Thursday 29 June 2023

இறைவன்

எளிமையானது
தொட்டு கடந்து செல்லும்
இச்சிறுகாற்று
இனியது
நண் பகலில்
ஒலிக்கும் 
மாமரக் குயிலின் இசை
முகர்ந்து முகந்து
புதிய பொருட்களை 
உணர்ந்து கொள்ளும்
வீதியில்
பிறந்து சில வாரங்கள் ஆன
நாய்க்குட்டிகளுக்கு
உலகம்
நூதனங்களின்
முடிவிலா வெளியாக
இந்த 
பெரிய உலகில்
சுழலும் கோள்கள்
விண்மீன்கள்
நிறைந்த வெளியில்
சிறு 
மிகச்சிறு
பரப்பில்
மண்ணில் வேரூன்றித்
துளிர்க்கும் 
தளிர்தான்
எத்தனை
மகிழ்ச்சி கொண்டிருக்கிறது
இறைவனென 

Wednesday 28 June 2023

திறனும் தொலைநோக்கும்

 

இன்று முன்னாள் பாரதப் பிரதமர் திரு. பமுளபர்த்தி வெங்கட நரசிம்ம ராவ் அவர்களின் பிறந்த தினம். 

அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இன்று நினைவுகூர்கிறேன். 

ஆந்திர மாநிலத்தின் நிதி அமைச்சராக இருக்கிறார் ராவ். அவருடைய குடும்பம் பல தலைமுறைகளாக மிகப்பெரிய ஜமீன் குடும்பம். அவர் குடும்பத்துக்குச் சொந்தமாக பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. ஆந்திராவில் நிலச் சீர்திருத்த சட்டங்கள் கொண்டு வரப் பட வேண்டும் என எண்ணுகிறார் ராவ். அவ்வாறு அவர் செய்ய வேண்டும் என எவ்விதமான புற அழுத்தமும் கட்சியிலிருந்தோ ஆட்சியிலிருந்தோ அவருக்கு அளிக்கப்படவில்லை. மக்கள் நலனுக்கு நிலச் சீர்திருத்தம் தேவை என ராவ் எண்ணுகிறார். சொல்லப் போனால் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் நிலச் சீர்திருத்தங்களை முடிந்த அளவு தள்ளி வைக்கச் சொல்லியே அவரிடம் கூறப்படுகிறது. 

மக்கள் நலன் கருதி ராவ் நிலச்சீர்திருத்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி அதனை சட்டமாக்கினார். அதனால் அவருடைய குடும்பத்துக்கு சொந்தமான பத்து கிராமங்கள் முழுமையும் அவர்கள் இழக்க நேரிட்டது. 

ஓர் அரசியல்வாதி இவ்வாறு செயல்பட்டதைப் புரிந்து கொள்ளவே குறிப்பிட்ட நுண்ணுணர்வு தேவை. 

ராவ் நாட்டு மக்களை நேசித்த ஒரு தலைவர். அவர் நாட்டுக்கு ஆற்றிய பணிகள் மேலும் பல ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும். 

உள்ளும் புறமும்

 என்னுடைய வாழ்நிலமாகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் கிராமங்களில் பேரூராட்சிகளில் நகரப் பகுதிகளில் அரசியல் கட்சியினர் அனேகம் பேர் இருப்பார்கள். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். வீதிகளில் கொடிக் கம்பம் அமைத்து கொடி ஏற்றுபவர்கள், சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள், மாநாடு என்றால் வாகனம் ஏற்பாடு செய்து ஆதரவாளர்களை அழைத்துச் செல்பவர்கள், தேர்தல் காலங்களில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பவர்கள் என பலவிதமான பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள். இவர்களில் கட்சி உறுப்பினர் அட்டை பெற்றிருப்பவர்கள் உண்டு. உறுப்பினர் அட்டை என்பது கட்சி அரசியலின் நுழைவு என அறியாதவர்களும் உண்டு. இவர்கள் அனைவருமே பெரும்பாலும் சாமானியர்கள். கட்சியிலோ அதிகாரத்திலோ எந்த பொறுப்பிலும் இல்லாதவர்களாக இருப்பார்கள். எனினும் இவர்கள் அனைவருக்குமே மானசீகமாக அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். 

ஒரு கிராமத்தின் மக்கள்தொகை 4000 என இருக்கிறது என வைத்துக் கொள்வோம். டெல்டா மாவட்டங்களில் ஒரு கிராமத்தில் 5 அல்லது 6 கட்சிகள் இருக்கும். ஒவ்வொரு கட்சியுமே அந்த கிராமத்தில் 15 லிருந்து 20 பேரை மட்டுமே உறுப்பினர்களாக வைத்திருப்பார்கள். இந்த எண்ணிக்கையையும் பரவலாக இருக்கும் 6 கட்சிகளில் 3 கட்சிக்கு மட்டுமே இருக்கும். மற்ற மூன்று கட்சிகளில் அந்த எண்ணிக்கையும் குறையும். இந்த 15 லிருந்து 20 பேரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் இரண்டு அல்லது மூன்று தனித்தனி குழுக்களாக இருப்பார்கள். ஒரே கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இணக்கத்தை விட விலக்கமே மிகுந்திருக்கும். 

மகாத்மா காந்தி காங்கிரஸை வழிநடத்திய போது கட்சியில் ஒவ்வொரு கிராமத்திலும் மிக அதிக எண்ணிக்கையில் சாமானிய மக்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என விரும்பினார். கட்சி உறுப்பினர்களின் ஆண்டு சந்தாவாக ‘’நாலணா’’ ( 25 பைசா) வை நிர்ணயம் செய்தார். கட்சியின் சாமானிய உறுப்பினனுக்கும் ஜனநாயகமும் சமூக நெறிகளும் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என விரும்பினார். குடிகள் சமூகங்களாக ஒருங்கிணைவதற்கான பயிற்சியை கட்சி தன் தொண்டர்கள் அளவில் முதல் கட்டமாக பயிற்றுவிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்தார். 


