Friday 31 March 2023

சீனாவின் கைக்கூலிகள்

மாவோயிஸ்டுகள் என்கிற எம் எல் என்கிற நக்சலைட்டுகள் சீன நாட்டிடம் பணம் பெற்றுக் கொண்டு ஜனநாயக நாடுகளின் அரசு அமைப்பினை சிதைக்கவும் கைப்பற்றவும் பணியாற்றக் கூடிய கைக்கூலிகள். பொதுமக்களை வெடிகுண்டு மூலம் கொலை செய்தல், அரசு ஊழியர்களை அழித்தல் ஆகியவை அவர்களின் செயல்பாடுகள். ஜனநாயக அமைப்பு மெதுவானது. அது மெதுவானதாக இருப்பதால் பொதுமக்களால் அதிருப்தியுடன் நோக்கப்படுவது. பொதுமக்களின் அதிருப்தியை பயன்படுத்தி ஜனநாயக அரசுக்கும் அதன் குடிமக்களும் இடையே இருக்கும் இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு அதனை மேலும் பெரிதாக்கி தான் பொருளியல் பலன்களைப் பெற்றுக் கொள்வது என்பதே நக்சலைட்டுகளின் வழிமுறை. அவர்களின் மாவோயிச சித்தாந்தம் அதனையே அவர்களுக்கு சொல்லித் தருகிறது.  

குடிமக்கள் எப்போதும் அரசை உற்று நோக்குவதில்லை. குடிமக்கள் அரசை முழுமையாக அறிவதும் இல்லை. அது அவர்களுக்கு முக்கியமான தேவையும் இல்லை. கோடிக்கணக்கான மக்கள் தங்கள் மனத்தின் சிறு அளவிலான பரப்பை அரசு என ஒரு அமைப்பு இருப்பதாக நம்புவதே எந்த அரசுக்கும் அடிப்படை. கோடிக்கணக்கான மக்கள் அரசு என்ற அமைப்பை மிகச் சிறு அளவிலேனும் நம்பும் போது ஏற்றுக் கொள்ளும் போது ( வரி செலுத்தும் போது) ஜனநாயக அரசாங்கம் செயல்பட ஆரம்பிக்கிறது. 

மாவோயிஸ்டுகள் என்கிற நக்சலைட்டுகள் குறித்து கேள்விப்படும் போது எண்ணம் கொள்ளும் போது பொதுமக்கள் ஒரு கேள்வியை மனதில் எழுப்பிக் கொள்ள வேண்டும். 

1. சீனா இன்று உலகில் மிக மோசமாக தனது சொந்த குடிமக்களின் உழைப்பைச் சுரண்டும் நாடு . ஒரு ஜனநாயக நாட்டில் சுரண்டல் நிகழ்கிறது எனக் கூறி ஆயுதம் ஏந்திய - ஏந்தும் மாவோயிஸ்டுகள் என்கிற நக்சலைட்டுகள் சீனாவிடம் கைக்கூலி பெற்றது- பெறுவது எதனால்?

Thursday 30 March 2023

வசந்தத்தின் அழைப்பு

கோடை என்னால் மிகவும் விரும்பப்படும் பருவநிலை. எனக்கு எல்லா பருவநிலைகளும் பிடிக்கும். தமிழகத்தின் பெரும் பகுதிகளில் வருடத்தின் கணிசமான நாட்கள் வெயில் நிறைந்திருக்கும் தன்மை கொண்டவை. மழைக்காலத்தில் கூட நான்கு நாட்கள் மழை பெய்தால் மூன்று நாட்கள் வெயில் என்ற கணக்கில் சுழற்சி இருக்கும். தஞ்சை வடிநிலம் பூம்புகார் தொடங்கி திருச்சிராப்பள்ளி வரை வெயிலுக்குப் பெயர் போனது. கோடைக்காலத்தில் உக்கிர்மான சூரியக்கதிர்கள் புறக்காட்சிகளை மிகத் துல்லியமாக ஆக்குகின்றன. கோடையின் பெரும் பரப்பில் வான் நோக்கி உயர்ந்திருக்கும் பசுமை கொண்ட மரங்களும் அவற்றின் காற்றில் பறக்கும் சருகுகளும் என்னை பெருமகிழ்வு கொள்ளச் செய்பவை. வசந்தம் கோடையில் தான் வருகிறது. அப்போது தான் மரங்கள் தளிர்க்கின்றன. பூக்கள் பூக்கின்றன. மாலையில் தென்றல் வீசுகின்றது. 

கோடை வந்து விட்டால் எனக்கு உடனே மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தோன்றும். காலையில் புறப்பட்டால் பொழுது செல்ல செல்ல வெயில் உக்கிரம் பெற பெற எனது ஆற்றல் கூடிக் கொண்டே செல்லும். நான் கூறுவது உண்மை. கோடையில் எனது ஆற்றல் பயணத்தின் போது அதிகபட்சமாக இருக்கும். அதிக வெயில் நமது ஆற்றலை எடுத்துக் கொள்ளும் என்று பொதுவாக எண்ணுவார்கள். காயும் வெயிலிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்தால் அது மனதுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்து விடும். பாதை எந்த தடைகளும் இல்லாமல் நம் முன் விரிந்து கிடக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்கும். 

இந்திய நிலப்பகுதிகளின் உக்கிரமான கோடைக்காலத்தை நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன். இந்த முறை ஆந்திரா தெலங்கானா ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களுக்கு இந்த கோடையில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. எல்லாம் கூடி வர வேண்டும். 

Saturday 18 March 2023

சோதனை ஓட்டம்

 1987ம் ஆண்டிலிருந்து எங்கள் வீட்டில் மோட்டார்சைக்கிள் இருக்கிறது. முதல் வாகனம் ஹீரோ ஹோண்டோ சி.டி 100. பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் சி.டி 100 எஸ் எஸ். அதன் பின்னர் மேலும் பற்பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ப்ளெண்டர் பிளஸ். இந்த மூன்று வாகனங்களைத் தவிர வேறு எந்த வாகனமும் இயக்கியது இல்லை. 100 சி.சி வாகனங்களில் ஹீரோ ஹோண்டா மிக முன்னோடியான வாகனமாக இருந்தது. மென்மையான என்ஜின் சத்தமும் கட்டுப்படியாகும் மைலேஜும் அந்த வாகனத்தை ஒருமுறை வாங்கியவர்கள் மீண்டும் மீண்டும் அதை நோக்கியே செல்வார்கள் என்னும் நிலையை உருவாக்கியது. இந்தியாவில் மோட்டார்சைக்கிள் மெக்கானிக்குகள் என்றால் ஹீரோ ஹோண்டா மெக்கானிக்குகள் தான். அந்த வாகனம் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகும் வாகனம். அதிக இந்தியர்கள் வைத்திருக்கும் வாகனமும் அதுவே. மோட்டார்சைக்கிளில் இந்தியப் பயணம் மேற்கொண்ட போது சந்தித்த மெக்கானிக்குகளின் பட்டறைகளில் அதிகம் நின்று கொண்டிருந்தது ஹீரோ ஹோண்டோ வாகனங்களே. ரிஷிகேஷில் சந்தித்த மோட்டார் மெக்கானிக்கான சீக்கியர், மத்தியப் பிரதேசத்தில் நீமன்ச் அருகில் சந்தித்த ஹிந்திவாலா, அதோனியில் சந்தித்த மெக்கானிக் ஆகியோரின் பட்டறைகள் நினைவில் எழுகின்றன. அவற்றில் அதிகம் காணப்பட்டது ஹீரோ ஹோண்டாவே. 

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஹீரோ ஹோண்டா கம்பெனி இரண்டாகப் பிரிந்தது. ஹீரோ என்றும் ஹோண்டா என்றும். ஹோண்டா முன்கூட்டியே உள்ள நிறுவனம். ஹீரோ ஹோண்டா ஹீரோ மோட்டாகார்ப் என ஆயிற்று. 

வண்டி மாற்றலாம் என எண்ணம் தோன்றியது. அதற்கான தேவையும் எழுந்தது. இப்போது கையில் உள்ள வாகனம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கியது. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கி.மீ தூரம் ஓடியிருக்கிறது. புதிய வாகனம் அவசியம் தேவை. 

100 சி.சி வாகனம் என்பதையும் 150 சி.சி வாகனமாக மாற்றலாமா என எண்ணம். ஊரில் உள்ள ஷோ ரூம்களுக்கு சென்று பார்க்கலாம் என முடிவு செய்து ஒவ்வொன்றாகச் சென்றேன். முதலில் சென்றது ஒரு பஜாஜ் ஷோரூம். சி.ட்டி 100 என ஒரு வாகனம் . அதனைப் பார்த்தேன். பின்னர் யமஹா ஷோரூமுக்கு சென்றேன். எஃப் இசட் எஸ் என ஒரு வாகனம் . 150 சி.சி . விண்டேஜ் மாடல் பொருந்தும் எனத் தோன்றியது. வண்டியை ஓட்டிப் பார்த்தேன். 

