Wednesday 30 August 2023

நான்கு நண்பர்கள்

கட்டுமானப் பணியிடத்தில் நான்கு நண்பர்கள் அறிமுகமானார்கள். 

பணி தொடங்க கொட்டகை அமைத்ததுமே கீற்றை சிறுது விலக்கி சின்ன வழியொன்றை உருவாக்கிக் கொண்டு உள்ளே சென்று தங்கத் தொடங்கினார்கள். கட்டிடம் என்பது பலருக்கு இடம் அளிக்கக் கூடியது என்பதால் கொட்டகையில் அவர்கள் நால்வரும் இருப்பு கொள்வது நன்நிமித்தம் என்றே ஆனது. பின்னர் பணிக்காக மணல் அடித்ததும் அதன் ஈரத்தன்மையை விரும்பி அதில் வாசம் செய்யத் தொடங்கினர். 

நான்கு பேருக்கும் நான் பெயரிட்டேன். ககன், புவன், சநு, மங்கள். ககன் கருமை கொண்டவன். புவன் கருப்பும் வெள்ளையுமானவன். மங்கள் சிவப்பு நிறம் கொண்டவன். சநு இருப்பதில் சிறியவன். 




நால்வரும் அவ்வப்போது பணியிடத்தில் உள்ள பொருட்களை முகர்வார்கள். சிமெண்ட் கலவையை நேற்று சநு முகர்ந்து கொண்டிருந்தான். பின்னர் முகர்ந்து விட்டு என்னைப் பார்த்தான். அவன் பார்வை ‘’இது என்ன என்ற கவனம் செலுத்து’’ என்பதைப் போல இருந்தது. ‘’கட்டுவேலைக்கான கலவை ; நன்றாக இருக்கிறது ‘’ என்றேன். அவனுக்கு ஐயம் முழுதும் நீங்கவில்லை. ‘’நீங்கள் சொன்னால் சரிதான் ‘’ என இருந்து விட்டான். 

பணியிடத்துக்குச் சென்றதும் அவற்றுக்கு பிஸ்கட் போடுவேன். தயங்கி தயங்கி நான்கும் எடுத்துக் கொள்ளும். பணியிடம் அமைந்திருப்பது ஒரு கடைவீதி. அதட்டும் குரல்களையும் மனிதர்களையும் அதிகம் சந்திப்பதால் அவற்றின் இயல்பில் சிறு எச்சரிக்கை உணர்வு இருக்கும். நான்குமே அமைதியானவை. மிக மென்மையானவை. 

பழக்கமான நாய்கள் நம்மைப் பார்க்கும் பார்வை என்பது மகத்தானது. அதில் நிறைந்திருக்கும் அன்பும் பிரியமும் பணிவும் மரியாதையும் இனிமையானது. 

நான்கு நண்பர்களும் எனக்கு ஒவ்வொரு நாளும் எனக்கு நம்பிக்கை தருகிறார்கள். இந்த வாழ்க்கை இனியது என.   

Sunday 27 August 2023

சிவசக்தி

சொல்லும் பொருளும் இணைவது போல சிவனும் சக்தியும் இணைகிறார்கள். காளிதாசன் அம்மையப்பனாகிய சிவசக்தியை சொல்லின் பொருளுக்காக வணங்குகிறான். 

- ரகுவம்ச காவியத்தின் முதல் பாடல்

இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பாலும் கூட்டு முயற்சியாலும் சந்திர மண்டலத்தில் இந்தியாவின் ‘’விக்ரம்’’ நிலைகொண்டு ‘’பிரக்ஞான்’’ நிலவில் ஆய்வு மேற்கொண்டு தரவுகளை அனுப்பத் தொடங்கியுள்ளது. இதனை சாத்தியமாக்கிய இஸ்ரோ அமைப்பும் இஸ்ரோ அமைப்பின் நிலவு ஆய்வுப் பணிகளுக்கு தடையின்றி நிதி கிடைப்பதை உறுதி செய்த மத்திய அரசும் பாராட்டுக்குரியவர்கள். 

