Saturday 30 December 2023

சீவல் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளருக்கு ஒரு நண்பர். மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் அதிகாரியாகப் பணிபுரிகிறார். நாகப்பட்டினம் அவரது சொந்த ஊர். அங்கே ஒரு ஓட்டு வீடினை வாங்கியிருக்கிறார். அந்த வீட்டினை ஒரு மேல்தளம் அமைத்து கட்டுமானம் செய்ய வேண்டும் என நண்பர் விரும்பி அமைப்பாளரை நாகப்பட்டினம் வரச் சொன்னார். அமைப்பாளர் இன்று காலை நாகப்பட்டினம் கிளம்பிச் சென்றார். அமைப்பாளர் இப்போது கட்டுமானம் மேற்கொண்டிருக்கும் வணிக வளாகத்தில் இன்று பணி உண்டு. மதியம் ஊர் திரும்பி விடலாம் என்ற எண்ணத்தில் நாகப்பட்டினம் கிளம்பினார். ஊரிலிருந்து நாகப்பட்டினம் 70 கி.மீ எனினும் சுற்றி சுற்றி செல்ல வேண்டும். காலையிலேயே கிளம்பி விட்டார் அமைப்பாளர். செம்பனார்கோவிலில் ஒரு ஹோட்டலில் டிஃபன் அருந்தினார். ஒரு மாதம் முன்பு தனது நண்பர் ஒருவருடன் அந்த ஹோட்டலுக்கு வந்து உணவருந்திய வகையில் அந்த ஹோட்டல் உரிமையாளர் அமைப்பாளருக்கு அறிமுகம். அவரிடம் ‘’அண்ணன் ! மாயூரம் கடைத்தெருவுல ஒரு கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன் செய்யறன்ணன். அதுல கடை ஒன்னு வாங்கி உங்க ஹோட்டலோட பிராஞ்ச் ஒன்னு போடுங்க’’ என்று சாப்பிட வந்த இடத்திலும் தனது ரியல் எஸ்டேட் வேலையைக் காட்டினார் அமைப்பாளர். ஹோட்டல் ஓனர் தனது மகனுக்கு ஃபோன் செய்தார். அமைப்பாளர் சாப்பிட்டு முடிப்பதற்கும் ஓனர் மகன் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. ஓனர் மகன் அமைப்பாளரிடம் ‘’சார் ! அப்பா விஷயம் சொன்னாங்க. நாங்க டவுன்ல இடம் பாத்துக்கிட்டு இருக்கோம். உங்க இடத்தை வந்து பாக்கறோம் ‘’ என்றார். ‘’தம்பி ! நான் இப்ப நாகப்பட்டினம் போறன். மதியம் 3 மணிக்கு வந்துடுவன். அப்ப இந்த வழியாதான் வருவன். அப்ப உங்களை பாத்துட்டு போறன்’’ என்றார்.   

நாகப்பட்டினம் போய் சேர்ந்த போது காலை 9 மணி இருந்திருக்கும். நாகைக்கு 5 கி.மீ முன்னே ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தி தனது பணியாளர்களுக்கு ஃபோன் செய்தார். அனைவரும் பணியிடத்துக்கு வந்து விட்டனர் என்பதை அறிந்தார். நண்பருக்கு நாகையை நெருங்கி விட்டேன் என குறுஞ்செய்தி அனுப்பினார். நண்பர் ஃபோன் செய்தார். அவரது குரல் கம்மியிருந்தது. அதிகாலை ஊர் வந்து சேர்ந்திருப்பார் போல ; அமைப்பாளர் இவ்வளவு சீக்கிரம் வருவார் என அவர் எதிர்பார்த்திருக்கவில்லை போல. அவரது வீட்டை அடுத்த 10 நிமிடத்தில் சென்றடைந்தார் அமைப்பாளர். 

இருவரும் சோஃபாவில் அமர்ந்தனர். ஒரு நிமிடம் ஆகியிருக்கும். அமைப்பாளர் ‘’இடத்தைப் பாக்கலாமா. இடத்தை அளக்கலாமா’’ எனக் கேட்டார். தேனீர் சாப்பிட்டு விட்டு போகலாம் என்றார் நண்பர். தேனீர் அருந்தி விட்டு உடனே இடத்துக்கு செல்வோம் என்றார் அமைப்பாளர். பக்கத்தில் ஒரு கட்டிடத்தில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கேயிருந்து ஒரு பணியாளரை சிறிது உதவுங்கள் என அமைப்பாளர் கேட்டுக் கொள்ள ஒரு பணியாளர் வந்து உதவினார். அவர் உதவியுடன் இடத்தை அளந்து கொண்டார் அமைப்பாளர். அவர்கள் அளந்தது குறைந்தது 80 ஆண்டுகள் வீடாக இருக்கும். சுவர்கள் அனைத்தும் ஒன்றேகால் அடி அகலம் கொண்டவை. அவை மிக வலுவானவை. அந்த சுவர்களின் மேலேயே ஓடுகளை நீக்கி விட்டு ’’கான்கிரீட் சிலாப்’’ அதன் மீது அமைக்கலாம். பின்னர் அந்த சிலாப் மீது இன்னொரு தளத்தை அமைக்கலாம் என முடிவு செய்து கொண்டார் அமைப்பாளர். தமிழில் ஒரு பழமொழி உண்டு : ‘’வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்’’. 

பின்னர் இருவரும் வீடு திரும்பினர். அமைப்பாளர் ஆசுவாசமானார். இருவரும் பொதுவான விஷயங்கள் குறித்து பேசினார்கள். நண்பர் கூர்மதி படைத்தவர். அமைப்பாளருக்கு ஒரு தன்மை உண்டு. யாரேனும் ஒரு விஷயம் சொன்னால் அமைப்பாளருக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதைத் தெரிவிக்காமல் இருந்து விடலாம் என்று இருக்க மாட்டார். தனது அபிப்ராயத்தைக் கூறுவார். அமைப்பாளர் ஜனநாயகம் என்பதில் எல்லா கருத்துக்களுக்கும் அபிப்ராயங்களுக்கும் இடம் உண்டு என நம்பும் ஜனநாயகவாதி. ஒரு மேற்கோள் உண்டு : ‘’வாயை மூடிக் கொண்டிருப்பது தான் புத்திசாலித்தனம். ஆனால் நம்மால் சும்மா இருக்க முடியாது’’ என. அமைப்பாளர் இந்த மேற்கோளை கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் செயல்படுத்துவது இல்லை. 

மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருந்தாலும் வெளிப்படுத்தினாலும் அமைப்பாளரின் நண்பர்கள் அமைப்பாளர் மேல் பிரியமும் நம்பிக்கையும் மரியாதையும்  கொண்டவர்கள். அத்துடன் அமைப்பாளருக்கு ஒரு இயல்பு உண்டு. ஒரு விவாதம் நடந்த பின் அதனைக் குறித்து தனிமையில் இருக்கும் போது அமைப்பாளர் யோசிப்பார். அதிலிருந்து புதிய முடிவுகள் சிலவற்றை மேற்கொள்வார். பின்னர் விவாதித்த நபருக்கு ஃபோன் செய்து விவாதத்தின் விளைவாக இந்த புதிய கருத்துக்கு வந்து சேர்ந்தேன் என்று சொல்வார். 

ஆர்வமாகப் பேசிக் கொண்டிருந்ததில் இருவருக்கும் நேரம் போனது தெரியவில்லை. மதிய உணவு நேரம் வந்து விட்டது. நண்பரின் அம்மா உணவு தயாரித்திருந்தார். மூவரும் அருந்தினர். 

உணவருந்தி அமர்ந்திருக்கையில் ஒரு தட்டில் வெற்றிலை ஏ.ஆர்.ஆர் பாக்கு கொண்டு வந்து வைத்தார் நண்பரின் அன்னை. சாப்பிட்டதும் வெற்றிலை பாக்கு கொண்டு வைப்பது தஞ்சைப் பகுதியின் வழக்கம். அமைப்பாளர் ‘’சீவல் இருக்கா’’ என்றார். சீவல் தஞ்சைப் பகுதிக்கே உரிய தன்மை. அவர்கள் வீட்டில் சீவல் வாங்கும் வழக்கம் இல்லை. ’’கொட்டைப்பாக்கு இருக்கா’’ என்றார் அமைப்பாளர். அந்த ஊரிலேயே இப்போது யாருக்கும் கொட்டைப்பாக்கு போடும் பழக்கம் இருக்காது. பாக்கு தூள் என்பது கொட்டைப்பாக்கை தூள் செய்வது தானே என்று கூறினார் நண்பரின் அன்னை. சீவலும் கொட்டைப்பாக்கை சீவி உருவாக்குவதுதான் என அமைப்பாளர் நினைத்தார். பின்னர் பாக்குத் தூளையே போட்டுக் கொண்டார். 

சில காலம் முன்னால் வரை, தஞ்சைப் பகுதிகளில் வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்வது என்பது ஒரு பெருநிகழ்வு. அதற்கு அத்தனை ஆயத்தங்களும் ஏற்பாடும் நடக்கும். 

அமைப்பாளர் வெற்றிலை சீவல் போடும் பழக்கம் கொண்டவரல்ல. வருஷத்துக்கு ஒரு நாள் வெற்றிலை போட்டால் பெரிது. அவருக்கே இத்தனை எதிர்பார்ப்பு இருந்தால் தஞ்சைப் பகுதியில் போன தலைமுறையில் அந்த பழக்கம் கொண்டவர்கள் என்னவெல்லாம் எதிர்பார்த்திருப்பார்கள் என அமைப்பாளர் யோசித்தார். 

Friday 29 December 2023

அந்தி நிலவும் அதிகாலைச் சூரியனும் : கவிஞர் சுபஸ்ரீ கவிதைகள்


 

Thursday 28 December 2023

வாடகை ( நகைச்சுவைக் கட்டுரை)

சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது. அமைப்பாளருக்கு ஒரு நண்பர். அவர் ஓர் அறச் செயல்பாடு ஒன்றை மேற்கொள்ள விரும்பினார். அதற்கு 5000 சதுர அடி இடம் தேவை. பொருத்தமான இடம் ஊரில் உள்ள பிரபலமான அறக்கட்டளை ஒன்றிடம் இருந்தது. அமைப்பாளரின் நண்பர் அமைப்பாளரை அந்த அறக்கட்டளையை அணுகி அந்த இடத்தை வாடகைக்குப் பெற்றுத் தருமாறு கூறினார். தன்னிடம் யாரேனும் ஒரு உதவி கேட்டால் அதனை உடனே செய்ய வேண்டும் என்று அமைப்பாளர் நினைப்பார்.  அமைப்பாளருக்கு அந்த அறக்கட்டளையில் யாரையும் தெரியாது. அமைப்பாளரின் நண்பர் அமைப்பாளரிடம் ‘’ நீ சென்று பேசினால் தான் சரியாக வரும்’’ என்றார். தனது திறன் மீதும் திறமைகள் மீதும் இத்தனை நம்பிக்கை வைக்கப்படுகிறதே என்ற உவகையில் அந்த அறக்கட்டளையை அணுகினார் அமைப்பாளர். விஷயத்தை எடுத்துச் சொன்னார். இடம் கிடைக்க நான்கு மாதம் ஆனது. வாரம் ஒரு தடவையாவது அந்த அறக்கட்டளை அலுவலகத்துக்கு செல்வார் அமைப்பாளர். எனவே அங்கிருந்த ஊழியர்கள் அமைப்பாளருக்கு நண்பர்கள் ஆனார்கள். 

அமைப்பாளரின் நண்பர் அந்த 5000 சதுர அடி இடத்தில் தனது அறசெயலை மேற்கொண்டார். ஒரு மாதம் முடிந்து வாடகை கொடுக்கும் நாள் வந்தது. அதாவது ஒன்றாம் தேதி. நண்பர் அமைப்பாளரிடம் வாடகையைக் கொடுத்து அறக்கட்டளையில் செலுத்திடச் சொன்னார். வாடகையை அமைப்பாளரின் நண்பர் தான் நேரில் சென்று செலுத்தியிருக்க வேண்டும். அதுதான் முறை. ஆனால் அது நிகழவில்லை. அறக்கட்டளை அமைப்பாளரின் அணுகுமுறையால் கவரப்பட்டு அந்த இடத்துக்கு மிக மிகக் குறைந்த வாடகையே நிர்ணயித்திருந்தது. அமைப்பாளர் அறக்கட்டளை அலுவலக ஊழியர்களைச் சந்திக்கலாமே என்று அங்கே சென்று வாடகையை செலுத்தி விட்டு ஊழியர்களிடம் அளவளாவி விட்டு வந்தார். பின்னர் அடுத்தடுத்த மாதங்களிலும் வாடகையை செலுத்திடுமாறு நண்பர் கேட்டுக் கொண்டு தொகையை அளிக்க அமைப்பாளரும் அப்படியே செய்தார். 

வாடகை என்பது ஒரு மாதம் ஒரு இடத்தைப் பயன்படுத்தி விட்டு அடுத்த மாதம் முதல் தேதி அன்று செலுத்தப்பட வேண்டியது. 1லிருந்து 5 தேதிக்குள் என்பதும் 1லிருந்து 7 தேதிக்குள் என்பதும் பொது நடைமுறை. 

அமைப்பாளர் அதில் ஒரு மாற்றம் செய்தார். அதாவது உதாரணத்துக்கு ஜனவரி மாதம் அந்த இடம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் பிப்ரவரி முதல் தேதிக்கு ஒருநாள் முன்பு ஜனவரி 31 அன்று மாலை ஜனவரி வாடகையை செலுத்தி விடுவார். அந்த அறக்கட்டளையினர் அமைப்பாளரின் இந்த செயல் கண்டு புளங்காகிதம் அடைந்து விட்டனர். இவ்வாறு செய்ய எப்படி உங்களுக்குத் தோன்றியது என்று கேட்டனர். 

அமைப்பாளர் சொன்னார் : ‘’முன்பெல்லாம் மாத ஊதியம் 1ம் தேதி கொடுப்பார்கள். பின்னர் அதனை முதல் மாதத்தின் கடைசி நாளன்று வழங்கினார்கள். ஊழியர்கள் அனைவரும் பணம் ஒருநாள் முன்னரே கிடைக்கிறதே என்று மகிழ்ந்தார்கள். நாம் கொடுக்க வேண்டியதையும் அவ்வாறே செய்ய வேண்டும் அல்லவா?’’ 

அந்த அறக்கட்டளையிடம் வாடகை கொடுக்கும் பணியை அமைப்பாளரே செய்து வந்தார். சமயங்களில் தனது சொந்தக் காசில் வாடகையை செலுத்தி விட்டு அந்த ரசீதை நண்பரிடம் கொடுத்து பணம் வாங்கிக் கொள்வார் அமைப்பாளர். அந்த அறக்கட்டளையின் முதல் ரசீது அமைப்பாளர் அளிக்கும் பணத்துக்கான ரசீது என்ற நடைமுறையை உருவாக்கி விட்டனர் அறக்கட்டளையினர். 

சில நடைமுறை வசதிகளுக்காக அமைப்பாளரின் நண்பர் வேறு இடம் மாற முடிவு செய்தார். இடத்தைக் காலி செய்து விட்டு சாவியை ஒப்படைக்க வேண்டும். அமைப்பாளர்தான் சாவியை ஒப்படைக்க சென்றார். அமைப்பாளரிடம் எப்போதும் வாடகையைப் பெற்றுக் கொண்டு ரசீது அளிக்கும் ஊழியர் சாவியைப் பெற்றுக் கொள்ளும் போது கண்ணீர் விட்டு அழுது விட்டார். அவர் அழுவதைக் கண்டதும் அமைப்பாளருக்கும் கண்ணீர் வந்தது. 

