Friday 27 April 2018

எழுச்சி



நெடுந்திரை
புவி சுழலின்
ஓர் அசையில்
மேகம் தொட்ட
நாளொன்று

கல்படிவம்
ஆக 
இறுகின
தாவரம்
திலமான
ஜீவ சாத்தியம்
உணர்ந்த
தினம் ஒன்று

ஆதுரசாலையில்
விலகும் பார்வைகளையும்
வலிய பிரியத்துடன் நோக்கி
இனி எழ மாட்டா
என்ற மௌன கூறல்களை
வருத்தத்தோடு பாரஞ் சுமந்த
தந்தை
மகன் குறித்த
நம்பிக்கைகளை
தக்க வைத்த   
பொழுது அன்று

சுள்ளி பொறுக்கும் கிழவி
சிறு நிழலில்
சிறு நேரம் அமர்ந்து
நெடுநாட்கள் கடந்த
கருணையற்ற உலகை 
நினைத்து
நீர் சொறிந்து
உடல் தளர்ந்து 
உறங்கப் போன போது
ஓர் வண்ணக் கனவில்
தன் பேத்தியைக் கண்டு
கதறி அழுத வேளை ஒன்று

வியாழம் உறங்கி வெள்ளி முளைத்தது

அன்றும்

சூரியன் கிழக்கில் உதித்தான்
சூரியன் மேற்கில் அஸ்தமித்தான்
இந்த வசந்த காலத்தில்
கோடை வெக்கை
தற்காலிகமாக பின்வாங்கியிருக்கும்
முன்னிரவுப் பொழுதின்
காற்று வீசும் வேளையில்
வானக மீன்கள்
மினுக்கி மினுக்கிப் பார்க்கின்றன
மாந்தளிர்ப் பச்சையை
முருங்கை மலர்களை
காற்றை உறுத்தும் வேப்பம்பூக்களை
அசதியாய் வீடு திரும்புபவன்
மகிழ்ந்து பார்க்கிறான்
வேப்பம்பூக்களை
முருங்கை மலர்களை
மாந்தளிர்ப் பச்சையை
மினுக்கிப் பார்க்கும்
வானக மீன்களை

Thursday 26 April 2018

உச்சிப் பொழுதில் ஒளிரும் சூரியன்
உருவாக்கும்
மண்டப நிழலில்
அசை போட்டுக் கொண்டிருக்கின்றன
மேய வந்த ஆடுகள்

காய்ந்த புல்லினூடே 
செல்லும் அரவென
ஒற்றையடிப் பாதை

ஒரு நுனியில்
சிறு கிராமத்துச் சாலையும்
மறு நுனியில்
நூற்றாண்டுகள் கடந்த சிற்றாலயமும்

காலையில் வந்த பட்டர்
ஏற்றிய கல்அகல் தீபம்
அணையாமல் சுடர்கிறது
மாலை வரை

எப்போதோ வரும் யாத்ரிகன்
சுடர் அசைவில்
காண்கிறான்
ஒரு தொல்நகரின் பொழுதை
மண்டப சிற்பங்களை
மறக்கப்பட்ட வரலாற்றை

25.04.2018
16.25

Tuesday 24 April 2018

பூத்த கொன்றை
பறக்கும்
மாட வீதியில்
மலர்ப் பிரக்ஞை
இன்றி 
கடந்து சென்றேன்
ஓர் அவமதிப்பான சொல்லை
சுமந்து கொண்டு

பட்டத்தின் வால் போல
ஆடிக் கொண்டிருந்தது
எங்கே பொருத்திக் கொள்வது
என்ற தீர்மானம் இல்லாமல்

நோய்மையின்
வாய்க் கசப்பு
பீடித்திருந்தது
எல்லா நேரமும்

காட்சிக்கும்
மனத்துக்கும்
இடையே
ஒரு சுவராய்
ஏறி இறங்கும்
அலையாய்
அனலாய்
மறைத்திருந்தது

வீடு திரும்பும் போது
காற்றில் பறந்து
விரல்களுக்கு வந்த
கொன்றை மஞ்சள் ஸ்பரிசம்
இட்டுச் சென்றது
எல்லாவற்றுக்கும் மேலே

