Wednesday 31 January 2024

டேங்க் ஃபுல் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் மோட்டார்சைக்கிளில் ஒரு இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தனது வாகனத்தின் பெட்ரோல் டேங்க் ஐ முழுமையாக நிரப்பும் - அதாவது டேங்க் ஃபுல் செய்யும்- பழக்கம் கொண்டவர். ஒருமுறை டேங்க் ஃபுல் செய்தால் வண்டி 650 கி.மீ தூரம் செல்லும். ஒரு மாநிலத்தையோ அல்லது இரண்டு மாநிலத்தையோ கூட தாண்டி விடுவார். வண்டியில் பெட்ரோல் நிரம்பியிருக்கிறது என்பது ஒரு மகிழ்ச்சி. ஒரு உற்சாகம்.   

ஊரில் இருக்கும் போது அமைப்பாளர் ஒரு நாளைக்கு வண்டிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போடுவார். அது 60 கி.மீ செல்லும். வீடு கடைத்தெரு பணியிடம் என நகர எல்லைக்குள் சுற்றுவதால் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் என்பது அவருக்கு சரியாக இருக்கும். ஆனால் தினமும் காலை வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டால் முதலில் செல்லும் இடம் பெட்ரோல் பங்க் ஆக இருக்கும். தினமும் ஒரு லிட்டர் பெட்ரோல். 

இந்த மாறாச் செயல்பாட்டை மாற்ற நினைத்தார் அமைப்பாளர். பத்து நாட்களுக்கு முன் பங்க் குக்கு சென்றவர் ’’டேங்க் ஃபுல்’’ என்றார். டேங்க் ஃபுல் செய்து கொண்டார். 

பத்து நாட்களாக பங்க் பக்கம் செல்லவே இல்லை. நாளை அல்லது நாளை மறுநாள் ‘’ரிசர்வ்’’ வரலாம். அப்போது மீண்டும் டேங்க் ஃபுல் செய்து கொள்ளலாம் என இருக்கிறார். 

’’டேங்க் ஃபுல்’’ என்பது அமைப்பாளருக்கு மோட்டார்சைக்கிளில் மீண்டும் ஒரு இந்தியப் பயணத்தை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. 

Monday 29 January 2024

யானை பிழைத்தவேல் - ஒரு கடிதம்

வணக்கம் நண்ப! 

நலமா

எனது பெயர் தயானந்தா. லண்டனில் இருக்கும் இலங்கைத் தமிழன்.உங்கள் ராமாயாணத் தேடலின் ரசிகன். ஓர் ஒலிபரப்பாளன், இலங்கை வானொலியிலும் பின்னாட்களில் பிபிசி இலும் பணியாற்றி இப்போது (60 வயதை எட்டுகிறேன்) பழைய பதிவுகளை எண்ணிமப் படுத்துகிறேன். 40 பாகங்களாக இலங்கை வானொலியில் ஒலிபரப்பான எனது ராம நாடகத்தை மீளக்கேட்கவும் பிரதிகளை பதிவிடும் பணியிலும் ஈடுபடுகிறேன்.  இணையத்தை சுற்றியபோது உங்கள் எழுத்துகளை பார்த்து ரசித்தேன்,தொடர்பு கொள்ள விரும்புகிறேன். உங்கள் இலக்கத்தை அனுப்பவும். 
எனது இலக்கம் ------------
 
என்றும் அன்புடன்
இளையதம்பி தயானந்தா 

Friday 26 January 2024

ஒருமைப்பாடு

 என்னுடைய மோட்டார்சைக்கிள் பயணத்தில் வட இந்தியாவில் - குறிப்பாக ராஜஸ்தானில் - பல தமிழகத் தொழிலாளர்களைச் சந்தித்திருக்கிறேன். தொழிலாளர்கள் என்றும் சொல்லலாம். சிறு தொழில்முனைவோர் என்றும் சொல்லலாம். அதிகமும் நாமக்கல் சேலம் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது அவர்களின் பணி. அதற்கான பெரிய அளவிலான லாரிகள் அவர்களிடம் இருக்கும். ஒரு லாரியில் ஆறிலிருந்து எட்டு பேர் இருப்பார்கள். அந்த லாரியின் அடியில் படுத்து உறங்குவார்கள். அருகில் இருக்கும் மரத்தடியில் சமைத்து உண்பார்கள். காலை 6 மணி அளவில் வேலையைத் தொடங்கி விட்டு ஐந்து மணி நேரம் வேலை செய்து விட்டு காலை 11 மணிக்கு உணவு உண்பார்கள். பின்னர் மதியம் 3 மணி வரை வேலை. முப்பது நிமிடம் ஓய்வெடுத்து விட்டு 3.30க்கு பணி தொடங்கினால் சூரியன் அஸ்தமனம் ஆகும் மாலை 6.30 வரை பணி. அதன் பின் குளியல். இரவு 8 மணிக்கு இரவு உணவு. அங்கெல்லாம் 1000 அடி 1500 அடி ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு 150 அடி ஆழம் சென்றால் கூட ஒரு வேலையை முடிக்க 10 நாள் ஆகும். உடன் அடுத்தடுத்த ஊர்களில் வேலை இருக்கும். 8 பேர் கொண்ட ஒரு குழு நான்கு மாதம் வேலை செய்திருக்கிறது என்றால் அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் மேலும் 8 பேர் நாமக்கல்லில் இருந்து ராஜஸ்தானுக்கு வந்து சேர்வர். ராஜஸ்தானில் இருந்த குழு ஒரு மாதம் நாமக்கல் வந்து தங்கள் குடும்பத்தினருடன் இருந்து விட்டு மீண்டும் ராஜஸ்தான் சென்று விடுவர். இத்தகைய குழுக்கள் பலவற்றை ராஜஸ்தானிலும் மகாராஷ்டிராவிலும் சந்தித்திருக்கிறேன். அனேகமாக அவர்கள் உணவு உண்ணும் நேரமான காலை 11 மணி அளவில் அவர்களைக் காண்பேன். சேர்ந்து உணவு உண்ண அழைப்பார்கள். 

சொந்த ஊரில் வேலை செய்வதை விட நாட்டின் தொலைவான பகுதிகளில் வேலை செய்வது லாபகரமானது என்று சொல்வார்கள். முதல் விஷயம் செய்வதற்கு நிறைய வேலை இருந்து கொண்டே இருக்கும். இரண்டாம் விஷயம் ஊரில் வேலை நேரம் என்பது காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை. எட்டு மணி நேரம் மட்டுமே. ஆனால் வெளியே 12 மணி நேரம் பணி. அதற்கான கூடுதல் ஊதியம் தினமும் கிடைக்கும். ஊரில் இருந்தால் உறவினர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும். வெளியூரில் அந்த கட்டாயம் இல்லை. ஏன் இவ்வளவு தொலைவில் வந்து பணி புரிகிறோம் என்பதற்கு பல காரணங்கள் கூறுவார்கள். 

நான் கட்டுமானத் தொழிலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. முதல் முறையாக என்னுடைய கட்டுமானப் பணியில் வட இந்தியத் தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். கட்டிடத்துக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

Tuesday 23 January 2024

ஸ்ரீராமர் முடிசூடல்

  


அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க வெண்ணையூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி


Monday 22 January 2024

அஞ்சனக் கருமுகில் கொழுந்து

ஒருபகல் உலகு எலாம் உதரத்து உள் பொதிந்து
அருமறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திருஉறப் பயந்தனள் திறம் கொள் கோசலை (284) (கம்ப ராமாயணம்) 

நின்னொடும் எழுவரானோம்

குகனொடும் ஐவரானோம் முன்புபின் குன்று சூழ்வான்

மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின்வந்த

அகனமர் காதல் ஐய நின்னொடும் எழுவரானோம்

புகலருங் கானம் தந்து புதல்வரால் பொலிங்தான் உங்தை 



Sunday 21 January 2024

தீனபந்து

ஏந்தினன் இரு கைதன்னால்; ஏற்றினன் ஈமம்தன்மேல்;

சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன்; தலையின் சாரல்

காந்து எரி கஞல மூட்டி, கடன்முறை கடவாவண்ணம்

நேர்ந்தனன் - நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான். 

