Wednesday 30 November 2022

காவிரி போற்றுதும் - தொடரும் பயணம்

சில ஆண்டுகள் எல்லாருக்கும் எப்போதும் நினைவில் இருக்கும். பிறந்த ஆண்டு. புதிய ஒரு பள்ளியில் சேர்ந்த ஆண்டு. கல்லூரியில் சேர்ந்த ஆண்டு. கல்லூரியில் பட்டம் பெற்ற ஆண்டு. வணிகம் தொடங்கிய ஆண்டு அல்லது பணியில் சேர்ந்த ஆண்டு. இன்னும் பலப்பல. 2020ம் ஆண்டு எல்லாராலும் நினைவு கூரப்படும். அந்த ஆண்டுதான் உலகம் கோவிட்-ஐ எதிர்கொண்டது.  என்னுடைய வாழ்வில் 2020 பலவிதத்திலும் முக்கியத்துவம் கொண்டது. அந்த ஆண்டுதான் ‘’காவிரி போற்றுதும்’’ தனது பயணத்தைத் துவக்கியது. அதன் அமைப்பாளன் என்ற முறையில் நான் மகிழவும் செய்கிறேன். அதே நேரம் இன்னும் ஆற்ற வேண்டிய பணிகளின் பட்டியல் மிக நீளமாக மிகப் பெரிதாக இருப்பதால் ஒரு நிறைவின்மையையும் உணர்கிறேன். செயலின் பாதையில் நடக்கும் எவருக்கும் மகிழ்ச்சியும் இருக்கும் ; நிறைவின்மையும் இருக்கும். இது இயல்பானதே. 

‘’காவிரி போற்றுதும்’’ கிராமங்களில் மரம் நடுதலை தனது முதன்மையான பணியாகவும் முதல் பணியாகவும் கருதியது. ஒரு மரம் என்பது தன்னளவில் மகத்தானது. ஒரு மரத்தின் இருப்பு என்பது தன்னளவில் பல நற்பண்புகளை மனிதர்களுக்குக் காட்டுகிறது. ஒரு மரம் எத்தனையோ ஜீவராசிகளுக்கு உணவாக உறையுள்ளாகப்  பயன்படுகிறது. விருப்பு வெறுப்பு இன்றி எல்லா ஜீவன்களையும் அது சமமாகப் பார்க்கிறது. இந்திய மரபு இறையை சத்குண பிரம்மம், நிர்க்குண பிரம்மம் என இரண்டாகப் பார்க்கிறது. ஒரு மரம் என்பது சத்குண பிரம்மத்தின் ஒரு வடிவமே. இறை வடிவமான விருட்சங்களுக்கு முதல் வணக்கம். 

‘’காவிரி போற்றுதும்’’  கிராமம் என்ற நுண் அலகில் செயல்படுவது என்று முடிவு செய்தது. கிராமத்தை சமூகத்தின் தேசத்தின் நுண் வடிவமாகக் ‘’காவிரி போற்றுதும்’’ காண்கிறது. இந்தியாவில் ஒரு கிராமத்தில் சாத்தியமாகும் விஷயம் என்பது நாடு முழுதுக்கும் உள்ள எல்லா கிராமங்களுக்கும் பெருமளவு சாத்தியமே. எனவே ஒரு கிராமத்தில் நிகழும் நற்செயல்களை அதே பாணியில் அல்லது சிற்சில மாற்றங்களுக்கு உட்படுத்தி எல்லா கிராமங்களுக்கும் முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் ‘’காவிரி போற்றுதும்’’ தனது பயணத்தை வடிவமைத்துக் கொள்கிறது. இந்த நம்பிக்கையை அளிப்பவர்கள் செயல் புரியும் கிராமத்தின் மக்கள். ஒரு அமைப்பாளன் என்னும் முறையில் நான் உணரும் விஷயம் ஒன்று உண்டு. இந்திய கிராமம் ஒன்றின் மக்கள் என்பவர்கள் மகோன்னதமான உலகப் பண்பாடு ஒன்றின் சொந்தக்காரர்கள். அந்த பண்பாட்டின் அடிப்படையான கூறுகள் அவர்களிடம் எஞ்சி இருக்கின்றன. தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற முழு உண்மை அவர்கள் பிரக்ஞையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களே அறியாமல் அவர்கள் ஆழுள்ளம் இன்னும் அந்த பண்பாட்டை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மக்களை அடித்தளமாகக் கொண்டே உலகின் மிகச் சிறந்த பேரரசுகள் இந்திய மண்ணில் உருவாயின. நம் நாடு உலகை வழிநடத்தும் நாள் வரும். அன்றும் இந்த நாட்டின் கிராமங்களே அந்த மாண்புக்குக் காரணமாக அமையும். கிராமங்கள் அனைத்துக்கும் வணக்கம். 

‘’காவிரி போற்றுதும்’’ ஓர் நுண் அமைப்பு. தன்னைத் தானே நிர்மாணித்துக் கொண்டு முன் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் அமைப்பு. ஓர் அமைப்பை நிலை நிறுத்தும் வழி நடத்தும் திறன்கள் என்னிடம் போதுமான அளவு இருக்கிறதா என்ற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு. இருப்பினும் எந்த ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று சொன்னாலும் ஊக்கமூட்டி ஆதரவு அளிக்கும் நண்பர்களே ‘’காவிரி போற்றுதும்’’ன் நாடித்துடிப்புகள். ’’காவிரி போற்றுதும்’’முன்னெடுக்கும் அனைத்து நற்செயல்களுக்கும் ஆதரவளிக்கும் நண்பர்களுக்கு வணக்கமும் நன்றியும். அவர்களின் ஆலோசனைகளுடன் பங்கேற்புடன்  அமைப்பை மேலும் வலுவாகக் கட்டமைப்பதற்கான காலம் கனிந்திருக்கிறது என்று தோன்றுகிறது.  

‘’பெரிதினும் பெரிது கேள்’’ என்கிறான் தமிழ் மூதாதையான பாரதி. ‘’கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது’’என்கிறான் வள்ளுவப் பேராசான். நாம் குறைந்தபட்சம் ஒரு கிராமத்திலாவது வாழும் அனைத்து மக்களும் அவர்களால் அடையக்கூடிய அடிப்படையான பொருளியல் சுதந்திரத்தை அவர்கள் அடைய வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளோம். அதற்காகப் பணியாற்றுகிறோம். ஒரு கிராமம் என்பது மரங்கள் நிறைந்த பட்சிகள் நிறைந்த மலர்கள் நிறைந்த நீர்நிலைகள் நிறைந்த ஒரு பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற நிலையை மீண்டும் கொண்டு வர முயற்சிகளை முன்னெடுக்கிறோம். கிராமத்தின் எல்லாக் குழந்தைகளுக்கும் உலகியல் கல்வியும் பண்பாட்டுக் கல்வியும் சமூகத்தின் முழுப் பொறுப்பின் அடிப்படையில் கிடைக்க வேண்டும் என்பது நமது விருப்பம். ஒரு கிராமத்திலாவது அதனை சாத்தியமாக்கிக் காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் செயலாற்றுகிறது ‘’காவிரி போற்றுதும்’’. 

சலனத்தைத் தன் சுபாவமாகக் கொண்டது நதி. நதிகளில் சிறந்தது காவிரி. நாம் அப்புண்ணிய நதியைப் போற்றும் தொண்டர்கள். அன்னை காவிரிக்கு வணக்கம். 

காவிரி போற்றுதும் ! காவிரி போற்றுதும் ! காவிரி போற்றுதும்!

Monday 28 November 2022

ஊர்ப்பயணம்

இரண்டு தினங்களுக்கு முன்னால், நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். 

‘’பிரபு! மெட்ராஸ் போகணும். ஒரு வேலை இருக்கு. நாம ரெண்டு பேரும் போய்ட்டு வந்திடுவோம்’’

’’மெட்ராஸ்க்கா?’’

’’ஆமாம் ஆமாம் மெட்ராஸ்க்குதான். காலைல டிரெயின்ல கிளம்புறோம். ஈவ்னிங் அதே டிரெயின்ல ரிடர்ன் ஆயிடறோம்’’

‘’திருச்செந்தூர் சென்னை வண்டியிலயா?’’

’’ஆமாம் ஆமாம் . அதே வண்டிதான்’’

‘’அந்த வண்டி டைமிங் காலைல 5.45 தானே?’’

‘’நீங்க எந்த காலத்துல இருக்கீங்க? இப்ப அதோட டைம் காலை 5 மணி. ‘’

‘’அஞ்சு மணியா?’’

‘’இப்ப இப்ப உங்களுக்கு உலக விபரமே அதிகம் தெரியறது இல்ல பிரபு’’

அவர் கூற்று உண்மையாயிருக்குமோ என்ற ஐயம் இருந்ததால் மௌனமாக இருந்தேன். 

‘’உங்களுக்கு என்ன ஒர்க்?’’

‘’ஒரு லேப்டாப் வாங்கணும்’’ 

எனக்கு லேப்டாப்பில் தமிழில் எழுதத் தெரியும். அதைத் தவிர மற்ற எந்த தொழில்நுட்ப விபரமும் எனக்குத் தெரியாது என்பது நண்பருக்குத் தெரியும். இருந்தும் ஏன் என்னை கூட வருமாறு கேட்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் நண்பரிடம் கேட்க முடியாது.  

‘’டிரெயின் டிக்கெட் இருக்கா பாருங்க. இல்லன்னா காலைல கிளம்பி பஸ்ல போவோம்’’

‘’பஸ்ஸா ? சான்ஸே இல்ல. நான் டிரெயின் பாக்கறன்.’’

நண்பர் அலைபேசியில் ரயில்வே இணைய தளத்துக்குச் சென்று ரயில்களின் இருக்கை இருப்புகளை பரிசோதித்தார். 

‘’செந்தூர் ஃபுல்’’

‘’பல்லவன் பாருங்க. காலைல 6.15க்கு விழுப்புரம் பாசஞ்சர் இருக்கு. அதுல போயி விழுப்புரத்துல காலைல 9.15க்கு பல்லவனைப் பிடிச்சுடலாம்’’

நண்பர் அந்த வாய்ப்பையும் பரிசோதித்தார். 

‘’பல்லவனும் ஃபுல்’’

கொஞ்ச நேரம் வேறு ஏதோ தோண்டிக் கொண்டிருந்தார். 

‘’பிரபு எர்ணாகுளம் தாம்பரம்னு ஒரு வண்டி இருக்கு’’

‘’புதுசா இருக்கே. நம்ம ஊர் வழியாவா போகுது.’’

‘’ஆமாம் காலைல 6.15க்கு நம்ம ஊர்ல. 11.45க்கு தாம்பரம் போகுது. அன்னைக்கு சாயந்திரம் 3.45க்கு தாம்பரத்துல கிளம்புது. நைட் 8.15க்கு நம்ம ஊருக்கு வந்திடுது. ஆனா வாரத்துல ஒரு நாள் மட்டும் தான் இந்த டிரெயின்’’

வழக்கமான தூக்கமும் கெடாது. இரவு முன் நேரத்தில் ஊர் திரும்பி விடலாம். 

‘’உங்க ஒர்க் மூணு மணி நேரத்துல முடிஞ்சிடுமா?’’

‘’நாம பர்ச்சேஸ் செய்யப் போற கடை குரோம்பேட்டைல இருக்கு. செல்லர் ஒரு ஹோல் சேலர். தாம்பரம் ஸ்டேஷன்ல ஓலா புக் பண்றோம். நேரா குரோம்பேட். அங்க பர்ச்சேஸ் முடிக்கறோம். தாம்பரத்துல லஞ்ச். உடனே ஸ்டேஷன் வந்துடறோம். டிரெயினைப் பிடிக்கறோம். ஊருக்கு வந்துடறோம்’’ 

எங்கள் ஊர்க்காரர்களுக்கு புறப்பாடு கொஞ்சம் முன் பின் இருந்தாலும் ஊர் திரும்புதல் துல்லியமாக இருக்க வேண்டும். 

நாளை ஒருநாள் பயணமாக சென்னை சென்று திரும்புகிறேன். 

உள்ளத்திலே உள்ளதுதான் உலகம்

பழைய தமிழ் திரைப்படப் பாடல்களுடன் பரிச்சயம் உள்ளவர்கள் இந்தப் பதிவின் தலைப்பு கண்ணதாசனின் வரி என்பதை நினைவுக்குக் கொண்டு வந்திருப்பார்கள். ‘’ஆட்டுவித்தார் யாரொருவர் ஆடாதாரே கண்ணா’’ என்ற பாடல். 

இன்று எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் ஊரின் பிரபலமான அறுவைசிகிச்சை நிபுணர். நாளின் பெரும்பாலான பொழுது மருத்துவமனையிலேயே இருக்கும் விதமான வாழ்க்கைமுறை அவருடையது. காலை எட்டு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு மருத்துவமனைக்குச் செல்வார். மதியம் மூன்று மணி வரை அங்கிருப்பார். வீடு திரும்பி மதிய உணவு அருந்தி விட்டு மீண்டும் மாலை ஐந்து மணிக்கு புறப்பட்டுச் செல்வார். இரவு வீடு திரும்ப ஒன்பது மணி ஆகி விடும். யார் மூலமோ ‘’காவிரி போற்றுதும்’’ மரம் நடும் பணிகள் குறித்து அறிந்திருக்கிறார். அவருக்கு மரம் நடுதல், மரக்கன்றுகள் தயார் செய்தல், மலர்ச்செடிகள் உற்பத்தி ஆகிய விஷயங்களில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. தான் மிகவும் விரும்பும் மிகவும் நேசிக்கும் இவ்வாறான விஷயங்களுக்கு நேரம் கொடுக்க முடியவில்லையே என்ற மனவருத்தம் அவருக்கு இருந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது கிராமங்களில் மரம் வளர்த்தல் குறித்து ஐயம் ஒன்றை எழுப்பினார். எனது அனுபவத்திலிருந்து நான் அவருடைய ஐயத்தைப் போக்கினேன். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து நான் எழுதிய பதிவுகளை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன். அவற்றை வாசித்து விட்டு என்னிடம் மீண்டும் பேசினார். அவருக்கு சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் இருக்கும் தீவிரமான ஆர்வத்தை உணர்ந்து கொண்டேன். 

அவருடைய இல்லம் அமைந்திருக்கும் பகுதியில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் என்னைத் தற்செயலாக கடைவீதியில் சந்தித்தார். அவரும் ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறார். அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கு முன்னாலும் இறைப் பூசனைக்குப் பயன்படும் மலர்ச்செடிகள் நட வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்து நூறு மலர்ச்செடிகள் வாங்கித் தர முடியுமா என்று என்னிடம் கேட்டார். எனக்கு அறுவை சிகிச்சை நிபுணரின் ஞாபகம் வந்தது. அவரை மனதில் உத்தேசித்து இரண்டு நாட்களில் சொல்கிறேன் என்று சொன்னேன். பின்னர் அறுவைசிகிச்சை நிபுணரைச் சந்தித்தேன். விஷயத்தைச் சொன்னேன். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. 

