Saturday 31 October 2020

ஆசான் சொல் - 7

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும் (525)

உறவுச் சுற்றம் என்பது ஒருவரை சூழ்ந்து இருப்பது. எல்லா குடும்ப நிகழ்வுகளிலும் பங்கெடுப்பது. அடிக்கடி சந்திக்க வாய்ப்பு உள்ளது. அடிக்கடி சந்திக்க வாய்ப்பு உள்ளது என்பதாலேயே நெருக்கம் பாராட்டுவது; மாற்றிக் கொள்ள இயலாதது. 

அந்த சுற்றத்துக்கு எப்போதும் தம்மால் இயன்ற எளிய உதவிகளை அளிக்க வேண்டும். அவர்கள் துயரில் இருக்கும் போதோ சிக்கலில் இருக்கும் போதோ அல்லது அவர்களுக்கு ஆலோசனை தேவைப்படும் போதோ இனிமையான சொற்களால் அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும். 

இவ்வாறான தன்மை உடைய ஒருவர் சுற்றம் சூழ இருப்பார். 

Friday 30 October 2020

ஆசான் சொல் - 6

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். (485)

உலகியலில் காத்திருப்பது என்பது நெடிய செயல்பாடு. மிக உயர்ந்த ஒன்றை இலக்காகக் கொண்டவர்கள் சாமானிய மனநிலையை விட மேம்பட்ட மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். அவ்வாறு மேம்பட்ட மனநிலையைக் கொண்டிருப்பதாலேயே சுற்றி இருப்பவர்களால் ஆர்வத்துடன் கவனிக்கப்படுவார்கள் ; அவர்களால் சற்று விலக்கத்துடனும் வைக்கப்படுவார்கள். 

எந்த பெரிய செயலும் பெரிய விளைவை உருவாக்கும் என்பதால் அதற்குரிய அடர்த்தி அச்செயலின் எல்லா அம்சத்திலும் இருக்கும். அது வெளிப்படுவதற்கு ஏதுவான காலம் என்பது இன்றியமையாத ஒன்று. 

ஒரு பெரிய செயலை - ஒரு பெரிய புதிய செயலை - நிகழ்த்த திட்டமிட்டிருப்பவர்கள் உரிய காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். அவ்வாறு காத்திருக்கும் காலத்தில் அவர்கள் மனம் முழுக்க அச்செயலே நிறைந்திருக்கும் எனினும் அதனை மேலும் மேலும் கூர்மையாக புறவயமாக நோக்கியவாறும் அளவிட்டவாறும் இருக்க வேண்டும். அவ்வாறு செய்ய செய்ய அச்செயல் மேலும் துலக்கம் பெறும்; துல்லியமடையும். 

அவ்வாறு காத்திருக்கும் காலகட்டத்தில், தம்மை உடலளவில் மனத்தளவில் வலிமைப்படுத்திக் கொள்ளும் செயல்பாடுகளில்  ஈடுபட வேண்டும். ஒரு புதிய செயலை நிகழ்த்த வேண்டும் என்னும் ஆர்வமும் துடிதுடிப்பும் பரவசமும் அலையென எழும் எனினும் தம்மை வலிமைப்படுத்தியவாறு தக்க காலத்துக்கு காத்திருக்க வேண்டும்.

பொதுவாக ராஜதந்திரிகள் அவ்வாறு காத்திருப்பார்கள். இன்னொரு கோணத்தில் ராஜதந்திரம் என்பதே அவ்வாறு காத்திருத்தலே. 

சாமானியர்களுக்கும் இந்த தன்மை முக்கியமான தேவையே. 

காத்திருக்கும் காலத்தில் செயலற்று இருப்பதாய் விமர்சனங்கள் வைக்கப்படலாம். காத்திருப்பவரின் செயல்திறன் ஐயத்துக்குள்ளாக்கப்படலாம். வசை பாடப்படலாம். எனினும் பெரும் செயல் ஆற்ற விரும்புபவர்கள் கலங்காமல் அமைதி காப்பார்கள். 

Thursday 29 October 2020

உன் இசையில்

மெல்லப் பாய்கின்றன நீரோடைகள்
இரவின் அடர்த்தி கொண்ட
குளிர் அருவி கொட்டிக் கொண்டிருக்கிறது
மண் வாசனை எழுப்பும் தூறல் 
மட்பாண்ட நீரின் குளிர்ச்சி
மோனித்திருக்கும் 
இந்த பாறைக்குத் தான்
எத்தனை
வழவழப்பு

நீர்மை என்பது என்ன கண்ணே

நெருங்கினால் குளிரும் தீ யா?

உனது இசையின் பிராந்தியங்களில்
வன்முறைகள் இல்லை
வலிகள் இல்லை
அச்சங்கள் இல்லை
ஏமாற்றங்கள் இல்லை

உனது பிராந்தியங்களில்
அவ்வப்போது
உலவிச் செல்கின்றனர் 
கடவுள்கள்

உனது பிராந்தியங்களில்
உடனிருக்கின்றனர்
கடவுளர்

தமருகம்

உன் இசைக்கருவியின்
நரம்பொன்றை
மீட்டுகிறாய்
அதிர்வு எங்கும்
உன் குரல் 
இணைகிறது
பெருவெள்ளம்
கண்ணீர்
மழை
கடல்
மேகம்
நீர்மை
ஜீவன்களின் குருதி அத்தனை குளிர்ந்திருக்கிறது
உன் ஒலி 
மெல்ல 
முற்றும் கரைகையில்
நிலைபெறுகிறது
நிச்சலனம்
பனிவரையில்
ஒலிக்கத் தொடங்குகிறது
இறைமையின்
உடுக்கை

Wednesday 28 October 2020

சுயம்பு

வேர்கள் கொண்டிருக்கவில்லை
திசையெங்கும் கிளை பரப்பவில்லை
ஆற்றல் திரட்டி
துளி துளி யாய் மேலெழவில்லை
நீ
மலராக இருக்கிறாய்
கருணையின் மணம் பரப்புகிறாய்
கடவுளைப் போல

ஆசான் சொல் - 5

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். (479)

உலகியல் விஷயங்கள் பலர் தொடர்புடையவை. பலரது எண்ணங்களும் சமூகப் பழக்கங்களும் இணைந்தவை. சமூகப் பழக்கங்கள் என்பவை பன்னெடுங்காலமாக உருவாகி வந்திருப்பவை. உலகியலில் ஒருவர் செய்யும் செயல் மற்றவர்களால் எவ்வாறு உள்வாங்கப்படுகிறது என்பது மிகக் குறைந்த சதவீதமேனும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. 

இந்த திருக்குறளில் வள்ளுவர் ஒரு வணிகனிடம் பேச வேண்டியதைப் பேசுகிறார். 