16.04.2018
09.25

Monday 23 April 2018

தோழமையின்
நீளமான நாட்களுக்குப் பின்னும்
இடையில் நிற்கிறது
அப் பொழுது
முளைக்கும்
தயக்கம்

இணைந்திருந்த ஞாபகங்களை
நீக்கி வைக்கிறது
உறவின் யதார்த்தங்கள்

சொல் எடுக்கும்
தருணங்கள்
காட்டுகின்றன
பூதாகரத்தை

குளமாகவும்
குளத்தின் மேல் நிற்கும்
நீர்த்துளியாகவும்
தாமரை இலையாகவும்
நிகழும்
முக்கோண உறவை
ரசிக்கின்றன
நீர்ப்பறவைகள்

Sunday 22 April 2018

வேண்டுதல்

உழைப்புக்குப் பழகாத உடலுடன்
எதையும் புரிந்து கொள்ளாத மனத்துடன்
ஆகச் சிறிய உணர்வுடன்
ஆகப் பெரிய ஐயங்களுடன்
எப்போதும் இருக்கும் பதட்டத்துடன்

பரம்பொருளிடம்

என்னதான் கேட்டுவிட முடியும்
நம்மால்?

என்னதான் பெற்றுவிட முடியும்
நம்மால்?

20.03.2018
06.35

Saturday 21 April 2018

வீடு திரும்பிய மாலையில்
நம்முடன் இருக்கின்றன
அன்று கொட்டப்பட்ட கவலைகள்
அன்று ஒத்திப்போட்ட அலுவல்கள்
அன்றைய தினத்தின் அலுப்புகள்
அதுநாள் வரையான துயரம்
அடுத்த நாள் பற்றிய விசனம்
அன்று எதிர்பார்க்கும் ஓர் அமைதியான தூக்கம்

13.03.2018
22.05

Friday 20 April 2018

புறப்பாடு

ஒரு புத்தம் புதிய ஆடையை
முதலில் அணிந்து கொள்கிறாய்

இன்னும் ஒப்பனை துவங்காமலும்
அவை பேரழகாகவே காட்சி தருகின்றன

உனது நீண்ட கூந்தலுடன்
பலவிதமான பேச்சுவார்த்தைக்குப் பின்
ஓர் உடன்பாட்டை எட்டுகிறாய்

உன் முகம்
ஒவ்வொரு நாளும்
திகழ்கிறது
அழகின் புதிய புதிய சாத்தியங்களுடன்

உனது மோதிரங்களும் வளையல்களும்
உனது கூடுதல் கண்களாக
உலகைப் பார்க்கின்றன

குழந்தைகளைப் போல்
கட்டுப்பாடுகளுக்கு அப்பால் இருக்க
பிரியப்படுகின்றன
தோடுகள்

தவிர்க்க இயலாத உறவாக
உன்னுடன் பிணைத்துக் கொள்கிறது
கழுத்துச் சங்கிலி

பாதுகாப்பு வளையம் போல
சூழ்கிறது
உனது வாசனைத் திரவியங்கள்

என் வியப்பெல்லாம்
அலங்காரங்களைப் பார்த்து பார்த்து செய்து
மனிதர் சுபாவங்களை
அப்படியே ஏற்கிறாயே
என்றுதான்

19.03.2018
15.58

Thursday 19 April 2018

பயணம்

ஒன்று
ஒன்றாய்
உதிர்கிறது
வேம்பின்
பூக்கள்

மர அடிவாரத்தில்
மண்ணில்
பூக்களின்
நீரோட்ட
சலசலப்பு

நிழலின்
நீர்மையில்
படித்துறை
ஆடல்கள்

தேனீக்கள்
பறக்கும்
மீன்களாய்

உச்சியிலிருந்து
வெறித்துப்
பார்க்கிறது
கொற்றப்புள்

விண் நோக்கிய
பயணத்தில்
பாதாளத்தின்
நீர்

Monday 16 April 2018

கண்மணி வளர்ந்து கொண்டிருக்கிறான்


கண்மணி வளர்ந்து கொண்டிருக்கிறான்
தன் குதூகங்களுடன்
தன் மகிழ்ச்சிகளுடன்
தன் ஆர்வங்களுடன்

