Monday 30 November 2020

சிறப்புகள்

1. ’’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் நுண் செயல்பாடுகள். காந்திய வழிமுறையை அடிப்படையாய்க் கொண்டவை. ஒரு சிறிய அலகுக்குள் கூட்டுச் செயல்பாட்டை நிகழ்த்த யத்தனிப்பவை. 

2. ஒரு சிறிய அலகுக்குள் நிகழ்த்தப்படும் நுண் செயல்பாடாக இருப்பினும் பெரிய அலகுகளுக்கும் பொருத்தமானவை. உதாரணமாக நாம் இப்போது ஒரு கிராமத்தில் முன்னெடுக்கும் விஷயத்தை சில அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டு சற்று பெரிய அளவில் விரிவாக்கி முன்னெடுக்க முடியும். 

3. விவசாயிகள் நலன் என்பதில் பிரதானமானது விவசாயிகளின் பொருளியல் நலனே. அவர்களுக்குப் பொருளியல் நலன் கிடைக்க அவர்கள் கையில் இருக்கும் நிலத்தின் மூலம் அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வேண்டும். 

4. கூடுதல் வருமானம் சிறு முயற்சியினூடாக அடைய இயலுமென்றால் அதுவே முன்வைக்கப்பட வேண்டும். அது மாற்றத்துக்கான ஒரு நல்ல தொடக்கமாக அமையும். வயல் வரப்புகளில் தேக்கு மரம் வைக்கச் சொல்லும் வழிமுறையை நாம் அவ்வாறான ஒன்றாகவே காண்கிறோம். 

5. விவசாயிகள் இப்போது மேற்கொள்ளும் எந்த விவசாய வழிமுறையிலும் நாம் தலையிடுவதில்லை. அவர்களிடம் ஒரு வேண்டுகோள் மட்டுமே முன்வைக்கப்படுகிறது. ‘’உங்களுக்குச் சொந்தமான வயல் வரப்பில் தேக்கு மரம் நடுங்கள். 15 ஆண்டுகளில் உங்களுக்கு மிகப் பெரிய வருமானம் கிடைக்கும்.’’
அ 
6. தமிழ்நாட்டில் 12,500 கிராமங்கள் இருக்கின்றன. அதில் ஒரு கிராமமாவது விவசாயம் சார்ந்து பொருளியல் தன்னிறைவுக்கு அருகில் இருக்க வேண்டும். 

7. ஒரு வருடத்தில் இரண்டு போகம் நெல் பயிரிடுதல் என விவசாயிகள் மனம் பழகி விடுகிறது. மற்ற எதிலும் அவர்கள் மனம் முனைப்பு காட்டுவதில்லை. அதனை அவர்களுக்குச் சுட்டிக் காட்டி அவர்கள் செயல் புரிய சாதகமான சூழலை உருவாக்க வேண்டும். 

8. ஒரு கிராமத்தின் மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்கள் நலனுக்கு அவர்கள் செய்ய வேண்டிய விஷயத்தை ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறோம். அனைவரும் இந்த வேண்டுகோளை ஏற்று செயல் புரிய முன்வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட நாளில் முழு கிராமமும் ஒரு செயலில் பங்கேற்கும் போது அச்செயல் மேலும் அடர்த்தி கொள்கிறது. தொடர்ச்சியாக அது குறித்த உரையாடல்கள் கிராம மக்களுக்குள் நிகழ்வதால் அவர்கள் செயலின் அவசியத்தை மனதளவில் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். 

9. அவர்களுக்கு நலன் பயக்கும் ஒரு விஷயத்தை வேண்டுகோளாக முன்வைப்பது மட்டுமே நம் பணி. மற்ற அனைத்தும் கிராம மக்களாலேயே நிகழ்கிறது. 

10. ஒரு கிராமத்தை முழுமையாக அணுகி முழுமையாக செயல் நிகழும் வரை கவனம் கொடுப்பதே ‘’காவிரி போற்றுதும்’’ மின் சிறப்பு. 

11. இத்தனை நாட்கள் ஒரு கிராமத்தில் பணி புரிந்ததில் நிகழ்ந்தது என்ன எனில்

அ. ஒரு கிராமம் கிராம நலனுக்காக ஒற்றுமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியை ‘’காவிரி போற்றுதும்’’ முன்னெடுத்துள்ளது. 

ஆ. இந்த அடித்தளத்தைக் கொண்டு விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை முன்னெடுக்க முடியும். 

இ. கிராமத்தின் அழகியல் சார்ந்த விஷயங்களை முன்னெடுக்க முடியும். 

12. ஒற்றுமையால் எதையும் சாதிக்க முடியும். ஒற்றுமையே எதையும் சாதிக்கும்.

Sunday 29 November 2020

நமது செயல்முறை

நவம்பர் 6ம் தேதி அன்று, செயல் புரியும் கிராமத்தில், மாலை 6.15 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஏழு தீபங்கள் ஏற்றுமாறு அந்த கிராமத்தின் மக்களை கேட்டுக் கொண்டோம். அன்று காலை, கல்லூரிப் பேராசிரியரான எனது நண்பர் என்னை அலைபேசியில் அழைத்தார்.  எனது முழு எண்ணமும் மாலை நிகழ்ச்சியை நோக்கியே இருந்தது. அது குறித்து அவரிடம் சொன்னேன். 

‘’பிரபு! என்ன சொல்றீங்க? ஒரு முழு கிராமமும் சேர்ந்து இந்த விஷயத்தைச் செய்வாங்களா? இது சாத்தியம் தானா? என்னால நம்பவே முடியல. எப்படி நீங்க சொல்றதை எல்லாரும் கேக்கறாங்க?

***

நவம்பர் 6ம் தேதி மதியம் ஒரு ஃபோட்டோகிராஃபரை ஏற்பாடு செய்து கொண்டேன். முழு கிராமமும் பங்கெடுக்கும் நிகழ்ச்சி என்பதால் அது ஆவணப்படுத்தப்பட வேண்டும் என எண்ணினேன். ஒளி மிக்க நிகழ்வு என்பதாலும். 

நான் அவரை எனது டூ-வீலரில் பின்னால் உட்காரவைத்துக் கொண்டு அந்த கிராமத்தினுள் நுழைந்தேன். 

என்னைப் பார்த்துக் குழந்தைகள் கையசைத்தனர். இளைஞர்களும் முதியவர்களும் நலம் விசாரித்தார்கள். பலரும் புன்னகைத்தனர். 

‘’சார்! இந்த ஊர்ல எல்லாருக்குமே உங்களைத் தெரிஞ்சுருக்கு. உங்களுக்கும் எல்லாரையும் தெரிஞ்சிருக்கு சார். பல பேரை பேர் சொல்லி கூப்பிடறீங்க. ஆச்சர்யமா இருக்கு சார்!’’

நிகழ்வு முடிந்து ஊர் திரும்பும் போது ஃபோட்டோகிராஃபர் சொன்னார்.

‘’சார்! நான் எத்தனையோ நிகழ்ச்சியைப் படம் எடுத்திருக்கன். ஆனா ஒரு முழு கிராமமும் சேர்ந்து செஞ்சிருக்க இந்த விஷயம் வாழ்க்கைல மறக்க முடியாதது சார்.’’

***

நிகழ்வு முடிந்து இரண்டு நாட்கள் கழித்து அந்த ஊரின் இளைஞன் ஒருவன் என்னிடம் கேட்டான்:

‘’நவம்பர் 6ம் தேதி ஊரோட எல்லா தெருவுக்கும் போய் பார்த்தேன். எல்லாரும் அகல் விளக்கு ஏத்தியிருந்தாங்க. எல்லாரும் உங்களுக்குப் பழக்கமா சார்?’’

‘’எப்படி நான் ஒனக்குப் பழக்கமோ அதே மாதிரி எல்லாரும் எனக்குப் பழக்கம் தானே தம்பி?’’ நான் கேட்டேன். 

***

மூன்று உரையாடல்கள். 

இவை எழுப்பும் கேள்வி ஒன்றுதான்.

இது எப்படி சாத்தியம்?

