Monday 28 February 2022

பெயர்க்காரணம் (நகைச்சுவைக் கட்டுரை)

நம்முடைய அமைப்புக்கு ‘’காவிரி போற்றுதும்’’ என்று பெயர். நம் அமைப்பின் அமைப்பாளர் அதனை நுண் அமைப்பு என்கிறார். அமைப்பு எந்த அளவு ’’நுண்’’ ஆக இருக்கிறதோ அந்த அளவுக்கு தனக்கு பொறுப்புகள் குறைவு என்பதால் அவர் அவ்வாறு எண்ணுகிறார். நுண் அமைப்பு என்பதால் அமைப்பாளர் என்ற ஒரே ஒரு பொறுப்பு மட்டுமே உள்ளது. அமைப்பாளர் ஒரு கட்டிடப் பொறியாளர் என்பதால் ஒரு கட்டிடப் பணியை ஒருங்கிணைக்க ஒருவர் போதும் என்ற நம்பிக்கை அவருக்கு ஆழமாக உள்ளது. அந்த நம்பிக்கையை அவர் அமைப்பிலும் அதாவது நுண் அமைப்பிலும் செயல் படுத்தி விட்டார்.

மக்களைச் சந்திக்கும் போது அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள இந்த வாக்கியங்களையே அவர் எல்லாரிடமும் கூறுவார். ‘’வணக்கங்க. என்னோட பேர் பிரபு. என்னோட தொழில் பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன். நாங்க, ஃபிரண்ட்ஸ் சில பேர் சேர்ந்து ‘’காவிரி போற்றுதும்’’னு ஒரு அமைப்பு வச்சிருக்கோம். கிராமங்கள்ளோட வளர்ச்சிக்காக எங்களால முடிஞ்சத செய்ய நினைக்கிறோம்’’. இந்த டயலாக்கை நூற்றுக்கணக்கான மக்களிடம் கூறி கூறி அமைப்பாளர் வீட்டில் இருக்கும் போது வாசலில் யாராவது அட்ரஸ் கேட்டு வந்தால் கூட அவரிடமும் இதைக் கூறிவிடுவோமோ என்ற பதட்டம் அமைப்பாளருக்கு உண்டு.

‘’உங்க அமைப்போட பேர் என்ன சொன்னீங்க?’’

‘’காவிரி போற்றுதும்’’

‘’அப்படீன்னா?’’

அமைப்பாளர் உரையாடலுக்கான ஒரு வாய்ப்பு உருவாகி விட்டது என பெரிதும் மகிழ்வார். அந்த மகிழ்ச்சியுடன், ‘’அதாவது’’ என்ற ஆரம்பிப்பார். சாங்கிய யோக மரபின் நூல்கள் ‘’அதாவதஸ்ய’’ எனத் தொடங்கும். நாம் சிந்திக்கும் இந்த விஷயம் கடந்த காலத்திலும் சிந்திக்கப்பட்டது ; நிகழ்காலத்திலும் சிந்திக்கப்படுகிறது. எதிர்காலத்திலும் சிந்திக்கப்படும். எனவே நாம் சிந்திக்கும் விஷயம் என்றுமுளது என்ற உணர்வை நினைவுபடுத்தும் விதமாக சாங்கிய நூல்கள் ‘’அதாவதஸ்ய’’ என்று துவங்கும். அமைப்பாளருக்கு அந்த துவக்கம் பிடித்திருக்கிறது என்பதால் அவரது உரையாடல்களை ‘’அதாவது’’ என்று ஆரம்பிப்பார்.

’’அதாவது, சிலப்பதிகாரம் ‘’திங்களைப் போற்றுதும்’’னு ஆரம்பிக்குது. எந்த படைப்புக்குமே முதல் வார்த்தைங்கறது ரொம்ப முக்கியம். அதுக்குல்ல படைப்போட ஒட்டு மொத்த சாரமும் இருக்கு. அடியார்கள் பெருமையை பாட சேக்கிழார் தில்லையம்பலத்துல கூட்டப்பட்ட மக்கள் சபை முன்ன நின்னப்ப அவருக்கு சட்டென இவ்வளவு பெரிய விஷயத்தை நாம எப்படி செய்றதுன்னு திகைச்சிடுச்சு. அப்ப கடவுளே ‘’உலகெலாம்’’னு முதல் அடி எடுத்துக் கொடுத்தாரு. அந்த மாதிரி இளங்கோ அடிகள் ‘’திங்களைப் போற்றுதும்’’னு ஆரம்பிக்கறாரு. நம்ம அமைப்பு அதிலிருந்து ரெண்டாவது வார்த்தையான ‘’போற்றுதும்’’ங்கறத எடுத்துகிச்சு. காவிரியை சேத்து ‘’காவிரி போற்றுதும்’’னு நாம ஆகிட்டோம்’’

கேள்வி கேட்டவர் ‘’அப்படீன்னா’’ன்னு கேட்ட ஒரு வார்த்தைக்கு இவ்வளவு பெரிய விளக்கமா என திகைத்து விடுவார். அந்த திகைப்பின் விளைவாக ‘’நான் உங்களுக்கு என்ன செய்யணும்?’’ என்று கேட்டு விடுவார்.

‘’அதாவது அண்ணன் நீங்க இப்ப கிராமத்துல இருக்கீங்க. உங்க வீட்டுத் தோட்டத்துல நீங்க நெல்லி , கொய்யா, பலா, நாவல் னு பழமரக் கன்னு நடலாம்னு மனசுல நினைச்சிருப்பீங்க. நர்சரி டவுன்ல இருக்கும். பல வேலைல உங்களுக்கு அது ஞாபகத்துல வராமலே மறந்து போயிருப்பீங்க. உங்களுக்கு என்ன மரக்கன்னு வேணுமோ சொல்லுங்க. அது அத்தனையும் நாங்க தரோம். நீங்க வீட்டுத் தோட்டத்துல நட்டு வளத்துக்கங்க’’

‘’கன்னுக்கு நாங்க பணம் கொடுக்கணுமா?’’

‘’இல்லை வேண்டாம் அண்ணன். நாங்க ஃபிரண்ட்ஸ் டவுன்ல இருக்கோம். 2400 சதுர அடி மனையில வீடு கட்டிக்கிட்டு அதுல குடி இருக்கோம். எங்க தோட்டத்துல கொஞ்ச இடம் தான் இருக்கு. அதுல நிறைய மரம் வளர்க்க முடியாது. உங்களைப் போல இருக்கற விவசாயிகளுக்கு மரக்கன்னு கொடுத்தா நீங்க பொறுப்பா வளத்திடுவீங்க. எங்க விருப்பமும் நிறைவேறும். உங்களுக்கும் பலன் இருக்கும். சமுதாயத்துக்கும் பலன் இருக்கும்.’’

கேள்வி கேட்டவர் , ‘’சார் ! உங்க பேர் என்ன சொன்னீங்க?’’ என்பார்.

‘’We have come around a full circle’’ என்பது போல அமைப்பாளர் தன் பெயரைக் கூறி தன்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுப்பார். எனினும் அமைப்பு பணி செய்யும் கிராமங்களில் அமைப்பாளர் குறித்து அந்த ஊரின் மக்கள், ‘’வனத்துறை, விவசாயத் துறை, தோட்டக்கலைத் துறை, ஊராட்சித் துறை, வருவாய்த் துறை’’ ஊழியர் என்றே அமைப்பாளரை எண்ணுவார்கள். அமைப்பாளர் செயல் புரியும் கிராமத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் வடக்கே ஒரு கிராமம். இந்த கிராமத்தைக் கடந்தே செயல் புரியும் கிராமத்துக்கு செல்ல வேண்டும். அந்த கிராமத்தில் டூ வீலருக்கு காற்று பிடிக்க ஒரு நாள் ஒரு கடையில் வண்டியை நிறுத்தினார் அமைப்பாளர். அந்த டூ வீலர் கடைக்காரர் அமைப்பாளரிடம் கேட்டார். ‘’சார் ! நீங்க பல மாசமா காலைலயும் சாயந்திரமும் இந்த பக்கம் போறீங்க வரீங்க. நீங்க கொங்கு நாட்டுக்காரரா? ஃபைனான்ஸ் செய்யறீங்களா?’’


