Wednesday 31 October 2018

நாற்று நடும் வயலில்
நீர்ப்புழு தின்று
வளரும் பயிரில்
பூச்சி பிடித்து
பால் கதிரில்
மணி மணியாய்
நெல் கொத்தி
இயந்திரம் அறுத்து
சிந்தி விட்டுப் போன
தானியம் உண்ணும்
சின்ன சிட்டு
களத்தடியிலிருந்து
நூதனமாய்ப் பார்க்கிறது
தாள்
வானம் பார்க்கும்
வெட்டவெளி வயலை

மஞ்சள் கணம்

ஈரோட்டுப் பிராந்தியத்தின்
மஞ்சள் வயல்களைக் கண்டிருக்கிறீர்களா
பாத்திகளுக்குள்
குறைவாய் நீர் ஓடும் சலசலப்புக்குள்
கை போன்ற
நீண்ட இலைகளால்
சக செடிகளுடன் பேசிக் கொண்டு
தலையாட்டிப் பொம்மையைப் போல
காற்றுக்கு அசைந்து கொண்டு

உங்கள் அடுக்கறையில்
டப்பாவில் இருக்கும்
மஞ்சள்
கொதிக்கும் நீரில்
சங்கமித்து
மணம் பரப்புவதை
உணர்ந்திருக்கிறீர்களா

சிறிய வெட்டுக்காயத்துக்கு
அம்மாவோ
பாட்டியோ
கைவைத்தியமாக
போட்ட
மஞ்சள் பத்துடன்
இருந்திருக்கிறீர்களா

அரிதாகவே
இப்போது
பெண்கள்
முகத்தில்
மஞ்சள் பூசுகிறார்கள்
சமீபத்தில் கண்ட
மஞ்சள் பூசிய பெண்முகம்
நினைவிருக்கிறதா

மாலை வெயிலில்
தினமும்
காலாற நடக்கிறீர்களா

சென்னையில்
தில்லியில்
பெங்களூரில்
சிம்லாவில்
ரயில் நிலையங்களில்
மஞ்சள் வண்ண
திபெத் துறவிகளைத்
தற்செயலாகப்
பார்த்தீர்களா

தாயார் சந்நிதியில்
பிரசாதமாய்
தரப்படும்
மஞ்சளை
கைகளில் ஏந்தியிருக்கிறீர்களா

மழலை முகங்களின்
ஒளிரும் புன்னகைகளை
தவறாமல்
பார்க்கிறீர்களா

மங்கல கணங்கள்
நிறம் கொள்கின்றன
மஞ்சள் கணங்களாய்

எளியது கேட்கின்

ஒரு காலைப்பொழுதைப் போல மகத்துவம் மிக்கதாக
ஒரு கிராமத்துச் சாலையைப் போல தனித்திருப்பதாக
ஓர் ஆற்றங்கரை மரம் போல் மோனித்து
தடாகத்தின் தாமரை இலைகளுக்கு மேல்
மென்காற்றில்
உருண்டு உருண்டு ஒளிவிடும்
துளித் துளி நீர் போல்

