Sunday 31 July 2022

நகரப் பேருந்து

எங்கள் ஊர் பக்கத்தில் நகரப் பேருந்துகளை வாய்ப்பின் வசதியின் எளிய சாத்தியக்கூறாக காணும் தன்மை உண்டு. ஒரு நகரத்தையும் இன்னொரு நகரத்தையும் இணைக்கும் பேருந்து என்பது சிறு நகரங்களின் வழியே செல்லும். கிராமங்களில் நின்று செல்லாது. ஒரு கிராமத்தையும் ஒரு நகரத்தையும் இணைக்கும் பேருந்து என்பது கிராமங்களின் வழியே மட்டுமே செல்லக் கூடியது. இன்றும் கிராமம் என்பது பல்வேறு விதமான மக்களின் திரள். அவர்கள் பலவிதமான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். பலவிதமான பொருட்களை நகருக்குக் கொண்டு வருவார்கள். பஸ்ஸைத் தவற விடுதல் என்பது எங்கள் ஊர் பக்கத்தில் ரயிலைத் தவற விடுவதற்கு சமானமான ஒன்று. இன்று அதிக எண்ணிக்கையில் இரு சக்கர வாகனங்கள் வந்து விட்டாலும் அந்த பழைய மனநிலை நீடிக்கவே செய்கிறது. 

கிராமங்களின் வழியே செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்காது என்பதால் ஒப்பீட்டளவில் விரைவாகவே கூட அவை சென்று விடும். 

வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு நகரப் பேருந்தில் கிராமம் ஒன்றினுக்குச் சென்றிருந்தேன். பழைய நினைவுகளை அதிகம் கொண்டு வந்தன. சாமானிய மக்களுடன் பயணிப்பது என்பது மனதிற்கு அதிக நம்பிக்கையையும் தெம்பையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. பொதுப்பணி புரியும் ஒருவன் தனது ஆற்றலை சாமானிய எளிய மனிதர்களிடமிருந்தே பெறுகிறான்.  

நகரத்தில் இயங்கும் நகரப் பேருந்துகளின் நேர அட்டவணை ஒன்றை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணினேன். 

கவனம்

ஊருக்குப் பக்கத்தில் ஒரு கிராமம். ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒரு சிறு விவசாயி தனது நிதிப் பற்றாக்குறையின் காரணமாக தனது வயலில் நேரடியாக நெல்லை விதைக்க முடிவு செய்திருக்கிறார். வழக்கமாக விதைநெல்லை நாற்றங்காலில் இட்டு நாற்றுகளாக்கி பின்னர் அந்த நாற்றுக்களை நெல்வயலில் நடவு செய்வார்கள். இந்த முறையில் நடவு செய்ய அவரிடம் பணவசதி இல்லை. எனவே வயலில் நேரடியாக விதைநெல்லை விதைத்து விடலாம் என முடிவு செய்தார். அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நேரடியாக விதை தெளிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். அவ்வாறு ஈடுபட்ட அவர்களை ஒரு வன்முறைக் கும்பல் தாக்கியிருக்கிறது. நேரடி விதைப்பு முறையில் நெல்லை விதைக்கக் கூடாது என்று கூறி அந்த வன்முறைக் கும்பல் தாக்கியிருக்கிறது. இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. இந்த விவசாயியுடன் சேர்ந்து இன்னும் ஐந்து விவசாயிகளும் இவ்வாறு விதைத்திருக்கின்றனர். அவர்களுக்கும் அதே வன்முறைக் கும்பல் இடையூறு செய்திருக்கிறது. பத்திரிக்கைகளில் வெளியான செய்தியைப் பார்த்த பின் நான் அந்த கிராமத்துக்குச் சென்றேன். சம்பந்தப்பட்ட விவசாயியைச் சந்தித்தேன். 

இந்த விஷயத்தை நான் நோக்கும் விதத்தை அவருக்குச் சொன்னேன். இந்திய அரசியல் சாசனம் தன் குடிகள் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் நீதி பெறுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒரு விவசாயி தன்னுடைய வயலில் நெல் விதைப்பது என்பது அவருடைய  பொருளாதார உரிமை. அதில் தலையிட்டு வன்முறையில் ஈடுபடுவது என்பது அவரது சமூக பொருளாதார உரிமையைப் பறிக்கும் செயல். அந்த அடிப்படையில் அந்த வன்முறைச் செயல் இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே அந்த விவசாயி இந்த விஷயத்தை மாநில மனித உரிமைக் கமிஷன் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னேன். தனது வயலில் தனது விதைப்பு நடவடிக்கையை தடுத்த வன்முறைக் கும்பல் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூறி அந்த விவசாயி இந்த விஷயத்தை மாநில மனித உரிமைக் கமிஷன் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை சற்று கால அவகாசம் கொடுத்து கவனித்து அதன் பின் தேவையெனில் அதனை தேசிய மனித உரிமை கமிஷனுக்கும் கொண்டு செல்ல அவர் உத்தேசித்திருக்கிறார். 

Sunday 24 July 2022

அதிகாலையின் வெள்ளிமீன்

 

ஒரு புலரியின் முன்

பனித்துளிகளை ஏந்தி முன் நகரும்

இளநதியின் முன்

பட்சிகள்

குதூகலித்து ஒலியெழுப்பி பறந்து ஆடும்

ஒரு விருட்சத்தின் முன்

ஒரு சின்னஞ்சிறு தீச்சுடரின் முன்

நிற்பதைப் போல

உன் முன் நிற்கிறேன்

 

உன் கருணை

என்னைத் தழுவட்டும்

உன் பிரியங்கள்

என்னைச் சூழ்ந்து கொள்ளட்டும்

உன் அன்பு

என்னில் முழுதாக நிறையட்டும்

 

***

சமகாலத் தமிழ் நாவல் பரப்பில் அதிகாலையின் வெள்ளிமீன் எனத் தயக்கமின்றி சொல்லக் கூடிய நாவல் அஜிதனின் ‘’மைத்ரி’’. அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தரிசனத்திலும் முற்றிலும் ஒரு குறுங்காவியம் எனச் சொல்லத்தக்க நாவல். இந்த நாவலை வாசித்த போது ஒவ்வொரு விதத்தில் எனக்கு இந்தியாவின் பெரும் நாவலாசிரியர்களான தாரா சங்கரும், விபூதி பூஷணும் கிரிராஜ் கிஷோரும் நினைவில் எழுந்து கொண்டே இருந்தார்கள். நாவலை வாசித்து முடித்ததும் அது ஏன் என்பதை புறவயமாக வகுத்துக் கொள்ள முயன்றேன். மூவருமே இலக்கிய ஆசான்கள். மூவருமே தங்கள் செவ்வியல் படைப்புகள் மூலம் இலக்கியத்தில் நிலை பெற்றவர்கள். மைத்ரியின் ஆசிரியர் தனது முதல் நாவலை எழுதியிருக்கிறார். அவ்வாறெனில் அவர்களின் பொது அம்சம் என்ன? வேறுவிதமாக யோசித்துப் பார்க்கலாம். ஆசான்கள் மூவரும் சமவெளியை எழுதியவர்கள். அஜிதன் மலை உருகி நதியாகும் தோற்றுமுகத்தை எழுதியவர். தோற்றுமுகத்துக்கும் சமவெளிக்கும் தொடர்பாயிருப்பது நதி. அஜிதனுக்கும் ஆசான்களுக்கும் பொதுவாயிருப்பது கூட அந்த நதியின் பிரவாகம் தான் என எண்ணிக் கொண்டேன்.

ஹரன் தீயெனப் பற்றியெழும் ரஜோ குணத்தைக் குறிப்பவன். தன்னுள் வரும் எதனையும் அந்த தீயால் அணுகுபவன். நீறு பூத்த நெருப்பாக அதனை அகத்தில் பேணுபவன். அவ்வாறு பேணுதலை தனது தனி இயல்பாக புரிந்து கொண்டிருப்பவன். இயற்கையின் அறிய முடியாத விதிகளில் ஏதோ ஒன்றால் அவன் உணரும் நிறைவின்மை அவனை அவனுடைய நிலையிலிருந்து வேறெங்கோ நகர்த்துகிறது. அந்த நகர்வு அவனுக்கு நடந்தது இயற்கை அவன் மீது கொண்ட பிரியத்தால்.

உலகத்தை உலகியலை மூன்று குணங்களாகப் புரிந்து கொள்கிறான் ஹரன். ஜீவிதம் இந்த மூன்று குணங்களின் மோதலின் விளைவாக நிகழ்ந்து கொண்டிருக்கையில் இவற்றுக்கு அப்பால் – மிக அப்பால் – இருக்கும் தூயவெளியின் மென்மையான கரம் ஹரனைப் பற்றுகிறது. கட்வாலி பிராந்தியத்தின் நிலக்காட்சிகளும் அந்த பிராந்தியத்தின் தொல்கதைகளும் நாவலில் குறிப்புணர்த்துவது அதனையே. தேவதாரு மரங்கள் மேகங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் உலகம் ஒன்று. தேவதாரு மரங்கள் வேரூன்றியிருக்கும் நிலம் இரண்டாவது. அதற்குக் கீழ் இருக்கும் பாதாளங்களின் உலகம் மூன்றாவது.

