Tuesday 30 November 2021

நிறை

மாலை அந்தி
நீர் சூல் கொண்ட மேகங்கள்
நிறைந்திருக்கும்
மழைக்காலம்
இரண்டிரண்டு மேகங்கள் இடையே
பளிச்சென சில விண்மீன்கள்
மழைக்காலத்தில் சீக்கிரமாய் வந்துவிடும்
இருள்
ததும்பிக் கொண்டிருக்கிறது
தனியே நிற்கிறது
கிராமத்துச் சாலை 
ஏகாந்தமான அந்த இடத்தில்
ஏகாந்தமான அந்த பொழுதில்
ஏகாந்தமான அந்த கணத்தில்
நிறைகின்றன
உனது நினைவுகள்

Monday 29 November 2021

நன்றி


சமூக வாழ்க்கை என்பது கூட்டு வாழ்க்கையே. உயிர்கள் அனைத்தையும் சமமாகக் காண்பது என்பதே இந்தியப் பண்பாடு உலகுக்கு அளித்த கொடை. மேலான சக வாழ்வை நோக்கி நகர்வதே மானுட விடுதலையாக இருக்க முடியும். 

மயிலாடுதுறை அருகில் உள்ள கிராமம் ஒன்றில் நவம்பர் 12 தொடங்கி ஆறு நாட்கள் நண்பர்களின் ஆதரவால் தினமும் 500 பேருக்கு உணவளித்தோம். இது முற்றிலும் நண்பர்களால் மட்டுமே சாத்தியமானது. அவர்களின் உணர்வு மகத்தானது. சொந்த நிதி அளித்ததோடு தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் இந்த செயல் குறித்து கொண்டு சென்று அவர்களையும் இதில் பங்கு பெறச் செய்தார்கள். தினமும் நிகழும் நிகழ்வுகளை ஆர்வத்துடன் கேட்டறிந்தார்கள் ; ஊக்கம் அளித்தார்கள்; செயல்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் எப்போதும் உடனிருப்போம் என்றார்கள்.  அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தியாவின் சாமானிய மக்களுக்கு சக மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் விருப்பமும் பெரிய அளவில் இருக்கிறது. சமூகச் செயல்பாட்டாளனாக நாளும் நான் உணரும் விஷயம் இது. சக மனிதனை அவன் இருக்கும் இடத்தில் சந்தித்தோம் என்றால் அவனை நம்மால் மேலும் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஆறு நாட்களும் சமையல் செய்து கொடுத்த சமையல்காரர்கள் மிகச் சுவையான உணவை சமைத்து நேரத்துக்கு அளித்தார்கள். அவர்களுக்கு நன்றி. சமையல் என்னும் கலையின் ஆரம்ப பாடத்தினை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன்.  

ஊர் மக்கள் தங்கள் அன்பாலும் பிரியத்தாலும் இதயத்தை நிறையச் செய்தார்கள். அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். 

‘’காவிரி போற்றுதும்’’ நுண் செயல்பாடுகளாக தமது பணிகளை முன்னெடுக்கிறது. நுண் அளவில் விஷயங்களைத் திட்டமிடுதலும் செயல்படுத்தலுமே அதன் வழிமுறைகள். ஒரு தீபச் சுடர் ஒரு அறையின் இருளை சில கணங்களில் நீக்குவது போன்ற எளிய முறைகள் நம் செயல்முறைகள். நம்மிடம் எப்போதும் செய்வதெற்கென பணிகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. 
 

மழைநீர்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

-திருக்குறள், வான் சிறப்பு

{பெருங்கடலும் நீர் இன்றி வற்றிப் போகும்; வான் மேகம் மழையைப் பொழியவில்லை எனில். }

என்னுடைய தொழில் சார்ந்து நான் எழுதிய பதிவுகள் வாசகர்கள் பலரால் மிக ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டன. பலர் தங்கள் மகிழ்ச்சியை மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி உரையாடலிலும் தெரிவித்தனர்.  என்னுடைய கல்லூரிப் படிப்பு முடிந்த பின்னர் கட்டிடத் துறையில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற தீரா விருப்பம் எனக்கு இருந்தது. 

அப்போது நான் பல விஷயங்களை யோசித்திருக்கிறேன். நான் கல்லூரி முடித்த அதே ஆண்டில் அக்டோபர் நவம்பர் ஆகிய மாதங்களின் ‘’தி இந்து’’ நாளிதழை சேகரித்து வைத்தேன். அதில் காலநிலை குறித்த பக்கத்தில் இந்தியாவின் முக்கிய மாநகரங்களிலும் நகரங்களிலும் அன்றன்றைய மழைப்பொழிவு எவ்வள்வு என்ற விபரம் அளிக்கப்பட்டிருக்கும். அதில் நாகப்பட்டினமும் உண்டு. அக்டோபர் ஒன்றாம் தேதி நாகப்பட்டினத்தில் மழை எவ்வளவு அடுத்த நாள் எவ்வளவு என ஒவ்வொரு நாளுக்கும் அட்டவணை போட்டுக் கொண்டேன். 1000 சதுர அடி கொண்ட வீட்டின் மாடியில் இத்தனை செ.மீ மழைக்கு எவ்வளவு மழைநீர் சேகரமாகும் என்று கணக்கிட்டேன். ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்று கணக்கீடு காண்பித்தது. மழைநீரை பூமியில் செலுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து ஒரு கவனம் அப்போது உருவாகி வந்தது. நான் மழைநீரை சேகரிக்கும் விதமாக பெரிய அளவிலான நீர்த்தேக்கத் தொட்டிகளை ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கும் வகையில் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த எண்ணத்தின் நீட்சியாக வீடுகளின் தரைத்தளத்திலோ அல்லது மாடியிலோ 10 அடி நீளம் 10 அடி அகலம் 10 அடி உயரம் கொண்ட ஒரு அறையை நீர்த்தொட்டியாக மாற்றி ஆண்டு முழுதுக்கும் தேவைப்படும் தண்ணீரை அதில் சேர்த்து வைப்பதன் சாத்தியங்கள் குறித்து பரிசீலித்தேன்.

பின்னாட்களில், தமிழ்நாட்டின் வறட்சி மிக்க மாவட்டங்களில் சிலர் வீட்டில் தரைத்தளத்திலோ முதல் தளத்திலோ 10 அடிக்கு 10 அடி அளவுள்ள 10 அடி உய்ரம் கொண்ட  ஒரு அறையை ஜன்னல்கள் இல்லாமல் கட்டி பெரிய தண்ணீர் தொட்டியாகப் பயன்படுத்துவதை அறிய நேரிட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. 100 சதுர அடி கொண்ட அறையில் 30,000 லிட்டர் தண்ணீரை சேகரித்து வைக்க முடியும். பருவ மழை மற்றும் கோடை மழை மூலம் வருடத்தில் மூன்றில் ஒரு பங்கு நாட்களுக்கான தண்ணீர் தேவையை நிலத்தடி நீர் இல்லாமலே அடைய முடியும்.  தேவையே கண்டுபிடிப்பின் தாய்  என்று சொல்வார்கள். 

சமீபத்தில், ஒரு காலிமனையில் கட்ட இருக்கும் கட்டிடம் ஒன்றில் தரைத்தளத்தில் பாரம்பர்யமான முறையில் ஒரு கிணறு வெட்டி அக்கட்டிடத்தில் மாடியில் சேகரமாகும் மொத்த மழைநீரையும் அந்த கிணற்றில் கொண்டு சேர்க்கும் விதத்தில் திட்டமிட்டு அதற்கு அந்த கட்டிட உரிமையாளரின் இசைவைப் பெற்றுள்ளேன். 

Saturday 27 November 2021

மரபு

தமிழ் நாட்டில் மரபான தமிழ்க்கல்வி என்பது ஆறு அல்லது ஏழு வயதில் துவங்கியிருக்கிறது. இலக்கிய இலக்கண நூல்களை மனப்பாடம் செய்ய வேண்டும். ஆசிரியர் அந்நூல்களின் செய்யுள்களை பதம் பிரித்து சொல்லும் பாடத்தைக் கேட்டுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விதம் கற்க வேண்டும்.  இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேதங்கள் இவ்வாறே பயிலப்பட்டு வந்தன. சொல் என்னும் விதை மனம் என்னும் நிலத்தில் ஊன்றப்பட்டு முளைத்தெழும் வகையிலான கல்வி முறை அது.  வேதம் எழுதாக் கிளவியாக பல தலைமுறைகளுக்கு அளிக்கப்பட்டதும் அவ்வாறே. வேத பாடசாலைகளின் வடிவத்திலேயே மரபான தமிழ்க்கல்வியும் நிகழ்ந்திருக்கிறது. நடைமுறைக் கணிதமும் இங்கே மனப்பாடமாக இருந்திருக்கிறது. 

மரபான தமிழ்க்கல்வி இன்று மிக எளிய வடிவத்திலாவது ஏதேனும் ஒரு விதத்தில் தொடர வேண்டும். தமிழின் மிக முக்கியத் தேவை இது. 

Friday 26 November 2021

வாசகர்

இன்று அமெரிக்காவிலிருந்து ஒரு வாசகர் பேசினார். என்னுடைய வலைப்பூவை தொடர்ந்து வாசிக்கக் கூடியவர். ‘’காவிரி போற்றுதும்’’ முன்னெடுக்கும் செயல்பாடுகள் குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். ‘’காவிரி போற்றுதும்’’ மக்கள் ஒருங்கிணைப்பை உருவாக்குவதை தனது பணிப் பாணியாகக் கொண்டது. எனவே அதன் செயல்பாடுகளின் வெற்றி முழுக்க முழுக்க  மக்களையே சாரும். எனவே பணி குறித்த எல்லா நற்சொற்களையும் வான் நோக்கி ‘’ ராம் கிருஷ்ண ஹரி’’ என்று சொல்லி இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறேன்.  

வலைப்பூவில் எழுதிய ‘’யானை பிழைத்தவேல்’’ தொடரை தொடர்ந்து வாசித்திருக்கிறார்.  அதன் பின் தினம் மூன்று கம்ப ராமாயணப் பாடலை வாசித்து அவற்றை அவர் திறக்கும் விதத்தை விரிவாக எழுதி வைத்திருக்கிறேன் என்று சொன்னார். அவற்றை எனக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன். கம்பன் கவி குறித்து சொல்வதற்கு அவருக்கு நூறு நூறு சொற்கள் இருக்கின்றன. கடந்த ஓராண்டாக கம்பனைத் தொடர்ந்து வாசிப்பதால் அவருக்குள் ஏற்பட்ட பல நுண் உணர்வுகளைத் தெரிவித்தார். அமெரிக்காவின் பூங்காக்களில் மலர்ந்திருக்கும் மலர்களைக் காண கம்பன் மேலும் இரண்டு கண்களை அளித்து விட்டதாக சொன்னார். 

பால், காஃபி , தேனீர் தவிர்த்திருப்பது குறித்து எழுதிய பதிவை வாசித்து விட்டு அதன் பாதிப்பில் அவரும் அவற்றைத் தவிர்த்து விட்டு இப்போது ‘’பிளாக் டீ’’ மட்டும் அருந்துவதாகச் சொன்னார். எனக்கு ஒரு ஜென் கவிதை நினைவில் வந்தது. அதனை அவரிடம் சொன்னேன். 

தேனீர் என்பது இவ்வளவுதான்
முதலில் தண்ணீரைக் கொதிக்க விடு
பிறகு தேயிலைப் போட்டுக் கலக்கு
பிறகு உரிய விதத்தில் அருந்து
இது தெரிந்தால்
போதும் உனக்கு

Thursday 25 November 2021

நர்மதை நதி வலம்

 
நூல் : நர்மதை நதி வலம்     ஆசிரியர் : கே. கே. வெங்கட்ராமன்    தமிழாக்கம் :    C. வரதராஜன்    வெளியீடு : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் , மயிலாப்பூர் , சென்னை-4 விலை : ரூ. 40/-

புராணத்தில் ஒரு கதை உள்ளது. புண்ணிய நதிகள் அனைத்தும் வான் உலகில் இருந்தன. அப்போது சிவபெருமான்  அந்நதிகளிடம் புவியில் வாழும் மனிதர்களை உய்விக்க அங்கு செல்ல எவருக்கு விருப்பம் உள்ளது என்று வினவுகிறார். நர்மதை தான் முதலில் பூமிக்குச் செல்வதாகக் கூறி பூமியை வந்தடைகிறாள். அன்றிலிருந்து நர்மதை சிவனுக்கு மிகவும் பிரியம் கொண்ட நதியாகிறாள். சிவனின் ஜடாமுடியில் வசிக்கும் கங்கையே ஆண்டுக்கு ஒருமுறை காராம் பசு உருவெடுத்து நர்மதையில் புனித நீராடிச் செல்கிறாள். 

நர்மதை நதிக்கரையில் மிக அதிக எண்ணிக்கையில் சிவாலயங்கள் உள்ளன. வட இந்தியாவில் ’’நர்மதா பரிக்ரமா’’ என்னும் நதி வலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோரால் மேற்கொள்ளப்படுகிறது. நர்மதை நதி உற்பத்தி ஆகும் அமர்கண்டக்கில் தொடங்கி நதி நம் வலப்பக்கமாக வர மேற்கு நோக்கி நதி கடலில் சங்கமம் ஆகும் சங்கமஸ்தானம் வரை நடந்து செல்ல வேண்டும். அங்கே நர்மதையை படகின் மூலம் கடந்து நதிக்கு வடதிசைக்குச் சென்று நர்மதையின் உற்பத்திஸ்தானமான அமர்கண்டக் வரை நடந்து செல்ல வேண்டும். நர்மதை ஆற்றின் நீளம் 1200 கி.மீ. இந்த நதி வலம் 2400 கி.மீ நீளம் கொண்டது. 

இந்த பயணத்துக்கென்று தனிப்பட்ட விதிகள் உள்ளன. 

1. நர்மதை நதி வலம் செல்பவர்கள் கையில் காசோ பணமோ வைத்துக் கொள்ளக் கூடாது. 

2. நதி வலத்தின் போது பிச்சையெடுத்துத்தான் உணவருந்த வேண்டும். ஒருவரிடம் பிச்சை கேட்டு அவர் மறுத்தால் மேலும் இருவரிடம் மட்டும்தான் பிச்சை கேட்க வேண்டும். மூவரும் மறுத்து விட்டால் அன்றைய உணவைத் துறந்து விட வேண்டும். 

3. நதி வலத்தின் போது காலில் காலணி அணியக் கூடாது. வெறும் காலுடனே நடக்க வேண்டும். 

4. நினைவில் நர்மதை அன்னையை மட்டுமே இருத்தி பயணம் மேற்கொள்ள வேண்டும். 

மேலும் சில விதிகளும் உண்டு. 

இந்திய ராணுவத்தில் பணி புரிந்த கேப்டனாகப் பணி புரிந்த திரு. கே.கே. வெங்கட்ராமன் அவர்கள் இந்த 2500 கி.மீக்கும் அதிகமான நடைப்பயணத்தை தனியாக மேற்கொள்கிறார். துவங்கிய தினத்திலிருந்து நான்கு மாதம் பத்து நாட்களில் பயணத்தை நிறைவு செய்கிறார். அந்த பயணத்தில் அவர் அறிந்த உணர்ந்த கேட்ட அடைந்த அனுபவங்களை ‘’நர்மதை நதி வலம்’’ என நூலாக எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

திரு. வெங்கட்ராமன் அவர்கள் ஐயப்ப பக்தர். ஆண்டுதோறும் சபரிமலைக்குச் செல்பவர். ஐயப்ப ஸ்தோத்திரத்தைச் சொன்னவாறே நர்மதை நதி வலத்தையும் மேற்கொள்கிறார். அவரது பயணப்பையில் சபரிமலை சாஸ்தாவின் படம் இருக்கிறது. 

ஆரம்ப சில நாட்களில் பிச்சை கேட்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. எனினும் நர்மதை நதிக்கரையில் வசிக்கும் மக்கள் நதி வலம் மேற்கொள்பவர்கள் மேல் காட்டும் அன்பையும் பிரியத்தையும் மரியாதையையும் காணும் போது அவர் மனம் காணும் அனைவரையும் தம் உறவாக எண்ண வைத்து விடுகிறது. 

ஒரு நாளைக்கு சராசரியாக 20 கி.மீ நடந்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருப்பதால் காலை 5 மணிக்கு எழுந்ததுமே நடக்கத் தொடங்கி விடுகிறார். நதியின் கரையிலேயே நடக்க வேண்டும். காலை 11 மணிக்குள் 10 கி. மீ தூரம் நடந்து அங்கே உள்ள கிராமத்தில் நர்மதை நதியில் குளித்து விட்டு பிச்சை கேட்டு பிச்சை அளிப்பவர் அளிக்கும் உணவை ஏற்று சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மதியம் 1 மணி அளவில் மீண்டும் கிளம்பி மேலும் 10 கி.மீ தூரம் சென்று அங்கே உள்ள கிராமத்தில் இரவு தங்கி விடுகிறார். 