பல்வேறு உலக நாடுகள் வெவ்வேறு விதங்களில் இஸ்ரோவின் திட்டங்களை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்வார்கள் என்பது எளிதில் யூகிக்கக் கூடிய ஒன்றே. அத்தனை முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது என்பதாலேயே இந்த சாதனை சாத்தியமாகியிருக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்த உறுதியுடன் செயல்பட்ட இஸ்ரோவின் ஒவ்வொரு விஞ்ஞானியும் தனித்த முக்கியத்துவம் கொண்டவர்கள். 

கோடானுகோடி மனிதர்களை மகிழச் செய்வது என்பதும் பெருமிதம் கொள்ளச் செய்வது என்பதும் ஓர் அருஞ்செயல். அது நிகழ்ந்திருக்கிறது. இந்த சாதனை ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் உரியது. ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நம் நாடு அளித்திருக்கும் பரிசு இந்த சாதனை.  

Wednesday 23 August 2023

கண்டடைதல் ( நகைச்சுவைக் கட்டுரை)

 கட்டுமானப் பணியிடத்துக்கு அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடம் ஒன்று உள்ளது. சமீபத்தில் தான் அதனைக் கட்டி முடித்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும். அதன் முன் என் ஹீரோ ஹோண்டா வாகனத்தை நிறுத்தி விட்டு பணியிடத்துக்குச் செல்வேன். இதற்கும் அதற்கும் 20 அடி தூரம். பணியாளர்களும் தங்கள் வாகனங்களை அங்கே நிறுத்தியிருப்பார்கள். 

கட்டுமானப் பணியாளர்கள் பணி துவங்கிய நாளிலிருந்தே என்னிடம் ‘’சார் ! புது பைக் வாங்குங்க. இந்த வண்டி ரொம்ப பழசா இருக்கு’’ என்று கூறிக் கொண்டேயிருப்பார்கள். நான் ஒரு விஷயத்தை அவதானித்தேன். பணி நிகழும் காலங்களில் வீட்டிலிருந்து பணியிடம் அங்கிருந்து மேலும் சில இடங்கள் பின்னர் மீண்டும் வீடு என இருக்கும் போது பெட்ரோல் குறைவாகவே ஆகிறது. பணி இல்லாமல் இருக்கும் காலங்களில் அதிகம் செல்வாகிறது. இது என் மனப்பிராந்தியா எனத் தெரியவில்லை. 

இன்று காலை வழக்கமாக வண்டியை நிறுத்திய இடத்தில் ரொம்ப நேரம் கழித்துப் பார்க்கும் போது வண்டியைக் காணவில்லை. எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அங்கும் இங்கும் தேடினேன். பணியாளர்களிடம் சொன்னேன். பணியிடத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் தேடிப் பார்த்தோம். யாராவது எடுத்துச் சென்றிருப்பார்களா என்ற ஐயம் மனதைக் கவலைக்குள்ளாக்கியது. 

பணியிடத்திலிருந்து சிறு தொலைவில் ஒரு கடை உள்ளது. அங்கு காலை சென்றிருந்தேன். அங்கு சென்று பார்த்தேன். அதன் வாசலில் வண்டி நின்றிருந்தது. பணியிடத்துக்கு எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். 

பணியாளர்கள் சொன்னார்கள். ‘’சார் ! வண்டி காணாமல் போயிருந்தா நீங்க புது வண்டி வாங்க வேண்டி வந்திருக்கும்னு நினைச்சோம். நாங்க நினைச்சது நடக்காம போயிடுச்சு சார் ‘’. 

