Monday 18 November 2019

ஒரு கருவி

ஒரு கருவி. கையடக்கமானது. டார்ச் லைட் போல் எளிதில் ஆன் செய்ய வேண்டும். ஆஃப் செய்ய வேண்டும். சகலவிதமான வங்கி மற்றும் வணிகச் செயல்பாடுகளின் பணப் பரிமாற்றத்துக்கும் பயன்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அமேசான் கிண்டில் புத்தகம் படிப்பதற்காக மட்டும் என இருப்பதைப் போல. மிகக் குறைவான நேரத்தில் – சில நிமிடங்களில் சார்ஜ் ஆகக் கூடியதாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் ஏடிஎம் கார்டுகள் வந்த போது மக்கள் அதனை மிக இயல்பாகப் பயன்படுத்தத் துவங்கினர். வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு அது மிகவும் பயன் உள்ளது எனக் கருதினர். வணிக நிறுவனங்கள் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள நுகர்வோர் வற்புறுத்தியிருக்க வேண்டும். இந்திய நுகர்வோருக்கு அப்படி பழக்கம் இல்லை. வணிகச் செயல்பாடுகள் அனைத்தும் வங்கிக் கணக்கில் வருவதை பெரும்பாலான வணிகர்கள் விரும்புவதில்லை. ஆதலால் ஒரு பொருளை வாங்கச் செல்லும் போது ஏடிஎம் சென்று பணம் எடுத்துக் கொண்டு கடைகளுக்குச் செல்கின்றனர். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை வணிக நிறுவனங்களில் எலெக்ட்ரானிக் முறையைப் பயன்படுத்துமாறு ஆலோசனை சொல்லலாம். பள்ளி கல்லூரி மாணவர்களிடம் இதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துச் சொல்லலாம். இந்திய வங்கியியல் வரலாற்றில் அவர்கள் எப்போதுமே வாடிக்கையாளர்களை நோக்கிச் சென்று – பேசி- விவாதித்து- எடுத்துரைத்து- பயிற்றுவித்ததில்லை என்பதே உண்மை. வங்கிகள் வங்கிச்சேவைகளை மக்களிடம் கொண்டு செல்ல தற்காலிக ஊழியர்களைக் கொண்ட ஒரு தனி அமைப்பை உருவாக்கிக் கொள்வது இந்தியா போன்ற நாடுகளுக்கு நல்லது. அதை அவர்கள் செய்வதில்லை. ஊழியர்கள் அதில் பெருமளவு ஆர்வம் காட்ட மாட்டார்கள். வங்கிக் கணக்குகள் அதிகரிப்பது அவர்களின் வேலைப்பளுவைக் கூட்டும்.

சகாயமான விலையில் இந்த நோக்கத்துக்காக மட்டும் ஒரு கருவி உருவாக்கப்படும் எனில் சாமானிய இந்தியன் அதன் மூலம் தனது தினசரி வாழ்வின் நுகர்வுத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள அது உதவும்.     

Saturday 16 November 2019


ஏந்திக் கொள்ளும் கைகள்
நோக்கி
தாவி வருகிறது
ஒரு குழந்தை
அன்று
ஏந்திய கை ஒன்றில்
விழுந்தது
முதல் துளி
மழை
ஏந்திக்  கொள்ளும் கைகளில்
தன்னை
பிரதிபலித்துக் கொள்கிறது
வானம்


Thursday 14 November 2019

நாம்

எனது தந்தை என்னைச் சிறுவயதில் எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் செல்வார். பைக்கில் பயணிக்கலாம் என்பதால் நான் உடனே கிளம்பி விடுவேன். சைக்கிள் கற்றுக் கொண்டவுடன் அது சற்று குறைந்தது. ஆயினும் வாரம் இரண்டு நாட்களாவது நானும் அப்பாவும் சேர்ந்து பயணிப்போம். கட்டிடக் கட்டுமானம் நடைபெறும் இடங்கள், அலுவலகங்கள், திருமண விழாக்கள், கொல்லுப் பட்டறைகள் மற்றும் இயந்திர உற்பத்தி தலங்கள் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்வார். இப்போது யோசித்துப் பார்த்தால் எனக்கு பலவிதமான விஷயங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கிருந்திருக்கிறது என்பதை யூகிக்கிறேன். தொழில்நுட்பம் மீது வலுவான நம்பிக்கை கொண்டிருந்தார். கடின உழைப்பாளி. எச்செயலையும் செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பவர். தனது கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைய அன்றைய முதலமைச்சர்  காமராஜ் அவர்களே காரணம் என்பதால் இன்றும்  தீவிர காமராஜ் ஆதரவாளர்.

அப்பா அழைத்துச் செல்லும் இடங்களில் பெரும்பாலும் எனக்கு எந்த அலுவலும் இருக்காது. சென்று கொஞ்ச நேரம் ஆனதும் வீட்டுக்குப் போகலாமா என்பேன். அப்பா அவ்வாறு கேட்கக் கூடாது என்பார். சிரமப்பட்டு அமர்ந்திருப்பேன். அப்போது என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கவனிப்பேன். எனக்கு ஒன்றும் புரியாது. ஆனாலும் பார்த்துக் கொண்டிருப்பேன். ஏன் இந்த கான்கிரீட் மெஷின் சுற்றுகிறது? ஏன் கட்டிடம் முழுக்க முட்டு கொடுத்து வைத்திருக்கிறார்கள்? திருமண வீட்டில் அமர்வதற்கு ஏன் ஜமுக்காளம் விரிக்கிறார்கள்? அது ஏன் அவ்வளவு அழுக்காக இருக்கிறது? திருமண வீட்டில் மங்கல இசை வாசிப்பவருக்கு ஏன பல பேர் சைகாயால் இசை எழுப்பு இசையை நிறுத்து என்கிறார்கள்? நாலு பேர் குறிப்பு கொடுத்தால் அவர் யார் சொல்வதைக் கேட்பார்? யார் சொல்வதைக் கேட்காமல் இருப்பார்? ஏதேதோ எண்ணங்கள் ஓடும். நான் அதை யாரிடமும் சொல்லவும் மாட்டேன். இந்த உலகில் இத்தனை கேள்விகள் உள்ளனவே? இதன் எல்லா விடைகளும் தெரிந்தவர் யார்? கடவுளுக்கு எல்லா கேள்விகளுக்கும் விடை தெரியுமா? என்றெல்லாம் யோசிப்பேன்.