‘’பிரபு ! ‘’காவிரி போற்றுதும்’’ சார்பா நீங்க எவ்வளவோ செய்றீங்க. ஆனா இந்த விஷயம் உங்க கவனத்துக்கு வந்ததும் என்னோட ஞாபகம் வந்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கறீங்க. ரொம்ப தேங்க்ஸ்’’

‘’நீங்க நிறைய விஷயம் மனசால செய்யணும்னு நினைக்கறீங்க. அது ரொம்ப நல்லது. நீங்க தினமும் பாக்கற ஏரியால நீங்க தினமும் ஹாஸ்பிடலுக்கு டிராவல் பண்ற ஏரியால நீங்க டொனேட் செய்ற செடிகளை அந்த செடிகள் பூ பூக்கறத பாத்தா நீங்க ரொம்ப சந்தோஷமா நிறைவா ஃபீல் பண்ணுவீங்க. அது உங்களை இன்னும் அதிகமா இந்த விஷயம் குறித்து யோசிக்க வைக்கும். அதனால தான் உங்க கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு வந்தேன்’’ 

‘’நந்தியாவட்டை அல்லது அடுக்கு நந்தியாவட்டை 100 செடிகள்’’ 

‘’நீங்க சொல்றபடியே செஞ்சுடுவோம்’’. நண்பரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன். 

இன்று காலை அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு. 

‘’பிரபு ! எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு’’

‘’என்ன விஷயம் சொல்லுங்க’’

‘’இப்ப நம்ம டிஸ்ட்ரிக்ட்ல நிறைய கோவில் இருக்குல்ல அந்த கோவிலைச் சுத்தி அங்க இருக்கற சுவாமிகளோட அம்சமா இருக்கற மரங்களை நடணும். அதாவது சிவன்னா வன்னிமரம், வில்வமரம், நாகலிங்க மரம், கிருஷ்ணன்னா கடம்ப மரம் முருகன்னா கருங்காலி செங்காலி மரம் தக்‌ஷணாமூர்த்தினா ஆலமரம் இப்படியான டிரெடிஷனல் மரங்களை ஒவ்வொரு கோவிலிலும் நடணும்’’

‘’நல்ல ஐடியா . நாம இதப் பத்தி டிஸ்கஸ் செய்வோம்’’

‘’நீங்க ஃபீல்டுல ஒர்க் பண்றீங்க. எனக்கு ஃபீல்டுல ஒர்க் பண்ண டைம் கிடையாது.  நான் என்னால முடிஞ்ச மேக்ஸிமம் சப்போர்ட் பண்றன். ‘’காவிரி போற்றுதும்’’ சார்பா நீங்க இந்த விஷயத்தை செய்ங்க’’

‘’ஃபீல்டுல ஒர்க் பண்றதுக்கு சமமான விஷயம் தான் ஒரு நல்ல விஷயத்தை மனசால யோசிக்கறதும். மனசுல நினைக்கப்படற ஒரு விஷயம் தான் பின்னாள்ல ஒரு செயலா மாறும். ஒரு செயல் நடக்குதுன்னா அது எப்பவோ யாராலயோ நினைக்கப்பட்டிருக்குன்னு அர்த்தம். அதனால ஐடியா எக்ஸிகியூஷன் ரெண்டையும் தனித்தனியா பாக்க வேணாம். ஒரு நாணயத்தோட ரெண்டு பக்கங்கள் தான் ரெண்டும். ‘’ 

‘’நானும் யோசிக்கறன் . நீங்களும் யோசிங்க. நாம சேர்ந்து ஒரு ஆக்‌ஷன் பிளான் தயார் செய்வோம். பிற்பாடு அதை ரொம்ப சீக்கிரமா எக்ஸிகியூட் செய்வோம். ‘’ 

அவரது ஆர்வமும் தீவிரமும் எனக்கு ஆச்சர்யமளித்தது. 

‘’காவிரி போற்றுதும்’’ மிகச் சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. 

Friday 25 November 2022

மாடியும் தாடியும்

இரு வயோதிகர்கள். அண்டை வீட்டுக்காரர்கள். இருவருக்குமே தாடி உண்டு. ஒருத்தரின் வீட்டு எண் 93பி. மற்றொருவரின் வீட்டு எண் 93சி. ஒருவருடைய தாடி மார்க்ஸ் இங்கர்சால் வகை தாடி. மற்றொருவருடையது அதை விட பெரியது. இந்த பின்னணியைக் கொண்டு எழுதப்பட்ட ஹாஸ்யமான சிறுகதை தி. ஜா வின் மாடியும் தாடியும்.  

வெயில்

இந்திய மரபில் கணவன் - மனைவி உறவென்பது மிகவும் தனித்துவமானது. யோசித்துப் பார்த்தால் உலகின் அத்தனை மரபுகளுமே கணவன் - மனைவி உறவின் தனித்துவத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஒருவர் மற்றவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது எல்லா உறவுகளிலும் சாத்தியம் எனினும் கணவன் - மனைவி உறவில் அதற்கான சதவீதம் பல மடங்கு அதிகம். 

’’நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள்’’ என பட்டினத்தார் கூறியது போல தனது இனிய துணையை இழந்த ஒருவரின் நினைவில் நீடிக்கும் உறவின் இனிமையைக் கூறும் சிறுகதை தி. ஜா வின் ‘’வெயில்’’.  

மாற்றல்

முக்கியமான இந்தியப் படைப்பாளிகளின் படைப்புகளில் சர்க்கார் இயங்குமுறை ஒரு பேசுபொருளாக இருப்பதைக் காணலாம். அனேகமாக எல்லா படைப்பாளிகளுமே சர்க்கார் அலுவலகங்கள் குறித்து சர்க்காருக்கும் மக்களுக்குமான சமூக உறவு குறித்து தங்கள் நாவல்களிலோ சிறுகதைகளிலோ எழுதியிருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் ஒவ்வொரு கீழடுக்கு அலுவலகமும் கூட ஒரு தர்பாராக தம்மை எண்ணிக் கொண்டு செயல்பட்டிருக்கிறது. நிலப்பிரபுத்துவ மனநிலை கொண்ட நம் நாட்டில் அது மிக இயல்பாக நடந்திருக்கிறது. சிறு அதிகாரம் கொண்ட அதிகாரிகள் கூட தங்களை சிற்றரசர்களாக எண்ணிக் கொண்டனர். இன்று வரை கூட அந்த மனநிலை கணிசமான அளவு நீடிக்கிறது.   

வெங்கடியா பிள்ளை ஒரு ஆக்கபூர்வமான சக்தி. ஆசிரியராக அப்பாமங்கலத்தில் பணியாற்றுகிறார். தனது செயல்களால் பள்ளிக்கும் பள்ளி இருக்கும் ஊருக்கும் பல நற்பயன்களை உருவாக்குகிறார். பதினோரு வருடம் அந்த பள்ளியில் பணியாற்றிய அவருக்கு மாற்றல் உத்தரவு வருகிறது. ஊர்ப் பொதுமக்கள் பிரிவுபச்சார விருந்து நடத்துகிறார்கள். அதில் ஒருவர் இந்த மாற்றல் உத்தரவை நீக்கம் செய்ய மேலிடத்தில் முயற்சி செய்கிறேன் என்கிறார். முயற்சி நடக்கிறது. 

மாற்றல் உத்தரவு  நீக்கம் பெறுகிறது. உத்தரவு நீக்கத்திற்கான முழுக் காரணத்தையும் வெங்கடியா பிள்ளை அறிகிறார். அந்த இடத்தில் ஒரு கதைத்திருப்பத்தை நிகழ்த்தி ‘’மாற்றல்’’ கதையை சிறுகதையாக்குகிறார் தி. ஜா. 

Thursday 24 November 2022

ஆனைப் பிளிறல்

மௌனத்தால் நிரம்பியிருக்கும் ஓர் அடந்த காட்டில் சட்டென ஓர் ஆனையின் பிளிறல்  எழும்பி ஒலிப்பது போல தமிழில் ஒரு புதிய புனைகதையாளன் உருவாகியிருப்பதை இன்று அடையாளம் கண்டேன். தேர்ந்த புனைகதையாளனுக்குரிய எல்லா திறன்களும் நுட்பங்களும் வாய்க்கப் பெற்றவன் அவன். மொழிதலின் எல்லா சாத்தியங்களையும் திறம்படக் கையாளக் கூடிய திறமை பெற்றிருப்பவன் அந்த படைப்பாளி. இதுவரை அதிகம் அ-புனைவுகளை மட்டுமே அதிகம் எழுதியிருக்கிறான். இன்று அவனிடம் நீ ஒரு புனைகதையாளன் என்று சொன்னேன். அவனிடம் அவ்வாறு தெரிவித்தது அவனுக்கு ஒரு திகைப்பை உண்டாக்கியது. ஒரு வாசகனாக நான் அவனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். இனி அதிகம் புனைவுக்குள் மட்டுமே செயல்பட வேண்டும் என. என் வேண்டுகோளை அவன் ஏற்பான் என்று எண்ணுகிறேன். 

Wednesday 23 November 2022

நாங்கள் உடனிருப்போம் - 2

 அன்புள்ள அண்ணா,

உங்களின் ’’நான் தாக்கப்படலாம்’’ பதிவை வலைத்தளத்தில் படித்தேன். மரங்களை இழப்பது எப்படி வலிக்கும் என நன்றாக அறிவேன்.
  
நமது அதிகாரமும், அரசியலும் அனைத்தையும் பணமாகவே பார்க்கின்றன. எளியவன் என்றுமே எளியவனாகவே தான் இருக்க முடியும் அதிகாரத்தின் முன்னால். நீங்கள் அந்த மக்களுடன் இருப்பது அவர்களின் நல்லூழ். சற்றேனும் தைரியமாக உணர்வார்கள்.

மிக உண்மையாக அந்தப் பிரச்சினையைப் பற்றி எழுதியுள்ளீர்கள். 

உங்களுக்கு என் மனம் நிறை அன்புகள் அண்ணா. 

காவிரி போற்றுதும் அமைப்புக்கு என்னால் இயன்ற ஏதேனும் உதவி செய்ய விழைகிறேன். 

இறை என்றும் உங்களுடன் இருக்கட்டும். உங்கள் நலன் காக்கட்டும்.

அன்புடன்
உங்கள் தங்கை
எஸ். ஆர்

நாங்கள் உடனிருப்போம் - 1

 அன்பிற்கினிய பிரபு,

தாமதமாகத்தான் செய்தி அறிந்தேன். ‘’காவிரி போற்றுதும்’’ உடன் பல நாட்கள் இணைந்திருப்பவன் என்ற முறையில் பெருமிதம் கொள்கிறேன். எந்த விஷயமாயினும் அதில் நாம் காட்டும் அக்கறையும் தீவிரமுமே அடிப்படையான மாற்றங்களை உருவாக்கக் காரணமாக அமைகிறது. மிகக் கடுமையான எதிர்விளைவுகள் விஷயம் எவ்வளவு ஆழமானது என்பதைக் காட்டுகிறது. அரசின் மீதும் சட்டபூர்வமான வழிமுறைகளின் மீதும் தங்களுக்கு இருக்கும் நம்பிக்கை மகிழ்ச்சி தருகிறது. மெல்ல நடப்பினும் உரியன நிகழும் என நம்புவோம். உணர்வுபூர்வமான நமது ஒற்றுமையின் சிறப்பை மிக்க மகிழ்ச்சியுடன் உணரும் தருணம் இது. இந்த நிகழ்வுகள் உங்களுக்கு ஒரு பரீட்சை. 

எப்போதும் அன்பும் பிரியமும்

Monday 21 November 2022

இன்றைய தினம்

இன்றைய தினம் ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. காலை 5 மணிக்கு அலாரம் வைத்திருந்தேன். அலாரம் அடிப்பதற்கு சற்று முன்னரே விழித்துக் கொண்டேன். ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்தேன். நடக்கும் போது மனம் அன்று செய்ய வேண்டிய பணிகளை ஒரு அடுக்கில் தொகுத்துக் கொள்ளும். பின்னர் அதனைச் செயலாக்கினால் போதும்.  தி. ஜானகிராமன் எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளி. சிறுகதையில் அவர் அரசன். எனக்கு தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் மிகவும் பிடித்தமானது. மானுடத்தின் மீது மனிதர்கள் மீது தீராப் பிரியம் கொண்ட கலை இதயம் கொண்டவர் தி.ஜா. எனக்கு நானே உருவாக்கிக் கொண்ட விதி ஒன்று உண்டு. அதாவது, ஒரு சிறுகதையைக் குறித்து பேசும் போது அல்லது எழுதும் போது அந்த கதையை முழுமையாகச் சொல்லிடாமல் மிகச் சிறு அளவில் குறிப்புணர்த்தி எதிர்காலத்தில் வாசிக்கப் போகும் வாசகன் மனத்தில் ஒரு முன் அபிப்ராயம் இல்லாமல் அந்த பிரதியை வாசிக்க உதவ வேண்டும் என ஒரு விதியை எனக்கு நானே உருவாக்கிக் கொண்டேன். அதன் அடியொற்றியே தி. ஜா சிறுகதைகள் குறித்த குறிப்புகளை எழுதி வந்தேன். இடையில் பத்து நாட்கள் இடைவெளி விழுந்து விட்டது. அதனை சரி செய்ய இன்று பகலில் நிறைய சிறுகதைகள் வாசித்து குறிப்பு எழுத வேண்டும் என விரும்பினேன். நடைப்பயிற்சி முடித்து வந்ததும் ஒரு சிறுகதையை வாசித்து குறிப்பை எழுதினேன். 

