Wednesday 31 August 2022

விடைகள்

நான் அப்போது பள்ளி மாணவனாயிருந்தேன். 

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் போது இரண்டு வெவ்வேறு வகுப்புகளில் உள்ள மாணவர்கள் அருகருகில் ஒரு பெஞ்சில் அமர்ந்து தேர்வு எழுதுவார்கள். சமயத்தில் பெரிய வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிறிய வகுப்பு மாணவர்களுக்கு அந்த அருகாமையைப் பயன்படுத்தி ஏதேனும் விடைகளை சொல்லித் தருவதுண்டு. தேர்வு அறையின் கண்காணிப்பாளரைத் தாண்டி நிகழ வேண்டும். மேலும் கீழ் கிளாஸில் படித்தது பெரிய கிளாஸ் மாணவனுக்கு நினைவில் இருக்க வேண்டும் என்பதால் அதற்கு சாத்தியம் மிகக் குறைவு. அதிகபட்சம் ‘’சரியான விடையைத் தேர்ந்தெடு’’ , ‘’கோடிட்ட இடங்களை நிரப்புக’’, போன்ற ஒரு மார்க்  ஒரு வார்த்தை பதில்களை மட்டுமே சொல்லித் தர முடியும். 

நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் அமர்ந்திருந்தான்.  சமூக அறிவியல் தேர்வு அந்த பையனுக்கு. விடைகள் தெரியாமல் என்ன எழுதுவதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். எனக்கு வரலாற்றின் மீது அப்போதே பேரார்வம் உண்டு. அவனுடைய கேள்வித்தாளை வாங்கி ஒரு மார்க் கேள்விகளைப் பார்த்தேன். எல்லா விடையும் எனக்குத் தெரிந்திருந்தது. பதில்களை டிக் செய்து கொடுத்தேன். தேர்வு முடிந்து தேர்வு விடுமுறைகள் முடிந்து அவனை பள்ளியில் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து , ‘’தம்பி ! நீ டிக் செய்த எல்லா பதில்களும் கரெக்ட்’’ என்றான். 

அனேகமாக ஏழாம் வகுப்பு பையன் சொல்லிக் கொடுத்து பதில் எழுதிய ஒன்பதாம் வகுப்பு பையன் அவனாகத்தான் இருப்பான்.  

Tuesday 30 August 2022

உள்ளே வெளியே


 சென்ற மாதம் ஊருக்குப் பக்கத்தில் ஒரு பள்ளி வளாகத்தில் - பள்ளியின் சுற்றுச் சுவருக்கு உள்ளே இருக்கும் மரம் ஒன்று அரசு அனுமதியின்றி வெட்டப்பட்டது குறித்து புகைப்பட ஆதாரத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினேன். அது குறித்து வலைப்பூவில் ஒரு பதிவை எழுதினேன். மேலும் ஒரு வாரத்தில் நான் அனுப்பிய புகார் மீது மேற்கொள்ளப்பட்ட மேல்நடவடிக்கை என்ன என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விபரம் கோரியிருந்தேன். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரினால் 30 நாட்களுக்குள் பதில் அளிக்கப்பட வேண்டும் என்பது விதி. இருப்பினும் நம் மாநில அரசு ஊழியர்களின் பழக்கம் என்பது 30வது நாள் மட்டுமே பதில் அளிப்பார்கள். அதனை ஒரு பழக்கமாகவே கைக்கொள்கின்றனர். அவர்களால் எளிதில் அளிக்கக்கூடிய விபரமாகவே இருந்தாலும் முப்பதாவது நாளே அந்த விபரத்தை அனுப்பி வைப்பார்கள். இம்முறை தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி விபரம் கோரிய போது நான் இரண்டு விஷயங்களை யோசித்தேன். முதலாவது, அவர்கள் முப்பது நாட்கள் எடுத்துக் கொண்டால் அத்தனை நாட்களில் வெட்டப்பட்ட மரத்துக்கான அபராதம் செலுத்தப்பட்டிருக்கும் என்பதால் அந்த விபரம் வந்தடையும் என எண்ணினேன். இரண்டாவது, மனு கிடைத்த அன்றே பதில் அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரி விரும்பினால் நடவடிக்கை துரிதமாகும் என யூகித்தேன். 

பொதுவாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விபரம் கோரினால் முப்பது நாட்களுக்குப் பின் மேலும் ஏழு நாட்கள் காத்திருப்பேன். அதற்குள்ளும் தபால் வரவில்லை என்றால் மட்டுமே முதல் மேல்முறையீட்டை தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மேற்கொள்வேன். ஆனால் இந்த முறை முப்பது நாள் கெடு முடிந்த அன்றே முதல் மேல்முறையீடு செய்து விட்டேன். 

சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் உள்ள ஒருவர் என்னிடம் ஒரு தகவலைக் கூறினார். அதாவது , அந்த பள்ளி வளாகத்தில் உள்ள மரம் வெட்டப்படவில்லை என அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாக சொன்னார். ‘’புகைப்பட ஆதாரம் உள்ளதே ! அதுவும் அனுப்பப்பட்டிருக்கிறதே! ‘’ என்று சொன்னேன். என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தார் அவர். 

‘’மரத்தை வெட்டிய குற்றத்தை செய்தவர் ஒருவர். இப்போது அந்த மரம் வெட்டப்படவேயில்லை என்று கூறும் அதிகாரிகளும் இந்த குற்றத்துக்கு உடந்தை என அதனுடன் இணைந்து விடும் அபாயம் இருக்கிறதே! அது குறித்து அச்சமும் தயக்கமும் கொள்ள மாட்டார்களா?’’ என்று கேட்டேன். 

‘’பொதுவா யாரும் புகார் கொடுக்க மாட்டாங்க சார். அப்படியே கொடுத்தாலும் அதை ஃபாலோ பண்ண மாட்டாங்க சார். அதனால தான் இப்படி’’ என்றார். 

மிகப் பெரிய மரம் அது . அதன் நிழலில் இருநூறு பேர் அமர முடியும். அத்தனை பெரியது. ஒரு நாளில் இல்லாமல் ஆகியிருக்கிறது. ஆனால் அப்படி ஒன்று நிகழவேயில்லை என்றும் கூறப்படுகிறது. 

‘’சார் ! அப்புறம் ஒரு விஷயம்’’

‘’என்ன சொல்லுங்க.’’

‘’ஸ்கூல் காம்பவுண்டுக்கு வெளிய இருக்கற மரம் தான் வெட்டப்பட்டிருக்குன்னு ரிப்போர்ட் பண்ணியிருக்காங்க சார்’’

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என ஒரு தமிழ்ப் பழமொழி நினைவில் வந்தது. 

நான் புகார் அளிக்க வேண்டும் என முடிவு செய்ததும் முதலில் புகார் கொடுத்தது மத்திய அரசாங்கத்தின் சி.பி.கி.ரா.ம்.ஸ் இணைய தளத்தில். அது தானாகவே மாநில முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகாரை அனுப்பி விடும். மேலும் அந்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கை எனக்கு திருப்தி தரவில்லை எனில் அந்த தளத்திலேயே என்னால் மேல்முறையீடு செய்ய முடியும். புகார் அளித்தவர் எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கையில் திருப்தி அடையவில்லை எனில் அந்த புகார் நிலுவை என்றே தொடரும். 

சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்தில் புகாரைத் தரவேற்றம் செய்த பின் கிராம நிர்வாக அதிகாரிக்கு நடந்த சம்பவத்தை விவரித்து பதிவுத்தபால் அனுப்பினேன். அதன் நகலை வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், வனத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பினேன். மனுவின் நகல் இத்தனை பேருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது என்ற விபரம் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீது எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கை குறித்தும் தக்வல் பெறும் உரிமைச் சட்டப்படி விபரம் கோரப்பட்டது. இத்தனை இருந்தும் மரம் வெட்டப்பவேயில்லை என்று சொல்லப்படுகிறது என்றால் நிர்வாகம் இந்த விஷயத்தை எத்தனை அலட்சியத்துடன் கையாள்கிறது என்பதையே காட்டுகிறது. 

