Thursday 30 November 2023

பயண உரையாடல் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் நேற்று ஒரு நீண்ட தூரப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். மொத்த பயண தூரத்தில் மூன்றில் ஒரு பங்கு ரயில் பயணம் ; மூன்றில் இரு பங்கு பேருந்து பயணம். அதிகாலையிலேயே கிளம்ப வேண்டும்.  அலாரம் வைத்திருந்தார். இருப்பினும் அலாரம் அடிப்பதற்கு அரைமணி முன்னரே விழிப்பு வந்து விட்டது. இரவே வென்னீருக்காக ஹீட்டர் போட்டிருந்தார். எனவே கொதிநீர் தயாராக இருந்தது. குளித்துத் தயாரானார். நேரமிருந்ததால் பைக்கை எடுக்காமல் நடக்கத் தொடங்கினார். 

வெளியூர் சென்றால் தனது இரு சக்கர வாகனத்தை டூ-வீலர் ஸ்டேண்டில் விட்டு விட்டு செல்ல மாட்டார். வீட்டிலேயே விட்டு விடுவார். அவர் ஊரில் இல்லையென்றாலும் வீட்டிலிருப்பவர்கள் அடிக்கடி அவரது டூ-வீலரைப் பார்க்க நேர்வது அவர் இருப்பது போன்ற எண்ணத்தை உருவாக்கும் என்பதால் இந்த நடவடிக்கை. 

மழைக்காலத்தின் காலை நேரம். காற்று நீர்மை கொண்டு நீராவியாலும் மென்சிறு பனியாலும் நிறைந்திருந்தது. பேருந்து சீராக நகர்ந்து கொண்டிருக்கிறது. அமைப்பாளர் கையில் ஒரு வார பத்திரிக்கை இருந்தது. அதனை முன்னட்டை தொடங்கி பின்னட்டை வரை வாசித்து முடித்தார். அவர் வாசித்து முடித்ததும் பின்சீட்டில் அமர்ந்திருந்தவர் அதனை வாசிக்கக் கேட்டார். அவரிடம் அளித்து விட்டு தன் பக்கத்தில் அமர்ந்திருப்பது யார் என்று கவனித்தார். ஒரு நடுவயது மனிதர் அமர்ந்திருந்தார். ஜன்னல் ஓர இருக்கையில் அமைப்பாளர். அவருக்கு அருகில் நடுவயது மனிதர். அவர் கையில் வித்யாசமான கயிறு ஒன்றைக் கட்டியிருதார். 

அமைப்பாளர் அவரிடம் ‘’ அண்ணன் ! இந்த கயிறு எந்த கோவிலுக்கு கட்டியிருக்கு ?’’ என்று உரையாடலைத் தொடங்கினார். 

‘’எங்க குலதெய்வத்துக்கு’’

‘’உங்க குலதெய்வம் எந்த சாமி அண்ணன்?’’

‘’முனீஸ்வரன்’’ என்றார் நடுவயது ஆசாமி. 

அமைப்பாளர் ‘’ராம் கிருஷ்ண ஹரி’’ என்று சொன்னார். 

நடுவயது ஆசாமியின் மகள் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். அவரை அழைத்து வர ஆசாமி செல்கிறார். கல்லூரியில் அழைத்துக் கொண்டு உடனே பஸ் பிடித்து ஊர் திரும்ப வேண்டும். செல்லவும் திரும்பி வரவும் நாள் பொழுது முழுதும் ஆகி விடும். 

சாலையின் இரு பக்கங்களிலும் விவசாயம் செய்யப்படாத நிலப்பரப்பு விரிந்து கிடந்தது. அதனை இருவரும் பார்த்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்கள். 

அமைப்பாளர் ஆரம்பித்தார். ‘’அண்ணன் ! இஸ்ரேல் ஒரு பாலைவன தேசம் . ஆனா உலகத்துல உள்ள எல்லா விவசாயமும் எல்லா தொழிலும் அங்க நடக்குது.’’

ஆசாமி ’’எல்லா விவசாயமுமா?’’ என்றார். 

’’இஸ்ரேலைச் சுத்தி இருக்கற எட்டு நாடும் அவங்களுக்கு பகை நாடு. இருந்தாலும் அவங்களால கனவுல கூட நினைச்சு பாக்க முடியாத காரியங்களை இஸ்ரேல் சாதிச்சிருக்கு. உணவாப் பயன்படற பல காய்கறிகளை பழங்களை இஸ்ரேல் ஏற்றுமதி செய்யறாங்க’’

ஆசாமி ‘’என்ன ஏற்றுமதியா?’’ என்றார். 

’’ஆமாம் அண்ணன் . இஸ்ரேல பத்தி எப்ப எந்த பேச்சு எழுந்தாலும் அந்த பேச்சுல இஸ்ரேலைப் பத்தி ஒரு ஆச்சர்யம் இல்லாம இருக்காது. விவசாயம் மட்டும் இல்லை. தொழில்லயும் அவங்க ஜெயிண்ட்ஸ். அந்த நாடு பிரஜைகளை டிரெயின் பண்ணுது. எட்டு நாடு பகை நாடுன்னா அவங்க எத்தனை மிலிட்டரி சோல்ஜர்ஸ் ராணுவத்துல வச்சிருக்கணும். ஆனா குறைவான சோல்ஜர்ஸ்தான். அங்க எல்லா ஸ்கூல்லயும் ஸ்டூடண்ட்ஸ்க்கு ராணுவ பயிற்சி உண்டு. ஸ்கூல் படிப்பு முடிச்சவங்க கொஞ்ச நாள் கட்டாயமா ராணுவத்துல வேலை செய்யணும். எட்டு எதிரி நாடுகள்ட்ட இருந்தும் எப்ப வேணாலும் தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கும்ங்கறதால ராணுவ பயிற்சி கொடுக்கப்பட்ட பொதுமக்கள் போர்க்களத்துக்கு போக வேண்டியிருக்கும். இப்ப பயங்கரவாதிகளை எதிர்த்து நடக்கற யுத்தத்துல இஸ்ரேல் பிரதமரோட மகன் தரைப்படை வீரனா யுத்த களத்துல சண்டை போட போயிருக்கான் ‘’

ஆசாமி ‘’இஸ்ரேல் பிரதமர் மகனா?’’ என்று ஆச்சர்யப்பட்டார். 

‘’அவங்களோட திங்கிங் செயல்பாடுகள் எல்லாமே ரொம்ப வித்யாசமானது. உலகத்துல எங்கங்க என்னென்ன தேவை இருக்கோ அந்த தேவையை உற்பத்திப் பொருளா சர்வீஸா செஞ்சு அவங்க எகானமியை ரைஸ் பண்ணுவாங்க. இஸ்ரேல்ட்ட கத்துக்க எல்லா நாடுகளுக்கும் விஷயம் இருக்கு அண்ணன்’’ என்றார் அமைப்பாளர். மேலும் மேலும் என அந்த நாட்டைப் பற்றி பல விஷயங்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார் அமைப்பாளர்.

‘’இஸ்ரேல் பத்திய இந்த விஷயமெல்லாம் நீங்க சொல்லித்தான் கேள்விப்படறன் ‘’என்றார் ஆசாமி. 

ஆசாமி அமைப்பாளர் குறித்து விசாரித்தார். 

‘’சொந்தமா ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன் வச்சிருக்கண்ணன். ஒரு இடத்தை வாங்கி அதுல கட்டிடம் கட்டி சேல் பண்ணிடுவன். அதான் என்னோட பேடர்ண். இது இல்லாம ரியல் எஸ்டேட்டும் உண்டு.’’ 

ஆசாமிக்கு அமைப்பாளர் மீது பெரும் பிரியம் உருவாகி விட்டது. ஆசாமியிடம் அமைப்பாளர் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் குறித்து விரிவாகச் சொன்னார். 

‘’நம்ம மக்களுக்கு நாம நிறைய வாய்ப்புகளை உருவாக்கித் தரணும் அண்ணன். நான் கிராம மக்களை நேரடியா சந்திச்சு அவங்க வாழ்க்கையை புரிஞ்சுக்கறவன். அவங்க உழைக்கத் தயங்கறவங்க இல்லை. அவங்களால கடுமையா உழைக்க முடியும். நம்ம நாட்டுல அப்படி கடுமையான உழைப்பாளிகளா இருந்து பெரும் செல்வந்தர்கள் ஆன சமூகங்கள் இருக்கு. இந்த உலகம் ரொம்ப பெருசு அண்ணன். சில நாடுகள்கிட்ட செல்வம் இருக்கும் .ஆனா அவங்களோட கிளைமேட் அவங்களுக்கு தேவைப்படுற பொருளை உற்பத்தி செஞ்சுக்க முடியாது. உலகத்தோட தேவையை நாம பூர்த்தி செய்யணும் அண்ணன். அப்படி செய்யணும்னு நினைச்சா அதுக்கான முயற்சிகளைப் பண்ணா நம்ம நாட்டுல இருக்கற வறுமையை முழுக்க நீக்கிடலாம் அண்ணன்.’’

ஆசாமி அமைப்பாளரிடம் ‘’ வறுமையை நீக்க முடியுமா?’’ என்றார். 

‘’நம்ம நாட்ல இருந்து மட்டும் இல்ல உலக அளவில கூட வறுமையை நீக்கிட முடியும். நாம நம்பணும். வறுமை சிலரோட சுயநலத்துக்காக செயற்கையா உருவாக்கப்பட்ட ஒன்னு அது இயற்கையானது இல்ல’’ என்றார் அமைப்பாளர். 

அமைப்பாளர் ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக ஒரு சில விவசாயிகளின் வயல்களில் முழுமையாக தேக்கு நடப்பட்டு அவை நன்றாக வளர்ந்திருப்பதை சொன்னார். 

‘’என்னோட அண்ணன் ஊர்ல எங்க வயல்ல 2000 தேக்கு கன்னு பத்து வருஷம் முன்னாடி நட்டார். இப்ப அந்த மரமெல்லாம் நல்லா வளர்ந்திருக்கு. பத்து ஏக்கர்ல ஏழு ஏக்கர் தேக்கு. 3 ஏக்கர்ல நெல் விவசாயம். இப்பவே தேக்கு நல்லா பருத்து இருக்கு. இன்னும் 5 வருஷம் போனதும் கட் பண்ணலாம்னு அண்ணன் பிளான் பண்ணியிருக்கார். குறைஞ்சது இருபது கோடி ரூபாய்க்கு அந்த மரங்கள் விலை போகும். அண்ணன் ஃபீல்டோட ஃபோட்டோ , அண்ணணோட பேட்டி எல்லாம் தினத்தந்தி, தினமலர்ல வந்திருக்கு.’’ என்றார் ஆசாமி. 

அமைப்பாளருக்கு பெரும் சந்தோஷம். தனது சந்தோஷத்தை ஆசாமியிடம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். 

ஆசாமி அமைப்பாளரிடம் ‘’ உங்க கிட்ட பேசுனதுல நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டன். உங்க முயற்சிக்கு விவசாயிகள் நிச்சயம் சப்போர்ட் பண்ணுவாங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்’’ என்றார். 

பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் ஆசாமியும் அமைப்பாளரும் பல வருட நண்பர்கள் என்றே எண்ணியிருப்பார்கள். பேருந்து புறப்பட்டதிலிருந்து சேருமிடம் அடைந்தது வரை இருவரும் உற்சாகமாக பேசிக் கொண்டு வந்ததைப் பார்த்தால் அந்த பேருந்து பயணத்தில் சந்தித்துக் கொண்டவர்கள் என எவராலும் சொல்லி விட முடியாது.   

தஞ்சை தேக்கு வயல் - ஒரு கடிதம்

 
அன்புள்ள அண்ணா,

இத்துடன் நமது தேக்கு வயலில் இன்று எடுத்த 16 புகைப்படங்களை இணைத்துள்ளேன். இப்போது மரங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. மழைக்காலம் என்பது போதுமான தண்ணீர் கிடைப்பது காரணமாக இருக்கலாம். செவ்வாய் வெள்ளி என வாரத்துக்கு இரு தினங்கள் வீதம் ஆண்டு முழுதும் தேக்குக்கு நீர் ஊற்ற வேண்டும் என திரும்பத் திரும்ப நீங்கள் வலியுறுத்தி கூறுவீர்கள் என்பதை இப்போது நினைத்துக் கொள்கிறேன். 

நம் வயலில் தேக்கு இப்போது நன்றாக இருக்கிறது. மஹாகனியும் நன்றாக இருக்கிறது. 

அன்புடன்,

பெரியண்ணன்

கோயில் காக்கப்பட்டது - கடிதம்

 அன்பு பிரபு


வினைத்திட்பம் கொண்டொருவன் மக்கள் நலனுக்காக அரசு இயந்திரத்தின் முன் நின்றால் நிச்சயம் அது வழிவகை செய்தே தீரும்.  அறமென நம்பும் ஒன்றிற்காக நீங்கள் செயலில் காட்டும் உறுதியும் அதற்குண்டான தொடர் ஈடுபாடும் மிகுந்த நிறைவளிக்கிறது.  எண்ணியவற்றை எண்ணியபடியே அடைவீர்கள்.  நீங்கள் மேற்கொள்ளும் மக்கள் நலப்பணி யாவிலும் தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறுவதாகுக. 

