Saturday 30 June 2018

மழை மேகம்

மீண்டும் மீண்டும்
மீண்டு
வருகையில்
உன் நம்பிக்கைகள்
சலிப்பின்
ஒரு துளி இன்றி
அமைதிப்படுத்துகின்றன
குருதியும்
மறுபக்கம் கண்ணீரும்
நிறைந்து வழியும்
அகத்தில்
உன் இருப்பு
சொல்லெடுக்காமல்
மௌனம்
கொள்கிறது
ஒவ்வொரு முறையும்
மலர்களைத் தவற விடும்
கரத்தில்
எப்படியோ
வந்து சேர்கிறது
கொலைவாள்
முடிவில்லாமல்
ஓடிக் கொண்டேயிருக்கிறேன்
அகம்
அடங்கா வஞ்சத்துடன்
கை நழுவிப் போன
வாளை
தேடிக் கொண்டிருந்த போது
உன் சிரிப்பின்
ஒளி
மின்னியது
பின்னர்
இடியோசையாய்க்
கேட்டது

Friday 29 June 2018

சாரல்

சில்லென்றிருக்கும்
வனாந்தரத்தில்
உன் வழித்தடத்தில்
மலர்ந்துள்ள
மலர்கள்
நீ நடக்கும் முன்
மலர்ந்தவையா
நடக்கையில்
மலர்ந்தவையா

துளிர்

ஆசுவாசப்படுத்துகிறது
இரவின் மைதானம்
மனம் ஓய்ந்து
சிரமபரிகாரம்
செய்து கொள்கின்றனர்
தற்காலிக ஓய்வில்
தனித்திருக்கின்றனர்
கைவிடப்பட்டவர்கள்
துக்கம் கொண்டவர்கள்
ஒரு சவால்
ஒரு நம்பிக்கை
ஓர் அழைப்பு
துளிர்க்கிறது
நுட்பமான
மிக நுட்பமான
இருட்
கணம்
ஒன்றில்

விழி

குறைந்த ஒளி
மிகக் குறைந்த ஒளி
மெல்ல கேட்கிறது
ஆற்றின் ஓசை
மகிழ்வின் ததும்பலாய்
கொஞ்சும் பிரியமாய்
யுகம் யுகமாய்
பழகிய புள்
முதல் ஒலி எழுப்புகிறது
ஓர் அழைப்பாக
உயிர்களை நோக்கி
பதில் குரல் தருகின்றன
விழித்துக் கொண்ட பறவைகள்
அமைதியை தியானித்திருந்த
வெண்கல மணி
சப்தத்தைத்
தியானிக்கிறது
சுடரும் மலரும் கண்டு
விழித்தெழுகிறது
பிரும்மாண்டம்
ஒலிரும் உடுக்கையில்
ஒடுங்குகின்றன
ஜடங்கள்
உயிர் இனங்கள்

Thursday 28 June 2018

நீறு

ஓயாமல் எழுகிறது சிற்றலை
மகா நதியில்
கரை நோக்கி
ஓடக்காரன் பாடல் கேட்கிறது
எப்போதுமான காலத்தில்
பயணி அமர்ந்திருக்கிறான்
காலப்பெருக்கில்
அலையும் ஓடத்தில்
மயானக் கரையின் புகை
மேலே சென்று கொண்டிருக்கிறது
நெளிந்த மனம்
விடுபடும் கணத்தில்
எஞ்சியிருக்கிறது
தணல் உதிர்த்த சாம்பல்
பூசகன் அள்ளிச் செல்லும்
கலத்தில்
சிரிக்கிறது
அறிதலின் மகரந்தம்

Tuesday 26 June 2018

உன் புன்னகையில்
எவ்வளவு தொலைதூரங்கள் இருக்கின்றன?
உன் பறக்கும் கூந்தலின்
எதிர்பாராமை
சாத்தியத்தின் எத்தனை கூறுகளைக்
கொண்டிருக்கிறது?
மெல்லிய மென்சோகம் கொண்ட
உன் முகம்
எத்தனை யுகங்களாய்
அதனை சூடிக் கொண்டிருக்கிறது?
உன் சிவந்த உள்ளங்கைகளின்
மலர்கள்
மகரந்தத்தைத் தூவிக் கொண்டிருக்கின்றன
நிலமெங்கும்
உனது ஒவ்வொரு மூச்சிலும்
நிகழ்கின்றன
ஆயிரம்
ஆயிரம்
ஜீவ மரணங்கள்