 

Saturday 20 January 2024

ஜன நாயகன்

எதிர்வரும் அவர்களை எமைஉடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா
எது வினை ? இடர் இலை?  இனிது நும் மனையும்
மதி தரும் குமரரும் வலியர் கொல் எனவே ( 314) (கம்ப ராமாயணம்)

வசிட்டரிடம் பாடம் பயின்று விட்டு அரண்மனை திரும்பும் போதெல்லாம் மக்களிடம் முகமலர்ச்சியுடன் இராமன், ‘’நான் தங்களுக்கு ஏதும் செய்ய வேண்டுமா? உங்களுக்கு ஏதேனும் துயரங்கள் உள்ளனவா? வீட்டில் மனைவி நலமாக இருக்கிறார்களா? மைந்தர்கள் நலம் தானே?’’ என வினவுகிறார்.

இப்பாடலில் ஓர் அவதானம் உள்ளது. அரசன் என்பவன் ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தலைவன். அவன் ஆயிரக்கணக்கானோருக்குத் தலைமை ஏற்பதாலேயே குறியீட்டு ரீதியில் குடை, செங்கோல் மற்றும் கிரீடம் ஆகியவற்றைச் சுமக்கிறான். எனினும் மக்களின் எல்லா பிரச்சனைகளையும் அரசனால் தீர்த்துவிட முடியாது. எந்த அரசனாலும். தன்னை அணுகுபவர்கள் கேட்பதை எல்லாம் செய்து விட முடியாது. வழங்கி விட முடியாது. இது அரசாட்சியின் எல்லை. அரசர்களின் எல்லை.

எனவே அரசனை அணுகும் எங்காவது தற்செயலாக சந்திக்க நேரும் எளிய மக்கள் அரச குழாமின் அமைப்பைக் கண்டு திகைத்திருப்பர். நியாயமாக ஏதேனும் கேட்க இருந்தால் கூட சொல்லெடுக்க முடியாமல் திணறிடுவர்.

இராமன் நல்லரசன். மக்களைக் கண்டதும் அவனே நான் ஏதும் தங்களுக்கு செய்ய வேண்டுமா என்று கேட்கிறான். அதுவே அவர்களுக்கு அவன் மேல் நம்பிக்கையூட்டும். நீங்கள் சொல்ல நினைக்கும் துயரங்கள் ஏதும் உண்டா என்கிறான். தங்கள் துயரைக் கேட்பதாலேயே அவர்கள் மனபாரம் குறையும். மக்களிடம் அவர்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரிக்கிறான் இராமன். பிரஜைகளுக்கு தங்களை நினைவில் வைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தரும். தங்கள் குடும்பத்தினரிடம் சென்று அரசன் உங்களை விசாரித்தான் எனக் கூறும் போது குடும்பமே மகிழும். தன் குடிகளின் உளம் அறிந்தவனாகவும் அவர்கள் மேல் கருணை கொண்டவனாகவும் இருக்கிறான் இராமன். 

Friday 19 January 2024

பால காண்டம்

ஓரிரு நாட்களுக்கு முன், ஒரு சிறு குழந்தை பாடும் சங்கீதத்தைக் காணொளிகளில் கண்டேன். அந்த குழந்தை 4 வயதிலிருந்தே பாடல் பாடுவதை அறிந்தேன். நான் இசை கேட்டு பழகியவனில்லை. எனினும் என்னுடைய செவிகளிலும் அக்குழந்தையின் குரல் தேவாமிர்தமாக ஒலித்தது. இப்போது அந்த குழந்தைக்கு 7 வயது. 

அக்குழந்தையின் நேர்காணல்கள் சிலவற்றைக் கண்டேன். பேட்டி எடுப்பவரிடம் அக்குழந்தை நாம் சேர்ந்து ஒரு பாடல் பாடலாமா என்கிறது. பேட்டி காண்பவர் நான் இசை அறியாதவன் என்கிறார். நான் உங்களுக்கு கற்றுத் தருகிறேன் என்று கூறி ஏழு ஸ்வரங்களை சொல்லித் தருகிறது அக்குழந்தை. அதன் இசை ஆசிரியர் அதனிடம் பாடம் நடத்தும் முறையில் பேட்டி எடுப்பவரிடம் கற்றுத் தருகிறது. ‘’பிராக்டிஸ் செஞ்சா சரியா வரும்’’ என நம்பிக்கையூட்டுகிறது. 

தெய்வங்கள் குழந்தையாப் பிறந்து தவழ்ந்து வாழ்ந்த சிறப்பு கொண்டது நம் மண்.   

Thursday 18 January 2024

கரசேவை

கராக்ரே வஸதே லக்‌ஷ்மி 
கர மத்யே சரஸ்வதி
கர மூலே து கோவிந்த:
பிரபாதே கர தரிசனம்

என ஒரு சுலோகம் உண்டு. 

’’கைகளின் நுனியில் திருமகள் வசிக்கிறாள் ; கைகளின் மையப் பகுதியில் கலைவாணி வாசம் புரிகிறாள். கைகளின் மூலையில் கோவிந்தன் இருக்கிறான். காலை கண் விழித்ததும் கைகளை வணங்க வேண்டும்’’ என்பது அதன் பொருள். 

ஆடிப் பட்டம் , தை பட்டம் என விதைகளை விதைக்க இரண்டு பட்டங்கள். நாட்டுக் காய்கறிகள் 90 நாளிலிருந்து 120 நாட்களுக்குள் அறுவடைக்கு வருபவை. தை பட்டத்தில் விதைத்தால் சித்திரை மாதத்தில் அறுவடை செய்யலாம். சித்திரைப் புத்தாண்டை வரவேற்க தை பட்டத்தில் காய்கறி விதைகளை விதைப்பதை மரபாகக் கொண்டது நம் நிலம். சித்திரை என்பது வசந்த காலம். பூக்கள் பூத்துக் குலுங்குவது அக்காலத்தில் தான். தென்றல் காற்று வீசுவதும் அப்போதுதான். தென்றல் வீசும் பூக்கள் பூக்கும் காலத்தையே ஆண்டின் தொடக்கம் எனக் கொண்டது நம் தேசம். 

ஆடிப் பட்டம் மழைக்காலம் என்பதால் நாம் விதைக்கும் காய்கறிகள் மழையின் துணையால் மழைநீரின் ஊட்டத்தால் விரைவான வளர்ச்சி அடையும். தை பட்டத்தில் நம் கவனம் விதைகளுக்கு சற்று கூடுதலாகத் தேவை. 

இந்த ஆண்டு ஜனவரி துவங்கிய போது கிராமத்துக்கு செய்யும் நற்செயலுடன் ஆண்டின் துவக்கம் அமைய வேண்டும் என விரும்பினேன். நாட்டுக் காய்கறி விதைகளை கிராமத்தின் எல்லா குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் என விழைந்தேன். சென்னையில் உள்ள எனது நண்பர் கதிரவன் மிகுந்த முனைப்புடன் பூசணி, சுரை, பீர்க்கன் ஆகிய நாட்டுக் காய்கறி விதைகளை ஒவ்வொன்றிலும் 250கிராம் வீதம் தருவித்துக் கொடுத்தார். அதற்காக பெருமுயற்சி செய்தார். அவருக்கு நன்றி. ஒரு சில தினங்களுக்கு முன்பு விதைகள் வந்து சேர்ந்தன. அவற்றை 400க்கும் மேற்பட்ட வீடுகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கான வழிமுறை என்ன என யோசித்துக் கொண்டிருந்தேன். 

