Wednesday 31 July 2019

ஒரு கணம்
ஒரு புதிய துவக்கம்
ஒரு விடைபெறுதல்
ஊசிமுனையின் மேல் சமநிலை
கரைதல் அவ்வளவு விரைவானதா
மௌனம் நிறையும் நிலத்தில்
துயரங்களும் மகிழ்ச்சிகளும்
இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன
எங்கும் நிறைகிறது குளிர்ந்த இனிய காற்று

Tuesday 30 July 2019

வாசிப்பு மாரத்தான்

அறிவுச் செயல்பாட்டிலும் வாசிப்பிலும் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்ட நண்பர்கள் இணைந்து ஒரு வாசிப்பு மாரத்தானைத் துவங்க இருக்கிறோம். 48 நாட்கள். குறைந்தது 100 மணி நேரம் வாசிக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது வாசித்திருக்க வேண்டும். வாசிப்பு ஒருநாள் கூட விடுபடக் கூடாது. இவை விதிமுறைகள். எவ்வளவு விரைவில் 100 மணி நேர வாசிப்பு இலக்கை எட்டுவோம் என்ற ஆர்வம் அனைவருக்கும் உள்ளது. அதே நேரம் ஒருநாள் கூட வாசிப்பு இல்லாமல் இருக்கக் கூடாது. வாசிப்பு மாரத்தான் விதிமுறைகள் உருவாக்கத்தில் எனது சிறு பங்களிப்பு இருக்கிறது. 

இந்தியாவில் தமிழ்ச் சமூகம் ஒப்புநோக்கும் விதத்தில் முன்னோடியானது. மற்ற மாநிலங்களை விட இங்கே போக்குவரத்து வசதிகள் அதிகம். போக்குவரத்து வலைப்பின்னல் மாநிலத்தை இணைத்துள்ளது. ஆனால் வெகுஜன தமிழ் மனோபாவம் இன்னும் பழங்குடித்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. அதற்கான காரணம் தமிழ் மக்கள் அறிவுச் செயல்பாட்டில் நம்பிக்கை கொள்ளவில்லை. தமது மரபு குறித்த புரிதலுடன் இல்லை.

அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களில் நூல் வாசிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை அமெரிக்காவில் பணிபுரியும் நண்பர்களிடம் கேட்டால் சொல்வார்கள். அங்கே கல்வி என்பதே நூல் வாசிப்புதான். இங்கே லட்சத்தில் ஒருவரே வாசிக்கக் கூடியவராயிருக்கிறார். ஒரு நூலை - அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம், பொருளாதாரம், தத்துவம், அரசியல் என எத்துறையானாலும்- வாசித்து அதனை உள்வாங்கிக் கொள்பவராக தமிழ்நாட்டில் லட்சத்தில் ஒருவரே இருக்கிறார். 

வாசிப்பில்லாமல் இருக்கும் சமூகம் - அறிவுச்செயல்பாட்டில் நம்பிக்கை கொள்ளாத சமூகம் - இன்னும் பிறக்காத தலைமுறைகளுக்கு பெரும் துரோகம் இழைக்கிறது.

நான் தினமும் வாசிக்கிறேன். நினைவு தெரிந்த நாள் முதல். எனினும் வாசிப்பு மாரத்தான் ஆர்வமூட்டுவதாகவே இருக்கிறது. தயார் செய்து கொள்ளும் விதமாக இப்போதே சில நூல்களை வாசிக்கத் துவங்கியிருக்கிறேன். 

இப்போது வாசிக்கும் நூல்கள்

1. திருவருண்மொழி - ஸ்ரீரமணர்
2. Mossad - The Greatest Mission Of the Israeli secret service  

பெரியவற்றால்

என் கண்ணீரைத் துடைக்காதீர்கள்
எனக்கு ஆறுதல் சொல்லாதீர்கள்
எவ்விதமான தேறுதல் சொல்லையும் உச்சரிக்காதீர்கள்
கண்களின் ஈரம் உலரும் போது
அன்பின் சுனைகள் மேலும் ஊற்றெடுக்கும்
அலைக்கழியும் மனம்
மௌனத்தின் பெருவெளி முன்
துயரத்தின் சொற்களற்று நிற்கும்
விரிவாகிக் கொண்டேயிருக்கும் விசும்பிலிருந்து
ஒவ்வொரு புதிய தினத்தின்
நம்பிக்கைகள்
உருவாகி வரும்