100 சி.சி வாகனத்துக்கும் 150 சி.சி வாகனத்துக்கும் உள்ள வேறுபாடு என்பது 150 சிசி வாகனத்தில் லேசாக ஆக்சிலரேட்டர் கொடுத்தாலே வண்டி மிக நல்ல வேகமெடுத்து செல்லத் துவங்கும். வண்டியின் கட்டுப்பாடு கச்சிதமாக இருக்கும். 100 சி.சி வாகனத்தில் அதிவேகம் சென்றால் பிரேக் பிடித்தால் வண்டி தன் கட்டுப்பாட்டை இழக்கும். அதிவேகம் சென்றால் வாகனம் பிரேக் பிடிப்பதில் சிக்கல் இருக்கும் என்பதால் 40 -50 கி.மீ வேகமே எப்போதும் சென்று 100 சி.சி வாகனத்துக் காரர்கள் பழகியிருப்பார்கள். ஆகவே எனக்கு 150 சி.சி வாகனம் ஆர்வமளித்தது. பின்னர் ஹோண்டா ஷோரூம் சென்றேன். ஷைன் என்ற அவர்களின் பிரபலமான வாகனம் 100 சி.சி யில் வெளியாக உள்ளது எனத் தெரிவித்தனர். அங்கிருந்து டிவிஎஸ் ஷோரூமுக்கு சென்றேன். ரேடியான் என ஒரு வாகனம் . வண்டியை ஓட்டிப் பார்த்தேன். 

ஒரு எலெக்ட்ரிக் வாகனம் வாங்கி விட்டு அதன் பின் ஒரு 150 சி.சி வாகனம் வாங்கலாம் என எண்ணுகிறேன். உள்ளூருக்குள் சுற்ற எலெக்ட்ரிக் வாகனம். நாற்பதிலிருந்து அறுபது கிலோமீட்டர் சுற்றளவெனில் 150 சி.சி வாகனம் என திட்டமிட்டுள்ளேன். 

என்ன நிகழப் போகிறது என்பதை அறிய எனக்கும் ஆர்வமாகவே இருக்கிறது. 

Friday 17 March 2023

உலா

இன்று தஞ்சாவூர் அருகில் உள்ள ‘’காவிரி போற்றுதும்’’ வழிகாட்டுதலில் தேக்கு பயிரிட்டிருக்கும் நண்பரின் நிலத்துக்குச் சென்று மரக்கன்றுகளைப் பார்வையிட்டு வர வேண்டும் என விரும்பினேன். காலையில் இங்கே எனக்கு ஒரு லௌகிகப் பணி. செய்ய முயன்ற போது நாளைக்கு ஒத்திப் போனது. காலை 10 மணி அளவில் புறப்பட்டேன். பேருந்துப் பயணம் மேற்கொள்ள விரும்பினேன். பேருந்துப் பயணம் சக குடிமக்களைக் குறித்து மேலும் அறிய மேலும் புரிந்து கொள்ள உதவுகிறது. எனவே அவ்வப்போது பேருந்துப் பயணம் செய்ய விருப்பப்படுவேன். 

பேருந்து நிலையம் சென்ற போது கண்ணெதிரில் நான் பார்த்த பேருந்து புறப்பட்டுச் சென்று விட்டது. அடுத்த பேருந்தில் சென்று அமர்ந்தேன். பேருந்து மெல்ல சென்று கொண்டிருந்தது. சிறு வயதில் பேருந்து செல்லும் சாலையில் ஊர்களும் மக்களும் முடிவில்லாமல் பெருகி வரும் விந்தையை ஆர்வத்துடன் எண்ணியதுண்டு. இப்போதும் அந்த விந்தை தொடர்கிறது. 

கும்பகோணத்திலிருந்து ஒரு நகரப் பேருந்தில் பயணமானேன். அந்த பேருந்தின் நடத்துநர் பழக்கமானார். அவர் தன் கதையை என்னிடம் சொல்லிக் கொண்டு வந்தார். அவருடைய சொந்த ஊர் திருப்பூந்துருத்தி என்று சொன்னார். அந்த ஊர் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னும் நேரில் சென்றதில்லை. முன்னர் எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. அதாவது, ஏதேனும் ஒரு ஊர் குறித்து கேள்விப்பட்டால் அதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என எண்ணுவேன். இப்போதும் அந்த பழக்கம் தொடர்கிறது. இன்னும் ஓரிரு நாளில் திருப்பூந்துருத்தி செல்லக் கூடும். 

சிறு சிறு கிராமங்கள் வழியே பேருந்து சென்று கொண்டிருந்தது. ஒரு முதியவர் இரு சைக்கிள் சக்கரங்களை குடந்தையில் வாங்கி கையில் வைத்துக் கொண்டு பேருந்தில் பயணித்தார். ஒரு பெண்மணி தாராசுரத்தில் வாங்கிய காய்கறிகளை கையில் வைத்திருந்தார். சிறு சிறு காட்சிகள். அவை அனேக விஷயங்களை உணர்த்துகின்றன. 

நண்பருடைய வயலுக்கு சென்றேன். வயலின் மேற்பார்வையாளர் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து அழைத்துச் சென்றார். மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் பாய்ச்சப்பட்டிருப்பதால் பசுமையாக செழுமையாக வளர்ந்திருந்தன. பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வயலின் உரிமையாளரான நண்பர் சென்னையில் இருக்கிறார். அவருக்கு ஃபோன் செய்து எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். 

ஊரிலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ள முக்கூட்டு ஒன்றில் வயலின் மேற்பார்வையாளர் கொண்டு வந்து விட்டார். சில நிமிடங்கள் பேருந்துக்காகக் காத்திருந்த போது ஒரு ஆட்டோ வந்தது. என்னையும் பேருந்துக்காகக் காத்திருந்த மேலும் 3 பயணிகளையும் ஆட்டோகாரர் ஏற்றிக் கொண்டார். அவர் ஐந்து கி.மீ தூரத்தை ரூ.20 பெற்றுக் கொண்டு அழைத்துச் சென்றார். அங்கிருந்து ஒரு நகரப் பேருந்தைப் பிடித்து கும்பகோணம். அங்கிருந்து ஊர் திரும்பல்.  

Tuesday 14 March 2023

அனுபவம்

ஞாயிறன்று எனது நண்பரின் மகளுக்கு கும்பகோணத்தில் வங்கிப் பணித் தேர்வு இருந்தது. ஊரிலிருந்து இருவரும் காரில் செல்வதாய் திட்டமிட்டிருந்தனர். நானும் அவர்களுடன் இணைந்து கொண்டேன். முன்னர் அந்த நண்பர் ஊரிலேயே பணியில் இருந்தார். ஒரு நாளைக்கு இரண்டு முறை சந்திப்போம். பின்னர் அவருக்கு பணி மாற்றல் ஆகி விட்டது. மாதம் ஒருமுறை மட்டுமே அவரால் ஊருக்கு வர முடியும் என்ற நிலை. எனவே மாதக்கணக்கில் சந்திக்க இயலாத சூழல். எனவே கும்பகோணம் பயண நேரத்தையும் தேர்வு நேரத்தையும் நாங்கள் இருவரும் உரையாடப் பயன்படுத்தலாம் என்பதால் அவ்விதம் திட்டமிட்டோம்.  

நண்பரின் மகள் பொறியியல் பட்டதாரி. பொறியியல் கல்வி முடித்து இரண்டு ஆண்டுகளாக வங்கித் தேர்வுகள் எழுதி வருகிறார். நான் நண்பரிடம் மகளை சென்னையில் இருக்கும் பயிற்சி மையம் ஒன்றில் இணைந்து வங்கித் தேர்வுக்கு பயிற்சி எடுத்துக் கொள்ள அறிவுறுத்துமாறு கூறினேன். நண்பர் என்னை பேசச் சொன்னார். அது எப்போதும் வழக்கம். நான் ஒரு ஆலோசனை சொன்னால் அதைச் செயலாக்கும் பொறுப்பையும் எனக்கே தருவார்கள். 

நான் அடிக்கடி சொல்லும் வழக்கமான ஒரு உண்மைக் கதையைச் சொன்னேன். வங்கித் தேர்வுக்கு தயார் செய்யும் ஒரு மாணவிக்கு சொன்ன கதை என்பதால் வங்கித் தேர்வு வினாக்கள் முறையில் கதை சொன்னேன். 

A, B, C என்று மூன்று பேர். இதில் ஏ க்கு பியைத் தெரியும் . சியைத் தெரியாது. சிக்கு ஏயைத் தெரியாது; பியைத் தெரியும். பிக்கு ஏ சி இருவரையும் தெரியும். பி தரங்கம்பாடி கடற்கரையில் ஏ பி சி மூவரும் சந்திக்கும் விதமாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். மூவரும் அங்கே சந்தித்தனர். சந்திப்பில் ஏ சில நவீன தமிழ்க் கவிதைகளை தன் நினைவிலிருந்தே கூற, அதில் வியப்படைந்த சி ஏக்கு மிக அருகில் வந்து அமர்ந்து கொண்டார். நெடு நேரம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு மூவரும் புறப்பட்டனர். அப்போது ஏயும் சியும் ஒரே மோட்டார்சைக்கிளில் பயணித்தனர்.  அந்த கடற்கரை உரையாடலில் சி தனது இலக்கிய வாசிப்பு குறித்தும் இலக்கிய ஆர்வம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்திருந்தார். 

