Sunday 29 September 2019

நவராத்திரி விரத துவக்கம்

இன்றிலிருந்து ஒன்பது நாட்கள் எவ்வகையான உணவும் உண்ணாமல் நீர் மட்டுமே அருந்தி விரதமிருக்க உள்ளேன். உணவைத் துறப்பதாக முடிவெடுத்ததுமே ஒரு பெரும் சுதந்திரம் சூழ்ந்து விட்டதான உணர்வு ஏற்படுகிறது. அது ஒருவகையான மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் படைப்பூக்கமான மனநிலையைக் கொண்டவன். எனவே எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பவன். வாழ்வின் ருசிகளையும் இனிமைகளையும் விரும்புபவன். காலியாக இருக்கும் வயிறு என்பது எண்ணங்களில் மன ஓட்டத்தில் சௌகர்யமான இடைவெளியை உண்டாக்குகிறது. அந்த இடைவெளி செயலாற்றுவதில் முக்கியமாக உதவுகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரியல் எஸ்டேட் ஒரு பின்னடைவைச் சந்தித்திருந்தது. இப்போது அந்த தடை நீங்கியிருக்கிறது. எனக்குச் சொந்தமான இடத்தில் ஒரு பெரிய கட்டுமானப் பணியைத் துவங்க உள்ளேன். நமக்கான பணியை - நமக்கான தொழிலை நாம் ஆர்வத்துடன் மேற்கொள்ளும் போது அளப்பரிய சக்தியை நாம் உணர்கிறோம். மேலும் சில புதிய பணிகளுக்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. 

வாழ்க்கை பழக்கங்களால் ஆனது. மனித குலம் தன் ஆயுளை நீடித்து தாக்குப் பிடித்துக் கொள்ள பல்லாயிரம் ஆண்டுகளாக உணவு குறித்த பல்வேறு வழக்கங்களை உருவாக்கியிருக்கிறது. இந்தியா உடல் குறித்தும் உணவு குறித்தும் பல்வேறு வகையில் சிந்தித்த நாடு. அழியும் இயல்பு கொண்ட உடலை இறைமையை நோக்கிச் செல்லும் நகர்வின் முக்கிய படியாகக் கருதிய நாடு. எனக்கு எப்போதுமே ஆரோக்கியமான வாழ்வின் மீது பெரும் விருப்பம் உண்டு. 

என்னால் பசி பொறுக்க முடியாது. எனக்கு ஒவ்வொரு வேளை உணவையும் அம்மாவே பரிமாறுவார்கள். அம்மா வெளியில் சென்றிருந்தால் கூட அவர்கள் வரும்வரை காத்திருந்தே உண்பேன். எனவே எங்கே சென்றிருந்தாலும் நான் உணவருந்தும் நேரத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்து விடுவார்கள். ஒன்பது நாட்கள் எதுவும் சாப்பிடாமல் இருக்கப் போகிறேன் என்பது அம்மாவுக்கு வருத்தம். வாரத்தில் ஒரு நாள் உணவருந்தாமல் இருந்தால் வருடத்துக்கு 52 நாட்கள் விரதமிருந்த கணக்காகும். ஏன் இப்படி ஒரே மூச்சில் ஒன்பது நாட்கள் விரதம் இருக்கிறேன் என்று உடலை வருத்திக் கொள்கிறாய் என்றார்கள். அவர்கள் சொல்வது சரிதான். இந்த விரதமிருந்ததும் அவ்வாறு செய்கிறேன்; அப்போதும் நவராத்திரி விரதம் இருப்பேன் என்று சொன்னேன். எனக்குள் இருக்கும் சிறுவனை அம்மா நன்றாக அறிவார்கள். 

நிறைய வேலையிருக்கிறது. பல விஷயங்கள் திட்டமிட வேண்டியுள்ளது. முக்கியமான செயலாக்கங்கள் உள்ளன. அன்னையர் எப்போதுமே பரிந்து கொடுப்பவர்கள். அன்னைத் தெய்வங்களிடமிருந்து மானுடன் பெற வேண்டியவை இன்னும் பல இருக்கின்றன.

மேஜையை சீராக்குவது எப்படி

மேஜையை சீராக்குவது எப்படி
சிறிய பரப்பில்
பரவிக் கிடக்கின்றன
பல
புத்தகங்கள்
கோப்புகள்
பேனாக்கள் பென்சில்கள்
அலைபேசி சார்ஜர்கள்
நாட்குறிப்புகள்
சில பரிசுப்பொருட்கள்

மேஜைகளுக்கு
சொந்த விருப்பம்
உண்டு
அதிகமாக

மேஜையை சீராக்குவது குறித்து
மேஜையுடன்
பேசி
ஒரு முடிவுக்கு வருவது
நல்லது
என்று படுகிறது

