் 30 நிமிஷம் ஆகும் சார். எங்கயாவது போகணும்னா போய்ட்டு வந்திருங்க ‘’ என்றார்கள். மருத்துவமனைக்கு அருகில் ஒரு மனைத்தரகர் இருக்கிறார். அவர் வீட்டுக்குச் சென்றேன். எனது நண்பர் ஒருவர் அவரது மனையை விற்பனை செய்ய வேண்டும் என்று சொன்னார். அந்த மனையை மனைத்தரகருக்குக் காட்டினேன். அதன் உரிமையாளர் அதன் விலையாக இரண்டு என்ற இலக்கத்துக்குப் பக்கத்தில் ஏழு பூஜ்யங்களை சொல்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் நான் அவருக்கு அந்த இடத்தை ஒன்று என்ற இலக்கத்துக்குப் பக்கத்தில் ஏழு பூஜ்யங்கள் என வாங்கிக் கொடுத்தேன். உரிமையாளர் நல்ல பார்ட்டியாக எதிர்பார்க்கிறார் என்ற விபரத்தை தரகரிடம் சொன்னேன். அவரை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தேன். பத்து நிமிடம் காத்திருந்தேன். சான்றிதழைக் கையில் கொடுத்தார்கள். கிராமத்தில் அந்த மூதாட்டியிடம் சென்று கொடுத்தேன். அவருக்கு அவ்வளவு சந்தோஷம். ‘’ சார் ! இந்த காலத்துல சொந்த காரியத்தையே யாரும் சிரத்தையா செஞ்சுக்க மாட்டேங்கறாங்க. அடுத்தவங்க காரியத்தை இவ்வளவு அக்கறையா செய்றீங்களே சார். ரொம்ப நன்றி’’ . 

அந்த மக்களின் பிரியமும் அன்பும் நல்லெண்ணமுமே என் வாழ்வில் நான் சேர்த்த அரும் பெருஞ்செல்வம். அதற்கு எதுவும் ஈடாகாது. 

Tuesday 11 January 2022

ஜெ தளத்தில்

 இன்று jeyamohan(dot)in இணையதளத்தில் கவிஞர் ஆனந்த் குமார் எழுதிய ‘’டிப் டிப் டிப்’’ கவிதைத் தொகுப்பு குறித்து எழுதிய கடிதம் வெளியாகி உள்ளது.


ஆனந்த் குமார் - அணிலோசை

Monday 10 January 2022

எஸ். ரா தளத்தில்

 ’’மண்டியிடுங்கள் தந்தையே’’ நாவல் குறித்து எழுதப்பட்ட ஒளிமலர் கட்டுரை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதன் இணைப்பு;


ஒளிமலர் - எஸ். ரா தளத்தில்

Sunday 9 January 2022

ஒளிமலர்


நூல் : மண்டியிடுங்கள் தந்தையே ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம் :
தேசாந்திரி பதிப்பகம் , டி -1, கங்கை அபார்ட்மெண்ட்ஸ் , 110, 80 அடி ரோடு, சத்யா கார்டன், சாலிகிராமம், சென்னை, 600093. பக்கம் : 248 விலை : ரூ. 350

ஒரு பெரிய கிராமம். அதில் உலகம் கண்ட மகத்தான கலைஞர்களில் ஒருவன் வாசம் புரிகிறான். அவனது குடும்பம். நேசிக்கும் மனைவி . கலையார்வம் மிக்க வாரிசுகள். நூற்றுக்கணக்கான அவனது பண்ணைத் தொழிலாளர்கள். பெரிய மாளிகை. பெரிதினும் பெரிது கேட்கும் அவனது மனநிலை. சாரட்டு வண்டிகள். கிராமத்துத் திருவிழாக்கள் என உலகின் மகத்தான கலைஞன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த வாழ்க்கையைத் தன் சொற்கள் மூலம் என்றுமுள காலத்தில் நிறுவியிருக்கிறார் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்.  

பித்தேறிய தன் மனத்தின் சங்கேதங்களைத் தொடர்ந்த படி வாழ்வின் அனைத்து போகங்களையும் நோக்கிச் செல்கிறார் இளம் டால்ஸ்டாய். குடி, சூதாட்டம், பெண் என அனைத்தையும் அறிய முற்படுகிறார். இராணுவத்தில் பணி புரிந்து சாகசமான வாழ்முறை மூலம் சாவினையும் சாவினுக்கு ஒப்பான தருணங்களையும் மிக அண்மையில் பார்த்து அறிகிறார் லேவ். எனினும் அவர் அகத்தில் ஏதோ ஒன்று அவரை போகங்களைக் கடந்து செல்ல தூண்டிக் கொண்டே இருக்கிறது. அது புறவயமாக வரையறுக்கத் தக்கதாக இல்லை. அது தன்னை அவ்வாறு வெளிப்படுத்திக் கொள்ளவில்லை; அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. 