Monday 25 June 2018

அவதானம்

பள்ளி விட்டு வந்த
மர்ஃபி
என்னிடம் கேட்டான்:
‘’கெட்டவங்கல்லாம்
சினிமா தியேட்டர்
ஸ்கிரீன்லதான
இருப்பாங்க’’

நான் யோசித்துப் பார்த்தேன்

Friday 22 June 2018

வாரத்தின் இரு நாட்கள்
கரி எண்ணெய் பிசுபிசுப்பு போக
புளியால் அழுத்தி தேய்க்கப்பட்டு
நீரில் கழுவப்படும்
மங்கி இருக்கும்
பித்தளை விளக்கின்
செந்நிற தீச்சுடர்
போல
இருக்கிறோம்
நீயும் நானும்

Wednesday 20 June 2018

பாலை மலர்

ஒரு சிறு சிற்பம் போல
அத்தனை வசீகரமாக
அவ்வளவு ஆர்வமூட்டுவதாக
ஏந்திக் கொண்டிருப்பது தத்தளிக்கச் செய்வதாக
உணர்ந்திருக்கிறேன்
உன்னைப் பற்றி
உன்னுடன் இருக்கும் பொழுதுகளில்

பனி நாட்களின் 
ஆற்று நீர் போல
குளிர்ந்தும் சுட்டும்
கோடையின் ஆறென
சுட்டும் குளிர்ந்தும்
இருந்திருக்கின்றன
உனது
தற்செயலான தீண்டல்கள்

சிட்டுக்குருவியின் துள்ளல்களை
புறாக்களின் சிறகடிப்புகளைக்
கண்டிருக்கிறேன்
உற்சாகமாய்
நீ
சித்தரிக்கும் தருணங்களில்

மென் காற்றாக
ஒரு விருட்சத்தின் நிழலாக
விடாய் தீர்க்கும்
ஒரு டம்ளர்
பானை நீராக
நீ
அனுபவமாகிறாய்

என் அகப் பாலையில்
பூத்து நிற்கும்
தாலப்பனையாகவும்

Tuesday 19 June 2018

இன்று காலை நடை




இன்று காலை நடையில்
நிகழ்ந்த
சந்திப்புகள்
பல

கட்டப்பட்ட மூட்டையில்
எட்டிப்பார்க்கும்
ஒரு கீரைக் கட்டு
சைக்கிளில்
சென்று கொண்டிருந்தது
அவசரமாகத் தாண்டி
எதிர்பாராமல்
புன்னகைத்தது

அரசடி மதகில்
ஓடிய நீர்
முகமன் சொன்னது
ஆரவாரக் குரல் எழுப்பி

மேலவீதி விநாயகர்
கண்விழித்திருந்தார்
திருமஞ்சனத்துக்கு
தயாராகிக் கொண்டு

அரவம் கேட்டு
சிறகடித்துப் பறந்து
சுழன்று
அமர்ந்தன
மாடப் புறாக்கள்
கோபுர சிற்பங்களில்

வழக்கம் போல்
சூரியன்
மைதானத்தில் உருளும்
கால்பந்து

பிள்ளைத்தமிழ்




எப்போதும்
சூழும் விழைவின் பேரடர்த்தி
பீறிடத் தயாராயிருக்கும் குரூரத்தின் கூர்மை
வதைப்பதின் வன்மை
காமப் பெருநோய்
வீழ்ச்சியின் தன்னிரக்கம்
வேட்கையின் தீரா விடாய்

இல்லா
நாள் ஒன்று 
தொடங்கிற்று வாழ்வில்

ஃபினாயிலின் நெடி நிறைந்திருந்த தாழ்வாரத்தில்
தனியே அமர்ந்திருந்தேன் சில நிமிடம்
எண்ணி சேர்த்திட்ட வன்மங்கள்
துக்கத்தால் கரைந்து கொண்டிருந்தன