பேரன்பாய் பெருங்கருணையாய் தனது இருப்பைக் கொண்டிருக்கிறாள் மைத்ரி. ஒரு மரத்துண்டை பாகீரதி தன்னுடன் அழைத்துச் செல்வதைப் போல – ஒரு கூழாங்கல்லுக்கு பாகீரதி தனது குளிர்ச்சியை அளிப்பது போல மைத்ரி ஹரன் உறவு அமைகிறது.

நிலக்காட்சிகளின் வர்ணனையும் கட்வாலி பிராந்தியத்தின் உணவு, உடை , உறையுள் ஆகியவற்றை துல்லியமாக விவரிப்பதும் அந்த நிலத்தின் – மக்களின் பண்பாட்டு வெளியை நாவலில் முழுமையாகக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

சமூகப் பொருளியல் நிலை சார்ந்த – தனி மனித அகங்காரம் சார்ந்த வலிகள் மட்டுமே மிக அதிகமாகப் பேசப்பட்டிருக்கும் தமிழ்ச் சூழலில் ‘’மைத்ரி’’ நாவலில் பேசப்படும் ‘’வலி’’ தமிழ் நாவல் பரப்பில் ஒரு முக்கியமான அடியெடுப்பைக் குறிக்கிறது.

ஹரன் முழுகி எழும் வென்னீர் ஊற்றும் இரு குழந்தைகள் மூழ்கி எழும் குளிர் நிறைந்த நதிப் பிரவாகமும் இந்த நாவலின் தரிசனத்தை குறிப்புணர்த்தி விடுகின்றன.   

***

 


Thursday 21 July 2022

பக்கம்

மரங்கள் விஷயம் தொடர்பாக அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்களுடன் நான் உரையாடுவது உண்டு. அரசாங்கத்தின் விதிமுறைகளை சட்டங்களைக் குறித்து அவர்களில் பலர் எனக்குச் சொல்வதுண்டு. அவை ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள முன்னெடுக்க எனக்கு பல விஷயங்களில் உதவிகரமாய் இருக்கும். பத்து பேரிடம் நான் பேசினால் அதில் ஒருவர் அல்லது இரண்டு பேர் அந்த விஷயம் தொடர்பாக உள்ள விதிமுறைகளையும் சட்டங்களையும் கூறுவார்கள். மற்றவர்கள் அது குறித்து மௌனம் காப்பார்கள். இந்த விஷயங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று கூறுவார்கள். இன்னதென்று வரையறுத்துச் சொல்ல முடியாத காரணங்களால் தவறிழைத்தவர்கள் பக்கம் சார்பு நிலை எடுப்பார்கள். நாம் ஒருவரிடம் ஆலோசனை கேட்கிறோம் என்றால் அவர் நமக்கு சாதகமாகத்தான் ஆலோசனை வழங்க வேண்டும் என்பதில்லை ; எதிர்மறையாகவும் வழங்கலாம். அந்த சாத்தியத்தை அறிந்து தான் - அந்த உரிமையை அவருக்கு அளித்துத்தான் நாம் அவருடன் உரையாடுகிறோம். 

அவர்களிடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்வது உண்டு. ‘’ ஒரு அநியாயம் நடக்கிறது. அநியாயமான ஒரு செயலை அரசுப்பணியில் இருப்பவர்கள் செய்கிறார்கள். அதற்கு ஒரு சாதாரண குடிமகன் நியாயம் கேட்கிறான். ஆயிரம் தவறுகள் நிகழ்ந்தால் ஒரு தவறுதான் தட்டிக் கேட்கப்படுகிறது. என்றாலும் உங்களால் அந்த சம்பவத்தில் எது நியாயமான பக்கமோ அந்த பக்கத்திற்கு உங்களால் தார்மீக ஆதரவு கூட தர முடியவில்லை. அந்த உளநிலையை யோசித்துப் பாருங்கள். நியாயமான பக்கத்தில் நிற்க முடியாததால் மானசீகமாக அநியாயம் செய்தவர் பக்கம் சென்று விடுகிறீர்கள். அதற்கான காரணம் நீங்கள் அரசுப் பணியில் இருந்தவர் என்பது. ஓர் அரசு அதிகாரியின் அதிகார துஷ்பிரயோகம் மீது ஒரு சாதாரண குடிமக்ன் கேள்வி கேட்பதை - அங்கீகரிக்கப்பட்ட அமைதியான வழியில் கேள்வி கேட்பதைக் கூட - உங்களால் ஏற்க முடியவில்லை. அந்த அதிகாரியின் இடத்தில் உங்களைப் பொருத்திக் கொள்கிறீர்கள். இந்த நாடு குடியரசாக ஆக வேண்டும் என்று இந்த நாட்டின் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த எத்தனையோ லட்சம் பேர் தங்கள் உயிரைக் கொடுத்து உருவாக்கிய அமைப்பு இது. இது செம்மையாக இயங்க வேண்டும் என்றால் சிறியதிலிருந்து பெரியது வரை தவறுகள் சுட்டுக் காட்டப்பட வேண்டும். சரி செய்யப்பட வேண்டும். மக்களே இல்லாமல் அரசு என ஒன்று இருக்க முடியாது. யோசித்துப் பாருங்கள்’’ என்று சொல்வேன். 

பொது விஷயங்களில் அனுபவம் கிடைக்க கிடைக்க ஒரு விஷயத்தை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பதில் பல நடைமுறைப் புரிதல்கள் உண்டாகி விடும். 

இங்கே அரசு இயங்கும் விதத்தை பூடகமாகவே வைத்திருந்த பழக்கத்திலிருந்து  அரசு ஊழியர்கள் இன்னும் விடுபடவில்லை. இருபது இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அரசு அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகள் அறிக்கைகள் ஆகியவற்றை சாதாரண குடிமகன் பெற வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டும். ஆனால் இப்போது தகவல் பெறும் உரிமைச் சட்டம் இருக்கிறது. அரசின் எந்த தகவலையும் எவரும் பெற முடியும். அரசின் பல நடைமுறைகள் மின்னணு முறைக்கு வந்து விட்டன. இருப்பினும் அரசு ஊழியர்கள் இன்னும் கடந்த காலத்தின் கைதிகளாகவே இருக்கின்றனர்.    

Wednesday 20 July 2022

மரம் - சட்டம் - விதிகள்

’’பொது இடம்’’ என்பது தெருக்கள், நீர்நிலைகளின் கரைகள், ஊருக்குப் பொதுவாக இருக்கும் மைதானங்கள், சாலைகள், அரசுக் கட்டிடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். இந்தகைய இடங்களில் தானாக வளரும் அல்லது  மக்களால் அல்லது அரசால் வளர்க்கப்படும் மரங்கள் அரசாங்கத்தின் சொத்துக்கள் ஆகும். 

அவை வெட்டப்பட வேண்டும் என்றால் அதற்காக பல விதிமுறைகள் உள்ளன. 

1. மரம் வெட்டப்பட வேண்டும் என்றால் எழுத்துப்பூர்வமாக இன்ன காரணத்துக்காக மரம் வெட்டப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அல்லது சார் ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

2. அந்த மனுவை ஆய்வு செய்து சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்ட அதிகாரி முதலில் அந்த இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்வார். 

3. அந்த மரம் அகற்றப்பட்டே தீர வேண்டும் எனில் அந்த மரத்தின் பொருள்  மதிப்பை அரசாங்கத்துக்கு செலுத்தி மீண்டும் விண்ணப்பிக்குமாறு கூறுவார். அந்த மதிப்பு சந்தை விலையை விட அதிகமாகவே நிர்ணயிக்கப்படும். 

4. சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்ட அதிகாரி நேரில் ஆய்வு செய்ததோ அல்லது மரத்தின் மதிப்பை அரசாங்கத்துக்கு செலுத்தச் சொன்னதோ விண்ணப்பித்தவருக்கு அந்த மரத்தை வெட்ட முகாந்திரம் அளித்ததாக ஆகாது. 

5. மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி அல்லது சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் இன்ன இடத்தில் உள்ள இன்ன மரம் இன்ன காரணத்துக்காக வெட்டப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என உத்தரவு இட வேண்டும். அந்த உத்தரவின் அடிப்படையில் மரத்தை வெட்டிக் கொள்ளலாம். விண்ணப்பிப்பவர் பொதுஜனமாக இல்லாமல் அரசை சேர்ந்த ஒரு அலுவலர் எனில் வெட்டப்பட்ட அந்த மரம் ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் மரத்தின் தொகை சேர்க்கப்பட வேண்டும். 

இத்தனை விதிமுறைகள் ஏன் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை சாமானியர் கூட எளிதில் புரிந்து கொள்ளலாம். இத்தனை விதிமுறைகளும் உயிர் மரங்கள் காக்கப் பட வேண்டும் என்பதற்காகவே. 