அன்புடன்,

மணிமாறன் 
புதுச்சேரி

Monday 27 November 2023

பனைத்தீ

திருஇந்தளூர் பரிமள ரங்கநாத சுவாமி ஆலய சன்னிதித் தெருவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒரு அம்சமாக பனைத்தீ எழுப்பினார்கள். பனையோலைகள் அடுக்கப்பட்டிருந்தது. சிறுவர்கள் உற்சாகமாகக் குழுமியிருந்தனர். நேரம் நெருங்க நெருங்க பெண்களும் குழந்தைகளும் திரண்டனர். அக்கினிக் குஞ்சொன்று அடுக்கப்பட்ட  பனந்தாள்களின் அடியில் வைக்கப்பட்டது. சில கணங்களில் எழுந்தது செந்தீ. மண்ணில் எழுந்து விண்ணைத் தொடும் வல்லமை தன் பேருருவில் சுடர் விட்டது. தீ ஒரு வசீகரம். அந்த வசீகரத்தை நோக்கிக் கொண்டிருந்தது திரள். உருவாகி நிலைபெற்று திருநீறானது தீ. 

 

Sunday 26 November 2023

நம்பிக்கை விண்மீன்

இங்கே மாவட்ட நிர்வாகத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டேன். அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. மின்னணுத் தகவல் தொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்ற பின் உலகின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றனுக்கு கல்லூரியின் இறுதி ஆண்டு படிக்கையிலேயே பணி நியமனம் பெற்றிருக்கிறார். உச்சபட்சமான ஊதியம். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் என ஏழு ஆண்டுகள் அந்நிறுவனத்தில் பணி புரிந்திருக்கிறார். ஏழு ஆண்டுகள் ஊதியமாகக் கிடைத்த பெருஞ்செல்வம் கையில் இருக்கிறது ; மேலும் மேலும் நிறுவனத்தில் பதவி உயர்வு அளிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்னும் நிலையில் இத்தனை இருந்தும் மனம் உணரும் ஒரு போதாமை அவரை மாற்றுப்பணி குறித்து சிந்திக்கச் செய்திருக்கிறது. தனது தகவல் தொழில்நுட்ப பணியை ராஜினாமா செய்து விட்டு குரூப் -1 தேர்வுக்கு தயார் செய்ய முனைந்திருக்கிறார். புத்தகம் தேர்வு பரீட்சை ஆகியவை கல்லூரி இறுதி ஆண்டு இறுதி செமஸ்டருக்குப் பின் கிரமமாகக் கையில் எடுக்கக்கூட இல்லை என்னும் நிலையில் துவ்க்க நிலைத் தேர்வு , பிரதானத் தேர்வு ஆகியவற்றுக்குத் தயார் செய்யத் துவங்குகிறார். தான் எடுத்த முடிவு சரிதானா என்ற ஐயமும் குழப்பமும் அவ்வப்போது ஏற்பட்டது எனக் கூறும் அவர் தன் மன உறுதியால் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு பரீட்சைக்கான தயாரிப்பில் மட்டும் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார். துவக்க நிலைத் தேர்வில் வெற்றி பெறுகிறார். பிரதானத் தேர்விலும் வெற்றி. நேர்காணலிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார். தேர்வு முடிவுகள் வருகின்றன. குரூப் - 1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக அரசில் பணி நியமனம் ஆகிறார்.   

தொழில்நுட்ப நிறுவனப் பணியில் சக ஊழியர்கள் அனைவரும் பெருந்திறன் கொண்டவர்கள். தனக்கு உகந்த மிக உகந்த நபர்களே தேவை என்பதனால் நிறுவனத்தின் பல கட்ட தேர்வுகளுக்குப் பின்னால் வந்து சேர்ந்தவர்கள். வளர்ந்து கொண்டேயிருக்கும் துறை குறித்த அறிவை ஒவ்வொரு நாளும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர்கள். இப்படியான பணிச்சூழலில் இருந்து விட்டு மாநில சர்க்கார் பணிக்கு வருவது என்பது மலைக்கும் மடுவுக்குமான தூரம் கொண்டது. மாநில சர்க்கார் பணிகள் என்றால் ஒரு நாளில் நடக்க வேண்டிய பணி என்பது தொண்ணூறு நாள் ஆனாலும் நடக்காது என்னும் தன்மை கொண்டது. பொதுமக்களுக்கு மாநில சர்க்கார் அலுவலகத்துக்கு வருவது என்றாலே தயக்கமும் அச்சமும் மட்டுமே இருக்கிறது. 

தொழில்நுட்ப நிறுவனப் பணியை ராஜினாமா செய்து விட்டு மாநில சர்க்கார் பணிக்கு வருவதற்கு பெரும் மனத்தெளிவும் மனத்திடனும் மன உறுதியும் தேவை. அந்த தெளிவுடன் திடனுடன் உறுதியுடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரி இளைஞர்களுக்கு ‘’ நம்பிக்கை விண்மீன்’’ எனத் திகழ்பவர். 

நான் எப்போதுமே சர்க்கார் மீது நம்பிக்கை வைப்பவன். சர்க்கார் எந்திரம் சீராக இயங்கினால் பொதுமக்கள் பயன் அடைவார்கள் என்பது நிதர்சனம். ஜனநாயக அமைப்பில் சாமானியர்களே மிகப் பெரும்பான்மையான பொதுமக்கள். ‘’சட்டத்தின் ஆட்சி’’ என்பதே ஜனநாயகத்தின் உயர்ந்த தன்மை. 

பல விஷயங்களுக்காக அரசு ஊழியர்கள் மீது பல்வேறு விதமான புகார்களைப் பதிவு செய்திருக்கிறேன். நிகழும் தவறுகளை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குத் தொடர்ச்சியாகக் கொண்டு சென்றிருக்கிறேன். ஒரு குடிமகனாக அது என் கடமை. என் கடமையையே நான் செய்கிறேன். அதை எப்போதும் செய்வேன். 

மாநில சர்க்கார் பணியை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கிறார் என்பதைக் காண முடிகிறது. இத்தகைய மனிதர்கள் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறார்கள். நல்விஷயமாகும் அது.  

மூர்க்கர்களும் எளிய மக்களும்

 தமிழில் ஒரு பழமொழி  உண்டு. ‘’மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’’ என்று. 

மூர்க்கத்தனம் என்பது மனிதர்கள் உருவான காலத்தில் அவர்களிடம் இருந்த குணம். பின்னர் பல்லாயிரம் ஆண்டுகளில் அந்த குணத்தை மட்டுப்படுத்தி மட்டுப்படுத்தி வந்திருக்கின்றனர். எனினும் மனித உடலில் மனித மூளையில் இன்னும் மிகச் சிறு அளவில் அது இருக்கவே செய்கிறது. முன்னர் அது சக மனிதனைத் தாக்கி கொன்று அதில் மகிழ்ச்சி கொள்வதாக இருந்தது. பின்னர் தன்னைக் கண்டு தன் மூர்க்கத்தனம் கண்டு பிற மனிதர்கள் கொள்ளும் அச்சத்தால் மகிழ்ச்சி கொள்வதாக இருந்தது. இவ்வாறான தன்மை கொண்ட மனிதர்கள் சமூகங்கள் உருவாகி வந்த போது தண்டனைகளால் கட்டுப்படுத்தப்பட்டார்கள். மூர்க்கத்தனத்தின் வரையறையும் காலத்துக்குத் தகுந்தாற் போல மாறிக் கொண்டிருக்கிறது.  

ஆதிமனிதனிடம் சக மனிதனைத் தாக்கி மகிழும் இயல்பே மூர்க்கம் என இருந்தது. இப்போது உள்ள மூர்க்கர்கள் பிறரை எந்தெந்த விதத்தில் எல்லாம் துன்புறுத்த இயலுமோ அந்தந்த விதத்தில் எல்லாம் துன்புறுத்துகிறார்கள். அவ்வாறான செயலில் ஈடுபடும் போது அவர்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறார்கள். பொதுவாக மூர்க்கர்களுக்கு சிந்திக்கும் திறன் மட்டு என நாம் நினைப்போம். அப்படி அல்ல ; மூர்க்கத்தில் முழுமையாக திளைப்பவர்கள் நுட்பமாக சிந்திக்கும் திறன் கொண்டிருப்பவர்களை விடவும் அதிநுட்பமாக சிந்திப்பார்கள். புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் மூர்க்கத்தனம் என்னும் இயல்புக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 

அவர் மனம் எவ்விதம் செயல்பட்டது என்பதை படிப்படியாகக் காண்போம். 

(1) புராதானமான விஷ்ணு ஆலயம் இருக்கும் சன்னிதித் தெருவில் பத்து ஆண்டு அகவை கொண்ட வேம்பு, மலைவேம்பு, புங்கன் ஆகிய பெருமரங்கள் 14 இருந்தன. ஊராட்சி மன்றத் தலைவர் செங்கல் காலவாய் வைத்திருக்கிறார். அதற்கு எரிபொருள் தேவைப்பட்டது. அவரிடம் ஜே.சி.பி வாகனம் சொந்தமாக இருந்தது. டிராக்டர் மற்றும் டிப்பர் இருந்தது. ஊராட்சி மன்ற வாகனத்தையும் பயன்படுத்திக் கொண்டார். ஊராட்சி பணியாளர்களைகளையும் மரம் வெட்டுவதில் பயன்படுத்தினார். வெட்டிய மரங்களை தனது செங்கல் காலவாய்க்கு கொண்டு சென்றார்.

(2) அந்த மரங்களை வெட்ட அவர் தேர்ந்தெடுத்த நாளும் நேரமும் நுட்பமானது. அந்த வீதியின் ஆண்கள் அனைவரும் பணிக்குச் சென்றிருந்த நேரம். மரம் வெட்டுவதை பெண்கள் எதிர்ப்பதை அவர் அகங்காரம் ஏற்கவில்லை. ‘’என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது ; பெண்கள் என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது ; அவர்கள் அடுப்பங்கரையில் இருக்க வேண்டியவர்கள் ‘’ என்று அவர்களிடம் சத்தம் போட்டிருக்கிறார். 

(3) இந்த விஷயம் புகாராக மாவட்ட நிர்வாகத்துக்குப் போனது. அதனை ஒன்றும் இல்லாமல் செய்ய பலவிதங்களில் பெருந்தொகை செலவு செய்யப்பட்டது. குறைந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. எனினும் குறைந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டதால் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் என அனைவரும் குற்றச் செயல் புரிந்தவருக்கு குற்றத்தை மறைக்க உதவியிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் மேலும் நடவடிக்கை தேவை என்ற புகார் மனு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகார் மனு நிலுவையில் இருக்கிறது. 

(4) இப்போது இந்த விஷயம் குற்றம் இழைத்த ஒருவர் தொடர்பான விஷயமாக மட்டும் இல்லாமல் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் என பலர் சம்பந்தப்பட்டதாக மாறியதால் அவர்கள் இந்த விஷயத்தை வீதிவாசிகளிடம் பேசி சுமுகமாகப் பேசி தீர்க்குமாறு அழுத்தம் தந்தார்கள். பலரது அழுத்தம் இருந்ததால் சந்நிதித் தெரு விஷயத்தை ஆறப் போட்டார் ஊராட்சி மன்றத் தலைவர். இந்த விஷயம் குறித்து புகார் எழுப்பப்பட்ட பலர் பணிமாறுதல் பெற்று சென்று விட்டனர். புதியவர்கள் அந்த இடங்களுக்கு வந்திருக்கின்றனர். புதிதாக வந்தவர்கள் கோப்பினைப் பார்க்கும் போது முன்னர் இருந்தவர்கள் என்னென்ன முறைகேடு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து இந்த விஷயம் சிக்கலானது என்பதாலும் நீதிமன்றம் செல்ல உள்ளது என்பதாலும் குற்றம் இழைத்தவருக்கோ குற்றம் இழைத்தவருக்கு துணை நின்றவர்களுக்கோ எவ்விதத்திலாவது உதவுவது தங்களுக்கு தீராத சிக்கலை உண்டாக்கி விடும் என்பதால் இந்த விஷயத்திலிருந்து பெருந்தூரம் விலகி இருக்கிறார்கள். 

(5) 14 மரங்கள் வெட்டப்பட்ட விஷயம் தொடர்பான கோப்பை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரியிருந்தோம். முழுக் கோப்பு அளிக்கப்படவில்லை. மாநில தகவல் ஆணையம் வழக்கு பதிவு செய்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் விசாரணை நிகழும். 

(6) சன்னிதித் தெருவில் வசிக்கும் மக்கள் சாமானிய பொருளியல் பின்னணி கொண்ட சாமானியர்கள். அவர்களால் தான் இத்தகைய அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பதை ஊராட்சி மன்றத் தலைவரால் ஏற்க முடியவில்லை. 

