Tuesday 28 February 2023

ஊர்கோலம்

எனது நண்பர் ஒருவர் பொறியாளர். வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். தீவிர இலக்கியம் வாசிப்பவரல்ல. வெகுஜன இலக்கியம் வாசிப்பார். தினமும் ஏதேனும் வாசிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர். அ-புனைவுகள் அதிகம் வாசிப்பார். சிறு வயதில் ஒரு பிரிண்டிங் பிரஸ் தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்ததாகவும் தான் தினமும் அங்கே சென்று பிரிண்டிங் பிரஸ்ஸில் அச்சிட வந்திருக்கும் துண்டுப் பிரசுரங்களை அந்த அச்சு மை மணத்தின் மீதுள்ள ஆர்வத்தால் வாசிக்கத் தொடங்கி புத்தக வாசிப்புக்குள் வந்ததாக ஒருமுறை கூறியிருந்தார். தமிழ்ச்சூழலில் பலர் இவ்வாறான தற்செயல்கள் வழியாகவே வாசிப்புக்குள் வருகின்றனர். புத்தக வாசிப்பை அறிமுகப்படுத்தும் புத்தக வாசிப்பை முக்கியமானதாகக் கருதும் குடும்பங்கள் தமிழ்ச்சூழலில் அனேகமாக இல்லை. தமிழ்ச்சூழல் லௌகிகத்தையே பெரிதாக நினைக்கிறது. தமிழ்ச்சூழல் லௌகிகத்தையே வழிபடுகிறது.

நான் மோட்டார்சைக்கிளை விரும்புபவன் என்பதால் என்னால் வண்டியின் பின்னாலும் லகுவாக அமர்ந்து கொள்ள முடியும். வண்டியை ஓட்டுபவருக்கும் வண்டியில் அமர்ந்திருப்பவருக்கும் ஒரு பொதுப்புரிதல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே இரு சக்கர வாகனப் பயணம் இருவர் மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியாக இருக்கும். இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவர் முரண்பட வாய்ப்பு மிக மிகக் குறைவு. மனித மனம் பற்றி இறுதிச் சொல் எதனையும் கூறி விட முடியுமா என்ன?

சாலை ஓரத்தில் ஒரு புரசமரம் பூத்திருந்தது. புரசின் பூக்கள் தீக்கொழுந்துகள் போல் தோன்றும். புரசு ஒரு எரிமலர். நண்பரிடம் ‘’புரச மரம் மிகவும் முக்கியமான மரம் தெரியுமா ?’’ என்றேன். நண்பர் நான் சொல்வதை ஆழமாகக் கவனித்தார். ‘’புரசு இல்லாமல் இந்தியாவில் எந்த சடங்கும் கிடையாது. இந்தியர்களின் எல்லா விதமான சடங்குகளுக்கும் புரசு தேவை. மிகவும் பவித்ரமான மரம்’’ என்று சொன்னேன். நண்பர் என்னிடம் புரசைவாக்கம் என்ற பெயர் புரச மரத்திலிருந்து வந்ததா என்று கேட்டார். ‘’புரசைவாக்கத்தில் ஆயிரம் ஆண்டு தொன்மையான சிவாலயம் உள்ளது. அதன் தல விருட்சம் புரசு ‘’ என்று சொன்னேன். 

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. ஆடு மாடு மேயாத மரங்களின் விதைகளை சேகரிக்க முயற்சி செய்கிறேன் என்று சொன்னேன். பனையை ஆடு மாடு மேயாது என்று சொன்னார். அவர் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டேன். சற்று முயன்றால் பனை விதைகளை சேகரிக்க முடியும். 

சிதம்பரத்தில் ஒரு இல்லக் கட்டுமானப் பணியை மேற்கொள்கிறார். அதனைக் காண சென்றோம். ஆயிரம் சதுர அடி கொண்ட வீடு . சிறப்பான தரமான கட்டுமானத்தை மேற்கொண்டிருந்தார். அவரை நான் பாராட்டினேன். வீட்டு வாசலில் ஒரு சிறு திண்ணை அமைத்திருந்தார். அதனையும் பாராட்டினேன். எங்கள் பயணத்தில் இடையிடையே மழை பெய்து கொண்டிருந்தது. பிப்ரவரி இறுதியில் மழை பெய்வதெல்லாம் மிகவும் அபூர்வம். 

தமிழ்நாட்டின் வீடுகள் வீட்டு உறுப்பினர்களை மட்டுமே கவனத்தில் கொண்டு அமைக்கப்படுபவை. வீட்டுக்கு நண்பர்களும் உறவினர்களும் வரக் கூடும் என்பதையோ ஒரு வாரம் வரை தங்கக் கூடும் என்பதையோ கவனத்தில் கொள்ளாமல் கட்டப்படுகின்றன. அவ்வாறு கட்டப்படுவதால் அது போதும் என நினைப்பதால் வீட்டுக்கு உறவினர்கள் வந்து தங்குவது பெரிய அளவில் குறைந்து விட்டது. வீட்டு மாடியில் உள்ள இடத்தை வீடு கட்டி வாடகைக்கு விட வேண்டும் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் உள்ளதே தவிர விருந்தினர்களுக்கு ஏற்பாடுகள் சிலவற்றை செய்வோம் என்ற எண்ணம் இங்கு இல்லை. ‘’யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ‘’ என்று கூறியவனின் மண் என்பதை நினைக்கும் போது மெல்லிய துயரம் ஏற்படும். 

திரும்பி வரும் போது மிக நேர்த்தியாக வண்டி ஓட்டினார். பைக்கில் ஒரு நாள் இராமேஸ்வரம் சென்று வருவோம் என்று சொன்னேன். இரண்டு நாள் பயணமாக செல்ல திட்டமிட்டோம். காலை 6 மணிக்கு ஊரிலிருந்து புறப்பட்டால் மதியம் ஒரு மணிக்கு ராமேஸ்வரம் சென்று விடலாம். அன்று ராமநாத சுவாமி ஆலயம், தனுஷ்கோடி சென்று வணங்கினால் மறுநாள் காலை 6 மணிக்கு இராமேஸ்வரத்தில் புறப்பட்டு மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து விடலாம் என்று திட்டமிட்டோம்.   

