Tuesday 31 December 2019

விட்டு விடுதலையாகி

ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எத்தனையோ நிகழ்ச்சிகள். சம்பவங்கள். செயல்கள். சந்தோஷங்கள் மற்றும் துக்கங்கள். 

இந்த உலகம் அழகானது. மனிதர்களால் மட்டுமே ஆனதல்ல உலகம். மனிதர்களுக்காக மட்டும் ஆனதும் அல்ல உலகம். 

இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் எத்தனை எளியது மானுட வாழ்க்கை.

நாளில் சில கணங்களுக்கேனும் நமது இருப்பில் இருக்கும் இனிமையை உணர்வோம் எனில் வாழ்க்கைதான் எத்தனை இனியது.

இனிய வாழ்வு மானுடர் அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்று இந்த கணம் நினைக்கிறேன்.

எப்போதும் துணையிருப்பது பாரதியின் சொற்கள்.

மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; 
கனவு மெய்ப்பட வேண்டும், 
கைவசமாவது விரைவில் வேண்டும்; 
தனமும் இன்பமும் வேண்டும், 
தரணியிலே பெருமை வேண்டும். 
கண் திறந்திட வேண்டும், 
காரியத்தி லுறுதி வேண்டும்; 
பெண் விடுதலை வேண்டும், 
பெரிய கடவுள் காக்க வேண்டும், 
மண் பயனுற வேண்டும், 
வானகமிங்கு தென்பட வேண்டும்; 
உண்மை நின்றிட வேண்டும். 
ஓம் ஓம் ஓம் ஓம்

Sunday 29 December 2019

ஒரு புதிய துவக்கம்

புத்தாண்டுத் தீர்மானங்கள் வாசித்து விட்டு நண்பர்கள் அழைத்து ஊக்கப்படுத்தினர். செயலாக்க முடிவு செய்துள்ள விஷயங்கள் மிக நல்ல தன்மை கொண்டவை; பயனளிக்கக் கூடியவை என்றனர். 

நுகர்வுச் சூழல் நம்மைச் சூழ்கிறது. நமது பிள்ளைப் பிராயத்திலிருந்தே நாம் நம்மை அறியாமல் பலவித சமூகப் பழக்கங்களால் சூழப்படுகிறோம். இரண்டு நூற்றாண்டுக்கு முன்னால், தமிழ்நாடு பிரிட்டிஷ் ஆட்சியில் உணவுப் பஞ்சத்துக்கு ஆளானது. அதன் விளைவாக மக்கள்தொகையில் கணிசமான எண்ணிக்கையை பஞ்ச சாவு விழுங்கியது. அப்பஞ்சத்தின் விளைவாக இந்த மண்ணில் பாரம்பர்யமாக நிலவிய கல்வியும் சமூக அமைப்பும் இல்லாமல் ஆனது. சக மனிதர்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லாத - சக மனிதர்களை நம்பாத மக்கள் சமூகமாக தமிழ்ச் சமூகம் ஆனது. அதன் விளைவுகளில் ஒன்று உடல் உழைப்பைச் சற்று கீழான இடத்தில் வைத்து மதிப்பிடும் போக்கு. 

இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் மக்களின் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும் விஷயங்களாக தொற்று நோய்களே பெருமளவில் இருந்துள்ளன. உலகளவில் மருத்துவத் துறையில் நிகழ்ந்த ஆராய்ச்சிகள் தொற்றுநோய்களைக் கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்கியுள்ளன. எனினும், வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் இன்று சமூகத்தை ஆட்டிப் படைக்கிறது.

இன்று தமிழ்ச்சமூகத்தில் உணவுப் பற்றாக்குறை இல்லாமல் ஆகியுள்ளது. ஆனால் சமூகத்தில் குறைந்தது 80% பேர் மது அருந்துபவர்களாக ஆகியுள்ளனர். குறைவான உடல் உழைப்பும் மதுவும் பொருத்தமற்ற உணவுமுறையுமே இன்றைய நோய்களுக்கான மூலம். 

நுகர்வு நம்மைக் கட்டற்ற நுகர்வோராக மாற்றியிருக்கும் இந்த காலகட்டத்தில் இந்திய சமூகம் - தமிழ்ச் சமூகம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த பழக்கங்களை - கண்டுணர்ந்து நவீன வாழ்க்கை முறைக்குத் தகுந்தாற் போல அமைத்துக் கொள்ளுதல் மனிதனை நுகர்வோனாக மட்டும் பார்க்கும் முதலாளித்துவப் பார்வைக்கு எதிரான முக்கியமான செயல்பாடாக இருக்கும் என்று பட்டது. 

இன்று காலை அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ஒருவர் அழைத்து காலை 3 மணிக்கே விழிப்பது நல்ல முடிவு என்றார். எழுந்ததும் ஓம் ஓம் ஓம் என  ஒரு மணி நேரம் தொடர்ந்து உச்சரிப்பது மனதை எல்லா விதமான அழுத்தங்களிலிருந்தும் நீங்கியிருப்பதற்கு பெருமளவில் உதவும் என்றார். பின்னர் உடன் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியும் யோகாசனங்களும் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள ஏற்றதாயிருக்கும் என்று தன் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

கர்நாடகாவில் இருந்து ஒரு அழைப்பு. அதிகாலை கண் விழித்தல் நாம் வழக்கமாக இயங்கும் நேரத்தில் நாலில் ஒரு பங்கை சூர்ய உதயத்துக்குள் வழங்கி விடுகிறதே என ஆச்சர்யப்பட்டார். 

ஒரு மனிதன் எவ்வாறு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இங்கே தரவுகள் மட்டுமே இருக்கின்றன. தமிழ்ச் சமூகத்துக்கு அவசியமான உபயோகமான கல்வி அளிக்கப்படவேயில்லை. 

2020 ஒரு புதிய துவக்கமாக அமையட்டும்.

Saturday 28 December 2019

புத்தாண்டு எண்ணங்கள்


நான் திட்டமிடுதலில் நம்பிக்கையும் ஆர்வமும் உள்ளவன். சிறுவயதிலிருந்தே எனக்குத் திட்டமிட்டு பழக்கம் உண்டு. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது சின்ன சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊரின் பல பகுதிகளில் சுற்றுவேன். அப்போது எனக்கு நகரை எந்தெத்த விதங்களில் விரிவாக்கம் செய்யலாம் என்ற யோசனைகள் இருந்துள்ளன. உறவினர்களிடம் கூறுவேன். யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நீ ஏன் இதையெல்லாம் யோசிக்கிறாய் என்பார்கள். யாரோ ஒருவர் யோசனையிலிருந்துதான் பழையனவற்றை மாற்றியமைக்கும் புதிய விஷயங்கள் பிறக்கின்றன என்பதால் ஏன் நான் யோசிக்கக் கூடாது என்று நினைப்பேன். சிலர் பாராட்டுவார்கள். எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார் செய்வதை மிக நேர்த்தியான பணிமுறையாகத் திட்டமிட்டு வடிவமைப்பார். அவரிடம் 25 விழுக்காடு மதிப்பெண்ணுடன் அவர் வகுப்புக்கு வருபவன் 45 மதிப்பெண் பெறுவான். 50 மதிப்பெண் எடுப்பவன் 75 மதிப்பெண் வாங்குவான். 80ஐ 90க்குக் கொண்டு வருவார். அவரிடம் வந்தும் ஓரிருவர் தேர்ச்சியடையாமல் போவர் என்பது அவர்களின் பிரத்யேகமான பிரம்மலிபி.

அவர் காலை 3 மணிக்கு எழுவார். யோகப்பயிற்சிகள் செய்வார். தினமும் நடத்த வேண்டிய பாடங்களை தினமும் படித்து குறிப்பு எழுதுவார். கோயிலுக்குச் சென்று வருவார். பள்ளிக்கு பள்ளி நேரத்துக்கு ஒருமணி நேரத்துக்கு முன்பாகவே வந்து விடுவார். பள்ளி விட்ட பின்னும் ஒரு மணி நேரம் இருந்து விட்டு செல்வார். நான் பத்தாம் வகுப்பு தேர்வு கடைசித் தேர்வு எழுதியதும் அவரிடம் சென்று ஆட்டோகிராஃப் கேட்டேன். ’’தன்னம்பிக்கை நம்மை உயர்த்தும்’’ என்று எழுதி ஆட்டோகிராஃப் இட்டார். தான் ஆசிரியப் பணிக்கு வந்து முப்பது ஆண்டுகள் ஆகி விட்டன; ஒரு மாணவனின் ஆட்டோகிராஃப் புத்தகத்தில் இடும் முதல் கையெழுத்து என்று சொன்னார்.

பின்னர் கல்லூரி சென்றேன். பொறியியல் பட்டம் பெற்ற பின் வணிகத்துக்குள் வந்தேன். வணிகத்தை நிலைநிறுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சி மற்றும் உழைப்பு. லௌகிக வாழ்க்கையின் சவால்களினூடும் என்னுடைய பணிகளைத் திட்டமிட்டே செய்கிறேன். துல்லியத் திட்டமிடலை சில இடங்களில் தளர்த்திக் கொள்ளவும் செய்கிறேன். எப்போதும் இலக்குகள் இருந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றை நோக்கி மெல்லவானாலும் முன்னேறியே செல்கிறேன்.

2020 பிறக்க உள்ளது. இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் ஒரு இந்திய விழாவில் பங்கெடுப்பது எனத் திட்டமிட்டது நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. இந்த ஆண்டு புதிதாக ஒரு அபார்ட்மெண்ட் கட்டத் திட்டமிட்டுள்ளேன். சற்று பெரிய பிராஜெக்ட். இடம் என்னுடைய சொந்த இடம். வீடுகள் கட்டி விற்பனை செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு உடலைப் பராமரித்தலுக்கு முக்கியத்துவம் தரலாம் என்று நினைக்கிறேன். கடந்த சில வாரங்களாக நண்பரின் சிகிச்சைக்காக உடனிருந்தது நம் சமூகம் எவ்விதம் ஆரோக்கியம் தொடர்பாக எவ்விதத்திலும் உதவியற்ற சமூகமாக இருக்கிறது என்பதை அறிய வைத்தது. எனவே இந்த ஆண்டு உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தர உள்ளேன்.

ஒரு நாளின் செயல்திட்டம்

1. காலை 3 மணிக்கு எழுதல்.