பெரியவற்றால்
மிகப் பெரியவற்றால்
ஆனது
இந்த உலகம்
இந்த வாழ்வு

Monday 29 July 2019

பாதையின்
இரு மருங்கிலும்
பூத்திருக்கின்றன
வண்ண மலர்கள்
நீ
ஒரு கைவேலையாய்
அவசரமாகக் கடந்து செல்கிறாய்
எல்லா மலர்களும் சிரிக்கின்றன
நீ
ஒரு மலரின் சிரிப்பை
சட்டென பார்க்கிறாய்
ஒரு கணம்
தொலைவில் இருக்கும்
அம்மலருக்குக் கை நீட்டுகிறாய்
தினமும்
கை நீட்டும் குழந்தைக்கு
ஒளிரும் தன் கிரணங்களைத் தருகிறது
வானத்து நிலவு

Sunday 28 July 2019

ஒரு பென்சிலைப் போல
எளிய
கூரான
அழகான
அணுகுமுறை
உன்னுடையது
உன்னுடைய புன்னகைகள்
மென்சிரிப்புகள்
முகம் சிவக்கும் நாணங்கள்

உனது தாழ்வாரங்களில்
உனது விரல்களால் பிசையப்பட்ட
கூழாங்கற்களும் மண்ணும்
நாள் தவறாமல் உதிர்க்கின்றன
மலர்ச்சிரிப்பை

வானத்துப் பறவைகள்
பறக்கும் தடங்களைப் போல
அடையாளமற்றது
உனது இருப்பு

Saturday 27 July 2019

உனது விரல்கள் மெல்லியவை
உனது கரங்கள் மென்மையானவை
ஏந்தும் போது அறிந்திருக்கிறேன்
உன் குரலில்
எப்போதும் நிரம்பியிருக்கின்றன
மாசின்மையும் உவகையும்
உணர்வுகளின் பெருக்கால்
அலை மோதும் போது
நீர்த்திரை கொண்டன
உனது கண்கள்
நீ
கடந்து சென்ற பிரதேசங்கள்
இன்னும் மறக்காமல் இருக்கின்றன
உனது இருப்பின் இனிமையை
காத்திருப்பவன்
நின்று கொண்டிருக்கிறான்
அகழ்வாரைத் தாங்கும் நிலத்தில்

Thursday 25 July 2019

புதுச்சேரி உரை


கதிரெழுநகர்

பிரபு மயிலாடுதுறை

ஒரு மோட்டார்சைக்கிள் பயணியாக நான் அதிகாலையின் இனிமையை முக்கியத்துவத்தை உணர்ந்தவன். இந்தியாவின் வெவ்வேறு ஊர்களின் கருக்கிருட்டில் எனது பயணத்தை நான் துவக்கியிருக்கிறேன் என்பதை இப்போது எண்ணிப்பார்த்தாலும் மெய்சிலிர்க்கிறது. சிருங்கேரியில் கார்வாரில் லெபாக்‌ஷியில் நர்சிங்பூரில் மீரட்டில் ரிஷிகேஷில் என இம்மண்ணின் வெவ்வேறு தலங்களின் அதிகாலைப் பொழுதில் ஆர்வத்துடன் கிளம்பியிருக்கிறேன். நாளும் பயணத்தின் மூலம் மேலும் அணுக்கமாக உணர்ந்த எனது மரபின் எனது பண்பாட்டின் மீதான ஆர்வம் என்று அதனைச் சொல்ல முடியும். அத்துடன் மனிதர்களைக் காண்பதால் உள்ளத்தில் உணரும் எல்லையின்மை என்றும் அதனைச் சொல்ல முடியும். அரவிந்தரும் வ.வே.சு ஐயரும் பாரதியும் பல சூர்யோதயங்களைக் கண்ட புதுச்சேரியில் வெண்முரசின் கதிரெழுநகர் பகுதி குறித்து உரையாற்றுவது மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது.