மரங்களை முழுமையாக வெட்ட மட்டும் அல்ல அதன் கிளைகளை வெட்டக்கூட இந்த விதிமுறைகள் பொருந்தும். அதாவது அதன் அர்த்தம் என்ன எனில் பொது இடத்தில் இருக்கும் மரங்களுக்கு மனிதர்களால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே. 

இந்திய அரசியல் சாசனம் ,’’இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் உயிர்கள் மேல் கருணையோடிருத்தல்’’ என்பதை தனது குடிகளின் அடிப்படை கடமையாக அறிவிக்கிறது. அந்த அடிப்படையிலேயே ‘’காவிரி போற்றுதும்’’ பொது இடத்தில் உள்ள மரங்கள் தனிநபர்களால் வெட்டப்படும் போது அந்த செயலை சட்டத்தின் முன் கொண்டு வருகிறது. 

Tuesday 19 July 2022

வியூகமும் யுக்தியும்

நேற்று ஒரு சாலையில் பயணிக்க நேர்ந்தது. நான் அடிக்கடி பயணிக்கும் சாலை. எனினும் ஞாயிறன்று காலை அந்த சாலைக்குச் செல்ல சந்தர்ப்பம் நேரவில்லை. சென்றிருந்தால் என்னால் பத்து ஆண்டுகளுக்கு மேல் வயது கொண்ட பத்து அடிக்கும் மேலான சுற்றளவு கொண்ட ஒரு மரத்தை என்னால் காப்பாற்றியிருக்க முடிந்திருக்கலாம்.  

மாநில நெடுஞ்சாலையில் உள்ளது அந்த பள்ளிக்கூடம். பள்ளிக்கூடத்தின் உள்ளே பத்து அடி சுற்றளவு கொண்ட பத்து ஆண்டு வயது உள்ள ஒரு பெருமரம் இருந்தது. ஞாயிறன்று காலை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மரம் வெட்டும் பணியாளர்களை நியமித்து அந்த மரத்தை முழுமையாக வெட்டியிருக்கிறார். 

ஒரு மரம் வெட்டப்பட்ட பகுதிக்குள் நுழையும் போது பல ஆண்டுகளாக நாம் பார்த்து நம் மனதில் பதிவாகியிருந்த ஒரு காட்சி சட்டென்று இல்லாமல் போய் வெட்ட வெளியாகி நிற்பதன் திகைப்பு சாதாரணமானதல்ல. நான் எனது பணி ஒன்றின் நிமித்தம் திங்கள் கிழமை அன்று அந்த சாலையில் சென்றேன். வெட்டப்பட்ட மரத் துண்டுகளைப் பார்த்தவுடன் ஒரு செயலிழந்த நிலை மனதில் உருவாகி விட்டது. கடந்து சென்றேன். எனது பணியை முடித்தேன். மீண்டும் அந்த பள்ளி அருகில் வந்தேன். அருகில் இருந்த கடைகளில் என்ன நடந்தது என்று விசாரித்தேன். கடைக்காரர்களுக்கு தயக்கம். நான் விசாரிப்பதால் அவர்களுக்கு ஏதோ தவறு நடந்திருக்கும் என்ற ஐயம் ஏற்பட்டது. இருப்பினும் ரொம்ப தயங்கியே விபரம் சொன்னார்கள். அந்த இடத்திலிருந்து தள்ளிப் போய் மேலும் சிலரிடம் விசாரித்தேன். அவர்கள் கண்ட அவர்கள் அறிந்த விபரங்களைச் சொன்னார்கள். 

மனதில் இருந்த வலியைக் கட்டாயமாக அகற்றினேன். தவறு நிகழ்ந்திருக்கிறது. இப்போது அதற்கான நியாயம் மட்டுமே கேட்க முடியும். அதற்குக் காரணமானவர்களை பிழையீடு செலுத்தச் செய்ய மட்டுமே முயற்சி செய்ய முடியும். செயல்படுபவன் செயலில் ஈடுபட்டிருக்கும் போது உணர்ச்சிவசப்படக்கூடாது. மனதைத் தளர்வாக வைத்திருக்க வேண்டும். இவை அடிப்படை விதிகள். இதைப் போன்ற விஷயங்களில் ஈடுபடும் போது பழகி விடும். எனினும் தவிர்க்க இயலாத அம்சமாக உணர்வு இருக்கும். அதனை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதுவும் பழகி விடும். 

சர்க்கார் என்பது ஆயிரக்கணக்கான மனிதர்கள் வெவ்வேறு விஷயங்களால் வெவ்வேறு கூறுகளால் இணைந்திருக்கும் சூட்சுமமான எந்திரம். அந்த எந்திரத்தின் பகுதியாக தங்களை உணர்வதாலேயே சர்க்கார் ஊழியர்கள் உணரும் வலிமை என ஒன்று உண்டு. எனினும் அந்த எந்திரத்துக்கும் ஊழியர்களுக்கும் பற்பல எல்லைகளும் உண்டு. இந்த புரிதலுடன் தான் சர்க்கார் எந்திரத்தை அணுக வேண்டும். 

பொது விஷயங்களில் எனக்கு இருக்கும் அனுபவம் கொண்டு இந்த விஷயத்தை அணுக சில யுக்திகளைக் கையாள வேண்டும் என முடிவு செய்தேன். நேற்று முக்கியமான சில சொந்த வேலைகள் இருந்தன. அவற்றை செய்து முடிக்க மாலை 7 மணி ஆகி விட்டது. அதன் பின் , வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். அந்த அலுவலகத்தில் ஒரே ஒருவர் மட்டும் கோப்புகளில் குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது தெரியும் என்றாலும் அங்கே ஒரு முறை சென்றேன். நிகழ்ந்ததை அறிந்த அன்றே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று தகவல் கூற முயன்றோம் என்பது முக்கியம். பணி புரிந்தவரிடம் எதுவும் கேட்கவில்லை. அவர் பணிப் பொறுப்பு மிக்கவர் என்பதை மட்டும் புரிந்து கொண்டேன். பணிப் பொறுப்பு மிக்கவர்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்வார்கள் ; மேலும் பொதுமக்களுக்கு உதவியாகவும் இருப்பார்கள். மறுநாள் காலை அலுவலகம் மீண்டும் வரலாம் என்ற முடிவுடன் அங்கிருந்து புறப்பட்டேன். 

பொது விஷயங்களில் நாம் நினைத்தது நினைத்த படி நடக்காது. இது அடிப்படை விதி. அதனை மனதில் வைத்துக் கொண்டு செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். நாம் நினைத்தது நடக்காமல் போகக் கூடும் என்பதற்காக எந்த செயலையும் முன்னெடுக்காமல் இருந்து விடக் கூடாது. இப்போது நடக்காமல் போனாலும் இன்னும் சில நாட்களிலோ பல நாட்களிலோ நடக்கக் கூடும். அதனால் எதற்கும் தயார் என்ற மனோநிலை முக்கியமானது. 

இன்று காலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மரத்தை வெட்ட வருவாய் கோட்டாட்சியர் அனுமதி பெறப்பட்டதா என்று கேட்டேன். அவ்வாறான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று சொன்னார்கள். அந்த பகுதியின் கிராம நிர்வாக அலுவலருக்கு ஃபோன் செய்து இவ்வாறான ஒரு சம்பவம் நடந்துள்ளதாக அலுவலகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது ; அவர் அறிந்திருக்கிறாரா என வினவினார்கள். அவருக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஃபோன் அழைப்பு மூலம் தான் தெரிய வந்தது என்பதை அவர்கள் உரையாடல் மூலம் புரிந்து கொண்டேன். இந்த விஷயத்துக்கான யுக்தியையும் அப்போதே வகுத்து விட்டேன். கிராம நிர்வாக அதிகாரியிடம் பேசிய பின் நீங்கள் யார் என அலுவலகத்தில் கேட்டார்கள். என்னுடைய பெயரைச் சொல்லி விட்டு ‘’Common Man'' என அறிமுகப்படுத்திக் கொண்டேன். 