காகம்

 சமீபத்தில் எழுதிய ‘’காகம்’’ சிறுகதை சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு 

காகம்

Sunday 27 February 2022

ஆகாய கங்கை

உளம்
நெகிழ்ந்திருக்கும்
கனிந்திருக்கும்
கணத்தில்
கணங்களில்
நீ
மண்ணைத்
தொட்டிருக்கும்
ஆகாயமாகிறாய் 

Saturday 26 February 2022

வண்ணங்கள்

எனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர். இலக்கிய வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர். ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார். இருப்பினும் இன்னும் தீவிரமான வாசிப்பு தேவை என்ற எண்ணம் அவர் மனதில் மேலோங்கியிருக்கிறது. எனவே எழுதத் தொடங்காமல் இருக்கிறார். ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் அவரும் நானும் இது குறித்து உரையாடினோம். மதிய அமர்வுகள் நிறைவு பெற்று இரண்டு மணி நேர இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மாலை அமர்வுகள் தொடங்கும் என்ற நிலையில் சிறு நடை உலாவல் ஒன்றை மேற்கொள்ள நேரம் கிடைத்தது. நாங்கள் உரையாடியவாறு உலவத் துவங்கினோம். 

நான் சொன்னேன். ‘’நண்பரே ! வாசிப்பு என்பது முக்கியமானது. மிகவும் முக்கியமானது. ஓர் இலக்கிய வாசகனாகத் தன்னை உணர்பவனோ அறிவுஜீவியாக தன்னை உணர்பவனோ நிச்சயம் வாசிக்க வேண்டும். வாசிப்புக்கு தனது ஒரு நாளில் குறிப்பிடத் தகுந்த அளவு நேரத்தை அளிக்க வேண்டும். இவை மறுக்க முடியாத உண்மைகள். ஆனால் படைப்புச் செயல்பாடு என்பது சூட்சுமமான ஒன்று. மிகவும் சூட்சுமமான ஒன்று. அக்கினிக் குஞ்சு என்கிறான் பாரதி. ‘’அதை ஆங்கோர் காட்டில் பொந்திடை’’ வைக்க வேண்டியது எழுத வேண்டும் என்று விரும்புபவனின் கடமை. எழுத விரும்புபவன் அதனைச் செய்த பின் அக்கினிக் குஞ்சு ‘’காட்டை’’ வெந்து தணிக்கும். வாசிப்பும் கற்பனையும் பின்னிப் பிணைந்து இருப்பவை. சொல்லப் போனால் ஒரே விஷயத்தின் இரண்டு வெளிப்பாடுகளே அவை. போதிய அளவு வாசிக்கவில்லை என்பதற்காக எழுதாமல் இருக்கக் கூடாது. எழுத வேண்டும். எழுத்தில் மேலும் முழுமை கூடி வர வேண்டும் என எழுதுபவன் நினைத்தால் அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டும். முழுமை கூட வாசிப்பை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தால் அதிக நேரம் கொடுத்து வாசிக்கலாம். ஆனால் போதுமான வாசிப்பு இல்லை என்ற காரணத்துக்காக எழுதும் ஆர்வத்தை தடுத்து நிறுத்தி ஒத்திப் போடக்கூடாது. எழுதும் ஆர்வம் என்பது ஆர்ட்டிஸ்டிக் இம்பல்ஸ். கலையின் அடிப்படை இது. அதனைத் தடுத்து நிறுத்தி இல்லாமல் செய்தால் மீண்டும் அகத்தில் அது நிகழாமல் போகக் கூட வாய்ப்பு உண்டு. நான் வாசிப்பை முக்கியமானது என்று தான் சொல்கிறேன். ஆனால் அதைக் காரணம் காட்டி எழுதத் துவங்காமல் இருப்பதைத் தான் விமர்சிக்கிறேன்’’ என்று சொன்னேன். 

நான் சாதாரணமாக இருப்பேன். சட்டென ஒரு விஷயத்துக்குள் உள்நுழைந்து பேசத் தொடங்கினால் என்னை நிறுத்துவது கடினம். ஒரு சுற்று பேசி முடிந்ததும் உருவாகும் சிறு மௌனத்தில் மேலும் தூண்டல் பெற்று நான்மடங்கு விசையுடன் என் தரப்பை முன்வைக்கத் துவங்கி விடுவேன். நாங்கள் ஒரு நாற்சந்தியின் ஒரு பக்கத்தில் நின்றோம். இளம் பெண்கள் சிலர் சாலையை சர சர என்று கடந்தனர். 

நான் துவங்கினேன். ‘’ இப்ப பாத்தீங்கன்னா இந்த ரோடு இருக்கு. எத்தனை பேர் போராங்க வர்ராங்க. நாம பாத்துக்கிட்டே தான் வரோம். நடுத்தர வயசு உள்ள ஆண்களைப் பாருங்க. அவங்க முகத்தில ஒரு சலிப்பு. பல காரணம் இருக்கும். ஆர்வம் இல்லாத விஷயத்தைச் செய்யறது. எதிர்பார்ப்பு அதிகமாவும் கிடைக்கறது கொறச்சலாவும் இருக்கறது. குடும்பக் கவலை. லௌகிகக் கவலை இப்படி இன்னும் எவ்வளவோ. அவங்க உடுத்தியிருக்கற டிரெஸ்ஸைக் கவனிங்க. நூத்துக்கு தொன்னூத்து அஞ்சு பேரு மங்கலா வெளிறி இருக்கற கலர்ல தான் சட்டை போட்டிருப்பாங்க. ஆனா யங் கேர்ள்ஸ் பாருங்க. பிரைட்டான கலர்ல டிரெஸ் பண்ணியிருக்காங்க. அந்த கலர்ஃபுல் நெஸ்ஸூம் பிரைட் நெஸ்ஸும் அவங்க மனசுல இருக்கற நம்பிக்கையோட வெளிப்பாடு. அவங்க அகம் வண்ண மயமா இருக்கு. அவங்களுக்கு வயசான பிற்பாடு அவங்க அந்த வண்ணங்கள் இருந்து விலகி வெளிர்ந்து போன மனநிலைக்குப் போகலாம். ஆனா அவங்க துவக்கம் வண்ண மயமாத்தான் இருக்கு. சிலர் அந்த சென்ஸை வாழ்க்கை முழுக்கவும் கூட மெயிண்டய்ன் பண்றாங்க. கிரியேட்டிவிட்டியும் அந்த மாதிரி ஒரு விஷயம் தான்’’ என்றேன். 

நண்பர் அமைதியாக இருந்தார். 

நாங்கள் நிகழ்ச்சியில் அமர்ந்தோம். அந்த அமர்வில் ஒரு படைப்பாளி பேசினார். நான் சொன்ன உதாரணத்தையே அவரும் சொல்லி படைப்பாற்றல் குறித்து விளக்கினார். 

நண்பர் என்னைப் பார்த்தார். நான் புன்னகைத்தேன்.  

Friday 25 February 2022

தற்செயல்

சென்னையில் ஓர் இலக்கியக் கூட்டம் நடைபெற்றது. அங்கே ஓர் இளம் இலக்கிய வாசகரைச் சந்தித்தேன்.  பொறியியல் கல்லூரி மாணவர். ஏரோநாட்டிகல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். சொந்த ஊர் செஞ்சி. நவீன தமிழ் இலக்கியம் வாசிக்கத் துவங்கியிருக்கிறார். தமிழ்ச் சூழலில் இலக்கிய வாசிப்பு நிகழ்வது என்பது அரிதினும் அரிதான ஒன்று. ஒரு வாசகன் பல்வேறு தடைகளைத் தாண்டியே வாசிக்க வர முடியும். வாசிப்பு என்பதை பொழுதுபோக்கு என்பதாகவே சராசரி தமிழ் மனம் புரிந்து கொண்டுள்ளது. எனவே வாசிக்கத் துவங்கும் வாசகன் வாசிப்பு குறித்து எதிர்மறை அபிப்ராயங்களையே எதிர்கொள்வான். அதையும் தாண்டி அவன் வாசிக்க வேண்டும். எந்த விஷயம் குறித்தும் சுயமாக சிந்தித்து அபிப்ராயங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அச்சு எந்திரத் தொழில்நுட்பம் காரணமாக ஒரு புத்தகம் குறைந்த பட்சம் 1000 பிரதிகள் அச்சடிக்கப்படுமானால் அது ஆக்கச் செலவுக்கு கட்டுபடி ஆகும் என்ற நிலை இருந்ததால் எந்த புத்தகமும் 1000 பிரதிகள் அச்சடிக்கப்படுவது என்பது வழக்கமாக இருந்தது. 120 ஆண்டுகளுக்குப் பின்னால் இப்போது பிரிண்ட் ஆன் டிமாண்ட் தொழில்நுட்பம் வந்த பின் புத்தக வெளியீட்டாளர்கள் ஐம்பது புத்தகம் எழுபத்து ஐந்து புத்தகம் என அச்சடிக்கின்றனர். இதுவே யதார்த்த நிலை. இவ்வாறான சூழ்நிலையைக் கடந்து ஒருவன் வருகிறான் என்பது பெரிய விஷயம். 