Sunday 20 August 2023

பணியிடம்

 ஊரில் ஒரு கட்டுமானப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். கட்டுமானப் பணி நடைபெறும் இடம் என்பது பல பணியாளர்கள் தங்கள் தீவிரமான உடல் உழைப்பை அளித்துக் கொண்டிருக்கும் இடம். அவ்வாறு பலர் தீவிரமாகப் பணியாற்றும் போது அந்த இடத்தின் தன்மை என்பது இயல்பான நிலையிலிருந்து உயர் நிலை நோக்கி சென்றிருக்கும். ஒரு கால்பந்து மைதானம் போல. ஒரு வாலிபால் மைதானம் போல. எனவே கட்டுமானப் பணியிடத்தில் இருக்கும் போது அந்த இடத்தில் இருப்பவர்கள் மனமும் உடலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இரும்புப் பட்டறை உற்பத்திப் பட்டறை இரு சக்கர வாகனப் பட்டறை ஆகிய இடங்களிலும் இந்த தன்மையை கண்கூடாக உணர முடியும். கட்டுமானப் பணியிடத்துக்கு முழுமையாக நம்மை ஒப்புக் கொடுத்தோம் என்றால் பணி முன்னேறிச் செல்லும் வேகம் நம் மனதிலும் ஏற்படுவதை உணர்ந்து கொள்ள முடியும். 

கட்டிடங்கள் ஒரு வடிவத்துக்குள் அமைபவை. மனம் வடிவமின்மையை தன் இயல்புகளில் ஒன்றாகக் கொண்டது. எனினும் மாபெரும் வடிவமின்மையில் வடிவங்களை அமைத்து விட முடியும். ஸ்தூலம், சூட்சுமம் என்று இரு நிலைகள் உண்டு. மனம் சூட்சுமமானது. கட்டுமானம் ஸ்தூலமானது. இவை இரண்டுக்கும் இடையே ஏற்படும் ஒத்திசைவே கட்டிடப் பணி. ’’உள்ளத்திலே உள்ளதுதான் உலகம்’’ என்னும் கண்ணதாசன் வரியோடு இதனை சேர்த்து யோசிக்கலாம். 

காலையில் எழுந்ததும் ஒரு வாளியை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறேன். முதல் நாள் நடந்த செங்கல் கட்டுமானப் பணி அனைத்தின் மீதும் நீர் ஊற்ற வேண்டும். வெயில் வருவதற்கு முன்னால் அவ்வாறு நீரை ஊற்றினால் அது நீண்ட நேரம் காயாமல் இருக்கும். ஒரு ஹேண்ட் பம்ப் இருக்கிறது. அதை இயக்கி வாளியில் நீர் நிரப்பி முழுதும் நீர் ஊற்றுவேன். பணியாளர்கள் பணிக்கு வர காலை 9 மணி ஆகும். அவர்கள் வந்ததும் மீண்டும் ஒரு முறை நீர் ஊற்றச் சொல்வேன். பின்னர் பணி துவங்கும். இன்ன பணி என வரையறுத்துச் சொல்ல முடியாது. ஆனால் ஏதேனும் பணி இருந்து கொண்டே இருக்கும். சிறியதிலிருந்து பெரியது வரை. கட்டுமானப் பொருட்களை ஆர்டர் செய்வது, நேரத்துக்கு அவை வந்து சேர்வதை உறுதி செய்வது, அவ்வப்போது தேவைப்படுபவற்றை வாங்கித் தருவது என ஏதேனும் பணிகள். பணியிடத்தில் இருப்பதே வேலை என்றாகி விடும். பணியிடத்தில் நாம் இருந்தாலே பணியோட்டம் சீராக இருக்கிறது என்பதை உறுதி செய்து விட முடியும். 

கட்டுமானப் பணியின் சிறப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் அது நிறைவடையும் என்பதே. நிறைவு பெற்றதும் அடுத்த பணி. மீண்டும் ஒரு புதுத் துவக்கம். 

பணியிடத்துக்கு அருகில் சிறிய தொன்மையான சிவாலயம் ஒன்று உள்ளது. காலையில் அங்கு செல்வேன். எந்நாட்டவர்க்கும் இறைவன் முன் அடி பணிவேன். எல்லாமாகவும் இருப்பவன் அவனே. 

Monday 14 August 2023

பெரும் மாற்றங்கள்

எனது நண்பர் ஒருவர் நேற்று வீட்டுக்கு வந்திருந்தார். அவர் ஹோசூர்வாசி. மூன்று ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கிறோம். ஹோசூர், பெங்களூரைச் சுற்றி நிகழும் சாலைப் பணிகள் குறித்து கூறிக் கொண்டிருந்தார். திட்டங்கள் அறிவித்தது போல் இருக்கிறது ; பின்னர் குறுகிய காலத்தில் அவை நிறைவேறி அந்த சாலைகளில் போக்குவரத்து தொடங்கி விடுகிறது என்று கூறினார். 