தன்னை முழுமையாக நேசிக்கும் பெண்ணைச் சந்திக்கிறார். மண்ணுக்குத் தன்னை முற்றிலும் ஒப்படைக்கும் விதையைப் போன்றவளாக இருக்கிறாள் அப்பெண். வானத்துச் சூரியனை நேசிக்கும் ஏரிக்கரை மலரைப் போன்றவளாக இருக்கிறாள் அவள். டால்ஸ்டாயின் அகத்தில் சுடரும் ஒளியைக் காண்பவளாகவும் அதனை ஆராதிப்பவளாகவும் இருக்கிறாள் அவள். எனினும் டால்ஸ்டாய்க்கு தான் முன்னர் பழகிய பெண்களைப் போன்ற இன்னொரு பெண்ணே அவள். காதல் என்ற உணர்வை அவள் டால்ஸ்டாய் உடனான உறவின் மூலம் முழுமையாக அடைகிறாள் அந்தப் பெண். டால்ஸ்டாய்க்கு அந்த உணர்வு முதல் அறிமுகம் ஆகிறது. 

டால்ஸ்டாய் பின்னர் சோஃபியாவை மணக்கிறார். தனது ரகசியங்கள் அனைத்தையும் சோஃபியாவிடம் முன்வைக்கிறார். அது அவளுக்கு வேதனையளிக்கிறது. உலகின் மகத்தான கலைஞன் தன் கணவன் என்ற உணர்வும் ஒரு பெண்ணாக தன் மனம் உணரும் துயரங்களும் அவளை வாழ்நாள் முழுதும் அலைக்கழிக்கிறது. 

டால்ஸ்டாய், அக்ஸின்யா, திமோஃபி என்ற முக்கோணச் சித்தரிப்பில் நான் மகாபாரதத்தின் சூரிய பகவான், குந்தி, கர்ணன் என்ற கோணம் வெளிப்பட்டதாக நினைக்கிறேன். சிறுவனான திமோஃபி குதிரை லாடத்தால் தாக்குவது என்பதிலும் மகாபாரதம் உப பிரதியாக இருக்கிறது என்று தோன்றியது. 

யஸ்னயா போல்யானாவிற்கு ஜிப்சிகள் வருகை புரிவதை சொல்லும் பகுதி மிக அழகாக இருக்கிறது. பண்ணை மட்டுமே உலகம் என இருக்கும் மனிதர்கள் மத்தியில் ஜிப்சிகள் வண்ணமயமான உடைகளுடனும் ஆபரணங்களுடனும் உள் நுழைவது என்பது குறியீட்டு ரீதியில் பல அர்த்தங்கள் பொதிந்தது. அவர்களது மாயங்கள் எல்லா மனித மனத்திலும் இருக்கும் கண்டடையப் படாமலே போகும் மாயங்களே. 

அக்ஸின்யா டால்ஸ்டாயிடம் அர்ப்பணம் ஆனதைப் போல தனது படைப்பாற்றலுக்கு  தன்னை முழுதாகக் கொடுக்கிறார் டால்ஸ்டாய். அவரது அக ஒளி அவரை வழிநடத்துகிறது. மானுடத்தின் மகத்தான ஆக்கங்களை படைக்கத் தொடங்குகிறார் டால்ஸ்டாய். 

தன்னைச் சூழ்ந்திருக்கும் சக மனிதர்களுக்காக தான் வாழும் ஒட்டு மொத்த உலகுக்காக செயல்படத் தொடங்குகிறார் டால்ஸ்டாய். அவரது அகம் கனியத் தொடங்குகிறது. திமோஃபி சில ஆண்டுகள் பண்ணையை விட்டு ஓடிப் போய் விட்டு மீண்டும் வீடு திரும்புகிறான். பண்ணையை விட்டு ஓடியவன் ஒருவன். திரும்பி வரும் போது ஓடிப் போனவனாக திமோஃபி இல்லை. வேறு ஒருவனாக மாற்றம் பெற்றிருக்கிறான். இந்த பகுதி எனக்கு ஜீசஸ் சொல்லும் கதையான ‘’The lost son'' ஐ நினைவுபடுத்தியது. புனைவு ரீதியில் இதை டால்ஸ்டாய்க்கும் பொருந்தும் படியாகக் காட்டியுள்ளார் எஸ். ரா. 

பல்வேறு ஆழமான நுட்பமான உணர்ச்சிகள் பிரவாகிக்கும் தருணங்கள் நாவல் முழுதும் நிரம்பியுள்ளன. ஒரு விதை மண்ணைக் கீறி தளிராக எழுந்து வான் நோக்குவது போல வாசக மனம் இந்த நாவலை வாசித்த பின்னும் அதன் உணர்வுநிலைகளைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

மூன்று அழைப்புகள்


சமீபத்தில் எழுதிய ‘’விளைதல்’’ பதிவை வாசித்து விட்டு மூன்று நண்பர்கள் அழைத்தார்கள். மூவருமே அவர்களுடைய சொந்த கிராமத்தில் ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு நான் சில ஆலோசனைகளை வழங்கினேன்.  

1. நமது சூழலில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. அதற்கு காரணம் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் பிழைப்புக்கான படிப்பாகவே எண்ணுகிறது நம் தமிழ்ச் சமூகம். படிப்பு என்பதை போட்டி என்றே எண்ணுகிறார்கள் தமிழ் மக்கள். 