அந்த இளைஞர் என்னிடம் வாசிப்பு குறித்தும் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்தும் கேட்டார். ‘’தம்பி ! முதல் விஷயம் உங்களால வாசிக்க முடியுது. தமிழ்நாட்ல எழுத்தறிவு உள்ளவங்க 5 கோடி பேர் இருக்காங்க. அதுல இலக்கியம் வாசிக்கறவங்க 1000 பேருக்கு கீழ தான் இருப்பாங்க. அப்படின்னா இலக்கியம் வாசிக்கற ஒவ்வொருத்தரும் ஐயாயிரத்துல ஒருத்தர். உங்களுக்கு என்ன விஷய்ம் ஆர்வமா இருக்கோ அந்த விஷயம் பத்தி அடிப்படையா உள்ள புத்தகங்களைப் படிங்க. அதுவே சிந்திக்கறதுக்கு ஒரு நல்ல அடித்தளத்த உருவாக்கித் தரும். தினமும் ஒரு மணி நேரமாவது வாசிங்க. நான் சொல்றத நோட் பண்ணிக்கங்க. உங்களுக்கு தமிழோட தி பெஸ்ட் நாவல்களை சொல்றன்’’. இளைஞர் தனது அலைபேசி நோட் பேடில் குறித்துக் கொண்டார். 

‘’தம்பி ! உங்க சொந்த ஊர் செஞ்சி தானே ? உங்க ஊருக்குப் பக்கத்தில் கீழ்வாலைன்னு ஒரு ஊர் இருக்கு. அங்க போயிருக்கீங்களா?’’ இளைஞர் அந்த ஊரின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கவில்லை. 

’’அந்த ஊர்ல ஆதி மனிதர்கள் வரைஞ்சிருக்க குகை ஓவியங்கள் இருக்கு தம்பி. அதாவது அப்ப மனுஷங்க பேசவே ஆரம்பிக்கல. உலகத்துல எங்கயுமே மொழின்னு ஒன்னு உருவாகலை. ஆனா அவங்க ஓவியம் வரைஞ்சிருக்காங்க. ஆர்ட்டிஸ்டிக் இம்பள்ஸ் மனுஷனோட சுபாவத்துலயே இருக்குங்கறதுக்கு அது ஒரு உதாரணம். நீங்க ஒரு இலக்கிய வாசகர். அவசியம் அந்த இடத்தைப் போய் பாக்கணும்’’ அந்த இளைஞர் அதனையும் குறித்துக் கொண்டார். 

’’மத்தியப் பிரதேசத்துல பிம்பேத்கா-ன்னு ஒரு இடம் இருக்கு. அங்க எக்கச்சக்கமான குகை ஓவியங்கள் வரையப்பட்டிருக்கு. நார்த் இண்டியா போனா அந்த இடத்தை மிஸ் பண்ணாம பாருங்க’’ இளைஞர் கூகுள் தேடல் எந்திரத்தில் பிம்பேத்கா எனத் தேடி அதன் ஒளிப்படங்களை என்னிடம் காண்பித்தார். 

’’உங்க ஊருக்குப் பக்கத்துல தான் திருக்கோவிலூர் இருக்கு. திரிவிக்ரமப் பெருமாள் கோயில். உலகளந்த பெருமாள். அங்க போயிருக்கீங்களா?’’ இளைஞர் இல்லை என்றார். ‘’அவசியம் போய்ட்டு வாங்க’’

உணவு இடைவேளை முடிந்து இன்னும் சில நிமிடங்களில் மதிய அமர்வு தொடங்க இருந்த நிலையில் தான் எங்கள் உரையாடல் நடைபெற்றது. இந்த உரையாடல் முடிந்து சில வினாடிகளில் அடுத்த அமர்வு துவங்கி விட்டது. நானும் அந்த இளைஞரும் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தோம். 

அமர்வில் பேசிய எழுத்தாளர் , ‘’தமிழ்நாட்டில் நீங்கள் ஒரு எழுத்தாளனைச் சந்தித்தால் அவன் உங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய இடங்களைப் பற்றியும் அவற்றின் வரலாற்று பண்பாட்டு முக்கியத்துவம் குறித்தும் உங்கள் பிராந்தியத்தில் வசித்த வசிக்கும் படைப்பாளிகளைக் குறித்தும் தான் பேசுவான்.தமிழ் எழுத்தாளன் பண்பாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய  பணியை மேற்கொண்டவாறு இருக்கிறான்’’ என்றார். 

இளைஞர் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்தார். நான் புன்னகைத்தேன். 

Wednesday 23 February 2022

கவிதைகளின் தீராக் காதலன்

அடிக்கடி சந்திக்க இயலா விட்டாலும் அதிக நேரம் அளவளாவ வாய்ப்பு இல்லையென்றாலும் அகத்துக்கு மிக நெருக்கமாக உணரும் நண்பர்கள் பலர் எனக்கு உண்டு. ராகவ் அவ்வாறான நண்பர். இலக்கியத்தின் மேல் பேரார்வம் கொண்டவர். தீவிரமான வாசகர். இலக்கிய விவாதங்களை கூர்மையாகக் கவனிப்பவர். இன்று அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். சென்னையில் ஐ டி துறையில் பணிபுரிகிறார். அவரது பூர்வீக நிலம் மெலட்டூரில் உள்ளது. அதன் அறுவடைப் பணிகளை மேற்பார்வையிட ஊருக்கு வந்திருந்தார்.  நான்கு நாட்கள் மெலட்டூரில் இருந்து அறுவடைப் பணிகளை முடித்துக் கொண்டு அவர் சென்னை செல்ல வேண்டும். 

இன்று காலை 8 மணி திருச்சி விரைவு ரயில் வண்டியில் பாபநாசம் சென்று இறங்கிக் கொண்டேன். ராகவ் ரயில் நிலையத்துக்கு வந்து மெலட்டூர் அழைத்துச் சென்றார். தனது ஃபோர்டு காரில் மாயாவியைப் போல பல வித்தைகளைக் காட்டுகிறார். 




அவரது வீட்டுக்குச் சென்றதும் கூடத்தில் கொலு வீற்றிருந்த ஸ்கூபி ராகவ்வின் பின்னால் வரும் என்னைப்  பார்த்ததும் வீடே அதிர்வதைப் போல் பெருங்குரலில் குரைத்தது. நான் அதன் பக்கத்தில் சென்று அதன் தலையைத் தொட்டேன். என் கால் விரல்களை முகர்ந்தது. நான் அதன் தலையைத் தடவிக் கொடுத்தேன். என் உள்ளங்கையை மோப்பம் பிடித்தது. நான் ரயிலில் புறப்படும் முன் எங்கள் தெருவில் வசிக்கும் நான்கு நாய்களுக்கு பிஸ்கட் கொடுத்து விட்டு வந்திருந்தேன். தினமும் அவற்றுக்கு பிஸ்கட் போட்டு விட்டு கொஞ்ச நேரம் அவற்றுடன் விளையாடி விட்டு வருவேன். அவற்றின் வாசனையை ஸ்கூபி அறிந்திருக்கக் கூடும். சரி இவனை ஏதோ ஒரு  விதத்தில் ஏற்றுக் கொள்ளலாம் என அது முடிவு செய்தது. ஸ்கூபி ஏற்றுக் கொண்டதால் பெப்பரும் ஏற்றுக் கொண்டது. நான் ரொம்ப நேரம் அதனுடன் இருந்ததும் ராகவ் , ‘’பிரபு ! ஒருத்தரை ஸ்கூபிக்கு ரொம்ப புடிச்சிருந்தா லேசா கடிக்கும்’’ என்றார். என்னை அதற்கு ரொம்ப பிடிக்கும் முன் நான் விடுபட்டேன். 


