Friday 31 December 2021

புத்தாண்டின் முன்தினம்

நீ
மேலும் நம்பிக்கை
கொள்வதற்கான
தருணங்கள்
பிரவாகித்துக் கொண்டே 
இருக்கிறது
விடியும் ஒரு காலைப்பொழுது
ஒரு புன்னகை
ஒவ்வொரு வார்த்தை
பதில் சொல்லி விட்டு
கூச்சப்படும் குழந்தைகள்
ஒரு மென்காற்று
ஒரு பரிசுப்பொருள்
ஒன்று நிறைவு பெற்று
இன்னொன்று துவங்குதல்
முடிவுக்கும்
துவக்கத்துக்கும் 
இடையில் இருக்கும்
இச்சிறுதீபம்
எப்படியோ
உன்னை நினைவுபடுத்தி விடுகிறது 

Tuesday 28 December 2021

காவிரி போற்றுதும் - செயலாற்றல்

’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பாக செயல்படுகிறது. பல்லாயிரம் ஆண்டு பண்பாட்டுச் செறிவு கொண்ட ஒரு தேசம் தன் குடிகளுக்கு அளிக்கும் செல்வம் என்பது மிகப் பெரியது. இந்தியாவில் ஒரு கிராமம் என்பது ஒரு தேசத்தின் நுண் வடிவமாகவே உள்ளது. எல்லையற்ற பரம்பொருளை ஒரு சிலையில் பதிட்டை செய்வது போல இந்த தேசம் கிராமங்களின் வடிவில் பதிட்டை செய்யப்பட்டுள்ளது. பக்தன் சிலையின் வழியாக தெய்வத்தை வணங்குவது போல ‘’காவிரி போற்றுதும்’’ கிராமங்களுக்குச் செய்யும் சேவையை தேசத்துக்குச் செய்யும் சேவையாக எண்ணுகிறது. 

இதுவரை ‘’காவிரி போற்றுதும்’’ செய்துள்ள செயல்களையும் அதன் மூலம் அடைந்துள்ள அனுபவங்களையும் அவற்றை வழித்துணையாய்க் கொண்டு இனி மேற்கொள்ள உத்தேசித்துள்ள விஷயங்களையும் இந்த தருணத்தில் பதிவு செய்வது அவசியமானது என்று தோன்றியது. 

எனது பதிவுகளில் செயலாற்றும் கிராமங்களின் பெயரைக் குறிப்பிட்டது இல்லை. செயல் ஒரு கிராமத்தில் நிகழ்ந்திருந்தாலும் எல்லா கிராமங்களிலும் ஆற்ற வேண்டிய பணிகள் இவை என்பதால் எல்லா கிராமங்களின் பெயரும் செயலாற்றும் கிராமங்களின் பெயரே. 

1. மயிலாடுதுறையிலிருந்து 30 நிமிடம் மோட்டார்சைக்கிள் பயணத்தில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு முதல் முறையாகச் சென்றேன். அப்போது அந்த கிராமத்தில் எவரையும் எனக்குத் தெரியாது. பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த சில இளைஞர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த கிராமத்தில் என்னால் முடிந்த ஏதேனும் பணிகளை ஆற்ற விரும்புவதைச் சொன்னேன். அவர்கள் நான் சொன்ன விஷயங்கள் மீது  ஆர்வம் காட்டினார்கள். 

வாழிடத்தைச் சுற்றி அதிக மரக்கன்றுகளை நடுதல் என்பது எல்லாரும் விரும்பக்கூடிய செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடிய அனைவரும் ஏற்கும் ஒரு செயல். ஒரு குறிப்பிட்ட தினத்தில் மாநில அளவில் மாவட்ட அளவில் இது மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த அவதானத்திலிருந்து எனது செயலைத் திட்டமிட்டேன். மாநில அளவில் மேற்கொள்ளப்படும் போது மரக்கன்றுகளைப் பராமரித்தல் என்பது  பலவிதமான செயல்கள் அடங்கியதாக இருப்பதால் அதனைப் பின் தொடர்வதில் எல்லாரும் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதற்கு பொருட்செலவு ஆகும். அதிக மனித உழைப்பு தேவை. எனவே பொது இடத்தில் மரக்கன்றுகள் நடுவதை விட ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் தேவையான மரக்கன்றுகளை வழங்கினால் அவர்கள் பொறுப்பாக பராமரிப்பார்கள் என்று எண்ணினேன். பொது இடத்தில் நடப்பட்டாலும் சொந்த இடத்தில் நடப்பட்டாலும் மரம் சூழியலுக்குத் தன் பங்களிப்பை அளிக்கவே செய்யும். 

அந்த கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்தித்து அவர்களிடம் எனது எண்ணத்தைச் சொன்னேன். அவர்கள் அதனை ஏற்றார்கள்.

இந்த பணியைச் செய்யும் போது, எனக்கு ஒரு நடைமுறை புரிந்தது. விவசாய சூழலில் மரங்கள் வளர்க்க சிறப்பான கவனம் செலுத்தப்படுவதில்லை. இங்குள்ள காலநிலைக்கு மழைக்காலத்தில் மரங்கள் நடப்பட்டால் அவை தன்னியல்பாக வளர்ந்து விடும். எனினும் மரங்களின் மூலம் பொருளியல் பயன் அடைய வேண்டும் என்றால் அதற்கு மிகச் சிறிய அளவில் கவனம் செலுத்தப்பட வேண்டும் . இந்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டியிருப்பதை பணி செய்யும் போது உணர்ந்து கொண்டேன். 

அந்த ஊருக்குப் பத்து நாட்கள் தொடர்ச்சியாக சென்றேன். காலை 6.30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படுவேன். ஏழு மணி அளவில் அங்கே பணி தொடங்குவேன். மதியம் ஒருமணி வரை கணக்கெடுப்பில் ஈடுபடுவேன். ஒரு வீட்டுக்கு 5லிருந்து 10 நிமிடங்கள் என எடுத்துக் கொண்டால் ஒரு மணிக்கு பத்து குடும்பத்தாரைச் சந்திக்கலாம். உரையாடலாம். கணக்கெடுக்கவும் செய்யலாம். முதல் ஓரிரு நாட்களிலேயே அந்த கிராமத்தில் என் செயல்பாடுகள் குறித்த பேச்சு உருவானது. பலர் தங்கள் தோட்டங்களைச் சீரமைத்ததையும் வேலியிட்டதையும் கணக்கெடுப்பை நிறைவு செய்யும் முன்னரே கண்டேன். அவர்களைப் போன்றோரின் ஆர்வமே என்னை நாளும் இயங்கச் செய்கிறது. 

நான் அந்த கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் நண்பன். எல்லாருக்கும் பொதுவானவன். அந்த கிராம மக்களின் அன்பும் பிரியமுமே என்னை இவ்வாறு எண்ணச் செய்கிறது. இந்த எண்ணம் எனக்கு உருவானதற்கு நான் காரணமல்ல. அந்த கிராம மக்களே காரணம். 

கிராமம் ஒன்றாக இருப்பதை உணர்த்தும் விதமாக ஒரு குறிப்பிட்ட தினத்தில் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஏழு தீபங்கள் ஏற்றுமாறு கேட்டுக் கொண்டேன். கிராம மக்கள் அனைவரும் பிரியத்துடன் அதனை செய்தனர். ஒரு மனிதன் முயன்றால் கூட ஒட்டுமொத்த கிராமத்தையும் இணைக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். 

மரக்கன்றுகள் ஏன் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்ற கேள்வியை பலர் எழுப்புவதுண்டு. ஒரு மரக்கன்றை வளர்க்கும் நீண்ட கால செயலில் மரக்கன்றின் விலை என்பது மிகவும் சொற்பமானது. அவற்றைப் பராமரிக்கவும் வேலியிடவும் பெரும் செலவு பிடிக்கும். விவசாயிகள் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வதால் தான் இந்த செயல் நிகழ்கிறது. அதற்கு ஊக்கமளிக்கும் விதமாக மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு நிச்சயம் இலவசமாக வழங்கலாம். 

அனைத்து மரக்கன்றுகளும் பிழைத்து விட்டனவா ? வளர்ந்து விட்டனவா? என்பது பலமுறை எழுப்பப்படும் கேள்வி. கணிசமான மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன.  தொடர் மழையால் மரக்கன்றுகளுக்கு பாதிப்பு இருந்தது. சிலர் பராமரிக்கும் விதத்தால் பாதிப்பு இருந்தது. ஆடு மாடு மேய்ந்து பாதிப்பு இருந்தது. இவ்வாறெல்லாம் இருப்பது அங்கே இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவும் இன்னும் அதிக மரக்கன்றுகள் வழங்கவும் உள்ள தேவையை உணர்த்துகிறதே ஒழிய வழங்கக்கூடாது என்ற முடிவை எடுக்க அல்ல. நடக்க முயற்சிக்கும் குழந்தை நிச்சயம் கீழே விழும். பின்னர் எழும். நடையின் நுட்பம் அறிந்த பின் அக்குழந்தை நடக்க உலகத்தின் மொத்த நீளமும் இருக்கிறது. 

2. மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்த எல்லா குடும்பத்தாரையும் சந்தித்து கோவிட் - 19 தடுப்பூசி போட்டுக் கொள்ள விழிப்புணர்வை உண்டாக்கினேன். மரக்கன்றுகளுக்காக கணக்கெடுத்த அனுபவமும் ஒரு கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்த அனுப்வம் இருந்ததால் இந்த பணியை இலகுவாக செய்ய முடிந்தது. அதிகமாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் அந்த கிராமம் மயிலாடுதுறை மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றது. 

அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் கால்நடைகள் மேயாத பூமரக் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. 

3. நண்பர்களின் ஆதரவுடன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட சலூன்களில் சுவாமி சித்பவானந்தர் எழுதிய ஸ்ரீராமகிருஷ்ண சரிதம், ஸ்ரீ சாரதா தேவியாரது சரிதம், ஸ்ரீவிவேகானந்தர் ஜீவிதம், சுவாமி விவேகானந்தர்,  சகோதரி நிவேதிதை, தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர் ஆகிய நூல்களையும் விவேகானந்தரின் சொற்களின் தொகுப்பான வீர இளைஞருக்கு,  ராஜாஜி தொகுத்த  ஸ்ரீராமகிருஷ்ணரின் ஞானமொழி ஆகிய நூல்களும் நன்கொடையாக அளிக்கப்பட்டது. இந்த பணிக்காக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சலூன் கடைக்கும் சென்று ஒவ்வொரு சலூன் உரிமையாளரையும் நேரடியாக சந்தித்தேன்.  சலூன் உரிமையாளர்கள் வெளிப்படுத்திய ஆர்வமும் பிரியமும் நம்பிக்கையளிப்பது. 

