Friday 30 September 2022

பொன்னியின் செல்வன்

 

என்னுடைய பத்து வயதில் முதல் முறையாக ‘’பொன்னியின் செல்வன்’’ வாசித்தேன். எனது உறவினர் ஒருவர் கல்கியில் வெளியான ஐந்து பாகங்களையும் பைண்டு செய்து தொகுத்து வைத்திருந்தார். ஐந்தாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு விடுமுறை என்று ஞாபகம். ‘’ஆதியும் அந்தமும் இல்லாத காலவெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் பயணிக்க வாசகர்களை அழைக்கிறோம்’’ என்ற அழைப்போடு துவங்கும் அந்த நீள்கதையை வாசிக்கத் தொடங்கினேன். வீர நாராயண ஏரிக்கரை, குதிரையில் பயணிக்கும் வீரன் வல்லவரையன் வந்தியத்தேவன் , திருப்புறம்பியம் போர், விஜயாலய சோழன் என விரிந்து கொண்டே செல்கையில் சோழ மன்னர்களின் வரலாறும் சாதனைகளும் கல்கியின் சொற்களில் நம்முள் நிறைந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு வருடமும் படிக்கும் வகுப்பு உயர்ந்து கொண்டே இருக்க அந்த ஆண்டுகளின் காலாண்டு , அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகளின் விடுமுறைகளில் ‘’பொன்னியின் செல்வன்’’ வாசிப்பது என்பது பழக்கமாகிப் போனது. குறைந்தது முப்பது முறையாவது அந்த நாவலை வாசித்திருப்பேன். 

அனேகமாக தமிழில் மிக அதிகம் வாசிக்கப்பட்ட எழுத்தாளராக கல்கியே இருக்கக் கூடும். மிகக் குறைவான வாசிப்புப் பழக்கம் கொண்ட தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளர் கோடிக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்படுவது என்பது உண்மையில் பெருவியப்பே. 

ஊருக்கு மிக அருகில் இருக்கும் மணல்மேடு என்ற கிராமமே கல்கியின் சொந்த ஊர். அவர் மயிலாடுதுறை முனிசிபல் பள்ளியில் பயின்றவர். சில ஆண்டுகளுக்கு முன்னால் மணல்மேடு அருகில் உள்ள புத்தமங்கலம் அக்ரஹாரத்தில் இருக்கும் அவரது வீட்டுக்குச் சென்று சில மணி நேரம் இருந்தேன். அவருடைய உறவினர்கள் சிலர் அந்த வீதியில் இருந்தார்கள். அவர்களுடன் கல்கி குறித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். 

தமிழ்நாட்டின் வரலாற்றில் கல்கி அவர்களின் இடம் தனித்துவமானது. 

வினையும் விளைவும்


சென்ற மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மாநில நெடுஞ்சாலையில் இருந்த பள்ளிக்கூடம் ஒன்றின் வளாகத்தில் இருந்த மரம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் முன்னிலையில் வெட்டப்பட்டது. அளவில் மிகப் பெரியது அம்மரம்.  அதன் நிழலில் நூறு பேர் சர்வசாதாரணமாக ஓய்வெடுக்க முடியும். திங்கட்கிழமை நான் அந்த சாலை வழியாக சென்ற போது மரம் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்த மரம் வெட்டப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்காது என என் உள்ளுணர்வு கூறியது. வருவாய்த்துறை அலுவலகத்தில் விசாரித்து அனுமதி பெறப்படவில்லை என உறுதி செய்து கொண்டேன். 

வெட்டப்பட்ட அந்த மரத்துக்காக குரலெழுப்ப முடிவு செய்தேன். 

சமூகம் மரம் வெட்டப்பட்டதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாது என்ற எண்ணமே அந்த மரம் வெட்டப்பட்டதற்கு காரணம். மரத்தை வெட்டும் குற்றத்தை செய்தவர்களுக்கு அவர்கள் எண்ணம் தவறானது என்பதைக் காட்ட வேண்டும் ; இந்த குற்றத்துக்கு கிடைக்கும் தண்டனை பொது இடங்களில் இருக்கும் மரங்களை வெட்டும் எண்ணம் கொண்டவர்களை எச்சரிக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு செயலாற்றத் தொடங்கினேன். 

அடிப்படையில் நான் அரசின் மீது - அரசு என்னும் அமைப்பின் மீது - அரச முறையின் மீது - மக்களாட்சியின் மீது -  நம்பிக்கை கொண்டிருப்பவன். 

அந்த ஊரின் கிராம நிர்வாக அதிகாரிக்கு நிகழ்ந்த விஷயத்தை விளக்கி மனு அனுப்பினேன். மரம் வெட்டப்பட்ட இடத்துக்கும் கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத்துக்கும் 150 மீட்டர் தூரம் மட்டுமே இருக்கும். கூப்பிடு தொலைவு. முறைப்படி கிராம நிர்வாக அதிகாரி மரம் வெட்டப்பட்டிருப்பதை தனது மேலதிகாரிக்கு கடிதம் மூலம் தெரிவித்திருக்க வேண்டும். என்னுடைய மனு அனுப்பப்பட்ட பின்னாவது தகவல் தெரிவித்திருக்க வேண்டும். இரண்டும் நிகழவில்லை. என்னுடைய மனுவின் நகலை வட்டாட்சியர் , கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பினேன். அவர்கள் அனைவரின் மனுக்களுடனும் வெட்டப்பட்ட மரத்தின் புகைப்படத்தை இணைத்து அனுப்பியிருந்தேன். அந்த புகைப்படம் காணப்படும் போதெல்லாம் காண்பவர்கள் உளத்தை அசைக்கும் என்பதால் அவ்வாறு செய்தேன். 

மனுவை அனுப்பிய சில நாட்களில் என் மனு மீதான மேல்நடவடிக்கை என்ன என்ற விபரத்தை தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கோரியிருந்தேன். அந்த பள்ளியில் அந்த மரம் வெட்டப்படவில்லை என வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தகவல் வந்தது. அது திசை திருப்பும் பதில் என மாநில தகவல் ஆணையத்தில் புகார் அளித்தேன். 

சம்பவம் நடந்த இடத்தை கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு அந்த மரம் வெட்டப்படவேயில்லை என அறிக்கை அளித்துள்ளனர். வட்டாட்சியர் அலுவகத்தின் பொது தகவல் அதிகாரி மரம் வெட்டப்படவில்லை என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி பதில் அளித்துள்ளார். இந்த நான்கு அதிகாரிகளும் இதன் மூலம் இந்த விஷயத்திற்குள் - அதாவது இந்த குற்றச் செயலுக்குள் வருகின்றனர். 

நிகழ்ந்தவற்றை விளக்கி மாவட்ட ஆட்சியருக்கும் , வருவாய் கோட்டாட்சியருக்கும் ஆங்கிலத்தில் ஒரு மனுவை அனுப்பினேன். இந்த மனுவின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகுவது என முடிவு செய்திருந்ததால் மனுவை ஆங்கிலத்தில் அனுப்பினேன். நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு அது புரியும் என்பதால் அவ்வாறு செய்தேன். 

இப்போது பசுமைத் தீர்ப்பாயம் செல்வது எனில் மாவட்ட நிர்வாகம், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, மரத்தை வெட்டும் செயலைச் செய்தவர் என மேற்படி அனைவரும் பிரதிவாதி ஆவார்கள். பசுமைத் தீர்ப்பாயத்துக்கு சென்னை செல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு அனுப்பும் மனுவை கணினி மூலம் வீட்டிலிருந்தே பதிவேற்றம் செய்ய முடியும். 

ஒரு தவறு நிகழ்ந்தால் அதனைச் செய்தவர்கள் குறைந்தபட்சம் வருந்த வேண்டும். தவறுக்கு மேல் தவறாகச் செய்து கொண்டே போவது விஷயத்தை மேலும் சிக்கலாக்கவே உதவும். 

நாட்கள் ஆனால் விஷயத்தின் தீவிரம் குறைந்து மறந்து போகும் என அதிகாரிகள் நினைக்கிறார்கள்.

வாழ்க்கையில் சிலர் மெல்ல மெல்ல நகர்ந்தாலும் முன்னேறிச் செல்கிறார்கள். பின்வாங்குவதில்லை. 

நபர்கள் கூடிக் கொண்டே போகும் போது என் மனம் சஞ்சலம் கொள்கிறது. இருப்பினும் என் ஆற்றலைத் திரட்டிக் கொண்டு என்னைத் தொகுத்துக் கொண்டு திட்டமிட்டவாறு முன்னெறிச் சென்று கொண்டேயிருக்கிறேன்.    