திருமதி. ராகவ் தஞ்சாவூர் ஜில்லாவுக்கே உரிய பிரத்யேகத் தன்மை கொண்ட சிறப்பான காஃபி கொடுத்து உபசரித்தார். கடந்த சில மாதங்களாக காஃபி , டீ, பால் என அனைத்தையும் வெற்றிகரமாக தவிர்த்திருக்கிறேன். எனினும் எனது உள்ளுணர்வு இந்த காஃபியை அருந்தச் சொன்னது. எனது வாழ்வில் நான் அருந்திய மிகச் சிறந்த காஃபிகளில் ஒன்று. அக அமைதியும் மனத் திட்பமும் கொண்ட ஒருவராலேயே அவ்வாறாக காஃபி போட முடியும். நான் அருந்திய மிகச் சிறந்த காஃபிகளில் ஒன்று என அவரிடமும் ராகவ்விடமும் கூறினேன். 

நானும் ராகவ்வும் இலக்கியம் பேச ஆரம்பித்தோம். ராகவ் சாய்ந்து கொள்ள திண்டு கொண்டு வந்து தந்தார். நான்  திண்டை முட்டுக் கொடுத்து சோஃபாவில் சாய்ந்து கொண்டு உரையாற்ற ஆரம்பித்தேன். 

அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். 

சட்டென , ‘’ராகவ் ! நீங்கள் எழுத வேண்டும் என விரும்பியிருக்கிறீர்களா?’’ என்று கேட்டேன். 

ராகவ் யோசித்துப் பார்த்து விட்டு , ‘’இல்லை பிரபு ! அதிகமாக வாசிக்க வேண்டும் என்று தான் விரும்பியிருக்கிறேன். ‘’ என்றார். 

கேள்வியை நான் வேறு விதமாகக் கேட்டேன். ‘’கட்டுரைகள், நாவல், சிறுகதை எழுத வேண்டும் என்று எப்போதாவது உங்கள் மனதில் எண்ணம் தோன்றியிருக்கிறதா?’’ என்று கேட்டேன். 

அவர் உடனே ‘’இல்லை’’ என்று பதில் சொன்னார். 

நான் ‘’பொயட்ரி’’ என்றேன். 

ராகவ் தரையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார். நான் புரிந்து கொண்டேன். 

‘’பொயட்ரி எழுதியிருக்கீங்களா?’’

‘’எழுதியிருக்கன் பிரபு. ஆனா அது பொயட்ரியான்னு தெரியலை’’

‘’நீங்க எழுதியிருக்கற பொயட்ரியை எனக்கு காட்டுங்க. நான் வாசிச்சுப் பாக்கறன்’’

தனது அலைபேசியில் அவர் எழுதிய கவிதைகள் சிலவற்றை எனக்குக் காண்பித்தார். நான் ஆர்வத்துடன் வாசித்தேன். 

‘’தொடர்ந்து எழுதுங்க ராகவ். நல்லா எழுதறீங்க. நீங்க தொடர்ந்து எழுதினா உங்க கவிதைகள் வழியா உங்களுக்குள்ள ஒரு டிராவல் நடக்கும். ஈஸ்வர ஹிதம் ‘’ என்றேன். 

Tuesday 22 February 2022

மறுபாதி

தஞ்சை ஜில்லாவில் பிறந்து வளர்ந்தவன் நான். சென்னை எனக்கு வினோதமான ஒரு பிராந்தியமே. 2000ம் ஆண்டு வரை கூட சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு இருந்தது. தஞ்சை ஜில்லாகாரர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடாக இருக்கும் ஊரில் எப்படி இத்தனை மக்கள் அதனை இயல்பாக எடுத்துக் கொண்டு வசிக்கிறார்கள் என்பது தீராத ஆச்சர்யம். அத்துடன் ஆறு மணி நேரப் பயண நேரத்தில் சென்னை இருப்பதால் சட்டென போய் விட்டு சட்டென வந்து விடலாம். ஊருக்கு வெளியில் இராத் தங்குவது இல்லை என்பதை இப்போதும் பலர் எங்கள் பகுதியில் அறிவிக்காமல் கடைப்பிடிக்கிறார்கள்.  வீர நாராயண ஏரியின் தண்ணீர் வந்தடைந்து சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் ஓரளவு தீர்ந்த போது கூட எங்களால் தான் சென்னை தண்ணீர் குடிக்கிறது என்று நாங்கள் நினைத்துக் கொண்டோமே தவிர அதன் பிறகும் அங்கு செல்வதோ தங்குவதோ மாற்றம் இல்லாமலேயே இருந்தது. 

எனினும் சென்னையைக் காண்பது என்பது மிகவும் பிடித்தமானது. அத்தனை ஆயிரம் மக்களை ஒரே இடத்தில் காண்பது என்பது எத்தனை முறை நிகழ்ந்தாலும் அது அரிய அனுபவமே. மக்களின் முகங்களைக் கண்டவாறே இருப்பேன். ஆயிரம் ஆயிரம் முகங்கள். அவை கூறும் ஆயிரம் ஆயிரம் கதைகள். ஒரு மாநகரத்தின் சிறப்பு என்பதே அது வெவ்வேறு வாழ்க்கைமுறையும் எண்ணங்களும் கொண்ட மக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதே. 

அதிகாலையிலேயே தலைகுளித்து இன்னும் ஈரம் காயாத கூந்தலை காற்றில் உலர விட்டவாறு மின்சார ரயிலில் முல்லை அரும்பு வாங்கி ரயிலிலேயே தொடுத்து இறங்க வேண்டிய இடம் வந்து சேர்வதற்குள் அதனைக் கட்டி அதன் பின் தலை துவட்டி மலர் சூடி அலுவலகம் செல்லும் பெண், சூரியக் கதிர் முப்பட்டகக் கண்ணாடி வழியே செல்லும் போது பொங்கிப் பிரவாகிக்கும் வன்ணங்களில் புத்தம் புது ஆடைகள் அணிந்து முதுகில் சிறிதும் இல்லாத பெரிதும் இல்லாத தோள்பையைச் சுமக்கும் இளம் கல்லூரி மாணவிகள்,  பள்ளிச் சீருடையின் மடிப்பு கலையாத சிறுவர்கள், விபூதி வாசனையுடன் பயணிக்கும் மூத்த குடிமக்கள் என சென்னை எனக்கு வெவ்வேறு காட்சிகளின் திரைப்படம் என்று தோன்றும். 

சென்னையில் எனக்கு அசௌகர்யமான அனுபவங்களோ அல்லது நினைவுகளோ இல்லை. நான் பயணித்த ஆட்டோக்களின் ஆட்டோ டிரைவர்கள் என்னிடம் பிரியமாகவே நடந்து கொண்டனர். நான் சென்ற மாநகரப் பேருந்துகளின் நடத்துனர்கள் என்னை மிகச் சரியாகவே நான் இறங்க வேண்டிய நிறுத்தங்களில் இறக்கி விட்டிருக்கிறார்கள். எனக்கு சென்னையின் எல்லா பகுதிகளும் ஒன்று என்றே தோன்றும். ஆட்டோ டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் புண்ணியத்தில் தான் சென்னைக்குள் அவ்வப்போதாவது உலவுகிறேன். 

ஒருமுறை ஒரு சம்பவம் நடந்தது. 

எழும்பூரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் கொள்ளைக் கூட்டம். பயணச்சீட்டு எடுப்பதே பெரும்பாடு ஆகி விட்டது. பேருந்தின் முன் பக்கத்திலிருந்து பலர் பயணச்சீட்டுக்கான தொகையை அனுப்பிக் கொண்டிருந்தனர். நானே பலருக்கு பயணச்சீட்டு எடுப்பதில் உதவினேன். ஒரு வழியாக கோயம்பேடு வந்து சேர்ந்தோம். பேருந்து நின்றது. 

மூன்று டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்திலிருந்து இறங்கும் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்தனர். பயணிகளின் டிக்கெட்களை வாங்கி அவர்கள் மொத்த எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக வைத்துக் கொண்டனர்.  நான் என்னுடைய டிக்கெட்டைக் கொடுத்தேன். பரிசோதகர் என்னிடம் ‘’ சார் ! இந்த டிக்கெட் கிழிந்திருக்கிறது. அதன் இன்னொரு பாதியைக் கொடுங்கள்’’ என்றார். நடத்துனர் அருகில் இருந்தார். அவருக்கு சங்கடம். பேருந்தில் எவ்வளவு கூட்டம் இருந்தது என்பதும் எத்தனை பேர் கைகளின் வழியே பயணித்து டிக்கெட் பயணிகளைச் சேர்ந்தது என்பதும் அவருக்குத் தெரியும். ‘’இன்னொரு பாதியில் தான் டிக்கெட் நம்பர் இருக்கும். அது எங்களுக்கு வேண்டும்’’ என்றார் பரிசோதகர். 

