Sunday 31 March 2019

ஓர் இனிய தடாகம்

செம்பொன்னார் கோவிலிலிருந்து
நல்லாத்தூர்
செல்லும் வழியில்
இடது பக்கத்தில்
பச்சையாய் இலைகள்
எப்போதும் மூடியிருக்கும் குளப்பரப்பில்
ஒவ்வொரு சதுரடியிலும்
மலர்ந்திருக்கிறது
தாமரை
ஈர்க்கப்பட்டு
இறங்கினேன்
வழவழக்கும் கெண்டைகள்
உரசிச் சென்றன
சில்லென்ற உணர்வில்
நீரசைவில் எழுந்தன
மலரில் மறைந்திருந்த
தேன் சிட்டுகள்
ஓர் இனிய உறவைப் போல
ஓர் இனிய நினைவைப் போல
ஓர் இனிய தடாகமும்
வாழ்க்கையில்
எதிர்ப்படவே செய்கிறது

Saturday 30 March 2019

மலர் மாலை

அஸ்தமன சூரியன்
வீடு திரும்பும்
நெஞ்சங்களில்
அமைதியை
வழங்கும்
வசந்த கால அந்தியில்
வயல் வெளிகளின்
நடுவே
விண் பூக்களுக்குக் கீழே
மலர்கிறது
மாலையின் முதல் மலர்
தன் தூய்மையின்
நறுமணத்தால்
வசந்தத்தை
பூக்கச் செய்யும் மலர்

Thursday 28 March 2019

ஆழித்தேர்

தீ யென
வான் நோக்கி எழுந்துள்ளது
ஆழித்தேர்
தியாகராஜர்
கிளம்பி வந்திருக்கிறார்
நகர் பார்க்க
ஜனம் பார்க்க
சுற்றிலும்
மறை ஒலிக்க
தேவாரம் கேட்க
நாகஸ்வரம் இசைக்க
மாலை அந்தியில்
தேரின் கீழ்
குழுமி நிற்கின்றனர்
ஆயிரம் மானுடர்
எப்போதும்
கோபுரத்தில் தங்கும் புறாக்கள்
உற்சாகமாய் சுற்றி சுற்றி
அமர்ந்து கொண்டன
தேரின் மேல்
சங்கொலி கேட்கத் துவங்குகிறது
அவ்வொலியில் காட்சியாகிறது
ஆயிரம் ஆண்டுகள்

துவாரபாலகர்கள்

ஏக முத்திரை காட்டி
நின்றிருக்கின்றனர்
துவாரபாலகர்கள்
பெரிய
மிகப் பெரிய
உருவத்துடன்
பெருமாள் சயனித்திருக்கிறார்
பட்டர் வீட்டுக்குச் சென்றிருக்கும் போது
பூட்டிய
கதவுக்கு முன்னால் அமர்கின்றனர்
சாமி கும்பிட வந்தவர்கள்
காத்திருக்கும் அவகாசத்தில்
கவனிக்கின்றனர்
துவாரபாலகர்களை
கதவு எப்போது திறக்கும்
என்ற கேள்வி மனதில்
உள்ளேயிருப்பவனுக்கு
எல்லாம் தெரியும்
என்ற ஒரே பதில்
மட்டும்
எப்போதும்
இருக்கிறது
துவாரபாலகர்களிடம்

Wednesday 27 March 2019

காத்திருத்தல்

திரை மூடியிருக்கிறது
யதார்த்தத்தின்
இடைவெளியின்
தவிர்க்க முடியாமையின்
திரை
பக்தன் காத்திருக்கிறான்
திரை விலக
காண்கிறான்
ஒளிரும் சுடர் முகம்
ஒளிரும் தன் அகம்

மர்ஃபி யார்

மர்ஃபி யார்
நண்பன் கேட்டான்
மர்ஃபி
ஒரு குழந்தை
பல குழந்தைகள்
எல்லா குழந்தைகள்
ஒரு சிறுவன்
பல சிறுவர்கள்
மர்ஃபி
அன்றாடத்தை ஒளிரச் செய்யும் வைரம்
கண நேர அமிர்தம்
மர்ஃபி
ஒரு தெய்வப் புன்னகை