வழக்கமாக அனைவரும் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பு உருவாகும். அது சரியானது தான். ஆனால் எவ்விதம் கொண்டு செல்வது என்பதில் என்னிடம் ஒரு மாற்று வழி இருந்தது. அதனைப் பயன்படுத்தினேன். அதாவது இந்த விஷயம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியவரும் விசாரித்து மேலதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க வேண்டியவர் கிராம நிர்வாக அதிகாரி. யாருக்கு மனு அனுப்பப்பட்டாலும் அவை அவருக்குத்தான் அனுப்பப்படும். எனவே என்னுடைய புகாரை கிராம நிர்வாக அதிகாரிக்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பினேன். அந்த புகாரில் வெட்டப்பட்ட மரத்தின் சுற்றளவு பத்து அடி என்பதையும் சாமானியக் கணக்கீட்டின் படி வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு ரூபாய் இருபத்து ஐயாயிரத்துக்கு மேல் இருக்கும் என்பதையும் தெரிவித்து மேலும் வெட்டப்பட்ட மரத்தின் புகைப்படங்களையும் மனுவுடன் இணைத்திருந்தேன். என்னுடைய மனுவே சம்பவத்தை முழுமையாக விளக்கக் கூடிய ஆவணம். சம்பவம் நடந்த இரண்டாவது நாளில் மனு கிராம நிர்வாக அதிகாரிக்கு அனுப்பப்பட்டு மூன்றாவது நாளில் அவர் கையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவின் நகல் முதலமைச்சரின் தனிப்பிரிவு, வருவாய்த்துறை செயலாளர், வனத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரி, கல்வி மாவட்ட அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர் , வருவாய் வட்டாட்சியர் என பத்து பேருக்கு நகலாக அனுப்பட்டுள்ளது என்பது கிராம நிர்வாக அதிகாரி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்தல் என்பதில் கிராம நிர்வாக அதிகாரி உண்மையின் பக்கம் நின்றிட நகலாக மேலதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட மனுக்கள் உதவும் என நான் யூகித்தேன். அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டுள்ளதால் நியாயமான வழிமுறைகள் பின்பற்றப் படும் என எதிர்பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்க்கக் கூடும். 

மனுக்களை அனுப்புவதற்கு முன்னால் இந்த விஷயத்தை மத்திய அரசின் புகார் பிரிவான சி.பி.கி.ரா.ம்.ஸ் ல் மனு இணையம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டது. 

மரத்தின் மதிப்பு அரசாங்கத்துக்கு செலுத்தப்பட வேண்டும் என்பது விதி. மேலும் அந்த தொகையில் சூழ்நிலையைப் பொறுத்து ஒரு மடங்கிலிருந்து நாற்பது மடங்கு வரை அபராதமாக செலுத்தப்பட வேண்டும் என்பதும் விதியின் முக்கியமான அடுத்த பகுதி. பொதுவாக மரத்தின் மதிப்பில் ஒரு மடங்கு மட்டுமே அபராதமாக விதிக்கப்படுவது என்பது நடைமுறையில் உள்ள பழக்கம். இந்த விஷயத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு மடங்குக்கு அதிகமான அளவில் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு.   

அபராதம் செலுத்துவதால் குற்றம் குறைந்து விடுமா என்பது மிக அதிகமாக கேட்கப்படும் கேள்வி. பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுபவர்கள் பொருளியல் ஆதாயத்துக்காகவே செய்கின்றனர். பொது இடத்தில் உள்ள மரத்தை வெட்டுவதால் மரத்தின் மதிப்பைத் தாண்டி பல மடங்கு அபராதம் செலுத்த நேரும் எனில் அச்செய்கை நஷ்டம் விளைவிக்கக் கூடிய ஒன்றாக மாறும். நஷ்டம் விளைவிக்கும் ஒரு செய்லை யாரும் தேடிப் போய் செய்ய மாட்டார்கள். 

மரம் வெட்டியவர் அறிவை அறியாமை மூடி மறைத்துள்ளது. அந்த அறியாமையை விலக்கவே நாம் முயல்கிறோம். சாத்தியமான எல்லா வழிகளிலும். 


Friday 15 July 2022

தபால் வங்கிகள்

சில வாரங்களுக்கு முன்னால், சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த என்னுடைய தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் சிறுது தொகை செலுத்தி செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தேன். மேற்படி கணக்கின் பாஸ் புத்தகம் மேஜையை சரி செய்த போது கண்ணில் பட்டது. அதனையே ஓர் நிமித்தமாகக் கொண்டு கணக்கை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தேன். தபால் அலுவலக சேமிப்புக் கணக்குடன் பல ஆண்டு உறவு எனக்கு உண்டு. எங்கள் பகுதியில் ஒரு தபால் அலுவலகம் இருந்தது. அந்த அலுவலகத்தின் சப்- போஸ்ட் மாஸ்டர் எனது நண்பர். அப்போது எனக்கு பத்து வயது. அவருக்கு முப்பது வயது இருந்திருக்கும். நான் போஸ்ட் ஆஃபிஸ் சென்று அவருடன் உரையாடிக் கொண்டிருப்பேன். அவர் தான் எனக்கு தபால் அலுவலகங்கள் இயங்கும் முறை குறித்து ரயிலில் தபால்கள் கொண்டு செல்லுதல் குறித்து விளக்குவார். எனது அண்டை வீட்டில் மூன்று வயதுக் குழந்தை இருந்தான். அவன் எப்போதும் என்னோடுதான் இருப்பான். என்னுடைய பள்ளி விடுமுறை நாட்களில் காலை 9 மணிக்கு எங்கள் வீட்டுக்கு வந்தால் இரவு 9 மணிக்குத்தான் அவனுடைய வீட்டுக்குச் செல்வான். அவனையும் அழைத்துக் கொண்டு தபால் அலுவலகம் செல்வேன். நாங்கள் பேசுவதை ஆர்வமாக கவனிப்பான். குழந்தை என்பதால் அவனும் உரையாட ஆர்வம் காட்டுவான். இப்போது அவன் எம். டி படித்து மருத்துவத்தில் டாக்டரேட் செய்து மருத்துவராக உள்ளான். ஊருக்கு வரும் போது வீட்டுக்கு வருவான் . இப்போது பார்த்தாலும் அவனை எனக்கு குழந்தையாகத்தான் தோன்றும். 

என்னுடைய முதல் அஞ்சலக சேமிப்புக் கணக்கு அந்த கிளையில் தான் தொடங்கப்பட்டது. பின்னர் அந்த அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. பல ஆண்டுகளுக்குப் பின் வங்கிக் கணக்கு துவங்கியதும் அந்த கணக்கை குளோஸ் செய்து விட்டேன். 

ஒருமுறை வெளிநாட்டிலிருந்து ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ முறையில் நண்பர் அனுப்பிய பணத்தை எடுக்க முயன்ற போது தனியார் நிறுவனங்களில் ஒரு நாள் ஆகும் என்ற நிலை. தற்செயலாக தபால் அலுவலகத்தில் ’’மணி டிரான்ஸ்ஃபர்’’ வசதி இருப்பது தெரிந்து அங்கு சென்றேன். சில மணித்துளிகளில் ஒரு அஞ்சலக சேமிப்புக் கணக்கு துவங்கி அந்த கணக்கில் பணத்தை வரவு வைத்து உடன் என் கைகளில் பணத்தை சேர்த்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து தளத்தில் முன்னரே எழுதியுள்ளேன். அந்த கணக்கு அதன் பின் அப்படியே இருந்தது. அதைத்தான் இப்போது நடப்பில் கொண்டு வந்துள்ளேன். 

தபால் அலுவலக கணக்கைப் புதுப்பித்து அலுவலகத்துக்கு வெளியே வந்த போது அதன் பக்கவாட்டில் ‘’இந்தியன் போஸ்டல் பேமெண்ட் பேங்க்’’ என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. அங்கே சென்று அது குறித்து விசாரித்தேன். மிக எளிய நடைமுறை கொண்ட வங்கி இது. அஞ்சலக சேமிப்புக் கணக்குடன் இணைத்துக் கொள்ள முடியும். தனியாகவும் துவங்க முடியும். இது காகிதமே பயன்படுத்தாத வங்கி நடைமுறை. நமது கட்டை விரலை ஸ்கேன் செய்து அதன் மூலாம் ஆதார் தளத்துக்குச் சென்று அதில் உள்ள விபரங்களைக் கொண்டு கணக்கு துவங்கப்பட்டுவிடும். கணக்கு எண் முதலிய விபரங்கள் குறுஞ்செய்தியாக வரும். இதனைப் பயன்படுத்த ஒரு ஸ்மார்ட்ஃபோன் அவசியம். ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள் அஞ்சலக கணக்குடன் இணைத்துப் பயன்படுத்தலாம். எனது நண்பரின் ஸ்மார்ட்ஃபோன் மூலம் கணக்கை இயக்கிக் கொள்கிறேன். உபயோகமாக உள்ளது. 

எதிர்காலத்தில் இந்தியாவில் இருக்கும் பொதுத்துறை வங்கிகள் இப்போது இருக்கும் வடிவத்தில் செயல்முறையில் இருக்குமா என்பது ஓர் ஐயம். மிகப் பரவலான வலைப்பின்னல் கொண்ட இந்திய தபால் துறை வங்கித் துறையில் முக்கியப் பங்காற்றக் கூடும்.   

Wednesday 13 July 2022

ஆசிரியர்

இந்தியாவின் பாரம்பர்யமான கல்வி மிக இளம் வயதிலேயே துவங்குகிறது. மொழியும் கணிதமும் மனனம் செய்தல் என்ற முறையிலேயே மாணவனின் அகத்தில் நிறையும் வண்ணம் அந்த முறைமை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இளம் குழந்தையின் அகம் விருப்பு வெறுப்புகள் இல்லாதது. பயிற்சிக்கு திறந்த மனத்துடன் இருப்பது. செம்மை செய்யப்பட்ட நிலத்தில் விதையிடுதலைப் போல குழந்தையின் அகத்திற்கு கல்வி அளிக்கப்பட்டிருக்கிறது.  