 

Tuesday 27 June 2023

போற்றலும் தூற்றலும்

 இளைஞனாக இருந்த நான் கட்டுமானத் தொழிலுக்கு வந்தேன். கட்டுமான இடத்தில் தொடர்ந்து ஏதேனும் செயல்கள் நடந்து கொண்டே இருக்கும். பலவிதமான ஆட்கள் இருப்பார்கள். பணியில் முழுமையான ஈடுபாட்டை செலுத்திக் கொண்டு பொறுப்பேற்று பணி செய்பவர்கள் , அன்றைய தினத்தின் பாடு என குறைவான ஈடுபாடு கொண்டு வேலை செய்பவர்கள், நேர உணர்வு மிக்கவர்கள், நேர உணர்வே இல்லாதவர்கள், தகவல் தொடர்பு இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்பவர்கள் , தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணராதவர்கள், உண்மையை மட்டுமே பேசுபவர்கள், உண்மைக்கு மாறானதையும் அவ்வப்போது பேசுபவர்கள் என பலவிதமான ஆட்கள் இருப்பார்கள். அவர்களுடன் தான் பணி செய்ய நேரும். உண்மையில் சில நாட்களில் எனக்கு இவ்விதமான இயல்புகளை பார்த்ததும் அறியும் தன்மை வந்து விட்டது.  கட்டுமானத் தொழிலில் விரும்பாத குணங்கள் கொண்டவர்கள் இருந்தால் கூட அவர்களை முற்றிலும் விலக்கி விட மாட்டார்கள். அவர்களுக்கு மேலும் மேலும் தங்களைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு தருவார்கள். ஒரு கட்டுமான இடத்தில் பணி புரியும் ஒருவரை குறைந்த பட்சம் அந்த இடத்தில் பணி முடியும் சில மாதங்களுக்காவது பணியிலிருந்து நீக்காமல் இருப்பார்கள். வேலை முழு வீச்சில் நடைபெறும் போது இத்தகைய மனிதக் குறைபாடுகள் அந்த வீச்சின் வேகத்திலேயே மிக மிகச் சிறியதாகி விடும். கட்டுமானத் தொழில் முழு வீச்சில் செயலாற்றுக என்னும் பாடத்தையே எப்போதும் போதிக்கும். நிறைகளைப் பெருக்கி குறைகளை இல்லாமல் ஆக்கிக் கொள்ள ஆகச் சிறந்த வழியும் அதுவே. 

மனிதர்களை அவர்கள் இருக்கும் நிலையில் ஏற்றுக் கொள்வது என்பதும் ஆற்ற நினைக்கும் பணிகளை நோக்கி முழு விசையுடன் முன்னேறிச் செல்வது என்பதும் எனது வழிமுறைகள். உடன் இருப்பவர்கள் உள்ளம் கூட நமக்கு எதிராகத் திரும்பக் கூடும். அதற்கான காரணங்கள் எண்ணற்றவை. அவை ஒவ்வொன்றின் பின்னாலும் சென்று ஆராய்ந்து கொண்டிருப்பது என்பது நேர விரயம் அன்றி வேறல்ல. 

ஒரு மனிதன் உள்ளதைச் சொல்கிறானா உள்ளதை மாற்றிச் சொல்கிறானா என்பதை கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள் மிக எளிதில் உய்த்தறிந்து விடுவோம். அது பல வருட அனுபவத்தின் விளைவு. யாரேனும் உள்ளதை மாற்றிச் சொல்லி திட்டமிட்டு ஒரு விஷயத்தை குறிப்பிட்ட சில திசைக்கு நினைத்தால் உள்ளுணர்வில் ஒரு சலனம் ஏற்பட்டு மனதை எச்சரிக்கை செய்து விடும். அத்தகைய தருணங்களைக் கடந்து செல்வதற்கு எளிய மற்றும் உபயோகமான வழி எதுவும் பேசாமல் மௌனமாய் இருந்து விடுவது. 

தந்திரம் மிக்கவர்களிடம் உரையாட நேரும் போது பெரும்பாலும் மௌனமாக இருந்து விடுவது என்பது நல்ல வழிமுறை. அவர்களிடமிருந்து சற்று விலகியிருப்பது  அதனினும் சிறந்த வழிமுறை.

‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து பேசப்படும் போது பேசும் பலருக்கு ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து மாற்று கருத்துக்கள் இருக்கும் ; விமர்சனங்கள் இருக்கும் ; நக்கல் நையாண்டி கூட இருக்கும். அவர்கள் பார்ப்பதை அவர்கள் முன்வைப்பார்கள். நான் மௌனமாக கேட்டுக் கொள்வேன். இவ்வாறெல்லாம் தங்களை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்வது அவர்கள் மகிழ்ச்சி எனின் அவர்கள் அதனை அடைந்து விட்டு போகட்டும் என்றே நான் எண்ணுவேன். 

நாம் பாராட்டப்படும் போது நாம் அதனை ஏற்றுக் கொள்கிறோம் என்னும் போது சிலர் நம்மைத் தூற்றினால் அதனையும் இயல்பாக எடுத்துக் கொள்வதே நன்மை தரும். போற்றலும் நமக்கானதல்ல தூற்றலும் நம்மைச் சேர்வதல்ல என்னும் விவேகம் உண்டாகுமாயின் எத்தகைய சூழலையும் எதிர் கொள்ள அது பேருதவி புரியும். மனிதர்களை இணைக்க விரும்புபவர்களுக்கான நல்வழியும் அதுவே. 

Sunday 25 June 2023

இருளிலிருந்து ஒளிக்கு

 1975ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி இந்தியாவில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது. இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அடிப்படை உரிமைகளில் ஒன்று எந்த இந்தியக் குடிமகனுக்கும் இந்திய நிலத்தில் உயிர் வாழும் உரிமை உண்டென்பது. அதாவது எந்த இந்தியக் குடிமகனின் உயிர் வாழும் உரிமையையும் பாதுகாக்க இந்திய அரசியல் சட்டம் பொறுப்பேற்றுள்ளது என்பது அதன் பொருள். நெருக்கடி நிலையின் போது எல்லா அடிப்படை உரிமைகளும் முடக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன் அர்த்தம் என்னவெனில் இந்தியக் குடிமக்களின் உயிர் வாழும் உரிமை என்பதும் அரசாங்கத்தால் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதே. இதை விட ஒரு மிக மோசமான கொடிய நிலை இருக்க வாய்ப்பில்லை. 

ஆளும் கட்சியின் மீது விமர்சனம் இருந்த அனைத்து அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். பத்திரிக்கைகள் அனைத்தும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு அரசாங்கம் விரும்பும் செய்திகளே வெளிவர முடியும் என்ற நிலை. 

இந்தியாவில் அரசாங்கம் என்பது இந்திய சமூகத்தின் மிகச் சிறு பகுதியே. நுண்மதி கொண்ட ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் அதனை அறிவார்கள். இலட்சக்கணக்கான கிராமங்களில் வேர் கொண்டிருக்கும் ஒரு நாட்டை  அதிகாரவர்க்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஆண்டிட முடியாது. 