இந்த வாழ்க்கைதான்

எத்தனை எளியது

எத்தனை அழகானது

Tuesday 30 October 2018

அங்கிங்கெனாதபடி

கால்வாய்க் கரை ஒன்றில் அமர்ந்திருக்கிறது
அந்த நூற்றாண்டு ஆலமரம்
வேர்கொண்டுள்ள விழுதுகள்
கால்வாயில் இறங்கி
நீரோட்டத்திற்கு ஒலி தருகின்றன
நாளில்
வெவ்வேறு பொழுதில்
புதிது புதிதாய்
இடம் பிடித்து
நிழல்பரப்பில் ஜம்மென இருக்கிறது
ஆலமரம்
சூலமும் சிவலிங்கமும்
பறவை கணங்களுடன்
ஆயாசமாய் இருக்கின்றன
முதல் முறை பார்க்கும்
ஒவ்வொருவரும்
ஆச்சர்யப்படுகின்றனர்
எப்படி இவ்வளவு பெரிய மரமென
ஊருக்கு விருந்தாளி வந்த
ஏழு வயது சிறுவன்
ஆலமரத்தை
எடுத்துக் கொண்டு சென்றான்
தன்னுடன்
எப்படி எடுத்து வந்தாய்
என்று கேட்ட
தோழனுக்கு
இன்னொன்றை உருவாக்கித் தந்தான்
வருகிறாயா
எனக் கேட்ட ஒவ்வொருவரிடம்
சென்று கொண்டேயிருந்த
மரம்
இருந்தது
அங்கும்
இங்கும்
எங்கும்
சோம்பிய மாடுகள்
திரியும் வீதிகளில்
பூட்டிக் கிடக்கின்றன
சில ஆளற்ற வீடுகள்
உச்சி வெயிலில்
குளிர்ந்திருக்கின்றது
தடாகத்தின் நீர் ஆழம்
ஆயிரமாண்டுத் தனிமையை
அவ்வப்போது
நினைவுபடுத்துகிறது
ஆலய மணியோசை
எப்போதும் அணையாத
விளக்கின் சுடர் ஒன்று
அங்கிங்கு அசைகிறது
பெரும் காற்றில்
முகங்கள் மகிழ்கின்றன அங்காடிகளில்
ஆரம்பப் பள்ளி குழந்தைகள் போல்
கைகள் இறுக்கப் பற்றுகின்றன
கடைப்பைகளை
புற்றில் கிளம்பும் எறும்புகளின்
எதிர்பாராத சந்திப்புகள்
மாலை தீர்ந்த இரவுகளின்
பனித்துளிகள்
எதிர்பார்ப்புகளின்
கனவுகளின்
எடை கொள்கின்றன
வண்ண பேதங்கள்
வித வித மாய்
நிரப்புகின்றன
நம்பிக்கையை
பிளாஸ்டிக் குடத்தின்
சிறு விரிசலில்
பீறிடுகிறது
ஃபவுண்டெய்ன் பூக்கள் 

Sunday 28 October 2018

பல வருடம் முன்பு
குடியிருந்த ஊரில்
இன்னும்
திரிந்து கொண்டிருக்கிறான்
ஒரு சிறுவன்
அவனுடைய
எல்லையற்ற நம்பிக்கைகளுடன்
முடிவில்லாக் குதூகலங்களுடன்
அந்த ஊரைக் கடப்பவன்
பார்வையில்
தென்படுகின்றன
சிறு சிறு மாற்றங்கள்
எப்போதும்
உற்சாகமாய்த் திரியும்
ஓரிரு சிறுவர்கள்

Saturday 27 October 2018

எப்போதும்

உனது
தயக்கங்களில்
மென்முறுவல்களில்
பிழையற்ற உச்சரிப்புகளில்
முகம் ஒளிரும் மகிழ்ச்சிகளில்
இருக்கிறது
ஒரு வண்ணத்துப்பூச்சியின் அலைவுகள்
அதிகாலை மலர்கள்
இளந்தளிர்கள்
அலைகளில் எழும் சந்திரன்

அறுதியிட முடியாத
ஓர் இடைவெளி

Friday 26 October 2018

வானம் பார்க்கும் குழந்தை

வானம் பார்க்கும் குழந்தை
தினமும்
பார்த்ததைச் சொல்லும்
ஸ்டார்
விடிவெள்ளி
நிலா
மின்மினி
ஈசல்
குருவி
காகம்
கருடன்
கழுகு
மேகம்
மழை
வானவில்

ஒருநாள்
வானம்
தன்னைப் பார்த்ததை
எப்படிச் சொல்வது
என அறியாமல்
சந்தோஷமாய்
எம்பி எம்பி குதித்தது
வானம் பார்க்கும் குழந்தை

Thursday 25 October 2018

காலைப் பொழுதில்
நீரால் நனையும் வாசல்கள்
கோலம் சூடிக்கொள்கின்றன
சிறுமிகள்
சம பாதியாய்
பிரித்த கூந்தல்
இரட்டை ஜடையாய்
மாறிக் கொண்டிருக்கிறது
அறியப் படாத உணர்வால்
குரலெழுப்புகின்றன
தவிட்டுக் குருவிகள்
குழந்தைகளின்
சீருடைத் தூய்மை
வானில் இருக்கிறது
இன்று
உதயசூரியன்
குழந்தை முகமென
பளபளத்தான்
இன்றும்