(7) இந்த 14 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்துக்குப் பின்னும் அந்த ஊரில் அவர் பல மரங்களை வெட்டியிருக்கிறார். அவர் மரம் வெட்டுவதை குறைத்துக் கொள்ளவோ நிறுத்தவோ இல்லை. 

(8) பத்து மாதம் முன்பு அதே தெருவில் ஒரு மரத்தை வெட்ட முயற்சி செய்தார். மாவட்ட நிர்வாகம் கவனத்துக்கு விஷயம் கொண்டு செல்லப்பட்டு முயற்சி தடுக்கப்பட்டது. 

(9) விஷ்ணு ஆலயம் அருகே இருக்கும் ஆலயத்தை இடிப்பது அந்த வீதியில் வசிப்பவர்களுக்கு துன்பம் ஏற்படுத்தும் என்பதால் அரசு கட்டிடம் ஒன்றுக்கு இடம் தேவைப்படுகிறது என்ற தபால் வந்த போது ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தை பொருத்தமான இடங்களுக்கான தேர்வு பட்டியலில் வைத்தார். அது தான் ஆலயத்தை இடிக்கும் முயற்சிக்கு துவக்கப்புள்ளி. அந்த இடம் தேர்வாகி விட்டால் அரசு எந்திரத்தைக் கொண்டே ஆலயத்தை இடித்து அங்கிருக்கும் வேப்ப மரங்களை வெட்டி மக்களைத் துன்புறுத்தி மகிழலாம் என்பதாக அவரது எண்ணம் இருந்தது. இருப்பினும் பலரது ஆதரவால் ஆலயமும் வேப்ப மரங்களும் காக்கப்பட்டன. 

(10) விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் வசிப்பவர்கள் எளிய குடிகள். அவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இச்செயல்கள் நிகழும் ஊர் என்ன என்பதை குறிப்பிடாமல் இருக்கிறேன். அவர்களுக்கு பலவிதத்திலும் தீவிரமான அச்சுறுத்தல் இருக்கிறது. அவற்றை முழுமையாக வெளியிட இது உகந்த காலம் அல்ல என்பதால் அந்த கிராமம் எது என்பதைக் கூறாமல் இருக்கிறேன்.       

ஆலயம் காக்கப்பட்டது - ஒரு கடிதம்

 அன்புள்ள பிரபு அண்ணா,

ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயம் காக்கப்பட்ட செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அத்தனை பேரின் பிரார்த்தனைக்கும் கிடைத்த வெற்றி. இது போன்ற அறம் சார்ந்த முன்னெடுப்புக்கள தான் ஜனநாயகத்தின் விழுமியத்தையும் சத்தியத்தையும் பறைசாற்று கிறது.

 உண்மையான நோக்கத்தோடு , உள் உணர்வால் மேற்கொள்ள படும் எச்செயலும் தோல்வி அடையாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்


 நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை

அன்புடன்,
கதிரவன்

Saturday 25 November 2023

ஆலயம் காக்கப்பட்டது

 


ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தை இடிக்க முயற்சி நடக்கிறது எனக் கேள்விப்பட்ட நிமிடத்திலிருந்து இப்போது வரை அந்த ஆலயத்தைக் காக்க பல்வேறு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அந்த ஆலயம் முழுமையாகக் காக்கப்பட்டுள்ளது. 

இந்த விஷயம் குறித்து இதை அறிந்தவர்கள் இதில் ஈடுபட்டவர்களுக்கு முழுமையாகத் தெரியும் என்றாலும் செயல்கள் எவ்விதம் நிகழ்ந்தன என்பதை காலக்கிரமமாக வகுத்துக் கொள்வது எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள உதவும் என்பதால் அதனை பட்டியலிடுகிறேன். 

(1) 09.07.2021 அன்று அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் அங்கிருந்த புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் இருந்த வேம்பு, மலைவேம்பு , புங்கன் ஆகிய 14 மரங்களை ஜே.சி.பி வாகனம் மூலம் வேரோடு பிடுங்கி தனது செங்கல் காலவாய்க்கு எரிபொருளாகப் பயன்படுத்தினார். அந்த நெடிய பெரிய மரங்கள் வேரோடு சாய்க்கப்படும் வீடியோக்களை காணும் போது எவருக்குமே உள்ளம் பதறும். அந்த வீதியில் அப்போது ஆண்கள் பணிக்குச் சென்றிருந்தனர். வீட்டில் பெண்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் தாங்கள் பல ஆண்டுகளாக நீரூற்றி வளர்த்த மரங்கள் ஏன் இப்படி வெட்டப்படுகின்றன எனக் கேட்ட போது  அவர்களிடம் சிகரெட் புகைத்தவாறு ‘’நான் ஊராட்சி மன்றத் தலைவன். என்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. அதுவும் பெண்கள் கேள்வி கேட்கக் கூடாது. பெண்கள் வீட்டு அடுப்பங்கரையில் இருக்க வேண்டியவர்கள். யாரிடமும் வேண்டுமானாலும் சென்று சொல்லிக் கொள்ளுங்கள். என்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது’’ என்று கூறியிருக்கிறார். இது நடந்தது ஒரு வெள்ளிக்கிழமை. 

(2) சனி ஞாயிறு இரண்டு நாட்கள் கழித்து திங்கட்கிழமை அந்த தெருவாசிகள் நாற்பது பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி கிராம மக்களை மாவட்ட ஆட்சியரை சந்திக்காமல் திருப்பி அனுப்ப முயற்சி செய்தார். மக்கள் நீண்ட காத்திருப்புக்குப் பின் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நிகழ்ந்த உண்மையை எடுத்துக் கூறினர். 

(3) பொதுமக்கள் புகாரின் விளைவாக வருவாய்த்துறை அவருக்கு ரூ. 2052 அபராதம் விதித்தது. வெட்டப்பட்ட 14 மரங்களின் பொருள் மதிப்பு மிக அதிகமாக இருக்கும். ஊராட்சி மன்றத் தலைவர் தனது அரசியல் செல்வாக்கால் மரங்களின் மதிப்பை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்தார். இருந்தாலும் அவர் அரசுப் பொறுப்பை வகித்து ஒரு குற்றச்செயலுக்காக ரூ.2052 அபராதம் செலுத்தியதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு நிலுவையில் உள்ளது. 

(4) புராதானமான விஷ்ணு ஆலய சன்னிதித் தெரு மக்களின் மீது அந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கு நாளுக்கு நாள் பெருகிய வண்ணம் இருந்தது. 

(5) 14 மரங்கள் வெட்டப்பட்டதிலிருந்து 20 நாட்களில் அந்த வீதியில் 100 மரங்கள் நடப்பட்டன. அவை இந்த இரண்டு ஆண்டுகளில் நன்கு வளர்ந்து பதினைந்து அடி உயரம் வரை சென்றுள்ளன. 

(6) பத்து மாதங்களுக்கு முன்னால் புராதானமான விஷ்ணு ஆலயத்தின் திருக்குளத்தின் கரையில் இருக்கும் பெரிதாக வளர்ந்த மரங்களை வெட்ட அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் முயன்றார். அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. 

(7) ஓர் அரசுக் கட்டிடம் கட்ட இடம் தேவை என்று அரசாங்கத்தில் இருந்து சென்ற வாரம் ஒரு தபால் வந்திருக்கிறது. கட்டிடம் கட்ட உகந்த இடங்களின் பட்டியல் கொண்ட ஒரு கோப்பினை  ஊராட்சி மன்றம் உருவாக்கியிருக்கிறது. அதில் ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கும் இடமும் கட்டிடம் கட்ட உகந்த இடமாக கூறப்பட்டிருக்கிறது. 

(8) ஸ்ரீமுனீஸ்வரன் கோவிலின் சாவி சன்னிதித் தெருவில் வசிக்கும் இளைஞர் ஒருவரிடம் இருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர் தனது பணியாளர் ஒருவரை அனுப்பி ஆலய வளாகத்தில் இருக்கும் வேப்ப மரத்தை வெட்ட வேண்டும் என்றும் ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயத்தை இடிக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்பியிருக்கிறார். இது நடந்தது 22.11.2023. அதாவது புதன்கிழமை காலை நேரத்தில் 

(9) மதியம் 1 மணி அளவில் எனக்கு செய்தி வந்தது. நான் விரைந்து சென்றேன். செய்தித்தாள்கள் நிருபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். நிருபர் தாசில்தாருக்கு ஃபோன் செய்து கிராமத்தில் நடப்பது என்ன என்று கேட்டார். தாசில்தார் நிருபர் கூறியே விபரம் அறிந்தார். நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கும் தகவல் கொடுத்தேன். 

(10) மாலை 5 மணி அளவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10 பேர் சென்று ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயம் இடிக்க நடைபெறும் முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரி மனு அனுப்பினர். அந்த மனுவை ஸ்கேன் செய்து அலைபேசி மூலம் நண்பர்களுக்கு அனுப்பினர். அது ஊர் முழுக்க பரவி விட்டது. காவல்துறையினருக்கும் விஷயம் தெரிந்து விட்டது. CID (SB) பிரிவு போலிஸார் மனு அளித்த இளைஞர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு முழு விபரத்தைக் கேட்டறிந்தனர். 

(11) ஊர் முழுக்க செய்தி பரவியது. எனினும் ஊராட்சி மன்றத் தலைவர் ஆலயத்தை இடிக்கும் தனது முயற்சியைக் கைவிடவில்லை. தொடர்ந்து முயன்றார். நாங்கள் பலரைச் சந்தித்து உதவி கேட்டோம். அனைவரும் அவரவர்க்குத் தெரிந்தவர்களிடம் பேசினார்கள். ஆதரவுகள் பெருகத் துவங்கின. 

(12) இன்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயம் அருகே சென்று ஆலயத்தைப் பார்த்து விட்டு ( அதாவது வெளியிலிருந்து / ஆலயத்தின் சாவி தெருவாசி ஒருவரிடம் இருந்தது. அவரிடம் நாங்கள் காலை மாலை பூசனைக்கு மட்டுமே ஆலயக் கதவைத் திறக்க வேண்டும் என்றும் பூசனை முடிந்ததும் உடமே ஆலயத்தின் சாவியை எடுத்துக் கொண்டு வந்து விட வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தோம். நாங்கள் எதிர்பார்த்த படியே அவரும் நடந்து கொண்டார். ) கோப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடம் கட்டிடம் கட்ட உகந்த இடம் அல்ல என எழுதி அந்த கோப்பினை மூடி விட்டனர். 

ஆலயத்தைச் சூழ்ந்த ஆபத்து நீங்கி ஆலயம் முழுமையாகக் காக்கப்பட்டுள்ளது. 

ஆறிரு தடந்தோள் வாழ்க                                                                            அறுமுகம் வாழ்க

நயத்தக்க நாகரிகம்

சி.பி.கி.ரா.ம்.ஸ் ல் பதிவு செய்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை பதிவு  செய்ய வேண்டிய அதிகாரி ''Please see the attached file'' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் எந்த ஆவணத்தையும் இணைக்கவில்லை. அந்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை புகார்தாரரின் பார்வைக்குக் கொண்டு வராமல் இருக்க முயற்சித்துள்ளார்.   

புகார் பள்ளி வளாகத்தில் இருந்த உயிர்மரம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரால் வெட்டப்பட்டது தொடர்பானது. சி.பி.கி.ரா.ம்.ஸ் ல் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை பதிவு செய்ய வேண்டிய அதிகாரி ஏன் மேல்நடவடிக்கை ஆவணத்தை மறைக்க வேண்டும்? குற்றம் இழைத்தவருக்கும் பதிவு செய்ய வேண்டிய அதிகாரிக்கும் எவ்விதத்தில் தொடர்பு? இதற்கான பதிலை எவரும் யூகித்து விட முடியும்.

இப்போது அந்த அதிகாரி மீது புகார் தெரிவித்து புகார் கடிதம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இதனை அவருக்கு அனுப்பி விளக்கம் கேட்கும். என்ன விளக்கம் கொடுப்பார்? ‘’கிளரிக்கல் எரர்’’ என சொல்லக் கூடும். அவ்வாறாயினும் சுட்டிக் காட்டப்பட்ட பின்னர் அதனை பதிவேற்ற முயல வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய முடியாது எனில் அந்த ஆவணத்தை தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். நான் குறுஞ்செய்தி வந்து தளத்தில் கண்ட சில நிமிடங்களில் அந்த புகார் பதிவெண்ணைத் தெரிவித்து அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திடம் கேட்டிருந்தேன்.  அவர்கள் அந்த தபாலையும் அவருக்கே அனுப்புவார்கள். அதற்கும் பதில் கூற வேண்டும். 