தனிப்பயணி என்பதால் கிராம மக்கள் இவரைச் சூழ்ந்து கொண்டு நதி வல அனுபவங்களைக் கேட்கின்றனர். இராமாயண மகாபாரதக் கதைகள் குறித்து பேசுகிறார்கள். அந்த கிராம மக்களுக்கு வேதாந்த விஷயங்களில் கூட ஈடுபாடு இருப்பதைப் பதிவு செய்கிறார். 

100 கி.மீ க்கு பயணத்தில் வனப்பாதை இருக்கிறது. அங்கே இருக்கும் வனவாசிகள் பரிக்ரமா செல்பவர்களிடம் இருக்கும் தங்களுக்குத் தேவையான பொருட்களை மிரட்டி வாங்கிக் கொள்வது உண்டு. அவர்கள் பெண்களுக்கு எந்த தொந்தரவும் செய்ய மாட்டார்கள். ஆனால் ஆண்களிடம் அவர்கள் வேட்டியைக் கூட பிடுங்கி விடுவார்கள். வனப்பாதை துவங்கும் இடத்தில் ஒரு அற நிறுவனம் பரிக்ரமாவாசிகளுக்கு சாக்குப் பையை அளிக்கிறது. வனவாசிகளுக்கு சாக்குப்பை தேவைப்படாது. வேட்டியை இழந்தவர்கள் இந்த சாக்குப்பையை கட்டிக் கொள்ள வேண்டும். நூலாசிரியர் இந்த வனப்பாதையை பரிக்கிரமா செல்லும் ஒரு குழுவுடனே கடக்கிறார். அந்த குழுவில் இருக்கும் மற்ற உறுப்பினர்களிடம் வேட்டியைப் பறித்துக் கொள்ளும் வனவாசிகள் இவரை விட்டு விடுகிறார்கள். இவரிடமிருந்து தீப்பெட்டியையும் பிளேடையும் மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். 

ஒரு கிராமத்தில் பெரியவர் ஒருவரிடம் பிச்சை கேட்கிறார் நூலாசிரியர். அவர் ஒரு மளிகைக்கடைக்காரர். கடை வாசலில் ஒரு பெஞ்ச் இருக்கிறது. ஆனால் தரையைச் சுட்டிக் காட்டி அங்கே அமர் என ஆணையிடுகிறார். சினம் தவிர்க்க வேண்டும் என்ற நதி வல நெறியை மேற்கொள்வதால் அமைதி காக்கிறார் திரு. வெங்கட்ராமன். உணவு சமைத்துக் கொள்ளத் தேவையான மளிகைப் பொருட்களைக் கொண்டு வந்து தருகிறார் கடைக்காரர். தனக்கு சமைத்துக் கொள்ளத் தெரியாது என்று பணிவுடன் தெரிவிக்கிறார் நூலாசிரியர். உன் உணவை சமைத்துக் கொள்ளத் தெரியாமல் நீ என்ன பரிக்கிரமா செய்கிறாய் என ஆத்திரப்படுகிறார் கடைக்காரர். அவரிடம் நன்றி சொல்லி விட்டு நடக்கிறார் திரு. வெங்கட்ராமன். கொஞ்ச நேரத்தில் கடைக்காரரும் அவருடைய மனைவியும் பின்னால் வந்து தங்களை மன்னித்து தங்கள் வீட்டில் உணவருந்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். அவ்வாறே செய்கிறார் நூலாசிரியர். மதிய உணவை அங்கே முடித்து புறப்பட ஆயத்தமானதும் அந்த ஊர் இளைஞர்கள் அன்று காலை நடந்ததைக் கேள்விப்பட்டு நீங்கள் எங்கள் ஊரைப் பற்றி எதிர்மறையான எண்ணத்துடன் போகக் கூடாது . எனவே இரவும் இங்கே தங்கியிருந்து எங்கள் உபசரிப்பை ஏற்று எங்களுக்கு ஆசியளித்துச் செல்ல வேண்டும் என்கின்றனர். அவர்கள் அன்பை மறுக்க வழியின்றி அங்கேயே தங்குகிறார். 

ஓர் ஏழைக் குடியானவரிடம் ஆசிரியர் பிச்சை கேட்கிறார். அவருக்கு உணவளிக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் வீட்டில் வறிய நிலை. ஒரு இடத்தில் காத்திருக்குமாறு சொல்லி விட்டு தனது வீட்டுக்குச் சென்று மனைவியிடம் விஷயத்தைக் கூறுகிறார். குடியானவரின் மனைவி ஆசிரியரை வீட்டுக்கு அழைத்து வருமாறு சொல்கிறார். உணவு தயாரிக்க மளிகை இருக்கிறதா எனக் கேட்கிறார் குடியானவர் . நாளை ஒரு நாள் உணவுக்கு நம்மிடம் மளிகை இருக்கிறது. நாம் நாளை உணவருந்த இன்று ஒரு பரிக்ரமாவாசியைப் பட்டினி போடக் கூடாது என்று சொல்லி உடன் அழைத்து வருமாறு சொல்லி உணவு தயார் செய்து அளிக்கிறார் குடியானவரின் மனைவி. அந்த ஏழைக் குடியானவரின் வீட்டில் உணவருந்தியதை நெகிழ்வுடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர். 

தனியாகப் பயணிக்கும் நூலாசிரியரை நர்மதை நதிக்கரை மக்கள் ‘’பாபாஜி பாபாஜி’’ என்றே அழைக்கின்றனர். 

இராணுவத்தில் பணி புரிந்தவர் என்பதால் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் ஏராளமான வழிகளை உருவாக்கிக் கொள்கிறார். மாலையுடன் பயணம் முடிந்து தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடிதம் எழுதுகிறார் திரு. வெங்கட்ராமன். பரிக்ரமா அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். அந்த கிராமவாசிகளின் உறவினர்களோ நண்பர்களோ 100 அல்லது 120 கி.மீ தொலைவில் இருந்தால் அவர்கள் முகவரியை அளித்து அதனைத் தனது தொடர்பு முகவரியாக அளிக்கிறார். நூலாசிரியரின் கடிதம் கண்டவுடன் அவர் கொடுத்திருக்கும் முகவரிக்கு அவரது உறவினர்கள் கடிதம் எழுதுகின்றனர். பரிக்கிரமாவாசிகள் நதிக்கரையில் தங்கியிருப்பார்கள் என்பதால் இவர் போய் சேரும் கிராமவாசிகள் இவரிடம் கடிதத்தை கொண்டு வந்து அளிக்கிறார்கள். இராணுவத்தின் துல்லியத் திட்டமிடல் இவருக்கு உதவி செய்கிறது. 

தெற்குப் பகுதி நதி வலத்தின் போது ஒரு பெண்மணி தனக்கு தோல் நோய் ஒன்று இருப்பதாகவும் அதற்கு வடகரையில் இருக்கும் அனசூயா அன்னையின் ஆலயத்திலிருந்து மண்ணை எடுத்து வர வேண்டும் என்று கேட்கிறார். வட பகுதி நதி வலத்தின் போது அந்த ஊருக்கு வந்ததும் அனசூயா ஆலய மண்ணை எடுத்து வைத்துக் கொண்டு அந்த வீட்டாருக்கு கடிதம் போடுகிறார். தான் இன்ன தேதியில் உங்கள் ஊருக்கு மறுகரையில் இருக்கும் இன்ன ஊரில் இருப்பேன். உங்கள் உறவினர்கள் எவரையும் நதியைக் கடந்து வரச் சொல்லி பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். அவ்வாறே அவர்களும் செய்கின்றனர். 

பல்வேறு மனிதர்களுடனான உணர்ச்சிகரமான இனிய நினைவுகளை நூலெங்கும் பதிவு செய்கிறார். கங்கையில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் கரையும்; நர்மதையைக் கண்டாலே பாவங்கள் இல்லாமலாகும் என்பது நர்மதா நதி தீரத்தில் வசிப்பவர்களின் நம்பிக்கை என பதிவு செய்கிறார். 

வாசிக்கும் அனைவரையும் தாமும் இது போல ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என எண்ண வைக்கும் ஒரு நூல் இந்நூல். 

நர்மதா பரிக்ரமா மேற்கொள்பவர்களை மஹாபலி, பரசுராமர், அனுமன், வீடணன், கிருபர், அஸ்வத்தாமன், வியாசர் ஆகிய ஏழு சிரஞ்சீவிகள் காப்பார்கள் என்பது நம்பிக்கை. 

Wednesday 24 November 2021

சைக்கிள்

சைக்கிள் ஒரு குறியீடு. எளிமையின் பொறுப்புணர்வின் குறியீடு. கட்டற்ற நுகர்வுக்கு மாற்றாக இருக்கும் ஆக்கபூர்வமான செயல்பாடு. 28ம் தேதி சைக்கிள் பயணத்தின் பங்கேற்பாளர்கள் அனைவருமே இன்றிலிருந்து தினமும் கொஞ்ச தூரம் சைக்கிள் ஓட்டிப் பழகுகிறார்கள். நானும் ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்று முழு அழுத்தத்தில் காற்று பிடித்து வந்தேன். சைக்கிள் ஓட்டியது பள்ளி நாட்களை நினைவுபடுத்தியது. பள்ளி நாட்களில் சைக்கிள் மிதித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு இருக்கும் அதே ஆர்வமும் உற்சாகமும் நம்பிக்கையும் இப்போதும் இருக்கிறது. சற்று கூடியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். பல ஆண்டுகளுக்கு முன்னால், கோடிக்கரையில் ஒரு ஃபிரெஞ்ச் தம்பதியைப் பார்த்தேன். அவர்கள் பாரிஸில் கிளம்பி துருக்கி , வளைகுடா நாடுகள், ஈரான், ஆஃப்கானிஸ்தான் வழியாக இந்தியா வந்து சேர்ந்திருந்தனர். அடுத்து மியான்மார், மலேசியா செல்ல திட்டம் என்று கூறினார்கள். சைக்கிளில் உலகை வலம் வர வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம். அடுத்தடுத்து மேலும் சில பயணங்களையும் சைக்கிளை மையப்பொருளாகக் கொண்டு மேலும் சில விஷயங்களையும் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது. 

Tuesday 23 November 2021

செலவு (சிறுகதை)

நான் முதல் தடவை ஊரை விட்டுக் கிளம்பிய போது, காசிநாதன் தாத்தாவிடம் தான் பணம் கேட்டேன். அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரமாகத்தான் சென்றிருந்தேன்.  சில வினாடிகள் என் முகத்தை உற்றுப் பார்த்தார். என்னை அவர் அமர்ந்திருக்கும் கயிற்றுக் கட்டிலில் அமர வைத்து விட்டு  உள்ளே சென்று மூவாயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். இன்று வரை எங்கள் இரண்டு பேரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஏழைக் குடியானவர். என்றாலும் எப்போதும் பெருந்தன்மையும் பெரிய மனுஷத் தன்மையும் இல்லாமல் இருந்தது கிடையாது. ஔவை சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை சுட்டிக் காட்டுகிறாள். 

மகாத்மா காந்தி உப்பு காய்ச்ச தண்டிக்கு நடைப்பயணம் போன ஆண்டில் தான் பிறந்ததாகக் கூறுவார். சுதந்திரம் கிடைத்த போது அக்ரஹாரத்தில் இருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சுந்தரம் வாத்தியார் என்னும் சுந்தரய்யர் கொடி ஏற்றி வந்தே மாதரம் என்று சொன்னதையும் மாணவர்கள் திருப்பிச் சொன்னதையும் எப்போதும் நினைவு கூர்கிறார். இப்போதும் காலை எழுந்தவுடன் பன்னிரண்டு முறை வந்தே மாதரம் என்கிறார். இரவு உறக்கத்துக்கு முன் பன்னிரண்டு முறை வந்தே மாதரம் என்கிறார். சில விஷயங்கள் ஆகி வந்தவை. தினமணி மட்டும் தான் வாசிக்கிறார். அரசியல் பேசுவதில்லை ; அரசியலில் ஆர்வமும் காட்டுவது இல்லை. ‘’ராஜாஜி ரொம்ப பெரிய மனுஷர்.’’ என்பார். வேறு ஏதும் பேச மாட்டார். அவருக்கென ஒரு தனித்துவம் இருந்தது. எல்லாரையும் போல் அவர் இல்லை. கொஞ்சம் வித்யாசமானவர். வித்யாசமானவர்கள் அடையும் தனிமையில் லயித்திருந்தார்.

காசிநாதன் தாத்தா ஒருமுறை வீட்டாருடன் ஏற்பட்ட சிறு முரண்பாடு காரணமாக வீட்டை விட்டுச் சென்றிருக்கிறார். சென்னைக்கு ரயிலேறிச் சென்று அங்கிருந்து விசாகப்பட்டினம் போய் சேர்ந்திருக்கிறார். பூரி ஜெகன்னாத ஆலயத்தில் ஒரு மாதம் இருந்து விட்டு, கல்கத்தா போய் மூன்று மாதம் சுற்றியிருக்கிறார். அதன் பின்னர் வீடு திரும்பியிருக்கிறார். ‘’பசின்னு சொன்னா இந்த நாட்டுல சோறு போட எத்தனையோ மகராசிங்க இருக்காங்க. மூட்டை தூக்கற - பத்து பாத்திரம் தேய்க்கற - மண்வெட்டியால வாசல சுத்தம் பண்ற வேலையை யாரோ ஒருத்தர் கொடுப்பாங்க. போய்ட்டே இருக்க வேண்டியது தான். ஒரே இடத்துல குட்டை மாதிரி தேங்கி இருந்தாத்தான் எல்லா சிக்கலும்’’. தை மாத நெல் அறுவடை முடிந்து மாசி கடைசியில் உளுந்து பயிர் பறித்தவுடன் ஒரு மாதம் தேசாந்திரம் கிளம்பி விடுவார். ஜெய்ப்பூர், அலகாபாத், அமிர்தசரஸ், ஹரித்வார், ரிஷிகேஷ். தில்லி அவருக்கு மிகவும் பிரியமான ஊர். ‘’எத்தனை விதமான ஜனங்கள்’’ என்பார். ‘’இந்திய ரயில்வே போல இத்தனை சகாயமான கட்டணத்துல போக்குவரத்து உலகத்துல எங்கயும் கிடையாது.’’ ஊர்க்காரர்கள் பயணத்துக்குப் பழக வேண்டும் என்று சொல்வார். அவரிடம் பல கதைகள் இருந்தன. ஹிந்துஸ்தானி சங்கீதம் குறித்து. வட இந்திய சந்தைகள் குறித்து. புராணங்களில் இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள் குறித்து. இந்திய நதிகள் குறித்து. சொல்லிக் கொண்டேயிருப்பார்.  வானொலிப் பெட்டியும் ஆகாசவாணியும் அவரது நிரந்தரத் துணை. 

மறையூரில் ஊரை விட்டு ஓடிப் போன இரண்டாம் ஆள் நான். பெங்களூர், பெல்காம், பூனா, பம்பாய், அகமதாபாத், உதய்ப்பூர், அபு மலை, அமிர்தசரஸ், தில்லி, டேராடூன் என பல ஊர்களில் ஓரிரு வாரங்கள் இருந்து விட்டு வீடு திரும்பினேன். காசிநாதன் தாத்தாவிடம் வாங்கிச் சென்றது மூவாயிரம் ரூபாய். திரும்பி வரும் போது என் கையில் மூவாயிரத்து முன்னூறு இருந்தது. மண்வெட்டி பிடித்து வேலை செய்த கைகள். எந்த வேலையையும் செய்து விடும். உணவகங்களில் பலவிதமான தூய்மைப்படுத்தும் வேலைகள் இருக்கின்றன. பாத்திரங்கள், சமையல்கட்டு, குடோன், டயனிங் டேபிள்கள். இந்த பணிக்கென்றே இருப்பவர்கள் செய்து செய்து சலித்துப் போயிருப்பார்கள். தற்காலிகமாக இதனைச் செய்பவர்களால் துப்புறவாகச் செய்ய முடியும். அங்கேயே உணவு கிடைத்து விடும். சில்லறையும் தேறும். ஹோட்டலிலேயே தங்கிக் கொண்டு ஊர் சுற்றலாம். அதனால் தான் எடுத்துச் சென்ற பணத்தை விடக் கூடுதலாக கையில் கொண்டு வந்தேன். பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்ட போது தாத்தாவுக்கு சந்தோஷம். என்னென்ன வேலைகள் செய்திருக்கக் கூடும் என்பது அவருக்குத் தெரியும். 

‘’ஜெய்ராம் தம்பி ! நீங்க உடல் உழைப்புக்கு சலிக்கறவர் இல்லை. காவேரி டெல்டா-ல, விவசாயக் குடும்பங்கள்ல மனஸ்தாபம் எப்போதும் இருக்கும். நீங்க தான் பெருந்தன்மையா போகணும். அப்பாவும் அம்மாவும் ரொம்ப கவலைப்பட்டாங்க தம்பி. உங்க அக்காவும் தங்கச்சியும் பரிதவிச்சுப் போய்ட்டாங்க. ‘’

‘’அண்ணன் காரங்க செத்து ஒழிஞ்சிருப்பன்னு சந்தோஷமா இருந்திருப்பாங்களே’’

காசிநாதன் தாத்தா பதில் சொல்லவில்லை. சங்கடமான விஷயங்கள் பேசப்படும் போது மௌனமாயிருப்பது அவர் வழக்கம். 