4. மழையால் பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றின் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் 500 பேருக்கு ஆறு நாட்களுக்கு ஒவ்வொரு நாள் மாலை 5 மணி அளவில் உணவு வழங்கப்பட்டது. நண்பர்களின் உதவியே இதனை சாத்தியமாக்கியது. அப்பகுதி மக்கள் அங்கிருந்த ‘’சப்த மாதா’’ கோவிலை சீரமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஐம்பது பெண்கள் இணைந்து நாற்ப்த்து எட்டு நாளைக்கு இப்போது உள்ள கோவிலில் மாலை அந்தி ஐந்தரை மணி அளவில் தினமும் ஒரு தீபம் ஏற்றி ‘’அபிராமி அந்தாதி’’ பாராயணம் செய்யுமாறு கூறியுள்ளேன். கோவில் கட்டித்தர முயற்சிகள் மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளேன்.  

திட்டமிட்டுள்ள பணிகள்

1. ஒரு கிராமத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கியதைப் போல பத்து கிராமங்களுக்கு இந்த பணியை இதே பாணியில் விரிவாக்க எண்ணம் கொண்டுள்ளேன். ஒரு கிராமம் முழுமையாக மரக்கன்றுகள் நடுதலில் ஈடுபட்டதையும் அங்குள்ள விவசாயிகளின் அனுபவங்களையும் எடுத்துக் கூறும் வாய்ப்பு இந்த கிராமங்களுக்குப் பணி புரியும் போது இருப்பதால் எண்ணிய முடிதல் நல்விதமாய் இருக்கக்கூடும். 

ஒரு கிராமத்துக்கு 20,000 மரக்கன்றுகள் தேவைப்பட்டது. பத்து கிராமங்களுக்கு 2,00,000 மரக்கன்றுகள் தேவைப்படும். அத்தனை மரக்கன்றுகளையும் விதையிட்டு வளர்த்து மரக்கன்றுகளாக்கி விவசாயிகளுக்கு அளிக்க விருப்பம் கொண்டுள்ளேன்.  

2. ஊர் அருகில் காவிரியின் கிளை ஆறு ஒன்று உள்ளது. அதன் நீளம் 50 கி.மீ. அதன் கரை நெடுகிலும் வாய்ப்புள்ள இடங்களில் ஆல், அரசு , இலுப்பை ஆகிய மரங்களை நடுவது. மொத்தம் 6000லிருந்து 10,000 வரை மரக்கன்றுகள் நடப்பட்டு மூன்று ஆண்டுகள் அதன் பராமரிப்பை உறுதி செய்து வளரச் செய்வது. 

நன்றிக்கடன்

1. நிகழ்ந்த செயல்களுக்கும் இனி நிகழ இருக்கும் செயல்களுக்கும் கிராமத்து மக்களே காரணம். அவர்களின் அன்புக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ’’காவிரி போற்றுதும்’’ செயல் துவக்கத்தை மட்டுமே நிகழ்த்துகிறது. அத்துவக்கத்தைப் பயன்படுத்தி செயலை முன்னெடுப்பவர்கள் கிராம மக்களே. 

2. ‘’காவிரி போற்றுதும்’’ செயல்களுக்கு ஆலோசனை கூறி உடனிருந்து மேலும் செயல்பட ஊக்கமளிக்கும் நண்பர்களே நிகழ்ந்த செயல்களுக்கும் இனி நிகழ இருக்கும் செயல்களுக்கும் காரணம். அவர்களுக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். 

Monday 27 December 2021

அன்பின் கண்கள்

அன்பின் பொழுதுகள்
வானத்து மீன்களாய்
சிமிட்டிக் கொண்டிருக்கின்றன
தினமும்
தொலைவில்
தொடர்ந்து

அன்பின் நினைவுகள்
வானத்தின் முகில்கள்
பிரத்யேகமான
தங்களுக்கு சாத்தியமான
பயணங்களில் 
ஈடுபட்டிருக்கின்றன

அன்பு வானம்

அவ்வளவு பெரிய
அவ்வளவு பரந்த
அவ்வளவு முற்றறிய இயலாத
வானத்தை 
பூமியிலிருந்து 
நோக்குகின்றன
அன்பின் கண்கள் 

Thursday 23 December 2021

கோவிந்த வல்லப பந்த்

 

இந்த சம்பவம் நடந்த போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். 

அப்போது தான் எனக்கு வாகனப் பிராப்தி வாய்த்தது. சொந்தமாக சைக்கிள் வைத்திருந்தேன். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிளை எடுத்துக் கொண்டு பொது நூலகம் செல்வேன். அங்கேயிருக்கும் நூல் அடுக்குகளில் ஏதேனும் புத்தகத்தை எடுத்து வாசிப்பேன். பொது நூலகத்தில் உறுப்பினராய் இருந்ததால் வீட்டுக்கும் புத்தகம் எடுத்து வருவேன். ஒரு நூலகத்தில் உள்ள எல்லா நூல்களையும் வாசிக்க முடியுமா என்று யோசிப்பேன். வாசிக்க வேண்டும் என்று விரும்புவேன். இலக்கியமும் வரலாறும் எனக்கு மிகவும் பிடித்த துறைகள். வாழ்க்கை வரலாறுகளிலும் ஆர்வம் உண்டு. 

பள்ளியில் ஒரு பேச்சுப் போட்டி அறிவித்தார்கள். ‘’நாட்டுக்கு உழைத்தவர்’’ என்ற தலைப்பில் பேச வேண்டும். பள்ளியின் இலக்கிய மன்றங்களில் பலர் காந்தியைப் பற்றி நேருவைப் பற்றி பாரதியைப் பற்றி வ.உ.சி யைப் பற்றி கட்டபொம்மனைப் பற்றி பேசிக் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் இவர்களைப் பற்றியே உரைகள் இருக்கும். நான் புதிதாக யாரைப் பற்றியாவது பேச வேண்டும் என்று நினைத்தேன். புதிதாக ஏதாவது செய்வோமே என்ற எண்ணம். நூலகம் சென்று புத்தகங்களைத் தேடினால் மேலே சொன்னவர்களைப் பற்றியே அதிக நூல்கள் இருந்தன. எங்கோ ஓர் இடுக்கில் கோவிந்த வல்லப பந்த் குறித்த நூல் ஒன்று இருந்தது. அதனை என் உறுப்பினர் அட்டையைப் பயன்படுத்தி வீட்டுக்குக் கொண்டு வந்தேன். இவரைப் பற்றி பேசப் போகிறேன் என்று சொன்னேன். இவர் யார் என்று வீட்டில் அனைவரும் கேட்டார்கள். இந்த நூலைப் படித்து தெரிந்து கொள்ளப் போகிறேன் என்றேன். தந்தை அலுவலகம் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அவரிடம் வீட்டில் அனைவரும் எனது விருப்பத்தையும் செயலையும் குறித்து புகார் சொன்னார்கள்.  அவர் பந்த் குறித்து அறிந்திருந்தார். எனவே ‘’உன் விருப்பப்படி செய்’’ என்று சொல்லி விட்டார். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

புத்தகத்தை முழுமையாக வாசித்து அதிலிருந்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு நானே உரையைத் தயாரித்தேன். பேச்சுப் போட்டியின் தினம் வந்தது. நான்கு ஆசிரியர்கள் நடுவர்கள். ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பங்கேற்றனர். கிட்டத்தட்ட 50 பேர்.   
’’நாட்டுக்கு உழைத்தவர்’’ தலைப்பையும் சேர்த்து நான்கு தலைப்புகள் என்று ஞாபகம். மேற்படி தலைப்பில் பேசியவர்களில் பெரும்பாலானவர்கள் காந்தி நேரு பாரதி என்று பேசினார்கள். நான் கோவிந்த வல்லப பந்த் குறித்து பேசினேன். 

வெற்றி பெற்ற மாணவர்களை அறிவிக்கும் நேரம் வந்தது. அப்போது நடுவர் குழுவில் இருந்த ஆசிரியை எதிரில் இருந்த 50 மாணவர்களில் என்னை நோக்கி ‘’இந்த தலைப்பையும் இந்த உரையையும் உனக்கு தேர்ந்தெடுத்துக் கொடுத்தது யார்?’’ என்று கேட்டார். நானே தேர்ந்தெடுத்தேன் என்று சொன்னேன். உரை தயாரித்தது எவ்வாறு என்று கேட்டார். நூலகம் சென்று நூல் ஒன்றை வாசித்து என்று சொன்னேன். 

அந்த ஆசிரியை எல்லா மாணவர்களையும் நோக்கி ‘’நாங்கள் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பேச்சுப் போட்டியின் நடுவர்களாக இருந்திருக்கிறோம். பெரும்பாலும் மாணவர்கள் பேசுவது அனைத்தும் நாங்கள் கேட்ட அறிந்த விஷயமாகவே இருக்கும். முதல் முறையாக முற்றும் புதிதான விஷயம் ஒன்றை ஒரு பேச்சுப் போட்டியில் ஒரு மாணவன் பேசி அறிகிறோம். கோவிந்த வல்லப பந்த் குறித்து நாங்கள் அறிவது இதுவே முதல் முறை. இந்த மாணவனின் சொந்த முயற்சியைப் போல அனைவரும் முயன்று பார்க்க வேண்டும். ஆசிரியர்களான நாங்கள் இந்த மாணவனின் முயற்சியைப் பாராட்டுகிறோம்’’ என்றார். 

அந்த போட்டியில் எனக்குப் பரிசு கிடைக்கவில்லை. என்றாலும் அடுத்த சில நாட்கள் ஆசிரியர்கள் மத்தியில் கோவிந்த வல்லப பந்த் குறித்து பேச்சு நிலவிக் கொண்டிருந்தது. 

பின்குறிப்பு :

கோவிந்த வல்லப பந்த் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். சட்டம் பயின்றவர். உப்பு சத்யாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கங்களில் தீவிரப் பங்காற்றியவர். நாட்டின் சுதந்திரத்துக்குப் பின், உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சராக இருந்திருக்கிறார். நேருவின் மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தார். 