எனது பாக்கெட்டில் நான்கு ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதனை வெளியில் எடுத்து பாக்கெட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பது அந்த சூழ்நிலையில் உசிதமானது அல்ல என்று நான் எண்ணினேன். எனினும் வேறு வழியில்லை. பாக்கெட்டுக்குள் இருந்த அனைத்தையும் வெளியில் எடுத்து ஒருமுறை சோதித்தேன். நான் தேடியது கிடைக்கவில்லை. மீண்டும் ஒருமுறை தேடிய போதும் அகப்படவில்லை. மூன்றாவது முறை என ஒவ்வொன்றாகத் தனியே பிரித்து தேடிய போது பயணச்சீட்டின் மறுபாதி தட்டுப்பட்டது. அதில் அந்த டிக்கெட்டின் நம்பர் இருந்தது. அது ஒரு ஆறிலக்க எண். அந்த எண் இப்போதும் என் நினைவில் இருக்கிறது.  

யோசனை

 உன்னை
காதலிக்கத் தொடங்கும் முன்பே
உனது புன்னகைகள்
அத்தனை நேர்மையுடன்
அத்தனை நன்னம்பிக்கைகளுடன்
அத்தனை திறந்த மனத்துடன்
பரவி நிறைந்து கொண்டிருந்தன
முதல் பார்வையின்
முதல் உரையாடலின்
தயக்கம்
இல்லாமல் தான்
எவரையும்
எதிர்கொண்டாய்
எவரைப் பற்றிய
முன்முடிவையோ
இளக்காரத்தையோ
நீ மனத்தில் சுமக்கவில்லை
கனிவின் இசைவு
கனிவின் இசைமை
வெளிப்பட்டது
உன் 
ஒவ்வொரு சிறு செயலிலும்
உன்னிடம்
உன் இயல்புகளாக
இவற்றைச் சொன்ன போது
யோசித்து
யோசித்து
பார்த்து
‘அப்படியா’
என்றாய்

Sunday 20 February 2022

குழந்தையும் இளைஞனும்

ஈஷ் என்னும் சோமேஸ்வர் ஊருக்கு வந்திருக்கிறான்.

இப்போது கல்லூரி மாணவன். குழந்தையாக சிறுவனாக எடுத்து வளர்த்த குழந்தை இப்போது இளைஞனாக முன் நிற்கிறான். மனித உறவுகளில் உரையாடல் மிகச் சிறந்த உபகரணம். நான் யாருடனாவது உரையாடியவாறே இருக்கிறேன். அவன் நான்கு வயது குழந்தையாக இருந்த போது இங்கே சில மாதங்கள் இருந்தான். பின்னர் வட இந்தியா சென்று விட்டான். அப்போது அவனுடைய பிரிவுத்துயர் தாங்காமல் அவனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். அனேகமாக அவனுக்கு எழுதப்பட்டு அவன் பெற்ற  முதல் கடிதம். அப்போது அவன் குழந்தை. அவனது பெற்றோர்கள் தான் கடிதத்தை வாசித்துக் காண்பித்திருப்பார்கள்.   எழுத்து உரையாடலும் கூடத்தான்.

நாற்காலியில் அமர்ந்து மேஜையில் இருக்கும் மடிக்கணினியின் திரையைப் பார்த்து எழுதிக் கொண்டிருந்தேன்.

‘’ஹாய் அங்கிள்’’ என்றவாறு திடுமென பிரவேசித்தான் ஈஷ்.

‘’ஹாய் ஈஷ். வாட் எ பிளசண்ட் சர்பிரைஸ். காலைல உங்க கார் பார்க் ஆகியிருக்கறத பார்த்தன். நீ வந்திருப்பன்னு கெஸ் பண்ணன்’’

பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்தான்.

‘’அப்புறம் சொல்லுங்க என்ன விசேஷம்’’

‘’ஏகப்பட்ட விசேஷம் இருக்கு. நீ எதைக் கேக்கற’’

‘’தொழில் விஷயத்தை முதல்ல சொல்லுங்க’’

‘’புதுசா ரெண்டு பிராஜெக்ட் ஸ்டார்ட் செய்யறன்’’

‘’கிரேட். என்ன பிராஜெக்ட் ?

‘’அபார்ட்மெண்ட்ஸ்.’’

‘’கிரேட் அங்கிள்’’

’’இந்த லெட்டரை டைப் செஞ்சுட்டு வரேன். நாம ஒரு வாக்கிங் போவோம்’’

‘’ஓ.கே. அப்புறம் கேக்கணும்னு நினைச்சன். உங்களோட ரைட்டிங்லாம் எப்படி போகுது. அப்பப்ப நான் உங்க பிளாக் பாப்பன்’’

‘’நீதான் அப்பப்ப பிளாக் பாக்கறயே. நான் என்ன எழுதிக்கிட்டு இருக்கன். என்ன திங்க் பண்றன். என்ன ஆக்டிவிட்டி செய்யறன் எல்லாம் அதுல இருக்குமே?’’

‘’ரெகுலர் இல்ல அங்கிள். அப்பப்பதான். ஹானஸ்ட்லி ஸ்பீக்கிங்’’

‘’யூ ஆர் ஆல்வேஸ் ஹானஸ்ட். ஐ நோ’’

‘’இப்ப என்ன லெட்டர் டைப் பண்றீங்க?’’

‘’அதாவது , ரைட் டு இன்ஃபர்மேஷன்னு ஒரு சட்டம் இருக்கு’’

‘’தெரியுமே! ஆர் டி ஐ’’

‘’ஆர் டி ஐ ஃபீஸ் எவ்வளவு ரூபாய் தெரியுமா?’’

‘’ம் . பத்து ரூபான்னு நினைக்கறன்’’

‘’யூ ஆர் ரைட். அத எப்படி கட்டணும்னு தெரியுமா?’’

‘’டிமாண்ட் டிராஃப்ட் இல்லன்னா டிரஷரி சலான். அப்பா சொல்லியிருக்கார்’’

‘’இண்டியன் போஸ்டல் ஆர்டராவும் கட்டலாம். டிமாண்ட் டிராஃப்ட் கமிஷன் அதிகம். மினிமம் கமிஷனே 45 ரூபாய். ஆனா போஸ்டல் ஆர்டர் கமிஷன் ஒரு ரூபாய் தான். பத்து ரூபாய் போஸ்டல் ஆர்டர்ரை டவுன்ல இருக்கற எல்லா போஸ்ட் ஆஃபிஸ்லயும் எப்பவும் அவேளபிளா இருக்கறது உறுதிப்படுத்தச் சொல்லி தலைமை தபால் நிலைய போஸ்ட் மாஸ்டருக்கும் சூப்பரிண்டெண்டெண்ட் ஆஃப் போஸ்ட்-க்கும் ஒரு கடிதம் எழுதறன்’’

***

அடுத்த நாள் வந்தான்.

‘’இப்ப யாருக்கு அங்கிள் லெட்டர்?’’

‘’இது லெட்டர் இல்ல. ஒரு ஜெனரல் அப்பீல்’’

‘’என்ன அது?’’

‘’ஒரு கிராமத்து சுடுகாட்டுக்கு போற பாதை களிமண் ரோடா இருக்கு. அதுல டப்ரீஸ் அடிக்கணும். பெங்களூர்ல ஒரு ஃபிரண்டு ஹெல்ப் பண்றன்னு சொன்னார். அவர்ட்ட விஷயம் என்னன்னு எக்ஸ்பிளைன் செஞ்சு ஒரு ரைட் அப் எழுதறன்’’

***

அன்று மாலை வந்தான்.

‘’என்ன அங்கிள் நான் வரும் போதெல்லாம் ஏதாவது டைப் பண்ணிட்டே இருக்கீங்க?’’

தகவல் பெறும் உரிமைச் சட்டம் (2005)ன் படி அளிக்கப்பட்ட ஒரு தகவல் குறித்து அப்பீலேட் அதாரிடி ஒருவருக்கு முதல் மேல்முறையீடு தயார் செய்து கொண்டிருந்தேன்.