***

ஒரு கிராமம் என்பது 450 குடும்பங்கள். நான் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வேன். என்னை அறிமுகப்படுத்திக் கொள்வேன். ‘’நாங்கள் நாலு பேர். எங்களுக்கு மரக்கன்றுகளை அதிக அளவில் வளர்க்க ஆசை. விவசாயிகளான உங்களுக்குத் தேவையான மரக்கன்றுகளை நாங்கள் வழங்குகிறோம். நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்’’ என்று சொல்வேன். விவசாயிகளின் வருமானம் பெருக வயல் வரப்புகளில் தேக்கு மரம் வளர்க்குமாறு சொல்வேன். அவர்களுக்கு எவ்வளவு வயல் இருக்கிறது என்பதைக் கேட்டு அறிவேன். அவர்களின் வயல் பரப்புக்கு ஏற்ப எத்தனை மரங்கள் தேவைப்படும் என்பதை கணக்கிட்டுச் சொல்வேன். மரப்பயிரின் நன்மைகள் குறித்து சொல்வேன். ஒரு குடும்பத்துக்கு சராசரியாக 15 நிமிடம் ஆகும். எனினும் அந்த உரையாடலில் ஒரு நல்ல புரிதல் உருவாகி விடும். பரஸ்பரம் மரியாதையும் நல்லெண்ணமும் உருவாகும். ஒரு கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளையும் முழுமையாக நிறைவு செய்ய ஒரு வாரம் ஆகும். அந்த ஒரு வாரத்தில் கிராமத்தில் உள்ள அனைவருமே நண்பர்களாகி விடுவர். 

பின்னர் மரக்கன்றுகள் வழங்குவோம். எப்படி நட்டுள்ளார்கள் என்று அவர்கள் வயல்களுக்குச் சென்று பார்ப்பேன். ஆலோசனைகள் வழங்குவேன். 

வன்னி, வில்வம், இலுப்பை, ஆல், அரசு போன்ற மரங்களை பொது இடத்தில் நட்டு வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து சொல்வேன். அதற்குத் தேவையான உதவிகளை கிராம மக்கள் வழங்குவார்கள். 

ஒரு பெண்மணி தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது. அதில் என்ன பயிரிடலாம் என்று கேட்டார். 

சில இளைஞர்கள் வேலை வாங்கித் தருமாறு கேட்டனர். அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சிறிதும் பெரிதுமாக இன்னும் பல சம்பவங்கள். 

***

இன்று காலை, செயல் புரியும் கிராமத்துக்குச் சென்று அங்குள்ள ஆலயத்தில் ஏழு தீபங்கள் ஏற்றினேன். 

வீதிக்கு ஒருவர் என சிலரிடம், அவர்கள் வீட்டுக்குச் சென்று,  அடுத்த கிராமத்தில் கணக்கெடுப்பைத் துவக்க உள்ளதைச் சொன்னேன். 

‘’சார்! அடுத்த கிராமத்துக்குப் போய்ட்டா இனிமே எங்க கிராமத்துக்கு அடிக்கடி வர மாட்டீங்களா?’’

’’அடுத்த கிராமம் உங்க கிராமத்துக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னாடி இருக்கு அவ்வளவுதான். என்னோட ஃபோன் நம்பர் உங்க எல்லார்ட்டயும் இருக்கு. எப்ப என்ன விஷயம்னாலும் எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் உடனே வருவேன். ‘’

*

Saturday 28 November 2020

அனந்தம்

நாளை திருக்கார்த்திகை. நாடெங்கும் மாலை அந்தியில் தீபங்கள் மலரக் கூடிய தினம். நாளை காலை, செயல் புரியும் கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள ஆலயத்தில் ஏழு தீபங்கள் ஏற்றி விட்டு ‘’காவிரி போற்றுதும்’’ செயலின் அடுத்த படியான ‘’பத்து கிராமங்கள்’’ என்னும் இலக்கை நோக்கி நகர உள்ளோம். திருக்கார்த்திகை அந்தியன்று செயல் புரியும் கிராமத்தில் இருக்க வேண்டும் என எண்ணினேன். எனினும் நாடெங்கும் தீபம் ஏற்றப்படும் அத்தினத்தில் ஒரு செயல் தொடக்கத்தை நிகழ்த்துவது மேலும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. எனவே காலை அந்தியில் அங்கு சென்று தீபம் ஏற்றி விட்டு அடுத்த கிராமத்தின் கணக்கெடுப்புப் பணியைத் துவக்குகிறேன். கணக்கெடுப்பு காலை 6 மணிக்குத் துவங்கும். மாலை 4 வரை கணக்கெடுப்பு நிகழும். ஒரு நாளைக்கு 70 வீடுகளைல் உள்ள விவசாயிகளைச் சந்திக்க முடியும்.  ஒரு கிராமம் என்பதில் 500 வீடுகள் இருக்கும். முழுமையாகக் கணக்கெடுக்க ஒரு கிராமத்துக்கு ஒரு வாரம் தேவைப்படும். அடுத்த இரண்டு மாதத்தில் பத்து கிராமங்களுக்கான கணக்கெடுப்பை மேற்கொண்டிட திட்டமிட்டுள்ளோம்.

மாலைப் பொழுதில் ஐந்து மணி அளவில் வீடு திரும்பி சொந்த வேலைகளைப் பார்த்துக் கொள்ளலாம். ஒரு தீவிரமான பணியில் ஈடுபடுத்திக் கொள்ளும் போதே நம்மால் பல செயல்களை மிக இயல்பாக ஆற்ற முடியும் என்பதே நடைமுறை உண்மை. நான் அதை என் ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ மோட்டார்சைக்கிள் பயணத்தில் உணர்ந்திருக்கிறேன். ஒரு முழுநாள் பயணம் முடித்த பின்னரும் மனம் மிக உற்சாகமாக இருக்கும். புதிது புதிதாக பல எண்ணங்கள் தோன்றும். பெரும் நம்பிக்கை பிறக்கும். அடுத்த நாள் மேலும் புதிய இடங்கள் மேலும் புதிய மனிதர்கள் என தீரா ஊக்கம் பிறக்கும். 

நேற்றும் இன்றும், கணக்கெடுக்க உள்ள கிராமத்தின் வீதிகளை பார்வையிட்டு வந்தேன். நம் உள்ளுணர்வே அங்கே எவ்விதம் பணியை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என வழிகாட்டி விடும். 

ரிஷிகேஷின் மாலை அந்தி நினைவில் எழுகிறது. மகாநதியின் கரையில் மானுடர் தொன்னையில் மலருடன் தீபங்களை மிதக்க விடுவர். 

நாளை, ஒரு சிறு தீபத்தை மகாநதிக்கு அர்ப்பணிக்கிறேன். 



Friday 27 November 2020

ஒரு துளி

 உன் இசை
கரைக்கிறது
நினைவுகளை
எண்ணங்களை
இயல்புகளை
உன் இசை நிறைகையில்
உயிர் மட்டுமே இருக்கிறது
அதற்கு
வடிவங்கள் இல்லை
வேற்றுமைகள் இல்லை
காலம் இல்லை
வெள்ளக் கருணையில்
ஒரு துளி மழை
விழுகிறது 

Thursday 26 November 2020

ஆதலால் செயல் புரிக


ஒரு நற்செயல் அடுத்த நற்செயலுக்கு வழிகோலுகிறது. செயலில் தீவிரமானவன் முழுமையாகக் களத்தில் நிற்கிறான். களத்துக்குத் தன்னை முழுதளிக்கிறான். செயலுக்குத் தன்னை முழுதளித்தோம் என்பதே செயல்பாட்டாளன் கொள்ளும் நிறைவு. 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் ஒரு கிராமத்தில் துவங்கின. நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திட்டமிட்டபடி, 20,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஒரு குறிப்பிட்ட கிராமத்துக்கு - கிராமத்தில் உள்ள எல்லா விவசாயிகளுக்கும் வழங்கினோம். மரக்கன்றுகள் நல்ல முறையில் வளர்ந்து வருகின்றன. அந்த கிராமத்தின் மக்கள் அனைவருமே எங்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள். அன்பு காட்டுகிறார்கள். பிரியமாய் இருக்கிறார்கள். உரிமையுடன் பல விஷயங்களைச் சொல்கிறார்கள் ; கேட்கிறார்கள். ஒற்றுமையையும் கூட்டுச் செயல்பாட்டையும் உணர்த்தும் விதமாக, நாம் கேட்டுக் கொண்டவாறு,  ஊரில் உள்ள எல்லா வீட்டு வாசலிலும் 06.11.20 அன்று மாலை 6.15 மணிக்கு 7 தீபங்கள் ஏற்றினார்கள்.