பைக்கில் செல்லும் போது ஏ சி யிடம் சொன்னார். ‘’தம்பி ! நீ சிவில் சர்வீஸ் பிரிப்பேர் பண்றேன்னு சொல்ற. ஆனா உன்னோட மன அமைப்பு ரொம்ப எமோஷனலா இருக்கு. நீ எந்த விஷயத்தையும் ரொம்ப உணர்ச்சிகரமா அணுகற. அது நல்ல விஷயம் தான். ஆனா சிவில் சர்வீஸ் பிரிபரேஷனுக்கு ஒரு மெக்கானிக்கல் மைண்ட் செட் வேணும். அது மினிமம் அளவுலயாவது இருக்கணும். உனக்கு அது வருமான்னு எனக்குத் தெரியல். நீ ஒன்னு பண்ணு. சிவில் சர்வீஸ் பிரிபரேஷனை விட்டுடு. பேங்க் எக்ஸாம் பிரிபேர் பண்ணு. உன்னோட இங்கிலீஷ் ஃபவுண்டேஷன் ஸ்ட்ராங்கா இருக்கு. எஞ்சினியரிங் படிச்சிருக்கறதால மேத்தமேடிக்ஸ் உனக்கு வரும். சிவில் சர்வீஸுக்கு பிரிப்பேர் பண்ணதால் கரண்ட் அஃபையர்ஸ் நல்ல டச்ல இருக்கும். சின்சியரா ஒரு வருஷம் பிரிப்பேர் பண்ணு. நீ பேங்க் மேனேஜரா ஆயிடலாம் ‘’

சி மௌனமாக இருந்தார். 

ஏ சி யிடம் ‘’நீ எந்த ஊருக்குப் போனாலும் உன்னோட வீட்டு வாடகையை பேங்க் கொடுத்துடும். நாலு பர்செண்ட் இண்ட்ரஸ்ட்ல ஹோம் லோன் கிடைக்கும். அதே இண்ட்ரஸ்ட்ல கார் லோன் கிடைக்கும். யங் ஏஜ்ல மேனேஜரா ஆயிட்டன்னா பேங்க் சேர்மேனா கூட நீ ஆகலாம். ‘’என்றார். 

சி க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. 

‘’யார் இந்த மனிதன்? இந்த மனிதனைச் சந்தித்து இன்னும் ஆறு மணி நேரம் கூட ஆகவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை இவன் யார் கூறுவது? ஆனால் இவன் கூறுபவை யதார்த்தமாகத்தான் உள்ளன. ‘’ மௌனமாக சி யின் யோசனைகள் ஓடின. 

ஏ ‘’ நீ இப்பவே முடிவெடுக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல தம்பி. ஒரு மூணு நாள் டைம் எடுத்துட்டு யோசிச்சு நிதானமா முடிவு பண்ணு’’ 

மூன்று நாட்களில் சி குடிமைப் பணித் தேர்வுக்கான தயாரித்தலை நிறுத்துவது என்றும் வங்கிப் பணிக்குத் தேர்வு எழுதுவது என்றும் முடிவு செய்தார். சென்னை சென்று பயிற்சி பெற வேண்டும் என்று ஏ கட்டாயப்படுத்த அதற்கும் உடன்பட்டார். 

எண்ணி 365 நாட்கள். சி க்கு மூன்று வங்கிகளில் மேலாளர் பணி கிடைத்தது. இந்தியாவின் மிகப் பெரிய வங்கியின் கிளை ஒன்றில் மேலாளராகப் பதவி ஏற்றார். 

இந்த கதையில் ஏ நான். சி எனது நண்பன். இப்போது வங்கி மேலாளர் என்று சொன்னேன்.

நண்பரின் மகளுக்கு ஒரே உற்சாகம். தான் தேர்வு எழுதி பாஸாகி வங்கி மேலாளராக ஆகி விட்டதாக ஒரு உணர்வு. 

நண்பர் மகளிடம் சென்னை சென்று பயிற்சி எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினேன். அங்கே பயிற்சி நிறுவனத்தில் தேர்வுக்கு தயார் செய்யும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருப்பார்கள். அவர்களைத் தினமும் காணும் போது அவர்களுடன் பயிற்சி பெறும் போது நமது திறன் இயல்பாகவே கூர்மை பெறும் என்று சொன்னேன். 

ஊரிலிருந்து கும்பகோணம் செல்லும் வரை இந்த கதையைக் கூறினேன். தேர்வு மையம் ஒரு பொறியியல் கல்லூரி. நானும் நண்பரும் நண்பரின் மகளை தேர்வு எழுத அனுப்பி விட்டு மைதானத்தில் இருந்த அரச மரத்தின் நிழலில் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தோம். பல அணிகளாக நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு தேர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஒரு தம்பதி தமது மகளுடன் அப்போது தான் உள்ளே நுழைந்தனர். மகள் தேர்வு எழுத வந்திருக்கிறார். அவரது தேர்வு நேரம் பிற்பகலில். முதல் முறையாக தேர்வு எழுதுகிறார் என்பதால் கல்லூரியில் தேர்வு மையம் எங்கே என்பதை அவர் அறியவில்லை. அந்த இடத்தை சுட்டிக் காட்டிய போது அவர்கள் என்ன ஊர் என்று கேட்டேன். புதுக்கோட்டை என்று கூறினர். என்ன படித்திருக்கிறார் என்று கேட்டேன். ‘’எம். எஸ்ஸி மேத்தமடிக்ஸ்’’ என்றார். 

‘’பொதுவாவே மேத்தமெடிக்ஸ் படிக்க ஸ்டூடண்ட்ஸ் தயங்குவாங்க. நீங்க விருப்பமா மேத்தமெடிக்ஸ் எடுத்து படிச்சிருக்கீங்க. இந்தியாவில அண்டர்கிராஜுவேஷன் 100 பேர் படிச்சா போஸ்ட் கிராஜூவேஷன் 10 பேர் தான் படிக்கறாங்க. நீங்க எம்.எஸ்ஸி மேத்தமெடிக்ஸ் படிச்சிருக்கீங்க. உங்களுக்கு பேங்க் எக்ஸாம்ல மேத்ஸ் ஒரு விஷயமே இல்லை. இங்கிலீஷ் மட்டும் பிரிப்பேர் பண்ணுங்க. என்னோட அட்வைஸ் சென்னைல பயிற்சி எடுத்துக்கங்க. உங்களால முடியும். தயங்காதீங்க. முடியுமான்னு யோசிக்காதீங்க. டவுண்ல இருந்து வந்ததால நமக்கு விஷயம் தெரியுமான்னு யோசிக்காதீங்க. உங்களுக்கு உண்மையிலயே நிறைய விஷயம் தெரியும். நீங்க நினைக்கற அளவை விட அதிகமாவே உங்களுக்குத் தெரியும். எல்லாம் சப் கான்ஷியஸ் உள்ள இருக்கு. அத கான்ஷியஸ்க்கு கொண்டு வரணும் அவ்வளவுதான்’’ என்று சொன்னேன். 

ஏ பி சி கதையையும் சொன்னேன். 

உண்மையில் புதுக்கோட்டை குடும்பம் மட்டுமல்ல அந்த மைதானத்தில் இருந்த எல்லா மாணவர்களும் பெற்றோர்களும் அந்த கதையைக் கேட்டார்கள் என்பதை நான் பேசி முடிந்ததும் உணர்ந்தேன். 

அந்த மாணவியும் ஊக்கம் பெற்று தேர்வு மையம் நோக்கிச் சென்றார். 

இன்று காலை வங்கி மேலாளரான நண்பன் அலைபேசியில் அழைத்தான். 

‘’அண்ணன் ! உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ‘’

‘’சொல்லுப்பா! என்ன விஷயம் ?’’

‘’ரிசர்வ் பேங்க் எக்ஸாம் பிரிப்பேர் பண்ணிட்டி இருக்கன் அண்ணன்.’’

‘’வாவ். சூப்பர். கிரேட்’’

‘’ஹெவி பிரிபரேஷன்ஸ். காலை நாலு மணிக்கு எழுந்திருச்சு ஏழு மணி வரைக்கும். அப்புறம் ஈவினிங் பேங்க் விட்டு வந்தா நைட் எட்டு மணியிலிருந்து 11 மணி வரைக்கும் மூணு மணி நேரம். தினமும் ஆறு மணி நேரத்துக்குக் குறையாம அண்ணன். ‘’

‘’பிரிபரேஷன் எத்தனை நாளா போகுது?’’

‘’ரெண்டு மாசமா’’ 

‘’நோட்டிஃபிகேஷன் எப்ப வந்தது?’’

‘’இன்னும் வரல. ஒரு மாசம் ஆகும்’’

‘’தம்பி ! நோட்டிஃபிகேஷன் வர்ரதுக்கு முன்னாடியே பிரிபரேஷன் ஆரம்பிச்சிட்ட. சக்ஸஸ் உறுதி தம்பி.’’

நண்பன் ரிசர்வ் வங்கித் தேர்வில் வெல்வான். 