இந்தியாவின் நடுத்தர வர்க்க , கீழ் நடுத்தர வர்க்க இளைஞர்கள் நெருக்கடி நிலைக்கு எதிராக தலைமறைவு இயக்கத்தை முன்னெடுத்தனர். நாட்டில் எந்த மூலையில் எந்த அத்துமீறல் அரசாங்கத்தால் நடந்தாலும் தலைமறைவு இயக்கத்தின் தொடர்பு சங்கேத வலை மூலம் நாடெங்கும் அந்த செய்தி மக்களைச் சென்றடைந்து கொண்டே இருந்தது. அந்த இளைஞர்கள் முக்கியமானவர்கள். அவர்களின் தியாகம் மகத்தானது. சாமானிய குடிமகன் உச்சபட்ச ஆட்சியாளனுக்கு சமமானவன் என முன்வைக்கும் ஜனநாயகம் என்ற உணர்வின் வரலாறு எழுதப்படும் போது அந்த வரலாற்றில் இந்தியாவின் நெருக்கடி நிலையை எதிர்த்து நின்ற அந்த இளைஞர்களின் தியாகம் அதில் குறிக்கப்பட்டிருக்கும். 

அதிகாரத்தின் வெற்றுக் கூச்சல்களுக்கும் கூப்பாடுகளும் கேட்டுக் கொண்டிருந்த போது இந்தியாவின் சாமானிய குடிகள் மௌனமாய் நோக்கிக் கொண்டிருந்தார்கள். 

சாமானியர்களின் மௌனத்தை தங்கள் வெற்றி என நினைத்த ஆட்சியாளர்கள் நெருக்கடி நிலையை விலக்கி தேர்தலை அறிவித்த போது அந்த சாமானியர்களின் மௌனம் எத்தனை அடர்த்தி கொண்டது என்பதை உலகமே வியந்து பார்த்தது. 

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடிய தலைமறைவு இயக்கத்தின் இளைஞர்களின் தியாகத்தை மீண்டும் ஒருமுறை நினைவு கூரும் தினம் இன்று.

Saturday 24 June 2023

பெருக்கம்

 நெடுநாள் நண்பரின் மகன் இப்போது எனக்கும் நண்பனாகி விட்டான். என்னுடைய வயதில் பாதி அவனுக்கு. உடனிருந்த நாட்களில் மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விட்டான். 

நாளின் பெரும் பொழுது உடனிருந்த போது நான் ஏதாவது ஒரு விஷயம் குறித்து ஆரம்பிப்பேன். அடுத்த தலைமுறை அந்த விஷயத்தை எவ்விதம் அணுகுகிறது புரிந்து கொள்கிறது என்பதை அவதானிப்பேன். இருப்பினும் எப்போதும் தீவிரமான விஷயங்களாக இல்லாமல் உரையாடல் இருக்க வேண்டும் என்றும் எண்ணுவேன். 

இரண்டு தினங்களுக்கு முன்னால் எனக்கும் அவனுக்கும் ஒரு போட்டி. போட்டியை நான் தான் அறிவித்தேன். அதாவது இரண்டு பேரும் தங்கள் நினைவில் இருக்கும் திருக்குறள்களை எழுத வேண்டும். யார் அதிகமாக திருக்குறளை எழுதுகிறார்கள் என்பதை அறிவதற்காக இந்த போட்டி. நண்பன் கணிசமான திருக்குறள்களை எழுதினான். நான் அவன் எழுதியதைப் போல் இரண்டு மடங்கு குறள்களை எழுதினேன். போட்டி முடிந்த பின் எங்கள் இருவருக்கும் மேலும் பல குறள்கள் நினைவில் எழுந்தன. அப்போது எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. 

தமிழ்க் குடும்பங்களில் உறவினர்களும் நண்பர்களும் சந்திக்கும் போது திருக்குறள், திருப்பாவை, திருவெம்பாவை, சிவ புராணம், கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், தனிப்பாடல்கள், கம்ப ராமாயணம் ஆகிய்வற்றில் உள்ள பாடல்களை நினைவில் இருந்து ஒப்பிக்கும் எழுதும் போட்டிகளை நடத்தலாம். அவற்றில் வினாடி வினா நிகழ்ச்சி கூட நடத்தலாம். இந்த எண்ணம் எளிமையானது. எளிதில் செயல்படுத்தக் கூடியது. நமது மொழியை மக்களிடம் சகஜமாக ஆக்க இவ்வகை முயற்சிகள் உதவும். 

நம் நாட்டில் குழந்தைகளுக்கு தெய்வங்களின் பெயர்களை இடுவதே இறைவனின் நாமங்கள் மீண்டும் மீண்டும் அழைக்கப்பட்டு வீடு இறை நாமங்கள் எப்போதும் ஒலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே. இறைவனின் பெயர்களும் கீர்த்திகளும் நிறைந்த தமிழ்ப் பாடல்கள் சாமானிய மக்களின் மனத்திலும் உரையாடலிலும் இடம் பெற இது ஒரு நல்ல வழி. 


Friday 23 June 2023

ஓர் உரையாடல்

 எனது நெடுநாள் நண்பரின் மகன் வீட்டுக்கு வந்திருந்தான். ஒரு வார காலம் இங்கு இருந்தான். கல்லூரிப் படிப்பை முடித்திருக்கும் அவனுக்கு சமூக விஷயங்கள் குறித்த அறிமுகம் இருக்க வேண்டும் என நண்பர் விரும்பினார். என்னுடன் ஒரு வார காலம் இருப்பது அவனுக்கு சமூகம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட உதவியாய் இருக்கும் என நண்பர் கருதினார். அவன் பிறந்த அன்று அவனை கைக்குழந்தையாக நான் மருத்துவமனையில் பார்த்தது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. இன்று பெரிய இளைஞனாக இருக்கிறான். ஒரு வார காலமாக வெவ்வேறு விதங்களில் அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். இன்று என்னிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று விரும்பினான் ; சொன்னான். அது விரும்பத்தக்க விஷயம் என்பதால் கேள்விகளைக் கேட்கச் சொன்னேன். 


கே : நீங்கள் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொள்கிறீர்கள் ? தனியாகப் பயணிக்க உங்களுக்கு விருப்பமா ? அல்லது குழுவுடன் பயணிக்க விருப்பமா?

நான் மோட்டார்சைக்கிளில் தனியாகவும் பயணித்திருக்கிறேன். நண்பர்கள் குழுடனும் பயணித்திருக்கிறேன். நண்பர்கள் குழுவுடன் பயணித்தவை அளவிலும் தூரத்திலும் சிறியவை. நீண்ட பயணங்களை தனியாக மேற்கொண்டிருக்கிறேன். 