ஒரு வணிகன் தன் வணிகத்தைக் கணக்கிட்டே செய்வான். எனினும் அதனால் ஈட்டும் செல்வத்தை அவன் எவ்விதம் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மற்றவர்களுக்கும் செலவழிக்கிறான் என்பதைப் பொறுத்தே அவன் நிலை பெறுவது இருக்கும். வணிகத்தைப் போலவே குடும்பச் செலவையும் அவன் கறாராக மதிப்பிட்டு செய்தால் குடும்ப உறுப்பினர்கள் அதிருப்தி அடைவார்கள். பொருள் ஈட்டுவதற்கு தேவைப்படும் உழைப்பைப் போலவே அதனை எவ்விதமாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் வணிகனுக்கு கவனம் தேவை. 

இது வணிகர்களுக்கு மட்டும் உரியது அல்ல. அனைவருக்குமானது. எனினும் வள்ளுவர் சிறு பகடியுடன் ‘’அளவறிந்து’’ என்கிறார். பொருட்களை அளந்து நிறுத்து விற்பதில் வணிகர்களின் அணுக்கத்தை உணர்ந்தே இவ்வாறு கூறுகிறார். 

செல்வம் ஈட்டியவர்களை முகஸ்துதி செய்பவர்கள் சூழ்வார்கள். அவர்கள் சொல்லும் சொற்கள் அவன் ஆணவத்தை திருப்தி செய்யும். அதற்காக அவன் செலவழிக்கத் தொடங்குவான். இல்லாத தகுதிகள் தனக்கு இருப்பதாக எண்ண ஆரம்பிப்பான். அத்தகைய எண்ணம் ஏற்பட்டதுமே உடன் இருப்பவர்களிடம் துச்சமாக நடக்கத் தொடங்குவான். புகழ்பவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்வான். அவனது சரிவு அங்கிருந்து தொடங்கும். பெரும் வீழ்ச்சி நிகழும். 

இந்த திருக்குற்ளில் ’’உளபோல இல்லாகித் தோன்றா’’ என்கிறார். இருப்பது போலவும் இருக்கும்; இல்லாமல் ஆகும்; நினைத்தது நடக்காமல் நினைக்காதது நடக்கும். 

பொருள் ஈட்டுதலில் எவ்வளவு அக்கறை காட்டப்படுகிறதோ அதே அளவு அக்கறை அதனை தக்கவைத்துக் கொள்வதிலும் செலவழித்தலிலும் காட்டப்பட வேண்டும். 

Tuesday 27 October 2020

என்னை அழித்து விடு அன்பே
உன் இயல்பால்
உன் மென்மையால்
உன் இசையால்
என்னை அழித்து விடு அன்பே

பனி படர்ந்த பர்வதங்களில்
ஓடி ஓடி நீரோடை
மென்மையாக்கியிருக்கும் 
கூழாங்கற்களில்
அடர்ந்திருக்கும் இரவிலிருந்து
முளைத்திருக்கும்
பச்சைப் பசும் புல்லில்
பறவையின் சின்னஞ்சிறு சிறகொன்றில்
உயிர் பெற்று 
மீள்கிறேன் 

Monday 26 October 2020

விஜயதசமி

சில ஆண்டுகளுக்கு முன்னால், விஜயதசமி தினத்தன்று மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை நீண்ட மோட்டார்சைக்கிள் பயணம் ஒன்றைத் துவக்கினேன்.  (காவிரியிலிருந்து கங்கை வரை). 22 நாட்கள் பயணம் அது. மொத்த தூரம் 6166 கி.மீ. 

இன்று காலை மரக்கன்றுகள் வழங்கிக் கொண்டிருக்கும் கிராமத்துக்குக் கிளம்பிச் சென்றேன். அங்கே சென்று கொண்டிருக்கும் போது சட்டென நான் மேற்கொண்ட மோட்டார்சைக்கிள் பயணத்தை விஜயதசமி அன்று துவக்கியது நினைவுக்கு வந்தது. எண்ணற்ற கிராமங்கள். பல்வேறு விதமான கிராம மக்கள். பல மொழி பேசுபவர்கள். அவர்கள் காட்டிய அளவற்ற பிரியம். எந்த முன்னேற்பாடும் இன்றி இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் கிளம்பிச் செல்லலாம் என்ற நம்பிக்கையை அவர்கள் நாளும் பயணிகளுக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘’அதிதி தேவோ பவ’’ என்ற சொல்லின் பொருளாக விளங்குபவர்கள். 

உண்மையில், அந்த பயணம்தான் ஏதேனும் ஒரு கிராமத்துக்கு முழுமையாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலை அளித்தவாறே இருக்கிறது. எனது கடமையை முழுமையாகச் செய்கிறேன் - முயற்சிகளை முழுமையாக அளிக்கிறேன். முயற்சிகள் முழுமையாக இருக்கையில் திட்டமிடல் துல்லியமாக இருக்கையில் நல்ல பயன் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன். 

இன்று கிராமத்தில் பார்த்த பல விவசாயிகள், அவர்கள் தோட்டத்திற்கு வந்து நன்றாக வளரும் மரக்கன்றுகளைப் பாருங்கள் என்கிறார்கள். மரக்கன்றுகள் நல்ல வளர்ச்சி பெறும் தோறும், அவர்களுக்கு என் மீதான பிரியம் கூடிக் கொண்டே செல்கிறது. 

அன்பு நிறைந்த அந்த முகங்களிலிருந்து, மேலும் செயல் புரிவதற்கான ஊக்கத்தை அடைகிறேன். 
உயிர் எங்கிருக்கிறது என் அன்பே
உயிர் என்னவாய் இருக்கிறது 
நா கொள்ளும் தாகம் உடல் அறியும்
ஆத்ம தாகத்தை அறியுமா
உன் இசையின் நீர்மை
தாகத்தை 
இன்னும் இன்னும் என
கூட்டிக் கொண்டே செல்கிறது
தாகம் இத்தனை இனியதா கண்ணே
மரணம் இத்தனை இனியதா
கணங்களின் நீள் வரிசை 
விடுபடப்போகும்
அத்தருணத்தில் 
மென்மையான
அந்த மலரின் மணம்
உன் இசையுடன்
முடிவற்ற வெளியில்
விடுதலை கொண்டு
சஞ்சரிக்கும்

Sunday 25 October 2020

உன் இசையுடன் இணைந்து கொள்கிறேன்
உன் இசையில் கரைகிறேன்
எல்லைகள் உருகி வழிகின்றன
உன் இசை சஞ்சரிக்கும் காற்று
நுரையீரல்களில் நிறையும் போது
பனிக்கட்டிகளாகின்றன
பாறைகள்
உடலில் சிறையிருக்கும்
சிறகடிக்கும் அபூர்வ பறவை
உன் இசை நிறையும்
ஏதோ ஒரு கணத்தில்
விண்ணேகும்
இந்த உடல்
மண்ணில் விதையாய்
உயிர் கொள்ளும்

Saturday 24 October 2020

ஆசான் சொல் - 4

வினைவலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். (471)

இது ஒரு சுவாரசியமான திருக்குறள். 