தீபம் ஏற்றும் நிகழ்வையடுத்து, கிராமத்துக்கு மேலும் செய்யக்கூடிய பணிகளைச் செய்ய முடிவெடுத்துள்ளோம். ஒரு கிராமத்தின் தேவைகள் பெரியவை. எனினும் தொடர்ந்து முயல்வது என்று முடிவெடுத்துள்ளோம். 

அந்த கிராமத்தில் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் பயன் தரும் மரங்களை நடுவது என்றும் அவற்றை ஓராண்டு வரை தண்ணீர் டேங்கர் மூலம் நீர் ஊற்றி பராமரிப்பது என்றும் முடிவெடுத்துள்ளோம். அந்த ஊருக்குப் புதிதாக வரும் எவருக்கும் மற்ற ஊர்களுக்கும் அந்த ஊருக்கும் உள்ள வித்யாசம் உடனடியாகக் கண்ணில் பட வேண்டும். இது எப்படி சாத்தியமானது என்று எவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

மரங்கள் வளர்ந்து, பூக்கள் பூத்து, கனிகள் நிரம்பியிருக்கும் ஒரு கிராமமோ நகரமோ பெருநகரமோ அதில் வாழும் மக்களின் மனத்தில் இனிமையை நிறைக்கின்றன. 

செயல் புரியும் கிராமத்தில், பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அக்கிராமத்தின் பக்கத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எப்போது எங்கள் கிராமத்தில் செயல் புரியப் போகிறீர்கள் என ஓயாது கேட்ட வண்ணம் இருக்கின்றனர். மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, ‘’காவிரி போற்றுதும்’’ தனது அடுத்த படியை எடுத்து வைக்கிறது. 

இந்த முறை பத்து கிராமங்களில் நாம் செயலாற்ற இருக்கிறோம். 

ஒரு கிராமத்தில் முழுமையாகச் செயலாற்றிய அனுபவம் இருப்பதால் அதனைக் கொண்டு பணியை பத்து கிராமங்களுக்கு விரிவாக்கிச் செல்லலாம் எனத் திட்டமிட்டுள்ளோம். 

இலக்கு பெரிது; எனினும் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கிறோம்.

’’ஆதலால் செயல் புரிக’’ என்கிறது கீதை. 

 

Wednesday 25 November 2020

மழை மலர்


அப் பொழுதில் மலர்ந்த மலர்கள்
தடாகத்தில்
சற்று முன் பூத்த பூக்களிடம்
கேட்டன
‘நண்பர்களே! நண்பர்களே!
மழை நிறைக்கும் இந்நாளில்
சாலையில்
ஏன்
மனிதர்கள் இல்லை?’
‘அவர்கள் இல்லங்களில் இருக்கிறார்கள்’
‘இல்லங்களில் இருந்து மழையைப் பார்ப்பார்களா?’
பூக்கள் மௌனித்திருந்தன
‘’வானும் மழையும் நீரும் இனிதல்லவா?’’
பூக்கள் ஆம் என்றன. 

Monday 23 November 2020

ஊற்று

செயல் புரியும் கிராமத்தில், சென்ற புதனன்று, ஒரு வீதியில் உள்ள வீடுகளுக்கு அலரி மரக்கன்றுகளை வழங்கிய போது சில கன்றுகள் அதிகம் இருந்தன. அவற்றை அந்த வீதியில் இருக்கும் பிள்ளையார் கோவிலின் எதிரில் நட்டு விடலாம் என அந்த வீதிவாசிகள் அபிப்ராயப்பட்டனர். அந்த கன்றுகளை நான் நட வேண்டும் என விரும்பினர். நான் அவற்றை நட்டேன். நட்ட பின் அவற்றுக்கு நீர் ஊற்ற விரும்பினேன். அங்கே ஒரு கை பம்ப் ஒன்று இருந்தது. அது பயன்பாட்டில் இல்லை. சற்று தள்ளியிருந்த வீடொன்றிலிருந்து வாளியில் நீர் எடுத்து வந்து ஊற்றினோம். 

கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள வீட்டின் பெண்மணி, சற்று தயக்கத்துடன், ‘’சார்! ஒரு விஷயம்’’ என்றார். 

‘’என்னம்மா! சொல்லுங்க. என்ன விஷயம்?’’

‘’பிள்ளையார் கோவில் இங்க ரொம்ப வருஷமா இருக்கற கோயில் சார். அர்ச்சகர் ஒருத்தர் தினமும் வந்து பூஜை பண்றார். பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய தண்ணீ வேணும்னு கொஞ்சம் வருஷம் முன்னால கை பம்ப் போட்டோம். திடீர்னு வேலை செய்யாம போச்சு. அர்ச்சகர் தினமும் குடத்தை எடுத்துட்டு கொஞ்சம் தள்ளியிருக்கற வீட்டுக்குப் போய் தண்ணி கொண்டு வர்ரார். இந்த பம்ப்-பை சரி பண்ணி கொடுங்க சார். நீங்க வச்ச கன்னுக்கு  நான் தினமும் தண்ணி ஊத்தறன். சாமி காரியத்துக்கு ஒத்தாசை செஞ்சதாவும் இருக்கும்’’

‘’ராம் கிருஷ்ண ஹரி’’ என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். 

‘’என்னால என்ன செய்ய முடியும்னு அவசியம் பாக்கறேன் அம்மா”

கட்டிட வேலையில் எங்கள் முதல் பணி ‘’போர்வெல்’’ போடுவது. பிளாட்டின் வடகிழக்கு மூலையில் போர்வெல் அமைத்து ஹேண்ட் பம்ப் பொருத்துவோம். மின் மோட்டார் பொருத்துவோம். மின் வெட்டு சமயத்தில் ஹேண்ட் பம்ப் கட்டுமானத் தேவைகளுக்கு உதவும். எங்கள் கட்டுமானப் பணியின் துவக்கம் என்பது ஹேண்ட் பம்ப். எந்த செயலும் தொடங்கும் போது முதலில் வணங்கப்படும் கடவுள் பிள்ளையார். இந்த பணியை எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்து முடிப்பது என்று முடிவு செய்தேன். 

பணியில் உதவும் பொறியியல் மாணவனான அக்கிராமத்தின் இளைஞனிடம் லோக்கல் பிளம்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு பம்ப்-ஐ சரிசெய்ய என்னென்ன உதிரி பாகங்கள் தேவை என்ற விபரத்தைக் கேட்டுக் கொள்ள சொன்னேன். இரண்டு நாட்களாக அந்த இளைஞனைத் தொடர்பு கொண்டு தேவைப் பட்டியல் என்ன என ஃபோனில் கேட்டு நான் எழுதிக் கொண்டேன். 

பட்டியல் என் கைக்கு வந்ததும் எனது நண்பரான கட்டிடப் பொறியாளர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். 

‘’பாஸ்! வணக்கம். பிரபு பேசறன்.’’

‘’வணக்கம் பிரபு. எப்படி இருக்கீங்க?’’

‘’நல்லா இருக்கன். எனக்கு ஒரு உதவி வேணும்’’

‘’சொல்லுங்க’’

‘’மரக்கன்னு நடறோம்ல அந்த கிராமத்துல ஒரு பழைய பிள்ளையார் கோவில் இருக்கு. அதுக்கு எதுத்தாப்ல ஒரு ஹேண்ட் பம்ப் வேலை செய்யாம கிடக்கு. பம்ப், பி.வி.சி பைப் மட்டும் வச்சுகிட்டு மத்த ஸ்பேர்ஸை கம்ப்ளீட்டா மாத்தணும். அர்ச்சகர் தினமும் 100 மீட்டர் தள்ளிப் போய் தண்ணீர் மொண்டுட்டு வர்ரார். சுவாமி காரியத்துக்கு உங்களோட சப்போர்ட் வேணும்.’’

‘’Rough-ஆ எவ்வளவு ஆகும்?’’

‘’அறுநூறு ரூபா ஆகும்?’’

‘’நோ இஷ்யூஸ். நான் கொடுத்துடறேன்.’’