கிராமத்தில் மேலும் சில வீடுகளுக்கு மளிகைப் பொருட்கள் அளித்து உதவிடுமாறு நண்பர் ஒருவர் சொல்லியிருந்தார். ஒரு வருவாய் கிராமம் என்பது அளவில் பெரியது. அதில் குடிசை வீடுகள் பல பகுதிகளில் இருக்கும். மழை, புயல் போன்ற காலங்களில் ஏன் அந்த குடிசைப் பகுதியில் இருப்பவர்களுக்கு உதவிகள் அளிக்க்கப்பட வேண்டும் எனில் குடிசையின் தரை மழை பெய்யும் போது சட்டென ஈரமாகி விடும். காற்றிலும் ஈரப்பதம். வீட்டைச் சுற்றி உள்ள மண்ணிலும் ஈரப்பதம். ஆதலால் சற்று நெருக்கடியில் இருப்பார்கள். தொடர் மழை பெய்யும் போது கிராமங்களில் உள்ள கடைகளுக்கு நகரத்திலிருந்து சரக்கு வருவது ஒப்பீட்டளவில் குறைந்திருக்கும். கையில் பணமிருந்தாலும் அதை பண்டமாக மாற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கும். மழைக்காலத்தில் விவசாய வேலைகள் தொண்ணூறு சதவீதம் இருக்காது. எனவே பல நாள் பணப்புழக்கம் குறைவாக இருக்கும். இவ்வாறான காலத்தில் பெண்கள் சற்று சிரமத்தில் இருப்பார்கள். நமது பகுதிக்கு அருகில் இருக்கும் பொருள் வசதி குறைந்த மக்கள் சிரமத்தில் இருக்கும் போது அவர்களுக்கு சிறு அளவிலேனும் உதவுவது ஓர் நற்செயலாக இருக்கும். அவர்கள் வீடு தேடிச் சென்று பொருட்களை அளிப்பதன் மூலம் அவர்களின் இக்கட்டில் நாம் அவர்கள் உடனிருக்க விரும்புகிறோம் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்கிறார்கள். அது அவர்களின் சோர்வை நீக்கி இளைப்பாறுதல் தருகிறது. நாம் கொடுக்கும் பொருள் அளவில் சிறிதாக இருக்கலாம் ; ஆனால் அதன் மூலம் அவர்கள் சக மனிதர்கள் மீது அடையும் நம்பிக்கை என்பது மிகப் பெரியது. அந்த பரஸ்பர புரிதலும் நம்பிக்கையும் மக்களை இணைக்க பெருமளவில் உதவி புரியும். வினியோகத்தைத் துவங்கும் முன் ஊரில் இருந்த அம்மன் கோவிலில் வழிபட்டோம். முதல் முறையில் விடுபட்டிருந்த குடிசைப் பகுதிகளை இரண்டாம் முறை இன்றைய வினியோகத்தின் போது முழுமை செய்தோம். 

மளிகைப் பொருட்களை வினியோகம் செய்து கொண்டிருந்த போது ஒரு பெண் குழந்தை ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தது. என்ன புத்தகம் என்று வாங்கிப் பார்த்தேன். திருக்குறள். உனக்குப் பிடித்த ஒரு திருக்குறளைக் கூறு என்று கேட்டேன். 

தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 

கற்றணைத் தூறும் அறிவு. 

என்று சொன்னது. 

தொழில் தொடர்பான சில பணிகள் நிலுவையில் இருந்தன. அவற்றை முற்பகலில் மேற்கொண்டிருந்தேன். ஓரளவு நெருக்கி அவற்றைச் செய்து முடித்தேன். 

நகரில் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் இருந்த ஒரு புங்கன் மரத்தின் எல்லா கிளைகளும் வெட்டப்பட்டிருந்தன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நகரில் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதால் சட்ட விரோதமாக மரம் வெட்டுபவர்கள் அந்த நாளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த சம்பவத்தை அரசாங்கத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மனு தயாரிக்க வேண்டும் . இந்த  ஒரு புது வேலையும் இன்று இணைந்து கொண்டது. நான் மனு அனுப்பும் போது வெட்டப்பட்ட மரத்தின் புகைப்படத்தையும் இணைத்து அனுப்புவேன். எல்லா கிளைகளும் வெட்டப்பட்ட இலைகள் இல்லாத மரம் என்பது எவர் உள்ளத்தையும் உருக்கும் என்பதால். புகைப்படம் எடுக்க நண்பர்களின் உதவியை நாட வேண்டியிருக்கும் ; என்னிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லை என்பதால். 

ஒரு சிறுகதைக்கான கரு மனதில் உதித்தது. ஓரிரு நாளில் எழுதக் கூடும். 

ஸ்ரீராமஜெயம்

தீபத்துக்குக் கூட அடியில் நிழல் உண்டு. சூரியனையும் ஒரு நாள் கிரகணம் பீடிக்கிறது. இந்த அடிப்படையில் தி.ஜா எழுதிய சிறுகதை ஸ்ரீராமஜெயம். தி. ஜா வில் மூழ்க மூழ்க அவர் சர்வசாதாரணமாக சித்தரிப்பில் நிகழ்த்தியிருக்கும் மாயங்கள் உண்மையில் பிரமிக்க வைக்கின்றன. ஒரு ஆசான் எப்போதும் சமநிலை கொண்டிருப்பவன். எனினும் அவன் தன்னுள் ஆழ்ந்து பெற்ற பயிற்சியின் விளைவு அது. அவன் பயின்றிருக்கிறான் என்பதாலேயே அனைத்தையும் அவன் அறிந்தவன். கதாபாத்திரங்கள், நூதனமான சூழ்நிலைகள், தர்ம சங்கடங்கள் என அனைத்தையும் சர்வ சாதாரணமாக உருவாக்கிக் காட்டுகிறான் இந்த சிறுகதையின் ஆசிரியன்.  

ஆரத்தி

ஒரு இளம்பெண். அக்கால வழக்கப்படி ஒன்பது வயதிலேயே திருமணம் ஆனவள். அப்போது அவளது கணவனுக்கு பதினெட்டு  வயது. ருது ஆகி புகுந்தகம் செல்வதற்காக அப்பெண் காத்திருக்கிறாள். ஓரிரு வருடங்கள் ஆகின்றன. அந்த இடைவெளியில் சில முறை மட்டும் இருவரும் கண்களால் பார்த்துக் கொள்கிறார்கள். மாப்பிள்ளை திருவாரூர் சென்று விட்டு ஊர் திரும்புவதாகக் கூறிச் சென்றவன் வீடு வந்து சேரவில்லை என்று மாப்பிள்ளையின் தாயாரிடமிருந்து கடிதம் வருகிறது. சில நாட்களில் மாப்பிள்ளையிடமிருந்து ஒரு கடிதம். தான் பினாங்கில் இருப்பதாக. ஒரு பெரிய கடையில் வேலை பார்ப்பதாக. சில மாதங்களுக்கு மாதாமாதம் ஒரு நல்ல தொகையை அனுப்பிக் கொண்டிருக்கிறான். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சிங்கப்பூரைக் கைப்பற்றுகிறது. ஆயிரமாயிரம் தமிழர்கள் நாடு திரும்புகிறார்கள். சிங்கப்பூரில் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. மாப்பிள்ளை என்ன ஆனான் என யாருக்கும் தெரியவில்லை. இளம்பெண் ருது ஆகிறாள். சுமங்கலியாக வாழ்கிறாள். ஆனால் அவள் இருப்பது பழகுவது அனைத்துமே விதவைகளுடன். அவளுடைய தந்தை அத்தை ஆகியோர் காலமாகிறார்கள். இரண்டு மகாமகக் காலமாக தனது சகோதரன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறாள். ஊரில் மங்கல நிகழ்ச்சிகளில் ஆரத்தி எடுக்கும் கைகளில் அவளது கையும் ஒன்று. அகமும் புறமும் ஒரே இடம் என்னும்படியான நிலை. எப்போதாவது கோடிக்கரை சமுத்திர ஸ்நானம். எப்போதாவது பூம்புகார் கடலாடல். வருடத்துக்கு ஒருமுறை மாயூரம் துலா ஸ்நானம் என நிகழ்கிறது அவள் வாழ்க்கை. சகோதரன் வீட்டில் ஒரு நிகழ்ச்சி. அத்தனை வருடம் ஆரத்தி எடுக்க சொல்லும் நார்த்தனார் இம்முறை வேறு ஒருவரை ஆரத்தி எடுக்கச் சொல்லி விடுகிறாள். தான் சுமங்கலி இல்லை என எல்லாரும் முடிவு செய்து விட்டார்களா என்று வருந்திக் கொண்டிருக்கிறாள் அந்தப் பெண். ஆலயத்தில் கொற்றவை முன் மகிஷாசுரமர்த்தினி பாடல் பாடிக் கொண்டிருக்கிறார்கள். தேவியை நோக்கி மகிஷனை அழித்தது போல ஒரு கணத்தில் தன்னையும் அழித்து விடு என்று மனதால் சொல்கிறாள். கொஞ்ச நேரத்தில் நார்த்தனார் அவசர அவசரமாக கோயிலுக்கு வருகிறாள். கிளம்பி உடனே கூட வருமாறு அவசரமாகக் கூறுகிறாள். ஏன் அத்தனை அவசரம் என கேட்கிறாள் அந்த பெண். வீட்டுக்குச் சென்று பார்த்தால் பலவருடம் முன்பு விட்டுச் சென்ற கணவன் பரிசுப் பொருட்களுடன் செல்வந்தனாக வந்திருக்கிறான் தன் மனைவியை தன்னுடன் கூட்டிச் செல்ல. இருவரையும் ஊஞ்சலில் அமர வைத்து நார்த்தனார் ஆரத்தி எடுக்கிறாள். ஆரத்தி தீபம் அந்த பெண்ணின் முகத்தில் பிரதிபலிக்கிறது என கதையை நிறைவு செய்கிறார் தி. ஜா.

அவரது ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று ‘’ஆரத்தி’’. 

Friday 18 November 2022

நண்பரின் வருகை

சில நாட்களுக்கு முன்னால், வலைப்பூவில் எழுதிய பதிவை வாசித்து விட்டு ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் எனது நெடுநாள் நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கும் எனக்கும் முப்பது வருஷத்துக்கு மேல் பழக்கம். கடுமையான உழைப்பாளி. அவரது ஊர் இங்கிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அவர் வசிக்கும் பகுதியில் கிட்டத்தட்ட இருபத்து ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து இலவச டியூஷன் வகுப்புகள் எடுத்து வந்தார். அவருடைய ஊர் மாணவர்கள் அவர் ஊருக்கு பக்கத்து ஊர் மாணவர்கள் என தினமும் ஐம்பது பேர் அவர் வீட்டில் 3 மணி நேரம் மாலை நேரம் படித்துச் செல்வார்கள். அவருக்கு தனது 51வது வயதில் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணி நியமனம் ஆனது. ஏழு ஆண்டுகள் முழுமையாக ஆசிரியப் பணி ஆற்றினார். பணி ஓய்வு பெற்று பத்து ஆண்டு ஆகியிருக்கலாம். சுனாமி நிவாரணத்தின் போது அவருடைய பகுதியில் தீவிரமான பொதுப்பணி ஆற்றியவர்.  எனது வலைப்பூவை வாசித்து விட்டு என்னைக் காண வேண்டும் என்று வீட்டுக்கு வந்தார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். செயல் புரியும் கிராமத்தில் விஜயதசமி அன்று நடப்பட்ட தேக்கு மரக் கன்றுகளின் வளர்ச்சியை அவருக்குக் காட்ட வேண்டும் என்று விரும்பினேன். உடன் புறப்பட்டோம். அந்த 70 கன்றுகளைக் காட்டினேன். நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது என்று கூறினார். சென்ற ஆண்டு நடப்பட்ட தேக்கு மரங்களை இன்னொரு விவசாயியின் வயலில் காட்டினேன். அவை நன்கு பருத்திருந்தன. 

அவரிடம் சொன்னேன் . ‘’ சார் ! விவசாயி வாழ்க்கைல அவன் கைகள்ல சஃபீஷியண்ட்டா ஒரு லட்ச ரூபாய் கூட இருக்க மாட்டேங்குது. அவன் ஒரு பொருளியல் சக்தியா மாறனும். பொருளாதார பலம்தான் அவனுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அவன் கிட்ட அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு. ஆனா அவன் கைல பணம் இருக்கறதே இல்லை. குழந்தைகளைப் படிக்க வைக்க வீட்டுல கல்யாண செலவுக்குன்னு இதெல்லாம் எப்படி சமாளிக்கறதுங்கற கவலையிலயே அவன் வாழ்க்கைல பாதி போகுது. இந்த நிலையமை மாத்தணும் சார். ஒரு கிராமத்துலயாவது மாத்தனும். அதுக்காகத் தான் ஒரு கிராமத்தை கான்செண்ட்ரேட் செஞ்சு ஒர்க் பண்றன்’’

நான் சிறுவனாயிருந்த போதிலிருந்து அவர் அறிவார். அமைதியாக இருந்தார். 

ஐ . டி கம்பெனியில் பணி புரியும் நண்பர் 3 ஏக்கரில் தேக்கு பயிரிட்டிருக்கும் வயல் இருக்கும் ஊருக்கும் அழைத்துச் சென்று அந்த வயலையும் காட்டினேன். கன்றுகள் ஆரோக்கியமாக இருந்ததைக் கண்டு அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. 

மீண்டும் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு புறப்பட்டுச் சென்றார். நண்பரின் வருகை மகிழ்ச்சி அளித்தது.  

நான் தாக்கப்படலாம் ( மறுபிரசுரம்)

 இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும்

பதந்திரு இரண்டும் மாறி பழிமிகுந் திழிவுற் றாலும்

விதந்தரு கோடி இன்னல் விளைந்தென்னை அழித்திட்டாலும்

சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே !

-பாரதி

ஒரு பொது விஷயத்தில் சட்டபூர்வமான நியாயம் தீர்வாக இருக்க வேண்டும் என்று முயற்சிகளை முன்னெடுத்ததன் விளைவாக இன்று நான் தாக்கப்படும் சூழ்நிலை உண்டாகியுள்ளது. நான் தாக்கப்படலாம். என் மீது பொய் வழக்குகள் போடப்படலாம். அவ்வாறான ஒரு சூழ்நிலை உண்டாகியிருப்பதால் எதற்காக நான் முயற்சி செய்தேன் என்பதை விரிவாக விளக்க வேண்டிய காலம் வந்திருக்கிறது. எனவே இதனை விளக்குகிறேன்.

ஒரு வருடத்துக்கு முன்னால், 09.07.2021 அன்று எனது நண்பர்கள் சிலருடன் நான் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நண்பருக்கு அலைபேசி அழைப்பு வந்தது. அலைபேசியில் சகஜமாக அழைப்பை ஏற்று பேசத் துவங்கியவர் சில வினாடிகளில் பதட்டம் அடைந்தார். பதட்டத்துடனே அலைபேசியில் பேசியவரிடம் விபரங்கள் கேட்டார். சில நிமிடங்களில் அவர்கள் உரையாடல் நிறைவு பெற்றது. நண்பரிடம் பதட்டப்படுமளவுக்கு என்ன விஷயம் என்று கேட்டோம்.