வீட்டில் சொத்தைப் பிரித்துக் கொண்டோம். எனக்கு ஐந்து ஏக்கர் நிலம் கிடைத்தது. அண்ணன்கள் இருவருக்கும் தலா ஏழு ஏக்கர். அப்பா வீட்டையும் தன் பங்குக்கு ஐந்து ஏக்கரையும் வைத்துக் கொண்டார். அவருக்குப் பிறகு அம்மாவுக்குப் போய் சேரும் என்று உயில் எழுதி வைத்தார். ஒரே வீட்டில் இருப்பதா வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் என்று கூறி விட்டார். அண்ணன்கள் இருவரும் பக்கத்துத் தெருவில் வாடகைக்குக் குடியேறினர். நான் வீட்டில் இருந்தேன். காசிநாதன் தாத்தா அப்பாவிடம் பண்ணை ஆளாக வேலை பார்த்தார். என்னுடைய நிலத்தில் நான் எலுமிச்சைத் தோட்டம் போட்டேன். 

ஐயர்மார்கள் பண்ணை நிலங்களையும் அக்ரஹாரத்தில் இருக்கும் வீடுகளையும் வேகமாக விற்றுக் கொண்டிருந்தார்கள். நிலத்தையும் வீட்டையும் விற்கக் கூடாது என்ற உறுதியுடன் இருந்த இரண்டு ஐயர்மார்களின் நாலு வேலி நிலத்தை பண்ணையம் பார்க்கக் கூடிய சூழல் எனக்கு உருவானது. என் எலுமிச்சைத் தோட்டத்துடன் இந்த வேலையையும் பார்த்தேன். விவசாயம் என்பது வானம், பூமி, தண்ணீர். விவசாயியின் மனமும் அப்படி இருக்க வேண்டும். இருந்தால் கொடுப்பினை. 

காலையில் எழுந்தவுடன் இந்தியாவின் ஏழு புண்ணிய நதிகளின் பெயரைச் சொல்வேன். ஏழு புண்ணிய நகரங்களின் பெயரைச் சொல்வேன். பெரும் நீர்ப்பரப்பில் ஒரு துளி ஆனதாகவும் பெரும் நிலப்பரப்பில் ஒரு துளி மண் ஆகிவிட்டதாகவும் தோன்றும். அந்த உணர்வுடனே ஒரு நாள் நகரும். புண்ணியம் என்பது என்ன? உயிர்களுக்கு உதவுவது தானே! இந்திய நதிகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தன் கரையில் வாழும் கோடானுகோடி ஜீவன்களுக்கு வாழ்க்கையை அளித்திருக்கின்றன.  வருஷத்துக்கு ஒரு மாதம் ரயிலில் பத்தாயிரம் கிலோ மீட்டர் சுற்றி விடுகிறேன். பெரும்பாலும் நான் மட்டும். அபூர்வமாக உடன் சிலருடன். 

சகோதரிகளுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்தோம். எனக்கும் திருமணம் ஆனது. இரண்டு பெண் குழந்தைகள். 

காசிநாதன் தாத்தா ஆயிரம் பிறைகளைப் பார்த்து ஏழு ஆண்டு ஆகி விட்டது. உழைத்து உரமேறிய உடல். இன்னும் அப்பா வயலில் வேலை செய்கிறார். அவருக்கு எழுபது வயது இருக்கும் என்று தான் பார்ப்பவர்கள் நினைக்கிறார்கள். 

ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தார். உட்கார வைத்து குடிக்கத் தண்ணீர் கொடுத்தேன். 

சில நிமிடங்கள் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் மகன்களைப் பற்றி பேசப் போகிறார் என்று யூகித்தேன். 

‘’ஜெயராம் தம்பி ! நாப்பது வயசுக்கு மேல தான் நான் கல்யாணம் செஞ்சுகிட்டன். அஞ்சு வருஷம் கழிச்சு தான் பையன்க பொறந்தாங்க’’

சொல்லிவிட்டு மௌனமானார். 

ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் பேசத் தொடங்கினார். 

‘’ரெண்டு பேரும் குடிக்கு அடிமையா இருக்காங்க. அவங்க மட்டும் இல்ல. இன்னைக்கு ஊர்ல இருக்கற ஆம்பளைங்கள்ள நூத்துக்கு தொன்னூத்து அஞ்சு பேரு குடிக்கறவங்க. கையில ஒத்தக்காசு சேமிப்பு யார்ட்டயும் இல்லை. எனக்கு ஒரு உதவி செய்ங்க தம்பி’’

’’சொல்லுங்க தாத்தா’’

’’இதுல ஐயாயிரம் ரூபா இருக்கு’’ ஒரு கவரை என்னிடம் தந்தார். 

‘’நான் இறந்து போய்ட்டா என் மகன்கள்ட்ட செலவுக்கு ஒத்த ரூபா இருக்காது. அப்ப அவங்க யார்ட்டயாவது போய் என்னோட சடங்குகள செய்ய கடன் கேட்டு நிக்கக் கூடாது. அப்ப நான் கொடுத்தன்னு சொல்லி இந்த பணத்தை அவங்க கிட்ட கொடுக்கணும். எனக்காக இதைச் செய்யணும். ‘’  

என் மனைவி அவருக்கு மோர் கொண்டு வந்து கொடுத்தாள். 

கிளம்பும் போது என்னிடம் ‘’ராஜாஜி ரொம்ப பெரிய மனுஷர் ‘’ என்றார். 

Monday 22 November 2021

ஓவியம்

உனது ஓவியத்தை
தீற்றிக் கொண்டிருக்கிறேன்
பாறை உருகிய நீர் அருவியென
கொப்பளிக்கிறது
உனது கூந்தல்
இடைவெளிகளில் நிரம்புகின்றன
மேகங்களும் அடர் இரவும்
உதயத்தின் வானமும்
அஸ்தமனத்து அந்தியும்
தீட்டப்படும் போது
உனது முகத்தின் நெற்றி 
மெல்ல மெல்ல புலப்படுகிறது
வற்றாத நதிகள் வரையப்பட்ட போது
அவை  கண்களாயின
நிலமும்
காற்றும்
நீரும்
தீயும்
வரைந்த பின்னால்
வானம் 
அந்த ஓவியத்தில்
நிரப்பிக் கொண்டது
தன்னை

சைக்கிள் பயணம்

இந்த வார இறுதியில், ஒரு சைக்கிள் பயணத்தை ஒருங்கிணைக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்ட போது ரிஷிகேஷில் ஓர் ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். அங்கே இருந்தவர்களிடம் எனது பயண அனுபவங்களைக் கூறிக் கொண்டிருந்தேன். ஆசிரமவாசி ஒருவர் ஆசிரமத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னால் நாங்குநேரியிலிருந்து ரிஷிகேஷுக்கு சைக்கிளில் ஒருவர் வந்ததாகவும் இரண்டு மாதத்துக்கு ஒரு தடவை யாராவது ஒரு சைக்கிள் பயணி தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்கள் என்றும் மேலும் தமிழ்நாட்டில் இருந்து நடந்தே ரிஷிகேஷ் வருபவர்களும் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.  

எனது நண்பர் ஒருவர் பூனாவிலிருந்து பெங்களூர் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்பவர். ஆறு மாதத்துக்கு ஒரு முறை அவர் அந்த பயணத்தை மீண்டும் மீண்டும் நிகழ்த்துவார். 




பல வருடங்களுக்குப் பின் மேற்கொள்ளும் சைக்கிள் பயணம் இது. அனேகமாக இதுவே சைக்கிளில் மிக அதிக தூரம் மேற்கொள்ளப் போகும் பயணம். மயிலாடுதுறையிலிருந்து பரங்கிப்பேட்டை வரை சென்று திரும்ப உத்தேசித்துள்ளோம். நண்பர்கள் பன்னிருவர் பயணத்தில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். முன்னர் சிதம்பரம் வரை என்று தான் திட்டமிட்டோம். சிதம்பரம் 40 கி.மீ தூரத்தில் உள்ளது. சென்று மீள 80 கி.மீ. இரட்டை இலக்கத்தில் உள்ள பயண தூரத்தை மூன்று இலக்கமாக ஆக்க விரும்பி நான் பரங்கிப்பேட்டையைத் தேர்ந்தெடுத்தேன். மயிலாடுதுறையிலிருந்து பரங்கிப்பேட்டை 65 கி.மீ தூரம் . ஆகவே எங்கள் மொத்த பயண தூரம் 65 + 65 = 130 கி.மீ. நூறு என்பதை ஆயிரமாகக் கொள்ளும் பழக்கம் நம் மரபில் உண்டு. இந்த பயணத்தில் பங்குகொள்பவர்கள் பலர் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் சைக்கிளில் பயணிப்பதற்கு ஒரு துவக்கத்தை உருவாக்கித் தரும் விதமாக பயணம் 100 கி.மீ.க்கு மேல் அமைய வேண்டும் என்று விரும்பினேன். 

பரங்கிப்பேட்டை மகா அவதார் பாபாஜியின் ஜென்மபூமி. அவர் சிறு வயதில் அங்கு தான் வசித்திருக்கிறார். அவருடைய தந்தை அங்கே இருக்கும் முருகன் கோவிலில் அர்ச்சகராகப் பணி புரிந்திருக்கிறார். அந்த கோவில் ஊரின் மத்தியில் இருக்கிறது. பரங்கிப்பேட்டையில் பாபாஜிக்கு அழகிய ஒரு சிற்றாலயம் அவரது பக்தர் ஒருவரால் கட்டப்பட்டுள்ளது. 




ஞாயிறன்று காலை 5 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து புறப்பட உத்தேசித்துள்ளோம். பங்கேற்பாளர்கள் சைக்கிள் எடுத்துக் கொண்டு வந்து விட வேண்டும். அது அவர்களின் சொந்த சைக்கிளாகவோ வாடகை சைக்கிளாகவோ இருக்கலாம். இரண்டு ஒரு லிட்டர் பாட்டில்களில் குடி தண்ணீர் நிரப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் இரண்டு புளிசாதப் பொட்டலங்கள் தரப்படும். காலை உணவும் மதிய உணவும் அவையே. இரவு உணவுக்கு ஊர் திரும்பி விடலாம். பயணத்தின் போது அலைபேசி கொண்டு வரக் கூடாது. 

நம்முடைய வழக்கமான ஒரு தினத்தை ஆர்வமூட்டும் அனுபவங்கள் கொண்ட தினமாக மாற்ற இது போன்ற நுண் விஷயங்கள் உதவுகின்றன. பங்கேற்பாளர்கள் அனைவருமே பயண தினத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

Sunday 21 November 2021

கடிதங்கள்

நான் சிறுவனாயிருந்த காலம் தொட்டு கடிதங்கள் எழுதி இருக்கிறேன். உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு என கடிதம் எழுதி அனுப்புவேன். 1992ம் ஆண்டு என ஞாபகம். எங்கள் பிரதேசத்தை ஒரு தீவிரமான புயல் தாக்கியது. மணிக்கு 180 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. நள்ளிரவு தொடங்கி பொழுது விடிந்து மூன்று மணி நேரம் வரை புயல் வீசிக் கொண்டேயிருந்தது. இரவெல்லாம் விழித்திருந்து அதனைப் பார்த்தேன். அந்த புயலினைப் பார்த்த அனுபவங்களை சென்னையில் வசித்த உறவினர் ஒருவருக்கு எழுதினேன். கடிதம் எழுதுவது என்பது ஆர்வமூட்டக்கூடிய உவப்பான ஒரு செயல். அருகில் இருக்கும் தபால் அலுவலகம் செல்வது, கார்டு கவர் வாங்கி வருவது. பேடில் வைத்து எழுதுவது, அனுப்புனர் பெறுநர் முகவரி எழுதுவது, தபால் பெட்டியில் போட்டு வருவது என அடுத்தடுத்து பல செயல்கள் கொண்ட நிகழ்வு அது.  பின்னர் 10 போஸ்ட் கார்டு 10 கவர் கையில் எப்போதும் வைத்திருப்பேன். இப்போதும் என்னுடைய மேஜையைத் துழாவிப் பார்த்தால் அஞ்சலட்டை இருக்கும். இன்றும் யாரோ சிலருக்கு அஞ்சல் அட்டையில் எழுத வேண்டிய ஒரு கடிதம் எனக்கு இருக்கவே செய்கிறது. மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் விவசாயி. அவர் தொலைபேசியோ அலைபேசியோ வைத்துக் கொள்ளவில்லை. அவரிடம் அவ்வப்போது செய்து வரும் பணிகளை அஞ்சலட்டையில் எழுதி அனுப்புவேன். நண்பர்களுடன் அவரைக் காணச் சென்றால், அவர் அந்த பணிகளைப் பற்றி விசாரிப்பார். நண்பர்கள் ஆச்சர்யப்படுவார்கள். அலைபேசி இல்லாத ஒருவர் சில நாட்கள் முன் நடந்த விபரம் கூட அறிந்திருக்கிறாரே அது எவ்விதம் சாத்தியம் என. 

பள்ளி நாட்களில் நான் மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவேன். எங்கள் பள்ளிக்கும் வீட்டுக்குமான தூரம் இரண்டரை கிலோமீட்டர். சைக்கிளில் பத்து நிமிடத்தில் வந்து விடுவேன். வந்ததும் கேட்கும் முதல் கேள்வி எனக்கு இன்று கடிதம் ஏதும் வந்ததா என. ஒருநாள் விடாமல் கேட்பேன். வீட்டில் இல்லை இல்லை என்பார்கள். ஒருநாள் கேட்காமல் இருந்து விட்டேன். மாலை வீட்டுக்கு வந்தால் எனக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. ஏன் மதியமே சொல்லவில்லை என்று கேட்டேன். மறந்து போய் விட்டதாகக் கூறினார்கள். எனக்கு மனம் சமாதானமே ஆகவில்லை. இன்றும் பகல் பொழுதில் வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் ஏதேனும் கடிதம் வந்திருக்கிறதா என ஷெல்ஃபில் பார்க்கும் வழக்கம் இப்போதும் இருக்கிறது. எங்கள் பகுதியின் தபால்காரர்கள் அனைவருடனும் நல்ல பரிச்சயம் உண்டு. 

இன்றும் எழுதுவதற்கு சில கடிதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. கடிதம் எழுத எனக்கு பல்வேறு விதமான ஆயத்தங்கள் தேவை. தபால் தலை அல்லது தபால் கவர் கைவசம் இருக்க வேண்டும். உறையை ஒட்டும் பசை மேஜையின் மீது இருக்க வேண்டும். டிம்மி ஷீட்டில் மார்ஜின் போட கூரான பென்சில் தேவை. கண்ணாடி ஸ்கேல் வைத்து நேர்த்தியாக மார்ஜின் போட வேண்டும். கடிதம் எழுதி கவரை ஒட்டி ஸ்டாம்ப்பும் ஒட்டி அனுப்புநர் பெறுநர் முகவரி எழுதப்பட்டு விட்டால் அதை உடனே கொண்டு சென்று தபால் பெட்டியில் போட்டு விட வேண்டும். இவ்வளவு செயல்களையும் இன்னின்ன விதமாகவே செய்ய வேண்டும் என விரும்புவேன். 

இன்று கூட எழுத வேண்டிய கடிதங்கள் நான்கு இருக்கின்றன. 

Saturday 20 November 2021

ஆதிமூலம்

மயிலாடுதுறை அருகே ஒரு கிராமம். கொள்ளிடக் கரையில் அமைந்துள்ளது. அங்கே எனக்கு நண்பர்கள் மிக அதிகம். விவசாயிகள் பலபேர் எனக்கு மிகவும் பழக்கமானவர்கள். ஒருநாள் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த போது, அந்த ஊரின் பெயர் கண்ணில் பட்டது. என்ன செய்தி என்று வாசித்தேன். ஒருநாள் விடிகாலை 4 மணி அளவில் ஊரில் நாய்கள் அனைத்தும் கூடி பெருங்குரலில் குரைக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. அனைத்துத் தெருவின் நாய்களும் சேர்ந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட திசையில் எதையோ ஊன்றி நோக்கி குரைப்பதை குரைப்பொலி கேட்டு வீட்டுக்கு வெளியில் வந்த ஒரு சிலர் பார்த்திருக்கிறார்கள். டார்ச் லைட் ஒளியை நாய்கள் நோக்கும் திசையில் செலுத்தியிருக்கிறார்கள். அங்கே தெருவில் ஒரு முதலை இருந்திருக்கிறது. உடன் ஊர் மக்கள் பலரை எழுப்பியிருக்கிறார்கள். இளைஞர்கள் சிலர் நீளமான சுருக்கை உருவாக்கி முதலையைச் சுருக்கிட்டு பிடித்திருக்கின்றனர். பின்னர் அது எங்கும் நகர இயலா வண்ணம் ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். வனத்துறை வந்து முதலையைக் கொண்டு போய் கொள்ளிடம் ஆறு ஆழமாக இருக்கும் அணைக்கரை என்ற ஊரில் விட்டு விட்டார்கள்.  