2. நல்லெண்ணெய் மூலம் வாயைத் தூய்மை செய்தல் (ஈறு, பற்களை வலுவூட்டக்கூடியது)

3. ஓங்காரம் உச்சரித்தல் ( ஒரு மணி நேரம்)

4. நடைப்பயிற்சி (7 கி.மீ)

5. சூர்ய நமஸ்காரம்

6. யோகப் பயிற்சிகள், தியானம்

7. புத்தக வாசிப்பு (காலை ஒன்றரை மணி நேரம், மாலை ஒன்றரை மணி நேரம்)

8. மாலை 6 மணிக்குள் இரவு உணவை அருந்துதல்

அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.   

Friday 27 December 2019

ஆக்கம்

பறவைச் சிறு உடல் மென் துடிப்பிலிருந்து
அருவிச் சாரலின் நுண்மையிலிருந்து
புலரியின் மேகச் சிவப்பிலிருந்து
ஒரு துளி மழையிலிருந்து
மலைப்பாதையின் மௌனத்திலிருந்து
ஆர்வம் கொண்டு கிளை பரப்பும் தீயிலிருந்து
வான்மீனின் இமைத்தலிலிருந்து
அணு அணு அணுவாய்
நீ
உருவம் கொண்டிருக்கிறாய்

Thursday 26 December 2019

12 விழாக்கள் – சில வினாக்கள்


2020ம் ஆண்டில் 12 மாதங்கள் 12 விழாக்கள் எனத் திட்டமிட்டிருந்தேன். நண்பர்கள் பலர் இது குறித்து அறிந்து இது தொடர்பாக சில கேள்விகளை எழுப்பினர். எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அதிகமாக எழுப்பப்படும் கேள்விகளையும் அதற்கு நான் அளித்த பதில்களையும் இங்கே குறிப்பிடுகிறேன்.

1. பயணத் திட்டத்தை உருவாக்கி விட்டீர்களா?

பயணத்திட்டம் என நண்பர்கள் உருவகித்துக் கொள்வது எப்போது கிளம்புகிறோம் எப்போது திரும்பி வருகிறோம் என்பதை மட்டுமே. என்னுடைய அனுபவத்தில் எனக்கு புறப்படுதலே முக்கியமானது. புறப்படுதல் என்றால் புறப்படும் கணம். அதற்கு முன் என்னுடைய லௌகிகப் பணிகளை முடித்து விடுவேன். பணிகள் முடிந்ததுமே புறப்படும் மனநிலை வந்து விடும். பயணம் குறித்த உற்சாகம் பிறந்து விடும். உற்சாகம் உருவானதுமே கிளம்பி விடுவேன்.

12 விழாக்களுக்கான சுருக்கமான பயணத்திட்டம் இதுவே. ஒவ்வொரு மாதமும் 7 நாட்கள். விழா நடைபெறும் இடத்துக்கு ரயிலில் செல்ல 2 நாட்கள். விழாவில் மூன்று நாட்கள். ஊர் திரும்ப 2 நாட்கள். (2+3+2=7).

2. பயண ஏற்பாடுகள் செய்து விட்டீர்களா?

பயண ஏற்பாடுகள் எனக் குறிப்பிடுவது ரயில் முன்பதிவு, செல்லும் ஊரில் தங்குமிடம் பதிவு செய்தல் ஆகியவையே. நான் அதற்கு பெரிய முக்கியத்துவம் தர மாட்டேன். நான் வசதிகளுக்கு எதிரானவன் அல்ல; ஆயினும் வசதிகளைப் பொறுத்து பயணத்தை முடிவு செய்பவனும் அல்ல. பயணத் துவக்கத்துக்கான நல்சமிங்ஞை கிடைத்ததும் கிளம்பி விடுவேன்.

3. முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யவில்லையெனில் பயணம் எப்படியிருக்குமோ என்ற கவலை ஏற்படாதா?

ஏற்படாது. நான் இந்தியாவெங்கும் சுற்றியவன். எத்தனையோ முறை சுற்றியிருக்கிறேன். செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்ததும் அங்கே அப்போது எனக்கு இருக்கும் மனநிலைக்கு ஏற்றார் போல் தங்குமிடத்தை ஏற்பாடு செய்து கொள்வேன். பொதுவாக நான் தங்குமிடத்துக்கு குறைவாகவே செலவு செய்வேன்.

4. செல்லும் ஊரில் என்ன செய்வீர்கள்?

காலை சூர்யோதயத்துக்கு முன் ஊர் சுற்ற கிளம்பி விடுவேன். புதிய நிலத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே புத்துணர்ச்சி தரும். அந்த ஊரை அங்கே வாழும் மனிதர்களைப் பார்த்தவாறு சாலைகளில் நடந்து செல்வேன். மனம் உற்சாகமாக இருப்பதால் அப்பொழுதுகள் துல்லியமாக நினைவில் பதிவாகும். மனித முகங்களின் வழியாக நாம் அறியும் இந்தியா ஒன்றுண்டு.

5.செல்லும் ஊரில் எங்கு செல்வீர்கள்?

அந்த ஊரில் இருக்கும் தொன்மையான ஆலயங்களுக்குச் செல்வேன். இந்தியாவின் தொல் ஆலயங்கள் என்பவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கும் உயிரோட்டமான உணர்வை உணரச் செய்பவை. பின்னர் அங்கேயிருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் செல்வேன். இந்திய வரலாற்றில் அந்த ஊர் எவ்விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் பார்ப்பேன். அந்த ஊரின் பரபரப்பான கடைவீதிகளையும் சந்தைகளையும் சென்று காண்பேன். அந்த ஊரின் பொருளாதாரமும் மக்கள் வாழ்நிலையும் மக்கள் மனோபாவமும் எதனால் ஆனது என்பதைக் குறித்த நேரடி மனப்பதிவை அதன் மூலம் பெற முடியும்.

6. விழாக்கள் இந்த ஆண்டு பயணத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பது எதனால்?

ஒரு பண்பாட்டு விழா என்பது அச்சமூகம் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் கொண்டுள்ள சமூக ஒருங்கிணைப்பை வெளிப்படுத்துவது. விருந்தினர்களை சிறப்பாக உபசரிப்பது என்பதை இந்திய மரபு தனது விழுமியமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்த்தெடுத்துள்ளது. விழாக்களை பல்லாயிரம் மக்களை தம் நகர் நோக்கி வரவேற்கும் வாய்ப்பாகவே இந்தியர்கள் கண்டுள்ளனர். எனவே இந்திய விழாக்கள் நம்மை வருக வருக என அழைக்கின்றன. அந்த பண்பாட்டு அழைப்பை ஏற்றே இந்த ஆண்டு முழுதும் விழாக்கள் என்னுடைய பயணத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

7. சக பயணிகளுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

நாம் பயணிக்க உள்ள விழாக்கள் குறித்து இடங்கள் குறித்து அங்குள்ள மக்கள் குறித்து இந்தியப் பண்பாட்டிற்கு அந்த விழா வழங்கியுள்ள பங்களிப்பு குறித்து எழுதப்பட்டுள்ளவற்றை வாசிக்கவும். விழாக்கள் நம் பேதங்களை அறிந்து அவற்றை நீக்கிக் கொள்வதற்கான வாய்ப்பே. எல்லா விழாக்களும் அவ்வாறே.
விழா நடைபெறும் நகரங்களில் அலைந்து திரியுங்கள். உங்கள் ஆழ்மனம் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும்.

8. புறப்படுவதற்கு முன்னான மனநிலை எப்படி இருக்கிறது?

ரிஷிகேஷில் ஒவ்வொரு அந்திப் பொழுதும் கொண்டாட்டமே. மாலை 4 மணியிலிருந்து அந்த நகரமே கங்கையின் படித்துறைகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும். இந்தியாவின் வெவ்வேறு பிரதேசங்களை அடையாளம் காட்டும் வெவ்வேறு வண்ண ஆடைகள் அணிந்த மக்கள் திரள். நெற்றிக் குங்குமம் அணிந்த பெண்கள், குதூகலிக்கும் குழந்தைகள், வண்ண மலர் நிறைந்த தீபத் தொன்னைகளை வாங்கி கையில் வைத்திருக்கும் ஆண்கள், இறை நாமத்தை எப்போதும் உச்சரிக்கும் முதியவர்கள், உலகெங்கிலுமிருந்து குவிந்திருக்கும் பயணிகள் என ரிஷிகேஷ் அணி பூண்டிருக்கும்.

கங்கைச் சுடராட்டுக்கு முன்பான மனநிலை இப்போது இருக்கிறது.     

Wednesday 25 December 2019

கற்கை நன்றே


சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் காந்திய அறிஞர் திரு. தரம்பால் அவர்களின் The Beautiful Tree நூலை வாசித்து விட்டு அதனைப் பற்றி என்னிடம் மிகவும் சிலாகித்துப் பேசினார். அந்நூல் உ.வே.சாமிநாத ஐயரின் ‘’என் சரித்திரம்’’ நூலை நினைவுபடுத்தியதாகச் சொன்னார். உ.வே.சா கல்வி கற்ற காலத்தில் இந்தியக் கல்விமுறை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முழுமையாகக் கைவிடப்பட்டு இருந்தது. கைவிடப்பட்ட நிலையிலும் தனது இறுதி மூச்சைத் திரட்டிக் கொண்டு செயல்பட்டதன் சித்திரமே அந்நூலில் உள்ளது என்று சொல்லி உ.வே.சா எழுதிய ‘’மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்’’ என்ற நூலை வாசிக்கச் சொன்னேன்.

சுந்தர ராமசாமி ’’விஷ வட்டம்’’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார். தமிழகத்தின் இன்றைய சூழலைக் குறிக்க அதுவே சரியான வார்த்தை.

தமிழ்நாட்டின் கல்வி சீரழிந்துள்ளது. திராவிட இயக்கங்களும் இடதுசாரிகளும் தமிழ்நாட்டின் கல்வியைச் சீரழித்துள்ளனர். தமிழ்நாட்டின் எல்லா கல்விச் சீர்கேடுகளுக்கும் இவர்களே எல்லா விதத்திலும் காரணம்.