நண்பர் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த கிராமத்தில் உள்ள தொன்மையான விஷ்ணு ஆலயம் ஒன்றின் சன்னிதித் தெருவில் அவரது வீடு அமைந்துள்ளது. அந்த விஷ்ணு ஆலய சந்திதித் தெருவாசிகள் தங்கள் வீடுகளுக்கு முன்னால் வேம்பு, புங்கன், மலைவேம்பு முதலிய நிழல் தரும் மரங்களை நட்டு வளர்த்திருந்தனர். ஒவ்வொரு மரமும் பெரியவை. ஒவ்வொரு மரமும் ஆறு ஆண்டிலிருந்து பத்து ஆண்டு வரை அகவை கொண்டவை. அந்த வீதியில் அவ்வாறு பதினான்கு (14) மரங்கள் இருந்திருக்கின்றன. சம்பவ தினத்தன்று (09.07.2021), அந்த ஊரின் ஊராட்சித் தலைவர் ஊராட்சியின் வாகனங்கள் மற்றும் பணியாளர்களுடன் தொன்மையான விஷ்ணு ஆலயம் முன்னால் வந்து சன்னிதித் தெருவில் இருந்த மரங்களை ஜே.சி.பி வாகனம் மூலம் வேருடன் சாய்த்து கிளைகளை வெட்டி ஊராட்சி வாகனத்தில் எடுத்துச் சென்று தனக்குச் சொந்தமான செங்கல் காலவாயில் எரிபொருளாகப் பயன்படுத்த எடுத்துச் சென்றிருக்கிறார். மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்ட போது பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் தங்கள் பணிக்குச் சென்றிருந்தனர். வீடுகளில் பெண்கள் மட்டுமே இருந்திருக்கின்றனர். ஏன் இவ்வாறு மரங்களை வெட்டுகிறீர்கள் என்று பெண்கள் கேட்ட போது பெண்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டியவர்கள்; அவர்கள் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்று ஊராட்சி மன்றத் தலைவர் கூறியிருக்கிறார். பெண்கள் கேள்வி கேட்ட போது அவர்கள் முன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு சிகரெட் புகையை ஊதியவாறு அலட்சியமாக பதில் கூறியிருக்கிறார். தெருவில் இருந்த இளைஞர்கள் சிலர் ஊராட்சி மன்றத் தலைவரிடம் தங்கள் எதிப்பைத் தெரிவித்திருக்கின்றனர். அவர்களிடம் ‘’ ஒன்னரை ரூபாய் செலவு செய்து நீங்கள் மரக்கன்று வைத்து விட்டால் உங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை வந்து விடுமா ?’’ என்று கேட்டிருக்கிறார். நண்பர் தனக்கு அலைபேசியில் தெரிவிக்கப்பட்ட விபரங்களை எங்களிடம் சொன்னார்.

நான் நண்பரிடம் ஒரு கேள்வி கேட்டேன். ‘’ சன்னிதித் தெருவில் இருந்த மரங்களை வெட்ட ஊராட்சி மன்றத் தலைவர் வருவாய் கோட்டாட்சியரிடம் (சப் கலெக்டர்) விண்ணப்பித்து உத்தரவைப் பெற்றிருந்தாரா?’’ என்றேன். நண்பர் ஊருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு நான் கேட்ட கேள்வியை அவர்களிடம் கேட்டார். அவர்கள் ஊராட்சிப் பணியாளர்களைத் தொடர்பு கொண்டு பேசி விபரம் கேட்டிருக்கின்றனர். அவ்வாறான அனுமதிக்கு விண்ணப்பிக்கப் படவும் இல்லை. அவ்வாறு அனுமதி பெறப்படவும் இல்லை என பதில் கிடைத்தது. ‘’அரசு புறம்போக்கு நிலமான தெருவில் இருக்கும் மரம் அல்லது மரங்களுக்கு பொருள் மதிப்பு உண்டு. அவை அரசாங்கத்தின் சொத்துக்கள். அவை எந்த காரணத்துக்கு அகற்றப்பட வேண்டும் என்றாலும் சப் கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர் அந்த மரத்தை நேரடியாக வந்து பார்வையிடுவார். மரம் அகற்றப்பட வேண்டும் என்ற விண்ணப்பம் அளிக்கப்பட்டிருப்பது உசிதமானதா என ஆராய்வார். அந்த மரம் வெட்டப்படுவது தேவை என்று நினைத்தால் அந்த மரத்தின் பொருள் மதிப்பை முழுமையாக அரசுக் கணக்கில் செலுத்தச் சொல்வார். அவ்வாறு செலுத்தப்பட்ட பின் அந்த மரத்தை வெட்ட அனுமதி அளிப்பார். இவ்வளவு நடைமுறைகள் இந்த விஷயத்தில் ஏற்படுத்தப்பட்டிருப்பதற்கு காரணம் அரசு புறம்போக்கு நிலத்தில் வளரும் எந்த மரத்தையும் வெட்ட எவரும் துணிந்து விடக் கூடாது என்பது தான். ஆனால் உங்கள் ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் அரசு புறம்போக்கு நிலத்தில் இருக்கும் மரங்களை வெட்டி தனது சொந்த செங்கல் காலவாயில் எரிபொருளாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் இந்த விஷயத்தில் செய்துள்ள குற்றங்கள் மூன்று. முதலாவது சப் கலெக்டர் அனுமதி இல்லாமல் 14 மரங்களை வெட்டியது. இது கள்ளத்தனமாக மரம் வெட்டுதல் என்னும் சட்டப் பிரிவின் கீழ் குற்றம். இரண்டாவது அதனை சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது . இது அதிகார துஷ்பிரயோகம். மூன்றாவது அவர் அரசாங்க சொத்தான் பெரும் பொருள் மதிப்பு கொண்ட 14 மரங்களை வெட்டி அரசாங்க சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியிருக்கிறார். மூன்று குற்றங்களில் ஆகப் பெரிய குற்றம் இது. அரசாங்கம் இதனை எளிதாக எடுத்துக் கொள்ளாது;  நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் ’’ என்று நண்பரிடம் பதில் சொன்னேன். நண்பருக்கு நான் சொன்ன இந்த விஷயங்கள் புதிதாக இருந்தன. சம்பவ இடத்தை நான் மறுநாள் காலை நேரில் வந்து பார்ப்பதாகச் சொன்னேன்.

தமிழ்ச் சூழலில் பொதுமக்கள் அரசாங்கம் மீது எந்த விதமான நம்பிக்கையும் இல்லாமல் இருப்பார்கள். எனக்கு எப்போதும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை உண்டு. ஒரு ஜனநாயக நாட்டின் அரசாங்க அமைப்பு அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்க முடியும். ஆங்காங்கே தவறுகள் இருக்கலாம். குறைகள் இருக்கலாம். முறைகேடுகள் இருக்கலாம் . அதற்காக ஒட்டு மொத்த அமைப்பின் மேலும் அவநம்பிக்கை கொள்வது சரியானது அல்ல என்ற எண்ணத்தை வலுவாகக் கொண்டவன் நான்.

மறுநாள் நண்பரின் கிராமத்துக்குச் சென்றேன். அவரது வீடு இருந்த சன்னிதித் தெரு எந்த மரமும் இல்லாமல் வெட்டவெளியாய் இருந்தது. மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டதன் பள்ளங்கள் மொத்தம் பதிநான்கு (14) இருந்தன. அவற்றைப் பார்வையிட்டேன். பொதுமக்கள் சிலர் என்னைக் கவனித்து முதல் நாள் நடைபெற்ற சம்பவத்தை என்னிடம் தெரிவித்தனர். அந்த தெருவின் முதியவர்கள் கண் கலங்கி சொன்னதைக் கேட்ட போது மனம் மிகவும் வலித்தது. மரம் வெட்டுவதன் நடைமுறைகள் குறித்து அவர்களுக்குச் சொல்லி நடந்த இந்த விஷயத்தை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினேன். சன்னிதித் தெருவின் பொதுமக்கள் அஞ்சினர் ; தயங்கினர். ’’நன்கு வளர்ந்த 14 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருக்கின்றன.  இதனை நாம் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல; நாம் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு செல்வோம் ‘’ என்று சொன்னேன். மக்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. ‘’நீங்கள் யாரும் இந்த விஷயத்தை கலெக்டரிடம் தெரிவிக்காவிட்டாலும் நான் தெரிவிப்பேன். இங்கே நிகழ்ந்திருக்கும் அநீதியைப் பார்த்து விட்டு இப்படியே திரும்பிப் போய்விட மாட்டேன். வெட்டப்பட்ட மரங்களுக்கு நான் நியாயம் கேட்பேன்’’ என்று சொல்லி விட்டு ஊர் திரும்ப யத்தனித்தேன். அங்கே இருந்த விஷயங்கள் இந்த விஷயத்தின் சட்ட அம்சங்கள் குறித்துக் கேட்டனர். நான் எனக்குத் தெரிந்த விபரங்களைச் சொன்னேன். ஆனால் அவர்கள் அனைவருமே நான் கூறித்தான் இந்த மரங்கள் வெட்டப்பட்டது சட்ட விரோதம் என அறிந்தனர். அதற்கு முன் அவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை.

வீட்டுக்கு வந்து மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மனுவை தயார் செய்து கொண்டிருந்தேன். இந்த விஷயம் காட்சி ஊடகட்த்தில் வந்தால் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஒரு அழுத்தம் உருவாகும் என்பதால் ஒரு சேட்டிலைட் தொலைக்காட்சியின் எண்ணை இணையம் மூலம் கண்டறிந்து அவர்களைத் தொடர்பு கொண்டு நிகழ்ந்ததைக் கூறினேன். அவர்கள் உள்ளூர் செய்தியாளரின் எண்ணை எனக்கு அளித்து அவரைத் தொடர்பு கொள்ளுமாறு கூறினர். அவரிடம் பேசினேன். அவர் சம்பவ இடத்துக்கு வந்து விடுவதாகக் கூறினார். நான் அங்கே விரைந்து சென்றேன். நான் சென்ற சில நிமிடங்களில் அவரும் வந்து விட்டார். காலையில் மக்களிடம் அதிக நேரம் உரையாடியிருந்ததால் மாலை சென்ற போது அனைவரும் என்னுடைய முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தனர். ஒரு குடிமகனாக நான் என் கடமையைச் செய்வதாக அவர்களிடம் கூறினேன். டி.வி செய்தியாளர் நிகழ்ந்தவற்றை மக்களிடம் கேட்டு ஒளிப்பதிவு செய்து கொண்டார். அந்த தெருவின் இளைஞர்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மரங்களை வெட்டிய போது தெருவாசிகள் அலைபேசி மூலம் எடுத்த வீடியோக்களை அளித்தனர். அவற்றைத் தன் அலைபேசியில் பதிவேற்றம் செய்து கொண்டு புறப்பட்டார். அந்த வீதியின் பொதுமக்கள் அனைவரும் தாங்களே மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்புவதாகக் கூறினர். அந்த தெருவின் பொதுமக்கள் அனைவரும் மனு எழுதத் துவங்கினர். இளைஞர்கள் அவர்களுக்கு உதவினர். தயாரித்து வையுங்கள் என்று கூறி விட்டு நான் ஊர் திரும்பி விட்டேன். பின்னர் மீண்டும் அன்று இரவு சென்று மனுக்களை தபாலில் அனுப்புவதற்காக வாங்கி வந்தேன்.

மறுநாள் காலை என்னை ஊருக்கு வருமாறு அங்கிருந்த இளைஞர்கள் அழைத்தனர். இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் எனது முயற்சிகள் மகிழ்ச்சி அளித்தன. என் மீது மிகுந்த பிரியம் காட்டத் துவங்கினர். சில இளைஞர்கள் இந்த தெருவில் வசிக்கும் மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுப்போம் என்றார்கள். அதுவும் நல்ல யோசனைதான் என ஒத்துக் கொண்டேன். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை. மறுநாள் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள். அதாவது, மக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்கும் நாள். காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தால் அரைமணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் சந்தித்து மனு அளித்து விடலாம் என எண்ணினோம். சேட்டிலைட் தொலைக்காட்சி செய்தியாளர் எங்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு ஊராட்சி மன்றத் தலைவர் மரங்களை வெட்டிய செய்தி திங்கள் கிழமை காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கூறினார்.  

திங்களன்று காலை அந்த செய்தி சேட்டிலைட் சேனலில் ஒளிபரப்பானது. அந்த பிரதேசம் முழுக்க அந்த செய்தி பரவியது. வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் வேலை பார்க்கும் நாடுகளிலிருந்து ஊர்க்காரர்களுக்கு ஃபோன் செய்து என்ன நடந்தது என்று விசாரித்த வண்ணம் இருந்தனர். காலை 10 மணிக்கு கிராம மக்கள் 25 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளை தூக்கிக் கொண்டு வந்திருந்தார்கள். முதியவர்கள் வந்திருந்தார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்கள் அப்போது குறைவாகவே இருந்தனர். வந்த பணி விரைவில் முடிந்து விடும் என்றே அனைவரும் எண்ணினர். நேரம் போய்க்கொண்டே இருந்தது. மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதிக்கவில்லை. அலுவலக எழுத்தரிடம் மனுவை அளித்து விட்டு செல்லுங்கள் என்றனர். சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் சென்று மனு கொடுங்கள் என்றனர். வட்டாட்சியரிடம் மனு கொடுங்கள் என்றனர். மாவட்ட ஆட்சியரிடம் நடந்ததைக் கூற நாங்கள் வந்திருக்கிறோம். எங்களுக்கு இரண்டு நிமிடம் போதும் மனுவை நேரில் பார்த்து கொடுத்து விட்டு செல்கிறோம் என்று கிராம மக்கள் சொன்னார்கள். நேரம் போய்க் கொண்டே இருந்தது. கலெக்டர் வெளியே புறப்படும் போது கார் அருகில் சென்று மனுவைக் கொடுக்கிறோம் என்று மக்கள் சொன்னார்கள். நான் எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு மேல் ஆனது. ஊரிலிருந்து வந்தவர்கள் அலுவலக வாசலில் கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நான் அமைதி இழந்தேன். ’’தங்களுக்கு நிகழ்ந்த அநியாயத்தை அரசாங்கத்திடம் தெரிவிக்க இந்த மக்கள் வந்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக நடந்ததைத் தெரிவிப்பதால் இந்த மக்களுக்கு ஒரு மன ஆறுதல் கிடைக்கக்கூடும். மக்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை மக்களுடைய குரலில் மாவட்ட ஆட்சியர் நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு இரண்டு நிமிடம் போதும் ‘’ என்று உரத்த குரலில் தெரிவித்தேன். உரத்த குரலில் வெளிப்பட்ட எதிர்வினையைக் கண்டதும் வளாகமே ஒரு நிமிடத்துக்கு நிசப்தம் ஆனது. ஐந்து நிமிடத்தில் இரண்டு பேரை மட்டும் கலெக்டர் வரச் சொல்வதாக ஒரு பணியாளர் வந்து சொன்னார். நான் ஒரு பெண்மணியையும் ஒரு இளைஞனையும் செல்லச் சொன்னேன். மக்கள் அனைவரும் என்னையும் உடன் செல்லுமாறு கூறினர். மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நடந்ததை அந்த பெண்மணியும் இளைஞனும் கூறினார்கள். ‘’எங்கள் பிள்ளைகளைப் போல பார்த்து பார்த்து வளர்த்த மரங்களை எங்கள் கண் முன்னால் வெட்டி விட்டார்கள்’’ என்று கூறிய போது அந்த பெண்மணி அழுது விட்டார். தாசில்தாரிடம் அறிக்கை கேட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறேன் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். தேவைப்படின் காவல்துறை நடவடிக்கையும் மேற்கொள்வதாகக் கூறினார். வெளியே வந்து மக்களைச் சந்தித்து ஆட்சியரிடம் தெரிவித்த விஷயங்களைக் கூறினோம். குற்றம் இழைத்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறி அனைவரையும் ஊருக்கு அனுப்பி வைத்தேன்.