‘’ஏதாவது ஒரு ஒர்க்ல எப்பவும் எங்கேஜ் ஆகி இருக்கீங்க. ஆனா ஃபோன் மட்டும் ஸ்மார்ட்ஃபோன் வச்சுக்க மாட்டேங்கறீங்க’’

‘’’’நீயும் சொல்லிட்டயா? நீ ஏன் ஸ்மார்ட் ஃபோன் வச்சுருக்கன்னு நான் கேட்டனா? அப்புறம் நீ மட்டும் ஏன் நான் ஸ்மார்ட் ஃபோன் இல்லாம இருக்கன்னு கேக்கற? ஆக்சுவலா நான் இந்த ஜி.எஸ்.எம் ஃபோனும் இல்லாம லேண்ட்லைன் ஃபோனுக்கு மாறிடலாமான்னு யோசிக்கறன்.’’

***

அன்று மாலை 6 மணிக்கு அவனுடன் வாக்கிங் சென்றேன்.

அப்போது என்னிடம் சொன்னான் : ‘’அங்கிள்! ஐ யாம் இண்ட்ரஸ்ட்டட் இன் சோஷியல் ஒர்க்’’

சோமேஸ்வரை ஒரு இளைஞனாகவும் ஒரு குழந்தையாகவும் அந்த கணம் என் மனம் கண்டது.  

***

Saturday 19 February 2022

ஒரு நண்பரின் யோசனை

நான் யோசனைகளை விரும்புபவன். எப்போதும் புதிய யோசனைகள் குறித்து சிந்திப்பவன். ஆலோசிப்பவன். யோசனைகளில் சிறிது பெரிது என்று பேதமில்லை. அது செயலாகும் இடம் பொருள் ஏவல் குறித்தே அதன் செயலாக்கம் ஈடேறுகிறது. சிறு சிறு யோசனைகள் கூட பெரும் விளைவை உருவாக்க வல்லவை என்று நான் நம்புகிறேன். அதனால் புது யோசனைகளுக்கு எப்போதும் திறந்த மனத்துடன் இருக்கிறேன். ’’காவிரி போற்றுதும்’’ நண்பர்களிடம் எப்போதும் புதிய யோசனைகளைத் தெரிவியுங்கள் என்று கோரிய வண்ணம் இருக்கிறேன். 

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ஓர் அறிஞர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை அறிந்தவர். ‘’ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ பதிவை வாசித்து விட்டு அந்த முயற்சிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் பாண்டித்யம் பெற்றவர் என்பதை நான் முன்னரே அறிவேன். கிராமப்புற மாணவர்களுக்கு ஹிந்தி கற்றுக் கொடுக்கும் முயற்சி குறித்து வாழ்த்தும் போது அவர் தான் தன் சிறு வயதில் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் பயின்ற விபரத்தைப் பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு தான் அவர் இத்தனை மொழிகள் அறிந்தவர் என்பதை நான் அறிந்தேன்.  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

‘’காவிரி போற்றுதும்’’ மரம் நடும் விஷயத்தில் அவர் ஒரு யோசனையை வழங்கினார். அதாவது , இந்திய மரபில் ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திரத்துக்கும் உரிய மரம் என வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஜென்ம நட்சட்த்திரம் கொண்டவர் ஒரு குறிப்பிட்ட மரத்தை நட்டு வளர்ப்பார் எனில் அந்த மரத்துடன் உணர்வுபூர்வமான ஒரு தொடர்பை உருவாக்கிக் கொள்வார் எனில் பேரியற்கையின் ஆசியை அவர் பெறுவார் என்பது ஒரு இந்திய நம்பிக்கை. நண்பரின் யோசனை ஒரு கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு அவரவர் நட்சத்திரத்துக்குரிய மரத்தை வழங்கலாம் எனக் கூறியிருந்தார். இது மிக நல்ல யோசனை என்று எனக்குப் பட்டது. 


இந்திய பாரம்பர்ய நாட்காட்டியின் படி, விண்மீன்கள் 27. அவை 1. அஸ்வினி 2. பரணி 3. கார்த்திகை 4. ரோகிணி 5. மிருகசீரிஷம்  6. திருவாதிரை  7. புனர்பூசம்  8. பூசம் 9. ஆயில்யம்  10. மகம் 11. பூரம் 12. உத்திரம் 13. ஹஸ்தம் 14. சித்திரை 15. சுவாதி 16. விசாகம் 17. அனுஷம் 18. கேட்டை  19. மூலம்  20. பூராடம் 21. உத்திராடம் 22. திருவோணம் 23. அவிட்டம் 24. சதயம் 25. பூராட்டாதி  26. உத்திரட்டாதி 27. ரேவதி

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய மரம் என 27 மரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை 1. அஸ்வினி – காஞ்சிரம் 2. பரணி – நெல்லி 3. கார்த்திகை – அத்தி 4. ரோகிணி – நாவல் 5. மிருகசீரிஷம் – கருங்காலி மரம் 6. திருவாதிரை – செங்கருங்காலி மரம் 7. புனர்பூசம் – மூங்கில் 8. பூசம் – அரசமரம் 9. ஆயில்யம் – புன்னைமரம் 10. மகம் – ஆலமரம் 11. பூரம் – பலா 12. உத்திரம் – அலரி 13. ஹஸ்தம் – அத்தி அல்லது வேல மரம் 14. சித்திரை – வில்வம் 15. சுவாதி – மருத மரம் 16. விசாகம் – விளா 17. அனுஷம் – மகிழம் 18. கேட்டை – பிராயன் 19. மூலம் – மா 20. பூராடம் – வஞ்சி 21. உத்திராடம் – பலா 22. திருவோணம் – எருக்கு 23. அவிட்டம் – வன்னி 24. சதயம் – கடம்பு 25. பூராட்டாதி – தேமா 26. உத்திரட்டாதி – வேம்பு 27. ரேவதி - இலுப்பை

இந்த யோசனையைக் குறித்த எனது முதலெண்ணங்கள் : 

1. இந்த யோசனை தொல்மரபு ஒன்றின் வேர்களைக் கொண்டுள்ளது. விருட்சங்களுக்கும் இந்திய மரபுக்கும் இருக்கும் அனாதி கால உறவினை குறியீட்டுரீதியில் எடுத்துக் காட்டுவது

2. கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் , பேரக் குழந்தைகள் இருப்பார்கள். அவர்கள் விண்மீனுக்கு உரிய மரங்களை நட்டு வளர்ப்பதை பெற்றோரும் தாத்தா பாட்டிகளும் மகிழ்ந்து செய்வார்கள். மரக்கன்றுகளின் வளர்ச்சி குழந்தைகள் மேல் அவர்கள் கொள்ளும் உணர்வுபூர்வமான பிரியத்தின் காரணமாக உறுதி செய்யப்படும்

 3. 27 வகையான மரங்கள் அந்த கிராமத்தில் இருப்பது நல்ல விஷயம்

 4. அரசு, ஆல் போன்ற மரங்களை அந்த நட்சத்திரத்துக்குரியவர்களை பொது இடத்தில் நட்டு அதன் பராமரிப்பை அவர்கள் வசம் அளிக்கலாம். ஆதலால் பொது இடத்திலும் சில மரங்கள் வளரும்

 5. குடிசைப் பகுதிகளில் வசிக்கும் - வீட்டுத் தோட்டம் இல்லாத மக்கள் வசிக்கும் இடங்களில் ஒரு சிறு பொது இடம் ஒன்றை ஒதுக்கி - குளக்கரை, வாய்க்கால் கரை போன்ற இடங்கள் - அதில் 27 விண்மீன்களுக்கும் உரிய மரங்களை நட்டுக் கொடுத்து பராமரித்துக் கொள்ள சொல்லலாம்

 6. இந்த 27 மரங்களின் மருத்துவ குணங்கள் குறித்த பிரசுரங்களை மக்களுக்கு வழங்கலாம். நமது பாரம்பர்ய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா குறித்த விழிப்புணர்வையும் அது அளிக்கும்

நமது மரபு சிவபெருமானை பிணி தீர்க்கும் மருத்துவனாகக் கருதுகிறது. உயிர்களை அழிக்கும் நஞ்சினைத் தான் உண்டு உயிர்களுக்கு அமிர்தம் அளித்துக் காத்தவன் என்கிறது. பிறவி நோய் மீண்டும் ஏற்படாமல் அருள்பவன் என்கிறது. வைத்தீஸ்வரன் நீலகண்டனாக இருக்கும் ஏதேனும் ஒரு தலத்தில் - கிராமத்தில் நண்பரின் யோசனையை செயலாக்கலாம் என எண்ணுகிறேன். 