இந்த முறையுடன் சேர்த்து நாம் மூன்று முறை விதைகள் வழங்கியிருக்கிறோம். முதல் முறை விதைகளை ஒரு தாம்பாலத்தில் 6 தம்ளர்களில் எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று அந்த தம்ளரில் இருந்து விதைகளை எடுத்துக் கொள்ளுமாறு கூறினேன். திருமண மண்டபங்களில் ஒரு தாம்பாலத்தில் சந்தனம், ஜீனி, குங்குமம் ஆகியவை அளிக்கும் விதத்திலிருந்து அந்த எண்ணத்தை உருவாக்கினேன். 50 வீடுகளுக்குக் கொடுக்க ஒரு நாள் ஆனது. அதிலும் டம்ளர் நிரம்பியிருக்கும் போது அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொள்வது எளிதானது. பாதி காலியாகி விட்டால் அதனுள் கையை விட்டு எடுப்பது சற்று சிரமம். எனவே அடுத்த நாள் விதைகளை ஒரு காகிதப் பொட்டலத்தில் கட்டி ஒவ்வொரு வீட்டிலும் அளித்தேன். எனினும் இந்த பொட்டலம் கட்டுவது ஒரு பெரிய வேலை. இன்னும் எளிதான வழி இருக்குமா என யோசித்துக் கொண்டிருந்தேன். 

இம்முறை ஓர் எளிய வழியைக் கண்டடைந்தேன். அதாவது, கடையில் ஃபார்மஸியில் மாத்திரைகளைப் போட்டுத் தரும் மருந்து கடை கவர் வாங்கிக் கொண்டேன். நூறு கவரின் விலை ரூ.9. ஒரு கவரின் விலை ஒன்பது பைசா என வருகிறது. ரூ.36 கொடுத்து 400 கவர் வாங்கிக் கொண்டேன். 

இன்று அந்த கவர் ஒவ்வொன்றிலும் பூசணி, பீர்க்கன், சுரை விதைகளை கொஞ்சம் கொஞ்சம் நிரப்பினேன். நூறு கவர்களை நிரப்ப ஒரு மணி நேரம் ஆனது. தை மாதம் பிறந்து மூன்று நாள் ஆகியிருந்தது. தை மாதத்தின் முதல் மூன்று நாளுமே பண்டிகைகள். நான்காவது நாளான இன்று தான் மக்கள் தங்கள் வழமைகளுக்குத் திரும்பியிருப்பார்கள். ஐந்தாவது நாளான நாளையும் ஆறாவது நாளான நாளை மறுநாளும் விதைகளை அளிக்க உகந்த தினங்களாக இருக்கும். ஒவ்வொரு வீடாக 400 வீடுகளுக்கும் செல்ல வேண்டும். 

விதைப்பது, நீர் பாய்ச்சுவது, களையெடுப்பது, கவாத்து செய்வது, இயந்திரங்களை இயக்குவது என அனைத்துமே கரங்களால் நிகழ்த்தப்படுபவை என விதைகளை கவரில் நிரப்பும் போது மனதில் எண்ணம் தோன்றியது. உணவைப் பெருக்குதல் என்பது கரசேவையே. 

வாழ்க்கை ஒரு திருவிழா - ரத யாத்திரை - பூரி

இந்த ஆண்டு ஜூலை 7ம் தேதி பூரியில் ரத யாத்திரை. ஜூலை 3 அன்று காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரலில் கோரமண்டலைப் பிடித்தால் நான்காம் தேதி பூரி சென்றடையலாம். 



Wednesday 17 January 2024

வாழ்க்கை ஒரு திருவிழா - ஹோலி - மதுரா

இந்த ஆண்டு ஹோலி மார்ச் 25 அன்று கொண்டாடப்படுகிறது. அன்று மதுராவில் இருக்கத் திட்டம். சிவராத்திரியை காசியில் கொண்டாடி விட்டு மார்ச் 12 அன்று ஊர் திரும்புகிறேன். அடுத்த 10 நாட்களில் மீண்டும் ஒரு வட இந்தியப் பயணம். 22ம் தேதி இரவு சென்னை சென்ட்ரலில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸைப் பிடித்தால் 24ம் தேதி அதிகாலை மதுராவில் இருக்கலாம். 24,25,26 ஆகிய மூன்று நாட்கள் மதுராவில். 26 இரவு கிளம்பி 28 இரவு ஊர் வந்து சேர முடியும்.  

 

நான் எனும் பாரதீயன் - கே கே முகமது (மறுபிரசுரம்)

 

இந்தியத் தொல்லியல் துறையில் பணியாற்றிய திரு. கே. கே. முகமது அவர்கள் தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியுள்ளார். தனது தாய்மொழியான மலையாளத்தில் எழுதப்பட்ட ‘’ஞான் என்னும் பாரதீயன்’’ என்னும் நூல் தமிழில் ‘’நான் எனும் பாரதீயன்’’  என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில் வெளியாகி உள்ளது. 

கேரளாவின் மலபார் பகுதியில் கொடுவள்ளி கிராமத்தில் பீரான் குட்டி - மரியோம்மா தம்பதியினரின் மகனாகப் பிறக்கிறார் திரு. கே. கே. முகமது. ஐந்து சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் திரு. முகமதுவின் உடன்பிறந்தவர்கள். மரியோம்மா ஹஜ் யாத்திரை மேற்கொள்கிறார். அதன் பின் ஹஜ்ஜூம்மா எனப்படுகிறார். அவருக்கு தனது மகன் ஒரு இமாம் ஆக வேண்டும் என்பது விருப்பம். தந்தை பீரான் குட்டிக்கு தனது மகனை ஒரு பொறியாளனாகக் காண வேண்டும் என்ற ஆவல். மதக்கல்வி பெற மதரசாவுக்கு அனுப்பப்படுகிறார் முகமது. எனினும் அவரது உள்ளம் பள்ளிக்கல்வியை நாடுகிறது. பலருடன் இணைந்து கற்கும் முறை தனது தனிமையைப் போக்கி தனக்கு பெருமகிழ்ச்சி தரும் என்ற எண்ணம் முகமதுவுக்கு இளமையிலேயே உருவாகி விடுகிறது. பள்ளியில் இணைந்து கல்வி கற்க முகமதுவுக்கு ஒரு வாய்ப்பு உண்டாகிறது. 

தனது வீட்டிலிருந்து சற்று தொலைவிலிருந்த பள்ளிக்கு தானும் சக மாணவர்களும் நடந்து செல்லும் சித்திரத்தை தீட்டிக் காட்டுகிறார் திரு. முகமது. அவ்வாறு நடந்து செல்கையிலேயே தன்னைச் சுற்றி இருக்கும் நிலம், இயற்கை, பறவைகள், பிராணிகள் , சக மனிதர்கள் ஆகியோர் குறித்த அறிமுகமும் பரிச்சயமும் ஈடுபாடும் தனக்கு உருவானதைப் பதிவு செய்கிறார். இன்றைய தலைமுறை மாணவர்களும் தங்கள் வாழிடத்துடன் தங்கள் சமூகத்துடன் இவ்வாறான உயிரோட்டமான தொடர்பில் இருப்பது அவர்கள் கல்வியின் முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும் என்பதை தனது விருப்பமாக நூலில் பதிவு செய்கிறார். 

தனது ஆரம்பக் கல்வி ஆசிரியர்களே தனது வாழ்வுக்கு ஒளி அளித்த ஆசான்கள் எனக் கூறும் திரு. முகமது அவர்கள் தனக்கு அளித்ததை இப்போதும் நினைத்துப் பார்ப்பதாக கூறுகிறார். ஒரு சமூகம் நன்னிலை பெற ஆரம்பக் கல்வி ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்ற அவதானத்தை நூலில் முன்வைக்கிறார் திரு. முகமது. தனது வாழ்க்கையின் மையக் காலகட்டம் ஒன்றில் தில்லியில் பிச்சை எடுக்கும் சிறுவர்களுக்காக ஆரம்பக் கல்வி அமைக்கும் மையம் ஒன்றை தொல்லியல் துறை நினைவுச்சின்னங்களின் அருகில் தனது மனைவி மற்றும் நண்பர்களின் உதவியுடன் துவங்கி நடத்துகிறார் திரு. முகமது. 2010ம் ஆண்டு தில்லி வந்த அப்போதைய அமெரிக்க அதிபரான திரு. பராக் ஒபாமாவுக்கு தில்லியில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை விளக்கும் வழிகாட்டியாக திரு. முகமது இருக்கிறார். அப்போது திரு. பராக் தன்னை திரு. முகமது கல்விப்பணி ஆற்றும் இடத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கூற அவ்வாறே நிகழ்கிறது. அங்கிருக்கும் மாணவர்களுடன் உரையாற்றும் ஒபாமா ‘’கல்வியே எல்லா இடர்களிலிருந்தும் மனிதர்களை விடுவிக்கும்’’ என்று பேசுகிறார். 2014ம் ஆண்டு மீண்டும் இந்தியா வருகை புரியும் திரு. பராக் ஒபாமா முன்னர் தான் சந்தித்த சிறுவர்களில் விஷால் என்ற சிறுவனைக் குறித்து விசாரித்து அறிகிறார். அந்த சிறுவன் அப்போது எட்டாம் வகுப்பு பயின்று கொண்டிருந்தான். அவனுடன் ஒரு உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அவனுடன் உரையாடினார் திரு. பராக் ஒபாமா என்ற தகவலை இந்த நூலில் பதிவு செய்கிறார் திரு. முகமது. 