ஓர் எண்ணம் செயலாக்கப்பட உள்ள நிலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து வள்ளுவர் பேசுகிறார். 

முதல் விஷயம், அந்த செயல் எந்த அளவானது எத்தனை பெரியது என்பது மதிப்பிடப்பட வேண்டும். அந்த செயலை ஆற்ற உள்ளவர் தனது திறன்கள், திறனின்மைகள், எல்லைகள், ஆற்றல் ஆகியவற்றை கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும். 

இரண்டாவதாக, எவ்வகையான செயல் எனினும் அதற்கு எதிர்ப்பு ஏதும் இருக்கக் கூடும் என்ற முன்புரிதல் தேவை. எவ்வகையான எதிர்ப்புகள் வரக் கூடும் என்பதை செயல்புரிபவர் கணிக்க வேண்டும். அவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்தும் அவரிடம் ஒரு திட்டம் இருக்க வேண்டும். அவ்வாறு திட்டமிடாமல் இருந்தால் அச்செயல் நிகழும் போது தற்காலிகத் தடை ஏற்படும். அது நிரந்தரத் தடையாக மாறவும் வாய்ப்பு உண்டு. 

எவ்வாறு எதிர்ப்பு இருக்கிறதோ அவ்வாறே அதனை ஏற்கும் சக்திகள் அச்செயலில் இணைந்து கொள்ளவும் வாய்ப்பு உண்டு. அவர்களை அதில் எவ்வாறு இணைத்துக் கொள்வது என்ற செயல்திட்டமும் தேவை. இல்லையேல் செயலின் விளைவை ஒருங்கிணைக்க இயலாமல் போகும். 

ஓர் எண்ணம் செயலாக்கப்படும் போது,செயலின் தன்மை மற்றும் அளவு,  செயல் புரிபவரின் திறன் மற்றும் வலிமை, செயலுக்கு உருவாகக் கூடிய எதிர்ப்பு மற்றும் ஆதரவு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். 

Friday 23 October 2020

இந்த மழைத்துளிகள்
இலைகளைத் தொடுவது
போன்றதா
நம் முத்தங்கள்

காற்றில்
ஈரம் அடர்ந்திருக்கும்
காலை அந்தியின்
வண்ணங்கள்
நம் அன்பின்
நிறங்களா

மழை பெய்த பின்
துளிர்க்கும்
தளிர்கள் எத்தனை
உன்னிடம் சொல்ல வேண்டியவை
கூடிக் கொண்டே போகின்றன

பேதம் இல்லாத இரவு
யாவையும்
பற்றிப் படர்கிறது
நம்மைப் போல

Wednesday 21 October 2020

ஆசான் சொல் - 3

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும். (457)

 

இன்று மனநலம் என்ற வார்த்தை பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. அதனை முதலில் திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார். பௌத்தம் மனத்தை தூய வாழ்க்கைப் பாதைக்கான கருவியாகப் பயன்படுத்த முடியும் என்கிறது. பௌத்தத்தின் எண் பெரும் நெறிகள் மனத்தின் மீது ஆளுகை கொள்வதற்கானவையே.

மனநலம் – ஆரோக்கியமான மனம். ஆரோக்கியமான மனம் ஒரு தனி மனிதனின் ஆத்ம சாதனைக்கும் ஆன்மீகப் பாதையில் அவன் முன்னேற்றத்துக்கும் பெரிய அளவில் உதவும்.

இனநலம் – இங்கே இனம் என்ற சொல் ஒத்த மனம் கொண்டு இணைந்து ஒரே இடத்தில் வாழ்பவர்களையும் செயல் புரிபவர்களையும் குறிக்கிறது. இந்திய மரபில் ‘’சத்சங்கம்’’ என்ற ஒன்று உண்டு. ஒரு நற்செயல் புரிய விரும்புபவர்கள் இணைந்து இருக்க வேண்டும். ’’சத்சங்க’’த்தின் வழிமுறை ஒன்றிணைதல். பொதுப் புரிதலின் அடிப்படையில் இணைந்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவி வாழ்பவர்களையே திருவள்ளுவர் ‘’இனம்’’ என்ற சொல்லால் சுட்டுகிறார்.

வாழ்க்கை குறித்த மேலான பார்வை கொண்டோருடன் இணைந்து இருத்தலும் இணைந்து செயல்படுதலுமே பல நன்மைகளை உருவாக்கித் தரும்.

Monday 19 October 2020

வான் ஒலி

ஊரை ஒட்டிய ஒரு சிறு கிராமம். 

அதில் ஒரு சின்னஞ்சிறு மைதானம். சிறுவர்கள் சிலர் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். மைதானத்தின் நடுவில் ஓர் அரசமரம். அடியில் வினாயகர். ஒரு பெண் விளக்கேற்றி விட்டு சென்றார். 

தற்செயலாக அந்த பக்கம் சென்றவன், மைதானத்தில் நின்று சிறுவர்கள் ஆட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். கதிர் ஒளி ஓய்ந்து தீபத்தின் சுடர் ஒளி நிரம்பிக் கொண்டிருந்தது. 

அப்போது அந்த ஊரைச் சேர்ந்த எனது நண்பரும் மைதானத்துக்கு வந்து சேர்ந்தார். நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கிறோம். அவர் வெளிநாடு வாழ் இந்தியர்.இரண்டு மூன்று ஆண்டுகள் அங்கே இருப்பார். இங்கே வந்து ஓரிரு மாதங்கள் இருந்து விட்டு மீண்டும் அங்கு சென்று விடுவார். இன்னும் இரண்டு ஆண்டில் ஊரோடு வந்து சேர்ந்து விடலாம் எனத் திட்டமிட்டுள்ளார்.  பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். 

பேச்சு கம்பராமாயணம் நோக்கி திரும்பியது. 

நான் என் நினைவிலிருந்து சில கம்பராமாயணப் பாடல்களை சொல்லி அத்தருணங்களை கம்பன் அழகியலை நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். 

நன்றாக இருட்டி விட்டது. ஒற்றை தீபம் மட்டும் மிக மெல்லிதாக சுடர்ந்து கொண்டிருந்தது. 

கம்பனில்  ஆழ்ந்ததும் நேரம் போனதே தெரியவில்லை. ஒன்றிலிருந்து ஒன்றாக சொல்லிக் கொண்டே சென்றேன். 

குகன் ராமனைச் சந்திக்கும் இடம், அனுமனுக்கும் ராமனுக்குமான உரையாடல், 
வீடணன் அடைக்கலம்,  என பேச்சு விரிவாகப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு இடத்தில் நிறுத்தினேன். 

அப்போது மரத்திற்கு அந்த பக்கம் இருந்து ஒரு குரல் கேட்டது. 

