Wednesday 27 February 2019

இனிது இனிது

இருள் விடியாப் பொழுதின் வெள்ளி
ஓசையற்று தினம் உதிக்கும் சூரியன்
புரசை மரம் அமர் பறவைகள்
ஆலயக் கிணற்று நீர்க்குளுமை
பகலின் பின்னணியாய் அணிலின் கிரீச்சிடல்
மாலையின் முதல் நட்சத்திரம்

இந்த நாள் வழங்கும் இனிமையில்
ஒரு கணம்
ஒரு துளி
விழிநீர் சிந்துகிறேன்

ஏனென்று அறியாமல்

Tuesday 26 February 2019

ஓர் உணர்வு

ஒரு மலராக்கப்பட்டு அளிக்கப்படுகிறது
அர்த்தப்படுத்தப்படாத ஒரு மௌனமாகிறது
அடுத்த தலைமுறைகளுக்காக அர்ப்பணிக்கும் குருதியாகிறது
புரிந்து கொள்ளப்படாத ஒரு கண்ணீர்த்துளி ஆகிறது
ஒரு கவிதையின் சொல்லாகிறது

மாமூல் வாழ்க்கை

ஒரு புராதன நகர்
மெல்ல
ஜனநாயகத்துக்குள்
வந்து
பெரும் பரபரப்புகள்
இன்றி சாதாரணமாய்
இருந்தது

அதன் நீண்ட மதில்சுவர்கள்
எதையும் காக்க வேண்டிய அவசியமின்றி இருந்தன
அதன் கண்காணிப்பு கோபுரங்கள்
பறவைகளின் எச்சத்திலிருந்து முளைத்த விருட்சங்களால் அசௌகர்யமாகியிருந்தன
அதன் கொத்தளங்களில் கிரிக்கெட் ஆடினர்
பள்ளி விடுமுறைச் சிறுவர்கள்
அதன் தொழுவங்களில்
பயன்படாமல் ஆக்கப்பட்ட ஜீப்கள் நின்றிருந்தன
அதன் அந்தப்புரங்களின் ஒரு பகுதி
பிறப்பு இறப்பு சான்று வழங்கும் இடமாகவும்
அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் மையமாகவும் இருந்தது
தர்பார் மண்டபத்தின் தூண்களில்
ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தன
சுற்றுலா வந்த குழந்தைகள்

அரச முறைகள்
மாறினாலும்
பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி
மாமூல் வாழ்க்கை வாழ்கின்றன
கோட்டையின் மரங்களும்
பழந்தின்னி வௌவால்களும்
பச்சைக்கிளிகளும்
சிட்டுக்குருவிகளும்

Monday 25 February 2019

ஆசுவாசம்

எளிய விஷயங்கள் உன்னை மகிழ்ச்சி அடையச் செய்கின்றன

பாலகர்கள் பந்து விளையாடும் போது
பள்ளி மணி அடித்து ஓய்வதற்குள்
குழந்தைகள் வெள்ளம் போல் வெளியேறும் போது
திருவிழாவில் சிறுமிகள் முகத்தில்
பஞ்சு மிட்டாயின் நிறம் ஒட்டிக் கொள்ளும் போது
தற்செயலாய்
பயணத்தில் அஸ்தமன சூரியனை
தென்றல் உடலைத் தீண்டும் போது
காணும் போது
கிராமச் சாலை லெவல் கிராசிங்கில்
பாஸஞ்சர் ரயில் கடப்பதைக் காணும் போது

உன் மகிழ்ச்சி
உன் எளிய ஆபரணங்களில் பிரதிபலிக்கிறது

மனிதர் பற்றி
விசனப்படும்
கடவுள்
ஆசுவாசம் கொள்ளும்
சில கணம்

உன்

மொழி ஏற்ற இறக்கங்களாலான இசையாகிறது
பார்வைகள் பிரியத்தின் சாரலாய் வீசுகின்றன
பக்குவமான சொற்களில் வெளிப்படுவது மாறாத நீதியின் சாரம்
மகிழ்ச்சிகள் வாழ்வின் எல்லையில்லா கருணையின் வெளிப்பாடாக
துக்கம் ஆழமான மௌனமாகிறது
நம்பிக்கைகள் வான் வரை உயர்கின்றன
விருப்பத்தின் சங்கேதங்கள்
உருவாக்குகின்றன ஓர் இணை உலகை

எப் போது
எவ் வாறு
நான் உன்னிடமிருந்து விலகிச் சென்றேன்
எப் படி
நீ
என்னைத் தவற விட்டாய்

கிட்டத்தட்ட கடவுள்

அம்மாவின் 
சொல்படிதான்
கடவுள்
எனக்கு
அறிமுகம் ஆனார்
அல்லது ஆனது

ஒவ்வொன்றும்
ஆச்சர்யமாயிருந்த 
அப்பருவத்தில்
கடவுள் மீதும்
ஆச்சர்யம்

அம்மாவின் கடவுள்கள்
குழந்தைகள்
பெண்கள்
ஆண்கள்
மிருக மனித இரு உடலாளர்கள்
வடிவில்

உலகெங்கும்
பெரும்பாலும்
கடவுள்கள் இவ்வண்ணமே உள்ளனர்
விதிவிலக்கு
உண்டு

கடவுள்களின் உலகம்
எனக்கு
சுவாரசியமாக இருந்தது
இங்கு
இருப்பதை விட
அங்கு
இருப்பது
நலமோ என ஐயுற்றேன்

கடவுள்கள் மோதலை விரும்புவதில்லை
சும்மா இருக்கவே விரும்புகிறார்கள்
வேண்டா வெறுப்புடனே
நல்லவர்களைக் காக்கிறார்கள்
மனிதர்களைப் போல் எல்லாவற்றிலும் தலையிடுவதில்லை

மனிதராய் இருப்பதை விட
வசதி
கடவுளாய்
கிட்டத்தட்ட
இருப்பது

Sunday 24 February 2019

ஒளிப்பொழுதுகள்

முதல் கணம்
காலத்தின் அன்றாடத் தன்மைக்கு அப்பால்
வெளியாக ஒளி உலகம்
சூரியன் குளிர்மையின் வெப்பம்
பூமிக்கும் காலடிகளுக்கும் மெல்லிய இடைவெளி
உன் சாளர மல்லிகைகள்
மேகங்களை ஆகர்ஷித்துக் கொண்டு

பர்வதங்களுக்கு இடையே
கலனில் நிரம்பும் நீராய்
வெயில்
சேகரமாகும்
கோடைப் பொழு்தில்
மாலைத் தென்றல்
உனது முதல் அறிமுகம்

ஆர்வமோ
மகிழ்ச்சியின் சமிங்ஞைகளோ
இல்லா
அடுத்தடுத்த சந்திப்புகள்

ஆராதனைகளும்
அவமதிப்பும்
பரஸ்பரம்
நிகழ்ந்த
சாதாரண உலகம் தான்
உன்னுடையதும்
என்பது
நம்ப இயலாததாய் 

பின்னொரு பனிப் பருவம்
பகலிலும்
புகைப் படலமாய்
பனி எழும் ஊரில்
முன் மதியத்தில்
நீ அங்காடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாய்

நாளும் இரவும்
சந்திக்கும் தளத்தில்
ஒரு குன்றின் அடிவாரக் கோவிலுக்கு
உன் அகலின் ஒரு தீபம்
வான்மீனாகி மேலெழுந்தது

மின்மினிகள் மினுக்கும்
நிலவற்ற இருளில்
பூட்டப்பட்ட அறையினுள்
தனிமையும் தவிப்புமாய்
நீ

சொல் எழா மௌனங்கள்
நீர் தேங்கா விழிகள்
ஒளி கொள்ளா பொழுதுகள்
சாதாரணத்தின் சராசரித் தன்மையிலும்
உனை
பொருத்தவே செய்கின்றாய்