Monday 13 March 2023

நள சரிதம் (சிறுகதை)

 

நள சரிதம்

 

கலியபெருமாள் எனது நண்பர். எனது பட்டறைக்கு தனது இரு சக்கர வாகனத்தைக் கொண்டு வரும் போது பழக்கமானவர். அவர் நல்ல மனிதர் அதனால் நல்ல நண்பரும் கூட. முதல் நாள் தனது டி.வி.எஸ் 50 வாகனத்தை பழுது பார்க்க பட்டறைக்குக் கொண்டு வந்தார். அதே நேரத்தில் ஒரு என்ஃபீல்டு வாகனம் வந்தது. அதில் உள்ள பழுது என்ன என்பதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தோம். என்ஜின் சத்தத்தை அவதானித்து தனது அபிப்ராயங்களைத் தெரிவித்தார். அவர் சுட்டிய திசையில் என்ஃபீல்டு வாகனத்துக்குள் அகழ்ந்து சென்று கொண்டிருந்தோம். அவர் உத்தேசித்த சிக்கலே இருந்தது. அவர் விரும்பிய வண்ணமே தீர்வும் எட்டப்பட்டது. முதல் சந்திப்பிலேயே எங்களுக்குள் பரஸ்பர மரியாதையும் புரிதலும் ஏற்பட்டது.

‘’தம்பி ! எனக்கு 18 வயசு இருக்கும் போது எங்க குடும்பத்துல மூணு வேலி நிலம் இருந்துச்சு தம்பி. அப்பா என்ஃபீல்டு வச்சுருந்தாரு. என் கூட பொறந்தவங்க 3 அக்காங்க. மூணு பேருக்கு கல்யாணம் பண்ணது போக நாலு ஏக்கர் நிலம் மட்டும் இப்ப கையில இருக்கு. எல்லாரையும் நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்து எல்லாரும் நல்லாயிருக்காங்க. அப்பா தவறிட்டாரு. வைத்தீஸ்வரன் கோவில்ல ஒரு மாவு அறைக்கிற மில் லீஸுக்கு எடுத்து நடத்துனன் தம்பி. அதுல கொஞ்சம் நஷ்டம். அப்பா என்ஃபீல்டை விக்க வேண்டியதாயிடுச்சு. அடுத்து என்ஃபீல்டுதான் வாங்கணும்னு ரொம்ப நாள் வண்டியே வாங்காம இருந்தன். ரொம்ப நாள்னா நாலு அஞ்சு வருஷம். அப்புறம் ஒரு டிவிஎஸ் 50 வாங்கிட்டன். என் சம்சாரம் சொல்லுவாங்க. ’’கடந்த காலம் ஞாபகம். நம்மோட விருப்பங்களை எதிர்காலத்துல ஏத்திடறோம். ஆனா நிகழ்காலம் மட்டும்தான் சாஸ்வதம்’’ அப்படீன்னு. ‘’

நான் அவரை முதல் சந்திப்பிலேயே அண்ணன் என அழைக்க ஆரம்பித்தேன். அவர் முதல் சந்திப்பிலேயே தனது வாழ்க்கை குறித்த ஒரு கோட்டுச் சித்திரத்தை வரைந்து விட்டார்.  அவரது கிராமம் எனது டவுனிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. நேராக எனது பணிமனைக்கு வருவார். பின்னால் இருந்த தோட்டத்துக்கு சென்று கை கால் முகம் கழுவுவார். கண்ணாடியைப் பார்த்து நெற்றியில் சந்தனம் வைத்துக் கொள்வார்.

‘’தம்பி. கை கால் முகம் கழுவுனா புதுசு ஆனா மாதிரி இருக்கு தம்பி. அரைமணி நேரம் முகம் காத்துல பட வந்தது. கிராமத்து வயல்ல ஆளுங்க நாம சொன்ன விதமா வேலை செஞ்சாங்களா இல்லையான்ற கவலை . வீட்டுக்கார அம்மா கிளம்பும் போது நம்மள இடிச்சு சொன்ன வார்த்தைகள். தம்பி ! அவங்க அவ்வளவு கடுமையா சொல்றாங்கன்னா தப்பு என் மேல தான் இருக்கும். இதெல்லாமே இங்க வந்து முகம் கழுவுனால் ஒன்னுமே இல்லாம போய்டுது. நான் ஃபிரெஷ்ஷா என்னோட வேலையைப் பார்ப்பேன். ‘’

அண்ணன் மனைத்தரகராகவும் இருந்தார்.

‘’தம்பி ! மெட்ராஸ் பார்ட்டி ஒன்னு டவுன்ல ஒரு கல்யாண மண்டபம் வாங்கிக் கொடுன்னு கேக்குது. அதுக்குத் தான் டிரை பண்றேன்’’

அவர் இடம் முடிக்கவும் செய்வார். பத்து ஏக்கர் இருபது ஏக்கர் நிலம் வாங்கித் தருவது அவருக்கு இயல்பான வேலை. பிரதேசத்தின் பல கிராமங்களில் அவருக்கு வேண்டியவர்கள் இருப்பார்கள். எங்கு சென்றாலும் டிவிஎஸ் 50ல் தான் செல்வார்.

‘’தம்பி அரசியல்ல ரொம்ப தீவிரமா இருந்திருக்கன். ஒரு தடவை நம்ம தொகுதிக்கு எம்.எல்.ஏ கேண்டிடேட்க்கு கட்சி தலைமைக்கு மூணு பேரு கொண்ட லிஸ்ட் போச்சு. அந்த லிஸ்ட்ல என்னோட பேரும் இருந்துச்சு.’’

அவரது வாய்ப்பு நூலிழையில் தவறியிருக்கிறது. மீதமிருந்த இரண்டு பேரில் ஒருவருக்கு சீட் கிடைத்திருக்கிறது.

‘’அந்த தடவை மாநிலம் முழுக்கவே கட்சி தோத்துது தம்பி. நம்ம தொகுதியிலயும். நான் நின்னிருந்தாலும் ஜெயிச்சிருக்க முடியாது. சம்சாரம் நாலு ஏக்கர் நிலம் பிழைச்சுதுன்னு சொன்னாங்க. அவங்க சொன்னது உண்மைதான்.’’

கிராமத்திலிருந்து டவுனுக்கு வாரத்துக்கு இரு முறை வருவார். யாரையாவது கூட அழைத்துக் கொண்டு வருவார். ஆஸ்பத்திரிக்கு. பள்ளியில் சேர்க்க. கல்லூரியில் சேர்க்க. ரயில் ஏற்றி விட. ரயில் நிலையம் சென்று அழைத்து வர. இடம் காட்ட . வயல் காட்ட. அவருக்கு நானாவித அலுவல்கள் இருக்கும்,. பட்டறைக்கு வந்தால் அப்போது பட்டறையில் இருக்கும் எல்லாருக்கும் தேனீர் ஆர்டர் செய்வார். எனது உதவியாளர்கள் எவரையும் அனுப்ப மாட்டார். அவரே சென்று ஆர்டர் சொல்லி விட்டு வருவார். சமயத்தில் தேனீர் கிளாஸ்களை தேனீர் தூக்கில் வைத்து அவரே எடுத்து வருவார். தேனீருக்கான தொகையை கடைக்குச் சென்று கொடுத்து விட்டு தனது வேலைகளைப் பார்க்கச் செல்வார்.

அண்ணன் நான்கு ஆண்டுகளாக பட்டறைக்கு வரவில்லை. அவரது மகள் தஞ்சாவூரில் பொறியியல் கல்லூரியில் பயின்றாள். அதனால் தஞ்சாவூருக்கு தனது ஜாகையை மாற்றிக் கொண்டார். செமஸ்டர் லீவ் விட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டும் கிராமத்துக்கு வருவார். அப்போது கிராம வேலையே அவருக்கு சரியாக இருக்கும். அவரது பெண்ணுக்கு பொறியியல் பட்டம் பெற்ற அடுத்த ஆண்டே ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துணை மேலாளராக வேலை கிடைத்தது.

‘’மனசு சந்தோஷமா இருக்கு தம்பி. கிராமத்துல இருந்து பாப்பா ஒவ்வொரு நாளும் டவுன் பஸ் பிடிச்சு பள்ளிக்கூடத்துக்கு படிக்கப் போகும் போதெல்லாம் அப்பாகிட்ட இருந்த மூணு வேலி நிலம் நம்ம கிட்ட இருந்திருந்தா டவுன்ல வீடு எடுத்து அங்க தங்கிட்டு படிக்க வைச்சிருக்கலாமேன்னு ஒவ்வொரு நாளும் நினைப்பேன். கைக்கும் வாய்க்கும் பத்தாம நாலு ஏக்கரை வச்சுகிட்டு ஒரே திண்டாட்டம் தம்பி’’

அண்ணன் ஒரே உற்சாகமாக இருந்தார்.

‘’பாப்பா என்கிட்ட சொல்லியிருக்கு. புரபேஷன் பீரியட் முடிஞ்சதும் ஒரு என்ஃபீல்டு வாங்கித் தரண்ணு. பிடிவாதம் பிடிக்குது தம்பி’’

அண்ணனுக்கு என்ஃபீல்டு வாகனத்தின் மேல் உள்ள ஆர்வம் அனைவரும் அறிந்தது.