ஷண்மதங்களில் சௌரம் குறித்து யோசித்துப் பார்த்தால் காலத்தைக் கணிப்பவர்கள் கதிரவன் குறித்த துல்லியமான கணக்கீடுகளைக் கொண்டு மனித வாழ்க்கை குறித்தும் அதனை வளப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் குறித்தும் தங்கள் பார்வையை அளித்தவர்களாலேயே உருவாகியிருக்கிறது. ஆயினும் அதன் பிரத்யட்சமான தன்மை காரணமாக எளிய மக்களிலிருந்து யோகிகள் வரை அனைவரும் ஏற்கும் மார்க்கமாகவும் இருந்திருக்கிறது. சூரியன் கண் கண்ட தெய்வம் என்பது எவ்வளவு பெரிய உண்மை.

கலிங்கமும் வங்கமும் ஒரே பிரதேசமாக நிலமாக மிக சமீப காலம் வரை இருந்திருக்கிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கட்டாக்கில் பிறந்தவர். இளநாகனும் அருணரும் கலிங்கத்தில் நிகழும் சூர்ய விழாவுக்கு வருகின்றனர். சிலிக்கை ஏரியில் படகில் பயணிக்கின்றனர். சூர்ய விழாவுக்கு மக்கள் குவிவது இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் நிகழ்வது. ஒரு புதிய திருநாளில் மக்கள் தங்களைப் புதிதாக்கிக் கொள்ள விழைகிறார்கள். சென்றதினி மீளாது என்ற விவேகத்துடன் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற உணர்வு கொள்கிறார்கள். தங்கள் தடைகளை தயக்கங்களை எல்லைகளை உதறி விட்டு அமரத்துவத்தின் துளிகளை நோக்கி நகரத் தொடங்குகின்றனர். இந்திய மண்ணில் ஒரு எளிய திருவிழா கூட இவ்வண்ணமே வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருவாரூரில் ஆழித்தேர் காண சென்றிருந்தேன். யாக நெருப்பென கருணைக் கடலென தியாகராஜர் அமர்ந்திருந்தார். எங்கும் ஆரூரா தியாகேசா என்ற விளி. ஆரூரனை தந்தையாக பிள்ளையாக மனதில் வரித்து அனைவருமே ஆரூரா தியாகேசா என்றனர்.

சமவெளியில் நிகழும் விழாக்களினும் கடற்கரைகளில் நிகழும் விழாவுக்கு மக்கள் பெரிதாகத் திரள்வது ஒரு வழக்கம். அலைகடலின் ஈரக்காற்று மனித உள்ளங்களுக்கு அளிக்கும் உவகை அவர்களை மேலும் விழா மனநிலையுடன் இணைப்பது ஒரு காரணமாக இருக்கலாம். கடற்கரைக்கு உரிய சிறு வீதிகளில் இளநாகன் சுற்றி வருகிறான். கல் வீடுகள். கடலின் உப்புக்காற்றுக்கு கருங்கல்லே தாக்குப் பிடிப்பதால் எங்கும் கல்வீடுகள் நிரம்பியிருக்கின்றன.

கதிரெழுநகரில் இணைத்து யோசிக்க வேண்டிய இரண்டு கதைகள் ரிஷியசிருங்கனின் கதை மற்றும் கர்ணனின் தானத்தின் கதை. ரிஷியசிருங்கன் கடும் தவவாழ்வை மட்டும் அறிந்தவன். அன்ன தானமிடாததால் சாபமிடப்பட்ட நாட்டுக்கு விஷாலியால் அழைத்து வரப்பட்டு மழையால் அந்நாடு பொலிய காரணமானவன். அங்கம் நிலைபெற்றது ரிஷ்யசிருங்கனால். கதிரோன் தனக்கு தானமாக அளித்த பொற்செல்வத்தை அன்னதானத்தை தன் அறமாக மேற்கொள்ளும் பேரறத்தானிடம் அளிக்கிறான் கர்ணன். அங்க நாட்டின் மக்கள் கர்ணனை தங்கள் அரசனாக ஏற்பது என்பதுடன் இந்த இருகதைகளையும் இணைத்து வாசிக்கலாம்.