விவசாயக் கல்வியும் தொழிற்கல்வியும் கூட  அவ்விதமே மாணவர்களுக்கு கிடைத்திருக்கிறது. தந்தையும் பாட்டனாரும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களும் ஆசிரியர்களாக இருந்து கல்வி அளித்திருக்கின்றனர். அந்த மரபு இப்போதும் தொடர்கிறது. தந்தையை தனது ஆசானாகவும் கொள்ளும் பேறு இப்போதும் பலருக்குக் கிடைக்கிறது. 

’’உபநிஷத்’’ என்ற சொல்லுக்கு ஆசிரியரின் அருகிருத்தல் என்று பொருள். இந்திய மரபில் ஆசிரியர் மாணவனை தன் உடனிருக்க அனுமதிக்கிறார். அவ்வாறு ஆசிரியர் ஒருவர் தன்னை அனுமதித்தலையே மாணவன் குருவருள் எனக் கொண்டு பெருமதிப்பு கொள்கிறான்.   மாணவனின் அகநிலை வளர்ச்சிக்குக் குருவின் அருள் காரணமாக அமைவதால் ஆசிரியனை இறைவடிவமாகக் கொள்கிறது இந்திய மரபு. 

ஆலமர்க் கடவுளான தென்திசை முதல்வன் உலக உயிர்களின் அறியாமையைப் போற்றும் ஆசானாக விளங்குகிறான். அடித்தட்டு மக்களின் தலைவனான இளைய யாதவன் அர்ஜூனனின் ஆசிரியனாக அமைந்து கீதையை உரைத்தான். தன் அகக் கருணையின் வெள்ளத்தால் உலகம் முழுமையும் அணைத்துக் கொண்ட பகவான் புத்தரும் மக்கள் துயர் தீர மக்களிடம் ஒரு ஆசிரியனாக இருந்து பேசியவரே. 

மேலான மானுட வாழ்வை நோக்கி மானுடர்களை இட்டுச் சென்ற - இட்டுச் செல்லும் அனைவரும் ஆசிரியர்களே. அந்த ஆசிரியர்கள் மானுடத்தால் என்றும் வணங்கப்படுவார்கள்.  

Sunday 10 July 2022

சி.பி.கி.ரா.ம்.ஸ்

அரசில் முக்கியமான அங்கம் பொதுமக்கள். அரசின் துறைகளின் வழியே அரச அமைப்பைத் தொடர்பு கொள்ளும் போது , அரச அமைப்பில் தங்களுக்கு உரிமையுள்ள சேவைகளைப் பெறும் போது ஏதேனும் இடர்ப்பாடுகள் ஏற்பட்டால் - ஏதேனும் குறைகள் இருந்தால் அதனைத் தீர்த்து வைக்க மத்திய அரசில் பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைச்சகம் என அமைச்சகம் உள்ளது. மத்திய அரசின் பணியாளர் நலத் துறையின் கீழ் வரக்கூடியது இந்த அமைச்சகம். 2014ம் ஆண்டு இந்த அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு இணையதளம் சி.பி.கி.ரா.ம்.ஸ் இணையதளம். (CPGRAMS) (Centralised Public Grievance Redress and Monitoring System) . 

இது பொது விஷயங்கள் குறித்து மக்களின் கருத்துக்களை ஆலோசனைகளைக் கேட்கும் தளம் அல்ல என்பதால் மக்கள் அரசுத்துறை குறித்த தங்கள் கருத்துக்களையோ அல்லது ஆலோசனைகளையோ அல்லது அபிப்ராயங்களையோ இதில் தெரிவிக்க முடியாது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டால் அவை ‘’ஆலோசனைகள்’’ என வகுக்கப்பட்டு நிராகரிக்கப்படும். 

அரச அமைப்பில் குறிப்பாக அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு தங்கள் பணிகள் எதுவும் நிறைவேறாமல் இருந்தாலோ அதிகாரிகள் மீது புகார்கள் இருந்தாலோ அவற்றைத் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிப்பதற்காக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. pgportal(dot)gov(dot)in என்பது அதன் முகவரி. அதில் சென்று பொதுமக்கள் தங்கள் பெயர் , தொடர்பு முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் எந்த துறையில் எந்த அலுவலகம் குறித்து புகார் என பதிவு செய்ய வேண்டும். புகார் தொடர்பான காகிதங்களையும் ஆவணங்களையும் அந்த தளத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். 

என்ன குறை அல்லது புகார் என்பதை பதிவிட வேண்டும். பொதுமக்கள் புகார் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என அரசுத்துறைகளுக்கு உத்தரவு உள்ளது. 

இந்த தளத்தின் தலைமை செயல் நிலையம் புதுதில்லியில் உள்ளது. புகார்கள் அங்கே வகைப்பாடு செய்யப்படும். மத்திய அரசின் துறைகள் என்றால் சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கும் மாநில அரசுத் துறைகள் என்றால் மாநிலங்களின் முதலமைச்சர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும். பின்னர் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளுக்கும் மேலதிகாரிகளுக்கும் அந்த புகார் செல்லும். அவர்கள் ஒவ்வொருவரின் கணினித் திரையிலும் அந்த புகாரும் அதன் தீர்வு எந்த நிலையில் உள்ளது என்பதும் இருக்கும். ஒரு விஷயத்தை ஒருவர் மட்டுமே அறிந்து ஒருவர் மட்டுமே முடிவெடுப்பதை விட அந்த விஷயம் பத்து மேலதிகாரிகளின் கவனத்தில் உள்ளது என்னும் போது சற்று விரைவாக நடக்க ஒரு வாய்ப்பு உண்டு. 

உதாரணத்துக்கு நீங்கள் பட்டா மாறுதல் செய்ய கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் தருகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் விண்ணப்பித்து இரண்டு மாதங்கள் ஆகியும் உங்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்படவில்லை என்றால் நீங்கள் இந்த விஷயத்தை சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்தில் பதிவிடலாம். அந்த புகார் சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்தில் தில்லியில் பதிவாகும். பின்னர் சென்னை முதலமைச்சர் அலுவலகத்திற்கு வரும். அங்கிருந்து மாவட்ட ஆட்சியரின் கணினிக்கு வரும். பின்னர் மாவட்ட அதிகாரிகளின் கணினிக்குச் செல்லும். இவ்வாறு இந்த புகார் எங்கெங்கு அனுப்பப்படுகிறது என்பதை புகார்தாரர் அறிய முடியும். உங்கள் பட்டா மாற்ற விண்ணப்பம் வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் அலுவலகம், தில்லி சி.பி.கி.ரா.ம்ஸ் அலுவலகம் என அனைவருடைய கணிணிகளிலும் உயிர்ப்புடன் இருக்கும். நீங்கள் அளித்த புகாரின் விளைவாக மேலதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உங்களுக்கு பட்டா மாறுதல் கிடைத்து விட்டது என்றால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு விபரம் தெரிவிக்கப்படும். புகார் தீர்க்கப்பட்ட விதம் குறித்து புகார் அளித்தவர் தங்கள் மதிப்பீட்டை அளிக்க வேண்டும்.  45 நாட்களுக்குள் தீர்வு காணப்படா விட்டால், அதிகாரிகள் , மாவட்ட ஆட்சியர் , முதலமைச்சர் அலுவலகம் அத்தனையும் சி.பி.கி.ரா.ம்.ஸ் அலுவலகத்துக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவை. புகார் தீர்க்கப்பட்ட விதம் திருப்தியில்லை எனில் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு உள்ளது. 

பொதுமக்களுக்கும் அரசாங்கத்துக்கும் ஒரு இணைப்பை உருவாக்கும் பணியை இந்த இணையதளம் சிறப்பாக செய்கிறது. மாநில அரசுத்துறைகளில் - அரசுத்துறை அலுவலகங்களில் பொதுமக்கள் எவ்விதமான இடையூறுகளை அசௌகர்யங்களை எதிர்கொள்கின்றனர் என்பதை மத்திய அரசும் அறிய முடியும். 

புகார்கள் மேலிருந்து கீழ் நோக்கி வருவதால் புகார் விபரத்தை முதலில் மேலதிகார்கள் அறிவார்கள். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர் அறிவார். எனவே புகார் விபரத்தை மறைக்கவோ மாற்றிச் சொல்லவோ முடியாது. 

அரசு அலுவலகங்களுக்கு திரும்ப திரும்ப செல்வதும் அரசு அதிகாரிகளின் மெத்தனத்தைத் திரும்ப திரும்ப பார்ப்பதும் அலுப்பூட்டும் அனுபவம். இந்த முறையின் மூலம் அதனை முற்றாகத் தவிர்க்கலாம்.  