Wednesday 24 October 2018

பௌர்ணமி

கடைத்தெருவுக்குச் சென்று
திரும்பும் போது
விடாமல்
கூடவே வந்ததை
ஜன்னல் கதவு மூடி
வெளியிலே
நிறுத்தி விட்டு
மறந்து போய்
தூங்கி விட்டேன்

திருவிழாவில்
குருவி பிஸ்கட் வாங்கி
கையோடு
கொண்டு போன பாயை
வயக்காட்டில்
போட்டு
படுத்துக் கொண்டே
கர்ண மோட்சம் கேட்ட போது
வானத்தில் நின்றிருந்ததை
பார்த்துக் கொண்டேயிருந்தேன்

பாலத்தைக் கடக்கும் போதெல்லாம்
நதியில்
அலை பரப்பிக் கொண்டிருப்பதை
ஒரு கணம் நின்று
பார்த்து விட்டு
சென்று கொண்டிருப்பேன்

யாருமற்ற கடற்கரைகளில்
தனியே
அமர்ந்திருக்கையில்
அமுதாய் பொங்கியது
இரவு முழுதும் நிலவு

தொலைதூர ஊரொன்றில்
பயணித்த போது
புதிய முகம் கண்டு
புன்னகைத்த சிறுவன் முகம்
நிலவாய் ஆகிப் போனது
எப்போதைக்குமாக

வலைக்கு
அப்பாலும்
இப்பாலும்
குழுமி சிரிக்கின்றனர்
விளையாட்டுச் சிறுவர்கள்
துள்ளும் பந்து போல்
ததும்புகின்றனர்
ஒவ்வொருவரும்
அவர்கள் போல்
ததும்புகிறது
பந்தும்

Monday 22 October 2018

சவாரி வந்த ஊரில்
நிறுத்திவைத்து விட்டு
தெருமுக்கில்
டீ குடிக்கச் சென்ற
டிரைவர்
திரும்பி வருகையில்
நிழல்மரம்
பூக்களை உதிர்த்து
காருடன்
கொண்ட சிநேகம் பார்த்து
புன்னகைத்துக் கொண்டான்

Sunday 21 October 2018

வெட்டவெளியில் தனியே நிற்கிறாய்
ஒரு நம்பிக்கையில்
குருதியும்
காற்றில் மிதக்கும் படைக்கலன்களும்
பார்வையில் படும் இடத்தில்
உனக்கு சொல் அளிக்கப்படவில்லை
தயக்கத்தின் மௌனமும்
இருப்பினும்
மண்ணில்
காத்து நிற்கும்
ஏதோ ஒரு கணத்தில்
மழைபெறும்
விதை உயிர்க்கும்
பொழுதெல்லாம்
ஆசுவாசம் கொண்டு

வான் நீர் நெருப்பு

நட்சத்திர ஒளியை
யாசகம் பெறுகின்றன
தாமரை இலைக்கைகள்
முழு இரவும்
தடாகத்தில்

எஞ்சி நிற்கிறது
இறுதியில்
வீழ்ந்த
துளி
பனிநீர்
அனாதி காலமாக
இறுகி
ஒளிரும் வைரம்

இன்னும்
வந்து சேராத
மீன்கள்
உடலை
அசைத்து அசைத்து
சலனமுறுத்துகின்றன
வாழிடத்தை

Friday 19 October 2018

வான் நதி

சூரிய மஞ்சள்
மரந்தளிர்ப் பச்சைகளில்
திலகமிடும்
அந்த மாலைப் பொழுதில்
போய்க் கொண்டேயிருக்கும்
ஒரு துறவி
மலையின் மேல்
விரிந்த கைகளுடன்
நின்றிருந்தான்