Wednesday 22 December 2021

கொடையாளி

இன்று காலை ஒரு நண்பர் ஃபோன் செய்தார். நான் பக்கத்தில் உள்ள கிராமம் ஒன்றினுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அங்கே எனக்கு சமீபத்தில் ஒருவர் பரிச்சயமானார். அவர் தேனீர்க்கடை ஒன்றில் பணி புரிபவர். அவருடைய மகளுக்கு 24 வயது. நர்சிங் பயின்றவர். சில வாரங்களுக்கு முன்னால், தீவிரமான உடல்நலக் கோளாறுகள் அந்த யுவதிக்கு ஏற்பட்டன. மருத்துவப் பரிசோதனையில் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்திருப்பது தெரிய வந்தது. வாரத்துக்கு மூன்று நாட்கள் ‘’டயாலிசிஸ்’’ செய்து வருகிறார்கள். நெருக்கடியான சூழ்நிலையிலும் மனம் தளராமல் குடும்பத்தினர் சிகிச்சை அளிக்கின்றனர். சிகிச்சையின் போது உடனிருக்கின்றனர். சிகிச்சை திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெறுகிறது. அந்த பெண்ணின் தந்தையும் தாயும் மருத்துவமனையில் மகளுடன் இருக்கின்றனர். ’’டயாலிசிஸ்’’ முடிந்து கிராமத்துக்குத் திரும்புவார்கள். பின்னர் அடுத்த இரு நாளில் மீண்டும் பயணம். மீண்டும் சிகிச்சை.  சிகிச்சைக்கு உடனிருப்பதால் அவருடைய தேனீர்க்கடை பணிக்கு செல்ல முடியாத நிலை. நான் வாரம் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ அங்கு சென்று அவர்களின் நலம் விசாரித்து விட்டு வருவேன். இந்த விபரத்தை ஃபோன் செய்த நண்பரிடம் சொன்னேன். அந்த குடும்பத்தினரைக் காண சென்று கொண்டிருப்பதாகச் சொன்னேன். 

ஐந்து நிமிடம் கழித்து முன்னர் ஃபோன் செய்த நண்பரிடமிருந்து மீண்டும் ஃபோன்கால். 

‘’பிரபு ! உங்க அக்கவுண்ட்டுக்கு ஒரு அமௌண்ட் அனுப்பி இருக்கன். அந்த ஃபேமிலிக்கு கொடுத்துடுங்க’’

‘’நான் உங்க கிட்ட ஹெல்ப் வேணும்னு கேக்கலையே’’

‘’நீங்க கேக்கலை. உண்மைதான். ஆனா அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அதனால தான் பணம் அனுப்பியிருக்கன்.’’

‘’என்னை நீங்க எல்லாரும் கடனாளியா ஆக்கறீங்க’’. 

‘’அப்படியெல்லாம் இல்ல பிரபு. நீங்க சமூகத்துல இருக்கற பலதரப்பட்ட ஜனங்களோட நேரடியா தொடர்புல இருக்கீங்க. அவங்களுக்கு உங்களால முடிஞ்சத செய்ய முயற்சி செய்யறீங்க. உங்களுக்கு சப்போர்ட் செய்றது மூலமா உங்க பணியில சின்ன அளவில பங்கெடுத்துக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குது. ‘’

‘’ராம்கிருஷ்ணஹரி’’ என்று சொன்னேன். 

‘’பிரபு அப்புறம் ஒரு சின்ன ரெக்வெஸ்ட்’’

‘’சொல்லுங்க’’

‘’இந்த விஷயத்துல நான் ஹெல்ப் செஞ்சதா நீங்க யார்ட்டயும் என் பேரை ரிவீல் செய்யக் கூடாது. பிளீஸ்’’

‘’பேரை மென்ஷன் பண்ணாமவாவது இத பத்தி நான் சொல்லலாமா?’’

‘’என்னைக் கேட்டா நான் வேண்டாம்னு தான் சொல்வன். அப்புறம் உங்க இஷ்டம்.’’

அலைபேசி உரையாடல் முடிந்தது. 

நான் ஏ.டி.எம் சென்று நண்பர் அனுப்பிய தொகை ரூ. 10,000 ஐ எடுத்துக் கொண்டு கிராமத்திற்குச் சென்று அந்த குடும்பத்தாரிடம் கொடுத்தேன். 

பின்குறிப்பு :

அந்த குடும்பத்தாரைச் சந்திக்கும் முன் , அந்த கிராமத்தில் உள்ள எனது நண்பரை பார்க்கச் சென்றேன். அவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர்களிடம் நிதி அளிக்கையில் உடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டேன். நண்பர் சம்மதித்தார். வீட்டில் அவருடைய அறைக்குச் சென்று ரூ. 2000 எடுத்து வந்து என் கையில் கொடுத்தார். இதனையும் வழங்கி விடுவோம் என்றார். இந்த தொகையைத் தான் அளித்ததாக சொல்ல வேண்டாம் ; உங்கள் நண்பர் அளித்ததாகவே கூறி வழங்கி விடுவோம் என்றார். அவர் சொன்னவாறே ரூ. 12,000 ஐ அந்த குடும்பத்தாரிடம் அளித்தோம். 

Tuesday 21 December 2021

நம்பிக்கை

நேற்று ஒரு வாசகரைச் சந்திக்க நேர்ந்தது. பழைய வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தையின் எண்பதாம் அகவை நிறைவை ஒட்டி திருக்கடவூரில் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருடைய குடும்பத்திலிருந்து நெருங்கிய உறவினர்கள் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அனுப்பி வைத்து விட்டு சந்திக்க வருவதாகச் சொன்னார். அவருக்கு திருச்சி செல்ல வேண்டி இருந்தது. எனக்கும் திருச்சியில் ஒரு வேலை இருந்தது. இருவரும் ஒன்றாகப் பயணமானோம். 

நண்பர் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக பணி நிமித்தம் அமெரிக்காவில் இருக்கிறார். அவருடைய மனைவியும் அங்கே பணி புரிகிறார். குழந்தைகள் அங்கேயே படிக்கிறார்கள். நான் அவரை இரண்டாண்டுகளுக்கு முன்னால் சந்தித்திருக்கிறேன். அதன் பின் ஓரிரு மின்னஞ்சல்கள் அனுப்பினார். ஓரிரு முறை அலைபேசியில் பேசினார். 

இலக்கியத்தில் ஆர்வம் உள்ள வாசகர்களை நான் எழுதுமாறு சொல்வேன். அவரிடமும் முதல் சந்திப்பில் சொன்னேன். அவருக்கு மரபிலக்கியத்தில் ஆர்வம் இருந்தது. மரபிலக்கியத்தில் ஆர்வம் உடைய ஒருவராகவே என் நினைவில் அவர் பதிவாகி இருந்தார். 

இந்த முறை ஒன்றாகப் பயணித்த போது , அவருடைய தன்னார்வ செயல்பாடுகள் பலவற்றை அறிய நேர்ந்தது. வாஷிங்டன் நகரில் பல தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ்மொழியைக் கற்றுத் தரும் பணியை பல்லாண்டுகளாக மேற்கொள்வதாகச் சொன்னார். தனது அலுவல் நேரம் போக இதற்கென தினமும் நேரம் ஒதுக்குவதாகவும் சொன்னார். வார இறுதி நாட்களை முழுமையாக இப்பணிக்காகக் கொடுப்பதாகவும் சொன்னார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை நாள் அறியாமல் இருந்திருக்கிறேனே என எண்ணிக் கொண்டேன். ஆசிரியப் பணி செய்யும் போதே தன் மனம் முழு நிறைவை அடைவதாகச் சொன்னார். 

பல ஆண்டுகளாக யோகாசனங்கள் செய்து வருவதாகக் கூறினார். நீங்கள் ஏன் அமெரிக்காவில் உங்கள் பகுதியில் ஒரு யோகாசன வகுப்பு துவங்கக் கூடாது என்று கேட்டேன். துவங்குமாறு சொன்னேன். இந்தியர்கள், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் என பலவகைப்பட்டவர்கள் வகுப்பில் இணைய வாய்ப்பு உள்ளது என்பதால் யோகாவை பலருக்கு கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்ள முடியும் என்று சொன்னேன். அவருக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. அதனைச் சாத்தியமாக்குவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறினார். 

உரையாடியவாறே திருச்சி வந்து சேர்ந்தோம். பிரியும் நேரம் வந்தது. மீண்டும் சந்திக்க ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ ஆகலாம் என்பதால் என் மனம் வருந்தியது. ‘’உங்களுக்கு வேண்டுமானால் அடுத்த சந்திப்புக்கு இரண்டு வருடம் ஆகலாம் ; நான் தினமும் உங்கள் எழுத்துக்கள் மூலம் - உங்கள் வலைப்பூ மூலம் - உங்களைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன். சந்தித்துக் கொண்டு இருப்பேன்’’ என்று சொன்னார். 

தமிழ்ச்சூழல் மிகவும் எதிர்மறையானது. பல்வேறு விதங்களில். பல்வேறு விதங்களிலும். நண்பரைப் போன்ற வாசகர்களே தமிழ் எழுத்தாளனுக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். 

Sunday 19 December 2021

புதிய ஆண்டு

இந்திய மரபில் எந்த ஒரு நாளும் எந்த ஒரு பொழுதும் துவக்கமே. வழக்கமாக, டிசம்பரின் கடைசி வாரம் புத்தாண்டு மனநிலையைக் கொண்டு வரும். இம்முறை டிசம்பர் முதல் தேதியிலிருந்தே புத்தாண்டு ஆர்வம் துவங்கி விட்டது. சிறு வயதிலிருந்தே புத்தாண்டுத் தீர்மானங்கள் பல மேற்கொள்வதுண்டு. பல ஆண்டுகள் அந்த தீர்மானங்களை நிறைவேற்றியும் இருக்கிறேன். சில விடுபட்டும் போயிருக்கின்றன. பல ஆண்டுகள் குறிப்பாக எந்த தீர்மானமும் மேற்கொள்ளாமலும் இருந்திருக்கிறேன். இந்த ஆண்டு அக்டோபரிலேயே காஃபி , தேனீர், பால் தவிர்ப்பது என்ற முடிவை மேற்கொண்டேன். இன்றைய தேதி வரை சில நாட்கள் தவிர மற்ற நாட்கள் அதனை முழுமையாகப் பின்பற்றியது மகிழ்ச்சி தந்தது. சில விஷயங்களைப் பழக வேண்டியிருக்கிறது. புத்தாண்டுத் தீர்மானம் முழுமையாக வெற்றி பெற மூன்று மாதங்களுக்கு முன்பே அதனை ‘’டிரையல்’’ பார்க்க வேண்டியிருக்கிறது என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டிருக்கிறேன். நிறைய விஷயங்களை நம்முடைய பிரக்ஞைக்கு மெல்ல மெல்ல கொண்டு வர வேண்டி உள்ளது. 

இந்த ஆண்டு கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய பல பணிகள் உள்ளன. 

ஒவ்வொரு பணியும் ஒவ்வொரு திட்டமிடலும் நம்மை மேலும் முன்னகர்த்துகின்றன ; மேலும் வளர்ச்சி கொள்ள செய்கின்றன.  