எல்லாம் அறிந்திருந்தும்
கடந்து செல்கையிலே
ஒன்றும் கூறாமல்


பாலர் ஆடும் மைதானம்

எல்லா மைதானங்கள் போலவே
பெரும்பாலும் இருக்கின்றன
பாலர் ஆடும் மைதானங்கள்
ஒருத்தனிடம் ஸ்டம்புகள்
இன்னொருத்தனும் ஸ்டம்புகள் வைத்துள்ளான்
பந்து வைத்திருப்பவன்
ஆட்டத்துள் ஆட்டம் என
தனி ஆட்டம் ஆடுகிறான்
பொறுமை இழந்த ஒருவன்
திடீரென
குறுக்கும் நெடுக்கும்
சைக்கிள் ஓட்டுகிறான்
அருகில் உள்ள வீட்டில்
தண்ணீர் குடிக்கச் சென்றவன் பின்னால்
மூன்று பேர் சென்று விடுகின்றனர்
வீட்டுக்கு கிளம்புகிறான் ஒருத்தன்
ஆட்ட நேரம் விட
ஆட்டம் துவங்க ஆகும் நேரம்
அதிகமாக இருக்கிறது

மற்றபடி

எல்லா மைதானங்கள் போலவே
பெரும்பாலும் இருக்கின்றன
பாலர் ஆடும் மைதானங்கள்

சத்தம் போடும் மரம்

மர்ஃபி
புரசை மரத்தை
சத்தம் போடும் மரம்
என
புரிந்து வைத்துள்ளான்
வாக்கிங்
போகும் போது
தூரத்திலேயே
மரம் போடும் சத்தம்
அவனுக்கு
கேட்டு விடுகிறது
மரம்
அழைக்கிறதா
சொல்கிறதா
உதவி கேட்கிறதா
அவன் யோசித்து யோசித்துப் பார்க்கிறான்
நான் அவனிடம்
மரம் குருவிகள் மலர் கனி
என
சப்த காரணிகளை
விளக்கினேன்
மர்ஃபி
அதன் பின்னும்
சத்தம் போடும் மரத்தை
சத்தம் போடும் மரம்
என்றே
புரிந்து வைத்துள்ளான்

Saturday 23 February 2019

ஆசி

நீண்டிருக்கும் சாலையின்
இருபுறமும்
குன்று சூழ்ந்த
ஒவ்வொரு நாளும்
சூரியன் உதிக்கும்
எளிய அழகிய கிராமத்தில்
காலையில்
காய்கறிக் கூடைகளுடன்
நடந்து
கொண்டிருக்கும்
இளம் பெண்களின் உற்சாகத்தை
தன்னுடன் கொண்டு செல்கிறான்
கடந்து செல்லும் பயணி

சம்ஹாரம்

பாலைகளில் துளிர்க்கிறது பருவத்தின் முதல் துளிர்
தாகத்துடன் நோக்கிய வானில் கருமேகம்
கலங்கரை விளக்கம் தெரிகிறது கடலோடிக்கு
ஆறிய ரணங்கள் கொண்டு வருகின்றன நம்பிக்கையின் அமைதியை

Friday 22 February 2019

ஸ்திதி

உன்னிடம் பேசிக் கொண்டேயிருந்தேன்
என் அகம் முழுதும் முன்வைத்திட முயன்று
பேசும் தோறும் பெரிதாகிக் கொண்டேயிருந்தது அக உலகம்
நீ அவ்வப்போது புன்னகைத்தாய்
எப்போதாவது தலைகோதினாய்
சிலமுறை தோளில் சாய்ந்து கொண்டாய்
நான் எப்போதோ யாரிடமோ கேட்க வேண்டிய
மன்னிப்பை உன்னிடம் கேட்டேன்
நீ மௌனித்திருந்தாய்
வீசிய காற்று கடந்து சென்ற பின்
அசையாது நிற்கும் மரம் என

ஊர் சுற்றி

புன்னகைக்கும் முகங்களும்
உதவ முன்வரும் மனிதர்களும்
பிரியமான சினேகங்களும்
சூரிய
சந்திரரும்
அலைகடலும்
எப்போதும் நினைவில் சூழ
தன் அறையில் உறங்குகிறான்
ஊர் சுற்றி
வீடு திரும்பிய
ஒற்றைப் பயணி

அப்பாவின் தோட்டம்

அப்பா
ஒரு தோட்டத்தை உண்டாக்கினார்
வீட்டு மாடியில்
தனியாக உழைத்து

மூட்டைகளில் எரு சேகரித்தார்
காய்கறிக் கழிவுகளை எருவாக்கினார்
தேங்காய் மட்டைகளை எடுத்து வைத்து
நார்ப்படுக்கை தயார் செய்தார்

முதலில்
அவரை வெண்டை தக்காளி
பயிர் செய்தார்
அவை நன்றாக வளர்ந்தன
சின்னதாய் குறைவாய்க் காய்த்தன
வருத்தத்தை அப்பா வழக்கம் போல்
வெளிக்காட்டிக் கொள்ளவில்லை

அடுத்த பருவத்தில்
தனக்கான பயிர்களைக்
கண்டடைந்தார்
பசலைக் கீரை பொன்னாங்கண்ணி
மஞ்சள் இஞ்சி
ஒரு பழைய வாளியில்
அகத்தி வைத்தார்
அது ஆறடி மரமாய் வளர்ந்தது
இன்னொரு வாளியில் வைத்த
செம்பருத்தி
தினமும் பூக்கிறது

அங்கே பணி புரிந்ததில்
காகங்களையும் குருவிகளையும் அணில்களையும்
பரிச்சயம் செய்து கொண்டார்
அவற்றுடன் தினமும் ஏதேனும் உணவைப் பகிர்ந்து கொள்கிறார்
அவை காலையில் குரலெழுப்பி அவரை அழைக்கின்றன

பொங்கல் பானையில்
அப்பா பயிரிட்ட
மஞ்சள் இஞ்சியை
இரண்டு வருடமாக
சுற்றி வைக்கிறோம்

வெளியூர் சென்று வந்தால்
இல்லாத நாட்களில்
தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கிறதா
என முதல் வேலையாகப் பார்க்கிறார்

பத்து நாளைக்கு ஒரு முறை
தன் தோட்டத்திலிருந்து
கீரைகளை
அம்மாவிடம் சமையலுக்குத் தருகிறார்

அப்பா
தோட்டத்தை அமைத்திருக்கிறார்
குடும்பத்தை அமைத்தது போலவே

Thursday 21 February 2019

மீட்டர்கேஜ் ரெயில் நிலையங்கள்

ரெயில் நிலையம் பள்ளிப் பருவத்தில் ஆச்சர்யங்களின் சுரங்கமாகத் தோற்றம் அளித்துக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் ரயில் கட்டணமும் பேருந்து கட்டணமும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும். எனவே எங்கள் பகுதிகளில் எல்லாரும் ரெயில் பயணத்தை தெரிவு செய்ய மாட்டார்கள். ரெயிலுக்குப் பழகியவர்கள், ரெயில் நிலையத்துக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் ஆகியோரே அதனைத் தேர்ந்தெடுப்பர். காக்கிச் சீருடையும் வெள்ளைச் சீருடையும் அணிந்த பணியாளர்களும் அதிகாரிகளும் நடமாடும் நடைமேடையை மிகவும் விரும்பி பார்ப்பேன். சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் பகலெல்லாம் நான் ஆர்வமாக இருப்பதைப் பார்த்து விட்டு ஒரு அதிகாரி என்னை சிக்னல் பிரிவுக்கு அழைத்துச் சென்றார். ரெயில் எத்திசையில் செல்கிறது என்பதைப் பொறுத்து மணி அடிக்கும். ஒரு ரெயில் பயணத்தில் ரெயில்வே கால அட்டவணையை பார்ப்பதை அப்பாவிடமிருந்து கற்றுக் கொண்டேன். ரெயில்வே வரைபடத்தில் இருக்கும் ஊர்களுக்கு மானசீகமாக பயணித்துக் கொண்டிருப்பேன். மது தண்டவதே, ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் ஆகியோர் ரெயில்வேக்கு அமைச்சர்களாயிருந்தவர்கள் என்பதால் விரும்புவேன். ஒரு நாளில் எங்கள் ஊர் வழியே செல்லும் எல்லா ரெயிலின் நேரத்தையும் மனப்பாடமாகச் சொல்வேன்.