ஜவுளிக்கடை வைத்திருக்கும் எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து பிளம்பரின் ஒருநாள் ஊதியத்துக்கான ஏற்பாட்டை உதவியாகக் கோரிப் பெற்றேன். 

நேற்று, ஞாயிற்றுக்கிழமை, எனது நண்பர் ஒருவரைக் கூட்டிக் கொண்டு பிளம்பிங் உதிரி பாகங்களை வாங்கி எடுத்துக் கொண்டு கிராமத்துக்குச் சென்றேன். பம்பின் அடிப்பகுதியில் இருக்கும் சிமெண்ட் தளத்தை உடைத்து வைத்திருக்கிறோம்; அதில் கான்கிரீட் போட்டு விட்டு , திங்கள் காலை பம்ப்-ஐ சரி செய்து விடலாம் என்று கூறினர். மீண்டும் இன்று காலை அங்கே சென்றோம். பம்ப் இயங்கும் நிலையில் இருந்தது. ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து அலரிக் கன்றுகளுக்கு ஊற்றி விட்டுக் கிளம்ப ஆயத்தமானோம். அந்த பகுதியின் மக்கள் அனைவரும் வந்து நன்றி தெரிவித்தனர். 

‘’நான் ஒன்னும் செய்யல அம்மா. இந்த மாதிரி விஷயங்கள் செய்ய ஆர்வமா இருக்கறவங்களுக்கும் உங்களுக்கும் நடுவில நான் ஒரு பாலமா இருக்கன்; அவ்வளவுதான்’’ என்றேன். 






நண்பன்

 



சில நாட்களாக, எனது வாகனம் டூ-வீலர் பட்டறையில் பழுது நீக்கப்பட்டுக் கொண்டிருந்தது. வாகனம் கையில் இல்லை என்றால் ஒரு கரம் இல்லாதது போல. 2016ம் ஆண்டு ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ பயணம் மேற்கொண்ட போது ஒரு நாளைக்கு சராசரியாக 250 கி.மீ வரை பயணிப்பேன். வாகனத்துக்கும் எனக்கும் மானசீகமான உரையாடல் ஒன்று நடந்து கொண்டிருக்கும்  (’படிக்காதவன்’ படத்தில் ரஜினி அவரது டாக்ஸியுடன் உரையாடுவது போல). எங்கள் உரையாடல் மௌனத்திலேயே நிகழும். 

மத்தியப் பிரதேசத்தில் ‘’காண்ட்வா’’ என்ற வனப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 120 கி.மீ தூரத்துக்கு மனித நடமாட்டத்தையே காண முடியவில்லை. தார்ச்சாலை இருப்பதும் பத்து கி.மீ தூரத்திற்கு ஒரு முறை ஒரு சில ஆட்டு மந்தைகளைக் காண முடிவதுமே மக்கள் அந்த பிரதேசத்தில் வசிக்கிறார்கள் என்பதற்கான நம்பிக்கையாக இருக்கும். வண்டியின் என்ஜின் ஓசை மட்டுமே துணையாய் இருக்கும். 

அப்போது, என் வாகனத்தை எண்ணி நான் கண்ணீர் சிந்தினேன். வாகனம் என் மீது காட்டும் அன்பு என்னை சிலிர்க்கச் செய்தது. ஓர் உற்ற நண்பனைப் போல என்னுடன் உடனிருக்கிறது. துணை நிற்கிறது. என்னிடம் எதையும் கேட்கவில்லை; மாறாக எனக்கு எவ்வளவோ கொடுக்கிறது என்பதை எண்ணிய போது நான் யாருக்காகவாவது அவ்வாறு இருந்திருக்கிறேனா என நினைத்துப் பார்த்த போது தன் மேலான பெருந்தன்மையால் என் வாகனம் மேலோங்கி நின்றது. 

பயணத்தில், ரயில்வே லெவல் கிராஸிங்-களில் ரயில் கடந்து செல்ல காத்து நிற்கும் போது, அந்த சாலைகளில் அதிகமாக பயணிக்கும் டிரக்-களின் கிளீனர்கள் குத்தூசி ஒன்றை வைத்துக் கொண்டு லாரி டயர்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு கற்களை எடுத்து விடுவார்கள். நானும் என்னுடைய வாகனத்தின் டயரில் ஒட்டியிருக்கும் சிறு கற்களை வாகனத்தை செண்டர் ஸ்டேண்ட் போட்டு எடுத்து விடுவேன். ‘’கொல்லுப் பட்டறையில் ஈ-க்கென்ன வேலை’’ என்பது போல டிரக் டிரைவர்களும் கிளீனர்களும் என்னைப் பார்ப்பார்கள். 

தாபாக்களில் இரவில் தங்கும் போது , டூ-வீலரை பார்க் செய்து விட்டு என்னுடைய பயணப்பையை கயிற்றுக் கட்டிலில் வைத்து விட்டு மீண்டும் நேராக வாகனத்திடம் வருவேன். ஒரு துணியால் வண்டியைத் தூய்மையாகத் துடைத்து வைப்பேன். துடைத்து முடித்ததும் வாகனம் என்னிடம் அடுத்தது எங்கே போகிறோம் என்று கேட்கும். நன்றாக ஓய்வெடு; நாளை காலை 5.30க்கெல்லாம் கிளம்புவோம் என்று சொல்வேன். இரவு உணவு முடித்து விட்டு வாகனத்தை மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு செல்வேன். உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் மீது போர்வையை போர்த்தி விட்டுச் செல்லும் அன்னையைப் போல. 

Friday 20 November 2020

உன்னைப் பற்றி

உன்னைப் பற்றி
சொல்லும் போது
உனது மாசின்மையைச் சொல்கிறேன்
ஒளியாய் நிறையும்
உனது இயல்பைச் சொல்கிறேன்
உன் அகம் மலர்ந்த புன்னகையைச் சொல்கிறேன்
எவருடனும் பேசும் உன் சொற்களின் இனிமையைச் சொல்கிறேன்
நீ இருக்குமிடத்தில்
பரவும் அமைதியைச் சொல்கிறேன்
உனக்கு மட்டும் தெரிந்த
உன் துயரத்தின்
ஒரு துளி கண்ணீர் குறித்து
நான் 
ஏதும் சொல்லாமல்
மௌனமாய் இருக்கிறேன்

உயிர்

கண்ணே
நீ
எங்கோ இருப்பதாய் சொல்கிறார்கள்
அவர்களிடம் எப்படி சொல்வது
அங்கும்
பொன் ஒளிரும் காலைகள் இருக்கின்றன
அன்பு துளிர்க்கும் நிலம் இருக்கிறது
மென்காற்று
அடர் மழை
உச்சி வெயில்
நதிகள்
தடாகங்கள்
இந்த மண்ணில் எங்கும் உயிர் இருக்கிறது
நீ
எங்கும் உயிராக இருக்கிறாய்

Thursday 19 November 2020

உனக்கான மலர்

இன்றலர்ந்த மலரின்
இதழொன்றில்
ஒரு சின்னஞ் சிறு மழைத்துளி
ஒட்டிக் கொண்டிருக்கிறது
ஒளிர்கிறது

இன்றலர்ந்த மலரைக் கண்டு
முகம் மலர்கிறாள்
ஒரு சின்னஞ் சிறு சிறுமி

உனக்கு 
நான் அளிக்க விரும்புபவை
அனைத்துமே
நிகழ்கணத்தில் 
மலர்ந்து கொண்டிருக்கின்றன

என்னிடம் இன்றலர்ந்த
ஒரு சின்னஞ் சிறு மலர்
இருக்கிறது
அதை 
நான் சரியாக ஏந்தியிருக்கிறேனா
என்று தெரியவில்லை
எனினும்
அது உனக்கானது
உனக்கு மட்டுமேயானது
என்பதை
உணர்கிறேன் 

Wednesday 18 November 2020

பூக்களை ஏந்தித் திரிபவன்

தீபாவளிக் கொண்டாட்டம் முடிந்து ஊருக்கு அன்றாடம் திரும்பிக் கொண்டிருக்கிறது. சொந்த ஊருக்கு வந்தவர்கள் பணியிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். வெளியூர் சென்றிருந்தவர்கள் ஊருக்கு வருகிறார்கள். 