அன்று வந்ததுதான். அதன் பின் மூன்று மாதம் கழித்து தான் வந்தார். ஆனால் அடையாளம் தெரியாத அளவு அவரது தோற்றம் மாறியிருந்தது. பட்டறையில் நாங்கள் அனைவரும் பதறி விட்டோம். விஷப்பூச்சி ஒன்று கடித்து விட்டது என்றும் மருத்துவம் பார்ப்பதாகவும் சொன்னார். ஒரு விஷப்பூச்சி கடித்து ஒருவர் அடையாளம் தெரியாத அளவு ஆகிவிட முடியுமா என்னும் அதிர்ச்சி எங்களுக்குள் மிக ஆழமாக இருந்தது.  அதன் பின் ஆறு மாதம் கழித்து வந்தார். அவர் தோற்றம் முழுக்க மாறியிருந்தது. இன்னும் சொல்லப் போனால் அவரது தோற்றம் பொலிந்தும் மேலும் துலக்கம் பெற்றும் இருந்தது.

‘’தம்பி உங்ககிட்ட விஷப்பூச்சிக்கடின்னு சொன்னேன்ல. கொஞ்சம் விபரம் மாத்தி சொன்னன். நீங்க கவலைப்படுவீங்கன்னு. என்னை பாம்பு கடிச்சுடுச்சு தம்பி. அத பாம்புன்னும் சொல்ல முடியாது. பாம்புக்குட்டின்னும் சொல்ல முடியாது. மீடியம் சைஸ்னு வச்சுக்கங்க. காலைல நாலு மணிக்கு போர்ஷெட்டுக்கு போறன். அப்ப கால்ல ஏதோ கடிச்ச மாதிரி இருந்துச்சு. நான் நகராக அப்படியே நின்னுட்டன். டார்ச் அடிச்சு பாக்கறன். நல்ல பாம்பு ஒன்னு என் செருப்பயும் என் காலையும் சேத்து கடிச்சுட்டு இருக்கு. செருப்புல மேஜர் போர்ஷனும் என் கால்ல மைனர் போர்ஷனும் கடி இருந்துச்சு. அந்த பாம்பை பகல்ல பாக்கனும்னு என் கைக்கெட்டின தூரத்துல இருந்த சாக்குக்குல்ல அந்த பாம்போட வாலை பிடிச்சு உள்ள போட்டு கட்டி வச்சுட்டேன். இந்த மாதிரி பாம்புக்கடியை முறிக்கற மூலிகைச் செடியை வயல்ல வளக்கறன். சர சரன்னு அங்க போய் அதோட இலையை பரிச்சு வெத்தலையோட சேர்த்து சர சரன்னு மென்னு சாறை முழுங்கிட்டே இருந்தேன். வீட்டுக்கார அம்மாவை எழுப்பவும் இல்லை. அவங்க கிட்ட சொல்லவும் இல்லை. பொழுது விடிஞ்சது. எனக்கு ஒன்னும் செய்யல. சாக்கை அவுத்து பகல் வெளிச்சத்துல பாம்பைப் பார்த்தேன். நல்ல பாம்புதான். அவுத்து கீழே கொட்டுனதும் சர சரன்னு ஓடிடுச்சு. அத பாத்தப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது தம்பி. அதுவும் நம்மள மாதிரி ஒரு ஜீவன் தானே.’’

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வியப்பும் அதிர்ச்சியும் சேர்ந்த ஒரு உணர்வு.

‘’ஹாஸ்பிடல் போய் ஊசி போட்டுக்கலயா?’’

‘’இல்லை தம்பி’’

‘’ஏன் ரிஸ்க் எடுத்தீங்க’’

‘’விஷம் முறிஞ்சிருச்சு தம்பி. இல்லன்னா சகஜமா இருக்க முடியாது. மயக்கம் வரும். நுரை தள்ளும். பாம்பு கடிச்ச எத்தனை பேரை நான் டவுன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்திருப்பன்’’

அதன் பின் மூன்று மாதங்கள் அவர் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்திருக்கிறது.

‘’மூணு மாசம் கழிச்சு தோல் முழுக்க கொப்புளம் கொப்புளமா வந்துருச்சு தம்பி. உடம்பு முகம் எல்லாம் துளி இடம் கூட பாக்கி இல்லாம புண்ணா ஆகிடுச்சு. பாக்கவே முடியாத உருவமா ஆயிட்டன்.’’

அதன் பின்னர் தஞ்சாவூருக்கு சென்று ஒரு மருத்துவரைச் சந்தித்திருக்கிறார்.

‘’ரயில்ல தான் போயிருந்தேன் தம்பி. துணைக்கு என்னோட ஃபிரண்ட் ஒருத்தர கூட்டிட்டுப் போனேன். நீங்க என் கூட பாத்திருப்பீங்க. உயரமா தாடி வச்சுட்டு ஒருத்தர் என் கூட வருவாரே!’’

நாங்கள் அண்ணனுக்கு என்ன ஆயிற்று என்ற கவலையில் இருந்ததால் எங்களால் அவர் சொன்ன நபர் யார் என்று கூட சிந்திக்க முடியவில்லை.

‘’ஒரு போர்வையை உடம்பு முழுக்க போத்தியிருந்தன். டாக்டர் என் முகத்தைப் பாத்தாரு. அவர் ரூம்ல இருந்த அவரோட அசிஸ்டெண்ட் டாக்டர் நர்ஸ் எல்லாரையும் வெளிய போகச் சொன்னாரு. உடம்பு முழுக்க இருக்கு டாக்டர்னு சொன்னன். அது  பகல் நேரம் . அவர் ரூமோட லைட் எல்லாம் ஆஃப் பண்ணாரு. சூரிய வெளிச்சம் ரூம்ல இருந்தது. ரூம் ஸ்கிரீனை இழுத்து விட்டாரு. ரூம் ஒரே இருட்டா இருந்தது. இந்த மாதிரி இருட்டுல மூணு மாசம் இருக்கணும். அதான் உங்களுக்கான டிரீட்மெண்ட்னு சொன்னாரு.’’

‘’பாம்பு கடிச்சதுண்ணு சொன்னீங்களா?’’

‘’என்ன தம்பி அத சொல்லாம இருப்பேனா. எல்லாத்தையும் சொன்னன் தம்பி’’

மூன்று மாதம் வீட்டில் ஒரு அறையில் முழு இருட்டில் இருந்திருக்கிறார். மெழுகுவர்த்தி வெளிச்சம் கூட உடல் மீது படக்கூடாது என்பது மருத்துவரின் அறிவுரை.

‘’அந்த அனுபவம் எப்படி இருந்தது அண்ணன்?’’

‘’தாயோட கர்ப்பத்துல பத்து மாசம் எல்லாரும் இருந்துட்டு தானே வந்திருக்கோம். அது போல தான் இதுவும். மூணு மாசம்’’

மூன்று மாதம் நிறைந்த பின் மூன்று மாதத்துக்குப் பின் முதல் முறையாக குளித்திருக்கிறார்.

‘’தோல் மேலே உள்ள புண்ணெல்லாம் செதில் செதிலா பேத்துக்கிட்டு வந்திடுச்சு தம்பி. அந்த செதில் எல்லாத்தையும் எடுத்தப்பறம் புதுசா இளந்தோல் மட்டும் இருந்துச்சு. நான் ஒரு புது மனுஷனா ஆயிட்டதா நினைச்சன்.’’

‘’மஹாபாரதத்துல ‘’நள சரிதம்’’னு ஒரு கதை வருது. அதுல நளச் சக்கரவர்த்திக்கு ஒரு பாம்பு கடிச்சு அவரு உருவம் மாறிடுது. ரொம்ப வருஷம் கழிச்சு தான் அவருக்கு பழைய உருவம் திரும்ப கிடைக்குது. அந்த கதை மாதிரி தான் இருக்கு உங்க கதை’’

‘’அட ஆமா தம்பி. நீங்க சொல்றது சரிதான்’’

அண்ணனுடைய மகள் அவரை என்ஃபீல்டு வாங்கச் சொல்லி வற்புறுத்துவதால் ஷோ ரூமுக்கு சென்று ஒரு என்ஃபீல்டு புக் செய்வோம் என்றார் அண்ணன்.

*****

 

 

Thursday 9 March 2023

ஏன்

நண்பர்கள் என்னிடம் ஓயாமல் வலியுறுத்தும் விஷயம் ஒன்று உண்டு. பொது விஷயங்களில் விளைவுகள் குறித்து சிந்திக்காமல் சட்டென ஈடுபட்டு விடுகிறேன் என்பது. நண்பர்களின் இந்த கூற்றை நான் ஆராய்ந்து பார்க்கிறேன். நண்பர்கள் நினைப்பது போல விளைவுகள் குறித்து சிந்திக்காமல் சட்டென ஈடுபடுவது இல்லை. ஒரு முறைக்கு பலமுறை யோசித்தே செயல்படுகிறேன். 

நமது ஜனநாயக அமைப்பில் உயர் அதிகாரம் படைத்தவர்கள் எண்ணிக்கை சில ஆயிரங்கள் மட்டுமே இருக்கும். ஜனநாயக அமைப்பின் - அரசின் - ஊழியர்கள் நாடெங்கும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். நாட்டு மக்கள் அவர்களைத் தான் தினமும் சந்திக்கின்றனர். தங்கள் பணிகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். எண்ணிக்கையில் கோடிக்கணக்கில் இருக்கும் ஊழியர்களே நாட்டின் வரி வருமானத்தில் பெரும் பகுதியை தங்கள் ஊதியமாகப் பெறுகிறார்கள். அவர்கள் பணி ஒழுங்குடன் இருக்க வேண்டியதும் விதிமுறைக்கு உட்பட்டு நடக்க வேண்டியதும் மிக அவசியமான ஒன்று.