பின்னாட்களில், எங்கும் புறப்பட்டுச் செல்வதற்கு நான் தயங்கியதே இல்லை. அத்தயக்கமின்மையே எனது ஆளுமையின் முக்கிய அம்சமாக ஆனது. ஒரு ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டால், ஓர் ஆலயம் குறித்து அறிய நேர்ந்தால், ஒரு இடம் குறித்த செய்தி ஆர்வமூட்டினால் உடனே அங்கே கிளம்பி சென்று விடுவேன். இப்போதும் நான் செல்வதற்காக எண்ணிக் கொண்டிருக்கும் இடங்கள் ஒரு சிறு பட்டியல் அளவுக்கு உண்டு. 

எனது வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் உள்ள குழந்தை. ஒன்பது வயது குழந்தை. ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தது. விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்தது. பைக்கில் பயணம் செய்யும் ஆர்வத்தால் என்னுடன் வந்தது. நான் ஏதாவது கேள்வி கேட்டு அக்குழந்தையிடமிருந்து பதில் பெற்றுக் கொண்டிருந்தேன். எளிய பதில்களுக்குப் பின்னால் இருக்கும் அடர்த்தியான விஷயங்களின் சிக்கலை கூறிக் கொண்டிருந்தேன். 

நாங்கள் கடக்கும் சாலையில் ஆங்காங்கே ஆடுகள் பாதையில் நின்று கொண்டிருந்தன. ஹாரன் அடித்தாலும் விலகாது. சாலைகள் தமக்கேச் சொந்தம் என்பது போல இருக்கும். 

அந்த குழந்தை சொன்னது,’’அங்கிள்! இந்த ஊரை மயிலாடுதுறை என்று சொல்வதை விட ஆடுதுறை என்று சொல்லலாம். அவ்வளவு ஆடுகள் இருக்கின்றன.’’

எனக்கு குழந்தையின் அந்த அவதானம் மகிழ்ச்சியைத் தந்தது. 

அப்போது ஒரு மைதானத்தில் வாத்து மேய்ப்பவர்கள் தற்காலிகமாக கூடாரம் கட்டி அங்கே இருந்தனர். எங்கள் பகுதிகளில் வெளியூர்களிலிருந்து நடவுக்கு முன்னால் வாத்து மேய்ப்பவர்கள் வருவார்கள். வயலில் வாத்துக்கள் மேயும். வாத்தின் கழிவு வயலுக்கு நல்ல உரம். சில நாட்கள் இருந்து விட்டு அடுத்த ஊருக்குச் சென்று விடுவார்கள். செங்கற்களை வைத்து ஃ போன்ற உருவம் உருவாக்கி அதில் அடுப்பு எரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய குழந்தைகள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. நான் அழைத்துச் சென்ற குழந்தையை அங்கே இருந்த குழந்தைகளுடன் சேர்ந்து கொஞ்ச நேரம் விளையாடச் சொன்னேன். அவை விளையாடின. பரஸ்பரம் பேசிக் கொண்டன. நாங்கள் விடைபெற்றுக் கிளம்பினோம்.

நான் பைக்கில் வரும் போது கேட்டேன். 

‘’நாம வசதியான வீட்ல இருக்கோம். நிறைய டிரஸ் வைச்சிருக்கோம். ஸ்கூலுக்குப் போறோம். காலேஜ் போறோம். வெளிநாடு போறோம். வேலைக்குப் போறோம்.  அவங்க எந்த வசதியும் இல்லாம இருக்காங்க. நீ அவங்களைப் பாக்கும் போது என்ன நினைப்ப?’’

‘’நாம இருக்கோம். அவங்களும் இருக்காங்கன்னு நினைப்பன்’’

‘’அப்படி நினைக்கக் கூடாது. அவங்களும் நம்மைப் போல உள்ளவங்கன்னு நினைக்கணும். நாம செய்ற காரியங்கள் நம்மோட யோசனைகள் எல்லாமும் அவங்களுக்கு பயன்படறா மாதிரி இருக்கணும்.’’

‘’அப்படியா’’

‘’அந்த குழந்தைகள் படிக்கணும். அவங்களுக்கு நல்ல வீடு கிடைக்கணும். தினமும் சாப்பாடு கிடைக்கணும். அதுக்காகல்லாமும் நீ யோசிக்கணும்’’

‘’நான் யோசிச்சா இதெல்லாம் எப்படி நடக்கும்?’’

’’உன்னோட படிப்பு அவங்களோட வறுமையை நீக்கறதா இருக்கணும். உன்னோட உத்யோகத்தால அவங்களுக்கு நல்லது நடக்கணும்.’’