நேற்று தில்லியிலிருந்து சி.பி.கி.ரா.ம்.ஸ் தலைமை அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. 011 எனத் தொடங்கும் எண். அது தில்லியின் எஸ்.டி.டி இலக்கம். பேசியவர் ஒரு மலையாளி. எனினும் சரளமாகத் தமிழில் பேசினார். புகார் தீர்க்கப்பட்ட விதம் புகார்தாரரான உங்களுக்கு திருப்தி தருகிறதா எனக் கேட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரி எந்த ஆவணத்தையும் பதிவேற்றவில்லை என்பதை நீங்கள் உங்கள் லாக்-இன் மூலம் அறிய முடியும். பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் ஒரு முறையை அவர்கள் நாசமாக்குகிறார்கள் என்று சொன்னேன். நாங்கள் தமிழக மாநில அரசின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு செல்கிறோம் என்று கூறினார்கள். 

இது குறித்த தபால்களை எனது மின்னஞ்சலில் டைப் செய்து வழக்கமாக பிரிண்ட் அவுட் எடுக்கும் கடைக்கு அனுப்ப மின்னஞ்சலில் அனுப்பும் முகவரியை டைப் செய்தேன். ‘’அனுப்புக’’ என்ற கட்டளையை மெயிலுக்கு அளித்தேன். மெயில் ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டியது. அதாவது , ‘’உங்கள் கடிதத்தில் 'PLEASE FIND THE ATTACHED FILE'' என்ற வாசகம் இருக்கிறது. ஆனால் நீங்கள் எந்த ஃபைலையும் இந்த மின்னஞ்சலில் இணைக்கவில்லையே. இணைக்க மறந்து விட்டீர்களா? இப்போது இணைக்கிறீர்களா?’ என்று கேட்டது’’. 

திருக்குறளில் நயத்தக்க நாகரிகம் என்ற வார்த்தை உண்டு. ஒரு எந்திரத்துக்குக் கூட அது இருக்கிறது என எண்ணினேன்.    

ஒரு புகார் கடிதம்

அனுப்புநர்
 ர.பிரபு 
&&&&&

பெறுநர்
 மாவட்ட ஆட்சியர்
 மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
 மயிலாடுதுறை

 ஐயா,

 பொருள் : SPECIAL DEPUTY COLLECTOR (&&&&&) மீது புகார்

 பார்வை : புகார் எண் : &&&&& - சி.பி.கி.ரா.ம்.ஸ் இணையதளம்

 வணக்கம்.

 நமது நாடு பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்த போது நம் நாட்டு மக்களின் பொருளியல் அதிதீவிரமாக பிரிட்டிஷாரால் சுரண்டப்பட்டது. நம் நாட்டின் விவசாயிகளும் நெசவாளர்களும் மிகப் பெரிய அளவில் அவர்களால் பாதிக்கப்பட்டனர். பெரும் திறன் கொண்டிருந்த நெசவாளிகளின் கட்டை விரல்கள் வெட்டப்பட்டன. நம் நாட்டில் விளையும் பருத்தியை குறைந்த விலைக்கு வாங்கி இங்கிலாந்துக்குக் கொண்டு சென்று அங்கிருந்து நூற்பாலைகளிலிருந்து நெய்யப்பட்ட துணியை நம் நாட்டில் விற்றனர். நாட்டு மக்களின் உழைப்பும் உபரியும் எங்கேயோ இருக்கும் சிறு குழுவால் கொள்ளையடிக்கப்பட்டது. நமது நாட்டின் நல்லூழ் நம்மை வழிநடத்த மகாத்மா வந்தார். நாம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் ஏதோ ஒரு விதத்தில் மகாத்மாவின் தடத்தில் நாம் பயணிக்கிறோம். முழு அளவில் என்று சொல்ல முடியாவிட்டாலும் பகுதி அளவிலாவது. மகாத்மா விரும்பிய பல விஷயங்கள் அவர் விரும்பிய வழிமுறைகளில் இல்லையென்றாலும் கூட ஏதேனும் வேறு ஒரு விதத்தில் செயலாகின்றன. கிராம ஊராட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். இன்று அது நடக்கிறது. ஆட்சியும் அரசும் சாமானியர்களின் பங்களிப்பை தன்னுள் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். இன்று ஆட்சியிலும் அரசிலும் சாமானியனுக்கு ஒரு இடம் இருக்கிறது.

 அரசு என்பது பெரும் அமைப்பு ; அந்த எந்திரம் 99 % ஊழியர்களாலும் அதிகாரிகளாலும் ஆனது என்பதே உண்மை. அரசியல் தலைமை என்பது அரசு நிர்வாகம் எத்திசையில் செல்ல வேண்டும் எனத் தீர்மானிக்கும் அமைப்பே தவிர அது அரசு என்னும் அமைப்பின் முழு முற்றான அதிகாரம் என்றாகி விடாது. ஜனநாயகம் உலகுக்கு வழங்கிய மிக முக்கியமான கருதுகோள் என்பது ‘’சட்டத்தின் ஆட்சி’’ என்பதே. நமக்கு அரசியல் சாசனத்தை வழங்கியவர்கள் மத்திய மாநில அரசுத் தலைமைகள் ஐந்து ஆண்டு அகவை கொண்டவை என நிர்ணயித்தார்கள். ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறையும் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வர வேண்டும் என நிர்ணயம் செய்தார்கள். எனினும் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் அவ்விதமான முறை இல்லை. ஏனென்றால் நம் நாட்டின் சட்டம் அரசு ஊழியர்களையும் அதிகாரிகளையும் நம்புகிறது. எந்த அளவுக்கு ஊழியர்களும் அதிகாரிகளும் கொண்ட அரசு அமைப்பு சீராக இயங்குகிறதோ அந்த அளவுக்கு சாமானியர்கள் பயன் பெறுவார்கள் என்று நம் நாட்டின் சட்டம் நம்புகிறது.

 அடிப்படையில் நான் அரசு அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவன். ஜனநாயக நாட்டின் குடிமகனாக அரசு அமைப்பில் நிகழும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவேன். அதனை எனது கடமை என்று கருதியே செய்கிறேன். தவறுகள் சுட்டிக் காட்டப்படும் போது தான் அவை மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும். சமூகத்தில் பொதுமக்கள் 99 % இருக்கிறார்கள். அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் 1 % மட்டுமே இருக்கிறார்கள். அரசின் சீரான இயக்கத்துக்கு ஊழியர்களின் அதிகாரிகளின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பொதுமக்களின் பங்களிப்பும்.

 மேற்படி மூன்று பாராக்களில் நான் இந்த கடிதத்தின் உள்ளடக்கத்துக்கு வெளியே சென்று விடவில்லை. நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அன்னிய ஆட்சி நாட்டின் குடிமக்களுக்கு எவ்வித மதிப்பும் அளிக்கவில்லை. அன்னிய ஆட்சியை அகற்றி நாம் உருவாக்கிக் கொண்ட ஜனநாயக அமைப்பு பொதுமக்களை பொதுமக்கள் நலனை அடிப்படையாகவும் முக்கியமாகவும் கொண்டது. பொதுமக்களுக்கு மதிப்பு அளிப்பது.

 இந்த கடிதம் ஒரு புகார் கடிதம்.

 சி.பி.கி.ரா.ம்.ஸ் என்ற மத்திய அரசின் இணையதளம் இருக்கிறது. நாட்டின் குடிமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் அரசாங்கம் அரசாங்க சேவை சார்ந்த புகார்களை அதில் பதிவு செய்யலாம். பொதுமக்களுக்கு எவ்விதமான புகார்கள் இருக்கின்றன என்பதையும் அவை எவ்விதம் தீர்வு காணப்படுகின்றன என்பதையும் அந்த தீர்வு பொதுமக்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்பதையும் இணையதளம் மூலம் பதிவு செய்து தொகுத்து தீர்வளித்து தரவுகளிலிருந்து அரசு சேவையை மேலும் மேம்படுத்திக் கொள்ள உதவிகரமாக இருக்கும் வகையில் வடிவமைக்க்ப்பட்டது. வீட்டிலிருந்தே புகார் அளிக்கலாம் ; எந்த அரசு அலுவலகத்துக்கும் செல்ல வேண்டியதில்லை என்பது இதில் உள்ள வசதி. அன்றாட வாழ்வில் என் கண்ணில் படும் என் கவனத்துக்கு வரும் நான் முக்கியம் என நினைக்கும் விஷயங்களை அதில் பதிவு செய்வேன்.

 15.10.2023 அன்று மயிலாடுதுறை மாவட்டம் &&&&& வட்டம் &&&&& கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் இருந்த உயிர்மரம் வெட்டப்பட்டது. பள்ளி வளாகத்தில் இருக்கும் உயிர்மரம் மாநில அரசாங்கத்தின் சொத்தாகும். அரசாங்க சொத்தான எந்த உயிர்மரத்தையும் வெட்ட வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு தேவை. அந்த உத்தரவு பெறப்படவில்லை. என் கண்ணில் பட்ட இந்த விஷயத்தை மாவட்ட ஆட்சியர் , வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு புகாராக விரைவுத் தபாலில் அனுப்பினேன். சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்திலும் பதிவு செய்தேன். பதிவு எண் : &&&&&

 25.11.2023 அன்று எனக்கு ஒரு சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதாவது என்னுடைய புகாருக்கு தீர்வு காணப்பட்டதாக. நான் சி.பி.கி.ரா.ம்.ஸ் இணையதளத்திற்குச் சென்று புகாரின் பதிவு எண் அளித்து பார்வையிட்டேன். அதில் ‘’எடுக்கப்பட்ட முடிவு’’ என்னும் பகுதியில் ‘’ PLEASE FIND THE ATTACHED FILE'' என இருந்தது. ஆனால் எந்த ‘’FILE''ம் இணைக்கப்படவில்லை. அதாவது எந்த ஆவணத்தையும் பதிவேற்றாமல் ஆவணம் இணைக்கப்பட்டிருப்பதாக பதில் அளித்திருக்கிறார்கள். SPECIAL DEPUTY COLLECTOR (&&&&&) இவ்வாறான செயலைச் செய்திருக்கிறார். இவ்வாறு நிகழ்வது இது முதல் முறை அல்ல ; இது இரண்டாவது முறை. இத்தகைய செயல் முறையானது அல்ல ; நலம் பயப்பது அல்ல என்பதையும் குடிமக்கள் அரசின் மீது வைக்கும் நம்பிக்கையை சிதைக்கும் செயல் என்பதையும் மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்து தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இது குறித்து விசாரிக்குமாறு விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

 இந்த கடிதம் தங்கள் பார்வைக்கு வந்து சேருமா தங்கள் மேஜையை வந்தடையுமா என்பதை நான் அறியேன். மாவட்டம் ஒன்றின் பலவிதமான பணிகளை காலை முதல் இரவு வரை மேற்கொள்பவர் நீங்கள். இந்த நீண்ட கடிதம் உங்களின் நேரத்தைக் கூடுதலாக எடுத்துக் கொள்ள நேர்வது எனக்கு வருத்தத்தையே அளிக்கிறது. எனினும் வேறு வழி எனக்கு இருக்கவில்லை.

 மேற்படி சி.பி.கி.ரா.ம்.ஸ் புகாரின் தீர்வு ஆவணத்தை வழங்கும் படி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பொது தகவல் அதிகாரிக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் படி வேறு ஒரு தபால் மூலம் கோரியிருக்கிறேன். எளிய வழமையான ஒன்றை SDC (&&&&&) சிக்கலாக்கியிருப்பது மிகவும் துரதிர்ஷ்ட்டவசமானது. இவ்வாறான தவறான அணுகுமுறையால் இனி எந்த குடிமகனும் பாதிக்கப்படக்கூடாது என விரும்புகிறேன்.

 நன்றி !

 தங்கள் உண்மையுள்ள, 


 இடம் : மயிலாடுதுறை
 நாள் : 25.11.2023

 இணைப்பு 1. புகார் எண் : &&&&& ன் விபரம் கொண்ட சி.பி.கி.ரா.ம்.ஸ் பக்கம்

மறைக்கப்படும் உண்மைகள்

 

{ஒரு மாதம் முன்பு பள்ளி வளாகம் ஒன்றில் இருந்த மரம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு இன்றி வெட்டப்பட்டு பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது. நடைபெற்ற இச்செயலுக்கு முழுப் பொறுப்பும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரைச் சேர்ந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு மனு அனுப்பினேன். மத்திய அரசின் சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்திலும் புகாரைப் பதிவு செய்தேன். அந்த விஷயம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக எனக்கு குறுஞ்செய்தி வந்தது. தளத்தில் சென்று பார்த்தேன். ‘’எடுக்கப்பட்ட முடிவு’’ என்ற பிரிவில் ‘’ PLEASE SEE THE ATTACHED FILE'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் எந்த கோப்பும் இணைக்கப்படவில்லை. மேற்படி சி.பி.கி.ரா.ம்.ஸ் புகார் எண்ணைத் தெரிவித்து தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி அந்த கோப்பை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளேன்.}



அனுப்புநர்


ர.பிரபு
&&&&&

பெறுநர்

பொது தகவல் அதிகாரி
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா,

பொருள் : தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் கோரி விண்ணப்பம்

பார்வை : சி.பி.கி.ரா.ம்.ஸ் புகார் எண் : &&&&&&&

மேற்படி புகார் என்னால் மத்திய அரசின் சி.பி.கி.ரா.ம்.ஸ் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்த நாள் : 15.10.2023. அந்த புகார் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்திலிருந்து குறுஞ்செய்தி 25.11.2023 அன்று கிடைக்கப் பெற்றது. எனது புகாரின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிய சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்துக்குச் சென்று பார்த்தேன். எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற விபரத்தில் ‘’ PLEASE FIND THE ATTACHED FILE'' என இருந்தது. ஆனால் அதில் எந்த ‘’FILE''ம் இணைக்கப்படவில்லை. 