கர்ணன் அவன் அன்னையிடம் கேட்கிறான்.: ’’மாமனிதர்கள் என்பவர்கள் ஏன் கண்ணீர்விட நேர்கிறது?’’. ராதை சொல்கிறாள்: ‘’அவர்கள் மனிதர்களை விட மிகப் பெரியவர்கள் மைந்தா. மனிதர்கள் எலிகளைப் போல. வளைகளுக்குள் பிற எலிகளுடன் கூடியும் ஊடியும் வாழ்கிறார்கள். மாமனிதர்கள் மத்தகம் எழுந்த பெருங்களிறுகள். அவர்களுக்கு இவ்வுலகம் மிகச் சிறியது’’

கர்ணன் குறித்து மகாபாரத காலகட்டம் முதல் இன்று வரை பலவிதமாக தொடர்ந்து பேசப்படுகிறது. வெண்முரசு அவற்றை குறிப்பிட்ட விதத்தில் அடுக்கி ஒரு தெளிவான சித்திரம் உருவாக வழிசெய்கிறது. கர்ணனுக்கு தான் யார் என்பதில் ஐயம் இருக்கவில்லை. யாதவ அரசியின் முதல் கர்ப்பம் குறித்து பாரதத்தின் அரசியல்சூழ்கையாளர்கள் அறிந்திருக்கின்றனர். கர்ணன் அஸ்தினபுரிக்கு வருகிறான்.

கிருபரும் துரோணரும் அவனை ஏற்கின்றனர். ஷத்ரியர்கள் அவனை சூதன் என்கின்றனர். தான் சூதன் எனப்படுவதும் சூதப் பெற்றோர்களின் மகனாக நினைக்கப்படுவதுமே தன்னை வளர்த்து ஆளாக்கிய அதிரதனுக்கும் ராதைக்கும் தான் செய்யும் கௌரவம் என்பதால் அவனுடைய இறுதி மூச்சு வரை அதை அவர்களுக்கு அளிக்கிறான். பீமன் உனது குலம் என்ன என்று கேட்கும் போது தன்னைப் பெற்ற அன்னையாகிய குந்தியின் மாண்பை காக்கத் தொடங்குகிறான். அதையும் தன் இறுதி மூச்சு வரை காக்கிறான். கௌரவர்களின் தலைமையில் திரண்ட ஷத்ரியர்கள் பீஷ்மர், துரோணருக்குப் பின் கர்ணனின் படைத்தலைமையை ஏற்க நேர்கிறது. வாழ்நாள் முழுதும் தன்னை இகழ்ந்த ஷத்ரியர்களுக்காகக் களத்தில் போர் செய்கிறான் கர்ணன். அவர்களும் கர்ணனிடம் தானம் பெற்றவர்களே.

வளத்தை நலத்தை செல்வத்தை நாளும் நல்கும் கதிரவனின் விழாவில் தொடங்கி மானுடர்களில் கதிரவன் போல வாழ்ந்த கர்ணனின் கொடையின் தொடக்கத்தை உரைக்கிறது கதிரெழுநகர்.

Wednesday 24 July 2019

புதுச்சேரியில் பேசுகிறேன்


கிருஷ்ணப்பருந்து

சமீபத்தில் கிருஷ்ணப்பருந்து என்ற மலையாள நாவலை வாசித்தேன். அது குறித்த கடிதம் ஜெ தளத்தில் வெளியானது. அதன் இணைப்பு

கிருஷ்ணப்பருந்து

Monday 22 July 2019

தேடலும் வேட்டையும்

சில மாதங்களுக்கு முன்னால், புதுச்சேரி நண்பர்களுடன் நடுநாட்டில் இருக்கும் மூன்று நரசிம்ம ஷேத்திரங்களுக்குச் சென்றிருந்தேன். பரிக்கல், பூவரசங்குப்பம் மற்றும் அபிஷேகப்பாக்கம். காலை சென்னை எக்ஸ்பிரஸைப் பிடித்து விழுப்புரத்தில் நான் இறங்கிக் காத்திருந்தேன். நண்பர்கள் காரில் வந்தனர். அவர்களுடன் இணைந்து கொண்டேன். 

ஆங்காங்கே சந்தனக் கடத்தல்காரன் வீரப்பனின் ஆளுயர பேனர்கள். மாலை போட்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். எனக்கு அருவருப்பாக இருந்தது. பலரைக் கொன்ற - தன் சொந்த மகளான கைக்குழந்தையைக் கொன்ற-  ஒரு கொலைகாரனுக்கு எப்படி விசிறிகள் உருவாக முடியும் என்பது அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் வாழ்க்கை இப்படியான பல சமூக அதிர்ச்சிகளை  எப்போதும் அளிக்கவே செய்யும். 

இன்று சில அரசியல் கட்சிகள் பல யானைகளைக் கொன்ற வீரப்பனை ‘’இயற்கையின் காவலன்’’ என்கின்றனர். மணிமண்டபம் கட்டுவோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுகின்றனர். 

