Wednesday 29 June 2022

வினாக்களும் விடைகளும்

’’நாடினேன் நான் கண்டுகொண்டேன்’’ கட்டுரையை வாசித்து விட்டு எனது நண்பரும் எனது பிரியத்துக்குரியவருமான இளம் வாசகர் ஒருவர் என்னை அலைபேசியில் அழைத்திருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை மிக இளம் வயதில் சந்தித்தது குறித்து தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார். சமூகப் பிரக்ஞை என்பது நுட்பமானது. இன்னும் சரியாகச் சொன்னால் பிரக்ஞை என்பதே மிக நுட்பமானது. நாம் ஒரு விஷயத்தை முழுமையாக அறிய முற்பட்டால் அல்லது ஒரு விஷயத்துக்கு நம்மை முழுமையாகக் கொடுத்தால் நாம் அதனை முற்றறிவோம் அல்லது அதனை முற்றறிவதற்கான மார்க்கத்தில் பயணிப்போம். அப்போது அதன் நிறை குறைகள் , சாதக பாதகங்கள் என அனைத்தையும் அறிந்து கொள்வதற்கான புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும். ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பது என்பது வேறு ; ஒன்றினை முழுமையாகப் புரிந்து கொள்வது என்பது வேறு.  

ஸ்டாலின் ரஷ்ய மக்கள் தொகையில் கோடானு கோடி பேரைக் கொன்று குவித்தவர். ஸ்டாலினைப் போல் ஒரு கொடுங்கோலனை உலகம் கண்டதில்லை. சோவியத் யூனியன் இருக்கும் வரை ஸ்டாலின் செய்த படுகொலைகள் ஒரு உயரிய சித்தாந்ததை நிலைநிறுத்த செய்யப்பட்டன என நியாயப்படுத்தப்பட்டது. உலகெங்கும் இருந்த கம்யூனிஸ்டுகள் அதனை நியாயப்படுத்தினர். 1990ல் சோவியத் யூனியன் சுக்குநூறாக உடைந்தது. அதுநாள் வரை கம்யூனிஸ்டுகள் நம்பிய ஒரு உலகம் ஒரு கணத்தில் இல்லாமல் போனது. 

‘’பின்தொடரும் நிழலின் குரல்’’ நாவல் சோவியத் யூனியனின் உடைவைப் பின்புலமாகக் கொண்டு மானுட அறம் தொடர்பான வினாக்களை எழுப்பக் கூடிய நாவல். அதனை நான் கல்லூரி மாணவனாயிருந்த போது வாசித்தேன். அவை என் உளத்தில் பெரும் கொந்தளிப்புகளை உருவாக்கின. உலக வரலாற்றில் பலியாகிக் கொண்டேயிருக்கும் எளியோரின் பெரும் நிரை என் உள்ளத்தை உலுக்கியது. அந்த நாவல் பெரும் வினாக்களை என்னுள் எழுப்பியது. வினாக்கள் அதிகரிக்க அதிகரிக்க விடை கிடைக்குமா என்ற ஏக்கம் எழுந்தது. 2000ம் ஆண்டில் ’’பின்தொடரும் நிழலின் குரல்’’ வாசித்தேன். 2003ம் ஆண்டுல் லூயி ஃபிஷரின் ‘’ The life of Mahatma Gandhi'' நூலை வாசித்தேன். மகாத்மா காந்தியின் வாழ்க்கை என்பது என்னுடைய பல கேள்விகளுக்கு பதில் அளித்தது. 

‘’சத்யம்’’ என்பதை மகாத்மா தன் வாழ்வாக ஏற்றார். தான் ஏற்ற ஒன்றுக்கு தன்னை முழுவதுமாக அளித்தார். அவர் வாழ்க்கையில் , குழந்தைப் பருவத்தில் தான் பார்த்த ஹரிச்சந்திர நாடகத்தின் ராஜா ஹரிச்சந்திரனைப் போல. அவர் ஏற்றுக் கொண்ட விஷயம் அவரை ஒரு மனிதராக எவ்விதம் உலகத் தளைகளிலிருந்து விடுவித்து ஒரு மகாத்மாவாக ஆக்கியது என்பதன் சித்திரத்தை லூயி ஃபிஷர் அளித்திருப்பார். வரலாறு குறித்த வரலாற்று நாயகர்கள் குறித்த கேள்விகளுக்கு மகாத்மாவின் வாழ்க்கையிலிருந்து எனக்கு பதில் கிடைத்தது. அந்த நூலை நான் வாசித்தது என் நல்லூழ் என்றே கூற வேண்டும்.  

முதலாளித்துவம் , கம்யூனிசம் என்ற இரண்டு சிந்தனைகளுமே இயற்கையை ஒரு பண்டமாகக் காணும் தன்மை கொண்டவை. இயற்கையை உச்சபட்சமாக சுரண்டும் தன்மையை தங்கள் வழிமுறையாகக் கொண்டவை. 

இந்திய மரபு இயற்கையுடன் இயைந்து வாழும் தன்மை கொண்டது. சுரண்டல் இல்லாத ஒரு ஆட்சி முறையே ‘’இராம இராஜ்யம்’’ எனப்பட்டது. பகவான் புத்தர் ‘’கருணையுள்ள பேரரசு’’ என்ற கருதுகோளை முன்வைத்தார். மகாவீரர் அஹிம்சையையும் உண்மையையும் அரசியலின் நெறிகளாகவே கண்டார். 

நிகழ்வுகளை உளச்சான்றின் படி அணுகுதல் ( இதனை மகாத்மா அந்தராத்மாவின் குரல் என்கிறார் ) , சக மனிதர்கள் மேல் கருணையுடன் இருத்தல் , விழுமியங்களைப் பயிற்றுவித்தலின் மூலம் மேலான வாழ்க்கைநிலைக்கு மக்கள் வாழ்வை உயர்த்துதல் , மக்கள் அனைவரையும் ஏற்பு மறுப்பு என்னும் இருநிலை இன்றி சமமாகப் பார்த்தல் ஆகிய தன்மைகளை மகாத்மா காந்தி அரசியலில்  தனது பாணியாகக் கொண்டார். இந்த தன்மைகள் அனைத்தும் முழுக்க முழுக்க இந்திய மரபில் வேர் கொண்டவை. சமத்துவத்தின் குரல் உபநிடதங்களில் ஒலிக்கின்றது. தூய பிரக்ஞை முற்றிலும் கருணைத்தன்மை கொண்டது என்பதை பகவான் புத்தர் எடுத்துரைத்தார்.  

சமூக முன்னேற்றத்துக்கு - சமூக மாற்றத்துக்கு - சமூக நீதிக்கு -  அரசியல் அதிகாரம் மட்டுமே ஒரே தீர்வு அல்ல என்பதை காந்தி உணர்ந்திருந்தார். அரசியல் அதிகாரத்தின் எல்லைகள் காந்தியால் முழுமையாக உணரப்பட்டிருந்தன. உலக வரலாற்றில் மகாத்மாவைப் போல் காலை 3 மணியிலிருந்து இரவு 11 மணி வரை ஒவ்வொரு நொடிப் பொழுதையும் மக்களுக்காகவும் சக மனிதர்களுக்காகவும் உழைத்த இன்னொரு தலைவர் இல்லை. உலகின் எந்த பெரிய எழுத்தாளனை விடவும் அதிகமான பக்கங்களை தனது வாழ்நாளில் எழுதியிருக்கிறார். அவரது நூல் தொகுப்பு நாற்பதாயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளது. 

அவரிடம் ஒவ்வொரு தனிமனிதனிடமும் பேசுவதற்கு சொற்கள் இருந்தன. இருக்கின்றன. 

அவர் மனிதர்களை எந்தெத்த வழியில் இணைக்க முடியுமோ அத்தனை வழியிலும் இணைத்தார். அவரது தினசரி நடைமுறையில் முக்கிய பங்கு வகித்தது பிராத்தனை. இராட்டையில் நூல் நூற்கும் செயலை தினமும் மேற்கொண்டார். லட்சக்கணக்கான மக்கள் அவரைப் பின்பற்றி தினமும் அதனை மேற்கொண்டனர். அதுதான் உண்மையான புரட்சி. தனது ஆசிரமத்தில் அனைவருக்குமான பொது நடைமுறைகளை உருவாக்கிக் கொடுத்தார். 

இந்திய மரபின் தொல் அறம் அவர் செயல்பாடுகளின் அடிநாதமாக இருக்கிறது. அவரை அறிபவர்களால் அவரை சிறிதேனும் பின் தொடர முடியும். அவருடன் சிறிது தூரம் தொடர்ந்தாலே எவ்வளவோ விஷயங்களை உணர்ந்து கொள்ள முடியும். அப்போது கொந்தளிப்புகள் இருக்காது ; அமைதியே இருக்கும். எல்லா வினாக்களுக்கும் விடைகள் இருக்கும். விடைகள் மட்டும் அல்ல தீர்வுகளும் இருக்கும்.  


Monday 27 June 2022

நாடி நான் கண்டுகொண்டேன்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இலக்கியப் பணி குறித்து அவரது 60வது வயது நிறைவதையொட்டி தமிழ் எழுத்தாளர்கள் அவருடனான - அவரது படைப்புகளுடனான - தங்கள் உறவு குறித்து எழுதியிருக்கும் கட்டுரைகள்  ‘’சியமந்தகம்’’ என்ற  வலைப்பூவில் தொகுக்கப்பட்டு வருகின்றன. 

அதில் எனது கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. அதன் இணைப்பு : 



Saturday 25 June 2022

நெருக்கடி நிலை

ஜூன் 25, 1975 என்ற தேதியை இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எவரும் மறக்க மாட்டார்கள். 

இந்திரா காந்தி என்ற தனிப்பட்ட மனிதரின் நலனுக்காக இந்திய அரசியல் சட்டம் முடக்கப்பட்ட தினம் இன்று. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மாண்புகளை நெஞ்சில் கொண்டு உருவாக்கப்பட்ட - உலகின் தலைசிறந்த சட்டங்களில் ஒன்றான - இந்திய அரசியல் சட்டம் இன்று முடக்கப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் இந்தியக் குடிமக்களுக்கு அளித்திருக்கும் எல்லா உரிமைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்திய அரசியல் சட்டம் இந்தியாவில் வாழும் அனைவருக்கும் ‘’உயிர் வாழ்வதற்கான உரிமையை’’ வழங்குகிறது. நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் மூலம் இந்தியக் குடிகளின் உயிர் வாழும் உரிமையும் முடக்கப்பட்டது. 

ஜனநாயகத்தின் மீது - சட்டத்தின் ஆட்சியின் மீது - நீதிமன்ற நடைமுறைகளின் மீது நம்பிக்கை கொண்ட எவரும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்ந்து கொண்டே இருப்பார்கள். 

எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் வைக்கப்பட்டிருந்த போது, இந்த நாட்டின் சாமானிய பின்னணியில் இருந்து வந்த பலர் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடினர். அவர்களின் உறுதியான போராட்டமே நெருக்கடி நிலையை அறிவித்த ஆதிக்க சக்திகளை அடுத்து வந்த தேர்தலில் வீழ்த்தியது. அவர்களே இந்திய ஜனநாயகத்தைக் காத்த காவலர்கள். அவர்களின் தியாகம் இந்திய வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படும். 

 

பறவை நோக்கு

நேற்று காலை ஒரு நண்பர் என்னை அலைபேசியில் அழைத்தார். அவர் ‘’டிரோன் கேமரா’’ இயக்கக் கூடியவர். 3 ஏக்கர் வயலில் தேக்கு பயிரிட்டிருக்கும் வயலை டிரோன் கேமரா மூலம் படமெடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அவர் வணிக ரீதியில் பயன்படுத்துபவர் அல்ல. தனது விருப்பத்தால் டிரோன் மூலம் புகைப்படங்கள் எடுக்கிறார். அவரை அழைத்துக் கொண்டு வயலுக்குச் சென்றேன்.  

டிரோனை காற்றில் எழுப்பி வயலை புகைப்படங்கள் எடுத்தோம். பறவைப் பார்வையில் முழு ஊரே அலைபேசியில் தெரிந்தது. புதிதாகப் பறக்கும் இந்த பறவை எந்த பறவை என கரிச்சான்களும் மீன்கொத்திகளும் பக்கத்தில் பறந்து பார்த்து விட்டு சென்றன. 

வானத்திலிருந்து பார்க்கும் போது எல்லாம் கையில் அடங்கக்கூடியவை என்று தோன்றிவிடுகிறது. வானத்தின் உள்ளங்கை தான் பூமியா? நாம் அனைவரும் அந்த உள்ளங்கை ரேகைகளில் சிறு சிறு புள்ளிகள் தானா?

ஊரின் பரப்பு பறவைக் கோணத்தில் மிகப் பரந்து விரிந்து தெரிந்தது. அதைக் கண்ட போது மலைப்பாக இருந்தது. ‘’காவிரி போற்றுதும்’’ முயற்சிப்பது ஒரு ஏக்கரில் 20 தேக்கு மரங்கள் என்பது மட்டும்தான். அது நிலத்தின் பரப்பில் ஒரு சதவீதம் மட்டுமே. மீதம் உள்ள 99 % நிலத்தில் அவர்கள் வழக்கமாக செய்யும் பயிரை செய்து கொள்ளலாம். இன்னும் செல்ல வேண்டிய தொலைவு மிக நீண்டதாக இருக்கிறதே என்ற எண்ணத்துடன் வீட்டுக்கு வந்தேன். 

கணினியைத் திறந்தேன். தஞ்சாவூருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்திலிருந்து ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர் பத்து நாட்களுக்கு முன்னால் 3 ஏக்கரில் தேக்கு பயிரிடப்பட்டிருக்கும் வயலை பார்வையிட்டு என்ன முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை குறிப்பெடுத்துக் கொண்டு சென்றிருந்தார். இன்று அவருடைய வயலில் தேக்கு நட மேட்டுப்பாத்தி எடுக்க ஜே.சி.பி பணி புரியத் தொடங்கியுள்ளது என்று கூறி ஜே.சி.பி பணி புரியும் புகைப்படங்களை மின்னஞ்சலில் இணைத்திருந்தார். அந்த புகைப்படங்களில் ஒன்றை இத்துடன் இணைத்துள்ளேன். 



Friday 24 June 2022

இசை

சிறு வயதிலிருந்தே எனக்கு இசை கேட்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால் அந்த ஆவல் இதுநாள் வரை நிறைவேறவேயில்லை. எனக்கு பொருட்களை வாங்கும் பழக்கம் குறைவு. அதனால் எலெக்ட்ரானிக் பொருட்களிலிருந்து சற்று தள்ளியே இருக்கும் நிலை ஏற்பட்டது. எனக்கு நெருக்கமான ஒரே எலெக்ட்ரானிக் பொருள் என்றால் அது மடிக்கணினி மட்டும் தான். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகக் கூட உள்ளது. இந்த பதினைந்து ஆண்டுகளில் முதலில் வாங்கிய மடிக்கணினி சென்ற ஆண்டு பழுதானது. அதற்கு மாற்றாக புதிய ஒன்றை சென்ற ஆண்டு வாங்கினேன். இப்போது அதுதான் பயன்பாட்டில் உள்ளது.  

ரேடியோ, டேப் ரெக்கார்டர், வாக்மேன் என எதையுமே நான் வாங்கி பயன்படுத்தியதில்லை. ரேடியோ வாங்க பல ஆண்டுகள் நினைத்தேன். ஆனால் வாங்கவில்லை. 