திராவிட இயக்கம் ஒரு பாப்புலிச இயக்கம். ராஜாஜி தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்கள் அதிக நேரம் இயங்க வேண்டும் என்றார். இருக்கும் குறைவான கட்டமைப்பில் அதிக அளவில் மாணவர்களுக்குக் கல்வி தர பள்ளிகள் இரண்டு ஷிஃப்ட்டாக செயல்பட வேண்டும் என்று எண்ணினார். இது மாணவர்களுக்குப் பயன் தரக்கூடியது. ஆசிரியர்களுக்கு அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய அவசியத்தை உண்டாக்குவது. எனவே அதனை ஆசிரியர்கள் எதிர்த்தனர். ஆசிரியர்களுக்கு ராஜாஜி மேல் இருந்த எதிர்ப்பை தனக்கு சாதகமாகத் திருப்பிக் கொண்ட திராவிட இயக்கம் ‘’ஷிப்ட் முறையை’’ குலக்கல்வி திட்டம் எனத் திரித்து அதற்கு ஜாதி சாயம் பூசினர். தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியர்களுக்கும் திராவிட இயக்கத்துக்குமான உறவு அங்கிருந்து துவங்குகிறது. இன்றுவரை நீடிக்கிறது. தமிழ்நாட்டின் கல்விச் சூழல் அழிவை நோக்கிச் சென்றதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று இது.

மூன்று தலைமுறைகள் கடந்து விட்டன. அரசாங்கம் அளிக்கும் கல்வி என்பது சமூகங்களில் பெரும் மாற்றத்தை உருவாக்கக் கூடிய சாதனம். தமிழ்நாட்டில் அது சரியாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதே யதார்த்தம். இன்றும் மத்திய அரசாங்கத்தின் நிதியும் உலக வங்கி அளிக்கும் நிதியுமே தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களின் உள்கட்டமைப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. நமக்கு அருகாமையில் இருக்கும் ஒரு அரசுப் பள்ளிக்குச் சென்று அதில் உள்ள புதிய கட்டிடம் எந்த நிதியில் கட்டப்பட்டுள்ளது, ஆய்வகம் எந்த நிதியில் கட்டப்பட்டுள்ளது, கழிவறைகள் எந்த நிதியில் கட்டப்பட்டுள்ளது என்று பார்த்து தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களே அவை. மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்துகிறது அல்லது உலக வங்கியிடமிருந்து கடன் பெறுகிறது. கல்விக்காக மாநில அரசாங்கம் செலவழிக்கும் தொகை என்பது என்ன? செலவழிக்கும் முழுத் தொகையும் ஆசிரியர்களின் ஊதியத்துக்காக ஒதுக்கப்படுகிறது.

மிக அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மாணவர்களின் கற்றலை அளவிட அளவுகோல் எது? தேர்வுகள். ஆனால் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் சொல்கிறது. எனவே அனைவரும் ஒன்பதாம் வகுப்பு வரை எதுவும் கற்காமல் வந்து சேர முடியும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எதுவும் கல்லாமல் வந்து சேர்ந்த மாணவன் தேர்ச்சி அடையாமல் போவானே? ஆசிரியர்களும் அரசாங்கமும் பார்த்தார்கள். மதிப்பீட்டை தளர்வாக வைத்து அதிலும் ஜோடிக்கப்பட்ட மதிப்பெண்களை வழங்கி மாணவர்களைத் தேர்ச்சி அடையச் செய்கின்றனர். உலகில் எந்த சமூகத்திலாவது இது போன்ற ஓர் அவலம் இருக்குமா என்று தெரியவில்லை.

நண்பர்களின் குழந்தைகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆரம்பக் கல்வியைப் பயில்கின்றனர். அங்கே அடிப்படைப் பயிற்சியே நூல் வாசிப்பு தான். ஒரு வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் ஒரு நூல் அளிக்கப்படும். அதனை மாணவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டும். அந்நூல் குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அந்நூல் குறித்து பதினைந்து நிமிடம் பேச வேண்டும். வாசிப்பு, எழுத்து, பேச்சு ஆகியவற்றுக்கான பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் சுயமாக மாணவர்கள் சிந்திக்கும் திறனைப் பெறுகிறார்கள்.

அரசுப் பள்ளிகளின் திறனின்மைக்குக் காரணம் திராவிடக் கட்சிகள். ஈசலெனப் பெருகியிருக்கும் தனியார் பள்ளிகளை நடத்துபவர்கள் திராவிடக் கட்சிகள். தனியார் பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை திராவிடக் கட்சியினரைச் சார்ந்தவை. அவர்களுடைய கல்லூரிகளில் சேர்க்கை எவ்விதத்திலும் குறையக் கூடாது என்பதற்காகவே பொறியியல் பட்டப்படிப்பில் சேர இருந்த குறைந்தபட்ச மதிப்பெண் நீக்கப்பட்டு மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சியடைந்த அனைவரும் பொறியியலில் சேரலாம் என்று உருவாக்கப்பட்டது. எல்லா நுழைவுத் தேர்வுகளுக்கும் எதிராக இருப்பவர்கள் திராவிடக் கட்சிகள்.

எந்த சமூகத்தின் கல்வியும் அச்சமூகம் எதிர்கொள்ளும் பிரதிபலிக்கும் சூழலைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் பள்ளிகள் மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டிய குறைந்தபட்ச விஷயங்கள் என நான் கருதுவதைப் பட்டியலிட்டுள்ளேன்.

1. பள்ளிக் கல்வியை 12 ஆண்டுகள் பயிலும் ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு இந்திய மாநிலம் அதன் தலைநகரம் அதில் உள்ள மாவட்டங்கள் அங்கு பேசப்படும் மொழிகள் ஆகியவற்றை அறிய வேண்டும்.

2. இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பை முற்றும் அறிந்திருக்க வேண்டும்.

3. இந்தியாவின் முக்கியமான பேரரசுகள் ஆற்றிய மகத்தான மக்கள் நலப் பணிகள் குறித்து அறிய வேண்டும்.

4. இந்திய ராணுவம் குறித்த தகவல்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

5. மனித உடல், நோய்கள், உடற்பயிற்சி மற்றும் யோகா குறித்து விளக்கப்பட வேண்டும். தினமும் எல்லா மாணவர்களுக்கும் அரைமணி நேரம் யோகப்பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

6. ரயில் அட்டவணையைப் பயன்படுத்துதல், ரயில் முன்பதிவு படிவங்கள் நிரப்புதல், வங்கிப் படிவங்களை நிரப்புதல் குறித்து சொல்லித் தர வேண்டும்.

7. வணிகத்தின் அடிப்படைகள் போதிக்கப்பட வேண்டும்.  

Tuesday 24 December 2019

ஒரு மலரில்
எப்போதுமே
வியப்பதற்கோ
புதிதாக நோக்குவதற்கோ
அறியாத ஒன்றை உணர்ந்து கொள்வதற்கோ
அதன்
மென்மணத்தை
பொறியியலை
அளவற்ற தனிமையை
பிரமிப்பதற்கோ
ஒன்று
இருந்து கொண்டே யிருக்கிறது

உன்னுடன்
நடந்த போது
சொன்னேன்

நீ
நுண் உருவங்கள்
சுழன்று பெருகும்
சிவந்த கோலம்
இடப்பட்டிருந்த
கரம் ஒன்றில்
நீண்ட இரு விரல்களுக்கு
இடையே
காம்பு புவி நோக்கியும்
இதழ்கள் வான் நோக்கியும்
மீண்டும் பூத்த
மலரொன்றை
ஏந்தியிருந்தாய்

Monday 23 December 2019

மௌனங்களுடன்
துல்லியமான அமைதியுடன்
பனி பொழிந்து கொண்டிருக்கிறது

துவக்க ஆயத்தங்களை
மேற்கொள்கின்றன
வெளிச்சத்தின் ரேகைகள்

ஒரு புதிய புலரியில்
ஒரு புதிய பகலில்
ஒரு புதிய நாளில்
கிரீச்சிட்டுக் கொண்டிருக்கின்றன
புள்ளினங்கள்

நம்பிக்கையின் பிராத்தனைகள்
ஒலிக்கத்
தொடங்குகின்றன

உயிரை
மலரச் செய்யும்
கனிகளை
மேலும்
இனிமை கொள்ளச் செய்யும்
தானிய மணிகளை
முற்றச் செய்யும்
விதைச்சொல்லை
உச்சரித்தவாறு
சாலையில் நடக்கும்
இந்த ஒற்றைப்பயணி யார்
எங்கிருந்து வருகிறான்
எங்கே செல்கிறான்

Sunday 22 December 2019


மாலை வானின் முதல் விண்மீன்
ஒளிரத் துவங்கும் கணத்தில்
உன் பாதங்கள்
மண் தொடுகின்றன
வான் பார்க்கிறாய்
வலசைப் பறவைகளை
அந்தி அமைதியை
குளிர்ப் பொழுதை
சிற்றகலின் சுடர் மின்னுகிறது
கருவறைத் தெய்வத்தின் முகத்தில்
காற்றில் கரையும் மணியோசை
இரவு என்பது எவ்வளவு நீண்டது
பிரிவைப் போல
நட்சத்திரங்கள் துணையிருக்கும் வெளியில்
உனது மௌனம்
நுண்மை கொள்கிறது
உயிரென

Friday 20 December 2019

நீ எவ்வளவோ கொடுத்திருக்கிறாய்
சாமானியமான
மிகச் சாமானியமான
இந்த உலகில்
எந்த கணமும்
அற்புதக் கணமாகக் கூடும்
சாத்தியத்தை
நீ குறிப்புணர்த்தினாய்
தாகம் தணிக்க
விண் மேகங்கள்
அமிர்தமாய்க் கூட பொழியும்
என்பதைக் காட்டினாய்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு காலடியும்
சிறகசைப்பாய்
ஆவது
கண்டேன்

இந்த கணம்
இந்த உலகம் மீது
இந்த வாழ்க்கை மீது
இந்த மனிதர்கள் மீது
எல்லையற்ற நம்பிக்கை கொள்கிறேன்

Thursday 19 December 2019

மறந்து போதல் என்பது என்ன
சம்பவங்களை மறக்க முடியும்
தேதிகளை மறக்க முடியும்
நினைவில் தப்பி
கிழமைகள் மறந்து போகும்
எடுத்து வைத்துக் கொள்ளாமல்
பொருட்களை மறக்க முடியும்

அன்பை எப்படி மறக்க முடியும்

Wednesday 18 December 2019

ஓயாமல்
அலைவுறும்
துலாத் தட்டுகளில்
உன் முகத்தின் ஒளிக்கு
அடர்த்தியான இருண்ட இரவை
உன் மென்சிரிப்புக்கு
கனக்கும் மௌனத்தை
உன் அன்பிற்கு
தாங்கிக் கொள்ள இயலாத
பிரிவை
இணை வைக்கிறேன்