மேஜைகள்
பேச்சுவார்த்தையை
விரும்பக் கூடும்

நினைவுக் குமிழிகள்

அறிஞர் சுப்பு ரெட்டியாரின் சுயசரிதையான ‘’நினைவுக் குமிழிகள்’’ குறித்து ஜெ தளத்தில் வெளியான கடிதத்தின் இணைப்பு

சுப்பு ரெட்டியார்

Saturday 28 September 2019

பிரிவென்பது

நாம் தத்தளித்துக் கொண்டிருந்தோம்
நம்மைச்
சூழும் காற்றில்
ஒவ்வொரு நாடித்துடிப்பில்
அவ்வப்போது எழும் எண்ணங்களில்
வாழ்க்கையின் முடிவற்ற சாத்தியங்களில்

இந்த உலகம்
இவ்வளவு இனிமைகளின்
பெருவெளியைக் கொண்டதா

மேகங்களும் மீன்களும்
இணைந்திருக்கும்
வானத்திற்குக் கீழே

மாடியின் மேற்பரப்பில்
மெல்ல அசையும் காற்று
அவ்வப்போது தீண்டிச் செல்கிறது

பிரிவென்பது எதனால் ஆனது
காலத்தால்? அல்லது தூரத்தால்?
அல்லது
மௌனத்தால்? அல்லது சொல்லால்?

நடையின் ஒலி

தமிழ்நாட்டில் பாரம்பர்யமான மரபான பழக்கங்களின் மீதான அறிமுகமோ ஆர்வமோ இளைய தலைமுறையிடம் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லிட முடியும். சமூக வாழ்க்கை முறைமைகளால் ஆனது. முறைமைகளால் மட்டுமே ஆனது. ஆதலால் ஏதேனும் ஒரு நியதிக்கு உட்பட்டே சமூக வாழ்க்கை அமைய முடியும். கம்யூனிஸ்டு இயக்கங்கள் தமிழகத்தில் வேரூன்றும் முன், பட்டியல் சாதியினர் பறை இசைக்கருவியின் மூலம் மகாபாரதம் கதை சொல்லும் நிகழ்வு எல்லா ஊரிலும் வருடாவருடம் நடந்திருக்கிறது. கம்யூனிஸ்டுகள் சமய இலக்கியங்கள் மேல் மெல்ல விலக்கத்தை உருவாக்கி வந்தனர். பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்திருந்த அந்த வழக்கம் நின்று போனது. கம்யூனிஸ்டுகள் பட்டியல் சாதியினரின் இசை உணர்வையும் கலை உணர்வையும் தங்கள் அரசியல் பரப்புரைக்குப் பயன்படுத்தலாயினர். இன்றும் கம்யூனிஸ்டுகளின் பரப்புரைப் பாடல்கள் தெம்மாங்கை அடிப்படையாய்க் கொண்டவை. நான் நின்று கேட்பதுண்டு. இந்தியாவில் ஹிந்து மதத்திற்கென சமயத் தலைமை என ஏதும் யாரும் கிடையாது. நேரடியான மதக் கட்டாயங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் மதத்திற்கு எதிரான போக்கு அரசியல் இயக்கங்களிடம் இருந்தது. அவர்கள் மதத்தை அஞ்சினர். 

தமிழகத்தின் நடுத்தர வர்க்க குழந்தைகளுக்கு சமய வழிபாடு குறித்த அடிப்படை விபரங்கள் ஏதும் தெரியாது. கோயிலில் ஏன் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது? கோயிலில் ஏன் விளக்கு ஏற்றுகிறார்கள்? வழிபாடு வாழ்வுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவக் கூடியதா? சைவத்துக்கும் சாக்தத்துக்கும் வேறுபாடு என்ன? குங்குமம் எவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது? இவற்றை இன்றைய இளைய தலைமுறையிடம் கேட்டால் அவர்கள் பதில் சொல்வார்களா என்பது தெரியவில்லை. ஆனால், இதைப் போன்ற அடிப்படையான விஷயங்கள் அறிமுகப்படுத்தப் பட்டாலே, அவர்கள் சமயம் மீதும் சமயச் சடங்குகள் மீதும் ஆர்வம் கொண்டு அடுத்தடுத்து அறிவார்கள். அதன் மீதான விமர்சனங்களுடன் முன்னகர்வார்கள்.

இன்றும் உலகில் மதத்தின் பெயரால் போர் தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக மதமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பல்வேறு பிரிவுகள் தாங்கள் விரும்பும் தங்களுக்கு உவப்பான வழிமுறைகளில் அடுத்த பிரிவை அழிக்காமல் தங்கள் பழக்கங்களையும் வழிபாட்டையும் மேற்கொண்ட நாடு. அவ்விதத்தில் நாம் உலகுக்கு வழிகாட்ட முடியும். அவ்வழிமுறையை உலகம் நம்மிடமிருந்தே அறிய முடியும். அதற்கு அத்தன்மை இந்தியாவில் நீடித்திருக்க வேண்டும்.

சமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அந்த வீட்டில் ஒரு பெண் குழந்தை. அக்குழந்தை வரும் போதும் போகும் போதும் மெல்ல ஒரு அமைதி பரவுவதாக உணர்ந்தேன். அந்த அமைதியைப் பின் தொடர்ந்த போது அதன் மையமாக ஓர் இனிய ஒலி இருப்பதைக் கண்டடைந்தேன். கொலுசின் ஒலி. மிகக் குறைந்த மணிகள் கொண்ட மிக மெல்லிய ஒலியை எழுப்பும் கொலுசு. நம் மன ஆழங்களுக்குள் ஊடுறுவி ஒளியூட்டக் கூடியது. அக்குழந்தையின் நடையும் பாவனைகளும் செயல்பாடுகளும் அந்த ஒலியின் இசைத்தன்மையை ஒட்டியதாக இருப்பதைக் கவனித்தேன். 

நம் முன்னோர் மீது நம் எல்லா இயலாமைகளுக்கும் அவர்களே காரணம் என பழி சுமத்துகிறோம். நம் முன்னோரைப் போல வாழ்வின் மீதும் வாழ்வின் நுட்பங்கள் மீதும் தீராக்காதலுடன் நாம் இருக்கிறோமா?

Friday 27 September 2019

உனக்குத் தருவதற்காக
தேர்ந்தெடுத்து வைத்திருந்த
இன்னும் கொடுத்திடாத
பரிசுப்பொருட்கள்
பார்வையில்
தென்படுகின்றன
அவ்வப்போது
உனது மென்மையை
உனது பெருந்தன்மையை
உனது கனிவைக்
குறித்து
உன்னிடம் சொல்வதற்கு
அன்பின் பிரதேசங்களில்
ஓயாமல் உலவி
சேர்த்திருந்த சொற்களின்
அடர்த்தி
சிறிது சிறிதாகக்
கரைந்து கொண்டிருக்கிறது
உனது மலர்முகம்
உனது இயல்பின் இன்மணங்கள்
மனதின் ஆழங்களுக்கு
முடிவில்லாமல்
நகர்ந்து கொண்டேயிருக்கின்றன
உன்னைச் சந்திப்பதின் சாத்தியங்கள்
நூதனமாகிக் கொண்டே யிருக்கின்றன
எத்தகைய நாளிலும்
ஒருமுறையேனும்
புன்னகைத்து
நீ மலர்வாய்
ஒளி உயிர் மூச்சாய்
மாறும் கணம் தான்
இந்த பெரிய உலகில்
எவ்வளவு நுட்பமானது


நவராத்திரி விரதம்

நான் மாற்றத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டவன். வாழ்க்கை முழுமையை நோக்கியே எல்லா விதத்திலும் நகர்கிறது என்னும் பார்வையைக் கொண்டவன். உடல் ஆரோக்கியத்தின் மீதும் மன அமைதி மீதும் நாட்டம் உடையவன். செயல்களைச் செம்மையாக சீராக ஆற்ற வேண்டும் என்ற விருப்பம் எனக்கு எப்போதுமே உண்டு. இந்த ஆண்டு, என்னை நான் மேலும் உற்று நோக்கி அறிய - என்னுடைய உடல், மன எல்லைகளை விரிவாக்கிக் கொள்ள - ஒன்பது நாட்கள் (29.09.19 முதல் 07.10.19 வரை) உணவு அருந்தாது உண்ணா நோன்பிருக்க எண்ணியுள்ளேன். மழைக்காலம் தொடங்க இருக்கும் இக்காலகட்டத்தை அன்னைத் தெய்வங்களுக்குரியதாய் வகுக்கிறது இந்திய மரபு. இக்காலத்தில், உணவு ஒழித்து வாழ்க்கையின் மீது மேலும் கவனம் செலுத்தி இருப்பது எனக்கு மிகவும் தேவையானது என்று தோன்றுகிறது. உயிர்கள் பசியை உணரும் தோறும் வாழ்வைத் தீவிரமாக உணர்கின்றன. முழுமுதல் அன்னையிடம் ஒப்படைத்து இருப்பது நன்மை பயக்கும் என நம்புகிறேன். 

அதிகாலை எழுந்து யோகப் பயிற்சிகள் செய்யலாம். ஆலயம் சென்று வழிபடலாம். பகல் பொழுதுகளில் தியானத்தில் அமரலாம். உறங்கும் பொழுதை மிகக் குறைந்ததாக வைத்துக் கொள்ளலாம். 