‘’சார்! நீங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சப்ப நான் வந்துட்டேன். ராமாயணத்தைப் பத்தி பேசுறீங்கலேன்னு நானும் நீங்க பேசுனது கேட்டன். ரொம்ப நல்லா அழகா சொன்னீங்க சார். மனசுக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு. சந்தோஷம் சார். ’’ 

அந்தி இருள் நிறைந்திருந்ததால் எனக்கு இப்போதும் அவர் முகம் தெரியாது. குரல் மட்டும் தான் தெரியும். அவருடைய பிரியமான சொற்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டேன். 

Sunday 18 October 2020

 நீ
இசைக்கையில்
இந்த உடல்
இல்லாமல் ஆகிறது
இவ்வளவு எடை அற்றதா
இத்தனை இனிமை கொண்டதா
இந்த மனம்
என்னால் என்ன தர முடியும்
என் கண்ணீரை.

என் ஆன்மாவை
ஒரு மலராக
உன்னிடம் தருகிறேன்
உனது அணிகளில்
சின்னஞ்சிறிய
ஒன்றாக

Friday 16 October 2020

ஒளி

பிறக்கும்
ஒவ்வொரு மலரும்
தன் மலர்வால்
தன்னியல்பால்
ஓயாமல்
இறைமைக்கு
நன்றி தெரிவிக்கின்றன

மலர்களுக்கான
வானின் ஆசிகளை
ஏந்தி
நிரம்புகிறது
ஒளியால் இவ்வுலகம்

Thursday 15 October 2020

சாகர் மாதா

 எனக்கு மகத்தான செயல்களைச் செய்பவர்கள் மீது பெரும் மதிப்பும் பேரார்வமும் உண்டு. லௌகிகம் மனிதர்களில் பெரும்பாலானோருக்கு வாய்ப்புகளையும் வசதிகளையும் அளிப்பதே. எனினும் லௌகிகத்தின் சௌகர்யங்களுக்குள் மட்டும்  தங்களின் வாழ்வைக்  குறுக்கிக் கொள்ளாமல்- அதன்  எல்லைகளை மனிதர்களில் சிலர் எப்போதும் மீறிப் பார்த்த வண்ணமே இருக்கிறார்கள். சக மனிதர்களுக்கு மேலான சாத்தியங்களை அவர்கள் தங்கள் வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவாறு இருக்கிறார்கள்.

இன்று எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பால் அவர்களின் சுயசரிதையை வாசித்தேன். 


இமயமலையின் மலைக்கிராமம் ஒன்றில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தை பச்சேந்திரி பால். வருடத்தின் ஆறு மாதம் பனி நிரம்பியிருக்கும் அப்பிரதேசத்தின் வாழ்க்கை அப்பகுதி மக்களை கோடைக்காலத்தில் மலையின் மேல் இருக்கும் ஒரு ஊரிலும் குளிர் காலத்தில் மலைக்குக் கீழ் இருக்கும் ஒரு ஊரிலும் வாழ்வதற்கான தேவையை உருவாக்குகிறது. ஆடு மேய்த்தல் மற்றும் விவசாயமே தொழில். ஐந்து குழந்தைகள் உள்ள குடும்பத்தில் மூன்றாவதாகப் பிறக்கிறார் பச்சேந்திரி பால். 

சின்ன வயதிலிருந்தே சுட்டிப் பெண். அபாயங்களை எதிர்கொள்ளும் சாகசம் நாடும் மனம் என்பது அவருக்கு இயல்பிலேயே இருக்கிறது. அத்துடன் எந்த இடரையும் நேர்கொண்டு எதிர்கொள்ளும் மன உறுதியை அவர் தன் சூழலிலிருந்து பெறுகிறார். 

மலைக்குன்றுகளில் அலைந்து திரிகிறார். ஒருமுறை பனிக்காலத்தில் குன்றின் உச்சி ஒன்றிலிருந்து கீழே விழுந்து முகமெல்லாம் நீலம் பாரித்து விடுகிறது. அபாயமான நிலையில் தந்தையால் காப்பாற்றப்படுகிறார். வசதி குறைவான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தையல் கற்றுக் கொண்டு தினமும் ஒரு சல்வார் கம்மீஸ் தைத்துக் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை தனது தந்தைக்கு அளித்து அவரது வருவாயுடன் அதனைச் சேர்த்து குடும்பத்தின் நிலையை உயர்த்துகிறார். குடும்பத்தின் மற்ற குழந்தைகளின் படிப்புக்கு உதவுகிறார். 

பள்ளிப்படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகிறார். மருத்துவம் பயில விரும்புகிறார். ஒரு சில மதிப்பெண்கள் குறைவாக இருப்பதால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. கலைப்பாடத்தைத் தேர்ந்தெடுக்கிறார். சமஸ்கிருத மொழியில் இளங்கலை பட்டம் பெறுகிறார். அவர் சமஸ்கிருதம் பயில விரும்பியமைக்கான காரணமாகச் சொல்வது : சமஸ்கிருதம் பயில்வதன் மூலம் இமயத்தை மேலும் நெருங்கி அறிய முடியும் என்பதை. காளிதாசரின் குமார சம்பவமும் மேகதூதமும் பயில்வதற்காகவே சமஸ்கிருதத்தைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார். 

பள்ளி கல்லூரிகளில் விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் கலந்து கொண்டு முதன்மை பெறுகிறார். மலை ஏறும் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு மலை ஏற்றத்துக்கான பயிற்சியில் ஈடுபடத் துவங்குகிறார். அவரது பயிற்றுனர்கள் அவரைப் பார்த்ததுமே அவர் ‘’எவரெஸ்ட் வாலா’’ என்கின்றனர். அவரால் நம்ப முடியவில்லை. 

‘’பாகீரதியின் ஏழு சகோதரிகள்’’ என ஏழு பெண்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு ஏழு பெண்களுக்கு மலை ஏறும் பயிற்சி அளிக்கப்படுகின்றது. அதில் ஒவ்வொருவரின் திறனும் மதிப்பிடப்பட்டு எவரெஸ்டு ஏற்றத்துக்கு பச்சேந்திரி தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

எவரெஸ்டு ஏற தினசரி பயிற்சி என்பது சில மாதங்களுக்கு தினமும் 500மீ உயரம் உடைய ஒரு குன்றில் ஏறி இறங்க வேண்டும். மேலும் தினமும் 10 கி.மீ ஓட வேண்டும். 

உயரம் குறைவான சிகரம் ஒன்றில் இவர்களின் பயிற்சிக் குழு ஏறி பயிற்சி எடுக்கிறது. மற்றவர்கள் விரைவாக முன்னேறுகின்றனர். இவர் சீரான வேகத்தில் மிகச் சரியாக காலடிகளை வைத்து நடக்கிறார். பயிற்றுனர் இதுதான் எவரெஸ்டு நடை. இதனையே பச்சேந்திரியிடமிருந்து மற்றவர்கள் பயில வேண்டும் என்கிறார். 