அவை
தன்னளவில்
எடை கூடுகின்றன
காலத்திற்கேற்றார் போல்
பருவத்திற்கேற்றார் போல்

எப்போதும்
ஓயாமல் அலைவுறுகின்றன
துலாத் தட்டுகள்

Tuesday 17 December 2019

உன்னை எப்படி விட்டுச் செல்வேன்
தன்னந்தனிமையில்
நீர் துளிர்க்கும்
துயரம் தோய்ந்த முகத்துடன்
பிரிவினும்
கொடிது
விட்டுச் செல்லுதல்

Monday 16 December 2019

பிரியங்கள் இருக்கின்றன
அப்படியே
அதிகரித்துக் கொண்டு கூட
அவை தெரிவிக்கப்படாமலேயே போகும்
சொற்கள் மௌனம் கொள்கின்றன
சொற்கள் சங்கடப்படுகின்றன
எப்போதும்
வெளியேறிச் செல்பவன்
பாரங்கள்
இம்முறை கனக்கின்றன

Sunday 15 December 2019

உனக்காக

காத்திருந்த
ஆற்றுப்பாலத்தின் கீழே
சேற்று நிறத்தில்
பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது
வெள்ளம்

இன்றும்
அந்த அரசமரத்தின்
சிற்றகலில்
காற்றில் அலைகிறது
தீபம்
சுடரும் பிராத்தனைகளுடன்

பேருந்தில்
இறங்கும்
பள்ளிக்குழந்தைகள் குழாமில்
அடம் பிடிக்கும் குழந்தைகளில்
சிலர்
அமைதியான குழந்தைகள் ஆயினர்
புதிதாக
சில அடம் பிடிக்கும் குழந்தைகள்
இணைந்து கொண்டன

மாலையின் முதல் நட்சத்திரம்
எப்போதும் போல்
அழகாய்
மிக அழகாய்
இருக்கிறது

அந்திப் பொழுதில்
கவியும்
மென் சோகத்தில்

உன்னைப் பற்றிய
நினைவுகள்
சிதறிப் பரவுகின்றன
திசை எங்கும்

இல்லம் திரும்புதல்
என்பது
எவ்வாறு

Saturday 14 December 2019

சுழலும் பந்துகள்




ஜெனிவாவிலிருந்து நண்பர் கணேஷ் பெரியசாமி அனுப்பிய ஸ்விஸ் மிலிட்டரி கத்தி கைக்கு வந்த பின் நான் விரும்பும் பொருட்கள் பட்டியலில் இருந்த மற்ற பொருட்கள் என்ன என்று பார்த்தேன். பந்துகள். கண்டங்கள் தாண்டி கடல் தாண்டி ஸ்விஸ் கத்தி வந்து விட்டது. பந்துகள் உள்ளூரிலேயே கிடைக்கும் என்பதால் நேற்று விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்றேன். இரண்டு டென்னிஸ் பந்துகள் வாங்கினேன். ஒரு கிரிக்கெட் பந்து. இரண்டு ரப்பர் பந்துகள்.

இன்று ரப்பர் பந்துகளை வைத்து தூக்கிப் போட்டு பிடித்து விளையாடிக் கொண்டிருந்தேன். உற்சாகமாக இருந்தது. பந்து , யானை, ரயில் ஆகியவை என்றுமே உற்சாகம் தருபவைதான். பந்து கையிலிருந்து காற்றில் பறந்து மறுகையை அடையும் போது அதன் அசைவுகளில் சுழற்சியில் மனம் ஈடுபட்டது சந்தோஷம் தந்தது. சிறு வயதில் கையில் ஒரு பந்து கிடைத்தால் உடன் விளையாட யார் இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றும். இப்போது பந்தே ஒரு நண்பன் தான். என்னை உற்சாகப்படுத்தும் நண்பன்.

டென்னிஸ் பந்துகள் மெல்லியவை. கிரிக்கெட் பந்து சற்று இறுக்கமானது. அவற்றையும் வைத்துக் கொண்டு விளையாட வேண்டும். சிறு விளையாட்டு
கூட பெரிய அளவில் உதவி புரிகிறது என்பதே உண்மை. இன்று ஸ்விஸ் கத்தியை வைத்து ஒரு ஸ்கூருவைக் கழட்டினேன்.

பட்டியலில் ஒரு பாக்கெட் ரேடியோ இருக்கிறது. நேற்று ஃபிளிப்கார்ட்டில் பார்த்து வைத்தேன். ஒரு Sony ரேடியோ. அழகாக கச்சிதமாக இருந்தது. பார்த்து வைத்துக் கொண்டேன். இன்னும் ஓரிரு நாளில் ஆர்டர் செய்து விடுவேன்.

கதராடைகள் வாங்க வேண்டும். அதனை வருடப் பிறப்புக்கு முன்னர் கடைசி வாரத்தில் வைத்துக் கொள்ளலாம்.

எனது விருப்பங்கள் இவ்வளவுதான் என்பதில் மகிழ்ச்சி. அவை நிறைவேறி விட்டன என்பது மேலும் மகிழ்ச்சி.  

Friday 13 December 2019

எட்டு தினங்கள்

சென்ற வெள்ளியன்று நண்பருடன் மருத்துவமனை சென்றதிலிருந்து இன்று வரை பல்வேறு விதமான மருத்துவமனைகளில் பல்வேறு விதங்களில் உடனிருந்து விட்டேன். நண்பர் இப்போது நலமாக இருக்கிறார். சென்ற வெள்ளி அவரை மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் அழைத்துச் சென்றேன். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர். அவருடைய உறவினர்கள் அங்கு வந்த பின் ஊருக்கு வந்தேன். அவர் நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். அந்த நான்கு தினமும் தஞ்சாவூர் சென்று பார்த்து வந்தேன். பின்னர் தஞ்சாவூரிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து மயிலாடுதுறை அழைத்து வந்தோம். மறுநாள் இரவே அவரை மருத்துவ ஆலோசனைக்காக ரயிலில் சென்னை அழைத்துச் சென்றோம். நானும் உடன் சென்றேன். நேற்று காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரை ரயில் அடைந்தது. அவர் உறவினர்களுடன் அவரை அனுப்பி வைத்து விட்டு நான் 8 மணி சோழன் எக்ஸ்பிரஸில் ஊருக்கு உடன் புறப்பட்டேன். அவரும் அவரது உறவினர்களும் வீட்டுக்கு வந்து விட்டு செல்லுமாறு வற்புறுத்தினர். ஒரு வாரம் ஊரில் முழுமையாக இல்லாமல் அலைச்சல் இருந்ததால் சில பணிகள் நிலுவையில் இருந்தன. எனவே உடன் கிளம்பினேன். வங்கியில் சில வேலைகள். நேற்று அவற்றைப் பார்த்தேன். ஒரு நண்பருக்கு ரியல் எஸ்டேட் சிக்கல். அவருக்கு சில ஆலோசனைகளைச் சொன்னேன். மனம் முழு ஓய்வு பெற்று இயல்பு நிலைக்கு முற்றும் திரும்பிவிடவில்லை. நேற்று ரயிலில் பயணித்த போது சக பயணிகளில் ஒருவர் முப்பது வயதான ஒரு பெண்மணி. சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து வருகிறார். தனது சிகிச்சை விபரங்களைக் கூறிக் கொண்டு வந்தார். மனம் மிகவும் சஞ்சலமாயிருந்தது. அலைந்து கொண்டேயிருக்கிறேன் என வீட்டாருக்கு மனக்குறை. சில நாட்களாவது வீட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும்.

Thursday 12 December 2019

ஒரு பிரியம்

ஆகஸ்ட் மாதத்தில் எனது நுகர்வு குறித்து ஒரு குறிப்பினை எழுதினேன். சந்தையில் ஆயிரக்கணக்கான பொருட்கள் குவிந்திருக்கின்றன. அவை உற்பத்தி செய்யப்படுவதும் பயன்படுத்தப்படுவதும் பல்வேறு சமூக, பொருளியல் அம்சங்கள் சார்ந்தவை.

சிறு வயது முதலே நான் குறைவான பொருள் நுகர்வுக்குப் பழகியவன். புத்தகங்கள் மீது தீராத விருப்பம் கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம். ஆயினும் இன்றும் ஒரு சிறுவனின் ஆர்வத்துடனேயே பொருட்களைப் பார்க்கிறேன். ஆச்சர்யப்படுகிறேன்.

தீவிர இலக்கிய வாசகரும் சிறந்த புகைப்படக்கலைஞரும் நண்பருமான திரு.கணேஷ் பெரியசாமி அவர்கள் சில வாரங்கள் முன்பு ஸ்விட்சர்லாந்திலிருந்து அழைத்தார். நான் விரும்பும் பொருட்கள் என நான் எழுதியதை அவர் வாசித்திருந்தார். அதில் ஸ்விஸ் கத்தியை நான் விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தேன். அவர் ஸ்விட்சர்லாந்தில் இருப்பதால் எனக்கு அதனைப் பரிசளிக்க விரும்புவதாகக் கூறினார்.


நான் என் ஊரின் கடைத்தெருவுக்குளேயே பிரவேசிக்காமல் சுற்றிக் கொண்டு செல்பவன். நான் விரும்பும் பொருளொன்று கடலும் கண்டங்களும் தாண்டி வருவதென்பதில் ஆர்வமூட்டும் நூதனமான ஒன்று இருப்பதாகத் தோன்றியது.


நண்பரின் பரிசு சில நாட்கள் முன்னால் கூரியரில் வந்து சேர்ந்தது. அழகிய வடிவமைப்பில் என்னுடைய பெயரைப் பொறித்து அனுப்பியிருக்கிறார். மிகக் குறைவான எடையுடன் இருக்கிறது. அந்த சிறு வடிவத்துக்குள் ஒரு கத்தரிக்கோல் உண்டு. ஒரு ஸ்க்ரூ டிரைவர் இருக்கிறது. சிறு லென்ஸ் உள்ளது. காய்கறி நறுக்கும் கத்தி இருக்கிறது.  சட்டைப்பையில் வைத்திருந்தால் கூட பாரமற்றுள்ளது. இதைத் தயாரிக்கும் Victorinox நிறுவனம் உலகப்புகழ் பெற்றது. நூற்றாண்டுகளுக்கும் மேலாக இத்தயாரிப்பில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ஒரு பொருள் பரிசளிக்கப்படும் போது அதனுடன் அன்பின் முடிவற்ற சாத்தியங்களும் பிரியங்களும் இணைந்து விடுகின்றன. நண்பரின் பிரியம் என்னைத் திகைக்கச் செய்கிறது.