இருப்பினும் இசை கேட்டு நெகிழும் உள்ளம் என்னுடையது. இசையின் இனிமையை அவ்வப்போது நான் உணர்ந்திருக்கிறேன். அவ்வாறு உணரும் போதெல்லாம் தினமும் இசை கேட்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று எண்ணுவேன். 

என்னுடைய தொழில் என்பது எப்போதும் திறந்த வெளியில் குறைந்தபட்சம் பதினைந்து இருபது பேருடன் இருக்கும் தன்மை கொண்டது. ஜல்லி அள்ளப்படும் சத்தம், மிக்சர் மிஷின் சுழலும் ஓசை, ஆட்களின் கூச்சல் ஆகியவை சூழ்ந்திருப்பது. பழக்கத்தின் விளைவாக மனம் அங்கே நிகழ வேண்டியவற்றை மட்டுமே முன்னிலைப்படுத்தி அவற்றை நிகழ்த்திக் கொள்ளும். காலையிலிருந்து இரவு எட்டு மணி வரை ஏதாவது வேலை இருக்கும். காலை விழிக்கும் போது இன்று என்ன வேலை என்ற நினைவுடன் தான் பொழுதின் முதல் கணம் மனதில் விழிக்கும். இரவு வீட்டுக்கு வந்தால் உணவு அருந்தி விட்டு படுத்தால் அடுத்த கணம் உறக்கம் சூழ்ந்து விடும். 

நூல் வாசிக்கும் பழக்கம் சிறு வயது முதல் இருப்பதால் ஒரு நூலை வாசிக்கத் தொடங்கினால் அதற்கான நேரத்தை உண்டாக்கிக் கொண்டு வாசித்து விடுவேன். ஆனால் இசைக்காக அவ்வாறான நேரத்தை என்னால் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஹிந்துஸ்தானி சங்கீதத்தால் நான் பெரிதும் ஈர்க்கப்படுவேன். வெகுநேரம் இசை கேட்க தேவையான சூழலை உண்டாக்க நான் இப்போதும் முயற்சி செய்கிறேன். கொடுப்பினை இருக்கிறதா என பார்க்க வேண்டும். 

பத்து ஆண்டுகளுக்கு முன்னால், திருவாரூர் அருகே ஒரு கல்லூரி. அந்த வளாகத்தில் ஒரு பெரிய பள்ளியும் உண்டு. பள்ளி, கல்லூரி, விளையாட்டு மைதானம், ஆடிட்டோரியம் என அனைத்தும் ஒரு பெரிய வளாகத்தின் வெவ்வேறு பகுதிகளாய் விளங்கும் தன்மை கொண்டது. அங்கே நான் ஒரு வேலையாய் சென்றிருந்தேன். அப்போது அங்கே ஒரு கர்நாடக இசைக் கச்சேரி நிகழ இருப்பதை அறிந்து ஆடிட்டோரியம் சென்றேன். 

இரு இளம் பெண்கள் பாடினார்கள். இனிமையான குரல். தங்கள் குரலிசை மூலம் மேகங்களில் சஞ்சரிக்கும் உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தினார்கள். செவி மனம் இவை கடந்து உயிர் கேட்கும் இசை என இருந்தது அவர்கள் சங்கீதம். இரண்டரை மணி நேரம் அவர்கள் கச்சேரி. கச்சேரி முடிந்ததும் அவர்கள் மேடைக்கு அருகில் இருக்கும் கதவு வழியாக வெளியேறுவார்கள் என்பதை யூகித்து நான் அவர்களுடைய கார் என்னுடைய பார்வையில் படும்படியும் இருப்பினும் காரிலிருந்து சற்று தள்ளியும் நின்று கொண்டேன். அவர்களிடம் எதுவும் பேச வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் புறப்பட்டுச் செல்லும் போது மானசீகமாக வழியனுப்ப அங்கே இருக்க வேண்டும் என்றே நினைத்தேன்.  இருவரும் காருக்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள். ஆனால் அவர்களுடைய அன்னை இன்னும் காருக்கு வரவில்லை. எனவே காரில் ஏறாமல் மைதானத்தைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தனர். மைதானத்தில் அந்த நேரத்தில் மென்காற்று வீசியவாறு இருந்தது. இருவரும் சற்று தள்ளி நான் நிற்பதைப் பார்த்து விட்டார்கள். நான் மெல்ல முன்னே வந்து இருவருக்கும் வணக்கம் சொன்னேன். இருவரும் வணக்கம் தெரிவித்தனர். ‘’அம்மா ! ரொம்ப நல்லா பாடினீங்க அம்மா. உங்க பாட்டு மனசை உருக்கிடுச்சி. நான் இசை கேட்டு பழக்கம் இல்லாதவன். ஆனா இரண்டரை மணி நேரம் போனதே தெரியல. அவ்வளவு நேரத்த உங்க இசையால சில நிமிஷமா ஆக்கிட்டீங்க. கடவுளோட பிரியம் என்னைக்கும் உங்க மேல இருக்கும்’’ என்று கூறினேன். இருவரும் ரொம்ப சந்தோஷப்பட்டனர். என்னைப் பற்றி விசாரித்தனர். என்ன தொழில் செய்கிறேன் என்று கேட்டனர். பின்னர் அந்த இரண்டரை மணி நேரத்தில்  அவர்கள் பாடியதில் எனக்கு நினைவிருந்த சில பாடல்களைச் சொன்னேன். அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சி. அதற்குள் அவர்களுடைய அம்மா வந்து விட்டார்கள். அவர்கள் அம்மாவிடம் இருவரும் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. பின்னர் விடைபெற்றுச் சென்றனர். எனக்கும் சில கணங்கள் அவர்களுடன் உரையாட நேர்ந்தது நிறைவையும் மகிழ்ச்சியையும் தந்தது. 

அன்று நான் கேட்டது ஒரு காந்தர்வ சங்கீதம். அவர்கள் இருவரையும் குறித்து கர்நாடக இசை அறிந்த என் நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை. அப்போது தான் பாடத் தொடங்கியிருக்க வேண்டும். அதன் பின்னர், அவர்களுடைய பெயரை இசை உலகில் எங்குமே கேட்கவில்லை. அவர்களுடைய கச்சேரிகளும் இணையத்தில் இல்லை. இருவராகப் பாடும் சகோதரிகளான அவர்கள் பின்னாட்களில் வேறு வேறு ஊர்களில் வசிக்க நேரிட்டதா என்பது தெரியவில்லை. யாராவது ஒருவராவது தனியாக கச்சேரி செய்தனரா என்பதையும் அறிய முடியவில்லை. 
 

எனினும் அன்று கேட்ட இசை மட்டும் ஒரு உயிர்ப்புள்ள விதையாக மனதில் இருக்கிறது.  

Thursday 23 June 2022

பறவையின் துயர் தீர்த்தவன்

இந்த பதிவின் தலைப்பைப் பார்த்ததும் அனைவரும் இது சித்தார்த்தனைப் பற்றியது என எண்ணக் கூடும் ! இது வேறொருவரைப் பற்றியது. இன்னும் சரியாகச் சொன்னால் வேறு சிலரைப் பற்றியதும் கூட.  

இன்று ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் எனது நண்பரின் நண்பர். இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அவரை இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கிறேன். நண்பர் தேனீர் அருந்துவோம் என்று சொன்னார். நானும் நண்பரும் எப்போதாவது ‘’லெமன் மிண்ட்’’ அருந்துவோம். அதாவது புதினாச் சாறில் எலுமிச்சைப் பழம் பிழிந்து அதில் கொஞ்சம் ஐஸ் கலந்து தயார் செய்யப் படுவது ‘’லெமன் மிண்ட்’’. தேனீருக்குப் பதிலாக ‘’லெமன் மிண்ட்’’ஐ நான் பரிந்துரைத்தேன். நாங்கள் இருந்த இடம் ஒரு கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம். அதற்கு அடுத்த தெருவில் நாங்கள் செல்ல வேண்டிய கடை இருந்தது. மூவரும் பேசிக் கொண்டு நடந்தோம். 

புதிதாக அறிமுகமான நண்பரிடம் , ‘’உங்கள் பெயர் என்ன?’’ என்று கேட்டேன். 

அவர் ‘’சிபிச்சக்கரவர்த்தி’’ என்றார். 

அந்த பெயரைக் கேட்டதும் ’’சிலப்பதிகாரத்துல உங்க பேருக்கு ஒரு ரெஃபரண்ஸ் இருக்கு. உங்களுக்குத் தெரியுமா?’’ என்றேன். 

நண்பர் ‘’சிலப்பதிகாரத்திலயா?’’ என்றார். 

‘’ஆமாம். கண்ணகி கையில சிலம்போட பாண்டியனோட அவைக்குப் போய் நீதி கேக்கறா. அப்ப தன்னை அறிமுகப்படுத்திக்கிறா. அதுக்கு முன்னால பாண்டியனை ‘’தேரா மன்னா’’ன்னு சொல்றா. ’’தேரா மன்னா’’ன்னா ஒரு விஷயத்தை முழுமையா புரிஞ்சுகிற தன்மை இல்லாத மன்னனேன்னு அர்த்தம்.’’

’’தேரா மன்னா’’ன்னு தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை நான் மனப்பாடமாகச் சொன்னேன். எப்போதோ படித்தது. மனதில் தங்கி விட்டது. 

‘தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-

இந்த பாட்டுல இளங்கோ , ‘’புள் உறு புன்கண் தீர்த்தோன்’’ அன்றியும் சொல்றது சிபிச்சக்கரவர்த்தியைப் பத்தி. கழுகால துரத்தப்படுற புறா சிபிகிட்ட வந்து தஞ்சமடையுது. பின்னால துரத்திட்டு வர்ர கழுகு அந்த புறா என்னோட இரை. அத என்கிட்ட ஒப்படைக்கணும்னு சொல்லுது. மன்னன் தஞ்சம் அடைஞ்ச உயிரை காப்பாத்தறதுதான் என்னோட தர்மம்னு சொல்றான். அப்ப கழுகு நான் உணவு கொண்டு வருவன்னு என்னோட குஞ்சுகள் காத்துக்கிட்டு இருக்கு. நீ எடுத்த முடிவால என் குஞ்சுகள் சாக நேர்ந்தா என்ன பண்றது. அவையும் உன்னோட பிரஜைகள் தானே. அதுங்களையும் உன்னோட தர்மம் காப்பாத்த வேண்டாமான்னு கழுகு கேக்குது. சிபி ஒரு தராசு கொண்டு வர்ர சொல்லி புறாவை ஒரு தட்டுல வச்சு இன்னொரு தட்டுல தன் உடம்போட தசையை அறிஞ்சு வைக்கிறாரு. ஆனா புறாவோட எடையை சமனப்படுத்தவே முடியலை. தன் உடம்போட எல்லா தசையும் அறிஞ்சு கொடுத்தும் புறா எடைக்கு சமமாகலையேன்னு கடைசி தசையையும் அரியப் போகும் போகும் போது ‘’மன்னா நீ பெரிய நீதிமான். பிரஜைகளுக்கு சிறந்த அரசன்’’னு அசரீரி கேக்குது. சிபிக்கு பழைய உடம்பு திரும்ப கிடைக்குது. கழுகுக் குஞ்சுகளோட பசியை வானத்துத் தெய்வம் போக்குது. அதைப் பார்த்து இந்திர லோகத்துல இருக்கறவங்க சிபியை வாழ்த்தறாங்க. அப்படிப் பட்ட சிபிச் சக்கரவர்த்தியின் குலத்தில் உதித்த சோழ மன்னர்களால் ஆளப்படும் நாட்டிலிருந்து நான் வந்திருக்கன்னு கண்ணகி சொல்றா’’ என்றேன். 

‘’சார் சார் ! நான் இந்த கதையைக் கேட்டிருக்கன். ஆனா சிபிச்சக்கரவர்த்தி சோழ வம்சத்த சேர்ந்தவர்னு நீங்க சொல்லித்தான் தெரிஞ்சுகிட்டன்’’ 

‘’நான் சொல்லல. இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்துல எழுதி வச்சிருக்கார்.’’

‘’புதல்வனை ஆழியில் மடித்தோன் - அப்படின்னா மனுநீதி சோழன் தானே சார்’’

‘’அந்த மன்னனுக்கு மனுநீதி சோழன்னு பேருன்னா அப்ப சோழர்கள் தங்களை மனுவின் வழி வந்தவர்கள்னு நினைக்கறாங்கன்னு அர்த்தம்’’ 

‘’நீங்க சொல்ற விஷயங்கள் ஆச்சர்யமா இருக்கு சார்’’ 

‘’இந்தியாவில சூர்ய குலம் , சந்திர குலம் தான் ரொம்ப தொன்மையானது. ஸ்ரீராமன் சூர்ய குலத் தோன்றல். கிருஷ்ணன் சந்திர குலம். எல்லா ராஜாக்களுமே தங்களை சூர்ய குலமாகவோ சந்திர குலமாகவோ தான் உணர்வாங்க’’

‘’எனக்கு 34 வயசாகுது. இந்த சிலப்பதிகார விஷயத்தை நீங்க சொல்லித்தான் நான் முதல்ல கேள்விப்படறன். ‘’

‘’திருவள்ளுவர் அறிவு அற்றம் காக்கும் கருவின்னு சொல்றார். அதை எப்பவுமே ரொம்ப ஷார்ப்பா வச்சிருக்கணும் சிபி’’ என்றேன். 

Wednesday 22 June 2022

போர்த்தொழில் பழகு

எல்லா சிறுவர்களையும் போல நானும் சிறுவனாயிருந்த போது ஒரு ராணுவ வீரனாக வேண்டும் என்று விரும்பினேன். 

1990ஐ ஒட்டிய ஆண்டு. வி.பி. சிங் நாட்டின் பிரதமராயிருந்த நேரம். காஷ்மீர் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இஸ்ரேல் மாணவர்களை கடத்தி வைத்திருந்த இடத்தில் மாணவர்களை ஒரு அறையில் கை கால்களை கட்டாமல் அறையில் பூட்டி வைத்திருக்கின்றனர். அங்கே காவலுக்கு இருந்த பயங்கரவாதி தனது துப்பாக்கியை அந்த அறையில் வைத்து விட்டு எங்கோ வெளியே சென்ற நேரத்தில் இஸ்ரேல் மாணவர்கள் அந்த துப்பாக்கியை எடுத்து இயக்கி பயங்கரவாதிகளைத் தாக்கி விட்டு அந்த இடத்திலிருந்து தப்பினர் என்ற செய்தி நாடெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. இஸ்ரேலில் எல்லா மாணவர்களும் கட்டாயம் அடிப்படை இராணுவப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் ; மேலும் கட்டாயமாக நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியை ஓராண்டுக்கு மேற்கொள்ள வேண்டும். இஸ்ரேல் மாணவர்கள் பெற்ற பயிற்சி பயங்கரவாதிகளை வீழ்த்துவதில் அவர்களுக்கு உதவியிருக்கிறது. இந்த செய்தியை செய்தித்தாள்களில் படித்த போது நம் நாட்டிலும் அவ்வாறான ஒரு ஏற்பாடு இருந்தால் நலமாக இருக்கும் என எண்ணியதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.  