‘’நியாயமான உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் வரை நான் இந்த விஷயத்தை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து கொண்டே இருப்பேன். நாட்கள் கடத்தப்பட்டால் நான் இந்த விஷயத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொள்வேன் என எவரும் நினைத்தால் அது நடக்கப் போவதில்லை. நாட்கள் அதிகமாக அதிகமாக மரத்தை வெட்டியவர்கள் அத்ற்கு உடந்தையாயிருந்தவர்கள் ஆகியோர் செய்த செயல் மேலும் அடர்த்தி கொண்டு விடும். மரத்தை வெட்ட எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புகைப்படத்திலேயே அது தெளிவாகத் தெரிகிறது. இந்த விஷயம் சட்டத்தின் முன் சென்றால் பேசப்போவது ‘’டாகுமெண்ட்டல் எவிடெண்ஸ்’’. இதனை எளிதாகக் கடந்து விடலாம் என எண்ணுபவர்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்’’ என்று கூறினேன். 

Monday 29 August 2022

விடுதலை

சொல்வனம் இதழில் சமீபத்தில் எழுதிய ‘’விடுதலை’’ சிறுகதை பிரசுரமாகியுள்ளது. அதன் இணைப்பு 

பைரவம் - திட்டமிடல்

’’பைரவம்’’ அமைக்க என்னென்ன தேவைப்படும் என்று யோசித்தேன். பைரவத்தை அமைக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுப்பது சக உயிர்களை நேசிக்கும் நமது சமூகத்தின் பண்பாட்டுச் சூழல். அந்த அடித்தளம் உருவாக்கப்பட்டிருப்பதன் மூலமே நம்மால் இந்த முன்னெடுப்பைத் திட்டமிட முடிகிறது.  அந்த தொல்மரபை வணங்கி நம் திட்டமிடலைத் தொடங்குகிறோம். 

1. ‘’பைரவம்’’ வாழிடத்தில் ஒரு சிறு காலபைரவர் சன்னிதி அமைக்கப்படும். 

2. காலபைரவர் வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படும் அரளிப்பூக்கள் சிறு அளவில் அங்கே பயிரிடப்படும். 

3. ‘’பைரவம்’’ வாழிடம் ஒரு ஏக்கரிலிருந்து இரண்டு ஏக்கர் வரை பரப்பளவு கொண்டதாக இருக்கும். அதனைச் சுற்றி நடைப்பயிற்சிக்கான பாதை ஒன்று அமைக்கப்படும். இதனால் தினமும் இங்கே நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் குட்டி நாய்களைக் காணவும் அவற்றுடன் பழகவும் ஒரு வாய்ப்பு ஏற்படும். குட்டி நாய்களும் தினமும் காலையும் மாலையும் மனிதர்களைக் காண விரும்பும். 

4. வளாகத்தில் 10,000 மரக்கன்றுகளைக் கொண்ட ஒரு அடர் வனம் உருவாக்கப்படும். இதனால் வளாகம் ஆக்சிஜன் அதிகம் கொண்ட இடமாக இருக்கும் மேலும் பறவைகளும் பிராணிகளும் அதனை வாழிடமாகக் கொள்ளும். அதன் நடுவே சிறு பரப்பில் நீர்க்குளமொன்று அமைக்கப்படும். 

5. குட்டி நாய்கள் தங்க என கூரையிடப்பட்ட ஒரு பரப்பு

6. குட்டி நாய்கள் விளையாட ஒரு மைதானம்

7. அவற்றுக்கான மருத்துவமனை

8. அவற்றுக்கான உணவு தயாரிக்கும் இடம்

பைரவம்

எனது நாட்டில் ஒரு நாய் உணவில்லாமல் இருந்தாலும் அதற்கு உணவு தருவதே என்னுடைய மதம். 
-சுவாமி விவேகானந்தர்

இன்று எனது நண்பர் ஒருவரிடம் ஒரு விஷயம் குறித்து விவாதித்தேன். 

அதாவது, இந்திய மரபில் நாய்கள் காலபைரவரின் வாகனமாக உள்ளன. நாய்களுக்கும் மனிதர்களுக்குமான நட்பு என்பது மானுட குலத்தில் அனாதி காலத்திலிருந்து இருந்து வருகிறது. இன்றும் கைக்குழந்தைகள் தொடங்கி பாலபருவம் அடைந்துள்ள குழந்தைகள் வரை அனைத்துக் குழந்தைகளின் அக உலகையும் இந்தியாவில் காகங்களும் நாய்களுமே இனிமையால் நிரப்புகின்றன. 

ஊரில் புதிதாகப் பிறக்கும் நாய்க்குட்டிகள் தெருக்களில் வளர்கின்றன. அவற்றில் கணிசமானவை அங்கும் இங்கும் திரியும் போது வாகன சக்கரங்களில் மாட்டிக் கொண்டு இறந்து போகின்றன. புதிதாய்ப் பிறந்த நாய்க்குட்டிகளுக்காக ஊரில் ஒரு வாழிடம் உருவாக்க வேண்டும் என்று நண்பரிடம் சொன்னேன். அங்கே குட்டி நாய்களுக்கு உணவு, தண்ணீர் விளையாடி மகிழ இடமும் அளிக்கப்படும். ஊரில் இவ்வாறான வாழிடம் இருப்பதை ஊர் முழுவதும் தெரியப்படுத்தினால் தெருக்களில் உள்ள குட்டி நாய்கள் குறித்து அலைபேசி மூலம் தெரிவித்தால் அவற்றை இந்த வாழிடத்துக்கு கொண்டு வந்து விடலாம். 

பலர் நாய் வளர்க்க வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பார்கள். ஆனால் எவ்விதம் நாய்க்குட்டிகளைக் கண்டடைவது என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு இந்த நாய்க்குட்டிகளை நல்ல முறையில் பராமரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுமாயின் அதன் பராமரிப்பு குறித்த விபரங்களைக் கூறி அவற்றை அளிக்கலாம் என்றும் மேலும் அவ்வப்போது அதன் நலன் குறித்து விசாரித்து அறியலாம் என்றும் யோசித்தோம். 

இந்திய மரபு நம்முடன் வாழும் உயிர்களை நமக்கு சமமான உயிர்கள் எனக் கருதுகிறது. சக உயிர்கள் மேல் அக்கறை கொள்ளுதலே மேலான மானுட விழுமியம் என முன்வைக்கிறது. அவ்வகையில் இந்த முன்னெடுப்பு முக்கியமானது என நினைத்தோம். 

குட்டி நாய்களின் வாழிடத்துடன் வானத்துப் பறவைகளான காக்கை , குருவிகளுக்கு உணவளிக்கும் விதமாக பறவைச் சத்திரம் ஒன்றை ஊரில் அமைக்க வேண்டும் என்று யோசித்தோம். வட இந்தியாவில் ஊர் நடுவில் சாலைச் சந்திப்புகளில் இவ்வாறான பறவைச் சத்திரங்கள் இருக்கும். அங்கே பறவைகளுக்கு நீரும் தானியங்களும் அளிக்கப்பட்டிருக்கும். அதனைப் போன்ற ஒன்றை குட்டி நாய்களின் வாழிடத்துடன் இணைத்து அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. 

நம் சமூகத்தில் பத்தில் ஒருவருக்கேனும் சக உயிர்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஊரில் அவ்வாறான எண்ணம் கொண்டவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அவர்களையும் சாத்தியமான எல்லா வழிகளிலும் இணைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். 

 

Sunday 28 August 2022

நேரம்

நேரத்தைக் கடைப்பிடிப்பது என்ற வழக்கம் தமிழ்நாட்டில் மிகவும் குறைவானதாக உள்ளது. நேரத்தைக் கடைப்பிடிப்பது என்ற பழக்கத்தை முயற்சி செய்து பழகிக் கொள்ள வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் நேரத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்பதை நூற்றுக்கு 99 சதவிகிதத்தினர் மிக இயல்பாகப் பழகியிருக்கின்றனர். இருவர் சேர்ந்து ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் இருவரும் சேர்ந்து இத்தனை மணிக்கு புறப்படலாம் என முடிவு செய்தால் ஒருவர் அந்த நேரத்துக்கு ஐந்து நிமிடத்துக்கு முன்பு தயாராக இருப்பார். இரண்டாமவர் 15லிருந்து 20 நிமிடம் தாமதமாக வருவார். நேர உணர்வு இல்லாத சமூகத்தில் கூட்டுச் செயல்பாட்டுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். சமத்துவமான வாய்ப்புகளுக்கு சாத்தியம் இல்லாமல் இருக்கும்.  நான் தவிர்க்க இயலாமல் ஏதேனும் நிகழ்ந்தாலன்றி தாமதமாக மாட்டேன். ஆனால் 99 சதவிகித நிகழ்வுகளில் நான் நேரத்துக்குச் சென்று காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படும். 