கணக்கும் தொகுப்பும்

பலவிதமான பணிகள் சூழ்ந்து உள்ளன. லௌகிகப் பணிகள். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள். இலக்கியப் பணிகள். தற்போது ஈடுபடும் பொது விஷயங்கள் சார்ந்த சட்டம் தொடர்பான பணிகள். ஒன்றுடன் ஒன்று கலந்து என்னுடைய நாள் பொழுதின் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. 

பொது விஷயங்கள் சார்ந்த சட்டம் சார்ந்த பணிகளில் ஈடுபடும் அனுபவம் வித்தியாசமானது. சமீபத்தில் மாநில நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பள்ளி ஒன்றின் வளாகத்தில் இருந்த உயிர் மரம் வெட்டப்பட்டது. அந்த சம்பவத்தை குறிப்பிட்டு நான் ஒரு மனுவை அனுப்பினேன். முதலமைச்சர் அலுவலகம் தொடங்கி வனத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித் துறை செயலாளர்கள் , மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் வரை மனுவின் நகலை அனுப்பி வைத்தேன். வெட்டப்பட்ட மரத்தின் புகைப்படத்தையும் அந்த நகல்களுடன் இணைத்திருந்தேன். ஒரே நேரத்தில் இந்த விஷயம் பல மேலதிகாரிகள் கவனத்துக்கு சென்றுள்ளதால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை உறுதி செய்யப்படும் என எதிர்பார்த்தேன். மனுவை அனுப்பிய சில நாட்களில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற விபரத்தைக் கோரியிருந்தேன். ஒரு மாதம் கழித்து அந்த மரம் வெட்டப்படவில்லை என துணை தாசில்தாரிடமிருந்து பதில் வந்தது. அவர் அளித்த பதில்  திசை திருப்பும் பதில் என மாநில தகவல் ஆணையத்துக்கு புகார் அளித்தேன்.  இவ்வாறான பதில் அளித்ததற்காக நிர்வாக ரீதியில் அவர் மேல் கடுமையான மேல்நடவடிக்கை எடுக்கப்படக் கூடும். 

மரம் வெட்டியது ஒருவர். சட்டவிரோதமாக மரம் வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்பது ஒரு சிவில் சமூகத்தின் சாதாரண நடைமுறை. ஆயினும் குற்றம் செய்தவரை தப்பிக்கச் செய்வதில் ஈடுபட்டு மேலும் நான்கு அதிகாரிகள் இந்த விஷயத்தினுள் வந்து விடுகின்றனர். உண்மையில் நிகழ்ந்த பிழை திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் அதற்கான பிழையீடு செலுத்தப்பட வேண்டும் என்பதுமே எனது நோக்கம். ஆனால் கீழிருந்து மேல்வரை பலர் இந்த விஷயத்தில் இணையும் போது இயல்பாகவே சோர்வு உண்டாகிறது. 

அனுமதியின்றி மரம் வெட்டியதற்கு ஒரு அபராதம் விதிக்கப்பட்டால் இவ்வாறான செயலைச் செய்ய எண்ணம் கொண்டுள்ள பலருக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும் என்பதால் தான் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினேன். பொதுமக்களில் எவரும் இது போன்ற விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம் தீவிரமாக இருப்பதால் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி இவற்றில் ஈடுபடுகிறார்கள். அது முழு உண்மையல்ல என்பதை உணர்த்தவே இதில் ஈடுபட்டுள்ளேன். 

தில்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்ற அமைப்பு உள்ளது. அதன் தென்மாநிலங்களுக்கான கிளை சென்னையில் உள்ளது. இணைய தளம் மூலமாகவே அதில் புகார் அளிக்க முடியும். சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களுக்காகவே உள்ள அமைப்பு அது. நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் தீர்ப்பாயத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகளும் மெல்ல உறுதியாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒரு விவசாயி அவர் வயலில் ஐம்பது தேக்கு மரங்களை நட ஏற்பாடு செய்து வருகிறார். அவரை ஊக்கப்படுத்தும் விதமாக அவர் வயலில் ஜே.சி.பி வேலை செய்யும் போது உடனிருந்தேன். அப்போது அந்த இடத்துக்கு பல விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்கள் வந்தனர். அவர்களிடம் தேக்கு பயிரிடுவதன் நன்மைகள் குறித்து எடுத்துச் சொன்னேன். விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிப்பது தான் நம் பணி. முழு கிராமமும் என இலக்கை நிர்ணயம் செய்து கொண்டதால் மெல்லவே முன்நகர முடிகிறது. மெல்ல சென்றாலும் முன்னேறிச் செல்கிறோம் என்பது நிறைவைத் தருகிறது. 

இரண்டு நாட்களாக ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் வாசித்துக் கொண்டிருந்தேன். சிறுவயது முதலே ஷேக்ஸ்பியர் மீது பெரும் பித்து. அவரது கூறுமுறை வசீகரமானது. மொழியில் அவர் நிகழ்த்தும் மாயங்கள் மகத்தானவை. 
 

Sunday 25 September 2022

வருகை

சமீபத்தில் ’’வருகை’’ என்ற சிறுகதையை எழுதினேன். அது சொல்வனம் இதழில் பிரசுரமாகியுள்ளது. அதன் இணைப்பு கீழே : 


வருகை 

Friday 23 September 2022

முதல் அழைப்பு

நேற்று செயல் புரியும் கிராமத்திலிருந்து முதல் அலைபேசி அழைப்பு வந்தது. ஆர்வமுள்ள ஒரு இளைஞர் பேசினார். தனது வீட்டுத் தோட்டத்தில் பெரிய இடம் இருக்கிறது. அங்கே தான் தேக்கு மரம் நட விரும்புவதாகத் தெரிவித்தார். நான் நேராக இடத்தைப் பார்வையிட்டு அவருக்கு ஆலோசனை வழங்குவதாகச் சொன்னேன். மேலும் சிலரும் அலைபேசியில் அழைத்து அஞ்சல் அட்டை அவர்களிடம் வந்து சேர்ந்த விபரத்தைத் தெரிவித்தனர். தங்கள் வயல்களை வந்து பார்வையிடுமாறு அழைத்தனர்.  

Thursday 22 September 2022

அஞ்சல் அட்டைக் கடித வடிவம்

செயல் புரியும் கிராமத்தின் ஒவ்வொரு விவசாயிக்கும் அனுப்பும் அஞ்சல் அட்டைக் கடிதத்தின் மாதிரி வடிவத்தை கீழே கொடுத்துள்ளேன். 

-----------------

மதிப்பிற்குரிய விவசாயி திரு. _______________ அவர்களுக்கு,

வணக்கம். 

நமது கிராமத்தின் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் 20 தேக்கு மரக் கன்றுகளை வழங்க உத்தேசித்துள்ளோம். 

நமது நாட்டின் குடியரசு தினத்தை ஒட்டி நம் கிராமத்தினருக்கு வழங்கிய நந்தியாவட்டை மரக்கன்றுகளை கிராம மக்கள் நல்ல முறையில் வளர்த்து வருவதால் அவர்களுக்கு மேலும் தேக்கு மரக் கன்றுகள் வழங்க விருப்பம் கொண்டுள்ளோம். 

முறையான பராமரிப்புடன் வளர்க்கப்படும் ஒரு தேக்கு மரக் கன்று 15 ஆண்டுகளில் ரூபாய் ஒரு இலட்சம் விலை போகக் கூடும்.  ஒரு குடும்பத்துக்கு வழங்கப்படும் 20 கன்றுகள் 15 ஆண்டுகளில் ரூ. 20,00,000 வருமானமளிக்கும். 

தேக்கு மரக் கன்றுகளைப் பெற்று பயனடைய விரும்பும் விவசாயிகள் ********** என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும். 

நன்றி!

’’காவிரி போற்றுதும்’’

----------------------

இந்த வடிவில் அஞ்சல் அட்டைக் கடிதங்களை ஒரு நாளைக்கு 20 என்ற கணக்கில் எழுதி அனுப்பி வருகிறேன். அஞ்சல் அட்டைகள் சென்றடையும் விவசாயிகள் தங்கள் வீட்டாருடனும் அண்டை வீட்டாருடனும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் இது தொடர்பாக ஒரு உரையாடலை மேற்கொள்வார்கள். அது மரக்கன்றுகள் குறித்த விஷயத்தை அவர்கள் மனதில் நிலை நிறுத்த அடித்தளமாய் அமையக் கூடும். சில வாரங்களில் கிராமத்தில் மெல்ல இது குறித்த பேச்சு உருவாகும். எத்தனை பேர் தொடர்பு கொள்கிறார்கள் என்பதன் மூலம் அவர்களுடைய ஆர்வத்தையும் நம்மால் அளவிட்டுக் கொள்ள முடியும். அடுத்தடுத்த படிகளை மேற்கொள்ள இது உதவிகரமாக இருக்கும். 