அன்னை துணையிருக்க வேண்டும். அன்னை ஆசியளிக்க வேண்டும்.
கதிர் ஏறிய உச்சி
நீ
தவழ்ந்த
நடந்த
ஓயாமல்
இங்கும் அங்கும்
ஓடிய
வீட்டில்

எல்லா வெளிச்சத்திலும்
எல்லா பொருட்களிலும்
உடனிருக்கிறது
முடிவில்லாத தனிமை

வீட்டில் இருப்பவன்
நினைவில்
மீட்டிக் கொள்கிறான்
எப்போதும்
கேட்ட
உன் கொலுசின் ஒலியை

Sunday 22 September 2019

அகத்தின் புறச்சுவர்களைக் கழுவிக் கொண்டிருக்கிறது
நள்ளிரவில் பெய்யும் மழை
ஈரம் நிரம்பிய காற்று
சுவாசப் பாதைகளை
தொட்டுச் செல்கிறது
ஓயாமல்
உறக்கத்தில் புரண்டு படுப்பவள்
எதிர்பாராமல்
விழித்துக் கொள்கிறாள்
அறையெங்கும் இருக்கும் தனிமை
ஒரு கணம்
தனிமை அவளை அச்சுறுத்துகிறது
தனித்து விடப்படுதலின்
எண்ணற்ற சாத்தியங்களாலான
உலகை
தினமும் கடந்து செல்வதை
எண்ணும் போது
நீர் திரள்கிறது கண்களில்
அழக்கூடாது
என நினைத்துக் கொள்கிறாள்
அவளது ஒரு கை
மறு கையின்
ஒற்றை வளையலைத்
தொடுகிறது
இந்த உலகில்
துணையாக
குறைந்தபட்சம்
ஓர் இறுக்கமான உலோகம்
எஞ்சி விடுகிறது

Wednesday 18 September 2019

இலக்கை எட்டுதல் - வாசிப்பு மாரத்தான்

48 நாட்கள் - இலக்கு: 6000 நிமிட வாசிப்பு


02.08.19 - திருவருண்மொழி- 7 மணி நேரம்
03,08.19- அபிதான மணிமாலை- 4.30 மணி நேரம்
04.08.19- கபிலம் - 4.30 மணி நேரம்
05.08.19 - கபிலம் - 1 மணி நேரம்
06.08.19 - வேங்கடம் முதல் குமரி வரை, கபிலம் - 2 மணி நேரம்
07.08.19 - வேங்கடம் முதல் குமரி வரை, கபிலம் - 3.15 மணி நேரம்
08.08.19 - வேங்கடம் முதல் குமரி வரை- 2 மணி நேரம்
09.08.19 - வேங்கடம் முதல் குமரி வரை,கபிலம் - 3.15 மணி நேரம்
10.08.19 - வேங்கடம் முதல் குமரி வரை - 1.30 மணி நேரம்
11.08.19 - வேங்கடம் முதல் குமரி வரை - 2 மணி நேரம்
12.08.19 - வேங்கடம் முதல் குமரி வரை - 1.30 மணி நேரம்
13.08.19 - வேங்கடம் முதல் குமரி வரை -1.15 மணி நேரம்
14.08.19-  கபிலம் - 1.15 மணி நேரம்
15.08.19 - The Gandhi Experiment - 2.30 மணி நேரம்
16.08.2019 - மண்ணும் மனிதரும் - 1 மணி நேரம்
17.08.2019 - மண்ணும் மனிதரும் - 5 மணி நேரம்
18.08.2019 - மண்ணும் மனிதரும். மொஸாட் - 5 மணி நேரம்
19.08.2019 - மொஸாட் - 1.30 மணி நேரம்
20.08.2019 - வண்ணக்கடல் (பொன்னகரம்) - 2 மணி நேரம்
21.08.2019 - கீதாஞ்சலி - 1 மணி நேரம்
22.08.2019 - சேக்கிழார் அடிச்சுவட்டில் - 1 மணி நேரம்
23.08.2019 - சேக்கிழார் அடிச்சுவட்டில் - 1.10 மணி நேரம்
24.08.2019 - சேக்கிழார் அடிச்சுவட்டில் - 1 மணி நேரம்
25.08.2019 - சேக்கிழார் அடிச்சுவட்டில் - 1.45 மணி நேரம்
26.08.2019 - சேக்கிழார் அடிச்சுவட்டில் - 2.25 மணி நேரம்
27.08.2019 - வேங்கடத்துக்கு அப்பால் - 1.30 மணி நேரம்
28.08.2019 - வேங்கடத்துக்கு அப்பால் - 2.35 மணி நேரம்
29.08.2019 - வேங்கடத்துக்கு அப்பால் - 1 மணி நேரம்
30.08.2019 - வேங்கடத்துக்கு அப்பால் - 1 மணி நேரம்
31.08.2019 - வேங்கடத்துக்கு அப்பால் - 2 மணி நேரம்
01.09.2019 - சத்யார்த்த பிரகாசம் -  1 மணி நேரம்
02.09.2019 - சத்யார்த்த பிரகாசம் - 1 மணி நேரம்
03.09.2019 - சத்யார்த்த பிரகாசம் - 1 மணி நேரம்
04.09.2019 - சத்யார்த்த பிரகாசம் - 1 மணி நேரம்
05.09.2019 - சத்யார்த்த பிரகாசம் - 1 மணி நேரம்
06.09.2019 - சத்யார்த்த பிரகாசம் - 1.30 மணி நேரம்
07.09.2019 - நினைவுக் குமிழிகள் - 1.30 மணி நேரம்
08.09.2019 - நினைவுக் குமிழிகள் - 2.15 மணி நேரம்
09.09.2019 - நினைவுக் குமிழிகள் - 3 மணி நேரம்
10.09.2019 - நினைவுக் குமிழிகள் - 2.45 மணி நேரம்
11.09.2019 to 15.09.2019- நினைவுக் குமிழிகள் - தினமும் ஒரு மணி நேரம் - 5 மணி நேரம்
16.09.2019-நினைவுக் குமிழிகள்  - 1.40 மணி
17.09.2019 - சோழ நாட்டுத் திருப்பதிகள் & மலை நாட்டுத் திருப்பதிகள்- 5.10 மணி
18.09.2019 - Guns, Germs and Steel - 3.48 மணி