அவனது பொம்மைகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன
அவனது உலகில் தொழில்நுட்பம் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது
இப்போதும்
ஆடு மாடுகளை நேசிக்கிறான்; அவற்றுடன் பேசிக் கொண்டிருக்கிறான்
தெருவின் நாய் அவனைக் கண்டதும் உடல் குழைத்து சுற்றுகின்றது

ஓயாமல் ஓடி வியர்த்து மூச்சிறைக்கிறான்
எழுத்துக் கூட்டி ஓரிரு சொற்களை வாசித்து விட்டு
அச்சிட்ட காகிதங்களை இப்போதும் கிழிக்கிறான்
புறஒழுங்கு வற்புறுத்தப்படும் உலகில் தன்னைப் பொருத்திக் கொண்டும்

கண்மணி வளர்ந்து கொண்டிருக்கிறான்

Sunday 15 April 2018

கடந்து செல்பவனின் துயரங்கள்


பயணத்தில்
கைவிடப்பட்ட கடவுள்கள் இருக்கிறார்கள்
கைவிடப்பட்ட நகரங்கள் இருக்கின்றன
கைவிடப்பட்ட மண்டபங்கள் இருக்கின்றன
கைவிடப்பட்ட சிற்பங்கள் இருக்கின்றன
கைவிடப்பட்ட கிராமங்கள் இருக்கின்றன
கைவிடப்பட்ட பெண்கள் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்கள்

கைவிடப்படுதலின் பிரும்மாண்டத்தின் முன்
கடந்து செல்பவன் மௌனித்திருக்கிறான்
ஒரு பெரிய கான்கிரீட் பாலக் கட்டுமானம் நடைபெறுகிறது
அதன் அருகே ஓடக்காரன் படகை இயக்கிக் கொண்டிருக்கிறான்
பாலம் வேலை முடிந்த பின் நீ ஓடத்தைக் கைவிடுவாயா
பயணி கேட்கிறான்

நான் நதியைக் கடந்து கொண்டே இருந்தேன்
ஓடம் இன்றி மக்கள் நதியைக் கடப்பது பார்த்து மகிழ்வேன்
ஓடக்காரன் பதில் சொன்னான்

Saturday 14 April 2018

ஒரு புதிய துவக்கம்


அதிகாலை பார்த்த வானில்
மீன்கள் 
கிளம்பும் ஆயத்தங்கள் 
ஏதுமின்றி
எப் பொழுதும் போல்
அப் பொழுதும்
மினுக்கின

தென்னை
பிரித்து விட்ட
கீற்றுக் கூந்தலை
உலர்த்தியது
அப்போது வீசிய காற்று

நேற்றில்லாது
இன்று பூத்திருக்கும்
மலர்களை
ஆர்வமான தோட்டக்காரன் போல்
முதற்பார்வை பார்த்தான்
அன்றைய சூரியன்

Friday 13 April 2018

களம் நிற்கும் மரம்



களத்து மேட்டில் நிற்கிறது மரம்
அரசமரம்
கிராமச் சாலையிலிருந்து கூப்பிடு தொலைவில்
பாசன வாய்க்காலில் வேர் நனைய

ஏறி இறங்கிக் கொண்டே இருக்கின்றன கட்டெறும்புகள்
உச்சிக் கிளையில் கொற்றப்புள் குடும்பம்
கிளைகளில் காகங்கள்
நிழலில் தலை சாய்க்கின்றனர் வழிப்போக்கர்கள்
வாழ்வின் மீளா சுழற்சியை எண்ணி
வீடு அன்னியமான நாடோடி
அடியில் வேரில் அமர்ந்திருக்கிறான்
மாலை வீடு திரும்பும் கிராமத்துப் பெண்
வணங்கி விட்டுச் செல்கிறாள்
இனி உருவாகப் போகும் கடவுளை

கரிச்சான்கள் இயங்கும் சந்தியில்
புலரும் இருளும்
வானம் பார்த்து
நிற்கிறது
மரம்
களம் நிற்கும் மரம்