Saturday 25 February 2023

நேரம்

வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு இன்றி பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வெட்டி விற்பனை செய்யப்பட்ட விஷயத்தில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்ற மாதம் கடைசி வாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியிருந்தேன். மனு அனுப்பி ஒரு மாத காலம் ஆயிற்று.  மூன்று நாட்களுக்கு முன்னால், மாவட்ட வருவாய் அதிகாரி வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல் எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் இந்த விஷயம் குறித்து ஒரு அறிக்கை அளிக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரி வருவாய் கோட்டாட்சியரிடம் கோரியிருந்தார். வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதும் தவறிழைத்தவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் கோரிக்கைகள். மாவட்ட ஆட்சியருக்கு மனுவை அனுப்பி அதன் நகலை மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் வருவாய் கோட்டாட்சியருக்கும் அனுப்பியிருந்தேன். 

சமீபத்தில் மேஜையை சரி செய்ததில் அந்த மனு நகலில் மூன்று அதிகாரிகளுக்கும் அனுப்பிய பதிவுத் தபாலின் ரசீது ஒட்டப்படாமல் இருந்ததை கவனித்தேன். மரம் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் நடந்து ஏழு மாதங்கள் ஆகிறது. இந்த விஷயத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு கொண்டு செல்லலாம் என இருக்கிறேன். அவ்வாறெனில் அந்த ரசீதுகள் மனுவில் ஒட்டப்பட்டு நகல் எடுக்க வேண்டும். ரசீதுகள் அளவில் சிறியதாக இருக்கும். மேஜை டிராயரில் பார்த்தேன். கண்ணில் படவில்லை. மேஜையை சரி செய்ததால் விடுபடலாக மேஜையை விட்டு வெளியேறிவிட்டதா என்று எனக்கு ஐயம். புதிதாக ஒரு மனு எழுதினால் மேலும் நாளாகுமே என சஞ்சலம். அஞ்சலகத்தில் தபால் அனுப்பிய தேதியை சொன்னால் அந்த ரசீது எண்ணைப் பெற்றிட முடியும் . அதனை அஞ்சல் துறையின் இணையதளத்தில் உள்ளிட்டால் பதிவுத் தபால் அனுப்பிய விபரம் கிடைக்கும். நான் மூன்று அஞ்சலகங்கள் மூலம் வழக்கமாக மனுக்களை அனுப்புவேன். அதில் எந்த அஞ்சலகம் என்று உறுதியாகத் தெரியவில்லை. தெளிவில்லாமல் குழப்பமாக இருந்தது. மூன்று முறை மேஜை டிராயரில் தேடியாகி விட்டது. இருப்பினும் நான்காவது முறை தேடினேன். அந்த மூன்று ரசீதுகளும் கண்ணில் தென்பட்டன. தவறிழைத்தவர்களின் ‘’நேரம்’’ அவர்களுக்கு சாதகமாக இல்லை. வேறென்ன?

Thursday 23 February 2023

பிரியமும் அன்பும்

இன்று காலை செயல் புரியும் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். தேக்கு பயிரிட்ட விவசாயியின் தோட்டத்துக்குச் சென்றேன். அவர் அங்கு இருந்தார். ஒரு இளைஞன் தேக்கு மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. விஜயதசமி அன்று நடப்பட்ட கன்றுகள் அவை. நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துள்ளன. கோடை இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. கோடையின் கட்டியம் மாசி மாத பகல்களில் உணர முடிகிறது. தேக்கு மரக்கன்றுகள் நீருக்கு ஏங்குமே என்னும் ஞாபகம் தான் எப்போதும் எனக்கு. ஆனால் ஒவ்வொரு தடவையும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று கூறுவது என்பது நமது குழந்தைக்கு தினமும் உணவு தர வேண்டும் எனக் கூறுவதற்கு சமானமானது. வேறு வழியில்லை. திரும்பத் திரும்ப கூறித்தான் ஆக வேண்டும். அடிப்படையான ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பக் கூறும் போது என் மனதில் எனது தகவல் தொடர்பு முறையில் ஏதேனும் சிக்கல் இருக்கக் கூடுமோ என்ற ஐயம் எழும். அந்த ஐயம் உண்மையல்ல. விவசாயிகள் நெல்லுக்கு தண்ணீர் விடுவதைத் தவிர வேறு எதுவுமே விவசாயம் என்று நினைப்பதில்லை. அந்த நினைப்புடன் தான் நாம் சமர் புரிகிறோம். 

விவசாயியின் திடலுக்கு வடக்கே காவிரியின் கிளை ஆறு ஒன்று ஓடுகிறது. திடலின் மறுகரையில் விவசாயம் புரியும் விவசாயி ஒருவர் தேக்கு நடப்பட்ட திடலுக்கு வந்து இங்கே உள்ள விவசாயியுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவரை முன்பே சில முறை சந்தித்திருக்கிறேன். முன்னரே தனது வயலில் நட தேக்கு மரக்கன்றுகள் வேண்டும் என்று கேட்டிருந்தார். இன்றும் நினைவு படுத்தினார். ஐந்து ஆறு விவசாயிகளுக்குத் தேவையான மரக்கன்றுகள் நூறு நூற்று ஐம்பது கன்றுகள் தேவைப்படும். எனது காரில் எடுத்து வரலாம். இவர் 20 கன்றுகள் தான் கேட்டார். மற்றவர்களுக்குக் கொண்டு வரும் போது சேர்ந்து எடுத்து வரலாம் என ஒத்திப் போட்டிருந்தேன். தேக்கு நடவு செய்துள்ள விவசாயியின் பக்கத்து திடலில் ஒரு பகுதியை சமீபத்தில் கிரயம் செய்திருக்கிறார்.  அந்த விபரத்தை என்னிடம் சொன்னார். அவருக்கு இன்றைய தினமே 20 கன்றுகளை வழங்குவது என முடிவு செய்தேன். அவரது அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டேன். அவருடைய வீடு செயல் புரியும் கிராமத்திலிருந்து இரண்டு கிராமங்களுக்கு முன்னதாகவே உள்ளது. எனவே அவருடைய வீட்டுக்கு வந்து மரக்கன்றுகளைத் தருவதாகக் கூறினேன். 