Friday 26 August 2022

அரசு வளாகம்

நான் அரசமைப்பின் மேல் நம்பிக்கை கொண்டவன். மக்களாட்சி என்பது கடைசி குடிமகனையும் சென்றடைய வேண்டும் என்ற தன்மையைக் கொண்டது என முழுமையாக நம்புபவன். அதன் எல்லைகளுக்குள் குடிமக்களின் தேவைகளும் கோரிக்கைகளும் விருப்பங்களும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று எண்ணுபவன்.

தமிழ்நாட்டின் அரசு அலுவலகங்களுக்கு அவ்வப்போது செல்பவன் என்ற முறையில் எனக்கு சில அவதானங்கள் உண்டு. அவற்றை இந்த தருணத்தில் பதிவு செய்வது சில விஷயங்களை பரிசீலனை செய்ய உதவிகரமாக இருக்கும் என்பதால் அவற்றைப் பதிவு செய்கிறேன். 

1. பொதுமக்கள் அரசு அலுவலகம் ஒன்றனுக்கு செல்ல வேண்டும் என்றால் அதை எவ்வளவு ஒத்திப் போட முடியுமோ அவ்வளவு ஒத்திப் போட முயற்சி செய்கிறார்கள். ஒத்திப் போட்டு போகாமல் இருப்பதே உத்தமமானது என நினைக்கிறார்கள். அரசு அலுவலகத்தை விட இடைத்தரகர்கள் மூலம் அந்த அலுவலகத்தில் அவர்கள் பெற வேண்டிய சேவையை அடைந்து கொள்வதே மேலானது என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. 

2. பெரும்பாலான அரசு அலுவலகங்களில் உள்ள அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் தங்கள் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வருவதையே விரும்புவதில்லை. அவர்கள் பழகியிருக்கும் உதாசீனமே இடைத்தரகர்கள் தலையீட்டை அதிகமாக்குகிறது. 

3. அரசு ஊழியர்கள் ஒரு குறுங்குழு மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர். 

4. அரசு ஊழியர்களின் திறன் என்பது ஊழல் செய்வதிலும் ஊழலை மறைப்பதிலும் மட்டுமே உள்ளது. 

5.  அரசு ஊழியர்களின் பணித்திறன் என்பது மிகக் குறைவானதாக உள்ளது. அவர்களுடைய சட்ட அறிவு என்பது பணித்திறனைக் காட்டிலும் குறைவானது. 

6. மிகத் தவறான செயல்பாட்டு முறையை அரசு ஊழியர்கள் இங்கே பழக்கி வைத்துள்ளார்கள். 

ஓரிரு முறை அரசு அலுவலகங்களுக்கு சென்று வந்தவர்கள் கூட இவை அனைத்தும் உள்ளவை தானே புதிதாக என்ன இருக்கிறது என்று நினைப்பார்கள். ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வாறு தான் நிலைமை இருந்தது என்றாலும் இன்றும் இப்படித்தான் நிலைமை இருக்கிறது என்பது பெரும் அபாயம் ஒன்றின் அறிகுறி. 

‘’சிஸ்டம்’’ பெரிய அளவில் கெட்டுப் போயிருக்கிறது.   இந்த ’’சிஸ்டம்’’ மாற வேண்டும்.  

Thursday 25 August 2022

சென்னையில் இரு நாட்கள்

உத்யோக நிமித்தமாக எனது நண்பர் ஒருவருடன் இரு நாட்கள் சென்னை சென்றிருந்தேன். நண்பருக்கு என்னுடைய உதவி ஒரு விஷயத்தில் தேவைப்பட்டது. என்னை உடன் வந்து உதவுமாறு கேட்டுக் கொண்டார். நானும் அவரும் சென்னைக்கு காரில் பயணித்தோம். நண்பர் சிறப்பாக கார் ஓட்டக் கூடியவர். சென்னையை முழுமையாக அறிந்தவர். ஒரு நாளில் பணி முடிந்து விடும் என்ற எதிர்பார்ப்புடன் சென்றிருந்தோம். எனினும் இரு நாட்கள் ஆயிற்று. சென்னையின் பல பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. அவரது நண்பர்கள் சிலரைச் சந்தித்தோம். அந்த சந்திப்புகள் மகிழ்ச்சி அளிப்பவையாக இருந்தன. அவர்கள் பலவிதமான தொழில்களில் ஈடுபடுபவர்கள். அவர்களுடைய தொழில்களின் நடப்பு நிலவரம் குறித்து கேட்டுக் கொண்டிருந்தேன். நண்பரும் நானும் சென்னையில் ஒரு திரைப்படம் பார்த்தோம். கண் முன்னால் ஒரு பெரும் திரையில் காட்சிகள் விரிவதை எனக்குப் பார்க்க மிகவும் பிடிக்கும். வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு படம் பார்ப்பேன். 

சென்னையில் புதிது புதிதாக உருவாகியிருக்கும் கட்டடங்களினூடாக நான் அறிந்த பழைய சென்னையை தேடிக் கொண்டிருந்தேன். சில பகுதிகள் முழுவதும் அடையாளம் தெரியாத அளவு மாறியிருக்கின்றன. இரு சக்கர வாகனங்களும் கார்களும் மிகப் பல மடங்கு பெருகியுள்ளன. அதன் தாக்கம் நகரில் பயணிக்கும் போது தெரிகிறது. 

விதவிதமான மக்களைப் பார்ப்பது என்பது எனது பெருவிருப்பங்களில் ஒன்று. ஒரு பொது செயல்பாட்டாளன் மக்களைக் காணும் போது அவர்களிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறான்.  

Saturday 20 August 2022

சிலர்

எனது தந்தையின் பணி நிமித்தம் நாங்கள் சில ஆண்டுகள் சீர்காழியில் வசித்தோம். அப்போது குமரன் அண்ணன் வீட்டுக்கு எதிர் வீட்டில் நாங்கள் வாடகைக்குக் குடியேறினோம். அண்ணன் வீட்டில் பசு மாடுகள் இருந்தன. அந்த வீதியின் பல வீடுகளுக்கு குமரன் அண்ணன் தான் வாடிக்கையாக பால் விற்பனை செய்வார். அவ்வாறு தான் எங்கள் குடும்பத்துக்கு அண்ணன் பழக்கமானார். என்னைச் சிறு குழந்தையாக சீர்காழியில் நடக்கும் கோயில் விழாக்களுக்கு தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறார். நான் பேசத் துவங்கும் முன்பிருந்தே எனக்கும் அவருக்குமான நட்பு இருந்திருக்கிறது. 

அண்ணனுடைய இயல்பு எவ்விதமானது எனில் ஒருவரிடம் சில நிமிடங்கள் பழகினால் கூட அவர்களுடைய குடும்பத்தில் ஒருவரைப் போல ஆகிவிடுவார். அவர்கள் குடும்பத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் முதல் ஆளாக இருந்து எல்லா வேலைகளையும் பார்ப்பார். அவர் வசித்த பகுதியில் குடியிருந்தவர்கள் வெளியூரில் இருக்கும் அவர்களுடைய உறவினர்கள் என எல்லா குடும்பத்தினரும் வீட்டில் மங்கள நிகழ்ச்சி என்றால் முதலில் கும்ரன் அண்ணனைத்தான் அழைப்பார்கள். 

அந்த பகுதியில் இருக்கும் சிறு குழந்தைகளை அவர் தான் சினிமாவுக்கு அழைத்துச் செல்வார். அவ்வாறு அவருடன் சென்றிருக்கிறேன். 

அவருக்குத் திருமணம் நிகழ்ந்த போது அந்த நிகழ்ச்சி சீர்காழியின் மிகப் பெரிய திருமணங்களில் ஒன்றாக இருந்தது. உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் வருகை புரிந்தார்கள். மண்டபம் நிரம்பி வழிந்தது.  

சாமானியமாக அவரை எங்கும் காண முடியும். பல ஊர்களில் நடைபெறும் திருமணங்களுக்குச் செல்பவர் என்பதால் அவரை சிதம்பரம் பேருந்து நிலையத்தில் கடலூரில் புதுச்சேரியில் செங்கல்பட்டில் எழும்பூர் ரயில் நிலையத்தில் தஞ்சாவூரில் கும்பகோணத்தில் என எங்கும் பார்க்க முடியும். நான் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் மாலை விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில்  வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். நான் பயணித்த பெட்டியில் குமரன் அண்ணன் கடலூரிலிருந்து சீர்காழிக்கு பயணித்துக் கொண்டிருந்தார். நான் சிறுவனாயிருந்த போது என்னைப் பல நாட்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டிருக்கிறார். ஊரில் ஒரு அபார்ட்மெண்ட்ஸ் கட்ட கட்டிட அனுமதி பெற தஞ்சாவூரில் இருந்த டி.டி.சி.பி அலுவலகம் சென்று விட்டு ஊர் திரும்ப தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்தேன். அப்போது தஞ்சாவூரில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்ப குமரன் அண்ணன் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்தார். ரயிலில் ஒன்றாகப் பயணித்தோம். நான் ஊரில் இறங்கிக் கொண்டேன். அண்ணன் அதே ரயிலில் சீர்காழி சென்றார். 