மேற்படி புகாரின் மீது எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கையை சி.பி.கி.ரா.ம்.ஸ் இணைய தளத்தில் பதிவு செய்யாததால் எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கை விபரத்தை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோருகிறேன். அதற்கான கட்டணம் ரூ.10 ஐ  மனு வில்லையாகச் செலுத்தியுள்ளேன். 

தங்கள் உண்மையுள்ள,


இடம் : மயிலாடுதுறை
நாள் : 25.11.2023

இணைப்பு
1. புகார் எண் &&&&&  குறித்த சி.பி.கி.ரா.ம்.ஸ் பக்கத்தின் நகல்

Friday 24 November 2023

லலிதம்




மென்குளிர் சிறு தடாகம்
மலர்ந்திருக்கிறது முழுமை கொண்ட பத்மம்
தடாகத்தின் கரையில் வான் நோக்கி விரிந்திருக்கிறான்
மரங்களின் கொற்றவன்
மரத்தின் உகிரில்
மலரமர்வில் அமர்ந்து
மோனித்திருக்கிறான்
புத்தன்
மென்மை
மெல்லிய புன்னகை
அவன் மௌனமும் மென்மை 
அன்றொரு நாள்
அவனுக்கு அன்னமிட்டவள்
இன்று 
காட்டு மலர்கள் சேகரித்து
புத்தனுக்கு சூடுகிறாள்
மகவை அலங்கரிக்கும் அன்னையென


 

பற்கள் மருத்துவ நாற்காலி ( நகைச்சுவைக் கட்டுரை)

 


அமைப்பாளருக்கு இரண்டு நாட்களாக பல் கூச்சம் இருந்தது. சரியாகச் சொன்னால் நான்கு நாட்கள். எனினும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் உணரத் தொடங்கினார். இரண்டு நாட்களாக மிகத் தீவிரமான அலைச்சல். இயல்பாகவே அலையக் கூடிய ராசி உள்ளவர் என்றாலும் இந்த இரண்டு நாட்களும் மிகத் தீவிரம். எந்த சந்திப்பையும் தவற விட முடியாது. எந்த பணியையும் ஒத்தி வைக்க முடியாது. இங்கிருந்து அங்கே ; அங்கிருந்து இங்கே என காலை முதல் இரவு வரை இரண்டு நாட்களாக அலைந்து கொண்டேயிருந்தார்.  நேற்று தான் பற்கள் தீவிரமாகக் கூச்சம் கொண்டிருப்பதை தீவிரமாக உணர்ந்தார். உடல் என்பதே ஈறுகளும் பற்களும் தான் என்னும் விதமாக உடலை உணர்ந்து கொண்டிருந்தார். இன்று காலை 3 சந்திப்புகள். ஊர் திரும்புகையில் மணி மதியம் 1.30. ஒரு பல் மருத்துவமனையினுள் நுழைந்தார். 

செவிலிப் பெண் அமைப்பாளரின் பெயரையும் ஊரையும் அலைபேசி எண்ணையும் எழுதிக் கொண்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். 

மருத்துவர் பற்கள் மருத்துவ நாற்காலியில் அமரச் சொன்னார். அமைப்பாளருக்கு எப்போதும் அந்த நாற்காலியைக் காண்கையில் அது புதிர்த்தன்மை கொண்டதாக இருப்பதாகத் தோன்றும். அதில் அமர்ந்து கொண்டார். ஓஷோ ஒரு முறை பற்களுக்காக ஒரு சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது. காலை மாலை என ஒரு வார கால சிகிச்சை. அந்த 14 சிகிச்சை நேரத்தில் அவர் அவருக்கு மிகவும் பிடித்தமான 168 புத்தகங்களைக் குறித்து அந்த அறையில் இருந்த சில சீடர்களிடம் உரையாடினார். அது ‘’ Books I have loved'' என்ற நூலாகத் தொகுக்கப்பட்டது. அமைப்பாளருக்கு அது மிகவும்பிடித்த நூல். அந்த நூலின் ஞாபகம் அமைப்பாளருக்கு வந்தது. 

மருத்துவர் அமைப்பாளரிடம் என்ன செய்கிறது என்று கேட்டார். 

‘’பற்களும் ஈறுகளும் மிகவும் கூசுகிறது டாக்டர்’’

‘’வலி இருக்கா?’’

‘’அதை வலி என்று சொல்ல முடியாது . பல் வலி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். இது ஒரு விதமான தீவிரமான கூச்சம்’’ 

மருத்துவர் ஒரு லென்ஸை வைத்து பற்களை சோதித்தார். மருத்துவர் ‘’ஆ’’ சொல்லுங்க என்றார். 

அமைப்பாளர் ‘’ஆ’’ என வாயைத் திறந்தார். 

மருத்துவர் ‘’ஈ’’ சொல்லுங்க என்றார். 

அமைப்பாளர் ‘’ஈ’’ என்று வாயைக் காட்டினார். 

இரண்டு வயதில் அம்மா இப்படித்தான் அட்சரம் சொல்லித் தந்திருப்பார் இல்லையா என அமைப்பாளர் யோசித்தார். பின்னர் பள்ளி ஆசிரியையும் சொல்லித் தந்திருப்பார். இப்போது ஒரு மருத்துவர் சொல்லித் தருகிறார் என அமைப்பாளர் எண்ணினார். 

’’உங்கள் பற்களில் ஏதும் பிரச்சனை இல்லையே ‘’ என்றார் மருத்துவர். 

‘’டாக்டர் ! கூச்சம் தாங்க முடியவில்லை’’ 

‘’நான் ஒரு டூத் பேஸ்டும் ஜெல்லும் தரேன். அத 3 நாள் யூஸ் பண்ணுங்க. சரியாயிடும். நீங்க பிரியப்பட்டா உங்க பற்களையும் ஈறுகளையும் கிளீன் பண்ணிக்கலாம்’’ 

‘’டாக்டர் ! என்கிட்ட இப்போ 1000 ரூபாய் பணம் இருக்கு. அது போதும்ல’’ 

‘’ஓ.கே நோ இஸ்யூஸ்’’

அமைப்பாளருக்கு அப்பாடா என்றிருந்தது. 

பற்களைத் தூய்மைப்படுத்த மருத்துவ உபகரணங்களை ஏற்பாடு செய்தார் மருத்துவர். 

‘’உங்களுக்கு பிளட் பிரஷர் இருக்கா?’’

’’நார்மல் டாக்டர்’’

நீங்க வெஜிடேரியனா ? நான் வெஜிட்டேரியனா?’’

‘’வெஜிட்டேரியன்’’

‘’ஸ்மோக் பண்ணுவீங்களா?’’

அமைப்பாளர் வேகமாக தலையை அசைத்து இல்லை இல்லை என்றார்.

‘’ஆல்கஹால்?’’

அமைப்பாளர் ‘’நோ நோ ‘’ என்றார். 

ஒரு சிறு அமைதி ஏற்பட்டது. அந்த இடைவெளியைப் பயன்படுத்தி ‘’டாக்டர் நான் ஒரு டீ டோடலர்’’ என்று மருத்துவரிடம் கூறினார். 

’’நீங்க டூத் பேஸ்ட் பயன்படுத்தறீங்களா ? டூத் பவுடரா?’’என்று மருத்துவர் கேட்டார். 

மருத்துவர் ஏன் இந்த கேள்வியைக் கேட்கிறார் என அமைப்பாளருக்குப் புரிந்து விட்டது. கூச்சம் அதிகமாக இருந்ததால் காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் போது திரிபலா சூரணத்தை வென்னீரில் கலந்து வாய் கொப்பளித்து விட்டு கிளம்பியிருந்தார். அந்த சுவடுகள் லென்ஸ் மூலம் பார்க்கும் போது தெரிந்திருக்கும் என நினைத்துக் கொண்டார். 

மருத்துவர் பிசின் போன்ற ஒன்றை ஈறுகளில் தடவினார். சில நிமிடங்களில் ஈறுகள் மரத்துப் போய் விட்டன. ஒரு ஊசி போன்றிருந்த உபகரணம் மூலம் பற்கள் தூய்மை செய்யப்பட்டன. அமைப்பாளர் கண்களை மூடிக் கொண்டார். நீர் பாய்வதன் விதவிதமான சப்தங்கள் எழுந்தன. சில நிமிடம் ஆனது. இவ்வளவு நேரம் நீர் பாய்கிறது. தொண்டைக்குள் இறங்கவில்லை. வாயில் சேர்ந்து இருக்குமோ என்ற ஐயம் அமைப்பாளருக்கு எழுந்தது. பரீட்சை ஹாலில் எக்ஸ்ட்ரா பேப்பருக்கு கையை மெல்ல உயர்த்துவது போல உயர்த்தினார். 

மருத்துவர் ‘’என்ன”’ என்றார். 

ஈறுகள் மரத்துப் போயிருந்ததால் அமைப்பாளரால் பேச முடியவில்லை. பற்கள் மருத்துவ நாற்காலியுடன் இணைக்கப்பட்டிருக்கும் சிறு வாஷ் பேசினை நோக்கிச் சென்றார். ஆனால் துப்புவதற்கு வாயில் நீர் ஏதும் இல்லை. என்ன என்று புரியவில்லை அமைப்பாளருக்கு. 

‘’கிளீன் பண்ணும் போது இந்த நீடில் வழியா தண்ணி வரும். சிஸ்டர் அந்த சக்‌ஷன் டியூப் வழியா கலெக்ட் ஆகற எல்லா தண்ணியையும் ரிமூவ் பண்ணிடுவாங்க.’’ என்றார் டாக்டர். 

நவீன மருத்துவத்தில் ‘’எலும்பு முறிவு மருத்துவமும்’’ ’’பல் மருத்துவமும்’’ உச்ச பட்ச சாதனைகள். அவை மானுடத்துக்கு அளித்த தீர்வுகள் மிகப் பெரியவை என எண்ணினார் அமைப்பாளர். 

மூடிய கண்ணைத் திறக்காமல் இருந்தார் அமைப்பாளர். பத்து நிமிடம் ஆகியிருக்கும். தூய்மைப் பணி முடிந்தது. மவுத் வாஷ் கொடுத்து வாயைக் கொப்பளிக்கச் சொன்னார் மருத்துவர். அமைப்பாளரும் அப்படியே செய்தார். 

‘’இப்ப எப்படி இருக்கு’’

‘’டாக்டர் கூச்சம் சுத்தமா இல்ல’’

‘’மவுத் வாஷ்ஷால வாய் கொப்பளிச்சதால அப்படி இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல திரும்ப கூசும். இந்த ஜெல்-ல காலைலயும் நைட்டும் ஈறுல மட்டும் அப்ளை பண்ணுங்க. இந்த டூத் பேஸ்ட்டால காலைலயும் சாயந்திரமும் பல் தேய்ங்க. மூணு நாள்ல சரியாயிடும்’’ 

அமைப்பாளரும் செவிலியும் வெளியே வந்தனர். செவிலி மருத்துவ ஆலோசனை, பற்கள் தூய்மைப்படுத்துதல், ஜெல், பேஸ்ட் என நான்குக்கும் சேர்த்து ரூ. 890 எனச் சொன்னார். அமைப்பாளர் தன்னிடம் இருந்த 1000 ரூபாயில் 100 ரூபாய் வைத்துக் கொண்டு 900 ரூபாய் தந்தார். 

அப்போது அமைப்பாளர் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. செவிலியிட்ம் டாக்டரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றார். செவிலி உள்ளே அழைத்துச் சென்றார். 

‘’டாக்டர் காலைல எழுந்ததும் நான் முதல்ல செய்யறது பிரஷ் பண்றது. பல வருஷமா பிரஷ் வச்சு செய்யறன். பற்களை கிளீன் பண்றதுல வேற ஏதும் மெத்தட் இருக்கா? ‘’ 

டாக்டர் யோசித்தார். செவிலியிடம் ‘’அந்த டீத் இரிகேட்டர் கொண்டு வாங்க’’ என்று சொன்னார். அவர் ஒரு உபகரணத்தைக் கொண்டு வந்தார். அது ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் அளவில் இருந்தது

‘’இப்ப நாம பற்களை கிளீன் பண்ணோம்ல அதே டெக்னிக். செல்ஃபோன் சார்ஜ் பண்ற மாதிரி சார்ஜ் பண்ணிக்கலாம். தண்ணீர் , வென்னீர் , உப்பு போட்ட வென்னீர் இந்த மூணுல ஒன்னு யூஸ் பண்ணலாம்.’’ 