‘’என்னால முடிஞ்சதை நான் கண்டிப்பா செய்வன் அங்கிள்’’

Wednesday 13 November 2019

தேவையும் அவசியமும்

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். மிகவும் நெருங்கிய நண்பர். சமீபத்தில் என்னிடம் மிகவும் கோபித்துக் கொண்டார்.

‘’எட்டாயிரம் ரூபாய்க்கு நல்ல ஸ்மார்ட் ஃபோன் கிடைக்கிறது. அதில் ஏன் உங்களுக்கு அவ்வளவு கஞ்சத்தனம். வாங்கி வைத்துக் கொள்ளலாம் தானே?’’

அவர் என்னை - எனது இயல்பை  பல  வருடங்களாக  அறிந்தவர். அவர்  நான் செலவு செய்ய மனமின்றி வாங்காமல் இருப்பதாக நினைக்கிறாரே எப்படிப் புரியவைப்பது என்று யோசித்தேன்.

‘’நீங்கள் நினைப்பது போல இல்லை. ஸ்மார்ட் ஃபோன் தொலைத்தொடர்பு, இணையம், பணப்பரிமாற்றம் மற்றும் பல செயல்பாடுகளை ஒன்றாய் வழங்குகிறது. நான் இணையத்துக்கு லேப்டாப்பைப் பயன்படுத்துகிறேன். பணப்பரிமாற்றத்தையும் நான் அதிலேயே செய்ய முடியும். எனக்கு பெரிய அளவில் ஸ்மார்ட்ஃபோன் பயன்படாது  என்பதால்தான் வாங்காமல் இருக்கிறேன்’’  என்று  சொன்னேன்.

‘’நீங்கள் இவ்வளவு பேசுவதற்கு  ஸ்மார்ட்ஃபோன்  வாங்கி  விடலாம் பிரபு’’

நாங்கள் ரயிலில்  பயணிக்க  ஒரு  ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். பயணச்சீட்டு  சாளரம் முன்னே முப்பது பேர் நின்று கொண்டிருந்தார்கள். நண்பரும்  அதில் இணைந்து கொண்டார்.

நான்  அவரிடம், ‘’ஏன் வரிசையில் நிற்கிறீர்கள்’’ என்று கேட்டேன்.

‘’டிக்கெட் எடுக்க’’

‘’உங்களிடம் தான் ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறதே. பின் ஏன் வரிசையில்  நிற்கிறீர்கள்?’’

‘’அதற்கும்  இதற்கும் என்ன?’’

''இந்திய ரயில்வேயின் செயலியை உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் டவுன்லோடு செய்து கொண்டால் நாம் ஸ்மார்ட்ஃபோன் மூலமே டிக்கெட் எடுத்து  விடலாம்’’

‘’அதெல்லாம்  எனக்குத் தெரியாது’’

அவரிடமிருந்து ஸ்மார்ட்ஃபோனை வாங்கினேன். ரயில்வேயின்  செயலியைத்   தரவிரக்கம்  செய்தேன்.  கியூ ஆர் கோட்  ஸ்கேன் செய்து டிக்கெட்  எடுத்து விட்டேன். அவர்  ஃபோனில் ஓலா  ஆப் இருந்தது. ரெட்பஸ் ஆப் இருந்தது. அமேசான் பிரைமில் உறுப்பினராக  இருந்தார். 

ஸ்மார்ட்ஃபோன்  இருப்பவர்கள் அதன் மூலம் ரயில் டிக்கெட் எடுத்தால் என்னைப்  போன்று  ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள் டிக்கெட்  சாளரத்தின் முன் அதிக கூட்டமின்றி விரைவில் டிக்கெட் எடுத்திட  முடியும்.

Tuesday 12 November 2019

குரு நானக் ஜெயந்தி


அமிர்த யோகம்

விழி தாழ்த்தல்கள்
இமை உயர்த்தல்கள்
புன்னகைக்கும் பார்வைகள்
தடம் மாற்றும்
ஓரிரு வார்த்தைகள்
உயிர்த் துடிப்பு
வாழ்வின்
எல்லா வினாடிகளிலும் தானே?
நாடிக் குதிரைக் குளம்புகள்
அடி தொடுவதற்கும்
மேலெழுவதற்கும்
இடைப்பட்ட
பிரதேசம்
விண்ணாயிருக்கிறது
இடைப்பட்ட
காலம்
முடிவிலியாய் நீள்கிறது

Monday 11 November 2019

கணம்


ஆழங்களின் மௌனம்
மலைமுடிகளின் தனிமை
மேகங்களின் மென் ஈரம்
புவி தொடும்
முதல் புலரி ஒளி
விடாய் தீர்க்கும் நீர்
ஒளி விடும் விதைகளிலிருந்து
கிளர்ந்திருக்கும்
மலர்ப்புன்னகை
மண்ணும் விண்ணும்
அன்பு செய்யும்
பொழுது
மாயம்
அற்புதம்