2. படித்த சிந்திக்கும் சமூகம் என்பது மெல்ல உருவாகி வர வேண்டியிருக்கிறது. 

3. நூல்கள் மீது ஆர்வம் கொண்ட சமூகமே நூலகங்களுடன் உணர்வுபூர்வமான பிணைப்பு கொள்ளும். நம் சமூகத்தில் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. 

4. நூலகத்துக்கு மாற்றாக ‘’லெண்டிங் நூலகம்’’ என்ற அமைப்பு கிராமங்களுக்கு அணுக்கமாக இருக்கும். 

5. ஒரு கிராமத்தில் 400 வீடுகள் உள்ளன எனக் கொள்வோம். நூலகம் அமைக்க விரும்பும் தன்னார்வலர் 1200 நூல்களை கிராமத்தில் உள்ள வீட்டில் ஒரு சிறு அறையில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நூல்களின் பெயர்ப் பட்டியலை கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அளித்து விட வேண்டும். 

6. இராமாயணம், மகாபாரதம், பாகவதக் கதைகள், புத்தர் நூல்கள், புத்தர் குறித்த ஜப்பானிய மாங்கா காமிக்ஸ்கள்,  ஆழ்வார்கள் கதை, நாயன்மார்கள் கதை, நம் நாட்டின் புகழ் பெற்ற மக்கள் நல அரசர்கள், சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறு, விஜயநகரப் பேரரசின் வரலாறு, மராத்தியர்களின் வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு, உலகப் புகழ் பெற்ற தலைவர்களின் தன்வரலாற்று நூல்கள், எளிய அறிவியல் நூல்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாறு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், தொழில் முனைவோரின் வரலாறு, சுற்றுச் சூழலியல் தொடர்பான நூல்கள், பறவையியல் கானியல் தொடர்பான நூல்கள், சுவாமி சித்பவானந்தரின் நூல்கள், சுவாமி விவேகானந்தரின் நூல்கள், ராஜாஜியின் நூல்கள், நவீன தமிழ் இலக்கிய நூல்கள், பொருளாதாரம் தொடர்பாக தமிழில் எழுதப்பட்ட நூல்கள், உலக இலக்கிய நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் என அந்த நூல்கள் அமையலாம். இது ஒரு உத்தேசப் பட்டியல். விரிவான பட்டியலை இதிலிருந்து உருவாக்கிக் கொள்ள முடியும். 

7. பத்து வயதிலிருந்து பன்னிரண்டு வயதாகும் இரண்டு சிறுவர்கள் கொண்ட இணையை இரண்டு தெருக்களுக்கு ஒரு இணை என நியமிக்க வேண்டும். ஊரில் மொத்தம் 8 தெருக்கள் இருக்கும். இரண்டு தெருக்களுக்கு ஒரு இணை என்றால் மொத்தம் 8 சிறுவர்கள். இந்த சிறுவர்கள் வாரத்தில் ஒருநாள் (ஞாயிற்றுக்கிழமை) இந்த நூல்களை கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் சேர்த்து விடுவர். ஒரு குறிப்பேட்டில் யாரிடம் எந்த நூல்கள் உள்ளன என்பதை குறித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு வாரமும் ஒருவர் வாசித்த நூலை அவர்களிடம் பெற்றுக் கொண்டு வாசிக்காத நூலை அவர்களுக்கு இந்த இணை அளிக்கும். 

8. ஆயிரத்து இருநூறு நூல்களும் வீட்டுக்கு 3 நூல்கள் என கிராமத்துக்குள் புழங்கிக் கொண்டிருக்கும். கிராமத்தைத் தாண்டி நூல்கள் வேறு எங்கும் செல்லாது. கிராமத்தின் எல்லா வீடுகளும் இதில் பங்கேற்பதால் அனைவருக்கும் இந்த முறை மீது ஒரு பிணைப்பு இருக்கும். 

9. நூல்களை வினியோகிக்கும் எட்டு சிறுவர்களுக்குத் தனியாக ஒருநாளோ அல்லது இரண்டு நாளோ அவர்கள் செய்யும் பணியின் முக்கியத்துவம் குறித்தும் அதனை நேர்த்தியாகச் செய்யும் வழிமுறைகள் குறித்தும் பயிற்சி தந்து  விடலாம். 

10. முதல் கட்டமாக அந்த எட்டு சிறுவர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 10 புத்தகங்கள் என அளித்து அதனை வாசிக்கச் செய்து நூல் வாசிப்பில் பயிற்சி தரலாம். அவர்களின் நூல்களின் தூதுவர்களாக ஊர் முழுதும் செல்வார்கள். 

11. ஒரு புரிதலுக்காக ‘’லெண்டிங் லைப்ரரி’’ எனக் கூறுகிறோமே தவிர மக்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. 