உடல் அமைதியாயிருந்தது
மூச்சின் சீரொலி என்னை நொறுக்கி உடைத்துக் கொண்டிருந்தது
துடிப்பின் தாளத்தை இதயத்தில் உணர்ந்தேன்

நான் நிகழ்த்திய வன்முறைகளுக்காக
காயப்படுத்தல்களுக்காக
பல அடிகள் தள்ளியிருக்கும் ஈற்றரையின் உள்ளிருக்கும்
மனைவியிடம் மன்னிக்கக் கோரிக் கொண்டிருந்தேன்
அவள் பிணமாகி விட்டதைப் போல
அவள் காலின் கட்டை விரல்கள் சேர்த்துக் கட்டப்பட்டிருப்பதைப் போல
ஒரு காட்சி
மனதில் வந்து போனது
அக்காட்சியில் அவள் விரலில் மெட்டி இருந்ததா என நினைவுபடுத்த முயன்றேன்
மெட்டி ஞாபகம் வந்ததேன்?
மன்னிப்பின் சொற்களுக்குப் பின்னால்
ஒரு மெல்லிய மென்தொடுகை

ஒலிகள் வடிகட்டப்பட்ட
காட்சிகள் துல்லியமாகியிருந்த
ஒத்திசைவான ஓர் உலகம்
என் முன்னால் இருந்தது
இது இப்படித்தான் எப்போதும் இருந்ததா
செவிலி செய்நேர்த்தியின் பழக்கத்தில்
நடந்து கொண்டே செய்தி சொன்னாள்

எனக்குப் புரியவில்லை
அவள் சொற்கள் மீண்டும் என்னால் கேட்கப்படவேயில்லை
மனைவியின் அன்னை மகிழ்ந்தாள்
மகிழ்ச்சியை எங்கும் பரப்பினாள்
தெய்வத்துக்கு கை கூப்பினாள்
செவிலிக்கு இனிப்பு தந்தாள்
அவர்கள் இணைந்து கொண்டனர்

உலகுக்கு ஒத்திசைவை
மீண்டும் உருவாக்கிய
என் மகவை
என்னவென்று 
முதலில்
அழைப்பது
என புரியாமல் 
உள்ளே சென்று 
பார்த்தேன்
என் மகவையும்
என் மனைவியையும்

Sunday 17 June 2018

காதலி முன்நிற்கும் பொழுது

காதலி முன்நிற்கும் பொழுது
வெவ்வேறு அனுபவங்களின் கூட்டுத்தொகையாக இருக்கிறது
ஒரு தந்தையைப் போல ஓயாப்பெருமையுடன் அவள் முகம் பார்ப்பதாக
ஒரு அன்னையாக அவள் ஒப்பனைகளைச் சரிசெய்வதாக
ஒரு செல்லப்பிராணியாக அவளால் கொஞ்சப்படுவதாக
அவள் பேசுவதை எப்போதும் பொறுமையாக கேட்டுக் கொள்வதாக
அவளது மனநிலையை ஒரு தோட்டக்காரனைப் போல சீராக பராமரிப்பதாக
அவள் விரும்புவதை செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதாக
காமத்தின் தடங்களில் எதிர்பாரா நகர்வுகளை உருவாக்குவதாக
பெருகும் உயிர் உள்ள ஒரு நுண்சொல்லை மனதில் சொல்லிக் கொண்டிருப்பதாக
ஒரு குயவன் மண்ணைப் பிசைந்து வார்ப்பதைப் போல அவள் உடலைக் கையாள்வதாக

காதலி முன்நிற்கும் பொழுது
வெவ்வேறு அனுபவங்களின் கூட்டுத்தொகையாக இருக்கிறது   





தனித்த கிராமத்து மண் சாலைகள்
மலைகளின் தகரக் கொட்டகைகள்
காய்ந்த சோளத் தோகைகளில் வெளிப்படும் கதிர்கள்
முட்டைகோஸ் பயணிக்கும் மாட்டு வண்டிகள்
பெருநதிக் கரை நெல் வயல்கள்
நெடுவழி போகும் கால்நடை மந்தைகள்
கடற்கரைத் தென்னந்தோப்புகள்