***

அமைப்பாளருக்கு சொந்தமாக ஒரு ஃபிளாட் இருக்கிறது. 

அதனை அவர் வாடகைக்கு விட்டார். 

ஒரு மாதம் கூட வாடகை முதல் வாரத்தில் செலுத்தப்பட்டதில்லை. 15 தேதி ஆகி விடும். சமயத்தில் 25 தேதியும் ஆகும். 

கடைசி மூன்று மாதம் வாடகையே செலுத்தவில்லை. மூன்று மாதம் முடிந்த பின்னால் இந்த மூன்று மாத வாடகையை அட்வான்ஸ்க்காக அட்ஜஸ்ட் செய்து விட்டோம் என்று சொன்னார்கள். 

அட்வான்ஸ் அட்ஜெஸ்ட் ஆகி விட்டது என்பதால் இடத்தைக் காலி செய்து ஒப்படையுங்கள் என்றார் அமைப்பாளர். ஒரு மாதம் அவகாசம் கேட்டனர். இத்தனை நாள் பழகியதை நினைத்து ஒப்புக் கொண்டார் அமைப்பாளர். 

நவம்பர் 1 அன்று கொடுத்திருக்க வேண்டிய வாடகை. இரண்டு மாதம் ஆனது. தினமும் ஃபோன் செய்து அக்டோபர் வாடகை எப்போது தருவீர்கள் என்று கேட்பார் அமைப்பாளர். விதவிதமான பதில்கள். விதவிதமான காரணங்கள். அமைப்பாளர் நூடுல்ஸ் ஆகி விட்டார். 58 நாட்கள் தாமதமாக இன்று கணக்கில் செலுத்தினர் வாடகையை. அமைப்பாளருக்கு சற்று முன் குறுஞ்செய்தி வந்தது. 

1000 மணி நேர வாசிப்பு

2023ம் ஆண்டு தொடங்குகையில் இந்த ஆண்டில் 1000 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டு 1000 மணி நேர வாசிப்பு சவாலில் பங்கு கொண்டேன். 365 நாட்கள் நிறைவாக உள்ள இந்நிலையில் விரும்பிய இலக்கில் பாதியை எட்டியுள்ளேன் என்பது மகிழ்ச்சியையே தருகிறது. எந்த போட்டியுமே நம்மை நாம் அறிவதற்கான ஒரு வாய்ப்பே. எனவே அதில் நாம் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். வாசிப்பு சவாலில் ஆர்வத்துடன் பங்கேற்றேன். நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.  

நானாவிதமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் வாழ்க்கைமுறை என்னுடையது. படைப்பூக்கச் செயல்பாடுகள். அறிவுச் செயல்பாடுகள். வணிகச் செயல்பாடுகள். பொதுப்பணிகள் என என் மனம் எப்போதும் ஏதேனும் ஒரு தீவிரமான இயக்கத்தில் இருந்து கொண்டிருக்கும். அவை என் வாசிப்பின் மீது பாதிப்பைச் செலுத்தக்கூடியவை. இருப்பினும் தினமும் வாசிப்புக்கு கணிசமான நேரம் ஒதுக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். இலக்கியம் வாசிக்கும் போது அந்த படைப்பு அளிக்கும் அனுபவம் என்பது வாசகனை சில நாட்கள் இறுக்கிப் பிடித்திருக்கும். அந்த பிடி தீவிரமானது. இலக்கியத்தின் நுட்பமே அதுதான். அவ்வாறான நாட்களில் சில நாட்கள் ஏதும் செய்ய இயலாமல் போகும். உண்மையில் அவ்வாறான தருணங்களும் இந்த ஆண்டில் நிகழ்ந்தன. 

இந்த வாசிப்பு சவாலில் நான் உணர்ந்த தடை என ஒன்று உண்டு. அது நுண்ணியது. மென்மையானது. அதாவது, என்னால் வாசிப்பையும் நேரத்தையும் இணைத்துக் கொள்வதில் ஒரு போதாமையை உணர முடிந்தது. நூல் வாசிப்பில் நேரப் பிரக்ஞை என்பதை எப்போதும் இணைத்து வைத்துக் கொண்டது இல்லை. வாசிக்க நேர்ந்த முதல் நூலிலிருந்தே நூலை எடுத்தால் நேரம் போவது தெரியாமல் வாசித்துத் தான் பழக்கம் இருக்கிறதே தவிர ஒரு நாளில் எவ்வளவு நேரம் வாசிக்கிறோம் என கணக்கிட்டுக் கொண்டதில்லை. எனவே அது சார்ந்தும் சில அகத்தடைகள் இருந்தன. ஸ்டாப்வாட்ச் போன்ற உபகரணங்கள் பயன்படுத்தினால் இதனைக் கடக்க முடியும் என்று தோன்றுகிறது. 

இலக்கை முழுமையாக எட்ட முடியாமல் போய் விட்டதே என எந்த வருத்தமும் இல்லை. இந்த முயற்சியில் நாம் சில விஷயங்களைக் கவனித்திருக்கிறோம். கற்றிருக்கிறோம். அடுத்த முயற்சியில் ஊக்கத்துடன் ஈடுபட இது உதவும் என்னும் நினைவு பெருமகிழ்ச்சியையேத் தருகிறது. கற்றல் என்பது இந்த உணர்வே என்பதை ஒரு வாசகனாக நான் அறிவேன். 

வாசகன் ஒவ்வொரு நாளும் நாம் வாசிக்க வேண்டிய நூல்கள் இன்னும் இன்னும் இருக்கிறதே என்னும் எண்ணமே கொள்வான். 

கல்வி கரையில ; கற்பவர் நாள் சில.  

Sunday 24 December 2023

ட்ரிப் கேன்சல் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் காஞ்சிபுரம் செல்ல ஒரு வார காலமாக ஏற்பாடு செய்கிறார். இருப்பினும் ஏற்பாடுகளில் ஏதேனும் ஒரு இடைவெளி ஏற்பட்டு விடுகிறது. அடுத்தடுத்து முயன்று ஏதேதோ செய்து பார்த்தார். எதுவும் சரிவரவில்லை. மனம் தளராமல் முயற்சியைத் தொடர்ந்தார். 

ஏன் தள்ளிப் போகிறது என்பதை அமைப்பாளரால் கண்டுபிடிக்க முடியவில்லை. முக்கிய காரணம் ரயிலிலோ அல்லது பேருந்திலோ இரவுப் பயணம் செய்வதை அமைப்பாளர் தவிர்க்க விரும்புகிறார். இரவுப் பயணத்தின் உடல் அசதி மறுநாள் பகலில் இருக்கும் என்பது காரணம். செல்ல வேண்டிய ஊருக்கு பகலில் பயணம் செய்தால் திட்டமிட்டதை விட இரண்டு நாட்கள் கூடுதலாக தேவைப்படும். கட்டுமானத் தொழிலில் இருக்கும் அமைப்பாளருக்கு கூடுதலாக இரண்டு நாட்கள் என்பது சாத்தியமில்லை. 

இன்று காலை கிளம்பினார் அமைப்பாளர். அவருடைய உறவினர் அவரை செங்கல்பட்டில் பிக் - அப் செய்து கொண்டு மாலை 4 மணியிலிருந்து இரவு 9.30 வரை காஞ்சி ஆலயங்களை சேவித்து விட்டு பின்னர் இரவு சென்னை திரும்பி உறவினரின் வீட்டில் உறங்கி விட்டு நாளை காலை 4 மணி அளவில் புறப்பட்டு 5.30 அளவில் காஞ்சிபுரம் சென்று மீண்டும் ஆலயங்களை சேவிப்பதாகத் திட்டம். திட்டம் நல்ல திட்டம்தான். 

இன்று காலை ஒரு ரியல் எஸ்டேட் மீடியேட்டரை சந்தித்து அமைப்பாளர் சொன்ன இடம் ஒன்றுக்கு பர்சேஸர் ஒருவரை ஏற்பாடு செய்யுமாறு கூறினார். பின்னர் தற்போது நடக்கும் வணிக வளாகக் கட்டுமானத்துக்கு 1000 செங்கற்கள் வந்து சேர வேண்டும். அதன் வருகையை உறுதி செய்தார். இன்று வணிக வளாக வேலை நடப்பதாக இருந்தது. பணியாளர்கள் தெருவில் ஒரு துக்கம். எனவே இன்றைய வேலை ‘’கேன்சல்’’. இன்று ஒரு பார்ட்டிக்கு அமைப்பாளர் இடம் காட்ட வேண்டும். நாளை மறுநாள் காட்டலாம் என இருந்து விட்டார். 

காலை உணவு அருந்தி விட்டு பயணம் புறப்பட்டார். வழக்கம் போல் அலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்து கையில் வைத்துக் கொண்டார். இப்போது ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறார். 700 பக்க புத்தகம். 300 பக்கம் வாசித்திருக்கிறார். எனவே பேருந்துப் பயணத்தில் வாசிக்கலாம் என கையில் எடுத்துக் கொண்டார். தண்ணீர் பாட்டிலும் எடுத்துக் கொண்டார். பைக் வீட்டில் இருப்பது தானே வீட்டில் இருப்பதாக வீட்டில் இருப்பவர்களை நம்ப வைக்கும் என நம்பும் அமைப்பாளர் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினார். கொஞ்ச தூரம் நடந்திருப்பார் ; அமைப்பாளரின் நண்பர் ஒருவர் வந்து ‘’லிஃப்ட்’’ கொடுத்தார். பேருந்து நிலையம் சென்றடைந்தார். பேருந்து நிலையத்தில் செங்கல்பட்டு வழியே சென்னை செல்லும் பேருந்து மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. நடத்துநர் அதன் படியில் நின்றிருந்தார். அமைப்பாளர் செங்கல்பட்டு என்றார். நடத்துநர் ‘’சீட் இல்ல சார். வண்டி ஃபுல் ‘’ என்றார். பின்னர் ஒரு சிதம்பரம் பேருந்தில் ஏறி சிதம்பரம் சென்று சேர்ந்தார். சென்னையில் இருக்கும் உறவினருக்கு அலைபேசியை ஆன் செய்து  ஃபோன் செய்தார். அப்போது அவர் நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. இரண்டு நிமிடம் முன்னால் அழைத்திருந்தாலோ இரண்டு நிமிடம் கழித்து அழைத்திருந்தாலோ ஃபோன் சுவிட்ச் ஆஃப் என இருந்திருக்கும். அவர் அழைத்த நேரமும் ஃபோன் ஆன் ஆகியிருந்த நேரமும் ஒன்றாக இருந்திருக்கிறது. வெளியூர்க்காரர் . ஊருக்கு வருகிறார். அமைப்பாளர் உடனிருக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அமைப்பாளர் சரி என்று விட்டார். 

எந்த பேருந்தில் சிதம்பரம் வந்தாரோ அதே பேருந்தில் ஏறி ஊர் திரும்பினார். இடம் காட்ட வேண்டிய பார்ட்டிக்கு இன்று மாலை இடத்தைப் பார்க்கலாம் என குறுஞ்செய்தி அனுப்பினார். பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு மெல்ல நடந்து வந்து கொண்டிருந்த போது காலையில் யார் லிஃப்ட் கொடுத்து பேருந்து நிலையத்தில் கொண்டு போய் விட்டாரோ அவர் அந்த பாதை வழியே வந்தார். 

‘’என்ன சார் இங்க இருக்கீங்க’’ என வியப்புடன் கேட்டார். 

அமைப்பாளர் சொன்னார் ‘’ட்ரிப் கேன்சல்’’.

நண்பர் அமைப்பாளரை வீட்டில் ‘’டிராப்’’ செய்து விட்டு சென்றார்.  

Saturday 23 December 2023

சுஷிலுக்கு ஒரு கடிதம்

 அன்புள்ள சுஷில் குமார் பாரதி,


சற்று நேரம் முன்னால் , தங்களுடன் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நாவல் குறித்து எதையெல்லாம் கூற வேண்டும் என்று நினைத்தேனோ அதையெல்லாம் பதிவில் எழுதி விட்டேன். என்றாலும் தங்கள் குரல் கேட்க வேண்டும் என்று ஒரு ஆசை. சில மணி நேரங்கள் முழுமையாக என் மனத்தை ஆக்கிரமித்து நிறைந்த எழுத்தின் சொந்தக்காரனின் குரலைக் கேட்க முயலாமல் இருந்திருந்தால் இந்த நாள் பூர்த்தியாகியிருக்காது. தங்களுடனான உரையாடல் அளித்த மகிழ்ச்சி மிகப் பெரிது சுஷில். 

உங்கள் நாவலை மிகவும் கச்சிதமானது என வாசிக்கும் போதும் வாசிக்கும் பின்னும் உணர்ந்தேன் சுஷில். உடல் உணரும் வலிகளுக்கு இருக்கும் கச்சிதம். மனம் உணரும் வலிகளுக்கு இருக்கும் கச்சிதம். 

நீங்கள் மேலும் பல நாவல்களை எழுதுவீர்கள் சுஷில். பல பெரிய நாவல்கள். அவற்றை எழுத நீங்கள் மெனக்கெட வேண்டும் என்பதில்லை . உங்கள் மனதில் நாவலுக்கான கரு என ஒன்று உருவாகியிருப்பதை நீங்கள் கவனிக்கும் கணத்திலிருந்து உங்கள் மனதில் அது தானாகவே வளர்ந்து ஒரு நாவலாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். இது முகஸ்துதி இல்லை சுஷில். உங்கள் முதல் நாவலின் பிரதி கொண்டிருக்கும் அடர்த்தி கூறும் கட்டியம் அதனைக் காட்டுகிறது. 

மீண்டும் வாழ்த்துக்கள் சுஷில். 

அன்புடனும் பிரியத்துடனும்,

பிரபு 

சுந்தரவனம் : தொலைந்து போவதும் காணாமல் போவதும்


சமீபத்தில் வெளியான, சுந்தரவனம் நாவலை வாசித்தேன். ( நாவலாசிரியர் : சுஷில் குமார் பாரதி). 

ஒரு மனித உயிர் மண்ணில் உடலாக வந்திறங்குகிறது. ஆனால் அது உடல் மட்டும் தானா? உடலாக உருவம் கொள்வதற்கு முன்னே அது இன்னொரு உடலில் உயிராக அசையத் தொடங்குகிறது. உடலா உயிரா உயிரசைவா எது மூலமானது என்னும் கேள்வியும் எது முதன்மையானது என்னும் கேள்வியும் மனித குலத்துக்கு எப்போதும் உள்ள கேள்விகள். உடலும் உயிரும் உயிரசைவும் கொண்டிருக்கும் ஒருங்கிணைப்பே அன்றாட வாழ்க்கையை மனிதனுக்குச் சாத்தியமாக்குகிறது என்றாலும் சாமானிய மனிதன் இம்மூன்றில் எதனையும் அறிய முயல்வதில்லை. அதற்கான சந்தர்ப்பம் அவனுக்கு அமைவதும் இல்லை. அத்தகைய சந்தர்ப்பத்தை அவன் உருவாக்கிக் கொள்வதும் இல்லை. அப்படி ஒன்றை உருவாக்கிக் கொள்ள அவன் விரும்புவதும் இல்லை. சாமானிய வாழ்க்கை உடலை வலி மூலமும் நோய் மூலமும் தீவிரமாக உணர்கிறது. உயிரை மரணத் தறுவாயில் சில கணங்கள் உணர்கிறது. பெரும்பாலான மனிதருக்கு அத்தருணத்திலும் உணர இயலாமல் போகிறது. உலக வழக்கின் ஒரு பகுதியான இந்த பின்புலத்தை தனது நாவலின் பின்புலமாகக் கொண்டு சுந்தரவனத்தை எழுதியிருக்கிறார் சுஷில் குமார் பாரதி. 