கம்பராமாயணத்தில் ஒரு இடம் வருகிறது. அனுமனை முதல் முறையாகக் காணும் சீதை அனுமனின் பணிவான நம்பிக்கையளிக்கும் சொற்களாலும் அர்ப்பணிப்புடன் கூடிய அணுகுமுறையாலும் உளம் நெகிழ்ந்து அனுமனை ‘’இன்றென இருத்தி’’ என வாழ்த்துகிறாள். அதாவது ‘’இன்று இருப்பதைப் போல என்றும் இரு’’ என. 

நீண்ட நாட்களுக்குப் பின் குமரன் அண்ணன் நேற்று வீட்டுக்கு வந்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவர் ஒரே தன்மையுடன் இருப்பதை நினைத்துக் கொண்டேன்.  

Thursday 18 August 2022

ஒரு வயல் - ஆயிரம் மரங்கள்

’’காவிரி போற்றுதும்’’ உடனிருக்கும் விவசாயி ஒருவரின் வயலில் நடப்பட்டுள்ள மரங்களின் ஒளிப்படம். 
 

Wednesday 17 August 2022

ஐம்பது ஒப்புகைகள்

மாநில அரசு நிர்வாகம் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த செயல்பாட்டு முறைகளின் படியே இயங்கிக் கொண்டிருக்கிறது. காகிதங்களையும் தபால்களையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு இயங்குமுறையே இன்னும் நடைமுறையில் உள்ளது. ஒரு மனுவை அனுப்பி அதனை நகலெடுத்து அதற்கான ஒப்புகை வரப்பெற்றதும் அதனைக் கோப்பில் வைத்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஒவ்வொரு முறையும் மனு அனுப்பும் போது நகல் எடுக்கும் கடைகளுக்குச் செல்வதும் பின்னர் அஞ்சலகம் செல்வதும் என நகல் எடுக்கும் கடைகளில் உள்ள உரிமையாளர்களும் பணியாளர்களும் அஞ்சலக ஊழியர்களும் நண்பர்களாகி விட்டனர். சட்டம் வழங்கும் உரிமைகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து இயங்குவதால் வாரத்துக்கு இரண்டு மனுவாவது மாநில அரசுத்துறைகளுக்கு அனுப்புவதாய் உள்ளது. இன்று ஒரு பதிவுத் தபால் அனுப்பச் சென்ற போது ஒப்புகை தபால் அட்டை கேட்டேன். ‘’சார் ! ரிஜிஸ்டர் போஸ்ட் அக்னாலெட்ஜ்மெண்ட் கார்டு ஐம்பதோட விலை ரூ. 3 தான். நீங்க வாரம் ஒரு ரிஜிஸ்டர் அனுப்பறீங்க. அதனால 50 கார்டு வாங்கிக்கங்க. உங்களுக்கு உபயோகமா இருக்கும்’’ என்றார் அஞ்சல் நிலைய ஊழியர். ஐம்பது ஒப்புகை அட்டைகள் வாங்கி வைத்துக் கொண்டேன்.  

Monday 15 August 2022

ஆடிப் பட்டம் - அமிர்த உற்சவம்

’’ஆடிப் பட்ட்ம் தேடி விதை’’ என்பது தமிழ்ப் பழமொழி. காவிரி பெருக்கெடுத்து ஊரின் வயல்களை நீர்நிலைகளை நிறைக்கும் மாதம் ஆடி. கோடைக்கும் மழைக்காலத்துக்கும் இடையே உள்ள காலகட்டம் ஆதலால் தானிய விதைப்புக்கு மிகவும் ஏற்ற மிகப் பொருத்தமான மாதம் ஆடி.  

இந்திய சுதந்திரத்தின் அமிர்த உற்சவத்தைக் கொண்டாடும் விதமாக இன்று தடுப்பூசிக்காக பணி புரிந்த கிராமத்தின் ஒவ்வொரு வீடுகளுக்கும் நாட்டுக் காய்கறி விதைகளை வழங்கினேன். பூசணிக்காய், பீர்க்கன்காய் , சுரைக்காய், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் மற்றும் பாகற்காய் ஆகிய நாட்டுக் காய்கறிகளின் விதைகளை கணிசமான அளவில் ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கி அவர்களுடைய வீட்டுத் தோட்டத்தில் விதைத்துக் கொள்ளச் சொன்னேன். மக்கள் மகிழ்ச்சியுடன் அதனை வரவேற்றனர். ஆடிப் பட்டத்தில் இந்த நாட்டு விதைகள் வீடு தேடி வந்திருப்பதை நன்நிமித்தமாக எண்ணி மகிழ்ந்தனர். 

ஜனவரியில் குடியரசு தினத்தின் போது அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுத்த நந்தியாவட்டை கன்றுகள் எவ்விதம் உள்ளன என்று விசாரித்தேன். பல வீடுகளில் செடி வளர்ந்து அவை பூ பூத்துள்ளன. 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நந்தியாவட்டை செடிகள் நல்ல விதத்தில் இருப்பதைக் காண நேரிட்டது என்னைத் தனிப்பட்ட முறையில் பெரிதும் மகிழச் செய்தது. ஒரு வீட்டில் நந்தியாவட்டைக் கன்று எவ்விதம் வளர்ந்துள்ளது என்று கேட்ட போது ‘’செடியைக் கொடுத்தவர் உயரத்துக்கு வளர்ந்துள்ளது’’ என்று கூறி வீட்டுத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று காட்டினர். அந்த பூச்செடி என்னுடைய உயரம் இருந்தது. ஒரு அடி நீளம் கொண்ட செடிகளை ஜனவரி 25ம் தேதி வினியோகம் செய்தது நினைவில் வந்தது. அந்த தருணத்தில் , மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு மயிலாடுதுறையிலிருந்து நான் அனுப்பியிருந்த டாடா ஏஸ் வண்டியுடன் மூன்று நான்கு நர்சரிகளுக்கு உடன் சென்று சிறப்பான நந்தியாவட்டை செடிகளை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்த ‘’காவிரி போற்றுதும்’’ புதுக்கோட்டை நண்பரை நன்றியுடன் நினைத்துக் கொண்டேன். நண்பர்களே ‘’காவிரி போற்றுதும்’’. நண்பர்களின் ஆதரவே ‘’காவிரி போற்றுதும்’’ பலம். இப்பிறவியில் அவர்களே என் பேறு. 

கிராம மக்களின் மனம் பண்பாட்டுப் பாரம்பர்யத்தில் ஆழ்ந்துள்ளது. மக்களுடன் பழகுபவன் என்ற முறையில் என்னால் அதை உறுதியாகக் கூற முடியும். அவர்களால் எதையும் சாதிக்க முடியும். அவர்கள் தன்னம்பிக்கை பெறுவார்கள் எனில் அவர்கள் எதையும் சாதிப்பார்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதே ‘’காவிரி போற்றுதும்’’ பணி என்பதால் மெல்ல ஆனால் உறுதியாக ‘’காவிரி போற்றுதும்’’ முன்னேறிக் கொண்டிருக்கிறது. 

அந்த கிராமத்தின் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 20 தேக்குக் கன்றுகளை ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக அளிக்க வேண்டும் என்பதும் அவற்றை நல்ல முறையில் வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு அறிவுரையும் பயிற்சியும் அளித்து அந்த கன்றுகளை அவர்களுக்குத் தரவேண்டும் என்பதும் அந்த கிராமத்தின் ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் அதனால் குறைந்த பட்சம் முப்பது இலட்சம் ரூபாய் பயன்பெற்றது என்ற நிலை உருவாக வேண்டும் என்பதும் ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். 

குறைந்தபட்சம் ஒரு கிராமத்திலாவது சிறு பொருளியல் மாற்றத்தையாவது நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் ‘’காவிரி போற்றுதும்’’ முன்னேறுகிறது. 