Friday 17 December 2021

சொற்பொழிவு

மக்கள் தொடர்பு சாதனங்களில் சொற்பொழிவு என்பது வலிமையான ஒரு சாதனம். சொற்பொழிவாளன் தன் எதிரில் இருக்கும் மக்கள் திரளை ஒரு நிமித்தமாகக் கொண்டு ஒரு காலகட்டத்துடன் - ஒரு காலகட்டத்தை நோக்கி உரையாட முடியும். பார்வையாளனின் புரிதலை அறிவை மன அமைப்பை மாற்றி அமைக்கும் சாத்தியம் நிறைந்த தொடர்பு சாதனம் சொற்பொழிவு.  

பெரும் கல்விமான்களும் தமிழறிஞர்களும் தமிழ்நாட்டின் சிறந்த சொற்பொழிவாளர்களாக விளங்கியிருந்திருக்கிறார்கள். தமிழ் சொற்பொழிவின் தரத்தை மிக மிகக் கீழிறக்கி உணர்ச்சிகளைத் தூண்டி இல்லாத எதிரியைக் கட்டமைத்துக் காட்டி தன் அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்தியது திராவிட இயக்கம். அவர்கள் ஐம்பது ஆண்டுகளாக கட்டமைத்திருக்கும் மலினமான சொற்பொழிவு நடைமுறைகள் என்பவை தமிழ் மக்களின் அறிவுத் திறனையும் சிந்திக்கும் சக்தியையும் ஊனமாக்கியுள்ளன. 

தரம் மிக்க சொற்பொழிவுகளும் சொற்பொழிவாளர்களும் தமிழின் இன்றைய முக்கியமான அவசியமான தேவை. 

Wednesday 15 December 2021

a s d f g f ; l k j h j (நகைச்சுவைக் கட்டுரை)

2003ம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றதும் உண்மையில் ‘’அப்பாடா’’ என இருந்தது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியோ கல்லூரிக்கல்வியோ எவருக்கும் உவப்பளிக்கும் விதத்தில் இருக்காது என்பதே உண்மை. பள்ளிக்கல்வியில் உயர்நிலை மற்றும் மேல்நிலையில் மொழிக்கல்விக்கான முக்கியத்துவம் என்பது இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. சமூக அறிவியல் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. கணிதமும் அறிவியலும் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன. உயர்நிலை பள்ளிக்கல்வியில் மொழிப்பாடங்களும் கணிதமும் அறிவியலும் சமம் எனினும் மானசீகமாக பெற்றோராலும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் மொழிக்கல்வியும் சமூக அறிவியலும் ஒதுக்கி வைக்கப்படுகின்றன. பள்ளிக்கல்வியில் பொருளாதாரம், வணிகவியல் பயிலும் மாணவர்கள் அந்தப் பாடங்களை ஆர்வத்துடன் கற்க வாய்ப்பு இருக்கக் கூடும் என்று நான் யூகிக்கிறேன். அவை சாமானியர்களின் அன்றாட வாழ்வை - செயல்பாடுகளை தங்கள் பாடத்தின் அடிப்படையாகக் கொண்டுள்ளன. மாணவர்கள் அப்பாடங்களை கற்பனை செய்து பயில முடியும். கல்லூரியிலும் அதனை விரிவாக புரிந்து கொள்ள முடியும். 

தமிழ்நாட்டில் அறிவியல் கல்வியையும் தொழில்நுட்பக் கல்வி பின் தள்ளி விட்டது. அரசு  வேலைவாய்ப்பு என்பதை மிகப் பெரிய விஷயமாக தமிழ்நாட்டில் ஆக்கி விட்டனர். பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை சமூகத்தின் பொருளியல் மாற்றத்துக்கான ஒரு கருவியாக பயன்படுத்த முடியும். எனினும் தமிழ்நாட்டில் அது நிகழவில்லை. ஒவ்வொரு காலகட்டத்தை ஒவ்வொரு பணி வாய்ப்புகள் ஆதிக்கம் செலுத்தின. அதனை நோக்கிச் சென்றவர்கள் ஏதேனும் ஒரு வேலை வாய்ப்பில் பொருந்திக் கொண்டனர். பொறியியல் படித்தவர்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்த்தனர். வங்கிப் பணிக்குச் சென்றனர். 

எல்லா மாணவர்களுக்கும் இவ்வகையான அனுபவமே இருக்கும் என்றாலும் ‘’கிரியேட்டிவ்’’ மனநிலை கொண்டவர்களுக்கு பள்ளியும் கல்லூரியும் அளிக்கும் நுட்பமான சுமைகள் கணிசமானவை. 

நான் கடைசி பரீட்சை எழுதினோமோ பஸ்ஸைப் பிடித்து ஊர் வந்து சேர்ந்தோமா என்று இருந்தேன். ‘’அப்பாடா’’ இனிமேல் நாம் நினைப்பதை செய்யலாம். வருகைப் பதிவு கிடையாது. சைக்கிள் டெஸ்ட் கிடையாது. இண்டெர்னல் மார்க் கிடையாது. அசைன்மெண்ட் கிடையாது. இவையெல்லாம் இல்லை என்ற நினைவே ஒரு புதிய உலகத்தை உண்டாக்கியது போல் இருந்தது. 

இருந்தாலும் இவ்வளவு கடினமாக ஒரு பாதையைக் கடந்த அனுபவம் இருந்ததால் ஏதேனும் ஒரு புதிய கல்வியை கற்க வேண்டும் என்று விரும்பினேன். நான் தேர்ந்தெடுத்தது தட்டச்சு. ஒரு தட்டச்சு வகுப்பில் சேர்ந்தேன். அங்கே உடன் பயில்பவர்கள் அனைவரும் சிறுவர்கள். எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பதால் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெறுவதற்குள் தட்டச்சு பயின்று விட வேண்டும் என வகுப்பில் இணைந்திருப்பவர்கள். 

a s d f gf ; l k j h j என ஆரம்பப் பாடத்தை பயில ஆரம்பித்தேன். என்னிடம் அப்போது கணிணி இல்லை. எனவே தட்டச்சு வகுப்பில் தட்டச்சு எந்திரம் தான் ஒரே தொடர்பு. ஒரு மணி நேரத்தில் இரண்டு பக்கம் அடிக்க வேண்டும் . என்னால் ஒரு பக்கம் தான் அடிக்க முடியும். எனக்குப் பின்னால் சேர்ந்த சிறுவர்கள் எந்த சிரமமும் இல்லாமல் ஒரு நாளைக்கு இரண்டு பக்கம் தட்டச்சிடுவார்கள். நான் எப்போதுமே ஒரு பக்கத்தைத் தாண்டியது இல்லை. தட்டச்சின் அடிப்பையான நடு வரிசை, மேல் வரிசை மற்றும் கீழ் வரிசை பாடங்களை மெல்ல மெல்ல கற்று a b c d e f .... z வரை 26 எழுத்துக்களையும் தட்டச்சிட கற்றுக் கொண்டேன். என்னுடன் பயின்ற சிறுவர்கள்  z y x w v u t ... எனத் தொடங்கி a வரை சென்று சேரும் தலைகீழ் பயிற்சியும் பெற்று பத்திகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் தட்டச்சிடும் நிலைக்குச் சென்று விட்டனர். 

தட்டச்சுப் பயிற்சி என்பது ஒன்றைப் பார்த்து தட்டச்சுப் பொறியில் தட்டச்சிடுவது. கண்கள், மனம், கைவிரல்கள், எந்திரம் என இந்த நான்கினுக்கும் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது. ஏ பி சி டி ஈ எஃப் ஜி ஹெச் தெரியும் என்றாலும் கண்கள் ஒவ்வொரு அட்சரமாகப் பார்த்துத்தான் தட்டச்சிட வேண்டும். நான் ஸ்கிரிப்டைப் பார்க்க மாட்டேன். அதனை எப்போதும் சுட்டிக் காட்டுவார்கள். உடன் பயின்ற சிறுவர்கள் அனைவரும் பரீட்சைக்குப் பணம் கட்டும் நிலைக்கு வந்து விட்டார்கள். அப்போது நான் ஆங்கில் அட்சரங்களை தலைகீழாக அடித்துக் கொண்டிருந்தேன். நான் ஒருநாள் கூட ஒரு பக்கத்தைத் தாண்டியது இல்லை. எனது தட்டச்சு பிழை இல்லாமல் இருக்கும். ஆனால் ஒரு பக்கம் தான் இருக்கும். சிறுவர்கள் இரண்டு பக்கம் அடிப்பார்கள் ஆனால் பிழைகள் கணிசமாக இருக்கும். 

ஏ பி சி டி பயின்று விட்டோமே என்று வகுப்புக்குச் செல்வதை நிறுத்தி விட்டேன். சில மாதங்கள் சென்றன. மீண்டும் வகுப்புக்குச் சென்றேன். ஏ பி சி டி யிலிருந்து ஆரம்பித்தேன். ஆசிரியர் வந்து பார்த்தார். ஏ எஸ் டி எஃப் லிருந்து ஆரம்பியுங்கள் என்றார். மீண்டும் சில மாதங்கள் பயின்று அட்சர வரிசைக்கு வந்தேன். வகுப்பை நிறுத்தி விட்டேன். 

பயிற்சியில் நமக்கு சில பின்னடைவுகள் இருக்கின்றன. அதனை சரி செய்வோம் என மீண்டும் வகுப்புக்கு செல்வோம் என முடிவெடுத்தேன். இம்முறை சென்ற இடத்துக்கே செல்வதற்குப் பதில் புதிய இடத்தில் சேர்ந்தேன். அங்கும் முதலில் இருந்து. அங்கும் அட்சர வரிசையில் நிறுத்தம். பின்னர் இன்னொரு இடம் . இன்னொரு இடம். எங்கும் அட்சரத்தைத் தாண்டவில்லை. 

பொறியியல் பட்டம் பெற்று சில ஆண்டுகளில் மடிக்கணினி வாங்கினேன். அப்போது அனைவரிடமும் மேஜைக் கணினிதான் இருக்கும். மடிக்கணினி குறைவு. தமிழ் யூனிகோட் அப்போது  பிரபலமாகிக் கொண்டிருந்தது. லேப்டாப்பில் தமிழ் டிரான்ஸ்லிட்டரேஷன் முறையில் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ என டைப் செய்தேன். முதல் முறையிலேயே உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் எளிதாக தட்டச்சிடும் முறையில் இருந்தன. பின்னர் சில வார்த்தைகளையும் தட்டச்சிட்டேன். மள மள என கணினி திரையில் எழுத்துக்கள் நிறைந்தன. 