Tuesday 20 September 2022

அஞ்சல் அட்டைகள்

எனக்குத் தெரிந்து அஞ்சல் அட்டையின் விலை 15 பைசாவாக இருந்திருக்கிறது. அதன் பின்னர் 25 பைசாவாக ஆனது. இப்போது ஒரு அஞ்சல் அட்டையின் விலை 50 பைசா.  

இவ்வளவு குறைவான தொகையில் பல்லாயிரம் கிலோமீட்டர்களுக்கு ஒரு அஞ்சல் அட்டை பயணிக்கக் கூடியது என்பது அற்புதமான ஒன்று. இதனை அர்ப்பணிப்புடன் கூடிய ஆயிரக்கணக்கான தபால் ஊழியர்கள் சாத்தியமாக்குகிறார்கள். 

சிறு வயதில் நான் அஞ்சல் அட்டைகள் எழுத விரும்புவேன். உறவினர்களுக்கு நண்பர்களுக்கு என அடிக்கடி அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதுவேன். 

ஒரு கிராமத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் 20 தேக்கு மரக்கன்றுகளை வழங்க உத்தேசம் கொண்டு செயல்களைத் துவக்கி உள்ளேன். ஏற்கனவே பரிச்சயம் உள்ள கிராமம். நமது உத்தேசத்தை அந்த கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சென்று சேர்க்க வேண்டும். அதற்கு நான் தேர்ந்தெடுத்த தகவல் சாதனம் அஞ்சல் அட்டை. குறைந்தது 250 குடும்பங்கள் இருக்கக் கூடும். அவர்கள் அனைவரையும் சென்றடைய தபால் கார்டு உதவும் என்பதும் தேக்கு குறித்து மக்களுக்குள் ஒரு பேச்சு உருவாகவும் துணை புரியும் என்ற எதிர்பார்ப்பும் இந்த முறையைத் தேர்ந்தெடுத்தற்கான காரணம். 

ஒரு நாளைக்கு 25 கார்டாவது எழுதி போஸ்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வேலை 10 நாட்களில் நிறைவடையும். ஒன்று ஒன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன். 

Monday 19 September 2022

ஒரு சுற்று

நேற்றுடன் எட்டு நாள்கள் ஆனது. நேற்று காலை எழுந்ததிலிருந்து உடல் சோர்வாக இருந்தது. நோயுற்றிருக்கையில் இவ்வாறான சோர்வை உணர முடியும். நேரம் ஆக ஆக ரொம்பவும் சோர்வாக உணர்ந்தேன். வழக்கமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். இனி கொஞ்சம் வேலைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பு இருக்குமா என்பது தெரியவில்லை.  

Saturday 17 September 2022

மௌனம்

இடைவெளிகள் இல்லாத நெருக்கமான ஒரு கால அட்டவணையை விரதங்களைத் திட்டமிடும் போது அமைத்துக் கொள்வேன். உணவு உண்ணாமல் இருப்பதுடன் அவையும் இணைவதால் தொடர்வது சிரமமாக இருக்கும். இந்த முறை அவ்விதம் அமைத்திருந்தாலும் ஒருநாளில் இரண்டு வேளை உணவு அருந்தாமல் இருப்பதை அடிப்படையாகவும் மற்றவற்றை அதற்கு அடுத்ததாகவும் எடுத்துக் கொண்டேன். வலுவான அடித்தளத்திலிருந்து கட்டிடத்தை எழுப்புவது போல ஒவ்வொன்றாக உருவாக்கிக் கொள்ளலாம் என எண்ணம். நேற்று பகல் முழுக்க வெயிலில் நின்று வேலை செய்ய நேரிட்டது. அப்போது ஒரு விஷயம் என் கவனத்தில் வந்தது. அவ்வாறு நாள் முழுக்க நின்று கொண்டேயிருப்பது எனக்கு பழகிய ஒன்று. அதனால் அப்படி இருக்கும் போது பசி பெரிதாகத் தெரிவதில்லை. வீட்டில் இருக்கும் போது தான் பசி அதிகமாக உணரப்படுகிறது. ஒரு நாளில் சில மணி நேரமாவது மௌனத்தைப் பழக வேண்டும்.  

Friday 16 September 2022

அவதானம்

ஒவ்வொரு நாள் கூட கூட உடல் , மனம், நேரம் ஆகிய்வை குறித்த அவதானம் அடர்த்தி கொள்கிறது. காலை ஒருவிதமான மனநிலை. மதியம் ஒருவிதமான மனநிலை. இரவு உணவருந்திய பின் வேறொரு மனநிலை. உடலில் லேசாக ஒரு வலியை உணர்ந்தேன். உடல் எடை குறையத் தொடங்கி விட்டது. உடல் சேகரித்து வைத்திருந்த மிகை சக்தியை இப்போது எடுத்து செலவிடத் தொடங்கும்.  

Wednesday 14 September 2022

தினசரியை

எனது வீட்டுக்கும் பள்ளிக்கும் இரண்டரை கிலோமீட்டர் தூரம். காலை பள்ளிக்கு நடந்து செல்வேன். மதியம் வீட்டுக்கு உணவருந்த திரும்ப வருவேன். மதியம் உணவு உண்டு விட்டு மீண்டும் பள்ளிக்கு நடந்து செல்வேன். மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்குத் திரும்பி வருவேன். ஒரு நாளில் குறைந்தபட்சம் பத்து கிலோமீட்டர் தூரம் சர்வசாதாரணமாக நடந்து செல்வது இருக்கும். 

அதன் பின்னர் சைக்கிள் வாங்கிய பின் சைக்கிளில் செல்லத் துவங்கினேன். அதே கணக்கில் பத்து கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம். மேலும் மாலை வீடு திரும்பியவுடன் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றுவேன். உடலுக்கான வேலை என்பது தேவையான அளவு இருந்திருக்கிறது.  

உடல் என்பது தினசரி அதற்கு உரிய வேலையை செய்யும் வண்ணம் நமது தினசரி வாழ்க்கை முறையில் நேரம் ஒதுக்குவது உடலுக்கு நாம் செய்யும் நன்மையாயிருக்கும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது என்பது நமது உடலை நாமே வீணாக்கிக் கொள்வதே அன்றி வேறல்ல. 

நான்கு நாட்கள் ஒருவேளை மட்டும் உண்பது பல விஷயங்களை யோசிக்க வைக்கிறது. இன்று காலையிலிருந்தே நல்ல பசி. செயல் புரியும் கிராமத்துக்குச் சென்று ஒரு விஷயம் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொண்டு வந்தேன். நாளை இன்னொரு கிராமத்தில் ஒரு பணி இருக்கிறது. அது தொடர்பாக சில ஏற்பாடுகளைச் செய்தேன். 

Tuesday 13 September 2022

நுழைவு - 3

மூன்று நாட்களாக ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் உணவு என்ற நிலையை அடிப்படையாக உண்டாக்கிக் கொண்டேன். பசியும் சோர்வும் இருக்கிறது. அவற்றைத் தாக்குப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. 

பொதுவாக எவ்விதமான பயிற்சியும் அளிக்கப்படும் போது அதிகாலையிலிருந்து இரவு வரை நேரத்தைப் பிரித்திருப்பார்கள். இடைவெளிகள் குறைவாக இருப்பது பயிற்சியில் ஈடுபடுப்வர்கள் மனத்தை முழுமையாக பயிற்சியின் பால் செலுத்த உதவிகரமாக இருக்கும். நாளை முதல் அவ்வாறு அதிகாலை முதல் இரவு வரை நேரத்தை வகுத்துக் கொள்ளலாம் என உள்ளேன். 

நாம் நமது நேரத்தை எவ்வாறு வகுத்துக் கொள்ள வேண்டும் என எண்ணுகிறோமோ அதற்கும் நாம் நமது நேரத்தை நம் பழக்கத்தின் அடிப்படையில் செலவிடுவதற்கும் பெரிய வேற்றுமை உள்ளது. அதை நாம் கவனித்தால் அது குறித்து ஆக்கபூர்வமாக செயல்படுவோம்.   

Monday 12 September 2022

நுழைவு - 2

இன்று உடல் சற்று சோர்வாக இருந்தது. எனினும் உள்ளுணர்வு இந்த விரதத்தை எண்ணியவாறு நிறைவு செய்வேன் என்று கூறியது. 

இன்று ஒரு நூலில் சில பக்கங்கள் வாசித்தேன். 