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து நான் அந்த கிராமத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு நண்பரின் வீட்டில் பேசிக் கொண்டிருந்தேன். நண்பரின் மனைவியும் உடனிருந்தார். முதலை குறித்து செய்தித்தாளில் வெளியான செய்தியை வாசித்ததை நினைவு கூர்ந்தேன். நீங்கள் முதலை மரத்தில் கட்டிப் போடப் பட்டிருந்ததைப் பார்த்தீர்களா என்று கேட்டேன். 




நண்பரின் மனைவி , ‘’பிரபு ! நாங்கள் எல்லாரும் போய் பார்த்தோம். நான் மட்டும் முதலையை ‘’ஆதிமூலமே’’ என்று தொட்டுக் கும்பிட்டேன் என்றார்கள். 

பெருமாளும் தெய்வம். கருடனும் தெய்வம். கஜேந்திரனும் தெய்வம். சுதர்சனச் சக்கரமும் தெய்வம். பெருமாளின் அருட்பார்வை பட்ட பெருமாள் படைக்கலனான சுதர்சனால் தீண்டப்பட்ட முதலையும் தெய்வம் தானே!

இந்தியப் பண்பாட்டை சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டேன். 

நர்மதா பரிக்கிரமா

நர்மதா பரிக்கிரமா என்ற ஒரு நடைப்பயணம் வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மிக உணர்வுபூர்வமான புனித யாத்திரையாக மேற்கொள்ளப்படுவது. பெரும்பாலான இந்திய நதிகள் மேற்கு திசையில் உற்பத்தியாகி கிழக்கு திசை நோக்கி பாய்பவை. விதிவிலக்காக ஒரு சில நதிகளே கிழக்கில் உற்பத்தியாகி மேற்கு திசை நோக்கி பாய்கின்றன. நர்மதையும் தபதியும் அவ்வாறான நதிகள். நர்மதை நதியின் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து நதியின் தென்கரையில் நதியுடனே நடந்து நர்மதை கடலுடன் கலக்குமிடம் சேர்ந்து ஒரு படகில் நர்மதையைக் கடந்து நர்மதையின் வடக்குக் கரைக்குச் சென்று அங்கிருந்து நர்மதையின் உற்பத்தி ஸ்தானத்தை நோக்கி நடந்து சென்று துவங்கிய இடத்தில் யாத்திரையை நிறைவு செய்வது என்பதே நர்மதா பரிக்கிரமா எனக் கூறப்படுகிறது. நர்மதா நதியின் நீளம் 1200 கி.மீ . நர்மதா பரிக்ரமா 2400 கி.மீ தூரம் கொண்டது. 




இந்த நடைப்பயணத்தின் போது வெறும் காலுடன் நடக்க வேண்டும் என்றும் கையில் பணம் காசு எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் பிச்சையெடுத்தே உணவுண்ண வேண்டும் என்றும் ஒரு மரபு உள்ளது. இந்த பயணம் மேற்கொள்பவர்களை மஹாபலி, பரசுராமன், அனுமன், விபீஷ்ணன், கிருபர், அஸ்வத்தாமன், வியாசர் ஆகிய ஏழு சிரஞ்சீவிகள் காப்பார்கள் என்பது நம்பிக்கை. 

நர்மதையின் கரையில் ஓம்காரேஷ்வர், மகேஷ்வர், உஜ்ஜைன் ஆகிய புண்ணியத் திருத்தலங்கள் உள்ளன. நர்மதை உற்பத்தியாகும் அமர்கண்டக் 51 சக்தி பீடங்களில் ஒன்று. 

நர்மதை பரிக்கிரமா மேற்கொள்ள நர்மதை  அன்னையின் ஆசி கோருகிறேன். 

செய்க பொருளை

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.

-திருவள்ளுவர் 

காவிரி டெல்டா விவசாயிகளை தினமும் சந்திக்கிறேன். முதலில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் கேட்கும் முதல் கேள்வி உங்கள் வயலில் நீங்கள் வழக்கமாகச் செய்யும் நெல் விவசாயம் போக வரப்புகளில் தேக்கு மரங்கள் நட்டு வளர்க்கிறீர்களா என்று கேட்பேன். எல்லா விவசாயிகளுமே இல்லை என்று பதில் கூறுவார்கள். அது குறித்து ஆர்வம் காட்டும் சிலருக்கு தேக்கு மரக்கன்றுகள் நானே வாங்கிக் கொடுத்து விடுவேன். மேலும் 15 நாளைக்கு ஒருமுறை அவர்கள் வயலுக்குச் சென்று அவை எப்படி வளர்ந்துள்ளன என்று பார்ப்பேன். அவ்வாறு சென்று பார்ப்பது அவர்களுக்கு ஊக்கம் தரும். சமீபத்தில், சில மாதங்களுக்கு முன் தேக்கு மரக் கன்றுகள் வழங்கிய விவசாயியின் தோட்டத்துக்குச் சென்றிருந்தேன். நூறு மரக்கன்றுகள். சிறப்பாக வளர்ந்திருந்தன. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

டிம்பர் மரங்களுக்கானத் தேவை உலக அளவிலானது. நூற்றாண்டுகளாக அத்தொழில் மிகுந்த லாபம் கொண்டது. குறைவான தண்ணீரே போதுமானது. ஒரு ஏக்கர் வைத்திருக்கும் விவசாயியிடம் குறைந்தது 40 மரங்கள் இருக்குமானால் 15 ஆண்டுகளில் அவர்களிடம் இருபது லட்சம் ரூபாய் இருக்கும். 

ஏதேனும் ஒரு கிராமத்திலாவது , அங்கே இருக்கும் நிலம் வைத்திருக்கும் எல்லா விவசாயிகளும் குறைந்தபட்சம் 40 தேக்கு மரங்களாவது வளர்க்கிறார்கள் என்ற நிலையை உண்டாக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டுள்ளேன். 

Thursday 18 November 2021

மீண்டும் (நகைச்சுவைக் கட்டுரை)

கட்டிடவியல் , கட்டுமானம் பயின்றவர்கள் அத்துறையிலேயே குறிப்பிட்டவிதமான பணிகளை ஆற்றுவார்கள். கட்டிட வரைபடம், ஸ்ட்ரக்சுரல் டிசைன், கட்டிட கான்டிராக்ட், கட்டிடம் கட்டி விற்பனை என பல்வேறு விதமான பணி வாய்ப்புகள் உண்டு. ரியல் எஸ்டேட், ஹார்டுவேர் ஷாப் , மணல் ஜல்லி சப்ளை ஆகியவற்றிலும் சிவில் பொறியாளர்கள் ஈடுபடுவதுண்டு. வரைபடம் வரையக்கூடிய ஒருவர் கட்டிட கான்டிராக்ட் தொழிலுக்கே வராமல் ஒரு அலுவலகம், ஒரு கம்ப்யூட்டர் திரை என்று இருந்து விடுவதுண்டு. ஸ்ட்ரக்சுரல் டிசைன் செய்யக்கூடிய ஒருவர் எந்த கட்டுமானப் பணியிடத்திலும் அரைமணி நேரம் இருந்து கூட பழக்கமில்லாதவராக இருப்பார். கட்டிட கான்டிராக்டர் டிசைன் செய்திருக்க மாட்டார். ரியல் எஸ்டேட்டில் மனை விற்பவருக்கு வீடு விற்பனை செய்து பழக்கம் இருக்காது. இது இல்லாமல் சாலை உருவாக்கம் இருக்கிறது. இன்னும் சில பணிகளும் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறை. அனைவருக்கும் படிப்பு ஒன்று தான். 

எனது தந்தையிடம் பணி புரிவது என்பது ராணுவப் பயிற்சி போன்றது. எல்லாராலும் தாக்குப் பிடிக்க முடியாது. இருப்பினும் நான் அதில் தேறி வந்தேன். வருடங்கள் ஓடின. 

ஒருநாள் சாலையில் சென்று கொண்டிருந்த போது எங்கள் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர் ஒருவரைப் பார்த்தேன். அவர் , ‘’பிரபு பிரபு’’ என ஆர்வத்துடன் அழைத்தார். நான் வண்டியைத் திருப்பிக் கொண்டு அவரிடம் சென்றேன். 

‘’பிரபு ! எப்படி இருக்கீங்க?’’

‘’நல்லா இருக்கன் சார்’’

‘’உங்களை பாத்தது நல்லதா போச்சு. இன்னைக்கு காலைல சிவில் டிபார்ட்மெண்ட்ல இருந்து ஃபோன் வந்தது. வேற ஒரு விஷயமா பேசினவங்க இன்னொரு விஷயத்தையும் சொன்னாங்க. M. E பார்ட் டைம் ஒரு பேட்ச் ஆரம்பிக்க போறாங்க. நீங்க அப்ளை பண்ணுங்க’’

‘’சார் நானா?’’

‘’அப்ளை பண்ண இன்னும் ரெண்டு நாள் தான் டைம் இருக்கு. நாளைக்கு அட்மினி போறீங்க. அப்ளிகேஷன் ஐந்நூறு ரூபா. வாங்கி ஃபில் பண்ணி பாக்ஸ்ல போட்டுட்டு வந்திடறீங்க’’ 

‘’சார் அப்ளை பண்றது சரி சார். எனக்கு இப்ப ஏகப்பட்ட சைட்ல வேலை நடக்குது. சைட்டை விட்டு ஒரு நிமிஷம் கூட நகர முடியாது.’’

‘’இது பார்ட் டைம் டிகிரி. அண்ணா யுனிவர்சிட்டில இருக்குல்ல அந்த மாதிரி. வேலை பாக்கறவங்க தங்களை அப்டேட் பண்ணிக்க. சனி ஞாயிறு தான் ஃபுல் டே கிளாஸ். மத்த நாள்லாம் சாயந்திரம் 6 மணிக்குத் தான் கிளாஸ் ஆரம்பிக்கும். நீங்க 4.30 பாசஞ்சர் பிடிச்சா கிளாஸுக்குப் போயிடலாம். ‘’

‘’சார்! சாயந்திரம் ஆளுங்களுக்கு சம்பளம் கொடுக்கணும் ‘’

‘’நல்ல வாய்ப்பு. மிஸ் பண்ணாதீங்க. நாளைக்கு அப்ளை பண்ணிட்டு எனக்கு ஃபோன் செஞ்சு சொல்லுங்க’’

என் மனதில் சலனங்களை உருவாக்கி விட்டு சென்று விட்டார். 

வீட்டுக்கு வந்து யோசித்தேன். 




பள்ளி முடித்து கல்லூரியில் இணைந்த பிரபு கிடையாது இப்போது. இப்போது உள்ள பிரபுவுக்கு கட்டிடத் தொழில் முழுக்கத் தெரியும். நான்கு வருடம் இளநிலைப் பொறியியல் படித்த அனுபவம் இருப்பதால் பாடங்களை எப்படிப் படிக்க வேண்டும் என்று தெரியும். காலையிலிருந்து இரவு வரை கட்டிட வேலை இருக்கிறது என்றாலும் இந்த எம். ஈ படிப்பு இரண்டு ஆண்டுகளுக்குத் தான். மாதங்கள் கல்லூரியில் சர சர என்று ஓடி விடும். அப்பாவும் படிக்க வேண்டும் என்று சொன்னால் தடை சொல்ல மாட்டார். நான் எம். ஈ படிக்க வேண்டும் என்று விரும்பியதே அப்பா தானே! இப்படியாக யோசித்தேன். 

என்னுடைய ஒருநாள் பொழுதைக்  கற்பனை செய்து பார்த்தேன். காலை 6 மணிக்கு எழுகிறேன். 7 மணிக்கு ஜல்லி லோடு வருகிறது. சைட்டில் இறக்குகிறேன். வீட்டுக்கு வந்து காலை உணவு. பின்னர் சைட்டுக்குச் செல்கிறேன். பணியாளர்கள் வந்து பணி துவங்குகின்றனர். அளவுகளையும் குறிப்புகளையும் தருகிறேன். மெட்டீரியல் சப்ளை செய்தவர்களுக்கு பேமெண்ட் செட்டில் செய்கிறேன். மதியப் பொழுது. அப்பாவிடம் சொல்லி விட வேண்டும். நான் காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் தினமும் மாலை 4 மணிக்கு வந்து என்னை ரிலீவ் செய்தால் போதும் என. மாலை விழுப்புரம் பாசஞ்சர் பிடித்து சிதம்பரம் செல்கிறேன். மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரை வகுப்பு. வகுப்பு முடிந்ததும் ஒரு ரயில் வரும். அதில் ஊர் திரும்புகிறேன். நமக்கு நாமே இப்படி ஒரு டாஸ்க்கை ஃபிக்ஸ் செய்ய வேண்டும். நம்மால் முடியும். அப்படி இப்படி என. 

மறுநாள் கல்லூரி கிளம்பினேன். அப்ளை செய்ய போவதிலிருந்தே ஒரு புரஃபஷனல் தன்மையை வெளிப்படுத்த வேண்டும். முழுக்கை சட்டையை இன் செய்து பெல்ட் அணிந்து கைகளை மடித்து விடாமல் பட்டன் போட்டு ஒரு நல்ல ஷூ அணிந்து கொண்டு கிளம்பினேன். முதலில் நடராஜர் ஆலயத்துக்கு செல்ல வேண்டும். பி. ஈ சேர்ந்த அன்று முதல் நாள் நடராஜர் கோயிலில் சாமி கும்பிட்டோம். இப்போது அப்ளை செய்யும் போதிலிருந்தே சாமி கும்பிட வேண்டும். பரவாயில்லை ஒரு ஸ்டூடண்ட்டாக நடராஜர் முன் நின்றேன். இன்று ஒரு என்ஜினியர். சைட்டில் 15 பேர் வேலை செய்கிறார்கள். 

தில்லை ஆலயத்தில் கூத்தர்பிரானை வணங்கி விட்டு அட்மினி சென்று விண்ணப்பம் வாங்கி அப்ளிகேஷன் நிரப்பி பெட்டியில் போட்டு விட்டேன். ஓய்வு பெற்ற ஸ்டாஃப்ஃபுக்கு ஃபோன் செய்து விபரம் சொன்னேன். 

மானசீகமாக ஒரு எம். ஈ ஸ்டூடண்ட்டாகவே எண்ணிக் கொண்டேன். வீட்டில் எல்லாரும் ஒரு விதமாக பார்த்தார்கள். 

‘’என்னப்பா இனிமே காலேஜே போக மாட்டன்னு சொன்ன. இப்ப அட்மிஷன் ஆறதுக்கு முன்னாடியே சப்ஜெக்ட் புக்லாம் கலெக்ட் பண்ணி டேபிள் மேல வச்சிருக்க’’

‘’மனுஷ வாழ்க்கைன்னா மாற்றம் இருக்கணும். அன்னைக்கு நான் அப்படி நினைச்சன். அது சரியான முடிவுதான். இப்ப என்னால தொழிலையும் படிப்பையும் மேனேஜ் செய்ய முடியும்னு தோணுது. இதுவும் சரியான முடிவுதான். விவேகம் இருக்கறவன் முன்னாடி ஒரு விஷயம் செஞ்சோம்ங்கறதுக்காக அதை பிடிச்சுக்கிட்டே தொங்க மாட்டான்.’’

‘’நீ பி. ஈ படிக்கும் போதே அசைன்மெண்ட் சப்மிட் பண்றதுண்ணா உனக்கு வேப்பங்காயா கசக்கும். அது ஞாபகம் வந்தது’’

‘’பாஸ்ட் இஸ் பாஸ்ட். லெட் அஸ் லுக் ஃபார் ஃபியூச்சர்’’

பத்து நாளில் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வந்தது. நுழைவுத் தேர்வின் நாளின் நேரமும் குறிக்கப்பட்டிருந்தது. 

நுழைவுத் தேர்வன்றும் காலையில் சிதம்பரம் கோவிலில் நடராஜரைக் கும்பிட்டு விட்டு வந்தேன். 

பத்து மணி தேர்வு நேரம். நான் 15 நிமிடம் முன்னதாகவே டிபார்ட்மெண்ட் சென்றேன். அங்கே இருந்த எழுத்தர் ஹால் டிக்கெட்டைப் பார்த்தார். 

‘’சார் ! மொத்தமா ஆறு அப்ளிகேஷன் தான் வந்திருக்கு. அதுல இப்ப நீங்க மட்டும் தான் என்டிரன்ஸுக்கு வந்திருக்கீங்க. மத்தவங்க வராங்கலான்னு நாம ஒரு மணி நேரம் வெயிட் பண்ணுவோம். நீங்க கேண்டீனுக்குப் போய் டீ சாப்ட்டுட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வாங்க. ’’

கேண்டீனில் டீ குடித்த அனுபவம் தான் பி.ஈ படித்த நாலு ஆண்டுகளும் இருக்கிறதே. மீண்டும் அதே கேண்டீன். அதே டீ யா என சோர்ந்து விட்டேன். 