48 நாள் மொத்த வாசிப்பு - 100.03 மணி நேரம் - 6003 நிமிடங்கள்

Tuesday 17 September 2019

மறுமொழி

கண் காணும் பாதைகள் கொண்ட
வானம்
பயணிகள் யாருமின்றி
தனித்திருக்கிறது
துணையற்ற மனம்
நெடுநேரமாய் பார்த்துக் கொண்டேயிருக்கிறது
அப்போது
யாரும் பயணிக்காத வானத்தை
ஒரு மழலை விண்மீன்
சிரித்துக் கொண்டே
உன் அருகில் வரட்டுமா
என்றது
விண் சுடரை ஏந்திக் கொள்வதை
யோசித்திருந்த பொழுதில்
ஞாபகம் வந்து
தன் அன்னையிடம் ஓடிச் சென்றது
மழலை விண்மீன்
கண் காணும்
விண்மீனை சமாதானம் செய்ய
நெடுந்தொலைவு
செல்ல வேண்டியிருக்கிறது
முடிவேயில்லாமல்

Monday 16 September 2019

இறுதிச் சுற்று - வாசிப்பு மாரத்தான்

வாசிப்பு மாரத்தானில் இன்று நாற்பத்து ஆறாம் நாள். என்னுடைய மொத்த வாசிப்பு 91 மணி நேரம். இலக்கை அடைய இன்னும் 9 மணி நேரம் வாசிக்க வேண்டும். இரண்டு நாட்கள் இருக்கின்றன. வாசித்து விடலாம். இன்று சுப்பு ரெட்டியாரின் ‘’நினைவுக் குமிழிகள்’’ நூலை (1500 பக்கம்) (4 பாகம்) வாசித்து முடித்தேன். நாளை அவருடைய பயண நூலை வாசிக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளேன்.

Sunday 15 September 2019

பாதை

நின் சொற்களை செவியுறுகிறேன்
ஒவ்வொரு அடியிலும் மிகுகின்றன
வலியின் அதிர்வுகள்
அகங்காரத்தின் வலி
இறைவா
என்னை அழித்து விடு
என்னை அழித்து விடு
நின் கருணையின் ஒரு துளி
என் மனத்தில்
ஒரு விதையாய் விழட்டும்
முளைக்கும் அப்பசுமையை
உயிர் கொண்டு காப்பேன்
உன் அருள் ஒளியை
அகமெங்கும்
ஏந்தி
காலக்கடலை
கடந்து சென்றிடுவேன்
என் இறைவனே

புத்தம் சரணம் கச்சாமி

Saturday 14 September 2019

ஆசான்

நீ அமர்ந்திருக்கிறாய்
மௌனமாய்
உன் கருணை நம்பிக்கையளிக்கிறது
ஞானத்துக்காக நடந்தன நின் பாதங்கள்
அளவின்றி
நின் பாதம் பணிகிறேன்
வெற்று அகங்காரம் மட்டுமே இருக்கிறது
அதை உன் முன் விட்டுத் தொலையும் வழியும் அறிகிலேன்
என் காணிக்கையாகக் கண்ணீரைக் கொடுக்கிறேன்
நின் கருணை என்னை எப்போதும் நல்வழிப்படுத்தட்டும்
நின் கருணையே
என் நம்பிக்கையாய் எஞ்சுகிறது
நின் கருணையே
என் நாளின் சூரியனாகிறது
என் இறைவா
மீண்டும்
மீண்டும்
நின் அடிபணிகிறேன்
நின் அடிபணிகிறேன்