மகவாய்
அவனைத் தழுவியது
அன்னை மஞ்சள்

சட்டென
நதியாய் ஓடத் தொடங்கினான்

நிலமெங்கும்
ஒளிரும் அன்னை முகம் கண்டு
சந்தோஷம்
பிரதிபலிக்கும்
நதியாய்

Thursday 18 October 2018

புறநகர் மின்சார ரயில்

பணம் பிதுங்கும் பர்ஸ் போல
மனிதர்கள் நிற்கும்
புறநகர் மின்சார ரயில்
பூனைபோல்
அலைகிறது
குறுக்கும் நெடுக்கும்

அசையும் ரயிலில்
பயணிகளின் மனம்
சுழன்று கொண்டிருக்கிறது
பல பல திசைகளில்

அமர்ந்ததும்
ஆசுவாசமாய்
முதல் வேலையாய்
காதலனை அலைபேசியில் அழைக்கிறாள்
ஓர் இளம்பெண்
அவனுக்குப் பல குறிப்புகளை அளிக்கிறாள்
அவன் ஏதும் ஐயம் கேட்டால்
‘’உனக்கு இது கூட தெரியாதா’’
என அங்கலாய்க்கிறாள்

சேரிடத்தின் பணிகள் குறித்த எண்ணம்
இப்போதே அமைதியிழக்கச் செய்கிறது
ஒரு நடுவயதினனை

தனது குழந்தையை
கோப்புகளுடன்
மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்லும் தாய்க்கு
எல்லா நிலையிலும்
குறையாமல் இருக்கிறது
நம்பிக்கை

காதல் கண்களில் மிதக்கும்
காதலனுக்கு
பிடிபடுகிறது
நகரின் ஒத் திசைவு

முரசரையும் கரடி பொம்மையின்
எந்திரச் சாவியென
சுற்றி வருகிறது ரயில்
சுற்றிக் கொண்டிருக்கும் நகரத்தில்

Tuesday 16 October 2018

ஒரு தருணம்

ஒரு தருணம்
சாதாரணங்களின் எடையை நீக்கி
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறோம்

மழைநீரால் கழுவப்பட்ட மரங்கள்
புதுப்பச்சையால் உணரப்படுகின்றன
தளிர்களால் சூழப்படுகிறது செந்நெருப்பு
மலர்கள்

துலக்கம் பெறுகிறது
நம் அன்றாடத்தின் காட்சிகள்

பட்டியலில்
இன்னும் மன்னிக்காமல் இருந்தவர்களை
மன்னித்து விடுவிக்கிறோம்
சிலரிடம் மன்னிக்கக் கோருகிறோம்

வாழ்வின்
முடிவற்ற இனிமையின் முன்
வாழ்வின்
முடிவற்ற வாய்ப்புகளின் முன்
காலடி வைக்கப்படுகிறது
நடை பயிலும் மகவாக

Monday 15 October 2018

மழை பெய்த ஊர்

ஊரே கழுவப்பட்டிருக்கிறது மழைநீரால்
ஈரத்தரையில் காத்திருக்கின்றனர்
குளித்துக் கிளம்பியிருக்கும் குழந்தைகள்
எப்போதும்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில்
சாலையில் கடந்து செல்லும்
ஓர் இளம்பெண்
முகத்தில்
சூடியிருக்கிறாள்
கூடுதல் புன்னகையை
முருங்கை இலைகள்
பழுத்து
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
கார் கண்ணாடி மேல்
மூட்டமான மேகம்
நிலத்தில்
வரைந்து கொண்டிருக்கிறது
புதிதான சில காட்சிகளை
அல்லது
சில காட்சி திருத்தங்களை
நூதனமாய்த் தொங்குகின்றன
ஈரமான சட்டைகள்

Sunday 14 October 2018

மர்ஃபி என்றால்

மர்ஃபி என்றால்
ஓர் ஒளி
ஒரு துடிப்பு
ஒரு ததும்பல்
ஒரு நம்பிக்கை
ஒரு மன்னிப்பு
ஒரு கரையேற்றம்
ஓர் அலையாடல்
ஒரு சூர்யோதயம்
ஒரு நிறைநிலவு
ஒரு பிறைச்சந்திரன்
ஒரு மழைப்பொழிவு
ஒரு மலைப்பாதை
ஒரு துளி அமுது