இன்று காலை நடந்த வங்கி விவகாரத்தில் , வங்கி ஊழியர்கள் ஆண்டுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வருமானமாகப் பெறுகிறார்கள். அவ்வளவு தொகையை ஊதியமாகப் பெறும் ஒருவர் பின்பற்ற வேண்டிய மிகக் குறைந்தபட்ச தார்மீகம் என ஒன்று இருக்கிறது. அது இல்லாமல் போனதால் தான் இந்த விஷயத்தை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டு செல்வது என முடிவு செய்தேன். 

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என்று பதிவில் தெரிவித்திருந்தேனே தவிர நாகரிகம் கருதி வங்கியின் பெயரைத் தெரிவிக்கவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவை தளத்தில் வெளியிட்ட போதும் வங்கியின் பெயரை ******** என்றே குறிப்பிட்டிருந்தேன். வங்கி மேலாளரிடம் புகாரைக் கூறினேன். வங்கியின் பிராந்திய அலுவலகத்துக்கும் புகாரைச் சொன்னேன். அளிக்கப்பட்ட பதில் திருப்தியாக இல்லை என்னும் போது தான் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். 

என்ன நடக்கும் ? மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு விஷயம் செல்லும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வங்கியின் பிராந்திய அலுவலகத்துக்கு ஃபோன் செய்து இவ்வாறான ஒரு புகார் வந்துள்ளது ; சட்ட விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யுங்கள் எனக் கூறுவார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மேற்படி வங்கியின் மாவட்டத்தில் உள்ள பிற கிளைகளிலும் இந்த விஷயம் விவாதப் பொருளாக ஆகும். பலருடைய கவனம் இதில் விழுவதால் விதிமுறைகள் பின்பற்றப்பட ஒரு வாய்ப்பு உருவாகும். 

பொது விஷயங்களில் ஈடுபடும் தோறும் எனது நம்பிக்கை அதிகமாகிறதே தவிர குறைவது இல்லை.   

மாவட்ட ஆட்சியருக்கு ஒரு விண்ணப்பம்

 அனுப்புநர்

*.***
*******
********
**********

பெறுநர்

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

********

ஐயா,

பொருள் : மயிலாடுதுறை *******வங்கி கிளையில் விவசாய நகைக்கடன் செலுத்தச் செல்லும் பொதுமக்களை வங்கி ஊழியர்கள் ஏப்ரல் 2ம் தேதிக்கு மேல் செலுத்துமாறு கூறுவதையும் பொதுமக்கள் நகைக்கடன் கணக்கில் வரவு வைக்க கொண்டு வரும் பணத்தை சேமிப்புக் கணக்கில் வரவு வைக்குமாறு கூறுவதையும் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு வருதல் - பொதுமக்கள் நகைக்கடன் செலுத்தி தங்கள் நகைகளை மீட்டுக் கொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டு விண்ணப்பம்

இன்று காலை காசோலை ஒன்றை ரொக்கமாக மாற்ற மயிலாடுதுறை ****** *** க்கு சென்றிருந்தேன். அப்போது ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி பணம் செலுத்தும் படிவத்தை நிரப்பித் தருமாறு கேட்டுக் கொண்டார். அவருக்கு உதவும் விதமாக படிவத்தில் விபரங்களை நிரப்பினேன். அப்போது அவர் ஒரு விஷயத்தைத் தெரிவித்தார். 

அதாவது, அவர் மேற்படி வங்கியில் பெற்ற விவசாய நகைக்கடனை வட்டியுடன் செலுத்தி நகையை மீட்டுச் செல்ல வந்திருக்கிறார். ஆனால், வங்கியின் ஊழியர்கள் ‘’ நிதி ஆண்டின் இறுதி மாதமாக இருக்கிறது ; எனவே நகைக்கடனில் நீங்கள் செலுத்தும் தொகையை வரவு வைக்க முடியாது ; தொகையை சேமிப்புக் கணக்கில் செலுத்தி விட்டு செல்லுங்கள். ஏப்ரல் 2ம் தேதிக்குப் பின்னர் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையை நகைக்கடன் கணக்குக்கு மாற்றி நகையை மீட்டுக் கொள்ளுங்கள்’’ என்று கூறியிருக்கின்றனர். மேலும் ‘’வங்கியில் தணிக்கை நடைபெறுகிறது ; எனவே இப்போது நகையை மீட்க முடியாது ‘’ என்றும் கூறியிருக்கின்றனர். 

வங்கி ஊழியர்கள் விவசாய நகைக்கடனை மீட்க வந்த வங்கி வாடிக்கையாளர்களிடம் அளித்துள்ள பதில் கீழ்க்காணும் வகைகளில் சட்ட மீறலும் விதிமீறலும் ஆகும். 

1. நகைக்கடன் பெற்றவர் நகைக்கடனை அடைக்க வங்கிக்கு வருவாரெனில் அவர் செலுத்தும் தொகையை நகைக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டியது வங்கி ஊழியர்களின் கடமை. அவர் தொகையை முழுமையாகச் செலுத்துவார் என்றால் வங்கி ஊழியர்கள் அவரது நகையை அவருக்குத் திருப்பித் தர வேண்டும். நகைக்கடன் கணக்கில் முழுத் தொகையை செலுத்தாமல் பகுதித் தொகையை செலுத்துவார் எனில் அவரது கடன் அசல் குறைந்து வட்டியும் குறையும். எனவே நகைக்கடன் கணக்கில் பணம் செலுத்த வந்த ஒரு வாடிக்கையாளரிடம் பணத்தைப் பெற்று கணக்கில் வரவு வைக்காமல் ஏப்ரல் 2ம் தேதிக்கு மேல் வந்து நகைக்கடன் கணக்கில் பணம் செலுத்துங்கள் என்று கூறுவது சட்டத்துக்கும் வங்கி விதிமுறைகளுக்கும் புறம்பானது. 

2. ஏப்ரல் 2ம் தேதிக்கு மேல் பணம் செலுத்துங்கள் என்று கூறுவதால் 23 நாட்களுக்கான கூடுதல் வட்டியை வாடிக்கையாளர்கள் செலுத்த நேரிடும். இது வாடிக்கையாளர்களுக்கு பொருளியல் இழப்பை உண்டாக்கும் செயல். 

3. வங்கியில் தணிக்கை நடைபெறுவதற்கும் வங்கியின் வாடிக்கையாளர் தான் அடகு வைத்த நகையை திரும்பப் பெறுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தணிக்கை நடைபெறுவதால் நகையை அளிக்க முடியாது என்று கூறுவதும் ஏப்ரல் 2ம் தேதிக்கு மேல் அதனால் வரச் சொல்வதும் ஏற்கத்தக்கது அல்ல. 

4. நிதி ஆண்டு இறுதியில் வங்கியின் டெபாசிட் உயர்த்திக் காட்ட வேண்டும் எனில் வங்கி ஊழியர்கள் வங்கியின் வாடிக்கையாளர்களிடமும் பொதுமக்களிடமும் சேமிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி டெபாசிட் பெற வேண்டுமே அன்றி நகைக்கடன் செலுத்த வந்தவர்களிடம் சேமிப்புக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யக் கூறுவது முறையானது அல்ல. 

5. இந்த விஷயம் குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது வங்கியின் வாடிக்கையாளர்கள் மேலும் பலர் தங்களுக்கும் இதே பதில் அளிக்கப்பட்டதாகக் கூறினர். வங்கியின் மேலாளரை சந்தித்து ஊழியர்கள் அளித்த பதிலைக் கூறினோம். வங்கி மேலாளரும் அதே பதிலைக் கூறினார். 

6. இந்த மாதம் முழுதும் நகைக்கடன் மீட்க வரும் வாடிக்கையாளர்களிடம் இதே விதமான பதில் அளிக்கப்பட்டு அவர்கள் நகைக்கடனுக்காகக் கொண்டு வரும் தொகை வரவு வைக்கப்படாமல் போகும் எனில் ஒரு நாளைக்கு சராசரியாக பத்து வாடிக்கையாளர்கள் தங்கள் நகைக்கடனாக ரூ. 50,000 செலுத்த வந்து செலுத்த வாய்ப்பு மறுக்கப்பட்டு செல்வார்களேயாயின் அத்தொகை ஒருநாளைக்கு ரூ.5,00,000 ஆகும். இந்த மாதத்தின் 23 வங்கி வேலைநாட்களில் அத்தொகை ரூ. 1,15,00,000 ( ரூபாய் ஒரு கோடியே பதினைந்து லட்சம் ) ஆகும். 

அரசு எந்திரம் என்பது ஆயிரம் செவிகளும் ஆயிரம் விழிகளும் கொண்டது. அரசு எந்திரம் ஆயிரம் செவிகளும் ஆயிரம் விழிகளும் கொண்டது என்பதனாலேயே அது சமூக ஒழுங்கை நிலைநாட்டும் திறன் பெற்றுள்ளது. ஒரு இந்தியக் குடிமகனாக இந்த விஷயத்தை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன். விவசாய நகைக்கடன், விவசாயிகள் தொடர்புடைய விஷயம் என்பதாலும். 