புத்தம் சரணம் கச்சாமி

Friday 13 September 2019

உன் சான்னித்யம் பரவியிருக்கும் அறைகளில்
உன் புன்னகைகள் வரவேற்கும் பொழுதுகளில்
உன் மென்குரலில் உருவாக்கப்படும் உலகங்களில்
உன் கண்கள் சிரிக்கும் கணங்களில்
கண்டு உணர்ந்த
வாழ்வை
எறும்பு சுமக்கும் இனிப்பாக
எடுத்துக் கொண்டு
அலைந்து கொண்டிருக்கிறேன்
நிலமெங்கும்
கிராமத்து மண் சாலையில்
ஒரு சிறிய பழைய கீற்றுக் கொட்டகையில்
நெடுநேரம் நின்று
ஓயாப் பெருமழையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்
அந்த முடிவில்லாத யாத்ரீகன்
துயர் நீங்காத முகத்துடன்
சோர்ந்து நடந்து வரும்
அந்த யாத்ரீகனுக்கு
சேருமிடம் என ஏதுமில்லை
செல்லிடமும் ஏதும் இல்லை
அவன் மிக மெல்லிய
நம்பிக்கையொன்றை
விடாமல் பற்றியிருக்கிறான்
அதனுடன்
முடிவில்லாமல்
சென்று கொண்டேயிருக்கிறான்

காத்திருப்பு குறித்து

காத்திருப்பு
நிகழ்காலத்தில் மட்டுமே நிலைநிறுத்திக் கொள்ளும் தவம்
அங்கே கடந்தகாலம் இல்லை
எதிர்காலம் இல்லை

இந்த உலகின்
முடிவற்ற சாத்தியக்கூறுகளைக்
கவனிப்பதற்கான
ஒரு வாய்ப்பு

நீண்டு கொண்டே செல்லும்
பொழுதுகளுடன்
நிகழும்
உடன் பயணம்

ஒரு கண்ணீர்த்துளியின்
தனிமை

Thursday 12 September 2019

நீ
எங்கும் இருக்கிறாய்
மரியாதைக்குரிய ஒரு பார்வையில்
பணிவான ஓர் உணர்வில்
உரைக்கப்படும் ஓர் இன்சொல்லில்
நன்றி நவிலலின் ஒரு கண்ணீர்த் துளியில்
மொழியப்படும் ஆறுதலில்
தாகம் தீர்க்கும் தண்ணீரில்
நுண்ணிய அன்பில்
அன்பின் பேருருவில்
நீ
எங்கும் இருக்கிறாய்
வானுக்குக் கீழ்
எப் பொழுதும்
வாழும்
தவிட்டுக் குருவி
வாசல் நுழைந்து
வீட்டுக்குள்
சிறிது நேரம்
பறக்கையில்
அவசரமாக விட்டுச் சென்றது
சிறகளவு வானத்தை

Tuesday 10 September 2019

அச்சங்களும்
தயக்கங்களும்
ஐயங்களும்
பரவியிருக்கும் பெரும் பரப்பில்
நீ
மலராய் இருந்தாய்
மலராய் மட்டுமே இருந்தாய்
உன் முன்னால்
இந்த உலகம்
வேறொன்றாயிருந்தது
உடல் எடை அற்ற
மனம் நீர் ஆவி என்றான
உணர்வுகள் நெகிழ்ந்திருந்த
அனைத்தும் ஒத்திசைந்திருந்த
அந்த உலகம்
*
உதயத்தின் நாழிகைகளில்
மாலை அந்தியின் வினாடிகளில்
மெல்ல நகரும் இரவில்
ஓயாமல்
தேடிக் கொண்டிருக்கிறேன்
அந்த உலகை
என்னை
*
பெருகும் கண்ணீரினும்
சொல் அற்ற மௌனங்கள்
அடர்த்தி கொண்டிருக்கின்றன
*
நினைவின் சுவடுகளில்
இனிமைகள் 
மட்டுமே எஞ்சி நிற்கின்றன
*
உன்னை
வானிலிருந்து
மண்ணுக்கு
எப்படி
கொண்டு வருவேன்
*
துக்கத்தால்
நீர் திரளும்
உன் முகம்
ஒரு மலைத் தொடரைப் போல
தனித்திருக்கிறது
*
இந்த உலகில்
எவ்வளவு 
இருக்கின்றன
இருந்தும்
ஏன்
இல்லாமல் போகிறது
*
விடை கொடுத்து விட்டு
உருவாக்கிக்
கொள்வது
எப்படி
*

இந்த இரவைக் கடப்பது எப்படி

இந்த இரவைக் கடப்பது எப்படி
நீண்டிருக்கிறது
அசையும் கடிகார முட்கள்
நெருக்குகின்றன
சிறு பரப்பில் ஒடுங்கியிருக்கின்றன
துயர் மனங்கள்
தீராத விடாய்
அவ்வளவு அடர்ந்ததா இருள்
நம்பிக்கைகளும்
நம்பிக்கையின்மையும்
அலை மோதும் வெளி

Monday 9 September 2019

நீ
ஓர் அந்தியைப் போல
பிரியாமல் கலந்திருக்கும்
வெவ்வேறு உணர்வுகளால்
வெவ்வேறு மனநிலைகளால்
வெவ்வேறு எண்ணங்களால்
நிறைகிறாய் 
அல்லது
இல்லாமல் போகிறாய்