சிருஷ்டி

உனது பார்வையிலிருந்து
ஒரு வானை உருவாக்குகிறேன்
உனது புன்னகையிலிருந்து
ஒரு நிலவை உருவாக்குகிறேன்
உனது சிறிய நெற்றிப் பொட்டிலிருந்து
மின்னும் நட்சத்திரங்களை உருவாக்குகிறேன்
உனது கூந்தலிலிருந்து
பெருமழையை உருவாக்குகிறேன்
உன் இன்சொல்லிலிருந்து
ஒரு வாழ்வை உண்டாக்குகிறேன்

கிருஷ்ண முரளி - 14

நம் விழிகள் சந்திக்கும் போது
என் அகத்தில்
மலர்கிறது
முடிவின்மையின்
ஒரு மலர்
உன்னுடன் மெய் சேரும் போது
ஒன்றாய் இருக்கிறது
இப்பிரபஞ்சம்
இவ்வுயிர்

கிருஷ்ண முரளி - 13

உறங்காது விழித்திருக்கிறேன் இந்த இரவில்
குளிர்ச்சி பொங்கும் நிலவு தனித்திருக்கிறது
வானெங்கும் நிரம்புகிறது பால் வெண்மை
துடிக்கும் இதயம் உனது பெயர் சொல்கிறது
உன் உள்ளங்கைகளின் தீண்டல் உயிர் கொள்கிறது
ஒவ்வொரு கணமும்
உன் புல்லாங்குழலை நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறேன்
இந்த உலகில் வேறு ஏதும் இல்லை என

Wednesday 20 February 2019

உரு ஆக்கம்

ஒரு நதியின் கரையில்
விரவிக் கிடக்கும்
கூழாங்கற்கள்
உன் பாதங்களை
உருவாக்கிக்
காட்டுகின்றன
மூழ்கி எழும் நதி
உன் உள்ளங்கை ரேகைகளை
உண்டாக்குகிறது
நதி பயணிக்கும்
மலைகளுக்கு அப்பால் உள்ள
சூரியன்
உன் முகத்தை
உருவாக்குகிறது
நான் உன்னைச் சுடராக்கி
ஒரு சிற்றாலயத்தின் சன்னிதியில்
அகல் விளக்கில்
வைக்கிறேன்
அப்போது வீசும் மென்காற்று
மெல்ல அசைக்கிறது
உன்னை

செம்மலர்

இன்றைய அஸ்தமன சூரியன்
சூழ்ந்திருந்த
சிறு மேகத்திரளுக்கு
மத்தியில்
சிவப்பாய் ஒளிர்ந்த போது
குளிர்ந்த பாறைகளிலிருந்து
கொட்டும்
அருவி போல் இருந்தது
தோளில் புரளும்
விரிந்த கூந்தலில்
மலர்ந்திருக்கும்
உன் முகம் போலவும்

செய்தி நீக்கம்

அலைபேசியில்
அனுப்பிய
குறுஞ்செய்திகளை
துழாவிக் கொண்டிருந்தேன்

புறப்பட்ட செய்தி
பத்திரமாக வீடு வந்த சேதி
வீட்டு முகவரி
வங்கிக் கணக்கு எண்
சில அலைபேசி எண்கள்
நன்றி
வாழ்த்து

சிலருக்கு அளித்த அறிக்கை
சிலருக்கு சொன்ன ஆறுதல்
சிலருக்கு செய்த உதவி

உற்சாகம் கொண்டு அனுப்பிய செய்திகளை
இப்போதும் பிரித்தறிய முடிகிறது

பெரும்பாலானதை நீக்கினேன்
அச்செய்திகளும்
அவை அனுப்பப்பட்ட தருணங்களும்
இயல்பாகக்
கடந்து போயிருந்தன

கடக்க முடியாத உணர்வுகளும்
குறுஞ்செய்திகளாயிருந்தன
எனினும்
அச்சொற்கள் மாமூலானவை
அவற்றையும் நீக்கினேன்

ஒரு பெரிய வீட்டில்
ஒற்றை ஆளாய் இருப்பது போல்
மிகை இடைவெளியால்
நிரம்பியிருந்தது
செய்திப் பெட்டி

அடர்த்தி குறைந்த நினைவுகள் போல
அடர்த்தி குறைந்தது மனம்

எதிர் வீட்டுச் சுவரில்
அமர்ந்த காகம்
கா கா என்றது
என்ன செய்தியோ

கிருஷ்ண முரளி - 12

இந்த யமுனை அறியும்
என் தாபத்தை
இந்த தென்றல் அறியும்
என் பிரியங்களை
இந்த நிலவு அறியும்
என் அன்பை
இந்த நிலம் அறியும்
என் காத்திருப்பை
இந்த சுடர் அறியும்
என்னை

கிருஷ்ண முரளி - 11

உன்னைக் காண
புறப்படும்
ஒவ்வொரு முறையும்
முற்றிலும்
புரியாமல் போகிறது
புற உலகம்

இங்கு தான்
இத்தனை
ஆண்டுகள்
ஜீவித்திருந்தேனா

பதட்டம் கொண்டு
தடுமாறுகிறது
உனை நோக்கி நகரும்
பாதங்கள்

நீ என்னை அறிவாயா
என்னும்
ஐயம்
எப்போதும்
எழுகிறது

நீயன்றி ஏதுமில்லை
என்ற உணர்வில்
என் உயிரை
முன்வைக்கிறேன்

உன் தூய புன்னகை முன்
உன் இனிய இசையின் முன்
உன் அகத்தின் அன்பின் முன்

கிருஷ்ண முரளி - 10

நீ
என்னை அறிகிறாயா
என் ஆத்ம தவிப்பை
கட்டற்ற என் உணர்வுப் பெருக்கை
பித்தேறிய மனத்தை
காத்திருப்பாய் மட்டுமேயான இருப்பை

கிருஷ்ண முரளி - 9

தூய வெண் நிற ஒளி
பரவியிருக்கும்
இந்த இரவில்
என் அகம்
நிரம்பியிருக்கிறது
உன் கண்களின்
அன்புப் பெருக்கால்
மலர்ச்சிரிப்பால்
எப்போதோ
அழைத்த
உன் விளியால்

Tuesday 19 February 2019

கிருஷ்ண முரளி - 8

மேயும் ஆவினங்கள்
உன் அருகாமையால்
உணர்வு உருகி நிற்கின்றன
அவற்றின் கண்களில் துளிர்க்கும் நீர்
உன்னால் கொஞ்சப்படுகிறது ஒரு கன்று
நான் நெடுந்தொலைவைக் கடந்து வந்திருக்கிறேன்
பதைபதைத்து
உன் மீதான பிரியத்தை
இன்னும் நான் சொல்லாக்கவில்லை
அலையும் உன் கண்களை
சந்திக்கும் ஏதோ ஒரு கணத்தின்
மாயத்தால்
நகர்கிறது நாளின் பெரும் பொழுது
இசைக்கையில்
நீ விண்ணாகும் போது
உன் கரம் நீட்டு
நானும் விண்ணாகிறேன்

கிருஷ்ண முரளி - 7

இந்த மாலை காத்திருத்தலுக்கானது
நான் துறக்கிறேன்
உனக்காக
எனக்கான அனைத்தையும் துறக்கிறேன்
என் உறவுகளை
என் தோழிகளை
எஞ்சியிருக்கிறது
அன்பு
ஊற்றாய் பெருகும் அன்பு
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பையும்
உன் இசையாய் கேட்கிறேன்
என்னை மண்ணுடன் பிணைக்கும்
உடல் உதறி
வானாய்
உனைச் சூழத் தவிக்கிறது
என்
அன்பும் இசையும்

கிருஷ்ண முரளி - 6

என் இதயத்தின் குருதியை
இசையாக்குகிறேன்
மூச்சாய் உயிர் தருகின்றன
உனது நினைவுகள்
எப்போதும்
வான் நோக்குகின்றன
என் கண்கள்
எங்கே உன் வேய்குழல்?