Tuesday 26 March 2019

இரவு வெள்ளம்

நள்ளிரவில்
அறையில் கேட்கும்
கடிகார ஒலி
இருளின் அடர்த்தியுடன்
தவிக்கும் தனிமையாய்
சென்று வருகிறது
இங்கும் அங்கும்
நிகழ்காலத்திலிருந்து
கடந்த காலத்திற்கு
நிகழ்காலத்திலிருந்து
நிகழ் காலத்திற்கு

வீதிகளில்
ஓசையற்றுப் பாய்கிறது
வெண்மதி
வெள்ளம்

Monday 25 March 2019

ஒளி மலர்

ஒரு கணத்தில்
ஒரு நாளில்
ஒரு மாதத்தில்
ஒரு வருடத்தில்
ஒரு வியாழ வட்டத்தில்
ஒரு முழு ஆயுளில்
எப்போதாவது
நிகழ்கிறது
ஒரு மலர்தல்

கடலின்
எழும் அலையின்
மடிப்பில்
ஒளிர்கிறது
வெண்திங்கள்

Sunday 24 March 2019

சமர்ப்பணம்

யாவற்றையும்
சமர்ப்பித்த பிறகு
கருவறை நீங்கிய மகவாக
உலகம்
பார்க்கப்படுகிறது
புதிதாக

Saturday 23 March 2019

ரங்கர் தேர்

ரங்கர் தேர் தயாராகிறது
பலப்பல கொடிகள் சிறகசைக்க
வண்ணப் பதாகைகள் மிதக்க
மர்ஃபி சப்பரம் வாங்கியுள்ளான்
வீட்டிற்கு
உள்ளும் வெளியும் இழுத்துக் கொண்டிருக்கிறான்
போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது
ஐம்பது வருடமாக
பலூன் விற்கும் பெரியவர்
பக்கத்து வியாபாரியிடம் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு
தேனீர் அருந்தச் சென்றிருக்கிறார்
ஊதுகுழல் விற்பவன்
ஒரு ஹிந்திப் பாட்டை
காற்றில் பரவ விடுகிறான்
அன்னை ஒக்கலில் அமர்ந்த குழந்தை
நூதனமாய்ப் பார்க்கிறது
தேரோட்டத்தை
தன் அன்னையுடன் வந்த நாட்களை
நினைவில் மீட்டுக் கொள்கிறாள்
குழந்தையின் அன்னை
யானை போல் அசைய ஆரம்பித்தது
ரங்கர் தேர்

நித்தம்

இத்தனை ஆண்டுகளில்
இன்னும்
என்னால்
கேட்கப்படாத
வழங்கப்படாத
மன்னிப்புகள் இருக்கின்றன
மிகச் சிலரையேனும்
இன்னும்
செயல்பாடுகளின் நிறைவால்
மகிழ்விக்காமல் இருக்கிறேன்
இன்னும்
பிரியத்தை சரியாக வெளிப்படுத்தத்
தெரியாமலேயே இருக்கிறேன்
பிசிரின்றி
உறவுகளை எப்படி பராமரிப்பது
என்பதை அறியேன்
எனினும்
தினம் வான் பார்க்கிறேன்
அந்தியில்
விண் மலர்கள் பூக்கும்
வானை
நம்பிக்கை கொள்கிறேன்
அதன் பெரும் பரப்பின்
கீழே