அடுத்த சில நாட்களில் அங்கிருந்த இளைஞர்களைச் சந்தித்து மரங்கள் வெட்டப்பட்ட அதே தெருவில் நாம் மீண்டும் மரங்களை நட வேண்டும் என்று சொன்னேன். அதுவே காந்திய வழிமுறை. ஆக்க பூர்வமான விஷயங்களை எப்போதும் முன்னெடுத்தவாறே இருப்பது. 14 மரங்கள் வெட்டப்பட்டதற்கு மாற்றாக அந்த தெருவில் 100 மரங்கள் நடப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். இளைஞர்களும் பொதுமக்களும் அவ்வாறே செய்வோம் என்றனர். மரக்கன்றுகளையும் மரக்கன்றுகளுக்குத் தேவையான இரும்புக்கூண்டுகளையும் வழங்கினேன். நூறு மரக்கன்றுகள் நடப்பட்டன. தொன்மையான விஷ்ணு ஆலயம் உள்ள சன்னிதித் தெரு என்பதால் பாரிஜாதம், மகிழம், மந்தாரை ஆகிய பூமரக் கன்றுகளும் இயல்வாகை, சொர்க்கம், நாவல் ஆகிய நிழல்மரக்கன்றுகளும் நடப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் மனுக்களை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பினார். உரிய மேல்நடவடிக்கை எடுத்து மேல்நடவடிக்கை விபரத்தை மனுதாரர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார். எனினும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் எந்த தபாலும் வரவில்லை. நூறு மரக்கன்றுகளையும் மக்கள் ஆர்வமாகப் பராமரித்து வந்தனர். செடிகள் வளரத் துவங்கியது அனைவருக்கும் நன்னம்பிக்கையை அளித்தது. மேலும் ஒரு மாதம் ஆனது. அப்போதும் தகவல் இல்லை. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று விசாரித்தோம். வட்டாட்சியர் அலுவலகம் சென்று கேட்டோம். நாங்கள் தகவலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி விட்டோம் என்று சொன்னார்கள். அலைக்கழிப்பு அதிகம் ஆனதால் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி விபரங்கள் கோருவது என்று முடிவு செய்தோம்.

வட்டாட்சிய்ருக்கும் கோட்டாட்சியருக்கும் விபரங்கள் கேட்டோம். சில தகவல்களை அளித்தனர். நாங்கள் கோரிய பல விபரங்களை அளிக்கவில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி மேல்முறையீடு செய்தோம். ஒரு மனுவுக்கு பதில் அளிக்க தகவல் பெறும் உரிமைச் சட்டம் 30 நாள் கெடு அளிக்கிறது. ஆனால் அந்த கெடுவிலிருந்து பத்து நாட்கள் அதிகமாக எடுத்துக் கொண்டு முக்கியத்துவம் கொண்ட தகவல்களை அளிக்காமல் துணை விபரங்களை மட்டும் அளித்துக் கொண்டிருந்தனர். அந்த தெருவின் மக்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மறைமுகமாக சில நெருக்கடிகளை அளித்தார்.

இந்த விஷயத்தில் நான் ஆரம்பத்தில் இருந்தே ஒரு உறுதியுடன் இருந்தேன். இந்த மக்கள் மிகவும் எளிய மக்கள். இவர்களை எக்காரணம் முன்னிட்டும் காவல்துறையின் பக்கம் கொண்டு சென்று விடக் கூடாது. ஒரு ஜனநாயக அமைப்பில் நியாயம் பெற எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. மென்மையான முறைகள் மூலமே இந்த விஷயம் முன்நகர வேண்டும் என்ற உறுதியை எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இது எந்த தனிநபருக்கும் எதிரான விஷய்ம் இல்லை. குடிமக்களின் உரிமை தொடர்பானது. ஒரு ஜனநாயக  நாட்டில் தங்களுக்கு நடந்த ஒன்றை அரசின் கவனத்துக்குக் கொண்டு வரவும் தங்களுக்கான தீர்வை எதிர்நோக்கவும் எல்லா குடிகளுக்கும் உரிமை உண்டு. இவ்வாறான உரிமையை அவர்கள் கேட்டுப் பெறவே எத்தனையோ பேர் நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் போது தங்கள் குருதியைக் கொட்டி சுதந்திரம் பெற்றுத் தந்திருக்கின்றனர்.

மீண்டும் மீண்டும் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி விபரம் கோரியதன் விளைவாக சில அடிப்படை விபரங்கள் எங்களுக்குக் கிடைத்தன. அந்த விபரங்கள் எங்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தன.

சட்டவிரோதமாக மரம் வெட்டப்படுவது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அந்த குற்றம் இழைத்தவருக்கு ‘’சி’’ படிவ அறிக்கை என்ற அறிக்கையை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையில் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை, வெட்டப்பட்ட மரத்துண்டுகளின் கன அளவு, பொருள் மதிப்பு ஆகிய்வை குறிப்பிடப்பட வேண்டும். முக்கிய விபரங்கள் எதுவும் நிரப்பப்படாமல் முழுமையானதாக இல்லாமல் அந்த அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். இந்த அறிக்கையை அரைகுறையாக அளித்ததன் மூலம் கிராம நிர்வாக அதிகாரி குற்றம் இழைத்தவருக்கு துணை சென்றிருப்பதை அறிந்தோம். வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ. 950 என நிர்ணயிக்கப்பட்டு அதற்கு ஒரு மடங்கு அபராதம் விதிக்கப்பட்டு வரியுடன் சேர்த்து ரூ. 2052 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு ரூபாய் இரண்டு லட்சத்துக்கு மேல் இருக்கும். அந்த ‘’சி’’ படிவ அறிக்கையின் மீது வருவாய் வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு பல குளறுபடிகளைக் கொண்டிருந்தது. அத்தனை குளறுபடிகளையும் அப்படியே ஏற்ர்றுக் கொண்டு வருவாய் கோட்டாட்சியர் ரூ. 2052 என்ற மதிப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த விஷயங்களை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்றோம். சி.பி.கி.ரா.ம்.ஸ் இணைய தளம் மூலம் இந்த புகாரை பதிவு செய்தோம். நாளாக நாளாக வருவாய்த்துறை நடைமுறைகள் குறித்து அறிந்த பலரைச் சந்தித்து  இந்த விஷயத்தில் என்னென்ன நிர்வாகக் குளறுபடிகள் நடந்துள்ளன என்பதை முழுமையாக அறிந்தோம். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி இந்த விஷயம் தொடர்பான கோப்பின் முழு நகலைக் கோரி விண்ணப்பம் அனுப்பினோம். சி. பி. கி. ரா. ம்.ஸ் தளத்தில் பதிவு செய்ததன் பலனாக வருவாய் கோட்டாட்சியர் மரம் வெட்டிய ஊராட்சித் தலைவர் மீது மேலும் அபராதம் விதிக்குமாறு வட்டாட்சியருக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பதில் அளித்தார். முழுக் கோப்பை அளிப்பதில் பல சங்கடங்களை அதிகாரிகள் உணர்கிறார்கள்.

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு உருவாகி வரும் காலகட்டம் இது. எல்லா உலக நாடுகளும் மரங்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் காலகட்டம் இது. மரம் ஒன்றினை வளர்ப்பது என்பது ஒரு சாமானியனை சுற்றுச்சூழலுடன் உணர்வுபூர்வமாக இணைக்கும் குறியீட்டுச் செயல். தமிழ்நாட்டில் பொது இடங்களில் இருக்கும் மரங்களை வெட்டுவது தொடர்பாக பல நடைமுறைகள் இருப்பது மரங்களைக் காக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துக்காகவே. ஒவ்வொரு கிராமத்திலும் எந்த நெறிமுறைகளும் இல்லாமல் சுயலாபத்துக்காக மரங்கள் வெட்டப்படும் என்றால் அதனால் உண்டாகும் அழிவு என்பது பேரழிவாகவே இருக்கும்.

நாட்களைக் கடத்தினால் தவறுகளிலிருந்து தப்பி விடலாம் என அதிகாரிகள் நினைக்கிறார்கள். மரங்களை வெட்டி தவறிழைத்தவர் ஊராட்சி மன்றத் தலைவர். எனினும் அதற்கு உடந்தையாக பல வருவாய்த்துறை அதிகாரிகள் இருந்திருக்கின்றனர். இப்போது அவர்கள் அனைவருமே புகார் வளையத்தில் உள்ளனர். இந்த விஷயத்தில் ஆவணங்களே முதன்மையான சாட்சியமாக உள்ளன என்பதை குற்றம் இழைத்தவரும் அதற்கு துணை நின்றவர்களும் உணர்கிறார்கள். நிலைமையின் தீவிரம் இப்போதுதான் முழுமையாக அவர்களுக்குப் புரியத் துவங்கியிருக்கிறது.

எனது நண்பர்களும் நலம் விரும்பிகளும் இந்த விஷயத்தால் நான் தாக்கப்படுவேன் என கவலை கொள்கிறார்கள். என் மீது பொய் வழக்கு ஏதும் எப்போது வேண்டுமானாலும் போடப்படும் என வருந்துகின்றனர். அவ்வாறு ஒரு நிலை வந்தால் ஏன் அவ்வாறு நடந்தது என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதால் இவற்றை எழுதிப் பதிவு செய்துள்ளேன்.

கடந்த சில தினங்களாக என்னுடைய அலைபேசிக்கு ஊராட்சி மன்றத் தலைவரிடமிருந்து அலைபேசி அழைப்புகள் வருகின்றன. அவ்வாறு வரக் கூடும் என்ற யூகம் இருந்ததால் நான் புதிய எண்களிலிருந்து வரும் அலைபேசி அழைப்புகளை ஏற்காமல் இருந்தேன். ஒரு எண்ணிலிருந்து தொடர்ந்து அலைபேசி அழைப்புகள் வந்ததால் ஒருமுறை எடுத்தேன். பேசியவர் தான் யார் என்பதைத் தெரிவித்தார். நான் இணைப்பைத் துண்டித்து அலைபேசியை அணைத்து வைத்து விட்டேன்.

மரங்களை வெட்டியவருக்கு தனது தரப்பை சொல்ல தனது விளக்கத்தை அளிக்க இந்திய அரசியல் சட்டம் வாய்ப்பு தருகிறது. அவ்வாறு வாய்ப்பு தரப்படுவதை நாம் வரவேற்கிறோம். ஒரு தவறோ குற்றமோ நம் கவனத்துக்கு வந்தால் அதனை அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டியது ஒரு குடிமகனின் கடமை. நான் அந்த கடமையை மட்டுமே செய்திருப்பதாக எண்ணுகிறேன். ஒரு ஊரில் 14 மரங்கள் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரால் வெட்டப்படும் ; முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் என அனைவரின் கவனத்துக்கும் சென்ற பின்னும் அந்த விஷயத்தில் எந்த நம்பிக்கையளிக்கும் தீர்வும் ஏற்படாது என்ற நிலை இருந்தால் அது எவ்வாறான நிலை என்பதை நாம் அனைவருமே சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நான் கிராம மக்களைத் தொடர்ந்து சந்தித்து அவர்களுடைய வீட்டுக் கொல்லையில் வயல் வரப்பில் ஆக சாத்தியமான எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடச் சொல்லி ஊக்கம் அளிப்பவன். கிராம முன்னேற்றத்தையும் சுற்றுச்சூழலையும் இணையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பணி புரிபவன். ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பாக இருப்பினும் குறிப்பிடத்தகுந்த சில விஷயங்களை குறுகிய காலகட்டத்தில் சில கிராமங்களிலாவது செய்திருக்கிறது.

நேற்று இங்கே நல்ல மழை. அந்த மழையில் செயல் புரியும் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். சென்ற ஆண்டு அந்த கிராமத்தின் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக நண்பர்களின் உதவியுடன் ஆறு நாட்களுக்கு ஒரு வேளை உணவளிக்கப்பட்டது. எங்கள் பகுதிகளில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் சமையல் என்பதை ஒருநாளைக்கு ஒரு வேளைதான் சமைக்கிறார்கள். காலை உணவாக முதல் நாள் சமைத்த அன்னத்தில் நீரூற்றி வைக்கப்பட்ட பழையன்னமாக உண்கிறார்கள். பகல் பொழுதுகளில் அதிகம் தேனீர் தான் அருந்துகிறார்கள். கையில் பால் இருப்பு பெரிதாக வைத்துக் கொள்வதில்லை என்பதால் அருகில் இருக்கும் தேனீர்க்கடையில் தேனீர் வாங்கி அருந்துகிறார்கள். அவர்கள் உணவு சமைப்பது என்பது மாலை ஐந்து மணியை ஒட்டித்தான். அப்போது உலை வைப்பார்கள். உலை கொதித்து சோறு பொங்கி மாலை 6.30 மணியை ஒட்டி உணவு தயாராகும். மழைக்காலம் என்றால் வீடு ஒழுகும். தரை ஈரமாக இருக்கும். இவ்வாறான சிக்கலால் உணவு தயாரிப்பதில் சில இடையூறுகள் அவர்களுக்கு இருக்கக் கூடும் என்பதால் செயல் புரியும் கிராமத்தின் குடிசைப் பகுதி ஒன்றில் அங்கிருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் மாலை 6 மணிக்கு சமைத்த உணவை அளித்தோம். ஆறு நாட்களுக்கு அளித்தோம். ‘’காவிரி போற்றுதும்’’ போன்ற நுண் அமைப்பால் அவ்வளவுதான் இயலும். அதனை முழுமையாகச் செய்தோம். இந்த ஆண்டு மழை கொட்டத் தொடங்கியதும் சென்ற ஆண்டு செய்ததைப் போல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. போதுமான நிதி இருப்பு இல்லை. எனினும் ஒரு துவக்கத்தை நிகழ்த்தி விட்டு இரண்டாவது அடி எடுத்து வைக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக என்ன செய்வது என்று யோசித்தேன். ஒரு வாரம் அவர்கள் சமையல் செய்வதற்கு தேவையான உணவுப் பொருட்களையும் மளிகைப் பொருட்களையும் வழங்கலாம் என முடிவு செய்தேன். குடிசைப் பகுதியைப் பார்த்து மொத்தம் எத்தனை வீடுகள் என கணக்கெடுக்கச் சென்றேன். முற்றிலும் நீர் சூழ்ந்திருந்தது. என்னைக் கண்டதும் மக்களுக்கு மகிழ்ச்சி. ஒரு மனிதனைக் கண்டு இன்னொரு மனிதன் அகமகிழ்கிறான் என்பது ஒரு மகத்தான விஷயம். அனேகமாக நாளை மாலைக்குள் அந்த பகுதி முழுமைக்கும் எல்லா வீடுகளிலும் ஒரு வாரத்துக்குத் தேவையான உணவுப்பொருட்களும் மளிகைப்பொருட்களும் வழங்கப்பட்டு விடும்.