ஒரு காவல்துறை ஆய்வாளரின் மகனாகப் பிறந்து சட்டம் படித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று நிர்வாகப் பணியைத் தேர்ந்தெடுக்காமல் காவல்துறைப் பணியைத் தேர்ந்தெடுத்து சவாலான கடும் பணிகளை கேட்டு பெற்றுக் கொண்டு ஏற்ற பல பொறுப்புகளை நிறைவுடன் செய்து முடிக்கிறார் கி. விஜயகுமார் ஐ.பி.எஸ்.,. அவர் வெற்றிகரமாக முடித்த பல பணிகளில் ஒன்று ‘’ஆபரேஷன் ககூன்’’. 

அது பற்றி அவர் எழுதியிருக்கும் Veerappan chasing the brigand என்ற நூலை சமீபத்தில் வாசித்தேன். சிறப்பு அதிரடிப்படையின் தலைமையை ஏற்கிறார் விஜயகுமார். அப்போது அவருக்கு ஐம்பது வயது. அவர் மனைவி அவரிடம் பணி ஓய்வு பெறுவதற்குள் வீரப்பனைப் பிடித்து விடுவீர்களா என்று கேட்கிறார். எட்டு வருடம் தேவைப்படும் என்று நினைக்கிறாயா என்று பதிலுக்குக் கேட்கிறார் விஜயகுமார். வீட்டுக்குள் இடம் மாறியிருக்கும் பொருளைத் தேடவே சிரமப்படுவீர்கள் என்பதால் கேட்கிறேன் என்கிறார் அவர் மனைவி.

வீரப்பனைத் தேடும் வேட்டையில் இருபது ஆண்டுகளாக இருப்பவர்கள்- வீரப்பனை நூலிழையில் தவற விட்டவர்கள் என அனைவரையும் சந்தித்து அவர்கள் அனுபவங்களைக் கேட்டுத் தொகுத்துக் கொள்கிறார். அதைத் தொகுத்ததும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது அவர் மனத்தில் மூட்டமாகப்  புலப்படுகிறது. இந்த நூலே அவ்வாறுதான் விஷயங்களைத் தொகுக்கிறது.

பலர் பல வருடங்களாக தேடிக் கொண்டிருந்த - காத்துக் கொண்டிருந்த - கணம் அவர்கள் முன் வந்து சேர்கிறது. ’’ஆபரேஷன் ககூன்’’ வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது.

வாசிக்க சுவாரசியமான புத்தகம். 

Saturday 20 July 2019

ஒரு சிறிய இடைவெளி

ஒரு சிறிய இடைவெளி
மறதியைக் கொண்டு வருகிறது
நமது தோற்றம் சற்று மாறியிருக்கிறது
எப்போதாவது ஆடி நோக்குகிறோம்
ஒரு சிறிய இடைவெளியின்
அருவத்தன்மை
புரிந்து கொள்ள இயலாததாய் இருக்கிறது
ஒரு சிறிய இடைவெளியை
நாம்
புரிந்து கொள்ள வேண்டாம்
என்று
அப்படியே விட்டு விடுகிறோம்
அலைநுரை விட்டுச் சென்ற
பெருங்கடலைப் போல

Monday 15 July 2019

கடலைப் பசும்பாலாக்கும் நிலவின் அலைகள்
கருமைக் கானக இரவு
வெளிச்சம் இல்லாத
ஒரு தனித்த
கிராமத்துச் சாலை
கூடடைந்த மரத்தின் பறவைகள்
மௌனமாய் இருக்கின்றன
இந்த இரவின் நீளம்
வானத்தின் நீளம் இருக்குமா
இந்த இரவின் அமைதி
கொள்ளும் அடர்த்தி எவ்வளவு
நள்ளிரவைத் தினமும் கடக்கிறது கடிகாரமுள்

Sunday 14 July 2019

ஒருநாள்

ஆழ்ந்துறங்கும் பயணி
முன்புலரியில் விழிக்கிறான்
ஆயத்தமாகிறது
அன்றைய சூரியன்
நீராடி
மலர் அணிந்திருக்கும்
மிதத்தலென நடக்கும்
அப்பெண்
எதை நினைத்து
அவ்வப்போது
முகம் சிவந்து
புன்னகைக்கிறாள்
கூட்டமாய்ச் செல்கின்றன
நர்சரி குழந்தைகள்
சிலர்  வருகின்றனர்
சிலர்  போகின்றனர்
சாலையில்
சாலைகளில்
அலுப்பு தீர ஓய்வெடுக்கின்றன
தொலைதூரத்திலிருந்து வந்து சேர்ந்த
காய்கறிகள்
நதியில் பாயப் போகும்
தண்ணீர்
கூடி நிற்கிறது வானில்
வனாந்தரத்தில்