வெறும் காலில்
கையில் மயிற்பீலியுடன்
நடந்து சென்று கொண்டிருக்கிறான்
ஒற்றைப் பயணி

Saturday 16 June 2018

உன் பரவசத்தின் ஊற்றுக்கள்
நறுமணமாய் பரவுகின்றன
மகரந்தங்கள் மிதக்கும் காற்றில்
சிதறும் சிறு தீ மலர்களிடையே
பூத்திருக்கும்
பெரும் பூவாய்
நீ நீள்கிறாய்
அனாதிக்கும்
அனந்தத்துக்கும் 
இடையே
ஓயாது அலை நீர் அள்ளும்
காற்று
மேகங்களை இழுத்துச் செல்கிறது
உனது நடைத் தாழ்வாரமாய்
மழை உண்ட மண்
துளிர்க்கிறது
சின்னஞ்சிறு
பசும்புல்லாய்
சிட்டுக்குருவிகள்
சிறகடிக்கின்றன
பெரிய
மிகப் பெரிய
வெட்டவெளியில்

Wednesday 13 June 2018

பலி




உனது மலர்ப்பாதங்களில்
உதிக்கிறது
எனது செங்கதிர்ச் சூரியன்
என் மாசினை
பனி நீராய்
உறிஞ்சி
என் நெஞ்சத்து இருள்
அகற்றும்
சிற்றகலாய்

அகம் திரும்புதல்




எனது சாலை
பாறை அடுக்குகளுக்கு இடையே
பருத்தி வயல்களினூடே
இருபுறமும் தென்னை சூழ்ந்திருக்க
ஒருபுறம் கடலும்
மறுபுறம் மலையும்
நின்றிருக்க
ஆனைகள்
சிம்மங்கள்
உலவும் காடுகளில்
காய்கறிகள் குவிந்திருக்கும்
ஊர்ச்சந்தைகளில்
சென்று கொண்டேயிருக்கிறது
வெவ்வேறு நாளில்
வெவ்வேறு சூரியனை
வெவ்வேறு நிலவை
கண்டவாறு

அகம் திரும்பி
தினமும்
காண்கிறேன்
சூரிய சந்திரனை
அன்றைய சந்திர சூரியனுடன்

சுடராட்டு




விண் சிவந்து
இருள் மெல்ல நிரம்பும்
அந்தியில்
சிறு தீச்சுடர்களின் நதி
ஓடிக்கொண்டிருக்கிறது
மலர்ப்பரப்பில்

படிகளில்
அமர்ந்திருக்கின்றனர்
பிறந்து இறந்து
இறந்து
பிறக்கும்
மானுடர்கள்
அந்தம் அற்ற ஆண்டுகளாக

உனது
பூசனைத் தாலம்
நிரம்பியிருக்கிறது
மலர் அடுக்குகளால்
செஞ்சுடரால்

தீபம்
ஏந்தியிருக்கும்
ஒரு தீச் சுடரென
நீ
வந்து சேர்கிறாய்
முடிவிலா
நதிக்கு

உனது கனிவு
மலராகவும்
உனது ஆசி
சுடராகவும்
பயணிக்கத் துவங்குகிறது
செங்கதிர்
முளைக்கும் வரை

உன்னைக் கூடும் பொழுது

உன்னைக் கூடும் பொழுது

ஒரு மன்றாட்டு
ஓர் அறிக்கையிடல்
ஒரு வழிபாடு
ஒரு பலிபீடம்
ஒரு வதை
ஒரு அறுவைசிகிச்சை
ஒரு வசந்தகாலம்
ஒரு முழுக்காட்டு
ஓர் அறிதல்
ஒரு தீர்ப்பு
ஒரு சரணாகதி

Tuesday 12 June 2018

அந்த மலைவாசஸ்தலத்தில்
மணிக்கட்டு வரை கம்பளி அணிந்து
அவ்வப்போது
இரு கை விரல் பிணைத்து
குன்றொன்றில்
தலை குனித்து
மேகங்கள் நிரம்பிய பள்ளம்
ஒன்று கண்டு
சிறுமி போல்
திகைத்து மீளும் அக்கணத்தில்
நீ இருக்கிறாய்
சிறகுகள் இல்லாத வண்ணத்துப்பூச்சியாக