பூனாவில் தேசிய பாதுகாப்பு அகாடெமி என்ற கல்வி நிறுவனம் உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் படித்த மாணவர்கள் அதில் சேர விண்ணப்பிக்கலாம். ‘’எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்’’ என்ற செய்தித்தாளில் தான் அதற்கான அறிவிப்பு வெளியாகும். நான் தவறாமல் அதனை வாராவாரம் வாங்கி அறிவிப்பு வெளியாகி உள்ளதா என்று காண்பேன். வந்த போது விண்ணப்பித்தேன். ஆங்கிலம், கணிதம், பொது அறிவு, அறிவியல் ஆகிய நான்கு தாள்களில் தேர்வு எழுத வேண்டும். சென்னையில் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை மதுரை என இரு இடங்கள் தேர்வு மையங்கள். அந்த தேர்வை 1000 பேர் சென்னையில் எழுதியிருப்போம். அதில் நானும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்னொருவரும் மட்டுமே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். மற்ற அனைவருமே தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இராணுவத்தில் பணி புரிபவர்களின் வாரிசுகள். இரண்டு நாட்கள் அந்த தேர்வு நடந்ததாக ஞாபகம். காலை மதியம் என இரு பிரிவுகளாக நடப்பதால் தேர்வு எழுதும் அனைவருமே ஒரே இடத்தில் காத்திருப்போம். அப்போது தான் அதனை அறிந்தேன். 

தமிழ்நாட்டுப் பள்ளிகளோ கல்லூரிகளோ தேசிய பாதுகாப்பு அகாடெமி, தேசிய கடற்படை அகாடெமி போன்ற கல்வி மையங்களுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதமாக எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. அவை குறித்த தகவல்கள் கூட தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தெரிந்திருப்பதில்லை. 

தேசிய பாதுகாப்பு அகாடெமி பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு நான்கு ஆண்டு பயிற்சி அளித்து இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக உருவாக்கும் பணியை மேற்கொள்கிறது. சென்னையிலும் ஊட்டியிலும் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடெமிகள் இளநிலை பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தேர்வு வைத்து தேர்வு செய்து பயிற்சி கொடுத்து இராணுவ அதிகாரிகளாக உருவாக்குகிறது. உலகின் தலை சிறந்த கல்வி நிறுவனங்கள் இவை. 

இஸ்ரேலைப் போல நம் நாட்டிலும் அடிப்படை இராணுவப் பயிற்சி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். 

Tuesday 21 June 2022

தேக்கு - அதிகமாக கேட்கப்பட்ட வினாக்கள்

’’காவிரி போற்றுதும்’’ முன்னெடுக்கும் பணிகளை கவனிப்பவர்கள் அதன் குவிமையம் எதை நோக்கி என அறிய முற்படுவதுண்டு. ‘’காவிரி போற்றுதும்’’ மரங்கள் அதிக அளவில் கிராமங்களில் வளர்க்கப் பட வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருக்கிறது. கிராம மக்களுக்கு மழைக்காலத்தில் உணவளித்திருக்கிறது. தடுப்பூசி விழிப்புணர்வுக்காக செயலாற்றியிருக்கிறது. குடியரசு தினத்தன்று ஒரு கிராமத்தில் எல்லா வீடுகளும் ஒரு மரக்கன்று நட்டு அன்று மாலை ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஏழு தீபங்கள் ஏற்றுமாறு அழைப்பு விடுத்து அதனை முழுமையாக ஒருங்கிணைத்தது. மாவட்டம் முழுக்க எல்லா முடி திருத்தும் நிலையங்களுக்கும் நூல்களை அன்பளிப்பாக அளித்து ‘’சலூன் நூலகங்களை’’ உருவாக்கியது. இதைப் போன்ற மேலும் சில சிறு பணிகளை நடத்தியது.  

ஒரே வரியில் கூற வேண்டும் எனில் அதனை ‘’மக்களை இணைத்தல்’’ என்று கூறி விடலாம். ‘’காவிரி போற்றுதும்’’ இந்திய மக்களை உலகின் மாபெரும் பண்பாடொன்றின் சொந்தக்காரர்களாகப் பார்க்கிறது. அவர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கலாம் ; பள்ளிக்கூடமே போகாதவர்களாக இருக்கலாம் ; பெரும் நிலச்சுவான்தாராக இருக்கலாம் ; விவசாயக் கூலிகளாக இருக்கலாம். யாராக இருந்தாலும் அவர்கள் உலகின் ஆகச் சிறந்த பண்பாட்டின் உரிமையாளர்கள். 

அவர்கள் எப்போதெல்லாம் இணைக்கப்பட்டிருக்கிறார்களோ அப்போதெல்லாம் மானுடம் கண்டதில் ஆகச் சிறந்த வாழ்க்கைகள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. அடித்தட்டு மக்களின் தலைவனாக எழுந்தவர் சந்திர குப்த மௌரியர். விவசாயக் குடிகளின் மேம்பாட்டையும் ஆலயப் பணிகளையும் தம் அரசின் சிரம் மேல் கொண்டிருந்த அரசு பிற்காலச் சோழர்களுடையது. ஆநிரை புரக்கும் மக்கள் தம் பண்பாடு காக்க எழுப்பிய அரசே விஜயநகரப் பேரரசு. மலைக்குடிகளின் துணையோடு ஒரு பேரரசு மராத்தியர்களால் உருவாக்கப்பட்டது. 

’’மக்களை இணைத்தல்’’ என்பதையே அரசியல் செயல்பாடாகக் கொண்டிருந்தது இந்தியா. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள நேர்ந்த போது ‘’பிரித்து ஆள்தல்’’ என்னும் முறைக்குச் சென்று நம் வளத்தைச் சுரண்டினர். அவர்கள் நாட்டை விட்டு நீங்கிய பின்னும் அவர்கள் விட்டுச் சென்ற எச்சங்களை அவர்களுக்குப் பின்னால் நாட்டை ஆண்டவர்கள் கைக்கொண்டனர் என்பது நம் துயரம். 

’’சிட்டுக் குருவிகளுக்கு வல்லூறுகளை எதிர்க்கும் ஆற்றலைத் தருவேன்’’ என்றார் குரு கோவிந்த் சிங். எளிய மக்கள் எழுச்சி பெறுவதை ஆன்மீகமான ஒன்றாகக் காண்கிறது இந்திய மரபு. இந்திய ஆன்மீகம் பொருளியல் எழுச்சியை ஆன்ம எழுச்சியின் முதற்படியாகக் காண்கிறது. அவ்வகையில் ‘’காவிரி போற்றுதும்’’ விவசாயிகளின் பொருளியல் விடுதலையை சமூக எழுச்சியின் அடிப்படையாகக் காண்கிறது. அதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்கிறது. 

உலகின் தேவைக்கு ஆண்டொன்றுக்கு 2.5 மில்லியன் கன மீட்டர் தேக்கு தேவைப்படுகிறது. நம் நாடு தன் தேவைக்கு தேக்கு மரத்தை மியன்மார்ரிலிருந்தும் ஆஃப்ரிக்காவிலிருந்தும் இறக்குமதி செய்கிறது. காவிரி டெல்டா பிராந்தியத்தில் தேக்கு மிக நன்றாக வளரக் கூடிய மரம் என்பதால் ‘’காவிரி போற்றுதும்’’ விவசாயிகளை தங்கள் நெல்வயலில் சில தேக்கு மரக்கன்றுகளையாவது வளர்க்குமாறு கேட்டுக் கொள்கிறது. 

தேக்கு - அதிகமாக கேட்கப்பட்ட வினாக்கள்

1. ‘’காவிரி போற்றுதும்’’ ஏன் தேக்கு மரத்துக்கு முக்கியத்துவம் தருகிறது?

‘’Seeing is believing'' என்று கூறுவார்கள். கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கு தேக்கு மரத்தின் தேவை எவ்வாறு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது என்பது தெரியும். சற்று முயன்றால் நம் கிராமங்களில் தேக்கின் உற்பத்தியை அதிகப்படுத்த முடியும். அதன் பொருளியல் பலன் முழுமையாக விவசாயிகளுக்குக் கிடைக்கும். 

2. ‘’காவிரி போற்றுதும்’’ அறிந்திருப்பதை விவசாயிகள் அறிய மாட்டார்களா? 

இது ஆழ்ந்து யோசிக்க வேண்டிய கேள்வி. விவசாயத்தின் வரலாறுடன் சமூக வரலாறுடன் இணைந்து யோசிக்க வேண்டிய விஷயம் இது. இந்திய நிலத்தில் வேளாண் குடிகளே பேரரசுகள் உருவாக காரணமாக இருந்துள்ளனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை தங்கள் நிலத்தில் விளைந்த வேளாண் விளைபொருட்களையே அரசுக்கு வரியாக வேளாண் குடிகள் செலுத்தினர். கிராமங்கள் தங்கள் தேவைகளை தாமே நிறைவேற்றிக் கொள்ளும் சுயசார்பு தனமையுடன் விளங்கின. ஆங்கிலேயர்கள் நிலவரியை பணமாக செலுத்த வேண்டும் என்ற முறையை உருவாக்கினர். விவசாயிகளின் வீழ்ச்சி அங்கிருந்து துவங்குகிறது. 

பொருத்தமில்லாத ஈவிரக்கமற்ற பிரிட்டிஷ் முறைகள் இந்திய விவசாயிகளின் மனோதிடத்தை வீழ்த்தின. அவர்கள் வறிய நிலைக்குச் சென்றனர். சுதந்திரத்துக்குப் பின் வந்த அரசுகளும் அரசின் இயங்குமுறை குறித்து ஐரோப்பிய மனநிலையே கொண்டிருந்தன. 

நாட்டின் தேவை, உலகச் சூழல் ஆகியவற்றை கணக்கில் கொண்டு விவசாயத்தை லாபகரமான தொழிலாகச் செய்யும் நிலை விவசாயிகளிடம் வந்து சேரவே இல்லை. செயற்கை உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் எப்போதும் நம்பியிருக்கும் நிலையிலேயே விவசாயிகள் இருக்க நேர்ந்தது. 

3. இது நம்புவதற்கு கடினமாக இருக்கிறதே?

நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இதுதான் உண்மை. இதில் வேறு சில கூறுகளும் உள்ளன. நாம் பொதுவாக சொன்னாலும் விவசாய நிலம் என்பது நாடெங்கும் ஒரே விதமானது இல்லை. பருவமழையை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயமும் உண்டு. ஆற்றுப்பாசனத்தை நம்பும் விவசாயம் உண்டு. ஏரிப்பாசனம் உண்டு. கடலை ஒட்டியிருக்கும் பகுதிகள் உண்டு. நாம் கூறுவது அந்தத்த பிராந்தியங்களைப் பொறுத்து சிற்சில மாறுதல்களுடன் உண்மை. 

4. ''காவிரி போற்றுதும்’’ விவசாயிகளை தேக்கு வளர்க்க சொல்வதால் மாற்றம் உண்டாகுமா? 

நிச்சயம் உண்டாகும். பலவிதங்களில் உண்டாகும். முதன்மையாக நாம் அவர்கள் இத்தனை ஆண்டுகள் எதனை தவற விட்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். அவ்வாறு கொண்டு வரப்படும் போது அது குறித்து யோசித்து நாம் சொல்வது உண்மை என அவர்கள் உணர்கிறார்கள். இது முதல் படி. அடுத்து, விவசாயிகளின் பொருளியல் விடுதலையை ‘’காவிரி போற்றுதும்’’ ஏன் முக்கியமாக நினைக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். அதன் பின்னர் விவசாய முறைகளில் வழக்கமாகச் செய்யப்படும் பூச்சிக்கொல்லி , ரசாயன உரம் போன்ற செலவுகளை எவ்விதம் குறைப்பது என்பது குறித்து அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது. 

விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான முழு விளைநிலத்திலும் தேக்கு பயிரிட வேண்டும் என்பது இல்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் 5 சதவீத பரப்பினை ஒதுக்கி அதில் தேக்கு நடலாம். மீதம் உள்ள 95 சதவீத நிலத்தில் தாங்கள் வழக்கமாக செய்யும் பயிரை செய்து கொள்ளலாம். 

5. எல்லா நிலத்திலும் தேக்கு வளருமா?

காவிரி வடிநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தேக்கு வளரும். மண் தன்மை சற்று மாறியிருக்கும் பகுதிகளில் குறைந்தபட்சமாக சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டால் போதுமானது. 

6. விவசாயிகள் இதனை வரவேற்கிறார்களா?

முதலில் விஷயத்தை எடுத்துச் சொல்லும் போது கவனமாகக் கேட்கிறார்கள். நடப்பட்டுள்ள இடங்களை சுட்டிக் காட்டி கூறும் போது நம்பிக்கையுடன் முன்வருகிறார்கள். 

7. விவசாயிகள் தேக்கு நடுவதில் பொதுவாக செய்யும் தவறுகள் என்ன?

ஒரு தேக்கு கன்று நட இரண்டு அடி நீளம் இரண்டு அடி அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழி எடுக்கப்பட்டு அதில் மக்கிய சாண எரு இடப்பட வேண்டும். இது கன்றின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு மிக முக்கியம். முதல் ஒரு மாதம் தினமும் ஒரு முறையும் அடுத்த ஒரு மாதம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் விட வேண்டும். அதன் பின்னர் குறைந்தபட்சம் வாரம் இரு நாட்கள் தண்ணீர் விட வேண்டும். 

இவ்வளவு கவனம் செலுத்த வேண்டிய இடத்தில் மரம் தானாக வளரும் என விவசாயிகள் இருந்து விடுகிறார்கள். 

‘’காவிரி போற்றுதும்’’ இந்த விஷயத்தில் விவசாயிகளிடம் விழிப்புணர்வை உண்டாக்குகிறது. 

Monday 20 June 2022

யானை பிழைத்தவேல்

கம்ப ராமாயணம் குறித்து எழுதிய ‘’யானை பிழைத்தவேல்’’ தொடரின் தொகுப்பு கீழே :


யானை பிழைத்தவேல் - பகுதி 1   


எண்கள்

Physics for entertainment , Mathematics can be fun போன்ற நூல்கள் சோவியத் யூனியனின் ராதுகா பதிப்பகம் மூலம் வெளியான நூல்கள். அவற்றை நான் ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். எண்கள் மாயத்தன்மை கொண்டவை. எண்களின் மாயமே லௌகிகம் என நாம் உணரும் வாழ்க்கை. எண்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அமையும் தன்மை கொண்டிருந்தாலும் எல்லையின்மையும் எண்களின் இயல்பே. அனந்தம் என்பது எண்ண சாத்தியமில்லாத ஒரு எண்ணே.  இந்திய ம்ரபு எண்களை அவதானிப்பதை ஒரு யோக வழிமுறையாகக் கொண்டிருக்கிறது. தமிழ் மூதாட்டி ‘’எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’’ என்கிறாள். 

Sunday 19 June 2022

கரம்

கரங்களின் நுனிகளில் திருமகள் வசிக்கிறாள்

உள்ளங்கையில் கலைமகள் வீற்றிருக்கிறாள்

கைகளின் அடிப்பாகத்தில் மலைமகள் வாசம் செய்கிறாள். 

விடிகாலைப் பொழுதில் கரங்களை வணங்குங்கள். 

- ஒரு சுலோகம்


ஒரு கை விரல் மூலம் எத்தனை எண்ணிக்கை எளிதாக  எண்ண முடியும்? 


பொதுவாக ஐந்து என்று நினைப்போம். ஒவ்வொரு விரலிலும் மூன்று கணுக்கள் உள்ளதால் பதினைந்து எண்ண முடியும் என்று உள்ளங்கையைப் பார்த்து அறிவோம். 

மேலும் அதிகமாய் எளிதில் எண்ண ஒரு வழி சொல்கிறேன். 