’’ஒன்று பரம்பொருள் ; நாம் அதன் மக்கள்’’ என்கிறான் நம் மூதாதையான பாரதி. 

உலகம் யாவையும்

கம்பன் தன் காவியத்தை ‘’உலகம் யாவையும்’’ எனத் தொடங்குகிறான். உலகில் உள்ள எல்லா உயிர்களுக்குமான நலன் என்பதே இந்திய மரபின் சாரமாக இருக்கிறது. மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத தனித்திறன் மனிதனுக்கு உண்டு. மனித அகம் விரிவாகும் தன்மை கொண்டது. பௌதிக எல்லைகளுக்குள் அடங்காமல் ஒட்டு மொத்த உலகையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் சாத்தியம் கொண்டது. உலகின் எல்லா மண்ணிலிருந்தும் எழுந்த ஞானிகள் மனிதகுலத்தை நோக்கி காலம் காலமாக அகவிரிவு கொள்ளுமாறு கூறிவருகிறார்கள்.  மானுட விடுதலைக்கான மார்க்கங்களை வகுத்தளித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், அஹிம்சையை மேலான விழுமியம் என நிலைபெறச் செய்த பகவான் மகாவீரர், மெய்ஞானமே மானுடத்தின் இறுதி இலக்கு எனக் காட்டிய பகவான் புத்தர் ஆகிய மூன்று யோகியர் அருளால் ஞானம் நிலைபெற்ற மண் நம் தேசம். 

ஒரு பொதுப்பணியாளனாக நான் அறிந்த ஒரு விஷயம் ஒன்று உண்டு. நம் மரபின் காரணமாக நம் சூழலில் அனைவருக்குமே ஏதேனும் ஒரு பொதுப்பணியில் எவ்வகையிலாவது பங்கு பெற வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயம் முக்கியமாக இருக்கும். உதாரணத்துக்கு ஒருவர் அதிகளவில் மரம் நடுதலில் ஆர்வம் காட்டுவார். இன்னொருவருக்கு பொருள் வசதி குறைவாக இருப்பவர்களின் வீட்டுக் குழந்தைகளின் கல்விக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்பது முக்கிய விருப்பமாக இருக்கும் . சிலருக்கு கிராமத்து இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தொழிற்பயிற்சி அளிப்பது நல்ல செயல் என்ற அபிப்ராயம் இருக்கும்.  சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என ஒருவர் நினைப்பார். சிறுசேமிப்பின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவர் இருப்பார். கிராமத்துக் குழந்தைகள் உடல் வலிமை பெற பல்வேறு விதமான விளையாட்டு சாதனங்கள் அவர்களுக்கு வழங்கப் பெற வேண்டும் என்பது ஒருவரின் முயற்சியாக இருக்கும். குடிக்கு எதிரான பரப்புரையை கிராம மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று சிலர் எண்ணுவார்கள். யோகப்பயிற்சிகள் குறித்த அறிமுகம் அதிக அளவில் கிராம மக்களைச் சென்றடைய வேண்டும் என்பது சிலரின் உத்தேசமாக இருக்கும். இது போல இன்னும் ஐம்பது விஷயங்களைச் சொல்ல முடியும். ஒவ்வொருவரும் தான் முக்கியம் என நினைக்கும் செயலை ஆற்ற வேண்டும் என்று விரும்புவார்கள். அது மிகவும் இயல்பானது. 

‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தில் மேலேகுறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களிலும் மேலும் சாத்தியமான விஷயங்களிலும் பணி புரிய விரும்புகிறது. கிராமத்தில் எந்த விதமான செயலை முன்னெடுக்கவும் கிராம மக்களின் பங்கேற்பு அவசியம். மக்கள் ஏற்பும் மக்கள் பங்கேற்பும் உள்ள செயல் மட்டுமே நிலை பெறும். மக்கள் பங்களிப்பு எந்த அளவு முக்கியமோ அதே அளவு ‘’காவிரி போற்றுதும்’’ செயல்முறையை ஏற்றுக் கொண்டு அதனுடன் உணர்வுபூர்வமாக மனப்பூர்வமாக செயல்களில் பங்கெடுத்துக் கொள்பவர்களும் முக்கியம். இரண்டு செயல்பாடுகளும் இணைக் கோடுகளாக பயணிக்க வேண்டும். ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு நல்ல அடித்தளத்தை உருவாக்கி உள்ளது. நமது நல்ல நோக்கங்கள் கிராம மக்களைச் சென்றடைந்துள்ளன. நாம் மெல்ல ஆனால் உறுதியாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். 

சாராம்சம் என்பது சாராம்சத்துக்கான தேடலே என்கிறார் ஆதி சங்கரர். 

’’உலகம் ஒரு குடும்பம்’’ என்கிறது இந்திய மரபு. சாதி, மதம், மொழி ஆகிய பிரிவினைகளுக்கு அப்பால் மானுடத்தை ஒற்றைக் குலமென எண்ணுகிறது இந்திய மரபு. செயலை விடுதலைக்கான பாதைகளில் ஒன்றாக வகுத்திருக்கிறது இந்திய மரபு. அந்த மரபின் தொடர்ச்சியாக கிராமம் என்ற நுண் அளவில் ‘’சிறியதே அழகானது’’ என்ற அடிப்படையில் தன் செயல்களைக் கட்டமைத்துக் கொள்கிறது ‘’காவிரி போற்றுதும்’’. 

ஒரு நுண் அமைப்புக்குரிய சௌகர்யங்கள் ‘’காவிரி போற்றுதும்’’க்கு உண்டு. ஒரு நுண் அமைப்புக்குரிய எல்லைகளையும் ‘’காவிரி போற்றுதும்’’ அறியும். 

ஒன்று கூடி சிந்தியுங்கள்
சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள் 
உங்கள் மனம் ஒன்றாகட்டும்

என்கிறது உபநிடதம். 

‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளராக நாம் ஆற்ற வேண்டிய செயல்கள் குறித்து சிந்திக்க விவாதிக்க செயல்புரிய ஒருங்கிணைய ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். 

ulagelam(at)gmail(dot)com 

நன்நம்பிக்கை

ஊருக்குப் பக்கத்தில் ஒரு விவசாயி தனது 3 ஏக்கர் நெல்வயலில் முழுப் பரப்பளவிலும் மேட்டுப்பாத்தி எடுத்து தேக்கு மரம் பயிரிட முடிவு செய்தார். அவர் அந்த முடிவை எடுத்ததில் ‘’காவிரி போற்றுதும்’’ கணிசமான பங்கு வகித்தது. ஐ.டி நிறுவனத்தில் பணி புரிபவரான அவரது பூர்வீக நிலம் இது. அவருடைய தந்தை இத்தனை ஆண்டுகள் விவசாயம் பார்த்து வந்தார். நண்பர் எடுத்த முடிவை பலரும் பலவிதமாக விமர்சித்து அவருடைய மன உறுதியைக் குலைக்க முயன்றனர். எனினும் மரப்பயிருக்கு மாறுவது என்பதில் நண்பர் உறுதியாக இருந்தார். 

தமிழ்நாட்டில் ஒரு பொதுவான பழக்கம் உள்ளது. அதாவது இங்கே எல்லாருமே விவசாயிக்காக இரங்குபவர்களைப் போல் பேசுவார்கள். ஆனால் உண்மையில் அவர்களுக்கு விவசாயிகள் குறித்து எந்த அக்கறையும் இருக்காது. விவசாயி பொருளியல் நலன் அடையும் வண்ணமான தொழிலாக விவசாயம் இருந்தால் மட்டுமே விவசாயியின் வாழ்வில் மாற்றம் ஏற்படும். ஒரு சமூகம் பொருளியல் அதிகாரம் அடைந்தால் மட்டுமே உண்மையான சமூக மாற்றமும் நிகழும். பொருளியல் அதிகாரத்துடன் ஒப்பிடுகையில் அரசியல் அதிகாரம் என்பது எள்ளளவே. ஏழை எளிய மக்களின் பொருளியல் நலனுக்காக சிந்தித்து செயல்படுபவர்களே உண்மையில் சமூக மாற்றத்துக்காக சமூக நீதிக்காக செயல்படுபவர்கள். 

இந்தியாவில் எந்த மனிதனும் தனது குழந்தைகளின் நலனுக்காகவே யோசிக்கிறான் ; செயல்படுகிறான். விவசாயியும் அவ்வாறே. தனக்கும் தன் குடும்பத்துக்கும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்பதே அவனது விருப்பம். எல்லாருடைய விருப்பத்தையும் போல. அதை அடைவதற்கு முழு உரிமை அவனுக்கு இருக்கிறது. அதை அடைவதற்கு முழுமையான சாத்தியமும் அவனுக்கு இருக்கிறது. 

நல்ல அளவில் வருமானம் கிடைக்கக்கூடிய ஒப்பீட்டளவில் உற்பத்தி குறைவாக உள்ள பயிர்களை விவசாயிகள் உற்பத்தி செய்ய வேண்டும். விவசாயிகளின் வருமானம் இதனால் இயல்பாக உயரும். அதற்கான சாத்தியங்களை தொடர்ந்து விவசாயிகளிடம் முன்வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். 

தென் நிலத்திலிருந்து காஷ்மீரம் வரை இந்தியா வெவ்வேறு விதமான நிலவியல் அமைப்புகளை விவசாய முறைகளைக் கொண்ட நாடு. எனினும் எந்த மண்ணில் எல்லாம் விவசாயிகள் பொருளியல் பலன் பெற முடியுமோ அந்த பிரதேசங்களில் எல்லாம் பொருளியல் பலன் கிடைக்கும் பயிர்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இந்தியா போன்ற பெரிய நிலத்தில் ஒரு சதவீத விவசாய நிலப்பரப்பில் மாற்றம் ஏற்பட்டால் கூட அது லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு பலன் அளிக்கும். அந்த முயற்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். 

நான் இந்த துறையில் நிபுணன் அல்ல. என்னுடைய சொந்த ஆர்வத்தால் விவசாயிகளுக்கு தேக்கு மரப்பயிர் என்னும் சாத்தியத்தை சொற்களால் அவர்கள் மனத்தில் விதைக்கிறேன். என் பணி அவ்வளவே. அவ்வளவு மட்டுமே. அவர்கள் நிலத்தை மரப்பயிருக்குத் தயார் செய்யும் போது மரக்கன்றுகள் நடும் போது உடனிருக்கிறேன். அதன் வளர்ச்சியை அவர்களுடன் சேர்ந்து கண்காணிக்கிறேன். 

மரப்பயிருக்கு செலவு குறைவு என்பதால் தான் மரப்பயிர்களை பரிந்துரை செய்கிறேன். காவிரி டெல்டாவில் தேக்கு நன்றாக வளர்கிறது. Seeing is Believing என்பதற்கு ஏற்ப உலக அளவில் தேக்கின் தேவை அதிகரித்துக் கொண்டே போவதையும் இந்தியா தேக்கை இறக்குமதி செய்வதையும் அவர்களுக்கு சுட்டிக் காட்டுகிறேன். தேக்கு வளர இரசாயன உரம் தேவையில்லை. எனவே மக்கிய சாண எருவைப் பயன்படுத்துகிறார்கள். அது செலவு குறைந்தது. 

நண்பர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். கட்டுமானம் எனது தொழில் என்பதால் எனது பொறியியல் புரிதலைப் பயன்படுத்தி மேட்டுப்பாத்தி அமைக்கப்பட்டது. நான் எண்ணியது 85 % அளவில் அந்த வயலில் செயலாக்கப்பட்டது. அந்த அளவு துல்லியம் போதும் என நண்பரிடம் ஒரு கட்டத்தில் கூறிவிட்டேன். மீதிப் பகுதி அவருக்கு கூடுதல் செலவு வைக்கும் என்பதால் இது போதும் என்று சொன்னேன்.

நண்பர் வயலின் ஒளிப்படங்கள் கீழே உள்ளன. இந்த மரக்கன்றுகள் ஜூன் மூன்றாவது வாரத்தில் நடப்பட்டன, நான்கரை மாதம் ஆகியுள்ளது. ஒவ்வொரு கன்றும் சராசரியாக நான்கடி உயரம் வளர்ந்துள்ளன. பல கன்றுகள் ஆறடி உயரத்தைத் தாண்டி விட்டன. 
பூமியிலிருந்து இரண்டு அடி உயரம் எடுக்கப்பட்ட மேட்டுப்பாத்தியில் ஒரு தேக்கு மரக்கன்றுக்கும் இன்னொரு தேக்கு மரக்கன்றுக்கும் 12 அடி இடைவெளி விட்டு நடப்பட்டுள்ள தேக்கு மரக்கன்றுகள். 
பல கன்றுகள் ஒரு ஆள் உயரம் வளர்ந்துள்ளன. ஒரு மனிதர் பக்கத்தில் நிற்கும் ஒளிப்படத்தின் மூலம் கன்றுகளின் உயரத்தை எளிதில் யூகித்துக் கொள்ளலாம். 

தடிமனான தண்டுப் பகுதியும் அகன்ற இலைகளும் கொண்டு வளர்ந்திருக்கும் மரம். இந்த மரத்தின் உயரம் ஆறு அடி. 

இந்த வயலைக் கண்டபின் ஒரு விவசாயி வெகுநாட்கள் தரிசாக இருந்த தனது நிலத்தில் 600 தேக்கு மரங்கள் பயிரிட்டுள்ளார். வாரத்துக்கு இரண்டு மூன்று விவசாயிகள் நண்பரின் வயலுக்கு வந்து விபரம் கேட்டுச் செல்கிறார்கள். 

காவிரி போற்றுதும் - விவசாயியின் மரங்கள் - ஒளிப்படங்கள்

’’காவிரி போற்றுதும்’’ அறிவுறுத்தலின் படி நன்செய் நிலத்தில் மேட்டுப்பாத்தி எடுத்து  மரப்பயிர் நட்டு வளர்க்கும் விவசாயியின் வயல். ( 05.11.2022)

அதே நிலம் சில வாரங்களுக்கு முன்னால் எடுத்த புகைப்படத்தில் . 