காலேஜை ஒரு சுற்று சுற்றி வந்தேன். 11 மணிக்கு 3 பேர் மட்டுமே இருந்தோம். அதில் ஒருவர் என்னைப் போல கட்டிட கான்டிராக்டர். இன்னொருவர் கல்லூரி விரிவுரையாளர். 11 மணிக்கு என்டிரன்ஸ் துவங்கியது. அப்ஜெக்டிவ் டைப். வினாக்கள் எளிதாகவே இருந்தன. 45 நிமிடத்தில் முடித்து விட்டோம். 

அங்கிருந்து கிளம்பினேன். கிளம்பும் போது என்னுடன் தேர்வு எழுதிய இரண்டு பேரும் ‘’சார்! அவசியம் கோர்ஸ் ஜாயின் பண்ணிடுங்க.’’ என்றனர். நான் எந்த வாக்குறுதியும் தரவில்லை. 

வண்டியை எடுத்தேன். பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில் ஒரு தியேட்டரில் ஹிந்திப் படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தேன். சிதம்பரத்தில் காலைக் காட்சி 12 மணிக்குப் போடுவார்கள். 3 மணிக்கு படம் முடிந்ததும் வழக்கமாக சிதம்பரத்தில் சாப்பிடும் ஹோட்டலுக்குச் சென்று டிஃபன் சாப்பிட்டேன். 

ஐந்து மணி அளவில் வீடு திரும்பினேன். 

ஓய்வு பெற்ற ஸ்டாஃபுக்கு ஃபோன் செய்து நடந்ததைச் சொன்னேன். 

‘’தம்பி அதப் பத்தி ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்க. அவங்க டைம் எக்ஸ்டென்ஷன் கொடுப்பாங்க. இன்னும் பத்து பேரு அட்மிஷன் ஆக வாய்ப்பு இருக்கு’’

‘’சார் எனக்கே விருப்பம் இருந்து சின்சியரா தான் முயற்சி செஞ்சன். ஆனா கோர்ஸ் ஆரம்பிக்குமான்னே டவுட்டா இருக்கு’’ 

எனது சந்தேகம் உறுதியானது. பார்ட் டைம் எம். ஈ கோர்ஸை ஒரு வருடம் தள்ளி வைத்தனர். அடுத்த ஆண்டும் அது துவங்கவில்லை. அந்த திட்டத்தையே கைவிட்டனர்.   
 

கூடித் தொழில் செய்

எனது தந்தைக்கு நான் B.E  பொறியியல் பட்டம் பெற்றதும் M.E பயில வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. நான் அதனை மறுத்தேன். மாத ஊதியம் பெறும் எந்த வேலைக்கும் செல்வதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். எங்கள் கல்லூரித் தேர்வுகள் மே மாதம் நடைபெறும். பட்டமளிப்பு விழா செப்டம்பரில் நடைபெறும். பொறியியல் பட்டத்தை தபால் மூலம் அனுப்புவதற்கு பணம் செலுத்தி விட்டு வீட்டில் இருந்தேன். அப்போது வாரத்துக்கு இரண்டு நாள் மூன்று நாள் ஏதேனும் ரயிலில் ஏறி 200 கி.மீ தொலைவில் இருக்கும் ஊர்களுக்குச் சென்று அங்கே உள்ள இடங்களைப் பார்த்து விட்டு வருவேன். சமயத்தில் பேருந்திலும் செல்வேன். மோட்டார்சைக்கிள் எடுத்துக் கொண்டும் செல்வேன். பேருந்திலும் ரயிலிலும் உடன் பயணிப்பவர்கள் என்னைப் பற்றி விசாரிப்பார்கள். பொறியியல் பட்டதாரி என்பேன். என்ன உத்யோகம் என்று விசாரித்தால் தொழில் தொடங்கப் போகிறேன் என்பேன். அவ்வாறு அறிமுகப்படுத்திக் கொள்வது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அந்த நாட்களில் ஒருமுறை ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வந்தது ஞாபகம் இருக்கிறது. மோட்டார்சைக்கிளில் நார்த்தாமலை, சித்தன்னவாசல் ஆகிய ஊர்களுக்கு சென்று வந்ததும் நினைவில் உள்ளது. அடிக்கடி திருச்சி சென்று வருவேன். இன்னும் பல ஊர்கள். மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு சிவாலயத்துக்கோ பெருமாள் கோயிலுக்கோ தினமும் சென்று வருவேன். இங்கே உள்ள பெரிய கோவில்கள் அனைத்துமே குறைந்தபட்சம் 1200 ஆண்டுகள் பழமையானவை. எங்கள் பிரதேசத்தில் நான் போகாத சாலைகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவில் பயணம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவ்வகையான பயணங்கள் மனதின் அக ஆற்றலைக் கிளறி விடும். பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் பெருக்கெடுக்கச் செய்யும். பல கனவுகளைத் தோற்றுவிக்கும். சில மாதங்களில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலேறி தில்லி சென்று அங்கிருந்து ஹரித்வார் சென்றேன். கங்கை நதியில் மூழ்கி எழுந்தேன். கங்கை ஒரு பெருங்கனவு. நினைவு தெரிந்த நாள் முதல் கங்கையின் கதையைக் கேட்டிருக்கிறேன். அதாவது , பட்டதாரி ஆன பின்னர், ஓராண்டு சமூக சூழலை அவதானிப்பது என முடிவு செய்திருந்தேன். அவ்வாறே செய்தேன். 

தொழில் தொடங்க முடிவு செய்து எனது தந்தையிடம் சென்று எனது திட்டங்களைத் தெரிவித்தேன். ஒரு அபார்ட்மெண்ட் கட்ட வேண்டும் என்பது எனது விருப்பம். 

‘’பிரபு! அபார்ட்மெண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் ரொம்ப பெரிய ஒர்க். அத செய்ய உனக்கு இப்ப அனுபவம் போதாது.’’

‘’அதான் நீங்க இருக்கீங்களே’’

‘’என்னோட ஃபார்மட் வேற. எனக்கு நீ சொல்ற விஷயத்துலல்லாம் நம்பிக்கை இல்லை’’

நான் தட்டிய முதல் கதவே திறக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளித்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

என்ன செய்யலாம்? தந்தையுடன் இருந்து தந்தைக்கு உதவ வேண்டும் அல்லது வேறு எங்கேனும் வேலைக்குச் செல்ல வேண்டும். வேலைக்குச் சென்று மாத ஊதியம் பெறுவதா? அதை எக்காரணம் கொண்டும் செய்து விடக் கூடாது. ஒரு தொழில் முனைவோனாக ஆக வேண்டும் என்ற கனவை விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதால் தந்தை சொல்வதைக் கேட்டு நடந்து கூடிய விரைவில் என் திட்டங்களின் சாத்தியக்கூறுகளை அவருக்குப் புரிய வைப்பது என்று முடிவு செய்தேன். நாள் முழுவதும் தந்தையுடன் கட்டுமானப் பணியிடத்தில் இருப்பேன். என் விருப்பங்களைக் கைவிடுமாறு தந்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்வதை கேட்டுக் கொள்ள வேண்டுமே தவிர என்னால் எதுவுமே சொல்லவோ பேசவோ முடியாது. உற்சாகம் எழும் கனவுகள் கொண்ட மனம் மௌனமாக அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தது. வீட்டில் இருந்த ஓராண்டில் எனக்குத் தெரிந்தவர்கள் வேண்டியவர்கள் அனைவரிடமும் ஒரு அபார்ட்மெண்ட் கட்டப் போவதாக சொல்லியிருந்தேன். பார்ப்பவர்கள் அனைவரும் அதனைப் பற்றி விசாரிப்பார்கள். நான் காலை 7 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி பணியிடம் சென்று விட்டு இரவு 8 மணிக்கு வீடு திரும்புவேன் என்பதால் பலரைச் சந்திக்க வாய்ப்பு இருக்காது. அதையும் தாண்டி யாரையேனும் பார்த்தால் முதல் கேள்வியே இதுதான்.  பணியிடத்தில் நான் தினமும் பல விஷயங்களைக் கற்று வந்ததால் என்றோ ஒருநாள் நான் எண்ணியதை எய்துவேன் என்ற உறுதியுடன் இருந்தேன். 

இரண்டு ஆண்டுகள் சென்றது. அபார்ட்மெண்ட் கட்ட இரண்டு கிரவுண்டு இடத்தை வாங்கினேன். அது முதல் படி. கட்டிட அனுமதி பெற வேண்டும். அப்பாவிடம் ஆலோசனை கேட்டேன். 

‘’பிரபு ! நீதான் அபார்ட்மெண்ட் அபார்ட்மெண்ட்-ன்னு சொல்ற . என் மனசுல அப்படி எல்லாம் எதுவும் இல்லை. இந்த அப்ரூவல் பிராசஸ்-லாம் ரொம்ப கஷ்டமானது. என்னால உனக்கு இந்த விஷயத்துல எந்த உதவியும் செய்ய முடியாது’’

தட்டித் திறக்காத பல கதவுகள் எனக்கு அனுபவமாகியிருந்தது. இது மேலும் ஒரு கதவு. அவ்வளவே. 

தொடர் முயற்சிக்குப் பின், கட்டிட அனுமதி பெற்றேன். இப்போது அதன் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. அப்போது அது பல அடுக்குகளைக் கொண்ட நிர்வாக நடைமுறை. முட்டுக்கட்டைகள் அதிகம். 

ஒருநாள் தந்தையிடம் கட்டிட அனுமதி வரைபடத்தைக் காட்டினேன். அவரால் நம்ப முடியவில்லை. அதன் பின் தான் , அபார்ட்மெண்ட் என்பது குறித்து அவர் மனதுக்குள் கொண்டு சென்றார். 

‘’பிரபு ! நாம கன்ஸ்ட்ரக்‌ஷன் நடக்கற மூணு நாலு அபார்ட்மெண்ட்டை போய் பார்ப்போம். நேரா பாக்கறது நல்லது.’’ 

மூன்று ஆண்டுகளுக்கு மேல் தந்தையிடம் பணி புரிந்ததால் எனக்கு அவரின் மனம் இயங்கும் விதமும் அவருடைய எதிர்பார்ப்புகளும் தெரியும். அவர் எந்த விஷயத்திலும் ‘’பெர்ஃபெக்‌ஷன்’’னை எதிர்பார்க்கக் கூடியவர். ‘’மைக்ரோ டீடெயில்ஸ்’’ வேண்டும் என நினைப்பவர். எனவே அவருடன் செல்வதற்கு முன் பார்வையிட வேண்டிய இடங்களை ஒருமுறை நான் சென்று பார்த்து வந்தேன். மூன்று ஊர்கள். கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம். அந்த ஊர்களின் அபார்ட்மெண்ட் சைட்களின் விபரங்கள், எத்தனை கிரவுண்டு, எத்தனை வீடுகள் கட்டுகிறார்கள், பயன்படுத்தும் சிமெண்ட் , ஸ்டீல் என்ன, லேபர் சம்பளம் என்ன, தின ஊதியமா கான்டிராக்ட்டா, என்ன விலைக்கு அபார்ட்மெண்ட் விற்க உத்தேசித்துள்ளார்கள், என பல விபரங்களை சேகரித்து ஒரு அட்டவணையாகப் போட்டுக் கொண்டேன். பலமுறை படித்து அந்த விபரங்களை மனப்பாடம் செய்தேன். 

எங்கள் மாருதி ஆம்னியில் சென்றோம். வண்டியை நான் ஓட்டாமல் டிரைவர் ஒருவரை ஏற்பாடு செய்து ஓட்டச் செய்தேன். முதல் நாள், கும்பகோணமும் தஞ்சாவூரும். அடுத்த நாள் சிதம்பரம் என முடிவு செய்திருந்தோம். டிரைவருக்கு ஒரு வரைபடம் போட்டுக் கொடுத்து முதலில் எந்த சைட் செல்ல வேண்டும் அடுத்தடுத்து எந்த சைட் என இலக்கமிட்டுக் கொடுத்திருந்தேன். தந்தையிடம் அபார்ட்மெண்ட் கட்டுவதன் நேர்மறையான விஷயங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்தேன். நாங்கள் இருவரும் பின்னால் அமர்ந்து பேசிக் கொண்டு வருகிறோம். 

கும்பகோணத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த எல்லா அபார்ட்மெண்ட் சைட்டையும் அப்பாவுக்குக் காண்பித்தேன். விபரங்களைச் சொன்னேன். அவர்கள் யாரிடமும் எதுவும் விசாரித்து அறிய தேவையின்றி எல்லா விபரமும் நானே சொல்லி விட்டேன். அவர் மனம் அபார்மெண்ட் கட்ட சாதகமாகத் திரும்பியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். திருப்தியுடன் வீடு திரும்பினோம். 

‘’பிரபு! இன்னைக்கு நாம பாத்த சைட் , அதோட கன்ஸ்ட்ரக்‌ஷன் விபரங்கள், மத்த டீடெயில்ஸ் எல்லாம் ஒரு டேபுளர் காலம்- ஆ போடணும்’’

முன்னரே நான் தயாரித்திருந்த அட்டவணையை அவரிடம் வழங்கினேன். 

அப்பாவிடம் கேட்டேன் : ‘’நாளைக்கு சிதம்பரத்துல உள்ள அபார்ட்மெண்ட் சைட் பாத்துடுவோமா? டிரைவரை எத்தனை மணிக்கு வரச் சொல்ல?’’

‘’நீ பாத்து விசாரிச்சிட்ட இல்ல. அதுவே போதும். டீடெயில்ஸ் மட்டும் கொடு’’

Wednesday 17 November 2021

ஆறாவது நாள்

 இன்று ஆறாவது நாள். 

சில விஷயங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளும் போது, நம் மனம் அவற்றை முழுக்க உள்வாங்குகிறது. முழுமையாக ஒன்று அறியப்படும் போது அது எளிதில் கைகூடுகிறது. செய்யும் செயலில் முழுதாக ஈடுபட வேண்டும். எண்ணத்தையும் கவனத்தையும் வேறு எங்கும் சிதற விடாமல். 

நேற்று உணவளிக்கச் செல்லும் போது, அங்கே இருந்த மக்கள் அவர்கள் தெருவில் இருக்கும் பழைய சப்தமாதா கோவிலை புதிதாகக் கட்டித் தருவதில் ஏதேனும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டனர். நான் அது குறித்து சிந்திக்கிறேன் என்று சொன்னேன். நேற்றும் இன்றும் அது பற்றி யோசித்தேன். 

இந்திய நிலமெங்கும் சப்த கன்னியர் வழிபாடு உண்டு. இறையின் அம்சம் கொண்ட இறைத்தன்மை மிக்க ஏழு கன்னிப் பெண்கள். கன்னிமையில் வேர் கொண்டிருக்கும் இறைத் தன்மைக்கு அளிக்கப்பட்ட உருவங்கள். பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி,வராகி, இந்திராணி, சாமுண்டி என்ற ஏழு தெய்வங்கள். ஆதி பராசக்தியின் கன்னி ரூபங்கள். வெண்ணிற உடை உடுத்து ஸ்படிக மாலையைக் கரத்தில் ஏந்தியிருக்கும் பிராம்மி முதல் கபால மாலை அணிந்து பிணத்தின் மேல் அமர்ந்திருக்கும் சாமுண்டி வரை. ஞானம், சக்தி, ஆற்றல், செல்வம்,வளர்ச்சி, வல்லமை, அஞ்சாமை ஆகிய இயல்புகளின் தெய்வங்கள். 



இன்று கிராம மக்களிடம் ஒரு விஷயம் சொன்னேன். அந்த தெருவில் இருக்கும் குறைந்தபட்சம் 50 பெண்கள் இப்போது இருக்கும் சப்தமாதா ஆலயத்தில் நாற்பத்து எட்டு தினங்களுக்கு மாலை 5.50 முதல் 6.10 வரை ’’அபிராமி அந்தாதி’’  பாராயணம் செய்யச் சொன்னேன். சிறுமிகள், இளம் பெண்கள், மூதாட்டிகள் என எவரும் பங்கு பெறலாம். சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட - மக்களுக்குள் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் ஏற்பட இது வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கை. அவ்வாறு அவர்களுக்குள் ஓர் ஒருங்கிணைப்பு ஏற்படுமானால் அவர்கள் எழுப்ப விரும்பும் ஆலயம் விரைவில் எழக் கூடும். 

‘’அபிராமி அந்தாதி’’ தமிழின் சிறந்த நூல்களில் ஒன்று. தமிழின் சிறந்த நூல் ஒன்றை 50 பேரிடம் கொண்டு சேர்த்ததாகவும் இருக்கும். அவர்கள் நோக்கமும் நிறைவேறும். எனக்கு ஒரு எண்ணம் உண்டு. நம் மரபில் , காலை எழுந்தவுடன் சொல்லக் கூடிய ஒரு சுலோகம் உண்டு. ‘’கராக்ரே வசதே லஷ்மி’’ எனத் தொடங்குவது. நீராடும் போது சொல்லக் கூடிய சுலோகம் உண்டு. கங்கேச யமுனா’’ . உணவருந்தும் முன் சொல்லக் கூடிய சுலோகம் உண்டு. ‘’பிரம்மார்ப்பணம் பிரம்ம ஹவிர்’’ . அவ்வாறே மாலை அந்தியில் , இரவு உறங்கப் போகும் முன் என சொல்லப்படும் சுலோகங்கள் உண்டு. 

காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளைப் பார்த்து சொல்லும் ‘’கராக்ரே வசதே லஷ்மி ‘’ என்ற சுலோகம் கைகளே நம் கடவுள் என்கிறது. மனிதக் கையால் நுட்பமான பல வேலைகளைச் செய்ய முடியும். கைகளுக்கு அந்த நுட்பம் கூடிய பின்னரே மானுடம் மகத்தான தாவலை தன் பரிணாமத்தில் எட்டியது. நதிகளே உணவாகவும் நீராகவும் மாறி வாழ்வளிக்கின்றன. மனித வாழ்க்கை என்பது சக ஜீவன்களுடன் இணைந்து வாழ்வதே. முழுமையான இணைவும் ஒத்திசைவும் ஏற்படும் போது மானுடம் முழுமை பெறும். 

தமிழ்ச் சமூகத்தில், மரபின் மேல் கடும் தாக்குதல் நூறாண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. சமயத்தின் மேல், இலக்கியத்தின் மேல், பாரம்பர்யமான அறிவியல் அறிவின் மேல் என அது விரிந்து கொண்டே செல்கிறது. இப்போது, இங்கே யாருக்குமே மரபின் மீதான பயிற்சி கிடையாது. அத்தகைய அறிமுகமும் பயிற்சியும் இங்கே அளிக்கப்பட வேண்டும். அதற்கு இவ்வகையான முன்னெடுப்புகள் உதவும் என்பது எனது நம்பிக்கை. 

நான் நாடெங்கும் பயணம் செய்திருக்கிறேன். இந்த கணம், நான் சென்ற எண்ணற்ற ஊர்களின் ஆலயங்களை எண்ணிப் பார்க்கிறேன். காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், லெபாக்‌ஷி வீரபத்ரர் ஆலயம், மந்த்ராலயம் ராகவேந்திர சுவாமி அதிஷ்டானம், ஓம்காரேஷ்வர், உஜ்ஜைனி மகா காலேஸ்வரர், ரிஷிகேஷின் கங்கை அன்னை என எத்தனையோ இடங்கள். பெண்கள் தங்கள் குடும்பத்துக்காக குழந்தைகளுக்காக கணவனுக்காக எனக் கடவுளிடம் வேண்டிக் கொண்டு பிராத்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். பெண் எப்போதும் மற்றவர்களுக்காகவே பிராத்திக்கிறாள். அதனால் தான் இந்திய மரபு பெண்மையை தெய்வ சொரூபமாக வணங்குகிறது. 

நிகழ்வில் பங்கேற்கும் பெண்களை, அந்த ஆலயத்தில் நாற்பத்து எட்டு நாட்களும் ஆளுக்கு ஒரு தீபம் ஏற்றச் சொல்லலாம். கார்த்திகை மாதம் தீபங்களின் மாதம். நவீன வாழ்க்கை மனிதனை வெறும் நுகர்வோனாக மட்டுமே இருக்கச் செய்ய விழைகிறது. மரபு வாழ்க்கைக்கு வெவ்வேறு விதமான தன்மைகளை கூறுகளை அம்சங்களை அளித்தவாறே உள்ளது. 

எழுத்துக்கள் ‘’அ’’ என்ற எழுத்தை அடிப்படையாகவும் முதலாகவும் கொண்டிருப்பது போல செயல்களில் முதற் செயல் தீபம் ஏற்றுதல். மானுட வரலாற்றில் தீயை மனிதன் பயன்படுத்தத் தொடங்கிய பின் தான் அவன் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழத் தொடங்கின. தீபம் ஏற்றுதல் அனாதி காலமாகத் தொடரும் ஒரு மரபு. 

சக மனிதர்கள் மேல் என்றும் கொண்டிருக்கும் நம்பிக்கையின் வலிமையில் இந்த பணியை முன்னெடுக்கவும் ஒருங்கிணைக்கவும் உள்ளேன். 

Tuesday 16 November 2021

ஐந்தாம் நாள்

இன்று காலை கிராமத்துக்குச் சென்று நண்பரைச் சந்தித்தேன். சென்னை நிகழ்ச்சியின் விபரங்களைக் கூறி பேசிக் கொண்டிருந்தேன். காலை 7 மணிக்குச் சென்றேன். ஒன்பது மணி ஆகி விட்டது. காலை உணவு அருந்தி விட்டு புறப்படச் சொன்னார்கள். சமையல்காரர்கள் ஃபிளாட்டுக்கு வந்து விடுவார்கள் ; மளிகைப் பொருட்களும் காய்கறியும் வாங்கித் தர வேண்டும் என்று சொல்லி விட்டு புறப்பட்டேன். வீட்டுக்கு வந்தால் அவர்கள் வந்து சேர்ந்திருக்கவில்லை.  குளித்து உணவருந்தி காணொளியைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களின் மோட்டார்சைக்கிள் சத்தம் கேட்டது. மளிகை காய்கறிப் பட்டியலைக் கொடுத்தார்கள். அரைமணி நேரத்தில் அவற்றை வாங்கிக் கொண்டு வந்து அவர்களிடம் அளித்தேன். 

இன்றைய மெனு தக்காளி சாதம். ‘’தம்’’ முறையில் தயாரித்தனர். 

மாலை கிராமத்துக்குச் சென்று அளித்தேன். அங்கே உள்ள நண்பர் நாளைய உணவுக்குத் தேவையான 50 எலுமிச்சைப் பழங்களை அவருடைய தோட்டத்திலிருந்து கொண்டு வந்து தந்தார். 

சில இளைஞர்களும் பெண்களும் என்னிடம் வந்து இன்று ஐந்தாவது நாள் அல்லவா என்று கேட்டார்கள். அவர்கள் கூற்றை ஆமோதித்தேன். அனைவரும் மகிழ்கிறார்கள் என்று சொன்னார்கள். நன்றி என்று சொன்னேன். 

Monday 15 November 2021

சென்னை உரை


 

நான்காம் நாள்

இன்று காலையில் நேற்று சென்னைக் கருத்தரங்கில் ஆற்றிய உரையை தளத்தில் பதிவிட்டேன். நண்பர்கள் உரையைக் காணொளியாகக் கண்டு விட்டு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அடுத்தடுத்த அழைப்புகள். மின்னஞ்சல்கள். திருவிழா போல் இருந்தது இன்று. இந்த உற்சாகத்தை ஏதேனும் செயலாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. 

இன்று சமையல்காரர்கள் தாமதமாகப் பணிக்கு வந்தனர். அவர்களுக்கு நேரம் , பணி , எனது எதிர்பார்ப்பு ஆகியவை புரிந்து விட்டதால் தாமதமாக வந்தாலும் குறித்த நேரத்தில் பணியை செய்து முடிப்பார்கள் என்பதை நான் உள்ளுணர்வால் உணர்ந்திருந்தேன். என் மனநிலையை அவர்களும் அவ்வாறே உணர்ந்திருப்பார்கள். இன்று எலுமிச்சை சாதம் என்பதால் பணி சற்று எளிது. 

சமையல்காரர்களுடன் சில நாட்கள் இருந்து சமையல் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்த சில நாட்களாக தோன்றிக் கொண்டிருக்கிறது. சிறுவனாயிருக்கும் போது இப்படியெல்லாம் தோன்றும். இன்னும் மனதுக்குள் அந்த சிறுவன் இருந்து கொண்டிருக்கிறான். அவ்வப்போது தன் இருப்பைக் காட்டுகிறான். 

வீட்டில் நான்கு பேருக்கு சமைப்பது என்பது சின்ன பாத்திரத்தில் சின்னச் சின்ன அளவுகளில் தானியங்களைத் தண்ணீரை எண்ணையை எடுத்துக் கொண்டு சமைப்பது. அனைத்துமே சட் சட் என நடந்து விடும். 500 பேருக்கு சமைக்கும் போது நாம் சமையலைக் கவனிக்க நேரம் அதிகம் கிடைக்கும். தண்ணீர் கொதிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு நேரம் ஆகும். எண்ணெய் சட்டியில் எண்ணெய் கொதிக்க நேரம் ஆகும். அப்போது அதில் இடப்படும் மளிகைப் பொருட்களின் நறுமணம், நிற மாற்றம் ஆகியவை பல விஷயங்களைத் தானாகவே சொல்லித் தரும். இந்த உணவிடுதலுக்குப் பின் தினமும் வீட்டில் சமையல் வேலைக்கு உதவுவேன் என்றே நினைக்கிறேன். 

வங்கியில் கொஞ்சம் பணிகள் இருந்தன. சென்று வந்தேன். 

மாலை 5.30க்கு கிராமத்துக்குச் சென்று உணவிட்டு வந்தேன். 

மூன்றாம் நாள்

கடந்த 20 மாதங்களாக, ஊரிலிருந்து வடக்கு திசை நோக்கி செல்லும் பயணங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. இரண்டு முறை கடலூர் சென்று திரும்பினேன். ஒரு முறை சிதம்பரம். இரு முறை திருச்சோபுரம் என்ற ஊர். இவை தவிர எங்கும் செல்லவில்லை.  

நேற்று சென்னை பயணமானேன். முதல் நாள் இரவு 9 மணி வரை உணவிடுதல் தொடர்பான பணிகள் இருந்தன. எல்லாவற்றையும் முடித்து விட்டு வந்த போது உடல் சோர்ந்து சலித்துப் போயிருந்தது. காலை 3 மணிக்கு அலாரம் வைத்து விட்டு உறங்கி விட்டேன். 

காலையில் எழுந்ததும் பயணத்துக்கு ஆயத்தமானேன். 

உள்ளூரில் எங்காவது வெளியே கிளம்பும் போது எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டோமோ என்ற எண்ணம் ஏற்படாது. ஆனால் வெளியூர் என்றால் என் மனம் சற்று அமைதியற்று இருக்கும். பயணம் தொடங்கி சில நிமிடங்களில் அது சரியாகி விடும். காலை 4.30க்கு பேருந்து நிலையம் சென்று விட்டேன். ஐந்து மணிக்கு ஒரு புதுச்சேரி விரைவுப் பேருந்து வந்தது. அது 8 மணிக்கு புதுச்சேரியில் கொண்டு போய் விட்டது. காலை உணவை அங்கே அருந்தினேன். 8.30 க்கு சென்னை செல்லும் குளிர்சாதன வண்டி ஒன்றில் ஏறி அமர்ந்தேன். பயணிகள் மிகக் குறைவாகவே இருந்தனர். இருக்கைக்கு பக்கத்தில் பெரிய கண்ணாடி. பயணம் மிக லகுவாக சொகுசாக இருந்தது மனதுக்கு தெம்பாக இருந்தது. 

சமையல் பணியாளர்கள் வந்து பணியைத் துவங்கி விட்டனர் என கல்லூரிப் பேராசிரியரான நண்பர் குறுஞ்செய்தி அனுப்பினார். ஒரு பொறுப்பை ஏற்று விட்டால் என் மனம் அதையே சுற்றி சுற்றி வரும். நண்பர் இருக்கிறார் என்பதால் ஓய்வாக இருந்தேன். 

சென்னைக் கருத்தரங்கில் மாலை அமர்வில் பேச வேண்டும். பேசி முடித்த பின் அலைபேசியைப் பார்த்தேன். நண்பரின் குறுஞ்செய்தி வந்திருந்தது. வெஜிடபிள் சாதம் தயாரித்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று நண்பர் கிராமத்தின் 500 பேருக்கு வினியோகித்திருக்கிறார் என. அவருக்கு நன்றி தெரிவித்து பதில் குறுஞ்செய்தி அனுப்பினேன். 

Saturday 13 November 2021

இரண்டாம் நாள்

தமிழ்நாட்டில் ஒரு பொதுவான நம்பிக்கை உண்டு. முதல் நாள் பணியைப் போலவே இரண்டாம் நாள் பணியும் முக்கியமானது என. முதல் நாள் உருவாக்கித் தரும் துவக்க வேகத்தை முன்னெடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையை இரண்டாம் நாளில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  

இன்று காலை கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள எனது நண்பரிடம் முதல் நாள் விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும் எண்ணம். நான் சென்ற போது அவர் பூஜை செய்து கொண்டிருந்தார். ஐம்பது ஆண்டுகளாக காலையில் இருபது நிமிடங்கள் பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு எண்பது வயது.  கூடத்தில் ஒரு பகுதி பூஜை அறை. நான் அமைதியாக அமர்ந்திருந்து யோசித்துக் கொண்டிருந்தேன். 

பூஜை முடித்து விட்டு நண்பர் வந்தார். நண்பரின் வீட்டுக்கார அம்மா எனக்கு ஒரு தஞ்சாவூர் ஃபில்டர் காஃபி கொண்டு வந்தார்கள். அவர்களுடைய சொந்த ஊரே தஞ்சாவூர். 

‘’அம்மா! இன்னையோட சரியா 43 நாள் ஆகுது காஃபி, டீ, பால் தவிர்த்து. இருந்தாலும் பிரியமா கொண்டு வந்துட்டீங்க. பரவாயில்லை’’

கையில் பூஜைத்தட்டுடன் கோயிலுக்குப் புறப்பட்டார். 

‘’என்னம்மா வழக்கமா சாயந்திரம் தானே கோயிலுக்குப் போவீங்க. இன்னைக்கு என்ன காலையிலயே?’’

’’இன்னைக்கு குருப்பெயர்ச்சி’’

‘’ஓ அப்படியா’’

நண்பர் நேற்று நடைபெற்ற பணி குறித்து கேட்டுக் கொண்டிருந்தார். சட்டென தனது சொந்த அனுபவம் ஒன்றை என்னிடம் சொன்னார். 

‘’என்னோட அப்பா ரொம்ப கரடுமுரடானவர் பிரபு. கடுமையானவர். அவர பாத்து வளந்ததால நான் எந்த விதமான ஹார்டுனெஸ்ஸையும் மனசுல வச்சுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணன். சாஃப்ட்டா இந்த உலகத்தை அணுகிறவங்க தான் வலிமையானவங்க. இத்தனை வருஷ வாழ்க்கையில நான் உணர்ந்த விஷயம் இது’’

சமையல்கட்டில் வாணலியில் ஏதோ பொறியும் சத்தம் கேட்டது. 

‘’சார் அம்மா வாணலியில எதையோ வச்சுட்டு போயிருக்காங்க’’

அவர் சமையல் கட்டுக்குள் சென்றார். 

‘’அவங்களுக்கும் வயசாகுதில்லையா. மறந்திட்டாங்க. எப்படி உங்களுக்கு மட்டும் சத்தம் கேட்டது தெரிஞ்சது?’’

’’சார் நேத்து முழுக்க ஃபுட் பிரிபேர் பண்ண இடத்துல இருந்திருக்கன். வாணலி சூடாகி அதில் உணவுப் பொருள் இருந்தா என்னென்ன மாதிரி சத்தம் போடும்னு நேத்து முழுக்க அந்த சத்தங்களை கேட்டுக்கிட்டு இருந்தன்.’’

கொஞ்ச நேரம் ஆனது. 

நண்பரின் மனைவி வந்தார். அவர் உள்ளே நுழைந்ததுமே , ‘’அம்மா ! எண்ணெய் சட்டி அடுப்பில இருக்கும் போது ஆஃப் பண்ணாம கோயிலுக்குப் போய்ட்டீங்க. சார் தான் ஆஃப் செஞ்சார்’’ என்றேன். 

அவர் சமையல்கட்டுக்குள் அவசரமாக சென்றார். 

‘’பிரபு ! நான் ஸ்கூல் படிக்கும் போது படிச்ச ஒரு திருக்குறள் என் மனசை பாதிச்சுது. அதுல இருந்து நான் மாமிசம் சாப்பிடறதை நிறுத்திட்டேன். எங்க வீட்ல எல்லாரும் மாமிச உணவு சாப்பிடறவங்க. எங்க அம்மா எனக்கு மட்டும் சைவ உணவு கொடுக்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. பல நாள் அவங்களை சிரமப்படுத்த வேணாம்னு மோர் சாதம் மட்டுமே சாப்பிடுவேன். எனக்கு கல்யாணம் ஆன பிறகு எனக்காக ஒய்ஃபும் மாமிசம் சாப்பிடறதை நிறுத்திட்டாங்க.’’ 

நான் வாழ்க்கைக் காட்சிகளின் சம்பவங்களின் நூதனம் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். 

‘’சார் ! எனக்கு ஒரு ஐடியா இருக்கு. அத நீங்க தான் எக்ஸிகியூட் பண்ணனும்’’

‘’என்ன விஷயம்?’’