Friday 8 June 2018

எங்கும் நீ



ஒளி பரவும்
உன் புன்னகையை
ஓர் அருமணியாக்கி
கணையாழியில் சூட்டி வைத்தேன்
உன் பாம்பு விரலில்
அமர்ந்திருந்தது
அனாதி காலமாக

உனது
ஒரு சரியும் பார்வையை
வானில் வைத்தேன்
அவ்வப்போது
மின்னிக் கொண்டிருந்தது
இடிகளுக்கு முன்னால்

ஒரு விரைவான நகர்வில்
கணப்பொழுதில்
காற்றில் அலையும்
உனது ஆடைகளின் சரசரப்பு
வானில் மிதந்து கொண்டிருந்தது
மழை மேகங்களாக

உனது கனிவு
ஒரு மெட்டியாக
ஒலி வீசியது
உனது பொற்பாதங்களில்

தொலைதூரத்தில்
நீ நின்று கொண்டிருக்கும்
மனச்சித்திரத்தை
ஒரு மரமாக ஆக்கி
பூமியில் வைத்தேன்
புவியில் வேர்களையும்
விண்ணில் கிளைகளையும்
நிரப்பி
நின்று கொண்டிருந்தது
உன்னைப் போல

Thursday 7 June 2018

கவிதைக் கணம்

அதைச்
சொல்லி விட முடியும்தான்

அக்கணத்தை

ஓட்டப்பந்தயம் ஓடுபவன்
காற்றில் மிதப்பதாக
உணரும்
ஏதோ ஒரு கணம்

நீந்தும் போது
செவிகளில் நீர் நிறைந்து
விழிகளை
ஆடி அமரும்
அலைகள்
மறைக்கையில்
வாழ்க்கையே மிதத்தல்
என
எண்ணும் கணம்

ராட்டினத்தில் மேலேறும் போது
தர்க்கம்
தற்காலிகமாக
ரத்தாகும்
கணம்

ஒரு சிறுமியின்
நாட்டிய அசைவில்
ஒரு சிற்பம்
உயிர் பெற்றதாக
பார்ப்பவர்கள்
நினைக்கும்
கணம்

ஒரு நதிக்கரையில்
நெடுநேரம்
அமர்ந்து
நதியையே பார்ப்பவன்
மனம்
கண்ணீராய் கரையும் கணம்

சக மனிதனுக்காக
ஒருவன்
உயிரையே இழக்கத் துணியும்
கணம்

இன்னும் பல
இன்னும் பல

அதைச்
சொல்லி விட முடியும்தான் 

இன்னும்



 
இன்னும்
ஒரு சொல்
இல்லை
ஒரு வாக்கியம்
இல்லை
ஒரு உரை
இல்லை
ஒரு மொழி

மீதம் இருக்கிறது
சொல்லப்படாமல்
உரைக்கப்படாமல்
மொழியப்படாமல்

இல்லை
இல்லை
இவை இல்லை
ஒரு கவிதை

பள்ளி மீண்டும் செல்லும் மர்ஃபி



மர்ஃபிக்கு
பள்ளி மீண்டும் துவங்கி விட்டது
இந்த விடுமுறையில்
ஒரு சிவப்பு ஆட்டுடன்
சினேகம் செய்து கொண்டான்
எப்படி என்று கேட்டேன்
தினமும் கீரை கொடுத்து என்றான்
ஒருநாள் வீட்டுக்குள் அழைத்து வந்து விட்டான்
தினமும் 
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்து
சங்கேதக் குறியொலி எழுப்புகிறது
இவன் வாசலுக்கு ஓடுகிறான்
நாலு நாளைக்கு முன்னால்
அடுத்த தெருவிலிருந்து
ஒரு குட்டி நாயை
தூக்கி வந்தான்
அதற்கு போட மூன்று பிஸ்கட் கேட்கிறான்
அதில் ஒன்றை அவன் தின்கிறான்