இது குறித்து விசாரித்து விபரம் கேட்டறிந்து மேற்படி வங்கியில் நகைக்கடன் பெற்றுள்ள விவசாயிகளும் பொதுமக்களும் வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் நகைக்கடனைச் செலுத்தி நகைகளைத் திரும்பப் பெற்றுச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். சட்டத்துக்கு புறம்பாகவும் வங்கி விதிமுறைகளுக்குப் புறம்பாகவும் நடக்காமல் மாவட்டத்தில் உள்ள வங்கிகள் விவசாய நகைக்கடன் விஷயத்தில் சட்டத்தின் படியும் விதிமுறைகளின் படியும் நடப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,

*****

இடம் : மயிலாடுதுறை
தேதி : 09.03.2023

திறனற்றவர்கள்

இன்று காலை ஒரு காசோலையை ரொக்கமாக மாற்றுவதற்காக வங்கிக்குச் சென்றிருந்தேன். விவசாயக் குடும்பத்து பெண்மணி ஒருவர் பணம் செலுத்தும் படிவத்தை எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார். படிவத்தின் விபரங்களை நிரப்பத் தொடங்கினேன். 

அவர் வங்கியில் நகைக்கடன் பெற்றிருக்கிறார். பணத்தினை செலுத்தி நகையை மீட்க வந்திருக்கிறார். வங்கியின் நகை மதிப்பீட்டாளர் அவருடைய நகைக்கடன் சீட்டைப் பார்த்து விட்டு ‘’ வங்கியில் தணிக்கை நடைபெறுகிறது. நகைக்கடன் கணக்கில் இப்போது பணம் செலுத்த முடியாது. நிதி ஆண்டு இறுதியாக இருக்கும் மாதம். உங்களுடைய சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்துங்கள். ஏப்ரல் 2ம் தேதிக்குப் பின்னர் சேமிப்புக் கணக்கிலிருந்து நகைக்கடன் கணக்குக்கு மாற்றி நகையை மீட்டுக் கொள்ளுங்கள் ‘’ என்று கூறியிருக்கிறார். 

நான் அந்த பெண்மணியை அழைத்துக் கொண்டு வங்கி மேலாளரிடம் சென்றேன். வங்கி மேலாளரும் அவ்வாறே கூறினார். 

இந்தியாவில் அந்த வங்கியின் எந்த கிளையிலிருந்து  வேண்டுமானாலும் மேற்படி நகைக்கடன் கணக்குக்கு  தொகையை செலுத்த முடியும். முழுத் தொகையும் பிற கிளைகளிலிருந்து செலுத்த முடியாதே தவிர மொத்த கடன் மற்றும் வட்டியில் ரூ.500 குறைத்துக் கொண்டு செலுத்த முடியும். அதே கிளையில் நிச்சயமாக செலுத்த முடியும். 

இது ஒரு வாடிக்கையாளரின் உரிமையைப் பறிக்கும் செயல். வங்கி ஊழியர்கள் முடிக்க வேண்டிய கடனை அடுத்த நிதி ஆண்டுக்கு நகர்த்துகின்றனர். நகைக்கடன் தொகையை சேமிப்புக் கணக்கில் செலுத்தச் சொல்லி வங்கியின்  சேமிப்புக் கணக்குத் தொகையை உயர்த்திக் காண்பிக்கின்றனர். இவ்வாறான செயலைச் செய்வதற்கு வங்கி ஊழியர்கள் வெட்கப்பட வேண்டும். நகைக்கடன் பெற்றவர்கள் கடனைச் செலுத்த தயாராக இருந்த போதும் அவர்களுக்கு 23 நாள் வட்டியை அதிகமாக்கி செலுத்தச் சொல்ல வங்கிக்கு எந்த உரிமையும் இல்லை. 

அந்த பெண்மணி சேமிப்புக் கணக்கில் தனது தொகையை செலுத்தி விட்டு சென்றார். 

வீட்டுக்கு வந்து அந்த வங்கியின் பிராந்திய அலுவலகத்துக்கு ஃபோன் செய்து குறிப்பிட்ட வங்கியில் இவ்வாறு நிகழ்கிறது என்று தெரிவித்தேன். இவ்வாறு இன்னொருத்தருக்கு நிகழாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். 

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஊழியர்களின் திறனின்மை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 

Sunday 5 March 2023

மக்களுடன்

நண்பர் கடலூர் சீனு ‘’அன்னம்’’ சிறுகதையை வாசித்த பின் அதனைக் குறித்து தளத்தில் ஒரு பதிவை எழுதினேன். அவரை நேரில் சந்திக்க விரும்பினேன். மறுநாள் கடலூரில் புத்தகக் கண்காட்சி துவங்குவதாகவும் எனவே மறுநாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோ கடலூர் வருமாறு கேட்டுக் கொண்டார்.  

ஊரிலிருந்து சிதம்பரம் 40 கி.மீ சிதம்பரத்திலிருந்து கடலூர் 50 கி.மீ. முன்னர் ஊரிலிருந்து சிதம்பரம் செல்ல ஒரு மணி நேரமும் அங்கிருந்து கடலூர் செல்ல ஒரு மணி நேரமும் என ஒரு கணக்கு உண்டு. அந்த இரண்டு மணி நேரம் இப்பொது மூன்றே கால் மணி நேரமாக ஆகி விட்டது. ரயிலில் சென்றால் இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம். ஆனால் வீடு ஊரின் கிழக்குக் கோடி ரயில் நிலையம் ஊரின் மேற்கு கோடி. ரயில் நிலையம் சென்றடைவது ஒரு பெரும் பயணம் போல் இருக்கும்.

ஒரு நாள் அரை நாள் வெளியில் சென்றால் எனக்கு ஒரு பழக்கம் உண்டு. அவ்வாறு புறப்பட்டுச் செல்லும் போது என்னுடைய இரு சக்கர வாகனத்தை வீட்டில் வைத்து விட்டு சென்று விடுவேன். குடும்பத்தினருக்கு எனது வாகனம் நிற்பதைப் பார்க்கும் போது நடந்து சென்று திரும்பும் தூரத்திற்கு மட்டும் நான் சென்றிருப்பதாகத் தோன்றும். எனவே வீட்டிலிருந்து பேருந்து நிலையத்துக்கு நடந்து செல்வேன். அவ்வாறு நடக்கையில் இந்த பாதையில் தான் தினமும் பள்ளிக்கு நடந்து சென்றேன் என்பதை நினைவுகூர்வேன். கடைவீதியைத் தாண்டி நடந்து கொண்டிருந்த போது அரசு விரைவுப் போக்குவரத்தின் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து எதிரில் வந்தது . வண்டியை நிறுத்தி ஏறிக் கொண்டேன். சீனு ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டை பேருந்து தாண்டியதும் அலைபேசியில் அழைக்குமாறு சொன்னார். பேருந்து கடலூர் சென்றடைந்ததும் சீனு இணைந்து கொண்டார்.

புத்தகக் கண்காட்சி மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஒரு பகுதியில் நடைபெறுகிறது. மஞ்சக்குப்பம் மைதானம் மிகப் பெரிய ஒன்று. புத்தகக் கண்காட்சி ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர். காற்றோட்டம் மிகுந்த அரங்குகள். பெரிய அகலம் கொண்ட மையப் பாதை. மையப்பாதை முழுவதும் மின்விசிறி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடிநீருக்கான ஏற்பாடுகள் அரங்குக்கு வெளியே இருந்தது. பொதுவாகவே கடலூர் மாவட்டத்தினர் திருமண மண்டபங்களில் அலங்காரம் ஏற்பாடுகள் பூவேலைப்பாடுகள் ஆகியவற்றை மேற்கொள்வதில் வல்லவர்கள். நூறு ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. கடலூர் சிறை நூலகத்துக்கு புத்தகங்களை நன்கொடை அளிக்கும் விதமாக தமிழ்நாடு சிறைத்துறையால் கண்காட்சி வாயிலிலேயே  ஒரு நன்கொடைப் பெட்டி அமைக்கப்பட்டிருந்தது.

புத்தகக் கண்காட்சி முழுக்க சுற்றினோம். மக்கள் மெல்ல குழுமிக் கொண்டிருந்தனர். அ.லெ.நடராஜன் எழுதிய ‘’சுவாமி விவேகானந்தர் வரலாறு’’ என்னும் நூலை வாங்கினேன்.

மாலை ரயிலைப் பிடித்து ஊர் வந்து சேரலாம் என கடலூர் ரயில் நிலையம் வந்தோம். எதிர்பாராத அதிர்ச்சியாக ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் அந்த நேரத்துக்கு இருந்தது. நான் பயணிகள் வண்டி ஒன்றையே உத்தேசித்திருந்தேன். சீனுவுடன் பேசிக் கொண்டிந்தேன். சீனுவுடன் உரையாடுவது எப்போதுமே ஓர் இனிய அனுப்வம். புத்தக வாசிப்பைத் தாண்டி பல்வேறு விஷயங்களில் ஆர்வமும் ஈடுபாடும் அனுபவமும் கொண்டவர். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வட இந்தியப் பயணம் மேற்கொள்கிறார். அதன் பின் ஒரு ஹம்பி பயணம் இருப்பதாகச் சொன்னார்.

