Friday 30 November 2018

இந்த மாநகரம்

ஓயாமல் ஓடும் பாதைகள்
கொண்ட
இந்த மாநகரம்

வாங்குவதும்
விற்பதும்
எங்கும்
நிறைந்திருக்கும்
இந்த மாநகரம்

உருவாக்கி
வாரி இறைக்கப்படும் ஒளி
காட்சியாய்
படமாய்
வாசகமாய்
ஜொலிக்கும்
இந்த மாநகரம்

மனிதர்களை
நகர்த்திக் கொண்டே இருக்கும்
இந்த மாநகரம்

ஏதோ ஒரு கணத்தில்
எந்த வாய்ப்பும் கண்ணுக்குத் தெரியாத
யாரோ சில மனிதர்களின்
விழிகளில் திரளும்
கண்ணீரை
எங்கே வைப்பது எனத் தெரியாமல்
வெண்மேகங்களில்
வைத்து விடுகிறது

கருமேகங்கள்
நகரைச் சூழும்
நாளில்
இந்த மாநகரம்
கண்ணீரால் நனைகிறது

Saturday 24 November 2018

ஒரு முதியவன்
தன் புழங்கு சூழல்
உலகம்
சிறிதாய்
சிறிதாய்
மிகச் சிறிதாய்
ஆவது
காணும்
உணரும்
முதியவன்

முற்றத்தில்
ஈசி சேரில்
அமர்ந்து
ஓடுகளுக்கு
மேலே இருக்கும்
நட்சத்திரங்கள்
காண்கிறான்

கரண்ட் கட் ஆகி
கூடத்தில்
மருமகள்
மேஜை மேல் ஒட்டியிருக்கும்
மெழுகுவர்த்தி
சுடரிலும்
அந்தியில்
காலம் காலமாக ஒளிரும்
விளக்கிலும்

துளித்துளி
விண்மீன்கள்
வந்து சேர்வது கண்டு
புன்னகைத்த
கணத்தில்

பெரிதாய்
மிகப் பெரிதாய்
ஆனது
உலகம்


Monday 19 November 2018

புலர்

இருட்பொழுதில்
நீர்மேகங்கள்
அடர்த்தி கூட்டியிருக்கும் கருமையில்
ஆழ்மனதில்
கேட்டுக் கொண்டிருந்த
சன்னமான மழை
கூட்டிப் பெருக்கியிருந்த காற்றில்
நிரம்பிய
காலைப் பொழுதின் ஒளி
மழலைச்சொல்
மலர் முகம்
எப்போதும்
நம்பிக்கைகள் துளிர்க்கும் வெளி

Saturday 17 November 2018

தொடக்கம்

புயல்
ஓய்ந்த பின்
பாலகன்
முற்றும் அழிக்கப்பட்ட ஸ்லேட்டில்
மரங்களை அசைக்கும் காற்றை
வரையத் தொடங்குகிறான்

Thursday 15 November 2018

இடைவெளி

முதிர்ந்த
வயோதிகர்
உறங்கிக் கொண்டிருந்த
மருத்துவ மனையின்
இரண்டாம் மாடியில்
அமர்ந்திருந்த
உதவிக்கு வந்த
இளைஞனின்
சாளரம் தாண்டிய பார்வைக்குள்
தாழ்வாரத்தில் கிழித்துப் போட்ட காகிதமாய்
கிடந்த
மேகத் தீற்றல்
நினைவுபடுத்தியது
காதலி நெற்றி
சிறுவயது வெட்டுக்காயத்தை
வெட்டுக்கும்
கண்ணுக்கும்
இடையே
அளத்தல் அளவை அலகு
ஆயிரம் ஆயிரம்
அவ்வப்போது
வலசைப்பறவைகள்


Wednesday 14 November 2018

பறக்கும் சிறுவானம்

மழை வியாபிக்கும் பருவத்தில்
குடியானவன்
வளைந்து கொடுக்காத கிளைகளை
மூர்க்கம் திரட்டி
தனியாக
வெட்டி வெட்டிப் போட்டான்

அவன் குழந்தை 
அம்மாவிடம் 
வெட்ட வேண்டாம்னு சொல்லு
என
பொங்கி பொங்கி
அழுதது

நடக்கும் பறவையைப் போல
மரம் இருப்பதாக
தினமும்
நினைத்தது
குழந்தை

சில நாளில்
குழந்தைக்குப் பழக்கமான
மரங்கள் பலவற்றை
மண்ணில் சாய்த்தது 
சத்தம் போடும் காற்று
அம்மா
அதனை புயல் என்றாள்

கிளை வெட்டிய
மரம் 
மட்டும்
அப்படியே நின்றிருந்தது

மத்தாப்புகள் போல்
துளிர் விட்டது மரம்
துளிர்த்த மரம்
அசைந்து அசைந்து
சிறிதாகப் பறந்தது