செயல் புரியும் கிராமத்தில், ஒவ்வொரு வீதியிலும் உள்ள ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு மலர் மரம் ஒன்றை வழங்க வேண்டும் என விரும்பினோம். எந்த மரக்கன்றை வழங்குவது என ஆலோசித்தோம். கிராமங்களில் வீட்டு வாசலில் நட்டால் ஆடு மாடு மேயாத செடியாக இருத்தலே உசிதம் என்பதால் அவ்வாறான செடி எது எனத் தேடினோம். 

’’அலரி’’ அவ்வகையான செடி என்பதால் அதனைத் தேர்ந்தெடுத்தோம். இப்போது எல்லா வீட்டு வாசலின் முன்னும் வைத்து விட்டால் இந்த மழைக்காலத்தில் நல்ல வளர்ச்சி பெறும். வீட்டு வாசலில் இருப்பதால் பெண்கள் வாசல் கூட்டி கோலமிடும் போது தண்ணீர் ஊற்றி விடுவார்கள். சிவன், முருகன், துர்க்கை பூசனைக்கு உகந்த மலர் என்பதால் பெண்கள் மேலும் அக்கறை காட்டுவார்கள். சில மாதங்களில் எல்லா வீட்டின் முன்னும் வைக்கப்பட்ட செடிகள் ஒரே சமயத்தில் பூக்கும் போது ஊரின் வீதிகள் அழகு பெறும் என எண்ணினோம். 

எனது நண்பர் ஒருவர் ஒரு வீதிக்குத் தேவையான மரக்கன்றுகளை வழங்க விரும்பினார். ஊரின் சிறிய வீதி ஒன்றில் 30 வீடுகளும் ஒரு விநாயகர் கோவிலும் இருந்தது. கோவிலுக்கும் சில கன்றுகளை வழங்க விரும்பினார். மொத்தம் 35 செடிகள். 

செடிகள் ஆடுதுறையில் நியாயமான சகாயமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை ஆடுதுறையிலிருந்து மயிலாடுதுறைக்கு வர வேண்டும். 20 கி.மீ தூரம். பின்னர் இங்கிருந்து கிராமத்துக்குச் செல்ல வேண்டும். எளிய பணி போல் தோன்றும். எனினும் இது அதிக நேரமும் உழைப்பும் எடுக்கும் என எனக்குத் தெரியும். திட்டமிட்டால்  சற்று எளிதாக்கலாம். யோசித்துப் பார்த்தேன். செடிகளை எடுத்து வைக்க பிளாஸ்டிக் டிரே இருந்தால் வசதியாக இருக்கும் என்பதால் பாக்கெட் பால் வினியோகம் செய்யும் என் நண்பர் ஒருவருக்குக் காலையிலேயே ஃபோன் செய்து 2 பால் டிரேக்கள் தேவை என்று சொன்னேன். அவர் கடைக்குச் சென்று எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். என்னுடைய வண்டி டூ-வீலர் பட்டறையில் பழுது நீக்க கொடுத்திருப்பதால் எனது தந்தையின் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றேன். என்னுடைய திட்டம் டிரேக்களை எடுத்துச் சென்று நண்பரின் வீட்டில் வைத்து விட்டு அரை மணி நேரத்தில் வருவதாகச் சொல்லி விட்டு அப்பா வண்டியை வீட்டில் கொண்டு வைத்து விட்டு நண்பர்கள் யாரையாவது பால் டிரேக்கள் உள்ள வீட்டில் ‘’டிராப்’’ செய்ய சொல்லலாம் என்று நினைத்தேன். கிளம்பும் போதே அம்மா ‘’தம்பி! டிஃபன் சாப்பிட வந்துடுவீல்ல’’ என்றார்கள். ‘’வந்துடுவன் மா. அரை மணி நேரத்துல வந்துடுவன்’’ என்றேன். 

நண்பரின் வீட்டுக்குச் சென்றேன். காலை 8.30 என நேரம் சொல்லியிருந்தேன். ஐந்து நிமிடம் முன்னதாகவே அவர் வீட்டிற்குச் சென்று விட்டேன். அவர் ஒரு சிறிய வேலை இருக்கிறது; நீங்கள் நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருங்கள்; 15 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி கிளம்பினார். நான் டிஃபன் சாப்பிட்டு விட்டு வருகிறேன் என வீட்டுக்குக் கிளம்பினேன். இதற்காகவா வீட்டுக்குப் போகப் போகிறீர்கள் ; இங்கேயே சாப்பிடுங்கள் என்று சொல்லி விட்டார். நான் வீட்டுக்கு ஃபோன் செய்து அம்மாவிடம் காலை டிஃபனுக்கு வர வாய்ப்பில்லை; 11 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவேன் என்றேன். நண்பர் சிறிது நேரத்தில் வந்து விட்டார். இருவரும் காலை உணவு அருந்தி விட்டு அவருடைய கைனடிக் ஹோண்டாவில் புறப்பட்டோம். அவர் வண்டியில் டிரேக்களை முன்னால் வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் அதனை எடுத்துக் கொண்டோம். நான் என் வாகனத்தை நண்பரின் வீட்டில் நிறுத்தி பக்கவாட்டுப் பூட்டைப் பூட்டினேன். 

ஆடுதுறையில் அலரிச் செடிகளை வாங்கிக் கொண்டோம். வழக்கமாக சற்று சிறிதாக இருக்கும் செடிகள் இம்முறை உயரமாக வளர்ந்திருந்தன. நண்பரின் வண்டியில் பெரிதாக வளர்ந்திருக்கும் செடிகளை வைக்க இடம் தோதாக இல்லை; சின்னதாக இருந்தால் சற்று அட்ஜெஸ்ட் செய்து வைத்திருக்கலாம்.  விதவிதமாக முயற்சி செய்தோம். முடியவில்லை. 

’’சார்! லாரி, டாடா ஏஸ் ஏதாவது வரும் சார். கேட்டுப் பார்ப்போம்’’

‘’நிறுத்தி ஏத்திப்பாங்களா பிரபு? சந்தேகம் தான்’’

‘’முயற்சி செய்து பார்ப்போம் சார்”

‘’சான்ஸ் ரொம்ப கம்மி பிரபு’’ என்று நண்பர் சொல்லி முடித்தார். அப்போது தூரத்தில் ஒரு லாரி வந்தது. நான் முன்னே சென்று கை காட்டி நிறுத்தினேன். 

டிரைவர் வண்டியை நிறுத்தினார். 

நான் டிரைவரிடம் சென்று, ‘’அண்ணன்! வணக்கம் அண்ணன். ஒரு கிராமத்துக்கு ஃபிரண்ட்ஸ் சேர்ந்து மரக்கன்னு கொடுக்கறோம். ரெண்டு டிரே இருக்கு. டூ-வீலர்ல எடுத்துட்டு போய்டலாம்னு பாத்தோம். கன்னு கொஞ்சம் வளத்தியா இருக்கு அண்ணன். வண்டி மயிலாடுதுறை போகுதான்னண்? வண்டில ஏத்தி விடறோம். ஊர்ல வந்து எடுத்துக்கறோம்’’ என்றேன். அது 3 யூனிட் லாரி. எந்த சரக்கும் ஏற்றப்படாமல் வெற்று இடமாக இருந்தது. 

‘’ஆமாம் மயிலாடுதுறை ரயிலடிக்குப் போகுது’’ என்றவாறு தன் சீட்டில் இருந்து கதவைத் திறந்து லாரி மீது ஏறி பின் பக்கம் வந்து பின்பக்கக் கதவின் சங்கிலிகளைத் தளர்த்தி கதவைத் திறந்து விட்டார். நான் டிரேக்களை ஏற்றி விட்டேன். 

நண்பருக்கு ஒரே ஆச்சர்யம். 

லாரி கிளம்பிச் சென்றது. நாங்கள் டூ-வீலரில் பின் தொடர்ந்தோம். 

‘’பொதுவா லாரி நிறுத்த மாட்டாங்க’’ நண்பர் சொன்னார்.