 


Friday 18 February 2022

ஏழைக்கு எழுத்தறிவித்தல் - ஒரு கடிதம்

அன்புள்ள பிரபு,


’’ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ மிக முக்கியமான, சிறந்த பணி.

நான்  கிரந்தம் கற்றுக்கொள்வது பற்றி உங்களிடம் பகிர்ந்துள்ளேன் என்று  நினைக்கிறேன்.

இந்த ஒன்றரை வருடங்களில் நான் உணர்ந்தது, எவ்வளவுக்கெவ்வளவு வெவ்வேறு மொழிகளையும் வரி வடிவங்களையும் கற்றுக்கொள்கிறோமோ, அது நம்மை மிகவும் கூர்மைப்படுத்துகிறது, செம்மைப்படுத்துகிறது. 

நீங்கள் பள்ளி மாணவரகளுக்கு கற்றுக்கொடுப்பதனால் விளையும் நன்மைகள் பல - அவர்கள் பசுமையான நிலம், மிக எளிதில் கற்றுக்கொள்வார்கள். பொதுவாகவே மாணவர் பருவத்தில் பொறுப்புகளும், அவஸ்தைகளும் ஒப்புநோக்க குறைவே, எனவே அவர்கள் வேறு எந்த distraction-உம் இல்லாமல் விரைவில் 
கற்றுக்கொள்வர்.

பிற்காலத்தில் அவர்களை எவரும் மொழி வாரியாக எளிதில் பிரித்தாள முடியாது என்பதும் என் நம்பிக்கை.
(மொழி, மதம் போன்றவைகளைப் பயன்படுத்தி  எளிதில் மக்களை மோதவிட முடியும்; ஏனெனில் அவை அடிப்படையான விஷயம். ஆனால் அடுத்த மொழி/மதம் நமக்குத் தெரியாதது. என்பதனாலேயே  நமக்கு எளிதில் ஒவ்வாமையை உண்டாக்கும். இந்த சாத்தியத்தை உங்ககளது முயற்சி வெல்லட்டும்)

பெரிய வித்தியாசம், நீங்கள் சொல்லியிருக்கும்  - No homework!
இது மிகப்பெரிய அளவில் தயக்கங்களைத் தவிர்க்கும் என்றே நம்புகிறேன். (ஆனாலும், இதை ஒரு மாதத்தில் நீங்கள் தளர்த்திக்கொள்ளலாம் என்றே 
படுகிறது - அட்லீஸ்ட்  விருப்பபட்டவர்களுக்கு மட்டுமாவது)

நான்  என் 10/11 வயதில் கற்றுக்கொண்ட ஹிந்தி வரிவடிவமும் (தேவநாகரி), அடிப்படை வார்த்தைகளும் இன்றும் எனக்கு அவ்வப்போது பயன்படுகிறது.

உங்கள் முயற்சி பெரிய அளவில் அனைவரையும் சென்று சேர்ந்து நலன் விளைய என் பிரார்த்தனைகள்.

ஏதேனும் உதவி தேவைப்படின் நிச்சயம் தெரியப்படுத்தவும். கட்டாயம் செய்கிறேன்.

அன்புடன்,

உலகநாதன்

சங்கிரகம்

சில நாட்களாக தளத்தில் ’’காவிரி போற்றுதும்’’ பணிகளை மீள்பதிவு செய்து கொண்டிருந்தேன். அது பணிகளைத் தொகுத்துக் கொள்ள உதவிகரமாக இருந்தது. என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை புறவயமாக அறியச் செய்தது. இச்செயல்கள் அமைப்பின் செயல்கள் மட்டும் அல்ல ; மக்களின் செயல்களும் கூட. மக்கள் பங்களிப்பு இருக்கும் விதத்திலேயே ‘’காவிரி போற்றுதும்’’ தன் செயல்களை வடிவமைக்கிறது. எனவே மக்களுக்கு முதற்கண் நன்றி தெரிவிக்கிறது.  தமிழ்ச் சூழலில் எவ்விதமான பங்களிப்பும் நிதிப்பங்களிப்பே என்ற மனப்பதிவு பரவலாக உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் செயல்கள் மூலம் பங்கெடுப்பதும் பெரும் பயன் விளைவிக்கக் கூடியது என்பதை ‘’காவிரி போற்றுதும்’’  அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளது. 

புதிதாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என ‘’காவிரி போற்றுதும்’’ கூறும் போதெல்லாம் அதற்கு ஊக்கம் தந்து அது நிகழ்வதற்கு சகலவிதமான உதவிகளும் செய்து அதனைச் சாத்தியமாக்குவது நண்பர்களே. அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல இந்த தருணம் பொருத்தமானது ஆகும். 

உண்மையில் ‘’காவிரி போற்றுதும்’’  ஓர் இணைப்புப் பாலமாகவே செயல்படுகிறது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் ஒரு பக்கம். சாமானிய மக்கள் இன்னொரு பக்கம். அவர்கள் இருவரும் ‘’காவிரி போற்றுதும்’’ வழியாக இணைக்கப்படுகிறார்கள். அந்த இணைப்பின் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்கிறது என்பதே உண்மை. 


















Thursday 17 February 2022

ஏழைக்கு எழுத்தறிவித்தல் ( மறு பிரசுரம்)

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்

-பாரதி

’’காவிரி போற்றுதும்’’ கல்விப்பணி ஒன்றை ஆற்ற உள்ளது. 

ஓரிரு நாட்களுக்கு முன்னால், ஒரு எண்ணம் தோன்றியது. ஊரைச் சுற்றியுள்ள பத்து கிராமங்களில் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச ஹிந்தி வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற விருப்பம் உண்டானது. கிராமப்புற மாணவர்கள் ஹிந்தி பயில வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதால் அவர்களின் நலனுக்காக இந்த செயலை ஒருங்கிணைக்க வேண்டும் என்று விரும்பினேன்.  

இதன் செயல்வடிவம் கீழ்க்காணும் கூறுகளை நிறைவு செய்ய வேண்டும் என்ற விதத்தில் திட்டமிட்டேன். 

1. மாணவர்களிடம் எந்த விதமான கட்டணமும் பெறப்படாது. ஆசிரியர் ஊதியம், நூல்கள், பயிற்சி ஏடுகள், தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்தும் ‘’காவிரி போற்றுதும்’’ வழங்கும். மாணவர்கள் வகுப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக கற்றலே எதிர்பார்க்கப்படுவது. 

2. ஹிந்தி வகுப்புகள் தினமும் ஒரு மணி நேரம் என 365 நாளும் நடைபெறும். விடுமுறை என்பது கிடையாது. வகுப்பில் பயில்வதற்கு அப்பால் வீட்டுப்பாடம் என எதுவும் கிடையாது. கற்பித்தல் , பயிற்சி, மதிப்பீடு ஆகியவை வகுப்பிலேயே நிகழும். இந்த பயிற்சிக்கு ஒரு மணி நேரம் கொடுத்தால் போதும். மீதி 23 மணி நேரத்தில் அவர்கள் வழக்கம் போல் தங்கள் பள்ளிக்கல்வி, வீட்டுவேலைகள், பெற்றோருக்கு உதவுதல் ஆகிய பணிகளைச் செய்யலாம். 

3. பொதுவாக ஒரு தமிழ் கிராமம் என்பது மூன்று அல்லது நான்கு குக்கிராமங்களைக் கொண்டது. ஹிந்தி வகுப்புகள் ஒரு கிராமத்தின் அனைத்து குக்கிராமங்களிலும் நிகழும். 

4. மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையிலிருந்து ( 8 வயது) எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை வரை (பதின்மூன்று வயது) வகுப்பில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்காக தயாராவார்கள் என்பதால் அவர்கள் இணைக்கப்படவில்லை. கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இதில் இணையலாம். 

5. காலை 6.20 மணியிலிருந்து காலை 7.20 மணி வரை வகுப்புகள் நடைபெறும். 

6. ஹிந்தி மொழி எழுத, படிக்க,பேச சொல்லித் தரப்படும்.