12. நூல்களை நோக்கி ஆர்வமாக முன்னகரும் சமூகமாக தமிழ்ச் சமூகம் இன்று இல்லை என்பதால் நூல்களை மக்களிடம் கொண்டு செல்லும் - மக்கள் கைகளுக்கு கொண்டு சேர்க்கும் முறைகள் இப்போது தேவைப்படுகின்றன. 

13. நூலகம் அமைக்க விரும்பும் நண்பர்கள் நூலகம் அமைக்க வேண்டிய இடத்தின் கிரய செலவு, கட்டுமானச் செலவு, நூல் அலமாரிகள் செலவு, வாடகை என எந்த செலவும் செய்யத் தேவையில்லை. 1200 நூல்களுக்கான செலவை மட்டும் செய்தால் போதுமானது. 

14. ஒரு கிராமமே இதில் பங்கேற்பதால் நூல்கள் கிராமத்தின் பேசுபொருளாகும். 

15. ஒரு குறிப்பிட்ட தினத்தில் மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை கிராம மக்கள் ஒவ்வொருவரும் வீட்டு வாசலில் நாற்காலியில் அமர்ந்து நூல் வாசிப்பது என்பதை ஒரு வாசிப்புத் திருவிழா போல அமைக்கலாம். 

16. இது போல பல விஷயங்களை இவ்வாறு திட்டமிட முடியும். 


Saturday 8 January 2022

காய் கறி

எனது நண்பர் ஒருவர் ஊருக்கு அருகில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். ஐ டி கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். அவருக்கு பூர்வீக சொத்தாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் தேக்கு மரம் பயிரிட ஆர்வமாயிருக்கிறார். இன்று காலை அவரைச் சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரும் அவரது சகோதரரும் தேக்கு பயிரிடுவது குறித்து தங்கள் சந்தேகங்களைக் கேட்டனர். முக்கியமான சந்தேகம் பயிரிட அரசு அனுமதி வேண்டுமா என்பதும் மரத்தினை விற்பனை செய்ய அரசு அனுமதி வேண்டுமா என்பதும். இந்த சந்தேகம் எல்லா விவசாயிகளின் மனத்திலும் ஆழமாக உள்ளது. சந்தேகம் அதன் விளைவாக ஒரு அச்சம். அவர்களுடைய சந்தேகம் அடிப்படை ஆதாரம் அற்றது என விளக்கினேன். அவர்களுடைய ஊரிலிருந்து 5 கி.மீ தொலைவில் ஒரு விவசாயியை நான் ஊக்கப்படுத்தி 50 தேக்கு மரங்கள் நடச் சொல்லி இருக்கிறேன்; அவருடைய களத்தைச் சென்று பார்ப்போம் என்று அழைத்துச் சென்றேன்.   செப்டம்பர் மாதம் தேக்கங்கன்றுகள் நடப்பட்டன. இப்போது ஆறடி உயரம் வளர்ந்துள்ளன. விவசாயி ஆர்வத்துடன் தேக்கின் வளர்ச்சியைக் காட்டினார். ‘’பஞ்சகவ்யா’’ கொடுத்தால் வளர்ச்சி இன்னும் கூடுதலாக இருக்கும் என்றும் அடுத்த முறை வரும் போது பஞ்சகவ்யா கொண்டு வருகிறேன் என்றும் சொன்னேன். புறப்படத் தயாரான போது அவர் வயலில் விளைந்த காய்கறிகளை ஒரு சாக்கு மூட்டையில் கொண்டு வந்து கொடுத்தார். இந்த மூட்டையை நான் வீட்டுக்கு எடுத்துச் சென்றால் காய்கறி வியாபாரம் செய்யப் போகிறாயா என்று கேட்பார்கள். அண்டை வீட்டுக் காரர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த காய்கறிகளைப் பிரித்துக் கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன் விவசாயியின் வீட்டிலிருந்து புறப்பட்டேன். அவருடைய வீடு, களம், வயல் ஆகியவை அனைத்தும் அருகருகே அமைந்தவை. வீட்டின் தோட்டத்திலேயே வயலும் களமும் அமைந்திருப்பதான அமைப்பு.  ஐ டி நண்பருக்கு விவசாயியின் களத்தைப் பார்த்து அதில் தேக்கு வளர்ந்திருப்பதைக் கண்டதும் அவருடைய ஐயங்கள் நீங்கி அவருக்கு ஒரு தெளிவு பிறந்தது.


 

நானும் நண்பரும் ஆளுக்கொரு வாகனத்தில் வந்தோம். எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் கடைவீதியில் வணிகம் செய்கிறார். நாங்கள் அடுத்து அவரைச் சந்திக்க செல்வதாய் திட்டமிட்டிருந்தோம். எனது வாகனம் ஐந்து நிமிடம் முன்னதாக வந்து விட்டது. நண்பரின் ஒரு கடையை  ஒட்டி ஒரு அம்மாள் மீன் விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர் எப்போதும் அங்கே மீன் விற்பவர். எனக்கு அவரை முன்னரே தெரியும். அவருடன் இன்னொரு பெண்மணியும் இருந்தார். என்னைப் பார்த்ததும் ‘’சார் ! நாளைக்கு வியாபாரம் செய்ய முடியாது சார். மீன் விக்காம இருக்கு. இந்த மீன் அத்தனையையும் ஐந்நூறு ரூபாய்க்கு தரேன். வாங்கிட்டுப் போங்க சார்’’ என்றார்கள். 