மன்றாட்டு

நாங்கள் கண்ணீர் சிந்துகிறோம்
எங்கள் உணர்வின் கண்ணீர்
எங்களைத் தூயவர்களாக்கட்டும்
நாங்கள் வியர்வை சிந்துகிறோம்
எங்கள் உழைப்பின் வியர்வை
எங்களை மேன்மைகளுக்கு இட்டுச் செல்லட்டும்
நாங்கள் குருதி கொட்டுகிறோம்
எங்கள் கொழுங் குருதி
எங்களை நீதியில் நிலைபெறச் செய்யட்டும்
எப்போதும்
எங்கள் அகம் வான் நோக்கி விரியட்டும்

கிருஷ்ண முரளி - 5

குளிர் இளம் நதி ஓடிக்கொண்டிருக்கிறது
தென்றல் உலவும் படித்துறையில்
நின்றிருக்கிறாள்
பூத்த மரம் போன்ற பாவை
என்றோ ஒலித்த
புல்லாங்குழல்
அவள் அகத்தில்
கேட்டுக் கொண்டிருக்கிறது
முதல் முடிவு அற்ற
பொழுதில்
இன்னும் சொல்லாக்காத உணர்வுடன்
காத்துக் கொண்டிருக்கிறாள்

இமைப்பொழுதும்

வலியில்
சிந்தும்
ஒவ்வொரு துளி
கண்ணீருக்குப்
பின்னும்
போர் ஆட்டத்தின்
உதிரும்
ஒவ்வொரு துளி
வியர்வைக்குப்
பின்னும்

எழுவோம்
யாம்
ஓயாது எழுவோம்

சித் சபை

நாளும் மலரும் பூ என
இந்த வசந்தத்தில்
முளைக்கின்றன
புதுத் தளிர்கள்
இன்னும்
மொழியப்படாத
வாழ்வின்
எல்லையற்ற
அன்பைப் போல
சாத்தியங்களைப் போல

Monday 18 February 2019

செஞ்சடையான்
வியாழனுக்கு
வாக்களித்த தலத்தில்
அப்பன் முன்
தேவாரம் பாடுகிறார்
ஆயிரம் பிறை கண்ட
முதியவர்
எத்தனை பகலிரவுகள்
எத்தனை எத்தனை
இறக்க ஏற்றங்கள்
பேசத் துவங்காத பாலனுக்கு
நீறு பூசச் சொல்கிறாள்
அவன் அன்னை
தன்
ஓய்ந்த மனத்தின்
அமைதியையும்
இனிமையையும்
விபூதி குங்குமமாய்
இட்டு
குழந்தை கண்டு சிரித்தார்
முதியவர்
எதையோ புரிந்து கொண்டது
போல
பதில் சிரிப்பு
சிரித்தது
குழந்தை

ஆதல்

அந்த மலைப் பாதையில்
சட்டென சூழ்ந்த மழையில்
உற்சாகமாய்
நனையும் இளம்பெண்
நதியாகிறாள்
மேகமாகிறாள்
ஒரு கணம்
மழையும்
ஆகிறாள்

ஏகம்

இளம் தூறல் மழைப்பொழுதில்
துப்பட்டாவால் முக்காடிட்டு
அவசரமாக நடந்து வரும்
அந்த இளம் பெண்
ஒரு நனைந்த புல்லைப் போலவும்
உற்சாகமாய் உதிரும் மலரைப் போலவும்
ஓர் ஈரமான கூழாங்கல் போலவும்
ஒரு வண்ண வானவில்லைப் போலவும்
ஒன்றாய்த்
தோன்றுவது தான்
எப்படி?
உச்சி வெயிலில்
தோதாக விரிந்திருக்கும்
பெருமர நிழலில்
ஒரு துண்டை விரித்து
நெருங்கியிருக்கும் இலைகளின்
சிறு மிகச் சிறு
இடைவெளிகளில்
மின்னும் வானம் பார்க்கும்
கையில் ஒரு புத்தகம் வைத்துள்ள
விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த
தற்காலிக இடையன்
கவனத்தில்
மேயும் ஆடுகள்
வாழ்வின்
எளிமையான ஒரு கணம்

Sunday 17 February 2019

பைக்

உள்ளம் கவர்ந்த
அன்புத்தோழா
புற உலகின் பெருக்குக்கு
நீயே தெப்பம்

Saturday 16 February 2019

ஒன்றே குலம்


காகிதத் தாள் போல் மலர்ந்துள்ளன தும்பைப் பூக்கள்
நெல்லுக்குப் பாய்கிறது மூழ்கிய மோட்டார் வெளித்தள்ளும் நீர்
கதிருக்கும் கதிருக்கும் இடையே  பின்னியிருந்த வலையில் சிலந்தி
ஆசுவாசமான கரிச்சான்கள் வெறுமே அமர்ந்திருக்கின்றன மின்கம்பிகளில்
பாதுகாப்பான சாலைதானா என பரிசோதிக்கும் கீரி கடந்து செல்கிறது
குளத்து மீனுக்காக விண்ணில் அலைகிறது ஒற்றைப் பருந்து 

Friday 15 February 2019

அதிகாலையில் நடப்பவன்



அந்த சிறுநகரத்தில்
அதிகாலையில் நடப்பவன்
சில சௌகரியங்களைப் பெறுகிறான்
எல்லாருக்குமான
யாரும் கேட்காத 
பேரமைதி நிலத்தில்
வான் மீன்கள்
ஒளி ஆற்றில்
மூழ்கப் போகும்
பொழுதில்
சில்வண்டுகளின் பிராத்தனை நிறைவில்
நடந்து செல்பவன்
சில கணங்கள்
பறந்தும் செல்கிறான்
அவனுக்கே தெரியாமல்
கொள்ளிடக் கரையும்
மூவர் தேவாரமும்
தை அமாவாசை கருட சேவையும்
கல் கருடனும்
சாரங்கபாணி சன்னிதித் தெருவும்
மாலை மேம்பாலக் காற்றும்
பாஸஞ்சர் மட்டுமே நின்று செல்லும்
சின்னஞ்சிறு ரெயில் நிலையங்களும்
ஐயாறு காவிரியும்
இன்னும்
நினைவில் இருக்கிறது
இப்பிரதேசத்தில் வாழ்ந்தவனுக்கு
இப்பிரதேசத்தில்
இன்னும்
வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு
உலகில் எங்கெங்கோ

கண்டறியாதன

யாருமற்றிருக்கிறது
ஆயிரத்து நானூறு ஆண்டு
ஆலயம்
தேசாந்திரி
நுழைகையில்
தாயார் சன்னிதியிலும்
சிவன் சன்னிதியிலும்
ஓரிரு
அகல் தீபம்
மெலிதாக
அசைந்து கொண்டிருந்தது
எப்போதும்
அங்கிருக்கும்
புறா
எங்கோ
சென்று விட்டு
சிறகுகளை படபடத்து
வந்தமர்கிறது
ஆலமர் இறைவன்
தெற்கே
பார்த்துக் கொண்டிருக்கிறான்
அம்மையப்பன்
முன் அமர்ந்து
கண்மூடுகிறான்
தருணங்களை
வாழ்ந்து செல்பவன்
அகத்தில்
ஆலய மௌனம்
குடியேற
பலிபீடத்தில்
நெடுஞ்சாண் கிடையாய்
தன்னை
வைக்கிறான்

இனிமை

ஆழித்தேரும்
கமலாலயக் குளமும்
தீட்சிதர் கிருதியும்
நீலோத்பலமும்
ஆரூர் நினைவில்
என்றும் இனிக்கிறது
முதல் முறை
திருவிழா வந்த குழந்தை
ஞாபகத்தில்
பஞ்சு மிட்டாய்
இருப்பது போல

Thursday 14 February 2019

ஆரூர் கமலாலயம்

மாசி மாலையில்
அலையடிக்கிறது
ஆரூர் கமலாலயம்
ஆரூரா தியாகேசா
என்கிறார்
தினமும்
குளத்தை வலம் வரும்
முதியவர்
தென்கரையில்
அமர்ந்துள்ள
பூர்வீகம் இத்தலமாய்
கொண்ட
மூதாட்டி
கமலாம்பா கமலாம்பா
என்கிறார்
கமலாலயம்
அலையாட்டுகிறது
குளத்து நீரை
பல்வேறு நினைவுகளை

கவிஞன் என்ன செய்கிறான்

வெட்டவெளியின் கீழே நிற்கிறான்
பூமிப் பரப்பெலாம் நடந்து திரிகிறான்
பெரிய கடலில் நீந்தித் திளைக்கிறான்
சிகரங்களைத் துழாவ முன்னேறுகின்றன
அவன் கால்களும் கைகளும்
மலர் உதிர்க்கும் மரங்கள் முன் பரவசம் கொள்கிறான்
சின்னக் குருவிகள் போல் உற்சாகமாய்ப் பாடுகிறான்
மனித முகங்களுக்கு மானுடக் கதை சொல்கிறான்
விடு பட்டு
இன்புற் றிருக்கிறான்