12 + 4 வருடங்கள் என்ற முறையில் பயின்ற பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை நல்ல மதிப்பெண் பெற்று நிறைவு செய்தோம் ஆனால் தட்டச்சுப் பரீட்சைக்கு பணம் கட்டும் நிலைக்குக் கூட வர முடியவில்லையே என இப்போதும் நினைப்பேன். 

Friday 10 December 2021

எண்களை எண்ணுதல்

இன்று ஒரு இளைஞருடன் பேசிக் கொண்டிருந்தேன். சமூகப் பிரக்ஞை உள்ளவர். சேவையில் ஆர்வம் கொண்டவர். பொது வேலைகளை சுயமாக முன்வந்து ஆற்றுபவர். தன் மனதில் இருக்கும் ஐயங்கள் சிலவற்றை என்னிடம் கேட்டார். எந்த வினாவும் எழுப்பப்படும் போது அதன் அடிப்படைகளை நோக்கிச் சென்று பதில்களை விரிவாக முன்வைப்பது எனது வழக்கம்.  

அரசாங்கப் பணியிடங்கள் அதிகம் உருவாக்கப்படுவதும் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதும் இளைஞர்களுக்கு பயன் தருமா என்று கேட்டார். 

அவரிடம் நான் சில வினாக்களை எழுப்பினேன். அதற்கு அவர் விடையளித்தார். 

கேள்வி : தமிழ்நாடு மக்கள்தொகை எவ்வளவு ?

பதில் : ஏழு கோடி

கேள்வி : தமிழ்நாட்டில் அரசு வேலை பார்ப்பவர்கள் எத்தனை பேர் ? 

பதில் : பதினாலு லட்சம்

கேள்வி : ஏழு கோடியில் 14 லட்சம் எத்தனை சதவீதம்?

பதில் : இரண்டு சதவீதம்

கேள்வி : உங்க ஊரோட மக்கள்தொகை எவ்வளவு ?

பதில் : 5000 

கேள்வி : சதவீதக் கணக்கு படி அரசு ஊழியர் எண்ணிக்கை எவ்வளவு ? 

பதில் : நூறு பேர்

கேள்வி : சராசரியா ஒவ்வொருத்தரும் அறுபதாயிரம் ரூபா சம்பளம் வாங்குவதா வச்சுக்கவோம். அப்ப அந்த நூறு பேரோட வருட வருமானம் என்ன?

பதில் : ஏழு கோடியே இருபது லட்சம்

கேள்வி : உங்க ஊர் பாப்புலேஷன்ல அரசு ஊழியர்கள் போக மீதி எத்தனை பேர் இருக்காங்க?

பதில் : 4900 பேர்

கேள்வி : உங்க ஊர்ல ஒரு ஜூவல்லரி இருக்கு . அதோட ஒரு வருஷ லாபம் மூணு லட்சம். ஒரு பெட்ரோல் பங்க் (7,20,000).  ஒரு ஹோட்டல் (3,60,000). தேனீர்க்கடை (2,70,000). பால் வியாபாரம் (3,24,000). பால் கடை (4,32,000). இறைச்சிக் கடை (4,80,000). ஆடு வியாபாரம் (12,00,000). உர வியாபாரம் (2,50,000). மீன் வியாபாரம் (3,60,000). காய்கறிக் கடை (7,20,000). வீட்டு வாடகை ( 18,00,000). கடை வாடகை (18,00,000). இணைய சேவை (1,20,000). வெல்டிங் பட்டறை (4,80,000) .ஹார்டுவேர் (3,60,000). பூ வியாபாரம் (1,20,000). சலூன் (7,20,000). இந்த தொழில்களோட மொத்த ஒரு வருஷ லாபம் 1,08,16,000. இந்த கடைகள்ல சம்பளத்துக்கு வேலை பாக்கறவங்க குறைந்தபட்சமா 25 பேர் இருப்பாங்கன்னும் அவங்களோட மொத்த வருஷ வருமானம் 15,00,000ம்னும் கணக்கு வச்சுப்போம். (1,08,16,000 + 15,00,000 = 1,23,56,000). வெளிநாட்டுல தொழிலாளரா வேலை பாக்கறவங்க ஒரு 50 பேர் இருப்பாங்கன்னும் அவங்க சராசரியா மாசம் அம்பதாயிரம் ஊருக்கு அனுப்பறதாவும் வச்சுக்கங்க. அந்த தொகை மூணு கோடி. 

15 ஏக்கர் நிலம் வச்சுருக்கவங்க 20 குடும்பம் இருப்பாங்க. அவங்க மாச வருமானம் 75,000 . 10 ஏக்கர் நிலம் வச்சிருக்கவங்க 20 குடும்பம் இருப்பாங்க. அவங்க மாச வருமானம் 50,000. 5 ஏக்கர் நிலம் வச்சிருக்கவங்க 50 குடும்பம் இருப்பாங்க. அவங்க மாச வருமானம் 25,000. விவசாயத் தொழிலாளர் 500 பேர்.  அவங்க மாச வருமானம் 6000ம்னு கணக்கு வச்சுக்கங்க. இப்ப விவசாயம் சார்ந்து மொத்தமா கணக்கு பண்ணுங்க. எட்டு கோடியே பத்து லட்சம் ரூபாய். 

தொழில் மற்றும் விவசாய வருமானத்தை சேர்த்து சொல்லுங்க. 

பதில் : 12 கோடியே 33 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் 

அந்த இளைஞரிடம் நான் கூறினேன். ‘’அதாவது தம்பி! யானை படுத்தாலும் குதிரை மட்டம்னு சொல்லுவாங்க. விவசாயமோ நாம கணக்கு பண்ணியிருக்க தொழில்களோ எதையும் சாராம சுயசார்போட இயங்கக் கூடிய தொழில்கள். நாம ரேண்டமாத்தான் கணக்கு பண்ணியிருக்கோம். விவசாய வருமானம் இரு மடங்கு ஆச்சுன்னா கிராமத்தோட எக்கனாமிக் ஸ்ட்ரக்சரே வேற மாதிரி இருக்கும். சாமானிய மக்களுக்கு குறைந்தபட்சமான முதலீடு வங்கிக்கடனா கிடைச்சாக் கூட பெரிய மாற்றம் நடக்கும்.  விவசாயம், தொழில் இந்த ரெண்டு விஷயத்தைத் தான் இளைஞர்கள் முக்கியமா நினைக்கணும். முக்கியமா நினைச்சா நாம பொழச்சோம்.’’

கேள்வி : அரசாங்க ஊழியர் எண்ணிக்கை கூடுமா?

பதில் : தெரியலையே

கேள்வி : மொத்த மக்கள்தொகைல ரெண்டு சதவீதம்ங்கறதே ரொம்ப பெரிசு. இந்த சைஸ் இனிமே கொஞ்சம் குறையுமே தவிர நிச்சயமா கூடாது. அப்ப மத்தவங்க என்ன செய்றது?

பதில் : சுயதொழில் செய்யறது நல்லது. 

இளைஞர் புரிந்து கொண்டது மகிழ்ச்சி அளித்தது. 

Tuesday 7 December 2021

கண்ணீர்

ஓரிரு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது. 

எனது நண்பர் ஒருவரின் சொந்த ஊர் சிதம்பரம். அங்கே தேர் வீதி ஒன்றில் அவருடைய நண்பருக்கு மிகப் பெரிய இடம் ஒன்று இருந்தது ; இருக்கிறது. அதனை விற்பனை செய்ய வேண்டும் என அவர் விரும்பினார். என்னுடைய நண்பர் என்னை அழைத்துக் கொண்டு போய் அதனைக் காட்டினார். நகரின் மையப்பகுதியில் அமைந்த இடம். 

‘’சார் ! இந்த இடத்தை விக்கறதை விட அபார்ட்மெண்ட் கட்டி வித்தா உங்களுக்கு நல்ல லாபம்’’

‘’அப்படியா சொல்றீங்க?’’

நான் அவருக்கு விளக்கிச் சொன்னேன். 

‘’சார் ! இது என்னோட அட்வைஸ். அவசியம் அபார்ட்மெண்ட்ஸ் கட்டுங்க. நான் தான் அந்த ஒர்க் செய்யணும்னு அவசியம் இல்லை. நாங்க எப்பவுமே நம்பற விஷயம் நாம எந்த ஒர்க் செய்யணுங்கறத எல்லாத்துக்கும் மேல இருக்கற ஒன்னு தான் தீர்மானிக்குது. ஆனா ஒரு பில்டரா நான் இந்த இடத்துக்கு இந்த அட்வைஸ் தான் பெஸ்ட்ன்னு நிச்சயமா சொல்லுவன்.’’

நிலத்தின் உரிமையாளர் கண்ணீர் சிந்தி விட்டார். 

‘’நாம பாத்து பத்து நிமிஷம் தான் ஆகுது. ஆனா என்னோட நல்லதுக்காக அட்வைஸ் பண்றீங்க. என்னோட சொந்தக்காரங்க எத்தனையோ பேர் இருக்காங்க. ஒருத்தர் கூட என் மேல பொறாமை இல்லாம இருந்ததில்லை சார்’’   

எல்லாரும் நலமுடன் இருக்கும் இடத்தில் தான் நாமும் நலமாக இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டேன். 

முதலும் முடிவும்

சில ஆண்டுகளுக்கு முன்னால், என்னிடம் ஒரு இளைஞர் வந்தார். அவர் மாநில அரசு ஊழியர். இளம் வயதில் பணியில் சேர்ந்தார். எனது நண்பருக்கு அவர் நண்பர். என்னுடைய கட்டுமானங்களைப் பார்த்து அதன் நேர்த்தியினால் ஈர்க்கப்பட்டு அவருடைய வீட்டை நான் கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நான் ஒரு பிளானை அவரிடம் கொடுத்தேன். அதை வீட்டில் உள்ளோருக்கு காண்பித்து அவர்களுடன் விவாதித்து இரண்டு நாட்கள் கழித்து தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.  நான் என்னுடைய எஸ்டிமேட்டை சொன்னேன். ஒரு வாரம் அவர் வரவில்லை. அவரிடமிருந்து ஃபோன்காலும் இல்லை. நான் என்னுடைய வேலைகளில் மும்மரமாயிருந்தேன். பின்னர் ஒரு நாள் என்னைச் சந்தித்தார். 

‘’பிரபு ! நீங்க சொன்ன எஸ்டிமேட்ல 80 %ல ஒருத்தர் வேலை செய்யறன்னு சொன்னார். எனக்கு அந்த ரேட் பரவாயில்லைன்னு தோணுச்சு. அவரை செய்ய சொல்லியிருக்கேன்’’ என்றார். 