விளையாட்டு மைதானத்தையும்
கிரிக்கெட் பந்துகளையும்
ஷெட்டில் மட்டைகளையும்
கை தொட முடியாதது
அவனுக்கு வருத்தமளிக்கிறது

மர்ஃபி இல்லாத பகல்
எனக்கும்
துயர் தருகிறது
சிவப்பு ஆட்டுக்கும்
குட்டி நாய்க்கும்
கூட

Wednesday 6 June 2018

மன்னிக்கவும். நீங்கள் ஆட்டத்தை இழக்கிறீர்கள்




மன்னிக்கவும்
இது எந்த மாதிரியான இடம் என்று
உங்களுக்கு அறிவிக்க எனக்கு ஆணை இல்லை
அதைத் தெரிந்து கொண்டும்
உங்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை
எங்கள் தரவுகள் துல்லியமானவை
உங்களுக்கு எப்போதும் இருக்கும் ஐயமும் குழப்பமும் தான்
இங்கும் ஏற்படுகிறது

நீங்கள் உங்களை மட்டுமே நோக்கியிருக்கிறீர்கள்
நீங்கள் உங்களைப் பற்றி மட்டுமே எண்ணியிருக்கிறீர்கள்

ஒரு சூரியனோ
ஒரு விண்மீனோ
ஒரு மலரோ
ஒரு சுடரோ
பெரும்பாலும்
எங்கள் தரவுகளின் படி
உங்களுக்கு வியப்பளிக்கவில்லை

மன்னிக்கவும். நீங்கள் இம்முறை ஆட்டத்தை இழக்கிறீர்கள்
உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது
வழங்குவது யார் என்று யோசிக்காதீர்கள்
நீங்கள் மீண்டும் பூமிக்குச் செல்லலாம்

உங்களைத் தவிர 
மகிழ்வதற்கும்
வியப்பதற்கும்
அப்புவியில் இருக்கும் எத்தனையோ விஷயங்களில்
ஆர்வம் செலுத்துங்கள்
மீண்டும் இங்கு வருவீர்கள்

அப்போது
அடுத்து என்ன செய்வது 
என்று யோசிப்போம்
இப்போது நீங்கள் செல்லலாம்

கரைதல்



எட்டிக் கை தொடும் ஒரு மகவின் முன்
முகமெல்லாம் விழியாகும் ஒரு சிறுமியின் முன்
கற்பனையில் பறக்கும் ஒரு பாலனின் முன்
யாவும் துறந்து
விடுபட்டுச் சென்று கொண்டிருக்கும்
வயோதிகத் துறவியின் முன்
என் பிச்சைப் பாத்திரம் நிரப்புபவளின் முன்
கரைந்து கொண்டிருக்கிறேன்
மழையால்
கரையும்
மரத்து இலைகள் என

சந்திப்பு

ஒற்றைப் பயணி
புறப்படும் சாலை
யாருமற்று இருக்கிறது
அதிகாலையில்

அவன் உதிர்த்துக் கொண்டே செல்கிறான்
துக்கங்களை
பாரங்களை
பழக்கங்களை
நினைவுகளை
அன்றாடத்தின் மொழியை

உச்சி வெயிலில்
ஒரு வேப்பமரத்தடியில்
தொங்கவிடப்பட்டுள்ள
பானை நீர்க் குளிர்ச்சி
தாகம் தீர்க்கிறது
அனேக ஜென்மங்களை

அவனை
ஒவ்வொரு நாளும்
தவறாமல்
சந்திக்கிறது
மாலைப் பொழுதின் முதல் விண்மீன்
இப்பொழுது
பூத்திருக்கிறது ஓர் அதிகாலை
இரவின் நறுமணம் முற்றும் நீங்காமல்
மெல்ல ஒலிக்கும் புள்ளோசைகள்
பிரவேசிக்கின்றன
உன் ஆழ்துயிலுக்குள்
சாளரத்திலிருந்து
நோக்கும் போது
உன் அக அலைகள்
ஓயாமல் வீசுகின்றன
வானத்துச் சிவப்பாய்
உன் கடலின் அலைகள்
கைநீட்டி
ஆர்ப்பரிக்கின்றன
சிவப்புச் சூரியனிடம்