தங்கள் அன்பிற்கு நன்றி நண்பரே!

Tuesday 10 December 2019

முடிவற்ற பயணத்தின்
ஒவ்வொரு அடிகளிலும்
மிக மிக மெல்ல
முன்னகர்கிறது
மானுடம்
நம்பிக்கைகளின் வெளியில்
அவரவர்
அவரவர்க்குரிய வெளிச்சத்தைப்
பெறுகின்றனர்
சூரியன்
நிலவு
நட்சத்திரங்கள்
அந்திப் பொழுதில்
ஏற்றப்படும்
மண் அகல் தீபம்

Sunday 8 December 2019

இன்னொரு கனவு


2017ம் ஆண்டு நானும் என்னுடைய நண்பர் ஒருவரும் மோட்டார்சைக்கிளில் மாதேஸ்வரன் மலைக்குச் சென்றோம். மாதேஸ்வரன் மலை கர்நாடக மாநிலத்தில் உள்ளது. மைசூருக்குப் பக்கமானது. அந்த ஊரின் பெயர் அளித்த ஆர்வம் காரணமாக அங்கு செல்ல வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தேன். நண்பர் தனது சென்னை அறைவாசியின்  திருமணம் சேலத்தில் நடைபெறுவதாகச் சொன்னார். காலை மயிலாடுதுறையில் கிளம்பி சேலத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு அங்கிருந்து மாதேஸ்வரன் மலை செல்வதாகத் திட்டம். மயிலாடுதுறை – காட்டுமன்னார்குடி – விருத்தாசலம் – மார்க்கமாக சேலம் சென்றோம். மதியம் அங்கிருந்து புறப்பட்டோம். சேலத்திலிருந்து மைசூர் செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. சேலம் – ஈரோடு – சத்தியமங்கலம் என ஒரு பாதை. இன்னொரு பாதை சேலம் – மாதேஸ்வரன் மலை – மைசூர் என. இரண்டாவது பாதையில் பேருந்துகள் மிகக் குறைவாகவே இயக்கப்படுகின்றன. சேலம் – மேட்டூர் அணை – கொளத்தூர் என செல்லும். காவிரியை ஒட்டியுள்ள ஊர்கள் வழியே செல்லும் பாதை. அந்த பயணப்பாதை மறக்க இயலாதது. சின்னஞ்சிறு மலை கிராமங்கள். ஏராளமான மாந்தோப்புகள். நிசப்தமாயிருக்கும் பாறைகள். நாங்கள் இயற்கையின் அழகில் மனம் தோய்ந்து சென்று கொண்டிருந்தோம். இவ்வாறான கணங்களில் மனதிலிருந்து எல்லா சிறுமைகளும் அகன்று விடும். மனம் தூய பேருவகை கொள்ளும். அந்த உணர்விலேயே இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் சென்று கொண்டிருந்தோம். அங்கே பாலார் என்று ஒரு சிற்றாறு ஒன்று வரும். அங்கிருந்து ஹொகேனக்கல் செல்வதற்கான பாதை பிரியும். கொண்டை ஊசி வளைவுகளைச் சுற்றி சுற்றி மாதேஸ்வரன் மலை சென்று சேர்ந்தோம். சென்றதும் மாதேஸ்வர சுவாமி ஆலயம் சென்று வழிபட்டோம். நான் நாடு முழுதும் சுற்றியவன். நண்பர் முதல் முறையாக மோட்டார்சைக்கிளில் வெளிமாநிலத்துக்கு வருகிறார். அவருக்கு எல்லாமே புதுமையாகவும் நூதனமாகவும் இருந்தது.

மாதேஸ்வரர் ஒரு முனிவர். சிவ பக்தர். இந்த மலைக்கு தவம் புரிய வருகிறார். இவர் தவத்தில் இருக்கும் போது புலியும் மானும் இவர் முன் ஒன்றாக வந்து பணிகின்றன. இவரது கருணை தங்கள் வாழ்வை மேன்மையடையச் செய்ய வேண்டும் என இவரிடம் பணிந்து ஆசி கோருகின்றனர் மலைக்குடிகள். மலைக்குடிகள் அவரைத் தெய்வமெனப் போற்றுகின்றனர். அந்த மலையே சுவாமிகளின் பெயரால் ‘’மாதேஸ்வரன் மலை’’ எனப்படுகிறது. நாங்கள் மாதேஸ்வர சுவாமியை வணங்கினோம்.

காலையிலிருந்து நீண்ட தூரம் பயணித்திருந்ததால் நல்ல பசி. உணவு அருந்தினோம். கர்நாடகாவில் இட்லிக்கு மாவு அறைக்கும் போது உளுந்து மிகக் குறைவாகச் சேர்ப்பார்கள். ஆகையால் இட்லியில் அரிசி மாவின் இனிப்புச் சுவையே அதிகம் இருப்பதால் இட்லி இனிக்கும். சாம்பாரிலும் இனிப்புச்சுவை இருக்கும். எனக்கு அது தெரியும். இந்தியாவில் நீங்கள் ஒரு மாநில உணவை ஒருமுறை உண்டு விட்டால் உங்கள் நாவு அதன் ருசியை இயல்பை பலவருடங்களுக்குப் பின்னும் நினைவில் வைத்திருக்கும். கர்நாடகா எனக்குத் தண்ணீர் பட்ட பாடு. நான் இட்லியை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நண்பர் மிகவும் சிரமப்பட்டார். அவரால் உணவு அருந்த முடியவில்லை என்பதைத் தாண்டி நான் எந்த அல்லலும் இல்லாமல் எப்படி இட்லிகளை விழுங்குகிறேன் என்ற வியப்பு.

எம்.எம்.ஹில்ஸுக்கு (மல்லே மாதேஸ்வரன் மலை என்பதை எம்.எம்.ஹில்ஸ் என்பார்கள்) கிளம்பத் திட்டமிட்ட போதே நண்பரிடம் ஒரு ஸ்வெட்டர் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். அவர் சென்னையைத் தாண்டாதவர். என் உடல் எந்தக் குளிரையும் தாங்கும் என்றார். நான் ஒரு ஸ்வெட்டரை வண்டி பெட்டியில் போட்டு வைத்தேன். அதை எடுத்து அணிந்து கொண்டேன். நேரமாக நேரமாக குளிர் அடர்த்தி கொண்டது. நண்பரால் குளிர் தாங்க முடியவில்லை. நாங்கள் புதிய பகுதியில் ஒரு மணி நேரம் நடந்து சுற்றினோம். இன்னும் அறை ஏதும் போடவில்லை. நண்பருக்கு நான் என்ன அது குறித்த எந்த ஆர்வமும் இல்லாமல் இருக்கிறேனே என்ற எண்ணம். வந்தோம். சாமி கும்பிட்டோம். சாப்பிட்டோம். காலாற நடந்து விட்டு தங்குமிடம் அப்புறம் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என இருந்தேன். கோவிலைச் சுற்றி நடக்கும் போது அங்கே சிலர் அட்டைகளை கோயில் சுவரை ஒட்டி போட்டு போர்வையை போர்த்திக் கொண்டு படுத்திருந்தனர்.

‘’இந்த மாதிரி கோயில் சுவரை ஒட்டி யாத்ரிகள் பலபேரு படுத்திருப்பதைப் போல நாமும் படுத்து விடுவோமா?’’ நான் ஆர்வத்துடன் கேட்டேன்.

நண்பர் பயந்து விட்டார். ‘’பிரபு! இப்பவே எனக்கு குளிர் தாங்கல. ராத்திரி தூக்கமில்லாமல் போச்சுன்னா நாளைக்கு டூ-வீலர் ஓட்ட முடியாது. ஏதாவது லாட்ஜ்-ல ரூம் போட்டுறுவோம். செலவு எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை.’’

‘’நாம யாத்ரி. மாதேஸ்வர சாமியைக் கும்பிட ரொம்ப தூரத்தில இருந்து வந்திருக்கோம். லாட்ஜ் கிடைக்கும்தான். ஆனா ஏதாவது மடம் இருக்குமான்னு பார்க்கலாம்’’

‘’ஒரு புது இடத்துக்கு வந்து இருக்கா இல்லையான்னு தெரியாத மடத்தை எப்படி தேடுவீங்க?’’

‘’நான் நாடு முழுக்க பயணம் செஞ்சவன். எனக்குத் தெரியும். இங்க ஏதாவது இருக்கும்.’’

மலைப்பாதையின் ஏற்ற இறக்கங்களில் நடந்தோம். வழியில் வாழைப்பழத்தை தள்ளுவண்டியில் ஒருவர் தள்ளிக் கொண்டு வந்தார். நண்பர் பழம் வேண்டாம் என்றார். நான் ஆறு பழங்களை வாங்கி ஒவ்வொன்றாக நடந்து கொண்டே தின்று விட்டு தோலை கையில் வைத்திருந்தேன். சில நிமிடங்களில் சில பசு மாடுகள் எதிர்ப்பட்டன. அவற்றுக்கு வாழைப்பழத் தோலை அளித்தேன். அவை நட்பு பாராட்டின.

நண்பர் என்னிடம் சொன்னார்: ‘’நீங்க ஒரு புது ஊர்ல இருக்கறா மாதிரியே இல்ல. ஏதோ பழகின இடத்தில இருக்கறாப் போல இருக்கீங்க”

நான் கணியன் பூங்குன்றனின் வரியைச் சொன்னேன். ‘’யாதும் ஊரே; யாவரும் கேளிர்’’

எங்கள் பாதையில் ஒரு கல்லூரிக் கட்டிடம் போல பெரிதாக ஒன்று எதிர்ப்பட்டது. அதன் வாசலில் ஒரு நாற்காலியை வைத்து கன்னடத்தில் ஏதோ எழுதி வைத்திருந்தார்கள். இங்கே சென்று விசாரிப்போம் என்றேன். தங்குமிடம் காலி இல்லை என்று தானே இவ்வளவு பெரிய போர்டு வைத்திருக்கிறார்கள் என்றார்.

‘’சொல்லவே இல்லையே நீங்கள். என்ன ஆச்சர்யம் உங்களுக்கு கன்னடம் வாசிக்கத் தெரியுமா?’’