‘’கன்ஸ்ட்ரக்‌ஷன் ஒர்க் ஒரு டெக்னிக்கல் ஒர்க். குவாலிட்டி கண்ட்ரோல் ரொம்ப முக்கியம். நீங்க தரமான பொருளைத் தேர்ந்தெடுக்கறது மட்டும் போதாது. ஒவ்வொரு செங்கல்லா கட்டிடம் உயரும் போதும் குவாலிட்டி கண்ட்ரோல் தேவை. வேலை தரமா நடக்குதுங்கறத ஒவ்வொரு நாளும் உறுதிப்படுத்தனும்’’

‘’ரொம்ப குவாலிட்டியா செஞ்சு தரன்னு சொல்லியிருக்காரு’’

‘’அப்பன்னா சரி. இன்னொரு  விஷயம். உங்களுக்கு நான் கொடுத்த பிளான்ல எந்த மாற்றமும் செஞ்சுடாதீங்க. அத அப்படியே எக்ஸிகியூட் பண்ண சொல்லுங்க.’’

நண்பர் விடை பெற்று சென்று விட்டார். 

ஐந்து மாதம் ஆனது. நண்பர் எனக்கு ஃபோன் செய்தார். சந்திக்க வேண்டும் என்றார். நான் வரச் சொன்னேன். 

உடல் மிகவும் மெலிந்திருந்தார். முகம் நிறைய கவலையின் சுவடுகள். 

‘’வாங்க. எப்படி இருக்கீங்க. நாம சந்திச்சு அஞ்சாறு மாசம் இருக்குமா. ஒர்க் ஃபினிஷ் ஆயிடுச்சா? இப்ப என்ன ஸ்டேஜ்.’’

’’ஃபஸ்ட்  ஃபுளோர் ரூஃப் போட்டிருக்கு.’’

‘’அது ரெண்டு மாசத்துல போட்டிருப்பாங்களே?’’

நண்பர் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தார். 

‘’என்னங்க ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கீங்க?’’

நண்பர் பொல பொல வென கண்ணீர் சிந்தினார். 

நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு என்ன செய்வது என்றும் புரியவில்லை. 

’’கிரவுண்ட் ஃபுளோர் ரூஃபும் ஃபஸ்ட் ஃபுளோர் ரூஃபும் மட்டும்தான் போட்டிருக்கு. அதுக்கே நீங்க சொன்ன எஸ்டிமேட்டைத் தாண்டி பணம் செலவாயிடுச்சு.’’

‘’என்ன சொல்றீங்க? இன்னும் பூச்சுவேலை, டைல்ஸ் லேயிங், எலெக்ட்ரிக்கல், பிளம்பிங், பெயிண்டிங் வேலைகள் பாக்கி இருக்கு?’’

‘’ஆமாம். பெரிய சிக்கல்ல மாட்டிட்டன். என்னோட சேவிங்க்ஸ் வீட்டில இருக்கறவங்க சேவிங்ஸ் எல்லாம் கரைஞ்சுகிட்டே இருக்கு. கடன் ரொம்ப கூடிடுச்சு.’’ ரொம்ப நேரம் தன் மனதின் ஆற்றாமைகளைக் கொட்டிக் கொண்டிருந்தார். 

‘’பிளான்ல எந்த மாற்றமும் பண்ணலையே?’’ என்று நான் கேட்டேன். 

’’ பில்டப் ஏரியா அதே தான். ஆனா பிளான் முழுக்க மாறிடிச்சு’’ என்றார். 

ராம் கிருஷ்ண ஹரி என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். 

செய் & செய்யாதே (நகைச்சுவைக் கட்டுரை)

ராஜாஜி அவர்களிடம் ஒருமுறை ஒரு ஆலோசனை கேட்கப்பட்டது. ‘’ஒரு விஷயத்தைச் செய்வதா வேண்டாமா என்று ஆழ்ந்த சஞ்சலம் ஏற்பட்டால் எவ்வாறு முடிவெடுப்பது?’’ என்பது கேள்வி. ராஜாஜி அதற்கு ஒரு பதில் சொன்னார். ‘’அந்த விஷயம் குறித்து கம்யூனிஸ்டுகளிடம் கேளுங்கள். அவர்கள் அதைச் செய்யக் கூடாது என்று சொன்னால் உடனே செய்யுங்கள். அவர்கள் அதைச் செய்ய வேண்டும் என்று சொன்னால் எந்நிலையிலும் செய்யாதீர்கள்.’’ கட்டுமானத் தொழிலில் தச்சர்கள், எலெக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், கம்பி வேலையாளர்கள் என பல பிரிவுகள் இருந்தாலும் தொழில்முறை உறவில் இவர்கள் எவருடனும் பெரிதாக எந்த உரசலோ மோதலோ நிகழாது. கொத்து வேலை நிகழ்கிறது என்றால் அங்கே இறுக்கமான சூழ்நிலையே நிலவும். அதற்கு ஒரு காரணம் உண்டு. 

கட்டுவேலை என்பது சிமெண்ட் கலவை கொண்டு செய்யப்படுவது. கலவை சிமெண்ட் மணல் தண்ணீர் மூன்றும் கலந்து உருவாக்கப்படுவது. கலவையைப் பயன்படுத்தி கட்டுவேலை செய்தால் அடுத்த ஒரு வாரம் அது முழுக்க தளும்ப தளும்ப தண்ணீரால் நனைக்கப்பட வேண்டும். சுவரின் வலிமை என்பது கலவையால் 15 சதவீதம் ; அதன் பின் ஒரு வாரம் நிகழும் கியூரிங்-ஆல் 85 சதவீதம். கொத்து வேலை செய்பவர்கள் சுவரை எழுப்பியதுடன் தம் வேலை முடிந்தது என்று இருப்பார்கள். அவர்களை கியூரிங் செய்ய வைக்க வேண்டும். கியூரிங் என்பது ஹோஸ் பைப்பால் சுவர் முழுதும் நனைவது போல தண்ணீர் பிடிப்பது தான். எனினும் அதைச் செய்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். 

கட்டுவேலை மற்றும் பூச்சுவேலை நடக்கும் போது பணியிடம் குடகுச் சாரல் போல நீர் மிகுந்து இருக்க வேண்டும் என்று நான் விரும்புவேன். பணியாளர்கள் அது சஹாரா பாலைவனம் போல் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நான் கடுமையாக எதிர்வினையாற்றி முழுமையான கியூரிங்-ஐ உறுதி செய்வேன். 

பணியிடத்தின் காவலர் தான் காலை 7 மணிக்கெல்லாம் கியூரிங் செய்பவர். கொத்து வேலை செய்பவர்கள் பணியிடம் வந்து வேலை துவங்க 9 மணி ஆகும். எனவே காவலர்தான் கியூரிங் செய்வார். தொழிலாளர்கள் அவரிடம் பொறியாளர் எப்போது வந்து கேட்டாலும் தண்ணீர் பிடித்து விட்டதாகக் கூறுங்கள் ஆனால் தண்ணீர் பிடிக்காதீர்கள் என்று சொல்லி வைப்பார்கள். ஆனால் நான் பணியிடத்துக்கு காலை எழுந்ததுமே சென்று விடுவேன். என் முன்னிலையில் முழுமையாக தண்ணீர் பிடிக்க சொல்லி விடுவேன். பணியாளர்கள் வந்து பார்த்தால் ஒரே தண்ணீராக இருக்கும். அதிருப்தி அடைந்து விடுவார்கள். காவலரிடம் நான் இல்லாத போது கடுமையாக எதிர்வினையாற்றுவார்கள்.  மாலை பணி முடிந்து பணியாளர்கள் வீட்டுக்கு சென்று விட்டு சொந்த வேலை காரணமாக பணியிடம் பக்கம் வந்ததாகவும் அப்போது பணியிடத்தில் தளவாடங்கள்  அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறதா என உறுதி செய்ய உள்ளே வந்ததாகவும் காவலர் அப்போது அங்கே இல்லை என்றும் சொல்வார்கள். அவ்வாறு சொன்னால் அந்த காவலர் சரியாக கியூரிங் செய்கிறார் என்று அர்த்தம். 

மேற்கூரை பூச்சு வேலை நடக்கும் போது பத்து அடி உயரத்தில் இருக்கும் கூரைப் பரப்பு கியூரிங் செய்யப்பட வேண்டும். அதற்கு அதிகமாக த்ண்ணீர் ஆகும். அது தரையில் தேங்கி நிற்கும். அதனால் தரைப்பரப்பை லேசாக நனைத்து விட்டு கூரையை கியூரிங் செய்யாமல் இருப்பார்கள். பணியிடம் வந்ததும் நான் கேட்கும் முதல் கேள்வி கியூரிங் செய்தீர்களா என்பதே. செய்து விட்டோம் என்று தரையைப் பார்ப்பார்கள். கூரையின் அடிப்பரப்பில் செய்திருந்தால் அவர்கள் கண்கள் மேல் நோக்கும். என் கண் முன்னால் மீண்டும் ஒருமுறை கியூரிங் செய்யுங்கள் என்பேன். 

பணியிடத்தில் என்னென்ன நிகழும் யார் என்ன சொல்வார்கள் என்பது நன்றாகத் தெரியும் என்பதால் இயல்பாக கடந்து சென்று விடுவோம். பாரதியின் கண்ணன் பாட்டில் ‘’கண்ணன் என் சேவகன்’’ என்ற பாடல் உள்ளது.  அதில் சில வரிகளை கீழே தந்துள்ளேன். 

---------   ---------------   ----------------   --------------------   -------
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; 

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;

சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;
எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;
''மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன் 

பாரதியார் காலத்திலேயே இப்படித்தான் இருந்திருக்கிறது என எண்ணிக் கொண்டேன். 

Monday 6 December 2021

மனம் இருந்தால்

தமிழ்நாட்டில் நான் ஒரு விஷயத்தைக் கவனித்தது உண்டு. தமிழ்நாட்டில் இன்றும் முக்கியமான தொழில் விவசாயம். விவசாயத்துக்கு அடிப்படையான நீர் மேலாண்மை கட்டுமானங்கள், கால்நடைகள் வளர்ப்பு, விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைத்தல் ஆகிய விஷயங்களைக் குறித்து பெரிய அளவில் பேச்சே எழாது. நீர் மேலாண்மை கட்டுமானங்களுக்கு அரசாங்கமோ அல்லது வங்கிகளோ அல்லது தனியாரோ கூட கடன் அளிக்க முடியும். ஆனால் அது குறித்து எந்த செயல்திட்டமும் முன்வைக்கப்படாது. கும்மிடிப்பூண்டியிலிருந்து  குளச்சல்  வரை பல்வேறு விதமான விவசாய நில அமைப்புகள் உள்ளன. அவற்றை விவசாயிகளுக்குப் பொருளியல் பலன்கள் அளிக்கும் விதத்தில் எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து தமிழ்நாட்டின் எந்த அரசுக்கும் கடந்த 54 ஆண்டுகளாக எந்த அக்கறையும் இல்லை. இவ்வாறு திட்டமிடப்பட்டால் பொருளியல் நிலை முன்னேறும் என்ற புரிதலும் விவசாயிகளிடம் இல்லை. 