நண்பர் ஒருவர் வெளியூர் சென்றிருக்கிறார். ரயிலில் ஊர் திரும்புகிறார். நாளை காலை 6 மணிக்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தன்னை அழைக்க காரில் வர முடியுமா என்று கேட்டார். எனக்கு விரத நினைவு இல்லை. சரி என்று சொல்லி விட்டேன். பின்னர் தான் நினைவு வந்தது. டிரைவிங் தெரிந்த ஒருவரை ஏற்பாடு செய்து கொண்டேன். 

எண்பதும் எண்பதும் நூற்று அறுபது கிலோமீட்டர் பயணிப்பது என்பது உடலின் சக்தியை பெருமளவு எடுக்கும். 

நிலுவையில் இருக்கும் சில பணிகள் குறித்து யோசித்தேன். உண்மையில் ஒருநாள் பொழுதில் நிறைய நேரம் கிடைக்கிறது. மனம் வழக்கமாக இயங்கும் செயல்முறையிலிருந்து மாற்றம் கொண்டு யோசிக்க அவகாசம் வாய்க்கிறது.  

Sunday 11 September 2022

நுழைவு

இன்று காலை , மதியம் ஆகிய இரு வேளையும் உணவு உண்ணவில்லை. மாலை ஒரு வேளை மட்டும் உணவு அருந்தினேன். சூரியன் அஸ்தமனம் ஆன பின் உணவு அருந்துதல் நலம். எனினும் சற்று முன்பாகவே உணவு உட்கொண்டேன். முதல் மூன்று நாட்களை விரதத்துக்கான தினசரியையை வகுத்துக் கொள்வதற்கான அவதானமாகக் கொள்ளலாம் என எண்ணினேன். 

சமணம் உணவை உடல் இயங்குவதற்கான ஆற்றலை வழங்கும் ஒன்றாகக் காண்கிறது. ஒவ்வொருவருக்கும் உடல் இயங்க எவ்வளவு ஆற்றல் தேவையோ அந்த ஆற்றல் மட்டுமே உடலுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது சமணத்தின் வழிமுறை. 

பகலில் பசி இருந்தது. மெல்ல மெல்ல அதனைக் கடந்தேன். உடல் எத்தனையோ நாட்களில் மிகையாக ஆற்றலைச் சேர்த்துள்ளது. அவற்றை இந்த நேரங்களில் எடுத்து பயன்படுத்தத் தொடங்கும். 

பலமுறை கடினமான விரதங்களைத் தொடங்கி எண்ணியவாறு நிறைவு செய்ய முடியாமல் போனதால் இந்த முறையும் அப்படி ஆகி விடுமோ என்ற பதட்டம் இருந்தது. எனினும் ஒரு நாளைக் கடந்ததும் மனம் நம்பிக்கை கொண்டது. 

உடல் , மனம் மற்றும் ஆற்றல் இவற்றினிடையே ஓர் ஒத்திசைவைக் கொண்டு வர நாம் பழக வேண்டும். உண்மையில் வாழ்க்கையில் பழக வேண்டிய பயில வேண்டிய விஷயம் இதுதான். உடற்பயிற்சிகளும் விளையாட்டுகளும் உடலை வலுவாக்குபவை. உடலில் சேகரமாகும் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துபவை.  

உலகெங்கும் கணிசமான மனிதர்களின் உடல் உழைப்பு அனேகமாக இல்லை என்ற நிலைக்குச் சென்றிருக்கிறது. உழைப்பு அற்ற உடல் ஒரு சுமை. உலகில் பல சமூகங்கள் உடற்பருமன் நோய்மைக்கு ஆட்பட்டுள்ளன. ஒருபுறம் பசிக்கு உணவில்லாத மக்கள் இன்னொருபுறம் உடற்பருமன் நோயாளிகள். பசியைப் பற்றி உணவைப் பற்றி பேசப்படும் எந்த ஒரு விஷயமும் உலகளாவிய ஒரு இடத்துக்கு சென்று விடுவது இயல்பு. 

இன்று ஒரு சிறுகதை எழுதினேன். 

சில நண்பர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். 

ஒரு நூல் வாசிக்கத் தொடங்கினேன்.  

இயக்கம்

இயக்கத்தை சிருஷ்டி, ஸ்திதி, சம்ஸ்காரம் என்ற மூன்று நிலைகளாகக் கூறுகிறது இந்திய மரபு. எல்லா விதமான இயக்கங்களும் இந்த மூன்று நிலைகளுக்கு உட்பட்டவையே. செயலின் எல்லா விளைவுகளும் இந்த மூன்று நிலைகளின் பாற்பட்டவையே.  

தோராயமாக பத்து ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடைய தொழில் சார்ந்து ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். தொடர்ந்து பல தடைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஒரு எண்ணம் தோன்றியது. ஆறு நாட்கள் உணவு உண்ணாமல் நீர் மட்டும் அருந்தி ஒரு விரதம் இருப்பது என. ஒருநாள் ஒருவேளை கூட விரதமிருந்து பழக்கமில்லாதவன் நான். இருப்பினும் அந்த விரதத்தை மேற்கொண்டேன். ஐப்பசி மாதம் தீபாவளிக்கு மறுநாளிலிருந்து துவங்கும் கந்த சஷ்டி விரதம் அது. தீபாவளிக்கு மறுநாள் துவங்கி சூரபத்மனை முருகன் வதம் செய்யும் சஷ்டி மாலை அன்று நிறைவாகும் விரதம் அது. அந்த விரதம் என்னுடைய சில அக மற்றும் புறத் தடைகளைத் தகர்க்க பெருமளவில் உதவியது. 

விரதங்கள் ஒரு நாளின் வழக்கமான போக்கை மாற்றியமைப்பதில் பெருமளவு உதவுகின்றன. வழக்கமான ஒரு நாளில் நம் வயிறு உணவை அடிப்படையாய்க் கொண்டே நேரத்தை வகுக்கிறது. உணவு ருசியுடன் இணைந்திருக்கிறது. உணவு - நேரம் - ருசி ஆகிய மூன்றும் இணையும் போது நமது பழக்கம் உருவாகி விடுகிறது. அந்த பழக்கத்தை நாம் எல்லா நாளும் பிரக்ஞைபூர்வமாக உணர்வதில்லை. நம்மை அறியாமலே அதில் முழுமையாக பழகி விடுகிறோம். விரதங்கள் அந்த பழக்கங்களில் ஒரு உடைவை உண்டாக்குகின்றன. ஒரு இடைவெளியை ஏற்படுத்துகின்றன. அந்த இடைவெளி மூலம் அதனை அறியும் போது அதன் மூலம் நாம் வெளியேறிச் செல்ல ஒரு வாய்ப்பு உண்டாகிறது. 

நிறைய பணிகள் இருக்கின்றன. நிறைய செயல்கள் செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறான நிலையில் எண்ணியதை எண்ணியவாறு எய்த பெரும் ஆற்றல் தேவையாயிருக்கிறது. அந்த ஆற்றலை ஈட்ட விரதங்கள் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய புராண மரபு விரதங்களைக் குறித்தும் தவங்களைக் குறித்தும் எண்ணற்ற கதைகளை முன்வைக்கிறது. சமணமும் பௌத்தமும் விரதங்களை தங்கள் நடைமுறைகளில் மிக முக்கியமாக முன்வைக்கின்றன. 

ஒரு நாள் என்பதை எனக்குத் திருப்தியான முறையில் அமைத்துக் கொள்ள நான் எண்ணும் வேகத்தில் எனது செயல்களை ஆற்ற ஒரு விரதத்தைத் துவக்குகிறேன். பாரதம் கர்மபூமி. இந்த மண்ணில் உயிர்கள் பிறப்பெடுப்பது செயல் செய்து செயலின் நிறைவை எய்தி விடுதலை கொள்ளவே என்னும் நம்பிக்கை இந்நாட்டில் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. 

என்னுடைய மனம் படைப்பூக்கம் கொண்டது. ஒரு விதையைக் காண்கையில் விருட்சத்தை உணர்வது. அத்தகைய மனத்தை விரதத்தில் நிலை நிறுத்துவுது என்பது சற்று கடினமான ஒன்றே. எனினும் இந்த நகர்வு இப்போது அவசியமான ஒன்று என்று படுகிறது.  

இன்று தொடங்கி தீபாவளி வரை ஒரு நாளைக்கு இரவு ஒரு வேளை மட்டும் உணவு அருந்துவது என்றும் அதன் பின் வரும் ஆறு நாட்கள் நீர் மட்டும் அருந்தி விரதம் இருப்பது என்றும் எண்ணம் கொண்டுள்ளேன். 