Thursday 11 August 2022

அமைப்பாளரின் உதவி ( நகைச்சுவைக் கட்டுரை)

‘’காவிரி போற்றுதும்’’ தீவிர ஆதரவாளர் ஒருவர் அமைப்பாளருக்கு ஃபோன் செய்தார். ‘’பிரபு ! பையன் ஒரு பைக் புக் செய்யணும்னு சொல்றான். நீங்க கொஞ்சம் அவன் கூட போய்ட்டு வந்திருங்க.’’. அமைப்பாளரின் ஊர் குறுக்கு நெடுக்காக அதிகபட்சம் நான்கு கிலோமீட்டர் நீளம் கொண்டது. அதில் கடைவீதிகள் இன்னும் நெருக்கமானவை. ஊருக்குள் தானே என்ற எண்ணத்துடன் அமைப்பாளர் சென்றார். ஆதரவாளரும் அவரது மகனும் அவர்கள் வீட்டில் இருந்தனர். அமைப்பாளர் என்ன பைக் வாங்க வேண்டும் என்று கேட்டார். ஹீரோ – வா? ( அமைப்பாளருக்கு இப்போதும் பைக் என்றால் ஹீரோ ஹோண்டா தான். எனவே அங்கிருந்தே அவர் ஆரம்பிப்பார்) பஜாஜ்-ஆ ? டிவிஎஸ் – ஆ? (அமைப்பாளர் இந்திய நிறுவனங்கள் மேல் ஆர்வம் கொண்டவர் என்பதால் வேறு பெயர்களைக் கூறாமல் அத்துடன் நிறுத்திக் கொண்டார்.) ஆதரவாளரின் மகன் ஒரு பெயரைச் சொன்னான். அந்த பெயரை அமைப்பாளர் அப்போதுதான் முதல் முறையாகக் கேட்கிறார். ‘’என்ன விலை?’’ என்றார். ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் என்ற பதில் சொல்லப்பட்டது. அமைப்பாளருக்கு அதிர்ச்சி. ஆதரவாளர் ‘’பிரபு ! நீங்களும் இவனும் கும்பகோணம் போய் இந்த பைக்கை புக் பண்ணிடுங்க. பைக் பைக் னு ஒரே தொந்தரவு பண்றான். புக் பண்ண இப்போ பத்தாயிரம் கொடுத்தா போதுமாம். பைக் வர மூணு மாசம் ஆகுமாம். இப்போதைக்கு இந்த பிரச்சனை தீரட்டும்னு பாக்கறேன்.’’ ஆதரவாளரின் பைக்கை அவரது மகன் ஓட்ட அமைப்பாளர் அவருடன் கும்பகோணம் புறப்பட்டார்.

ஆதரவாளரின் மகன் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மயிலாடுதுறையில் தான். கிட்டத்தட்ட இருபத்து இரண்டு ஆண்டுகள். ஆனால் வீட்டிலிருந்து கிளம்பியதுமே கும்பகோணம் எப்படி செல்ல வேண்டும் என வழி கேட்டது அமைப்பாளருக்குத் தூக்கி வாரிப் போட்டதைப் போல இருந்தது. ‘’ஏன் தம்பி ! இத்தனை வருஷத்துல ஒரு தடவை கூட நீ கும்பகோணம் போனதே இல்லையா?’’ அமைப்பாளர் சோகமாகக் கேட்டார். ’’காலேஜ் தேர்ட் இயர் படிக்கும் போது இந்த பைக் புக் பண்ண அப்பாவை அழச்சுட்டு ஒரே ஒரு தடவை போயிருக்கன்’’ ஆதரவாளரின் மகன் ஆர்வமாக பதில் சொன்னான்.

வழியைக் காட்டி விட்டு அமைப்பாளர் வண்டி என்ஜினின் தாள கதியுடன் தனது எண்ணங்களை இணைத்துக் கொண்டு யோசித்த வண்ணம் வந்தார். இந்திய சமூகம் – தமிழ்ச் சமூகம் பெருமளவில் வறுமையை வென்றிருக்கிறது. உணவுப் பஞ்சம் என்பது கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் இல்லை. எனவே வசதி வாய்ப்புகள் எளிதில் கிடைக்கப்பெறும் ஒரு தலைமுறை உருவாகி உள்ளது. எனினும் அந்த தலைமுறையின் பெற்றோர்கள் அவர்களுக்கு போதுமான அளவு சமூகப் பரிச்சயத்தை உருவாக்குகிறார்களா என்பது ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. சமூகம் குறித்த சக மனிதன் குறித்த அக்கறை என்பது ஒரு சமூகத்தின் அற உணர்வுக்கான உரைகல். அமைப்பாளர் யோசித்த வண்ணம் வந்தார்.

ஊரிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒரு பேரூராட்சியில் மெயின் ரோட்டில் ஒரு வேப்ப மரமும் ஒரு புங்கன் மரமும் வெட்டி சாய்க்கப்பட்டு அந்த மரங்கள் மரத்துண்டுகளாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஏழு பேர் மெஷின்களின் உதவியுடன் அதனைச் செய்து கொண்டிருந்தனர். இந்த தொழிலாளர்களின் ஒருநாள் ஊதியம் எழுநூறு ரூபாய். அவ்வாறெனில் அந்த மரங்களை வெட்ட ஐயாயிரம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது. நிச்சயமாக மரங்களின் மதிப்பு அவற்றுக்கு மேல். எட்டாயிரம் ரூபாய் இருக்கக் கூடும்.

அனுமதியின்றி வெட்டப்படும் மரங்களுக்கு  மரத்தின் மதிப்பில் நாற்பது மடங்கு வரை அபராதம் விதிக்கலாம். அவ்வாறெனில் அந்த மரங்களின் மதிப்பை ரூபாய் மூன்று இலட்சத்து இருபதாயிரம் என்றும் கருத முடியும்.

’’தம்பி ! ரிடர்ன் ஆகும் போது இந்த மரங்களை ஃபோட்டோ எடுக்கணும். எடுத்து என்னோட மெயில் ஐடி க்கு ஃபார்வர்டு பண்ணு. இந்த விஷயத்தை சி.பி.கி.ரா.ம்.ஸ் ல புகாரா கொடுக்கணும்’’ அமைப்பாளரின் மகன் வாகனத்தில் உச்ச பட்ச வேகத்தில் இருந்தான்.

அனாதி காலமாக மயிலாடுதுறை – கும்பகோணம் சாலை காவிரியின் கரையிலேயே செல்லும் ஒரே பாதை. எனினும் தம்பி ஒவ்வொரு திருப்பத்துக்கும் வழி கேட்டான். ‘’தம்பி ! வலது பக்கம் இடது பக்கம் திரும்பனும்னா நான் சொல்லுவன். அது வரைக்கும் நேராவே போ’’

கும்பகோணத்தில் அவன் குறிப்பிட்ட வண்டி ஷோரூம் சென்று சேர்ந்தோம். அந்த ஷோரூம் எண்ணூறு சதுர அடி இருக்கும். ஒரே ஒரு வண்டி இருந்தது. ஒரே விதமான உடையணிந்த இரண்டு ஸ்டாஃப் இருந்தனர். எங்களை அமர வைத்து விட்டு கொட்டேஷன் கொண்டு வந்து கொடுத்தனர். அந்த வண்டியின் விலை ரூபாய் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம். அமைப்பாளர் மெல்ல சொன்னார். ‘’ தம்பி ! இந்த வண்டி வாங்க நாலு லட்சம் நாலே கால் லட்சத்தில் உனக்கு ஒரு புது கார் வாங்கித் தரச் சொல்றேன் அப்பாகிட்ட.’’

தம்பி சொன்னான். ‘’ஒரு எஸ்.யூ.வி அடுத்த வருஷம் வாங்கணும்னு அப்பாகிட்ட சொல்லியிருக்கன்’’. அமைப்பாளர் ஒன்றும் பேசவில்லை. ரூபாய் பத்தாயிரத்தை டிஜிட்டல் பேமெண்ட்டாக செய்தான்.

அந்த சாலையில் பாடகச்சேரி ராமலிங்கம் சுவாமி ஆலயம் இருந்ததை அமைப்பாளர் கவனித்திருந்தார். சில நிமிடங்கள் அங்கு சென்று விட்டு செல்வோம் என்று கூறினார். இருவரும் சென்றனர்.

‘’பைரவ சித்தர்’’ எனப்படும் பாடகச்சேரி ராமலிங்கம் சுவாமிகள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர். தஞ்சாவூரில் இருக்கும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலைக் கட்டியவர். கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் கோபுரத்தைக் கட்டியவர். பைரவ உபாசனை கொண்டவர். கடுமையான யோக சாதனை உடையவர். அவருடைய ஆலயத்தில் சில நிமிடங்கள் வழிபட்டு விட்டு இருவரும் புறப்பட்டனர்.