‘’மூணு நாளைக்குப் பிறகு வந்து இம்ப்ரூவ்மெண்ட் இருக்கான்னு சொல்ல வரும் போது வாங்கிக்கறன்’’ என்றார் அமைப்பாளர். 

‘’இதோட விலை ஃபோர் தௌசண்ட்’’ 

அமைப்பாளர் ‘’அப்படியா’’ என்றார். வழக்கமான சூழ்நிலை என்றால் அமைப்பாளருக்கு மயக்கம் வந்திருக்கும். இன்று அவருக்கு உடல் என்றாலே பற்களும் ஈறுகளும் தான் என்பதால் அது பெரிய விலை என்று தோன்றவில்லை. 

வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். வண்டி 50 மீட்டர் போயிருக்கும். ஆயுர்வேதத்தில் ஒரு முறை இருக்கிறது. அதாவது , காலை எழுந்தவுடன் வாயில் சற்று அதிகமாக நல்லெண்ணெயை எடுத்துக் கொண்டு வாயில் பற்கள், ஈறுகள், நாக்கு, தொண்டை வரை நனையுமாறு வாய்க்குள் கொப்பளிக்க வேண்டும். ஐந்து நிமிடம் வாய்க்குள்ளேயே கொப்பளித்து விட்டு பின்னர் வெளியே துப்பி விட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் பலமாகும். 

எவராலும் எளிதில் சொல்ல முடியும். அமைப்பாளரின் மனச்சாய்வு எந்த திசையில் செல்லும் என. நல்லெண்ணெய் பக்கமா அல்லது டூத் இரிகேட்டர் பக்கமா என.    


மனு அளித்தல் ( நகைச்சுவைக் கட்டுரை)

இன்று நடைமுறையில் இருக்கும் அரசாங்க வழிமுறைகள் பிரிட்டிஷ் வழிமுறைகளை அடிப்படையாய்க் கொண்டது. பிரிட்டிஷ் முறையில் அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் மிக அதிகம். அவர்களுக்கு மேல் அவர்களின் மேல் அதிகாரிகள். அதற்கு மேல் அதிகாரம் கொண்டது நீதிமன்றம். 

பிரிட்டிஷ் ஆட்சியில் நம் நாட்டின் வரி வருவாயில் 74 சதவீதம் நிலவரியிலிருந்து வசூல் ஆகியிருக்கிறது. எல்லா வகையான நிலத்துக்கும் வரி நிர்ணயித்தலும் வரி வசூல் செய்தலும் மாவட்ட நிர்வாகத்தின் பணிகள். எனவே தான் மாவட்ட ஆட்சியர் ‘’கலெக்டர்’ எனப்பட்டார். அதாவது , அவர் வரிவசூலை மேற்கொள்பவர் ; கண்காணிப்பவர். ஒழுங்கு படுத்துபவர். அதனால் தான் மாவட்ட நிர்வாகம் ‘’வருவாய்த் துறை’’ என்றே அழைக்கப்பட்டது. 

இடத்தை அளப்பதற்கு வரி நிர்ணயம் செய்வதற்கு என மக்கள் எப்போதும் வருவாய்த்துறை அலுவலகத்தை அணுகிக் கொண்டே இருக்க வேண்டிய நிலை இருந்தது. வரி நிர்ணயமும் வரி வசூலும் நிதி தொடர்பான விஷயம் என்பதால் அது முறைகேடுகளுக்கான வாய்ப்பை அதிகம் கொண்டது. எனவே அலுவலகத்தை அணுகும் எவரும் தங்கள் கோரிக்கையைத் தெரிவித்து மனு அளிக்க வேண்டும். பிரிட்டிஷ் நம்மை ஆண்ட போது நம் நாட்டின் எழுத்தறிவு சதவீதம் 20% . ஐந்தில் ஒருவருக்கே எழுதப் படிக்கத் தெரியும். இந்நிலையில் மனு எழுதிக் கொடுப்பதையே பணியாகக் கொண்டிருந்த பலர் உருவானார்கள். இன்றும் வருவாய்த்துறை அலுவலகங்கள் முன்பு ஒரு ஸ்டூலில் அமர்ந்து மனு எழுதிக் கொடுத்து அதற்கு ஒரு தொகை நிர்ணயம் செய்து வாங்கிக் கொள்பவர்களைக் காண முடியும்.  

லஞ்சம் என்பது வருவாய்த்துறையில் பேருருவம் கொண்டிருப்பது என்பதால் அரசு அலுவலகங்களுக்கு செல்வது என்றாலே பொதுமக்கள் எவருக்கும் ஒரு தயக்கமும் விருப்பமின்மையும் இருக்கும். இன்னும் சரியாகச் சொன்னால் அச்சமும் இருக்கும். இந்த அச்சம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவு அதிக லஞ்சம் பெற முடியும் என்பதால் அலுவலக ஊழியர்கள் அதனை வளர்த்தெடுப்பார்கள். மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த பழக்கத்தின் விளைவுதான் இன்றும் அரசு ஊழியர்களிடம் தொடர்கிறது. 

காலமாற்றங்கள் பல நடந்து விட்டன. பிரிட்டிஷ் ஆட்சி நீங்கி விட்டது. நாம் ஜனநாயகமானோம். நமது கல்வி அறிவு அதிகரித்தது. எல்லா அரசு ஊழியர்களும் பொது மக்களின் பணியாளர்களே என்றானார்கள். எல்லா பணிகளும் இத்தனை காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற காலவரம்பு உண்டானது. தகவல் பெறும் உரிமைச் சட்டம் வந்தது. இன்னும் பல பல. 

இருந்தாலும் இந்த மனு அளிக்கும் மனநிலை அப்படியே இருக்கிறது. பொறுப்புகளும் கடமைகளும் சட்டத்தால் வழங்கப்பட்டிருப்பதால் ஊழியர்கள் முழு விபரம் கொண்ட மனுவை அசௌகர்யமாக உணர்கின்றனர். ஒரு மனு தகவல் போதாமைகளைக் கொண்டிருந்தால் தங்கள் தாமதத்திற்கான காரணமாகக் கூறலாம் என்பதால் முழுமையான மனுவை விட முழுமையற்ற மனுவையே அரசு ஊழியர்கள் விரும்புவார்கள். 

எல்லா அலுவலகங்களிலும் ‘’தபால்’’ என்று ஒரு பிரிவு இருக்கும். அந்த அலுவலகத்தின் அடிப்படையான பிரிவு அது. பெறப்பட்ட எல்லா மனுக்களும் தபால் பிரிவில் பதிவு செய்யப்பட வேண்டும். மனுவை அளிப்பவர் யார் யாருக்கு அளிக்கிறார் என்ன தேதியில் அளிக்கிறார் ஆகிய விபரங்கள் அதில் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அரசு ஊழியர்கள் முறைப்படி இவற்றை செய்வதில்லை. 

மனுக்களை 99 சதவீதம் ‘’தபால்’’ பிரிவில் பதிவு செய்யவே மாட்டார்கள். எனவே பொதுமக்கள் மனுவும் வெறும் காகிதமும் ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட ஒன்றே. 

ஒரு மனு அரசாங்க அலுவலகத்துக்கு அளிக்கப்படுகிறது எனில் அது தபாலில் அனுப்பப்பட வேண்டும். அதிலும் பதிவஞ்சலில் அனுப்பப்பட வேண்டும். பதிவஞ்சல் ஒப்புகையுடன் அனுப்பப்பட வேண்டும். அஞ்சல் துறை மூலம் வரும் பதிவஞ்சல் தபால்களுக்கு அஞ்சல்துறையிலேயே பதிவேடு உண்டு. யார் அனுப்பிய தபால் யாருக்கு அனுப்பிய தபால் எந்த தேதியில் பட்டுவாடா ஆனது ஆகிய விபரங்களை அஞ்சல்துறை தனது பதிவேட்டில் ஏற்றிக் கொள்ளும். அரசு ஊழியர்கள் பதிவஞ்சலில் வரும் தபால்களை தங்கள் பதிவேட்டில் ஏற்றியே தீர வேண்டும். பதிவஞ்சல் விபரங்கள் கொண்ட கடித உறை கூட அவர்களால் மனுவுடன் இணைத்து வைக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.  

நாம் பொதுவாக இன்னாரிடம் இன்னார் மனு அளித்தனர் என்ற செய்தியை அடிக்கடி வாசிப்போம். காண்போம்.  மனு அளிப்பதை விட மனுவை பதிவஞ்சலில் அனுப்பி விட்டு மனுவின் நகலை அளிப்பது ஒப்பீட்டளவில் உபயோகமானது. 

பதிவஞ்சலில் அனுப்பப்படாத மனு அரசாங்கக் கோப்பில் சென்று சேராமல் இருக்க 99 சதவீத சாத்தியம் உள்ளது. 

மந்தார மலர்

 

14 மரங்கள் வெட்டப்பட்ட கிராமத்தின் அதே வீதியில் நாம் நட்ட 100 மரங்கள் இந்த இரண்டே கால் வருடத்தில் சிறப்பாக வளர்ந்து கணிசமான உயரத்தை எட்டியுள்ளன. மகிழம், பாரிஜாதம், மந்தாரை ஆகிய பூமரங்களும் கொன்றை, சொர்க்கம் ஆகிய நிழல் மரங்களும் நாவல்பழ மரமும் அங்கே உள்ளன. அங்கே மந்தாரை வண்ண மலராக பூக்கத் தொடங்கியுள்ளது. 

மக்கள் வழிபடும் ஆலயத்தை இடிக்கவும் மக்கள் வழிபடும் வேப்ப மரத்தை வெட்டவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்த இரண்டு நாட்களில் பலமுறை அந்த கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த சிறுவன் ஒரு மந்தார மலரைப் பறித்து வந்து என்னிடம் காட்டினான். அதன் ஒளிப்படம் மேலே. 

Wednesday 22 November 2023

ஆலயத்தை இடிக்க முயற்சி

 

இன்று மதியம் 1 மணி அளவில் 09.07.2021 அன்று 14 மரங்கள் வெட்டப்பட்ட புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்துள்ள  ஊரின் சன்னிதித் தெருவிலிருந்து  எனது நண்பர்களான இளைஞர்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். அதே தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தை இடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் சில முயற்சிகளை மேற்கொள்வதாகக் கூறினர். ஆலயத்தைக் காக்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். அந்த ஆலயம் அதே வீதியில் இருக்கும் புராதானமான விஷ்ணு ஆலயத்தின் திருக்குளத்தின் எதிர்க்கரையில் அமைந்துள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அங்கே தொடர்ச்சியாக வழிபாடு நடந்து வருகிறது. இப்போது அந்த ஆலயத்தின் அர்ச்சகர் ஒரு இளைஞர். தினமும் காலை மாலை என இருவேளை ஆலயத்துக்கு வந்து பூசனைகள் மேற்கொள்கிறார். அந்த ஊர் மக்கள் ஸ்ரீமுனீஸ்வரனை தினமும் வழிபடுகின்றனர். பெண்கள் தினமும் காலை மாலை ஆகிய இருவேளைகளிலும் வந்து அகல் தீபம் ஏற்றுகின்றனர். செவ்வாய் வெள்ளி ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் ஸ்ரீமுனீஸ்வரனுக்கு திருவிழா நடைபெறுகிறது. ஊர் மக்கள் அனைவரும் அந்த திருவிழாவில் பங்கேற்கின்றனர். 

ஆலயத்தைச் சுற்றி பக்தர்கள் சுற்றுச்சுவரை எழுப்பியிருக்கின்றனர். ஆலயமும் ஆலய வளாகமும் சுற்றுச்சுவருக்குள் உள்ளது. ஆலய வளாகத்தினுள் சுவாமி பூசனைக்குரிய நந்தியாவட்டை, அரளி ஆகிய பூமரங்கள் உள்ளன. அங்கே சுவாமி சன்னிதிக்கு பக்கத்தில் இரு பெரிய வேப்ப மரங்கள் உள்ளன. அந்த வேப்ப மரங்களை மக்கள் தெய்வமாக வணங்குகின்றனர். ஆலயம் மின் இணைப்பைப் பெற்றிருக்கிறது. மின் கட்டணம் பக்தர்களால் முறையாக செலுத்தப்படுகிறது. 

செய்தி கேள்விப்பட்டதும் இங்கே உள்ளூரில் இருக்கும் நாளிதழின் நிருபர் ஒருவரைத் தொடர்பு கொண்டேன். அவர் விபரம் கேட்டுக் கொண்டார். மக்கள் வட்டாட்சியரிடமோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ மனு அளித்தால் அதனை செய்தியாக வெளியிட்டு விடலாம் என்று சொன்னார். வெள்ளிக்கிழமையன்று ஆலயத்தை இடிக்க முயல்வார்கள் என ஒரு பேச்சு உலவுவதால் நாளைய தினம் வியாழனே நாளிதழில் செய்தி வெளியாவது உகந்ததாக இருக்கும் எனக் கூறினேன். இது தொடர்பாக மேலும் சில விஷயங்களை விவாதித்தோம். முதலில் இன்று நான் செல்வதாகவும் பின்னர் நாளை நாங்கள் இருவரும் செல்வதாகவும் முடிவு செய்து கொண்டோம். பின்னர் நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றேன். மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் அறைக்குச் சென்றேன். அவர் ஆலோசனைக் கூட்டம் ஒன்றனுக்கு சென்றிருந்ததால் அலுவலகத்தில் இல்லை. அலுவலகத்தில் இருந்த ஊழியர் ஒருவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் அந்த முனீஸ்வரன் கோவிலின் பக்தர். வாரம் ஒருமுறை அங்கே சென்று சாமி கும்பிடுபவர். நான் சொன்ன தகவலைக் கேட்டு பேரதிர்ச்சி அடைந்தார். சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு மனு அளிக்குமாறு கூறினார். நான் கிராமத்துக்குப் புறப்பட்டுச் சென்றேன்.  