‘’சார்! நான் இந்தியா முழுக்க டிராவல் செஞ்சவன். நம்ம நாட்ல எல்லாருமே அவங்களால முடிஞ்ச உதவியை எல்லாருக்கும் செய்வாங்க. எல்லாரும் தேவைப்படறவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைப்பாங்க. இது என்னோட அனுபவம்’’

‘’ஆச்சர்யமா இருக்கு. உங்க காரையோ இல்லன்னா என்னோட காரையோ எடுத்துட்டு வந்திருந்தா ஈஸியா இருந்திருக்கும்’’

’’சார்! சுண்டைக்காய் கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணம் னு ஆகிடும்’’

மேம்பாலத்துக்கு அருகில் எங்களுக்குக்காகக் காத்துக் கொண்டிருந்தார் டிரைவர் அண்ணன். அவருக்கு நன்றி சொல்லி விட்டு டிரேக்களை பெற்றுக் கொண்டு நண்பரின் வீட்டுக்குச் சென்றோம். 

அப்படி இப்படி நேரம் 11.30 ஆகி விட்டது. இனி வீட்டுக்குச் சென்று விட்டு மதிய உணவு அருந்தி விட்டு மீண்டும் இங்கு வந்து பின்னர் இங்கிருந்து கிராமத்துக்குச் செல்வது என்பது எங்கோ தொலைதூரத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றியது. நண்பர் வீட்டிலிருந்தே கிராமத்துக்குச் செல்வது என முடிவு செய்தேன். 

எனது வாகனத்தில் சீட்டின் மேல் சில மரப்பட்டைகளை வைத்து அவற்றின் மேல் டிரே அமரும் வகையில் கயிறால் மிகத் திறமையாக நண்பர் கட்டினார். நான் கிட்டத்தட்ட பெட்ரோல் டேங்கின் மீது தான் அமர முடியும் என்ற நிலை. சாதாரணமாக அங்கு செல்ல முக்கால் மணி நேரம் ஆகும்; இப்போது ஒரு மணி நேரம் ஆகலாம் என்று எண்ணினேன். 

‘’சுபஸ்ய ; சீக்ரம்’’ என்ற வாக்கியம் உள்ளது. சுபமான விஷயங்களை உடன் செய்ய வேண்டும். தள்ளி வைக்கக் கூடாது. அதன் படி மக்களுக்குச் சென்று சேர வேண்டியதை எவ்வளவு விரைவாகத் தர முடியுமோ அவ்வளவு விரைவாக தந்து விட வேண்டும் என எண்ணினேன். புறப்பட்டேன். 

வழி நெடுக, சிறுவர்களும் சிறுமிகளும் பூச்செடிக் கன்றுகளைக் கண்டதும் என்னிடம் ஆர்வமாக சந்தோஷமாகக் கையசைத்தார்கள். எத்தனையோ பேர் பூச்செடிகளை டூ-வீலரில் வைத்து விற்கிறார்கள். அவர்களுக்கு எந்த குழந்தையும் சிறுவனும் சிறுமியும் மகிழ்ந்து கையசைப்பதில்லை; ஏன் என்னைப் பார்த்து மகிழ்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. எனக்கும் ஒரே சந்தோஷமாகி விட்டது. எந்த மனித முகமும் மகிழ்ச்சி கொள்ளும் போது மிக அழகாக இருக்கிறது. என் பணியில் நான் மகிழ்ச்சி கொண்ட பல முகங்களைப் பார்க்கிறேன். என் வாழ்வின் பேறு அது. 

என் அருகில் டூ-வீலரில் வந்த ஒருவர் , ‘’சார்! இவ்வளவு கன்னையும் உங்க வீட்டுத் தோட்டத்தில் வைக்கப் போறீங்களா?’’ என்றார். ‘’ஒரு கிராமத்தில் நடப் போறோம்’’ என பதில் சொன்னேன். 

பைய பைய வண்டியை ஓட்டியவாறு கிராமத்துக்குச் சென்று சேர்ந்தேன்.

அங்குள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் எல்லா மரக்கன்றுகளையும் நாங்கள் உத்தேசித்திருந்த சிறிய தெருவின் ஒவ்வொரு வீட்டிலும் வழங்கினோம். இன்றே வீட்டின் முன்னால் வைத்து விடுமாறு கேட்டுக் கொண்டோம். 

அந்த வீதியில் உள்ள வினாயகர் கோவிலில் சில செடிகளை என்னை நடுமாறு சொன்னார்கள். 

‘’தம்பி! இந்த டிரே ரெண்டையும் ரிமூவ் பண்ணாத்தான் என்னால வண்டியிலயிருந்து கீழ இறங்க முடியும்.’’ 

எம்ப்டி ட்ரேக்கள் கயிறு அறுக்கப்பட்டு வண்டியிலிருந்து எடுக்கப்பட்டன. நண்பர் வீட்டில் புறப்பட்டதிலிருந்து ஒன்றரை மணி நேரமாக வண்டியில் பெட்ரோல் டேங்கில் அமர்ந்திருந்த நான் கீழே இறங்கி ஆசுவாசமானேன். 

மரக்கன்றுகளை ஆலயத்தில் நட்டு பிள்ளையாரை வணங்கினேன். 

வீடு திரும்பிய போது மணி நாலு முப்பது.  


Tuesday 17 November 2020

பறத்தல்

தினமும்
காலை அந்தி வருகிறது
செந்நிறம் கொள்கிறது வானம்
இவ்வளவு பெரிய உலகை
தன் சிறு சிறு கண்களால்
பார்க்கும்
தன் சின்ன சிறகுகளால்
பறக்கும்
குவிந்த உள்ளங்கை அளவு 
பறவைகள்
கிரீச்சிடுகின்றன
அவற்றின் சின்ன அலகுகளுக்குள்
சேரப் போகும்
உணவு
எங்கெங்கோ எடுத்து வைக்கப்பட்டுள்ளது
அவற்றுக்குத் 
துயரம் 
இல்லை

குதூகலத்தின் மொழி
தளும்பும்
வழித்தடங்களுக்குக் கீழ்
இயங்கத் தொடங்குகிறது
சாதாரண உலகம்
 

Sunday 15 November 2020

அனேகம்

 உன் 
இசையின் முன்னால்
அன்பின் முன்னால்
கருணையின் முன்னால்
மென்மையின் முன்னால்
பெருந்தன்மையின் முன்னால்
கரைந்து கரைந்து 
உயிர்க்கிறேன்

Saturday 14 November 2020

மாற்று


இன்று ஒரு நண்பரைச் சந்தித்தேன். எண்பது வயது நிரம்பியவர். பல பெரிய தொழில்களை மிக வெற்றிகரமாக மேற்கொண்டவர்.  ஐம்பது ஆண்டுகளாக யோகப் பயிற்சிகள் செய்பவர். அவரைக் காண்பவர்கள் அவருடைய வயது ஐம்பதுக்கு குறைவாக இருக்கும் என்றே நினைப்பார்கள். என் மீது மிகுந்த அக்கறையும் பிரியமும் கொண்டவர். அவரது மகன்கள் வெளிநாட்டில் பணி புரிகிறார்கள்; நண்பரை ஓய்வாக இருக்கச் சொல்கிறார்கள். மகன்களின் எண்ணத்துக்கு மதிப்பு கொடுத்து லௌகிகத்திலிருந்து விலகி இருக்கிறார். இன்று அவரைச் சந்தித்தேன். 

எனது தொழில் குறித்து விசாரித்தார். 

‘’சார்! பில்டிங் அப்ரூவலுக்கு பேப்பர்ஸ் கொடுத்திருக்கன். அப்ரூவல் வந்ததும் கட்டிட வேலை ஆரம்பிச்சுடலாம்.’’ 

‘’சவாலான டைம் தம்பி. ஜாக்கிரதையா இருக்கணும்.’’

‘’நம்ம ஸ்டெப்ஸ் எல்லாமே Measured Steps சார்!’’

‘’உங்களைப் பத்தி தெரியும் தம்பி. இருந்தாலும் லௌகிகம் நம்மை மட்டும் சார்ந்தது இல்லை. அது நம்ம கஸ்டமர்ஸையும் சமூகத்தோட பொது மனநிலையையும் சார்ந்தது. எப்பவுமே அது பத்தி ஒரு அவர்னெஸ்ஸோட இருக்கணும்.’’

அனுபவசாலியின் சொற்கள் என்பதால் கவனத்துடன் கேட்டுக் கொண்டேன். 

கிராமத்தில் நிகழும் செயல்களின் முன்னேற்றம் குறித்து கேட்டார். விளக்கமாகச் சொன்னேன். மிகவும் மகிழ்ந்தார். 