Saturday 13 July 2019

நீ ஒரு நினைவாக வருகிறாய்
ஓவியத்தாளில் வீசப்பட்ட கொழகொழப்பான வண்ணம்
பரவும் எல்லா திசைகளிலும்
ஒரு தும்பியாக நீ சிறகடிக்கையில்
கன்னங்கருமையாய் கூடுகின்றன மேகங்கள்
மண் மகிழும் தருணத்தில்
மகரந்தப் பொடிகள் பறக்கின்றன
மலை முகடுகளின் மௌனம்
எங்கோ இராப்பொழுதில் தடுக்கி விழுகிறது அருவி
மெல்ல வந்துவிடுகிறது ஒரு பகல்

Friday 12 July 2019

மர்ஃபி கல்யானையைக் கண்டான்
அதன் சின்ன கண்கள்
காதுகள்
துதிக்கை
யானையை நெருங்கிப் பார்க்க நினைக்கும்
இயல்பான அவன் ஆர்வமும்
அக்கணம் உண்டாகும் தயக்கமும்
அப்போதும் இருந்தன
மெல்ல சென்று
தொட்டுப் பார்த்தான்
சுற்றி வந்தான்
கல்யானையை யானையாக்குவது குறித்து
மர்ஃபி கற்பனை செய்வதை
கல்லை யானையாக்கியவன்
பார்த்துக் கொண்டிருந்தான்

Thursday 11 July 2019

மற்றொன்றுக்கும்
மற்றொன்றுக்கும்
இடைவெளிகள்
மிக அதிக தூரமாய்
இருக்கும் உலகம் ஒன்றில்
நாம்
காலப்பொழுதுகள் சில ஆக இருப்பினும்
பேதமற்று
இருந்தோம்

அப்பொழுதுகள் மழையாய் மாறி
மண்ணைத் தொடுகின்றன
வண்ண வில்லாய்
விண்ணில் தவழ்கின்றன

Wednesday 10 July 2019

நினைவுகள் என்று

நெருப்பில் எரிகிறது உடல்
உடலைச் சுவைக்கிறது
பற்றிப் பரவி அணைக்கும்
தீயின் கைகள்
இச்சையின் தீராத தாகங்கள்
அனலால் நிரம்புகின்றன
உலையாய்க் கொதிக்கும் குருதியின் ஆவி
நெருப்புப் பூக்கள் உதிர்கின்றன சாம்பலாய்
அலைகளில் கரையும் சாம்பலுக்கு
நினைவுகள் என்று ஏதுமில்லை

Tuesday 9 July 2019

என் ஒளியே
என்னிடம்
உன்னை எண்ணும் போது
நான் கொள்ளும்  மௌனம் இருக்கிறது
என்னிடம்
உன்னை எண்ணும் போது
என்னுள் திரளும்  கண்ணீர்  இருக்கிறது
என்னிடம்
உன்னை எண்ணும் போது
வந்து சேரும் ஆகாயம் இருக்கிறது
என்னிடம்
உன்னை எண்ணும் போது
நீயே நிறைந்திருக்கும் உலகம் இருக்கிறது

Monday 8 July 2019

நாம் எழுவோம் சுடரே

நாம் எழுவோம் சுடரே
நீராவிகள் மேகமாய்த் திரளும் வெளியில்
வான் கதிர்கள் பொன்னாய் ஒளிரும் பொழுதில்
சிகர உச்சிகள் சூடும் மௌனத்தில்
கதிரவனாய் வெண்ணிலவாய்
நாம் எழுவோம் சுடரே
விண் கடலின் தூய்மையுடன்
பாதாளங்களின் முடிவற்ற விடாயுடன்