Tuesday 5 June 2018

ஜீவன் லீலா

உனது கழுத்தசைவில்
குளிர்ந்திருக்கும் உன் விழி நோக்குகளில்
இதழ் மலரும் மென் நகையில்
அங்கும் இங்கும் புரண்டு கொண்டிருக்கும்
உனது கூந்தல் பரப்பில்
நீள் மூச்சுகளில்
எழுந்து அமரும்
உன் இளம் தோள்களில்
ஓயாது அலைவுறும்
உன் தோடுகளில்
எஞ்சியிருக்கிறது
ஒரு துளி
கணிதங்களுக்கு அப்பால்
எப் பொழுதும்
இருக்கும்
உயிரின் ஒரு துளி

வான் மலர்

ஒரு பெருமரத்தின் தளிர்க்கைகள்
வானத்தை
அணைத்துக் கொள்வது போல
உன்னை
அணைத்துக் கொள்கிறேன்

நீயன்றி யாருமற்ற
புணரியில்
முடிவற்று நீந்துகிறேன்

தீயென
எழுந்திருக்கும்
மலையின் உச்சியில்
ஒரு கூழாங்கல்லாய்
தவமிருக்கிறேன்

யுக யுகங்களாய்
விசும்பின் துளிக்காய்
காத்திருக்கும்
பாலை நிலத்தில்
பொழிகின்றது
உனது மேகங்களின் மழை

புதிதாய்ப் பிறந்த
இன்று அலர்ந்த மலரைப்
பார்த்து
மகிழ்கிறது
ஒரு குழந்தை


பூசெய்கை

என்னைச் சிறுவனாக்குகின்றன
உனது புன்னகைக்கும் நோக்குகள்

வெள்ளமெனத் திரண்டு சூழ்கிறது
உனது காதலின்
காட்டாறு
சூழும் உன்னையே பற்றிக் கொள்கிறேன்

எப்போதும் பசியாற்றுகின்றன
உனது மரத்தின் கனிகள்
அடிவார நிழல்பரப்பில்

விண்ணென விரிந்திருக்கும்
உன் முன்னால்
அர்ப்பணிக்கிறேன்
மாலை அந்தியில்
பூக்கும்
முதல் நட்சத்திரத்தை

உயிர் இருப்பு

காற்று
சாரல் துளிகளின் ஈரம் கொண்டிருக்கும்
நீர்வழிந்து தேய்ந்து
பாறைகள் குளிர்ந்திருக்கும்
கொட்டிக் கொண்டிருக்கும் அருவியில்
மூச்சு திணற
முகம் மறைய
மூழ்கும் பொழுது
சுவாசம் நிறையும்
உனது காதலின் மேகங்களின்
உயிரும்
இருப்பும்

பெய்யும் மழை

எனது ஈரத்தை
உன்னிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்
உன்னை நினைத்துக் கொள்வதாக
காணும் போது
கண்களின் நீர்த்திரையாக
ஒரு பிரியமான முத்தமாக
ஒரு எதிர்பார்ப்பாக
ஒரு விருப்பமாக
உன்னை விலகாது அணைத்திருக்கும் பொழுதுகளாக

பாலையில்
முடிவின்றி நீளும் சாலையின்
கரையில்
காத்திருக்கும்
பொழுதில்

அப் பொழுது உருவான மேகம்
பொழிந்த மழை
உருவாகி வந்தது
எனது அன்பின் சமுத்திரத்திலிருந்து

Monday 4 June 2018


இந்த இரவை விட அடர்த்தியாய் இருக்கிறது
எனது தனிமை
வானின் ஒவ்வொரு சுடர்மீனாலும் தீயிடப்படுகின்றன
எனது உணர்வுகள்
எனது காத்திருப்பின் பெருமூச்சு
சூறாவளியாய்
அண்ட சராசரங்களில் சுழல்கிறது
இந்த மெழுகைப் போல
உருகும்
எனது பிரியங்கள்
முழு உலகையும்
தழுவுகின்றன
எனது காதலின் அலைக்கரங்கள்

மாயப்பந்து

மழலை மாறா
மர்ஃபி ஆடுகளம் செல்கிறான்
மாலை நேரத்தில்
அடுத்த தெருவில் இருக்கும் மைதானத்துக்கு