Wednesday 11 April 2018

அதை என்னவென்று சொல்வது
அது உங்களுக்குப் புரியும்தான்
சரியாகவும்
தவறாகவும்
அணுகிக் கூட
நீங்கள் அதனை நெருங்கி விடுவீர்கள்

எல்லா பெயர் அளித்தல்களுமே
அதனைக் குறுக்குகின்றன

இச்சை
அதிகாரம்
பணம்
விழைவு
நாட்டம்

இவற்றின் மேல்
கடவுளின் போர்வையை
அணிவிக்க வேண்டியிருக்கிறது

அசௌகர்யமாக 
அமர்ந்திருக்கும் கடவுள்
ஆசுவாசத்துக்காக
அவ்வப்போது
உடலை அசைக்கிறார்

Tuesday 10 April 2018

எத்தனை கவிதைகள் 
நீ
உன் பிரியங்கள்
உன் வண்ணங்கள்
உன் கனவுகள்
உன் துக்கம்
உன் கண்ணீர்
உன் சௌந்தர்யங்கள்
உன் வசீகரங்கள்
உன் எல்லைகள்
உன் துயரங்கள்

இன்னும் சொல்ல இருக்கிறது
சொல்லப்படாதது

Sunday 8 April 2018

வனாந்தரத்தின் மௌனத்தைக் கலைக்கிறது
ஆயனுக்கான மாட்டின் குரல்
சில்வண்டுகள் ரீங்காரத்தால் உருவாக்குகின்ற
மௌனம்
கொண்டை ஊசி வளைவில்
லாரி ஓட்டுனர் அனிச்சையாக
எழுப்பும் ஹாரன் ஒலி
சமவெளி நகரின் கருமேக இடியோசை
அமர்கிறது வெகு சமீபத்தில்
பாறை மோதும் காட்டாற்றில்
நீராடி
விட்டுச் செல்கிறேன்
ஒரு பயணப் பிராந்தியத்தை

Saturday 7 April 2018

திருத்தலச் சூரியன்



சூரியன் உதிக்கும் திசையிலிருந்து
விரைந்து வந்து கொண்டிருந்தது நதி
பனி உருகிய நதி
இரவின் கரும் பரப்பின் அடியில்
சத்தமாகவும்
குளிர் ஸ்பரிசமாகவும்
அடையாளம் காட்டி நடந்த நதி

என்றும் பிரவேசிக்கும் சூரியன்
அன்றும் ஆர்வத்துடன் முதல் பார்வை பார்த்தான்
சிறுமியின் இளம் சிரிப்பை
கன்னியின் நாணத்தை
பெண்மையின் நிமிர்வை

அர்ப்பணங்களுடன்
சமர்ப்பித்துக் கொண்டிருந்தனர்
யாவரும்

குளிரின் அடர்த்தியுடன்
மாறா அன்பின் புன்னகையுடன்
தீண்டிச் சென்று கொண்டிருக்கும்
நதி

Friday 6 April 2018

நிலம் மேல்
நீர் தேங்கா நிலத்தில்
சிலம்பிக் கொண்டிருக்கின்றன
உவர் அலைகள்
பின்னர் ஆழ்அமைதி

பறவைகள் பறக்கும்
மேகங்கள்
ஏதுமிலா வானம்

சாக்கடை ஈரம்
எஞ்சும்
நிழலில்
எப்போதும் படுத்துக் கொள்கிறது
வீதி நாய் டோலி

வெயிலின் சுவாதீனத்தில்
இருக்கின்றன
ஆளற்ற வீதிகள்

சிமெண்ட் சுவர்களுக்குள்
உணரப்படுகிறது
கருணை இன்மையின்
வெப்பம்

இந்தக் கோடையின்
வேப்பந்தளிர்களுக்குத்தான்
எவ்வளவு மென்மை
எவ்வளவு மிருது

பூக்களுக்குத்தான்
எத்தனை சந்தோஷம்
எவ்வளவு நம்பிக்கை

Thursday 5 April 2018

தொடர்ச்சி


புதிய நாள் சுமக்கிறது
பழைய நாட்களின் சுமையை

ஒரு புதிய உறவு அளிக்கும் உற்சாகத்தில்
விரவிக் கிடக்கின்றன
எல்லா உறவுகளும் அடைந்திருக்கும் எல்லைகள்