உங்கள் வலது உள்ளங்கையை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் மோதிர விரலின் நடுக்கணுவிலிருந்து எண்ணத் தொடங்குங்கள். மோதிர விரலின் கீழ்க்கணு சுண்டு விரலின் அடிக்கணு நடுக்கணு மேல்கணு என எண்ணிக் கொண்டே சென்று மோதிர விரலின் மேல்கணு நடுவிரலின் மேல்கணு ஆள்காட்டி விரலின் மேல் மேல்கணு நடுக்கணு கீழ்க்கணு என ஒரு சுற்றை முடியுங்கள். இந்த சுற்றின் மூலம் 10 எண்ணிக்கையை எண்ண முடியும். 

இரண்டாவது சுற்றை வலது கை மோதிர விரலின் கீழ்க்கணுவில் தொடங்கி முன்னர் சென்ற விதத்திலேயே எண்ணிக் கொண்டு செல்லுங்கள். ஒரு கணு விட்டு துவங்கியிருப்பதால் அந்த சுற்றில் 9 எண்ணிக்கையை எண்ண முடியும். 

பின்னர் சுண்டு விரலின் கீழ்க்கணுவிலிருந்து துவக்க வேண்டும் . இதன் மூலம் 8 எண்ணிக்கையை எண்ண முடியும். 

இவ்வாறே ஆள்காட்டி விரலின் கீழ்க்கணு வரை சென்றால் 55 எண்ணிக்கை வரை எளிதில் எண்ண முடியும். 

10+9+8+7+6+5+4+3+2+1 = 55


Friday 17 June 2022

நல்வரவு

 இன்று வாஷிங்டனிலிருந்து நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். என் மீது மிகுந்த அன்பும் பிரியமும் கொண்டவர். அவரைப் போன்ற இனிய மனிதர்களின் நட்பே என் வாழ்வில் நான் பெற்ற பெரும் பேறு. 

ஸ்மார்ட்ஃபோன் வைத்திருந்தால் இவர்களைப் போன்றவர்களுடன் தொடர்பில் இருக்க பெருவசதியாக இருக்கும். ஆனால் என் மனம் அலைபேசியை தொலைபேசியின் தொடர்ச்சியாகவும் இணையத்தை மடிக்கணினி அல்லது கணினியுடன் இணைத்தே புரிந்து வைத்திருக்கிறது. அது எனக்கு நிறைய சௌகர்யத்தையும் சுதந்திரத்தையும் தருவதாக உணர்கிறேன். காலை மாலை கணினி முன் அமர்வேன் என்பதால் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரத்யேகமாக நினைப்பதில்லை. இருப்பினும் நண்பர் ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் இன்னும் சகஜமான இணைப்பு சாத்தியத்தை அவருக்கு அளிக்க முடியாமல் உள்ளதே என வருந்துவேன். 

இன்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். 

‘’தம்பி ! கூடிய சீக்கிரம் இந்தியா வந்திருங்க. ஊர் பக்கத்துல இருபது ஏக்கர் நிலத்தை வாங்கிப் போடுங்க. நடுவுல கிணறு மாட்டுக் கொட்டகையோட நேட்டிவிடி டச்சோட வீடு கட்டி பத்து பசு மாடு ரெண்டு நாட்டு ரக நாய்னு வளர்த்துக்கிட்டு ஜம்னு ராஜவாழ்க்கை வாழலாம். நாம தினமும் பத்து பேருக்கு வேலை கொடுக்கலாம் தம்பி. உங்களுக்கு இருபது ஏக்கர்ல அமெரிக்காவுல வர்ர வருமானத்தை விட அதிகமான வருமானம் வர வழி நான் சொல்றன். மண் மரம் பட்சி பிராணின்னு வாழற வாழ்க்கை தான் தம்பி நிறைவா இருக்கும்.’’

நண்பரின் அகத்தில் எப்போதும் ஒரு விவசாயி இருக்கிறான் என்பதை நான் அறிவேன். நண்பருக்கு மிகவும் மகிழ்ச்சி. 

‘’உங்களுக்கு எல்லாம் நான் அமைச்சுக் கொடுக்கறன். முடிவு மட்டும் தான் நீங்க எடுக்கணும் தம்பி ‘’

‘’கூடிய சீக்கிரம் நீங்க சொல்ற படி செய்றன் அண்ணன்’’

நண்பர் விரைவில் நாடு திரும்புவார். 

Thursday 16 June 2022

எழுக

நண்பரின் ஊரில் நாளை கணநாதர் ஆலய குடமுழுக்கு விழா. நாளைய தினமே தேக்கு மரக்கன்றுகளை தங்கள் வயலில் நட வேண்டும் என நண்பரும் நண்பரின் குடும்பத்தினரும் விரும்பினர். அந்த ஆலயத்தின் அடுத்த குடமுழுக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் நிகழும். அப்போது மரங்கள் நல்ல நிலைக்கு வந்திருக்கும் என்பதோடு ஆலய குடமுழுக்குடன் அவர்கள் முன்னெடுக்கும் செயல் ஏதோ ஒரு விதத்தில் பிணைக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் விரும்பினார்கள்.  இன்று தஞ்சாவூர் சென்று நர்சரியில் தேக்கு மரக் கன்றுகளை வாங்கி வர விரும்பினோம். ஊருக்குப் பக்கத்தில் ஆடுதுறையில் மரக்கன்றுகள் கிடைக்கும் என்று கூறினேன். தஞ்சாவூர் சென்று பார்ப்பது - அங்கே மரக்கன்றுகள் திருப்தியான நிலையில் இருந்தால் அவற்றை வாங்கிக் கொள்வது இல்லையேல் திரும்பி வரும் வழியில் ஆடுதுறையில் வாங்குவது என்று முடிவு செய்தோம். மொத்தம் ஆயிரம் கன்றுகள் தேவை. நாங்கள் நண்பரின் மாருதி ஆம்னி வாகனத்தில் சென்றோம். நண்பரின் சகோதரர் வாகனத்தை இயக்கினார்.

காலை 7 மணிக்குப் புறப்பட்டோம். தேக்கு மரக்கன்றுகள் குறித்தும் அவற்றின் பராமரிப்பு குறித்தும் பேசிக் கொண்டு சென்றோம். அடுத்த ஆறு மாதங்கள் முக்கியமான பருவம். கண்ணை இமை காப்பது போல காக்க வேண்டும் என்று சொன்னேன். உண்மையில் காப்பது என்பது தேக்கு மரக்கன்றுகளுடன் உணர்வுபூர்வமாக இணைந்து இருப்பதே. ‘’இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்’’ என்பது திருக்குறள். நிலத்தை பரம்பொருளின் வடிவம் என்கிறது இந்திய மரபு. பரம்பொருள் கருணைக்கடல். தன்னை அன்புடன் பிரியத்துடன் நினைப்பவர்களுக்கு தன் அருளை வாரி வழங்கும் இயல்புடையது. நிலமும் அத்தகையதே. நமது செயல் களத்துக்கு அடிக்கடி செல்ல வேண்டும். அதனுடன் உணர்வுபூர்வமாக பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். மானசீகமாக அதனுடன் உரையாட வேண்டும். அதனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த ஆறு மாதங்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சொன்னேன். மரம் என்பது தானாக வளர்வது என்ற பொது அபிப்ராயம் இங்கே வலுவாக உள்ளது. ஒரு மாத காலம் வரை அதற்கு கவனம் கொடுப்பார்கள். பின்னர் தானாக வளர்ந்து விடும் என்று இருந்து விடுவார்கள். தேக்கு மரங்கள் நன்றாகப் பருக்க வேண்டும். அப்போது தான் அதற்கு ஆக உச்சமான விலை கிடைக்கும். நன்றாகப் பருக்க வேண்டும் என்றால் அதற்குத் தேவையானதை நாம் கொடுக்க வேண்டும். எனவே தண்ணீர் ஊற்றுவது மிகவும் அவசியம். என் அபிப்ராயங்களை நண்பரிடம் சொல்லியவாறு வந்தேன். 

சுவாமிமலையில் ஒரு உணவகம். தஞ்சாவூர் திருச்சி செல்லும் போது அங்கே காலை உணவருந்துவது வழக்கம். அந்த வகையில் உணவக உரிமையாளர் எனக்கு பழக்கமானவர் ஆனார். என்னைக் கண்டதும் பிரியத்துடன் நலம் விசாரித்தார். 

கல்லணை - பூம்புகார் சாலை அகலப்படுத்தப்பட்டிருப்பதால் கார் இயக்க வசதியாக இருக்கிறது என நண்பரின் சகோதரர் சொன்னார். ‘’செல்வம் சாலைகளை உண்டாக்கவில்லை. சாலைகள் தான் செல்வத்தை உண்டாக்குகின்றன’’ என்ற தாமஸ் ஜெபர்சனின் மேற்கோளை நண்பரிடம் சொன்னேன். பட்டுக்கோட்டைக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே உள்ள சாலைக்கு ‘’சேது ரஸ்தா’’ என்று பெயர். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் யாத்ரிககர்களின் சேவைக்காக அந்த சாலையில் பல சத்திரங்களை அமைத்தனர். 2003ல் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் பேருந்தில் மனோராவைப் பார்ப்பதற்காக நானும் எனது நண்பர் ஒருவரும் திருவாரூர் திருத்துறைப்பூண்டி மார்க்கமாக பட்டுக்கோட்டை சென்றோம். அப்போது அங்கே தொண்டி என்ற ஊருக்கான பேருந்து இருந்தது. சேது ரஸ்தாவில் பயணிக்கலாம் என்ற ஆவலில் அந்த பேருந்தில் ஏறி தொண்டி சென்று அங்கிருந்து இராமேஸ்வரம் சென்றோம். அன்று அது ஒரு ஒற்றைச் சாலை. மனமேல்குடி, மீமிசல் ஆகிய கடற்கரை கிராமங்களின் வழியே செல்லும். 2010 ஐ ஒட்டிய ஆண்டிலேயே அது கிழக்குக் கடற்கரை சாலையுடன் இணைக்கப்பட்டு இப்போது பிரமாதமான சாலையாக உள்ளது என்று கூறி பட்டுக்கோட்டை - தொண்டி பேருந்து பயணத்தை நினைவு கூர்ந்தேன். 

நண்பரிடமும் நண்பரின் சகோதரரிடமும் மனோரா சென்றிருக்கிறீர்களா என்று கேட்டேன். ‘’மனோரா’’ எனக்கு ஒரு காலத்தில் மிகவும் பிடித்த இடம். பித்துப் பிடித்ததைப் போல அடிக்கடி அங்கே செல்வேன். அந்த கடற்கரை - அந்த நிலக்காட்சிகள் ஆகியவை என் மனம் கவர்பவை. நண்பர்கள் சென்றிருந்தார்களே தவிர அதன் வரலாறை அவர்கள் அறியவில்லை. 

ஐரோப்பாவில் நெப்போலியன் பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாய் விளங்கிய போது ‘’வாட்டர்லூ யுத்தம்’’ நிகழ்ந்தது. அந்த யுத்தத்தில் நெப்போலியனை களத்தில் சந்தித்தது கார்ன்வாலிஸ். அவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர். வாட்டர்லூ களத்தில் பனிப்பொழிவு கடுமையாக இருந்ததால் பிரெஞ்சுப் படையின் துப்பாக்கிகள் சரிவர இயங்கவில்லை. அவற்றால் வெடிமருந்து வெடிப்பதற்குத் தேவையான வெப்பநிலையை துப்பாக்கியில் பராமரிக்க இயலவில்லை. ஆனால் ஆங்கிலப் படையின் துப்பாக்கிகள் குடகு மலையின் மழைக்காடுகளில் இருந்த தேக்கு மரத்தால் ஆனவை. பனி பொழியும் களத்திலும் அவை திறம் படச் செயல்பட்டன. வாட்டர்லூ களத்தில் கார்ன்வாலிஸ் வென்றதற்கு முக்கியக் காரணம் அது. அந்த வெற்றியின் நினைவாக தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் மனோராவைக் கட்டினார். அது கலங்கரை விளக்கமாகவும் பயன்பட்டிருக்கிறது என்று சொன்னேன். வரலாறு என்றும் அறியப்பட வேண்டிய ஒன்று. வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத சமூகங்களுக்கு மீண்டும் வரலாறு அந்த பாடத்தை நடத்தும். தற்செயலாக என்றாலும் உரையாடலின் மைய இடத்துக்கு தேக்கு வந்ததை மகிழ்ச்சியாக உணர்ந்தேன். 

தஞ்சாவூர் நர்சரியில் தரமான மரக்கன்றுகள் இருந்தன. ஆயிரம் மரக்கன்றுகளை டாடா ஏஸ் வண்டியில் ஏற்ற ஏற்பாடு செய்து விட்டு நண்பரை பொறுப்பாக டாடா ஏஸ் வாகனத்தில் பயணித்து ஊருக்கு கொண்டு வந்து சேர்த்திடுங்கள் என்று கூறி விட்டு நாங்கள் ஆம்னியில் முன்னதாகவே ஊருக்குப் புறப்பட்டோம். நேரம் அப்போதே மதியம் 1 மணி ஆகி விட்டது. நண்பரின் உறவினர் ஒருவர் கோயம்புத்தூரிலிருந்து ஊருக்கு வருகிறார். அவர் அலைபேசியில் அழைத்தார். அவரை தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இறங்கச் சொல்லி விட்டோம். ரயில் நிலையம் சென்று அவரை அழைத்துக் கொண்டு நாங்கள் புறப்பட்டோம். 

உக்கிரமான வெயில். தஞ்சாவூர் பை பாஸில் சாலியமங்களம் வழியாக பாபநாசம் சென்று அங்கிருந்து குடந்தை சாலையைப் பிடிக்க விரைந்து கொண்டிருந்தோம். நான் இரண்டு பெண்கள் கம்மங்கூழ் விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். நண்பரிடம் கம்மங்கூழ் குடிப்போமா என்று கேட்டேன். வண்டியை நிறுத்தினோம். இரண்டு பெண்கள் கூழ் விற்கிறார்கள். இரண்டு பானைகள். வத்தல் மற்றும் மோர்மிளகாய். மூன்று சொம்பு கூழ் வாங்கி அருந்தினோம். கூழ் விற்கும் பெண் சர சர என்று வேலைகளைச் செய்வதைக் கவனித்தேன். தனது பணியை தனது கடமையை செவ்வனே செய்யக் கூடிய ஒருவர் வாழ்க்கை குறித்த மேலான புரிதல் கொண்டவராக இருப்பார் என்பது எனது நடைமுறைப் புரிதல். மயிலாடுதுறை செல்ல எந்த சாலையில் திரும்ப வேண்டும் என்று நண்பர் கேட்டார். அந்த அம்மா பதில் சொன்னார்கள். தனது மகளை மயிலாடுதுறை அருகில் ஒரு கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்திருப்பதாகக் கூறினார்கள். எந்த கிராமம் என்று கேட்டேன். ஊர்ப் பெயரைச் சொன்னார்கள். தடுப்பூசிக்காக செயல் புரிந்த கிராமத்துக்குப் பக்கத்துக் கிராமம். அந்த ஊருக்கு நான் சென்றிருக்கிறேன் என்று சொன்னேன். அவர்களுக்கு மிகவும் சந்தோஷம். நாங்கள் தேக்கு மரக்கன்றுகள் வாங்க வந்தோம் என்று கூறினேன். 