‘’அம்மா ! நாங்க வெஜிட்டேரியன்.’’ 

‘’அப்படீன்னா?’’

‘’அப்படீன்னா எங்க வீட்டுல எல்லாரும் சைவம்’’

அந்த அம்மாள் நம்பிக்கை இழந்தார். 

இருப்பினும் அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று தோன்றியது. 

‘’அம்மா கடைக்காரர்ட்ட கேட்டீங்களா. அவரு இப்பதான் மதியம் சாப்பிட வீட்டுக்கு போவாரு? ராத்திரி கொழம்பு வச்சா கூட நாளைக்கு முழு நாளும் சாப்பிடலாம்.’’ கடைக்காரரான எனது நண்பரை உத்தேசித்து சொன்னேன். 

‘’என் கிட்ட இறால் தான் சார் இருக்கு. அவரு வஞ்சிரம் மீன் தான் வாங்குவாரு’’




நேரம் அப்போதே மதியம் இரண்டு மணி. 

ஐந்து நிமிடம் தாமதமாக வந்த ஐ டி நண்பர் நான் பேரம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

‘’அண்ணன் ! என்ன அண்ணன் ! மீன் வாங்க போறீங்களா. நீங்க வெஜிட்டேரியன் ஆச்சே?’’

’’இல்ல நாளைக்கு எந்த கடையும் இருக்காதுல்ல. இன்னைக்கு சேல்ஸ் சரியா இல்லையாம். இருக்கறத கொடுத்துட்டு ஊருக்கு கிளம்பறன்னு சொல்றாங்க. ‘’

‘’உங்க கிட்ட சொன்னா நடக்கும்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு’’

‘’ஒரு உதவின்னு கேக்கறாங்க. நாம டிரை செய்வோம்’’

‘’இதுல நாம எப்படின்ணன் உதவ முடியும்’’. ஐ டி நண்பரும் வெஜிட்டேரியன். 

‘’வெயிட் பண்ணுங்க. என்ன செய்ய முடியும்னு யோசிப்போம்.’’

எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். அவர் இரவுலாவி. அதாவது அவர் பகலில் உறக்கத்தில் இருப்பார். மாலை 5 மணியிலிருந்து காலை 5 மணி வரை முழு இரவும் விழித்திருப்பார். அவரைப் பகலில் பிடிப்பது என்பது அனேகமாக சாத்தியமில்லை. பகலில் ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு தூங்கிக் கொண்டிருப்பார். இருப்பினும் இன்று அவரது ஃபோன் ரிங் ஆனது. ஃபோனை எடுத்து விட்டார். 

‘’என்ன ஆச்சர்யமா இருக்கு. பகல்ல ஃபோன் எடுத்துட்டீங்க. ‘’

‘’ரிலேடிவ் ஒருத்தர சோழன் எக்ஸ்பிரஸ்ல டிராப் பண்ண வேண்டியதாயிடுச்சு’’

‘’அதாவது இங்க கடைத்தெருவுல நம்ம ஃபிரண்டு கடை இருக்குல்ல’’

‘’ஆமாம்’’

‘’அவரு கடை வாசல்ல ஒரு அம்மா மீன் விக்கறாங்க. நாளைக்கு ஃபுல் டே ஆஃப் ங்கறதால இன்னைக்கு மீன் நிறைய விக்காம இருக்குன்னு சொல்றாங்க. உங்களுக்கு மீன் தேவைப்படுமா?’’

‘’என்ன மீன் இருக்கு?’’

‘’இறால்’’

‘’ஆஞ்சு கொடுப்பாங்களா?’’

‘’கொடுப்பாங்க’’

‘’எவ்வளவு சொல்றாங்க?’’

‘’500 ரூபாய்’’

‘’சரி ஆஞ்சு வைக்க சொல்லுங்க. 10 நிமிஷத்துல நான் வந்துடறன்’’

நானும் ஐ டி நண்பரும் காத்திருந்தோம். நண்பர் வந்து மீனைப் பார்த்தார். அவருக்குத் திருப்தி. ஐந்நூறைக் கொடுத்து மீன் வாங்கிக் கொண்டார். 

இதற்கு முன் இவர்களிடம் மீன் வாங்கியிருக்கிறீர்களா என்று கேட்டேன். நண்பர் இல்லை என்றார். அந்த பெண்மணிகள் இருவரும் நாங்க இங்க தான் சார் எப்பவும் மீன் விப்போம். கடல் மீனு சார். ரொம்ப நல்லா இருக்கும். இன்னைக்கு வாங்கினதை கொழம்பு வச்சு சாப்டாலே உங்களுக்கே தெரியும் என்றார்கள். நண்பர் சரி என்றார். 

மீன் வியாபாரிகள் இருவரும் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினர். நாங்களும் அவரவர் வீட்டுக்குப் புறப்பட்டோம். 