அதிகாலை எழுதல், நாளின் பொழுதில் இயன்ற அளவு மௌனமாயிருத்தல், மூன்று வேளைகளிலும் இறை வணக்கம் செய்தல், தீபம் ஏற்றுதல், சக உயிர்களுக்கு சிறு அளவேனும் விரத நாட்களில் உணவளித்தல், பகவத் கீதை வாசித்தல், இறை நாமம் உச்சரித்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும் என விருப்பம்.

இந்த நாட்களில் நான் உண்ணும் உணவை நானே சமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் விரும்புகிறேன். 

Friday 9 September 2022

நீங்குதல்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
-திருக்குறள்

சில எளிய விஷயங்கள் அனுபவமாகும் போது சில சிமயம் பெரும் திகைப்பு உண்டாகி விடுகிறது. 

இன்று என்னுடைய மேஜையையும் ஷெல்ஃபில் இருக்கும் என்னுடைய காகிதங்களையும் அடுக்கி வைக்க முயன்றேன். பல நாட்கள் பல மாதங்கள் ஆகி ஒரே இடத்தில் இருப்பதால் எத்தனையோ தேவையில்லாத காகிதங்கள் நிறைந்து விட்டன. எடுக்க எடுக்க வந்து கொண்டேயிருப்பது ஒருவித அச்சத்தை அளித்தது. நம்மை அறியாமலே சில விஷயங்கள் இவ்வாறு சூழ்ந்து விடுகின்றன. 

சொத்து ஆவணங்களின் நகல்கள், சொத்து வரி ரசீதுகள், பதிவுத்துறை ரசீதுகள் என அவை ஒருபக்கம். பொது விஷயங்கள் குறித்த மனுக்கள், தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்கள், நகல்கள், பதிவுத் தபால் ஒப்புகைகள் என அவை ஒரு பக்கம். பெருமளவு ஒழுங்கு படுத்தி விட்டேன். 

இந்த எளிய விஷயம் கூட நமது ஆற்றலை இந்த அளவு எடுக்கும் என்பது நம்ப முடியாததாக இருந்தது என்றாலும் இப்போது அதனை உணர்ந்து கொண்டேன். 

இந்த விஷயத்திலிருந்து ஒரு படிப்பினை எனக்குக் கிடைத்தது. தினசரி நாம் புழங்கும் வெளியில் ஒரு நல்லொழுங்கை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றால் நமது விடுதலை அங்கிருந்தே தொடங்கும் என்று உணர்ந்தேன்.  

Thursday 8 September 2022

கோப்பு

இணையத்தின் மூலம் வாங்கிய பிளாஸ்டிக் டிராவ் என் மேஜைக்கு அருகில் உள்ளது. அது காகிதங்களால் நிரம்பி இருக்கிறது. காகிதங்கள் எப்படியோ தங்களுக்கான இடத்தையும் தாண்டி எடுத்துக் கொள்கின்றன. கிளை மூலம் இலை விரியும் மரத்திலிருந்து தயாராகி வந்ததால் காகிதங்களுக்கு இந்த இயல்பா என்பது தெரிய்வில்லை.  

கோப்புகளைப் பராமரிப்பது என்பது ஒரு கலை. சட்டவிரோதமாக மரம் வெட்டப்படுவது குறித்த கோப்பில் அனுப்பிய ம்னுக்களின் நகல்கள், வரப்பெற்ற பதில்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி விபரம் கோரிய மனுக்களின் நகல்கள் என அனைத்தையும் கோப்பில் வைத்திருப்பேன். மனு அனுப்பும் போது கையொப்பமிட்ட பின் அதனை நகல் எடுக்க வேண்டும். அந்த நகலில் பதிவுத் தபாலில் அந்த மனுவை அனுப்பியதற்கான ரசீதை ஒட்டி வைக்க வேண்டும். 

சர்க்கார் என்பது ஒரு மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க வேண்டியதற்கான பயிற்சியையும் பழக்கத்தையும் கொண்டது. அதனால் எல்லா மனுக்களுமே நிலுவையில் வைக்கப்படும். அனுப்பும் மனு நிலுவையில் மட்டுமே வைக்கப்படும் என்பதும் இறுதி கட்டம் நீதிமன்றம் என்றும் நமக்குத் தெரியும் என்பதால் மனு அனுப்புதல், தகவல் பெறும் உரிமைச் சட்டம் படி விபரம் கோருதல், மனு அனுப்பி 30 நாள் ஆன பின் மேலதிகாரிகளுக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்ற விபரத்தை கொண்டு செல்லுதல், தகவல் உரிமைச் சட்டத்தின் கெடுவுக்குள் பதில் வரவில்லை என்றால் முதல் மேல்முறையீடு செய்தல், மேலதிகாரிக்கு அனுப்பிய மனு 30 நாள் ஆன பின் நினைவூட்டல் ஒன்று அனுப்புதல் என இந்த வரிசை முதல் மனுவை அனுப்பும் போதே மனக்கண்ணால் காணப்பட்டு விடும். 

மத்திய அரசின் சி.பி.கி.ரா.ம்.ஸ் ல் மனுவை பதிவு செய்த பின்னரும் இத்தனை நடவடிக்கையும் தேவைப்படும். காகிதங்களுடன் அரசாங்கத்துக்கு நூற்றுக்கணக்கான் ஆண்டுகள் பழக்கம் உள்ளது. அதற்கே ஊழியர்கள் அசைந்து கொடுப்பதில்லை. கணிணி இன்னும் அவர்கள் பிரக்ஞைக்கு முழுமையாக வரவில்லை. ஆனாலும் கணிணியில் பதியப்படும் புகார் உயர் அதிகாரிகளாலும் மேலதிகாரிகளாலும் தவிர்க்க இயலாமல் அவர்கள் மேஜையில் கணிணித் திரையில் எப்போதும் பார்க்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதால் அது அவர்களுக்கு ஒரு அசௌகர்யம். 

சட்ட விரோதமாக மரம் வெட்டப்படுவது தொடர்பான சட்டங்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பேன். அவ்வப்போது ஒரு புது எண்ணம் ஒரு புது சிந்தனை அந்த வாசிப்பை ஒட்டி உருவாகும். சட்டங்களைப் படிப்பது என்பது வித்யாசமான அனுபவம். நான் எண்ணாதது யூகிக்காதது நாம் காணத் தவறியது ஆகிய்வை நம் முன் வந்து நிற்கும். 

ஒரு ஸ்கேனர் மெஷின் வாங்கி விடலாமா என யோசிக்கிறேன். அதிலேயே ஜெராக்ஸும் எடுத்துக் கொள்ளலாம். ஜெராக்ஸ் கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. 

நகல்களைப் பராமரிக்க ஒரு தனிக் கோப்பு உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் எண்ணுகிறேன். 

ஒரு குடிமகனாக நான் எனது கடமையைச் செய்வதாகவே எண்ணுகிறேன்.  

தி.ஜாமம்

 சில வருடங்களுக்கு முன்னால், ஓர் இலக்கிய வாசகரைச் சந்தித்தேன். அப்போது இளைஞர். இப்போதும் இளைஞர்தான். தமிழில் வாசிப்பவர்கள் மிகவும் குறைவு. அதனினும் இலக்கியத்தை முக்கியமான ஒன்றாக முக்கியத்துவம் கொண்ட ஒன்றாகக் கருதுபவர்கள் குறைவு. நான் சந்தித்த இளைஞர் இலக்கிய ஆசான்கள் மீது பெரும் மதிப்பும் பெரும் பித்தும் கொண்டு ததும்பிக் கொண்டிருந்தார். எங்கள் ஓரிரு சந்திப்புகளிலேயே அவர் புதுமைப்பித்தன் மீது தனக்குள்ள ஈடுபாடு குறித்து சொன்னார். அப்போது அவர் தி. ஜானகிராமனை அதிகம் வாசித்ததில்லை. நீங்கள் தி.ஜானகிராமன் வாசித்துப் பாருங்கள் என்றேன். தி. ஜா வின் ஓரிரு கதைகளை அவருக்குச் சொன்னேன். ‘’சிலிர்ப்பு’’, ‘’பாயசம்’’ ஆகிய்வை. பின்னர் அவர் தி.ஜா முழுத் தொகுப்பு வாங்கி அவரது அனைத்துக் கதைகளையும் வாசித்து விட்டு ஒவ்வொரு கதை குறித்தும் என்னிடம் மணிக்கணக்காகப் பேசுவார். இப்போது அவருக்கு பிடித்த இரு தமிழ் ஆசான்கள் புதுமைப்பித்தனும் தி.ஜா வும். எங்கள் உரையாடல்கள் எனக்கு புதுமைப்பித்த்னையும் அவருக்கு தி.ஜா வையும் மேலும் புரிந்து கொள்ள உதவின. 