Friday 22 March 2019

மர்ஃபியின் பிராத்தனை

மர்ஃபி
தினமும் சாமி கும்பிடுகிறான்
அவன் கேட்பது
பறக்கும் சக்தி
பீமன் போன்ற வலிமை
படிப்பு
குதிரை
அவன் துள்ளிக் குதிக்கும் போதெல்லாம்
கடவுள் உனக்கு பறக்கும் சக்தியைக் கொடுத்து விட்டார் என்பேன்
உங்களாலும் குதிக்க முடியுமே
உங்களுக்கும் கொடுத்தாரா என்பான்
நாங்கள் துள்ளிக் குதிப்பதில்லையே
நீதானே குதிக்கிறாய்
உனக்குத் தான் கொடுத்துள்ளார் என்று சொல்வேன்
தனது தயக்கங்களை ரகசியமாய் வைத்துக் கொண்டு
தான் சோட்டா பீம் என்பான்
அவன் நன்றாகப் படிப்பான்
ஒருநாள் என்னிடம்
கடவுள் நான் கேட்ட அனைத்தும் தருகிறார்
குதிரையைக் கொடுத்தால்
அதற்கு தினமும் எப்படி புல் தருவது
என்று ஐயத்துடன் கேட்டான்
கடவுள் தந்த குதிரை
தானாகவே மேய்ந்து திரும்பும் என்றேன்
அதை யாராவது அழைத்துச் சென்று விட்டால்
என்ன செய்வது என்றான் 

மழலைச்சொல்

மழலையர் பள்ளி வாசலுக்கு
வந்து சேரும் மர்ஃபிக்கு
நேற்று விட்ட இடத்திலிருந்து
துவங்குகிறது
அழுகை
முகமெல்லாம் சிவந்து
கண்ணெல்லாம் நீராகி
ஏற்கனவே வந்து
அழுது ஓய்ந்திருந்த
குழந்தைகள்
மீண்டும் துவங்குகின்றன
கூட்டு அழுகையை
எல்லாக் குழந்தைகளும்
அழுகையை
நிறுத்திய பின்னும்
அழும் சிறுவனை
சமாதானப்படுத்துகின்றன
மொத்த வகுப்பும்

Thursday 21 March 2019

அன்புக்கு
எந்த நிபந்தனையும் இல்லை
எந்த முன்முடிவும் இல்லை
எந்த கட்டாயமும் இல்லை
ஆயினும்
அன்பின் நிமித்தம்
ஒரு துளி
கண்ணீர்
எஞ்சுகிறது
எப்போதும்
நீ
எல்லாவற்றையும்
மிகச் சரியாகவே
கையாள்வாய்
மனிதர்களை
இடங்களை
சூழ்நிலைகளை
அதில் ஏதும் ஐயமில்லை

ஒரு கணமும்
ஓயாமல்
எல்லாப்  பொழுதும்
நிறைந்து
இருப்பாய்
ஆர்வத்துடன்
மகிழ்ச்சியுடன்
அதிலும் ஐயமில்லை

தெளிவான
ஐயங்கள் ஏதுமற்ற
பரப்பிலிருந்து
விலகச் சொல்கிறாய்
அப்போது
உருவாகும் தவிப்பிற்கு
என்னவென்று
பெயரிடுவது?

சொல்

உன்
இருப்பை வேர்களாக்குகிறேன்
மகிழ்ச்சிகளை கிளைகளாக்குகிறேன்
அன்பை இலைகளாக்குகிறேன்
புன்னகையை மலர்களாக்குகிறேன்
நீ
மண்ணில் நிலைபெற்று
விண்ணுடன் உறவாடி
நீண்ட காலம்
நிலைத்திரு

உனது துயரங்களை
நான் பெற்றுக் கொள்கிறேன்

Wednesday 20 March 2019

கண மலர்

நீ இடும்
பூத்தையலில்
மெல்ல
உருக் கொண்டவாறு
இருக்கிறது
ஒரு மலர்
நீ
உன் பார்வையை
முழுதும்
அதன் மேல்
நாட்டுகிறாய்
உனது விரல் நுனியால்
தீண்டுகிறாய்
மலர்ந்த வேளை
நீ
புன்னகைக்கிறாய்
சட்டென
மலர்கிறது
இன்னொன்று

Monday 18 March 2019

அறுபது நாழிகை

உனது காலை விழிப்புகள்
இனிமையாக அமையட்டும்
அதிகாலைச் செவ்வானின் முன்
மெல்ல கரைதொடும் அலைகளைப் போல

உனது பகல்
மணல் குவியல் மேல்
வைக்கப்பட்டுள்ள
பானை நீர்த் தட்பமென
குளிர்ந்திருக்கட்டும்