Sunday 10 November 2019

மறு நுழைவு


வெள்ளியன்று ஆம்னி வாகனம் பணிமனையிலிருந்து திரும்பி வந்தது. சில நாட்கள் வாகனம் கையில் இல்லாமல் இருந்தது ஓர் இழப்புணர்வை உண்டாக்கியிருந்தது. இப்போது மீண்டும் மகிழ்ச்சி. பிரியமான உறவினர் வீட்டுக்கு வந்திருப்பதைப் போல. துணையிருக்கும் நண்பன் ஊர் திரும்பியிருப்பதைப் போல. இங்கே பணிமனைகள் குறைவு. முக்கிய சிக்கல்களுக்கே முன்னுரிமை தருவர். நுட்பமான விஷயங்களைச் சரி செய்ய அதிக ஆர்வம் காட்டுவதில்லை. சமீபத்தில் என் வாகன சைலன்ஸரில் ஒரு சிக்கல். புகை வெளியாகும் சத்தம் மிகப் பெரிதாய் கேட்டது. புதிதாக மாற்றி விடுங்கள் என்று சொன்னேன். மாற்றவில்லை. வெல்டிங் வைத்து சரி செய்தார்கள். சில நாட்களில் மீண்டும் அதே சிக்கல். கடைசியாக மாற்றப்பட்டது. கியர் பாக்ஸில் சிறு சமன் குலைவு. சரிசெய்ததும் வண்டி வித்தை காட்டுகிறது. நான் இரு சக்கர வாகனத்திலும் சரி காரிலும் சரி நிதானமாகவே பயணிப்பேன். கார் வேகத்தைச் சற்று கூட்டலாம் என்று தோன்றுகிறது. சில விஷயங்களில் மாற்றம் ஏற்படுத்த ஆளுமையிலேயே மாற்றம் கொண்டு வர வேண்டும். வாகனத்தில் இப்போது அனைத்தும் இலகுவாக இருப்பதால் முயற்சி செய்து பார்க்கலாம்.

காலைப் பொழுதில் படைப்பூக்கமான செயல் எதையும் செய்வதே மனதுக்கு உகந்ததாக இருக்கிறது. நடைப்பயிற்சி சென்று வந்த பின் ஏதாவது எழுதுவேன். யோகா செய்வேன். கட்டுமானப் பணி தொடங்க இருப்பதால் காலை 9 மணியிலிருந்து 2 மணி வரை அது தொடர்பான பணிகள். வண்டியை தினமும் துடைத்து வைக்க வேண்டும் என்று விரும்புவேன். காலையிலும் மாலையிலும் நேரம் இருக்காது. மதியம் அல்லது இரவு தான் செய்ய வேண்டும். வாழ்க்கையை அழகாக்கிக் கொள்ள இன்னும் மாற்றங்கள் தேவைப்படுகின்றது. அந்த மாற்றம் நம்மிடமிருந்தே துவங்க வேண்டியுள்ளது.

வாகனம் கையில் இருந்தால் எங்காவது பயணம் கிளம்ப எண்ணுவது எனது வழக்கம். தஞ்சை பயணச்சுற்று எழுதிய கையோடு ஒரு சுற்று கிளம்பினால் நன்றாகத்தான் இருக்கும். லடாக் அழைத்துக் கொண்டிருக்கிறது. பார்க்கலாம்.

Saturday 9 November 2019

மலை அகம்


நிழல்கள் குளிரும்
வெயில் தண்ணெனும்
ஏற்றம் மிகுந்த
மலைச்சாலையில்
கம்பளியால் நெருக்கப்பட்டு
தொட்டியின் மேல் பூத்திருக்கும்
மலரென
உன் முகம்
வான் நோக்கி
நடக்கிறது
மெல்ல நகுகிறாய்
புன்னகைக்கிறாய்
எப்போதாவது
உரத்துச் சிரிக்கிறாய்
சீறும் ஒலி கொள்கிறது
உன் சுவாசம்
குளிர் சிவக்கச் செய்திருக்கிறது
உன் முகத்தை
மௌனம் சூடியிருக்கின்றன
மலைமுடிகள்
அமைதி கொள்கிறது
அகம்
மலை அகம்

Friday 8 November 2019

நல் இணக்கம்

சென்னையில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு வயது 80. ஒரு உற்பத்தி நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். வாரிசுகள் அமெரிக்காவில் இருக்கின்றனர். இவரும் அவ்வப்போது மனைவியுடன் அமெரிக்கா சென்று வருவார். சமீபத்தில் கூட சென்று வந்தார். அவரது பூர்வீகம் மயிலாடுதுறைக்குப்  பக்கத்தில் ஒரு சிற்றூர். அவரது மூத்த சகோதரர் அங்கே வசித்தார். சென்ற ஆண்டு அவர்  உடல்நலமின்றி மருத்துவமனையில் ஒரு வாரம் இருந்தார். அப்போது பகல் பொழுதுகளில் நான் அங்கு செல்வேன். உடனிருப்பேன். தேவையானதை  ஏற்பாடு செய்து தருவேன். அவருக்கு 94 வயது. உணவு மிகக் குறைவாகவே எடுத்துக் கொள்வார். உறங்குவார். அவ்வப்போது விழித்திருப்பார். நான் அவருடைய கட்டிலுக்குப் பக்கத்தில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு அவர் மகனுடன் அமர்ந்திருப்பேன். பெரும்பாலான நேரம் அறையில் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருப்போம். அந்த முடியாத நிலையிலும் தன் வயலில் என்ன வேலை நடைபெறுகிறது என்பதை திக்கித் திணறி கேட்பார். ‘’இன்று நடவுக்கு ஆள் வந்ததா?’’, ’’பாய்ச்சல் எப்படி உள்ளது?’’ இவ்வாறான கேள்விகள் அவரிடமிருந்து வரும். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி சில நாட்கள் வீட்டில் இருந்தார். பின்னர் காலமானார். மருத்துவமனையில் நான் உடனிருந்ததால் அந்த ஊர்க்காரர்கள் பலர் எனக்கு அறிமுகமாகி பரிச்சயமானார்கள். சென்னை நண்பரின் பள்ளித் தோழர் ஒருவர் அங்கே இருக்கிறார். இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். சென்னை நண்பர் அவரைச் சென்று சந்திக்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். நான் இன்று காலை சென்றேன்.