பயணப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன
அவன் காணும் பந்துகள்
விண்ணில் பறந்து
மன்ணில் உருண்டு

அதன் பின்னால்
ஓயாமல் ஓடுகிறான்
சக ஆட்டக்காரர்களுடன்

உடைபடும் சோப்நுரை போல
பிடிக்கும் கணத்தில்
பந்து
பெரிய பையன்கள் கைக்கு செல்கிறது

அடுத்த பந்தை
எதிர்நோக்கும்
மர்ஃபியிடம்
பந்துகளின் தெய்வம்
கொடுத்து விட்டுச் செல்கிறது
கண்களால் காண முடியாத
பந்தொன்றை

Sunday 3 June 2018

உறக்கத்தில் சிரிக்கின்ற



உறக்கத்தில் சிரிக்கின்ற
குழந்தைக்கு கதை சொன்னேன்

ஆனைகளின் கதை
எட்டு ஆனைகள்
அருவித் தடத்தில் நீர்க்குளியல்
ஆட வந்த குடும்பத்தின் கதை

குட்டி யானை மேல்
குழந்தைக்கு ஈர்ப்பு
துதிக்கைகளின் மேலும்
நீர் பீய்ச்சலின் மீதும்

குளித்ததும் ஏன் மண் பூசிக் கொள்கின்றன?
முதலில் நீர்க் குளியல்
பின்னர் மண் குளியல்

நாமும் அங்கே போவோமா?
போகலாம்
ஆனால் தள்ளி நிற்க வேண்டும்

குருணைகளுடன்
குகையில் வாழும் புலியின் கதை
பால் அருந்தி
ஓசைகளுக்கு பின்வாங்கி
தாய்ப் புலி எதிர்நோக்கி
எப்போதாவது
குகைக்கு வெளியே வரும்
குருணைகளின் கதை

அக்குகைக்கு நாமும் போவோமா?
வெளியே தூரமாயிருந்து பார்க்க வேண்டும்

எலி வேட்டையாடும்
சர்ப்பத்தின் கதை

வேட்டையை நாம் பார்க்க முடியுமா?
சற்று தள்ளி நின்று பார்க்க முடியும்

ஆனை புலி சர்ப்பம்
இங்கு வருமா?
வந்தால் அவற்றுக்கு ஆபத்து

அப்படியென்றால் இங்கு நமக்கும் ஆபத்தா?

Saturday 2 June 2018

தெரியும் புரியும்


கிருஷ்ண சைதன்யா 
ஏழாம் வகுப்பு
கதை சொல்கிறாள்
தான் பார்த்தவற்றை
தான் அறிந்தவற்றை
தான் கண்டடைந்தவற்றை
தான் மகிழ்ந்தவற்றை
தான் துயர் கொண்டதை

காய்கறிக்காரர்களிடம் பேரம் பேசுவதை அவள் வெறுக்கிறாள்
கோபமாக பேசிக் கொள்வதில் அவளுக்கு உடன்பாடு இல்லை
தனக்கு யார் கஷ்டப்படுகிறார்கள் என பார்த்தால் தெரியும் என்றாள்
அதை எனக்கு சொல்லிக் கொடு என்றேன்
மீண்டும் மீண்டும்
பார்த்தால் தெரியும்
பார்த்தால் தெரியும்
என்றாள்

நாங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த டோலி
குவக் குவக் என்றவாறு வாலைக் குழைத்தது
வாசல் மரத்தில் அமர்ந்திருந்த காகம்
அடர் குரலில்
கா கா என்றது

எதையோ தெரிந்து வைத்திருப்பது போல
ஏதோ புரிந்து கொண்டது போல

Friday 1 June 2018

பெரும் காகிதம் என
விரிந்திருக்கிறது ஏரி
மயிர்ப்பிசிறல்களாய்
எங்கும் அலைகள்
சிலையென சமைந்திருக்கிறான்
ஓடக்காரன்
ஓடமும்
தோல்பாவையென
வலசைப் பறவைகள்
பெருமூச்சுடன் விடைபெறுகிறான்
அஸ்தமன சூரியன்