திரும்பி வரும் வழியில் வெட்டப்பட்ட மரங்களின் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். ஊருக்கு வந்ததும் ஆர்.டி.ஓ அலுவலத்துக்கு செல்லச் சொன்னார். ஆர். டி. ஓ வாகனம் இல்லை. அவரது தனி உதவியாளர் இருக்கையில் இருந்தார். என்னைப் பார்த்ததுமே எங்கோ மரம் வெட்டப்பட்டிருக்கிறது என்பதை அவர் யூகித்துக் கொண்டார்.

‘’நமஸ்காரம் சார். நாம அடிக்கடி இப்போ சந்திக்கிற சூழ்நிலை வருது. ரொம்ப சிரமம் கொடுக்கறனோ.’’

‘’இல்ல இல்ல அப்படியெல்லாம் இல்லை. என்ன விஷயம் சொல்லுங்க’’

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஒரு வசனம் வரும். ‘’மண்ணுக்குள்ளே தான் தங்கமும் வைரமும் புதைந்து கிடக்கிறது’’ என. அவ்வாறே சர்க்காரிலும் என அமைப்பாளர் எண்ணிக் கொண்டார்.

‘’நான் ஸ்மார்ட்ஃபோன் யூஸ் பண்றது இல்ல. இது தம்பி எடுத்த ஃபோட்டோஸ். இன்னைக்கு தான் வெட்டியிருக்காங்க. ஏழு லேபரை எம்ப்ளாய் பண்ணியிருக்காங்க. ஆயிரம் பேர் போற வர்ர பாதை. ஏன் மரம் வெட்டறாங்கங்கறது நம்ம கேள்வி இல்லை. பர்மிஷன் வாங்கிட்டு அத செய்யலாம்ல. ஒவ்வொரு தடவையும் நான் சம்பவத்தை சொல்லி பர்மிஷன் வாங்கினாங்களான்னு கேக்கறதும் நீங்க இல்லன்னு சொல்றதும் ரொடீன் ஆயிடுச்சு.’’

அதிகாரி சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஃபோன் செய்தார்.

ஊரைச் சொல்லி ‘’ அங்க மெயின் ரோட்டுல ஒரு வேப்ப மரமும் புங்கன் மரமும் வெட்டியிருக்காமே?’’

‘’பட்டுப் போன மரமா இருக்கும் சார்’’

‘’நான் ஃபோட்டோஸ் பாத்துட்டன். இலை பச்சையா இருக்கு. அதனால அது பட்ட மரம் இல்லை.’’

‘’யாரு சார் புகார் கொடுத்தது?’’

‘’யாரோ ஒருத்தர். ஒரு ஏ ஒரு பி ஒரு சி இல்லன்னா ஒரு எக்ஸ் ஒரு ஒய் ஒரு இஸட். ஒரு வழிப்போக்கர்.’’

‘’கொஞ்சம் கன்வின்ஸ் பண்ணி அனுப்பிட முடியுமா?’’

‘’அவர் கன்வின்ஸ் ஆக மாட்டார். ஃபைட் பண்ணுவார்’’

‘’---------------‘’

‘’அந்த ஸ்பாட்டுக்குப் போய் யார் வெட்டுனது என்னன்னு பாத்து வாக்குமூலம் வாங்குங்க’’

ஃபோன் பேசி முடித்து விட்டு அமைப்பாளரிடம் ‘’நான் ஆக்‌ஷன் எடுக்கச் சொல்லி சொல்லியிருக்கன் சார்’’ என்றார்.

‘’உங்க நேரத்தை எடுத்துக்கறது எனக்கு உண்மையிலயே வருத்தம் கொடுக்குது. மரங்கள் விஷயத்துல தப்பு நடக்காம பாத்துக்கங்க. இது என்னோட ரெக்வெஸ்ட்.’’

 


Wednesday 10 August 2022

நான் எனும் பாரதீயன் - கே. கே. முகமது

 

இந்தியத் தொல்லியல் துறையில் பணியாற்றிய திரு. கே. கே. முகமது அவர்கள் தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியுள்ளார். தனது தாய்மொழியான மலையாளத்தில் எழுதப்பட்ட ‘’ஞான் என்னும் பாரதீயன்’’ என்னும் நூல் தமிழில் ‘’நான் எனும் பாரதீயன்’’  என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில் வெளியாகி உள்ளது. 

கேரளாவின் மலபார் பகுதியில் கொடுவள்ளி கிராமத்தில் பீரான் குட்டி - மரியோம்மா தம்பதியினரின் மகனாகப் பிறக்கிறார் திரு. கே. கே. முகமது. ஐந்து சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் திரு. முகமதுவின் உடன்பிறந்தவர்கள். மரியோம்மா ஹஜ் யாத்திரை மேற்கொள்கிறார். அதன் பின் ஹஜ்ஜூம்மா எனப்படுகிறார். அவருக்கு தனது மகன் ஒரு இமாம் ஆக வேண்டும் என்பது விருப்பம். தந்தை பீரான் குட்டிக்கு தனது மகனை ஒரு பொறியாளனாகக் காண வேண்டும் என்ற ஆவல். மதக்கல்வி பெற மதரசாவுக்கு அனுப்பப்படுகிறார் முகமது. எனினும் அவரது உள்ளம் பள்ளிக்கல்வியை நாடுகிறது. பலருடன் இணைந்து கற்கும் முறை தனது தனிமையைப் போக்கி தனக்கு பெருமகிழ்ச்சி தரும் என்ற எண்ணம் முகமதுவுக்கு இளமையிலேயே உருவாகி விடுகிறது. பள்ளியில் இணைந்து கல்வி கற்க முகமதுவுக்கு ஒரு வாய்ப்பு உண்டாகிறது. 

தனது வீட்டிலிருந்து சற்று தொலைவிலிருந்த பள்ளிக்கு தானும் சக மாணவர்களும் நடந்து செல்லும் சித்திரத்தை தீட்டிக் காட்டுகிறார் திரு. முகமது. அவ்வாறு நடந்து செல்கையிலேயே தன்னைச் சுற்றி இருக்கும் நிலம், இயற்கை, பறவைகள், பிராணிகள் , சக மனிதர்கள் ஆகியோர் குறித்த அறிமுகமும் பரிச்சயமும் ஈடுபாடும் தனக்கு உருவானதைப் பதிவு செய்கிறார். இன்றைய தலைமுறை மாணவர்களும் தங்கள் வாழிடத்துடன் தங்கள் சமூகத்துடன் இவ்வாறான உயிரோட்டமான தொடர்பில் இருப்பது அவர்கள் கல்வியின் முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும் என்பதை தனது விருப்பமாக நூலில் பதிவு செய்கிறார். 

தனது ஆரம்பக் கல்வி ஆசிரியர்களே தனது வாழ்வுக்கு ஒளி அளித்த ஆசான்கள் எனக் கூறும் திரு. முகமது அவர்கள் தனக்கு அளித்ததை இப்போதும் நினைத்துப் பார்ப்பதாக கூறுகிறார். ஒரு சமூகம் நன்னிலை பெற ஆரம்பக் கல்வி ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்ற அவதானத்தை நூலில் முன்வைக்கிறார் திரு. முகமது. தனது வாழ்க்கையின் மையக் காலகட்டம் ஒன்றில் தில்லியில் பிச்சை எடுக்கும் சிறுவர்களுக்காக ஆரம்பக் கல்வி அமைக்கும் மையம் ஒன்றை தொல்லியல் துறை நினைவுச்சின்னங்களின் அருகில் தனது மனைவி மற்றும் நண்பர்களின் உதவியுடன் துவங்கி நடத்துகிறார் திரு. முகமது. 2010ம் ஆண்டு தில்லி வந்த அப்போதைய அமெரிக்க அதிபரான திரு. பராக் ஒபாமாவுக்கு தில்லியில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை விளக்கும் வழிகாட்டியாக திரு. முகமது இருக்கிறார். அப்போது திரு. பராக் தன்னை திரு. முகமது கல்விப்பணி ஆற்றும் இடத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கூற அவ்வாறே நிகழ்கிறது. அங்கிருக்கும் மாணவர்களுடன் உரையாற்றும் ஒபாமா ‘’கல்வியே எல்லா இடர்களிலிருந்தும் மனிதர்களை விடுவிக்கும்’’ என்று பேசுகிறார். 2014ம் ஆண்டு மீண்டும் இந்தியா வருகை புரியும் திரு. பராக் ஒபாமா முன்னர் தான் சந்தித்த சிறுவர்களில் விஷால் என்ற சிறுவனைக் குறித்து விசாரித்து அறிகிறார். அந்த சிறுவன் அப்போது எட்டாம் வகுப்பு பயின்று கொண்டிருந்தான். அவனுடன் ஒரு உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அவனுடன் உரையாடினார் திரு. பராக் ஒபாமா என்ற தகவலை இந்த நூலில் பதிவு செய்கிறார் திரு. முகமது. 