மர்ஃபி என்றால்
ஒரு சுட்டிப்பயல்

புறப்பாடு

இன்று
அதிகாலை நடையில்
உடலெங்கும்
பூத்திருந்த
மரமொன்றைக் கண்டேன்

சிறு சிறு குருவிகள்
போல்
மலர்கள்
காற்றில்
நடுங்கி அமர்ந்திருந்தன

தீச்சுடரின்
ததும்பலென
மெல்ல மெல்ல
அசைவு

கரு வாய்
அகன்ற
மகவின் உடலின்
பிசுபிசுத்த
ஈரம்

நீண்ட
மிக நீண்ட
சாலையில்
நின்றிருக்கும்
அம்மரத்தின்
ஏகாந்த இனிமையாய்
புறப்பட்டுச் சென்றன
அவ்வப்போது
வானுக்கும்
அவ்வப்போது
மண்ணுக்கும்

Saturday 13 October 2018

என்ன செய்வதென்று தெரிவதில்லை

என்ன செய்வதென்று தெரிவதில்லை
சட்டென ஒரு பிழையான புரிதல் வெளிப்படும் போது
நம்ப இயலாத ஒரு கணிப்பு முன்வைக்கப்படும் போது
பல்லாண்டு வேர் கொண்ட உறவின் கிளைகள் கட்டுப்பாடின்றி முறியும் போது
வெறுப்புடன் ஒரு பிரிவுச்சொல் உச்சரிக்கப்படும் போது
அனைத்தையும் அப்படியே விட்டு விடச் சொல்லும் போது
இனி எப்போதும் சரி செய்ய வாய்ப்பே இல்லை எனும் போது
எச்சொல்லும் இனி புரிந்து கொள்ளப்படாது எனும் போது
கண்ணீரின் உணர்வுகள் கண்ணுக்குத் தெரியாமல் போகும் போது

என்ன செய்வதென்று தெரிவதில்லை
இனி
என்ன செய்வதென்று தெரிவதில்லை

அழைப்பு

வலைகள்
உலர்ந்து கொண்டிருக்கும்
அந்தத் தீவில்

தோணிகள்
நிலத்தில் கவிழ்ந்திருக்கும்
அந்தத் தீவில்

எப்போதோ வரும்
மனிதர்களை
சற்று
நின்று பார்த்து விட்டு
நண்டுகள்
சட்டென்று
வளைக்குள் புகுந்து கொள்ளும்
அந்தத் தீவில்

எப்போதும்
இருக்கிறது
ஓர் இளம்பெண்ணின் புன்னகை

எப்போதும்
அத்தீவுக்கே
வந்திராத
ஓர் இளம்பெண்ணின் புன்னகை

Thursday 11 October 2018

நீர் நகரும் ஆற்றின்
கரையில்
காற்றில்
அசைந்து
எரிந்து கொண்டிருக்கிறது
சிதைநெருப்பு
கனன்று
குமுறிய
சாம்பல்
குளிர்ந்து
கரைந்து போகிறது
நதியோட்டத்தில்
அமைதியாய்
இன்மையாய்
இன்னும்
யாரும் வெளிப்படாத
நகரின்
அதிகாலை ரம்யங்கள்
ஆடி முன் அமரும்
பாவையென
அலங்கரிக்கத்
துவங்குகின்றன
தமக்காக

Wednesday 10 October 2018

என் அவமதிப்புகளுக்காக
என்னால் ஏற்பட்ட
ஆறா ரணங்களுக்காக
என் இன்னாத சொற்களுக்காக
நான் உண்டாக்கிய
தீரா வலிகளுக்காக

இன்று
இப்பொழுதில்

உங்களிடம்
மன்னிக்கக் கோருகிறேன்
மீண்டும் மீண்டும்
மன்னிக்கக் கோருகிறேன்

என் விழிகளிலிருந்து
வீழும்
நீர்த்துளிகள்
மணல்துகள்களாய்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
முடிவற்ற கடலை