உனது அந்திகள்
நீ உன் விரல்களால்
உருவாக்கும்
தீச்சுடரென ஒளிரட்டும்

நீண்டிருக்கும் இரவுகள்
உன் ஆழ் துயிலில்
ஒரு மலரென
கணம் கணமாக
மலர்ந்து கொண்டிருக்கட்டும்

அனந்தம்

அலைந்து
அமர்ந்திருந்த போது
மூடியிருந்த
என் கண்களிலிருந்து
நீர் கசிந்து கொண்டிருந்தது
எப்போதோ
நான் ஒரு குழந்தையாய்
ஓடிக்கொண்டிருந்தேன்
என்னை அழைத்த
ஒரு குரல் கேட்டேன்
நட்சத்திர வானம்
இரவுப் பொழுதொன்றில்
பார்த்துக் கொண்டிருந்தேன்
தேம்பித் தேம்பி
என்றோ
அழுத நாள்
ஞாபகங்கள்
மெல்ல நகர்ந்தன
ஒரு முகம்
இன்னொரு முகம்
மேலும் ஒரு முகம்
இன்னுமொரு முகம்
முகங்கள் என்னைப் பார்த்தன
என்னிடம் கண்ணீர் இருக்கிறது
என்னிடம்
கண்ணீர் மட்டும் இருக்கிறது
ஓய்ந்த பொழுதொன்றில்
ஓர் ஒலி கேட்டேன்
ஒற்றை ஒலி
எல்லாமாயிருந்த
ஓர் ஒலி
நிலவு
கண்டதும்
ஆர்ப்பரிக்கின்றன
அலைகள்

மழை
தீண்டியதும்
உயிராய்
வளர்ந்து
எழுகிறது
மண்

தொங்கிக் கொண்டிருக்கும்
ஒற்றைத் தண்டவாள
பள்ளி மணியோசைக்கு
குதித்து வெளியேறுகின்றன
ஆரம்பப் பள்ளி குழந்தைகள்

குளத்தில் இறங்குபவனின்
கால்களைக் கடிக்கின்றன
கருநிற மீன்கள்

மௌனமான இரவில்
அமர்ந்திருக்கிறேன்
நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்தவாறு 
என்னிடம் ஏதேனும் கேள்
என்றேன்
நீ
என் துயரங்களை
என் வலிகளை
இன்னும் மறக்காத கசப்புகளை
தந்துவிடும்படி
சொன்னாய்

கலங்கிய முகத்துடன்
அவை உன்னைத் துன்புறுத்தும்
என
அவசர அவசரமாய் மறுத்தேன்

நீ
மாசற்ற முகத்துடன்
மலர்கள்
எங்கிருப்பினும்
மணம் வீசும்
என்றாய்


Sunday 17 March 2019

உழைத்துக் களைத்த உடல்களின் வியர்வை
நீதிக்காக சிந்தப்படும் இரத்தம்
மதிப்பீடுகளுக்காக சாகத் துணிந்தவர்களின் முனைப்பு
பிறருக்காக சிந்தும் கண்ணீர்
துயருற்றவனைத் தேற்றும் ஓர் ஆறுதல் சொல்
அகம் மலர்ந்த புன்னகை

இந்தப் புவி
தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறது
ஒவ்வொரு முறையும்

நமக்கு

நமக்கு
கண்களை மூடிக் கொண்ட
பின்னும்
உள்ளே
ஒரு சூரியன் தேவைப்படுகிறது
ஒரு நிலவு தேவைப்படுகிறது
எண்ணிலா நட்சத்திரங்கள் தேவைப்படுகிறது
ஓயாமல் பெருகும் நதி தேவைப்படுகிறது
மேகங்கள் தேவைப்படுகின்றன
மலர்கள் தேவை
கண்களை மூடிக் கொண்ட
பின்னும்
நமக்கு