அலையும் பயணி

சிறு
நிரல் நிரையாய்
கயிற்றுக்கட்டில்கள்
சமையல்கார இளைஞன்
இரவு உணவை
தயார் செய்கிறான்
ஓய்ந்த் திருக்கின்றன
வாகனங்கள்
டூ வீலரை 
துடைத்து வைக்கிறான்
அலையும் பயணி
தொட்டி நீரில்
முகம்
கழுவிக் கொண்டிருக்கின்றனர்
வாகன சாரதிகள்
பரவிக் கிடக்கிறது
வெட்ட வெளியில்
பேதமற்ற
நிலவு
பசியாறி
ஓய்வெடுக்கின்றனர்
புத்தம் புதிய நாளுக்காக
அடுத்த நாளின் பயணத்துக்காக

அலைந்து திரிதல்

வைணவ திவ்யதேசங்களுக்கும் சிவாலயங்களுக்கும் செல்லத் துவங்கிய போது நான் ஒரு முறைமையைக் கடைபிடித்தேன். ஓர் ஆலயம் செல்ல உத்தேசித்திருந்தால் வழியில் உள்ள மற்ற ஆலயங்களுக்குச் செல்ல மாட்டேன். உத்தேசித்த ஆலயத்தை சென்று பார்த்து அங்கேயே இருந்து விட்டு மாலை வீடுதிரும்புவேன். அதன் அருகில் இருக்கும் ஆலயத்துக்கு மறுவாரம் செல்வேன். அப்போது அந்த ஆலயத்தில் மட்டும் இருப்பேன். இப்படி சென்றதில் என்ன ஆயிற்று என்றால் எனது ஊரிலிருந்து அறுபது கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள எல்லா பாதைகளிலும் குறைந்தபட்சம் ஓரிரு முறையாவது பயணித்திருப்பேன். பல வருடத்திற்கு பின்பு, இப்போது அந்த பாதையில் சென்றால் முதல் முறை , இரண்டாம் முறை சென்ற ஞாபகம் துல்லியமாக வருகிறது. இந்த பகுதிகளில் எனது பைக் செல்லாத சாலைகளே இல்லை என்னும் விதமாக உள்ளது. ஆனாலும் இன்னும் அதே ஆர்வத்துடனேயே இருக்கிறேன். கிளம்புகிறேன்.

Wednesday 13 February 2019

ஒரு பனித்துளி
தனித்திருக்கிறது
இவ்வளவு பெரிய உலகில்
இவ்வளவு பெரிய வானின் கீழ்

ஒரு பனித்துளி
கரைகிறது
இவ்வளவு பெரிய உலகில்
இவ்வளவு பெரிய வானின் கீழ்

கை ஈரம்

ஓர் உணர்வை
ஒரு பிரியத்தை
ஓர் அன்பை
ஓர் அக்கறையை
ஒரு கனிவை
ஒரு மதிப்பை
ஒரு நன்றியை
எப்படி
எவ்வாறு
எந்த
வார்த்தையால்
அல்லது
வார்த்தைகளால்
சொல்வது

அள்ளிய கரங்களுக்குள்
கசிந்து கொண்டிருக்கிறது
தண்ணீரின் ஈரம்


Tuesday 12 February 2019

இன்னும்

நாம் இன்னும் நம்மை விசாலமாக்க வேண்டியிருக்கிறது
நாம் இன்னும் யுத்தங்களை விரும்பாமலிருக்க வேண்டியிருக்கிறது
நாம் இன்னும் கொஞ்சம் சக மனிதனின் தாகத்துக்கு தண்ணீர் தர வேண்டியிருக்கிறது
நாம் இன்னும் நம் உணவை பசித்தவனுக்குப் பகிர வேண்டியிருக்கிறது
நாம் இன்னும் நோயுற்றவனுக்கு கருணை காட்ட வேண்டியிருக்கிறது
நாம் இன்னும் பல காயங்களுக்கு மருந்திட வேண்டியிருக்கிறது
நாம் இன்னும் பல இன்சொற்களால் பலருக்கு ஆறுதல் அளிக்க வேண்டியிருக்கிறது
நாம் நம்மையன்றி இன்னும் பலருக்காகவும் கண் கலங்க வேண்டியிருக்கிறது
நாம் இன்னும் பலரின் கண்ணீரைத் துடைக்க வேண்டியிருக்கிறது

மாற்று

ஒரு வசந்த கால மாலையில்
வழியனுப்ப வந்தவன்
புறநகர் ரயில் நிலைய
வாகன நிறுத்தத்தில்
தன் மங்கையிடம்
அவள் எதிர்பாராத கணத்தில்
அவளுக்காக வாங்கிய
சந்தன நிற ஸ்வெட்டரை
அவளிடம்
தருகிறான்
அந்த கணத்தின் எதிர்பாராமையால்
திக்குமுக்காடிய
அவள்
தன் துப்பட்டாவை
சட்டென
அவன் கழுத்தில்
மாலையிடுகிறாள்
ஸ்வெட்டரை அணிந்து கொண்டு
டூ-வீலரின் ரியர் வியூ ஆடியில்
அவன் தோளில் கை போட்டு
பிம்பம் பார்க்கிறாள்
ஆடி
ஸ்வெட்டர் அணிந்த அவளையும்
துப்பட்டா அணிந்த அவனையும்
காட்டுகிறது
அவர்களுக்கு அப்பால்
ரயில் நிலைய
வேப்பமரத்திலிருந்து
வேப்பம்பூக்கள்
காற்றில் மிதந்து
பூமிக்கு வந்து கொண்டிருந்தன

Monday 11 February 2019

ஆர்வலர் புண்கணீர்

2003ம் ஆண்டு பொறியியல் இறுதி ஆண்டு படித்த போது நண்பர் மகளின் திருமணத்திற்கு கும்பகோணம் சென்றிருந்தேன். அத்திருமண நிகழ்வுகளை ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் ஒப்பந்தக்காரர் ஒருவர் ஒருங்கிணைத்தார். அவருடைய குழுவில் பதினைந்து பேர் இருந்தார்கள். நான் முதல் நாள் மதியத்திலிருந்து அங்கே இருந்தேன். அந்த குழுவில் ஒரு அம்மா இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு கைக்குழந்தை இருந்தது. கோலம் போடுவது, தாம்பாளங்களில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தேவையான மங்கலப் பொருட்களை எடுத்து வைப்பது, புரோகிதருக்கும் மண வீட்டாருக்கும் திருமணச் சடங்குகளில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது ஆகியவை அவரது பணிகள். கோலம் போடும் பணியை முதல் நாள் மதியத்திலிருந்தே செய்து கொண்டிருந்தார்கள். குழந்தைகள் அவர்கள் கோலத்திற்கு புள்ளி இட்டிருந்தால் உற்சாக விளையாட்டில் அங்கே இங்கே ஓடும் போது அழித்து விடும். எவ்வித முக மாற்றமும் இன்றி மீண்டும் கோலம் போடுவார். சமயத்தில் பெரியவர்களே கவனிக்காமல் கடந்து செல்வார்கள். தனி ஒருவராக குத்து விளக்குகளுக்கு திரி எண்ணெய் இட்டுக் கொண்டிருப்பார். அவ்வப்போது தன் குழந்தையை ஒரு ஏக்கத்தோடு கவனிப்பார். விருந்தினர்கள் அனைவரும் உணவு உண்டார்களா என்று அநேகமாக எல்லாரையும் கேட்டு உறுதி செய்து கொள்வார். அத்திருமணத்தில் எல்லா நிகழ்வுகளும் துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. அதற்கு அவரே முக்கிய காரணம். மறுநாள் திருமணம் முடிந்து வழிஉணவுடன் அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர். அனைவருக்கும் உணவுப் பொட்டலங்கள் கிடைத்ததா என்று உறுதி செய்து கொண்டிருந்தார். நான் அவரிடம் சென்று வணங்கி என் பெயரைக் கூறி பொறியியல் படிக்கிறேன் என அறிமுகம் செய்து கொண்டேன். இரண்டு நாட்களாக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினீர்கள் . அதனை உடனிருந்து கண்டது எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது என்று சொன்னேன். அந்த அம்மா சட்டென கண் கலங்கி விட்டார்கள்.
உன்னருகே வந்த குழந்தையிடம்
குனிந்து
விழி நோக்கி
இமை உயர்த்திப்
புன்னகைக்கிறாய்
இப்போது
யார் பிள்ளை
யார் அன்னை