Friday 7 January 2022

விளைதல்

சில மாதங்களுக்கு முன்னால், ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட சலூன்களுக்கு எட்டு நூல்கள் கொண்ட தொகுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதன் தாக்கம் சமூகத்தில் எவ்வாறு உள்ளது என ஒரு நண்பர் மின்னஞ்சல் மூலம் வினவியிருந்தார். அவருக்கு அளித்த பதில் :




அன்புள்ள நண்பருக்கு,

நாம் ஒரு சாலையில் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்கிறோம் ; அப்போது ஒரு ஆலமரத்தைப் பார்க்கிறோம். சில நிமிடங்கள் வண்டியை நிறுத்தி விட்டு வண்டி என்ஜினுக்கு ஓய்வு கொடுத்து விட்டு மரத்தின் வேர்பரப்பில் அமர்கிறோம். மரத்தில் சில வினாடிகள் தலைசாய்த்துக் கொள்கிறோம். தருநிழலின் குளுமை நம்மை அமைதி கொள்ளச் செய்கிறது. அந்த விருட்சத்தின் கிளைகளில் அமர்ந்திருக்கும் காகங்களும் கரிச்சான்களும் சிட்டுக்குருவிகளும் நம் கண்ணில் படுகின்றன. நமது சலிப்பும் சோர்வும் நீங்கி நமது பயணத்தைத் தொடர்கிறோம். அந்த விருட்சத்தை அங்கே நட்டவர் யார் என்பதை நாம் அறிவோமா? அதனைப் பராமரித்தவர்கள் யார் என்று அறிவோமா? அந்த மரத்தை நட்டவர் நம்மை அறிவாரா? மரத்தின் நிழல் பலருக்கும் பயன் தரக்கூடியது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அந்த உணர்வின் வெளிப்பாடாக அவர் செயலாற்றியிருக்கிறார். சில வாரங்கள் - சில மாதங்கள் அவர் கவனம் கொடுத்த ஒரு செயல் எத்தனை ஆண்டுகளுக்கு நல்விளைவுகளை உருவாக்கியிருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். மனிதர்களுக்கு மட்டுமா எத்தனை பிராணிகள் எத்தனை பட்சிகள் எத்தனை பூச்சிகள் அந்த ம்ரத்தால் பயன் அடைந்திருக்கும். வாழ்க்கை என்பது மிகப் பெரியது. வாழ்வினை இயக்கும் விசைகளை நம்மால் முற்றறிந்திட இயலாது. இருப்பினும் நமக்குச் சாத்தியமான செயல்களை நாம் ஆர்வத்துடன் உற்சாகத்துடன் மேற்கொள்ள வேண்டும். அதன் விளைவுகள் நம்மால் எண்ணிப் பார்க்க முடியாததாகக் கூட இருக்கக் கூடும்.  

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தனது ‘’மனதின் குரல்’’ நிகழ்ச்சியில் தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த திரு. பொன். மாரியப்பன் அவர்கள் குறித்து பேசியிருந்தார். மாரியப்பன் அவர்கள் தனது சலூனில் ஒரு நூலகம் அமைத்திருப்பதையும் அந்த நூல்களை வாசித்து வாசித்ததன் சாரத்தை ஒரு பக்க அளவில் எழுதுபவர்களுக்கு முடி திருத்தும் கட்டணத்தில் சலுகை வழங்கி வருகிறார் என்ற தகவலையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார். 

இந்த விஷயம் குறித்து யோசித்த போது இதைப் போல மக்கள் பயன் பெறும் செயல் ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எல்லா சலூன்களிலும் வாசிக்க புத்தகங்கள் இருக்கின்றன என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டானது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சலூன்கள் உள்ளன. அவை அனைத்துக்கும் தலா 8 நூல்கள் வழங்கப்பட்டன. 

தமிழ் அறிஞரும் துறவியுமான சுவாமி சித்பவானந்தரின் நூல்களை சலூன்களுக்கு அளிப்பது என்று முடிவு செய்தேன். சுவாமி சித்பவானந்தர் பேரறிஞர். தமிழ், சமஸ்கிருதம், வங்காளி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றவர். தமிழில் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். அவருடைய நூல்களிலிருந்து ஆறு நூல்களைத் தேர்ந்தெடுத்தேன். 1. ஸ்ரீராமகிருஷ்ண சரிதம் 2. ஸ்ரீ சாரதா தேவியாரது சரிதம் 3. ஸ்ரீவிவேகானந்தர் ஜீவிதம் 4. சுவாமி விவேகானந்தர் 5. சகோதரி நிவேதிதை 6. தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர் ஆகிய ஆறு நூல்களையும் ராஜாஜி தொகுத்த பகவான் ராமகிருஷ்ணரின் ஞானமொழி மற்றும் சுவாமி விவேகானந்தரின் உபதேசங்களின் சிறு தொகுப்பான ‘’வீர இளைஞருக்கு’’ என்ற இரண்டு நூல்களையும் சேர்த்து எட்டு நூல்களை வழங்குவதாக முடிவு செய்தேன். இந்த நூல் தேர்வில் ஒரு விஷயத்தை பின்னர் அறிந்தேன். ஸ்ரீ ராமகிருஷ்ண சரிதம், ஸ்ரீ சாரதா தேவியாரது சரிதம் , ஸ்ரீவிவேகானந்தர் ஜீவிதம் ஆகிய மூன்று நூல்களும் சுவாமி சித்பவானந்தர் எழுதிய ‘’முதல் மூன்று நூல்கள்’’ என்ற சிறப்பைப் பெற்றவை. 