Saturday 9 July 2022

நோக்க நோக்க

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். என்னுடைய வயது இருக்கும். தனது இருபத்து ஓராம் வயதில் வளைகுடா நாடொன்றுக்கு பணி புரியச் சென்றார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாத விடுமுறையில் வருவார். இப்போது வெளிநாட்டு வேலையை முழுமையாக நிறைவு செய்து விட்டு இனி இங்கேயே இருக்கலாம் என முடிவு செய்து வந்து விட்டார். சொந்த ஊரில் தொழில் தொடங்கி செய்து கொள்ளலாம் என்பது அவருடைய எண்ணம். கட்டுமானம் சார்ந்த தொழில் ஒன்றை மேற்கொள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்திருக்கிறார். ஒருநாள் எனக்கு ஃபோன் செய்தார். ‘’பிரபு ! உங்களுக்கு நோக்குக் கூலி தெரியுமா?’’. 

‘’நல்லா தெரியுமே! உங்க மாநிலம் அதுக்கு ரொம்ப ஃபேமஸ் ஆச்சே!. சுப்ரீம் கோர்ட் போன வருஷம் கம்யூனிஸ்ட் யூனியன்களோட நோக்கு கூலிக்கு கடுமையான கண்டனம் தெரிவிச்சுதே’’

‘’உலகம் எவ்வளவோ வளர்ந்திடுச்சு. ஆனா எங்க மாநிலத்தை கம்யூனிஸ்ட் யூனியன்கள் ஒன்னும் இல்லாம ஆக்கிட்டாங்க. அவங்க ஆளும் கட்சியா இருந்தாலும் சரி. எதிர்க்கட்சியா இருந்தாலும் சரி.’’

’’தெரிஞ்ச விஷயம் தானே?’’

‘’பிரபு ! என்கிட்ட ஒரு கேப்பிடல் இருக்கு. ஆனா அதை வச்சு கேரளாவுல தொழில் செய்ய முடியாது. உங்க ஊர் பக்கம் ஆரம்பிக்கக் கூடிய தொழிலா சொல்லுங்க. நான் அங்க வந்திடறன்.’’

நண்பரை அவ்வளவு அச்சமடைய வைத்த நோக்குக் கூலி என்பது இதுதான். நீங்கள் உங்கள் இல்லத்தையோ அல்லது கடையையோ அல்லது நிறுவனத்தையோ கட்டுமானம் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதற்குத் தேவையான மணல், ஜல்லி, ஸ்டீல், சிமெண்ட், டைல்ஸ், டோட்ஸ் அண்ட் விண்டோஸ் ஆகியவற்றை பல தடவைகளாக கட்டுமான இடத்தில் இறக்க வேண்டும் . அந்த மெட்டீரியல்களை இறக்க தொழிலாளர்கள் ஏற்பாடு செய்வோம். கேரளாவில் அவ்வாறு ஏற்பாடு செய்யும் போது அந்த உள்ளூரின் கம்யூனிஸ்ட் யூனியன் இரண்டு ஆட்களை கட்டுமான இடத்துக்கு அனுப்புவார்கள். அவர்கள் நீங்கள் ஏற்பாடு செய்த தொழிலாளர்கள் மெட்டீரியல் இறக்குவதை வெறுமனே பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இறக்கி முடித்ததும் நீங்கள் ஏற்பாடு செய்த தொழிலாளர்களுக்கு என்ன கூலி கொடுத்தீர்களோ அதே கூலியை உள்ளூர் கம்யூனிஸ்ட் யூனியனுக்குக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் கட்டுமான இடத்தில் உள்ள அனைத்தையும் அடித்து உடைத்து வன்முறையில் ஈடுபடுவார்கள். சரி கம்யூனிஸ்ட் யூனியன் ஆட்களை வைத்தே இறக்குகிறோம் என்று சொன்னால் அவர்கள் லோடு இறக்க மாட்டார்கள். லோடு இறக்கவும் நீங்கள் ஆட்களை ஏற்பாடு செய்ய வேண்டும். கம்யூனிஸ்ட் யூனியனுக்கும் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்.   

Thursday 7 July 2022

வாய்ப்பு ( நகைச்சுவைக் கட்டுரை)

’’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளருக்கு ஒரு தன்மை உண்டு. அதனை அவர் தன்னுடைய பலம் என்றும் சொல்வார். எந்த செயலையும் மிகக் குறைவான செலவில் மிக நிறைவான வகையில் மேற்கொள்ள வேண்டும் என்பது அவரது செயல்முறை. எனினும் தாராளமாக செலவு செய்து பழகியவர்கள் அவருடன் இருக்க நேர்ந்தால் அவர்கள் நிலை பரிதாபம் தான். 

ஒரு முறை நான்கு நண்பர்களுடன் அமைப்பாளர் ஹசன் சென்றிருந்தார். நால்வரும் ஒரு பெரிய அறையில் தங்கியிருந்தார்கள். காலை பொழுது விடிந்ததும் அதில் இளையோனான நண்பன் டூத் பிரஷ்ஷின் முழு நீளத்துக்கும் டூத் பேஸ்ட்டை இட்டு பல் துலக்க முற்பட்டான். அமைப்பாளர் , ‘’தம்பி ! என்ன செய்யற நீ?’’ என்று பதட்டமாகி விட்டார். ‘’அண்ணன்! பல் துலக்கப் போறேன்’’. ‘’ஒரு பட்டாணி அளவு டூத்பேஸ்ட் போதும். நீ ஏன் முழு பிரஷ் நீளத்துக்கும் யூஸ் பண்ற’’. ‘’நீங்க சொல்லித்தான் பேஸ்ட் மினிமமா கூட பயன்படுத்தலாம்னு தெரியுது. நான் சின்ன குழந்தைலேந்து இப்படித்தான் யூஸ் பண்றன்’’. 

அமைப்பாளர் நண்பர்கள் மூன்று பேருக்கும் காந்தி - நேரு கதை சொன்னார். அலகாபாத்தில் ஆனந்த பவனில் காந்தி தங்கியிருக்கிறார். பல் துலக்க மிகக் குறைவான அளவு தண்ணீரை தனது வழக்கம் போல் காந்தி பயன்படுத்துகிறார். அதனைப் பார்த்த நேரு, ‘’பாபுஜி ! நம்ம தோடத்துக்குப் பின்னால கங்கை கரை புரண்டு ஓடுதே. ஏன் இவ்வளவு அளவா யூஸ் பண்றீங்க’’ என்று கேட்கிறார். காந்திஜி அதற்கு ‘’கங்கை உங்களுக்கும் எனக்கும் மட்டும் ஓடலை. உலகத்துல இருக்கற எல்லாருக்காகவும் ஓடுது. அந்த உணர்வு நமக்கு எப்பவும் இருக்கணும்’’னு சொல்கிறார். நண்பர்களுக்கு அமைப்பாளர் நிறைய கதை தெரிந்து வைத்திருக்கிறார் என மகிழ்வதா அல்லது காலையில் டூத் பேஸ்ட் விஷயத்திலிருந்தே துவக்கி விட்டாரே என விசனப்படுவதா என முடிவெடுக்க முடியவில்லை. டூத் பிரஷின் முழு நீளத்துக்கும் இடப்பட்ட பற்பசையை என்ன செய்வதென்ற குழப்பம் இளையோனுக்கு நீங்கவேயில்லை. 

அன்று காலையிலேயே அமைப்பாளருக்கு உற்சாகமாக துவக்கம் நிகழ்ந்து விட்டதால் நுகர்வு, உற்பத்தி, உபரி , நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், கம்யூனிசம், கம்யூனிசம் உலக வரலாற்றில் நிகழ்த்திய படுகொலைகள், காந்தியம், சூழியலின் அடிப்படைகள் என கிட்டத்தட்ட 2000 வருட உலக வரலாறை அன்று காரில் பயணித்த போது பேசிக் கொண்டிருந்தார் அமைப்பாளர். சட்டென துவங்கி சட சட என விபரங்களையும் தரவுகளையும் முன்வைப்பார். பின்னர் ஒரு இடைவெளி விடுவார். நண்பர்கள் ‘’அப்பாடா’’ என்றிருப்பார்கள். உண்மையில் அந்த இடைவெளியில் தான் சொன்ன தரவுகளை தன் மனதில் ஓட்டியவாறு தனது அபிப்ராயங்களை சொல்ல ஆரம்பிப்பார். ஒன்று சொல்லி முடித்ததும் இன்னொன்று தோன்றி விடும். அபிப்ராயங்கள், சம்பவங்கள், கதைகள், கிளைக் கதைகள் என விஷய்ம் விரிவாகிக் கொண்டே செல்லும். பயணித்த இரு நண்பர்கள் இளையோனிடம் சொன்னார்கள். ‘’இந்த டிராவல் முடியற வரைக்கும் பிரபு முன்னாடி நீ டூத்பிரஷோட வரவே கூடாது’’. 