காலை 11 மணிக்கு புறப்பட்டு 15 கி.மீ தள்ளியிருக்கும் நர்சரிக்குச் சென்று 20 தேக்கு மரக்கன்றுகளை வாங்கி எடுத்துக் கொண்டு அவருடைய வீட்டுக்குச் சென்றேன். அவருக்கு மிக்க மகிழ்ச்சி. வீட்டில் என்னை அமர வைத்து பக்கத்தில் இருந்த கடையில் பவண்டோ வாங்கி வந்து என்னிடம் கொடுத்தார். எனக்கு மூன்று வாரங்களாக நல்ல இருமல். குடிக்க தண்ணீர் மட்டும் கொடுங்கள் என்று கேட்டேன். கொடுத்தார். பவண்டோ குளிர்ச்சியாக இருப்பதால் அதனை அருந்துவது உகந்தது அல்ல என்று சொன்னேன். பவண்டோவை வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள் ; மாலை அதன் குளிர்ச்சி நீங்கியதும் அருந்துங்கள் என்று சொன்னார். பிரியமாக உபசரிக்கிறார் என்பதால் அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டேன். 

மரக்கன்றுகளுக்கு என்ன விலை கொடுக்க வேண்டும் என்று கேட்டார். ‘’ஐயா ! இவற்றை நல்ல முறையில் நீங்கள் வளர்த்தாலே போதும். அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சி. இந்த மரக்கன்றுகளை வளர்க்க நீங்கள் அளிக்கப் போகும் உழைப்பும் கவனமும் தான் விலை மதிப்பில்லாதது. மிகப் பெரியது. அதனுடன் ஒப்பிட்டால் கன்றுகளின் விலை என்பது ஒன்றுமே இல்லை. உங்களுக்கு வழங்க எனக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு தருகிறீர்கள். என்னாலும் உங்களுடன் மரக்கன்றுகளுடனும் உணர்வுபூர்வமாக ஒரு பிணைப்பை உண்டாக்கிக் கொள்ள முடிகிறது. எனக்கு விவசாயம் தொழில் இல்லை. நீங்கள் விவசாயி. தேக்கின் முக்கியத்துவம் குறித்து இன்னும் கிராமத்தின் நிறைய விவசாயிகளுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களுடன் இணைந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பை வழங்குங்கள்.’’ என்று கூறினேன். 

எளிய மக்களின் அன்பும் பிரியமும் உணரும் தோறும் நெகிழச் செய்கிறது.  

Wednesday 22 February 2023

நாற்றங்கால்

’’காவிரி போற்றுதும்’’ சார்பில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய ஒரு நர்சரி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. நடைமுறைத் தேவையே அந்த எண்ணத்தை எழுப்பியது. நாம் நிறைய விதங்களில் நிறைய மரக்கன்றுகளை நிறைய கிராமங்களில் நட விரும்புகிறோம். அத்தனை மரக்கன்றுகளையும் உற்பத்தி செய்து கொள்வதே ஆகச் சிறந்த சிக்கன வழிமுறையாக இருக்கும். நாம் நுண் அமைப்பு என்பதால் நம்மிடம் பொருளியல் இருப்பு போதுமானதாக இல்லை. எனினும் நாம் பெரிய முயற்சிகளை மேற்கொள்கிறோம் ; மெல்ல உறுதியாக நாம் சாதிக்கவும் செய்கிறோம். 

மரக்கன்றுகளை விதையிட்டு சிறு செடிகளாக வளர்க்க நமக்கு குறைந்தபட்சம் பிளாஸ்டிக் பைகள் தேவை. நர்சரிகளுக்கான பிளாஸ்டிக் பைகள் ஒரு பை இரண்டு ரூபாய் என்ற கணக்குக்கு வருகிறது. நாம் முதல்கட்டமாக பத்தாயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய உள்ளோம். எனவே பழைய இரும்புக் கடையில் சொல்லி அங்கு வரும் பால்பாக்கெட் கவர்களை எடுத்து வைக்குமாறு கேட்டுக் கொண்டோம். முதல் கட்டமாக கணிசமான எண்ணிக்கையில் கவர்கள் கிடைத்துள்ளன. இதனால் கவர் செலவில் 90% மிச்சமாகிறது. 

கயிறு மண்டியில் இருக்கும் தென்னைக்கழிவுகளின் தூளை மக்கிய சாண எருவுடன் சேர்த்து அந்த பால்பாக்கெட் கவர்களில் இட வேண்டும். கயிறு மண்டியில் தென்னை நார்த்தூளைப் பார்வையிட்டு வந்தேன். ஓரிரு நாளில் அவற்றை எடுத்து வர வேண்டும். 

புங்கன் விதைகளை வாங்குவதற்கான முயற்சியில் இருக்கிறோம். கூடிய விரைவில் கிடைத்து விடும் . அந்த விதைகளை நாம் தயாரித்திருக்கும் பைகளில் இட்டு நீர் வார்த்து வர 48 நாட்களிலிருந்து 60 நாட்களுக்குள் விதைகள் முளைத்து நல்ல உயரம் வரும். 

ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் அதிக அளவில் மரக்கன்றுகளைக் கேட்டிருக்கிறார்கள். 

புங்கன் செடியை மரத்தை ஆடு மாடு மேயாது என்பதால் அவற்றுக்கு வேலி தேவையில்லை. நீர் வார்த்தால் மட்டும் போதும்.  