நண்பர்களான இளைஞர்கள் அங்கே எனக்காகக் காத்திருந்தனர். ஆலயம் ஐம்பது ஆண்டுகளாக வழிபடப்பட்டு வருகிறது. எனவே இந்த விஷயத்தை சட்டபூர்வமாகவே அணுகுவோம். தேவையெனில் நீதிமன்றம் சென்று ஆலயத்தை இடிக்கும் முயற்சிக்கு எதிராக ஒரு தடையுத்தரவைப் பெறலாம் என்று சொன்னேன். வெள்ளிக்கிழமையன்று ஏதாவது நடந்து விடுமோ என தங்களின் அச்சத்தை என்னிடம் தெரிவித்தார்கள். மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு விஷயம் சென்றிருப்பதால் நிலைமை கட்டுக்குள் இருக்கும் என அவர்களுக்கு நம்பிக்கையளித்தேன். நாங்கள் 10 பேர் அங்கிருந்து புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் சென்றோம். அருகில் இருந்த கடையொன்றில் காகிதம் வாங்கி வந்து மனுவை எழுதினார்கள். ஐம்பது ஆண்டுகளாக மக்களால் வழிபடப்படும் ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயம் இடிக்கப்படாமல் காக்கக் கோரி விண்ணப்பம். அதனை அலைபேசியில் ஸ்கேன் செய்து கொண்டார்கள். வட்டாட்சியர் பணி நிமித்தம் வெளியூர் சென்றிருந்தார். எனவே துணை வட்டாட்சியரிடம் அந்த ஊரின் இளைஞர்கள் மனு அளித்தனர். 

‘’நாங்கள் அரசாங்கத்தை நம்புகிறோம். அதனால் தான் இங்கே வந்திருக்கிறோம். நாங்கள் அமைதியை விரும்புகிறோம். 09.07.2021 அன்று அங்கே பொதுமக்கள் பொது இடத்தில் நட்டு வளர்த்து விருட்சமாக்கிய வேம்பு, மலைவேம்பு , புங்கன் முதலிய 14 மரங்கள் வருவாய் கோட்டாட்சியர் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டு செங்கல் காலவாயில் வைக்கப்பட்டன. அது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு நாங்கள் மனு அளித்திருந்தோம். வருவாய்த்துறை ஊராட்சி மன்றத் தலைவருக்கு ரூ. 2052 அபராதம் விதித்தது. அந்த அபராதம் ஊராட்சி மன்றத் தலைவரால் செலுத்தப்பட்டது. அரசு பொறுப்பில் இருப்பவர் குற்றச்செயல் ஒன்றனுக்காக குற்றத்தை ஒப்புக் கொண்டு அபராதம் செலுத்தியிருப்பதால் அதனை முதன்மை ஆதாரமாகக் கொண்டு அவ்ர் மீது சட்டப்படியான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ள மனு ஆட்சியரிடம் நிலுவையில் இருக்கிறது. 14 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் தொடர்பான முழுமையான கோப்பை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கோரி முழுமையான தகவல்கள் அளிக்கப்படாததால் மாநில தகவல் ஆணையத்திடம் செய்யப்பட்ட மேல்முறையீடும் நிலுவையில் இருக்கிறது. பொது மக்கள் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை உண்டாக்கும் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது சம்பந்தப்பட்ட நபர் அதே தெருவில் இருக்கும் ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தை இடிப்பேன் என்பதும் அங்கே மக்கள் தெய்வமாக வணங்கும் வேப்ப மரத்தை வெட்டுவேன் என்று கூறுவதும் மக்களை அச்சுறுத்தும் செயல்கள். ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயம் இடிக்கப்படாமலும் அதில் இருக்கும் வேப்ப மரமும் வெட்டப்படாமலும் காக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை’’ என்று சொன்னோம்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்களும் ஸ்ரீமுனீஸ்வரன் கோவில் குறித்து அறிந்திருந்தனர். அவர்கள் கேள்விப்படும் இந்த செய்தி அவர்களைக் கலக்கமடையச் செய்திருப்பதை நாங்கள் கண்டோம். எங்கள் கோரிக்கையை அக்கறையுடன் கேட்டுக் கொண்டதற்கு வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு நன்றி கூறி புறப்பட்டோம். 

நேராக முனீஸ்வரன் கோவிலுக்கு வந்தோம். வெற்றி வினாயகரையும், ஸ்ரீமுனீஸ்வரனையும் அவரது படைக்கலன்களாக சூலத்தையும் அரிவாளையும் வேப்ப மரத்தையும் வணங்கினோம். அப்போது ஒரு பெண் சுவாமிக்கு அகல் விளக்கில் தீபம் ஏற்றிக் கொண்டிருந்தார். அது ஒரு நன்நிமித்தம் என்பதால் ஆலயம் காக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினோம். 

இரவு 8.30 மணி அளவில் அங்கிருந்து நண்பர்கள் அலைபேசியில் அழைத்தனர். காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு ( சிறப்புப் பிரிவு) லிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்ததாகவும் விஷயம் குறித்து விசாரித்ததாகவும் கூறினர். ஆலயத்தின் புகைப்படத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர் என்று கூறினர். 

காவிரி போற்றுதும் : புதிய செயல்முறைகள் - ஒரு கடிதம்

அன்புள்ள பிரபு,

தங்களது புதிய செயல்முறைகள் திட்டம் மிகச்சிறப்பாக உள்ளது.  தாங்கள் ஏற்கெனவே அளவற்ற செயலூக்கம் கொண்டவர். தங்களுக்கு இது ஒன்றும் கடினமல்ல.  

திட்டம்  பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் உள்ளடக்கியதாக உள்ளது.  

உணவுப் பொருட்கள் உற்பத்தியில் ஏற்படும் உபரி வீணாவதை தடுப்பது எப்படி மற்றும் மதிப்புக் கூட்டி சந்தைப் படுத்தும் வழிவகைகளையும் பயிற்றுவியுங்கள்.  எங்களூர் சந்தையில் ஒவ்வொரு வாரமும் நிறைய காய்கறிகள், பழங்கள் மீந்து வீணாவதைக் காண்கிறேன்.  

எங்களது பங்காக ஏதேனும் அளிக்க இயலுமானால் உரிமையுடன் கேட்க வேண்டுகிறேன். 

நன்றி
அன்புடன்

நாரா.சிதம்பரம்
புதுக்கோட்டை. 
 

ஒரு சந்திப்பும் சில சிந்தனைகளும்

சமீபத்தில் நான்கு நண்பர்கள் ஒரே இடத்தில் சந்திக்க நேர்ந்தது. ஒரு சில மணி நேரங்கள் பொதுவான சில விஷயங்கள் குறித்து பேச நேர்ந்தது. நான் எந்த ஒரு விஷயத்தையும் அதன் விரிவான பின்புலத்தின் அடிப்படையில் வைத்து பரிசீலிக்கும் இயல்பு கொண்டவன். எந்த ஒரு விஷயத்தையும் அதன் வரலாற்றுப் பின்னணியில் புரி்ந்து கொள்வதே அதனை அணுக பயனளிக்கும் உகந்த வழிமுறை என்பது எனது அபிப்ராயம். நாங்கள் பேசக்கூடிய விஷயம் யோகம் குறித்து சென்றது. நால்வரில் ஒருவர் யோகம் குறித்து சில விஷயங்களைக் கூறிக் கொண்டிருந்தார். அவர் சொன்ன விஷயங்கள் அகவயமானவை. எங்கள் உரையாடல் புறவயமானது. ஒரு புறவயமான உரையாடலில் அகவயமான விஷயங்கள் கூறப்படும் போது அதன் எல்லைகள் என்ன என்பதை வரையறுத்துக் கொள்வது உபயோகமானது என நான் எண்ணினேன். உரையாடல் யோகம் குறித்து என்பதால் அதன் அடிப்படைகளை யோகம் கடந்து வந்த பாதையை கண்டுகொள்வது என்பது நலம் பயப்பது என்பதால் அது குறித்து எழுத எண்ணினேன். 

தேவதைக்குப் பரிசு

அன்புள்ள நண்பனுக்கு,

உனது குழந்தை பிறந்த போது ‘’இன்று நான் ஒரு தேவதையின் வருகையால் ஆசியளிக்கப்பட்டிருக்கிறேன்’’ என்று எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி நினைவில் பசுமையாக இருக்கிறது. குழந்தை பிறந்த சில நாட்களில் உனது வீட்டுக்கு வந்திருந்தேன். சிறு கண்களுடன் மென்சிறு பாதங்களுடன் அதில் இருக்கும் இன்னும் சிறிய மென்மையான விரல்களுடன் அன்றலர்ந்த தாமரை போல குழந்தையைக் கண்ணுற்ற கணத்தை இப்போதும் நினைவில் மீட்டிட முடிகிறது.  சில நாட்களுக்கு முன் , உனது வீட்டுக்கு வந்திருந்த போது குழந்தை பள்ளிக்குச் சென்றிருக்கும் விபரத்தைக் கூறினாய். அப்போதிலிருந்து குழந்தையைக் குறித்து நினைத்துக் கொண்டேயிருந்தேன். குழந்தைக்குப் பரிசாக ஏதேனும் அளிக்க வேண்டும் என நினைத்தேன். என் மனதில் பரிசுப்பொருள் என்றால் அது புத்தகம் என்பதாக பதிவாகியிருக்கிறது. எனக்கு புத்தகத்துடன் அதிக பரிச்சயம் என்பது காரணமாக இருக்கலாம். பள்ளி செல்லும் ஐந்து வயது குழந்தைக்கு என்ன புத்தகத்தைப் பரிசளிக்கலாம் என இரண்டு நாட்களாக இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். இப்போது தான் குழந்தை அட்சரங்களுக்குப் பழகியிருக்கும். எனவே சிறு சிறு வார்த்தைகள் கொண்ட படக்கதைகள் குழந்தைக்கு ஆர்வமளிக்கக்கூடும் என எண்ணினேன். ஐந்து வயதுக் குழந்தை என்பதால் வண்ணம் தீட்டும் ஓவிய நூல்கள் குழந்தைக்கு சந்தோஷம் தரும் என்பதால் அவற்றையும் தேர்ந்தெடுத்தேன். 

குகை ஓவியங்கள் சிலவற்றை நான் கண்டிருக்கிறேன். இன்றிலிருந்து 20,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. உலகில் எங்குமே எந்த மொழியும் உருவாகாமல் இருந்த காலகட்டத்தில் குகையில் வாழ்ந்த ஆதிமனிதர்கள் வரைந்தவை. ஓவியம் தீட்டுவது மனிதனுக்கு இயல்பாக வருவது. எல்லா குழந்தைகளும் இயல்பாக ஓவியம் வரைய விரும்புகின்றன. உண்மையில் அட்சரங்களை எழுதுவதை விட ஓவியம் வரைவது குழந்தைகளுக்கு இயல்பானது. பெற்றோர் தொடர்ச்சியாக ஓவியப் பயிற்சி புத்தகங்களை அளிக்க வேண்டும். தினமும் 15 நிமிடம் அல்லது 30 நிமிடம் ஓவியம் வரையச் சொல்ல வேண்டும். குழந்தை வரைந்த ஓவியங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். பாராட்ட வேண்டும். ஓவியம் ஒரு நுண்கலை. அந்த நுண்கலையின் அறிமுகமும் பரிச்சயமும் குழந்தைக்கு அளிக்கும் திறப்புகள் பெரியவை. 

மகாத்மா காந்தி தனது இரு கைகளாலும் எழுதும் பழக்கம் கொண்டவர். சற்று முயன்றால் அட்சரம் எழுதத் துவங்கும் எல்லா குழந்தைகளுக்குமே இரு கைகளால் எழுதும் ஓவியம் வரையும் பயிற்சியைத் தர முடியும். 