தமிழ்நாட்டின் மக்கள் நலனில் திராவிடக் கட்சிகளுக்கு அக்கறை இருக்குமானால் அவர்கள் இங்கே தனிப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் பொருளியல் வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய விஷயங்கள் குறித்து யோசிப்பார்கள். அவ்வாறான ஒரு தனிப்பட்ட கவனத்தை நிச்சயம் செலுத்த முடியும். அதற்கான அமைப்பும் படிநிலைகளும் அரசாங்கத்திடம் உள்ளன. எனினும் அவ்வாறான ஒரு பார்வையே இங்கே எழாது. 

தமிழ்நாட்டு மக்களின் - ஒவ்வொரு விவசாயியின் பொருளியல் நிலை இப்போது இருப்பதைப் போலவே இருந்தால் மட்டுமே திராவிடக் கட்சிகளால் அரசியல் செய்ய முடியும். நெல்லை அரசாங்கம் விலைக்கு வாங்குகிறது. கோடிக்கணக்கான விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதால் அதற்கு நல்ல விலை கொடுக்க முடியாது. நூலிழை லாபத்தில் விவசாயம் நடக்கும். விவசாயி எப்போதும் அரசாங்கத்தை எதிர்பார்த்து பெற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருப்பான். 

இங்கே விவசாயிகள் விவசாயத்தை லாபகரமாக செய்ய வேண்டும் என்றால் கல்வி, சட்டம் - ஒழுங்கு, நீர் மேலாண்மை, கூட்டுறவு, நிதி ஆகிய துறைகளில் அடிப்படையான மாற்றங்கள் நிகழ வேண்டும். அவ்வாறு நிகழும் போது மட்டுமே விவசாயிகள் , விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் பயன் பெறுவார்கள். இப்போது செயலாகும் முறை விவசாயிக்கும் உகந்ததாக இல்லை. விவசாயத் தொழிலாளருக்கும் உகந்ததாக இல்லை. 

நம் நாடு சுதந்திரம் அடைந்த போது இயந்திரமயமாக்கலை மட்டுமே முழுமையாக நம்பிய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கொள்கை வகுத்தனர். இந்தியாவில் பாரம்பர்யமான லட்சக்கணக்கான செயல்முறைகள் உள்ளன. அவை பிராந்திய ரீதியில் - மாவட்ட அளவில் - கிராமங்கள் அளவில் என பயன் தரத் தக்கவையும் கூட. 

சோழர்கள் காலத்தில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்தனர். இன்று இருக்கும் இயந்திரங்களைக் கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் புதிதாக நான்கு குளங்களை வெட்ட முடியும். தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் 50,000 குளங்கள் உருவாக்கிட முடியும். அதில் எத்தனை லிட்டர் தண்ணீரை சேர்க்க முடியும் என்று யோசித்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கும். 

அவ்வளவு நிதி அரசாங்கத்திடம் கிடையாது என்பது பதில். தனியார் நிதி உதவி செய்து அந்த கிராம ஊராட்சியிடமிருந்து வருடத்துக்கு இவ்வளவு தொகை என குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வசூலித்துக் கொள்ள அனுமதிக்கலாம். செய்ய வேண்டும் என நினைத்தால் எண்ணற்ற வழிகள் உண்டு. 

Sunday 5 December 2021

மலை

யார்
கைவிட்டுச் சென்றது
உன்னை
இவ்வளவு
தனியாக
நின்று கொண்டிருக்கிறாய் 

Saturday 4 December 2021

ஏற்பாடுகள்


நாளை நானும் எனது நண்பர் ஒருவரும் தமிழகத்தின் மேற்கு மாவட்டம் ஒன்றினுக்குப் பயணமாகிறோம். காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்று விட்டு நாளை இரவு திரும்புவதாகத் திட்டம். 300ம் 300ம் 600 கி.மீ பயணம். 

இரண்டு நாட்களுக்கு முன்னால் நண்பர் கேட்டார். ‘’மோட் ஆஃப் டிரான்ஸ்போர்ட் என்ன?’’

‘’என்னோட கார் தான்’’

‘’உன்னோட காரா?’’

‘’ஆமாம்’’

‘’அவ்வளவு தூரம் போறோம். வண்டி கண்டிஷன் பாத்துக்க?’’

‘’என் வண்டி எப்பவுமே குட் கண்டிஷன் தான்’’ 

‘’டிரைவருக்கு சொல்லிடு’’ 

வாகன ஓட்டுனருக்கு ஃபோன் செய்தேன். 

‘’அண்ணன் வணக்கம். ஞாயித்துக்கிழமை உடுமலைப்பேட்டை போகணும் அண்ணன்.’’

‘’சார் ! அன்னைக்கும் அடுத்த நாளும் ஒரு கல்யாண டிரிப் இருக்கு’’ 

‘’அப்படியா ? சரி பாத்துக்கங்க.’’

‘’ஒரு நாள் ரெண்டு நாள் தள்ளி போலாமா சார்?’’

‘’வாய்ப்பு இல்லை அண்ணன். ஃபிரண்டு கூட வராரு. அவரு அன்னைக்கு தான் ஃபிரீ’’

‘’நான் வேற யாராவது ஒருத்தரை கல்யாணத்துக்கு அனுப்ப முடியுமான்னு பாக்கறன். பார்ட்டிகிட்ட பேசிட்டு உங்களுக்கு சொல்றன். வண்டி எந்த வண்டி சார்?’’

‘’நம்ம வண்டி தான்’’

‘’நம்ம வண்டியா ?’’ அவர் கேள்வியில் அதிர்ச்சி இருந்ததாக எனக்குத் தோன்றியது பிரமையாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன். 

கொஞ்ச நேரம் கழித்து ஃபோன் செய்தார். ‘’ஞாயித்துக் கிழமை போவோம் சார்’’

‘’சரி நானும் வண்டியை எடுத்து வச்சுடறன்’’

இரண்டு நாட்களாக வண்டியை வாட்டர் வாஷ் செய்ய வேண்டும் என எண்ணினேன். ஒரு நாள் நண்பர்களைச் சந்திக்க புதுச்சேரி சென்று விட்டேன். காலை புறப்பட்டுச் சென்று நள்ளிரவு திரும்பினேன். மறுநாள் முதல் நாள் அலுப்பில் ஓய்வெடுத்து விட்டேன். இன்று ஏதாவது செய்தே ஆக வேண்டும். 

காலை வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். பெட்ரோல் பங்க்-கில் பெட்ரோல் நிரப்பி விட்டு அதன் அருகில் இருக்கும் வாட்டர் வாஷ் சென்டருக்குச் சென்றேன். அது மூடி இருந்தது. நாளைதான் திறப்பார்கள் என்று பக்கத்துக் கடைக்காரர் சொன்னார். வழக்கமாக செல்லும் இடத்துக்கு சென்றேன். அது அங்கிருந்து மூன்று கி.மீ தூரம். வண்டியை விட்டேன். என் நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து என்னை வீட்டில் டிராப் செய்ய சொன்னேன். ஒரு சிறு லௌகிக வேலை எத்தனை உள் மடிப்புகளைக் கொண்டதாக இருக்கிறது என எண்ணிக் கொண்டேன். இவ்வகையான பணிகளை நான் மிக மெதுவாக செய்வேன். இயல்பாகவே அவை மெதுவாகத்தான் நடக்கும்.   என்னுடைய மெத்தனமும் சேர்ந்து விட்டால் சொல்லவே வேண்டாம். நண்பர் என்னை அழைத்துச் சென்று வீட்டில் விட்டார். 

இரண்டு மணி நேரம் சென்ற பின் நண்பர் என்னை மீண்டும் வாட்டர் வாஷ் செண்டரில் விட்டார். வண்டி தயாராக இருந்தது. 

‘’சார் ! பின் சீட் முழுக்க ஒரே செம்மண் கரை . சீட் கவரை கழட்டி துவைச்சு வச்சிருக்கோம். ரெண்டு நாள் வெயில்ல காயட்டும். அப்புறமா மாட்டிக்கலாம். எப்படி சார் இவ்வளவு செம்மண்?’’

‘’கிராமங்களுக்கு மரக்கன்னுங்க எடுத்துட்டுப் போவேன். அதான்’’

‘’பின் சீட்டை வேணா கழட்டிட்டு முழுக்க அதுக்கே யூஸ் பண்ணுங்க சார்’’

‘’திங்க் பண்றன்’’

இரவு டிரைவருக்கு ஃபோன் செய்தேன். 

‘’சார் ! திருச்சிலேந்து வந்துகிட்டு இருக்கன். நைட் 11 மணிக்கு ஊருக்கு வந்துடுவன். ‘’

‘’நான் காலைல 4 மணிக்கு வணக்கம்னு ஒரு எஸ்.எம்.எஸ் போடறன். நீங்களும் ரிப்ளை  எஸ் எம் எஸ் அனுப்புங்க. எழுந்துட்டீங்கன்னு புரிஞ்சுகிறன்’’

‘’ரிங் பண்ணிடுங்க சார் . அதான் கரெக்டா இருக்கும். ’’

ஃபோனை வைத்து விட்டு ‘’ராம் கிருஷ்ண ஹரி’’ என்றேன். 

Thursday 2 December 2021

பிரயத்தனம் (நகைச்சுவைக் கட்டுரை)

கல்லூரி முடித்த ஆண்டில் நான் நகரின் மையப்பகுதியில் இருந்த இடம் ஒன்றை வாங்க விரும்பினேன். அது 2 ஏக்கர் பரப்புடையது. மனைத்தரகர் ஒருவர் அந்த இடத்தை எனக்குக் காட்டினார். பலர் அதனை வாங்க விரும்பினார்கள். அந்த இடத்தின் உரிமையாளர் ஒருவர். அந்த இடத்தை வாடகைக்கு வைத்திருந்தவர் இன்னொருவர். அந்த இடம் வாடகைதாரரிடம் 50 ஆண்டுகளாக இருக்கிறது எனினும் அவர் உரிமையாளருக்கு 40 ஆண்டுகளாக எந்த வாடகையும் தருவதில்லை.  உரிமையாளர் அந்த இடத்தை விற்பனை செய்வதற்கும் அதில் வாடகைக்குக் குடியிருப்பவரை காலி செய்து ஒப்படைப்பதற்கும் எந்த சம்பந்தமும் தனக்கு இல்லை ; மனையை வாங்குபவர் காலி செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டார். வாடகைக்கு குடியிருப்பவர் பல வருடங்களாக இருக்கிறார். அவர் கணிசமாக ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டே காலி செய்வார் என்று தோன்றியது.  எனக்கு இடத்தைக் காண்பித்தவர் வாடகைதாரருக்கு வேண்டியவர் என்பதால் உரிமையாளரிடம் ஒரு சிறு தொகை அட்வான்ஸாக வழங்கப்பட்ட பின்னர் வாடகைதாரரைக் காலி செய்து விடலாம் என்று சொன்னார். 