கொடுவள்ளி கிராமத்து நூலகத்தில் இருந்த நாளிதழ்களும் புத்தகங்களுமே தன்னைத் தனக்கு அடையாளம் காட்டியதாகச் சொல்கிறார் திரு. முகமது. மாத்ருபூமி வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூலான ஜவஹர்லால் நேருவின் ‘’ டிஸ்கவரி ஆஃப் இந்தியா’’ நூல் தனக்கு வரலாற்றின் மீதும் தொல்லியல் மீதும் சிறு வயதிலேயே ஆர்வமளித்தது எனக் கூறுகிறார் திரு. முகமது. ராகுல் சாங்கிருத்யாயனின் நூல்களும் தனக்கு மிகவும் பிடித்தமான்வை என்பதையும் சொல்கிறார். 

அலிகர் பல்கலைக் கழகத்தில் வரலாறு படிக்கச் செல்கிறார். இடதுசாரிகளின் அறிமுகம் கிடைக்கிறது. இந்தியக் கல்வித்துறையில் எவ்வாறு இடதுசாரிகள் தங்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் சுயலாபத்துக்காக பெரும் சீரழிவுகளை உருவாக்கியிருக்கிறார்கள் - உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தனது பற்பல அனுபவங்களின் அடிப்படையில் விளக்கிச் சொல்கிறார் திரு. முகமது. அவர் அலிகரில் கல்லூரி மாணவனாக வரலாறு படிக்க ஆரம்பித்ததிலிருந்து தனது பணி ஓய்வு பெறும் வரை எவ்வாறெல்லாம் தனக்கு இன்னல்களையும் இடர்களையும் தொடர்ச்சியாக இடதுசாரிகள் அளித்தார்கள் என்பதை வாசகர் முன் வைக்கிறார். மேலும், இடதுசாரி தரப்பு எவ்விதம் கொடுவிளைவுகளை இந்திய கல்வித் துறைகளில் உருவாக்குகிறது என்பது குறித்து விரிவாக பதிவு செய்திருக்கிறார் திரு. முகமது அவர்கள். 

தொல்லியல் துறை அதிகாரியாக நாடெங்கும் பணி புரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பர்யம் குறித்து பெருமதிப்பு கொண்டவரான திரு. முகமது அவர்களுக்கு அந்த துறையில் தனது பங்களிப்பாக பல விஷயங்களை அளிக்க ஊழ் அவருக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. நூலில் ஒரு இடத்தில் தனது அனுபவம் ஒன்றைப் பதிவு செய்கிறார் முகமது. அதாவது, முகமது சட்டீஸ்கரில் பணி புரிகிறார். அப்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மலை மீதிருக்கும் பாழடைந்த சிவாலயம் ஒன்றினுக்குச் செல்கிறார். அந்த கோயிலின் அர்ச்சகர் ஒருவர் முகமதுவிடம் தொல்லியல் துறை மூலமாக இந்த கோயிலைச் சீரமைத்துத் தருமாறு கோரிக்கை வைக்கிறார். தான் சட்டீஸ்கர் மாநிலத்துக்கு மட்டுமே பொறுப்பாளர் என்றும் இந்த கோயில் போபால் அலுவலகத்துக்குக் கட்டுப்பட்டது என்பதால் தன்னால் ஏதும் செய்ய இயலாது என அர்ச்சகரிடம் வருத்தத்துடன் தெரிவித்து விட்டு வந்து சேர்கிறார் முகமது. அன்று இரவு உறக்கத்தில் திரு. முகமது அவர்களுக்கு ஒரு கனவு. கனவில் சிவபெருமான் தோன்றி அந்த ஆலயத்தைச் சீரமைக்குமாறு சொல்கிறார். முகமது பதில் சொல்வதற்குள் கனவு கலைந்து விடுகிறது. நூதனமான கனவுகளில் ஒன்று என்று எண்ணிக் கொள்கிறார் திரு. முகமது. மறுநாள் காலை அலுவலகம் செல்கிறார். அலுவலகம் சென்ற ஒரு மணி நேரத்தில் அவருக்கு தில்லியிலிருந்து ஒரு தொலைநகல் ( ஃபேக்ஸ்) வருகிறது. சட்டீஸ்கர் பொறுப்புடன் மத்தியப் பிரதேச பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டிருப்பதாக. உடன் அந்த சிவாலயம் செல்கிறார் முகமது. இந்த விஷயத்தை கோயில் அர்ச்சகரிடம் கூறுகிறார். அர்ச்சகர் முகமது இங்கே வருவதற்கு முதல் நாள் இரவில் சிவன் தன் கனவிலும் வந்ததாகவும் நாளை ஒரு அதிகாரி வருவார் அவரிடம் கோயிலை புனரமைக்கச் சொல் எனக் கூறியதாகவும் அதன் படியே அவர் முகமதுவிடம் கேட்டுக் கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார். அந்த கோயிலைப் புனரமைக்கிறார் முகமது. 

தொல்லியல் துறையில் பணி புரிந்த போது அரசியல்வாதிகளுடன் ஏற்பட்ட பல்வேறு மோதல்கள் குறித்தும் பதிவு செய்கிறார் முகமது. 

ராமஜென்ம பூமி இயக்கம் தீவிரம் கொண்டிருந்த காலகட்டத்தில் பாபர் கும்மட்டம் ஹிந்துக்களிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற தனது எண்ணத்தை ஒரு தொல்லியல் அறிஞர் என்ற கோணத்தில் முன்வைக்கிறார் முகமது. அதன் மூலம் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு ஆளாகிறார். இருப்பினும் தனது எண்ணத்தில் சிறிதும் மாற்றமின்றி இருக்கிறார் முகமது. இடதுசாரிகள் பாபர் கும்மட்டம் இருந்த இடம் பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் சொந்தமானது என்ற கருத்தை பரப்பிக் கொண்டிருந்த நிலையில் 1976-77ம் ஆண்டிலேயே அயோத்தி அகழ்வாராய்ச்சியில் கலந்து கொண்டவர் என்ற முறையில் கும்மட்டத்தின் தூண்களில் ஹிந்து தெய்வ உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதை ஆதாரமாகக் காட்டி அந்த இடம் கோவிலே என நிறுவுகிறார் முகமது. 

1990ம் ஆண்டு தினமணியில் திரு. ஐராவதம் மகாதேவன் ராமஜென்ம பூமி இடத்தில் இருந்தது ஆலயமா என்பதை அறிய மறு அகழாய்வு செய்யலாம் என்ற கருத்தை எழுதுகிறார். அதற்கு ஆதரவு தெரிவித்து ஒரு விரிவான கடிதத்தை திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார் திரு. முகமது. அந்த கடிதம் கண்ட திரு. மகாதேவன் திரு. முகமது அவர்களை அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்திக்கிறார். அந்த கடிதத்தை தினமணியில் வெளியிட விரும்புவதைத் தெரிவிக்கிறார். முகமது ஓர் அரசு அதிகாரி. ராமஜென்மபூமி விவகாரம் உச்சத்தில் இருக்கும் நேரம். இந்த நிலையில் அவரது பெயரில் கட்டுரை வெளியானால் திரு. முகமது அவர்களுக்கு சிக்கல் உருவாகக் கூடும் என்பதால் அந்த விரிவான கடிதம் ‘’ Letters to Editor'' பகுதியில் பிரசுரமாகிறது. அந்த கடிதத்தின் மொழிபெயர்ப்பு பெரும்பாலான இந்திய மொழிகளில் பிரசுரமாகிறது. ஒரு தொல்லியில் அறிஞரின் கூற்று என்ற வகையில் இந்த விஷயத்தில் அந்த கடிதம் முக்கிய ஆவணமாகிறது. 