நதிக்கரையில் 
நின்றிருப்பவன்
பார்வையில் சுடர்கின்றன
நீர் மிதக்கும் மலர் தீபங்கள்

இரவு வந்து விட்டது
உனது மென் சிரிப்புகளின் போது
சிவக்கும் முகத்தை
உரை ஆடலில்
வியப்பில்
மலரும் உன் கண்களை
சுடர்ப்பார்வையில்
பரவும்
உன் மாசற்ற இயல்பை
நினைவில்
எப்போதும் மீட்டுகிறேன்
ஆளற்ற ஆலயத்தின்
நாக ஸ்வர இசை
தாழ்வாரங்களில்
மண்டபங்களில்
கோபுரத்தில்
ஆலய வீதிகளில்
இந்த அந்திப் பொழுதில்
ஒலிக்கிறது
ஒரு புனிதமான அரற்றலாக
உன் முன் நிற்கையில்
கடந்தகாலம் இல்லை
எதிர்காலம் இல்லை
நிகழும்
நிகழும்
நிகழும்
இந்த இந்த இந்த
நிகழ் காலம்
மட்டும்
இருந்து கொண்டே யிருக்கிறது
கரைதல் அவ்வளவு எளிதானதா
அழிதலில் அத்தனை உவப்பிருக்கிறதா
உன் அன்பால்
எப்போதும்
கரைந்து கொண்டிருக்கிறது
இந்த பிரபஞ்சத்தின்
ஒரு பகுதி
நீ எப்போதும் நம்பிக்கையளிக்கிறாய்
நீ எப்போதும் துயர் நீக்குகிறாய்
உனது சொல்
உருவாக்குகிறது
முடிவற்ற வண்ணங்களை
உன் நினைவுகள்
தொடர்கின்றன
முடிவற்ற வான் பரப்பென

மேலும்

இப்போது
என்னிடம் எதுவும் இல்லை
அன்பின் பரிசுகள்
அன்பின் சொற்கள்
அன்பின் வாக்குறுதிகள்
அன்பின் பரவசங்கள்

உனது முகம் வானென நிறைந்திருக்கிறது அகமெங்கும்
உனது மாசற்ற புன்னகைகள்

நீ அனைத்தும் அறிவாய்
என்னையும்
சொற்களையும்
மௌனங்களையும்

என் துயரத்தை நீ அறிவாய் என்பது
என்னைத் துயருறச் செய்கிறது
மேலும்
நீ எவ்வளவு தொலைவில் இருக்கிறாய்
என்ன செய்து கொண்டிருக்கிறாய்

உனது காலைகள் உன்னை வாழ்த்தட்டும்
உனது மாலைகள் உனக்கு ஆசி அளிக்கட்டும்

அன்பின் மாற்றுருவமாய் துயரம் இருப்பது ஏன்

வான் எழும் அகம்
புவியில் நிலைத்திருக்கின்றன கால்கள்
உனது கண்ணீரை கட்டுப்படுத்துகிறாய்
அவ்வப்போது
நீ புரியும் புன்னகையில்
வெளிப்படுகிறது
ஒரு துளிக் கண்ணீரின்
சாரல்

அலைகளுக்கு அப்பால்
சிவந்திருக்கும் வான் முகம்
நோக்கி
நகர்கிறது
ஓர் ஒற்றைப் படகு
உன் பார்வையின்
களங்கமின்மையை
கவியும் மேகத்திரளாக
ஒரு சிறு கீற்று வெளிச்சமாக
உள்ளங்கைகளுக்குள்
நிறைந்திருக்கும் அருவி நீராக
நான்
இன்னும் சொல்லாத பிரியங்களாக
மாற்றிக் கொள்கிறேன்

உன் மௌனங்களை
நீண்ட மௌனங்களுக்குப் பின்
வெளிப்படும்
கண்ணீர்த்துளியை
என்ன செய்வது என்பதை
என்னால் அறிய இயலவில்லை

யாருமற்ற
நீண்ட மண் சாலையில்
வீசும் காற்றில்
கலந்திருக்கிறது
மேலெழும்
மண் துகள்கள்

Sunday 8 September 2019

வேங்கடத்துக்கு அப்பால்

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் ‘’வேங்கடத்துக்கு அப்பால் ‘’ நூல் குறித்து ஜெ தளத்தில் வெளியான கடிதம்

வேங்கடத்துக்கு அப்பால்

Saturday 7 September 2019

எங்கே
இருள் சூழ்ந்திருக்கிறதோ
நம்பிக்கைகள் குறைவாய் உள்ளதோ
வேதனை முனகல்கள் ஒலிக்கிறதோ
ஓயாமல்
மன்னிப்பின் கோரிக்கைகள்
வைக்கப்படுகிறதோ
அங்கே
ஏற்றப்படும்
ஒரு சிறு தீபம்
அன்பின் சிறு தீபம்
அன்றைய
நாளுக்குத்
தருகிறது
முழுமையான ஒளியை