தெய்வ சன்னிதானத்தின் கோப்பில்
ஒரு புதிய தாள் சேர்கிறது
இன்றைய பிராத்தனைகளுடன்

ஒவ்வொரு முறையும்
தனக்கு வரும் காதல் கடிதத்தால்
ரகசிய உவகை அடைகிறாள்
ஓர் இளம் பெண்

பல வருட வாடிக்கையாளர்
அளித்த பணத்தை
கல்லாவில் போட்டு விட்டு
பொருளை
கடைப்பையனை
இறுக்கமாகக் கட்டி
வாகனத்தில் ஏற்றச் சொல்கிறார்
கடைக்காரர்

இம்முறை
தென்மேற்கு பருவக்காற்றால்
தமிழகத்துக்கு
சராசரி அளவை விட
கூடுதலாக
மழை கிடைக்கும்
என்கிறது
வானொலிச்செய்தி

Wednesday 4 April 2018

மார்க்க சகாயம்



பேச்சுத்துணைக்கு யாரும் இல்லாது
தனியாய்
தெய்வம் வீற்றிருந்த
புராதன திருத்தலம்

மனிதப் புழக்கம்
வருடக்கணக்கில்
மிகக் குறைவாய்
இருந்ததன்
சுவடுகள்
ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு பார்வையிலும்

இல்லாமல் இருந்த
மணி
மெல்ல அதிர்ந்தெழும் ஓசையையும்
காண்டாமணியையும்
கொண்டு வந்தது
கற்பனையில்

அவ்வப்போது
சடசடத்து
பறந்தெழுந்த புறாக்கள்
ஒடுங்கிக் கொண்டன
கோபுர
சுதை சிற்பங்களின்
இடைவெளிகளில்


இரவில்
கிராமத்துச் சாலையில்
தனித்து நடப்பது போல்
பிரகாரத்தைச்
சுற்றி வந்து
தல விருட்ச நிழலில்
ஓய்வாய்
உட்கார்ந்தேன்

தெய்வத்திடம்
லௌகிக வாழ்வில்
துணையிருக்க வேண்டிக் கொண்டு
புறப்பட்டுச் சென்ற போது
வழித்துணையாய்
வந்தன
கோபுரத்துப் புறாக்களும்
தல விருட்ச நிழலும்
மண்டபத்து சிற்பங்களும்

*******

பயண நினைவுகள்



பெண் முகப் பருக்களென
திட்டு திட்டாய் சிவந்திருந்தது
விடியலின் வானம்

காதலன் உடன் இருக்க
மகிழும்
பொன் ஒளிர் காதலி
அலை எழும் சூரியன்

நிறை சூல் பெண்ணென
மௌனித்திருக்கிறது
மேகக் கரும் திரட்சி

ஈற்றுப் பொழுதின்
நிகழ்வுகளாய்
பகல் நகர்கிறது
அந்தி நோக்கி

உடைந்த வானம்
விடுவிக்கிறது
ஓயாப் பெரு மழையை

பயணியின் மனம்
குறிப்புணர்த்துகிறது
அடுத்த கட்ட நகர்வை

கமலப் பூ


ஒவ்வொன்றாய் 
துறந்து வந்த துறவி
மஞ்சள் நிற வெயில்
விடைபெறும்
அந்தியில்
நடந்து சென்று கொண்டிருந்தான்
இரவினை நோக்கி

நிலவின் ஒளிக்கு தாகித்திருந்த
அவனது மனம்
சந்தனமாய்
மணந்தது 
பாதையெங்கும்

வாசம் தீண்டிய தாவரங்கள்
பூக்கத் துவங்கின
ரோஜாக்களாய்

உடல் குழையும்
குக்கல்கள்
தீனமாய் அரற்றி
உடன் வந்தன

கண்ணீரையும்
வலிகளையும்
ஏற்றுக் கொண்டு
பாரம் நீக்கச் சொன்னார்கள்
ஊர் மக்கள்

அலைகடல் ஓசை 
சுருதி மீட்டும்
இரவில்
விண் நோக்கி 
அமர்ந்து
மலர்ந்தான்
நாடோடித் துறவி