சமுத்திரத்தில் அலைகளென விரைந்து விரைந்து எழுகின்றன மானுட உயிர்கள். பெரும்பாலான அலைகள் ஒன்று போல் அமைய மிகச் சிறு அலைகள் மாறுபடுகின்றன. அதைப் போல மிகச் சிறு மனிதர்கள் வாழ்க்கை ஏதோ ஒரு கணத்தால் ஏதோ ஒரு கணத்தின் மாறுதலால் சாமானிய வலிகளுக்கு அப்பால் இருக்கும் தீவிரமான வலியை தீவிரமான இம்சையை தீவிரமான அசௌகர்யத்தை அடைகின்றன. உண்மையில் அது ஒரு சித்ரவதை. மீண்டும் மீண்டும் உக்கிரம் கொள்ளும் சித்ரவதை. உண்மையில் அது ஒரு புதைகுழி. மீள நினைத்து சிறு அசைவு கொண்டாலும் பல மடங்கு ஆழத்துக்குள் இழுத்துக் கொள்ளும் புதைகுழி. 

நோய்மையும் வலியும் அழுகையும் கூக்குரலும் அரற்றலும் நிறைந்த மானுட வாழ்வின் ஒரு பகுதிக்குள் விருப்பம் இல்லாமல் வந்து சேர்ந்து விடுகிறான் ஒரு கலைஞன். அவன் அந்த பகுதியை விரும்பவில்லை ; தவிர்க்க நினைக்கிறான். ஆனால் தன்னைத் தாண்டிய ஒரு மாயம் அவனை அங்கே இட்டுச் சென்று விடுகிறது. தன்னைச் சுற்றி படர்ந்து விரிந்திருக்கும் வலைக்குள் சிக்கியது தெரியாமல் சிக்கி தன்னுணர்வால் அதனை புரிந்து கொள்ள முயன்று தன்னளவில் அந்த கலைஞன் என்ன புரிந்து கொண்டான் என்பதே சுந்தரவனம் நாவல். 

மானுட மனத்தின் இருள் பகுதிகளின் உணர்வுகளில் ஒன்றான அச்சத்தை வாசகன் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு வரியிலும் உணரும்படி எழுதப்பட்டிருக்கும் சுஷில் குமார் பாரதியின் பிரதி அந்த ஒரு கூறால் மட்டும் கூட தமிழ் நாவல் பரப்பில் தனக்குரிய பிரத்யேகமான இடத்தைப் பெறுகிறது. இந்த ஒட்டுமொத்த நாவலும் ‘’ஆட்டோமேட்டிக் ரைட்டிங்’’ பாணியில் எழுதப்பட்டிருக்கிறது என்று தோன்றியது. சுஷில் குமார் பாரதி இந்த நாவலை ஒரே அமர்வில் எழுதியிருக்கக் கூடும். அல்லது இந்த நாவலை எழுதத் துவங்கியதிலிருந்து நிறைவு செய்தது வரை அவர் மனத்தில் இந்த நாவல் மட்டுமே இருந்திருக்கக் கூடும். 

விரல் விட்டு எண்ணக் கூடிய சில கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு மானுட வாழ்வின் அடிப்படையான சில விஷயங்களைக் குறித்து அடர்த்தியுடனும் தீவிரத்துடனும் கையாண்டிருப்பதன் மூலம் தனது படைப்புத்திறனின் முக்கியத்துவத்தை ஐயத்திற்கு இடமின்றி நிறுவியிருக்கிறார் எழுத்தாளர் சுஷில் குமார் பாரதி. 

குறை மாதத்தில் பிறக்கிறது ஒரு குழந்தை. உயிர் தங்குமா என்பது தெரியாத நிலை. பிள்ளை வரம் கேட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நடையாய் நடக்கிறாள் ஒருத்தி. மலை உச்சியிலிருந்து கீழே குழித்து சாகக் கிடக்கும் ஒருவனை உயிர்ப்பிக்கிறார்கள் ஆதிவாசிகள். உயிரைக் குறித்து அணுகி அறிய நேரும் சாமானியனுக்கு அந்த அனுபவமும் அந்த புரிதலும் இனிமையான அனுபவமாக மட்டும் இருக்கிறதா ? அவனுக்கு ஒவ்வொரு கணமும் வலி தரும் அவன் வாழ்வை நரகமாக்கும் பகுதியும் அந்த அனுபவத்தில் இருக்கிறதா ? இவ்வாறான பலவிதமான கேள்விகளை சுந்தரவனம் நாவல் எழுப்பிக் கொண்டு அதற்கான பதில்களை வாசகனே தனது கற்பனை மூலம் சென்றடைந்து கொள்ளட்டும் என விட்டுவிடுகிறார் நாவலாசிரியர். 

எந்த வாசகனும் இந்த நாவலை ஒரே அமர்வில் வாசிப்பான் ; அல்லது இந்த நாவலை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து வாசித்து முடிக்கும் வரை இந்த நாவலுக்குள்ளேயே தொலைந்து போயிருப்பான். 

நாவல் : சுந்தரவனம் ஆசிரியர் : சுஷில் குமார் பாரதி பக்கம் ; 269 விலை : ரூ.325
பதிப்பகம் : யாவரும் பதிப்பகம் ( www.yaavarum.com)   

Thursday 21 December 2023

நீர் வார்த்தல்

 சேலம் அருகே தங்கள் வயலில் முழுமையாக  தேக்கு நட உள்ள விவசாயிகளுக்கு எழுதிய கடிதம் : 


பிரபு 

பணிகளும் பயணங்களும்

என்னுடைய இளம் வயதிலிருந்தே எனக்கு நீண்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கனவு உண்டு. அந்த கனவே என்னை ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ செல்ல வைத்தது. மோட்டார்சைக்கிளில் மேற்கொண்ட அப்பயணமே என் அகத்தைக் கிராமங்களுக்கான பணியை நோக்கி இட்டுச் சென்றது. 

இப்போது என் அகம் இரண்டு கனவுகளைக் காண்கிறது. கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கனவு. இன்னும் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூர பயணங்கள் குறித்த கனவு. 

பொதுவாக வாசிக்கும் ஏதாவது ஒரு நூலிலிருந்து நீண்ட தூரப் பயணத்துக்கான தூண்டலைப் பெறுவது எனது வழக்கம். இப்போது நான் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூரப் பயணங்கள் என நான் எண்ணுவதைப் பட்டியலிடுகிறேன். இவை நிகழ வேண்டும் என்பது எனது பேராவல். பல்வேறு விதமான லௌகிகப் பணிகளும் பொதுப் பணிகளும் சூழ்ந்துள்ளன. ஒரு கூட்டத்தில் யானை தனக்கான பாதையை உருவாக்கிக் கொள்வதைப் போல நான் கனவு காணும் பெரும் பயணங்கள் தனக்கான துவக்கத்தை உருவாக்கிக் கொள்ளும் என்பதை ஒரு பயணியாக நான் உணர்கிறேன். 

1. தொண்டை நாட்டு திவ்யதேசங்களுக்கான ஒரு பயணம்

2. பாண்டிய நாட்டு திவ்யதேசங்களுக்கான ஒரு பயணம்

3. மலை நாட்டு திவ்யதேசங்களுக்கான ஒரு பயணம்

4. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் மேற்கொண்ட ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ நூலில் உள்ள தலங்கள் நோக்கி ஒரு பயணம். ( பாலாறு, காவிரி, வைகை, தாமிரபரணி கரைகளில் உள்ள ஆலயங்களை நோக்கிய பயணம்)

5. வட நாட்டு திவ்ய தேசங்களுக்கான ஒரு பயணம்

6. ஆந்திரா தெலங்கானா மாநிலங்களில் மட்டும் ஒரு பயணம்

7. தமிழகத்தில் தொடங்கி குஜராத் சென்று அங்கிருந்து காஷ்மீர் சென்று முழு உத்திரப்பிரதேசத்திலும் பயணித்து வங்காளம் வழியே அஸ்ஸாம் சென்று வடகிழக்கு மாநிலங்களில் பயணித்து மீண்டும் வங்காளம் வந்து அங்கிருந்து ஒரிஸ்ஸா வழியே கிழக்குக் கடற்கரை வழியாகப் பயணித்து ஆந்திரா வழியே தமிழகம் வந்தடையும் பயணம். 

8. நர்மதா நதி வலம்

9. கோதாவரி நதியின் கரையில் பயணிக்கும் ஒரு பயணம். 

எந்த ஒரு நீண்ட நெடிய பயணமும் சிறிய உறுதியான முதல் அடியிலிருந்தே துவங்குகிறது. ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மனிதனுக்கும் கற்றுத் தருவது அதையே. 

Wednesday 20 December 2023

ந.சுப்புரெட்டியார் நூல்

அறிஞர் ந.சுப்புரெட்டியார் எழுதிய ‘’தொண்டைநாட்டுத் திருப்பதிகள்’’ நூலின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. 


தொண்டைநாட்டுத் திருப்பதிகள் 

Tuesday 19 December 2023

தொண்டை நாட்டு திருப்பதிகள்

நண்பர்கள் சிலருடன் இந்த மாதம் 23,24, 25 தேதிகளில் தொண்டை நாட்டில் உள்ள வைணவத் தலங்களை தரிசிக்க உளம் கொண்டுளேன். 

23ம் தேதி திருவிடந்தை, கடல்மல்லை, திருநீரகம், திருநின்றவூர், திருவள்ளூர், சோளிங்கர் ஆகிய தலங்களை தரிசிக்கத் திட்டம். 

24 , 25ம் தேதிகளில் காஞ்சிபுரத்தில் உள்ள 15 திவ்ய தேசங்களை சேவிக்க உள்ளோம். 

ஈஸ்வர ஹிதம். 

Monday 18 December 2023

திருவெள்ளறை

தஞ்சைப் பகுதி விவசாயியான பெரியண்ணன் சென்னைவாசி. ஒரு வார காலம் அவர் சொந்த ஊருக்கு வந்திருப்பதை அலைபேசி உரையாடல் மூலம் அறிந்தேன். திருவெள்ளறை திருத்தலத்திற்குச் செல்ல அவரும் மிகுந்த ஆர்வம் காட்டினார். மதிய உணவு முடித்து தஞ்சை புறப்பட்டேன். பேருந்து நிலையத்தில் என்னை அழைத்துக் கொண்டார். நண்பர் பெரியண்ணனின் காரில் திருச்சி பயணமானோம். 

நண்பர் பெரியண்ணன் ஆலய சிற்பங்கள் குறித்து தனது தன்னார்வத்தின் மூலம் பயின்று சிற்பவியல் குறித்து சிறப்பான ஞானம் கொண்டுள்ளார். ஆலய சிற்பங்கள் குறித்து நிறைய விஷயங்களைக் கூறினார். 

இந்திய சிற்பவியல் என்பது மொழியும் சிற்பமும் இணைந்தது. நம் நாட்டில் முதலில் பெரும் படைப்புகள் உருவாயின. மிகப் பிரம்மாண்டமானவை என்பவை நமது இரண்டு இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும். அதற்கு முன்பே மொழியில் உருவானவை புராணங்கள். புராணங்களும் இதிகாசங்களும் எழுதப்பட்டு அவை நம் நாடெங்கும் புழக்கத்தில் இருந்த மொழிகளில் மொழி மாற்றம் பெற்று நாட்டு மக்களால் கேட்கப் பெற்றன. இவை நிகழ்ந்து பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னரே பேராலயங்களின் உருவாக்கம் நிகழலாயிற்று. நம் நாட்டில் முதலில் எழுந்தது சொல். அதன் பின்னரே சொல்லின் விளக்கமாக சிற்பம் எழுந்தது. இந்திய சிற்பவியலை பயில விரும்பும் எவரும் இந்திய புராணங்களையும் இந்திய இதிகாசங்களையும் குறைந்தபட்சமாகவேனும் பயில வேண்டும். அப்போதுதான் சிற்பவியல் தனது கதவுகளைத் திறக்கும். 

அன்னப்பறவை பிரம்மனின் வாகனம். வராகம் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று. ஒரு சிற்பத்தில் வராகம் மண்ணைத் தோண்டிக் கொண்டும் அன்னப்பறவையில் அமர்ந்த ஒருவர் வான் நோக்கி பறந்து கொண்டும் இருந்தால் சிவனின் அடி முடி காண பிரம்மனும் விஷ்ணுவும் முயன்ற செயல் என்னும் தொன்மம் நினைவுக்கு வர வேண்டும். அந்த சிற்பத்தை அப்போது மேலும் புரிந்து கொள்ள முடியும். நான் சிற்பவியலுக்குள் மொழியின் மார்க்கத்தில் செல்பவன். அது எனக்கு மிகவும் அணுக்கமான வழி. 

திருச்சி செல்லும் வழியில் துவாக்குடிக்கு அருகில் பல்லவர் கால குடைவரை ஒன்று இருப்பதாகக் கூறிய பெரியண்ணன் அங்கே அழைத்துச் சென்றார். ஒரு குகையைக் குடைந்து ‘’கண் நிறைந்த பெருமாள்’’ என சயனக் கோலத்தில் இருந்த பெருமாளைச் செதுக்கியிருந்தனர். அருகில் ஒரு குகையில் ‘’சப்த கன்னியர்’’ சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது. 

நமது மண் சாக்தத்தின் தாக்கம் வலுவாக உள்ள மண். இன்றும் எந்த ஊரில் எடுத்துக் கொண்டாலும் சக்தியை வழிபடுபவர்களே அதிகம். எந்த ஊரிலும் மாரியம்மன் கோவிலின் திருவிழாக்களுக்கு கூடும் பக்தர்களே மிக அதிகம். அது அன்னைக்கும் பிள்ளைகளுக்குமான உறவு. எந்த பிள்ளையும் அன்னை தன்னை அறிவாள் என்பதையும் தன் கோரிக்கைகளை நிறைவேற்றுவாள் என்பதையும் உணர்வின் ஆழத்தில் உணர்ந்திருக்கும். சாக்த வழிபாட்டின் ஒரு வழிமுறை ‘’சப்த கன்னியர்’’ வழிபாடு. நாடெங்கும் ‘’சப்த கன்னியர்’’ சிற்பங்கள் உள்ளன. தன் பிள்ளைகளின் உளம் அறிந்து ஓடோடி வருபவள் அன்னை. இங்கே ஏழு அன்னையர். துயர் நீக்கவும் வளம் நிறைக்கவும் ஏழு அன்னையரை காலகாலமாக வணங்குகிறது நம் மக்கள் திரள். 