Sunday 19 February 2023

கனவு

சமீபத்தில் , உறங்கும் போது ஒரு கனவு கண்டேன். அந்த கனவு நூதனமாக இருந்தது. அந்த கனவின் நூதனம் என்பது அதன் இயல்பான நிகழ்வுகள். சம்பவங்கள் அனைத்துமே யதார்த்தமாக இருந்தன.  காரண காரியத் தொடர்புடன் இருந்தன. 

ஒரு ஊரின் புறவழிச்சாலை. சாலை புதிதாக அமைக்கப்பட்டிருப்பதன் சுவடுகள் சாலையெங்கும் இருக்கின்றன. அந்த சாலையில் ஒரு வெர்டிகா வாகனம் பழுதாகி நிற்கிறது. அந்த வாகனத்தில் இரண்டு குடும்பங்கள் இருக்கின்றன. முதிய தம்பதிகள் நால்வர். அவர்களுடைய பேரக் குழந்தைகள் ஐந்து பேர். வாகனம் பழுதான சில மணித்துளிகளுக்குப் பின்னால் மஹிந்த்ரா தார் வாகனத்தை ஓட்டி வரும் ஒரு முதியவர் வெர்டிகாவைத் தாண்டி வாகனத்தை நிறுத்துகிறார். அவர் தலைமுடியும் தாடியும் வெள்ளை வெளேர் என இருக்கின்றன. கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார். ஒரு கருப்பு வேட்டி. 

வெர்டிகாவில் உள்ள குடும்பத்தினரை அணுகி வண்டியில் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். மெக்கானிக் வந்து சரி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். தனது வீடு பக்கத்தில் இருக்கிறது ; அங்கே கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள்; நான் மெக்கானிக்கை வரச் சொல்கிறேன் என்று சொல்கிறார். அவர் தோற்றமும் நடத்தையும் பேச்சும் ஒரு கனவானுக்குரியதைப் போல் இருப்பதை உணர்ந்து அவர்கள் அவர் அழைப்பை ஏற்கின்றனர். 

அந்த புறவழிச்சாலையை ஒட்டி அவரது வீடு அமைந்திருக்கிறது. வீடு எனச் சொல்வதை விட மாளிகை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். வீட்டுக்கு முன் ஒரு பெரிய தோட்டம். இரண்டு லேபர்டா நாய்கள். அதன் குட்டிகள் இரண்டு. வீட்டின் பின்னால் ஒரு பெரிய கிணறு. கீழ்த்தளம் மேல்தளம் என இரு தளங்களைக் கொண்ட மாளிகை. இரண்டு பெரிய ஊஞ்சல்கள். 

வெர்டிகாவில் உள்ள குழந்தைகள் சில வினாடிகளில் அந்த வீட்டை நிறைத்து விடுகின்றன. லேபர்டாக்கள் அந்த குழந்தைகளுடன் சினேகமாகி விளையாடத் தொடங்குகின்றன. ஒரு குழந்தை ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறது. இன்னொரு குழந்தை ஊஞ்சலை ஆட்டுகிறது. ஒரு குழந்தை மரத்தின் மேல் ஏறுகிறது. அமைதி நிறைந்திருந்த அந்த பகுதியில் குழந்தைகளின் குதூகல ஒலிகள் நிறைகிறது. 

அப்போது அந்த தம்பதிக்கு ஒரு அலைபேசி அழைப்பு வருகிறது. அவர்களுடைய உறவினர்கள் சிலர் ஒரு வேனில் சுற்றுலா வந்திருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் பகுதியில் இருக்கிறார்கள். அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பது அந்த வீட்டுக்காரரான கனவானுக்குக் கேட்கிறது. அவர்கள் உறவினர்களை அவர் வீட்டுக்கு வரச் சொல்லுமாறு சொல்கிறார். இடம் அடையாளம் சொல்லி வரச் சொல்கிறார்கள். வேனில் உள்ள குடும்பத்தினரும் அவர்கள் குழந்தைகளும் இந்த வீட்டுக்கு வந்து விடுகின்றனர். குழந்தைகள் எண்ணிக்கை மேலும் கூட லேபர்டாக்கள் மிகவும் உற்சாகமாகி விடுகின்றன. வீட்டுக்காரரின் பால்ய நண்பன் ஒருவன் முன்னறிவிப்பின்றி தனது மனைவி மகனுடன் அங்கே வருகிறான். வந்திருக்கும் இருபத்து ஐந்து பேருக்கும் உணவு தயாரிக்க்கப்படுகிறது. பரிமாறப்படுகிறது. 

அதற்குள் வெர்டிகா தயாராகி விடுகிறது. விருந்தினர்களில் ஒருவருக்கு அந்த ஊரின் கடைவீதியில் ஒரு பூர்வீக சொத்து இருக்கிறது. அதனை இன்ன விலைக்கு விற்றுத் தர ஒரு ரியல் எஸ்டேட் மீடியேட்டர் தன்னிடம் உறுதி தந்திருப்பதாக விருந்தினர் ஒருவர் வீட்டுக்காரரிடம் பேச்சுவாக்கில் சொல்கிறார். மீடியேட்டர் சொல்லும் விலை மார்க்கெட் விலையை விட மிகக் குறைவாக இருக்கிறது என்று சொல்லி வீட்டுக்காரர் தனக்குத் தெரிந்த இன்னொரு மீடியேட்டரை வரச் சொல்கிறார். விற்பனைக்கு உள்ள இடம் கடைத்தெருவை ஒட்டி இருக்கிறது ; கடைத்தெருவில் இடம் வேண்டும் என்று என்னிடம் ஒரு பார்ட்டி கேட்டிருக்கிறது. நான் அந்த பார்ட்டியை மாலை அழைத்து வருகிறேன் என்று கூறி புறப்படுகிறார். அதே விதமாக ஒரு பார்ட்டியை அழைத்து வந்து விலைபேசி அட்வான்ஸ் கொடுத்து விட்டுச் செல்கிறார். 