நாடெங்கும் கணிசமான குடும்பங்களில் இரு சக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் இருக்கின்றன. அவை சாலைகளில் நெரிசல் இன்றி செல்ல அகலமான சாலைகள் தேவை. கடந்த பத்து ஆண்டுகளில் பிரமிக்கத் தக்க அளவில் சாலைகள் அகலமாக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் இந்த பணி நடைபெற்றுள்ளது. 

சரக்கு மற்றும் சேவை வரியை செயலாக்குவது என மத்திய அரசு எடுத்த முடிவு துணிசலான முடிவு. மத்திய அரசுக்கு அதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரியால் வசூலாகும் தொகை ஒவ்வொரு மாதமும் கூடிக் கொண்டே செல்கிறது. இன்று அதனால் நாட்டின் உள்கட்டமைப்பில் பெரும் முதலீடு செய்யப்படுகிறது. 

பொருளியல் பலன் கடைசி மனிதனையும் சென்றடைய சிறப்பான உள்கட்டமைப்பு அவசியம். வடகிழக்கு மாநிலங்களில் இந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்றுள்ள பணிகள் அதற்கு நேரடியான சாட்சியம். உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை  உணர்ந்திருப்பவர்களின் ஆட்சி இன்று மத்தியில் நடக்கிறது.  

Friday 11 August 2023

நிலமும் மொழியும்

எழுத்தாளர் ஜெயமோகன் இந்திய நிலத்தில் பெரும் பயணம் மேற்கொள்ள விரும்புவர்களுக்கு ஒரு விஷயத்தைப் பரிந்துரைப்பதுண்டு. அதாவது, எந்த நிலம் நோக்கி நாம் செல்ல விரும்புகிறோமோ அந்த நிலத்தின் இலக்கியம் ஒன்றை வாசிக்க வேண்டும். ஒரு படைப்பாளியின் மொழியில் வெளிப்படும் நிலம் நம் அகத்தில் நிறைந்ததன் பின் அந்த நிலத்துக்கு நாம் செல்வோமோயின் அந்த அனுபவம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்பதுடன் அந்த நிலம் நம் நிலம் என்னும் உணர்வை உருவாக்கித் தரும்.  

நான் இந்திய நிலத்தில் கணிசமான பகுதிகளில் பயணித்திருக்கிறேன். என் பயணத்திற்கு முன் பெரும்பாலான இந்திய நாவல்களை வாசித்திருந்தேன். ‘’கண்ணீரைப் பின்தொடர்தல்’’ நூலில் ஜெயமோகன் அளித்த பட்டியலில் உள்ள கணிசமான நாவல்களை வாசித்திருந்தது எனது இந்தியப் பயணத்துக்கு பெரும் துணை புரிந்தது. 

கேரள நிலம் எனில் தகழியின் ‘’செம்மீன்’’ அல்லது கோவிலனின் ‘’தட்டகம்’’ , கர்நாடகப் பிராந்தியம் என்றால் சிவராம காரந்தின் ‘’மண்ணும் மனிதரும்’’ பைரப்பாவின் ‘’ஒரு குடும்பம் சிதைகிறது’’. மராட்டியத்துக்கு வெங்கடேஷ் மாட்கூல்கர் ( பன்கர்வாடி நாவல்) . ராஜஸ்தான் , உத்திரப் பிரதேசம் என்றால் சதுரங்கக் குதிரைகள் நாவலின் கிரிராஜ் கிஷோர் சொற்கள் வழியாகவே அவை நினைவில் பதியும். உத்திரப் பிரதேசத்தின் மைய நிலத்துக்கு குர் அதுல் ஐன் ஹைதரின் சொற்கள்.  தமிழ் எழுத்தாளர் அஜிதனின் மொழியில் ’’மைத்ரி’’ வாசித்து விட்டு உத்தரகண்ட் செல்வோமெனில் அது அளிக்கும் உணர்வே தனி. 