அமைப்பாளருக்கு அவருக்கே உரிய சில பிரத்யேகமாக வழக்கங்கள் உண்டு. அவர் வெளியூர் சென்றால் தனது மோட்டார்சைக்கிளை பேருந்து நிலையத்திலோ அல்லது ஜங்ஷனிலோ உள்ள ஸ்டாண்டிலோ வைத்து விட்டு செல்ல மாட்டார், அதற்கு பதிலாக நடந்து செல்வார். அமைப்பாள்ர் வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் 2 கி.மீ. ஜங்ஷன் 5 கி.மீ. ஜங்ஷனில் ரயில் பிடிக்க வேண்டும் என்றால் பஸ் ஸ்டாண்ட் வரை நடந்து சென்று அங்கிருந்து பேருந்தில் ஜங்ஷன் சென்று ரயிலில் பயணிப்பார். நண்பர்கள் என்ன காரணம் என்று கேட்பார்கள். ‘’ நம்ம வண்டி வீட்டுல இருந்தா அது நாமே வீட்ல இருக்கற மாதிரி ஒரு ஃபீலை வீட்ல உள்ளவங்க கிட்ட உருவாக்கும். நாம ஊர்ல இல்லன்னு அவங்க நினைக்க மாட்டாங்க. ‘’. நண்பர்களுக்கு ‘’நீங்க இல்லன்னா உங்க வீட்டுல இருக்கறவங்க எவ்வள்வு சந்தோஷமா இருப்பாங்க தெரியுமா?’’ என்று கேட்க நுனி நாக்கு வரை வந்து விடும். ஆனால் அமைப்பாளரிடம் சொல்ல முடியாதே! 

அமைப்பாளர் ஒரு பெரிய கட்டுமான வேலை ஒன்றைத் தொடங்க இருக்கிறார். ரெவின்யூ, சட்டம், வரி, ஜி.எஸ்.டி, அப்ரூவல், சேல்ஸ், கஸ்டமர் என பல அம்சங்கள் உள்ளடங்கியது. முழுப் பொறுப்பும் அமைப்பாளருடையது. ஒரு செயல் திட்டம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

அந்த இடத்தின் உரிமையாளர்களிடம் அமைப்பாளர் சொன்னார். ‘’ எனக்கு ஒரு மூணு நாள் வேணும். எந்த டிஸ்டர்பன்ஸூம் இல்லாத அமைதியான இடமா இருக்கணும். ஒரு ஒரு கொயர் நோட் எடுத்துட்டு போய்ட்டு யோசிக்க வேண்டிய - செயல் படுத்த வேண்டிய எல்லா விஷயத்தையும் குறிப்புகளா எழுதி வச்சிடறேன். அந்த இடத்துக்கு போகும் போது செல்ஃபோன வீட்டுலய சுவிட்ச் ஆஃப் செஞ்சு வச்சுட்டு போயிடனும்.’’ 

நண்பர்களிடம் தனது தேவையை சொல்லி அவ்வாறான பொருத்தமான இடம் எது என்று ஆலோசனை கேட்டார். கணிசமான வாடகை கொண்ட தங்குமிடங்களை நண்பர்கள் பரிந்துரைத்தனர். அந்த வாடகையில் அமைப்பாளர் ஒரு கிராமத்தில் எல்லா வீடுகளுக்கும் பூச்செடிக் கன்றுகள் கொடுத்து விடுவார் என்பதால் நண்பர்கள் பரிந்துரை  அத்தனையையும் நிராகரித்து விட்டார். 

ஒருநாள் இடத்தின் உரிமையாளருக்கு அமைப்பாளர் ஃபோன் செய்தார். ‘’ என்னோட ஃபிரண்டுக்கு இன்னும் நாலு நாள்ல கல்யாணம். அவன் நம்ம ஊர் வழியாத்தான் அவனோட நேடிவ்க்கு டிரெயின்ல போறான். அவனுக்கு நம்ம ஊரு ஸ்வீட்ஸ் கொடுத்து அனுப்பி வைக்கணும்னு நான் பிரியப்படறன். அவன் டிரெயின் அதிகாலை 4 மணிக்கு நம்ம ஊருக்கு வரும். நான் ஸ்வீட் வாங்கிட்டன். நாம என்ன செய்வோம் ஜங்ஷனுக்கு கிளம்பி நைட் 11 மணி போல போய்டுவோம். நாம டிஸ்கஸ் செய்ய தெளிவா 5 மணி நேரம் டைம் கிடைக்கும். எல்லா விஷயமும் என் மைண்ட்ல மூட்டமா இருக்கு. எழுத ஆரம்பிச்சன்னா ஒரு ஸ்ட்ரக்சர் கொண்டு வந்துடுவன். ஜஸ்ட் நீங்க கூட மட்டும் இருங்க. ரெண்டு வேலையையும் நாம ஒன்னா முடிச்சுடலாம்’’

அமைப்பாளர் தனது வண்டியை வீட்டில் வைத்து விட்டு உரிமையளர் உடன் வர உரிமையாளர் வண்டியில் ரயில்வே ஜங்ஷன் நோக்கி புறப்பட்டார். ஸ்வீட் பார்சல் மற்றும் ஒரு கொயர் நோட்டுடன். 

Wednesday 6 July 2022

காணும் பொருளாய் காண்பதெல்லாம் காட்டுவதாய்

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் மிகவும் இனிமையான இயல்பு கொண்டவர். அவர் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர். பயணங்களில் மிக்க ஆர்வம் கொண்டவர். சைக்கிளில் நெடுதூரம் பயணிக்கக்கூடியவர். மாதத்திற்கு இரண்டு நாட்கள் சைக்கிள் பயணத்துக்காக ஒதுக்கி வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு நிலப்பகுதிகளில் சைக்கிள் பயணம் மேற்கொள்பவர். சமூகப் பணிகளில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பவர். வாசிப்புக்கு தினமும் நேரம் ஒதுக்குபவர். 

அவரிடம் நான் வலைப்பூ துவங்குமாறு பல நாட்கள் வற்புறுத்திச் சொன்னதுண்டு. ஒரு நாளின் பெரும்பகுதியை அறிவியல் ஆய்வகத்தில் செலவிடுவதால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்குமா என ஐயம் கொண்டிருந்தார். 

சில நாட்களுக்கு முன், அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. ஒரு ஆங்கில விஞ்ஞானக் கட்டுரையை பத்து பக்கத்துக்கு தமிழில் மொழிபெயர்த்திருந்தார். மிக நல்ல மொழிபெயர்ப்பு. படைப்பூக்கம் கொண்ட மொழியில் அந்த கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. தீரா ஆர்வமும் நுட்பமான மொழிப் பிரக்ஞையும் கொண்ட ஒருவரால் மட்டுமே இத்தகைய மொழிபெயர்ப்பை மேற்கொள்ள முடியும். அந்த கட்டுரையை மிகச் சில மாற்றங்களுடன் ஒரு இலக்கிய இதழுக்கு அனுப்புமாறு நண்பரிடம் மின்னஞ்சலில் கேட்டுக் கொண்டேன். 

பாரதி கவிதை ஒன்றில் ‘’காணும் பொருளாய் - காண்பதெல்லாம் காட்டுவதாய்’’ என்ற வரி வரும். கலைத்தாயின் கருணை மிகப் பெரியது.  

Sunday 3 July 2022

சந்திப்பு

ஊரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு இன்று சென்றிருந்தேன். வழக்கமான முறைகளுக்கு அப்பால் உள்ள மாற்றுப் பயிர்கள் குறித்து அங்கிருக்கும் விவசாயிகளுக்கு நல்ல ஆர்வம் இருந்தது. அந்த கிராமத்தில் விவசாயிகளின் வருமானம் பெருகுவதற்கான சில வழிமுறைகளை முன்வைத்தேன். அவற்றைச் செயல்படுத்த விவசாயிகள் விருப்பம் தெரிவித்தனர். உடனிருந்து உதவுவதாக உறுதியளித்திருக்கிறேன். 

வியாபகம்

நேற்று காலையிலிருந்தே ஏகப்பட்ட அலைபேசி அழைப்புகள். முக்கியமான சில பணிகள். நேரமேயில்லாமல் சுழன்று கொண்டிருந்தேன். அமெரிக்க நண்பரின் அழைப்புக்குப் பின் தஞ்சாவூர் விவசாயி அழைத்திருந்தார். மேட்டுப் பாத்தி அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. நிகழ்ந்துள்ள பணிகளை பார்வையிட வருமாறு கேட்டுக் கொண்டார். என்னுடைய மனம் அந்த கணமே நண்பரின் வயலுக்கு சென்று விட்டது. மாலை 5 மணிக்கு வருவதாகக் கூறினேன். அவ்வாறெனில் மதியம் 2 மணிக்குக் கிளம்ப வேண்டும். பேருந்தில் புறப்பட்டேன். நண்பர் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து வயலுக்கு அழைத்துச் சென்றார். ஐந்து மணியை ஒட்டி சென்று விட்டேன். சூரிய வெளிச்சம் இருக்கும் போது வயலைக் காண வேண்டும் என விரும்பினேன். அவ்வாறே நிகழ்ந்தது. 