நண்பர் 3 ஏக்கர் நிலத்தில் முழுமையாக தேக்கு பயிரிடுகிறார் என்று சொன்னேன். கூழ் விற்கும் பெண்ணின் உதவியாளருக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது என்று சொன்னார். முழுமையாக இல்லாவிட்டாலும் வயலில் பத்து தேக்கு கன்று நட்டு வளர்த்துக் கொள்ளுங்கள். 15 ஆண்டுகளில் உங்களுக்கு 15 லட்சம் பணம் கிடைக்கும் என்று சொன்னேன். அவர்கள் கவனமாகக் கேட்டார்கள். ‘’ நீங்கள் உழைப்பதற்கு தயங்கக் கூடியவர்கள் இல்லை. உழைக்க வேண்டும் என்ற தீரா ஆர்வம் இருப்பதால் தான் இந்த வெயிலில் கூழ் விற்கிறீர்கள். இதில் நீங்கள் செலுத்தும் உழைப்பில் நூறில் ஒரு பங்கை வயலில் 15 தேக்கு மரக்கன்றுகள் வளர்க்க செலுத்துங்கள். 15 ஆண்டுகளில் நல்ல பலன் கிடைக்கும். பணம் ஈட்ட வேண்டும் என்று தான் கூழ் வியாபாரம் செய்கிறீர்கள். உங்களால் 15 தேக்கு மரங்களை சர்வ சாதாரணமாக வளர்க்க முடியும். அவசியம் செய்யுங்கள் ‘’ என்று கூறினேன். அவர்கள் இருவரும் ஆர்வமானார்கள். 

‘’நான் ஒரு சிவில் இன்ஜினியர். விவசாயிகளுக்கு விவசாயத்தில் அதிக வருமானம் கிடைக்க எளிய வழிகளை பரிந்துரைப்பதை ஆர்வத்தின் காரணமாக செய்கிறேன். நான் இன்னும் சில நாட்களில் மீண்டும் இந்த ஊருக்கு வருகிறேன். உங்கள் வயலை நேரில் பார்த்து எப்படி தேக்கு மரம் நட வேண்டும் எப்படி பராமரிக்க வேண்டும் என்று கூறுகிறேன். அதன் படி செய்யுங்கள். நீங்கள் வழக்கமாக செய்யும் நெல் விவசாயமும் செய்து கொள்ளுங்கள். அதனுடன் இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்றேன். இருவரின் அலைபேசி எண்ணையும் பெற்றுக் கொண்டு எனது அலைபேசி எண்ணை அளித்து விட்டு புறப்பட்டோம். 

ஒரு பயணம் இன்னொரு பயணத்துக்கு வழிகோலுகிறது. ஒரு செயல் இன்னொரு செயலை நிகழ்த்துகிறது. 

Wednesday 15 June 2022

கதை சொல்லச் சொன்னால்

எங்கள் தெருவில் ஒரு மூன்று வயது சிறுவன் இருக்கிறான். அவனுடைய பெற்றோர்கள் அவன் வீட்டில் ரொம்ப படுத்தினால் இங்கே எங்கள் வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள். இங்கே வளர்ந்து நிறைந்திருக்கும் பூச்செடியின் இலைகளை கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டுவது அவனது விருப்பச் செயல்களில் ஒன்று. அதனை செய்து கொண்டிருப்பான். அது அலுத்த பின் ‘’டார்ச் லைட்’’ வேண்டும் என்பான். அதில் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு ‘’கதை சொல் . கதை சொல்’’ என என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்வான். நான் பெரும்பாலும் சிறுவர்களின் கதையைக் கூறுவேன். துருவன் கதை. பீமன் கதை. அர்ஜூனன் கதை. இதிகாச மாந்தர்களின் கதையை குழந்தைகள் மிக விரும்பிக் கேட்கின்றன என்பது எனது நேரடி அனுபவம். 

’’கதை சொல்லு. கதை சொல்லு.’’

நான் எந்த கதை சொல்வது என்று யோசித்தேன். ஒருமுறை சொன்ன கதையை திரும்ப கூறமாட்டேன். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கதையை சொல்லவே நான் முயற்சி செய்வேன். முதல் கதையில் உள்ள கதாபாத்திரங்கள் இரண்டாம் கதையில் வரலாம் ; உதாரணமாக முதல் நாள் பீமன் கதை சொல்லியிருந்தால் அடுத்த நாள் அர்ஜூன் கதை சொல்லும் போது பீமன் துணைக் கதாபாத்திரமாக வருவான். 

ஒரு பீடிகையுடன் துவக்கினேன். 

‘’உனக்கு மனுஷ தலை மனுஷ உடம்பு இருக்கறவங்கள தெரியும். மனுஷ உடம்பு வேற பிராணிகளோட தலை உள்ளவங்களை உனக்குத் தெரியுமா?’’

அவன் யோசித்துப் பார்த்தான். சட்டென அவன் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்பதால் மௌனமாக இருந்தான். 

‘’நல்லா யோசிச்சுப் பாரு. அப்படி இருக்கற ஒருத்தர் உனக்கு பிடிச்ச சாமி’’

‘’யாரு ? எந்த அம்மாச்சி?’’

‘’பிரகலாதன் கும்பிடுவானே’’

‘’நரசிம்மர்’’

தான் பதில் சொல்லி விட்டதால் சிறு வெட்கம். 

‘’கரெக்ட். குட்டி உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கே. எப்படிடா செல்லம் சின்ன வயசுலயே இவ்வளவு ஜீனியஸா இருக்க’’

பாராட்டியதும் மேலும் வெட்கம். 

‘’நரசிம்மர் எப்படி இருப்பாரு சொல்லு.’’

‘’சிங்கத்தலை’’

’’வெரிகுட், உடம்பு ?’’

‘’மனுஷ உடம்பு’’

‘’உனக்கு அந்த மாதிரி இருக்கற அம்மாச்சி எத்தனை பேரைத் தெரியும்?’’

அவன் யோசித்தான். அவனுக்கு விபரம் புலப்படவில்லை. 

‘’நரசிம்மர் மாதிரி அம்மாச்சி யார் யாருன்னு நான் சொல்றன். குதிரைத்தலையும் மனுஷ உடம்பும் இருந்தா அது ஹயக்ரீவர். பறவையோட தலையும் மனுஷ உடம்பும் இருந்தா அது கருடன். பன்றியோட தலையும் மனுஷ உடம்பும் இருந்தா வராகர். ‘’

அவன் மனதுக்குள் கற்பனை செய்து பார்த்தான். 

’’ஹயக்ரீவர் எப்படி இருப்பாரு?’’

‘’குதிரைத் தலையோட’’

’’பறவைத் தலையோட இருக்கறது யாரு?’’

அவனுக்கு மறந்து விட்டது. 

‘’உன்ன கதை சொல்ல சொன்னா ஏன் என்னென்னமோ சொல்ற?’’ என்றான். 

அவன் சினத்தை ஆற்றி அவனுக்கு அனுமன் குழந்தையாய் இருந்த போது சூரியனை சிவப்புப் பழம் என எண்ணி உண்ணப் பாய்ந்ததையும் சூரியன் பிரம்மனிடம் ஓடிச் சென்று தப்பியதையும் கதையாகச் சொன்னேன். 

 

Monday 13 June 2022

திங்கள் வலித்த கால்

களம் புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே

-புறநானூறு

திணை : தும்பை \  துறை : தானை மறம்
அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது 

{ போர்க்களத்துக்கு விரைந்து செல்லும் வீரர்களே ! கொஞ்சம் சிந்தியுங்கள். எங்கள் படையில் ஒரு மாவீரன் இருக்கிறான். ஒரு நாளைக்கு எட்டு தேர்களை அனாயாசமாக நிர்மாணிக்கும் தச்சன், ஒரு மாத காலம் முயன்று மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு ஒரு தேர்ச்சக்கரத்தை உண்டாக்கினால் அது எத்தனை வலிமையும் ஆற்றலும் வேகமும் கொண்டிருக்குமோ அத்தகைய திறன் படைத்த மாவீரன் எங்கள் பக்கம் இருக்கிறான்.}

***

நேற்று ஒரு நண்பருக்கு ஃபோன் செய்தேன். அவர் உள்ளூர்க்காரர். வெளியூரில் ஒரு வீடு கட்டிக் கொண்டு இருக்கிறார். அவர் ஃபோனை எடுத்ததும் ‘’நாம கடைசியா மார்ச் 12ம் தேதி பேசினோம். இன்னையோட சரியா 3 மாசம் ஆகுது’’ என்றார். அவர் தன் கையிலிருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்வது என்று கேட்டிருந்தார். நான் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கில் முதலீடு செய்ய சொல்லியிருந்தேன். கொஞ்சம் கூட வந்து உதவுமாறு கேட்டிருந்தார். ‘’அமௌண்ட் டெபாசிட் செய்யணும்னு சொன்னீங்க’’ என்றேன். ‘’டெபாசிட் செஞ்சு மூணு மாசம் ஆகுது’’ . ‘’எதுல செஞ்சீங்க?’’ . ‘’நீங்க சொன்ன மாதிரி போஸ்ட் ஆஃபிஸ்ல தான்’’. ‘’அப்படியா! ரொம்ப சந்தோஷம். ‘’ ‘’உங்களுக்கு சந்தோஷம். ஆனா நீங்க கூட வரலன்னு எனக்கு வருத்தம்’’. நண்பர் சற்று சாந்தமாகட்டும் என்று பொதுவாக சில விசாரணைகளை செய்து விட்டு ஃபோனை வைத்து விட்டேன். அவர் சொன்ன பிறகு தான் யோசித்துப் பார்த்தேன். அந்த நண்பருடன் பேசி மூன்று மாதம் ஆகி விட்டது என. பின்னர் அந்த நண்பருக்கு ஃபோன் செய்து , ‘’ஐ யாம் சாரி ! ஒரு விவசாயிக்காக அவரோட ஃபீல்டுல கொஞ்சம் ஒர்க் பண்ணி கொடுத்தேன். அந்த ஒர்க்ல முழுமையா இன்வால்வ் ஆயிட்டதால நாட்கள் போனதே தெரியலை. நீங்க சொல்லி தான் மூணு மாசம்  ஆச்சுன்னு தெரியுது. ‘’ நண்பரும் விவசாயி. எனவே அது என்ன ஒர்க் என்று கேட்டார். நான் அவருக்கு விளக்கினேன். 

எனது நண்பர் ஒருவர் கட்டுமானப் பொறியாளர். அவரது அலுவலகத்தில் தான் நாளின் பெரும்பொழுது இருப்பேன். அவரது ஊழியர் ஃபோன் செய்தார். ‘’சார் ! என்ன சார் ஆஃபிஸ் பக்கமே வர மாட்டேங்கறீங்க. நீங்க இங்க வந்து இருபது நாள் ஆகுது. சார் விசாரிக்க சொன்னாரு. ஏதும் வருத்தமா சார் ?’’ ‘’நோ நோ . அதெல்லாம் இல்லை. நான் உங்க ஆஃபிஸ் வந்து இருபது நாளா ஆகுது?’’ ‘’ஆமாம் சார் . அதனால தான் ஃபோன் செஞ்சேன். ‘’ ‘’சரி இன்னைக்கு சாயந்திரம் வர்ரேன்.’’ 

இன்னும் பல உள்ளூர் வெளியூர் நண்பர்கள் உரிமையுடன் கோபித்துக் கொண்டார்கள். நான் சாதாரண ஜி.எஸ்.எம் அலைபேசி மட்டுமே வைத்திருக்கிறேன் என்பதால் நண்பர்கள் பலருக்கு என் மேல் அதிருப்தி. உண்மையில் நான் மானசீகமாக தொலைபேசியின் மனநிலையில் இருப்பவன். தொலைபேசி எளியது ; வசதியானது ; சுதந்திரமானது என்பது எனது எண்ணம் அபிப்ராயம் அனுபவம் என அனைத்தும். அதனை சொன்னால் என்னை ’’பலியிட்டு’’ விடுவார்கள் என்பதால் சொல்லாமல் இருக்கிறேன். 

3 ஏக்கர் நிலம் உடைய விவசாயி என்னிடம் ‘’உங்களுக்கு முழு சுதந்திரம் தருகிறேன். நீங்கள் என்ன செய்ய வேண்டும் , எப்படி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை முழுமையாக எனது வயலில் செய்யுங்கள். நீங்கள் சொல்வதில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே கேட்டு செய்கிறேன்’’ என உறுதி கொடுத்தார். அதனால் அவரது பணியை முழு கவனத்துடன் செய்ய வேண்டியதாயிற்று. இது ஒரு மாதிரி வயல் என்பதால் கடந்த மூன்று மாதமாக முழு மூச்சாக இதில் ஈடுபட்டிருந்தேன். 

அந்த பணி 90 % நிறைவு பெற்றுள்ளது. இந்த வாரம் மீதிப் பணிகளும் முடியும். இந்த நிலையில் வழக்கமான நிலைக்குத் திரும்பும் போது ஆளாளுக்கு ‘’டின்’’ கட்டுகிறார்கள். 

புறநானூற்றில் வரும் ஔவையின் பாடல் தான் நினைவுக்கு வந்தது. ‘’ ஒரு நாளைக்கு எட்டு தேர்களை அனாயாசமாக செய்யும் தச்சன் ஒரு மாதம் முழுக்க முயன்று ஒரு தேர்ச்சக்கரத்தை உருவாக்கினால் அது எத்தனை வலிமையும் வேகமும் கொண்டிருக்குமோ அத்தனை வலிமையும் வேகமும் கொண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி. ‘’ என்கிறார் ஔவை. திங்கள் வலித்த கால் என்கிறார். திங்கள் என்றால் மாதம். கால் என்றால் சக்கரம். 

3 ஏக்கர் பணியும் அவ்வாறானது தான் என நான் நினைத்துக் கொண்டேன். 

நீரில் எழுத்தாகும்

சமீபத்தில் எழுதிய சிறுகதை , ‘’நீரில் எழுத்தாகும்’’ , சொல்வனம் இதழில் பிரசுரமாகியுள்ளது. அதன் இணைப்பு 

Wednesday 8 June 2022

ஊற்று

இன்று காலையிலிருந்து ஏகப்பட்ட பணிகள். மனம் முழுவதும் லௌகிக விஷயங்களே நிரம்பியிருந்தது. ஒன்றை அடுத்து இன்னொன்று என வேலைகள். பல விதமான பணிகளில் ஈடுபடுவதால் தகவல்களும் குறிப்புகளும் வந்து குவிந்து கொண்டு இருக்கும். சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல நடக்க வேண்டும். இத்தனை பணிகளுக்கு இடையிலும் இன்று ஒரு சிறுகதையை எழுதினேன். என்னுடைய பாணியிலிருந்து சற்றே மாறுபட்ட ஒரு சிறுகதை. எழுதத் தொடங்கினால் தொடர்ச்சியாக எழுதுவது எனது எழுத்துமுறை. அவ்வாறே எழுதி முடித்தேன். படைப்பூக்கம் என்பது ஒரு ஊற்று என மீண்டும் ஒருமுறை உணர்ந்தேன்.  