இந்த நிலங்களுக்கு நான் சென்ற போது அந்த மொழியில் நான் வாசித்த ஆசிரியர்களின் சொற்களில் தீட்டப்பட்டிருந்த கிராமங்களும் நகரங்களும் யதார்த்தத்தில் கண் முன் எழுந்து வந்தன. அவ்வாறு எழுந்து வந்த போது இந்த ஊர்கள் எனக்கு மிகவும் பரிச்சயமானவை ; நான் எப்போதோ வசித்த ஊர்கள் என்ற எண்ணம் உருவானது அந்த நிலங்களை அகத்தில் மிக அணுக்கம் கொண்ட ஒன்றாக உணர வைத்தது. 

சமீபத்தில் நண்பர் ஒருவருடன் இந்த விஷயம் குறித்து  பேசிக் கொண்டிருந்தேன். நண்பரிடம் ஒரு திருஷ்டாந்தம் சொன்னேன். 

’’நண்பரே ! தமிழகம் காண பஞ்சாபிலிருந்தோ ஹிமாச்சல் பிரதேசத்திலிருந்தோ ஒருவர் வருகிறார். தமிழகம் காண அவர் வாசிக்க வேண்டிய நாவல் அல்லது நாவல்கள் என எவற்றை அவருக்குப் பரிந்துரைக்க வேண்டும்’’ என்ற வினாவை எழுப்பினேன். 

நண்பர் அமைதியாக யோசித்தார். 

‘’இது ஒரு திருஷ்டாந்தம்தான் எனவே இன்று வரை ஹிந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ மொழிபெயர்க்கப்படவில்லை என்றாலும் எதிர்காலத்தில் நிகழும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் உங்கள் தெரிவுகளைத் தெரிவியுங்கள் ‘’ என்று நண்பரிடம் சொன்னேன். 

நண்பரின் மௌனம் கலையவில்லை. 

என் மனம் அதற்குள் சர சர என யோசித்திருந்தது. நான் முதலில் சொன்னேன். 

’’தமிழ் நிலமும் தமிழ் அகமும் அறிய எவரும் முதலில் வாசிக்க வேண்டிய நாவல் கொற்றவை. அதன் பின் விஷ்ணுபுரம். அதற்குப் பின்னால் வெண்முரசு’’

இந்த மூன்று நாவல்களை வாசித்து விட்டு ஒருவர் தமிழகத்தில் பயணிப்பார் எனில் அவரால் தமிழ் அகத்தையும் தமிழகத்தையும் அணுகி நெருக்கமாக அறிய முடியும். 

நான் கூறியவை நண்பர் மனத்தில் பல்வேறு விஷயங்களை கிளறி எழச் செய்திருக்கின்றன என்பதை அறிந்து கொண்டேன். நண்பரிடம் இந்த பட்டியலில் ஜெயமோகன் அல்லாத மற்ற படைப்பாளிகளின் நூல்கள் எவை எவை சேரக் கூடும் என்று கேட்டேன். 

பின்னர் நான் இரண்டு நூல்களைக் கூறினேன். கி. ராஜநாராயணனின் ‘’கோபல்ல கிராமம்’’ மற்றும் சுந்தர ராமசாமியின் ‘’ஒரு புளியமரத்தின் கதை’’ 

நாடக மேடை

ஷேக்ஸ்பியரின் பிரபலமான வரி ‘’ உலகம் ஒரு நாடக மேடை’’. அவர் என்ன சொல்கிறார் . இந்த உலகம் காட்சிகளால் ஆனது என்றா? எத்தனை எத்தனை காட்சிகளும் உணர்ச்சிகளும் நிரம்பிய மேடை. இந்த உலகம் ஒரு நாடக மேடை என்பதைப் புரிந்து கொண்டவன் இந்த உலகைக் காணும் விதம் தனித்துவம் கொண்டதாயிருக்குமா? காட்சிகள் மாறுகின்றன. காலம் கதாபாத்திரங்களை உருவாக்குகிறது. பின்னர் காலம் அந்த கதாபாத்திரங்களை வெளியே அனுப்பி விட்டு புதிய கதாபாத்திரங்களை உள்ளே கொண்டு வருகிறது. குழந்தைப் பருவம், இளமைப் பருவம், நடுவயது, முதுமை என ஒரு கதாபாத்திரமே வெவ்வேறு வேடம் பூணுகிறது. 