‘’எனக்கு கன்னடம் தெரியாது. ஆனா இப்படி ஒரு அறிவிப்பு இருந்தா இதுவாத்தான் இருக்கும்னு யூகிக்கத் தெரியும்’’

‘’நீங்க எதையுமே பெஸிமிஸ்டிக்காத்தான் யோசிக்கறீங்க. உள்ள போவோம். ரூம் வேணும்னு கேளுங்க. நான் சோஃபால ஒக்காந்திருக்கன். இல்லன்னு சொன்னா என்கிட்ட சொல்லுங்க. நான் பேசிப் பாக்கறன்’’

நண்பர் சென்றார். அந்த யாத்ரி நிவாஸின் வரவேற்பாளர் வாசலைச் சுட்டிக் காட்டி நண்பரிடம் ஏதோ சொன்னார். நண்பர் திரும்பி வந்து விட்டார்.

நான் சென்றேன்.

‘’ஜி! நமஸ்காரம். என்னுடைய பெயர் பிரபு. என்னுடைய தொழில் கட்டிடக் கட்டுமானம். நான் ஒரு மோட்டார்சைக்கிள் பயணி. இந்தியாவெங்கும் மோட்டார்சைக்கிளில் பயணிப்பவன். சிறு வயதிலிருந்தே மாதேஸ்வர சுவாமி குறித்து கேட்டிருக்கிறேன். பல நாட்களாக இங்கு வர வேண்டும் என்று நினைத்ததுண்டு. இன்று தான் வர முடிந்தது. நாங்கள் நாளை காலை மீண்டும் சாமி கும்பிட்டு விட்டு கிளம்புகிறோம். இன்று இரவு நமது இடத்தில் தங்க இடம் கிடைக்குமா?’’ நான் ஆங்கிலத்தில் அவரிடம் சொன்னேன்.

வரவேற்பாளர் மிகப் பணிவுடன் என்னிடம் கேட்டார்: ‘’ஜி! நீங்கள் என்ன ஊர்?’’

‘’உங்களுக்குத் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்’’

‘’நன்றாகத் தெரியும் ஜி”

‘’அதற்குப் பக்கத்தில்தான் எங்கள் ஊர்’’

‘’ரொம்ப சந்தோஷம். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. எல்லா ரூமும் ஃபுல்லா இருக்கு. ஆனா ரொம்ப முக்கியமானவங்க வந்தா தர்ரதுக்குன்னு ரெண்டு ரூம் எப்போதும் வச்சிருப்போம். அதில ஒண்ணு தந்துடறன்’’

‘’சரி நீங்க ரெடி பண்ணுங்க. கோயில் வாசல்ல எங்க டூ-வீலர் நின்னுட்டு இருக்கு. நாங்க போய் எடுத்துட்டு வந்திடறோம்’’

நண்பரிடம் வந்தேன். ரூம் ஏற்பாடாகி விட்டது என்று சொன்னேன். என்னிடம் இல்லை என்றார்கள் எப்படி உங்களுக்கு மட்டும் தந்தார்கள் என்று கேட்டார். அதெல்லாம் தொழில் ரகசியம் என்றேன்.

‘’ரூம் தர்ரேன்னு சொல்லியிருக்காங்க. நீங்க இங்கயே இருங்க. நான் போய் வண்டிய எடுத்துட்டு வந்துடறன். அவங்க மனசு மாறிடப் போவுது.’’

‘’மனுஷனை நம்புங்க. நம்பிக்கைதான் வாழ்க்கை. பயணம் எனக்குச் சொல்லிக் கொடுத்தது அதைத்தான்’’

நாங்கள் நடந்து சென்று வண்டியை எடுத்துக் கொண்டு அந்த கன்னட மடத்தின் யாத்ரி நிவாஸுக்கு வந்தோம். அறை தயாராக இருந்தது. முதல் தளத்தில். மடத்தின் முக்கியஸ்தர்களுக்கான அறை.

வரவேற்பாளர் சற்று தயக்கத்துடன், ’’டபுள் ரூமுக்கு ரூ.600 டொனேஷன். உங்க கிட்ட ரூ.200 வாங்கிக்கிறோம். முறையா ரசீது கொடுத்துடுவோம்’’

நண்பர் பாய்ந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை தன் பர்ஸில் இருந்து எடுத்துத் தந்தார்.

நான் வரவேற்பாளரிடம் என்னை சிவராம காரந்தின் வாசகன் என்று சொன்னேன்.

‘’ஜி! அப்படியா?’’

‘’சிவராம காரந்த், பைரப்பா, மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், ஸ்ரீரங்க ஆகிய கன்னட எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்திருக்கிறேன்.’’

‘’ஜி! நீங்க இங்க தங்கறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்’’

அறைக்கு வந்தோம். விசாலமான அறை. பெரிய தனித்தனியான இரண்டு கட்டில்கள். மெத்தை. தூய மெத்தை உறை. தடிமனான கருப்புக் கம்பளி. கூஜாவில் குடிநீர் கொண்டு வந்து வைத்திருந்தனர்.

மலைப்பிரதேசம் ஆகையால் காற்று குளிரால் நிரம்பி எந்த ஓசையும் இல்லாமல் இருந்தது. அந்த மௌனம் அடர்த்தி மிக்கதாக அர்த்தம் கொண்டது.

நண்பர் இந்த நாள் நம்ப முடியாததாக இருக்கிறது என்றார். தனது குழந்தைப் பருவம் மற்றும் பால பருவத்தின் நினைவுகளை சொல்லிக் கொண்டிருந்தார். வென்னீர் கிடைக்குமா என்று பார்க்கிறேன் என ரிசப்ஷனுக்குச் சென்றார். நான் உறங்குகிறேன் என்றேன். உறங்கி விட்டேன். எப்போதும் நான் படுத்தால் ஒரு நிமிடத்தில் உறங்கி விடுவேன். அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள். சின்ன வயதிலிருந்தே அப்படி பழக்கம். எனக்குத் தூக்கம் வராமல் இருந்த நாட்களை ஒரு கை விரலில் எண்ணி விடலாம். அன்றும் உறங்கி விட்டேன். உறக்கத்தில் ஒரு கனவு. சட்டென விழித்து விட்டேன். எழுந்து உட்கார்ந்தேன். லைட் அணைக்காமல் இருந்தது. நண்பர் கட்டிலில் அமர்ந்திருந்தார். நான் கண்ட கனவைச் சொன்னேன்.

‘’இந்த இடம் ஒரு வெட்டவெளியில இருக்கு. சுத்தியும் புதர்க்காடுகள். ஒவ்வொரு ரூமுலயும் ரெண்டு பேர் மூணு பேர் இருக்காங்க. திடீர்னு பயங்கரவாதிகளோட ஒரு குரூப் வருது. அவங்க என்னைத் தேடி வந்திருக்காங்க. அந்த இடத்தோட வாசல் பகுதியில அவங்க பொஸிஷன் எடுக்கறாங்க. தாக்குதலுக்கு அவங்களுக்கு ஆர்டர் கிடைக்குது. ஆனா முன்பகுதில தங்கியிருக்கற யாத்ரிங்க ஜன்னல் கதவுகள் வழியா பயங்கரவாதிகள் மேல தாக்குதல் நடத்தறாங்க. மெஷின் கன் சத்தம். கிரனைட் தாக்குதல். ராக்கெட் லாஞ்சர்ஸ். ஒரே சத்தமா இருக்கு. யாத்ரிகள் எப்படி பயங்கரவாதிகளை தாக்குறாங்கன்னு நான் குழம்பறேன். ஒரு யாத்ரி என்கிட்ட ஓடி வந்து அவங்க உங்களைத் தேடி வருவாங்கன்னு எங்களுக்குத் தெரியும். நாங்க தாக்குதலுக்குத் தயாரா இருந்தோம்னு சொல்றாரு. குண்டுகள் வெடித்து எழும் தீயின் ஒளி எங்கும் பரவுகிறது. புல்லட் காற்றை உரசிச் செல்லும் ஓசை எங்கும் கேட்கிறது. நான் யாத்ரிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்கிறேன். ஒரு பயங்கரவாதியும் தப்ப முடியாது என்கின்றனர். பயங்கரவாதிகளைத் தாக்கும் நீங்கள் யார் என்று கேட்கிறேன். நான் கேள்வி கேட்டவர் ஹா ஹா ஹா என சிரிக்கிறார். நான் ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்கிறேன். ஆம்புலன்ஸ் சைரன் கேட்கிறது. எனது நண்பர் வெளியே செல்கிறார். அங்கே வெடித்த குண்டு ஒன்று ஏற்படுத்திய அதிர்ச்சியில் அவர் கீழே விழுந்து தலையில் லேசான அடிபட்டு ரத்தம் வருகிறது. நான் ஆம்புலன்ஸில் நண்பரை அழைத்துக் கொண்டு செல்கிறேன். அதில் ஒரு மருத்துவர் இருக்கிறார். அவர் நண்பருக்கு சிகிச்சை அளிக்கிறார். நான் மருத்துவரிடம் டாக்டர் ஒன்றும் பயமில்லையே என்று கேட்கிறேன். இல்லை பயமில்லை என்கிறார். என்ன நடக்கிறது என்று கேட்கிறேன். அவர் ஃபோன் வந்தது; நாங்கள் வந்தோம் என்றார். மருத்துவமனைக்கு ஒரு யாத்ரி வந்து ஒரு பயங்கரவாதி கூட தப்பவில்லை என்று சொல்லி விட்டு ஹா ஹா ஹா என்கிறார்.’’

நண்பர் மிரண்டு போய் விட்டார்.

நான் நேரம் அதிகாலையாயிருக்கும் என்று எண்ணி நண்பரிடம் மணி எத்தனை என்று கேட்டேன்.

‘’ரிஸப்ஷன் போனேன். வென்னீர் இருந்தது. கொண்டு வந்தேன். நான் இங்கேயிருந்து அங்க போய்ட்டு வர நேரம் தான். அதிகபட்சம் உங்களை விட்டுட்டு போய் நாலு நிமிஷம் இருக்கும். அதுக்குள்ள ஒரு ரணகளத்தை இங்க உருவாக்கிட்டிங்க”

’’என்னது நான் தூங்கி நாலு நிமிஷம் தான் ஆகுதா?’’

நண்பர் செல்ஃபோனில் நேரத்தைக் காட்டினார். அவர் சொல்வது உண்மைதான்.