இந்த நூல்களுடன் சலூன்களுக்குச் சென்று சலூன்காரர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து உரையாடி நூல்களை வழங்கி விட்டு வந்த போது இந்த விஷயத்தை சலூன்காரர்கள் ஆர்வத்துடன் வரவேற்கின்றனர் என்பதை உணர்ந்தேன்.  60 கி.மீ நீளமும் 50 கி.மீ அகலமும் கொண்ட 3000 சதுர கி.மீ பரப்பு கொண்ட மாவட்டம். 300க்கும் மேற்பட்ட சலூன்கள். பத்து நாட்களை முழுமையாக ஒதுக்கி ஒரு நாளைக்கு 30 சலூன் என நூல்களை வழங்கினேன். ஒரு சலூனிற்கு சராசரியாக பத்து நிமிடம் ஆகும். என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் ; பொன். மாரியப்பன் குறித்து சொல்ல வேண்டும். மாவட்டம் முழுதும் மேற்கொள்ளப்படும் முயற்சி குறித்து சொல்ல வேண்டும். அவர்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் கேட்க வேண்டும். ஒரு சலூனுக்கு 10 - 15 நிமிடம் ஆகி விடும். பலர் தேனீர் அருந்தச் சொல்வார்கள். அவர்கள் உபசரிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். கடையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் இதனைக் குறித்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்கள். அலைபேசி எண் கேட்பார்கள். 

நூல்களை வழங்கி விட்டு வந்த சில நாட்களில் சலூன்களுக்கு வந்த வாடிக்கயாளர்கள் பலர் நூல்களைப் பார்த்து விட்டு சலூன்காரர்களிடம் எனது அலைபேசி எண்ணை வாங்கி எனக்குப் பேசி இந்த முயற்சிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். சிலர் இந்த நூல்கள் எங்கே கிடைக்கும் விலைக்கு வாங்க விரும்புகிறோம் என்று கூறினர். சிலர் என்னைச் சந்திக்க விரும்பினர். அவர்களை அவர்கள் வீட்டுக்குச் சென்று நானே சந்தித்தேன்.  

சலூன் நூலகத்தின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்ற உங்கள் வினாவிற்குப் பின் அதனை அறிய முடிவு செய்தேன். ஒவ்வொரு சலூனையும் நேரில் சந்திக்க வேண்டும் என்றால் முழுமையாக ஒரு வாரம் காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை ஆகும் என்பதால் எல்லா சலூன்களுக்கும் ஃபோன் செய்து பேசுவது என்று முடிவு செய்தேன். எல்லா சலூனுக்கும் ஃபோன் செய்தேன். எங்கள் உரையாடலின் முக்கியக் காரணிகளைக் கீழே பட்டியல் இடுகிறேன். 

1. எனது அழைப்பு எல்லா சலூன்காரர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. 

2. சலூனுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தினமும் நூல்களை எடுத்து வாசிப்பதாகக் கூறினர். இந்த நூல்களைக் குறித்து தினமும் ஒரு உரையாடல் நிகழ்கிறது என்று கூறினர். 

3. சில வாடிக்கயாளர்கள் நூலை வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசித்து விட்டு மீண்டும் சலூனில் கொண்டு வந்து கொடுத்து விடுகின்றனர் என்று சொன்னார்கள். 

4. ஒவ்வொரு அழைப்புக்கும் அவர்கள் கூறும் பதிலிலிருந்து வாடிக்கையாளர் வாசிப்பு விருப்பத்தைக் கணித்து ஐந்துக்கு இத்தனை என மதிப்பெண் அளித்தேன். 90 சதவீதம் ஐந்துக்கு 4.5 மதிப்பெண் பெற்றனர். 5 சதவீதம் ஐந்துக்கு 3.5 மதிப்பெண். ஐந்துக்கும் குறைவான சதவீதமே ஐந்துக்கு 2.5 மதிப்பெண். 

இந்த வரவேற்பு உண்மையிலேயே எனக்கு திருப்தி அளித்தது.  