இப்போது நீ வசிப்பது மாநகரத்தில் என்பதால் ஆகச் சாத்தியமான மொழிகளை குழந்தைக்கு கற்பிக்க வேண்டும். தாய்மொழியில் பேச சரளமாக எழுத ஊக்குவிக்க வேண்டும். குழந்தைக்கு சமஸ்கிருதம் பயிற்றுவிக்க ஏற்பாடுகளைச் செய். கோடானுகோடி மக்களை பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் சமஸ்கிருதம் இணைத்திருக்கிறது. உலகின் மிகப் பெரிய இதிகாசம் மகாபாரதம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. நம் நாட்டின் எல்லா மொழியில் இருக்கும் பெரும் படைப்புகளின் துவக்கப் புள்ளியாக சமஸ்கிருதம் இருந்திருக்கிறது.   ஐரோப்பாவின் மொழி ஒன்றையும் குழந்தைக்குப் பயிற்றுவிக்கலாம். ஃபிரெஞ்சு மொழி எனது தேர்வு. 

 குழந்தை பேட்மிட்டன், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாட தினமும் நேரம் ஒதுக்கும் வகையில் நீ உதவி செய். யோகாசனங்களை நமது நாடு தான் உலகுக்கு அளித்தது. தினமும் 30 நிமிடம் யோகாசனங்கள் செய்யும் வண்ணமான சூழ்நிலையை குழந்தைக்கு உருவாக்கிக் கொடு. 

மூன்று மொழிகள், ஓவியம் இசை போன்ற நுண்கலைகளின் அறிமுகம், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட குழந்தையின் வாழ்க்கை என்பது ஆகச் சிறந்ததாக அமையும் என்பதில் ஐயம் ஏதுமில்லை. 

சிறு வயதில் குழந்தைகளின் ஆர்வமும் விருப்பங்களும் பயிற்சிகளும் எவ்விதம் இருக்கிறதோ அதே விதமாகவே பெரியவர்கள் ஆனதும் அவர்கள் வாழ்க்கை அமையும் என்பதே உண்மை. நமது நாட்டில் குழந்தைகளை அதனால் தான் எளிய சூழலில் வாழ்வை அமைத்துக் கொள்ள பயிற்றுவித்தார்கள். தசரத குமாரர்கள் வசிட்டரின் குருநிலையில் பயின்றவர்கள். பாண்டவர்கள் கிருபரிடமும் துரோணரிடமும் பயின்றவர்கள். ஸ்ரீகிருஷ்ணன் கோகுலத்தில் ஆநிரை மேய்த்து வாழ்ந்தவன். குழந்தைப் பருவத்தில் அவர்கள் பெற்ற பயிற்சியே அவர்களின் செயற்கரிய செயல்களுக்குக் காரணமாக அமைந்தது. குழந்தைகளுக்கு நாம் பல விஷயங்களை அறிமுகம் செய்ய வேண்டும். எந்த விஷயமும் ‘’அறிமுகம் பரிச்சயம் தேர்ச்சி’’ என்ற மூன்று நிலைகளைக் கொண்டது. நாம் பத்து விஷயங்களை அறிமுகப்படுத்தினால் அவர்கள் ஆறு விஷயங்களில் பரிச்சயமாகி மூன்று விஷயங்களில் தேர்ச்சி அடைவார்கள். சத்ரபதி சிவாஜியின் உருவாக்கத்தில் அவருடைய அன்னைக்கு தீவிரமான பங்கு இருந்தது. மகாத்மா காந்தியின் உருவாக்கத்தில் அவரது அன்னையின் பங்கு மகத்தானது. 

உலகிலேயே நம் நாட்டில் தான் குழந்தைகளை தெய்வ ரூபங்களாகக் காணும் வழக்கம் இருக்கிறது. உலகில் பிறக்கும் எந்த குழந்தையுமே நசிகேதஸ் ஆக துருவன் ஆக அர்ஜுனனாக ஸ்ரீகிருஷ்ணனாக சுகப் பிரம்மமாக ஆகும் திறன் கொண்டது. ஒவ்வொரு குழந்தையும் தெய்வ நிலை எய்தும் நிலைக்கு உகந்த சூழலை உண்டாக்க வேண்டியது உலகத்தார் அனைவரின் கடமை. 

குழந்தையின் அகம் கடல் போல விரிந்திருக்கவும் உலகம் எனப் பரந்திருக்கவும் உதவுவது நம் கடமை. நம் அனைவரின் கடமை. 

அன்புடன்,
பிரபு

Thursday 16 November 2023

புதிய முயற்சியொன்றின் துவக்கம்

இங்கே எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரை பத்தாண்டு காலமாக நான் அறிவேன். அறிமுகமான இரண்டு ஆண்டுகளில் அவர் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். ஐந்து ஆண்டுகள் அங்கே இருந்தார். பின்னர் இங்கு வந்து ஒரு வெல்டிங் பட்டறை ஆரம்பித்தார். பட்டறை நல்ல விதமாகப் போகிறது. அவ்வப்போது அவரை சந்திப்பேன். இன்று அவரது பட்டறைக்குப் போயிருந்தேன். அவர் ‘’காவிரி போற்றுதும்’’ ஆற்றும் பணிகள் குறித்து அறிவார். இன்று என்னிடம் நன்னிலம் அருகில் தனக்கு 3 ஏக்கர் நிலம் இருக்கிறது என்று கூறினார். அவரிடம் விவசாய நிலம் இருப்பது எனக்கு இது நாள் வரை தெரியாது ; அதாவது நிலத்தை அவரது மூத்த சகோதரர்தான் இத்தனை நாள் குத்தகைக்கு விவசாய்ம் செய்திருக்கிறார். ஆதலால் இது குறித்த பேச்சு எழுந்ததில்லை. இன்று அவர் என்னிடம் சொன்னதும் அந்த 3 ஏக்கர் நிலத்தில் முழுமையாக தேக்கு பயிரிடுமாறு சொன்னேன். 

‘’அண்ணன் ! நாம எல்லாருமே வேலை செய்றது சம்பாத்தியம் வேணும்ங்கறதுக்காகத் தான். பட்டறைல எவ்வளவு கடுமையா எத்தனை நாள் உழைச்சிருப்பீங்க. இந்த உழைப்புல 10 சதவீதம் தேக்குக்குக் கொடுத்தா போதும். நாமல்லாம் காலைல வேலை செய்யற இடத்துக்கு வந்தா இன்னைக்கு எத்தனை வேலையை செஞ்சு முடிச்சோம்னு நினைச்சு சந்தோஷப்படற ஆளுங்க அண்ணன். சிருஷ்டி ஸ்திதி சம்ஸ்காரம்னு நம்ம மரபு சொல்லுது. இரும்புத் தொழில்ல நீங்க அடைஞ்ச அனுபவம் இது தான் அண்ணன். நாளைக்கே உங்க நிலத்தைப் போய் பார்ப்போம். வயலை மேடாக்கி தேக்கு நடுவோம். வெல்டிங் பட்டறை வேலைக்கான மெனக்கெடுல 10 பர்செண்ட் தான் தேக்கு வயல்ல வேலை. தண்ணீர் ஊத்தறதும், கவாத்து செய்யறது மட்டும் தான் வேலை. நமக்குத் தேவை அந்த தாவரத்தோட 10 அடி உயரத் தண்டுதான். உங்களுக்கு நான் கூட இருந்து கைட் பண்றன். எண்ணி 15 வருஷம் அண்ணன். உங்க கைக்கு பத்து கோடி ரூபாய் வந்து சேரும். இது நிச்சயம்’’ என்றேன். 

அண்ணன் கண் கலங்கி விட்டார். 

’’நாளைக்கு காலைல 9.30க்கு நான் பட்டறைக்கு வந்துடறன். நாம ரெண்டு பேரும் போய் நாளைக்கு வயல பாத்துட்டு வர்ரோம்’’ என்றேன். 

நண்பர் ஆமோதித்தார். 

‘’காவிரி போற்றுதும்’’ என்ன செய்திருக்கிறது என்ற கேள்வி எனக்கு அவ்வப்போது எழும். நண்பர் உளம் பொங்கி எழுந்த கண்ணீரே அதற்கான பதில் என அப்போது எண்ணிக்கொண்டேன்.   

Monday 13 November 2023

பள்ளி வளாகத்தில் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட மரம்


 

இரு வாசிப்புகள்

சமீபத்தில் இரு நூல்களை வித்யாசமான இரண்டு சூழ்நிலைகளில் வாசித்தேன். 

முதல் புத்தகம் வி.சுதர்ஷன் எழுதிய ‘’குற்றமும் தீர்ப்பும்’’ என்ற நூல். ஊரிலிருந்து பண்ணுருட்டி வரை செல்ல வேண்டியிருந்தது. மதியம் பேருந்தில் செல்வதாக திட்டம். பேருந்து நிலையத்திற்கு புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தான் தபால் மூலம் அந்த புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்தது. பின்னட்டை வாசகத்தை வாசித்தேன். நடுவே ஒரு பக்கத்தை வாசித்தேன். அந்த நூலைக் கையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பேருந்து நிலையத்துக்குக் கையிலேயே கொண்டு சென்றேன். பேருந்தில் ஏறி அமர்ந்தேன். நான் ஏறிய பேருந்துக்கு முன்னால் ஒரு பேருந்து கிளம்ப யத்தனித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் அதில் எல்லா இருக்கைகளும் நிரம்பியிருந்தன. எனவே அமர இடம் இருந்த அடுத்த பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். அமர்ந்த உடன் வாசிக்க ஆரம்பித்தேன். முதல் வரியிலிருந்தே நூலில் ஆழ்ந்து விட்டேன். முதல் வண்டி கிளம்பிப் போனது ; நான் இருந்த வண்டி மேலும் பயணிகளை ஏற்றிக் கொண்டது ; வண்டி ஊர் எல்லையைக் கடந்தது என எதுவுமே நினைவில் இல்லை . வாசித்துக் கொண்டேயிருந்தேன். நடத்துநர் டிக்கெட் என நினைவுபடுத்தினார். டிக்கெட் வாங்கிக் கொண்டு தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். சிதம்பரம் சென்று சேர்வதற்குள் அந்நூலின் மூன்றில் ஒரு பகுதியை வாசித்திருந்தேன். சிதம்பரத்தில் பண்ணுருட்டி செல்லும் பேருந்து ஒன்றில் ஏறினேன். நடத்துநர் கீழே நின்றிருந்தார். அவரிடம் சென்று டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டேன். வண்டி கிளம்ப 20 நிமிடம் ஆகும் என்றார். பரவாயில்லை என்று சொல்லி டிக்கெட் வாங்கிக் கொண்டேன். ஜன்னல் ஓர இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டு வாசிப்பைத் தொடர்ந்தேன். பேருந்தில் என்ன நடந்தது என்பது என் கவனத்தில் இல்லை. வாசித்துக் கொண்டேயிருந்தேன். நூலுக்குள் ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. வஞ்சம், பொறாமை, துரோகம், கண்ணீர் , கொலை, ரத்தம் என பல பல நிகழ்வுகள். நூலை முழுமையாக வாசித்து முடித்த போது பண்ணுருட்டி இன்னும் 5 கி.மீ தூரத்தில் இருக்கிறது என மைல்கல் காட்டியது. அதாவது நூறு கிலோ மீட்டர் பயண தூரத்தில் நூலை வாசித்திருக்கிறேன். பின்னர் நண்பர்களிடம் அந்த நூலின் நிகழ்வுகளை ஒரு கதையெனச் சொன்னேன். குறைந்தது 15 பேரிடம் சொல்லியிருப்பேன்.  பேருந்து பயணத்தின் போது ஜன்னலின் வழியே வெளிக்காற்று முகத்தில் மோதிய நினைவைத் தவிர வெளிக்காட்சி எதையும் கண்ட ஞாபகம் கூட இல்லை. முழுவதும் நூலில் மூழ்கியிருந்தேன். 

சென்ற வாரம் சென்னை செல்ல வேண்டியிருந்தது. நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். அங்கே ஒரு நண்பர் எனக்கு ‘’ஸ்ரீ ரமண விஜயம்’’ நூலை வாசிப்பதற்காக அளித்தார். அன்று இரவு ரயிலில் ஊர் திரும்ப ரயில் நிலையம் வந்தோம். ரயில் நாங்கள் சென்று பதினைந்து நிமிடம் கழித்து வந்தது. முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்டோம். அமர இடம் கிடைத்தது. ரயில் புறப்பட 30 நிமிடம் இருந்தது. அப்போதே அந்த நூலை வாசிக்கத் தொடங்கினேன். ரயில் புறப்பட்டது தெரிந்தது. ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் வண்டி ரொம்ப நேரம் நிற்பதாகத் தோன்றியது. நண்பரிடம் ‘’செங்கல்பட்டு நிலையமா?’’ என்று கேட்டேன். நண்பர் தாம்பரம் என்றார். தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருந்தேன். வண்டி சீர்காழியை அடைந்த போது நூலை முழுமையாக வாசித்திருந்தேன். ஆறு மணி நேரப் பயணம். ஒரு முழு நூலின் வாசிப்பும் நிறைவு பெற்றிருந்தது. 

வாசிக்கும் நூலுடன் ஒத்திசைவது என்பது நூல் வாசிப்பில் மிகவும் முக்கியமானது. நம்மால் எளிதில் ஒத்திசையக்கூடிய நூல்களைக் கண்டடைந்து தொடர்ச்சியாக வாசிப்பது என்பதும் வாசிப்பில் முக்கியமானது.