தனியாகப் பயணிக்கும் போது நம் அகம் புதிய சூழ்நிலைகளை புதிய காட்சிகளை புதிய அனுப்வங்களை எதிர்கொள்கிறது. அவை நாம் அறியாதவற்றை நம்மை உணர வைக்கின்றன. காட்சிகளாக ஒலிகளாக அவை நினைவின் அடுக்குகளில் சென்றமர்கின்றன. அவை முக்கியமான அறிதல்கள் ஆகின்றன. 

கே : உங்கள் பயணத்தில் எழிலார்ந்த பல இடங்களுக்குச் சென்றிருப்பீர்கள். இங்கேயே இருந்து விடலாம் என எண்ணிய இடம் அல்லது இடங்கள் என ஏதேனும் உண்டா?

இந்திய அகத்துக்கு கங்கை எப்போதுமே நெருக்கமானது. அளவில் பெரியதும் பிரவாகித்தலை தன் இயல்பாகக் கொண்டதுமான அது மானுடனுக்கு காலங்காலமாக ‘’உள்ள விரிவு கொள்க’’ என்னும் தன்மையை கூறிக்கொண்டே இருக்கிறது. கங்கையைக் காணும் எவரும் கங்கையின் முன் தங்கள் உள்ளம் விரிவதை உணர முடியும். குளிர்மை நிரம்பிய அந்த நீர்ப்பெருக்கின் முன் ஒவ்வொரு மானுடனும் தன்னை மகவாக உணர்கிறான். ரிஷிகேஷ் எனக்கு மிகவும் விருப்பமான இடம். 

கர்நாடகத்தில் குதிரைமுகே என்னும் வனப்பகுதி உள்ளது. தூய காடு அது. அதுவும் மிக விருப்பமான இடம். 

கே : நீங்கள் செல்லும் இடம் இப்படி இருக்கும் என்று எண்ணிச் செல்வதுண்டா? 

இந்திய நிலம் நோக்கிச் செல்கையில் நாம் எந்த பகுதியை நோக்கிச் செல்கிறோமோ அந்த பகுதியின் இலக்கியங்களை வாசிப்பது என்பது பெரும் அளவில் உதவிகரமானது. இந்திய நிலம் என்பது வடக்கும் தெற்கும் கிழக்கும் மேற்கும் என யாத்ரீகர்களால் தொடர்ந்து பயணிக்கப்பட்டுக் கொண்டே இருந்த நிலம். கம்ப ராமாயணத்தில் ஒரு இடத்தில் கம்பன் கோதாவரியைக் குறித்து கூறும் போது ‘’சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி’’ என்கிறார். கவிதை என்பது ஒன்று பலவாக இருப்பது. கோதாவரி நதி என்ற ஒன்று நதியினும் பெரிய பல கூறுகளாலும் அம்சங்களாலும் ஆன ஒன்று என்பதை அதனைக் காண்பவர்கள் அறிய முடியும். இந்தியாவின் இதிகாசங்களும் காளிதாசனும் இந்திய நிலம் குறித்த சித்திரத்தை அளிக்க வல்லவை. தாரா சங்கர் பானர்ஜி, குர் அதுல் ஐன் ஹைதர், கிரிராஜ் கிஷோர், பைரப்பா, சிவராம் காரந்த், வெங்கடேஷ் மாட்கூல்கர் ஆகிய செவ்வியல் நாவலாசிரியர்களின் நாவல்களை வாசிப்பது அந்த பகுதி குறித்த அருவமான உள சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள உதவும். அவர்கள் எழுதிய நிலம் நோக்கிச் செல்கிறோம் என்னும் உணர்வே அற்புதமானது. அவை நாம் நேரில் காணும் காட்சிகளுடன் இணையும் போது மேலும் சிறப்பான அனுபவமாகும். இது என் அனுபவம். 


கே : ஏன் எழுதுகிறீர்கள் ?

என் எழுத்து எனக்கு எழுதுகிறோம் என்ற நிறைவைத் தருகிறது. அதனால் எழுதுகிறேன். 


கே : வாழ்க்கையில் உங்களை மிகவும் பாதித்த விஷயம் எது ?

உலகின் பல மனிதர்கள் வறுமையின் பிடியில் பீடிக்கப்பட்டு இருப்பது என்னை மிகவும் பாதித்த விஷயம். மானுட குலம் தன் பரிணாமத்தில் அடுத்த படிநிலைக்குச் செல்வது என்பது வறுமை அகற்றப்பட்டால் மட்டுமே நிகழ முடியும். வறுமையை அகற்ற பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 


கே : நீங்கள் செய்ய நினைக்கும் முக்கியமான பல செயல்களில் முதன்மையானது எது ?

செயல் புரியும் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் ஒரு சதவீதப் பரப்பில் மரப்பயிர் சாகுபடி செய்வார்களானால் அவர்களால் 15 ஆண்டுகளில் பொருளியல் தன்னிறைவு பெற முடியும். அவ்வாறு ஒரு கிராமத்தையாவது பொருளியல் தன்னிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பதே நான் செய்ய நினைக்கும் செயல். 

Tuesday 20 June 2023

மரங்களின் உயிர் மதிப்பு

 உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து - திருக்குறள்


செய்நன்றி அறிதல் அதிகாரத்தில் மேற்கூறிய குறள் இடம் பெற்றுள்ளது. உதவியின் மதிப்பு என்பது உதவியின் அளவால் அளவிடப்படக் கூடியது அல்ல ; உதவி செய்யப்பட்டவர்களின் செம்மையான இயல்பைப் பொறுத்து அதற்கேற்ற அளவில் மதிப்பைப் பெறுவது என்பது அதன் பொருள். 

இன்று நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதாவது, உச்சநீதிமன்றம் முன் ஒரு வழக்கு வந்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக பொது இடங்களில் உள்ள மரங்கள் வெட்டப்படும் நிலை வரும் போது அந்த மரங்களின் மதிப்பை எவ்விதம் நிர்ணயம் செய்வது என்னும் கேள்வி எழுகையில் எவ்வகையில் நடந்து கொள்வது என்பதற்கான வழிகாட்டல்களை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இவ்வகை வழிகாட்டலை அளிப்பதற்காக உச்சநீதிமன்றம் முக்கியமான ஆறு துறைகளின் துறைச் செயலாளர்களின் அளவிலான குழுவை அமைத்திருக்கிறது. இது நிகழ்ந்த ஆண்டு 2021. அந்த குழு தனது பரிந்துரைகளை உச்சநீதிமன்றத்துக்கு அளித்துள்ளது. 