Friday 6 September 2019

உதிரும் நினைவுகள்
இலை மிதக்கும் காற்று
கண்ணீர்த்துளிகள்
மண்ணில் உதிர்ந்திருக்கும்
மஞ்சள் மலரை
எடுத்துக் கொள்ளட்டுமா
என்று கேட்கிறது
அன்னையிடம்
நர்சரி குழந்தை

Thursday 5 September 2019

மர்ஃபி ஊரில் இல்லை
கண்மணி ஊரில் இல்லை
எங்கோ
தொலை தூரத்தில்
தொன்மையான பிரார்த்தனைகளை
உச்சரித்துக் கொண்டிருக்கிறான்
எளிய ஆடைகள் உடுத்தி
எளிய வாழ்வு வாழ்ந்து

அவனது ஸ்பரிசம் கிடைக்காத
விளையாட்டுப் பொருட்கள்
காத்திருக்கின்றன

அவன் எங்களை நோக்கி வரும் சாலை
அவன் பாதம் தீண்ட
காத்திருக்கிறது

அவன் எப்போதும் எங்களுடனிருந்தும்
நாங்கள் காத்திருக்கிறோம்
அவனுக்காக

காவேரித் தண்ணீர்

இளம் பெண்ணின் நாணத்துடன் ஊருக்குள் இன்று காலை அடி எடுத்து வைத்திருக்கிறாள் காவேரி. வாழ்வில் எத்தனை சுக துக்கங்கள் இருந்தாலும் காவேரிக்கரையில் இருப்பவர்களுக்கு காவேரியில் நீர் வருவதைப் பார்ப்பது என்பது அகம் விம்மும் அனுபவம். இயற்கை சிலருக்கு அளிக்கும் வரம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மகவாக சிறுமியாக கன்னியாக அன்னையாக நதியைக் காணும் அனுபவம். எங்கோ பிறந்து எங்கள் மண் தீண்டி எங்களுக்கு வாழ்வு தருகிறாள் காவேரி. யாருமற்ற ஆலயத்தில் ஒரு கலைஞன் இசைக்கும் ஒற்றை நாதஸ்வர இசை போல் காவேரியைப் பார்க்கும் அனுபவம் இருக்கிறது. அம்மா! எங்கள் பிழைகளுக்காக எங்கள் தவறுகளுக்காக எங்கள் மூர்க்கங்களுக்காக எங்கள் அறியாமைகளுக்காக எங்களை மன்னிப்பாயாக. எங்கள் ஜீவனில் படிந்திருக்கும் மாசுகளை உன் நீர்மையால் அகற்றி எங்களைத் தூய்மை அடையச் செய்வாயாக.

Wednesday 4 September 2019

ஒரு சம்பவம்

இங்கே சமீப நாட்களில் எனக்கு ஒரு நண்பர் அறிமுகமானார். வயதில் மிகவும் இளையவர். அரசுப்பணி ஒன்றில் இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர். ஒருநாள் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரது நண்பருக்கு வேண்டியவர் ஒருவரின் ஒரு வயது குழந்தை முதுகில் மேஜை மீது வைத்திருந்த அப்போது காய்ச்சப்பட்ட சூடான பால் கொட்டி மேல் தோல் தீய்ந்து விட்டது. மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். குழந்தையின் பெற்றோர் பொருளாதார வசதி குறைந்தவர்கள். சிகிச்சைக்குத் தேவையான பணத்தை நண்பர் தனது நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்தார். நானும் அதில் சிறு அளவில் பங்கெடுத்துக் கொண்டேன். மருத்துவமனைக்கு அவ்வப்போது சென்று சிறு உதவிகளைச் செய்து கொடுத்தேன். டிஸ்சார்ஜ் ஆகி அவர்கள் வீட்டுக்குச் சென்றதும் அங்கே சென்று பார்த்து வந்தேன். மனதுக்கு துயரமாக இருந்தது. குழந்தை இப்போது நன்றாக இருக்கிறது. என்றாலும் காரணம் சொல்ல முடியாத துயரம். 


Tuesday 3 September 2019

செங்கோல் என நின்றிருக்கிறது
இடையன் கோல்
மர நிழலில்
ஒருகால் மடித்து அமர்ந்திருக்கும்
இடையன்
பார்வை வெளியில்
வெயில் மேயும் ஆடுகள்
வெயில் காற்று
வெயில் வானம்
மேடைத் திரையென
இழுக்கப்பட்டு செல்கிறது
குட்ஸ் ரயில்
என்ஜின் ஹாரன்
மார்க்கத்தில்
ஏன்
பால்ய நினைவுகள்
நிலைகொள்கின்றன?
எப்போது தரை தொடப் போகிறது
ரொம்ப நேரமாய்
வட்டமிடும் கழுகு