கவிஞன் எளிதாகக் கூறி விட்டான் ‘’நாடக மேடை’’ என. அந்த மேடையில் நவரசங்களும் அரங்கேறுகின்றன. புன்னகைத்திருப்பவர்களும் உண்டு. மகிழ்ச்சிப் பெருக்கில் திளைப்பவர்களும் உண்டு ; துயருறுபவர்களும் உண்டு. 

லட்சோப லட்சத்தில் ஒருவர் தான் எந்த வேடமும் பூணாமல் உலகின் ஒட்டுமொத்த நாட்கத்தையும் காண்கிறார். அந்த ஒருவருக்காகவே இந்த ஒட்டுமொத்த நாடகமும் நடக்கிறது.  

Monday 7 August 2023

உலகங்கள்

இன்று ஊரின் பிரபலமான வீதியொன்றில் குடியிருக்கும் ஒருவரைக் காண எனது நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். இப்போது அந்த வீதியில் வங்கிகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மருத்துவ பரிசோதனை நவீன ஆய்வகங்கள், சிறிதும் பெரிதுமான கடைகள் ஆகியவை பரவலாக உள்ளன. எங்கும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களின் இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த வீதியில் இருந்த ஒரு சில தொன்மையான வீடுகளில் நாங்கள் சென்ற வீடும் ஒன்று. அந்த வீட்டுக்குள் நுழைந்ததும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த காலத்துக்குச் சென்று விட்டார் போல ஒரு உணர்வு. அந்த வீட்டைக் கட்டி 60 ஆண்டுகள் ஆகியிருக்கக் கூடும். இருப்பினும் புத்தம் புதிதாக இருக்கிறது. வீட்டின் தரை சுவர்கள் ஆகியவை மிக மிகத் தூய்மையாக பராமரிக்கப்பட்டிருந்தன. அந்த வீட்டில் வயது முதிர்ந்த இரு முதியவர்கள் மட்டும் இருக்கிறார்கள். பணியாளர்கள் ஓரிருவர் காலை மாலை வந்திருந்து பண்டங்களை வாங்கிக் கொடுத்து விட்டு செல்கிறார்கள். வாசலில் ஒரு கேட். அங்கிருந்து பத்து அடி தள்ளி நிலைக்கதவு. கதவுக்குள் ஒரு உலகம்.  கதவுக்கு வெளியே இன்னொரு உலகம். 

இந்த உலகம் விதவிதமான வியப்புகளால் ஆனது. இந்த உலகம் விதவிதமான திகைப்புகளை வழங்கக் கூடியது.  

Friday 4 August 2023

அழகிய மரம்

நேற்று காலை என் நண்பர் ஒருவர் எனது மாருதி ஆம்னி வாகனத்தை சில மணி நேரம் பயன்படுத்திக் கொள்ளலாமா எனக் கேட்டார். மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அவர் வீட்டுக்குச் சென்று வண்டியை கொடுத்து விட்டு வந்தேன்.  நண்பருக்கு பூம்புகார் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. அங்கே சென்று மதிய உணவருந்தி விட்டு என்னிடம் பேசினார். மாலை 4 மணி சுமாருக்கு ஊர் திரும்பி விடுவேன் என்று சொன்னார். நான் அவருக்காகவும் வண்டிக்காகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு கார் தேவைப்படவில்லை எனினும் எனது ஆம்னியை புதிதாகக் கையாளும் நண்பருக்கு வாகன இயக்கத்தில் எதிர்பாராத இடர் ஏதும் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற கரிசனம். 