காளையின் நடை மெல்ல இருக்கும். ஆனால் உறுதியானதாக இருக்கும். பெருந்தூரத்தை அதனால் தன் ஆற்றலை மிகச் சரியான சமமான அளவில் செலவிட்டு அடைய முடியும். ரிஷப நடை என்பார்கள். 

எவரெஸ்டு ஏறும் போது பனிச்சரிவு நேரிட்டு இவரது கூடாரத்தின் பெரும் பகுதி பனியில் புதைகிறது. பக்கத்துக் கூடாரத்தில் இருந்தவர் தனது ஸ்விஸ் கத்தியால் பச்சேந்திரியின் கூடாரத்தைக் கிழித்து அவரைக் காப்பாற்றுகிறார். தான் வணங்கும் துர்க்கையும் அனுமனுமே தன்னைக் காத்ததாகக் கூறுகிறார் பச்சேந்திரி. 

எவரெஸ்டை முதல் முறையாகப் பார்க்கும் போது ‘’சாகர் மாதா’’ என உணர்ச்சி மேலிட்டு அழுது மண்ணில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார். இமயப் பிராந்தியத்தில் இருப்பவர்கள் எவரெஸ்டு சிகரத்தை சாகர் மாதா என்பார்கள். 

பல நாள் கனவு நனவாகிறது. சிகரத்தின் உச்சியில் சென்று நிற்கிறார் சாகர் மாதாவின் குழந்தையான பச்சேந்திரி இந்தியப் பெண்களின் பிரதிநிதியாக. 


1984ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்தது. 


2019ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது அளித்தது. 

***

எவரெஸ்ட் : எனது உச்சி யாத்திரை, பச்சேந்திரி பால், தமிழில் : தம்பி சீனிவாசன், நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு. விலை ரூ.14/- 


Sunday 11 October 2020

கடவுளின் உலகம்

 நேராக
விருட்சத்தைப் போல
அமர்ந்திருக்கிறாய்

பாடுகையில்
உன்னிலிருந்து
வெளி எங்கும்
சிதறிப் பறக்கின்றன
ஆயிரம் புள்ளினங்கள்

உன் இசை நிறையும்
அகங்களில்
மலர்கின்றன
நூறு நூறு மலர்கள்

பொழியத் தொடங்குகிறது
அமிர்தத்தின்
மழைத்துளிகள்

நீ பாடுகையில்
உருவாகும் 
உலகம்
கடவுளின் உலகமாக
இருப்பது
எப்படி

மழையின் இசை

ஒரு வெட்டவெளியில்
நின்று கொண்டிருக்கிறாய்
நீளமான மழைத்துளியைப் போல
உன் கால்கள்
நீர்மை ததும்பும்
உனது ஆடைகள்
வெயிலின் தீண்டலுக்கு
முத்தாய் அரும்பும் முகம்
அங்கு யாருமில்லை
நீ 
யாருக்கும் காத்திருக்கவும் இல்லை
இயல்பாக பாடல் ஒன்றை முனகுகிறாய்
புன்னகைக்கிறாய்
சத்தமாகப் பாடிப் பார்க்கிறாய்
இந்த மழை வந்தது எங்கிருந்து?

மழையில்
கரைந்திடாத
ஒரு மழைத்துளியாக 
நீ 
நின்று கொண்டிருக்கிறாய்

Saturday 10 October 2020

நூல் அகம்

ஈஷ்  ஊருக்கு வந்திருக்கிறான். நான் அவனைப் பற்றி தளத்தில் சத்யம் சிவம் என்ற பதிவில் முன்னர் எழுதியிருக்கிறேன். பன்னிரண்டாம் வகுப்பில் அவனுக்கு ஒரு தேர்வு (கம்ப்யூட்டர் சயின்ஸ்) மீதியிருந்தது. பின்னர் அந்த தேர்வு எழுதத் தேவையில்லை என்றானது. சிவகாசியில் ஒரு கல்லூரியில் பொறியியல் சேர்ந்துள்ளான். ஆனால் இன்னும் கல்லூரி செல்லத் துவங்காததால் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதாகச் சொல்கிறான்.

’’ஈஷ்! எனக்கு உன்னோட ஹெல்ப் வேணும்.’’

‘’சொல்லுங்க அங்கிள்! செஞ்சிடுவோம்’’

‘’என்னோட புக் ஷெல்ஃபை அடுக்கணும்’’

‘’ம்! ஓ.கே’’

‘’அதில பாரு நாம புக்ஸை பொயட்ரி, நாவல், ஷார்ட் ஸ்டோரி, நான் ஃபிக்‌ஷன் இப்படி பிரிக்கணும்’’

‘’சரி’’

‘’புக்ஸை எடுத்து ரூமுல பரப்புனோம்னா ரூம் முழுக்க நிறைஞ்சிரும். நம்மால ரூமுக்குள்ள போக வர முடியாது. அதனால நாம ஒர்க்கை ஆரம்பிச்சோம்னா ஒரு நாள் ரெண்டு நாள்ல முடிச்சிடனும்’’

‘’லெட் அஸ் டிரை’’

அ-புனைவுகள் என்னிடம் அதிகம் இருக்கக் கூடும் என்று எண்ணியிருந்தேன். எனினும் அவற்றுக்குச் சமானமான எண்ணிக்கையில் புனைவுகளும் இருக்கின்றன. ஒவ்வொரு புத்தகத்தைக் கையில் எடுக்கும் போதும் அது தொடர்பான நினைவுகள். புத்தகத்தை வாசித்த நினைவுகள். 

ஈஷ் ஒவ்வொரு புத்தகமாக எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான். நான் பிரித்து வைத்தேன். ஒரு குறிப்பேட்டில் புத்தகங்களைக் குறித்து வைக்கலாமா என்று யோசித்தேன். தேவைப்படாது. பிரிவு வாரியாக அடுக்கி தினமும் புத்தகங்களின் பெயர்கள் கண்ணில் பட்டுக் கொண்டிருந்தாலே போதும். 

ராகுல் திராவிட் குறித்த புத்தகம் ஒன்றை ஈஷ்ஷுக்கு பிரியப் பரிசாக அளித்தேன். 

’’நீங்க ஐடியாவை சொல்லுங்க அங்கிள்! நான் அடுக்கறன்.’’

இரண்டு நாட்கள் மதிய நேரத்தில் வந்து மூன்று மணி நேரம் உதவினான். 

அவனுக்குப் புரியாத ஒன்று அடுக்கும் நேரத்தில் இவர் ஏன் நின்றபடியே புத்தகம் வாசிக்க ஆரம்பித்து விடுகிறார் என்பது. புத்தகத்தின் மீது தீரா நேசம் உள்ளவர்களால் புத்தகங்களை அடுக்கும் போது புத்தகங்களை வாசிக்காமல் இருக்க முடியாது. பல ஞாபகங்கள் வந்து அலை மோதின. புத்தகங்களின் எத்தனை வாக்கியங்கள் வாழ்க்கை முழுதும் கூட வந்துள்ளன. எத்தனை அறிஞர்களை ஞானிகளை காலத்தைக் கடந்தும் நம்மால் சந்திக்க முடிகிறது. ‘’இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர் தம் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.’’