Tuesday 7 June 2022

இமய நடை

எனக்கு இங்கே ஒரு நண்பர் இருக்கிறார். நாங்கள் இருவரும் மெல்ல நடக்கும் வழக்கம் கொண்டவர்கள். சிற்றடிகளாக எடுத்து வைத்து நடப்பவர்கள். நடையில் வேகம் கூட்டாமல் சீராக செல்லும் பழக்கம் கொண்டவர்கள். எப்போதாவது மாலை வேலைகளில் ஐந்து ஆறு கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சிக்கு செல்வோம். அது ‘’வாக்கிங்’’ நோக்கத்துக்காக அல்ல ; ‘’டாக்கிங்’’ நோக்கத்துக்காக. அதிலும் அவர் அதிகம் பேச மாட்டார். நான் தான் பேசத் துவங்குவேன். இருவரும் நாற்பது ஐம்பது அடிகள் நடக்கத் தொடங்கியதும் நான் சட்டென்று ‘’தமிழ்நாட்டுல ஒரு விஷயம் கவனிச்சிருக்கீங்களா ! இங்க மாநில அரசாங்கம் மது விக்குது. தெருவுக்குத் தெரு விக்குது. ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் டார்கெட் கூட்டிக்கிட்டே போறாங்க. அப்படி செய்யறது குடிகாரங்களை மேலும் குடிகாரங்க ஆக்கறத தவிர வேற ஒன்னும் இல்ல. ஆனா மருத்துவம் மற்றும் சுகாதாரத்துல தமிழ்நாடு ரொம்ப ஃபார்வர்டுன்னு பெருமையா கிளைம் பண்றாங்க.’’ என்று ஆரம்பித்து மகாபாரத காலத்தில் மது எவ்விதம் சமூகத்தில் இருந்தது - நம் சமூகம் எவ்வாறு மதுவை பஞ்ச மா பாதகம் என வரையறுத்தது - சமணமும் பௌத்தமும் எவ்வாறு மதுவை சமரசம் இல்லாமல் எதிர்த்தன- திருக்குறளில் கள் உண்ணாமை - தமிழ்ச் சமூகங்களில் மது மீது இருந்த கட்டுப்பாடு என்ன - பிரிட்டிஷ் அரசு எப்படி சாராயக் கடையை வருவாய் மூலமாகக் கண்டது - வட மாநிலங்களில் புகையிலை - புகைப் பிடித்தல் அதிகம் ; இங்கே சாராயம் அருந்துபவர்கள் அதிகம் - தமிழ்நாட்டில் மதுவிலக்கை நீக்கியவர்கள் என இந்திய வரலாற்றை ஒரு சுற்று சுற்றி வருவேன். ஒரு எண்ணம் உருவானதும் அடுத்தடுத்து எண்ணங்கள் உருவாகி எல்லாவற்றையும் சொல்லி முடித்தால் 7 கி.மீ வாக்கிங் முடித்து வீட்டுக்கு வந்திருப்போம். வீட்டு வாசலில் நின்று மேலும் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பிரிந்து செல்வோம். வழக்கமாக நடைப்பயிற்சி செய்பவர்கள் வேகவேகமாக எங்களைத் தாண்டி நடந்து செல்வார்கள். நாங்கள் மெதுவாக நடப்போம். 

நண்பர் கைலாஷ் மானசரோவர் சென்று கயிலைநாதனை தரிசித்து வந்தார். அப்போது அவரது குழு மலையடிவாரம் சென்றதும் மலைப்பகுதிகளில் எப்படி நடக்க வேண்டும் என்று பயிற்சி தரப்பட்டிருக்கிறது. நண்பர் தரிசனம் முடிந்து ஊர் திரும்பியதும் நாங்கள் வழக்கம் போல வாக்கிங் போனோம். 

’’பிரபு ! ஹில் ஏரியால கொடுக்கற டிரெயினிங் மெல்லமா ஷார்ட் ஸ்டெப்ஸ்ல எப்படி நடக்கறதுன்னு தான். எங்க குரூப்ல நாப்பது பேரு. நான் மட்டும் தான் அந்த டிரெயினிங்ல ஜாலியா இருந்தேன். ஏன்னா நாம எப்படி நடப்பமோ அதுதான் ஹில்லுல நுரையீரலுக்கு கன்சிஸ்ட்டா ஆக்சிஜன் கிடைக்க ஈசியான வழி. ‘’ 

‘’அண்ணன் ! நாம் ரெண்டு பேரும் சேர்ந்து இமயமலைல டிரெக்கிங் போகணும் அண்ணன். பிளான் பண்ணுங்க’’ என்றேன்.   

Monday 6 June 2022

காணி நிலம்

பாரதியார் பராசக்தியிடம் காணி நிலம் வேண்டும் என்று கேட்டார். அந்த காணி நிலத்தில் என்னென்ன இருக்க வேண்டும் என்று அவருக்கு பல விருப்பங்கள் இருந்தன.  எனக்கும் காணி நிலம் குறித்து சில விருப்பங்கள் இருக்கின்றன! காணி நிலம் என்பது 1.3 ஏக்கரைக் குறிக்கும். ஒரு ஏக்கரை விட சற்று கூடுதல். இதனை ஓர் நுண் அலகாகக் கொள்ள முடியும். இந்தியா 2.5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயியை குறு விவசாயி என்கிறது. காணி நிலம் வைத்திருப்பவர் அத்தகைய அளவீட்டின் படி குறு விவசாயியே. 

நுண் அலகு என்னும் கருதுகோள் அறிவியலில் முக்கியமானது. அளவிடப் பெரியவற்றை ஒரு நுண் அலகாக அல்லது சிறு சிறு நுண் அலகுகளாகப் பிரித்துக் கொண்டு அதனை முழுமையாக அறிவதன் மூலம் நுண் அலகைப் போல் பல்லாயிரம் பல லட்சம் மடங்கு பெரிதாக இருப்பவை குறித்த அறிதலை அடைய முடியும். ஆங்கிலத்தில் இதனை ‘’Micro'' and ''Macro'' என்பார்கள். இவ்வாறான முறை உயிரியல், மருத்துவம், பொருளாதாரம், சமூகவியல், கலை, தொழில்நுட்பம் என பல துறைகளில் உள்ளது. ஐரோப்பாவில் ‘’Small is beautiful'' என்று ஒரு பார்வை உண்டு.  நாம் விவசாயத்தில் அதனை யோசித்துப் பார்ப்போம். 

தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒரு காணி நிலத்தை - அதாவது 1.3 ஏக்கரை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம். இப்போது நமது பரிசோதனைக்கு 1.3 ஏக்கர் நிலம் உள்ளது. எனினும் நாம் இந்த நிலத்தில் செய்ய உள்ள ஆய்வு அல்லது முயற்சி விவசாயம் மட்டும் தொடர்பானது இல்லை. அதனுடன் பொருளியலும் இணைந்துள்ளது. எனவே அதனை விவசாய முயற்சியாகவும் எடுத்துக் கொள்ளலாம். பொருளியல் முயற்சியாகவும் எடுத்துக் கொள்ளலாம். 

அந்த ஒரு காணி நிலம் விவசாயிக்கு உச்சபட்ச வருமானம் தரக்கூடிய சாத்தியம் கொண்டதாக இருக்க வேண்டும். அதன் வரப்புகள் ஒரு வயல் வரப்பு எத்தனை அடி நீளம் கொண்டதாக இருந்தால் உபயோகமாக இருக்குமோ அத்தனை அடி நீளம் கொண்டிருக்க வேண்டும். அந்த வயலில் நெல் பயிரிடுகிறோம் என்றால் அந்த மண்ணில் இருக்க வேண்டிய நுண் ஊட்டங்களுக்கு எத்தன்மையான உரங்கள் அளிக்கப்பட்டன என்பது அதன் அளவு மற்றும் செலவுடன் குறித்துக் கொள்ளப்பட வேண்டும். இயற்கை விவசாயம் எனில் அதில் இடப்பட்ட மண்புழு உரம் , ஜீவாமிர்தம் ஆகியவற்றின் அளவையும் பொருள் மதிப்பையும் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த காணி நிலத்துக்கு எவ்வள்வு விதை நெல் தேவைப்பட்டது. ஒற்றை நாற்று முறை எனில் எத்தனை நாற்றுகள் நடப்பட்டன என அனைத்தும் எண்ணிக்கைக்குள் வர வேண்டும். குருவிகள் அமர ஏற்பாடு எத்தனை சதுர அடிக்கு இத்தனை எனத் தேவையோ அதுவும் அமையப் பெற வேண்டும். இரவுப் பறவைகள் அமர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 

நெல் வயலின் வரப்பில் பயிரின் வளர்ச்சியைத் தடுக்காத நிழல் கட்டாத உயரமாக வளரும் தேக்கு மரங்கள் வைக்கப்பட வேண்டும். அவை முறையாக கவாத்து செய்யப்பட வேண்டும். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் இடையில் இருக்கும் வரப்பின் மேற்பரப்பில் பச்சைப்பயறு , காராமணி போன்ற பருப்பு வகைகள் விதைக்கப்பட வேண்டும். அந்த நிலத்தில் செய்யப்படும் ஒரு ரூபாய் செலவு கூட ஆவணப்படுத்தப் பட வேண்டும். சித்திரை மாதத்திலிருந்து பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களில் ஓர் ஆண்டில் நெல் மூலம் கிடைத்த வருவாய் என்ன உளுந்து மூலம் கிடைத்த வருவாய் என்ன வரப்பில் பயிரிடப்படும் பருப்பு மூலம் கிடைக்கும் வருவாய் என்ன என்பது ஆவணப்படுத்தப் பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வயலில் உள்ள மண்ணில் எவ்வாறு நுண்ணுயிரிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதும் குறிக்கப்பட வேண்டும். அந்த வயலில் விவசாயம் மூலம் வருவாய் கிடைக்க சாத்தியம் உள்ள அத்தனை வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த ஒரு காணி நிலத்தில் விவசாயம் மூலம் லாபம் என்ன கிடைக்கிறது என்பது வரவு செலவுடன் அட்டவணைப்படுத்தப்பட வேண்டும். 
 

Sunday 5 June 2022

ஒரு சிறுவனும் ஒரு சலூனும்

சிறுவனாக இருந்த போது அப்பா சலூனுக்கு அழைத்துச் செல்வார். பின் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்த பின் அப்பா அழைத்துச் செல்லும் சலூனுக்கு சைக்கிளில் தனியாக செல்ல ஆரம்பித்தேன். எத்தனையோ சலூன்கள் இருக்கின்றன ; ஏன் அப்பா செல்லும் சலூனுக்கே நாமும் செல்ல வேண்டும் என பலமுறை யோசித்திருக்கிறேன். நாமாக புதிதாக ஒரு சலூனுக்குச் சென்றால் அப்பாவுக்கு தெரியுமா என பல சாத்தியக்கூறுகளை பரிசீலித்துப் பார்த்து  ஒருமுறை நானாக ஒரு புதிய சலூனுக்கு சென்று விட்டேன். அப்பா செல்லும் சலூன் கடைக்காரர் பல வருடங்களாகத் தெரிந்தவர். இப்போது சென்றிருக்கும் கடை புதிது. ஒரு புதிய இடத்தில் உணரும் அசௌகர்யத்தால் என்ன பாணியில் முடி வெட்ட வேண்டும் என்று சொல்வதில் சிறு தயக்கம் ஏற்பட்டு சொல்லாமல் இருந்து விட்டேன். அந்த சலூன் இளைஞர்கள் அதிகம் குழுமுவது. அவர் ஒரு விதமாக முடி வெட்டி விட்டார். வீட்டுக்கு வந்தேன். வீட்டில் அனைவருமே என்னைப் பார்த்ததும் கேட்ட கேள்வி : முடி வெட்டினாயா இல்லையா? வெட்டிக் கொண்டேன் என்று பதில் சொன்னேன். தலைமுடி குறைக்கவேயில்லையே என்றார்கள். வழக்கம் போல் தான் வெட்டிக் கொண்டேன் என்றேன். மீதி பணம் கொடுத்தேன். புது சலூனில் வழக்கமாக ஆகும் தொகையை விட ரூ. 20 கூடுதல். மீதி பணம் ஏன் குறைகிறது என்று கேட்டார்கள். நான் மௌனமாக இருந்தேன்.இதில் ஆச்சர்யம் என்ன என்றால் இத்தனை கேள்விகளையும் அம்மாவே கேட்டு விட்டார்கள். அம்மாவுக்கு இது தெரிந்தால் அப்பாவுக்கு நிச்சயம் தெரிந்து விடும். என்ன செய்வதென்று தெரியவில்லை. குளித்து விட்டு வந்தேன். அன்று மாலை அப்பாவைப் பார்த்த போது அப்பா என்னிடம் ,’’ஏன் இன்னும் முடி வெட்டிக் கொள்ளாமல் இருக்கிறாய்? ‘’ என்று கேட்டார்கள். நான் மௌனமாக இருந்து விட்டேன். ஓரிரு நாள் கழித்து அம்மா அப்பாவிடம் நடந்ததைச் சொல்லியிருக்கிறார்கள். அப்பா என்னிடம் , ‘’வழக்கமாக செல்லும் சலூனை ஏன் மாற்ற வேண்டும் என்று நினைத்தாய்?’’ என்று கேட்டார்கள்.  எல்லா சிறுவர்களையும் போல ஒரு ஆர்வத்திலும் துடிப்பிலும் தான் புதிதாக ஒன்றைச் செய்து பார்த்தேன்.என்றாலும் அதைச் சொல்ல தயக்கம். என்ன சொல்லலாம் என்று யோசித்தேன். நான் புதிதாக ஒன்றை முயன்று பார்க்க ஒரு காரணமும் இருந்தது. நான் வழக்கமாக செல்லும் சலூனில் நடுத்தர வயது உள்ளவர்களும் முதியவர்களும் தான் அதிகம் வருவார்கள். நான் காத்திருந்தால் சிறுவன் தானே என்று கடைக்காரரிடம் சொல்லி  வரிசையை அனுசரிக்காமல் அவர்கள் முன்னால் முடி வெட்டிக் கொண்டு சென்று விடுவார்கள். அதன் பின்னர் தான் எனது முறை வரும். இவ்வாறு சில முறை நிகழ்ந்து விட்டது. நான் அதனை காரணமாகக் கூறி ‘’First come ; First serve'' என்பது தானே முறை . என்னை எல்லாரும் சிறுவன் என்பதால் வரிசை முறையை அனுசரிக்காமல் எனக்கு பின்னால் வந்தவர்கள் என்னைக் காக்க வைத்து விட்டு முன்னால் போகிறார்கள். நானும் கஸ்டமர் தான் . நானும் பணம் கொடுக்கிறேன். என்று அப்பாவிடம் கூறினேன். அப்பா பின்னர் பொறுமையாக இவ்வாறு நடந்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்டார். அது என்னை மேலும் சிறுவனாகக் காட்டும் என்பதால் சொல்லவில்லை. ஆனால் அந்த பதிலைக் கூறாமல் அமைதியாக இருந்தேன். ’’அவர் நல்ல மனிதர் . உனக்கு இப்படி ஒரு புகார் இருந்தால் என்னிடம் கூறியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவரிடமே கூட கூறியிருக்கலாம். அவருக்கு உன் முறையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்காது. நீ பள்ளி விடுமுறை நாட்களில் தான் சலூனுக்குச் செல்கிறாய். 30 , 40 நிமிடம் தாமதமானால் கூட உனக்கு பாதிப்பு இல்லை என்பதால் அவ்வாறு செய்திருப்பார். அதற்காக புதிய சலூன் மாற்ற வேண்டியது இல்லை. இப்போது பார். முடி வெட்டுவதற்கு முன்னால் இருந்ததைப் போல முடி வெட்டிய பின்னும் இருக்கிறது. இந்த மாதிரி முடி வெட்டிக் கொண்டால் இப்போது மாதம் ஒரு முறை சலூனுக்கு செல்கிறாய் ; இனி வாரம் ஒரு முறை செல்வாய் ‘’ என்று அப்பா சொன்னார்.  15 நாள் கழித்து மீண்டும் பழைய சலூனுக்கே சென்றேன். சலூன்காரர் முடி வெட்டத் துவங்கினார். சிறிது நேரத்தில் , ‘’தம்பி ! நாலு நாள் முன்னாடி அப்பா முடி வெட்ட கடைக்கு வந்திருந்தார்கள்.’’ என்று சொல்லி விட்டு வேறு ஏதும் சொல்லாமல் சிரித்தார். நானும் சிரித்தேன். கொஞ்ச நேரம் கழித்து , ‘’மற்றவர்கள் கூட பரவாயில்லை ; தாடி வைத்துக் கொண்டு ஒரு மளிகைக் கடைக்காரர் எப்போதும் கடை திறக்க வேண்டும் ; கடை திறக்க வேண்டும் என்று சொல்லி முன்னால் வந்த என்னைப் பின் தள்ளி விடுகிறார்’’ என்றேன். ‘’அவர் காலைல 7 மணிக்கு கடை திறக்கணும். நான் கடை திறக்கவே 6.30 ஆகிடும். அவர் ஷேவ் செய்து கொண்டு வீட்டுக்குப் போய் குளித்து விட்டு தனது மளிகைக் கடைக்கு வர வேண்டும்.’’  என்று கடைக்காரர் சொன்னார். ‘’முதல் நாள் சாயந்திரமே வந்து ஷேவ் செஞ்சுக்க வேண்டியது தானே?’’ என்று நான் கேட்டேன். ‘’அவர் காலைல 7 மணிக்கு கடை திறந்தால் நைட் 9 மணிக்கு தான் கடையை சாத்துவார். எல்லா நேரமும் கடை தான். காலை டிஃபன் , மதியம் சாப்பாடு எல்லாம் ஹோட்டலில் இருந்து வாங்கி வரச் சொல்லி கடையிலேயே சாப்பிடுவார். இரவு உணவு மட்டும் தான் வீட்டில் ‘’ என்றார் கடைக்காரர். 

