Thursday 30 August 2018

பால்யத்தில்
கை நழுவிப் போன
ரப்பர் பந்து
தற்செயலாய்
வந்து சேர்ந்தது
இன்று
வானுக்கும்
பூமிக்கும்
இடையே
பறந்து கொண்டிருக்கையில்

Wednesday 29 August 2018

மல்லிகை மணம் இருக்கும்
பிராந்தியத்தில்
பிரவேசித்தேன்
என் வாகனத்துடன்
முன்னால்  சென்ற
இளம்பெண்ணின் சிரசில்
பூத்திருந்தன
மல்லிகைப் பூக்கள்
வானில்
எம்பிக் குதித்த
ஒரு மலர்
இருந்தது
மிதந்து கொண்டும்
சென்று கொண்டும்
அன்னமாகவும்
வராகமாகவும்
பின் தொடர்ந்தேன்
அடி முடி இல்லா
அனந்தத்தில்

Monday 27 August 2018

எங்கோ ஆழத்தில்
தொலை ஆழத்தில்
பறந்து கொண்டிருக்கின்றன
இரு சிறகுகள்
இரு பறவைகள்
இரு நகரங்கள்
புரண்டு படுப்பவனின்
முகத்தில்
ஒரு சிறு புன்னகை
சாம்பல்
உயிராக உருமாறிக் கொண்டிருந்தது
நிலமெங்கும்

Thursday 23 August 2018

மீண்டும் ஒருமுறை
இன்று
பொழுது விடிந்திருக்கிறது
புலரியின் முதற்புள் ஒலி கேட்டிருக்கிறது
செங்கதிர்
அலைகளிலிருந்து எழுந்து
மேகங்களில் மறைந்து சஞ்சரிக்கிறது
தவ்விய தவளை
உருவாக்கிய அதிர்வுகள்
குளத்து நீரில் மேலும் கீழும்
எழுந்து விழுகிறது
கொத்தப்பட்ட மீன்கள்
நீந்திக்கொண்டிருக்கின்றன
வானத்தில்

Wednesday 22 August 2018

ஒரு துயரத்தின் முன்
ஒரு துக்கத்தின் முன்
ஒரு கைவிடுதலின் முன்
ஒரு துரோகத்தின் முன்
ஒரு அவமானத்தின் முன்
தீரா வாதை ஒன்றின் முன்

ஓசைகள் ஏதுமற்ற ஓர் உலகம் இருக்கிறது

பின்னர்
ஓயாது அரற்றும்
ஓர் அலறலும்
சில கண்ணீர்த்துளிகளும்

மௌனம்
நிரம்பியிருக்கிறது
தெளிந்த உலகத்தில்

Friday 17 August 2018

அகண்ட நதியில்
நிறைந்து
செல்கிறது
சேற்று நிறத்தில்
நீர்
வானில் ஓயாமல்
பறக்கும்
கழுகு
நதியின்
மீன் கவ்வ
இறங்குகிறது
மீண்டும்
மீண்டும்
அகப்படாமல்
தப்பிய
தப்பிய
மீன்
வேகமாய் செல்கிறது கடலுக்கு
தன் விரைவிலும்
நதி விரைவிலும்

Sunday 12 August 2018

தடங்கள்

மெல்ல
முன்னேறிச் செல்கின்றன
சிற்றடிகள்
திசையெங்கும் சூழ்ந்த வனங்களில்
தம் மக்களின்
பசித்தீ அணைக்கும்
ஒரு பிடி உணவுக்காக
வெள்ளி முளைக்கும் பொழுதுகளில்
ஏரெடுத்து
புகலடைந்த ஊரில்
குடி காக்க
போரின்
தூரத்துச் சத்தங்களை
அவதானித்து
அறிவின் தீராத வியப்பில்
உணர்வின் அலைப் பெருக்கில்
என்றோ
ஒரு கணம்
பதிந்தன
வானத்து மேகங்களில்


Thursday 9 August 2018

களப்பலி

எப்போதும்
எங்கும்
முன்நிற்கிறது
முன்வருகிறது
முன்னேறிச் செல்கிறது
பசுந்தளிர் மென்மையுடன்
ஓர் உணர்வு

ஒவ் ஒரு கணத்தையும்
உற்சாகமான
பல பல நுண் கணங்களாய்
அனுபவித்து
திளைக்கிறது
ஓர் ஊழ்கத்தில்

யுகங்கள்
பலவான பின்னும்
ஜீவித்திருக்கிறது
ஒரே உற்சாகம்

Monday 6 August 2018

வெட்டவெளியில்
உங்களுக்குத்
தேர்வுகளோ
மறைவிடங்களோ
இல்லை
நீங்கள்
நனைந்தே
தீர வேண்டும்

Thursday 2 August 2018

நதி வணக்கம்

நகரும் நீர்மையே
நகரும் அமிர்தமே
நகரும் வாழ்வே

உனக்கு
முதல் வணக்கம்

Wednesday 1 August 2018

நான் நாம்

தனியாகக் கிளம்பிய
ஒரு பயணத்தில்
வீடு திரும்பினேன்
புன்னகையுடன்
எங்கும்
நான்
நிறைந்திருந்த
பாதையில்
எல்லாம்
நானான
உலகில்