பின்னர் இரண்டு நாட்கள் வரவில்லை. சிறுவர்களுடன் சேர்ந்து பந்து விளையாடிக் கொண்டிருந்தான். நான் நாள் முழுக்க எதுவும் செய்யாமல் இருக்கக் கூடாது என்பதற்காக தினமும் ஐம்பது புத்தகங்கள் என எடுத்து வைத்தேன். 

ஒரு வேலையை ஒருவரே செய்வதற்கும் பலர் சேர்ந்து செய்வதற்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது. ‘’கூடித் தொழில் செய்’’ என்பது பாரதியாரின் புதிய ஆத்திசூடி. Sub conscious ஆக நமது வேலைத்திறன் மேம்படும். பலர் இணைந்து ஒரு செயல் ஆற்றும் போது அவர்கள் தனித்தனியாக ஆற்றக்கூடிய வேலையின் அளவை விட கூடுதலான அளவு வேலை செய்யப்படும். 

இன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் காலையிலிருந்து அவர்கள் வீட்டில் நிகழ்ந்த பூசனைக்கு உதவிக் கொண்டிருந்தான். வழக்கமாக அவன் இரவுலாவி. அதிகாலை 4 மணி வரை விழித்திருப்பான். இசை ரசிகன். இரவில் வெகுநேரம் இசை கேட்கும் பழக்கம் உள்ளவன். சாஸ்திரிய இசை, மேற்கத்திய இசை இரண்டும் கேட்பான். அவனது ரிங் டோன்கள் , மெஸேஜ் டோன்கள் மிக நூதனமாக இருக்கும். 

‘’ஈஷ்! நீ ஏன் இப்படி காலைல 4 மணிக்கு வரைக்கும் முழிச்சிட்டு இருக்க’’

‘’அங்கிள்! மியூசிக் நம்ம இதயத்தோடு பேசறது. பகல் மெட்டீரியலிஸ்டிக் வேர்ல்டுக்கானது. இரவு தான் இசைக்கானது.’’

நேற்று இரவு அவன் வீட்டில் கண்டிப்பாக 10 மணிக்கெல்லாம் படுத்து உறங்கி விட வேண்டும் என கண்டிப்பான கட்டளை இட்டு விட்டார்கள். 

இன்று மதியம் அறைக்கு வந்தான். அறை முழுதும் புத்தகங்கள். 

‘’ஈஷ்! எல்லாம் தனித்தனியா பிரிஞ்சு இருக்கு. அப்படியே ரேக்-ல வைக்கணும். நீ ஒன்னு ஒன்னா எடுத்துக் குடு. நான் வைக்கறன். சரியா?’’

‘’ஓ.கே. அங்கிள்’’

‘’டூ செலிப்ரேட் திஸ் மொமண்ட், லெட் அஸ் ரீட் ஏ போயம்’’

‘’நைஸ் அங்கிள்’’

ஒரு கவிதையை வாசித்து விட்டு வேலையை ஆரம்பித்தோம். மூன்று மணி நேரம் ஆனது. 

நடுவில் ஈஷ் கேட்டான். 

‘’உங்களுக்கு காந்தி ரொம்ப பிடிக்குமா அங்கிள்?’’

‘’ஆமாம் தம்பி! ஏன் கேக்கற?’’

‘’நிறைய காந்தி பத்திய புக் உங்க கிட்ட இருக்கு. அதனால கேட்டன்.’’

‘’ஆமாம்பா! எனக்கு காந்தியை ரொம்ப பிடிக்கும்.’’

’’காந்தின்னா அமைதியா அங்கிள்’’

‘’அமைதி - அது பொதுவான வார்த்தை. நான் காந்தியோட முக்கியமான விஷயமா நினைக்கறது அவரோட inclusiveness.  அவரோட organizational capacities.''

''அப்படின்னா?’’

‘’இப்ப நம்ம ஊரையே எடுத்துக்க. காந்தி வர்ரதுக்கு முன்னடி காங்கிரஸ்-ல 50 பேர் மெம்பரா இருந்திருப்பாங்க. அதுல 25 பேர் அட்வகேட்ஸ். 25 பேர் லேண்ட் லார்டு. காந்தி வந்ததும் காங்கிரஸ் உறுப்பினர் ஆண்டு சந்தாவை நாலணா ஆக்கினார் (25 பைசா). ஆயிரக்கணக்கில உறுப்பினர்கள் சேர்ந்தாங்க. நாலணா சொற்பமா இருக்கலாம். ஆனா அந்த மெம்பர்ஷிப் வாங்கின ஒரு சாமானியன் பிரிட்டிஷ் ஆட்சி மேல தனக்கு இருக்கற அதிருப்தியை வெளிப்படுத்துறான். காங்கிரஸ் மெம்பர்ஷிப் அதிகமாகுதுன்னா அதுக்கு என்ன அர்த்தம்னு ஆட்சியில இருந்த பிரிட்டிஷ்காரங்களுக்கு நல்லாவே தெரியும்.’’

‘’சூப்பர் அங்கிள்’’

‘’நீ கூட காந்தியன் தான் ஈஷ்’’

‘’நானா?’’

‘’அடுத்தவங்களுக்கு தன்னால முடிஞ்ச உதவியைச் செய்யற எல்லாருமே காந்தியன் தான்’’

ஈஷுக்கு ரொம்ப சந்தோஷம். 

தேனீர் அருந்தும் நேரம் வந்தது. 

‘’தம்பி! நீ வீட்டுக்கு ஃபோன் செஞ்சு இங்கயே காஃபி குடிச்சிடறன்னு சொல்லிடு. மூணு நாள் முன்னாடி காஃபி குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு போனவன் தான். இன்னைக்குத் தான் வந்திருக்க’’

அவன் ஃபோன் செய்தான். பின்னர் கீழே சமையலறைக்குச் சென்று அம்மாவிடமிருந்து தண்ணீரும் தேனீரும் எடுத்து வந்தான். 

அனைத்தையும் அடுக்கி முடித்தோம். 

நான் ஈஷூக்கு நன்றி சொன்னேன். 

‘’நாட் அட் ஆல் அங்கிள்’’ 


Friday 9 October 2020

வீடணன் அடைக்கலப் படலம்

 
ஆயவன் வளர்த்த தன் தாதை ஆகத்தை

மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்

ஏயும் நம் பகைவனுக்கு இனிய நண்பு செய்

நீயுமே நிகர்; பிறர் நிகர்க்க நேர்வரோ (6494)


தனது தந்தையின் உடலை (ஆகம்) (அகம் – உள்ளம், ஆகம் – உடல்) மாயவன் பிளந்திட மகிழ்ந்திட்ட பிரகலாதனும் எனது பகைவனைக்கு அன்பு செய்யும் நீயும் சமம். என் அழிவை விரும்பும் எவரும் உனக்கு நிகரானவர்கள் இல்லை.