இன்று நம் தமிழ்ச் சூழலில் பள்ளியில் தமிழ் மொழிக்கோ நூல்களுக்கோ எந்த முக்கியத்துவமும் இல்லை. மொழி மீதான அக்கறையின்மையை நம் பள்ளிக்கல்வி உருவாக்கி விட்டது. இப்படிப்பட்ட மூன்று தலைமுறை இங்கே உருவாகி விட்டது. பள்ளி கல்லூரி பாடப்புத்தகங்கள் தாண்டி 100க்கு 99 பேர் வீட்டில் எந்த புத்தகமும் இல்லை. இந்த சூழ்நிலையில் சலூன்களில் வாசிக்க புத்தகம் இருப்பது என்பது நிச்சயமாக ஒரு நல்நிகழ்வே. குழந்தை உளவியலாளர்கள் எப்போதும் அறிவுறுத்தும் ஒரு விஷயம் உண்டு. முதலில் குழந்தைகள் மொழியறியும் முன்னரே கூட புத்தகங்களைத் தர வேண்டும். அவர்கள் அதனைக் கைகளால் பிடித்து கைகளில் வைத்துக் கொண்டு புத்தகங்களுடன் ஒரு மன அணுக்கத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறான ஒரு அணுக்கமே அவர்களை வாசிப்புப் பழக்கத்துக்கு இட்டுச் செல்லும் என்று. மயிலாடுதுறை மாவட்டத்தின் 300க்கும் மேற்பட்ட சலூன்களில் தினமும் பலருடைய கைகள் புத்தகங்களை எடுத்துப் புரட்டுகின்றன என்பதே எவ்வளவு நல்ல விஷயம். குறியீட்டு அளவிலும் இது முக்கியமான செயல்பாடு. 

சுவாமி விவேகானந்தரின் சொற்கள் தனிமனிதர்களுக்கும் சமூகங்களுக்கும் ஊக்கம் அளிப்பவை. சோம்பலை நீக்கி செயலாற்றுவதற்கான உத்வேகத்தை அளிப்பவை. நமது மரபை நமது பண்பாட்டை எடுத்துச் சொல்ப்வை. அவருடைய சொற்களால் உத்வேகம் பெற்றவர்கள் பலர். அரவிந்தர், மகாத்மா காந்தி, பாரதியார், ராஜாஜி, அவினாசிலிங்கம் செட்டியார் .... என சொல்லிக் கொண்டே போகலாம். 

தமிழ்நாடு விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட மாநிலம். தானியத்தை விதைக்க வேண்டும். முறையாக நீர் பாய்ச்ச வேண்டும். களை எடுக்க வேண்டும். நாம் செய்ய வேண்டியதைச் சரியாக செய்தோம் என்றால் விளைய வேண்டியது சிறப்பாக விளையும். மண்ணுடன் தொடர்புள்ளவன் எதையுமே நம்பிக்கையுடனே காண்பான். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் சலூன் நூலகங்கள் சிறப்பான துவக்கத்தை உருவாக்கியிருப்பதில் என்னுடைய பங்களிப்பு என்பது மிக மிகக் குறைவே. சலூன்களுக்கு நூல்களை நன்கொடையாக அளித்த நண்பர்களும் நூல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை அக்கறையுடன் பெருமகிழ்வுடன் மேற்கொள்ளும் சலூன் கடைக்காரர்களும் சலூன்களில் நூல்களைப் பற்றி உரையாடும் வாசிக்கும் பொதுமக்களுமே இதற்கு முழுமுதற்காரணம். அவர்களுக்கு இந்த தருணத்தில் எனது நன்றியை உரித்தாக்குகின்றேன். 

அன்புடன்,
பிரபு மயிலாடுதுறை

Tuesday 4 January 2022

இமைப் பொழுதும்

சென்ற பத்து நாட்களில் அடுத்தடுத்து மூன்று வெளியூர் பயணங்கள். இன்னும் ஊரின் வழமை திரும்பவில்லை. லௌகிகப் பணிகள் சில மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் வேகம் தேவைப்படுகிறது. அதற்கான ஆயத்தங்களைச் செய்கிறேன். பால், காஃபி, தேனீரைத் தவிர்த்தல் என்பதை அக்டோபரிலேயே துவங்கி விட்டதால் இந்த ஆண்டு புத்தாண்டுத் தீர்மானம் என்பதை எளிதில் பின்பற்ற முடிந்தது.  நிறைய பணிகள் இன்னும் இருக்கின்றன. முன்னரெல்லாம் கால அட்டவணை போட்டு பணிகளைச் செய்வேன். அவை என் தொடர்பானவை. இப்போது மனிதர்களை இணைக்கும் பணியை மேற்கொள்ளத் துவங்கியிருப்பதால் கால அட்டவணை போட்டு பணி செய்ய முடியாது. இன்னதென்று வகுக்க முடியாத பல பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. உண்மையில் மக்களை இணைக்கும் பணியில் போதாமையை உணர்வது மேலும் மேலும் என்ற உற்சாகத்தின் காரணமாகவே. அது நல்ல விஷயம் தான். ஓயாது செயலாற்றுவதன் மூலமே உண்மையான ஓய்வை உணர முடியும். ஓய்வெடுக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்கிறேன். இந்த ஆண்டில் மிக அதிக விஷயங்களை முன்னெடுக்க வேண்டும். 

Saturday 1 January 2022

அந்த இளம் பெண்
அத்தனை
வெட்கப்பட்டு
சிரிக்கும் கண்களுடன்
விரலால் சுட்டிய
மலைப்பாதையில் 
அஸ்தமனமாகிறது
அந்தி சூரியன்