Sunday 7 July 2019

காற்றால் இலைகள் அசையும்
பசுமரமென
உன் சீரான மெல்லிய
உயிர்மூச்சுடன்
வானுக்குக் கீழே
தனித்து
நின்றிருக்கிறாய்
எதையும் பொறுக்கும் புவி
உன் பாதங்களை
ஏந்திக் கொள்கிறது
ஓர் அரிய மலரென
முடிவின்மையின் வெளி
உன் மேல் பரவுகிறது
அன்பின் முகில்களாக

Saturday 6 July 2019

பாரதி நினைவுகள் - மகாகவி பாரதியார் வரலாறு

சமீபத்தில் யதுகிரி அம்மாள் எழுதிய ‘’பாரதி நினைவுகள்’’ நூலை வாசித்தேன். இன்று வ.ரா எழுதிய மகாகவி பாரதியார் வரலாறு நூலை வாசித்தேன். வ.ரா நூலை வாசிக்கும் தோறும் யதுகிரி அம்மாளின் நூல் இன்னும் முக்கியத்துவம் கொண்டதாக ஆகிக் கொண்டேயிருந்தது. யதுகிரி அம்மாள் பாரதியின் வளர்ப்பு மகள் போன்றவர். பாரதியால் சக கலை மனமாக நினைக்கப்பட்டவர். அவர் மனதில் பாரதியின் ஆளுமையும் சொற்களும் எண்ணங்களும் வலுவாக இருக்கின்றன. அவர் பாரதியின் கண்கள் வழியாகவே உலகைக் காண்கிறார். பாரதியின் கண்கள் அவரிடமும் இருக்கின்றன. அவர் குறிப்புகளின் வழியே ஒரு மகாகலைஞன் ஜீவனுடன் எழுந்து வருகிறான். யதுகிரி அம்மாளின் ‘’பாரதி நினைவுகள்’’ பாரதி வரலாறுகளில் மிக முக்கியமானது.

தட்பம்

எவ்வளவு குளிராக இருக்கிறது
இந்த கடலின் காற்று
உன் பாதங்கள் நுரைக்க
அலைகளிடையே நின்றிருக்கையில்
சொன்னாய்
உன் அன்பின் பிரதேசம்
மேலும் குளிரானது
என்பதை
நினைத்துக் கொண்டேன்

Friday 5 July 2019

அருவம்

நீ உருமாறிக் கொண்டேயிருந்தாய்
மண் கிழித்து மேலேறும் முளையாக
மழலை முகம் கொண்ட தளிராக
சின்னஞ்சிறு அழகாக
இளமரமாக
இலையெல்லாம் பூவான வசந்தமாக
கனி கொத்த சூழும் புள் திரளாக

அன்பின் ஊழ்கத்தில்
நீ
இப்போது
விதைக்குள் நிறையும்
ஆகாயமாகிறாய்

Thursday 4 July 2019

பெயர் வெளி

நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பவன்
ஒலியற்ற ஓர் உதட்டசைவை மேற்கொள்கிறான்
அது ஒரு பெயராக இருக்கிறது
அதனை
மீண்டும் மீண்டும்
ஒலியில்லாமல் கூறுகிறான்
அவன் செவிகளில்
அது
பல வர்ண சங்கீதமாக
ஒலிக்கிறது
இசையும் மௌனமும்
நிரம்பிய
இந்த உலகில்
நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பவன்
இசைக்கும் இசைக்கும்
மௌனத்துக்கும் மௌனத்துக்கும்
இசைக்கும் மௌனத்துக்கும்
மௌனத்துக்கும் இசைக்கும்
சென்று வந்து
கொண்டிருக்கிறான்

Wednesday 3 July 2019

எவ்வளவு அற்புதம்

ஒரு பெருவெள்ளம் ஓய்ந்ததற்குப் பின்னால்
நதியின் கரைகளில் நிறைந்திருக்கிறது
புது சேற்றின் தடங்கள்
அடித்து வரப்பட்ட தாவர தழை இலைகள்
பின் மாலையின் இருளில்
சூரியத் தடங்கள் முற்றாய் மறைந்திருக்கின்றன
ஓயாமல் பெய்த மழை
தூய்மையாக்கிய காற்றில்
புதுப்பிறப்பு கொண்டுள்ளது
நாம் காணும் காட்சிகள்
எல்லா இனிமைகளும் நிறைந்த
ஒரு புதிய தினம்
தினம் தினம்
உதிக்கிறது
என்பது
எவ்வளவு மகிழ்ச்சியானது
எவ்வளவு அற்புதமானது