ஹாலில் இருந்த பூஜை ஷெல்ஃபில் விளக்கு சுடர் விட்டுக் கொண்டிருந்தது. மலர் அர்ப்பணிக்கப்பட்டிருந்த சுவாமி படங்கள் முன் நின்று பாடிக் கொண்டிருந்தார். நான் சோஃபாவில் அமர்ந்து கொண்டேன்.

வித்தாகி முளையாகி விளைவ தாகி விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக் குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத
சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச் சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி
முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே.

கணீர் குரலில் பாடினார். திருவருட்பாவாக இருக்குமோ என்று யோசித்தேன்.

தண்ணமுத மதிகுளிர்ந்த கிரணம் வீசத் தடம்பொழிற்பூ மணம்வீசத் தென்றல் வீச
எண்ணமுதப் பளிக்குநிலா முற்றத் தேஇன் இசைவீசத் தண்பனிநீர் எடுத்து வீசப்
பெண்ணமுதம் அனையவர்விண் ணமுதம் ஊட்டப் பெறுகின்ற சுகமனைத்தும்      பிற்பட் டோடக்
கண்ணமுதத் துடம்புயிர்மற் றனைத்தும் இன்பங் கலந்துகொளத் தருங்கருணைக் கடவுள் தேவே.

தண்ணமுதம் என்ற சொற்சேர்க்கை பரவசமூட்டியது. தண் – தட்பம் –தணிதல்.

தண்ணமுத மதி – நிலவு என்பதே மிகவும் குளிர்ச்சியானது. அமுத மதி என்பது அமிர்தமாய் உயிரளிக்கும் நிலவு. தண்ணமுத மதி – அமுதமாய் உயிரளிக்கும் குளிர்ந்த மதி. ஒரே வார்த்தையில் தமிழ் நெடுந்தூரம் சென்று விடுகிறது.

இனிதினும் இனிதான இதைப் போன்ற பலதையும் பின்னுக்குத் தள்ளக்கூடியது இறைமையின் கருணை.

பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம் புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும் கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந் தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம் செய்யவல்ல கடவுளே தேவ தேவே.
அடுத்த பாடலைப் பாடினார்.

’’பொங்குபல சமயமென்னும்’’ என்பதைக் கேட்பதுமே அவர் பாடுவது திருவருட்பா என்பதை உறுதி செய்து கொண்டேன்.

ராமகிருஷ்ணர் கூறும் கதை: நதிகள் வெவ்வேறு இடத்தில் தோன்றி வெவ்வேறு இடங்களில் பாய்ந்தாலும் சேருமிடம் நதிகளுக்கு கடலே. சமயங்கள் பலவாயினும் அவை இறைமையையே இறுதி நோக்கமாய்க் கொண்டுள்ளன.

திடீரென,
ஆறிரு தடந்தோள் வாழ்க  ஆறுமுகம் வாழ்கவெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்கசெவ்வேள்
ஏறிய மஞ்சை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.
என்று முழக்கமிட்டார்.

இந்த பாடல் திருப்புகழாயிற்றே என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில்,

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
என தெய்வங்களுக்கு ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து வாழ்த்து கூறினார்.

உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.
என்று பாடிய போது இது அபிராமி அந்தாதியாயிற்றே என்ற எண்ணம் எழுந்தது.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்-பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி -ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

கணபதி ராயன்-அவனிரு
காலைப் பிடித் திடுவோம்;
குண முயர்ந் திடவே-விடுதலை
கூடி மகிழ்ந்திடவே 
                                              
சொல்லுக் கடங்காவே-பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி
வாழியென்றேதுதிப்போம்.                                 

வெற்றி வடிவேலன்-அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ!-பகையே!
துள்ளி வருகுது வேல்.                                       

தாமரைப் பூவினிலே-சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம்.                                 

பாம்புத் தலைமேலே-நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ்வோம்;
மாம்பழ வாயினிலே-குழலிசை
வண்மை புகழ்ந்திடுவோம்.                                

செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி
திக்க னைத்தும் பரவும். 

என்று பாரதியார் பாடலைப் பாடி பாமாலையை நிறைவு செய்தார். பின்னர் தெய்வ உருவங்களுக்கு சுடராட்டு. மணியோசை ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு கையில் சுடர். இன்னொரு கையில் மணி. யாவுமான பரம்பொருளுக்கு ஓர் எளிய பக்தனால் செய்யப்படும் ஒரு வேளை பூசனை.

தங்களுக்குள் முரண்படும் சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கௌமாரம் மற்றும் சௌரம் என்ற ஆறு மார்க்கங்கள். ஆனால் இந்த முதியவரின் பூசனையில் இவை அனைத்துமே இணைந்துள்ளன. ஆதி சங்கரர் ஷண்மத ஸ்தாபிதம் செய்தவர். ஆதி சங்கரர் உணர்ந்ததை இந்த எளிய முதியவரும் தன்னளவில் அறிந்திருக்கிறார் அல்லது ஆதி சங்கரர் உணர்ந்தது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த முதியவரைப் போன்ற கோடானு கோடி மக்கள் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று எண்ணிக் கொண்டேன்.                                     