அதில் அவர்கள் மரங்கள் வெட்டப்படுகையில் மரங்களின் ‘’டிம்பர் வேல்யூ’’வை மட்டும் கணக்கெடுப்பது என்பது முழுமையானது அல்ல ; அதன் தழைகள் மண்ணுக்கு உரமாகப் பயன்படுகின்றன ; அதன் கிளைகளில் வாழும் உயிரினங்கள் மூலம் மகரந்தசேர்க்கை நிகழ்ந்து பல தாவரங்கள் முளைத்து வளர்கின்றன ; மரம் வளிமண்டலத்துக்கு அளிக்கும் ஆக்சிஜனை அளிக்கிறது ; இவை அத்தனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் ‘’டிம்பர் வேல்யூ’’ மட்டும் கணக்கிடப்படுவது சரியான கணக்கீட்டு முறையாக இருக்காது என அக்குழு கூறியிருக்கிறது. 

ஒரு மரத்தின் வயது 100 எனில் அதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடி என நிர்ணயம் செய்துள்ளது அந்த குழு. ரூ. 74,500 ஐ அடிப்படை மதிப்பாக நிர்ணயித்து மரத்தின் வயது எத்தனையோ அத்தனை மடங்கு அதன் மதிப்பாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ( உதாரணத்துக்கு ஐந்து ஆண்டு வயது கொண்ட மரத்தின் மதிப்பு ரூ. 3,72,500).

இந்த மதிப்பீடு மரங்களுக்கு மிகக் குறைந்த ‘’டிம்பர் வேல்யூ’’ நிர்ணயம் செய்து வெட்டுவதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மேலும் சில வழிகாட்டுதல்களையும் அளித்துள்ளது உச்சநீதிமன்றம். 

14 மரங்கள் விஷயத்திலும், பள்ளி வளாகத்தில் வெட்டப்பட்ட மரம் விவகாரத்திலும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல் பெரிய அளவில் துணை புரியும் என்ற நம்பிக்கையை அடைந்தேன்.  


Sunday 18 June 2023

முதன்மை மானுடன்

 இந்தியர்கள் ராமனை மகனாக சகோதரனாக குடிகளின் பிரியத்துக்குரிய இளவரசனாக குடிகளின் தந்தையாக விளங்கும் அரசனாகக் காண்கிறார்கள். விண்ணுருவன் மண் திகழ்ந்த வடிவம் என்றே அவனை இன்றும் கொண்டாடுகிறார்கள். ராமன் எத்தனை ராமன் என்னும் தீராவியப்பு இன்றும் இருந்து கொண்டே இருக்கிறது. ராமன் எண்ணற்ற வகைகளில் அணுகப்பட்டுக் கொண்டே இருக்கிறான். 

இத்தனை சிறப்புகள் இருந்தும் ராமன் மேலும் மேலும் என பரிமாணம் பெற்று மானுடத்துக்கு வெவ்வேறு வகைகளில் வழிகாட்டுகிறான். மகாத்மா காந்தி உலகில் ‘’ராம ராஜ்யம்’’ அமைய வேண்டும் என விரும்பினார். ராஜ்யத்தின் பிரஜைகளை தனது குழந்தைகளாக எண்ணும் அறத்தை முதன்மையாக முன்னிறுத்தும் அரசாட்சியையே மகாத்மா ‘’ராம ராஜ்யம்’’ என்றார்.  

சமூகங்களின் வாழ்வு மாற்றமடைந்து முன்னேற்றம் காணும் ஒவ்வொரு காலசந்தியிலும் இராமனுடைய வாழ்வு சமூகத்துக்கு ஒவ்வொரு விதத்தில் வழிகாட்டுகிறது. 

இராமன் அரசன் மட்டுமல்ல ; சாதாரண வனவாசியும் தான். தனது வாழ்வில் 14 ஆண்டுகள் ஒரு வனவாசியாக ஒரு சாதாரண பிரஜையாக வாழ்ந்திருக்கிறான். அவ்வாறு ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்த காலத்தில் பெரும் துயர்களை எதிர்கொள்கிறான். எந்த மானுடனுக்கும் மிகக் கடினமான துயர்கள் அவனுக்கு நேர்கின்றன. அவற்றைத் தன் விடாமுயற்சியின் மூலம் தகர்க்கிறான். சொல்லொணாப் பெருந்துயர் அவனைச் சூழ்ந்திருக்கும் நிலையிலும் ஜடாயுவிற்கு ஈமக்கிரியைகளைச் செய்கிறான் ; சுக்ரீவனை அரசனாக்குகிறான். இலங்கையை தகுதி வாய்ந்த வீடணனுக்கு அளிக்கிறான். அவனது வாழ்வின் அரிய நிகழ்வுகளான இவற்றை நிகழ்த்தும் போது அவன் ஒரு சாதாரணக் குடிமகனே. அவ்வகையில் அவனது வாழ்வு சாமானியர்களுக்கு தங்கள் செல்திசையை உணர்த்தக் கூடியது. 

ஜனநாயகம் பிரதானமாக இருக்கும் ஒரு சூழலில் ஜனநாயக நாட்டின் குடிகள் தங்கள் கடமைகளை உணர்வதற்கு இராமனின் வாழ்வு வழிகாட்டக் கூடியது. 

இராமகதை எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அனுமன் இருப்பார் என்பது இந்தியர்களின் தொன்மம். சிரஞ்சீவியான அவர் இராமகதை எவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக மக்களுக்கு வழிகாட்டுகிறது என்பதை வியந்து நோக்கிக் கொண்டிருக்கலாம். 

இணையம் இணையாமை

 கடந்த ஒரு வாரகாலமாக எனது இணைய இணைப்பில் ஏதோ குறைபாடு. இணைப்பு சீராக இல்லை. அவ்வப்போது இணைய சேவை இணைவதும் விலகுவதுமாக இருந்தது. இன்னும் முழுமையாகச் சீரடையவில்லை. ஓரிரு தினங்களில் சீராகக் கூடும். இணைய சேவைக் குறைபாடு காரணமாக பதிவுகள் பதிவேற்ற முடியாத நிலை. 

Monday 12 June 2023

தஞ்சை உணவு தானிய அருங்காட்சியகம்

 இணையத்தில் இந்தியாவில் இருக்கும் அருங்காட்சியகங்கள் குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தஞ்சாவூரில் மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தின் சார்பாக ‘’உணவு தானிய அருங்காட்சியகம்’’ அமைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். இவ்வளவு பக்கத்தில் இருந்து இத்தனை நாள் காணாமல் இருந்திருக்கிறேனே என்று எண்ணம் ஏற்பட்டது. நேற்று தான் செய்தியை வாசித்தேன். இணையத்தில் இந்திய உணவுக் கழகத்தின் இணைய தளத்துக்குச் சென்று பார்த்த போது ஞாயிறு ஒருநாள் மட்டும் விடுமுறை மற்ற ஆறு நாட்களும் அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம் என்ற தகவலைக் கண்டேன். இன்று காலை தஞ்சாவூருக்குப் புறப்பட்டுச் சென்றேன். 

தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உணவு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 2016ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த திரு. ராம் விலாஸ் பாஸ்வான் இந்த அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். 2020ம் ஆண்டு மத்திய அமைச்சர் திரு. பியுஷ் கோயல் அதனைத் திறந்து வைத்துள்ளார். 

பொது யுகத்துக்கு முன்பு 10,000 ஆண்டுகளில் இருந்தே உலகின் பல பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளப்பட முயற்சிகள் நடந்துள்ளதை ஒலி ஒளி காட்சிகள் மூலம் காட்டினர். உணவுப் பொருள் உற்பத்தி என வரும் போது நாட்டின் எல்லைகள் இல்லாமலாகி மண் தானியம் மழை என உலகளாவிய தொடர்பு உருவாவதை உணர முடிந்தது. எனினும் ஒவ்வொரு பிராந்தியத்தில் ஒவ்வொரு வகையான மண் அமைப்பு இருப்பதும் ஒவ்வொரு வகையான பயிர் விளைவதுமே நாட்டின் எல்லைகள் உருவாவதற்குக் காரணம் என்பதையும் சேர்த்தே இந்த விஷயத்தை யோசித்துக் கொண்டேன். பழைய கற்காலத்தில் மனிதர்கள் விவசாயத்துக்குப் பயன்படுத்திய கூரான கற்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உலகெங்கும் பயன்படுத்தப்பட்ட விதவிதமான கலப்பைகளின் மினியேச்சர் மாதிரிகள் காட்சிக்கு இருந்தன. 

உணவுப் பொருளைச் சேமித்து வைக்க மனிதர்கள் பத்தாயிரம் ஆண்டுகளாக எவ்விதமான கட்டுமானங்களை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதன் ஓவியங்கள் இருந்தன. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் மிகப் பெரிய மாற்றங்கள் இல்லை என்பதை கவனித்த போது ஆச்சர்யம் அளித்தது. சோழர் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீரங்கம் ஆலயத்தில் கட்டப்பட்ட குதிர்களும் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பாபநாசம் பாலைவனநாத சுவாமி கோவிலில் கட்டப்பட்ட குதிரும் ஓவியங்களாக இடம் பெற்றிருந்தது. 

உலகின் ஒவ்வொரு நாட்டில் என்னென்ன தானியங்கள் விளைகிறது என்பதை தொடுதிரை மூலம் அறியும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. 

அருங்காட்சியகத்தைக் கண்டதன் மூலம் நாம் எத்தனை அறிந்திருக்கும் என சோதிக்கும் விதமாக கணிணித் திரையில் ஒரு வினாடி வினா நிகழ்ச்சி இருந்தது. நான் அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். கணிசமான விடைகள் சரியாக இருந்தன. 

செயல் புரியும் கிராமத்தில் இருக்கும் பள்ளிக் குழந்தகளை அழைத்து வந்து இந்த அருங்காட்சியகத்தை அவர்களுக்குக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 


 

Sunday 11 June 2023

நிழல் அமர்வுகள்

 ஊரில் ஒரு இடம் இருக்கிறது. அதாவது அந்த இடம் பிரதான சாலையொன்றின் அருகே அமைந்துள்ளது. அந்த பிரதான சாலையையொட்டி 10 அடி அகலம் கொண்ட சிறு கால்வாய் அமைந்திருக்கும். அதன் கரையில் ஒரு வினாயகர் கோவில். அந்த கோவிலின் முன்னால் இரண்டு அரசமரங்களும் ஒரு வேப்ப மரமும் உண்டு. கால்வாய்க்கு அப்பால் பிரதான சாலையையொட்டி இரு மருத மரங்கள் இருக்கும். இந்த ஐந்து மரங்களின் நிழலும் நெடுஞ்சாலை தொடங்கி கால்வாய் வினாயகர் கோவில் வரை நீண்டிருக்கும். ஐந்து மரங்களும் நாற்பது அடிக்கு மேல் உயரம் கொண்டவை என்பதால் அவற்றின் நிழல் பரப்பு மிகப் பெரியதாய் அமைந்திருக்கும். வினாயகர் கோவிலின் முன்னால் சிமெண்ட் பெஞ்சுகள் அமைத்திருக்கிறார்கள் அந்த பகுதியில் குடியிருப்பவர்கள். சாமி கும்பிட வருபவர்கள் சாமி கும்பிட்டு விட்டு அந்த பெஞ்சில் அமர்ந்திருப்பார்கள். அந்த இடத்துக்குச் சென்றாலே மனம் புத்துணர்ச்சி கொள்ளும். நண்பர்களுடன் மனம் விட்டு உரையாட அங்கு அழைத்துச் செல்வேன். மர நிழலும் மரங்களில் வசிக்கும் புள்கள் எழுப்பும் ஒலியும் அகத்தை நினைவுகளை இனிமை கொள்ளச் செய்யும். இதே போல மரங்களின் நிழல்களில் நிறைய இருக்கைகள் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றாக அமர்ந்து யோசிப்பதால் நிறைய விஷயங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும். 

Wednesday 7 June 2023

ஜீவநதி

 தென்னாற்காடு மாவட்டம் பண்ணுருட்டிக்கு அருகில் உள்ள எனது நண்பர் ஒருவரைச் சந்திக்க இன்று சென்றிருந்தேன். நண்பர் என்றால் மிகப் பல வருடங்களாக எனது நண்பர். நாங்கள் சந்தித்துக் கொள்வதற்கும் பேசிக் கொள்வதற்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அவரிடம் தொலைபேசியோ அலைபேசியோ இல்லை. சந்திக்க வேண்டும் என்றால் நேராக அவருடைய வீட்டுக்குச் சென்றால்தான் உண்டு. விவசாயியான அவர் கடுமையான உழைப்பாளி. வீடு வயல் மாடுகள் என இருப்பவர். சந்தித்து ரொம்ப ஆண்டுகள் ஆகிவிட்டதால் இன்று காலை செல்வது என முடிவு செய்தேன். 

