Sunday 30 April 2023

1111 மணி நேரம் நோக்கி

1111 மணி நேர வாசிப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். மூன்றில் ஒரு பங்கு நாட்கள் நிறைவு பெற்றுள்ளன ; ஐந்தில் ஒரு பாக இலக்கு எட்டப்பட்டுள்ளது. இந்த சவாலின் மொத்த வாசிப்பு நேரமான 1111 மணி நேரத்தை இந்த முறை மிக அதிக எண்ணிக்கையிலான வாசகர்கள் எட்டுவார்கள் என்பதை வாசிப்பு நேர அட்டவணை காட்டுகிறது.  இந்நிலை மிக அதிக அதிக உவகையை அளிக்கிறது. 

தமிழகத்தின் சமூக நிலைக்கு வாசிப்பு மிகவும் தேவையான ஒன்று. பரந்துபட்ட நூல் வாசிப்பே புறவயமான சிந்தனைக்கு இட்டுச் செல்லும். சிந்தனையே செயல்கள் ஆகும். 

‘’சிறு துளிகள் பெருவெள்ளம்’’ என்ற தலைப்பில் வாசிப்பு சவால் தொடங்குவதற்கு முன்னால் ஒரு பதிவை எழுதினேன். அதில் எவ்விதமான வாசிப்புகள் சாத்தியம் என சில விஷயங்களை முன்வைத்திருந்தேன். அதில் ஒன்று வாசிப்பு சவாலின் 365 நாட்களிலும் ஒருநாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரம் வாசித்தல் என்பது. அதனை முறையாகப் பின்பற்றுகிறேன். பொழுது அமையும் போதெல்லாம் கூடுதலாகவும் வாசிக்கிறேன். இந்த நான்கு மாதங்களில் ஒருநாளில் என்னுடைய குறைந்தபட்ச வாசிப்பு ஒரு மணி நேரம். அதிகபட்சமாக ஒருநாளில் ஒன்பது மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் வாசித்திருக்கிறேன். 

லௌகிகப் பணிகள், லௌகிகப் பணிகள் உருவாக்கும் மனநிலை ஆகியவையே உண்மையில் பெரிய சவால்.  ஒரு லௌகிகப் பணி முதலில் நம் மனத்தில் ஒரு வடிவம் கொண்டு ஆக்கிரமித்துக் கொள்கிறது. அது நிகழ்ந்து முடியும் வரை மனம் அதிலேயே முற்றிலும் பரவியிருக்கிறது. என்னுடைய தொழிலான கட்டுமானப் பணி என்பது எதிர்பார்ப்புகள், ஒத்திவைப்புகள், காத்திருப்புகள், தள்ளிப் போதல்களால் ஆனது. ஒத்திவைப்புகள் சில நாட்களை விழுங்கும். காத்திருப்புகள் மனதை சோர்வடையச் செய்யும். இவ்வாறான லௌகிக மனநிலை நிறைந்திருக்கையில் ஒரு நாளில் நான் எண்ணும் வண்ணம் அதிக நேரம் வாசிப்பது என்பது சாத்தியமில்லை. இருப்பினும் இவ்வாறான பொழுதுகளிலும் ஒருமணி நேரம் வாசித்து விடுவேன். 

வாசிப்பு சவாலில் இப்போது வாசித்துக் கொண்டிருப்பது உலகத்தின் மிகப் பெரிய காவியம். காவிய மாந்தர்கள் வாசிப்பின் வழியே அகத்தில் நிறைகின்றனர். பெருமுயற்சிகளையும் பெருங்கனவுகளையும் காவியங்களின் காட்சிகள் நாளும் காட்டிக் கொண்டிருக்கின்றன. மானுடர்களின் எழுச்சியும் வீழ்ச்சியையும் மானுடர்களின் இருளையும் ஒளியையும் வாழ்வின் சுபாவமாகக் காட்டியவாறு செல்கிறது காவியம். காவியம் உணர்வெழுச்சியையும் கண்ணீரையும் மாறி மாறி அளிக்கக்கூடியவை. 

ஒருபுறம் லௌகிக அலை. இன்னொரு புறம் வாசிப்பு அலை. இரண்டாலும் முன்னகர்ந்து செல்ல முடிகிறது என்பது மகிழ்வுக்குரியதே. இந்த இரண்டுடன் ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளும் எப்போதும் இருப்பது. 

ஒரு சில மணி நேரங்கள் தொடர்ந்து வாசித்த பின்னர் அடுத்த தெருவில் இருக்கும் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு நடந்து செல்வேன். வாசிப்பில் லயித்திருந்த மனம் மைதானம் நோக்கி நடந்து செல்கையில் உற்சாகம் பெறும். வாசிப்பை ஒட்டி புதிய எண்ணங்கள் தோன்றும். அங்கே ஒரு அரசமரம் இருக்கும். அதன் அடியில் சில நிமிடங்கள் நிற்பேன் அல்லது அமர்வேன். அந்த மைதானத்தை இரண்டு மூன்று முறை சுற்றி வருவேன். மனமும் உடலும் புதிதானது போல தோன்றும். மீண்டும் வீட்டுக்கு வந்து வாசிக்கத் தொடங்குவேன். நடந்து செல்லும் போது உடல் சிறிதளவு உழைப்பதால் மனநிலை உற்சாகமாக ஆகும். வாசிப்பளவுக்கே இந்த சிறு சிறு நடைப்பயிற்சியையும் விரும்பத் தொடங்கி விட்டேன். 