இந்த நிகழ்வுக்குப் பின் மேலும் சில ஆண்டுகள் அந்த சலூனுக்கே சென்று வந்தேன். அதன் பின்னர் தான் வேறு சலூனுக்கு மாறினேன். 

பல ஆண்டுகள் கழித்து ‘’சலூன் நூலகங்கள்’’ முன்னெடுப்புக்காக பழைய சலூன்காரரை சந்தித்தேன். ஆண்டுகள் பல ஆகியிருந்ததால் என் முகம் அவருக்கு நினைவில் இல்லை. எல்லா சலூன்களிலும் என்னை அறிமுகப்படுத்திக் கொள்வது போலவே அவரிடமும் ’’சிவில் இன்ஜினியர்’’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு விஷயத்தை எடுத்துச் சொல்லி புத்தகங்களை வழங்கினேன். புறப்படும் நேரத்தில் ‘’என்னை நினைவிருக்கிறதா ?’’ என்று கேட்டேன். அவர் நினைவுபடுத்த முயன்றார். அப்பா பெயரைச் சொன்னேன். அவருக்கு நினைவு வந்து விட்டது. அப்பா இப்போதும் அவருடைய சலூனில் தான் முடி வெட்டிக் கொள்கிறார். ’’சைக்கிள்ல சின்ன பையனா வருவீங்க தம்பி ‘’ என்றார். அவருக்கு நான் ‘’சலூன் நூலகங்கள்’’ விஷயத்தை முன்னெடுப்பது குறித்து மிகுந்த சந்தோஷம். விடை பெற்றுக் கொண்டோம். 

மாரத்தான் ஓட்டத்துக்கான அடிப்படை பயிற்சிகளில் ஒன்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நடந்து செல்வது. கால்களில் இரத்த ஓட்டம் சீராக இருக்க அது உதவும். இன்று காலை ஷேவ் செய்து கொள்ள சலூனுக்கு நடந்து சென்றேன். பழைய கடைக்காரருக்குப் பின் ஒரு சலூனுக்கு வாடிக்கையாகச் செல்வேன். அவர் கடைக்கு பத்து ஆண்டுகள் சென்றிருப்பேன். அவர் சிங்கப்பூர் சென்று விட்டார். அதன் பின்னர் ஒரு சலூனுக்கு சென்றேன். அது ஒரு ஏழு ஆண்டுகள் இருக்கும். இப்போது செல்லும் சலூன் எட்டு ஆண்டுகள். இன்று நடந்து செல்லும் போது சிறுவனாயிருந்த போது செல்லும் சலூனின் வழியாக நடந்து கொண்டிருந்தேன். அவர் கடை சிறிய கடை. வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. அவர் கடைக்கு சென்றேன். ஷேவிங். நேர்த்தியாக பணியை மேற்கொண்டார். ‘’ உங்களுக்கு வேலை செஞ்சு 25 வருஷம் இருக்குமா?’’ என்றார். யோசித்துப் பார்த்து விட்டு இருக்கும் என்றேன். 

அவர் கடையில் ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக வழங்கிய நூல்கள் இருந்தன. வாடிக்கையாளர்கள் புத்தகங்களை எடுத்து வாசிக்கிறார்களா என்று கேட்டேன். பலர் ஆர்வமாக வாசிக்கிறார்கள் என்று சொன்னார். அதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. மாவட்டத்தில் உள்ள எல்லா சலூன்களுக்கும் மேலும் சில நூல்களை வழங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்றேன். 

பின்குறிப்பு :

அடிக்கடி என்னை வரிசையில் பின் தள்ளி விட்டு முன்னால் சென்று ஷேவ் செய்து கொள்ளும் மளிகைக் கடைக்காரருக்கு பல ஆண்டுகள் கழித்து அவருடைய இல்லத்தை நான் தான் ஒப்பந்த அடிப்படையில் நிர்மாணித்துக் கொடுத்தேன். கட்டுமானத்தில் அவருக்கு மிகவும் திருப்தி. நிறைவுத் தொகையை வழங்க வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய இல்ல கட்டுமானப் பணி துவங்கியதிலிருந்து அவரிடம் கூறாதிருந்த சலூனில் நடந்த நிகழ்ச்சியை அவருக்கு நினைவு படுத்தினேன்.   அவர் ஆச்சர்யப்பட்டார். 

Saturday 4 June 2022

ஒரு மாதிரி வயல்

கடந்த மூன்று மாத காலமாக கணிசமான பொழுதினை ஒரு குறிப்பிட்ட செயலுக்காக வழங்கி வருகிறேன். அது குறித்தே எப்போதும் யோசனை. இன்னும் என்னென்ன வகையில் துல்லியமாக்கலாம் என அவதானித்துக் கொண்டிருந்தேன். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் ஒரு கிராமத்தை அடிப்படை அலகாகக் கொண்டவை. ஒரு முழு கிராமத்துக்கு என்ற அளவிலேயே ‘’காவிரி போற்றுதும்’’ திட்டமிடல்கள் இருந்தன - இருக்கின்றன. எனினும் இந்த செயலாக்கம் முதற் பார்வையில் ஒரு விவசாயி தொடர்பானது. ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் அது எல்லா விவசாயிகளுக்குமானது. எனவே இதனை ஒரு மாதிரி வடிவமாக ஆக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உருவானது. எனவே இதற்கு முழுமையான நேரமும் கவனமும் கொடுத்தேன். 

‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமம் என்பதை ஒரு தேசம் என்பதாகவே எண்ணுகிறது. மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காக தூது செல்லும் போது ஒரு கிராமத்தை மட்டுமாவது பாண்டவர்களுக்குக் கொடுங்கள் என்று இறைஞ்சுகிறார். தேசத்துக்குரிய அத்தனை மாண்புகளும் கிராமத்துக்கும் உண்டு. 

விவசாயிகள் பெரும் பொருளியல் சக்தியாக மாற வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பங்களில் ஒன்று. விவசாயிகளின் வாழ்வில் பொருளியல் செழிப்பைக் கொண்டு வருவதே ‘’காவிரி போற்றுதும்’’ லட்சியம். தலைமுறை தலைமுறைகளாக மண்ணில் உழைத்து வியர்வை சிந்தி தேசத்துக்கே உணவளித்த பாரம்பர்யம் கொண்ட விவசாயிகள் தன்னிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவே ‘’காவிரி போற்றுதும்’’ தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது. ‘’செய்க பொருளை’’ என்பது திருவள்ளுவரின் கட்டளை. நம் நாட்டில் விவசாயிகள் செழிப்பாக இருந்த காலகட்டங்களில் உலகின் GDPல் 50% நமது பங்களிப்பாக இருந்திருக்கிறது. 

’’காவிரி போற்றுதும்’’ பணிகளை முன்னெடுத்த போது காவிரி வடிநிலப் பகுதி விவசாயிகளிடம் தேக்கு மரங்கள் பயிரிடுமாறு கேட்டுக் கொள்வேன். முழு நிலப்பரப்பில் இல்லாவிட்டாலும் வயலின் வரப்புகளிலாவது பயிரிடுமாறும் அது வயல் அளிக்கும் வருமானத்தினும் மிகுதியான வருமானத்தை அளிக்கும் என்றும் அவர்களிடம் கூறுவேன். பல விவசாயிகள் இதனை மேற்கொண்டனர். இருப்பினும் எனக்கு ஒரு ஆவல் இருந்தது. விவசாயிகளை நேரடியாக அழைத்துச் சென்று எல்லா விதத்திலும் பரிந்துரைக்கப்பட்ட முறைகளில் ஒரு வயலில் முழுமையாக தேக்கு பயிரிடப்படுமானால் அது விவசாயிகள் நேரடியாக பார்த்து அறிய ஏதுவாக இருக்கும் என்பதால் அவ்வாறான ஒன்றை அமைக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தேன். 

என்னுடைய தொடர் பணிகளைப் பார்த்த ஒரு விவசாயி - அவர் ஐ.டி கம்பெனியில்  பணிபுரிபவர் - பரிந்துரைக்கப்பட்ட விதங்களில் தனது 3 ஏக்கர் வயலிலும் முழுமையாக தேக்கு பயிரிட விரும்புவதை என்னிடம் தெரிவித்து அதன் செயலாக்கத்தை முன்னின்று நடத்துமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். 

மூன்று மாதமாக அந்த பணியை முன்னெடுத்தேன். ஊரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அவரது வயல் உள்ளது. தினமும் பல மணி நேரங்கள் அங்கே இருப்பேன். வேலை சரியாக நடக்கிறதா என்று பார்ப்பேன். தொய்வுகள் ஏதேனும் இருப்பின் அவற்றை சரிசெய்வேன். கொஞ்சம் கொஞ்சமாக நிறைவை நோக்கி நகர்த்திச் செல்வதற்கு தேவையானதைச் செய்தேன். 

1. என்னுடைய கட்டுமானப் பொறியியல் அறிவின் துணை கொண்டு 3 ஏக்கர் முழுமையான பரப்புக்கும் 2 அடி உயரம் கொண்ட மேட்டுப்பாத்தி அமைக்கப்பட்டது. பொதுவாக ஒரு அடி உயரத்தில் மேட்டுப்பாத்தி அமைப்பார்கள். ஆனால் இரண்டு அடி உயரம் தேவை என்பதில் நான் உறுதியாக இருந்தேன். 

2. மேட்டுப்பாத்தியில் ஒரு மரக்கன்று நடப்பட 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் கொண்ட குழிகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த 8 கன அடி கொள்ளளவு கொண்ட குழிகளில் மக்கிய சாண எருவும் கரித்தூளும் கலந்து இடப்பட்டன. 

3. ஒரு மரத்துக்கும் அதன் அருகில் உள்ள  இன்னொரு மரத்துக்கும் இடையே 12 அடி இடைவெளி வயலின் முழுப் பரப்புக்கும் பேணப்பட்டது. 

எளிமையாய்த் தோன்றும் இந்த விஷயங்களை செயலாக்குவது என்பது எளிய ஒன்றாக இருக்கவில்லை. இருப்பினும் முழுமையான உழைப்பை அளித்து அச்செயலுக்கு எங்களை முழுமையாக அர்ப்பணித்து அதனை செய்து முடித்தோம். 

இனி இந்த செயலுக்குப் பிறகு , ‘’காவிரி போற்றுதும்’’ விவசாயிகளுக்கு என்ன செய்ய முடியும் என்றால்,

1. ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குறு விவசாயியிலிருந்து 15 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் பெரு விவசாயி வரை எவரையும் நேரடியாக இந்த வயலுக்கு அழைத்து வந்து நிகழ்ந்துள்ளதைக் காட்ட முடியும். விவசாயிகள் எப்போதுமே பிரத்யட்சமாக காணக் கூடியதை எளிதில் புரிந்து கொண்டு தங்கள் வயலில் செயல்படுத்துவார்கள். தேக்கங்கன்றுகள் வளர்ச்சியைக் காணும் போது அதன் எதிர்கால வளர்ச்சியையும் அவர்களால் அனுமானிக்க முடியும். சில வருடங்களில் இது ஒரு அனுபவ ஞானமாகியிருக்கும். 

இந்திய தத்துவ மரபு பிரத்யட்சம், அனுமானம், சுருதி என அறிதல் முறைகள் மூன்று என வகுக்கிறது. 

2. வயல் வரப்பில் தேக்கு வளர்ப்பதில் நடைமுறை சிக்கல்கள் கொண்ட விவசாயிகள் பத்திலிருந்து பதினைந்து தேக்கு மரங்களை ஒரு மேட்டுப்பாத்தி அமைத்து நட்டு விட்டு மற்ற பரப்பில் வழக்கம் போல் அவர் செய்வதை செய்து கொண்டிருக்கலாம். ஒரு மேட்டுப்பாத்தி அமைக்க சில நூறுகள் மட்டுமே செலவாகும் என்பதால் பலரும் இதனை முயன்று பார்ப்பர். சிறு அளவில் நல்ல பலன் இருந்தால் அதனை விரிவாக்குவார்கள். 

3. இந்த வயல் அவர்களுடைய எல்லா ஐயங்களையும் நீக்கும். 

இப்போதே பல நண்பர்களையும் விவசாயிகளையும் இந்த மாதிரி வயலுக்கு அழைத்து வந்து காட்டியிருக்கிறேன். அவர்கள் நிகழ்ந்துள்ளவற்றைக் கண்டு ஊக்கம் பெற்றுள்ளார்கள். 

மூன்று ஏக்கரில் 800 தேக்கு மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. உழைப்பை நம்பும் உழைப்பை அளிக்கும் அந்த விவசாயி பூமாதேவியின் ஆசியுடன் ஆகாசவாணியின் ஆசியுடன் தனது உழைப்புக்கேற்ற பலனாக 15 ஆண்டுகளில் பத்து கோடி ரூபாய் பெறுவார். 

நாம் உழைப்பை நம்புகிறோம். நாம் தெய்வத்தை நம்புகிறோம். 

ஒவ்வொரு விவசாயிக்கும் இந்த வாய்ப்பும் இந்த சாத்தியமும் அமைய வேண்டும் என்பதே ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். 