எப்போதாவது
வாய்க்கும் தருணத்தில்
மலர் வாசம் உணர்ந்தனர்
எப்போதும் பாரம் சுமக்கும் 
ஊர் மக்கள்

Tuesday 3 April 2018

பற்றி எரிகிறது
மிதக்கும் கானல் ஆவி எழும்
கோடையின் நாட்கள்
நீறு பூத்து
எதுவும் இல்லாமல் இருக்கின்றன
தற்காலிகமாக கைவிடப்பட்ட வீதிகள்
துளி நீரைத் தேடுகின்றன
வானத்துப் புட்கள்
பெய்யும்
என அறுதியிட முடியாத
மேகம்
பொழிகிறது
எங்கும் நம்பிக்கையின் நீர்மையை

03.04.2018
11.00

தனி அகம்

இந்த பெரிய வீட்டின்
ஓசையின்மைகளிலும்
அவ்வப்போது கேட்கும்
சிறு சத்தங்களிலும்
ஞாபகப்படுத்தப்படுகிறது
உனது இன்மையின் தடயங்கள்
உனது இருப்பின் நினைவுகள்

சிரித்துப் பேசி மகிழ்ந்த நாட்கள்
பரிசளிப்பதையும் அளிக்கப்பட்ட பரிசுகளையும்
நினைவில் மீட்டிக் கொண்ட பொழுதுகள்
இடைவெளி இன்றி இருந்த தருணங்கள்

அன்றைய இரவின்
தீச்சுடரில்
உருகிய மெழுகு
இப்போது குளிர்ந்திருக்கிறது
அவ்வளவு இதமாக

நாம் அன்னியப்பட்டிருக்கிறோம்
மீள முடியாமல்

01.04.2018
17.05

Monday 2 April 2018


மழையோசையில் கேட்கின்றன
உறங்கும் குழந்தையின் சிரிப்பு
அன்னைத் தாலாட்டு
மைதானத்தின் உற்சாக ஆர்ப்பரிப்பு
இளம் பெண்கள் கூட்டத்தின் துள்ளல்
அலையோசை
ஆனைப் பிளிறல்
சிம்ம கர்ஜனை
காதலி குரல்
தோழியின் அழுகை
கொல்லுப் பட்டறையின் துருத்தி
உலை கொதித்தல்

தவிட்டுக் குருவி சிலுப்பிக் கொள்கிறது
தன் உடலை
உதறி துண்டு காய வைப்பது போல்

Sunday 1 April 2018



’என்ன அப்டி பாக்கற’
உனது முகத்தின் ஒரு பாதி
பணிந்திருக்கும் கருங்கூந்தல்
மென் கன்னங்கள்
நீள் கழுத்து
உன் காதார் குழை
மகிழுந்தின் பொம்மை போல் அலைவுறுகிறது
காட்சிகள் மாறும் பயணத்தில்
மாறும் உன் முகம்

’என்ன யோசிக்கற’
உனது ஆர்வங்கள்
உனது குதூகலங்கள்
உனது ஐயங்கள்
உனது முன்னெடுப்புகள்
உனது நம்பிக்கைகள்
உனது எளிமை

’சேர்ந்து நட’
காற்று நீர்மை சுமக்கும்
ஆற்றை அடுத்த தெருவில்
உற்சாகமாய் உரையாடி
நெருங்கி விலகி
நடந்து கொண்டிருக்கும் போது
அவ்வப்போது
என் மனம் செல்லும் தூரம்
எத்தனை கிலோ மீட்டர்?
வானாகி
காற்றில் அலையும்
கூந்தல் பரப்பில் விரல் கோதி
முகம் ஒளிரும் இரு சுடர் கண்டு
மென் தோளில் அதீத கால முகம் புதைத்து
எல்லையற்ற கடலில்
ஆதி விடாய் தீர்த்து
எழுகிறது
ஒரு கணம்
ஒரு சூரியன்
ஒரு மதி