Tuesday 9 October 2018

இன்று
ஒரு சாலைத் திருப்பத்தில்
கணிக்காத கணம் ஒன்றில்
மிக மென்மையாய்
மோதியும் மோதாமலும்
எதிரெதிராய் வாகனங்கள்
சந்தித்த கணத்தில்
பரஸ்பரம்
நாங்கள்
புன்னகைத்தோம்
நுணுக்கமான தருணம்
சட்டென்று
கொண்டு சேர்த்த
எதிர்பாராமைக்காக
இனிமைக்காக
ஆசுவாசத்துக்காக

Monday 8 October 2018

உடல் கொண்ட மனங்கள்
குழுமிய துறையில்
பலிச்சோறு சுமந்த
வாழையிலைகள்
நதியில்
மிதந்தன
அங்கும் இங்கும்
திகைத்து

ஏற்ற இறக்கங்கள் கொண்ட
மனிதக் குரல்களின்
உச்சரிப்பு
நிறைந்திருந்தது
சில்வண்டுகளின் ஒலியென

இன்னும் சொல்லப்படாத வார்த்தைகள்
இன்னும் கேட்கப்படாத மன்னிப்புகள்
இன்னும் கரைந்து கொண்டிருக்கும் கண்ணீர்
நதியிலும்
காற்றிலும்
அலை மோதிக் கொண்டிருந்தது
எந்திரகதி செயல்பாடுகளுக்கும்
இடையே

கைவிட்ட
கைவிடப்பட்ட
நெகிழும் உணர்வுகள்
ஆறா ரணங்கள்
நீர் ஈரமாய் மிதந்தன
காற்றில்

எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு
எல்லாவற்றையும் சுமந்து கொண்டு
தன் கடன் ஆற்றி
கடல்நோக்கி
நடந்தது நதி

Sunday 7 October 2018

பகலும் அற்ற
இரவும் அற்ற
ஒரு பொழுதில்
சிவந்த விண்முகத்தின்
புன்னகை
சில கணங்கள் ஒளிர்த்து
சில கணங்கள் ஒலித்து
முகத்தில் தொட்டது
சிறு தூறல் துளிகளாக
மாமழையாக

Saturday 6 October 2018

எப்போதாவது
சிலிர்க்க வைக்கிறது
நம் மீது காட்டப்படும் அக்கறைகள்

என்றோ ஒரு நாள்
திகைத்து நிற்கிறோம்
நம் முன்னே
விரிந்து கிடக்கும்
இனிமையின் பெரும்பரப்பின் முன்

வீழும் துளிநீர்
இல்லாமலாக்கி விடுகிறது
உடனிருக்கும்
பெருஞ்சுமைகளை

நம்பிக்கைகள்
நிறையும்
நாட்கள்
நதிபோல
நடந்து கொண்டுதான் இருக்கின்றன
பரபரக்கின்றன
கால்கள் நகரும்
சாலைகள்
எரிந்து விழும்
நட்சத்திரம்
சட்டென
மறைகிறது
காற்றில்
பார்வையில்
நாளின்
சில பொழுதில்
நதிக்குள்
பாய்கிறது
திரைகடல்

Wednesday 3 October 2018

சாலைக்கு மேலே
இன்னும் உதிராத
முருங்கைப்பூவை
கொறித்துக் கொண்டிருக்கிறது
சிறு அணில்
சாலைக்கும்
பூவுக்கும்
இடையில்
காலெடுத்துக்
கடந்து சென்றேன்
கிரீச் கிரீச்
ஒலியுடன்

Monday 1 October 2018

நடக்க நடக்க
வளர்ந்து கொண்டே இருக்கிறது
இந்த பெரிய உலகின்
தூரம்
பறக்க பறக்க
சென்று கொண்டேயிருக்கிறது
முடிவற்ற வானம்
மரத்திலிருந்து கொட்டும் பூக்கள்
அழகாய்த்தானிருக்கின்றன
எப்போதும்
இருந்தாலும்
எப்படியோ
வந்து சேர்ந்து விடுகின்றன
விளக்கின் நிழல்
போல
சில கவலைகள்