நான் என் மனதில் இருந்த ஒரு விஷயத்தைக் கேட்டேன். 
 
‘’சார்! இந்த தருணத்துல எனக்கு இன்னும் கொஞ்சம் சப்போர்ட் தேவைப்படுது சார். என்ன செய்யலாம்?’’

சில கணங்கள் என்னைப் பார்த்தார். சில நிமிடங்கள் மௌனம் நிலவியது. 

‘’பெரிய சப்போர்ட் கொடுக்கக் கூடிய ஒருத்தர் பகவான் தான் தம்பி. அவரைத் தாண்டிய சப்போர்ட் வேறொன்னு இருக்கா என்ன?’’

நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். 

‘’எப்ப நமக்கு சப்போர்ட் தேவைப்படுதுன்னு ஃபீல் பண்றமோ அப்ப நாம செய்யற வேலையை இன்னும் ஒரு மடங்கு அதிகமாக்கனும். கடவுள் நமக்கு கொடுக்கற ஒவ்வொரு நாளும் அற்புதமான பரிசு தம்பி. அந்த ஒவ்வொரு நிமிஷத்தையும் அபூர்வமானதா ஃபீல் பண்ணுங்க. உங்களைச் சுத்தி இருக்கற சூழ்நிலைய தூய்மையானதா வச்சுக்கங்க. அனாவசியமானதை சேக்காம இருந்தாலே நம்ம சூழ்நிலை அற்புதமா இருக்கும். வீடு, ஆஃபிஸ், வேலை செய்யற இடம் எல்லாத்தையுமே எவ்வளவு அழகா வச்சுக்க முடியுமோ அவ்வளவு அழகா வச்சுக்கங்க. அழகு ஒரு மெட்டீரியல் திங் இல்ல. அது டிவைனிட்டியோட வெளிப்பாடு. அழகுணர்ச்சி எப்பவுமே கூடிட்டே இருக்கற விஷயம் தம்பி.’’

அவரைப் பார்க்க அவரது நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர் அப்போது வந்தார். பெரியவர் ஊழியரிடம் அவரது நலனையும் அவர் குடும்ப நலனையும் விசாரித்து விட்டு அவருக்கு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசு அடங்கிய தீபாவளி பரிசுப் பையை உள்ளேயிருந்து எடுத்து வந்து வழங்கினார். அவர் சந்தோஷமாக பெற்றுக் கொண்டு சென்றார். 

‘’தம்பி! நாம என்ன பேசிக்கிட்டு இருந்தோம்?’’

‘’அழகுங்கறது டிவைன். அழகுணர்ச்சி எப்பவும் கூடுறதுன்னு சொல்லிகிட்டு இருந்தீங்க.’’

‘’என்னோட தொழிலை ஆரம்பிச்சப்ப நான் அடிக்கடி பெங்களூர் போவேன். பூத்துக் குளுங்கற பெங்களூர் எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா. அந்த மரங்களோட நிழல்ல நடந்து போகும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். வாழ்க்கைல ஒரு நல்லது நடக்கும்னு பலநாள் அங்க இருக்கும் போது நான் ஃபீல் பண்ணியிருக்கன்.’’

நான் அவர் கூறியவற்றை மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

‘’தம்பி! எனக்கு உங்களைப் பத்தி தெரியும். உங்களால செய்யக்கூடிய சில விஷயங்களைச் சொல்றன். செய்ங்க. முதல் விஷயம், உங்க வீட்டை தினமும் நீங்க கூட்டி Mob போடுங்க. டவுனுக்கு உள்ள கார், பைக் பயன்படுத்த வேண்டாம். சைக்கிள் பயன்படுத்துங்க. இது ரெண்டாலயும் உங்க உடம்போட கலோரி இன்னும் அதிகமா செலவாகும். யூஸேஜ் குறைவுன்னாலும் உங்களோட காரையும் டூ-வீலரையும் தினமும் துடைச்சு பளிச்னு தயாரா வைங்க. கார், டூ-வீலர் ஃபியூயல் டேங்க்ல எப்பவும் பெட்ரோல் ஃபுல்லா இருக்கணும். சரியா?’’

‘’சரி சார்!’’

பெரியவர் வெளியூர் சென்றால் தான் காரில் போகிறார். டவுனுக்குள் நடந்தே செல்கிறார். எந்த வாகனமும் பயன்படுத்துவது இல்லை. இரண்டு கார் வைத்திருக்கிறார். 

‘’காலைல வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது வானத்தைக் கண்ணால பாத்து ஒரு நிமிஷம் கை கூப்புங்க. நெடுஞ்சாண்கிடையா விழுந்து வணங்குங்க. அதே போல பகல் உச்சி வேலைல எங்க இருந்தாலும் வானத்தைப் பாத்து ஒரு நிமிஷம் கை கூப்புங்க. விழுந்து வணங்குங்க. அதே போல சூரிய அஸ்தமனத்தப்பவும்.’’

பெரியவர் தொடர்ந்து சொன்னார். 

‘’பூமி எல்லைக்குட்பட்டது. வானம் எல்லையில்லாதது தம்பி.’’

‘’சரி சார்! அப்படியே செய்றன்.’’

‘’தினமும் பத்து நிமிஷம் கடவுள்கிட்ட உங்க மனசுல இருக்கற எல்லாத்தையும் சொல்லி பிராத்தனை செய்ங்க. நீங்க நினைக்கறது, உங்களோட சந்தோஷம், உங்களோட கவலைகள், கஷ்டமா நீங்க ஃபீல் பண்ற விஷயங்கள், உங்களுக்குத் தேவைப்படுறது எல்லாத்தையும் கடவுள்ட வாய் விட்டு சொல்லுங்க. நம்ம எல்லாரோட மனசும் கடவுளுக்குத் தெரியும்னாலும் பிராத்தனை மூலம் நம்ம மனசு தூய்மையாகும். மகாத்மா ஒரு நாளைக்கு ரெண்டு தடவை பிராத்தனை செய்வார் தெரியுமா?’’

‘’நீங்க சொல்றபடி செய்றன் சார்’’

‘’நாற்பத்தெட்டு நாள் தொடர்ச்சியா இந்த விஷயங்களைச் செஞ்சுட்டு எப்படி இருக்குன்னு என்கிட்ட சொல்லுங்க தம்பி’’

ஒளித் திருநாள்

தீபாவளியன்று காலை வழிபாடு முடிந்ததும் புதிதாக எங்காவது கிளம்பிச் சென்று வர விரும்புவேன். அவ்வாறு தீபாவளியன்று காலை புறப்பட்டுச் சென்று திரும்பிய பல ஊர்கள் நினைவில் வருகின்றன. ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கும்பகோணம்.  அந்த ஊர்களும் நினைவுகளும் எழுகின்றன. பண்டிகைகளின் போது காணும் மக்கள் முகங்கள் அவர்கள் உணர்வுகளைப் படிக்க உதவி புரிகின்றன. தீபாவளி இந்தியா முழுமைக்கும் மக்கள் கொண்டாடும் - மக்கள் மகிழ்ச்சி அடையும் பண்டிகை. 

வட இந்தியாவில் தீபாவளி மூன்று நாட்கள் கொண்டாடப்படும் வழக்கம் உண்டு. 2016ம் ஆண்டு எனது மோட்டார்சைக்கிள் பயணத்தின் போது தீபாவளியை ஒட்டி உத்திரப்பிரதேச மாநிலம் புலண்ட்ஷாரில் இருந்தேன். அங்கே வீடெங்கும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றியிருந்தனர். அடுத்த நாள் மாலை மத்தியப் பிரதேசத்தில் நர்சிங்பூரில் இருந்தேன். இரவு அங்கு மக்கள் விளக்கேற்றுவதைப் பார்த்தேன். அடுத்த நாள் காலை நர்சிங்பூரிலிருந்து புறப்பட்டேன். அன்றைய தினம் தமிழ்நாட்டில் தீபாவளி என்பதால் தங்கியிருந்த இடத்திலிருந்த தரைவழி தொலைபேசியிலிருந்து வீட்டுக்குத் தொடர்பு கொண்டேன். வீட்டில் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டனர். ஒரு ஆண்டு கூட தீபாவளிக்கு வீட்டில் இல்லாமல் இருந்ததில்லை; அந்த ஆண்டு 1500 கி.மீ தொலைவில் இருக்கிறேனே என வருத்தப்பட்டனர். ஒவ்வொரு நிமிடமும் வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்; இன்னும் நான்கு நாட்களில் வந்து விடுவேன் என்று சொன்னேன். அன்று மதியம் மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரைக் கடந்து சந்திரபூர் வந்தேன். அங்கே தீபாவளிக் கொண்டாட்டம். அடுத்த நாள் தெலங்கானா கம்மம். அங்கே தீபாவளி. தீபங்களைக் காணும் போதெல்லாம் அந்த ஊர்களும் மக்களும் நினைவில் எழுகிறார்கள். 