Wednesday 7 September 2022

பாபநாசம்

நான் சிறுவனாயிருந்த போது , இரண்டு ஆண்டுகள் பாபநாசத்தில் குடியிருந்தோம். அதாவது , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம். காவிரியும் அதன் கிளை நதிகளும் பாபநாசத்தை தன் மகவெனக் கையில் ஏந்திக் கொள்ளும். வருடத்தில் முதல் முறையாக தண்ணீர் வரும் போது ஆற்றுமணலில் நீர் உள்ளே செல்லும் போது மணலின் இடைவெளிகளிலிருந்து ‘’குபுக் குபுக் குபுக்’’ என காற்று வெளிவரும் ஓசை கேட்கும். ஆறு முழுக்க அந்தப் பேரோசை நிரம்பி ஓங்காரமென ஒலிக்கும். குடமுருட்டி என ஒரு ஆறு. அதில் நான் குளிக்கச் செல்வேன். ஆற்றில் இறங்கினாலே சிறு சிறு மீன்கள் வந்து உடலில் லேசாக கடிக்கும். என் மொத்த உடலையும் மீன்கள் கொத்தி தின்று விடுமோ என நினைப்பேன். நிறைய பேர் உடன் குளிப்பதால் அவ்வாறு நடக்காது என எனக்கு நானே சமாதானம் செய்து கொள்வேன். 

இன்று காவிரியில் குளித்த போது உடலை சில மீன்கள் கொத்தின. மீன்களால் கொத்தப்பட்டது மகிழ்ச்சியைத் தந்தது.   

Tuesday 6 September 2022

ஸ்நானம்

இன்று மாலை காவிரியில் ஸ்நானம் செய்தேன். 

நதி கணந்தோறும் புதியதாக இருக்கிறது. நதியில் மூழ்கும் போது நாமும் புதிதாகிறோம். காலை ஸ்நானம் ஒரு விதம். நதி நம்முடன் பேசும் பொழுது. மாலை ஸ்நானம் நதியை நாம் மேலும் அணுக்கமாக உணரும் பொழுது. நதியின் சான்னியத்தில் இருப்பது பெரும் அகமகிழ்வை உண்டாக்குகிறது.  

எனது பள்ளித்தோழர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் மகாதேவன். அவரது வீடு காவிரியிலிருந்து கூப்பிடு தொலைவில் இருக்கிறது. சென்னையில் பணிபுரிந்து விட்டு இப்போது ஊரில் வீட்டிலிருந்து பணி புரிகிறார். இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். தகவல் தொழில்நுட்ப பணி புரிவதால் நாளின் பெரும்பகுதி வேலையில் மூழ்கியிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார். அடிப்படையில் நான் லௌகிக நியதிகள் தெரிந்தவன். ஒருவருடைய உத்யோகத்துக்கு முடிந்தால் உதவியாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சும்மா இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தொந்தரவாய் இருக்கக் கூடாது என்று எண்ணுபவன். எனவே அவர் வீட்டுக்கு ரொம்ப நாளாக செல்லவே இல்லை. சில நாட்களுக்கு முன்னால் அவரைச் சென்று சந்தித்து அவருடன் கொஞ்ச நேரம் உரையாடிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. அங்கு சென்று அவர் என்ன செய்கிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது ஏதும் பேசிக் கொண்டிருந்தேன். 

மீட்டிங் மீட்டிங் என்று மீட்டிங்கில் இருந்தார். அவருடைய புத்தக கலெக்‌ஷனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு புத்தகங்களைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டிருப்பேன். 

மகாதேவன் என்னிடம், ‘’பிரபு ! புத்தகம் எடுத்துப் படிங்க . வீட்டுக்கு எடுத்துட்டு போய் படிச்சுட்டு கொண்டு வந்து தர்ரதுன்னாலும் கொடுங்க. ‘’ என்றார். 

அடிப்படையில் நான் என்னுடைய புத்தகங்களை இரவல் தர விரும்பாதவன். அவ்வாறெனில் அடுத்தவர்களிடமும் அதே நியதியின் அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவன். என்னிடம் உள்ள புத்தகங்களிலேயே இன்னும் வாசிக்காத சில புத்தகங்கள் உள்ளன. இதில் ஏன் இரவல் வாங்கி வாசிக்க வேண்டும்? 

சில நாட்களாக அவரைச் சந்தித்ததில் அவர் என்ன பணி செய்கிறார் என்பதை எனக்குத் தெரிந்த விதத்தில் ஓரளவு புரிந்து கொண்டு அவரிடம் கேட்டேன். ’’மகாதேவன் ! நீங்க நீங்க மீட்டிங் மீட்டிங்னு பேசுறீங்களே அது என் காதுல விழுது. ஆணும் பெண்ணுமா பத்துக்கும் மேலான குரல் கேக்குது. அதுல உங்களோட குரல் மட்டும் தான் ‘அட்டெண்டிவ்’’ஆ இருக்கு. ஒரு சில பெண்கள் ஆர்வமா பதில் சொல்றாங்க. மத்த எல்லாரும் ஆர்வமே இல்லாம விருப்பமே இல்லாம பதில் சொல்றாங்க. அது அவங்க குரல்லயே தெரியுது’’ என்றேன். நாங்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பரிதாபமாக பார்த்துக் கொண்டோம். என்னை அவர் ஏன் பரிதாபமாக பார்க்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. கேட்டுத் தெரிந்து கொள்ளலாமா என்று எண்ணினேன். வேறொரு சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்ளலாம் என விட்டு விட்டேன். அவர் மீட்டிங் பேசிக் கொண்டிருக்கும் போது நான் புத்தகங்களைப் பார்ப்பேன். அவருடைய அணி உறுப்பினர்கள் பெயர் சொல்லிக் கூப்பிடப் படும் போது அந்த உலகத்துக்குள் மானசீகமாக நானும் செல்வேன். ஆனால் மகாதேவன் தினமும் சோர்வாக இருக்கிறார் என்பதை உணர்ந்தேன். 

‘’எந்த சூழ்நிலைக்கும் நீங்க எமோஷனலா ரியாக்ட் செய்யாதீங்க. நாம எமோஷனல் ஆனா அந்த விஷயம் ஒரு ஸ்டெப் பின்னாடி போகுமே தவிர முன்னாடி போகாது. இதை இருபது வயசா இருக்கற ஒருத்தர் கிட்ட சொல்ல முடியாது. உங்களுக்கு 43 வயசு. அதனால சொல்றன்’’ 

மகாதேவன் அமைதியாக இருந்தார். 

‘’ஒரு நாளைக்கு 12 மணி நேரம் இந்த சூழ்நிலைலயே இருக்கீங்க. உங்களுக்கு தினமும் மனமாற்றம் தேவை. நான் ஒரு விஷயம் சஜெஸ்ட் செய்றன். கேப்பீங்களா?’’

‘’சொல்லுங்க பிரபு’’ 

‘’காவேரில தண்ணி முழுசா போய்ட்டு இருக்கு. வீட்டுலேந்து கூப்பிடு தூரத்துல ஆறு. தினமும் காலையிலயும் சாயந்திரமும் பதினைஞ்சு பதினைஞ்சு நிமிஷம் ஆத்துல குளிங்க.’’

நண்பர் அமைதியாக கேட்டுக் கொண்டார். எதனையோ உணர்ந்தவர் போல் தீவிரம் கொண்டார். ‘’அப்படியா சொல்றீங்க’’

’’ஓடும் நதி என்பது எப்போதும் அசைவிலேயே இருப்பது. அந்த அசைவு நம்மகிட்ட இருக்கற வேண்டாத எல்லாத்தையும் அசைச்சு அசைச்சு நீக்கிடும். நாம ஒரு தடவை இறங்குன நதியில திரும்ப இறங்க முடியாது தெரியுமா? அது கணந்தோறும் மாறிக்கிட்டே இருக்கு. நாம ஸ்தூலமா பாக்கற வாழ்க்கை அல்லது கடவுள் தான் நதி’’

விஷயம் ரொம்ப மிஸ்டிக்கலான இடத்துக்கு சென்று விட்டதாக இருவரும் உணர்ந்தோம். 

‘’நாம ரேஷனலா இருக்கறதா நினைக்கிறோம். ஆனா அப்படியும் இல்ல. பத்து வயசு கொழந்தைங்க நதியைப் பாத்தா குளிக்கணும் நினைச்சு ஆத்துல குதிச்சு கும்மாளம் போடுது. நம்ம மனசை குழந்தைங்க மனசாவே வச்சுக்கலாம். நதியைப் பாக்கும் போதாவது.’’