அங்கிருந்து திருவெள்ளறை சென்று சேர்ந்தோம். மிகப் பெரும் மதில்கள் நிறைந்த பேராலயம் திருவெள்ளறை . ஆலயத்தைச் சுற்றி இருக்கும் வீடுகளில் இருந்து சிறுமிகளும் இளம்பெண்களும் ஆலயத்தில் மாக்கோலம் இட்டுக் கொண்டிருந்தார்கள். அதனைக் காணுகையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த பணியை ஆற்றிய போது ஆலயத்தின் இறைவனிடம் அவர்களுக்கு அந்த செயல் மூலம் உள்ளபூர்வமான உணர்வும் பிணைப்பும் உருவானதைக் காண முடிந்தது. அழகிய கோலங்கள். தாமரையின் வெவ்வேறு வடிவங்களை அவர்கள் கோலத்தில் காண முடிந்தது. அங்கே இறைவனின் நாமம் ‘’செந்தாமரைக் கண்ணன்’’. 

இறைவன் நின்ற திருக்கோலம். சூரியனும் சந்திரனும் சேஷனும் கருடனும் ஒன்றாக கருவறையில் பெருமாளை சூழ்ந்து நின்றார்கள். திருவெள்ளறை தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் சொந்த ஊர். 

எனது உளம் நெகிழ்ந்தும் தத்தளித்துக் கொண்டும் இருந்தது. ஏன் என்று தெரியவில்லை. சோழ தேசத்து திவ்ய தேசங்கள் 40ஐயும் தரிசித்ததால் இருக்கலாம். நடு நாட்டு திவ்ய தேசங்கள் இரண்டையும் முழுமையாக தரிசித்திருக்கிறேன். தொண்டை நாடு மலை நாடு பாண்டிய நாட்டில் எஞ்சியிருக்கும் திவ்ய தேசங்களை சேவிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இந்த மார்கழியில் ஏதேனும் ஒரு நாடாகினும் நிறைவுற்றால் மகிழ்ச்சி. ஈஸ்வர ஹிதம். 

 

Sunday 17 December 2023

மார்கழித் திங்கள்

மார்கழி மாதம் பிறக்கிறது. விவசாயப் பணிகளுக்கு அதிகாலை விழித்தெழல் என்பது அவசியமானது ; உபயோகமானது. ஆநிரைகள் வளர்ப்பவர்களுக்கும் அதிகாலைப் பொழுதில் பணிகள் இருக்கும். மாட்டுக்கு தண்ணீர் காட்டுவது ; வைக்கோல் வைப்பது என. இன்று நாம் பணி புரியும் முறை என்பது பெரும் மாற்றம் கண்டு விட்டது. எனினும் இப்போதும் அதிகாலை விழித்தெழல் ஓட்டப்பயிற்சிக்கும் உடற்பயிற்சிக்கும் உகந்தது. மார்கழி அதிகாலை விழித்தெழலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு மாதம்.  

இன்று எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. அதாவது இந்த மார்கழியில் ‘’சோழ நாட்டு திவ்யதேசங்கள்’’ அனைத்தையும் ஒருமுறை சேவிக்கலாம் என எண்ணினேன். வைணவத்தில் திவ்ய தேசங்கள் என்பவை பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள். மொத்த திவ்யதேசங்கள் 108. அதில் வைகுண்டம், பரமபதம் இரண்டையும் தவிர மற்றவை பூலோகத்தில் உள்ளன. சோழ நாட்டில் 40, நடுநாட்டில் 2, பாண்டிய நாட்டில் 18, தொண்டை நாட்டில் 22, மலைநாட்டில் 13, வடநாட்டில் 11 என்பதாக இந்த 106 திவ்யதேசங்கள் அமைகின்றன. 

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மார்கழி மாதத்தில் ஒரு நாளைக்கு ஒரு திவ்ய தேசம் என மோட்டார்சைக்கிளில் சோழ நாட்டு திவ்ய தேசங்களை சேவித்தேன். பின்னர் அவ்வப்போது சில திவ்ய தேசங்களை சேவித்திருக்கிறேன். 

இன்று மீண்டும் ‘’சோழ நாட்டு திவ்யதேசங்கள்’’ என்ற எண்ணம் தோன்றியதும் இதுவரை சேவித்த தலங்கள் எவை என்று கணக்கிட்டேன். மொத்த 40 சோழ நாட்டு திவ்ய தேசங்களில் 39 திவ்ய தேசங்களை சேவித்திருப்பதை அறிந்து ஆச்சர்யம் கொண்டேன். திருச்சி அருகில் உள்ள திருவெள்ளறை திவ்ய தேசம் தவிர மற்ற அனைத்து திவ்ய தேசங்களையும் சேவித்திருக்கிறேன். 

நடுநாட்டின் இரண்டு திவ்ய தேசங்களையும் சேவித்திருக்கிறேன். 

இந்த ஆண்டில் இன்னும் தரிசிக்காத திவ்யதேசங்களை சேவிக்க உளம் கொண்டுள்ளேன். காஞ்சிபுரத்தில் இரண்டு நாட்கள் தங்கினால் கணிசமான தொண்டை நாட்டு திவ்ய தேசங்களை சேவிக்க முடியும். சென்னையில் இரு நாட்கள் தங்கினாலும் சேவிப்பதற்கு பல திவ்ய தேசங்கள் உள்ளன. 

இப்போது கட்டுமானப் பணி நடைபெறுவதால் ஊரில் எப்போதும் இருக்க வேண்டிய நிலை. இராமாயண நவாஹத்துக்கான ஏற்பாடுகள் உள்ளன. ஈஸ்வர ஹிதம். 

Friday 15 December 2023

உரையாடல்

 இன்று நானும் எனது நண்பனும் பேசிக் கொண்டிருந்தோம். நண்பன் நான் வசிக்கும் ஊருக்கு மேற்கே 500 கி.மீ தொலைவில் இருக்கிறான். அவனிடம் பேசுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக எனக்குத் தோன்றிய யோசனை ஒன்றை அவனிடம் முன்வைத்தேன். அதாவது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து தினமும் 30 நிமிடம் உரையாடுவது மிகுந்த பயனளிக்கும் என்று கூறினேன். நண்பனும் ஆர்வமாக ஒத்துக் கொண்டான். முதலில் பேசப் போகும் விஷயம் என்ன என்று கேட்டான். ‘’இந்திய அரசியல் சாசனம்’’ என்று சொன்னேன். 

நமது சமூகத்தில் அதிக அளவில் உரையாடல்கள் நிகழ வேண்டும். ஜனநாயகம் என்பது உரையாடலே. 

என்னென்ன விஷயங்கள் குறித்து பேசலாம் என்பது குறித்து பேசினோம். நான் ஒரு பட்டியல் அளிக்கிறேன் என்று சொன்னேன். அவனையும் ஒரு பட்டியல் அளிக்குமாறு சொன்னேன். இரண்டிலிருந்தும் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னேன். 

இந்திய அரசியல் சாசனம், பண்டைய இந்திய சாம்ராஜ்யங்கள், சமஸ்கிருத இலக்கியங்கள், பௌத்தம், சமணம், சீக்கியம், இந்தியப் பொருளியல், இந்திய விவசாயம் ஆகியன என்னுடைய முதற்பட்டியல். இந்த உலகில் சூரியனுக்குக் கீழே இருக்கும் அனைத்தையும் குறித்து பேச முடியும். 

நூல் வாசிப்பு ஒருவருக்கு எந்த அளவில் உதவுமோ அதில் 25 சதவீதம் அளவுக்கு உரையாடல்கள் உதவும். இது ஒரு வாசகனின் கூற்று. 

ஒரு புதிய முயற்சியைத் துவக்குகிறோம். இந்த முயற்சி நலம் பயக்கட்டும். 

Tuesday 12 December 2023

கொல்லிமலை அடிவாரத்தில்

 
நேற்று காலை சேலத்துக்குப் புறப்பட்டேன். நீண்ட தூரப் பயணங்களை நான் எப்போதுமே விரும்புவேன். புதிது புதிதாக மனித முகங்களைப் பார்த்தபடியே செல்வது எப்போதுமே மகிழ்வளிப்பது. புதிய நிலங்களும் உற்சாகம் கொள்ளச் செய்பவை. 

நண்பரின் நிலம் அமைந்திருப்பது கொல்லிமலை அடிவாரத்தில். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் கொல்லிமலை சென்றிருக்கிறேன். தமிழ்நாட்டில் கொல்லிமலை செல்லும் மலைப்பாதைதான் ஏகப்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பேருந்தில் செல்லும் போது வண்டி சட் சட் என வளைகையில் சற்று பரபரப்பாக இருக்கும். மலைப்பகுதி என்பதாலும் வனம் அடர்ந்த பகுதி என்பதாலும் அங்கே நாளின் பெரும்பகுதியிலோ அல்லது ஏதாவது ஒரு நேரத்திலோ வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும். சமவெளியில் இருந்து சென்றவர்களுக்கு அந்த குளிர்ச்சி மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். மரங்களில் மிளகுக்கொடி படர்ந்திருக்கும். மரங்களில் படர்ந்திருக்கும் மிளகுக்கொடிகளின் பச்சை மிளகை மென்றவாறு அந்த மலைப்பாதையில் சிறுதூரம் நடந்தது நினைவில் இருக்கிறது. கொல்லிமலை நினைவுகளுடன் அந்த பச்சை மிளகின் மென்காரமும் இணைந்திருக்கிறது. 

நண்பரின் நிலம் கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. ஆறு ஏக்கர் நிலமும் முள்வேலியிடப்பட்டிருக்கிறது என்பது அதன் சாதக அம்சம். எனவே ஆடு மாடு நிலத்துக்குள் வந்து செடியை மேயாது என்பது நல்ல விஷயம். மண் செம்மண் கலந்த மண். அதுவும் மிகச் சாதகமான விஷயமே. தேக்கு அந்த மண்ணில் நன்றாக வளரும். 

இரண்டு கிணறுகள் இருக்கின்றன. தண்ணீர் சற்று உப்புத்தன்மை கொண்டது என்று கூறினார்கள். மகாராஷ்ட்ராவில் ‘’டிரென்ச்’’ வெட்டி வயலில் பெய்யும் மழைநீரை கிணற்றிலோ அல்லது குளத்திலோ கொண்டு வந்து சேர்ப்பார்கள். தண்ணீரின் அதி தூய வடிவம் மழைநீரே. அதனை சற்று உப்புத்தன்மை கொண்ட கிணற்றில் கொண்டு சேர்த்தால் சில மாதங்களில் உப்புத்தன்மை முற்றிலும் இல்லாமலாகி விடும். 

ஆறு ஏக்கர் நிலத்தில் 2000 தேக்கு கன்றுகள் நட முடியும். தினமும் ஒரு கன்றுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றினால் ஒரு நாளைக்கு அந்த பண்ணைக்கு 2000 லிட்டர் தண்ணீர் மட்டுமே தேவை. ஆறு ஏக்கர் நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் அந்த நீர்த்தேவை என்பது மிக மிக சொற்பமானது. கிணற்றுநீரை 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் நிரப்பி அதில் சில மூட்டைகளில் துளைகளிட்டு மாட்டுச் சாணத்தை நிரப்பினால் அந்த மாட்டுச் சாணம் நீரின் உப்புத்தன்மையை பெருமளவில் கட்டுப்படுத்தி விடும். பொதுவாக நான் விவசாயிகளுக்கு இருப்பதிலேயே மிகக் குறைந்த அளவில் செலவாகும் விஷயத்தையே பரிந்துரைப்பேன். விவசாயி குறைந்த அளவு செலவு செய்து அதிக லாபம் அடையும் முறையே நான் பரிந்துரைப்பது. 

பரீட்சார்த்தமாக ஒரு தேக்கு மரக்கன்றை நட்டோம். 

விவசாயியும் அந்த நிலத்தில் பணி புரிபவர்களும் ஒரு மாத காலத்தில் அந்த கன்று எவ்விதம் வளர்கிறது என்பதை அவதானிக்கட்டும் என்பதற்காக ஒரு கன்றை மட்டும் நடச் சொன்னேன். மரக்கன்றுக்கு தண்ணீர் தேவையான அளவு ஊற்றப்படுகிறதா பணியாளர்கள் அந்த கன்றின் வளர்ச்சியில் எவ்விதமான ஆர்வம் காட்டுகிறார்கள் விவசாயிக்கும் பணியாளர்களுக்கும் இந்த ஒரு மாதத்தில் ஏற்படும் ஐயங்கள் என்ன என்பதை இந்த ஒரு மாதத்தில் அறிந்து விடலாம் என்பதால் இவ்விதமான ஒரு திட்டமிடல். 

மரம் என்பது தானாக வளரக் கூடியது என்னும் மனப்பதிவு சமூகத்தில் உருவாகி விட்டது. மரம் தானாக வளரும் தான் ; ஆனால் அதில் இருந்து நமக்கு நாம் விரும்பும் விதத்தில் பலன் கிடைக்க வேண்டும் என்றால் அந்த ம்ரத்துக்கு குறைந்தபட்சம் நாம் வாரம் இருமுறையாவது தண்ணீர் ஊற்ற வேண்டும். 

இரண்டு அடி நீளம் இரண்டு அடி அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழியை எடுத்து அதில் மக்கிய சாண எருவை இட்டு தேக்கு கன்றை நட்டு நீர் வார்த்தோம். 

அங்கிருந்து புறப்பட்டேன். ஆறு மணி நேர பேருந்து பயணம். மூன்று மணி நேரம் மலைப்பகுதிகளும் அதை ஒட்டிய நிலங்களும். மூன்று மணி நேரம் காவிரி வடிநிலம். கொங்கு நாட்டில் மூன்று நான்கு நாட்கள் ஒரு மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது.  

Sunday 10 December 2023

ராஜூ பிஸ்வாஸ்

 இன்று ஞாயிற்றுக்கிழமை சேலம் செல்லலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். அதாவது, 6 ஏக்கரில் தேக்கு பயிரிட விரும்பும் விவசாயியின் நிலத்தை நேரடியாகப் பார்வையிட விரும்பினேன். நேற்று தான் அவரிடம் முதல் முறையாகப் பேசினேன். ஓரிரு நாட்களில் சேலம் வருவதாகக் கூறியிருந்தேன். ரயில் அட்டவணையை இணையத்தில் சோதித்த போது காலை 6.20க்கு ஊரிலிருந்து சேலத்துக்கு திருச்சி கரூர் மார்க்கமாக ஒரு ரயில் புறப்படுகிறது என்பதைக் கண்டேன். உடன் விவசாயிக்கு ஃபோன் செய்து நாளையே வருகிறேன் என்றேன். ‘’சுபஸ்ய சீக்கிரம்’’ என்று சொல்வார்கள். நற்செயல்களை உடனே செய்ய வேண்டும் என்கிறது நம் மரபு. அவர் ஞாயிற்றுக்கிழமை முன்னரே திட்டமிட்ட ஒரு பணி இருந்ததால் ஒரு நாள் பயணத்தைத் தள்ளி வைக்க முடியுமா என்று கேட்டார். நானும் ஒத்துக் கொண்டேன். தற்போது நமது கட்டுமானப் பணி நிகழும் பணியிடத்தில் பூச்சுவேலை நடைபெறுகிறது. தினமும் ஐந்து பணியாளர்கள் பூச்சுவேலையில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை பணியிடத்துக்குச் செல்வோம் என மோட்டார்சைக்கிளில் புறப்பட்டேன். நாளை காலை 6.20க்கு சேலம் கிளம்பினால் நாளை இரவு 9.30க்குத் தான் ஊர் திரும்ப முடியும். நாளை நாள் முழுதும் பணியிடத்தில் இருக்க முடியாது என்பதால் இன்று மாலை நான் செல்வது அவசியமாகிறது. இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். பணியிடம் வீட்டிலிருந்து தோராயமாக 3.5 கி.மீ தூரத்தில் உள்ளது. ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற போது ஒரு இளைஞன் ‘’லிஃப்ட்’’ கேட்டான். அவனை ஏற்றிக் கொண்டேன். 