பாபர் கும்மட்டம் இடிக்கப்பட்ட பின் நிகழ்ந்த அகழாய்வு அங்கு முன்னர் இருந்தது ஆலயம் என்பதை நிரூபித்தது. அந்த அகழாய்விலும் திரு. முகமது அவர்கள் இடம் பெற்றிருந்தார். ‘’ மரங்களும் நடுங்கும் குளிரில் சட்டையின்றி காலில் செருப்பு இன்றி தனது கடவுளான ஸ்ரீராமனை தரிசிக்க பல நூறு மைல் நடந்து வரும் ‘’ மனிதனின் உணர்வு மதிக்கப்பட வேண்டும் என்ற தனது உணர்வை நூலில் பதிவு செய்கிறார் திரு. முகமது. 

இன்றைய காலகட்டத்தில் தொல்லியல் துறை பண்பாட்டையும் நாட்டின் தொன்மையையும் தனது குடிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டியதின் அவசியத்தையும் அதே நேரம் தொல்லியில் துறை லாபமீட்டும் வகையிலும் செயல்பட வேண்டியதின் தேவையையும் திரு. முகமது முன்வைக்கிறார். 

உண்மை குறித்த தேடல் உள்ளவன் அடையும் மனநிறைவு என ஒன்று உண்டு. அதனை தனது அனுபவங்கள் மூலம் பணிகள் மூலம் அறிந்தவர் திரு. முகமது அவர்கள். பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றவரான திரு . முகமது அவர்களுக்கு மத்திய அரசு 2019ம் ஆண்டு ‘’பத்மஸ்ரீ’’ விருது அளித்தது. 

நூல் : நான் எனும் பாரதீயன். ஆசிரியர் : திரு. கே. கே. முகமது விலை : ரூ. 180/- 
பதிப்பகம் : சங்கத்தமிழ் பதிப்பகம்,கோவை-12                          
( sangatamilpathippagam(at)gmail(dot)com) 

Monday 15 January 2024

வாழ்க்கை ஒரு திருவிழா - சிவராத்திரி - காசி


இந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி சிவராத்திரி. சிவராத்திரியை ஒட்டி காசி செல்ல உள்ளேன். 

மார்ச் 3ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி செல்லும் ரயில் ஊர் வழியே செல்கிறது. அதில் ஏறி பிரயாகை வரை பயணம். மார்ச் 4 அன்று இரவு 10 மணிக்கு  பிரயாகை சென்றடைகிறது. 5ம் தேதி முழுக்க பிரயாகை திரிவேணி சங்கம தரிசனம். அன்று இரவு காசி சென்றடைதல். 

நான்கு நாட்கள் காசி வாசம். 

10ம் தேதி காசியிலிருந்து புறப்பட்டு 12ம் தேதி ஊர் திரும்புகிறேன். 


வாழ்க்கை ஒரு திருவிழா ( மறுபிரசுரம்)


இன்று எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. பல வருடங்களாக அதைப் பற்றி எண்ணியிருக்கிறேன். இப்போது சட்டென ஒரு சாத்தியமான வடிவம் உருவாகி விட்டதாக உணர்ந்தேன். 2020ம் ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்களில் முற்றிலும் திளைத்திருப்பது என்று முடிவு செய்தேன். இந்த திட்டமிடலை சரியான காலகட்டத்தில் யோசித்திருப்பதாகத் தோன்றுகிறது. 2020 ஜனவரிக்கு இன்னும் எழுபத்து ஆறு நாட்கள் இருக்கின்றன. பயணங்களை – பயண முன்பதிவுகளை வகுத்துக் கொள்வதற்கு போதுமான அவகாசம் கிடைக்கிறது. ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு கொண்டாட்டம் என்பது திட்டம். எந்த விழா இந்தியாவில் எந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து கூட்டுக் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறதோ அங்கே சென்று அதில் இணைந்து கொள்வது. இந்த எண்ணத்தை இன்று தான் அடைந்தேன். நாம் ஒரே விதமான சூழலில் நம் வாழ்நாள் முழுதும் இருக்கிறோம். ஒரே விதமான எண்ணம். ஒரே விதமான நோக்கு. ஒரே விதமான அனுபவம். அதனை இந்த திட்டம் மாற்றியமைக்கும் என்று எண்ணுகிறேன். பன்னிரண்டு மாதம் பன்னிரண்டு விழாக்கள். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாநிலத்தின் கொண்டாட்டத்தில் இருப்பது. பயண நாட்கள் சேர்த்து ஒரு வாரம் என்று வைத்துக் கொள்ளலாம். ரயில் பயணமாகவே வைத்துக் கொள்ளலாம். பயணத்துக்கு மூன்று நாட்கள். கொண்டாட்டத்தில் நான்கு நாட்கள்.


1. சர்வதேச காற்றாடித் திருவிழா

குஜராத்தில் இந்த விழா ஜனவரியில் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்த விழாவுக்காக கூடுகிறார்கள். மகர சங்கராந்தியைக் கொண்டாடும் விதமாக மக்கள் வானில் விதவிதமான ஆயிரக்கணக்கான பட்டங்களைப் பறக்க விடுவர். ஆயிரம் வண்ணக் கனவுகள் சிறகடிக்கும் வானம். நம் அகம் எழுந்து விண் தொடும் தருணம் வாய்க்கக் கூடிய திருவிழா.

உலக நாடுகள் பலவற்றிலுமுள்ள பட்டம் தயாரிப்பவர்கள் இங்கே தங்கள் புதிய பட்டங்களை விற்பனை செய்கின்றனர். குஜராத் மாநில அரசு இந்த விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து சர்வதேச முக்கியத்துவம் கொண்டதாக மாற்றியுள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி 6 - ஜனவரி 14 வரை குஜராத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் இத்திருவிழா நடைபெறும். அகமதாபாத் காற்றாடித் திருவிழா மிகச் சிறப்பானது.





2. சிவராத்திரி


இரவு அருவமானது. தனித்துவம் கொண்டது. உலகியல் நம்மை பகலில் உழைப்பவர்களாகவும் இரவில் உறங்குபவர்களாகவும் ஆக்கியுள்ளது. வாழ்க்கையின் அகத்தின் ஆழமான உணர்வுகளை இரவு அடையாளம் காட்டக் கூடியது. ‘’உயிர்கள் அனைத்தும் உறங்குகையில் விழித்திருப்பவன் யோகி’’ என்கிறான் ஸ்ரீகிருஷ்ணன். வருடத்தின் ஒரு நாள் விழித்திருக்கும் இந்த இரவு நம் வாழ்க்கை குறித்த புரிதலை இன்னும் ஆழமாக்கக் கூடும்.சிவராத்திரி தினத்தை உஜ்ஜைன் மகா காலேஸ்வர் ஆலயத்திலோ அல்லது காசி விஸ்வநாதர் ஆலயத்திலோ கொண்டாடலாம். 2020ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று மகாசிவராத்திரி தினம்.

                                                                      
3. புத்த பூர்ணிமா
வாழ்க்கை நமக்குத் துயரமாக அனுபவமாகிறது. இருப்பின் துயர் மற்றும் உறவுகளின் துயர் மற்றும் பிரிவுகளின் துயர். துயரத்தின் அனுபவத்தை ஞானத்தின் முதல் படி என்றார் புத்தர். அதனை ஓர் உண்மை என்றார். துக்கம், துக்கத்திற்கான காரணம், துக்க நிவாரணம் மற்றும் துக்க நிவாரண மார்க்கம் என ஒட்டுமொத்த மானுடத்துக்கும் விடுதலையின் பாதையைக் காட்டினார். கயாவிலோ அல்லது லடாக்கிலோ புத்த பூர்ணிமாவைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளேன். ததாகதரின் அருள்வெளியில் சில தினங்கள். 2020ம் ஆண்டு மே மாதம் 7ம் நாள் புத்த பூர்ணிமா.