வெர்டிகா தயாராகி வருகிறது. வெர்டிகாவில் வந்த குடும்பத்தினரும் வேனில் வந்த குடும்பத்தினரும் ஒரு மணி நேரப் பயணத்தில் இருக்கும் வெர்டிகா குடும்பத்தினரின் ஊருக்கு வீட்டுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். அடுத்தடுத்து இத்தனை சம்பவங்கள் அந்த வீட்டில் நிகழ்ந்தும் அந்த கனவான் முகத்தில் எப்போதும் சிறு புன்னகையுடன் இருக்கிறார். லேபர்டாக்கள் வாலைச் சுழற்றிக் கொண்டு அவர் முன் நிற்கின்றன.  

Thursday 16 February 2023

அறச்செயல்

தமிழகத்தை - தமிழ் மக்களைக் கூர்ந்து நோக்குபவர்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கும். அதாவது, தமிழ் சாமானிய மனநிலையில் தனது மன எல்லைகளைக் குறுக்கிக் கொள்ளுதல் என்னும்  பழக்கம் உண்டு. அந்த குறுகிய எல்லைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர்கள் மிகவும் குறைவு. எதிர்பாராமல் கடக்க நேர்ந்தால் கூட அச்சத்தால் பீடிக்கப்படுவர்களே இங்கு மிகுதி. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் உருவான பஞ்சம் தமிழ் மக்களின் மனத்தில் இவ்வாறான ஒரு மனோபாவத்தை உண்டாக்கியிருக்கக் கூடும் என நம்புவதற்கு அதிக  முகாந்திரங்கள் இருக்கின்றன. 

19ம் நூற்றாண்டின் இறுதியில் உருவான உணவுப் பஞ்சம் தமிழகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தையும் - குறிப்பாக வட தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் நேரடியாக பாதித்திருப்பதற்கு வாய்ப்பு அதிகம். கோடிக்கணக்கில் மக்கள் பஞ்சத்தில் செத்தனர். அந்த பஞ்சம் மக்களின் அகத்தில் குடும்பங்களின் அகங்களில் அச்சமாகக் குடியேறியது. பிழைத்தல் என்பது தன் குடும்பம் உணவுப் பஞ்சம் இல்லாமல் இருத்தல் என்னும் நிலை என மக்களை எண்ண வைத்தது. 

ஒரு புறம் இந்தியாவின் மிகப் பெரிய சாம்ராஜ்யங்கள் தமிழகத்தில் இருந்திருக்கின்றன. ( சோழப் பேரரசு, விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர் அரசு) . இன்னொரு புறம் பஞ்சம் உருவாக்கிய அச்சத்தால் தன்னை குறுக்கிக் கொண்டிருக்கும் சமூகம். தமிழ்ச் சமூகத்துக்கு இந்த இரண்டு எல்லைகளும் உள்ளன. 

தமிழகத்தின் மக்கள் பலவிதங்களில் இணைக்கப்பட வேண்டியவர்கள். பலவிதமான உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியவர்கள். குறிப்பாக தமிழக விவசாயிகள் வெவ்வேறு விதமான விவசாயம் சார்ந்த பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க பயிற்றுவிக்கப்பட வேண்டியவர்கள். 

விவசாயிகள் வெவ்வேறு விவசாயம் சார்ந்த உற்பத்தி மூலம் பயனடைவதற்கு அவர்களுக்கு உதவுவது மிகப் பெரிய அறச்செயல். விவசாயியின் அகம் மகிழ்ந்தால் மனம் நம்பிக்கை கொண்டால் அவன் பெரும் செயல்களை ஆற்றுவான். அவ்வாறு ஆற்றியதற்கு உதாரணமே சோழப் பேரரசும் விஜயநகரப் பேரரசும். 

வான் நோக்கல்

எனது நண்பன் எங்கோ இருக்கிறான்
தினமும்
அவனை நினைக்கிறேன்
ஆர்வம்
பொங்கிப் பிரவாகிக்கும்
அவனது சொற்களை
அன்பை பிரியத்தை
சிறிதும் மீதமின்றி
சொல்லாக்கி விட முடியும்
என்ற 
அவன் நம்பிக்கையை

அவன் குரல் கேட்டு 
நாட்கள் ஆகின்றன
அவனைச் சந்தித்து
வாரங்கள் ஆகின்றன

அவனை நினைக்காமல் இருந்ததில்லை

நண்பன்
நண்பர்கள்
என் மௌனத்தை
சட்டென
எங்கோ சென்று விடும் தூரத்தை
அவ்வப்போது அறியும்
இடைவெளியை 
உணரும் போதெல்லாம்

மெல்லிய அளவில்
துயருறவே செய்கிறேன்

அந்த துயரம்
வானத்தை 
தினமும் நோக்குபவனின்
துயரம்

Saturday 11 February 2023

நானாவித அலுவல்கள்

தமிழில் பலவிதமான வேலைகள் என்பதை ‘’நானாவித அலுவல்கள்’’ என்று சொல்வதுண்டு. அவ்விதமான பல அலுவல்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் இருக்கிறேன். உண்மையில் என் மனம் வேகமாக இயங்கும். என் மனம் இயங்கும் வேகத்துக்கே என் செயல்களும் இருக்கும். இருப்பினும் உலகியல் என்பது நம் உடனிருப்பவர்களையும் சூழலையும் சேர்ந்ததே. வாழ்க்கையின் மைய வயதில் இருக்கும் நிலையில் இளைஞனாக இருந்த போது  இயங்கியதை மனம் பக்குவத்தாலும் அனுபவத்தாலும் சற்று வழிப்படுத்திக் கொள்ள விரும்புகிறது. சக மனிதர்களிடம் எவ்வளவு இலகுவாக இருக்க முடியுமோ அவ்வளவு இலகுவாக இருக்க முயல்கிறேன். நட்பிலும் உறவிலும் அகங்காரத்தின் உரசல் இல்லாமல் இருக்க வேண்டும் என எனக்கு நானே பல முறை சொல்லிக் கொள்கிறேன்.   