சினத்துடன் இராவணன் கூறினாலும் வீடணன் பிரகலாதன் நிலைக்கு ஒப்பானவன் என்பதை கம்பன் இராவணன் கூற்று மூலமே வெளிப்படுத்துகிறார்.

வீடணன் இன்னும் இராமனைச் சந்திக்கவில்லை.

இராவணனுக்கே புரிந்தது இராமனுக்கு எளிதில் புரியும் என்பது உப- பிரதி.

 

நண்ணினை மனிதரை; நண்பு பூண்டனை;

எண்ணினை செய்வினை; என்னை வெல்லுமாறு

உன்னினை; அரசின்மேல் ஆசை ஊன்றினை;

திண்ணிது உன் செயல்; பிறர் செறுநர் வேண்டுமோ? (6497)

 

நீ ஒரு மனிதனுக்குச் சார்பாக இருக்கின்றாய். அவனுடன் நட்புணர்வு கொள்கிறாய். உனக்கு அரச பதவி மீது ஆசை வந்து விட்டது.

 

பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை;

ஒழி சில புகலுதல் : ஒல்லை நீங்குதி;

விழி எதிர் நிற்றியேல் விளிதிஎன்றனன்

அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் (6500)


சகோதரனை அழித்த பழி எனக்கு வேண்டாம் என்பதால் உன்னை உயிருடன் விடுகிறேன். என் கண் முன் நிற்காமல் நீங்கிச் செல்.

அழிவை அடைய இருப்பவன் அறிவிலிருந்து நீங்கி இருக்கிறான்.

அழிவை அடையப் போகும் இராவணன் வீடணனை நீங்கச் சொல்கிறான்.

 

அனலனும் அனிலனும் அரன் சம்பாதியும்

வினையவர் நால்வரும் விரைவின் வந்தனர்;

கனைகழல் காலினர் கருமச் சூழ்ச்சியர்

இனைவரும் வீடணனோடும் ஏயினார். (6505)

 

வீடணனின் நம்பிக்கைக்குரியவர்களான அனலன், அனிலன், அரன், சம்பாதி நால்வரும் வீடணனுடன் இலங்கையை நீங்கிச் சென்றனர்.

 

மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை;

தாட்சி இல் பொருள்தரும் தரும மூர்த்தியைக்

காட்சியே இனிக் கடன்என்று கல்வி சால்

சூட்சியின் கிழவரும் துணிந்து சொல்லினார். (6510)

 

அறத்தின் வடிவான ஸ்ரீராமனை நாம் காண்போம் என்றனர்.

 

முன்புறக் கண்டிலேன்; கேள்வி முன்பு இலேன்;

அன்பு உறக் காரணம் அறிய கிற்றிலேன்;

என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல் அவன்

புன்புறப் பிறவியின் பகைஞன் போலுமால். (6512)

 

நான் ஸ்ரீராமனை இதற்கு முன்பு கண்டதில்லை. கேள்விப்பட்டதில்லை. எனினும் என் அகம் அவர் மேல் அன்பு கொள்கிறது. என் உடல் உருகும் வண்ணம் அவர் நினைவு இருக்கிறது. பிறப்பு இறப்பு என்னும் சுழல் கொண்ட பிறவியை இல்லாமல் விடுவிப்பவனோ அவன்.

 

அருந்துதற்கு இனிய மீன் கொணர அன்பினால்

பெருந்தடங் கொம்பிடைப் பிரிந்த சேவலை

வரும் திசை நோக்கி ஓர் மழலை வெண் குருகு

இருந்தது கண்டு நின்று இரக்கம் எய்தினான். (6521)

 

பெண் குருகொன்று தன் இணைக்காக காத்திருப்பதை ஸ்ரீராமன் இரக்கத்துடன் கண்டான்.

 

யார்? இவண் எய்திய கருமம் யாவது?

போர் அது புரிதிரோ? புறத்து ஓர் எண்ணமோ?

சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம்

சோர்விலீர் மெய்ம் முறை சொல்லுவீர் என்றான். (6533)

நீவிர் யார்? வருகைக்கான காரணம் என்ன? போருக்கு வந்திருக்கிறீர்களா? வேறு காரணங்களா? உண்மையைக் கூறுங்கள்.

 

சுடு தியைத் துகில் இடை பொதிந்த துன்மதி!

இடுதியே சிறையிடை இறைவன் தேவியை;

விடுதியேல் உய்குதி; விடாது வேட்டியேல்

படுதிஎன்று உறுதிகள் பலவும் பன்னினான். (6536)

 

தீயை ஆடையில் இட்டுக் கொள்வது போல சீதையை சிறையில் அடைத்துள்ளாய் என இராவணனை எச்சரித்தவர் .

 

விளைவினை அறிந்திலம்; வீடணப் பெயர்

நளிமலை யாக்கையன் நால்வரோடு உடன்

களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு

இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான். (6541)

 

மலையென உடல்வலு கொண்டவன். அவன் பெயர் வீடணன். இராவணனின் தம்பி. நம் சேனையின் நடுவே வந்துள்ளான். வருகையின் காரணத்தை எங்களால் முழுமையாக அறிய முடியவில்லை.

 

“‘கற்புடைத் தேவியை விடாது காத்தியேல்

எற்புடைக் குன்றம் ஆம் இலங்கை; ஏழை! நின்

பொற்பு உடை முடித்தலை புரளும் என்று ஒரு

நற் பொருள் உணர்த்தினன்என்றும் நாட்டினான். (6545)

 

சீதாப் பிராட்டியை விடுவிக்கா விட்டால் இலங்கை எலும்புக் கூடுகள் குவிந்து கிடக்கும் நகராகக் கிடக்கும். உனது பத்து தலைகளும் மண்ணில் உருளும் என இராவணனை எச்சரித்தவன் வீடணன்.

 

அப்பொழுது இராமனும் அருகில் நண்பரை

இப் பொருள் கேட்ட நீ இயம்புவீர் இவன்

கைப் புகற் பாலனோ? கழியற் பாலனோ?

ஒப்புற நோக்கி நும் உணர்வினால் என்றான். (6547)

 

இதனைக் கேட்ட பின் நீங்கள் நினைப்பதென்ன என்று இராமன் தன் நண்பர்களிடம் வினவினான்.

 

உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற

மெள்ளத் தம் முகங்களே விளம்பும்; ஆதலால்

கள்ளத்தின் விளைவு எலாம் கருத்து இலா இருள்

பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ? (6580)

 

உள்ளத்தில் இருப்பதை முகமே காட்டும். வீடணன் நல்ல உள்ளம் கொண்டவன் என்பதை அவன் அகமே காட்டுகிறது.