மாலை 4 மணிக்கு நண்பரிடமிருந்து அலைபேசி அழைப்பு. எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பியதாகவும் பின் வண்டி மெயின் ரோட்டில் நின்று விட்டதாகவும் சாலையோரம் இருக்கும் வீடு ஒன்றின் எதிரில் அவர்கள் அனுமதியுடன் வண்டியை நிறுத்தியிருப்பதாகவும் சொன்னார். நான் வண்டியை லாக் செய்து சாவியைக் கொண்டு வந்து விடுமாறு சொன்னேன். ஐந்து முப்பது அளவில் அவர் வீட்டுக்குச் சென்று சாவியைப் பெற்றுக் கொண்டேன். எனது நண்பர் ஒருவர் கார் நிற்கும் கிராமத்துக்குப் பக்கத்தில் உள்ள மெக்கானிக் ஒருவரைத் தனக்குத் தெரியும் என்று கூறி அவருடைய அலைபேசி எண்ணை அளித்தார். மெக்கானிக்கைத் தொடர்பு கொண்டு அவர் இருக்கும் இடத்துக்குச் சென்று அவரை என் பைக்கில் அழைத்துக் கொண்டு கார் இருக்கும் இடத்துக்குச் சென்றேன்.

காரில் ஒரு சிறிய ஸ்டார்ட்டிங் டிரபிள். என்ன சிக்கல் என அறிய ஒரு மணி நேரம் ஆகி விட்டது. சிக்கல் இதுதான் எனக் கண்டறிந்ததும் 10 நிமிடத்தில் சரி செய்யப்பட்டது. மெக்கானிக்கை காரை ஓட்டிக் கொண்டு வரச் சொல்லிவிட்டு நான் காரைப் பின் தொடர்ந்தேன். 20 நிமிடத்தில் தருமபுரம் வழியாக ஊர் வந்து சேர்ந்தோம். காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு அவரை மீண்டும் அவருடைய ஊரில் கொண்டு விட அவரை ஏற்றிக் கொண்டு என்னுடைய பைக்கில் புறப்பட்டேன். 

தருமபுரம் தாண்டிய போது அங்கே ஒரு தேவார பாடசாலை இருந்தது. மெக்கானிக் என்னிடம் ‘’தேவாரம்’’ என்றால் என்ன என்று கேட்டார். 

’’அதாவது தம்பி ‘’ என்று ஆரம்பித்தேன். 

‘’மனுஷங்களான நமக்கு நம்மோட மனசு காட்சிகளாகவும் மொழியாவும் சப்தங்களாவும் இருக்கு. இப்ப ’’அம்மா’’ங்கற வார்த்தையை சொல்லும் போது நம்ம மனசு நெகிழுது. ஒரு குழந்தையைப் பாக்கும் போது நம்ம மனசு மிருதுவா ஆகுது. வாலைக் குழைக்கும் நாயையைப் பாத்தா , கரிச்சான் குருவியை கருடனைப் பாத்தா நம்ம மனசு சாஃப்ட் ஆகுது இல்லையா ! அதுக்கு என்ன காரணம் ? மனுஷ மனசு நெகிழும் தன்மை கொண்டது. நெகிழ்வான மனம் தன்னை இசையாவும் கவிதையாவும் வெளிப்படுத்திக்கும். மொழி தெரிஞ்ச எல்லாருக்குள்ளயம் கவிதை இருக்கும். பெரும்பாலானவங்களுக்கு நுண்மையா சின்னதா சிலருக்கு அதிகமா. நெகிழ்வான சென்சிடிவான மனம் ஒரு ஆறு ஓடுறதைப் போல கவிதையா பிரவாகம் எடுக்கும். திருஞானசம்பந்தர் பாடின பாடல்கள் கவிதைகள் தான் தேவாரம். அவருக்கு சின்னக் குழந்தையா இருக்கறப்பவே பாடல் பாடும் தன்மை இருந்தது. அந்த குழந்தையோட மொழி தான் 1500 வருஷம் தாண்டி நம்மகிட்ட வந்திருக்கு. அரிய ஒரு விஷயத்தை தன்னோட அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கணும்ங்கற உணர்வு நம்ம முன்னோர்களுக்கு இருந்துச்சு . அப்படி நம்ம கிட்ட வந்து சேர்ந்ததுதான் நம்மோட மரபு. யூ டியூப் ல ‘’தேவாரம்’’னு தேடினால் ஓதுவார்கள் பலர் பாடிய தேவாரம் கேட்கக் கிடைக்கும். அவசியம் கேள்’’என்று சொன்னேன்.