‘’நான் இங்க ஒரு மீட்டிங் அரேன்ஞ் செய்யறன். நூறு பெண்கள் கலந்துக்கற மாதிரி. நீங்க இத்தனை வருஷமா செய்யற பூஜையைப் பத்தி நீங்க ஸ்பிரிச்சுவாலிட்டின்னு உணர விஷயங்கள் பத்தி அவங்களுக்குச் சொல்லுங்க’’

‘’நான் ரொம்ப சாதாரண ஆள் பிரபு’’ 

‘’சாதாரணமானவங்க எந்த விஷயத்தையும் சரியா புரிஞ்சவங்களா கூட இருப்பாங்க சார்’’

‘’நாம சமயப் பிரச்சாரம் செய்யற யாரையாவது கூப்ட்டு மீட்டிங் அரேஞ்ச் செய்வோம்’’

‘’இல்லை சார் ! நீங்களே பேசுங்க. நீங்க விவசாயி. இந்த ஊர்ல இருக்கற நிறைய பேரு உங்களுக்கு சொந்தக்காரங்க. நீங்க சொல்ற விஷயங்களை ஆர்வமா கேட்பாங்க. நூறு பேர்ல பத்து பேரு நீங்க சொல்ற விஷயங்களை கன்சிடர் பண்ணாக் கூட அதுவே பெரிய சக்ஸஸ் சார்’’ 

நண்பருக்கு நான் என்ன சொல்கிறேன் என்பது முழுதும் பிடிபடவில்லை. 

‘’சார் ! ஒரு திருமந்திரப் பாடல் இருக்கு.

 யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை 

யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை 

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே 

நீங்க கேட்டிருப்பீங்க. முதல் லைன் பூஜை - ஆலய வழிபாடு போன்ற வழிமுறைகள் தொடர்பானது. ரெண்டாவது லைன் நம்மோட சக ஜீவன்கள் மேல காட்டுற பிரியம் அன்பு தொடர்பானது. மூணாவது லைன் சக மனுஷங்கள் மேல நாம எடுத்துக்கற பொறுப்பு அக்கறை அன்பு தொடர்பானது. கடைசி லைன் நம்மோட சோஷியல் இண்டெலிஜென்ஸ் தொடர்பானது. இந்த நாலுமே உங்க லைஃப்ல இருக்கு. உங்களுக்கு சாத்தியம் ஆனது எல்லாருக்கும் சாத்தியம் தான். இந்த நாலும் ஒவ்வொருத்தருக்கும் சாத்தியம் ஆகணும்னு கட்டாயம் இல்லை. நாலுல ஒன்னு அவங்களுக்கு ஓப்பன் ஆனாலோ பிராக்டிஸ் ஆனாலோ அதுவே கிரேட் திங்’’

நண்பர் என்னிடம் ‘’உங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கு. நீங்களே பேசுங்க.’’ என்றார். 

’’நாம டிஸ்கஸ் பண்ணி என்ன விஷயம் பேசனும்னு முடிவு பண்ணுவோம். நீங்க பேசுங்க. அதான் கரெக்ட்டா இருக்கும்.’’

நண்பர் சம்மதித்தார். 

‘’மீட்டிங்கை நான் டிசைன் செய்றன். ஆலயத் தூய்மை, எறும்புகளுக்கும் காக்கை பட்சிகளுக்கும் உணவிடுதல், தீப வழிபாட்டின் தொன்மை, சக மனுஷங்க கிட்ட கனிவா நடந்துக்கறது, வீட்டுல மலர்ச்செடிகளை வளக்கறது , மரம் வளக்கறதுன்னு இந்த விஷயங்களை நீங்க பேசணும். இந்த மாதிரி விஷயங்கள் தான் சார் நம்ம நாட்டோட ஆன்மீகம்’’ 

நண்பர் ஆமோதித்தார். 

‘’மீட்டிங் முடிஞ்சு அவங்க போகும் போது ஒவ்வொருத்தருக்கும் ஒரு வன்னி மரக் கன்னு கொடுத்து வீட்டுல வச்சு வளர்க்க சொல்லுவோம். ஒரே நாள்ல நூறு மரக்கன்னு ஊர்ல பிளாண்ட் ஆகும்’’ 

அடுத்த திட்டம் உருவான மகிழ்ச்சியுடன் புறப்பட்டேன். 

இன்று 500 பேருக்கு கிச்சடி செய்து எடுத்துக் கொண்டு மாலை 5.30க்கு கிராமத்துக்குச் சென்று வினியோகித்தோம். கல்லூரிப் பேராசியரான எனது நண்பரும் உடன் வந்து வினியோகித்தார். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அரைமணி நேரத்தில் கொண்டு சென்ற உணவு தீர்ந்தது. வீடு திரும்பும் போது, நண்பர் நாளை எலுமிச்சை சாதம் அல்லது வெஜிடபுள் சாதம் செய்து கொண்டு செல்வோம் என்றார். 



Friday 12 November 2021

முதல் நாள்

இன்று காலை விழித்தெழுந்ததிலிருந்தே ஒரு நிமிடமும் ஓயாத பணிகள். அங்கும் இங்கும் அலைந்து கொண்டேயிருந்தேன். நேற்று சமையல்காரர்கள் இன்று மாலை உணவு தயாரித்தலுக்குத் தேவைப்படும் மளிகை மற்றும் காய்கறிகளின் பட்டியலை அளித்து விட்டுச் சென்றிருந்தனர். மளிகை மொத்த வியாபாரி ஒருவரின் கடைக்குச் சென்று அவரிடம் விஷயத்தை விளக்கி பட்டியலை அளித்து விட்டு வந்தேன். அவர் அனைத்தையும் எடுத்து வைத்து  விட்டு ஃபோன் செய்கிறேன் என்றார். வாடகை பாத்திரக் கடைக்குச் சென்று அடுப்பு, தவளை, வாளி ஆகியவற்றை வாடகைக்கு எடுத்து வந்தேன். காய்கறிக் கடையில் காய்கறி , இலை ஆகியவற்றை வாங்கினேன். இதற்கே மதியம் 1 மணி ஆகி விட்டது. சமையல்காரர்கள் வருவதற்கும் நான் டாடா ஏசில் மளிகைப் பொருட்களை ஏற்றி வருவதற்கும் சரியாக இருந்தது.  

இன்று புளிசாதம் தயாரித்து வழங்க உத்தேசித்திருந்தோம். புளி ஊறவைக்கப்பட்டது. நிலக்கடலையைப் புடைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்குள் எரிவாயு சிலிண்டர் ஏற்பாடு செய்து கொடுத்தேன். 

முதல் நாள் பணி என்பது அதிக கவனம் தரப்பட வேண்டியது. சில நாட்களோ அல்லது பல நாட்களோ தொடர்ந்து நடைபெற வேண்டிய பணி என்றால் முதல் நாள் நினைவுகள் எல்லாருடைய மனத்திலும் இருக்கும். அதனால் எந்த சங்கடமும் இன்றி சுமூகமானதாக முதல் நாள் இருப்பது யாவர்க்கும் நலமானது. முதல் நாளில் சேகரமாக வேண்டியவை சேகரமாகி நிகழ வேண்டியவை கிரமமாக நிகழ்ந்தால் அந்த நாளின் ஓட்டத்தையே அப்படியே தொடர்ந்து விடலாம். 

என்னுடைய வீட்டுக்குப் பக்கத்திலேயே எனக்கு சொந்தமான ஒரு ஃபிளாட் இருக்கிறது. 1250 சதுர அடி பரப்பு கொண்டது. பெரிய விசாலமான வெளிச்சம் மிக்க ஃபிளாட்.  அதில் எனது கட்டுமான நிறுவனத்தின் எலெக்டிக் பிளம்பிங் பொருட்களை அடுக்கி வைத்து ஒரு குடோன் போல பயன்படுத்துகிறேன். ஃபிளாட்டின் ஒரு அறையில் அந்த பொருட்களை எடுத்து வைத்து விட்டு கூடத்தையும் பெரிய அறை ஒன்றையும் சமையலறையையும் பயன்படுத்திக் கொள்ள சமையல்காரகளிடம் சொன்னேன். சமையல் அங்கு நடைபெறுவது மனதுக்கு மகிழ்ச்சி தந்தது. எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் சொல்வார் : ‘’வீடு என ஒன்று இருக்குமானால் அதில் பலவிதமான நற்செயல்கள் நிகழ வேண்டும் ’’. அவர் சொன்னது இப்போது என் நினைவுக்கு வந்தது. 

அண்டாக்களில் தண்ணீர் கொதித்தது. புளியைக் காய்ச்சினார்கள். சமையல் நடைபெறும் இடத்திலேயே இருந்தேன். அவ்வப்போது ஏதேனும் தேவையா என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். மதியம் ஒரு மணி அளவில் துவங்கிய பணி 5.30 அளவில் நிறைவு பெற்றது. வாழையிலையில் பொட்டலமாகக் கட்ட கூடுதல் நேரம் ஆகிக் கொண்டிருந்தது. சட்டென முடிவெடுத்து, நடுத்தரமான அண்டாக்களில் புளிசாதத்தை எடுத்து வைக்கச் சொல்லி அதனைத் தட்டால் மூடி எடுத்துச் சென்று விடலாம் என்று சொன்னேன். டாடா ஏஸ்-க்கு ஃபோன் செய்தேன். பத்து நிமிடத்தில் வண்டி வந்தது. ஏற்றிக் கொண்டு புறப்பட்டேன். கல்லூரிப் பேராசியரான நண்பரும் வந்து விட்டார். நாளைய பணிகள் குறித்து சமையல்காரரிடம் விவாதிக்குமாறு அவரிடம் கூறி விட்டு நான் சென்று விட்டேன். 

கிராமத்தின் குடிசைப் பகுதிகள் இருக்கும் இடத்துக்கு எங்கள் வாகனம் சென்றது. அங்கே இருந்த இளைஞர்கள் உணவு வழங்குதலில் பெரும் உதவி புரிந்தனர். மக்கள் மிகுந்த பிரியத்துடனும் அன்புடனும் வரவேற்றனர். பெண்கள் என்ன விஷயம் என்று விசாரித்தனர். விளக்கிய பின், வாழ்த்தினர். ஆசி கூறினர். நன்றி சொன்னார்கள். 

முப்பது நிமிடத்தில் 100 குடும்பங்களுக்கு - அதாவது 500 நபர்களுக்கு உணவு சென்று சேர்ந்தது. நாளை மீண்டும் வருவோம் எனக் கூறி விடை பெற்றேன். 

Thursday 11 November 2021

அன்னபூரணி தேசம்


பாரத மண் மகத்தான எத்தனையோ பண்பாட்டு விழுமியங்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர் கண்ணியாக நிலைநிறுத்தியிருக்கிறது. இயற்கையை இறைமையாகப் பார்த்தல், ஜீவன்களின் மீது கருணையோடிருத்தல், உயிர்களின் துன்பத்தைப் போக்குதல் என பல்வேறு விழுமியங்களை தலைமுறைகளின் மனதில் பதிய வைத்திருக்கிறது பாரதம். வாழும் உயிர்களுக்கெல்லாம் உணவிடுதலை அறம் என்கிறது நம் மரபு. அதனைப் பேரறம் எனவும் பறைசாற்றுகிறது. 

மக்கள் திரள் முன்னால் சென்று எத்தனையோ விதமான சமூகப் பணிகளை ஆற்றியிருக்கிறேன். ஏற்ற பணியை, ஆகக் குறைவான செலவில் துல்லியமாக நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று எண்ணுவேன். அவ்வாறே செய்தும் இருக்கிறேன். செய்த சமூகப்பணிகள் சார்ந்து மனம் நிறைவே கொள்கிறது. இன்னும் பல தளங்களில் பல விதமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தணியாத ஆவல் இருக்கிறது. செயலைத் தன் வழியாகக் கொண்டவனுக்கு அது எப்போதும் இருக்கும். இயற்கை அத்தகையவனுக்கு அளிக்கும் ஆசி அது. 

சில ஆண்டுகளுக்கு முன்னால், கடலூர் மாவட்டம் மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட போது நான்கு கிராமங்களில் உள்ள மக்களுக்கு புத்தாடைகள், பாய், போர்வை, மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை நண்பர்கள் சிலர் இணைந்து வழங்கினோம். சென்ற ஆண்டில், ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி அப்பணியில் முழு கிராமத்தையும் ஈடுபடுத்தும் செயல் செய்ய முடிந்தது. சில மாதங்களுக்கு முன்னால், ஒரு கிராமத்தின் எல்லா குடும்பங்களையும் சந்தித்து தடுப்பூசி போட்டுக் கொள்ள சொல்லி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அந்த கிராமம் தடுப்பூசி போட்டுக் கொண்டதில் மாவட்டத்திலேயே முதன்மையானதாக ஆனது. 

இந்த பணிகள் அனைத்திலும் தங்கள் சொல்லாலும் உணர்வாலும் செயலாலும் உடனிருந்த நண்பர்களே நாம் உற்சாகமாகத்  தொடர்ந்து அடுத்தடுத்த பணிகளைத் திட்டமிடவும் துவங்கவும் செயல்படவும் காரணம். அவர்கள் நம் மீது கொண்ட நம்பிக்கையும் பிரியமும் அன்புமே நம்மைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. அவர்களில் பலர் தங்கள் பெயரோ பங்களிப்போ எந்த விதத்திலும் தெரிவிக்கப்படக் கூடாது என்று கேட்டுக் கொண்டவர்கள். ‘’அன்புக் கட்டளை’’ இட்டவர்கள். ஒரு பணி நிறைவு பெற்று சில வாரங்களில் சில நாட்களில் கூட ஏதேனும் அடுத்த பணியைத் துவங்குவது பற்றி பேசியிருக்கிறேன். உதவி கேட்டிருக்கிறேன். ஆர்வத்துடன் இன்முகத்துடன் இனிமையான மனநிலையுடன் விவாதித்திருக்கிறார்கள் ; உதவியிருக்கிறார்கள். அவர்களிடம் நான் பட்டிருக்கும் ‘’நன்றிக் கடனை’’  என்னால் தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை. 

தடுப்பூசிக்காகப் பணி புரிந்த கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் நூறு குடும்பங்களைச் சேர்ந்த 500 பேருக்கு ஆறு நாட்கள் உணவிட வேண்டும் என்று திட்டமிட்டு நண்பர்களிடம் இந்த விஷயத்தைக் கொண்டு சென்ற போது என் மனம் தயக்கமே கொண்டிருந்தது. இப்போது தான் தீபாவளி முடிந்திருக்கிறது. எல்லா குடும்பங்களுக்கும் பலவிதமான செலவுகள் இருந்திருக்கும். புத்தாடை, பலகாரங்கள், பட்டாசு என ஏகப்பட்ட செலவுகள் ஆகியிருக்கும். இவற்றை கவனத்தில் கொண்டு எவ்வாறு உதவி கேட்பது என்று தயங்கினேன். எனது தயக்கத்தை எனது எண்ணத்தை தவிடு பொடியாக்கினார்கள் நண்பர்கள். 

பசிப்பிணி தீர்க்கும் அறச்செயலுக்கு நண்பர்கள் வாரி வழங்கினர். ஒத்துக் கொண்ட தொகையைக் காட்டினும் கூடுதலாகவே பணம் அனுப்பி வைத்தனர். என்னுடைய அனுபவத்தில் இது மிகவும் முக்கியமான ஒன்று. எனது வாழ்நாளில் இந்த நாள் மிகவும் முக்கியமான நாளும் கூட. இன்று நான் மிகவும் நிறைவாக உணர்கிறேன். அறப்பணியில் மாறாப் பற்று கொண்ட நண்பர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்ற உணர்வு என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது. உலகியல் கடலைக் க்டக்க அவர்கள் தெப்பமென எனக்கு உதவுவார்கள் என்பதை அனுபவபூர்வமாக நான் உணர்ந்து கொண்டேன்.

’’அதிதி தேவோ பவ’’ என்கிறது மறை. ‘’அன்னம் பஹூ குர்வித;’’ எனக் கட்டளையிடுகிறது உபநிடதம். பயணிக்கும் யாத்ரீகர்களுக்கான அன்ன சத்திரங்களை அமைத்து   உணவளித்தன பாரத கிராமங்கள். கல்வியின் ஒரு பகுதியாக ‘’ பவதி பிக்‌ஷாம் தேஹி’’ என வீட்டு வாசலுக்கு பிச்சையேற்க வந்த சிறுவர்களுக்கு உணவிட்டு வளர்த்தவர்கள் பாரதத்தின் அன்னையர். அவதார புருஷர்களான ராமரும் கிருஷ்ணரும் அவ்விதம் பிச்சையேற்று உணவுண்டு கல்வி கற்றவர்களே. உயிர்களின் பசியைப் போக்குதலை வேள்விச்செயல் எனக் கொள்கிறது பாரத மரபு. வயிற்றில் எரியும் நெருப்பில் இடப்படும் அவியென உணவு சொல்லப்படுகிறது. 

கிராமத்தில் 500 பேருக்கு 6 நாட்கள் 2 வேளை உணவிடும் பணிக்கு எல்லா விதத்திலும் உடனிருந்து உதவும் எல்லா நண்பர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன். 