 

“‘கொல்லுமின் இவனைஎன்று அரக்கன் கூறிய

எல்லையில்தூதரை எறிதல் என்பது

புல்லிது; பழியொடும் புணரும்; போர்த்தொழில்

வெல்லலம் பின்னர்என்று இடை விலக்கினான். (6586)

 

தூதனாகச் சென்ற போது ‘கொல்லுங்கள்’ என்று அரசனான இராவணன் கூறினான். அப்போதே வீடணன், ‘தூதனைக் கொல்லக் கூடாது’ என்ற நீதி உரைத்தவன்.

 

மாருதி வினைய வார்த்தை செவிமடுத்து அமிழ்தின் மாந்திப்

பேர் அறிவாள! நன்று! நன்று!! ‘ எனப் பிறரை நோக்கி

சீரிது; மேல் இம் மாற்றம் தெளிவுறத்  தேர்மின்என்ன

ஆரியன் உரைப்பது ஆனான்; அனைவரும் அதனைக் கேட்டார். (6595)

 

மாருதியை நோக்கி இராமன் பெரும் அறிவாளியே நன்மை உரைத்தாய் என்றான்.

 

இன்று வந்தான் என்று உண்டோ? எந்தையை யாயை முன்னைக்

கொன்று வந்தான் என்று உண்டோ?  புகலது கூறுகின்றான்;

தொன்று வந்து அன்பு பேணும் துணைவனும் அவனே; பின்னைப்

பின்றும் என்றாலும், நம்பால் புகழ் அன்றிப் பிறிது உண்டாமோ? (6598)

 

இன்று தான் வந்தான் என யோசிக்கலாமா? என் தந்தையைத் தாயைக் கொன்று விட்டு வந்திருந்தால் கூட யோசிக்கலாமா? நாளை நம்மை விட்டு விலகிச் செல்வான் என்று யோசிக்கலாமா? நம்மை நம்பி வந்தவன் நமது நண்பன். நமக்கு இனியவன். அவனை ஏற்பதால் நாம் புகழே அடைவோம்.

 

பேடையைப் பிடித்துத், தன்னைப் பிடிக்கவந்து அடைந்த பேதை

வேடனுக்கு உதவி செய்து விறகு இடை வெந்தீ மூட்டிப்

பாடுறு பசியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள்

வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ? (6601)

 

ஒரு காட்டில், மரத்தில், புறா இணை ஒன்று வசித்தது. பெண் புறா ஒருநாள் சோர்ந்திருந்தது. ஆண் புறா பெண் புறாவை மரத்தில் ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு இரை தேடச் சென்றது. அப்போது அங்கு வந்த வேடன் வலை விரித்தான். அதில் பெண்புறா சிக்கி விட்டது. வேடன் அதனைக் கூண்டில் அடைத்து விட்டான். ஆண்புறா மாலை அங்கு வந்து பெண்புறாவைத் தேடியது. தான் கூண்டில் அடைபட்டுக் கிடப்பதாக பெண்புறா கூறியது. ஆண்புறாவிடம், ‘’நம் இடத்துக்கு வந்திருக்கும் வேடன் நம் விருந்தினன். மாலை இருண்டு இரவு நேரம் தொடங்கி விட்டது. அவன் குளிரால் வருந்துகிறான். அவன் குளிரைப் போக்க ஏதாவது செய்’’ என்கிறது பெண்புறா. சுள்ளிகளைப் பொறுக்கி வந்து போட்டு அதில் தீ மூட்டுகிறது ஆண்புறா. குளிர் நீங்கிய வேடன், பசி மிஞ்சி அத்தீயில் பெண்புறாவை இட்டான். பிரிவைத் தாங்காது ஆண்புறாவும் அதில் விழுந்தது. இதைக் கண்ட தெய்வங்கள், புறாக்களுக்கு வீடுபேறு அளித்தன. அவற்றால் உபசரிக்கப்பட்டதால் அந்த வேடனும் வீடுபேறு பெற்றான்.

இந்த கதையை ஸ்ரீராமன் கூறுகிறார்.

 

சொல்லருங் காலம் எல்லாம் பழகினும், தூயர் அல்லார்

புல்லலர் உள்ளம்; தூயர் பொருந்துவர், எதிர்ந்த ஞான்றே;

ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற, இருவரும், ஒருநாள் உற்ற

எல்லியும் பகலும் போலத், தழுவினர், எழுவின் தோளார். (6612)

 

தூய உள்ளம் இல்லாதவர்கள் பல காலம் பழகினாலும் அக நெருக்கம் அடைய மாட்டார்கள். உள்ளம் தூயவர்கள் சந்தித்த கணத்திலேயே உள்ளம் ஒன்றுவர். சுக்ரீவனும் வீடணனும் அவ்வாறு ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர்.

 

பஞ்சுஎனச் சிவக்கும் மென் கால் தேவியைப் பிரித்த பாவி

வஞ்சனுக்கு இளைய என்னைவருக! “ என்று அருள் செய்தானோ?

தஞ்சு எனக் கருதினானோ? தாழ்சடைக் கடவுள் உண்ட

நஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ, நாயகன் அருளின் நாயேன் (6615)

 

தன் துணையைப் பிரித்தவனின் சகோதரன் எனினும் எனக்கு அபயம் அளித்தானோ? வரவேற்றானோ? விஷம் சிவனின் கண்டத்தில் இணைந்ததால் வணங்கப் பெற்றது. நானும் அவ்வாறான பெயர் பெற்றேன்.

 

அழிந்தது பிறவிஎன்னும் அகத்து இயல் முகத்தில் காட்ட,

வழிந்த கண்ணீரின் மண்ணின் மார்பு உற வணங்கினானைப்

பொழிந்தது ஓர் கருணை தன்னால்,  புல்லினன் என்ன நோக்கி

எழுந்து, இனிது இருத்திஎன்னா, மலர்க் கையால் இருக்கை ஈந்தான். (6630)

 

வீடணன், ‘’பிறவித் தளை அழிந்தது’’ என்னும் உணர்வுடன் இராமனை நோக்கினான். ஸ்ரீராமன் வீடணனுக்கு ‘’அமர்க’’ என இருக்கை தந்தான்.

 

குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான்

மகனொடும், அறுவர் ஆனேம்; எம் உழை அன்பின் வந்த

அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;

புகலருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை. (6635)

 

தசரத மன்னரின் புதல்வர்களாகிய நாங்கள் குகனைச் சந்தித்ததால் ஐவர் ஆனோம். கிஷ்கிந்தை மன்னனின் நட்பால் அறுவர் ஆனோம். என் மீதான தூய அன்பால் என்னிடம் வந்து சேர்ந்த உன்னால் நாம் எழுவர் ஆனோம். கானக வாழ்வு சகோதரர்களைப் பெற்றுத் தந்துள்ளது. எனது கானக வாழ்வால் என் தந்தை மைந்தர்களால் பொலிகிறார்.