குழந்தை 
அம்மாவிடம்
கிளையை வெட்டி
மரத்தைப்
பறக்க வைத்தார் அப்பா
என
சந்தோஷமாக
சொல்லிச் சிரித்தது

Monday 12 November 2018

அசையும் உரையாடல்

துருவங்கள் வரை நீளும்
இந்த கிராமத்துச் சாலையில்
சாலைக்கும் வயலுக்கும்
இடையே
சிறுகுட்டையில்
சூழும் இலைகளிலிருந்து
தண்டவாள மணி அடித்ததும்
வெளிக்கிடும்
துறு துறு
பள்ளிச் சிறுவன் போல்
அல்லி மலர்கள்
யானை அசைவுகளுடன்
நட்சத்திரப் புன்னகை உதிர்த்து
பேசும் பேச்சு என்ன

Wednesday 7 November 2018

மழை ஓய்ந்து
மேகங்கள் இல்லாமல் போய்
குளித்துத் துவட்டிக் கொண்ட
ஈரம் நீங்கிய காற்றில்
வெயில்
பரவுகிறது
பண்டிகையின் மறுநாளின்
அங்காடி இயங்குவதைப் போல

Saturday 3 November 2018

ஆடை அணி கலன்

ஒரு புதிய ஆடை
உடனடியாக
ஓர் உவகையைக் கொண்டு வருகிறது
துணிக்கடைப் பையை
கையில் வைத்துள்ள
இளம்பெண்
முகத்திலிருந்து
குழாய் நீர் நிரம்பிய
குடம் போல
புன்னகை
கொட்டுகிறது
முடிவிலா ஆடலின்
ஒரு கணத்தை
ஹேர் கிளிப்பாக்கி
தன் நம்பிக்கைகளை
கூந்தல் போல் முடிந்து
வீட்டுக்கு
நடந்து செல்கிறாள்
மூன்று நாள்
மழைக்குப் பின்
கழுவப்பட்ட காற்று வெளியில்
ஆர்வமாய்
முந்தி நிற்கின்றன
புது பச்சைத் தளிர்கள்
தீ நுனியென அசைந்தவாறு
மழலை முகமென மகிழ்ந்து

பின்குறிப்பு

மழை விட்டபின்
பரவும் வெயில்
நிரப்பி வழிகிறது
சில
சொற்களை
மௌனங்களை
கட்டாயங்களை
தீர்மானங்களை
சூழும்
புகை
போல

Friday 2 November 2018

உக்கிரத் தனிமையில் நிற்கும்
புராதன
ஆலய மண்சுவர்
பருவமழை

எப்போதும்
யார் யாரோ
திரியும்
வீதிகள்
தூய்மை செய்து கொள்கின்றன
ஆசுவாசமாய்

துல்லிய ஒலி கொண்ட
மாலையில்
கனமாக
அமர்கிறது
கருமேக இரவு

பின்னர்
நீண்ட
தவளைகளின்
பிராத்தனை
நேரம்

நினைவின் கனஅளவு

நினைவின் கனஅளவு
-----------------------------------

மழை 
அந்த மலைப்பிராந்தியத்தில்
கடையில்
நெருப்புப்பெட்டி வாங்க
டூ வீலரிலிருந்து இறங்கிய பயணி
மீண்டும்
வண்டிக்குச் செல்ல
உத்தேசித்திருந்த பொழுதை
துளித்துளியாய்
நீட்டி நீட்டி
பெய்தது
ஆறு நாழிகை

குளிர்ந்த
அவனது வாகன சைலன்ஸரிலிருந்து
அருகாமையில் தென்பட்ட வீட்டிலிருந்து
வெண் புகை
தாரையின் இடைவெளிகளில்
நிரம்பி மேலெழுந்து கொண்டிருந்தது

கொட்டகைக்குக் கீழே
எழ மனமில்லாமல்
பெஞ்சில் அமர்ந்து வண்டியைப் பார்க்கிறான்
குடையைத் தோளில் படறவிட்ட
வண்ணச்சேலை அணிந்த இளம்பெண்
பால் பாக்கெட் வாங்கி
மீண்டும்
மழைக்குள் செல்கிறாள்
அவளது
சுட்டுவிரலுக்கும்
கட்டை விரலுக்கும்
இடையே
வெவ்வேறு தாளத்தில்
நடனமிட்டது
அந்த பால்பாக்கெட்
வெள்ளைத் தாளின்
இங்க் தீற்றல்கள்
கடக்கும்
அவள் கால்களில் ஒட்டிய
சேற்றுத் துளிகள்

ஓசையாய்
நினைவாய்
காட்சியாய்
அர்த்தமாகிறது
மழை

மழை நின்ற பொழுதில்
அவ்விடத்தை
ஒரு தீப்பெட்டியின் கன அளவில்
புகையின் அடர்த்தியில்
நினைவில்
வைத்து
நீங்கிச் சென்றான்
பயணி