அந்த மெக்கானிக் தம்பி டிப்ளமா இன் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்திருந்தான். இளைஞன். ஆர்வமாக மேலும் பல கேள்விகள் கேட்டான். உண்மையில் அவனுக்கு மொழி சார்ந்த நுண்ணுணர்வு இருக்கிறது. நான் கூறியவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டான். அவனுக்கு வாசிப்பதற்கு சில புத்தகங்கள் கொண்டு வந்து கொடுப்பதாகக் கூறினேன். தனது பாட்டனார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ஸின் ‘’இந்திய தேசிய ராணுவத்தில்’’ இருந்ததைக் கூறினான். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 

அவனுக்கு திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகங்களை நூலாக வழங்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். 

Wednesday 2 August 2023

பயிற்சி அனுபவம்

 01.01.2023லிருந்து நிகழ்ந்து வரும் 1111 மணி நேர வாசிப்பு சவாலில் இதுவரை 365 மணி நேரம் வாசித்திருக்கிறேன். இதைப் போல் இன்னும் இருமடங்கு வாசிக்க வேண்டும் ; இலக்கை எட்ட. மூன்றில் ஒரு பாகத்தை நிறைவு செய்ததில் பெற்ற பயிற்சி அனுபவம் எஞ்சும் தூரத்தைக் கடக்க உதவும் என்பதால் அதனை தொகுத்து வகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. 

(1) ஜனவரி 1 அன்று சவால் துவங்கிய போது ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்பதாக இலக்கு இருந்தது. தினம் ஒரு மணி நேரம் என உறுதி செய்து கொண்டதை தினம் 3 மணி நேரம் என வகுத்திருந்தால் வாசிப்பு சவாலில் பாதி எட்டப்பட்டிருக்கும். இப்போது இலக்கை எட்ட தினம் 5 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. 

(2) வாசிப்பு சவாலின் ஆரம்ப நாட்கள் மிகவும் முக்கியமானவை. சராசரி வாசிப்பை ஆரம்ப நாட்க்ளில் துவங்கினோம் என்றால் இலக்கை எளிதில் எட்டலாம். 

(3) அதிகாலை நேரம் மட்டுமே முழுமையாக நம் கைகளில் உள்ளது. பகல் பொழுதை அன்றாடப் பணிகள் எடுத்துக் கொள்ளும். இரவு உணவை சற்று முன்னரே உண்டு அதன் பின் சில மணி நேரம் வாசிக்க நேரத்தை உண்டாக்கிக் கொண்டால் நலம். 

(4) லௌகிக வாழ்க்கையில் நாம் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறோம். திட்டமிடுகிறோம். லௌகிகத்துக்கு அப்பால் நாம் முன்னெடுக்கும் விஷயங்களிலும் லௌகிகத் திட்டமிடுதல்களின் தாக்கம் இருக்கும். வழக்கமான மனநிலையில் நாம் எண்ணியது நடவாமல் போனால் அதனைத் தோல்வி எனக் கருதுவோம். அவ்வாறு அல்ல. அதனை ஓர் அனுபவமாகக் கொண்டு முன்செல்ல வேண்டும். 

வாசிப்பு சவால் இன்று தான் தொடங்குவதாக எண்ணுகிறேன். டிசம்பர் 31க்குள் 746 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்பது தான் சவால். 

1111 மணி நேர சவாலில் 210 நாட்கள் தினமும் குறைந்த பட்சம் 1 மணி நேரம் வாசித்திருக்கிறேன். இப்போது 155 நாட்கள் தினமும் 5 மணி நேரம் வாசிக்க வேண்டும். ஏழு மாதப் பயிற்சியை அடித்தளமாகக் கொண்டு அடுத்த 5 மாதத்தில் செயல்பட வேண்டும். 

இந்த 7 மாத அனுபவத்தில் இருந்து செய்தது செய்யத் தவறியது ஆகியவற்றை அடையாளம் கண்டு முன்னகர வேண்டும். 

மீண்டு எழுவோம் என நம்பிக்கை கொள்ளுதல் எப்போதும் சிறப்பானது.