4. கணேஷ் சதுர்த்தி
சிவ கணங்களின் தலைவன் கணேசன். மாவீரன் ஆயினும் குழந்தை மனம் படைத்தவன். பேரறிஞன் எனினும் எளியவன். இந்தியாவில் இந்தியர்கள் மனதுக்கு மிகவும் பக்கத்தில் உணரும் கடவுள் விநாயகர். எந்த சடங்காயினும் முதல் மரியாதை அவருக்கே. மராத்தியம் விநாயகர் வழிபாட்டில் மிகவும் முன்னோடியான மாநிலம். திலகர் கணேஷ் சதுர்த்தியை மாபெரும் விழாவாக்கிய பூனாவில் கொண்டாடலாம் என இருக்கிறேன். 2020ம் ஆண்டு ஆகஸ்டு 22 அன்று கணேஷ் சதுர்த்தி



5. ஓணம்
கேரளா ஆலய மரபைப் பேணுவதிலும் சமயச் சடங்குகளை சிரத்தையுடன் மேற்கொள்வதிலும் முதன்மையான மாநிலம். காலைப் பொழுதில் ஏதேனும் ஓர் கேரள ஆலயத்தில் இருப்பது என்பதே மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஒட்டுமொத்த கேரளமும் கொண்டாடும் பண்டிகை ஓணம். 2020ம் ஆண்டு ஆகஸ்டு-31 அன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


6. துர்கா பூஜை
வங்காளம் சாக்தத்தின் மண். வைணவமும் சாக்தமும் செழித்து வளர்ந்த மண் வங்காளம். தீமையை அழிப்பவளாக - இல்லாமல் செய்பவளாக காளி வணங்கப்படுகிறாள். 2020ம் ஆண்டு அக்டோபர் 25 அன்று கல்கத்தாவில் துர்கா பூஜையைக் கொண்டாடலாம்.


7. குருநானக் ஜெயந்தி
பஞ்சாபில் குருநானக் ஜெயந்தி மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடப்படும். இந்திய வரலாற்றில் சீக்கியம் அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. சீக்கியர்கள் இல்லையெனில் வட இந்தியா இன்றிருக்கும் ஸ்திதியில் இருந்திருக்க முடியாது. இந்தியாவே இப்போதுள்ள வடிவம் கொண்டிருக்க முடியாது. வட இந்திய வரலாற்றில் குரு நானக்கும் குரு கோவிந்த் சிங்கும் மிகவும் முக்கியமானவர்கள். குரு நானக் அன்பையும் அமைதியையும் போதித்த ஆன்மீக குரு. அவரது உபதேசங்கள் ‘’குரு கிரந்த சாகிப்’’ என தொகுக்கப்பட்டது. குருத்வாராக்களில் அந்நூலே வழிபடப்படுகிறது. அந்நூலில் ராமன் பெயரும் கிருஷ்ணன் பெயரும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

குரு கோவிந்த் சிங் சீக்கியத்தை வீரம் செறிந்த சமயமாக்கினார். சிட்டுக்குருவிகளுக்கு வல்லூறை எதிர்க்கும் ஆற்றலைக் கொடுப்பேன் என்றார். அவர் உருவாக்கிய படை ‘’கால்சா’’. கேசம், கங்கணம். சீப்பு, குறுவாள், வாள் ஆகிய ஐந்தும் ஒவ்வொரு சீக்கியனும் கை கொள்ள வேண்டியவை. இன்றும் இந்திய ராணுவத்தில் மிக அதிக அளவில் பங்களிப்பவர்கள் சீக்கியர்களே.

குருத்வாராக்கள் பக்தர்களுக்கு உணவளிப்பதை கடவுளுக்குச் செய்யப்படும் பணியாக நினைக்கின்றன. பஞ்சாப்பில் குரு நானக் ஜெயந்தி மிகப் பெரிய கொண்டாட்டம்.2020ம் ஆண்டு நவம்பர் 30 அன்று குருநானக் ஜெயந்தி. அதை அமிர்தசரஸில் கொண்டாட வேண்டும்.


8. ரத யாத்திரை
ஒரு குடும்பத்தின் குழந்தைகள் தெய்வமாக வணங்கப்படும் இடம் பூரி. கிருஷ்ணன், பலராமன் மற்றும் சுபத்ரா. லட்சக்கணக்கான மக்கள் கூடும் பூரி ரத யாத்திரை ஒரு மாபெரும் கொண்டாட்டம். ஜூலை மாதத்தில் இவ்விழா நடைபெறும்.


9. கோகுலாஷ்டமி
இந்தியர்கள் மனதில் ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் இருக்கும் இடம் மகத்தானது. இந்தியர்களுக்கு கண்ணன் ஒரு குழந்தை. கண்ணன் ஒரு நண்பன். கண்ணன் ஒரு காதலன். கண்ணன் ஓர் ஞான ஆசிரியன். பிருந்தாவனத்தில் கண்ணன் பிறந்த அந்த நாளில் மதுராவில் இருக்க வேண்டும். 2020ம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று ஜென்மாஷ்டமி.


10. ஹோலி
ஹோலி வசந்தத்தின் வண்ணங்களின் திருவிழா. பல வண்ணம் கொள்ளும் போதே வாழ்க்கை அழகாகிறது. ஹோலி அழகின் திருவிழாவும் கூட. 2020ம் ஆண்டு மார்ச் 9 அன்று ஹோலி கொண்டாடப்படுகிறது.


11. பீகார் கால்நடைத் திருவிழா
அக்டோபரை ஒட்டி பீகாரில் உள்ள சோன்பூரில் உலகின் மிகப் பெரிய கால்நடைச் சந்தை கூடும். யானைகள், ஒட்டகங்கள், பசுக்கள், எருமைகள், ஆடு, கோழி என அனைத்து மிருகங்களும் விற்பனை செய்யப்படும். இந்தியர்களின் வாழ்வில் கால்நடைகள் மிக முக்கியமான உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்டவை. உலகின் மிகப் பெரிய கால்நடைச் சந்தையில் இருப்பது என்பது முக்கியமான அனுபவமாக இருக்கக் கூடும். 

                                                                                                                                                                    12. ராஸ லீலா

அஸ்ஸாமில் மஜூலி பகுதியில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ராஸ லீலா பாரம்பர்ய நடனங்களுடன் கொண்டாடப்படுகிறது. 
                         

பரவசமூட்டும் பன்னிரண்டு பயணங்களுக்கு - பன்னிரண்டு திருவிழாக்களுக்கு நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உடன் வருகிறீர்களா?  

பொங்கல் வாழ்த்துக்கள்


 

Saturday 13 January 2024

மனோகாரகன்

இங்கே எனக்கு ஒரு நெருக்கமான நண்பர் இருக்கிறார். அவரது உறவினர் ஒருவர் தஞ்சாவூரில் மனநோய் மருத்துவமனை ஒன்றில் மனநோய்க்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.  அவ்வப்போது நண்பர் செல்லும் போது நானும் அவருடன் உடன் செல்வேன். நண்பரின் உறவினரை அவ்வப்போது சந்திப்பது அவருக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதால் நண்பருடன் செல்வேன். அந்த மருத்துவமனையின் முன்பு ஒரு பூந்தோட்டம் அமைத்திருக்கிறார்கள். அங்கே சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களை ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம் அந்த பூங்காவில் இருக்கச் செய்வது சிகிச்சையின் ஒரு பகுதி. மலர்கள் மலர்ந்திருக்கும் அந்த பூந்தோட்டம் எவருக்குமே மன அமைதியைத் தரக் கூடியது. 