‘’நீங்க ரணகளம் ஆக்குனது கூட பெருசுல்ல. அதுல உங்களுக்கு துளி கூட பாதிப்பு இல்லன்னு சொன்னீங்க பாருங்க; அதத்தான் தாங்கவே முடியலை’’

‘’ஏங்க எதையுமே நல்லதா யோசிக்க மாட்டறீங்க. கனவுலயும் நான் உங்க மேல எவ்வளவு அக்கறையா இருந்திருக்கேன் பாருங்க”

வென்னீர் குடித்து விட்டு படுத்தேன்.

கனவு ஹெமிங்வேயின், For Whom The Bell Tolls நாவலை நினைவுபடுத்துகிறது என்று நண்பரிடம் சொல்லலாமா என்று யோசித்தேன். வேண்டாம் என முடிவெடுத்து உறங்கி விட்டேன்.

Saturday 7 December 2019

ஜீவன்

நேற்று அதிகாலை ஒரு கனவு வந்தது. அது ஒரு மருத்துவமனை. இன்னும் சரியாகச் சொன்னால் மருத்துவமனையின் வாயில். வாயிலிலேயே ஒரு பெரிய படிக்கட்டு இருக்கிறது. நான் படிகளில் ஏறாமல் படிக்கட்டின் முன் நிற்கிறேன். சற்று பதட்டமாக இருக்கிறேன். இப்படி ஒரு கனவு. உடன் விழித்து விட்டேன். மின்விளக்கை இயக்கி ஒளிரச் செய்து மணி பார்த்தேன். காலை 4.40. மனது சஞ்சலமாக இருந்தது. அத்துடனே உறங்கி விட்டேன். காலை 6 மணிக்கு விழிப்பு. கண்ட கனவின் உணர்வு நிலை தொடர்ந்தது. அதிலிருந்து விடுபட உடன் குளித்து விடலாம் என முடிவு செய்து குளித்துக் கொண்டிருந்தேன்.

என்னுடைய அறையில் அலைபேசி ஒலிக்கும் சப்தம் கேட்டது. மணி அப்போது 6.15 இருக்கும். பொதுவாக அழைப்புகள் காலை 8 மணிக்கு மேல்தான் இருக்கும். இது யாருடைய அழைப்பு என யோசித்துக் கொண்டிருந்தேன். குளித்து விட்டு வந்து பார்த்தால் எனது நண்பர் அழைத்திருந்தார். அவர் வயது 70. அவரது மகன் அமெரிக்காவில் பணிபுரிகிறார். சில முறை அமெரிக்கா சென்று வந்திருக்கிறார். சில நாட்கள் முன்னால், விசா நேர்காணலில் பங்கெடுத்து திரும்பி வந்திருந்தார். நான் ஃபோன் செய்தேன்.

‘’பிரபு! எனக்கு உடல்நிலை கொஞ்சம் சரியாக இல்லை. இரவு முழுக்க நல்ல தூக்கம் இல்லை. கும்பகோணம் வரை சென்று டாக்டரைப் பார்க்க வேண்டும். நீங்கள் உடன் வர முடியுமா?’’

‘’தாராளமா சார். மணி இப்போ 6.45. நான் 7.15க்கெல்லாம் உங்க வீட்டுக்கு வந்துடறன்’’

‘’இன்னைக்கு ஏதாவது உங்களுக்கு முக்கியமான ஒர்க் ஏதும் இருக்கா?’’

‘’பரவாயில்லை சார். நான் அல்டர்னேட் அரேஞ்மெண்ட் செஞ்சிடுவன்’’

நான் வேகமாகக் கிளம்பினேன். சற்று நேரத்தில் நண்பரின் மனைவி ஃபோன் செய்தார்.

‘’பிரபு! சார் உடம்பு ரொம்ப சிரமப்படறார். டெஸ்ட் ஏதாவது எடுக்கறா மாதிரி இருக்குமா?’’

‘’எல்லாம் பாத்துக்கலாம்மா. நான் இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருக்கன். நீங்க சீக்கிரம் ரெடியாகுங்க”

ஒரு மணி நேரத்தில் கும்பகோணம் சென்று சேர்ந்தோம். நண்பர் கார் சொல்லியிருந்தார். சற்று சிரமப்பட்டே காரில் பயணித்தார் நண்பர். கும்பகோணத்தில் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம்.

அங்கே இ.சி.ஜி எடுக்கப்பட்டது.  பின்னர் இரு மருத்துவர்கள் வந்து பார்த்தனர். இதயத்துடிப்பு சாதாரணமாக இருப்பதாகத் தெரிவித்தனர். நாங்கள் ஆசுவாசம் அடைந்தோம். சோதனைக்கருவிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் அங்கே இருந்த படுக்கை ஒன்றில் அவரைச் சேர்த்தோம்.

இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். ஒரு மருத்துவமனை என்பது எல்லா விதமான சுகாதார அளவீடுகளும் முழுமையாக இருக்க வேண்டிய இடம். அது ஒரு பொது இடம் மட்டும் அல்ல. அங்கே கடைப்பிடிக்கப்படும் சுகாதார நெறிமுறைகள் உச்சபட்சமான அளவில் இருக்க வேண்டும். காலணிகளை வைப்பதற்கான இடங்கள், நோய்த்தொற்று இல்லாமல் இருக்க அடிக்கடி மெழுகப்பட்ட தரைகள், தூய்மையான கழிவறைகள் ஆகியவை ஒவ்வொரு மருத்துவமனையிலும் இருக்க வேண்டும். அதற்கான பணியும் பணியாளர்களும் மருத்துவமனைச் சேவையின் முக்கிய அம்சம். இவை எதுவும் அங்கே இருந்ததாகத் தெரியவில்லை. ஒரு மருத்துவமனைக்கு இவை அவசியமானவை என்ற பிரக்ஞை அங்கே இருந்ததாகவும் தெரியவில்லை.

இந்தியப் பிரதமர் தனது மக்களிடம் தூய்மையை வலியுறுத்துகிறார். உலக அரங்கில் நம்மைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை உருவாக்க தூய்மையையும் சுகாதாரத்தையும் கைக்கொள்ளுங்கள் என்கிறார். குடிமக்களின் உடல் ஆரோக்கியமே தேசத்தின் சிறந்த மூலதனம் என்பதால் ‘’ஃபிட்னெஸ் சவால்’’ விடுக்கிறார். மருந்து நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் அடையும் கொள்ளை லாபத்தால் சாதாரண குடிமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசின் மூலம் ‘’ஜன் ஔஷதி’’ மருந்துக் கடைகள் நாடு முழுதும் செயல்பட வேண்டும் என முனைப்பு காட்டுகிறார்.

எனக்குத் தெரிந்து ஒரு மருந்துக்கடையில் மருத்துவர் எழுதித் தரும் மருந்துகள் மருந்து அட்டையிலிருந்து தனித்தனியாக ஒவ்வொரு மாத்திரை வில்லையாக கத்தரிக்கோல் கொண்டு கத்தரித்துத் தரப்படுகிறது. மருந்தின் பெயரோ அதன் ரசாயனமோ தெரிந்தால் ‘’ஜன் ஔஷதி’’ கடைக்குச் சென்று வாங்குவார்கள் என்பதால் அதைத் தடுக்க இந்த ஏற்பாடு.

மூன்றாவதாக ஒரு மருத்துவர் வந்து இ.சி.ஜி அறிக்கையைப் பார்த்தார். நாங்கள் மருத்துவமனைக்கு வந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. நோயாளி ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கூறினார். நண்பரின் மனைவியும் நானும் எங்கள் வாகன ஓட்டியும் மட்டுமே இருக்கிறோம். எங்களுக்குப் பதட்டமாகி விட்டது. ஒரு மணி நேரம் முன்பு எடுக்கப்பட்ட இ.சி.ஜி தான் அது. அவ்வாறெனில் ஒரு மணி நேரம் முன்னால் பார்த்த இரு மருத்துவர்கள் ஏன் இதயத்துடிப்பு சாதாரணமாக இருப்பதாகக் கூறினர்? ஆபத்தான கட்டம் எனில் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது குறித்து எப்படி முடிவெடுப்பது? மருந்துகள் எழுதித் தந்தனர். அவை மருத்துவமனையின் ஃபார்மஸியில் மட்டுமே கிடைக்கும் என்றனர். மருத்துவமனையின் ஒரு பகுதியாக இருந்த அது திறக்கப்படவில்லை. திறக்கும் நேரம் காலை பத்து மணி என்றனர். காத்திருந்து மருந்து வாங்கிக் கொடுத்தோம். பின்னர் சில மருந்துகள் சலைன் மூலம் ஏற்றப்பட்டன. மருந்து ஏறும் போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. என்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விடுங்கள் என நண்பர் மன்றாடுகிறார். நேரம் சென்று கொண்டேயிருந்தது. அவரது உறவினர்களும் நண்பர்களும் தொடர்ந்து ஃபோன் செய்து விபரம் கேட்கின்றனர். அமெரிக்காவிலிருந்து அவரது மகன் அரை மணிக்கு ஒருதரம் ஃபோன் செய்து தந்தையின் உடல்நிலையை விசாரிக்கிறார். அந்த மருத்துவமனையில் குடிக்கத் தண்ணீர் கூட வைக்கப்படவில்லை. காலை வந்ததிலிருந்து தண்ணீர் கூட குடிக்காமல் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தேன். நண்பரை தஞ்சாவூர் அழைத்துச் செல்வதாய் முடிவு செய்தோம். டிஸ்சார்ஜ் உடனே செய்யப்படவில்லை. இ.சி.ஜி மற்ற சோதனைகள் செய்யப்பட்டதற்கு பணம் செலுத்துங்கள் என்றார்கள். எங்கள் கையில் போதுமான பணம் இருந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடம். செலுத்தி முடிக்கவே ஒரு மணிக்கு மேல் ஆனது. எந்த தொகை செலுத்தப்பட்டதற்கும் முறையான ரசீதுகள் கிடையாது.

ஒரு ஆம்புலன்ஸில் தஞ்சாவூர் அழைத்துச் சென்றோம். நண்பருக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நானும் அவரது மனைவியும் அருகில் உடன் இருந்தோம்.  ரயில் கட்டணம் ஒரு ரூபாய் உயர்ந்தால் நாடே கொந்தளிக்கிறது. ஆம்புலன்ஸுக்கு கேட்கப்பட்ட தொகை சாதாரணமாகக் கேட்கப்படுவதைப் போல இரு மடங்கு. தஞ்சாவூர் சென்று சேர்ந்தோம்.