அந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்த மனைகள் சதுர அடி ரூ.200 என்ற அளவில் விலை போயின. அந்த விபரத்தை நானும் மனைத்தரகரும் பலரிடம் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டோம். வாடகைதாரர் பத்து இலட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு இடத்தை காலி செய்து கொடுப்பதாக ஒத்துக் கொண்டிருப்பதாக தரகர் சொன்னார். அந்த இடத்தின் உரிமையாளரிடம் தரகர் அழைத்துச் சென்றார்.

‘’இவங்க தான் இடத்தை வாங்க வந்திருக்காங்க. பேமெண்ட் ஒரே பேமெண்ட்டா கொடுத்திடறன்னு சொல்றாங்க. நம்மள பத்தி உங்களுக்குத் தெரியும். ஜெனூனா இருக்கறவங்களோட தான் நான் பிசினஸ் செய்வேன். இடம் வேணும்னு பிரியப்பட்டு வந்திருக்காங்க. பாத்து முடிச்சுக்கங்க’’ என்றார் தரகர். 

உரிமையாளர் ‘’இடம் ரெண்டு ஏக்கர் 88,000 சதுர அடி. சதுர அடி 100 ரூபா’’ என்றார். 

நான் உடனே சரி என்றேன். உரிமையாளரும் தரகரும் அதிர்ச்சி அடைந்தனர். 

தரகர் என்னை உரிமையாளரின் வீட்டு வாசலுக்கு அழைத்து வந்தார். ‘’என்ன தம்பி ! சட்டுன்னு சரின்னு சொல்லிட்டீங்க. ஏதாவது பேரம் பேச வேண்டாமா?’’

‘’நாம 100 ரூபாய்க்கு வாங்கினா நமக்கு கட்டுப்படி ஆகும்னு தானே கணக்கு பண்ணோம். அந்த இடத்தைக் காலி செய்ய பத்து லட்சம் ஆகும். ஒரு சதுரடிக்கு கணக்கு பண்ணா தோராயமா 11 ரூபா. 100ம் 11ம் 111. அப்ரூவல் வாங்க கொஞ்சம் இடம் விடணும். அத அடக்கத்துல சேத்தோம்னா 140 ரூபா. நாம சதுர அடி 225க்கு சர்வ சாதாரணமா கொடுக்கலாம்.’’

‘’இல்லை தம்பி ! அவங்க சொல்ற விலையை விட கொஞ்சமாவது கொறச்சு கேக்கணும். அதானே வழக்கம்.’’

‘’பரவாயில்லை இந்த விலை நமக்கு கட்டுபடியாகும்’’

உரிமையாளரிடம் வந்தோம். 

‘’ஒரே பேமெண்ட்டில் அமௌண்ட் கொடுத்து விடுகிறேன். எனக்கு இடத்தோட டாகுமெண்ட்ஸ் ஜெராக்ஸ் வேண்டும்.’’

‘’டாகுமெண்ட்ஸ் என்னோட பிரதர் கிட்ட இருக்கு. அவன் அடுத்த வாரம் ஊருக்கு வரான். வரும் போது கொண்டு வரச் சொல்றேன்.’’ 

‘’தம்பி ! டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துடுவோமா. பேசி முடிவானது. அட்வான்ஸ் கொடுத்துட்டா உறுதியா இருக்கும்’’

‘’டாகுமெண்ட் வரட்டும் அண்ணன். லீகல் ஒப்பீனியன் பாத்துட்டு தந்துடுவோம்’’

வீட்டுக்கு வந்தேன். நண்பர்கள் ஐந்து பேருக்கு ஃபோன் செய்தேன். ஐந்து நண்பர்களிடம் இது நல்ல முதலீட்டு வாய்ப்பு ; முதலீடு செய்யுங்கள் என்று சொன்னேன்.  ஐந்து நண்பர்களுமே இதற்கு ஒப்புக் கொண்டனர். ஐவருமே ஒப்புக் கொண்டது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.  

டாகுமெண்ட்ஸ் ஜெராக்ஸ் ஒரு வாரத்தில் கைக்கு வந்தது. வில்லங்கம் ஏதும் இல்லை. 80 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் சுயார்ஜிதமாக வாங்கிய சொத்து. அவருடைய பேரன் பேத்திகள் மற்றும் அவர்களுடைய வாரிசுகளுக்கென உயில் எழுதி வைத்துள்ளார். மொத்தம் 50 பேர் அதன் உரிமையாளர்கள். 

உரிமையாளர் என்னிடம் ,’’தம்பி ! எங்க வீட்டு மேரேஜ் ஒன்னு அடுத்த வாரம் மெட்ராஸ்ல நடக்குது. இந்த 50 பேரும் அங்க வருவாங்க. நாம அங்க அவங்க கிட்ட விஷயத்தைச் சொல்வோம். ‘’ என்றார். 

திருமணத் தேதிக்கு முதல் நாள் சென்னை தி. நகரில் ஒரு ஹோட்டலில் ஒரு மினி ஹாலை வாடகைக்கு எடுத்திருந்தார். அவர் சொன்ன நேரத்துக்கு நானும் தரகரும் சென்றிருந்தோம். அங்கே 48 பேர் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் சம்மதம். இரண்டு பேர் மட்டும் வரவில்லை. இந்த 48 பேரிலிருந்து சிலர் அந்த இரண்டு பேரின் வீட்டுக்குச் சென்று பேசினார்கள். குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் அந்த இரண்டு பேருக்கும் மனஸ்தாபம். அவர்கள் இருவரும் சம்மதிக்கவேயில்லை. 

நாங்கள் விலை பேசிய தினத்தில் அந்த சொத்துக்கு உரிமையுடையவர்கள் அனைவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். இன்னும் சில மாதங்களில் சிலருக்கு திருமணம் நிகழ இருந்தது. அவ்வாறு நிகழ்ந்து அவர்களுக்கு வாரிசு உண்டானால் சொத்தின் ஒரு பகுதி ‘’மைனர் சொத்து’’ ஆகி விடும். எனவே அந்த இரண்டு பேருக்கும் கிடைக்கும் பங்குக்கு மேலாகவே தொகை தருகிறோம் என்று அனைவரும் சொன்னார்கள். அந்த இருவரும் கேட்கவில்லை.  காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அந்த ஹோட்டலில் இருந்தோம். எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதால் ஊருக்குப் புறப்பட்டோம். 

தரகர் வருத்தப்பட்டார்.

‘’பரவாயில்ல அண்ணன்’’ என்று அவரிடம் சொன்னேன். 

18 வருஷம் ஆகி விட்டது. அந்த சொத்து இன்னும் வாடகைதாரரிடம் தான் இருக்கிறது. உரிமையாளர் எண்ணிக்கை 50லிருந்து 60 கூட ஆகியிருக்கக் கூடும்!

Wednesday 1 December 2021

ஓவியம் - தேடல்கள், புரிதல்கள் - 1

நவம்பர் 14 அன்று சென்னையில் நடைபெற்ற எஸ். ராமகிருஷ்ணன் படைப்புகள் குறித்த கருத்தரங்கில் உரையாற்றியவர்களுக்கு நிகழ்ச்சியின் இறுதியில் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் புத்தகங்களை நினைவுப்பரிசாக அளித்தார். ஓவியம் - தேடல்கள், புரிதல்கள்-1 என்ற புத்தகம் என்னிடம் வந்தது. இந்நூலின் ஆசிரியர் ஓவியரான திரு. கணபதி சுப்பிரமணியம். மறுநாளே நூலை வாசிக்கத் தொடங்கினேன். ஆர்வமூட்டக்கூடிய நூல்.   

எல்லாக் கலைகளும் ஒன்றே என்ற எண்ணத்தை இந்த நூல் உருவாக்கியது. ஓர் ஓவியம் இசையாகக் கேட்கப்பட முடியும்; ஒரு கவிதை ஒரு சிற்பமாக ஆக முடியும் என்ற சாத்தியத்தை வாசக மனத்தில் தோன்றச் செய்கிறது. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்வாலை, செத்தவரை ஆகிய ஊர்களில் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்கள் தீட்டிய குகை ஓவியங்களைக் கண்டிருக்கிறேன். 

மனிதனைக் குறித்தும் மனித வாழ்க்கையைக் குறித்தும் மானுட அகம் குறித்தும் பல்வேறு விதமான வினாக்களையும் வியப்புகளையும் உருவாக்கக் கூடியவையாக அவை உள்ளன. கலை என்னும் ஒன்று உருவாவதற்கு முன்பே கலை உணர்வு மானுடனுக்கு உருவாகி விட்டது என்பதை உணர்த்தக் கூடிய  ஓவியங்கள் அவை. 




மானுட வரலாற்றில் ஓவியம் என்ற நுண்கலை வளர்ந்து வந்திருக்கும் பாதையை இந்த நூலில் மிக அழகாக அடையாளம் காட்டுகிறார் நூலாசிரியர். 
ஆசிரியரின் மொழி மிக நேர்த்தியானது. சரளமானது. எழுத்தின் சொல்லின் உச்சபட்ச சாத்தியங்களைத் தன்னகத்தே கொண்டது. நூலை மிகவும் கலாபூர்வமானதாக உருவாக்கியுள்ளார் ஆசிரியர். 

ஒவ்வொரு அத்தியாத்தையும் உலகின் மகத்தான கலை ஆளுமைகளின் மேற்கோளுடன் துவக்குகிறார். உலகின் ஆகச் சிறந்த ஓவியங்கள் சிறப்பாக அச்சிடப்பட்டுள்ளன. 

நுண்கலைகள் குறித்த ஆர்வம் மிக்க எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். 

நூல் : ஓவியம் - தேடல்கள், புரிதல்கள் -1 ஆசிரியர் : கணபதி சுப்பிரமணியம் பதிப்பகம் : யாவரும் பதிப்பகம்,  214, மூன்றாவது பிரதான சாலை, புவனேஸ்வரி நகர்,  வேளச்சேரி, சென்னை- 42 . விலை : ரூ.350