நான் புறப்பட்டேன். ‘’பிரபு ! ஏதாவது புக் எடுத்துட்டு போங்க’’ 

’’சரி நான் ஒரு புக் எடுத்துக்கறன். ஆனா இப்ப எதிர இருக்கற நூற்றுக் கணக்கான புத்தகங்கள்ல எந்த புக் என் கைக்கு வரப்போகுதுங்கறதுல ஒரு மிஸ்ட்டிக்கல் எலிமெண்ட் இருக்கு. அது என்னன்னு பாத்துடுவோம்.’’

நவீன தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் புத்தகங்களைக் கண்கள் கடந்து கொண்டிருந்தன. 

தி. ஜானகிராமன் சிறுகதைகள் தொகுதி - 1 என்ற புத்தகம் இரண்டு பிரதிகள் இருந்தன. ‘’என்ன மகா இது ஒரே புக் ரெண்டு காப்பி இருக்கு. நான் இதை எடுத்துக்கறன்’’

கையில் எடுத்துக் கொண்டு சொன்னேன். ‘’இந்த புக்கை எடுத்தது ஒரு சிவில் எஞ்சினியர் . உங்க கலெக்‌ஷன்ல ஒரு புக்கும் குறையலை. ஆனா எனக்கும் ஒரு காப்பி வந்திடுச்சு. ‘’ 

தி.ஜா நூலை கையில் வைத்திருப்பதே மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு மிக மிக நெருங்கிய நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் தீவிரமான தி. ஜானகிராமனின் ரசிகன். தி. ஜா குறித்து பேசும் பொதெல்லாம் மிக உணர்ச்சிகரமாகி விடுவான். அவனை அந்த கணம் நினைத்தேன். 

புத்தகத்தினுள் சென்று அந்த தொகுப்பின் முதல் சிறுகதையின் தலைப்பைப் பார்த்தேன் . ‘’கங்கா ஸ்நானம்’’. 

மகாவிடம் காண்பித்தேன். அவருக்கு ஆச்சர்யம். 

’’தகவல் உங்களுக்கு வந்திருக்கு மகா. காவேரி மாதா உங்களைப் பாக்கணும்னு நினைக்கறா’’ 

மகா கண் கலங்கி விட்டார். 

நான் விடைபெற்று வீட்டுக்கு வந்தேன். ‘’ஸ்நானம்’’ என்று தலைப்பிட்டு ஒரு பதிவை எழுத வேண்டும் என்று எழுத அமர்ந்தேன். தி. ஜா தீவிர ரசிகனான என் மிக மிக நெருங்கிய நண்பனிடமிருந்து வந்த குறுஞ்செய்தி ஒலி எழுப்பிக் கொண்டு என் அலைபேசியில் வந்தமர்ந்தது. 

நேற்று தளத்தில் பதிவிட்ட நினைவு கவிதையிலிருந்து 

’’அந்திப் பொழுதில்
அந்திப் பொழுதைத் 
தொழுகிறான்
ஓர் எளிய மனிதன்’’

என்ற எனது கவிதை வரிகளை எனக்கு அனுப்பியிருந்தான். 

Monday 5 September 2022

நினைவு

ஒரு மலர்க்காட்டின் 
மலரிதழ்
காற்றில்
மிதந்து
சென்று கொண்டேயிருக்கிறது

உனது உள்ளங்கைகளில்
நித்யமாக
ஒட்டிக் கொண்டிருக்கிறது
மேகங்களின் நீர்மை

ஒளி வீசும் உன் புன்னகைகள்
நம்பிக்கைகளை அளித்துக் கொண்டே இருக்கும் 
உனது வார்த்தைகள்
எப்போதும் அமைதி தரும் உனது கருணை

நினைவுகளில்
நீ
ஒளியானாய்
நீ
நிலவானாய்
நீ
சுடரானாய்

அந்திப் பொழுதில்
அந்திப் பொழுதை
தொழுகிறான்
ஓர் எளிய மனிதன் 

தீர்த்தம்

நீரை வாழ்வளிக்கும் அமிர்தமாக உணர்வது இந்திய மரபு. நதியை நூற்றுக்கணக்கான தலைமுறைகளுக்கு கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் அன்னையாகக் காண்பது இந்தியர்களின் இயல்பு. இந்தியர்கள் நதிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய சுக துக்கங்களை நதியே அறிகிறது. அவர்களுடைய பிராத்தனைகளை நதியே சுமந்து செல்கிறது. அவர்களுடைய துயரங்களை நதியே நீக்குகிறது. நதியில் மூழ்குதல் என்பதை ஒரு வழிபாடாக மேற்கொள்வது இந்தியர்களின் பழக்கம். காவிரியிலிருந்து சில நூறு அடிகள் தொலைவில் எனது வீடு அமைந்துள்ளது. இன்று காலை கருக்கல் பொழுதில் காவிரிக்குச் சென்றேன். நதி சலசலக்கும் ஓசை இசையெனக் கேட்டது. நதியில் மூழ்கினேன். மீண்டும் மீண்டும் மூழ்கி மூழ்கி எழுந்தேன். உடலும் மனமும் உணர்வும் பெரும் நம்பிக்கை கொண்டன. ஒரு நதித்தடம் என்பது எத்தனை பேருக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கையின் சாட்சியம். இந்த நதியில் எத்தனை மகத்தான மனிதர்கள் மூழ்கி எழுந்திருக்கிறார்கள். எத்தனை மகத்தான விஷயங்களின் ஆதாரமாக நதி இருந்திருக்கிறது. அகம் நதியென பிரவாகிக்க வேண்டியது. வாழ்வு நதியென அமைய வேண்டியது.  

காவிரி போற்றுதும் ! காவிரி போற்றுதும் !

Sunday 4 September 2022

இன்னொரு நிலம்

 இன்று ஊருக்கு அருகே 3 ஏக்கர் நிலமொன்றில் 1200 தேக்கு கன்றுகள் நடும் பணியை ஒரு நில உரிமையாளர் துவக்கி உள்ளார். ‘’காவிரி போற்றுதும்’’ அவர் தேக்கு பயிரிட முடிவு செய்ததில் முக்கியக் காரணிகளில் ஒன்றாக இருந்தது. ஒரு கன்றை நடுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.  விவசாயிகளின் வருமானம் பெருக வேண்டும் என பிராத்தித்து ஒரு தேக்கு மரக் கன்றை நட்டேன். 

Saturday 3 September 2022

விரதம்

சில செயல்களைத் தொடங்க இருக்கிறேன். சில செயல்களை மேலும் தீவிரமாக்க இருக்கிறேன். சில விஷயங்களில் ஆழம் கொள்ள விரும்புகிறேன்.  

நமது மரபு நமது விருப்பங்களை பிரக்ஞைபூர்வமாக நேருக்கு நேராக நோக்கச் சொல்கிறது. நம்மை நமது விருப்பங்களைப் புரிந்து கொள்ள அது மிகவும் உதவிகரமானது.

எதைத் தொடங்க இருக்கிறோமோ எதில் தீவிரம் கொள்ள விரும்புகிறோமோ எதை முக்கியம் என்று நினைக்கிறோமோ அதற்கு நம்மை முழுமையாக அளிக்க வேண்டியது அவசியம். நம்முடைய நேரத்தை நம்முடைய எண்ணங்களை நமது கணத்தையும் அதற்காக அளிக்க வேண்டியது முக்கியம். எவ்விதமான சிதறலும் இன்றி மனதை ஒருமுகப்படுத்திக் கொள்வது முக்கியமாக தேவைப்படுவது. 

இந்திய மரபு பரிந்துரைக்கும் விரதம் என்பது ஒரு முக்கியமான உபகரணம். வாரத்துக்கு ஏதேனும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது என்பது இந்தியா முழுதும் உள்ள நடைமுறை. அவ்வாறெனில் வருடத்துக்கு 52 நாட்கள். நான் விரதம் இருக்க வேண்டும் என்று விரும்புவேன். ஆனால் எண்ணியபடி என்னால் முழுமையாக விரதம் இருக்க முடியாது போகும். எனது வாழ்க்கைமுறை எனது தொழில் எனது தவிர்க்க முடியாத அப்போதைய சூழ்நிலைகள் என பல காரணிகள். பசியைப் பொறுத்துக் கொள்வது என்பது எனக்கு மிகவும் கடினமானது. பல திசைகளில் சிதறிப் பரவும் இயல்பு கொண்ட எனது மனத்தை பசி மேலும் மேலும் சிதறச் செய்து விடும். 