ஆழமும் உயரமும்

Thursday 7 November 2019

சாதியும் சமூகமும்



இந்தியாவில் தமிழ்ச்சமூகத்தில் ஜாதியைப் பற்றி புரிந்து கொள்ள நாம் அதனை வரலாற்று உணர்வுடன் அணுக வேண்டும். ஏழாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான  வரலாறு கொண்ட இந்திய சமூகங்களைப்  பற்றி வெவ்வேறு காலகட்டங்களைக் கற்பனை மூலம் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும். நாம் இப்போது பொதுவாக ஜாதி குறித்த எண்ணங்களை  கருத்துக்களை ஜனநாயகக் காலகட்டத்திலிருந்து புரிந்து கொள்கிறோம். ஜனநாயகக் காலகட்டம் என்பதும் ஒரு பொதுவான வகைபாடே. சமூகம் பல்வேறு கூறுகளால் நாளும் மாறி வரும் தன்மை கொண்டது. அம்மாற்றம் அரசியல், சமூக, பொருளியல் நிகழ்வுகளால் நடக்கும்.

இன்று சமூகங்கள் கொள்ளும் ஜாதி உணர்வுக்கும் ஜனநாயக அரசியலுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. நாம் ஒரு வரலாற்று நிகழ்விலிருந்து தொடங்குவோம். மகாத்மா காந்தி இந்திய அரசியலுக்கு வருகிறார்.

அப்போது நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி. இந்திய சமூகம் நிலப்பிரபுத்துவ சமூகமாய் இருக்கிறது. பெரும் அதிகாரம் கொண்டதில்லை எனினும் இந்திய அரசியல் அதிகார மையங்களில் கல்வியறிவு பெற்றிருந்த சாதிகளும் வணிக  சாதிகளும் செல்வந்தர்களும் மட்டுமே இருந்தனர். வாக்குரிமை படித்தவர்களுக்கும் வரி செலுத்துபவர்களுக்கும் மட்டுமே இருந்தது. அன்றைய எழுத்தறிவே வெறும் பதினைந்து சதவீதம் தான்.
அன்றைய வாழ்க்கை என்பது பெரும்பாலும் ஒரு கிராமத்துக்குள்ளேயே முடிந்து விடும். விவசாயம்  மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலுடன் முடிந்து விடும். தன் கிராமத்தை விட்டு வெளியே செல்லாமல் வாழ்ந்து முடிந்தவர்களே நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது சதவீதம் இருப்பார்கள். கிராமத்தைத் தாண்டி திருமணங்கள் நடக்காது. ஏனென்றால் அவர்களுக்கு கிராமத்தைத் தாண்டி எவ்விதமான தொடர்புகளும் இருக்காது.

காந்தி காங்கிரஸை வழிநடத்தும் போது காங்கிரஸுக்குள் சாமானியர்களைக் கொண்டு வருகிறார். காங்கிரஸ் ஆண்டு உறுப்பினர் சந்தா நாலணா (இருபத்து ஐந்து பைசா) என்கிறார். இருபத்து ஐந்து பைசா செலுத்தி உறுப்பினர் ஆகும் ஒருவர் இந்தியாவின் மிகப் பெரிய கட்சியின் உறுப்பினர். அவரைப் போன்ற கோடானு கோடி மனிதர்களால் நடத்தப்படுகிறது காந்தியின் காங்கிரஸ். மக்களால், மக்களுக்காக, மக்களுடைய கட்சி. அது ஒரு குறியீட்டுச் செயல்பாடு. பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கும் மனிதர்களால் ஆன வலைப்பின்னலை விட எண்ணிக்கையில் அதிகமான வலைப்பின்னலைக் கொண்ட கட்சி. பிரிட்டிஷாருக்கு அச்செயல் எவ்விதம் பொருளளித்திருக்கும் என்பதை கற்பனை செய்ய முடிகிறது. எள்ளி நகையாடியிருப்பர். சொந்தமாக சொத்து இல்லாதவனையும் தன் பெயரைக் கூட எழுதத் தெரியாதவனையும் வைத்துக் கொண்டு கேஸ் இல்லாத இந்த வக்கீலால் என்ன செய்ய முடியும் என்று நினைத்து நினைத்துச் சிரித்திருப்பார்கள். ஆனால் அந்த நாலணா ஒரு குறியீடு. சாமானியன் ஒரு சாம்ராஜ்யத்தை எதிர்க்க தனது முதல் செயலைத் தொடங்கி விட்டான் என்பதற்கான குறியீடு அது. அல்லற்பட்டு ஆற்றாது அழுதவன் கண்ணீர் ராஜமாளிகைகளைப் பெயர்த்தெறியப் போகிறது என்பதன் முதல் மணி.

பிரிட்டிஷாருக்கு மட்டுமல்ல காங்கிரஸில் இருந்த தலைவர்களுக்குமே அது ஒரு உறுதியான விஷயத்தை உணர்த்தியது. இங்கு நடப்பவை அனைத்துமே இந்தியாவின் எளிய மனிதர்களுக்காகவே. நீங்கள் பதவி பெறலாம்; சலுகைகளிலேயே முழு வாழ்க்கையும் வாழலாம்; ஆனால் உங்கள் அரசியல் வாழ்விலிருந்து எளிய மனிதனை நீக்கி விட முடியாது. எளிய மனிதனை ஓர் பொருட்டாக எண்ணாமல் எளிய மனிதன்  தேவைகளை நிறைவேற்றாமல் அவனது கோரிக்கைகளுக்கு செவி மடுக்காமல் இந்திய ஜனநாயகம் இயங்க முடியாது.