தமிழ்ச் சூழல் கடந்த இருநூறு ஆண்டுகளில் மிகவும் பிளவுபட்டு நிற்கிறது. ஒன்றுக்கொன்று நேரடியாக மோதிக் கொள்ளவில்லையே என நாம் எண்ணலாம்: ஆனால் அதன் மறுபக்கத்தை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். ஒற்றுமை இருக்குமென்றால் தமிழ்ச் சமூகம் எத்தனையோ விஷயங்களை இணைந்து சாதித்திருக்கும். 

நான் கிராமங்களுக்குச் செல்வதால் கிராமத்தினருடன் உரையாடுவதால் என்னால் சில விஷயங்களை உய்த்துணர முடிகிறது. கிராம மக்களுக்கு இன்றும் உடல் உழைப்பு என்பது மிகக் கடினமானது இல்லை. யதார்த்தமாக மதிப்பிட்டால் கூட , ஐம்பது சதவீதத்துக்கு அதிகமான மக்கள் சர்வசாதாரணமாக உடல் உழைப்பை அளிக்கக் கூடியவர்கள். கிராமத்தில் உள்ள மக்கள் தினமும் குறைந்தபட்சமாக உடல் உழைப்பை அளிக்கக்கூடிய விதத்தில் அவர்களுக்கு ஏதேனும் ஓர் கைத்தொழில் இருக்க வேண்டும். அது அவர்களுடைய வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். இது சாத்தியம் தான். 

நான் ஒரு விஷயம் யோசித்தேன். ஒரு கிராமத்தில் 500 குடும்பங்கள் இருக்கிறது என எடுத்துக் கொள்வோம். அதில் ‘’தேனீ வளர்ப்பில்’’ 100 பெண்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால் அந்த பெண்களுக்கு தேனீ வளர்ப்பு இலாபகரமாக அமைய ஒரு விஷயம் அங்கே நிகழ வேண்டும். அதாவது அந்த கிராமத்தில் முதலில் எப்போதும் பூக்கும் மலர் மரங்கள் தேனீக்களுக்காக பொது இடங்களில் நட்டு வளர்க்கப்பட வேண்டும். அந்த மரங்கள் பூத்துக் கொண்டிருக்கும் போது 100 பெண்கள் தேனீ வளர்க்கத் துவங்குவார்கள் எனில் அவர்களால் எளிதில் தேனீக்கள் மூலம் தேன் சேகரிக்க முடியும். 

ஒரு கிராமத்தில் 100 பெண்கள் மண்புழு உரம் தயாரிக்க விரும்புகிறார்கள் என்றால் அவர்களுக்கு தினமும் மண்புழுக்களுக்கு உரமாக அளிக்கக்கூடிய இலை தழைகளை உதிர்க்கும் மரவகைகள் அந்த கிராமத்தில் இருக்க வேண்டும். அவை அங்கு நட்டு வளர்க்கப்பட வேண்டும். 

இறைப்பூசனைக்கு உரிய மலர்களை மாலையாகத் தொடுக்க சிலர் விரும்புவார்கள் என்றாலும் அந்த மலர்கள் பொது இடங்களிலோ அல்லது வீடுகளிலோ வளர்க்கப்பட வேண்டும். 

நான் ஒரு கிராமத்தில் எவ்விதம் எளிய விதத்தில் என்னென்ன சாத்தியங்களில் அங்குள்ள குடும்பங்களின் பொருளியல் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்பதையே சிந்திக்கிறேன் ; அதையே செயல்படுத்த முனைகிறேன். நமது மரபும் பண்பாடும் அதற்கு பெரும் உதவி புரியக் கூடியது என்பதை நடைமுறையில் காண்கிறேன். எனவே ‘’காவிரி போற்றுதும்’’ செயல்களில் இந்த இரண்டு விஷயங்களும் இருப்பதைக் காண முடியும். 

நம் கிராம மக்களுக்கு சிந்திக்க சொல்லித் தர வேண்டும். பல விஷயங்களை பல சாத்தியங்களை அவர்கள் முன் முன்வைத்தவாறே இருக்க வேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கை மட்டுமே குறைவாக உள்ளது. அதனை அவர்களுக்கு அளிக்க வேண்டும். கிராம மக்கள் தன்னம்பிக்கை கொள்வார்கள் எனில் அவர்களால் அளப்பரிய விஷயங்களை சாதிக்க முடியும்.

‘’காவிரி போற்றுதும்’’ முயற்சிகள் அந்த திசை நோக்கி செல்கின்றன. 

Wednesday 8 February 2023

தெளிவு

ஒரு சிறு அலகுக்குள் பெரும் அலகின் அத்தனை அம்சங்களும் நுண் வடிவில் இருக்கும் என்பது ஓர் உண்மை. மேஜையை சரிசெய்தவுடன் என் அகம் லகுவாக இருப்பதை உணர முடிகிறது. லகுவான மனம் வாழ்க்கை மேல் மேலும் நம்பிக்கைகளைக் கொண்டு வருகிறது. நான் எப்போதும் நம்பிக்கையாளனாக இருக்கிறேன் என்றாலும் இன்னும் கூடுதலான நம்பிக்கை என்பது நம் சூழலைப் புரிந்து கொள்ளவும் சக மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் அவர்களுக்கு மேலும் எவ்வகைகளில் உதவிகரமாக இருப்பது என்பது குறித்தும் இன்னும் மேலான புரிதலை உண்டாக்குகிறது.  

மேஜையை சரிசெய்ததை ஒட்டி அலைபேசியையும் அணைத்து வைத்து விட்டேன். உண்மையில் அலைபேசியின் தேவை எனக்கு பெரிய அளவில் இல்லை என்பதை இந்த சில நாட்களில் உணர்ந்து கொண்டேன். ஒரு தொலைபேசிப் பயன்பாடு எனக்குப் போதுமானது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். 

இன்னும் சில நாட்களில் தொலைபேசி மட்டும் போதும் என்ற நிலைக்கு நகரக்கூடும். 