இந்த ஆண்டு தீபாவளியை ஒரு வாரம் முன்னதாகவே கொண்டு வந்தாயிற்று. செயல் புரியும் கிராமத்தில் ஒரு முழு கிராமமும் இணைந்து வீட்டு வாசலில் தீபங்கள் ஏற்றியதன் மூலம் 2020 தீபாவளியும் நினைவில் நீங்கா இடம் பிடித்து விட்டது. இரண்டு நாட்கள் முன்னால் அங்கு சென்று முக்கிய நண்பர்கள் 16 பேருக்கு இனிப்புகளை வழங்கி விட்டு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி விட்டு வந்தேன். 

தீபச் சுடரால் ஒளி நிறைவது போல நம் அன்பால் நாம் ஒட்டுமொத்த மானுடத்தையும் இணைக்க வேண்டியிருக்கிறது. 









Thursday 12 November 2020

ஒளிமலர்

ஒரு
மலரை
கையில்
ஏந்தியிருக்கும் போது
நாம்
மலரின் கைகளில்
இருக்கிறோம்

Monday 9 November 2020

எழு பசும் பொற்சுடர்

மரக்கன்றுகள் நட்டு செயல்புரியும் கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று (06.11.20) மாலை 6.15 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஏழு தீபங்கள் ஏற்றுமாறு கேட்டுக் கொண்டோம். ஒற்றுமையிலும் கூட்டுச் செயல்பாட்டிலும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்தும் விதமாக தீபங்களை ஏற்றச் சொன்னோம்.  அன்றைய தினம் சப்தமி என்பதால் ஏழு தீபங்கள். இந்திய மரபில் ஏழு என்பது பலவகையில் முக்கியத்துவம் கொண்டது. ஸ்வரங்கள் ஏழு. தெய்வ அன்னையர் எழுவர். முதல் முனிவர்கள் ஏழு பேர். புண்ணிய நதிகள் ஏழு. வானவில்லின் வர்ணங்கள் ஏழு. வாரத்தின் நாட்கள் ஏழு. பிறவிகள் ஏழு. பெருங்கடல்கள் ஏழு. அதிசயங்கள் ஏழு. உடலின் உயிர்ச் சக்கரங்கள் ஏழு. 

ஆறு மாதங்களுக்கு முன்னால் முதல்முறையாக அந்த கிராமத்துக்குச் சென்றேன். ஊரின் பெயரை மட்டும் சில முறை கேட்டிருக்கிறேன். முன்னர் எப்போதும் அங்கு சென்றது கிடையாது. அப்போது, அந்த ஊரில் யாரும் எனக்கு அறிமுகமோ பரிச்சயமோ இல்லை. இந்தியா முழுக்க மோட்டார்சைக்கிளில் பயணித்தவன் என்ற முறையில் இந்திய கிராம மக்கள் ஊருக்குப் புதிதாக வருபவர்களிடம் அன்பு பாராட்டுவார்கள் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தேன். அந்த நம்பிக்கையே அவ்வளவு தொலைவில் உள்ள அந்த கிராமம் நோக்கி என்னைச் செலுத்தியது. 

இத்தனை நாட்கள் செயல்புரிந்த முறையில், இன்று அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் நண்பர்களாக உள்ளனர். அவர்கள் என் மீது காட்டும் அன்பு மறக்க இயலாதது. 

வெள்ளியன்று மாலை கிராமத்தின் எல்லா வீட்டு வாசலிலும் மக்கள் ஏழு தீபங்கள் ஏற்றினர். கிராமத்தின் வீதிகள் அகல் விளக்குகளின் ஒளியில் அழகுற மிளிர்ந்தன. அன்றைய மாலை திருக்கார்த்திகைக் கொண்டாட்டம் போல் இருந்தது. 

நான் எளிய கருவி மட்டுமே. அங்கே நிகழ்ந்த அனைத்தும் அக்கிராம மக்களாலேயே நிகழ்ந்தது. 

பணிகளுக்கு முடிவு என்பது எப்போதுமே கிடையாது. மேலும் என்ன பணிகளைச் செய்ய முடியும் என்பது குறித்தே யோசிக்கிறேன். செயல்படுகிறேன். 

கடமையைச் செய் என்கிறது கீதை.











Wednesday 4 November 2020

 மழையின் சப்தம் என்பது 
ஓர் அமைதி
ஒரு தீண்டல்
காத்திருக்கும் கணங்களின் அடர்த்தி
ஊற்றெடுக்கும் நினைவின் இனிய பொழுதுகள்
உன் காலடிகளின் ஓசை

ஆசான் சொல் - 8

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். (540)

எல்லா சமயங்களும் மனிதர்களின் - மனித சமூகங்களின் - உலகியல் வாழ்க்கை சீரானதாக இருக்க வேண்டியதற்கான அறிவுறுத்தல்களை மிகச் சிறிய அளவினாயினும் வழங்கியவாறே உள்ளன.  சக மனிதர்களுடன் நல்லுறவைப் பராமரித்தல், சமூக நியதிகளை மேம்படுத்த முயலுதல் ஆகிய விஷயங்களை அவை போதித்தவாறே உள்ளன. நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மனிதர்கள் ஒரு விஷய்த்தைப் புரிந்து கொள்ளும் - உள்வாங்கும் விதம் நிச்சயம் மாறுபடும். எனினும் யாரோ சிலர் தங்கள் லௌகிக எல்லைகளைத் தாண்டி சமூகத்துக்காக சிந்தித்த வண்ணமும் செயல்படும் வண்ணமும் உள்ளனர். 

இந்த குறள் சமூக மாற்றத்துக்காகச் செயல் புரிபவர்களுக்கான வள்ளுவரின் குறிப்பு எனக் கொள்ளலாம். 

மாற்றம் வேண்டி செயல்புரிபவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் எட்டு மடங்கு உழைப்பை நாளும் நல்க வேண்டியவர்கள். பொழுது விடிந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை உழைத்த வண்ணம் இருப்பார்கள். சூழல் சாதகமாகத் திரும்பும் கணம் அறுதியிட்டுக் கூற முடியாதது. எனவே கடுமையாக உழைத்த வண்ணம் இருப்பார்கள். எனினும் நிகழ்த்த விரும்பும் மாற்றம் குறித்த கற்பனைக்கு மனதில் இடம் கொடுக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். மனதின் பெரும்பகுதியை பணிக்கும் சிறு பகுதியை கற்பனைக்கும் அளிக்க வேண்டும் என்பது வள்ளுவரின் அறிவுரை. உயிரோட்டமான அந்த கற்பனை செயல் புரிபவரை இலகுவாக வைத்திருக்கும். செயல் புரிபவனின் கற்பனையே என்றோ ஒருநாள் சமூக யதார்த்தமாகும். 

நாம் நிகழ்த்த விரும்பும் மாற்றத்தை அம்மாற்றத்துக்காக நாம் புரியும் செயலுடன் தினமும் எண்ணிப் பார்ப்போம் ஆயின் நமது நோக்கம் எளிதில் நிறைவேறும். 

Sunday 1 November 2020

துணை

 உடன் இருக்கிறாய்
கேட்டுக் கொள்கிறாய்
விவாதிக்கிறாய்
ஆறுதல் சொல்கிறாய்
நம்பிக்கை அளிக்கிறாய்
பிராத்திக்கிறாய்
ஓயாமல் மன்னிக்கிறாய்

உனக்கு என்ன கொடுத்தேன்
யோசித்து யோசித்துப் பார்க்கிறேன்

சிரித்துக் கொண்டே
பெறுவது ஆனந்தம்
கொடுப்பது பேரானந்தம்
என்கிறாய்