கொஞ்ச தூரம் வண்டி நகர்ந்ததும் அந்த இளைஞனிடம் ‘’எங்கே செல்ல வேண்டும் ‘’ என்று கேட்டேன். ரயில்வே ஸ்டேஷன் என்று சொன்னான். ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில்தான் பணியிடம் இருக்கிறது. எனவே அங்கே ‘’டிராப்’’ செய்கிறேன் என்று சொன்னேன். அவன் உச்சரிப்பு மலையாளம் போல் இருந்தது. நான் அந்த இளைஞனைக் குறித்து விசாரித்தேன். 

அவன் பெயர் ராஜூ பிஸ்வாஸ். அவனது தந்தை பெயர் ராம்குமார் பிஸ்வாஸ். நம் நாட்டின் 51 சக்தி பீடங்களில் முக்கியமானதான ‘’காமாக்யா’’ என்ற தலத்துக்கு பக்கத்தில் தான் ராஜூ பிஸ்வாஸின் பூர்வீக கிராமம். பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறான். பின்னர் கட்டிடத் தொழிலுக்கு வந்து விட்டான். திருவனந்தபுரத்தில் ‘’லாரி பெக்கர்’’ பாணி கட்டிடங்களை நிர்மாணிக்கும் கட்டிட நிறுவனம் ஒன்றில் சில ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறான். அவர்களின் பணி ஒன்று கோயம்புத்தூரில் நடந்திருக்கிறது. அங்கு பணி செய்திருக்கிறான். இங்கும் அந்த நிறுவனத்தின் கட்டிட வேலை நடக்கிறது. ராஜூவும் அவனது நண்பன் ஒருவனும் இங்கே வந்திருக்கிறார்கள். வேலை இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். அதன் பின் ஒரு மாதம் அஸ்ஸாம் செல்வான். பின் திருவனந்தபுரம் வந்து விடுவான். 

கட்டிடத் தொழிலைச் சேர்ந்தவன் என்பதால் அவனை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கும் கட்டிடத் தொழில் என்பதால் அவனுக்கும் மகிழ்ச்சி. 

அஸ்ஸாமிய நாவலாசிரியரான ‘’லஷ்மி நந்தன் போரா’’ வை வாசித்திருக்கிறாயா என்று அவனிடம் கேட்டேன். பள்ளி மாணவனாக இருந்த போது அவரது எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் என்று சொன்னான். நான் ‘’லஷ்மி நந்தன் போரா’’ வை அறிந்திருந்தது அவனுக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்தது. ஒரே குதூகலமாகி விட்டான். 

ஒருமுறை தில்லி ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய நின்று கொண்டிருந்த போது எனக்கு முன்னால் ஒரு வங்காள இளைஞன் நின்று கொண்டிருந்தான். அவனை அறிமுகம் செய்து கொண்டு அவனிடம் உரையாடுகையில் எனக்கு மிகவும் பிடித்த நாவலாசிரியர்களில் ஒருவர் ‘’தாராசங்கர் பானர்ஜி’’ என்று சொன்னேன். மேலும் ‘’ விபூதி பூஷண் , மைத்ரேயி தேவி, மாணிக் பந்தோபாத்யாய’’ ஆகிய வங்காளப் படைப்பாளிகளின் நாவல் மொழியாக்கத்தை தமிழில் வாசித்திருக்கிறேன் என்று சொன்னேன். அந்த இளைஞன் உணர்ச்சிகரமாகி கண்ணீர் மல்கி விட்டான். 

அஸ்ஸாம் குறித்து மேலும் பேசினோம். ‘’சரத் சந்திர சின்ஹா’’ என்ற காந்தியர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அஸ்ஸாம் முதலமைச்சராக இருந்தவர். அவர் பெயரைச் சொன்னேன். அவனுக்கு ரொம்ப ஆச்சர்யம். ‘’ஹிதேஷ்வர் சைக்கியா பி.கே. மகந்தா தருண் கோகோய் சர்பானந்த சோனாவால் ஹேமந்த பிஸ்வாஸ் சர்மா’’ ஆகிய எனக்குத் தெரிந்த  அஸ்ஸாம் முதலமைச்சர்களின் பெயர்களை சொன்னேன். அவன் நான் அஸ்ஸாமில் நீண்ட நாள் வசித்தவன் என்றே முடிவு செய்து விட்டான். 

என்னுடைய பணியிடத்துக்கு அஸ்ஸாம் குறித்து உரையாடியபடியே வந்து சேர்ந்தோம். ஐந்து நிமிடம் அங்கே இருந்தேன். சிமெண்ட் மூட்டை கால் மூட்டை மட்டுமே எஞ்சி இருந்தது. நாளை காலை சிமெண்ட் கலவை போட சிமெண்ட் மூட்டை வேண்டும் . காலை 9 மணிக்கே சிமெண்ட் வந்து சேர வேண்டும். காலை 8 மணிக்கு ஃபோன் செய்தால் பணி தொடங்கும் முன் சிமெண்ட் வந்து விடும். 

ராஜூவை அழைத்துக் கொண்டு ரயில் நிலையம் சென்றேன். கன்யாகுமரி திப்ரூகர் ரயிலில் கன்யாகுமரியிலிருந்து திப்ரூகருக்கு டிக்கெட் பதிவு செய்ய வேண்டும் என்று சொன்னான். இந்தியாவின் மிக அதிக தூரம் பயணிக்கும் ரயில் என்று அந்த ரயிலைச் சொன்னான் ராஜூ. நான்கு இரவுகள் நான்கு பகல்கள் பயண நேரம். ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியுடன் ரயில்வே டிக்கெட் முன்பதிவு முடிந்து விடும் என்று முன்பதிவு சாளரத்தில் கூறியிருக்கிறார்கள். திரும்பி வந்து விட்டான். நான் ரயில் நிலைய வாசலில் நின்றிருந்தேன். அவன் இந்த விபரம் கூறியதும் நானும் உள்ளே சென்று விசாரித்து உறுதி செய்து கொண்டேன். 

ராஜூ பிஸ்வாஸ் அவனுக்கு சில ஆடைகள் வாங்கும் வேலை இருப்பதால் துணிக்கடைகள் நிறைந்த பட்டமங்கலத் தெருவில் ‘’டிராப்’’ செய்யுமாறு கேட்டுக் கொண்டான். அது வீடு திரும்பும் வழியில் இருக்கிறது. வண்டி நகர்ந்து கொண்டேயிருந்தது. பிரியத்துடன் ‘’நாம் தேனீர் அருந்துவோம்’’ என்று சொன்னான். அவன் தேயிலைக்குப் பேர் போன மாநிலத்திலிருந்து வந்தவன் என்பதை நினைத்துக் கொண்டேன்.  

நண்பனுக்கு ஒரு யோசனை

மும்பையிலிருந்து வந்திருந்த நண்பன் சுற்றுலாத்துறை சார்ந்து முதலீடு செய்ய விரும்புவதாகவும் கடல் சார்ந்த இடத்தில் ஒரு ''‘ரிசார்ட்’’ அமைத்தால் லாபகரமாக இருக்குமா என்று கேட்டான். என்னிடம் சுற்றுலாத்துறை சார்ந்து முதலீடு செய்ய ஏதேனும் யோசனை உள்ளதா என்று கேட்டான். நேற்று அவன் கேட்டிருந்தது மனதினுள் இருந்தது. இன்று காலை ஒரு யோசனை உதித்தது. 

பழைய தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் தொடங்கி அதிராம்பட்டினம் வரை நீண்ட கடற்கரையைக் கொண்டது. மகேந்திரபள்ளி, பழையார், திருமுல்லைவாயில், பூம்புகார், வாணகிரி, திருக்கடவூர், தரங்கம்பாடி, நாகப்பட்டினம், வேதாரண்யம் என கடல் சார்ந்த பல ஊர்களைக் கொண்டது. 

இந்த ஊர்களிலோ அல்லது இந்த ஊர்களிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலோ குறைந்தது 10 ஏக்கர் அளவில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டால் போதுமானது. விலைக்கு வாங்க வேண்டியதில்லை. 

இந்த நிலத்தில் 10 ஏக்கரில் குறைந்தது 2000 சதுர அடி பரப்புள்ள 100 மியாவாக்கி காடுகளை உருவாக்க முடியும். மியாவாக்கி காடுகள் ஜப்பானில் மியாவாக்கி என்பவரால் உருவாக்கப்பட்ட முறையாகும். காடு உருவாக பெரும் பரப்பு தேவை என்ற நிலை இருக்கையில் காட்டில் மரங்கள் வளரும் முறையை அடிப்படையாய்க் கொண்டு குறைந்த நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையிலான மரங்களை நட்டு ஒரு காட்டை உருவாக்கும் முறையே மியாவாக்கி முறை ஆகும். 

10 ஏக்கர் நிலத்தில் இவ்வாறு 100 காடுகளை உண்டாக்கி ஒவ்வொரு காடுடனும் ஒரு சிறு குடிலை அமைத்து இணைத்து விடலாம். இந்த நிலப்பரப்பில் அதிக அளவு ஆக்சிஜன் இருக்கும் என்பதால் எவரும் எளிதில் ஒரு மனப்புத்துணர்ச்சியை உணர முடியும். பல்வேறு விதமான பறவைகளின் கீச்சொலி எப்போதும் நிறைந்திருக்கும் என்பதால் காட்டில் உணரும் அமைதியை உணர முடியும். சமவெளி நிலத்தில் அமைதி அடர்ந்த காடு என்பது பயணிகளை அதனை நோக்கி ஈர்க்கும். 

நிலத்தை குத்தகைக்கு எடுப்பதால் மூலதனச் செலவு கணிசமாகக் குறையும். மியாவாக்கி காடு உருவாக்க மட்டுமே செலவு ஆகும். கட்டிட கட்டுமான செலவு என்பது பெரிதாக இல்லை.  

நண்பனின் பரிசீலனைக்கு இதனை அளிக்கிறேன். 