காந்தியின் அரசியல் சமூகப் பிரங்ஞையை உருவாக்குவதையும் அதற்கான கல்வி அளிப்பதையும் தன் இயங்குமுறையாய்க் கொண்டது. அதிகாரம் குவிந்திருக்கும் பெருமையங்களின் செயல்பாட்டை விட பரவலாக்கப்பட்ட அதிகாரம் ஜனநாயக அரசியலில் பெரும் அளவில் உதவும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். அரசியல், பொருளாதாரம், சட்டம் மற்றும் கல்வி ஆகியவை குறித்து அவருக்கு பரந்த விரிவான அறிவு இருந்தது. ஒரு முன்னுதாரணமான குடிமைச் சமூகத்தை உருவாக்கிட முடியும் என்ற நம்பிக்கையே அவரை அரசியல் செயல்பாட்டாளராக இயங்கச் செய்தது.

சாதிகள் அரசியல் அதிகாரத்துக்குக்காக திரள்தல் என்பது காந்தி அவர்களை அரசியலுக்குள் கொண்டு வந்த பின்னரே நிகழத் துவங்கியது. இந்திய வரலாற்றில் யாரெல்லாம் காந்தியைத் தீவிரமாக எதிர்த்தார்களோ அவர்களே அவர் உருவாக்கிக் கொடுத்த சாமானியர்களுக்கான அரசியலின் பலனை அனுபவித்தார்கள். சிறந்த உதாரணம் : திராவிட இயக்கம். திராவிட இயக்கம் சாமானியர்களின் அதிகார விருப்புடன் உரையாடியது. வெறுப்பைத் தூண்டி விட்டது இந்திய ஒருமைப்பாடே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையானது என்ற பொய் பரப்புரையால் தொடர்ந்து மக்களாட்சியின் அதிகாரத்தில் இருந்து வந்தது. அவர்கள் அளித்த அரசியல் கல்வியால் தமிழ்ச் சமூகத்தில் விளைந்த ஆக்கபூர்வமான மாற்றம் என்ன என்பதை யோசித்துப் பார்க்கலாம். இலங்கையில் தமிழர்கள் பெரும்பாலானோராக வாழ்ந்த பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தமிழ்நாட்டின் திராவிட அமைப்புகளால் தொடர்ந்து ஆதரிக்கப் பெற்ற எல்.டி.டி.ஈ அமைப்பால் அங்கு அப்படி என்ன சமூக மாற்றம் நிகழ்ந்து விட்டது என்பதையும் இதனுடன் சேர்த்து யோசிக்க முடியும்.

சமூகம் பல கூறுகளைக் கொண்டது. அதில் அரசியல் அதிகாரம் ஒன்று. அவ்வளவே. மாற்றம் நிகழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கல்வி, பொருளாதாரம், விழுமியங்கள் ஆகியவற்றிலேயே மாற்றத்தை ஏற்படுத்துவர். மானுடம் இன்னும் மேலான வாழ்வை மண்ணில் உருவாக்கிக் கொள்ள சிந்திக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது.    

ஆழமும் உயரமும் - 6


பட்டீஸ்வரம்

பட்டீஸ்வரம் துர்க்கை ஆலயம் பிரசித்தமானது. சோழர்கள் இராணுவ வல்லமையுடன் எழுந்த போது துர்க்கையை வழிபட்டனர். சாக்த ஆலயங்களில் பல வகையான திருப்பணிகளை மேற்கொண்டனர். பிற்காலச் சோழர்களின் தலைநகராக பழையாறை இருந்திருக்கிறது. அந்நகரின் பகுதிகளே இன்று கும்பகோணத்தைச் சுற்றியுள்ள சிறு கிராமங்களாக இருக்கின்றன.

திருக்கருகாவூர்

கர்ப்பிணிப் பெண்கள் பிரசவம் நலமாக நடைபெற வேண்டி அம்மனிடம் பிராத்தித்துக் கொள்ளும் தலம்.

திட்டை

சோழர் கால ஆலயம். ஆலமர்க் கடவுள் சிறப்பாக வழிபடப்படும் சிற்றாலயம். தஞ்சாவூருக்கு அருகில் உள்ளது. திட்டை ஆலயக் கல்வெட்டுகள் மூலம் சோழர்கள் குறித்த பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது.

கோவிலடி

ஒரு புறம் காவிரியும் மறுபுறம் கொள்ளிடமும் இருக்க நடுவில் அமைந்துள்ள வைணவத் தலம் கோவிலடி. இறைவன் பெயர் அப்பக்குடத்தான். சிறு கிராமத்தில் அமைந்துள்ள முக்கியமான சிற்றாலயம்.

ஆடுதுறை பெருமாள் கோவில்

ஒருபுறம் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் கடவுளை வணங்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இன்னொரு புறம் அழகிய சிற்றாலயங்கள் கிராமங்களில் குறைவான பக்தர்கள் வருகையுடன் இருக்கின்றன. இவ்வாறான ஆலயங்களில் சுவாமியின் முன் நேரக் கட்டுப்பாடின்றி இருக்க முடியும். வழிபட முடியும். அவ்வாறான ஓர் ஆலயம் ஆடுதுறை பெருமாள் கோவில். சுவாமிமலைக்கும் திருவையாறுக்கும் இடையே உள்ளது.

கபிஸ்தலம்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான கபிஸ்தலம். கஜேந்திர வரதன்.

ஒப்பிலியப்பன் ஆலயம்

தஞ்சைப் பிராந்தியத்தின் முக்கியமான வைணவத் தலங்களில் ஒன்று. திருப்பதியின் நேர்த்திக் கடன்களை இங்கே பூர்த்தி செய்வர். திருவிண்ணகர் என்று குறிக்கப்படுவது.