நிகழ்

உனது கூர் நோக்குகள்
நிலம் காணும் இமை தாழ்த்தல்கள்
முற்றுப் பெறா மென் குரல் வாக்கியங்கள்
விழிக் கோள நீர்த்திரள்கள்
இனி பிறக்கப் போகும்
சிற்பி
செதுக்க இருக்கும்
சிற்பம்
உயிர் கொள்ளத் துவங்குகிறது

Sunday 10 February 2019

கை மாறு

நாம் ஓர் உலகத்தை உருவாக்கினோம்
அதில்
எப்போதும் ஓர் உயர் சங்கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது
எங்கும் பரவியிருந்தது முடிவற்ற இனிமை
யாவும் ஒன்றே என்ற உணர்வில்
லயித்திருந்தது வாழ்க்கை

உமையவளிடமிருந்து
பகடையைப் பெற்றான்
சதாசிவன்

நாம் உருவாக்கிய உலகம் இருந்தது
பல குரல்கள் எழுந்தன
பல இசைகள் ஒலித்தன
நான் நான் நான் என ஆர்ப்பரித்த
நானாவித ஜீவிதம்
முடிவடையா யுத்தத்தைத் துவக்கின

பூத கணங்கள்
கூட்டமாய்
வந்து சேர்ந்தன
அம்மையப்பன்
தரிசனம் தர
புறப்பட்டனர்

நாம் உருவாக்கிய உலகில்
நீ இருந்தாய்
நான் இருந்தேன்
உலகம் இருந்தது

மூன்று பணிகள்

உனக்கொரு அபூர்வ மோதிரம் பரிசளிக்கிறேன்
அணிந்து கொள்
அதனை உன் கண்கள் அறியும்
பிறர் பார்க்க முடியாது

அம்மோதிரம்
நீ
அழைத்தால்
மூன்று பணிகளைச் செய்யும்

உன் இயல்பை அது பாதுகாக்கும்
எவ்வாறெனில்
அற்பமான விஷயங்களை
உன் மனத்தில் அல்லது
உன் கவனத்தில்
இல்லாமல்
செய்து

உன் கனிவை அது பராமரிக்கும்
எவ்வாறெனில்
உன் தூய உள்ளத்தை
தூயதாகவே
வைத்திருந்து

உன் காதலை நினைவுறுத்தும்
பொன் ஒளிரும் ஒவ்வொரு சூரிய உதயத்திலும்

அழைக்காமலே

எப்போதாவது
உன் துக்கம் திரளுமெனில்
அது வும்
கண்ணீர் சிந்தும்

Saturday 9 February 2019

மீண்டும் ஒரு வசந்தகாலம்

மீண்டும் மலர இருக்கிறது
ஒரு வசந்த காலம்
மேகங்கள் ஏதுமற்ற வானம்
துல்லிய நீலம் கொண்டு
மனதைப் பித்தேறச் செய்யும்
பருவம்
மண்ணில் பரவும்
துயர வேர் முடிச்சுகள்
நீரின் சாரம் சேகரித்து
மலர்களின் இனிமையை
பூக்கச் செய்யும்
காலம்
பேரெழில்
துயர் விடுக
துயர் விடுக
என
எழுப்பும்
மென் இசை சங்கீதம்
ஒலிக்க இருக்கிறது
மலர்க
சேற்றிலிருந்து செந்தாமரைகள் என
மலர்க
அல்லி மலர்களென
மலர்க
தீ ஒளிரும் பசும் தளிர்களென

சில சம்பவங்கள்

இந்த உலகில் இந்தனை ஆண்டுகளாக ஆர்வமாகப் பார்த்த வேடிக்கையில் பல சம்பவங்கள் சுவாரசியமாக இருந்திருக்கின்றன அல்லது உலகை சுவாரசியமாக வேடிக்கை பார்க்கும் பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. இன்றும் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு உற்சாகமாகவே கிளம்புகிறேன். ஜன்னல் ஓர பேருந்து சீட்டில் அமர்ந்ததிலிருந்து நகரும் மரங்களையும் மனிதர்களையும் ஊர்களையும் காண்கிறேன். ரயில் பயணத்தில் வயலில் லெவல் கிராசிங்கில் மைதானத்தில் சாலையில் நின்று கை அசைக்கும் எல்லா குழந்தைகளுக்கும் மறு சங்கேதமாக கையசைக்கிறேன். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மனிதர்கள் எப்படி வெளிப்படுகிறார்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை ஓயாமல் பார்க்கிறேன். எனக்கு பல விஷயங்கள் புரிவதில்லை. பலருக்கும் புரியாத சில விஷயங்கள் எளிதில் புரிந்து விடுகின்றன. சுற்றி நடக்கும் அனைத்திலும் ஒரு ஆச்சர்யமும் மர்மமும் இருந்து கொண்டேயிருப்பது வாழ்வை சுவாரசியமாக்குகிறது. பல நாட்களாக மனதில் இருக்கும் சுவாரசியமான சில சம்பவங்களையும் நினைவுகளையும் எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது. இது கூட சுவாரசியமாயிருக்கக் கூடும்.

Friday 8 February 2019

அந்த கணம்

பேருந்தில்
காதலனுடன் அமர்ந்திருக்கிறாள்
ஓர் இளம் பெண்
இருபத்து மூன்று வயது இருக்கும்
ஒன்றிரண்டு கூடக்குறைய இருக்கலாம்
பால்யம் அவள் முகத்தில் இன்னும் மாறவில்லை
காதலன்
அவள் கரங்களைப் பிடித்துக் கொள்கிறான்
அவள் தோளில் சாய்ந்து கண்மூடிக் கொள்கிறான்
அதிகாலையின் அமைதியுடன்
இந்த உலகில் அவளைத் தவிர வேறு யாரும் இல்லாதது போல
அவள் விழி திறந்து தியானத்தில் இருக்கிறாள்
இந்த உலகம்
எளிமையானதாக
சிக்கல்கள் இல்லாததாக
அவளுக்குத் தோன்றும்
அந்த கணத்தின்
தியானத்தில் 

பிழை

நீங்கள்
அதிகாலையில் எழுந்து
விடிவெள்ளி பார்த்து
அதன் அருகிருக்கும்
மின்னும்
நட்சத்திரங்கள் பார்த்து
சாணம் மெழுகப்பட்ட தரையின்
மாவுக் கோலங்களைத் தாண்டி
குழையும்
வாலாட்டும் குட்டி நாய்களின்
எல்லைக்குள் நுழைந்து
எல்லை தாண்டி
காகக் கரைதல்களைக் கேட்டவாறு
ஒரு மைல் நடந்து
ஒரு செய்தித்தாளை வாங்கி
கையில் எடுத்துக் கொண்டு
திரும்புவதில்
ஏதோ ஒன்று
பிழையாக
இருக்கிறது

Thursday 7 February 2019

வேளூர் மருந்தீசர்

நெக்குருகும் உணர்வுகள்
பூரணமான சரணாகதிகள்
குடும்பத்துக்கான பிராத்தனைகள்
வலியின் துயரின் முன்வைப்புகள்
பொங்கி வழியும் கண்ணீர்
அப்பன் தவத்தில் மூழ்கியிருக்கிறான்
அம்மை அகம் கனிந்திருந்திருக்கிறாள்
சன்னிதியில்
கைக்குழந்தையை
ஏந்தி நின்றிருக்கிறாள்
ஓர் அன்னை
இன்று இரு கவிஞர்கள் சந்தித்துக் கொண்டோம்
எப்போதும் போல்
கவிதையைப் பற்றி பேசத் துவங்கினோம்
பின்னர்
எங்கள் கவிதைகளைப் பற்றி
கவிதை எழுதப்பட்ட நினைவுகள் பற்றி
சில கவிதைகள் வாசித்தோம்
சில கவிஞர்களை நினைவுகூர்ந்தோம்
கவிதையின் புதிய தடங்களை யூகிக்க முயன்றோம்
எது கவிதை என்ற
ஆதி விசாரணை
துவங்கி
நெடுநேரம் விவாதித்தி
முடிவுகள் ஏதும் இன்றி
மீண்டும் சந்திப்போம்
என்று
விடைபெற்றோம்