Monday 6 February 2023

மேஜை

இன்று காலை மேஜையை சீர் செய்தேன். அதாவது மேஜையின் மேல்பரப்பை. மேஜையின் மேல்பரப்பில் ஒரு குறிப்பேடும் ஒரு பேனாவும் ஒரு பென்சிலும் மட்டும் இருந்தால் போதுமானது. நாட்குறிப்புகள், கோப்புகள் ஆகிய்வை மேஜையின் மேல் இருக்க வேண்டிய அவசியமில்லை. மடிக்கணிணி இருக்கிறது. நான் மடிக்கணிணியை மேஜைக்கணிணி போல் பயன்படுத்துவேன். காகிதங்கள் அதற்குரிய கோப்பிலும் கோப்புகள் கோப்பு அலமாரியிலும் புத்தகங்கள் புத்தக அலமாரியிலும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாலே மேஜை சீராக இருக்கும். சீரான மேஜை சீரான சூழ்நிலையை உருவாக்கும். என் மேஜை மேல் எப்போதும் பல புத்தகங்கள் இருக்கும். அது பல வருட பழக்கம். அதனால் பல புத்தகங்களை உள்ளடிக்கிய கிண்டிலை மேஜை மேல் வைத்துக் கொண்டேன். பல புத்தகங்கள் மேஜை மேல் இருப்பதாகவும் ஆயிற்று ; குறைவான இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்கின்றன என்பதாகவும் ஆயிற்று !

Sunday 5 February 2023

நிறைதல்

என்னுடைய எழுது மேஜை மற்றும் என்னுடைய கோப்பு அலமாரிகள் காகிதங்களால் நிரம்பிக் கிடந்தன. எழுது மேஜையையும் கோப்பு அலமாரியையும் நான் ஒருவன் மட்டுமே பயன்படுத்துவேன் என்பதால் அவை என்னுடைய ஏகபோகத்தில் இருக்கின்றன. இருப்பினும் அவற்றை அடுக்கி வைக்க வேண்டும் என நினைப்பேன். என்னுடைய சிக்கல்களில் ஒன்று அவ்வாறு அடுக்க முற்படும் போது காணும் காகிதங்களும் கோப்புகளும் என்னை அவை குறித்த சிந்தனைக்கு இட்டுச் சென்று விடும். மனம் பல திசைகளில் சஞ்சரிக்கத் தொடங்கி விடும். நிகழ்காலத்தில் கொண்டு வந்து சேர்ப்பது கடினம். அதற்கு அஞ்சியே அடுக்கத் தொடங்காமல் இருந்து விடுவேன்.  

சமீபத்தில் கோப்பு அலமாரியை அடுக்கும் ஜப்பானிய முறை ஒன்றைக் கேள்விப்பட்டேன். அந்த முறை எப்படி எனில் நாம் அடுக்கப் போகும் இடத்தை வஜ்ராசனத்தில் அமர்ந்து கண்களை மூடி சில நிமிடங்கள் வணங்க வேண்டும். பின்னர் நமது மேஜை அமைந்திருக்கும் இடத்தின் தரையை சில கணங்கள் நம் கைகளால் தொட வேண்டும். அந்த இடத்துடன் உணர்வுபூர்வமான ஒரு தொடர்பை உருவாக்கிக் கொள்ள அவ்வாறு செய்ய வேண்டும். பின்னர் அந்த இடத்தை அடுக்கி வைக்க அந்த இடத்திடம் அனுமதி கேட்க வேண்டும். பின்னர் பணி துவங்க வேண்டும். 

எழுது மேஜையை மூன்றாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். புத்தகங்கள், காகிதங்கள் மற்றும் இதர பொருட்கள். 

புத்தகங்களை புத்தக அலமாரியில் மட்டுமே வைக்க வேண்டும். எழுதுமேஜையில் வைக்கக் கூடாது. எனவே எழுதுமேஜையில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் கொண்டு போய் புத்தக அலமாரியில் வைக்க வேண்டும். பின்னர் காகிதங்களைத் தொகுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதர பொருட்களில் பேனா, பென்சில், ஸ்டேப்ளர் ஆகியவற்றை கைகளுக்கு அருகில் இருப்பது போல் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு எந்த பொருட்களால் மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அவற்றை மட்டுமே மேஜை மேல் வைக்க வேண்டும். இந்த விதிமுறைகளின் படி செயல்பட வேண்டும். 

அடுக்கி முடித்ததும் அந்த இடத்துக்கு வஜ்ராசனத்தில் அமர்ந்து நன்றி தெரிவிக்க வேண்டும். 

இந்த முறையைப் பின்பற்றிய போது இந்திய மரபில் உள்ள சாங்கிய தரிசனம் நினைவுக்கு வந்தது. சத்வ, ரஜோ, தமோ என்னும் முக்குணங்களால் ஆனது இந்த உலகம். அவை மூன்றும் சமநிலையில் இருந்த போது உலகம் எந்த அசைவும் இல்லாமல் இருந்தது. அந்த மூன்று குணங்களில் சிறு மிகச் சிறு சமன்குலைவு உண்டான போதே உலகம் தோன்றியது. அவ்வா|று தோன்றிய உலகின் எல்லா இருப்புகளிலும் சத்வ ரஜோ தமோ குணங்கள் வெளிப்படலாயின. 

ஒரு அடுக்கை உருவாக்க இடத்திடம் அனுமதி கேட்கும் முறை சாங்கிய தரிசனத்தை நினைவூட்டியது. 

இன்று மாலை பணியைத் துவங்கினேன். இரவு 9 மணி ஆகி விட்டது பணி நிறைவு பெற. 80 % பணிகள் நிகழ்ந்துள்ளன. மீதி காலையில் நிறைவடையும். 

தேவையற்ற அனைத்தும் நீங்கியது மனத்தை நிறையச் செய்தது.  