7. சென்னையில் 1918ம் ஆண்டு மகாத்மா காந்தி அடிகளால் துவங்கப்பட்ட நிறுவனம் ‘’தக்‌ஷிண் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா’’. பல ஆண்டுகள் காந்திஜி அதன் தலைவராக இருந்திருக்கிறார். முன்னாள் பாரதப் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி , பி.வி. நரசிம்ம ராவ் ஆகியோர் ‘’தக்‌ஷிண் பாரத் ஹிந்தி பிரசார் சபா’’வின் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த அமைப்பு   இந்திய தொழில்நுட்பக் கழகம் ( Indian Institute of Technology) (IIT) போன்ற ஓர் உயர் கல்வி நிறுவனம் ஆகும். அவர்கள் அளிக்கும் பட்டம் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டத்திற்குச் சமமானது. அவர்கள் நடத்தும் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் விதத்தில் வகுப்புகள் நடைபெறும். 

8. முதலில் ஒரு கிராமத்தில் மூன்று இடங்களில் வகுப்புகள் துவங்கப் பெறும். 

9. மூன்று மாதங்களுக்குப் பின் நான்கு கிராமங்களில் பன்னிரண்டு இடங்களில் வகுப்புகள் துவங்கப் பெறும். 

10. ஆறு மாதங்களுக்குப் பின் பத்து கிராமங்களில் முப்பது இடங்களில் வகுப்புகள் துவங்கப் பெறும்.  

Wednesday 16 February 2022

தீபங்களுடன் குடியரசு தினம் ( மறு பிரசுரம்)

தடுப்பூசிக்காகச் செயல் புரிந்த கிராமத்தில்,  இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டில் நிகழும் குடியரசு தினம் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை ஒட்டி கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் ஒரு மரக்கன்று வழங்கப்பட்டது. அதனை அவர்கள் குடியரசு தினத்தன்று காலையில் அவர்கள் வீட்டு வாசலிலோ அல்லது தோட்டத்திலோ நட்டனர். இதன் மூலம் அந்த கிராமத்தில் குடியரசு தினத்தன்று ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்கள் ஏற்றி குடியரசு தினத்தைக் கொண்டாடினர். தீபங்கள் ஏற்றும் நிகழ்வில் கிராமத்தின் எல்லா குடும்பங்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 





 

Tuesday 15 February 2022

முதல் நபர் (மறு பிரசுரம்)



இன்று ஒரு கிராமத்தின் பகுதியாக இருக்கும் குக்கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒருவரைச் சந்திக்க வேண்டும். அந்த பகுதியில் 250 குடிசை வீடுகள் உள்ளன. நான் சந்திக்கச் சென்றவர் வீட்டில் இருந்தார். பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தேன். கிராமத்திற்குச் செய்யும் சேவை  நாட்டுக்குச் செய்யும் சேவை என்பதே ''காவிரி போற்றுதும்’’ பணிகளின் அடிப்படை.  மக்களைச் செயலாற்றச் செய்து அதன் மூலம் மக்களை இணைத்து கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் வளர்ச்சியை உருவாக்குவதே ‘’காவிரி போற்றுதும்’’ செயல்முறை. 

நிலம் என்பது ஸ்திரமானது. அதனால் தான் அதனை ‘அசையாச் சொத்து’ எனக் கருதுகிறோம். நிலத்துடன் தங்கள் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்டவர்கள் மனம் ஒரே விதமான செயல்முறைக்குப் பழகியிருக்கும். அதுவே இயல்பானது. அதில் சிற்சில மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என ‘’காவிரி போற்றுதும்’’ நம்புகிறது. அந்த நம்பிக்கையின் திசையில் பயணிக்கிறது. 

கிராம மக்கள் சந்திக்கும் சிக்கல்களாக பல விஷயங்களை ‘’காவிரி போற்றுதும்’’ அவதானிப்பதுண்டு. கிராம மக்களே தாங்கள் எதிர் கொள்ளும் இடர்களாக சில விஷயங்களை நம்மிடம் சொல்வதுண்டு. அவற்றைப் பரிசீலித்து செய்து கொடுக்க தொடர்ந்து முயல்வேன். 

நான் சந்திக்கச் சென்ற நபர் ஒரு சிக்கலை என்னிடம் சொன்னார். அதாவது , அவர்கள் குடியிருப்பு ஒரு பெரிய கால்வாயின் கரையில் உள்ளது. குடியிருப்புக்கு இட்டுச் செல்லும் பாதை ஒன்று மட்டுமே அவர்கள் இடத்துக்குச் செல்வதற்கு ஒரே வழி. அதே வழியாகவே திரும்பி வர வேண்டும். வேறு திசைகளில் எந்த சாலையும் கிடையாது. இந்த சாலையிலிருந்து தோராயமாக 500 மீட்டர் தூரத்தில் அவர்களுடைய மயானம் அமைந்துள்ளது. மண் சாலை. மழை பெய்தால் கணுக்கால் புதையும் அளவுக்கு சேறாகி விடுகிறது. இறந்தவரின் உடலைக் கொண்டு செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது என்று கூறினார். நான் அந்த இடத்தைப் பார்ப்போம் என்று சொல்லி அவருடன் புறப்பட்டேன். இடத்தினைப் பார்வையிட்டேன். 

’’கலெக்டர் கவனத்துக்கு கொண்டு போனீங்களா?’’

‘’ஊராட்சில தீர்மானம் போட்டு யூனியனுக்கு அனுப்பியிருக்கு சார்’’

‘’கலெக்டருக்கு ஒரு கடிதம் எழுதுவோம். அதுல இந்த பகுதி மக்கள் ட்ட மட்டும்னு இல்லாம ஒட்டு மொத்த கிராமத்திலயும் ஆயிரம் பேர்ட்ட கையெழுத்து வாங்கி அனுப்புவோம்.’’

‘’பொதுவா எங்க ஏரியா பிரச்சனைகள எங்க ஏரியா காரங்கதான் பாத்துப்பாங்க. ‘’

’’அதாவது நாம ஒரு விஷயம் செய்யணும்னு முயற்சி பண்றோம்னா நமக்கு எல்லா விதமான சப்போர்ட்டும் தேவை. நாம ஒரு நியாயமான விஷயத்தை முன்வைக்கிறோம். அதுக்கு நியாய உணர்வு இருக்கற பல பேரு தங்களோட ஆதரவைத் தருவாங்க. ஒரு விஷயத்துக்கு பல பேரோட ஆதரவு இருக்குன்னு ஆகும் போது நாம முன்வைக்கிற விஷயம் அதுக்கு சாத்தியமான ஒரு வழில தீர்வை அடைஞ்சுடும்.’’

பேசிக் கொண்டே அந்த 500 மீட்டர் தூரத்தைக் கடந்து அந்த மயானம் வரை சென்று விட்டோம். அந்த மயானத்தைப் பார்வையிட்டேன். 

‘’தூரம் அதிகமாயிருக்கு. அப்ரோச் ரோடு போட இவ்வளவு தொகை ஆகும்னு  பஞ்சாயத்து யூனியன்ல எஸ்டிமேட் எதுவும் போட்டிருக்காங்களா? உங்களுக்கு விபரம் தெரியுமா?’’

‘’தெரியல சார்’’

‘’நான் அடுத்த வாரம் மெஷரிங் டேப் எடுத்துட்டு வரேன். இந்த ரோடோட நீளம் அகலத்தை துல்லியமா அளந்துக்கறன். ஸ்ட்ரக்சர் டெமாலிஷ் பண்ண டப்ரீஸ் டிராக்டர்ல கொண்டு வந்து போட்டு நடந்து போக ஏற்பாடு செய்ய முடியுமான்னு பாக்கறன்.’’

‘’ரொம்ப கஷ்டமா இருக்கு சார். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க’’

‘’என்னால முடிஞ்சத நிச்சயம் செய்றேன்.’’

‘’சார் நான் பல பேர்ட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டேன். இந்த இடத்தை நேராப் பாக்கணும்னு ரோட்டில இருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி இருக்கற இந்த இடத்தை நேரடியா வந்து பாத்த முதல் நபர் நீங்க தான்.’’

‘’நம்ம எல்லாருக்குமே காசி ரொம்ப உசந்த புண்ணியமான இடம். அந்த காசியே ஒரு பெரிய மயானம் தான். மணிக்கர்ணிகா காட் மயானத்தோட முதல் பிணத்தின் சாம்பல்ல தான் காசி விஸ்வநாதருக்கு அதிகாலை அபிஷேகம் நடக்குது. இறந்த ஒருத்தரோட உடல் ஆறு மணி நேரத்துக்குள்ள எரியூட்டப்படணும்னு இந்தியாவோட யோக மரபு சொல்லுது. பலவிதத்திலயும் நாம முயற்சி செய்வோம்’’ என்று சொன்னேன்.