காலை நானும் நண்பரும் தஞ்சாவூர் பயணமானோம். காலை ஏழு மணிக்குக் கிளம்புவதாகத் திட்டம். பத்து நிமிடம் தாமதமாகக் கிளம்பினோம். காலை உணவை குடந்தையில் முடித்து விட்டு தஞ்சாவூர் சென்றடைந்த போது மணி பத்து. நண்பரின் உறவினரை மருத்துவமனை செவிலியர்கள் அறையிலிருந்து அழைத்து வந்தனர். எங்களைக் கண்டதும் மகிழ்ந்து புன்னகைத்தார். அப்போது எனக்கு ஒரு விஷயம் மனதில் தோன்றியது. அதாவது அடுத்த முறை வரும் போது அவரை ஊருக்கு அழைத்து வந்து விடலாம் என்று. சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் தென்படுகிறது. 

எனது நண்பர் அவரது உறவினரை தஞ்சை கடைவீதிக்கு அழைத்துச் சென்று சில பொருட்களை வாங்கிக் கொடுக்க விரும்பினார். நான் காத்திருக்கிறேன் ; அவரை அழைத்துச் சென்று வாருங்கள் என்று கூறினேன். இருவரும் புறப்பட்டுச் சென்றனர். நான் பூங்காவில் காத்திருந்தேன். 

நாம் பொருளியல் நலனையே நலன் என நினைக்கிறோம். நிச்சயம் பொருளியல் நலன் நலன் தான். அதில் எந்த ஐயமும் இல்லை. இருப்பினும் ஒவ்வொரு மனிதனுக்கும் உடல்நலனும் மனநலனும் முக்கியம். பொருளியல் நலன் இருந்து உடல்நலன் இல்லாமல் போனாலும் துயரம் தான். நம் சமூகத்துக்கு அவசியம் உடற்பயிற்சிகளும் விளையாட்டுகளும் அவசியம். உடல் என்பது உழைப்புக்கு உரியது. உடல் உழைப்பு கொடுக்காமல் இருப்பது உடலை வீணாக்குவதே அன்றி வேறல்ல. கைகளால் செய்யக் கூடிய கலைகள் மனதுக்கும் உடலுக்கும் மகிழ்ச்சி தரும். ஆரிகமி என்னும் கலை காகிதத்தில் பல உருவங்கள் செய்யும் கலை. களிமண்ணில் பொம்மைகள் செய்வது , குப்பைப் பொருட்களிலிருந்து விளையாட்டுப் பொருட்கள் செய்வது ஆகியவை மனதிற்கு தரும் ஆசுவாசம் மிகப் பெரியது. இந்த விஷயங்கள் ஒவ்வொரு வீட்டிலும் பயிலப் பட வேண்டும். இந்த விஷயங்கள் தொடர்பாக ஏதேனும் செயலை முன்னெடுக்க வேண்டும் என்று சிந்தித்தேன். 

இருவரும் திரும்பி வர மூன்று மணி நேரமானது. நண்பரின் உறவினர் மருத்துவமனை அறையிலேயே மாதக்கணக்காக இருக்க வேண்டியவர் என்பதால்  இன்னும் கொஞ்சம் நேரம் கூட இருந்து விட்டு வரட்டும் என எண்ணினேன். பொங்கல் பண்டிகை என்பதால் அங்கே சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் உறவினர்கள் பல ஊர்களிலிருது வந்திருந்தனர். ஒவ்வொரும் தங்கள் வீட்டில் சமைத்த உணவைக் கொண்டு வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தங்கள் உறவினர்களுக்கு அளித்தனர். வந்திருந்தவர்கள் எல்லாருடைய முகத்திலும் நம்பிக்கையின் ஒளியைக் கண்டேன். மனித வாழ்க்கைதான் எத்தனை விதமான உணர்ச்சிகரமான சூழ்நிலைகளைக் கொண்டது என எண்ணிய போது எல்லாவற்றையும் படைத்தவன் குறித்து எண்ணினேன்.  நண்பரின் உறவினரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினோம். 

அடுத்து ஒரு இரண்டரை மணி நேரப் பயணம். ஊர் வந்து சேர்ந்தோம். நேராக வண்டியை கட்டுமானப் பணியிடத்துக்கு விடச் சொன்னேன். நான்கு பேர் இன்று பூச்சுவேலை செய்து கொண்டிருந்தனர். பணி முன்னேற்றத்தைப் பார்த்து விட்டு வீடு திரும்பினேன்.  

Wednesday 10 January 2024

ஜெய் ஜவான்

இரண்டு நாட்களுக்கு முன்பு வரை இங்கே நல்ல மழை. நண்பர் ஒருவரைக் காண சீர்காழி சென்றிருந்தேன். வைத்தீஸ்வரன் கோவிலுக்கு இப்போது ஒரு சுற்றுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை மயிலாடுதுறை சீர்காழி சாலையுடன் இணையும் இடம் ஒரே சேறாக இருந்தது. திரும்பி வரும் போது, அங்கே ஒரு காட்சியைப் பார்த்தேன். அதாவது ஒரு இளைஞனின் வாகனம் சேறில் முழுமையாக சிக்கி விட்டது. அப்போது பெரிய தூறல் பெய்து கொண்டிருந்தது. இன்னும் சில நிமிடங்களில் பெருமழை பெய்யத் தொடங்கி விடும் என்னும் நிலை. அந்த இளைஞன் கை காட்டி உதவி கேட்டான். நான் எனது வண்டியை  சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்து விட்டு அவன் இருக்கும் இடத்துக்குச் சென்றேன். அவனது வாகனம் 150சி.சி வாகனம். அளவிலும் எடையிலும் பெரியது. நாங்கள் இருவரும் நகர்த்த முயற்சி செய்தோம். அந்த வாகனம் அசைந்து கொடுக்கவில்லை. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 

அப்போது ஒரு வயோதிகர் இரு சக்கர வாகனத்தில் வந்தார். நாங்கள் சேற்றில் இருந்த வாகனத்தை வெளியே கொண்டு வர மேற்கொள்ளும் முயற்சியில் அவரும் இணைந்து கொண்டார். எங்கள் இருவருக்கும் அவர் குறிப்புகள் கொடுத்தார். அதனை நாங்கள் பின்பற்றினோம். அவரும் தனது உடல் வலிமையால் முயன்றார். அவர் அளித்த குறிப்புகள் பின்பற்றப்பட்டதால் வாகனத்தை சேற்றிலிருந்து சாலைக்கு கொண்டு வந்து விட்டோம். 

எங்கள் இருவருக்கும் எப்படி வயோதிகர் இவ்வளவு எளிதில் திட்டமிட்டு வண்டியை மீட்டு விட்டார் என்று ஆச்சரியம். எங்கள் வியப்பைத் தெரியப்படுத்தினோம். 

‘’நான் எக்ஸ் மிலிட்டரி தம்பி ‘’ என்றார். 

நான் ‘’இன்ஃபேண்டரியா சார் ! எந்த ரெஜிமெண்ட் ?’’ என்று கேட்டேன். 

‘’ஆமாம் தம்பி ! பிரிகேட்ஸ் ஆஃப் கார்ட்ஸ் ‘’ என்றார். 

Saturday 6 January 2024

ஒரு கலைஞனின் தசாவதாரம்


மாபெரும் படைப்பாளியான எழுத்தாளர் சிவராம காரந்த் -தின் சுயசரிதையான ‘’ Ten faces of a crazy mind'' நூலை வாசித்தேன். 

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் பிறக்கும் சிவராம காரந்த் இருபதாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகள் வரை வாழ்கிறார். உலக வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்த ஒரு முக்கியமான நூற்றாண்டுக் காலகட்டத்தின்  சாட்சியமாக அவரது வாழ்க்கை அமைந்திருக்கிறது. அந்த நூற்றாண்டு முழுக்க அவர் ஆற்றிய செயல்களின் கோட்டுச் சித்திரம் ஒன்றை அந்நூல் முன்வைக்கிறது. எனினும் ஓர் இலக்கிய வாசகன் அதனை வாசிக்கும் போது சிவராம காரந்த் என்னும் பெரும் கலைஞனின் பேருருவையும் அக்கலைஞனின் தசாவதாரங்களையும் உணர்வான். 