Saturday 16 March 2019

மனிதர்கள்
பல விதங்களில்
பல வடிவங்களில்
அடிக்கடி கூடிவிடும்
மாநகரில்
பெரும்பாலான முகங்கள்
எதையோ
எங்கேயோ
எப்போதோ
நினைத்துக் கொண்டிருக்கின்றன
நெசவாளிகள்
தெருவில்
இழுத்துக் கட்டியிருக்கும்
பட்டு நூல் போல்
முகங்களின் மையங்கள்
எங்கெங்கோ
இழுக்கப்பட்டுள்ளன
அப்பின்னல்
ஒரு சிலந்தி வலையாகிறது
ஒரு தடாகத்து தாவரக் கொடியாகிறது
ஒரு தொங்கு ஊஞ்சலாகிறது
வலைக்கு
கொடிக்கு
ஊஞ்சலுக்கு
மேலே
பெரிய வானம் இருந்தது
அதில் 
அப்போது
ஒரு வண்ணத்துப்பூச்சி
சிறகடித்தது

ஒரு சிறு குழந்தையின் முன்னால்
அதிகாலைச் சூரியப் பொழுதின் முன்னால்
நட்சத்திர வான் மேலிருக்க
சூழும் வசந்தத்தின் தென்றல் முன்னால்
இறங்கும் குளிர் நதியின் முன்னால்

உடைந்து

உருவாகி

நிறைகிறோம்

Friday 15 March 2019

வசந்தத்தின் தென்றல் இனிமை
உனது மென்மை
இப்பொழுதில் தளிர்க்கும் தளிர்கள்
உனது அகம் கொள்ளும் பூரிப்பு
ஒவ்வொரு மலரிலும்
ஒளிர்கிறாய்
நீ

வசந்த காலப் பொழுதுகளில்
திரள்கின்றன
அன்பின்
பசுமைத் துளிர்கள்
நம்பிக்கையின்
வண்ண மலர்கள்
இனிமையின்
தென்றல் தீண்டல்கள்

Thursday 14 March 2019

ஹோலி

உன் மீது
புத்திளம் தளிர்ப் பச்சையை
மலர்களின் மஞ்சளை
கனிந்த சிவப்பை
வேர்களின் பழுப்பைப்
பூசுகிறேன்
நீ
மென்கரம் நீட்டி அழைக்கிறாய்
முடிவிலா நீலத்துக்கு
மாறா அன்றாடத்தால்
மதிலிடப்பட்ட
பரப்பில்
சட்டென
ஒரு மலர்
முளைத்து வளர்வது
எப்படி

Wednesday 13 March 2019

அலை எழும் கடலில்
அலையும் படகில்
நகரும் பறவைக்குக் கீழே
அசைந்து கொண்டிருக்கிறான்
வலை வீசும் சிறுவன்

அன்னத்தைப் பெருக்குங்கள்

அன்னத்தைப் பெருக்குங்கள்
உபநிடதம் சொல்கிறது

வாழ்வுக்கு
ஒரு சொல் நம்பிக்கை அளிக்குமெனில்
ஓர் உதவி பெரும் துணையாகுமெனில்
ஓர் உடனிருத்தல்
கொடும் துயருக்கு ஆறுதல் தருமெனில்
ஒரு சரியான புரிதல்
எல்லா தருணங்களையும் அழகாக்குமெனில்

அன்னம்
விளைவது
மண்ணில் மட்டுமல்ல
மண்ணிலும் விண்ணிலும்

அன்னத்தைப் பெருக்குங்கள்
உபநிடதம் சொல்கிறது

Tuesday 12 March 2019

எதிர்பாரா பொழுது

லிஃப்ட் கேட்டு
பிரியத்துடன் முகம் நோக்கும்
மனிதன்
சிறிய கால இடைவெளியில்
நம்முடன் பயணிக்கும் போது
மனம் திறந்து
தன் சூழ்நிலையை
தன் மகிழ்ச்சியை
அல்லது
தன் கவலையை
எளிய சொற்களால்
பகிர்ந்து விடுகிறான்
அம்மனிதனிடமினிருந்து
விடை பெறும் பொழுது
பயிர் நுனியில்
குத்தி நிற்கும்
துளிப்பனி
காலை வெயிலில்
பயிரிடமிருந்து
பிரிந்து செல்வது போல்
இருக்கிறது
முதலில்
நாம் ஒரு புதிய உலகத்தை
கற்பனை செய்வோம்
பின்னர்
அதனை எவ்வாறு உருவாக்குவது
என்று
சேர்ந்து யோசிப்போம்