கொடுவள்ளி கிராமத்து நூலகத்தில் இருந்த நாளிதழ்களும் புத்தகங்களுமே தன்னைத் தனக்கு அடையாளம் காட்டியதாகச் சொல்கிறார் திரு. முகமது. மாத்ருபூமி வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூலான ஜவஹர்லால் நேருவின் ‘’ டிஸ்கவரி ஆஃப் இந்தியா’’ நூல் தனக்கு வரலாற்றின் மீதும் தொல்லியல் மீதும் சிறு வயதிலேயே ஆர்வமளித்தது எனக் கூறுகிறார் திரு. முகமது. ராகுல் சாங்கிருத்யாயனின் நூல்களும் தனக்கு மிகவும் பிடித்தமான்வை என்பதையும் சொல்கிறார். 

அலிகர் பல்கலைக் கழகத்தில் வரலாறு படிக்கச் செல்கிறார். இடதுசாரிகளின் அறிமுகம் கிடைக்கிறது. இந்தியக் கல்வித்துறையில் எவ்வாறு இடதுசாரிகள் தங்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் சுயலாபத்துக்காக பெரும் சீரழிவுகளை உருவாக்கியிருக்கிறார்கள் - உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தனது பற்பல அனுபவங்களின் அடிப்படையில் விளக்கிச் சொல்கிறார் திரு. முகமது. அவர் அலிகரில் கல்லூரி மாணவனாக வரலாறு படிக்க ஆரம்பித்ததிலிருந்து தனது பணி ஓய்வு பெறும் வரை எவ்வாறெல்லாம் தனக்கு இன்னல்களையும் இடர்களையும் தொடர்ச்சியாக இடதுசாரிகள் அளித்தார்கள் என்பதை வாசகர் முன் வைக்கிறார். மேலும், இடதுசாரி தரப்பு எவ்விதம் கொடுவிளைவுகளை இந்திய கல்வித் துறைகளில் உருவாக்குகிறது என்பது குறித்து விரிவாக பதிவு செய்திருக்கிறார் திரு. முகமது அவர்கள். 

தொல்லியல் துறை அதிகாரியாக நாடெங்கும் பணி புரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பர்யம் குறித்து பெருமதிப்பு கொண்டவரான திரு. முகமது அவர்களுக்கு அந்த துறையில் தனது பங்களிப்பாக பல விஷயங்களை அளிக்க ஊழ் அவருக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. நூலில் ஒரு இடத்தில் தனது அனுபவம் ஒன்றைப் பதிவு செய்கிறார் முகமது. அதாவது, முகமது சட்டீஸ்கரில் பணி புரிகிறார். அப்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மலை மீதிருக்கும் பாழடைந்த சிவாலயம் ஒன்றினுக்குச் செல்கிறார். அந்த கோயிலின் அர்ச்சகர் ஒருவர் முகமதுவிடம் தொல்லியல் துறை மூலமாக இந்த கோயிலைச் சீரமைத்துத் தருமாறு கோரிக்கை வைக்கிறார். தான் சட்டீஸ்கர் மாநிலத்துக்கு மட்டுமே பொறுப்பாளர் என்றும் இந்த கோயில் போபால் அலுவலகத்துக்குக் கட்டுப்பட்டது என்பதால் தன்னால் ஏதும் செய்ய இயலாது என அர்ச்சகரிடம் வருத்தத்துடன் தெரிவித்து விட்டு வந்து சேர்கிறார் முகமது. அன்று இரவு உறக்கத்தில் திரு. முகமது அவர்களுக்கு ஒரு கனவு. கனவில் சிவபெருமான் தோன்றி அந்த ஆலயத்தைச் சீரமைக்குமாறு சொல்கிறார். முகமது பதில் சொல்வதற்குள் கனவு கலைந்து விடுகிறது. நூதனமான கனவுகளில் ஒன்று என்று எண்ணிக் கொள்கிறார் திரு. முகமது. மறுநாள் காலை அலுவலகம் செல்கிறார். அலுவலகம் சென்ற ஒரு மணி நேரத்தில் அவருக்கு தில்லியிலிருந்து ஒரு தொலைநகல் ( ஃபேக்ஸ்) வருகிறது. சட்டீஸ்கர் பொறுப்புடன் மத்தியப் பிரதேச பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டிருப்பதாக. உடன் அந்த சிவாலயம் செல்கிறார் முகமது. இந்த விஷயத்தை கோயில் அர்ச்சகரிடம் கூறுகிறார். அர்ச்சகர் முகமது இங்கே வருவதற்கு முதல் நாள் இரவில் சிவன் தன் கனவிலும் வந்ததாகவும் நாளை ஒரு அதிகாரி வருவார் அவரிடம் கோயிலை புனரமைக்கச் சொல் எனக் கூறியதாகவும் அதன் படியே அவர் முகமதுவிடம் கேட்டுக் கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார். அந்த கோயிலைப் புனரமைக்கிறார் முகமது. 

தொல்லியல் துறையில் பணி புரிந்த போது அரசியல்வாதிகளுடன் ஏற்பட்ட பல்வேறு மோதல்கள் குறித்தும் பதிவு செய்கிறார் முகமது. 

ராமஜென்ம பூமி இயக்கம் தீவிரம் கொண்டிருந்த காலகட்டத்தில் பாபர் கும்மட்டம் ஹிந்துக்களிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற தனது எண்ணத்தை ஒரு தொல்லியல் அறிஞர் என்ற கோணத்தில் முன்வைக்கிறார் முகமது. அதன் மூலம் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு ஆளாகிறார். இருப்பினும் தனது எண்ணத்தில் சிறிதும் மாற்றமின்றி இருக்கிறார் முகமது. இடதுசாரிகள் பாபர் கும்மட்டம் இருந்த இடம் பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் சொந்தமானது என்ற கருத்தை பரப்பிக் கொண்டிருந்த நிலையில் 1976-77ம் ஆண்டிலேயே அயோத்தி அகழ்வாராய்ச்சியில் கலந்து கொண்டவர் என்ற முறையில் கும்மட்டத்தின் தூண்களில் ஹிந்து தெய்வ உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதை ஆதாரமாகக் காட்டி அந்த இடம் கோவிலே என நிறுவுகிறார் முகமது. 

1990ம் ஆண்டு தினமணியில் திரு. ஐராவதம் மகாதேவன் ராமஜென்ம பூமி இடத்தில் இருந்தது ஆலயமா என்பதை அறிய மறு அகழாய்வு செய்யலாம் என்ற கருத்தை எழுதுகிறார். அதற்கு ஆதரவு தெரிவித்து ஒரு விரிவான கடிதத்தை திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார் திரு. முகமது. அந்த கடிதம் கண்ட திரு. மகாதேவன் திரு. முகமது அவர்களை அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்திக்கிறார். அந்த கடிதத்தை தினமணியில் வெளியிட விரும்புவதைத் தெரிவிக்கிறார். முகமது ஓர் அரசு அதிகாரி. ராமஜென்மபூமி விவகாரம் உச்சத்தில் இருக்கும் நேரம். இந்த நிலையில் அவரது பெயரில் கட்டுரை வெளியானால் திரு. முகமது அவர்களுக்கு சிக்கல் உருவாகக் கூடும் என்பதால் அந்த விரிவான கடிதம் ‘’ Letters to Editor'' பகுதியில் பிரசுரமாகிறது. அந்த கடிதத்தின் மொழிபெயர்ப்பு பெரும்பாலான இந்திய மொழிகளில் பிரசுரமாகிறது. ஒரு தொல்லியில் அறிஞரின் கூற்று என்ற வகையில் இந்த விஷயத்தில் அந்த கடிதம் முக்கிய ஆவணமாகிறது. 

பாபர் கும்மட்டம் இடிக்கப்பட்ட பின் நிகழ்ந்த அகழாய்வு அங்கு முன்னர் இருந்தது ஆலயம் என்பதை நிரூபித்தது. அந்த அகழாய்விலும் திரு. முகமது அவர்கள் இடம் பெற்றிருந்தார். ‘’ மரங்களும் நடுங்கும் குளிரில் சட்டையின்றி காலில் செருப்பு இன்றி தனது கடவுளான ஸ்ரீராமனை தரிசிக்க பல நூறு மைல் நடந்து வரும் ‘’ மனிதனின் உணர்வு மதிக்கப்பட வேண்டும் என்ற தனது உணர்வை நூலில் பதிவு செய்கிறார் திரு. முகமது. 