இளைஞனான சிவராம காரந்த்-தை காந்திய மதிப்பீடுகள் ஈர்க்கின்றன. இளமைப் பருவத்தில் ஏற்படும் அந்த ஈர்ப்பு அவரது நூறாண்டு வாழ்வு நெடுகிலும் முக்கியமான அடிப்படையாக அமைவதை அவரது நூலை வாசிக்கும் எவராலும் உணர்ந்து கொள்ள முடியும். அடிப்படையில் சிவராம் ஒரு கலைஞன். கலை உள்ளம் கொண்டவன். அவனது கலை உள்ளம் காந்தியத்தின் சில கூறுகளை ஏற்க மறுக்கிறது. என்றாலும் காந்தியே அவனது தலைவன் ; அவனது வழிகாட்டி ; அவனது ஆசான். 

காந்தியின் அழைப்புக்கு இணங்க ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுக்கிறார் சிவராம் காரந்த். அந்த காலகட்டத்தில் தனது பிராந்தியத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்கிறார். காந்தியின் சொல்படி ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து அவர்களின் சமூக பொருளியல் நிலை குறித்து கணக்கெடுப்பை மேற்கொள்கிறார். அந்த நாட்களில் அவர் சந்தித்த கிராம மக்களும் அவர்களுடனான உரையாடலும் வாழ்க்கை குறித்த அவரது பார்வை உருவாவதற்கு அடித்தளமாக அமைகின்றன. அவரது பிராந்தியத்தில் ஒருமுறை பெருவெள்ளம் ஏற்படும் போது நண்பர்களைத் திரட்டி ஒரு குழு அமைத்து வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறார். அதே போல் ஒருமுறை அங்கே பஞ்சம் ஏற்படுகிறது. அப்போது மக்களுக்கு உணவு தயாரித்து வினியோகிக்கும் பணியை பொறுப்பெடுத்து செய்கிறார். கிராமத்துக் குழந்தைகளுக்கு ஒரு வார காலம் பயிற்சி முகாமை மாநிலத்தின் பல பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்னெடுக்கிறார் சிவராம் காரந்த். 

குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியங்களை கன்னட மொழியில் எழுதுகிறார் காரந்த். கன்னட அறிவியல் கலைக்களஞ்சியத்தையும் எழுதி வெளியிடுகிறார். 

ஒரு பயணியாக கர்நாட்க மாநிலம் முழுவதும் செல்கிறார் காரந்த். கர்நாட்காவின் கலை என்பது தென் கர்நாடக மைசூர் பிராந்தியத்தினைச் சேர்ந்தது என்ற பரவலான எண்ணம் இருந்த போது ஐஹோல், பதாமி, பட்டக்கல் ஆகிய ஊர்களின் சிற்பக்கலை முக்கியத்துவத்தை கன்னட  சமூகத்துக்கு எடுத்துச் சொல்கிறார் காரந்த். ஹம்பி குறித்து அவர் தன் சுயசரிதையில் எழுதியுள்ள குறிப்புகள் இப்போது வாசித்துப் பார்க்க வியப்பைத் தருகின்றன. ஹம்பி இப்போது பெரும்பாலும் மறுநிர்மாணம் செய்யப்பட்டிருக்கிறது என்றாலும் இன்றும் பல இடிபாடுகளையும் பாறைக்குவியல்களையும் காண முடியும். அன்று முழுமையான இடிபாடுகளாயிருந்த ஹம்பி குறித்த சித்திரத்தை அளிக்கிறார். ஒரு பயணியாக கன்னியாகுமரி தொடங்கி வாரங்கல் வரை ஒரு பெரிய தென்னிந்திய பயணம் ஒன்றை மேற்கொள்கிறார். ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம் , உத்திரப் பிரதேசம் , ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் விரிவான பயணங்களை மேற்கொள்கிறார். ஈரான், ஆஃப்கானிஸ்தான், ஃபிரான்ஸ் , ஜப்பான் ஆகிய நாடுகளில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு சிவராம்-க்கு கிடைக்கிறது. ஆஃப்கானிஸ்தான் செல்லும் போது அங்கே இரண்டாயிரத்து நூறு  ஆண்டு பழமையான மிகப் பெரிய உயரம் கொண்ட பாமியான் புத்தர் சிலைகளைக் கண்டதை தனது நூலில் பதிவு செய்கிறார் காரந்த். ( 2001ம் ஆண்டு அவை தாலிபான் பயங்கரவாதிகளால் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தகர்க்கப்பட்டது உலகின் பெரும் கலை சோகங்களில் ஒன்று)

கர்நாடக மாநிலமெங்கும் பல நாடகங்களை மக்கள் மத்தியில் அரங்கேற்றுகிறார் காரந்த். நாட்டிய நாடகங்களையும் அரங்கேற்றுகிறார். சிவராம் காரந்த் தனது சொந்த ஆர்வத்தால் இளமைக் காலத்துக்குப் பின் நாட்டியம் பயின்று ஒரு நாட்டியக் கலைஞராகிறார். யக்‌ஷ கானம் கலைக்கு புத்துணர்வு தருவதில் முக்கியப் பங்காற்றுகிறார். 

புகைப்படக் கலையில் அவருக்கு ஏற்படும் ஆர்வம் காரணமாக பல இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்து கலைப் பொக்கிஷங்களை அச்சு வடிவில் பதிவு செய்ய தனது முன்னெடுப்புகளை மேற்கொள்கிறார். 

கலைக்களஞ்சியங்கள், குழந்தைகளுக்கான பாடநூல்கள், இலக்கியப் படைப்புகள் என தீவிரமாக இயங்குகிறார் காரந்த். லலித் கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி, சாகித்ய அகாடமி ஆகிய அமைப்புகளில் கர்நாடக மாநில தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்துகிறார். பல பல்கலைக்கழகங்கள் அவருக்கு இலக்கியத்திற்கான ‘’டாக்டர்’’ பட்டம் வழங்குகின்றன. உத்திரப் பிரதேசத்தின் மீரட் பல்கலைக் கழகம் அவருக்கு அறிவியலுக்கான ’’டாக்டர்’’ பட்டம் வழங்குகிறது. சாகித்ய அகாடமி விருதும் ஞானபீட விருதும் அவரது படைப்புகளுக்கு வழங்கப்படுகின்றன. 

ஒரு முழுமையான கலைஞனின் வாழ்நாளின் பெரும் பகுதி உடன் வந்த வறுமையின் சித்திரமும் இந்நூலில் காணக் கிடைக்கிறது. இடர்கள் எத்தனை இருப்பினும் ஒரு கலை உள்ளம் தன் கலை உணர்வுடன் கலைக்காகவும் மானுடத்துக்காகவும் நில்லாது முன்சென்ற ஒரு கலைஞனின் வரலாற்றை இந்நூல் சொல்லிச் செல்கிறது. 

எழுத்தாளன், சமூகச் செயல்பாட்டாளன், அறிவியலாளன், பதிப்பாளன், புகைப்படக் கலைஞன், நடனக் கலைஞன், சிற்ப ஆர்வலன், புகைப்படக் கலைஞன், தீராப் பயணி என எண்ணற்ற அவதாரங்கள் எடுத்த ஒரு கலைஞனின் கலை வாழ்க்கை வாசிப்பவரை வியக்க வைக்காமல் இருக்காது. 

நூல் : Ten faces of a crazy mind ஆங்கில மொழிபெயர்ப்பு : H.Y. சாரதா பிரசாத் பதிப்பாளர் : Bharathiya vidya bhavan, kulapathi munshi marg, Mumbai , 460007. பக்கம் : 290 விலை : ரூ. 199/-

இந்நூல் தற்போது தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. 

நூல் : ஒரு ஞானக் கிறுக்கனின் பத்து முகங்கள்  / தமிழ் மொழிபெயர்ப்பு : சிற்பி பக்கம் : 408 விலை : ரூ.450 பதிப்பகம் : அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் ,மாக்கினாம்பட்டு, உடுமலை சாலை,பொள்ளாச்சி, 642003.