Monday 11 March 2019

தீரா வியப்பு

இந்த
இவ்வளவு பெரிய பூமியில்
இவ்வளவு பெரிய வாழ்க்கையில்
இவ்வளவு உயிர்களுக்கு நடுவில்
நாம்
ஒவ்வொன்றையும்
எவ்வளவு எவ்வளவு
நினைத்துக் கொள்கிறோம்

வியப்பாக இருக்கிறது

அசைவு

இந்த வசந்த காலத்தில்
மரத்தின்
உச்சிக் கிளையில்
வான் போல
பூத்திருக்கும்
மலர்
இந்த பிரபஞ்சத்தில்
மலர்ந்திருக்கும்
புவி மலரென
அசைந்து
கொண்டு
இருக்கிறது
துயில் கலைந்த
மின்விசிறியின் ஒலி மட்டும்
கேட்கும்
அறையில்
மௌனமான இரவு
சமரசம் பேசுகிறது
சாத்தியங்களின்
கோட்டுச்சித்திரங்களை
வரைந்து காட்டுகிறது
எப்படியாவது
சமாதானம் கொண்டு வர
பிரயத்தனப்படுகிறது

Saturday 9 March 2019

எனது
வன்முறைகளை
எப்போதும் சுமக்கும் படைக்கலன்களை
என்றும் உடனிருக்கும் தவிர்க்க இயலா சுபாவங்களை

இதோ
இந்த மலையில்
இந்த அந்திப் பொழுதில்
இந்த அஸ்தமன சூரியன்
முன்னால்
கைவிடுகிறேன்

விழிகளில் நிறைந்து
வெளியேறும்
என் கண்ணீரின்
ஊற்றுமுகம்
இருந்தது
எங்கே
அலைந்து திரிபவனின்
அகத்தில்
சில புன்னகைகள் இருக்கின்றன
சில பிரியங்கள் இருக்கின்றன
மகத்தான
சில உணர்வெழுச்சிகள் இருக்கின்றன
இன்னும் பகிர்ந்து கொள்ளாத
இன்னும் முழு உருவம் பெறாத
இன்னும் முற்றாக வெளிப்படுத்தாத
சில சொற்கள்
இருக்கின்றன

Friday 8 March 2019

நீண்ட வெயிலுக்குப் பின்னான
மாலை
சிவப்பு அந்தியில்
கிராமத்துச் சாலை
களத்து மேட்டின்
அரசமரம்
இலைக்கண்களால்
கண்டது
இள வான் பிறையை
மரம் கண்டு
தன்னிடமிருந்து
ஈந்தது
ஒரு துளி ஒளி அமுதை
வான் பிறை
உழைத்துக் களைத்து
மர அடிவாரத்தில்
ஓய்வாய் அமர்ந்த உழவன்
கையில் வைத்திருந்த
பிஸ்கட் பொட்டலம்
மார்க்கமாக
அவன் குழந்தை நோக்கிப்
பயணித்தது
அமிர்தத்தின்
ஒரு துளி வானம்

திங்கள்

அந்தி விளக்கே
மாலையில் மலர்ந்த தென்றல்
மணம் வீசும் இந்த இரவில்
எங்கும் பரவி நிறைகிறது
நதியாக
உன் ஒளி
உன் கருணையால்
ஆதுரம் பெறுகிறது
மானுடர் துயர்
உன் பார்வை
விடுவிக்கிறது
அறியாமையின் தளைகளை
உணர்வெழுச்சியின்
தூய கண்ணீர்
காணிக்கையாக்கப்படுகிறது
யுக யுகங்களாக
உன்னிடம்

Friday 1 March 2019

ஒரு தொகுப்பு

மண்ணுடன் மழை காதல் கொண்ட ஒரு பருவத்தில் சட்டெனத் திறந்த ஒரு மாயத்தால் நான் கவிதை எழுதத் துவங்கினேன். இப்போது அவற்றைத் தொகுக்கலாம் என எண்ணுகிறேன். தொகுப்பதன் வழியே முடிவற்ற வாழ்வின் பயணத்தில் முன்னகரவும் முடியும் என்று தோன்றுகிறது.