விரதம் இருப்பது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருப்பது என்பது விரதத்துக்கு வலுவூட்டும். ஆனால் நான் தினமும் பலரைச் சந்திப்பவன். அவர்கள் உபசரிக்கும் போது அதனை மறுக்கும் நிலை வரும் போது விரதம் இருப்பதைக் கூறும் நிலை ஏற்படும். அது குறித்து அவர்கள் கூறும் சொற்கள் பசியுடன் இருக்கும் நிலையில் விரதத்தில் தாக்கம் ஏற்படுத்தும். என்னுடைய இயல்பு என்பது மேலும் மேலும் என பல செயல்களில் ஈடுபடுவது. ஏதோ ஒன்றை கற்பனை செய்து கொண்டே இருப்பது. அவ்வாறான ஒரு இயல்பு உணவின் மேல் தீவிரமான ஆர்வம் கொண்டிருக்கும். அதைக் கடந்து செல்ல வேண்டிய ஒரு பருவம் வந்து விட்டதாக உணர்கிறேன். 

நாற்பது நாட்களுக்கு ஒரு விரதத்தைத் துவக்க உள்ளேன். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உண்பது என்றும் பகல் பொழுது முழுவதையும் முழுமையாக செயல்களுக்காக வழங்குவது என்றும் முடிவு செய்துள்ளேன். இந்த விரதம் எனக்கு பலவிதங்களில் உதவியாக இருக்கும் என்று என்னுடைய உள்ளுணர்வு இந்த கணம் கூறுகிறது. 

திருவாசகத்தில் ‘’யாத்திரைப் பத்து’’ என்ற பகுதி உள்ளது. ஜீவன்கள் சில சிவனைக் காண யாத்திரை செல்ல வேண்டும் என்று கிளம்பும். அந்த ஜீவன்கள் அனைத்துமே எல்லைக்குட்பட்டவை. மிக மிகக் குறைந்த சக்தி கொண்டவை. அப்போது சில ஜீவன்கள் சிவன் வாழும் லோகம் எங்கோ உள்ளது ; நம்முடைய குறைந்த சக்தியைக் கொண்டு அங்கு நம்மால் போக முடியுமா என்று அகத்துயருடன் ஐயம் எழுப்பும். அதற்கு ஒரு ஜீவன் விடை அளிக்கும் : ‘’நாம் சக்தி குறைந்தவர்கள் தான். ஆனால் நாம் சென்றடைய நினைக்கும் சிவன் அளப்பரிய சக்தி கொண்டவன். கருணையின் கடல் அவன். தடைகளுடன் இயலாமைகளுடன் நாம் பயணித்து வருகிறோம் என்பதை அவன் அறிவான். நம் நோக்கம் மீது கருணை கொண்டு நம்மை நோக்கி அவன் வருவான். அல்லது அவனை வந்தடைய தேவையான சக்தியை அவனே கொடுப்பான்’’ . 

எல்லையற்ற பரம்பொருளின் கருணை துணை நிற்கும் என்ற நம்பிக்கையுடன் எனது விரதத்தைத் துவங்குகிறேன். 

Friday 2 September 2022

யாருக்கு யார் உதவி (நகைச்சுவைக் கட்டுரை)

நண்பர் ஒரு உதவி கேட்டார். 

‘’பிரபு ! என் பையனுக்கு ஒரு செக் கொடுத்திருக்கன். அத கேஷ் பண்ணி என் சொந்தக்காரர் ஒருத்தர் கிட்ட கொடுக்கணும். உங்க கூட அவன அனுப்பி வைக்கறேன். எனக்காக அந்த வேலையை முடிச்சுக் கொடுக்கணும். பிளீஸ்’’ 

நண்பர் தன் மகனிடம் , ‘’அங்கிள் கூட போ. அவருக்கு ஹெல்ப் பண்ணு’’ என்றார். அவன் அதனை ஆமோதிக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. 

வங்கிக்கு தம்பியை அழைத்துக் கொண்டு சென்றேன். 

நிதிச் சாளரத்தில் உள்ளவரிடம் செக்கைக் கொடுக்கச் சொன்னேன். 

அவன் என் கையில் செக் கொடுத்தான். 

‘’தம்பி ! உனக்குக் கொடுக்கப்பட்ட செக் ஐ நான் பிரசண்ட் பண்ணக் கூடாது. நீதான் பண்ணனும். ‘’ 

அவன் அதை பெரிதாக உள்வாங்கவில்லை. உள்ளே கொடுத்தான். 

சாளரத்தில் இருப்பவர் என்னையும் அவனையும் சேர்ந்து பார்த்துக் கொண்டார். 

கணிசமான நேரம் ஆனது. தம்பி அதற்குள் வங்கிக்கு வெளியே ஃபோன் பேச சென்று விட்டான். இவன் இல்லை என்ற அடுத்த பேமெண்ட்டுக்கு சென்று விடப் போகிறார்கள் என்று நான் உள்ளே அழைத்தேன். கொஞ்ச நேரம் கழித்துத்தான் வந்தான். 

‘’தம்பி ! ஒரு வேலைன்னு வந்தா அந்த வேலையை முடிக்கற வரைக்கும் அங்கேயே இருக்கணும்’’

அதெல்லாம் சென்ற தலைமுறையின் மதிப்பீடுகள் என்பது போல இருந்தான். 

அவனுக்கு ஃபோன் மேல் ஃபோன் வந்து கொண்டிருந்தது. 

‘’அதை கொஞ்ச நேரம் சைலண்ட்ல தான் வையன் தம்பி’’

‘’முக்கியமான ஃபோன் வரும்’’

‘’யார் பேசுவா?’’

‘’ஃபிரண்ட்ஸ்’’

அனைவரும் பட்டம் பெற்று விட்டு வீட்டில் இருப்பவர்கள் என்பது எனக்குத் தெரியும். 

சாளரத்தில் இருப்பவர் அவனை அழைத்தார். அவன் நகர மறுக்கிறான். என்னைப் போகச் சொல்கிறான். ‘’தம்பி ! செக் உனக்குத்தான் கொடுத்திருக்காங்க. நீதான் போகணும்.’’

நாங்கள் இருவரும் சென்றோம். 

சாளரத்தில் இருப்பவர் , ‘’அட்ரஸ் ப்ரூஃப் ஜெராக்ஸ் வேணும். ஆதார் அல்லது டிரைவிங் லைசண்ஸ்’’ என்றார். 

நான் ‘’ஆதார் நம்பர் கொடுத்தா போதுமா?’’ என்றேன். 

‘’இல்லை சார். ஜெராக்ஸ் மஸ்ட். நீங்க நான்-கஸ்டமர்’’

தம்பியிடம் கேட்டேன். ‘’ஆதார் கார்டு கையில் இருக்கா?’’

‘’இல்ல’’

‘’டிரைவிங் லைசண்ஸ்’’

‘’இல்ல’’

‘’ஸ்மார்ட் ஃபோன்ல ஆதார் கார்டை ஃபோட்டோ எடுத்து சேவ் பண்ணி வச்சுருக்கயா?’’ 

‘’இல்ல’’

‘’ஆதார் கார்டு எங்க இருக்கு?’’

‘’வீட்ல இருக்கு’’

‘’வீட்டுக்கு ஃபோன் பண்ணி ஆதார் நம்பர் சொல்ல சொல்லு. நாம இ- ஆதார் டவுண்லோடு பண்ணலாம். ‘’

‘’ஆதாரோட இன்னும் ஃபோன் நம்பர் லிங்க் பண்ணல’’

அப்புறம் எதுக்குத் தான் எந்நேரமும் ஸ்மார்ட் ஃபோனும் கையுமா இருக்க என்று கேட்க நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை. 

‘’வீட்ல யாருக்காவது ஃபோன் பண்ணி ஆதார் கார்டை ஃபோட்டோ எடுத்து அனுப்பச் சொல்லு’’

இரண்டு மூன்று ஃபோன் ஃபாலோ அப்புக்கு பிறகு ஆதாரின் ஃபோட்டோ வந்தது. அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து வங்கியில் கொடுத்தோம். பணம் தம்பியின் கைக்கு வந்தது. 

வங்கியிலிருந்து வெளியே வந்ததும் தம்பிக்கு ஒரு ஃபோன் வந்தது. 

‘’அங்கிள் ! இந்த அமௌண்ட் ஐ அப்பா சொன்னவர்ட்ட நீங்களே கொடுத்திடறீங்களா ? என்னோட ஃபிரண்டு கால் பண்ணி வர சொல்றான்’’

அவனை இழுத்துப் பிடித்து அழைத்துச் சென்று வேலையை முடித்தேன். 

அன்று மாலை நண்பரைச் சந்தித்தேன். 

நண்பர் என்னிடம் கேட்டார். ‘’ தம்பி ! ஹெல்ப் பண்ணானா?’’