பைக்கில் செல்லலாம் ; ஆனால் பைக்கை விட அவரைப் பேருந்தில் சென்று சந்திப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. காலை எழுந்து குளித்து விட்டு கிளம்பினேன். இன்று சற்று முன் நேரத்திலேயே காலை உணவு தயாராக இருந்தது. உணவருந்தி விட்டு பேருந்து நிலையத்துக்கு நடக்கத் தொடங்கினேன். வீட்டிலிருந்து பேருந்து நிலையம் 2.25 கி.மீ தூரம் இருக்கும். மெல்ல நடந்து கொண்டிருந்தேன். இவ்வாறு பேருந்து நிலையத்துக்கு நடந்து செல்வது என்னை ‘’பொதுஜனம்’’ என உணர வைக்கும். பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்று பேருந்தில் ஏறிச் சென்று தங்கள் பணிகளை ஆற்றும் ஆயிரக்கணக்கான பொதுஜனங்களில் நானும் ஒருவன் என்ற எண்ணம் என் மனதில் எப்போதும் இருக்க வேண்டும் என எண்ணிக் கொள்வேன். இதைப் போன்ற எண்ணங்களும் செயல்களும் குறியீட்டு ரீதியிலானவை தான். நான் தினமும் பேருந்தில் செல்பவன் அல்ல. எப்போதாவது ஒருநாள் செல்பவனே. பெரும்பாலும் 40 கி.மீ சுற்றளவுக்குள் செல்ல பைக்கை பயன்படுத்துபவனே. எனினும் பேருந்தில் செல்லவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வேன். கல்லூரியில் படித்த போது ரயிலிலும் பேருந்திலும் தினமும் சென்று வந்த அனுபவம் உண்டு. ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தவாறு மக்கள் திரளை கவனித்தவாறே இருக்கும் பழக்கம் சின்ன வயதிலிருந்தே உண்டு. 1.75 கி.மீ தூரம் சென்றதும் எனது நண்பர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் என்னருகே வந்தார் ; பேருந்து நிலையம் செல்கிறேன் என்று சொன்னதும் ‘’டிராப்’’ செய்கிறேன் என்றார். முதலில் ஒரு ஸ்வீட் கடைக்கு செல்லச் சொன்னேன். நண்பருக்கு இனிப்புகள் வாங்கிச் செல்லலாம் என எண்ணினேன். மணிக்கூண்டுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றோம். கடை மூடியிருந்தது. நண்பர் கடை திறக்க 9 மணி ஆகி விடும் என்றார். எனவே ஸ்வீட் வாங்காமல் பேருந்து நிலையம் சென்றோம். 

சிதம்பரம் பேருந்து தயாராக இருந்தது. ஏறி அமர்ந்து கொண்டேன். பத்து நிமிடம் கழித்து வண்டி எடுத்தார்கள். மெல்ல வண்டி போய்க் கொண்டிருந்தது. 15 கி.மீ ல் இருக்கும் வைத்தீஸ்வரன் கோவில் தாண்டுவதற்குள் இரண்டு பிரைவேட் பேருந்துகள் எங்கள் வண்டியை தாண்டிச் சென்று விட்டது. எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவர் சிதம்பரம் சென்று அங்கிருந்து இன்னொரு பேருந்து மாறி பணிக்குச் செல்ல வேண்டியவர். மிகுந்த அதிருப்தியுடன் இருந்தார். இரு பேருந்துகள் முந்தித் சென்றதால் நன்மையா இடரா என அறிய பிரபஞ்சம் இயங்கும் விதிகளை முழுமையாகத் தெரிந்து கொண்டால்தான் இயலும் என நான் மனதுக்குள் எண்ணிக் கொண்டேன். பிரபஞ்ச விதிகள் தோல்பாவைக் கூத்து, பொம்மலாட்டத்தில் இருக்கும் கயிறுகள் போல இருக்குமா என்ற திசையில் எனது யோசனை சென்றது. 

பழைய தென்னாற்காடு மாவட்டம் மிகப் பெரிய மாவட்டம். அந்த மாவட்டத்தின் சிதம்பரம் , காட்டுமன்னார்குடி வட்டங்கள் வீராணம் ஏரி பாசனம் பெறுபவை. எனவே அந்த இரண்டு தாலுக்காக்களின் மக்கள் பழக்க வழக்கங்கள் காவிரி டெல்டாவைப் போல இருக்கும். மற்ற தாலுக்காக்கள் முற்றிலும் வேறு பின்னணி கொண்டவை. 

சிதம்பரம் சென்றதும் ஒரு பிரைவேட் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். அந்த வண்டி வழக்கமான பாதையாக இல்லாமல் ஒரு புதிய பாதையில் சிறு சிறு கிராமங்கள் வழியாக பண்ணுருட்டி சென்றது. செல்லும் வழியில் ஒரு கிராமத்தில் பத்து நிமிடம் வண்டி நின்றது. வண்டி டிரைவருக்கு உணவு கொண்டு வந்து கேரியரில் கொடுத்து விட்டு செல்கிறார்கள். இன்று ஏதோ தவிர்க்க இயலாத காரணத்தால் பத்து நிமிடம் உணவு தயாரிப்பதில் தாமதம் என கொண்டு வந்தவர் டிரைவரிடம் சொல்லி விட்டு போனார். வண்டி நின்ற சமயத்தில் இறங்கி அங்கிருந்த சிறு கடைத்தெருவில் ஒரு மூதாட்டி வைத்திருந்த மாம்பழத்தில் ஒரு கிலோ வாங்கிக் கொண்டேன். இரண்டு மாம்பழங்கள் இருந்தன. பொதுவாக எனக்கு இந்த மாதிரி விஷயங்களில் பழக்கம் கிடையாது. ஆனால் ஸ்வீட் வாங்கிச் செல்வதை விட மாம்பழம் வாங்கியது நிறைவளித்தது. ஒரு விவசாயிக்கும் ஒரு சிறு வணிகருக்கும் வாய்ப்பு தருகிறோம் என்ற நிறைவு. உண்மையில் கையில் ஒரு சிறு துணிப்பை கொண்டு சென்றிருந்தேன். மடித்து பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தேன். மாம்பழம் அதில் வாங்கியதும் மேலும் இருபது ரூபாய்க்கு வெள்ளரிப் பிஞ்சு வாங்கி பையில் போட்டுக் கொண்டேன். என் கையில் துணிப்பை இருப்பதைக் கண்டு அந்த வணிகர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை மேலும் சில பிஞ்சுகளை அளித்தார். 

ஒரு காலத்தில் தென்னாற்காடு மாவட்ட பஸ் டிரைவர்கள் வாகனத்தை மிக வேகமாக இயக்குவதற்கு பெயர் போனவர்கள். தமிழ்நாட்டு அரசுப் பேருந்துகளில் தென்னாற்காடு ஓட்டுநர்களுக்கு என ஒரு சிறப்புப் பெயர் உண்டு. இப்போது முக்கிய சாலைகள் மேம்பட்டிருப்பதால் எல்லா பேருந்துகளும் ஏறக்குறைய ஒரே விதமாக செல்கின்றன. காத்திருந்த பத்து நிமிடத்தை தனது வேகத்தில் சரி செய்து பண்ணுருட்டி கொண்டு சேர்த்தார். 