Wednesday 16 November 2022

துலா ஸ்நானம்

ஐப்பசி மாதத்தில் காவிரி நதியில் மூழ்கி எழுவது  என்பது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படும்.  அதிலும் மயிலாடுதுறையில் நதி நீராடுவது மேலும் சிறப்பு வாய்ந்தது. 

நேற்று இரவு 11 மணி வரை மடிக்கணினியில் எழுதிக் கொண்டிருந்தேன். அதன் பின் உறங்கச் சென்றேன். காலை 4.30 அளவில் விழிப்பு வந்தது. விழித்துப் பார்த்தால் கடலூர் சீனுவின் குறுஞ்செய்தி. நள்ளிரவு ஒரு மணிக்கு அனுப்பியிருக்கிறார். ஜெ தளத்தில் 14 மரங்கள் விவகாரம் வெளியாகி உள்ளது என. 5.15 அளவில் ஒரு விவசாயி குறுஞ்செய்தி அனுப்பினார். தனது வயலில் தேக்கு மரக் கன்றுகளுக்கு முட்டு கொடுக்க சவுக்கு கழி வாங்க உடனிருந்து உதவ முடியுமா என்று கேட்டிருந்தார். அவரை 6.15 வீட்டுக்கு வரச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினேன். இன்று காலை 9 மணி அளவில் மளிகை மொத்த வியாபாரி கடைக்கு வந்து மக்களுக்கு வழங்கக் கூடிய மளிகைப் பொருட்களை பெற்றுச் செல்லுமாறு கூறினார். அனைத்தும் பொட்டலடமிடப்பட்டு தயாராக உள்ளன என இரவு கடை அடைக்கும் முன் தொடர்பு கொண்டு கூறியிருந்தார். விவசாயி வருவதற்கு முன் நான் குளித்துத் தயாராக இருந்தேன். இன்று காலையில் எழுந்ததும் துலா ஸ்நானம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். விவசாயியின் குறுஞ்செய்தியைக் கண்டவுடன் அதில் மாற்றம் செய்து கொண்டேன். விவசாயிக்கு வயல்வேலை பல இருக்கும். ஒருநாள் என்பது அவர்களுக்கு மிகப் பெரிது. எப்போதுமே எனது பணியில் விவசாயிகளுக்குத் தான் முன்னுரிமை கொடுப்பேன். எனவே அவருடன் சென்று விட்டேன். சவுக்கு கழி இருக்கும் இடத்துக்கு பயணித்துச் சென்று கழி ஆர்டர் செய்தோம். வீடு திரும்ப 10 மணி ஆகி விட்டது. அவசரமாக மூன்று இட்லியை சாப்பிட்டு விட்டு உடன் மளிகை மொத்த வியாபாரக் கடைக்குச் சென்றேன். துலா கட்டத்தில் காவிரி ஸ்நானம் செய்ய மக்கள் பெருங்கூட்டமாய் திரண்டிருந்தனர். துலா கட்டத்தை ஒட்டிய எல்லா தெருக்களிலும் ஒரே கூட்டம். காரை நிறுத்த இடமில்லை. இரண்டு தெரு தள்ளி காரை நிறுத்தி விட்டு கடைக்கு வந்தேன். அனைத்தும் தயாராயிருந்தன. கார் எங்கே இருக்கிறது எனக் கேட்டுக் கொண்டே எட்டு பண்டல் மளிகைப் பொருட்களை டிவிஸ்50ல் கொண்டு வந்து கொடுத்து மூன்று தடவையாகக் கொடுத்து விட்டு போனார்கள். 

செயல் புரியும் கிராமத்தைச் சென்றடைந்தேன். அங்கே இருந்த மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டேன். என் செயல்களில் உடனிருக்கும் அந்த கிராமத்தில் வசிக்கும் கிராமத்துவாசி ஒருவரும் என்னுடன் வந்திருந்தார். முதல் முறையாக அந்த கிராமத்தில் அந்த மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுத்தான் தடுப்பூசிக்கான விழிப்புணர்வு பரப்புரையைத் துவங்கினோம். கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னோம். ஐயங்கள் ஏதும் இருப்பின் என்னிடம் கேட்டார்கள். நான் விளக்கம் அளித்த பின் தெளிவடைந்து தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். அந்த மாவட்டத்திலேயே அந்த கிராமம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின்  சதவீதத்தில் முதல் இடம் பெற்றது. அந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது. அரசு மருத்துவமனை கிடையாது. ஆனால் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள கிராமங்கள், அரசு மருத்துவமனை உள்ள கிராமங்கள் சாதிக்காததை அந்த கிராமம் சாதித்தது. 

பாரதி, 

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்

நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்

அதுவும் அற்றோர் வாய்ச்சொல் தாரீர் 

என்பார். அது போல நாம் அவர்களுடன் ஒரு உரையாடலை மட்டுமே மேற்கொண்டோம்.  அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அதன் பின் அந்த கிராமத்தில் பூமரக்கன்றுகள் நடப்பட்டன. மழைக்காலத்தின் போது ஆறு நாட்களுக்கு அங்கே உள்ள குடிசைப்புற மக்களுக்கு ஒருவேளை உணவு வழங்கப்பட்டது.  இன்னும் பல செயல்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்த நினைவுகள் எழுந்தன. அந்த கிராம மக்களுடனான உறவு என்பது மிகவும் உணர்வுபூர்வமானது. அவர்கள் என் மேல் வைத்திருக்கும் பிரியம் என்பது அளவற்றது. அவர்களிடம் பொருட்செல்வம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களிடம் பிரியத்துக்குரியவர்களிடம் வழங்குவதற்கு எல்லையற்ற அன்புச் செல்வம் இருக்கிறது. பொருள் அழிவுக்குட்பட்டது. அன்பு எல்லையற்றது. எப்போதும் அழியாதது. 

ஒவ்வொரு வீடாக மளிகைப் பொருட்களை வழங்கினோம். சென்ற ஆண்டு உணவளித்தது மக்கள் நினைவில் இருந்தது. என்னுடைய நலனை விசாரித்தார்கள். கடந்த சில நாட்களாக இருந்த சஞ்சலம் அவர்களுடன் இருந்த போது நீங்கியது. குடிசைப் பகுதியில் ஒரு பெண்மணி என்னிடம் இங்குள்ள குழந்தைகளின் கல்விக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார். குடிசையில் வசிக்கும் ஒருவர் விவசாயப் பணிகளில் கூலி பெறும் ஒருவர் தன்னுடைய குழந்தை கல்வியில் சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுவது மகத்தான ஒன்று. கல்வியை வாழ்க்கையில் மிக உயர்ந்ததாக எண்ணும் இந்தியப் பண்பாட்டின் விளைவே அந்தப் பெண்மணியின் விருப்பம். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என்று உறுதி கொடுத்தேன். 

‘’காவிரி போற்றுதும்’’ ஓர் நுண் அமைப்பு. பெரிதினும் பெரிது கேள் என்கிறான் பாரதி. நாம் மகத்தானவற்றுக்கே எப்போதும் முயல்வோம் என எண்ணினேன். எல்லா வீடுகளுக்கும் பொருட்களை அளித்த பின் வீடு திரும்பினேன். 

வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் இருந்து விட்டு காவிரிக்குச் சென்றேன். வீட்டிலிருந்து 150 மீட்டர் தூரத்தில் காவிரி. காவிரி படித்துறையில் ஒரு மூதாட்டி அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்து காவிரியை வணங்கிக் கொண்டிருந்தார். அவர் சென்றதும் காவிரியில் பலமுறை மூழ்கி எழுந்தேன். நீர்மை வலிகளை நீக்கியது. நீர்மை இதம் அளித்தது. நீர்மை நம்பிக்கைகளை மேலும் வலுவாக்கியது. 

காவிரி போற்றுதும் ! காவிரி போற்றுதும் ! காவிரி போற்றுதும்!

Tuesday 15 November 2022

முதல் உதவி

இன்று வெளிநாடுகளிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் நண்பர்கள் அழைத்து விபரம் கேட்டுக் கொண்டிருந்தனர். 14 மரங்கள் வெட்டப்பட்டதும் வெட்டப்பட்ட விதமும் அவர்களை மிகவும் துயருறச் செய்தது என்பதை வருத்தத்துடன் கூறினர்.  அந்த வீதியில் 100 மரங்கள் நடப்பட்டுள்ளன என்பதையும் அவை நல்ல முறையில் வளர்ந்து வருகின்றன என்பதையும் பதிவில் குறிப்பிட்டிருப்பதை நினைவு படுத்தினேன். இருப்பினும் 14 மரங்கள் வெட்டப்பட்டது அனைவரையும் மிகவும் வருந்தச் செய்து விட்டது. என்னைக் குறித்த அவர்கள் அக்கறையை வெளிப்படுத்தினர். அவர்கள் சொன்ன விஷயங்களை உள்வாங்கிக் கொண்டேன். நான் நலமாக இருக்கிறேன் என்பதையும் நண்பர்களின் பிரியத்தாலும் அன்பாலும் அக்கறையாலும் மேலும் வலிமை பெற்றுள்ளேன் என்பதையும் அவர்களிடம் கூறினேன். 

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வாரத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்க மளிகை மொத்த வியாபாரக் கடை ஒன்றில் தேவையான பொருட்களின் பட்டியலை வழங்கியிருந்தேன். அவர்கள்  நாளை காலை பொருட்களை வழங்குவதாகக் கூறினார்கள். சனிக்கிழமையன்று பட்டியலைக் கொடுத்தேன். ஞாயிறு அவர்கள் கடை விடுமுறை. நேற்று எனக்கு சில வேலைகள் இருந்தன. இன்று நான் தயாராயிருந்தேன் ; அவர்களுக்குப் பணி இருந்தது. நாளை வேலை நிகழ்ந்து விடும். 

இன்று உள்ளூர் நண்பர் ஒருவர் மளிகைப் பொருட்கள் வழங்குவதில் தானும் ஒரு  சிறு பங்களிப்பை வழங்க விருப்பம் தெரிவித்தார். அவரிடம் விவசாயிகளுக்கு தேக்கு மரக்கன்றுகள் வழங்கும் போது அவரிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறினேன். அவர் அளிக்கும் மரக்கன்றுகள் எந்த விவசாயியின் நிலத்தில் நடப்பட்டுள்ளது என்பதை அவரிடம் கூறிவிட்டால் அவரும் அதன் வளர்ச்சியைக் கண்காணிப்பார் ; துணை நிற்பார். 

இன்று நான் ஒரு முடிவு செய்தேன். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளுக்கு உதவ பலரும் விருப்பம் தெரிவிக்கின்றனர். மரக்கன்றுகள் வழங்க பலரும் பொருள் அளிக்க விருப்பம் கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் மீது விவசாயம் மீதும் மதிப்பு கொண்டு அளிக்கப்படும் தினையளவு உதவியும் பனையளவு பெரியது. எனவே உடனடியாக ஒரு  நர்சரி அமைத்து விடலாம் என இருக்கிறேன். அதற்கான நேரம் உருவாகி விட்டது. நாமே நமக்குத் தேவையான மரக்கன்றுகளைத் தயாரித்து விடலாம்.  ஒரு மரக்கன்றின் விலை சராசரியாக ரூ. 10 என்றால் ஒரு விதையின் விலை சராசரியாக ரூ. 1 என்ற அளவில் இருக்கும். உதாரணத்துக்கு  ஒருவர் ரூ. 100 பொருள் உதவி செய்கிறார் என்றால் மரக்கன்றாக வாங்கினால் 10 மரக்கன்றுகள் மட்டுமே வாங்க முடியும். ஆனால் விதையாக வாங்கினால் நம்மால் அவர் அளிக்கும் ரூ. 100 மதிப்பில் 100 மரக்கன்றுகளை உருவாக்க முடியும். 

ஒருவர் ரூ. 10, 000 வழங்குகிறார் என்றால் அவர் அளித்த தொகையால் 10,000 மரங்கள் உருவாகியிருக்கிறது என்பதைக் காணும் போது அவருக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படும். அத்தகைய மகிழ்ச்சியை ‘’காவிரி போற்றுதும்’’ கொடையளிப்பவர்களுக்கு வழங்க விரும்புகிறது. 

இன்று இரவு 9 மணி அளவில் வெளிமாநில நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மெயின் ரோடில் நின்று அவருக்கு பதிலளித்துக் கொண்டிருந்தேன். நான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து 100 அடி தொலைவில் ஒருவர் வேகத்தடையில் வண்டியை ஏற்றும் போது தடுமாறி இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்து விட்டார். நான் ஓடிச் சென்று அவரைப் பார்த்தேன். அவர் கீழே கிடந்தார். அவர் மீது வண்டி கிடந்தது. இதனைப் பார்த்த சிலரின் உதவியுடன் வண்டியை தூக்கி அதன் அடியில் இருந்த அவரை எழுந்து அமரச் செய்தோம். கை காலில் நல்ல அடி. கடுமையான ரத்தக் காயம். நான் வீட்டுக்கு வந்து என்னுடைய மோட்டார்சைக்கிளை எடுத்து வந்து அவரை அழைத்துக் கொண்டு அரசு பொது மருத்துவமனைக்கு உடனே சென்றேன். மருத்துவர் காயத்துக்கு ‘’டிரஸ்ஸிங்’’ செய்யச் சொன்னார், டிரஸ்ஸிங் பிரிவுக்கு அழைத்துச் சென்றேன். அங்கே டிரஸ்ஸிங் செய்து தையல் போட்டனர். கட்டு கட்டி விட்டனர். அவரை அழைத்துக் கொண்டு  வந்து அவருடைய டூ வீலர் இருந்த விபத்து நடந்த இடத்துக்கு மீண்டும் கொண்டு வந்து விட்டு விட்டு கவனமாக வீடு போய் சேருமாறு அவரிடம் சொன்னேன். புறப்படும் போது அவர் என்னை வாழ்த்தி விட்டு சென்றார். 

கவிதைகளின் தீராக் காதலன் ( மறுபிரசுரம்)

அடிக்கடி சந்திக்க இயலா விட்டாலும் அதிக நேரம் அளவளாவ வாய்ப்பு இல்லையென்றாலும் அகத்துக்கு மிக நெருக்கமாக உணரும் நண்பர்கள் பலர் எனக்கு உண்டு. ராகவ் அவ்வாறான நண்பர். இலக்கியத்தின் மேல் பேரார்வம் கொண்டவர். தீவிரமான வாசகர். இலக்கிய விவாதங்களை கூர்மையாகக் கவனிப்பவர். இன்று அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். சென்னையில் ஐ டி துறையில் பணிபுரிகிறார். அவரது பூர்வீக நிலம் மெலட்டூரில் உள்ளது. அதன் அறுவடைப் பணிகளை மேற்பார்வையிட ஊருக்கு வந்திருந்தார்.  நான்கு நாட்கள் மெலட்டூரில் இருந்து அறுவடைப் பணிகளை முடித்துக் கொண்டு அவர் சென்னை செல்ல வேண்டும். 