Saturday 9 December 2023

சேலம் / விஸ்வகர்மா பதிவுகள் - கடிதம்

அன்புள்ள அண்ணா,

உங்கள் பதிவுகளை படித்தேன். சேலம் பகுதியில் ’’காவிரி போற்றுதும்’’ பணிகளைத் துவக்குவது மகிழ்ச்சிக்குரிய செய்தி. வாழ்த்துக்கள்.  

~~~~~

விஸ்வகர்மா பெண்கள், உறங்கி கொண்டு இருக்கும் இந்தியாவின் தங்கம் பற்றிய பதிவும் படித்தேன். தேவதத் பட்நாயக் பொதுவாக எல்லா உலக mythology பற்றி எழுதுபவர். அவர் இந்தியாவில் மட்டும் தான் பணம்/ செல்வத்தின் தெய்வம் ஒரு பெண்ணாக இருக்கிறாள் - லக்ஷ்மி - என்று சொல்கிறார்.

பணம்/ செல்வம் நம் கையில் உள்ள வரை ஒரு மதிப்பும் அற்றது. அது இருக்கிறது - அவ்வளவு தான். எப்போது அது நம் கையை விட்டு விலகுகிறதோ அப்போது அதன் மதிப்பு உறுதி ஆகிறது. 

மகள் வீட்டை விலகி திருமணம் ஆகி போகும் போது பிறந்த வீட்டின் மதிப்பை விளங்க செய்கிறாள். 

இந்த தொடர்பு இந்தியாவின் தெய்வமாகிய லட்சுமியை குறிக்கிறது. 

அவள் நிலம் ஆளும் நாராயணனை நீங்காதிருகட்டும்.

நன்றி

அன்புடன்,
பெரியண்ணன்

வெளி மாவட்ட அழைப்பு

நேற்று சென்னையிலிருந்து ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதாவது , அவரது நண்பர் ஒருவருக்கு சேலம் அருகே 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் அவர் முழுமையாக தேக்கு பயிரிட விரும்புகிறார் ; ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக ஆலோசனை வழங்க முடியுமா என்று கேட்டிருந்தார். இருவரும் ஊருக்கு வந்து என்னை நேரடியாகச் சந்திக்க விரும்புவதாகவும் நாம் செயல் புரிந்திருக்கும் தேக்கு வயல்களை நேரில் காண விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். நான் பதில் மின்னஞ்சல் அனுப்பினேன். இன்று என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்கள்.  

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எவ்விதம் அவர்கள் ‘’காவிரி போற்றுதும்’’ குறித்து அறிந்தார்கள் என்று கேட்டேன். நமது வலைப்பூவை பல ஆண்டுகளாக வாசிப்பதாகக் கூறினார்கள். வலைப்பூ மட்டுமே நாம் எழுதுகிறோம். வேறு எந்த சமூக ஊடகத்திலும் இல்லை. அவ்வாறு இருப்பினும் பலர் வாசிக்கிறார்கள் என்பதை அறிய நேர்ந்தது உவகை அளித்தது. 

முதல் முறை பேசுகிறோம் என்ற போதும் நண்பர் ‘’காவிரி போற்றுதும்’’ மேற்கொள்ளும் செயல்கள் குறித்து பல நற்சொற்களையும் பாராட்டுக்களையும் உரைத்தார். ‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளனாக என்னால் ஒரு விஷயம் மட்டு்மே சொல்ல முடியும். இந்த நற்சொற்களுக்கும் பாராட்டுக்களுக்கும் உரியவர்கள் செயல் புரியும் கிராமத்தின் மக்களே. அடியேன் எளிய கருவி மட்டுமே. 

நண்பரிடம் 3 விஷயங்கள் சொன்னேன். 

(1) இரண்டு அடி நீளம் இரண்டு அடி அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மக்கிய சாண எருவை இடுங்கள். ஒரு குழிக்கும் இன்னொரு குழிக்கும் இடையே 12 அடி இடைவெளி இருக்க வேண்டும். 

(2) தேக்கு மரத்துக்கு வாரத்துக்கு குறைந்தபட்சம் 2 நாட்கள் தண்ணீர் விட வேண்டும். செவ்வாய் வெள்ளி என இரண்டு நாட்களும் தண்ணீர் விட வேண்டும். ஒரு குடம் அளவு தண்ணீர் போதுமானது. 

(3) நமக்கு அந்த தாவரத்திடமிருந்து தேவை அதன் பத்து அடி உயர தண்டு மட்டுமே. எனவே குறைந்தபட்சம் பத்து அடி உயரத்துக்கு பக்கக் கிளைகள் ஏதும் இல்லாதவாறு ‘’கவாத்து’’ செய்ய வேண்டும். 

இந்த 3 விஷயங்களை மனதில் உறுதி செய்து கொண்டு செயலில் இறங்குமாறு கூறினேன். 

இன்னும் ஓரிரு நாளில் சேலம் வருவதாகக் கூறியிருக்கிறேன். 6 ஏக்கர் வயலை நேரடியாகப் பார்ப்பது அந்த வயலின் சூழலை அவதானிக்கவும் அதற்கு ஏற்றார் போல திட்டமிடவும் உகந்தது.  

நீண்ட நாள் நண்பன்

 எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். எனது நீண்ட நாள் நண்பன். தற்போது மும்பையில் வசிக்கிறான். விளையாட்டுக்கான தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறான். விவசாயம் சார்ந்த பணிகளில் ஆர்வமுடையவன். மும்பை சென்ற பின் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை என்ற மனக்குறை அவனுக்கு இருக்கிறது. ஊரில் 10 ஏக்கர் நிலம் வாங்கி அதில் தேக்கு பயிரிட வேண்டும் என்று விரும்புகிறான். ‘’காவிரி போற்றுதும்’’ தேக்கில் காட்டும் ஆர்வம் அவனுக்கு அந்த எண்ணத்தை உருவாக்கியுள்ளது. நமது தளத்தில் வெளியாகும் தேக்கு குறித்த பதிவுகளை தொடர்ச்சியாக வாசித்திருக்கிறான். நான்கு நாட்களுக்கு முன் மும்பையிலிருந்து ஃபோன் செய்து தேக்கு பயிரிட 10 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடு என்றான். நாம் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இருப்பதால் ஒரு பார்ட்டி என்னிடம் விற்றுக் கொடுக்குமாறு சொன்ன 10 ஏக்கர் நிலம் குறித்து சொன்னேன். நேற்று மாலை அவனிடமிருந்து ஃபோன் அழைப்பு. ஒரு திருமணத்துக்காக திருச்சி வந்திருப்பதாகச் சொன்னான். அங்கிருந்து கோவிந்தபுரம் போதேந்திராள் சன்னிதி வந்து வழிபாடு நடத்தி விட்டு ஊருக்கு வருவதாகக் கூறினான். நான் காலையில் அவனுக்காகக் காத்திருந்தேன். பேருந்தில் வந்தான். அவனை அழைத்துக் கொண்டு தேக்கு பயிரிட்டிருக்கும் இடத்துக்குக் கொண்டு சென்று காட்டினேன். மரக்கன்றுகள் நட்டு எத்தனை வருடங்கள் ஆகின்றன என்று கேட்டான். 15 மாதங்கள் என்று சொன்னேன். அவனால் நம்ப முடியவில்லை. இவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறதே என மிகவும் ஆச்சர்யப்பட்டான். பின்னர் அவனுக்குப் பொருத்தமான நிலம் என நான் எண்ணிய வயலைக் கொண்டு சென்று காட்டினேன். அவனுக்கு இடம் பிடித்திருந்தது. அங்கிருந்து வைத்தீஸ்வரன் கோவில் சென்று வைத்தியநாத சுவாமி தையல்நாயகி அம்பாளை வணங்கினோம். மதியம் 12.10க்கு சோழன் எக்ஸ்பிரஸில் அவன் திருச்சி செல்ல வேண்டும். 11.50க்கு வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையம் வந்தோம். அவனை திருச்சிக்கு ரயிலேற்றி விட்டு விட்டு நான் மோட்டார்சைக்கிளில் ஊர் திரும்பினேன். 

Wednesday 6 December 2023

விஸ்வகர்மா

தொழில் தேவைக்காக வீட்டில் இருந்த நகை ஒன்றை வங்கியில் அடமானம் வைத்திருந்தேன். அதனை மீட்க நேற்று நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். 

நகை மதிப்பீட்டாளர் ஒரு பெண்மணி. அவரது உதவியாளரும் ஒரு பெண்மணி. அந்த வங்கி ஒரு சிறிய கிளை. நகருக்கு மிக அருகில் அடுத்திருக்கும் கிராமத்தின் கிளை. மேலாளர், காசாளர் என இரு வங்கி ஊழியர்கள். நகை மதிப்பீட்டாளர் வங்கியின் நிரந்தர ஊழியர் அல்ல ; ஒப்பந்த ஊழியர். கிராமக் கிளை என்பதால் அந்த வங்கியின் வணிகம் அதிகமும் தங்க நகை அடகுக் கடனே. எனவே அங்கே நகை மதிப்பீட்டாளரே முக்கிய நபர். அவர் எப்போதும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பார். 

’’வணக்கம் ! அம்மா’’ என்று சொல்லி நகை மதிப்பீட்டாளரின் எதிரில் அமர்ந்தோம். 

புன்னகையுடன் ‘’வணக்கம் சார்’’ என்றார். 

நகைக்கடன் அட்டையைக் கொடுத்தோம். எவ்வளவு தொகை செலுத்தப்பட வேண்டியது என்பதை அட்டையில் குறித்துக் கொடுத்தார். சலானை பூர்த்தி செய்து தொகையை காசாளரின் சாளரத்தில் அளித்தோம். ஒப்புகைச் சீட்டை காசாளர் அளித்தார். நாங்கள் நகை மதிப்பீட்டாளரின் எதிரில் அமர்ந்து கொண்டோம். 

‘’எனக்குத் தெரிந்து ஒரு பெண் நகை மதிப்பீட்டாளராக நியமனம் ஆகியிருப்பது இங்கு தான் என்று நினைக்கிறேன்’’ என்றேன். 

நகை மதிப்பீட்டாளர் முகம் புன்னகையால் ஒளிர்ந்தது. 

‘’நாகப்பட்டினத்தில் ஒரு அம்மா நகை மதிப்பீட்டாளராக இருக்காங்க சார்’’ என்றார். 

மதிப்பீட்டாளரின் உதவியாளர் ‘’கடலூர்ல ஒரு அம்மா இருக்காங்க சார்’’ என்றார். 

‘’நம்ம மாவட்டத்துல நீங்க தான் மேடம்’’ என்றேன்.

அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. 

‘’நாங்க விஸ்வகர்மா சார்’’ என்றார். 

‘’ஓ ! அப்படியா’’ என்றேன். தொடர்ந்து , ‘’நிறைய ஸ்பெஷாலிட்டிஸ் கொண்ட சமூகம் அது’’ என்று சொன்னேன். 

அந்த இரு பெண்களுக்கும் ஆச்சர்யம். என்ன சொல்லப் போகிறேன் என்று. 

‘’விஸ்வகர்மா மக்கள் கன்யாகுமரில இருந்து காஷ்மீர் வரைக்கும் இருக்காங்க. அதனால அது ஒரு ஆல் இண்டியா கம்யூனிட்டி. குறைஞ்சது 5000 வருஷ வரலாறு அவங்களுக்கு இருக்கு. நம்ம நாட்டு மக்கள் செல்வத்துக்கான கடவுளா லஷ்மியை கும்பிடறாங்க. லஷ்மி விதவிதமான பொன் நகைகளை விரும்பி அணியக் கூடியவங்க. அம்பாளுக்கும் பொன் ஆபரணங்கள் மேல பிரியம் அதிகம். லலிதா சகஸ்ர நாமம், சௌந்தர்ய லஹரி போன்ற நூல்கள் அம்பிகை விரும்பி அணியும் பொன் ஆபரணங்கள் பத்தி சொல்ற படைப்புகள். அப்ப அந்த காலத்துலயே விதவிதமான பொன் நகைகள் செஞ்சிருக்காங்க. அதப் பத்தி மக்கள் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குன்னு தானே அர்த்தம்.’’

கண்கள் பெரிதாக விரிய ‘’ஆமாம் சார்’’ என்றனர். 

‘’இப்ப உலகத்துல அமெரிக்கா கிட்ட இருக்கற தங்கம்னா அது அவங்களோட அரசு தலைமை வங்கில தங்கக்கட்டியா இருப்பு வச்சிருப்பாங்க. அரசாங்கத்துக்கிட்ட மட்டும் தான் தங்கம் இருக்கும். வீடுகள்ல தங்கம் இருக்காது. அதாவது பெண்கள் தங்கத்துல நகை செஞ்சு போட்டுக்க மாட்டாங்க.’’

‘’அங்கல்லாம் பெண்கள் தங்க நகை வாங்க மாட்டாங்களா ?’’ என்று நம்ப முடியாமல் கேட்டனர் இருவரும். 

‘’உலக நாடுகளோட பல பெண் தலைவர்கள் இங்க வராங்களே அவங்க யாரும் கோல்டு அணியறது இல்லை . நீங்க பாத்திருக்கலாம்’’ என்றேன். இருவரும் ‘’ஆமாம் சார்’’ என்றனர். 

‘’நம்ம நாட்டுல தான் சாமானியமான ஏழைக் குடும்பத்துக்குக் கூட 5 பவுன் தங்க நகை இருக்கும். 140 கோடி நம்ம பாபுலேஷன். அப்பன்னா இங்க 28 கோடி குடும்பம் இருக்குன்னா நம்ம கிட்ட இருக்கற மினிமம் தங்கம் 140 கோடி பவுன். அவ்வளவு தங்கம் அமெரிக்கா கிட்ட கூட கிடையாது.’’ 

‘’நாம அவ்வளவு பணக்கார நாடா சார்?’’

‘’நிச்சயமா! நாளைக்கே நம்ம அரசாங்கம் மக்கள் கிட்ட இருந்து தங்கத்தை வாங்கிட்டு ரொக்கமா பணம் கொடுத்தா உலகத்துல நம்ம கையில தான் கோல்டு அதிகமா இருக்கும். மத்த நாடுகள் காசு செலவு செஞ்சு சுரங்கத்துல இருந்து தங்க தாது எடுத்து அதை தங்கமாக்கனும். நமக்கு நம்ம கையிலயே இருக்கு. செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாம். உலகத்துல தங்கத்தோட விலை என்னவா இருக்கணும்ங்கறத நாம தான் தீர்மானிப்போம்‘’

’’விஸ்வகர்மா 4 தொழில் செய்யறவங்க சேர்ந்து இருக்கற ஜாதி சார். நாங்க பொன் நகை செய்யறவங்க. இரும்பு தளவாடங்கள் செய்ர ஜாதியும் இதுல சேந்தது. பாத்திரம் செய்யறவங்க. தச்சு வேலை செய்யறவங்க. ’’

’’மத்திய அரசாங்கத்துல இப்ப விஸ்வகர்மா யோஜனா ன்னு ஒரு ஸ்கீம் இருக்கு. மத்திய அரசாங்கம் அதுக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கியிருக்கு. இந்த 4 தொழிலோட மேல பல தொழில் சேத்து இருக்காங்க. அவங்களோட தொழிலுக்கு உபயோகமா இருக்கற விதமா அவங்களுக்கு லோன் கொடுங்க’’

‘’விஸ்வகர்மா ஸ்கீம்ல கவர் ஆகறவங்க யாருன்னு பாத்து மேனேஜர் கிட்ட ரெஃபர் பண்றோம் சார்’’ என்றனர் மகிழ்ச்சியுடன். 

மேலாளர் கஜானாவிலிருந்து நகையைக் கொண்டு வந்து கொடுத்தார். நாங்கள் பெற்றுக் கொண்டு எல்லாருக்கும் நன்றி சொல்லி கிளம்பினோம்.   

மூன்று ஓவியங்கள்


நமக்கு 
ஒரு அகம் இருக்கிறது
எளிய
அழகிய
நேர்த்தியான அகம்

தென்னைகள் நிறைந்த
அங்கும் இங்கும் 
அணிலாடும்
சின்னஞ்சிறு பறவைகள்
கீச்சொலி
எப்போதும் எழுப்பும்
அகம்

நடந்து நடந்து நடந்து
எந்நேரமும்
சிறு சிறு
சீரமைத்தல்களை
எப்போதும் மேற்கொள்கிறாள்
அன்னை

அன்னை அமைத்த அகத்தில்
மனிதர்கள் பிறக்கிறார்கள்
மனிதர்கள் இறக்கிறார்கள்

அகத்தில் எப்போதும் சுடர்கிறது
அன்னை ஏற்றிய தீபச்சுடர்
அன்னையர் ஏற்றிய தீபச்சுடர்

அந்த 
அந்தி தீபத்தின்
சிறு ஒளியை
நாளும்
தன்னுள் 
ஏந்திக் கொள்கிறான்
நாளவன்

***



  தீர்த்தக் கரையில்
காத்திருக்கிறேன்
நீ சொன்ன படி

இந்த உலகம் அழகியது
என்பதை
மீண்டும் மீண்டும் மீண்டும்
உணர்ந்து கொண்டு

நீ சொன்ன நேரம்
கடந்து விட்டது
அதன் பின்
எத்தனையோ 
அந்திகள் விடியல்கள்
எழுந்து மறைந்து விட்டன
யுகங்கள் 
தோன்றி மறைந்து விட்டன

எதிர்பார்ப்பு
ஏக்கம்
வலிகள்
துயரங்கள்
துக்கம்
தவிப்பு
அலைகளென எழுந்தன
வித வித
உணர்வுகள்

தன் சிறகுகளால்
தன் சிறகுகளுக்குள் 
வானும்
விண்மீன்களும்
காற்றும்
ஒளியும்
மண்ணும்
நீரும்
பொதிந்து கொண்டன
என்னை

அலைகள் அல்ல கடல்

தீர்த்தக்கரையில்
காத்திருக்கிறேன்
நீ சொன்ன படி

***




காட்டாளன்
சுடலைப் பொடி பூசி
உடுக்கடிக்கிறான்

எனக்கு ஆயிரம் உடல்கள்
எனக்கு ஆயிரம் கபாலங்கள்