நண்பர் வயலின் களிமண் ‘’கேக்’’ போல இருந்தது . அது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. செதுக்கி வைத்ததைப் போல ஜே.சி.பி யால் எடுத்து வைக்க முடிந்தது. வயல் மட்டத்திலிருந்து இரண்டரை அடி உயரம் எடுத்து மேட்டுப் பாத்தி அமைத்திருந்தார். இயற்கை உரமிடுதல், இயற்கை உரம் தயாரித்தல் ஆகியவை குறித்து சில குறிப்புகளை அளித்தேன். என்னுடைய குறிப்புகளின் பொதுத்தன்மை விவசாயிகள் குறைந்த செலவில் அதிக பலன் பெற வேண்டும் என்பதே. குறைவான செலவு என்பதே அதன் அடிப்படை. 

பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, வளைகுடா நாடு ஒன்றிலிருந்து ஒரு வாசகர் அழைத்திருந்தார். நாங்கள் முதல் முறையாக உரையாடுகிறோம். அவருக்கு சொந்தமான வயல் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. ‘’காவிரி போற்றுதும்’’ செயல்களை வலைப்பூவில் வாசித்த பின் தனக்கும் தேக்கு பயிரிட ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். அதற்கான உதவிகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். 

ஒரு விவசாயி தனக்குப் பொருளியல் பலன் தரும் பயிர் ஒன்றை வளர்க்க விரும்புவது அவரது விருப்பம் என்ற ஒன்று மட்டும் அல்ல. அது ஒரு குறியீடு. அதனைப் பல சக விவசாயிகள் நேரடியாகக் காண்பார்கள். அவர்கள் மனதுக்குப் பட்டால் அதனைத் தாங்களும் மேற்கொள்வார்கள். ஒருவர் பெற்ற பலன் மற்றவர்களுக்கும் கிடைக்கும் விதத்தில் இந்த விஷயம் பரவும். வியாபகம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பரவுதல் என்பது பொருள். வியாபாரம் என்ற சொல்லின் வேர்ச்சொல் அது. 

மாலை மயிலாடுதுறை திரும்ப ஒரு பாசஞ்சர் ரயில் இருந்தது. நண்பர் அந்த ரயிலில் ஏற்றி விட்டார். ரயில் ஊரை நெருங்கி விட்டது. இன்னும் இரண்டு நிமிடங்களில் ஜங்ஷன் வந்து விடும் என்ற நிலையில் சிக்னல் விழுவதில் ஏதோ கோளாறு. கணிசமான நேரம் தாமதமாகி விட்டது. என்னுடைய அலைபேசியின் பேட்டரி ஒரு புள்ளி மட்டுமே இருப்பு காட்டிக் கொண்டு இருந்தது. நண்பர் ஒருவரை என்னை ‘’பிக் அப்’’ செய்ய வரச் சொல்லியிருந்தேன். அவரைத் தொடர்பு கொள்ள ஃபோன் ஆன் ஆகியிருக்க வேண்டும். அந்த நேரத்தில் அடுத்தடுத்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. நல்ல வேலையாக நண்பர் வந்து காத்திருந்தார். ஊரில் நல்ல மழை . எங்கள் குடியிருப்புப் பகுதியில் மழையை ஒட்டி மாலை 5 மணிக்கு மின்வெட்டானது இன்னும் மின்சாரம் வரவில்லை என்று சொன்னார். வீட்டுல் டிராப் செய்து விட்டு சென்றார். அதற்குள் அலைபேசி தனது சக்தியை இழந்திருந்தது. ரொம்ப நேரம் கரண்ட் இல்லாததால் சார்ஜ் செய்யவும் முடியவில்லை. தஞ்சாவூர் நண்பருக்குக் கூட வந்து சேர்ந்த தகவலை கூற முடியாத நிலை. 

உணவருந்தி விட்டு உறங்கச் செல்ல இரவு 10 மணி ஆகி விட்டது. 


 

Saturday 2 July 2022

இடம் பொருள் மரம்

இன்று காலை அலைபேசியில் ஒரு அழைப்பு. எண்ணைப் பார்த்தால் வெளிநாட்டு அழைப்பு என்று தோன்றியது. வெளிநாடுகளிலிருந்து வாசகர்கள் கணிசமாக இப்போது அழைக்கிறார்கள். யாராக இருக்கும் என்று யோசித்தவாறு ஃபோனை எடுத்தேன். எனது வாசகரும் வகுப்புத் தோழருமான நண்பர் அழைத்திருந்தார். இந்தியாவில் சில ஆண்டுகள் பணியாற்றி விட்டு பின்னர் பல ஆண்டுகள் ஜப்பானில் பணி புரிந்தார். ஜப்பான் அவருக்கு மிகவும் பிடித்த நாடு. இருப்பினும் அங்கிருந்து அமெரிக்கா செல்ல நேர்ந்தது. அமெரிக்காவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிகிறார். பால்ய சினேகிதர்கள் என்றாலும் காலம் எங்கள் இருவரையுமே மாற்றி அமைத்திருக்கிறது. அனுபவம் எங்கள் இருவரையும் ஒரு குறிப்பிட்ட பக்குவத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. அவரது அழைப்பு பெரும் மகிழ்ச்சி தந்தது. 

நண்பன் தான் முதலில் ஆரம்பித்தான். நலம் விசாரித்த பின் நண்பன் ‘’என்ன செஞ்சுகிட்டு இருக்க?’’ என்றான். நான் செய்து கொண்டிருக்கும் ஏகப்பட்ட வேலைகள் முண்டியடித்துக் கொண்டு என் மனதில் வந்து நின்றன. எதை முதலில் சொல்வது என்று யோசித்தேன். ‘’ நீ என்ன செஞ்சுகிட்டு இருக்கன்னு நான் சொல்லட்டுமா? ஒவ்வொரு நாளும் உன்னோட பிளாக்-ஐ வாசிக்கறேன்’’ என்றான். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. 

‘’பிரபு! நான் ஒரு விஷயம் முடிவு செஞ்சிருக்கன். அதை நீதான் முன்னால இருந்து செஞ்சு கொடுக்கணும். ‘’

’’ 3 ஏக்கர் விவசாய நிலம் வேணும். நல்ல இடமா பாரு. கிரயம் பண்ணிடுவோம். அதுல 1000 தேக்கு மரம் வளர்க்கணும். ஏற்பாடு செஞ்சுட்டு சொல்லு. பணத்தை ஒரே பேமெண்ட்டா அனுப்பி வச்சுடறன்.’’

எனது மனம் நெகிழ்ந்து விட்டது. எத்தனையோ கண்டங்கள் கடல்கள் தாண்டி அவன் இருக்கிறான். ‘’காவிரி போற்றுதும்’’ சாதித்தது என்ன என்ற கேள்வி எனக்கு அவ்வப்போது எழும். நாம் நிச்சயமாக ஏதோ ஒன்றை சாதிக்கிறோம் என்ற தெம்பை இந்த அழைப்பு கொடுத்தது.  

Friday 1 July 2022

கடமைகளும் உரிமைகளும்

எவ்வளவு கறாராக மதிப்பிட்டாலும் நமது நாடு குடும்பம் என்ற அமைப்பை வரலாற்றின் நெடும் பரப்பில் இன்று வரை ஏந்தி வந்துள்ளது. குடும்பம் அளிக்கும் பாதுகாப்பில் மட்டுமே கோடிக்கணக்கான மக்கள் அமைதியுறுகின்றனர். வளர்ச்சிக்கான தங்கள் சாத்தியங்களை அடைந்து முன்னேறுகின்றனர். நாம் இன்னும் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகமாகக் கூட இருக்கலாம் ; நாம் பயின்று கொள்ள வேண்டிய - பழகிக் கொள்ள வேண்டிய - விஷயங்கள் இன்னும் பல இருக்கக்கூடும். உலகின் கால்வாசி நாடுகள் இன்னும் ஜனநாயகத்துக்குளேயே வந்து விடுவதில்லை என்பதுடனும்  மிக வளர்ந்த நாடுகளில் கூட சக மனிதர்கள் மீது அப்பட்டமான இனவெறி நிலவுகிறது என்பதுடனும் அந்த நாடுகளில் அவ்வப்போது நிகழும் துப்பாக்கிக் கொலைகளை சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து அந்த நாடுகள் கொள்ளும் கவலையுடனும் இணைத்து யோசிக்க வேண்டிய விஷயம் அது.  

வெளிப்படையான நிர்வாகத்துக்கு நாம் இன்னும் நம்மை முழுமையாகப் பழக்கிக் கொள்ளவில்லை. இந்த நிலைக்கு சம பங்குக்கும் சற்று கூடுதலான பங்கு குடிமக்களும் பொறுப்பு. 

நமது மக்கள் சக்தியை சுரண்ட நினைக்கும் சக்திகள் சர்வதேச அளவில் செயல்படுகின்றன. எல்லா முனைகளிலும் சாத்தியமான எல்லா வழிகளிலும் தாக்குதல் தொடுக்கின்றனர். 

பிரக்ஞை கொண்ட ஒரு சமூகம் உருவாக நாட்டை நேசிக்கும் எல்லா சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய காலகட்டம் இது.