நாங்கள் சென்ற மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மூன்று மருத்துவர்கள் இருந்தனர். அறிக்கைகளைப் பார்த்து உடன் சிகிச்சையைத் துவக்கினர். நண்பர் இப்போது நலமுடன் இருக்கிறார்.

மருத்துவத்தை சேவையாகக் கருதும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் இன்னும் இந்த நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாடு என்றும் கடன்பட்டுள்ளது.


Friday 6 December 2019

சாலைக்கு மேலே
ஆப்பிள் தொங்கும் உயரத்தில்
உறைந்திருக்கிறது
மழைக்கால
மாலை மௌனம்
அவசரமாய்
விரைகின்றன வண்டிகள்
அவசரமாய்
நடக்கின்றனர் பாதசாரிகள்
வீடு
இன்னும் நெருக்கம் கொள்கிறது
பரவிய மேகங்களுக்கிடையே
ஒரு விண்மீன்
ஒரே ஒரு விண்மீன்
அனிச்சையாய்ப் பார்த்தவன்
எண்ணுகிறான்
தனிமையை
தவத்தை
தனிமைத் தவத்தை

Thursday 5 December 2019

மாலை அந்திப் பொழுது
மழை மேக வானம்
தீயெனப் பரவுகிறது
இருள்
ஓயாத இரவு அலைகள்
மழைத்தாரைகள் மண்ணிறங்கும் ஒலியை
கேட்டுக் கொண்டிருக்கிறது
அந்தரத் தனிமை

Wednesday 4 December 2019

வண்டியும் ஓடமும்


சமீபத்தில் ஒருவரைச் சந்தித்தேன். அவரைச் சந்திப்பது அதுவே முதல் முறை. எனது நண்பர் ஒருவர் அவரை சந்திக்கச் சொன்னார். எனது நண்பர் தனது குடும்ப சொத்து ஒன்றை விற்க விரும்பினார். அவர் அமெரிக்கா செல்கிறார். திரும்பி வர பத்து வருடம் வரை கூட ஆகலாம். நான் சென்று சந்தித்தவர் துவக்க அறிமுகங்களுக்குப் பின் விஷயத்துக்கு வந்தார்.

’’தம்பி! மூணு வருஷமா சொத்து எதுவும் வாங்கறதில்ல. முன்ன மாதிரி நிலவரம் இல்ல. நிறைய கெடுபிடி’’

‘’சொத்து வாங்கறதுல புதுசா எதுவும் ரூல்ஸ் இல்லையே. முன்ன இருந்தது தான இப்பவும்.’’

‘’இல்லப்பா. ஆதார் கொடு. பிஏஎன் நம்பர் கொடுன்னு ஒரே தொல்லை’’

‘’தமிழ்நாட்டுல ரொம்ப வருஷமாவே அஞ்சு லட்சத்துக்கு மேல சொத்து வாங்கினா பிஏஎன் நம்பர் வேணும்ங்கற ரூல் இருக்கு. அது ஒண்ணும் புதுசு இல்லயே’’

‘’இல்லப்பா. இப்ப உள்ள நிலம சரியில்ல’’

‘’சரியில்லன்னு எதைச் சொல்றீங்க. வீட்டு மனை வாங்க வீடு கட்ட எல்லா பேங்க்-கும் எப்பவும் உள்ளத விட அதிகமாவே கடன் தர்ராங்க. வீட்டுக்கடன் வட்டிக்கு அரசாங்கம் மானியம் தருது. இன்கம் டாக்ஸ் எக்ஸெம்ப்ஷன் சிலாப் உயர்ந்திருக்கு’’

‘’நான் என் விஷயத்தையே உதாரணமா சொல்றன். நான் 2004ல பத்தாயிரம்  சதுரடி மனை ஒன்ன வாங்கினேன். சதுரடி 80 ரூபாய்னு’’

நான் எட்டு லட்சம் ரூபாய் என மனதுள் கணக்கிட்டுக் கொண்டேன்.

---’’வாங்கி ரெண்டு வருஷத்துல அந்த இடத்தோட விலை டபுள் ஆச்சு’’

பதினாறு லட்சம்.

---’’அப்புறம் அந்த ஏரியால சதுரடி 400க்கு போச்சு’’

நாற்பது லட்சம்.

---‘’2009ல அந்த இடத்தை சதுரடி 800 ரூபாய்க்கு கொடுத்துடலாம்னு முடிவு பண்ணேன்’’

எண்பது லட்சம்.

‘’என்னோட சொந்தக்காரன் ஒருத்தன் ஏன் அந்த இடத்தைக் கொடுக்கலாம்னு சொல்ற. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணு டபுள் ஆகும்னு சொன்னான். அது படியே செஞ்சன். அப்படியே ரெண்டு வருஷத்தில் டபுள் ஆச்சு.’’

ஒரு கோடியே அறுபது லட்சம்.

---’’சொந்தக்காரனே ஒரு பார்ட்டியோட வந்து சதுரடி 1400க்கு கேட்டான். நான் 1600 வந்தாதான்னு உறுதியா நின்னன்’’

எங்களுக்குத் தேனீர் வந்தது. தேனீர் பருகினோம். ஒரு சிறு இடைவெளி.

’’மூணு வருஷமா டெட் லாக் தம்பி.அந்த இடத்தைக் கொடுத்துடலாம்னு பாக்கறன். யாராவது பார்ட்டி இருந்தா சொல்லுங்க’’

எனக்கு சற்று ஏமாற்றம். அவர் சொத்து வாங்குவதில் ஆர்வம் உள்ளவர் என்பதாலேயே என் நண்பர் என்னை அவரிடம் அனுப்பியிருந்தார். அவர் தன் சொத்தை விற்க வேண்டும் என்று என்னிடம் சொல்கிறார். அவரிடம் அதை வெளிப்படுத்த முடியாது.

’’ஸ்கொயர் ஃபீட் என்ன ரேட் வந்தா கொடுக்கலாம்?’’

’’தம்பி 800ன்னு கேட்டாக் கூட கொடுத்திடுவோம். ஜெனியூன் பார்ட்டி – சிங்கிள் பேமெண்ட்னா 750க்கு முடிச்சுக்கலாம்.’’

என் நண்பரின் சொத்து தொடர்பான விபரங்களை மீண்டும் ஒருமுறை சொன்னேன். பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக வருத்தப்பட்டார். அவரது நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டேன். கிளம்பி விட்டேன். வாசல் வரை வந்து வழியனுப்பினார். வாசலில் வைத்து சொன்னார்.

‘’தம்பி! 750 கூட வேணாம். 650ன்னா முடிச்சிடுங்க”

வண்டியும் ஓடத்தில் ஏறும்; ஓடமும் வண்டியில் ஏறும் என்ற மலையாளப் பழமொழி என் நினைவில் வந்தது.    

Tuesday 3 December 2019

கடும் இரவில் பெய்யும் மழையில்
ஒட்டிக் கொள்கிறதா
கருமை
மழையும் இரவும்
மழையும் கருமையும்
பேசிக் கொள்வதென்ன
கருமேக கர்ப்பத்திலிருந்து
கருமை கொள்ளாத
மழை
இரவின் கருமையை
இரவில்
ஏந்தியிருப்பது எங்ஙனம்
இரவின் கருமையில்
நிறைந்திருக்கின்றன
கணக்கற்ற
மௌனங்கள்
துயரங்கள்
மழையின் நீர்மை
கரைத்துக் கொண்டிருக்கிறது
தீண்டும்
அனைத்தையும்

Monday 2 December 2019

நம்பிக்கை

சொல்வனம் இதழில் சமீபத்தில் எழுதிய நம்பிக்கை சிறுகதை வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு :

நம்பிக்கை

Sunday 1 December 2019

காத்திருப்பு - ஒரு கடிதம்

அன்பின் மயிலாடுதுறை பிரபு,

உங்களின் காத்திருப்பு கதை பலவிதங்களில் பரவசப்படுத்தியது; சற்றே சங்கடப்படுத்தியது.

முக்கியமாய் அந்த  இரயில் நிலைய சம்பவத்தின் விவரணை - லஷ்மி மணி பார்ப்பதை விவரிக்கும் விதம்

//லக்ஷ்மி தனது கடிகாரத்தைப் பார்த்தான். அது அவனது சுபாவம். அவனிடம் முக்கியமாக யாரேனும் எதையேனும் சொன்னால் அவன் கடிகார முள் நகர்வதைப் பார்ப்பான். அந்த நகர்வின் தாளத்தில் அவன் சில முடிவுகளுக்கு வருவான். முக்கியமான செயல்கள் செய்யத் துவங்கும் போதும் கடிகாரத்தைப் பார்ப்பான். வினாடி முள் நகர்ந்து கொண்டேயிருந்தது//


இதில் மிகத் துல்லியமாய் வெளிப்படும் அவனது அமைதியும், நிதானமும், கூர்மையும் கலந்த குணம்.


மேலும் அந்த சம்பவம் முழுவதுமாக வெளிப்படும் அவனது ஆளுமை, பல விதங்களில் என் கல்லூரிக் காலங்களையும் ஆரம்பகால வேலை நாட்களையும் நினைவிலிருத்தியது.

இவ்வளவு டிரமாட்டிக்காகவெல்லாம் அனுபவங்களை நான் சந்தித்ததில்லையெனினும் அது போன்ற ஒரு ஆணிடம் (ஆளுமையிடம்) நம் மனதைப் பறி கொடுத்திருப்போம் என்பது சத்தியம்.

இது போன்ற விஷயங்களை நினைவில் மீட்டியதற்காகவே எனது நன்றிகள்.


ஜெயமோகன் தளத்தில் நூல்பிடித்துப் போய் உங்களின் 'வாழ்க்கை ஒரு திருவிழா' படித்தேன்(இன்னும் முழுதாய் வாசிக்க வேண்டும்).

ஆனால் அந்த கனவே ஒரு ஆச்சரியத்தைக் கண்களில் கொண்டுவந்தது உண்மை.

உங்களின் சாகசங்களுக்கும் வாழ்த்துகள்!


அன்புடன்

சக ஜெயமோகன் வாசகன் (வேறெதையும் விட இதுவே மிகச்சரியாய் பொருந்துகிறது!) வெங்கட்ரமணன்