மணற்துகளே நீர்த்திரளே

இந்த மாலை
சூரியன்
செங்கோளமாய் உலகணைக்கும்
இந்த மாலை
வெண்நுரை பொங்கும் கடல்
கரையில் நிற்கும் கால்களைத்
தீண்டி
உள்ளம் குளிர்விக்கும்
இந்த மாலை
முதல் முறை கடல் காணும் சிறுவன்
பிரமித்து
தான் இதன் முன் வந்தது போல்
கடல்
தன்னுடன்
தன் வீட்டின் முன்
வந்துவிட்டால்
என்ன செய்வது
என்று திகைத்து
இதை யாரிடம் கேட்பது
என்று
யோசித்துக் கொண்டிருக்கிறான்

Wednesday 6 February 2019

மூன்றாம் நிலவு

இன்று
மூன்றாம் நாள் நிலவைக் கண்டீர்களா?
நான் கண்டேன்
பிள்ளைச் சிரிப்பு போன்ற வான் சிரிப்பை
யாதும் ஒன்றென உணர்ந்தவன்
விரும்பி அணிந்த அணியை
பால் வேண்டி அழுத ஞானக்குழந்தை
அம்மையப்பனுடன் பெற்ற தரிசனத்தை
சத்தியமாய்  சுந்தரமாய்
கோலம் காட்டும்
பரம்பொருளை

இன்று
மூன்றாம் நாள் நிலவைக் கண்டீர்களா?
நான் கண்டேன்

ஊர் சுற்று

1994ல் எங்கள் வீட்டில் ஒரு முருங்கை மரம் இருந்தது. அதன் காய்ப்பு அபரிமிதமானது. ஒரு எலுமிச்சை மரம் இருந்தது. அதுவும் எக்கச்சக்கமாக காய்க்கும். அப்பாவும் அம்மாவும் பூசணி பரங்கி ஆகியவற்றை தோட்டத்தில் பயிரிட்டிருப்பர். அம்மாவும் அப்பாவும் நம்மிடம் இருப்பதை அண்டை வீட்டுக்காரர்களுக்கும் நண்பர்களுக்கும் உவந்து கொடுத்து மகிழ வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள். அந்த ஆண்டுகளில் எனது பணிகளில் ஒன்று இந்த காய்கறிகளை எனது தந்தையின் அலுவலகத்தில் பணி புரியும் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று கொடுத்து விட்டு வருதல். கிட்டத்தட்ட பதினைந்து பேரின் வீட்டுக்குச் சென்று கொடுத்து விட்டு வருவேன். எனது சைக்கிளில் ஒரு பெரிய துணிப்பையில் இவற்றை எடுத்துக் கொண்டு செல்வேன். ஒவ்வொரு வீட்டிலும் என்னைப் பிரியமாக வரவேற்பார்கள். என்னைப் பாராட்டி நற்சொற்கள் சொல்வார்கள். ஊக்கப்படுத்துவார்கள். என் படிப்பு குறித்து பள்ளி குறித்து விசாரிப்பார்கள். நானும் அதிகாரபூர்வமாக ஊர் சுற்ற வாய்ப்பு கிடைக்கிறதே என்று கிளம்பி விடுவேன். அப்போது அவர்கள் வீட்டுக்குச் செல்லும் போது அவர்கள் வீட்டை வீட்டில் உள்ள பொருட்களை அவர்கள் ஆர்வம் கொள்ளும் விஷயங்களை கவனித்துக் கொள்வேன். ஒவ்வொருவரின் வீடும் ஊரின் ஒவ்வொரு பகுதியில் இருப்பதால் எல்லா வீடுகளையும் இணைக்கும் விதமாக குறைவான தூரம் கொண்ட பாதை எதுவாக இருக்கும் என யோசித்து வைத்திருந்தேன். நகர் பல வருடங்களுக்குப் பின் நான் யோசித்திருந்த சில தடங்களின் படி விரிவானது என்பது ஒரு சுவாரசியமான விஷயம். சிலர் அவர்கள் வீட்டில் விளைந்த கீரை அல்லது கிடாரங்காய் ஆகியவற்றைத் தருவார்கள். அவ்வாறு செல்லும் போது சினிமா போஸ்டர்களை வேடிக்கை பார்ப்பேன். அரசியல் போஸ்டர்களை படிப்பேன். அதன் வாசகங்கள் ஆர்வமூட்டுவதாக இருக்கும். மாலைப் பத்திரிக்கையின் செய்தி அறிவிப்புகளைக் காண்பேன். சில வீடுகளில் அவர்களின் சில சிக்கல்களுக்கு பெண்கள் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள். அவர்கள் கவலைகளைச் சொல்வார்கள். என்னிடம் ஏன் சொல்கிறார்கள் என்று தோன்றும். நான் பரீட்சையில் என்ன மதிப்பெண் எடுத்தேன் என்று விசாரிப்பார்கள். இன்னார் இன்ன விதமாக கேள்வி கேட்பார் என்ற புரிதலும் இன்னாரிடம் சொல்வதற்கு இன்ன கதை இருக்கும் என்ற தெளிவும் அந்த ஊர் சுற்றுகளின் மூலம் பெற்றேன். 

ஆயிரம் சூரியன்கள் உதிக்கின்றன

பூமியில் தினமும்
ஆயிரம் சூரியன்கள் உதிக்கின்றன
பிறர் பொருட்டு துயர் கொள்ளும் போது
பிறருக்காகப் பிராத்திக்கும் போது
பிறர் கண்ணீர் துடைக்க கரங்கள் எழுகின்ற போது
பிறருக்கு தன் வாழ்நாளின் பாதியை அளிக்கும் போது
பிறரின் வலியைக் குறைக்க முயற்சிக்கும் போது
பிறரின் துயர் மிகு கதைக்கு செவிகொடுக்கும் போது
பிறருக்காக கண்ணீர் சிந்தும் போது
பிறருக்காக எல்லா முயற்சிகளும் செய்யும் போது
பிறர் என்று யாரும் இருக்க முடியாது என்று உணர்கிற போது

பூமியில் தினமும்
ஆயிரம் சூரியன்கள் உதிக்கின்றன

நீ என்னை அறிவாய்

நீ என்னை அறிவாய்
ஒரு சிறுவன் போல
நான் திக்கித்  திணறுவதை
உனக்காக
அங்கும் இங்கும் அலைவதை
உன் முகம் மலர
செயல்கள் பல ஆற்றுவதை
உன்னை
எப்போதும் ஒரு விண்மீனாய் நினைப்பதை
உனது ஒவ்வொரு சீரடிகளின் வண்ணங்களையும்
சேகரித்துக் கொள்வதை
உன்னை
எப்போதும் கேட்கும் இசையாக
எண்ணிக் கொள்வதை
உன்னிடம்
அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்டிருப்பதை

நீ என்னை அறிவாய்

Tuesday 5 February 2019

இன்றென இருத்தி

நீ
இன்றைக்கு இருப்பதைப் போல
என்றைக்கும் இரு
மாசற்ற தூய்மையாக
சிறியன எண்ணாத சிந்தையுடன்
உற்சாகமாக சிரித்த முகத்துடன்
இதம் அளிக்கும் இன்சொற்களுடன்
மிதக்கும் இனிமை போல நடந்து கொண்டு
எப்போதும்
உன்னைச் சுற்றி சந்தோஷம்
பரவச் செய்து
உடன் இருப்பவர்கள் துயருக்கு
ஆறுதல் அளித்துக் கொண்டு

நீ
இன்றைக்கு இருப்பதைப் போல
என்றைக்கும் இரு

உன் ஞாபகம் வருவதுண்டு

உன் ஞாபகம் வருவதுண்டு
தவிட்டுக் குருவி ரியர் வியூ ஆடியை கொத்திக் கொண்டிருக்கும் போது
பகலில் அணிலின் கிரீச்சிடல் கூடத்தில் கேட்கும் போது
குழந்தைகள் பள்ளிப் பேருந்துக்கு காத்து நிற்கையில்
மழை ஓயாமல் பெய்யும் போது
அதிகாலைப் பனியில் நடந்து செல்லும் போது
உதயத்தின் ஒளி காணும் போது
தற்செயலாக வான் பார்க்கும் போது
மாடியில் நட்சத்திரங்களுக்குக் கீழே இருக்கும் போது
தென்றல் வீசிச் செல்லும் போது
பெருங்கடல் முன் நிற்கும் போது
ஆற்றில் மூழ்கி எழும் போது