எனக்கு ஆயிரம் அறியாமைகள்

காட்டாளனே வா

என்னை அழி 

என் கபாலங்களை
சூடிக்கொள்

காட்டாளனே வா
என்னை அழி
என் கபாலங்களை
சூடிக்கொள்
 ***

ஓவியம் : எல் ஆர்

Tuesday 5 December 2023

பூம்புகார்

கடல் காணச் செல்வது என்பது என்றுமே உற்சாகம் கொள்ளச் செய்வது. முன்னர், வாரத்தில் ஒருநாள் மாலை கடற்கரைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இப்போது மீண்டும் அந்த வழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். 

இன்று பூம்புகார் சென்றிருந்தேன். நெல்லூர் அருகே நிலை கொண்டிருக்கும் புயலால் வங்கக் கடல் நுரைத்து அலையடித்துக் கொண்டிருந்தது. ஆர்ப்பரித்து கரையை நோக்கி விரைந்து கொண்டிருந்தன கடலலைகள். கரையிலிருந்து அலைகளை நோக்கிச் சென்று அலைகளுக்குள் நின்று கொண்டேன். கடலில் நிற்கையில் எப்போதும் என் உளம் பொங்கும். உள்ளத்தில் இப்போது எத்தனையோ எண்ண அலைகள். கடலலைகளில் எனது எண்ண அலைகள் சங்கமமாயின. 

அலைகளில் நிற்கும் போது ‘’காவிரி போற்றுதும்’’ நினைவு வந்தது. ஏன் என்று தெரியவில்லை. அந்நினைவு எழுந்த போது ஒரு நிறைவும் எழுந்தது. அதுவும் ஏன் என்று தெரியவில்லை. சமுத்திர நீரை மும்முறை தலையில் தெளித்துக் கொண்டேன்.  

Sunday 3 December 2023

காவிரி போற்றுதும் - பணிகளின் நிதிநிலை

’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. அதன் அமைப்பாளரே அதன் செயல்களை ஆற்றும் செயலாளரும். அமைப்பாளரின் நண்பர்களே அமைப்பின் ஆதரவாளர்கள். இந்த பின்னணியிலேயே ‘’காவிரி போற்றுதும்’’ செயல்கள் நிகழ்ந்தன. நிதிநிலையின் அடிப்படையில் அவை எவ்விதம் நிகழ்ந்தன என்பதை அமைப்பு முன்னெடுத்த ஒவ்வொரு செயல்பாடுகளையும் அடிப்படையாய்க் கொண்டு தொகுத்துக் கொள்வது இந்த தருணத்தில் உபயோகமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு நுண் அமைப்பு எவ்விதம் தன் செயல்களை திட்டமிட்டது செயல்படுத்தியது என்பதை புறவயமாக அறிந்து கொள்வது நமக்கு மட்டுமன்றி இவ்வகையான செயலை முன்னெடுக்க நினைக்கும் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதால் இந்த விஷயம் பதிவு செய்யப்பட வேண்டும் என நினைக்கிறேன். நாட்டில் உலகத்தில் நடக்கும் எல்லா விதமான பொதுப்பணிகளையும் அவை திட்டமிட்டு செயல்படுத்தப்படும் விதங்களையும் என்னுடைய கவனத்துக்கு வருபவற்றை ஒரு அமைப்பாளனாக கூர்ந்து   நோக்குகிறேன். 

நாம் நமது செயற்களமாக ஒரு கிராமம் என்பதைக் கொண்டோம். நாடு , மாநிலம், மாவட்டம் ஆகிய அலகுகளுடன் ஒப்பிட்டால் கிராமம் என்பது சிறிய அலகே. எனினும் அமைப்பாளரே செயலாளராகவும் இருக்கும் நுண் அமைப்புக்கு கிராமம் என்பது மிகப் பெரிய பேரலகு ஆகும். 

நாம் இதுவரை செய்திருக்கும் பணிகளை நினைவில் இருந்து வரிசைப்படுத்திக் கொள்கிறேன். அவை எவ்விதம் திட்டமிடப்பட்டன ; . எவ்வளவு நிதி தேவைப்பட்டது : அது எவ்விதம் திரட்டப்பட்டது. அந்த பணிகளின் மூலம் நிகழ்ந்த விளைவுகள் என்ன என்பதை ஒவ்வொன்றாகக் கூறுகிறேன். 

1. கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் மரக்கன்றுகள்

2. கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் முன்னால் மலர்ச்செடிகள்

3. கிராமம் முழுவதும் தீபம் ஏற்றிய நிகழ்வு

4. கோவிட் தடுப்பூசிக்கான முயற்சி

5. இரண்டாம் கிராமம் : கோவிட் தடுப்பூசிக்கான முயற்சி

6. இரண்டாம் கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் மலர்ச்செடிகள்

7. குடியரசு தினத்தன்று முதல் நாள் எல்லா வீடுகளுக்கும் நந்தியாவட்டை செடிகள்

8. குடியரசு தினத்தன்று மாலை எல்லா வீடுகளும் தீபம் ஏற்றுதல்

9. ஐ.டி நிறுவன ஊழியர் ஒருவரின் 3 ஏக்கர் வயலை முழுமையாக தேக்குத் தோட்டமாக மாற்றுவதில் ஆலோசனை வழங்கியது

10. இரண்டாம் கிராமத்தில் இரு விவசாயிகளின் வயலில் கணிசமான தேக்கு மரக்கன்றுகள் நட ஆலோசனை வழங்கியது . கூட இருந்து உதவியது. 

11. இரண்டாம் கிராமத்தின் குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மழைக்காலத்தில் ஒரு வாரம் உணவளித்தது. 

12. இரண்டாம் கிராமத்தின் குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இரண்டாம் வருடம் ஒரு வாரத்துக்குத் தேவையான உணவுப்பொருட்களை வழங்கியது

13. மாவட்டத்தில் இருக்கும் எல்லா சலூன்களுக்கும் ஏழு புத்த்கங்கள் கொண்ட தொகுப்பை அளித்தது

14. கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் பூசணி, சுரை, பரங்கி, பீர்க்கன் ஆகிய விதைகளை ஆடிப்பட்டத்தில் வழங்கியது

15. நண்பர் ஒருவரின் தந்தையின் நினைவு தினத்தையொட்டி கிராமம் முழுதுக்கும் நெல்லி மரக்கன்றுகளை வழங்கியது. 

16. நண்பர் ஒருவரின் தந்தையின் நினைவாக ஒரு விவசாயிக்கு 100 எலுமிச்சை கன்றுகளை வாங்கித் தந்தது. 

இந்த செயல்கள் எவ்விதம் திட்டமிடப்பட்டன ; எவ்விதம் நிகழ்ந்தன ; அவற்றின் மூலம்  பெறப்பட்ட அனுபவம் என்ன அது எவ்விதம் அடுத்த பணிகளுக்கு உதவியது என்பதை பதிவு செய்கிறேன். என்னுடைய வலைப்பூவில் அவ்வப்போது நிகழும் பணிகள் குறித்து பதிவு செய்கிறேன் என்றாலும் ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பார்ப்பது எல்லாவற்றுக்கும் நலன் பயப்பது என்பதால் இந்த பதிவில் விரிவாகப் பதிவிடுகிறேன். 

1. கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கியது

நாம் முதலில் துவக்கிய பணி இது. பொதுப்பணி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பல ஆண்டுகளாக இருந்ததேயன்றி ஒரு அமைப்பாக உருவாகி செயல்பட்ட அனுபவம் இல்லை. மக்களை நம்பி ஒரு பொதுப்பணி அமைப்பை துவங்கினேன். அது ஒரு நிமித்தம் மட்டுமே. பலரும் இணைவதற்கு ஒரு தளம் தேவை என்பதால் அமைப்பு உருவாக்கப்பட்டது. ‘’காவிரி போற்றுதும்’’ என்று பெயரிடப்பட்டது. 

ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களையும் சந்தித்து அவர்கள் ஏதும் மரக்கன்றுகள் வளர்க்க விரும்பினால் அவர்களுக்கு அந்த மரக்கன்றுகளை ஏற்பாடு செய்து வழங்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். ஒரு கிராமத்தின் விவசாயக் குடும்பத்தில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் வீட்டில் இருக்கும் ஆண்களில் ஒருவருக்கு மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தால் அவர்கள் அருகில் உள்ள நகரத்தில் உள்ள நர்சரிகளுக்கு சென்று வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் நடுவார்கள். பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ ஆர்வம் இருந்தால் அவர்கள் வீட்டில் உள்ள ஆண்களிடம் சொல்லி அவர்கள் வாங்கி வருவதற்கு சாத்தியம் உச்சபட்சமானது இல்லை என்பதால் அப்படி விருப்பப்படுபவர்களுக்கு நாம் மரக்கன்றுகளை வழங்கினால் அவர்கள் ஆர்வமும் விருப்பமும் நிறைவேறும் ; கிராமத்தில் இருக்கும் மரக்கன்றுகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்று உத்தேசித்தேன். எனது உத்தேசம் சரியாக இருந்தது. கிராமத்தின் குடும்பங்களில் இருந்த அனைவருக்குமே வீட்டின் தோட்டத்தில் மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மாறாத தன்மை கொண்ட விவசாயப் பணிச்சூழலால் நகருக்குச் சென்று நர்சரியில் வாங்கி நடுவதில் சுணக்கம் கொண்டிருந்தனர். நாம் அவர்களை அணுகி அவர்களுக்குத் தேவையான மரக்கன்றுகள் என்ன எனக் கேட்டு கணக்கெடுத்த போது அதனை ஒரு நன்நிமித்தமாகக் கொண்டு ஆர்வத்துடன் தேவையான மரக்கன்றுகளைக் கூறினர். எனது உத்தேசம் என்ன என்பதை ஒவ்வொருவரிடம் கூறினேன். அதன் மூலம் எனக்கும் மக்களுக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உருவானது. தேக்கு குறித்து அவர்களிடம் எடுத்துச் சொன்ன போது அவர்களின் குடும்பத்தின் பொருளியல் கஷ்டத்தைத் தீர்க்க வந்த ஒருவனாக என்னைப் பார்த்தார்கள். அடியேன் எளியவன். மிக அளியவன். என்னிடம் அவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அவர்களுக்கு வழங்க ஆலோசனை மட்டுமே இருந்தது. அதைத் தாண்டி என்னிடம் ஏதும் இருக்கவில்லை. 

500 குடும்பங்களைச் சந்தித்தேன். ஒரு இடத்தில் கூட ஒருவர் கூட என்னை அன்னியமாக நினைக்கவில்லை. ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் மட்டுமே ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒதுக்க முடியும் என்ற நிலையிலும் அந்த குறைந்த நிமிடங்களிலேயே உணர்வுபூர்வமான பிணைப்பு உருவானது. 

அனைத்து வீடுகளிலும் கணக்கெடுப்பை முடித்த போது அந்த கிராமத்து மக்களுக்கு 20, 000 மரக்கன்றுகள் தேவைப்படுகின்றன என்ற எண்ணிக்கை கிடைத்தது. அதாவது, சராசரியாக ஒரு கிராமத்துக்கு 20,000 மரக்கன்றுகள் நடும் அளவுக்கு இடமும் நட்டு வளர்க்க வேண்டும் என்ற விருப்பம் கொண்ட கிராம விவசாய மக்களும் இருக்கிறார்கள். 

கணக்கெடுப்பைத் தொடங்கிய போது அந்த கிராமத்தில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை ‘’T''  எனக் கொண்டால் கணக்கெடுப்பு நிகழ்ந்த பின் அந்த கிராமத்தில் மக்கள் கோரிய வண்ணம் அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டால் அந்த கிராமத்தில் உள்ள மரங்களின் எண்ணிக்கை ‘’ T + 20,000'' என்றாகும். அந்த எண்ணிக்கை உண்மையிலேயே மிகப் பெரியது. சிறு துளி பெருவெள்ளம் என்பதைப் போன்றது. இதே கணக்கை ஒரு புரிதலுக்காக விரிவுபடுத்தினால் எங்கள் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருக்கும் மொத்த மரங்களின் எண்ணிக்கையை ''DT'' எனக் கொண்டால் , தோராயமாக 300 கிராமங்களைக் கொண்ட எங்கள் மாவட்டத்தின் சாத்தியம் ‘’DT + 60,00,000'' என்றாகும்.  

ஒரு கிராமத்தில் ‘’T + 20,000'' என்பது சாத்தியம் எனில் ஒரு மாவட்டத்தில் ''DT + 60,00,000 '' என்பதும் சாத்தியமே என்பதை 15 நாட்கள் கணக்கெடுத்து மக்கள் மனநிலையை அவர்களுடன் உணர்வுபூர்வமாகத் தொடர்பு கொண்டு உரையாடியதன் மூலம் முழுமையாக அறிந்தேன். இந்த அறிதலும் புரிதலும் ஏற்பட்டது எனக்கு முக்கியமான அனுபவமானது. பொதுப்பணியில் இவ்வாறு களத்தில் ஏற்படும் அனுபவங்களே பொதுப்பணியாளனின் மனத்தை உறுதிப்படுத்துகின்றன. 

இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ள எனக்கு பெரிதாக எந்த செலவும் ஆகவில்லை. செயல் புரியும் கிராமம் ஊரிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் இருந்தது. மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் கிராமம் அது. அதற்கு அடுத்த கிராமம் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தது. ஊருக்கு அருகில் கிராமத்தில் பொதுப்பணி செய்வதை விட கணிசமான தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் பணி புரிந்தால் சற்றே கடின இலக்கொன்றை எட்டிய நிறைவு இருக்கும் என்பதால் அதனைத் தேர்ந்தெடுத்தேன். அந்த முடிவு சரியானதே என்பதை பின்னாட்கள் உணர்த்தின. 

காலை 6.30 மணிக்கு காலை உணவை அருந்தி விட்டு அந்த கிராமத்துக்குச் செல்வேன். சென்று சேர காலை 7.15 ஆகும். அப்போதிலிருந்து மதியம் 2 மணி வரை கணக்கெடுப்பேன். ஏழு மணி நேரத்தில் இழுத்துப் பிடித்து 50 வீடுகளில் கணக்கெடுப்பேன். சில வீடுகளில் அமரச் சொல்லி தேனீர் தயாரித்து அளிப்பார்கள். சிலர் அருந்த மோர் கொடுப்பார்கள். சிலர் சோடா கலர் வாங்கி வந்து தருவார்கள். அவர்கள் உபசரிப்பை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும் ; அதே நேரம் அடுத்தடுத்து தேனீர் மோர் சோடா என அருந்துவதும் சாத்தியம் இல்லை என்பதால் உபசரிப்புகளை மென்மையாகத் தவிர்த்து விட்டு கணக்கெடுப்பை நிறைவு செய்து விட்டு மதியம் 3 மணிக்கு வீடு திரும்பி மதிய உணவருந்துவேன். இந்த 15 நாட்கள் கணக்கெடுப்புக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வந்த வகையில் ரூ. 1000 ( ரூபாய் ஆயிரம் மட்டும்) செலவாகியிருக்கும். 

கணக்கெடுப்பை முடித்த பின் தான் 20,000 மரக்கன்றுகள் தேவை என்ற எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டது. அப்போது என்னிடம் ஒரு மரக்கன்று கூட கைவசம் இல்லை. 

என்னுடைய நம்பிக்கையையும் தீவிரத்தையும் பார்த்த எனது நெருங்கிய நண்பர்கள் தங்கள் ஏற்பாட்டில் 20,000 மரக்கன்றுகளை வழங்கினர். கிராம மக்கள் அனைவரின் தோட்டத்தையும் அவை சென்றடைந்தன. 

அத்தனை மரக்கன்றுகளும் வளர்ந்து விட்டதா என்ற கேள்வி எப்போதும் எழுப்பப்படும், ஒரு மரக்கன்று நடப்பட்டு முதல் 6 மாத காலத்தில் தொடர் மழை, புயல் , வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைக் கடந்து வர வேண்டும். அது ஒரு பொது உண்மை. ஐந்து நாட்கள் தொடர்மழை பெய்து தண்ணீர் நின்றால் கன்றுகளின் வேர் அழுகும். இவை விவசாயத்தில் எப்போதும் உள்ளவை. அவற்றைத் தாண்டி பிழைத்த மரங்களின் எண்ணிக்கையே மிக மிக அதிகம். 

2. கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் முன்னால் மலர்ச்செடிகள் 

20,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்ட போது அந்த கிராமமே புத்தெழுச்சி பெற்றிருந்தது என்பதை இப்போது நினைவுபடுத்திக் கொள்கிறேன். இன்னும் நுணுக்கமாக நோக்கினால் , கணக்கெடுப்பு தொடங்கிய நாளிலிருந்தே அந்த கிராமமும் கிராம மக்களும் உற்சாகமும் எழுச்சியும் கொண்டார்கள். என் அகத்தில் எழுந்த யோசனை என்பதால் அதன் மீது நான் பெரும் நம்பிக்கையும் தீவிரமும் கொண்டிருந்தேன். மக்களின் ஆர்வத்தையும் அன்பையும் காணக் காண என் செயலூக்கம் மேலும் மேலும் அதிகமானது. என் அகமும் கிராம மக்களின் அகமும் எவ்வித வேறுபாடும் இன்றி ஒன்றானது. ஒற்றுமை என்பது அதுதான். ஒருமைப்பாடு என்பது அதுதான். அந்த அனுபவத்தை இந்த எளியவனுக்கு அந்த கிராம மக்கள் வழங்கினார்கள். 

பணியின் பெரும்பகுதி நிறைவுற்ற போது அந்த கிராமத்தின் ஆலயம் ஒன்றில் கிராமத்தில் பணிக்கு உதவிய தன்னார்வலர்களின் கூடுகையொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் நான் பேசினேன் ‘’ ஒட்டு மொத்த பிரபஞ்சமும் இறையின் வடிவம் என பக்தன் உணர்ந்திருந்தாலும் ஆலயத்தின் கருவறை விக்ரகத்தையே பிரபஞ்ச ரூபமான இறைவன் என வணங்குகிறான். பக்தன் ஒருவனுக்கு தெய்வ விக்ரகம் எவ்வாறோ அதைப் போன்றது எனக்கு இந்த கிராமம். இந்த கிராமத்தை நான் தேசம் என்றே பார்க்கிறேன் ; உணர்கிறேன்’’ என்று சொன்னேன். இந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு மலர்ச்செடி பூத்திருக்குமானால் நான் மிகவும் மகிழ்வேன் என்று சொன்னேன். மேலும் இத்தனை நாட்கள் நாம் இணைந்து செயல்பட்டிருப்பதன் அடையாளமாக நம் ஒற்றுமையைக் குறிக்கும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அனைவரும் அவ்வாறே செய்து விடலாம் என்று சொன்னார்கள்.

3. கிராமம் முழுவதும் தீபம் ஏற்றிய நிகழ்வு

 அடுத்த இரண்டு நாட்களில் 500 பூமரக் கன்றுகளை நண்பர் ஒருவர் அளித்தார். ஒவ்வொரு வீட்டுக்கும் அளித்து 7 தீபங்கள் குறித்து தகவல் தெரிவித்தேன். குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களும் தங்கள் வீட்டு வாசலில் 7 தீபங்கள் ஏற்றினார்கள். அந்த ஒளி வெள்ளம் நம்பிக்கையின் நல்லெண்ணத்தின் அடையாளம். 

500 பூமரக் கன்றுகளை நண்பர் ஒருவர் வழங்கியதால் கிராமமே ஒருங்கிணைந்த அந்த அபூர்வ நிகழ்வுக்கு பொருட்செலவு என எதுவும் இல்லை.

பரஸ்பர அன்பும் பிரியமும் நல்லெண்ணமும் மரியாதையும் வெளிப்பட்ட ஒரு கிராமமே இணைந்து உருவாக்கிய அந்த தீப ஒளி வெள்ளத்தின் மதிப்பு என்ன என்பதை உணர்வுபூர்வமாக மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும் அல்லவா?

 4. கோவிட் தடுப்பூசிக்கான முயற்சி

கிராமம் முழுவதும் தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் அவ்வப்போது அந்த கிராமத்துக்குச் சென்று வருவேன். அந்த காலகட்டத்தில் கோவிட் தடுப்பூசி அரசாங்கத்தால் அரசு மருத்துவமனைகளில் இடப்பட்டது. அந்த கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் ஒவ்வொரு வீடாகச் சென்று கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். எளியவனான எனது வார்த்தைக்கு மதிப்பளித்து கிராமத்தின் எல்லா குடும்பங்களும் தீபம் ஏற்றிய நிகழ்வில் பங்கெடுத்ததால் அவர்களுக்கு ஒரு கைமாறு செய்ய வேண்டும் என எண்ணினேன். எனவே எல்லா வீடுகளுக்கும் சென்று கோவிட் தடுப்பூசி இட்டுக் கொள்ள சொன்னேன். எனினும் அப்போது மக்களுக்கு தடுப்பூசி குறித்து தயக்கமும் ஐயமும் இருந்தது. ஆர்வம் கொண்டிருந்த 50 பேரை என்னுடைய காரில் இரண்டு மூன்று நாட்களுக்கு காலை மாலை மதியம் என நகருக்கு அழைத்து வந்து ஊசி போட்டு கிராமத்தில் திரும்பக் கொண்டு சென்று விட்டேன். இதில் எனது வாகனத்தின் பெட்ரோல் செலவு என ரூ. 2000 ( ரூபாய் இரண்டு ஆயிரம்) ஆகியிருக்கலாம். 

5. இரண்டாம் கிராமம் : கோவிட் தடுப்பூசிக்கான முயற்சி

செயல் புரிந்த முதல் கிராமம் ஊரிலிருந்து 45 நிமிட பயண தூரம் என்பதால் ஊரிலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தை செயல் புரியும் கிராமமாக்கிக் கொண்டேன். அங்கே தொடங்கிய முதல் பணியே கோவிட் தடுப்பூசி பணி தான். முதல் கிராமத்தில் கோவிட் தடுப்பூசி அனுபவம் இருந்தால் இரண்டாம் கிராம மக்களிடம் தடுப்பூசி முக்கியத்துவம் குறித்து எடுத்துச் சொல்லும் முறையில் சற்று மாற்றம் ஏற்படுத்தி அந்த கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் சென்று தகவல் தெரிவித்தேன். நமது பரப்புரையால் தடுப்பூசி முகாம் கிராமத்தில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட போது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி இட்டுக் கொண்டனர். அந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது ; அரசு மருத்துவமனை கிடையாது ; எனினும் அந்த கிராமமே மாவட்டத்தில் உள்ள 300 கிராமங்களில் தடுப்பூசி இட்டுக் கொண்ட எண்ணிக்கையில் முதலிடம் பெற்று சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியரால் விருது பெற்றது. ஊரின் 95 சதவீத மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டனர். ( மீதி 5 சதவீத மக்கள் வெளியூர் சென்றிருந்தவர்கள் : வெளியூரில் குடியிருந்தவர்கள் )

இந்த பெருநிகழ்வுக்கும் செலவு என எனக்கு ஏதும் ஆகவில்லை. குறைந்தபட்சமான பெட்ரோல் செலவு தான். 

6. இரண்டாம் கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் மலர்ச்செடிகள் 

நமது கோரிக்கையை ஏற்று இரண்டாம் கிராமத்தின் பொதுமக்கள் ஏற்று கோவிட் தடுப்பூசி இட்டுக் கொண்டதால் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கிராமத்தின் எல்லா குடும்பங்களுக்கும் அரளி மலர்ச்செடிகளை வழங்கினேன். அரளி ஆடு மாடு மேயாத வறட்சியைத் தாங்கி வளரும் செடி என்பதால் அதனை வழங்கினேன். மேலும் அரளி மலர்கள் சிவ பூசனைக்கும் துர்க்கை பூசனைக்கும் உகந்தவை என்பதும் அதனை வழங்க காரணம். சிலர் வீட்டு வாசலில் வைத்தார்கள். சிலர் வீட்டு தோட்டத்தில் வைத்தார்கள். 

ஐந்நூறு அரளிச் செடிகளை எனது சொந்த செலவில் வழங்கினேன். ஒரு செடியின் விலை ரூ. 10 

7. குடியரசு தினத்துக்கு முதல் நாள் எல்லா வீடுகளுக்கும் நந்தியாவட்டை மரக்கன்றுகள் வழங்குதல்  

குடியரசு தினத்துக்கு முதல் நாள் அந்த ஊரின் எல்லா குடும்பங்களுக்கும் நந்தியாவட்டை மரக்கன்றை வழங்கி வீட்டின் முன் நடச் சொன்னேன். நண்பர்கள் மரக்கன்றுகளை வாங்கி அளித்தனர். மக்கள் அனைவரும் நட்டனர். எனது செலவு ஏதுமில்லை. இப்போது அந்த கிராமத்தில் நந்தியாவட்டை மலர்கள் பூத்துக் குளுங்குகின்றன . ஆலய பூசனைக்கு காலையும் மாலையும் மலர்கள் கொய்யப்பட்டு இறைமையிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. 

8. குடியரசு தினத்தன்று மாலை மக்கள் தீபம் ஏற்றுதல்

குடியரசு தினத்தன்று மாலை வீட்டு வாசலில் 7 தீபம் ஏற்றுமாறு கேட்டுக் கொண்டோம். மக்கள் அவ்விதமே செய்தனர். இந்த நிகழ்வும் அவரவர் வீடுகளில் கிராம மக்களால் செய்யப்பட்டதால் செலவு என ஏதுமில்லை

9. ஐ.டி நிறுவன ஊழியரின் வயலை தேக்குத் தோட்டமாக்கியது 

‘’காவிரி போற்றுதும்’’ கிராம விவசாயிகள் பலம் பொருந்திய பொருளியல் சக்தியாக எழ வேண்டும் என விரும்புகிறது. எனவே ‘’காவிரி போற்றுதும்’’ தொடர்புக்கு வந்த ஐ.டி நிறுவன ஊழியர் வயலில் மேட்டுப்பாத்தி அமைத்து 1000 தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. அந்த தோட்டம் ஒரு மாதிரித் தோட்டமாக அமையும் என்பதால் நான்கு மாத கால அளவில் நண்பருடன் உடனிருந்து வயலை தேக்குத் தோட்டமாக மாற்ற உதவினோம். ஊருக்கு மிக அருகில் இருக்கும் அவரது வயலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வந்த செலவு மட்டுமே இதன் செலவு.

10. இரண்டாம் கிராமத்தில் இரு விவசாயிகளுக்கு தேக்கு நட உதவியது

இரண்டாம் கிராமத்தின் இரு விவசாயிகளுக்கு 200 தேக்கு கன்றுகள் வழங்கி அது இப்போது 10 அடி உயர மரங்களாக உள்ளது. 

11. இரண்டாம் கிராமத்தின் குடிசைப்பகுதி மக்களுக்கு மழைக்காலத்தில் ஒரு வார காலம் உணவளித்தது 

‘’காவிரி போற்றுதும்’’ கிராம மக்கள் அனைவருக்கும் சொந்தமானது ; கிராம மக்கள் அனைவருக்கும் பொதுவானது. நமக்கு பெருநிலக்கிழாரும் நண்பரே. விவசாயத் தொழிலாளரும் நண்பரே. நாம் கிராம மக்கள் என்னும் போது ஒட்டு மொத்த கிராமத்தையும் உத்தேசிக்கிறோம் . அவ்வாறான புரிதல் இருப்பதால் தான் - இருப்பதால் மட்டுமே நாம் முழுமையாக ஏற்கப்படுகிறோம். மழைக்காலத்தில் கிராமத்தின் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை ஈரத்தின் அசௌகர்யங்களுக்கு ஆளாவார்கள் என்பதால் அவர்கள் சிரமத்தினைக் குறைக்கும் சிறு முயற்சியாக ஏழு நாட்கள் அந்த ஊரின் குடிசைப்பகுதி முழுமைக்கும் ஒரு வார காலம் ஒரு வேளை  உணவளித்தோம். அதன் மூலம் இரண்டாம் கிராமத்தின் குடிசைப்பகுதி மக்கள் அனைவருடனும் நேரடித் தொடர்பு ஏற்பட்டது. எனக்கு சொந்தமான ஃபிளாட் ஒன்றில் மூன்று சமையல்காரர்களைக் கொண்டு உணவு தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு நாள் செலவை ஒவ்வொருவர் என ஏழு நாள் செலவை ஏழு நண்பர்கள் ஏற்றுக் கொண்டனர். 

இரு சிறுமிகளின் தாயாரான ஒரு பெண்மணி இவ்வாறு உணவளித்த ஒரு நாளில் என்னிடம் குடிசைப்பகுதிகளின் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள் எனக் கூறினார். நான் அதனைக் கோரிக்கையாக அல்ல மாறாக கட்டளையாகவே கொள்கிறேன். 

12. இரண்டாம் கிராமத்துக்கு மறுமுறை ஒரு வார மளிகைப் பொருள் வழங்கியது

முதல் வருடம் ஒரு வார காலம் உணவளித்தோம். இரண்டாம் வருடம் நிதிப்பற்றாக்குறை. இருப்பினும் துவங்கிய செயலை இரண்டாம் படிநிலையில் நிறுத்துக் கூடாது என்பதால் உணவாக சமைத்து அளிக்கவில்லை என்றாலும் ஒரு வார காலத்துக்கான மளிகைப் பொருட்களாக வழக்கினோம்.  

13. மாவட்டத்தில் உள்ள 400 சலூன்களுக்குச் சென்று ஒவ்வொரு சலூனுக்கும் 7 புத்தகங்கள் கொண்ட தொகுப்பை அளித்தது. 

மாவட்டத்தில் உள்ள எல்லா சலூன்களுக்கும் சென்று ஒவ்வொரு சலூனுக்கும் ஏழு புத்தகங்கள் கொண்ட தொகுப்பை அளித்தோம். 

14. கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் ஆடிப்பட்டத்தின் போது நாட்டுக் காய்கறி விதைகளைக் கொடுத்தது

50 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, கிராமத்தில் வசிக்கும் மக்கள் கிராமத்தை விட்டு வெளியே சென்று பணிகள் புரிவதற்கோ வேறு லௌகிக விஷயங்களை ஆற்றுவதற்கோ வாய்ப்புகள் சற்று குறைவு. இத்தனை போக்குவரத்து வசதிகள் இல்லை. விவசாயப் பணியாளர்கள் உபரியாக இருப்பர். எனவே ஆடிப்பட்டத்தில் வீட்டுத் தோட்டத்தில் காய்கறி விதைப்பது எல்லா வீட்டிலும் நடக்கும். இப்போது போக்குவரத்து வசதிகள் மிகுந்திருக்கும் நிலையில் ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் வீட்டுத் தோட்டத்தில் காய்கறி பயிரிடுவது மிகுந்திருக்க வேண்டும். எனினும் மிக மிகக் குறைந்து விட்டது. ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக பூசணி, பீர்க்கன், பரங்கி, சுரை ஆகிய நாட்டுக் காய்கறி விதைகள் வழங்கப்பட்ட போது அந்த கிராமத்தினர் அதனை தங்கள் தொட்டங்களில் விதைத்து 3 மாதம் கழித்து பொங்கல் சமயத்தில் அறுவடை செய்த காய்கறிகளை அருகில் உள்ள நகரில் விற்பனை செய்தனர். தங்கள் உணவாகவும் பயன்படுத்தினர்.

15. நண்பர் தந்தையின் நினைவாக எல்லா வீடுகளுக்கும் நெல்லி மரக்கன்றுகள் வழங்கியது

நெல்லி மரத்தில் திருமகள் வசிக்கிறாள் என்பது நம் நாட்டின் நம்பிக்கை. எனது நண்பர் தனது தந்தையின் நினைவாக கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் நெல்லி மரக்கன்றுகளை வழங்க விரும்பினார். அவரது விருப்பம் நிறைவேற்றப்பட்டது

16. இன்னொரு நண்பர் தந்தையின் நினைவாக ஒரு விவசாயிக்கு 100 எலுமிச்சைக் கன்றுகள் அளிக்கப்பட்டன  

இந்த பணிகள் அனைத்தும் கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கின்றன என்பது பட்டியலிடப்படும் போது தெரிய வருகிறது. ஏதேனும் சில பணிகள் பட்டியலில் விடுபட்டிருக்கக்கூடும். 

செயல் திட்டமிடல்கள் எவ்விதம் ஒன்றன் பின் ஒன்றனாக நிகழ்ந்தது என்பதையும் அவற்றுக்குள் உள்ள தொடர்புகளையும் நம்மால் உய்த்தறிய முடியும். 

அடுத்து நாம் முன்னகர இருக்கும் பாதையை தீர்மானித்துக் கொள்ள இந்த பட்டியல் உதவக்கூடும்.