இன்றைய காலகட்டத்தில் தொல்லியல் துறை பண்பாட்டையும் நாட்டின் தொன்மையையும் தனது குடிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டியதின் அவசியத்தையும் அதே நேரம் தொல்லியில் துறை லாபமீட்டும் வகையிலும் செயல்பட வேண்டியதின் தேவையையும் திரு. முகமது முன்வைக்கிறார். 

உண்மை குறித்த தேடல் உள்ளவன் அடையும் மனநிறைவு என ஒன்று உண்டு. அதனை தனது அனுபவங்கள் மூலம் பணிகள் மூலம் அறிந்தவர் திரு. முகமது அவர்கள். பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றவரான திரு . முகமது அவர்களுக்கு மத்திய அரசு 2019ம் ஆண்டு ‘’பத்மஸ்ரீ’’ விருது அளித்தது. 

நூல் : நான் எனும் பாரதீயன். ஆசிரியர் : திரு. கே. கே. முகமது விலை : ரூ. 180/- 
பதிப்பகம் : சங்கத்தமிழ் பதிப்பகம்,கோவை-12                          
( sangatamilpathippagam(at)gmail(dot)com)

Saturday 6 August 2022

பாதை

நிலத்தில்
பூத்துக் கொண்டிருக்கின்றன
உனது காலடிச் சுவடுகள்
மேலும் மேலும்
ஒளிர்கின்றன
நீ
சுட்டிக் காட்டிய வான் மீன்கள்
நாம் இறங்கிய
நதி
இப்போது
பொங்கிப் பிரவாகிக்கிறது
எப்போதும்
திறந்தே இருப்பது
விடுதலையின் பாதை 

Thursday 4 August 2022

சிலம்பு - பூம்புகார்

தான் பயின்ற துறையில் புதுப்பாதையை உருவாக்கும் ஆசான்கள் காலந்தோறும் உருவாகி வந்த வண்ணமே உள்ளனர். அத்தகைய ஆசான்கள் மரபுக்கு தங்களின் பங்களிப்பாக சில கூறுகளை அளிக்கின்றனர். அவை காலத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் நிலைபெறுகின்றன. உலகெங்கிலும் இத்தகைய போக்கு உண்டு. இத்தகைய ஆசான்கள் உண்டு. தமிழில் அவ்வாறான ஒரு ஆசான் இளங்கோ அடிகள். அவருடைய பாணி என்பது தனித்துவமானது. ‘’உரையிடப் பட்ட பாட்டுடைச் செய்யுள்’’ ஆக தனது காப்பியத்தை எழுத முற்பட்டதே அவ்வாறான ஒரு செயலே. சிலப்பதிகாரம் அளவில் மிகச் சிறியது. தமிழ் இலக்கியத்தின் - தமிழ்ச் சமூகத்தின் சாரமான பகுதிகளை அறிய இந்த ஒரு நூலை வாசித்து அறிந்தாலே போதுமானது. 

சிலப்பதிகாரம் தமிழ்நாட்டில் சரியான விதத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதா - புரிந்து கொள்ளப்பட்டுள்ளதா என்ற ஐயம் இந்த பதிவின் குறிப்புகளை எழுதிய போது மீண்டும் மீண்டும் எழுந்தது. 

சிலப்பதிகாரத்தை முழுவதும் உள்வாங்க இந்திய மரபின் புராணங்கள் ,  இந்திய மரபின் ஆறு தரிசனங்கள், இந்திய நிலத்தின் வழிபாட்டு முறைகள் , நான்கு மறைகள் - அவற்றை அடிப்படையாகக் கொண்ட் துணை மறைகள், சாஸ்திரங்கள், கட்டிடக் கலை என பலவிஷயங்கள் குறித்து அடிப்படையான அறிமுகம் கொண்டிருப்பது அவசியமானது. இந்த விஷயங்கள் குறித்து கொண்டிருக்கும் அறிமுகம் சிலப்பதிகாரத்தை சரியான கோணத்தில் உள்வாங்கிக் கொள்ள பேருதவியாக இருக்கும். 

சிலப்பதிகாரம் வாசிக்கும் போது என் மனதில் எழும் குறிப்புகளை தினமும் பதிவு செய்து விட்டு இயன்றால் அவற்றை முழுமையான ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. முழுமையை விட சிலப்பதிகார வாசிப்பு ஒரு வாசகனாக எனக்குக் குறிப்புணர்த்துவனவற்றை முன்வைக்க விரும்புகிறேன்.  

Wednesday 3 August 2022

சிலம்பு

நேற்று இரவு நினைவுகளில் காவிரி இருந்து கொண்டே இருந்தது. வடிநிலப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு நதி என்றுமே பிரியத்துக்குரியது. ’’ஆடிப்பெருக்கு’’ இங்கே அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் நன்னாள். வீட்டின் இளையோர் காவிரியின் காப்பினைக் கையிலும் கழுத்திலும் கட்டிக் கொள்ளும் நாள். நேற்று சிலப்பதிகாரம் படிக்க வேண்டும் என்று தோன்றியது. என்னிடம் உள்ள ஒரு சிலப்பதிகார நூல் உரை எதுவுமின்றி நேரடியாக சிலப்பதிகாரச் செய்யுளைக் கொண்டது. எனவே அளவில் சிறியது. மங்கல வாழ்த்துப் பாடலிலேயே காவிரியின் பெயர் வரும். மங்கல வாழ்த்துப் பாடலில் திங்களையும் ஞாயிறையும் மாமழையையும் பூம்புகாரையும் போற்றுதும் போற்றுதும் என இளங்கோ வாழ்த்திப் பாடுகிறார். ஆயினும் அந்த பாடலில் ’’காவிரி’’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் இளங்கோ. 

கம்பன் கவி குறித்து ‘’யானை பிழைத்தவேல்’’ எழுதினேன். திருவள்ளுவப் பேராசானின் குறிப்பிட்ட சில குறட்பாக்கள் குறித்து ‘’ஆசான் சொல்’’ எழுதினேன். நெடுநாட்கள் விரும்பிய திட்டமிட்ட சிலப்பதிகாரம் குறித்து எழுதத் துவங்க உள்ளேன். 

ஆடிப்பெருக்கன்று அதனைத் தொடங்குவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. 

 

Tuesday 2 August 2022

அமைப்பாளரின் மேஜை

அமைப்பாளரின் மேஜை மீது அவருடைய மடிக்கணினி அமர்ந்திருக்கிறது. அது மடிக்கணினி என்றாலும் ஒரே இடத்தில் மேஜைக்கணினி போலவே இருக்கிறது. அதன் சுட்டியின் வயர்கள் , மின் இணைப்பு வயர்கள் ஆகியவை மேஜையின் நிறைய இடத்தை எடுத்துக் கொண்டு சுற்றி வருகின்றன. தனது மடிக்கணினியுடன் ஒரு வெளிப்புற கீ-போர்டினை இணைத்திருக்கிறார். அது பெரியது . மேஜையை பெருமளவில் ஆக்கிரமித்து விடுகிறது.  தனது ஹார்டுவேர் கடை நண்பர் அளித்த சிறு குறிப்பேடு ஒன்று மேஜையின் இடது பக்கத்தில் கணினிக்குப் பக்கத்தில் உள்ளது. வலது பக்கத்தில் இரண்டு பேனா ஒரு பென்சிலை அமைப்பாளர் வைத்திருக்கிறார். இரண்டு ஸ்டேப்ளர்கள் மேஜை மீது உள்ளன. ஒரு பேப்பர் வெயிட் உள்ளது. கடைசியாக வாசித்த நாவலும் மேலும் சில புத்தகங்களும் உள்ளன. மேஜைக்கு அருகில் இருக்கும் சிறு மேஜையில் அமைப்பாளர் அரசாங்கத்துக்கு அனுப்பியிருக்கும் மரங்கள் தொடர்பான காகிதங்கள் கோப்புகளில் உள்ளன. சில பொருட்களே எனினும் அவை எவ்வளவு அடுக்கி வைத்தாலும் தங்களுக்கென ஒரு தனி விருப்பம் கொண்டு அதன் படியே செயல்படுகின்றன.  மேஜையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற எண்ணம் அமைப்பாளருக்கு எப்போதும் சாஸ்வதமாக இருக்கிறது.