Tuesday 9 November 2021

பிரம்மார்ப்பணம்

இங்கே சென்ற வாரத்திலிருந்து மழை பொழிந்து கொண்டிருக்கிறது. பகலில் வானம் வெளி வாங்கவே இல்லை. இரவில் சில நாட்கள் சில மணி நேரங்கள் மழை இல்லாமல் இருக்கிறது. நள்ளிரவுக்குப் பின் மீண்டும் மழை தொடங்கி விடுகிறது.  கிராமத்தில் இருக்கும் விவசாயத் தொழிலாளர்களின் குடிசை வீடுகள் தொடர் மழையால் தீவிர பாதிப்புக்குள்ளாகும். தரையில் ஈரம் ஊறும். கூரையில் இருக்கும் இடைவெளிகளின் வழியே மழைநீர் ஒழுகும். எரிபொருளாக வைத்திருக்கும் விறகுகள் நனைந்திடும். வீட்டு வாசல் சாலை சேறாகியிருக்கும். ஓரிரு நாள் மழை பொழிந்து அடுத்த சில நாட்கள் வெயில் இருந்தால் சமாளித்து விடுவார்கள். தொடர் மழையை எதிர்கொள்வது என்பது அவர்களுக்கு சற்றே கடினமான ஒன்று. கையில் சேமிப்பாக ஏதேனும் இருக்க வேண்டும். 99.99% எவரிடமும் எந்த சேமிப்பும் இருக்காது. மழை பொழியும் காலத்தில் விவசாய வேலைகள் எவையும் இருக்காது. நடவு, களையெடுப்பு, அறுவடை என எந்த பணிக்கும் வாய்ப்பு இருக்காது. கடினமான சூழ்நிலையை பல வருட பழக்கத்தால் கடந்து செல்ல பழகியிருப்பார்கள். 

தடுப்பூசிக்காக செயல் புரிந்த கிராமத்தின் குடிசைப்பகுதிகள் என் நினைவில் எழுந்தன. தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட போது அப்பகுதிகளின் நிலை என் மனதில் பதிவாகியிருந்தது. கடலூர் வெள்ளத்தின் போது, பல கிராமங்களில் ஒவ்வொரு குடிசை வீடாகச் சென்று அந்த வீடுகளின் சிரமங்களை நேரில் அறிந்த அனுபவம் இங்கே என்ன விதமான சூழல் நிலவும் என்பதை எனக்கு உணர்த்தியது. கிராமத்தில் இருக்கும் எனது நண்பர்களுக்கு ஃபோன் செய்தேன். குடிசைப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக நண்பர்கள் கூறினார்கள். 

கொஞ்ச நேரம் யோசித்தேன். என் உள்ளுணர்வு ஏதேனும் ஒரு செயலை முன்னெடுக்கச் சொன்னது. 

கிராமத்தின் நண்பருக்கு ஃபோன் செய்தேன். 

’’ரொம்ப மோசமான பாதிப்பு 100 குடும்பத்துக்கு இருக்குமா?’’

‘’இருக்கும்ங்க’’

‘’நூறு குடும்பம்னா - குடும்பத்துக்கு 5 பேருன்னு வச்சுக்கிட்டா கூட 500 பேர். நாம ஒன்னு செய்யலாம். நான் ஃபிரண்ட்ஸ்கிட்ட பேசறன். உதவி கேக்கறன். அந்த 500 பேருக்கும் ஒரு நாளைக்கு ரெண்டு வேளை ஃபுட்-ன்னு ஆறு நாளைக்கு சப்ளை செஞ்சுடலாம்.’’

‘’6000 ஃபுட் பாக்கெட் . பட்ஜெட் ஹெவியா ஆகுமே?’’

‘’பகவான் மேல பாரத்தைப் போட்டு ஆரம்பிப்போம்.’’

‘’ராமா கிருஷ்ணா ஆண்டவா’’ என்றார் நண்பர். 

சிறிது நேரத்தில் கல்லூரிப் பேராசிரியராய் இருக்கும் எனது நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் சமையல் கலை அறிந்தவர். அவரே பிரமாதமாகச் சமைக்கக் கூடியவர். 

‘’ஒரு நாளைக்கு ரெண்டு வேளை மீல்ன்னா காலைல 8 மணிக்கு ஒன்னு. சாயந்திரம் 5.30க்கு ஒன்னு. இந்த டைமிங் சரியாக இருக்கும் ‘’ என்றார். 

‘’என்ன ஃபுட் சப்ளை செய்றது?’’

‘’காலைல புளி சாதம். சாயந்திரம் கிச்சடி’’

‘’இங்கே ஃபுட் பிரிபேர் பண்ணி பேக் பண்ணிடுவோம். கிராமத்துக்குப் போய் அங்க இருக்கற ஒவ்வொரு குடிசை வீட்டுக்கும் நேரடியா கொடுத்துடுவோம். அது தான் ஈசியான வே’’

‘’எப்ப ஆரம்பிக்கலாம்?’’

‘’நாளைக்கு வில்லேஜ் போய் அங்க இருக்கற ஃபிரண்ட்ஸ்கிட்ட பேசிட்டு வரேன். அவங்க அபிப்ராயம் தெரிஞ்சுகிட்டு டேட் ஃபிக்ஸ் பண்ணிடுவோம்’’

’’பட்ஜெட் தாங்குமா?’’

‘’காட் இஸ் கிரேட்’’

நண்பர் சென்றவுடன் ஆதித்யாவுக்கு ஃபோன் செய்தேன். அவன் வங்கியிலிருந்து புறப்படும் தருவாயில் இருந்தான். 

‘’சொல்லுங்க அண்ணா’’

‘’தம்பி. நான் சொல்ற எதையும் நீ மறுத்தது கிடையாது. எங்கிட்ட எந்த விஷயம் பத்தியும் நெகடிவ்வா பேசுனது கிடையாது. என் கிட்ட கோபப்பட்டது கிடையாது. இவ்வளவு இருந்தும் எனக்கு உன்கிட்ட சில விஷயத்தை சொல்லும் போது மனசு கஷ்டப்படுது’’

‘’ஏன் அண்ணா இப்படி ஃபீல் பண்றீங்க. என்ன விஷயம்னு சொல்லுங்க’’

‘’நீ ஒருத்தன் தான் நான் கிரியேட்டிவ் ஒர்க்குக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை பொது வேலைகளுக்கு கொடுத்திடறன்னு வருத்தப்படுறவன். ‘’

’’அது வருத்தம்னு சொல்ல முடியாது. இன்னும் நிறைய நீங்க எழுதணும்ங்கற விருப்பத்தைத்தான் அப்படி சொல்லியிருப்பன். பரவாயில்லை. நீங்க சொல்ல வந்த விஷயத்தை சொல்லுங்க. ‘’

‘’நாம ஒரு கிராமத்துல வாக்சினேஷனுக்காக ஒர்க் பண்ணோம்ல அந்த கிராமம் இப்ப மழையால ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கு. அங்க இருக்கற 500 பேருக்கு 6 நாளைக்கு சாப்பாடு போடனும்’’

‘’நல்ல விஷயம் தான் அண்ணன் செஞ்சுடலாம். இப்ப அங்க அவ்வளவு மழையா?’’

‘’இந்த விஷயத்துல கொஞ்சம் கூட இருந்து சப்போர்ட் பண்ணு’’

‘’என் சப்போர்ட் உங்களுக்கு எப்பவும் எல்லா விஷயத்துலயும் உண்டு’’

நான் திட்டமிடல் என்ன என்பதை அவனிடம் விளக்கினேன். 

‘’இன்னும் ஒன் ஆர் டூ டேஸ்ல நாம ஆரம்பிக்கணும். நீ இந்த விஷயத்துக்குள்ள பல பேரை இன்குளூட் செய்யணும். ‘’

‘’செஞ்சுடலாம்ணா’’

‘’அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய் போல் போற்றாக் கடை- ன்னு ஒரு திருக்குறள் இருக்கு. அடுத்த உயிரோட துன்பத்த தன்னோட துன்பமா நினைக்கறது தான் அறிவோட லட்சணம்னு வள்ளுவர் சொல்ராரு. ‘’

‘’இந்த திருக்குறள் கேட்டிருக்கேண்ணா. நான் வீட்டுக்கு போய்ட்டு ஃபோன் செய்றன்’’

கல்லூரிப் பேராசிரியர் ஃபோன் செய்து , ‘’பிரபு ! நான் சொல்ற விஷயங்களை நோட்ல குறிச்சு வச்சுக்க.’’ என்றார். 

நான் நோட்டில் பேனாவால் குறித்துக் கொண்டேன். 

‘’அரிசி 600 கிலோ. ரவா 300 கிலோ. கடலை எண்ணெய் 120 லிட்டர். காய்கறி  (கேரட், உருளை,தக்காளி) - 50 கிலோ. புளி - 60 கிலோ. ‘’

அன்னமே பிரம்மம் என்னும் உபநிஷத மந்திரத்தை எண்ணிக் கொண்டேன். 

வன்னி


இந்திய மண்ணில் மரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு என்பது மிக ஆழமானது. பல்லாயிரம் ஆண்டு கால பாரம்பர்யம் கொண்டது. இந்தியப் பண்பாடு என்பதே இங்கே வாழ்ந்த குடிகள் உருவாக்கி பேணிய இவ்வாறான நுண்ணுணர்வுகளின் தொகுப்பே ஆகும். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீரம் வரை நதிகளை தெய்வமாக வணங்கும் வழக்கம் இருக்கிறது. பல இந்தியக் குடும்பங்கள் காலை எழுந்ததும் ‘’ கங்கை யமுனை கோதாவரி நர்மதை சரஸ்வதி சிந்து காவேரி’’ என இந்திய மண்ணின் நதிகளின் பெயர்களை உச்சரிக்கின்றன. இந்தியா இன்றும் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட நாடு என்பதால் அந்த கண்ணி முற்றிலும் அறுபடாமல் நிலைத்திருக்கிறது. தொல் படிமங்கள் தலைமுறைகளின் ஆழ்மனதில் பல்வேறு விதமான சடங்குகளின் வழியாக வழிபாட்டு முறைகளின் வழியாக நிலைபெறுகின்றன. ஆடிப்பெருக்கு பண்டிகையின் அன்று காவிரியின் படித்துறைகளைக் காண்பவர்களால் அதனை உணர்ந்து கொள்ள முடியும். படித்துறையில் பெரும்பாலும் இருக்கும் வினாயகர் ஆலயங்களில் பூசனைகள் செய்து பெண்கள் மஞ்சள் கயிறை கழுத்திலும் கையிலும் கட்டிக் கொள்வார்கள். கயிறைக் கட்டிக் கொள்ளும் போது மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் காவிரியைத் தம் அன்னையாக எண்ணும் அவர்களுடைய உணர்வு சிலிர்க்கச் செய்வது. 

நான் நாடெங்கும் பயணித்திருக்கிறேன். எனது பயணத்தில் நூற்றுக்கணக்கான மரத்தடிகளில் அமர்ந்திருக்கிறேன் ; படுத்து உறங்கியிருக்கிறேன். ஒவ்வொரு மரத்தடி நிழலும் தம்மளவில் தனித்துவம் கொண்டது. ஆலமரத்தடிகள் அதனடியில் அமர்பவர்களிடம் பெரிய எண்ணங்களை உருவாக்கும். அதன் பெரும்பரப்பும் அதன் நிழலின் அடர்த்தியும் அதில் வாழும் பறவைகளும் வாழ்க்கை குறித்த பெரும் நம்பிக்கைகளையும் கனவுகளையும் உண்டாக்கும். அரச மரத்தடிகள் மகிழ்ச்சி தருபவை. வேம்படிகள் ஓய்வெடுப்பதற்கு மிகவும் ஏற்றவை. ஆந்திர மாநிலத்தில் வேம்படிகள் மிக அதிகமாக இருக்கும். வட இந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தானில் ஊர் நடுவே ஆலமரம் இருக்கும். அதில் எப்போதும் பத்து இருபது பேர் அமர்ந்திருப்பார்கள். ஊர் மன்று அங்குதான் நடக்கும். மகாராஷ்டிர மாநிலத்தில் மரங்களின் கிளைகளில் பானைகளைக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். அதில் குடிநீர் இருக்கும். வழிப்போக்கர்களின் தாகம் தணிக்க இந்த ஏற்பாட்டைச் செய்திருப்பார்கள். அவற்றில் நீர் அருந்தும் போது அந்த பானையில் நீர் நிரப்பிய ஆத்மனை மானசீகமாக வாழ்த்துவேன். பலமுறை அவ்வாறு நீர் அருந்தியிருக்கிறேன். 

சில மரங்கள் தனிச்சிறப்பு கொண்டவை. நாகலிங்க மரம் அவ்வாறானது. சாமானியமாக அதன் அருகில் சென்று சகஜமாகப் புழங்க எவரும் தயங்குவார்கள். சிவலிங்க வடிவம் கொண்ட பூவைக் கொண்டிருப்பதால் தெய்வீகமானது என அதன் அருகில் செல்லத் தயங்குவார்கள். வன்னி அவ்வாறான ஒரு மரம். 

தமிழ்நாட்டில் ஒரு நம்பிக்கை உண்டு. வன்னி மரத்தின் அடியில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் பிள்ளையாரிடம்  ஏதேனும் வேண்டிக் கொண்டால் வேண்டுதல் உடனே பலிக்கும் என்று.  பிள்ளையாரை எந்த மரத்தடியிலும் பிரதிட்டை செய்ய முடியும். மற்ற தெய்வங்களுக்கு உரிய ஆகம விதிகள் வினாயகருக்குக் கிடையாது. மரத்தடிகளில் குளக்கரைகளில் எங்கும் அமரக் கூடியவர். அங்கிருக்கும் நிலையிலேயே பக்தர்கள் ஏற்றும் தீபங்களையும் அர்ச்சனைகளையும் ஏற்கக் கூடியவர். ஆனைக்கடவுள் என்பதால் மரநிழலின் நீர்நிலைகளின் அருகில் இருப்பதை விரும்புபவராய் இருக்கக் கூடும். வன்னிப் பிள்ளையார் அத்தனை சக்தி கொண்டவர் என்பது நம்பிக்கை. 

வன்னி மரம் பாலை நிலத்திலும் எளிதாக வளரக்கூடியது. ராஜஸ்தான் மாநிலத்தின் மாநில மரம் வன்னி. மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் அக்ஞாத வாசம் புரிய விராட தேசம் செல்லும் போது தமது படைக்கலன்களை ஒரு பெரிய வன்னி மரத்தின் பொந்தில் வைத்து விட்டு செல்கின்றனர். ஒவ்வொருவரும் தமது அடையாளத்தை மறைத்துக் கொண்டு வாழ வேண்டியிருப்பதால் அவ்வாறு செய்கின்றனர். வன்னி மரம் தெய்வீக சக்தி கொண்டது என்பதால் அதில் வைக்கப்படும் தமது ஆயுதங்களின் தெய்வீக ஆற்றல் அப்படியே இருக்கும் என்பதால் அவர்கள் வன்னி மரத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். சைவம் வன்னி மரத்தை அக்னியின் ரூபமாகவும் சிவ சொரூபமாகவும் காண்கிறது. 

இப்போதும் ஹோமங்களில் வன்னி மரத்தின் முள், உதிர்ந்த கிளைப்பட்டைகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. வன்னி மரத்தை வெட்டக்கூடாது என்பது தமிழ்நாட்டின் நம்பிக்கை. வன்னி மரத்தால் உதிர்க்கப்பட்டு அதன் நிழலில் தரையில் கிடக்கும் அதன் பகுதிகளை எடுத்துப் பயன்படுத்தலாமே தவிர அதன் அருகில் சென்று எதையும் பறிக்கக்கூடாது என்பது இங்கே உள்ள தீவிரமான பழக்கம். இவ்வாறான நியமங்களும் நியதிகளும் இருப்பதால் வீட்டில் வன்னி மரம் வளர்க்க பலருக்குத் தயக்கம் உள்ளது. வன்னி கோவிலில் வழிபாட்டுக்கு இருக்க வேண்டிய மரம் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. 

வன்னி மரம் தன்னை வீட்டில் வைத்து வளர்ப்பவர்களிடம் உணர்வுரீதியான பிணைப்பை உருவாக்கும் என அதனை வளர்ப்பவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். வீட்டு நபர்கள் அல்லாமல் புதிதாக யாரேனும் அந்த மரத்துக்கு அருகில் சென்றால் வீட்டு உரிமையாளர்கள் உணர்வில் யாரோ புதிதாக வந்திருக்கிறார்கள் என்று அந்த மரம் தோன்றச் செய்யும் என்று அதனை வளர்ப்பவர்கள் சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். 

வன்னி மரத்தை வீட்டின் தோட்டத்தில் வைத்து நீரூற்றி வளர்க்க வேண்டும். வீட்டு வாசலில் வைக்கக் கூடாது. இறையருளையும் மங்களத்தையும் வன்னி வீட்டுக்கு வழங்கும் என்பது தொன்மையான நம்பிக்கை. 

என்னுடைய வீட்டுத் தோட்டத்தில் ஒரு வன்னி மரக்கன்று உள்ளது. உற்சாகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.