 

Wednesday 1 June 2022

ஓர் அதிகாரி

பல சூழ்நிலைகளில் - பல வருடங்களில் - பல விதமான வெள்ள நிவாரணப் பணிகளில் பங்கெடுத்திருக்கிறேன். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இணைந்து பணியாற்றிய ஒரு ஆட்சிப் பணி அதிகாரி நேற்று ஊருக்கு வந்திருந்தார். எனக்கு ஃபோன் செய்தார். பல வருடங்களுக்குப் பிறகு என்னுடைய ஞாபகம் அவருக்கு இருந்தது மகிழ்ச்சி அளித்தது. அவரைச் சென்று சந்தித்தேன். அவருடன் அவருடைய துணை அதிகாரியும் உடனிருந்தார். துணை அதிகாரி எனக்கு இப்போது தான் அறிமுகமாகிறார். அவரிடம் அதிகாரி எவ்வாறு வெள்ள நிவாரணப் பணிகளில் பம்பரம் என சுழன்று பணியாற்றுவார் என்பதை நினைவு கூர்ந்தேன். காலை 7 மணிக்கு அலுவலகத்தில் இருப்பார். வெள்ளம் பாதித்த பல கிராமங்களுக்கு செல்வார். மக்களைச் சந்திப்பார். ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பதை துல்லியமாக ஆய்வு செய்வார். ஓர் அதிகாரி ஒரு விஷயத்தில் அக்கறை காட்டுகிறார் என்றாலே அவருக்குக் கீழ் உள்ள அரசு நிர்வாகத்தின் கீழ் அடுக்கு வரை அனைத்து வேலைகளும் சரியாக இருக்கும்.  வெள்ள நிவாரணப் பணிகளின் போது அவருடைய பணி எல்லையில் அனைத்தும் மிகச் சரியாக இருந்தன. நான் பொதுவாக எந்த விஷயத்தையும் கறாராகவே மதிப்பிடுபவன். எனது மதிப்பீட்டிலியே அனைத்தும் சரியாக இருந்தன. காலை 7 மணிக்குத் துவங்கும் அவரது பணிகள் இரவு 11 மணி வரை நீடிக்கும். ஊழியர்களுக்கு குறிப்புகளை அளித்தல் - நிலையை துல்லியமாக மேலிடத்துக்கு தெரிவித்தல் - விடுபடல்கள் ஏதும் இன்றி அனைத்தும் நடக்கிறதா என ஆய்வு செய்தல் என எல்லா வேலைகளையும் பிழையின்றி மேற்கொள்வார். ஐ. ஏ. எஸ் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பார். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்து கொடுப்பார். 

மாநில அரசின் அலுவலகங்களுக்கு எப்போதோ செல்பவர்கள் ஆனாலும் அடிக்கடி செல்பவர்கள் ஆனாலும் அவர்கள் அங்கே அடையும் அனுபவம் என்பது மிகவும் எதிர்மறையான ஒன்றாகவே இருக்கும். அரசு இயந்திரம் மிக மோசமான நிலையில் உள்ளது என்பதே உண்மை. மக்கள் அடிக்கடி செல்ல நேர்கிற போக்குவரத்து அலுவலகம், நகராட்சி அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகம்  ஆகிய்வை ஆனாலும் மிகக் குறைவாக பொது மக்கள் செல்லும் அலுவலகங்கள் ஆனாலும் ஒரே நிலைமை தான். பொதுமக்களை உரிய விதத்தில் அணுகுவதும் பதிலளிப்பதும் தங்கள் பொறுப்பு அல்ல என எண்ணும் - மக்கள் ஏன் அலுவலகங்களுக்கு வருகிறார்கள் என அலுத்துக் கொள்ளும் மனநிலையே பல வருடங்களாக தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு இருக்கிறது. ‘’சேற்றில் முளைத்த செந்தாமரை’’ என நண்பரைப் போல சிலர் இருக்கிறார்கள் என்பதும் அவர்களைப் போன்றவர்களே நிர்வாக மாற்றங்களை தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள் என்பதுமே மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயங்கள். 

நேற்று காலையிலிருந்து மாலை வரை அவருடன் பயணித்தேன். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து சொன்னேன். ஆர்வமுடன் கேட்டுக் கொண்டார். ஊருக்கு அருகில் 3 ஏக்கர் பரப்பில் நண்பர் வயலில் முழுமையாக தேக்கு நட ஏற்பாடு செய்வதை அவரிடம் தெரிவித்து அதனை நீங்கள் வந்து பார்க்க வேண்டும் என்று எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். வாகனத்தில் செல்லும் போது அங்கே நிகழும் விஷயங்கள் குறித்து முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். வயலில் நிகழ்பவற்றை பார்த்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

நேற்றைய நாளின் பெரும்பாலான பொழுது அவருடன் செலவிட்டது மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தது. 

சரித்திரம் (நகைச்சுவைக் கட்டுரை)

கல்லூரியில் கடைசி செமஸ்டரில் எங்களுக்கு ஒரு புராஜெக்ட் உண்டு. நான்காம் ஆண்டு துவங்கியதுமே இரண்டு இரண்டு மாணவர்களாக மொத்த வகுப்பின் எண்ணிக்கையைப் பிரித்து அந்த குழுவுக்கு ஒரு பேராசிரியரை வழிகாட்டியாக நியமித்து விடுவார்கள். வருகைப்பதிவின் அகர வரிசை அடிப்படையில் மாணவர் குழு உருவாக்கப்படும். ஒரு பெரிய கட்டிடம் ஒன்றினை டிசைன் செய்ய வேண்டும். நான்கு வருடமாக கற்ற அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைத்துத் தொகுத்துக் கொண்டால் புராஜெக்ட்டை நல்ல முறையில் நிறைவு செய்யலாம். அதனை வழிநடத்தவே வழிகாட்டி. 

என்னுடைய புராஜெக்ட் மெட் ஒரு பேராசிரியரிடம் டியூஷன் படித்துக் கொண்டிருந்தான். அப்போது பிரபலமாக இருந்த ஆட்டோகேட் என்ற சாஃப்ட்வேரில் அவன் திறன் பெற விரும்பினான். அந்த பேராசிரியருக்கும் எங்கள் வழிகாட்டியாக இருந்த பேராசிரியருக்கும் கல்லூரி தொடர்பான பல விஷயங்களில் முரண்கள். அது எங்கள் புராஜெக்ட்டில் பிரதிபலிக்கத் தொடங்கியது.  ஒரு கட்டத்தில் எங்கள் வழிகாட்டி எனது புராஜெக்ட் மெட்டிடம் ‘’நீ எப்படி புராஜெக்ட்டை நிறைவு செய்கிறாய் என்று பார்க்கிறேன்’’ என்று மிரட்டத் தொடங்கினார். எனக்கு அவர்கள் மோதலில் நேரடித் தொடர்பு இல்லை எனினும் நான் என் புராஜெக்ட் மெட் பாதிக்கப்படும் இடத்தில் இருந்ததால் தார்மீக ரீதியாக அவனுடன் துணை நின்றேன். அவ்வப்போது நடக்கும் விஷயங்களை என்னிடம் சொல்லி வருத்தப்படுவான். இதே நிலையில் ஒரு செமஸ்டர் அதாவது ஆறு மாதங்கள் முடிவடையும் நிலை வந்து விட்டது. ஒரு நாள் என்னிடம் ‘’வழிகாட்டி’’ மிகவும் வருத்துவதாக வருத்தப்பட்டான். துறைத் தலைவரிடம் சென்று கூறுவோம் என்றான். இன்னும் ஆறு மாதத்தில் கல்லூரி நிறைவடைய இருக்கும் நிலையில் ஒரு சிக்கலுக்குள் நுழைவது உசிதமா என்பது எங்கள் கவலையாக இருந்தது. இருப்பினும் துறைத் தலைவரிடம் சென்று தெரிவித்தோம். அவர் நல்ல மனிதர். நியாயமானவர். ஆனால் நாங்கள் எதிர்பாராத விஷயம் ஒன்றைச் சொன்னார். வாய்மொழியாக புகார் அளித்தால் இந்த விஷயத்தை விசாரிக்க முடியாது ; வேண்டுமானால் எழுத்துப் பூர்வமாக புகார் அளியுங்கள் என்றார். நாங்கள் வந்து விட்டோம். அவர் தெரிவித்த அன்று மாலை வகுப்புகள் முடிந்ததும் துறைத் தலைவர் அறைக்கு அருகில் இருந்த காலி வகுப்பறை ஒன்றில் அமர்ந்து விஷயத்தை தெரிவித்து ஒரு கடிதம் எழுதினோம். புராஜெக்ட் மெட்டின் கையெழுத்து கோழிக் கிறுக்கலாக இருக்கும். எனவே கடிதத்தை நான் எழுதினேன். ஆனால் அது பலவிதத்திலும் ரிஸ்க். இருந்தும் எனது கையெழுத்தில் எழுதினேன். ’’ஃபிரம்’’ பகுதியில் எங்கள் இருவரின் பெயர்களும் வகுப்பும். ‘’டூ’’ பகுதியில் துறைத்தலைவர். ‘’சப்ஜெக்ட்’’ பகுதியில் புராஜெக்ட் நிறைவு செய்வதில் உருவாக்கப்படும் இடையூறுகள் என குறிப்பிட்டோம். விஷயத்தை விளக்கி எழுதி துறைத் தலைவரிடம் வழங்கி விட்டோம். அப்போதும் அவரிடம் ‘’ நீங்கள் கூறுவதால் தான் இவ்வாறு செய்கிறோம். எங்களுக்கு இதில் விருப்பமில்லை’’ என்று கூறினோம். எங்கள் முன்னால் பச்சை மை பேனாவில் ஆங்கிலத்தில் ‘’ஃபார்வர்டர்ட்’’ என எழுதி தனது சுருக்கக் கையெழுத்தை இட்டார். நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம். 

மறுநாள் காலை எங்கள் முதல் பிரிவேளை வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது எங்கள் வழிகாட்டி வகுப்புக்கு வந்தார். அந்த நேரத்தில் அவர் அங்கு வருவது ஏன் என்று வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளருக்குப் புரியவில்லை. ஏனெனில் அவர் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பாடம் எடுப்பவர் இல்லை. மூன்றாம் ஆண்டில் தான் அவரது பாடம். என்ன விஷயம் என்று வகுப்புக்கு வெளியே சென்று கேட்டார். அவர்கள் சிறிது நேரம் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது எங்கள் இரண்டு பேருக்கு மட்டும் தெரியும். எங்கள் வகுப்பின் மற்ற மாணவர்களுக்குத் தெரியாது. வழிகாட்டியும் விரிவுரையாளரும் வகுப்புக்குள் வந்தனர். வழிகாட்டி தன்னைப் பற்றி நாங்கள் இருவரும் அளித்த புகாரைப் பற்றி சுருக்கமாகச் சொல்லி விட்டு நாங்கள் துறைத் தலைவருக்கு அளித்து ரிமார்க்ஸ்ஸுக்காக வழிகாட்டிக்கு ஃபார்வர்ட் செய்த கடிதத்தின் நகலை எல்லா மாணவர்களிடமும் ஒவ்வொரு காப்பி வழங்கினார். எங்கள் கைக்கும் ஒரு நகல் வந்தது. புராஜெக்ட் மெட் பதட்டத்துடன் இருந்தான். நான் மிகவும் சாவகாசமாக இருந்தேன். அதனை நான்காக மடித்து எனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டேன். எங்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளர் ‘’ ஒரு மாணவனுக்காக ஒரு பேராசிரியர் மேல் நடவடிக்கை எடுத்தது என்பது கல்லூரி சரித்திரத்திலேயே கிடையாது’’ என்றார். பின்னர் வழிகாட்டி இதனை துறையின் எல்லா பேராசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் வழங்க வேண்டும் . அதற்காக செல்கிறேன் என்றார். 

நான் அமைதியாக மெட்டிடம் சொன்னேன். ‘’இனிமேல் அவரை யாராலும் காப்பாற்ற முடியாது’’

‘’எப்படி சொல்கிறாய்?’’ என்று கேட்டான் மெட்.

‘’அவருடைய இயல்பு என்ன என்பதை அவரே வெளிக்காட்டி விட்டார். அதனை நாம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.’’ என்றேன். 

துறைத்தலைவர் அறைக்குச் சென்று நேற்று நாங்கள் அளித்த புகாரின் நகல் எங்கள் கைகளுக்கே வந்ததை எடுத்துக் கொண்டு காட்டி விட்டு கொடுத்து விட்டு வந்தோம். துறைத்தலைவர் அதிர்ச்சி அடைந்து விட்டார். 

இந்த விஷயம் தொடர்பாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. துறைத் தலைவர் அதன் தலைவர். மூத்த பேராசிரியர் அதன் இன்னொரு உறுப்பினர். விசாரணை குறித்த தகவல் புலத்தலைவருக்கும் பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் தெரிவிக்கப்பட்டது. 

முதலில் வழிகாட்டியை அழைத்து அவருடைய தரப்பை கேட்டார்கள். பின்னர் அவரை அனுப்பி விட்டு எங்களை அழைத்து எங்கள் தரப்பைக் கேட்டார்கள். புராஜெக்ட் மெட் பதட்டமாக இருந்தான். நான் தான் பேசினேன். 

‘’நாங்கள் எழுத்து பூர்வமாக புகார் அளிக்க எவ்வளவு தயங்கினோம் என்பது  துறைத் தலைவருக்குத் தெரியும். அவர் சொன்னதால் தான் அதனைச் செய்தோம். அவரிடம் ஒப்படைக்கப்பட்ட கடிதம் எங்களுடையது தான் என்றாலும் ஒப்படைக்கப்பட்ட பின் அது துறையினுடையதும் கூட. அஃபிஷியல் ரெகார்ட். அதில் துறைத் தலைவரின் சுருக்கக் கையொப்பமும் முத்திரையும் உள்ளது. இந்த செய்கை மூலம் துறைத் தலைவர் அலுவலக மாண்பை வழிகாட்டி சிதைத்துள்ளார்’’ என்று கூறினேன். 

‘’அவரிடம் பேசுகிறோம். உங்கள் புராஜெக்ட் நல்ல விதமாக நிறைவு செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்’’ என்றார்கள். நாங்கள் அதனை ஏற்கவில்லை. 

கொஞ்ச நேரம் அறைக்கு வெளியே காத்திருக்கச் சொன்னார்கள். காத்திருந்தோம். சில நிமிடங்களில் ஒரு மணி ஒலித்தது. உள்ளே சென்றோம். 

‘’இந்த நிமிடத்திலிருந்து உங்கள் புராஜெக்ட்டுக்கு வழிகாட்டப் போவது துறைத் தலைவர் . இனி உங்கள் வழிகாட்டி துறைத்தலைவர்’’ என்று ஆங்கிலத்தில் கூறினார். 

நான் துறைத்தலைவருக்கு நன்றி கூறினேன். மெட்டிற்கு பதட்டத்தில் என்ன ஏது என்று புரியவில்லை. நான் அவனிடம் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன். அவனும் நன்றி கூறினான். 

பலநாள் சிக்கல் தீர்ந்ததின் மகிழ்ச்சியில் கேண்டீனுக்கு சென்று தேனீர் அருந்தினோம். பதினைந்து நிமிடம் கழித்து மீண்டும் துறை அலுவலகத்துக்கு செல்லலாம் என்று சொன்னேன். மெட் ‘’ஏன்’’ என்றான். வழிகாட்டி மாற்றப்பட்டதை நோட்டிஸ் போர்டில் அறிவிப்பாக வெளியிட்டிருப்பார்கள் : அதனைச் சென்று பார்ப்போம் என்றேன். என் யூகம் சரியாக இருந்தது. 

மறுநாள் காலை  ‘’ ஒரு மாணவனுக்காக ஒரு பேராசிரியர் மேல் நடவடிக்கை எடுத்தது என்பது கல்லூரி சரித்திரத்திலேயே கிடையாது ‘’ என்று கூறியவரின் வகுப்பு அன்றும் முதல் பிரிவேளையாக இருந்தது. அப்போது அந்த வகுப்பில் இருந்த அனைவருக்கும் சரித்திரம் மாறியிருப்பது தெரிந்திருந்தது.