உன் ஞாபகம்
உன் ஞாபகம் வருவதுண்டு

கிருஷ்ண முரளி - 4

இந்த ஆற்றின் கரையில்
படித்துறையில்
நதி ஈரம் நிரம்பிய மென்காற்றில்
புனல்
சுழித்துப் புன்னகைக்கையில்
உன் மலர்ச்சிரிப்பை
நினைக்கிறேன்
தூய அச்சிரிப்பின் ஒளியில்
என் அகத்தை வைக்கிறேன்
உன் இதழ் அறியும்
மூங்கில் இசை
காற்றில் கரைவது போல்
இக்கணத்தில்
நிறைந்து
இல்லாமல் ஆகிறேன்

கிருஷ்ண முரளி - 3

என் அன்பின் மலர்களில்
உறைகிறது
உனக்கான குளிர் இளம் தேன்
உன் இசையின் மாயம்
ஹிருதயத்தில்
ஊறச் செய்கிறது
இனிமையின் பரவசங்களை
உன் கருணையில்
நீர்மை கொள்கின்றன
என் விழிகள்
உன் முடிவிலா அன்பில்
கரைந்து கொண்டேயிருக்கிறேன்
கணம் கணமாய்

Monday 4 February 2019

வான் அகப் பறவைகள்

ஹரித்வாரிலும் ரிஷிகேஷிலும்  கங்கையைப் பார்ப்பது என்பதே நாள் முழுதுக்குமான செயல்பாடு. காலை கங்கையில் நீராடி விட்டு ஒரு படித்துறையில் அமர்ந்து கொண்டால் கங்கையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நதிச்சுழிகள் உருவாகும். நீரோட்டத்தின் போக்கு அவ்வப்போது மாறும். மலையகப் பகுதிகளுக்கு உரிய திடீர் மௌனம் கவியும். எங்கோ ஒரு சிற்றாலயத்தில் ஒலிக்கும் மணியோசை கேட்கும். திடீரென ஒரு சாமியார் கும்பல் ஜெய் ஸ்ரீ ராம் என்பார்கள். அதற்கு மறுமொழியாக இன்னொரு குழு பஜ்ரங் பலி கி ஜெய் என்பார்கள். கங்கையைப் பார்க்க பார்க்க இராமாயணம் நினைவுக்கு வரும். காளிதாசன் நினைவுக்கு வருவான். மகாத்மா நினைவுக்கு வருவார். கங்கையைப் பார்ப்பதும் பார்த்து ஊர் திரும்பியதும் கங்கை நினைவுகளை மீட்டிக் கொண்டு ஊரில் வாழ்வது என்பதும் ஒரு கொடுப்பினை. நினைக்கும் போது இப்போதே கிளம்பிச் சென்றால் என்ன என்று தோன்றாமல் ஒரு நாளும் இருந்ததில்லை. நான் கங்கையின் முழுத்தடத்தையும் கண்டவனல்ல. காவிரியின் தடத்தை ஓரளவு கண்டிருக்கிறேன். எனக்கு கங்கை என்றால் இப்போது ஹரித்வாரும் ரிஷிகேஷும் தான்.

அதுல் அறிவுரைப்படி ரிஷிகேஷில் சுற்றி விட்டு ஹரித்வார் திரும்பிக் கொண்டிருந்தேன். அது ஒரு ஷேர் ஆட்டோ. ஹரித்வாருக்கு நான்கு கிலோ மீட்டருக்கு முன்னால் இறக்கி விட்டு விட்டு ஒரு சிறு மலைக் கிராமத்துக்கு வாகனம் சென்று விட்டது. 

அந்த கணம் என் கண் முன் ஒரு மலை. அந்த மலையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு கருமேகங்கள் தம்மைத் திரட்டிக் கொண்டிருந்தன. இமயமலைப் பகுதிகளில் சட்டென மேகம் உருவாவதும் மேகம் உருவானதும் ஒரு சிறு மழை பொழிவதும் இயல்பான காட்சிகள். அப்போது அங்கே ஒரு சிறு மழை பெய்தது. நான் நின்றிருந்த சாலைக்கும் என் முன்னால் சற்று தொலைவில் இருந்த மலைக்கும் இடையே அளவில் மிகப் பெரிய மரம் ஒன்று இருந்தது. நான் அந்த மலையையும் மரத்தையும் பார்த்துக் கொண்டு மழையில் நனைந்து கொண்டு நின்றேன். அம்மழை என்னைப் பரிசுத்தமாக்கிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டேன். மழை விட்டதும் அம்மரத்திலிருந்து ஒரு பறவை வெளிப்பட்டு வான் நோக்கி எழுந்தது. அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பறவைகள் வான் மேலெழுந்தன. அத்தனை பறவைகள் அம்மரத்தில் இருந்திருக்கக் கூடும் என எவராலும் எண்ண முடியாது என்னும் அளவு அவை மழையின் போது ஓசையற்று இருந்தன. அவை எழுந்ததின் விளைவாக அம்மரத்தின் இலைகளிலிருந்து மழைநீர் ஓயாமல் சொட்டிக் கொண்டிருந்தது. முதலில் பறந்த பறவை ஒரு சுற்று சுற்றி வட்டமிட்டது. 

அந்த கணத்தில் என் மனதில் ஓர் எண்ணம் உருவானது. அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் அதில் இமயமலையின் ஒரு பறவையாகப் பறந்து இமயத்தின் சாரலில் சிறகடிக்க வேண்டும் என.

இயல்பு

ஒரு மலருக்கு
தான் மலராய் இருப்பதன்
தர்க்கங்கள்
தெரிவதில்லை
அந்திப் பொழுது
ஒப்பனைகளில்
ஆர்வமோ
நம்பிக்கையோ
கொள்வதில்லை
புகையும்
எரிமலைக் குழம்புகள்
குளிர்ந்து விடவே
விரும்புகின்றன
தன் இயல்பில் இருக்கிறது
தண்ணீர்
தாகம் தீர்த்துக் கொண்டு

Sunday 3 February 2019

கிருஷ்ண முரளி - 2

உனது இருப்பு
சந்தனக் குளிர்ச்சி கொண்ட காற்றாக
ஆதுரம் அளிக்கிறது
வெண்மதியென
ஒளி வீசுகின்றன
உனது நினைவுகள்
மூழ்கிய நதியில்
விழி திறக்கும் போது
காணும் அலைவுகளாய்
உனது இசை
அலைக்கழிக்கிறது
நீ நிறைந்திருக்கும்
காற்றை
சுவாசிக்கும் தோறும்
வான் அகங்கள் நோக்கி
பறக்கிறது
என் அகப் பறவை

Friday 1 February 2019

கிருஷ்ண முரளி - 1

உனது இசை
கடக்கச் செய்கிறது
பழகியிருக்கும் பெருந்தொலைவுகளை
படிந்து போயிருக்கும் மனநிலைகளை
சாதாரண அன்றாடத்தின் மாறா சலிப்பை
உனது இசை கேட்ட
முதல் கணம்
என் அகத்தில் உணர்ந்தேன்
என் நதியில் ஓடும் நீரின் மென்னோசையை
என் பூங்காக்கள் மலரத் துவங்குவதை
நீ
நதிகளால் ஆன நதியாக
ஓடிக் கொண்டிருந்தாய்
தயக்கத்தால் முகம் கவிழும்
என் கரம் பற்றி இழுக்கிறாய்
என் அகம் மாறியிருப்பதை
அவ்வப்போது உணர்கிறேன்
உனது இசை
என்னை அன்பின் பெருங்கடலில்
மூழ்கச் செய்கிறது
நான் உனக்கு
கண்ணீரை அர்ப்பணிக்கிறேன்
என் அன்பின் கண்ணீரை
என் பிரியங்களின் கண்ணீரை
என் உணர்வின் கண்ணீரை
தன் சிறகுகளை
சிலுப்பிக் கொள்ளும்
சிட்டுக்குருவியைப் போல்
துடிக்கும் உயிர் கொண்ட
கண்ணீரை