உன் பிரியம்
குழந்தை
தன் மென்விரல்களால்
அன்னைக்கு
ஊட்டும்
உணவைப் போல்
அமிர்தச் சுவை கொண்டது
உனது அன்புக்கு
ஏங்கும் பூமிக்கு
வானம் அளிக்கிறது
ஒரு சிறுமழையை
உன்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை
புரிந்து கொள்ள முடியாமல் போகும் தோறும்
நீ இன்னும் வசீகரமாகிறாய்
உன் வசீகரத்தின் மாயம்
கடலலைகளாய் சுழற்றுகிறது
உன் பிரியத்தின் அலைகளில்
மூழ்கும் போது
நீ மட்டுமேயான வெளி
மிதக்கச் செய்கிறது
பிறிதொன்று
எங்கும் இன்றி

Tuesday 2 July 2019

பிரிவு

நாம் ஒரே உலகில் இருக்கிறோம்
காலை வெயிலில்
நீ
கடந்து செல்லும்
சூரியனையே
நானும்
கடக்கிறேன்
உனது தாகத்தை
எனது தாகத்தை
நம் தாகத்தை
நில ஆழங்களின்
வான் உயரங்களின்
நீரைப் பருகியே
தணித்துக் கொள்கிறோம்
மண்ணின் கருணையே
நாளும்
நாம் உண்ணும் உணவு
மாலை அந்தியில்
நீ
எப்போதாவது பார்க்கும்
நிலவை
நான் எப்போதும் பார்க்கிறேன்
அன்பின் மழையில்
நாம் ஆனந்தமாய் நனைந்திருக்கிறோம்
முடிவிலாப் பொழுதில்
கணம் கணமாய்
நாம்
எப்போதும்
சந்தித்துக் கொண்டேயிருக்கிறோம்

பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்

இன்று ‘’பாரதி நினைவுகள்’’ நூலை வாசித்தேன். யதுகிரி அம்மாள் சிறுமியாக இருந்த போது பாரதியின் வீட்டுக்கு பக்கத்தில் குடியிருந்ததால் அவருடனும் செல்லம்மாவுடனும் நாளின் பெரும்பாலான பொழுதில் உடனிருக்கிறார். செல்லம்மாவும் பாரதியும் யதுகிரியை தங்கள் மகளாகவே பாவிக்கின்றனர். யதுகிரி சின்னஞ்சிறிய சிறுமி. வைணவக் குடும்பத்தில் பிறந்தவர் ஆதலின் ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தம் மூலமாக தமிழ்க் கவிதை அறிமுகமாகிறது. மொழி அறிந்த குழந்தையாதலின் பாரதியுடன் யதுகிரி உரையாடுகிறார். விவாதிக்கிறார். அவர்கள் பல விஷயங்களைப் பேசுகிறார்கள். பெண்கள் நிலை, அரசியல், சமூக நிலை, சமயம் மற்றும் வேதாந்தம் என பலவற்றைக் குறித்து விவாதிக்கின்றனர். பாரதியாரின் பல முக்கியமான பாடல்கள் எழுதப்பட்ட சூழ்நிலையையும் பாரதியார் தன்னிடம் நிகழ்த்திய உரையாடல்களையும் தன் நினைவிலிருந்து மீட்டு துல்லியமாக எழுதுகிறார் யதுகிரி. ஒரு சிறுமியின் பார்வையில் வெளிப்படும் குழந்தை மனம் கொண்ட கவிஞனின் சித்திரம் அவனை நமக்கு மிகவும் அணுக்கமாக்குகிறது. சிறியன சிந்தியாத அம்மகா கலைஞன் நம் முன் ஜீவனுடன் எழுகிறான்.

தமிழ் அறிந்த ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் யதுகிரி அம்மாளின் ‘’பாரதி நினைவுகள்’’

இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. அதன் இணைப்பு
archive(dot)org

Monday 1 July 2019

நம் மௌனத்தில் தான்
எத்தனை ஆயிரம் சொற்கள்
எத்தனை ஆயிரம் பிரியங்கள்
எத்தனை ஆயிரம் இனிமைகள்
எத்தனை ஆயிரம் கண்ணீர்
எத்தனை ஆயிரம் துயரம்
நிறைந்திருக்கிறது

மௌனம் கலைய
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
பெருகிக் கொண்டே
செல்கிறது
சொல்லாக்க இயலா உணர்வுகள்