Saturday 4 February 2023

நிர்வாகத் திறனின்மை

 

ஒரு புங்கன் மரம். மாநில நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது. மாநில நெடுஞ்சாலைத் துறையால் வண்ணமிடப்பட்டிருந்தது. மாநில நெடுஞ்சாலைத் துறையின் கணக்கிலும் வருவாய்த்துறையின் கணக்கிலும் உள்ள மரம். ஆறு மாதங்களுக்கு முன்னால் அந்த சாலையின் வழியே சென்ற போது அந்த மரம் முழுமையாக வெட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். CPGRAMS இணையதளம் மூலம் வெட்டப்பட்ட மரத்தின் புகைப்படத்துடன் புகாரை அளித்தேன். புகார் இவ்வளவு தான் : ’’இன்ன கிராமத்தில் இன்ன மாநில நெடுஞ்சாலையில் உள்ள இன்ன இடத்தில் அமைந்திருக்கும் மரம் வெட்டப்பட்டுள்ளது. மரத்தை வெட்டியவர்கள் முறையான அரசு உத்தரவு பெற்று மரத்தினை வெட்டினார்களா என்பதை உறுதி செய்யவும். அரசு உத்தரவு இல்லாமல் நிகழ்ந்திருந்தால் மரத்தை வெட்டிய்வர்களிடம் அபராதம் வசூலிக்கவும்’’. என்னுடைய புகார் இவ்வளவு தான். 

இது தார்மீகம் தொடர்பான விஷயம் என்றாலும் அதனை நிர்வாகம் சட்டபூர்வமான எல்லைக்குள் ஒரு குறைந்தபட்ச தீர்வு காணட்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு. உண்மையில் அந்த கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரி இவ்வாறான ஒரு மரம் வெட்டப்பட்டிருப்பதை தனது ஆவணங்களில் பதிவு செய்து வருவாய் வட்டாட்சியருக்கு அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு நிகழவில்லை. என்னுடைய புகார் பதிவு செய்யப்பட்ட பின்னாவது நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். அதுவும் இல்லை. 

புகார் அளித்து ஆறு மாதங்கள் கழித்து பதிலைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதாவது அந்த மரத்தை வெட்டியவர் மரத்தின் கிளைகள் மின் கம்பிக்கு இடையூறாக இருந்ததால் மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளார் என வருவாய்த்துறையினர் பதில் அளித்துள்ளனர். மின்கம்பிகளுக்கு இடையூறாக இருந்தால் மரத்தின் கிளைகளை கழிக்க வேண்டியது மின்சார வாரியத்தின் பொறுப்பு. மாதம் ஒரு நாள் அவர்கள் பராமரிப்பு பணி மேற்கொள்கிறார்கள். அப்போது செய்யலாம். அவர்களுக்குமே கிளைகளை சிறு அளவில் கழிக்க மட்டுமே அனுமதி உண்டு. வருவாய்த்துறையினருக்கு இந்த நிகழ்வில் உள்ள சட்ட விரோதமும் சட்ட மீறலும் முழுமையாகத் தெரிந்திருந்தும் இவ்வாறான ஒரு பதிலை அளித்துள்ளார்கள். 

நிர்வாகம் என்ன நினைக்கிறது என்றால் புகார் அளித்தவர் ஒரு உணர்ச்சிகரமான சூழலில் உணர்ச்சிகரமான மனநிலையில் புகார் அளித்திருப்பார். அதிகபட்சமாக நாட்களை நகர்த்திக் கொண்டு சென்றால் புகார் அளித்தவர் மனதில் இருந்து அந்த விஷயம் நீங்கி விடும் அதன் பின் அது தொடராமல் நின்று விடும் என்று நினைக்கிறார்கள். இவ்வாறு நினைத்து இவ்வாறு செயல்படுபவர்கள் இதைப் போன்ற விஷயங்களை மேலும் சிக்கலாக்கி விடுகிறார்கள் என்பதே நிஜம். 

ஒரு விஷயம் மிக மோசமாக நடந்திருக்கிறது என்றால் மட்டுமே அதனை நான் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன். அதில் உரிய நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றதை அணுகியே ஆக வேண்டும். விஷயம் நீதிமன்றத்துக்கு சென்றால் அதிகாரிகளுக்குத்தான் சிக்கல். பொதுமக்களிடம் பதில் சொல்வது போல அங்கே பதில் சொல்ல முடியாது. எனினும் இந்த இடத்துக்கு விஷயத்தை நகர்த்திச் செல்வது அதிகாரிகளே. 

வருவாய்த்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற எனது நண்பர்கள் எவ்வாறு சட்ட விரோதமான மரம் வெட்டுதலை வருவாய்த்துறை இவ்வளவு அலட்சியமாகக் கையாள்கிறது என வியக்கிறார்கள். தாங்கள் பணி புரிந்த காலகட்டத்தில் தங்கள் கிராம எல்லைக்குள் ஒரு மரம் அனுமதி பெறாமல் வெட்டப்படும் சம்பவம் நிகழ்ந்தால் கூட அந்த கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரி வேறு ஊருக்கு பணிமாறுதல் கொடுத்து அனுப்பி விடுவார்கள் . விசாரணையே அந்த குறைந்தபட்ச உத்தரவுக்குப் பின் தான் தொடங்கும். மரத்தை வெட்டியவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தங்கள் அனுபவத்தை நினைவு கூர்கிறார்கள். 

நாளை மாவட்ட ஆட்சியருக்கு நடந்த சம்பவத்தையும் எனது புகாரையும் ஆறு மாதம் கழித்து அந்த புகாருக்கு அளிக்கப்பட்ட பதிலையும் விளக்கி ஒரு விசாரணை மேற்கொள்ளுமாறு கோர உள்ளேன். அதற்கு என்ன பதில் அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து இந்த விஷயத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உள்ளேன். 

காலதாமதத்தால் நான் சோர்வடையவில்லை ; மேலும் அடுத்தடுத்த செயல்களைத் தீவிரப்படுத்தவே செய்கிறேன். அதுதான் நியாயம் என்று நினைக்கிறேன்.