ரயிலில் நல்ல கூட்டம். அமர இடம் இல்லை. எனினும் வண்டி 40 நிமிடத்தில் சிதம்பரம் வந்து சேர்ந்தது. சிதம்பரத்தில் எங்கள் பெட்டியிலிருந்து பயணிகள் பலர் இறங்கினர். இடம் கணிசமாகக் காலியானது. சிதம்பரத்தில் ஓர் ஆந்திரக் குடும்பம் ஏறியது. எட்டு பேர் கொண்ட குடும்பம். விஜயவாடா அருகில் அவர்களுடைய சொந்த ஊர். தமிழ்நாட்டுக்கு ஷேத்ராடனம் செய்ய வந்துள்ளனர். முதலில் திருவண்ணாமலை. பின்னர் சிதம்பரம். அதன் பின் கும்பகோணம், ஸ்ரீரங்கம், மதுரை. அதற்கடுத்து இராமேஸ்வரம். எனது மோட்டார்சைக்கிள் பயணத்தில் நான் பயணித்த ஆந்திராவின் ஊர்கள் குறித்து அவர்களிடம் சொன்னேன். அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அவர்கள் குடும்பத்தில் ஒன்பது வயது சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் மொஹித் சாய். மொஹித் என்ற சொல்லின் பொருள் என்ன என்று கேட்டான். அவன் தன் அன்னையிடம் கேட்டான். அன்னை தன் அலைபேசியில் கூகுள் செய்து மொஹித் என்பதன் பொருள் அழகு, வசீகரம் என்று சொன்னார். மொஹித் அன்னையின் பெயர் கனகதுர்க்கா. விஜயவாடாவில் கோவில் கொண்டுள்ள தெய்வத்தின் பெயர். எட்டு பேர் குழுவில் ஒருவராயிருந்த மொஹித் பாட்டியின் பெயர் பத்மாவதி. திருப்பதி தாயாரின் பெயர். மொஹித் சுறுசுறுப்பு மிக்க அழகான சிறுவன். அவனது பெயரின் அர்த்தம் அறிந்து கொண்டதில் அவனுக்குப் பெரும் மகிழ்ச்சி.

ரயில் சீர்காழி வந்ததும் எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். அவர் ரயில் நிலையம் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறினார். இரு சக்கர வாகனம் எடுத்து வந்து வண்டி ஸ்டேண்டில் வைத்து விட்டுச் சென்றிருந்தால் ந்ண்பரை சிரமப்படுத்த வேண்டியிருக்காது.

மொஹித் குடும்பத்தினரிடம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தேன். இனிய உரையாடல். பிரிய மனமின்றி பிரியாவிடை கொடுத்தார்கள். மொஹித் மறக்க இயலாத ஒரு சிறுவன். அர்ஜூனன் இவ்வாறு தான் ஒரு சிறுவனாக இருந்திருப்பான். பீமன் இப்படித்தான் இருந்திருப்பான். அங்கதனும் அனுமனும் கூட இவனைப் போலவே இருந்திருப்பார்கள்.   

Thursday 2 March 2023

அன்னம் - சிறுகதை - கடலூர் சீனு

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுது பேர் தன்னை நீக்கி பிணமென்று பெயரிட்டு  காட்டில் சுட்டு நீரில் மூழ்கி நினைப்பொழியும் மயானமும் மயானத்தின் சூழலும் இந்தியர்களின் அகத்துக்கு மிகவும் பக்கத்தில் உள்ள ஒன்று. எதன் பொருட்டும் உண்மையைக் கைவிட மாட்டேன் என்ற உறுதியுடன் மயானத்தின் பிணங்களை எரித்துக் கொண்டிருந்த ராஜா ஹரிச்சந்திரன் கதை இன்றும் தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமத்தில் இரவுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. யக்‌ஷப் பிரசன்னத்தில் யக்‌ஷன் இந்த உலகின் பெருவியப்பு என்ன எனக் கேட்கும் வினாவுக்கு விடையாக யுதிர்ஷ்ட்ரன் மயானத்துக்குச் செல்லும் பிணங்களை தினமும் பார்க்கும் மனிதர்கள் மனித வாழ்க்கையை சாஸ்வதமாகக் கருதுவது உலகின் பெருவியப்பு என பதில் சொல்கிறான். 

‘’அன்னம்’’ சிறுகதை ஒரு மயானத்தின் பின்புலத்தில் விரிகிறது. இலுப்பையும் எருக்கும் மண்டிக் கிடக்கும் மயானம் சீரான புல்வெளிகள் கொண்ட கொன்றைப்பூக்கள் பூத்துக் குலுங்கும் குரோட்டன் செடிகள் வளர்க்கப்படும் இடமாக காலகதியில் பரிணாமம் பெற்றிருக்கிறது. சுமங்கலியான ஒரு மூதாட்டி மரணித்த பின் எரியூட்டப்பட மயானத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறாள். தவிர்க்க இயலாத சில சூழ்நிலைகளால் பிணம் அங்கே வந்து சேர தாமதமாகி விடுகிறது. உறவினர்கள் அசௌகர்யமான மனநிலையுடன் எரியூட்டல் எப்போது நிகழும் என காத்திருக்கிறார்கள். 

மயானத்தின் தோற்றம் வேறுவிதமாக இருப்பதைக் காணும் கதைசொல்லி அந்த வளாகத்தினுள் நுழைகிறான். அங்கே ஒரு எம்டன் வாத்து இருக்கிறது. அந்த வாத்து தனது இணையை சில மாதங்களுக்கு முன் இழந்திருக்கிறது. தனக்கு நெருக்கமான ஒரு உயிரின் சாவினை சமீபத்தில் எதிர்கொண்டிருக்கிறது. 

அந்த வாத்தினை அந்த வளாகத்தின் பணியாளரான ஒரு பெண்மணி வளர்த்து வருகிறார். தான் உண்ணும் உணவை பகுத்தளித்து அந்த வாத்தை வளர்க்கிறாள். பிணங்களின் வாயில் போடப்படும் வாய்க்கரிசியையும் வாத்து உணவாக உண்கிறது. 

சற்று தாமதமாக மயானத்துக்கு வரும் நடுவயது இளைஞன் மரணித்த மூதாட்டியின் முன் அமர்ந்து கேட்பவர் முதுகெலும்பு சில்லிடும் வகையில் ஒப்பாரி வைக்கிறான். ஒப்பாரியில் அவன் கூறும் சொற்களிலிருந்து அந்த மூதாட்டி அந்த இளைஞன் சிறுவனாயிருந்த போது அவன் குடும்பத்தாரின் ஆதரவு இல்லாமல் தனித்து விடப்பட்ட போது அன்னமிட்டு வளர்த்தவர் என்பதை அறிய முடிகிறது. அனைவரும் திகைத்துப் போய் நிற்கையில் அந்த வாத்து ஒப்பாரி வைப்பவன் அருகில் வந்து தன் குரலை எழுப்புகிறது. அவனை அழாதே என அந்த வாத்து சொல்வதாக அதன் மொழி புரிந்த வாத்து வளர்க்கும் பெண் சொல்கிறாள். 

இந்த சிறுகதையின் வடிவம் மிக நேர்த்தியாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆங்காங்கே விரவி இருக்கும் உணர்வுப் புள்ளிகளை வாசகன் தனது கற்பனையால் நிரப்பிக் கொள்வானாயின் - விரிவாக்கிக் கொள்வானாயின் அவன் இந்த சிறுகதையின் வடிவ ஒருமையை உணர்வான். 

மயானம் என்பது மீதமின்றி பிடி சாம்பல் ஆகும் இடம். இந்திய மரபில் பிடி சாம்பல் என்பது இறுதி அல்ல. இன்னும் சில இருக்கின்றன. சடங்குப் படி அந்த பிடி சாம்பலான அஸ்தி நீரில் கரைக்கப்பட வேண்டும். எரியூட்டல் என்பது ஜீவனின் அன்னமயகோசத்தை சாம்பலாக்கும் நிகழ்வு. ஜீவனின் அன்னமயகோசம் முற்றிலும் சாம்பலாகிப் போனாலும் அது செய்த புண்ணியம் அப்போதும் அதனைப் பற்றி நிற்கும். 

மயானப் பணியாளரின் அன்னை அன்னத்தையும் பிரியத்தையும் நம்பிக்கையையும் அளித்தவர். பணியாளப் பெண்மணியும் வாத்தை தன் அன்னையின் வடிவமாகக் கண்டு அதற்கு அன்னமிட்டவர். மறைந்த மூதாட்டியும் ஒரு ஆதரவற்ற சிறுவனுக்கு அன்னமிட்டு வளர்த்தவர். இந்த மூவருக்கும் பொதுவாக இருப்பது அன்னம். இந்த மூவரும் அருகருகே வரும் இடமாக அன்னமய உடலை எரித்து சாம்பலாக்கும் சுடுகாடு அமைந்திருப்பது புனைவு ரீதியில் சிறப்பானது. 

வாழ்த்துக்கள் சீனு !

புனைவுலகில் நீங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பது நண்பனாக எனது விருப்பம்.