அங்கிருந்து ஒரு அரசுப் பேருந்தில் ஏறி சில கி.மீ தூரத்தில் இருந்த அவரது கிராமத்துக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் மிகவும் மகிழ்ந்தார். அவருடைய குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ந்தார்கள். 

உண்மையில் எனக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒருவரை பத்து ஆண்டுகள் கழித்து சந்தித்தால் கூட கடைசியாக நேற்று சந்தித்தது போல உரையாடிக் கொண்டிருப்பேன். அன்பும் பிரியமும் உணர்வுகள். அவை அடிக்கடி சந்தித்தாலும் எப்போதாவது சந்தித்தாலும் எனக்கு ஒரே விதமாகவே இருக்கும். 

என்னுடைய மோட்டார்சைக்கிள் பயணம் குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கிறார். அவருக்கும் எனக்கும் பொது நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். நான் அவரிடம் என பயண அனுபவங்கள் சிலவற்றை சொன்னேன். அவர் ஆர்வத்துடன் விருப்பமாகக் கேட்டுக் கொண்டார். பருவமழைக்கும் இந்திய விவசாயத்துக்கும் இடையேயான தொடர்பு குறித்து எனது பயணத்தின் அனுபவங்களின் அடிப்படையில் சொல்லிக் கொண்டிருந்தேன். 

பின்னர் ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ந்தார். தனது கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு 2000 தேக்கு மரக் கன்றுகள் வழங்க முடியுமா என்று கேட்டார். அவர் அவ்விதம் கேட்டது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. பருவமழையை ஒட்டி அளிக்க முயல்கிறேன் என உறுதி அளித்தேன். 

குறுகிய நேரத்தில் மதிய உணவு தயார் செய்திருந்தார்கள். மாங்காய் சாம்பார், தக்காளி ரசம், மோர். தொடுகறியாக வத்தல் , மோர்மிளகாய். சாப்பிட்டு விட்டு பயணங்கள் குறித்து பேசிக் கொண்டோம். நடைப் பயணங்கள், மோட்டார் சைக்கிள் பயணங்கள், ரயில் பயணங்கள் என அனைத்துக் குறித்தும் பேச்சு வந்தது. நீண்ட நடைப்பயணம் ஒன்றை மேற்கொள்ள விரும்புவதாகக் கூறினேன். நாளும் பொழுதும் அமைய வேண்டும். 

நான்கு மணி நேரம் அங்கு இருந்திருப்பேன். மதியம் 3.30 மணி அளவில் புறப்பட்டேன். நண்பர் தனது வாகனத்தில் கொண்டு வந்து பண்ணுருட்டியில் டிராப் செய்தார். ஒரு டவுன் பேருந்தில் ஏறி சிதம்பரம் வந்தேன். அந்த வாகனத்தில் ஓட்டுநர் டவுன் பேருந்தை இயக்குவதில் ஏற்படும் நஷ்டங்கள் குறித்து தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார். சிதம்பரத்திலிருந்து ஒரு பிரைவேட் பஸ். பேருந்து ஊரை நெருங்குகையில் நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து என்னை ‘’பிக் அப்’’ செய்யுமாறு சொன்னேன். நண்பர் வந்து அழைத்துச் சென்றார்.

மக்கட் பெருகடல் பார்த்து மகிழ்ச்சி கொள் ; மானுட சமுத்திரம் நானென்று கூவு என்கிறான் ஒரு கவிஞன். 

Friday 2 June 2023

நிதிப் பரவல்

 இன்று காலை எனது நண்பர் ஒருவரைக் காணச் சென்றிருந்தேன். இயற்கை விவசாயத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர். பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது அவரிடம். நெல் விவசாயம் மட்டும் செய்து வந்தார். எனக்கு அவர் அறிமுகமானது 7 ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது தான் அவர் இயற்கை விவசாயத்தில் பயிற்சி எடுத்திருந்தார். முதல் முறை அவரைச் சந்தித்த போதே நான் அவரிடம் மரப்பயிருக்கு மாறுங்கள் என்று சொன்னது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் விவசாயம் என்றாலே நெல் விவசாயம் தான் என்ற எண்ணத்தில் இருந்தார். பின்னர் பலமுறை நாங்கள் விவாதித்திருக்கிறோம். 

3 ஏக்கரில் தேக்கு பயிரிட்டிருக்கும் நண்பரின் வயல் இயற்கை விவசாயியின் கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இன்று நான் அவரைச் சந்திக்கச் சென்ற போது நெல் விவசாயத்திலிருந்து மரப்பயிருக்கு மாற இருப்பதாகத் தெரிவித்தார். அவருடைய வயலில் ஜே.சி.பி எந்திரம் வேலை செய்து கொண்டிருந்தது. நன்செய் வயலை புன்செய் வயலாக மேடாக்கிக் கொண்டிருந்தார். 

திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்று கேட்டேன். எனது நண்பரான ஐ.டி ஊழியரின் வயலில் தேக்கு நன்றாக வளர்ந்திருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறார். அந்த வயலில் வேலை செய்ப்வர்கள் இவருடைய வயலிலும் வேலைக்கு வந்திருக்கிறார்கள். அப்போது தற்செயலாக ஐ.டி நிறுவன ஊழியரின் வயலில் தேக்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு நன்றாக வளர்வதைக் குறித்து கூறியிருக்கிறார்கள். அந்த வயலைச் சென்று பார்த்தீர்களா என்று கேட்டேன். இல்லை என்றார். அவரை அழைத்துக் கொண்டு சென்று தேக்கு வயலைக் காட்டினேன். 

மரக்கன்றுகள் வைத்து ஓராண்டு ஆகிறது. அனைத்துமே 13 அடி உய்ரம் வரை சென்று விட்டன. இரண்டு வாரங்கள் முன்பு நான் வந்திருந்தேன். அதன் பின் இப்போது தான் வருகிறேன். இந்த 15 நாளிலேயே ‘’நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமான’’ வளர்ச்சி. நண்பர் மிகவும் ஆச்சர்யப்பட்டார். தன்னிடம் 7 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த ஆலோசனை என்னால் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். 

திரும்பி வரும் வழியில் ஒருவரைச் சாலையில் சந்தித்தோம். அவரது வயலில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. அதனை மேற்பார்வையிட வந்திருந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தேக்கு வயலைக் காண வந்ததாக நண்பர் கூறினார். அந்த விவசாயி தானும் இந்த ஆண்டு தனது நிலத்தை தேக்கு வயலாக மாற்ற இருப்பதாகக் கூறினார். ஐ டி நிறுவன ஊழியரின் தேக்கு வயலே தான் இந்த முடிவுக்கு வரக் காரணம் என்றார் அந்த விவசாயி.