இன்று காலை 8 மணி திருச்சி விரைவு ரயில் வண்டியில் பாபநாசம் சென்று இறங்கிக் கொண்டேன். ராகவ் ரயில் நிலையத்துக்கு வந்து மெலட்டூர் அழைத்துச் சென்றார். தனது ஃபோர்டு காரில் மாயாவியைப் போல பல வித்தைகளைக் காட்டுகிறார். 

அவரது வீட்டுக்குச் சென்றதும் கூடத்தில் கொலு வீற்றிருந்த ஸ்கூபி ராகவ்வின் பின்னால் வரும் என்னைப்  பார்த்ததும் வீடே அதிர்வதைப் போல் பெருங்குரலில் குரைத்தது. நான் அதன் பக்கத்தில் சென்று அதன் தலையைத் தொட்டேன். என் கால் விரல்களை முகர்ந்தது. நான் அதன் தலையைத் தடவிக் கொடுத்தேன். என் உள்ளங்கையை மோப்பம் பிடித்தது. நான் ரயிலில் புறப்படும் முன் எங்கள் தெருவில் வசிக்கும் நான்கு நாய்களுக்கு பிஸ்கட் கொடுத்து விட்டு வந்திருந்தேன். தினமும் அவற்றுக்கு பிஸ்கட் போட்டு விட்டு கொஞ்ச நேரம் அவற்றுடன் விளையாடி விட்டு வருவேன். அவற்றின் வாசனையை ஸ்கூபி அறிந்திருக்கக் கூடும். சரி இவனை ஏதோ ஒரு  விதத்தில் ஏற்றுக் கொள்ளலாம் என அது முடிவு செய்தது. ஸ்கூபி ஏற்றுக் கொண்டதால் பெப்பரும் ஏற்றுக் கொண்டது. நான் ரொம்ப நேரம் அதனுடன் இருந்ததும் ராகவ் , ‘’பிரபு ! ஒருத்தரை ஸ்கூபிக்கு ரொம்ப புடிச்சிருந்தா லேசா கடிக்கும்’’ என்றார். என்னை அதற்கு ரொம்ப பிடிக்கும் முன் நான் விடுபட்டேன். 

திருமதி. ராகவ் தஞ்சாவூர் ஜில்லாவுக்கே உரிய பிரத்யேகத் தன்மை கொண்ட சிறப்பான காஃபி கொடுத்து உபசரித்தார். கடந்த சில மாதங்களாக காஃபி , டீ, பால் என அனைத்தையும் வெற்றிகரமாக தவிர்த்திருக்கிறேன். எனினும் எனது உள்ளுணர்வு இந்த காஃபியை அருந்தச் சொன்னது. எனது வாழ்வில் நான் அருந்திய மிகச் சிறந்த காஃபிகளில் ஒன்று. அக அமைதியும் மனத் திட்பமும் கொண்ட ஒருவராலேயே அவ்வாறாக காஃபி போட முடியும். நான் அருந்திய மிகச் சிறந்த காஃபிகளில் ஒன்று என அவரிடமும் ராகவ்விடமும் கூறினேன். 

நானும் ராகவ்வும் இலக்கியம் பேச ஆரம்பித்தோம். ராகவ் சாய்ந்து கொள்ள திண்டு கொண்டு வந்து தந்தார். நான்  திண்டை முட்டுக் கொடுத்து சோஃபாவில் சாய்ந்து கொண்டு உரையாற்ற ஆரம்பித்தேன். 

அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். 

சட்டென , ‘’ராகவ் ! நீங்கள் எழுத வேண்டும் என விரும்பியிருக்கிறீர்களா?’’ என்று கேட்டேன். 

ராகவ் யோசித்துப் பார்த்து விட்டு , ‘’இல்லை பிரபு ! அதிகமாக வாசிக்க வேண்டும் என்று தான் விரும்பியிருக்கிறேன். ‘’ என்றார். 

கேள்வியை நான் வேறு விதமாகக் கேட்டேன். ‘’கட்டுரைகள், நாவல், சிறுகதை எழுத வேண்டும் என்று எப்போதாவது உங்கள் மனதில் எண்ணம் தோன்றியிருக்கிறதா?’’ என்று கேட்டேன். 

அவர் உடனே ‘’இல்லை’’ என்று பதில் சொன்னார். 

நான் ‘’பொயட்ரி’’ என்றேன். 

ராகவ் தரையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார். நான் புரிந்து கொண்டேன். 

‘’பொயட்ரி எழுதியிருக்கீங்களா?’’

‘’எழுதியிருக்கன் பிரபு. ஆனா அது பொயட்ரியான்னு தெரியலை’’

‘’நீங்க எழுதியிருக்கற பொயட்ரியை எனக்கு காட்டுங்க. நான் வாசிச்சுப் பாக்கறன்’’

தனது அலைபேசியில் அவர் எழுதிய கவிதைகள் சிலவற்றை எனக்குக் காண்பித்தார். நான் ஆர்வத்துடன் வாசித்தேன். 

‘’தொடர்ந்து எழுதுங்க ராகவ். நல்லா எழுதறீங்க. நீங்க தொடர்ந்து எழுதினா உங்க கவிதைகள் வழியா உங்களுக்குள்ள ஒரு டிராவல் நடக்கும். ஈஸ்வர ஹிதம் ‘’ என்றேன். 

என் நண்பன் சீனு

சீனுவை முதல் முறையாகச் சந்தித்தது மதுரையில் அலெக்ஸ் அண்ணன் ஏற்பாடு செய்திருந்த அயோத்திதாசர் குறித்த ஜெயமோகன் உரையில் என்று ஞாபகம். நிகழ்ச்சி முடிந்து அதன் பின் மணிக்கணக்காக காலேஜ் ஹவுஸ் விடுதி அறையில் ஜெ பேசிக் கொண்டிருந்தார். உரையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலர் அவ்வப்போது தங்கள் அபிப்ராயங்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அவ்வாறு அபிப்ராயம் கூறியவர்களில் சீனுவும் ஒருவர். நானும் ஒருவன். அதன் வழியாகவே அந்த குறைந்த நேரத்தில் ஒருவரை ஒருவர் அறிந்தோம். ஜெ வுக்கு அடுத்த நாள் நாகர்கோவிலில் நிகழ்ச்சி இருந்தது. அதனால் அவர் நள்ளிரவு இரண்டு மணிக்கு மாட்டுத்தாவணியில் பஸ் ஏறியாக வேண்டும். அவருடன் நாங்களும் பேருந்து நிலையத்துக்குப் புறப்பட்டோம். பல ஊர்களிலிருந்து வந்திருந்த வாசகர்கள் 25 பேருக்கு மேல் இருந்தனர். ஐந்தாறு பேர் காரில் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் காரில் அனைவரையும் மாட்டுத் தாவணியில் கொண்டு விட்டனர். அப்போது நானும் சீனுவும் ஒரு காரில் பக்கத்து பக்கத்தில் அமர்ந்து பயணிக்க நேர்ந்தது. நான் கணிசமாக பயணம் செய்யக் கூடிய்வன் என்றாலும் ரயில் பயணங்களை தெரிவு செய்பவன். அதனால் ஓரளவு ரயில் நேரங்களைத் தெரிந்து வைத்திருப்பேன். சீனுவிடம் நான் மெல்ல கேட்டேன். ‘’சீனு ! இன்னும் ரெண்டு மணி நேரம் வெயிட் பண்ணா ஒரு எக்ஸ்பிரஸ் இருக்கு. நீங்க திருச்சில இறங்கிடுங்க. நான் தொடர்ந்து ஊருக்குப் போயிடறன்’’. 

சீனு தன் அழுத்தமான குரலில் சொன்னார். ‘’ நமக்கு இந்த டிரெயின், டிரெயின் டைமிங் , டிரெயினுக்காக பிளாட்ஃபார்ம்ல காத்திருக்கிறது இதெல்லாம் சரியா வராது. ஒரு இடத்துக்குப் போகணும்னு முடிவு பண்ணா என்னெல்லாம் டிரான்ஸ்போர்ட் உடனே இருக்கோ அதுல கிளம்பி போய்க்கிட்டே இருக்கணும்’’

அதுநாள் வரை ஒழுங்காக ரயில் பிடித்து சென்று கொண்டிருந்தவன் அதன் பின் சீனு மார்க்கத்தில் பயணிக்கத் தொடங்கினேன். 

அன்றைய தினம் மதுரையிலிருந்து திருச்சி வரை பேருந்தில் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டு வந்த விஷயங்களும் அந்த பயணத்திலேயே நாங்கள் உணர்ந்த அணுக்கமும் மறக்க முடியாதது. குர் அதுல் ஐன் ஹைதரின் ‘’அக்னி நதி’’யும் கிரிராஜ் கிஷோரின் ‘’சதுரங்கக் குதிரைகள்’’ம் எனக்கு மிகவும் பிடித்த நாவல்கள். அவற்றை ஒரு துவக்கமாகக் கொண்டு நானும் சீனுவும் இந்திய நாவல்கள் குறித்து விரிவாகப் பேசிக் கொண்டு சென்றோம். வானம் மெல்ல சிவந்து கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் திருச்சி வந்து தேனீர் அருந்தி விட்டு உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிந்தோம். 

இலக்கியத்தில் ஆர்வமும் ரசனையும் கொண்டவர்கள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பவர் சீனு. அது ஒரு அரிய குணம். அது ஒரு அரிய மனநிலை. 

அதன் பின்னர் பல சந்திப்புகள் . பல உரையாடல்கள். எப்போதுமே சீனுவை கடலூர் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு மயிலாடுதுறை செல்லும் பஸ் ஏறுவது என்பது மிகுந்த துயர் அளிக்கக் கூடியது. அதுவரை நாங்கள் பேசிய விஷயங்கள் அதன் பின்னரான இரண்டரை மணி நேரப் பயணத்தில் சீனுவின் தீர்க்கமான உச்சரிப்பில் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். 

நாங்கள் மேலும் மேலும் என இன்னும் அடிக்கடி சந்தித்திருக்கலாம் தான். அதிகம் உரையாடியிருக்கலாம் தான். என்னை அவர் அறிவார். அவரை நான் அறிவேன். அது எங்கள் இருவருக்கும் தெரியும். சீனு போல மனிதர்கள் மீது அத்துணை பிரியம் கொள்பவர்களும் மதிப்பளிப்பவர்களும் அத்தனை புரிதலுடன் கனிவுடன் இருப்பவர்களும் அபூர்வம். அவர் எல்லாரிடமும் பேரன்புடனே இருக்கிறார் ; பழகுகிறார். 

இரண்டு நாட்களுக்கு முன்னால், பொது விஷயம் தொடர்பாக நான் எழுதிய பதிவை சீனுவுக்கு அனுப்பியிருந்தேன். அதை வாசித்து சீனு பெரும் வருத்தம் கொண்டார். அவர் அந்த அளவு வருத்தம் கொண்டது என்னை வருத்தம் அடையச் செய்தது. ஓங்கி ஒலிக்கும் சீனுவின் குரல் அன்று அன்பாலும் பிரியத்தாலும் தழுதழுத்திருந்தது. சீனுவை சமாதானம் செய்வது பெரிய வேலையாகி விட்டது. 

நீ எனக்கு அளிக்கும் அனைத்துக்கும் நன்றி நண்பா. 

Monday 14 November 2022

பிரியமும் அன்பும் நட்பும்

’’காவிரி போற்றுதும்’’ தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் உடன் என்னுடைய வலைப்பூவில் பதிவு செய்வது எனது வழக்கம். வலைப்பூவின் வாசகர்கள் அதனை அறிவார்கள். எனினும் 14 மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பான விஷயத்தைப் பதிவு செய்யாமல் இருந்தேன். ஒரே நேரத்தில் ஒரு வீதியில் இருக்கும் 14 மரங்களும் வெட்டப்படுவது என்பது வாசிக்கும் எவருக்கும் - கேள்விப்படும் எவருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கும் செயல் என்பதால் அது குறித்தும் மேலும் அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் எந்த பதிவும் இடாமல் இருந்தேன். 14 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் ஒரு முக்கியக் கட்டத்தை அடைந்த போது இது குறித்து பதிவு செய்யப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தேன். பதிவு செய்தேன். நண்பர்கள் கவனத்துக்கும் கொண்டு சென்றேன். இதனால் விஷயம் பலருடைய கவனத்துக்குச் சென்றது. நண்பர்கள் பலர் இந்த விஷயத்தை உள்வாங்கிக் கொண்டனர். என்னுடைய நகர்வுகளின் அடிப்படையைப் புரிந்து கொண்டனர். இந்த விஷயத்தை எப்படி மேலும் திறனுடன் கையாள்வது என்பதில் ஆலோசனை அளித்தனர். எப்போதும் உணர்வுபூர்வமாகவும் மனப்பூர்வமாகவும் உடனிருப்போம் என உறுதி அளித்தனர். இத்தனை நாள் ஏன் இது  குறித்து தெரிவிக்காமல் இருந்தேன் என கடிந்து கொண்டனர். இப்போது தெரிவித்தது மூலம் நான் ஒரு நிம்மதியை உணர்ந்தேன். இனி வரும் நாட்களில் எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட ஏன் அவ்வாறு நடந்தது என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். எதிர்பாராத சம்பவம் ஏதேனும் நடந்து அதன் பின்னர் 14 மரங்கள் வெட்டப்பட்ட விஷயம் குறித்து என் நண்பர்கள் அறிய நேர்ந்தால் என் நண்பர்களின் மனம் வருந்தும். நட்பில் நான் இடைவெளியுடன் இருந்து விட்டேனோ என்று அவர்கள் எண்ணக் கூடும். அது அவர்களுக்கு மேலும் வருத்தத்தைத் தரும் என்பதால் தான் பதிவு செய்தேன். 

நண்பர்கள்  பிரியத்தாலும் அன்பாலும் நட்பாலும் என்னைச் சூழ்ந்து விட்டனர். அவர்களின் நட்பும் பிரியமும் அன்பும் என்னை நெகிழச் செய்கிறது. அவர்கள் என் மீது காட்டிய அக்கறையாலும் அன்பாலும் பிரியத்தாலும் என்னைக் கடனாளியாக உணரச் செய்து விட்டனர். 

அனைவருக்கும் என் நன்றி !

Sunday 13 November 2022

நான் தாக்கப்படலாம்