திருவிடைமருதூர்

தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூரை மைய ஆலயமாகவும் சுற்றி உள்ள ஆலயங்களை பரிவார ஆலயங்களாகவும் கொண்டு இந்த பகுதியையே சிவாலயமாக உருவகித்து வழிபடும் பழக்கம் உண்டு. அதன்படி திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி பிரதான கடவுள். திருமீயச்சூர் ஆலயம் அதன் அம்மன் சன்னிதி. லலிதாம்பிகை அம்பாள். திருவலஞ்சுழி ஆலயம் விநாயகர் சன்னிதி. சுவாமிமலைக் கோவில் முருகன் சன்னிதி. பட்டீஸ்வரம் துர்க்கை ஆலயம். சேங்கனூர் சண்டிகேஸ்வரர். நவக்கிரக ஆலயங்கள் அனைத்தும் நவக்கிரக சன்னிதிகள்.

Wednesday 6 November 2019

அடித்தளமும் கட்டிடமும்


இன்று காலை நடைப்பயிற்சிக்குச் சென்ற போது எனது தெருவாசியான நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். நல்ல மனிதர். பெரும்பாலும் பொழுது புலரும் முன் நான் நடக்கக் கிளம்பி விடுவேன். இன்று தாமதமாக எழுந்தேன்  என்பதால்  வழக்கமாக  பயிற்சியை முடிக்கும் நேரத்தில் துவங்கினேன். எனவே சந்திக்க நேரிட்டது. ஒன்றாக நடந்தோம். இன்றைய பயிற்சி வாக்கிங் ஆக இருக்காது; டாக்கிங் ஆக மாறும் என நினைத்தேன். அவ்வாறே ஆனது.

காவல்துறை டி.ஜி.பி ஆக இருந்த விஜயகுமார் குறித்து பேச்சு வந்தது. அதன் நீட்சியாக வீரப்பனைப் பற்றி. விஜயகுமாரைக் கடுமையாக வசை பாடினார். நான் மெதுவாக ஆரம்பித்தேன்.

‘’அரசாங்கம் என்பது மிகப் பெரிய அமைப்பு. இந்திய அரசாங்கம் உலகின் சிக்கலான அமைப்புகளில் ஒன்று. அரசின் இயங்குமுறையே இந்திய மாநிலங்களில் வேறுபடும். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பழக்கம்  உடையது. அரசாங்க அதிகாரிகள் அவர்கள் எல்லைக்குள் அவர்களுக்குத் தரப்படும் வேலையைச் செய்பவர்கள். உங்களுக்கு அவர் மேல் ஏன் தனிப்பட்ட வெறுப்பு?’’

‘’அவர் மலையாளி’’ என்றார் நண்பர்.

‘’அவரை வெறுக்க இந்த காரணம் மட்டும் போதுமா?’’

‘’வீரப்பனை அவர் கொன்றார்”

’’வீரப்பனைக் கொன்றார் என்பதற்காக விஜயகுமாரை வெறுக்கும் நீங்கள் தனது கைக்குழந்தையான சொந்த மகளைக் கொன்ற வீரப்பன் மீது எவ்வாறு மதிப்பு வைத்துள்ளீர்கள்?’’

நண்பர் மௌனமானார். சில வினாடிகள் அமைதியாக நடந்தோம்.

நான் நேரடியாகக் கேட்டேன். ‘’சாதிதானே உங்களுக்கும் வீரப்பனுக்கும் பொதுவானது?’’

நண்பர் ஆமாம் என ஒத்துக் கொண்டார்.

எனக்குச் சோர்வாக இருந்தது. தமிழ்நாட்டில் இந்த சோர்வு அடிக்கடி ஏற்படும். தமிழர்கள் இந்த சோர்வை அடிக்கடி உருவாக்குவார்கள்.

லட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கு தான் வசிக்கும் இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது போல பொது இடத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது தெரியவில்லை. இந்திய விடுதலை என்பது ஒரு மாமனிதர் மேல் சாதி, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து அவர் சொற்கள் மேல் நம்பிக்கை வைத்த லட்சோப லட்சம் மக்கள் அவர் தலைமையை ஏற்றதால் – அவர் முன்வைத்த மேலான மதிப்பீடுகளின்  மேல் வைத்த நம்பிக்கையால் –சாத்தியமானது என்பது தெரியவில்லை.

அந்த நம்பிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட ஜனநாயகத்தின் மீது அமர்ந்தவாறு சாதிக்காக எதையும் நியாயப்படுத்தலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

அந்த மாமனிதர்
1. இந்திய நுகர்வின் பயன் இந்தியாவின் பெரும் உற்பத்தியாளனான பருத்தி விவசாயிக்குச் செல்ல  வேண்டும் என்பதற்காக கதர்த்துணிகளை உடுத்த வேண்டும் என்று ஓயாமல் கேட்டார்.

2. நமது சுகாதாரப் பண்புகளே நம்மைக் காக்கும்; நம்மை உலகம் உயர்வாய் மதிப்பிட வைக்கும் என்பதால் தூய்மையை நாளும் வலியுறுத்துவதை தனது அரசியலாகக் கொண்டார்.

3. மானுட குலம் அடையச் சாத்தியமான மேலான வழிமுறைகளை சமூக வாழ்வியலுக்கு முன்வைத்தார்.

4. எக்காரணம் கொண்டும் வெறுப்பு பொது வாழ்வில் இருக்கக் கூடாது என நினைத்தார்.

அவர் உருவாக்கிய அடித்தளத்தில் நாம் எழுப்பும் கட்டிடம் எவ்விதமானது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.