வாசிப்பு நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் கொண்டுள்ளேன். அந்த விருப்பமே அதற்கான பாதைகளை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.  

Friday 28 April 2023

ஒரு புதிய எண்ணம்

’’காவிரி போற்றுதும்’’ பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் வேட்கையும் அதன் அமைப்பாளர் என்ற முறையில் எனக்கு எப்போதுமே உண்டு. அருகு போல் வேரூன்றி ஆல் போல் ‘’காவிரி போற்றுதும்’’ தழைக்க வேண்டும் என்பதை எண்ணாத நாள் இல்லை. எனினும் நாம் நுண் அலகிலான செயல்களை முன்னெடுக்கிறோம். அனைவரையும் பங்கெடுக்க செயலாற்ற வைக்கிறோம். அதன் மூலம் கிராம மக்களை இணைக்கிறோம் அல்லது இணைக்க முயற்சி செய்கிறோம். 

தமிழகத்தின் விவசாயியை தன்னம்பிக்கை கொண்ட சுய சார்புள்ள ஒரு பொருளியல் சக்தியாக மாற்ற வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு அடிப்படை. தமிழகத்தின் ஒரு கிராமத்திலாவது  அந்த கிராமத்தில் உள்ள விவசாயக் குடும்பங்களும் பொருளியல் தன்ன்றைவு பெற்றுள்ள நிலையை அடையச் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்படுகிறது. ஒரு கிராமத்தின் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் 20 தேக்கு மரக்கன்றுகளை அளிப்பதன் மூலம் 15 ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.20,00,000 வருமானம் கிடைக்க வேண்டும் என்று உத்தேசித்து நாம் செயல்படுகிறோம். 

சிறப்பான இலக்குதான். திட்டமிடலும் சிறப்பாகவே உள்ளது. எனினும் நாம் ஐந்நூறு விவசாயக் குடும்பங்களை உத்தேசிக்கும் போது விவசாயம் செய்வதில் விவசாயத்தை செயல்படுத்தும் முறைகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். மரங்கள் சிறப்பாக வளர என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்களுக்கு உருவாக்க வேண்டியிருக்கிறது. பொதுவாக விவசாயிகள் ஒரே கிராமத்தில் உள்ள மண் சில இடங்களில் சத்து மிகுந்ததாகவும் சில இடங்களில் சத்து குறைந்ததாகவும் இருக்கும் என்று நினைக்கிறார்கள். அது ஒரு பகுதி உண்மை. முழு உண்மை அல்ல. எந்த இடத்திலும் ஒரு மரக்கன்றை நடும் போது 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் கொண்ட ஒரு குழியை எடுத்து அதில் மக்கிய சாண எரு இட வேண்டும். இந்த எட்டு கன அடி (2*2*2) சாண எரு அந்த மரக்கன்றின் அடிமண்ணாகச் செயல்பட்டு மரத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும். ஏற்கனவே இருக்கும் மண் சத்தானதா இல்லையா என்பது முதன்மையான விஷயம் இல்லை. மக்கிய சாண எரு எந்த சத்தான மண்ணையும் விட சத்து மிகுந்தது. குழி எடுக்கப்படும் எட்டு கன அடி கொள்ளளவிலேயே கன்றுகள் வேர்விடப் போகின்றன. அந்த கொள்ளளவு மரங்களுக்கு தங்களுக்குத் தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ள போதுமானது.  இதனை விவசாயிகள் மனதில் பதிக்க வேண்டியிருக்கிறது. பொதுவாக ‘’காவிரி போற்றுதும்’’ இருப்பதிலேயே மிக மிக செலவு குறைந்த வழிமுறை எதுவோ அதையே விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கிறது. ஐந்நூறு பேரிடம் இந்த விஷயம் சென்று சேரும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இதனை உள்வாங்கிக் கொள்வார்கள் என்பதும் ஒவ்வொரு விதத்தில் செயலாற்றுவார்கள் என்பதும் நடைமுறை உண்மை. 

தேக்கு மரம் விவசாயிகளுக்கு பொருளியல் பலன் தரும் என்றாலும் அதனை அவர்களுக்கு அளிக்கும் முன் மரம் வளர்ப்பில் வேறு சில மரங்களைக் கொண்டு அவற்றை வளர்த்து அவர்களுக்கு ஒரு பழக்கத்தை உருவாக்கலாம் என எண்ணினேன். 

செயல் புரியும் கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மா, பலா, வாழை, நெல்லி, கொய்யா, எலுமிச்சை, நாவல் என ஏழு மரக்கன்றுகளை அளிக்கலாம் என ‘’காவிரி போற்றுதும்’’ திட்டமிட்டுள்ளது. 

ஒரு நாளைக்கு கிராமத்தின்  20 குடும்பத்தினரை நேரில் சந்தித்து மரம் நடும் முறை குறித்து அவர்களிடம் நேரடியாகப் பேசி இந்த கன்றுகளை வழங்குவது அவர்களுக்குப் பயன் தரும் என எண்ணுகிறேன். அவர்கள் எவ்விதம் நாம் அளிக்கும் குறிப்புகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அவதானிக்கவும் எவ்விதமான ஐயங்கள் எழுகின்றன என்பதை அறிந்து அவற்றைத் தீர்த்து வைக்கவும் ஒரு வாய்ப்பு உருவாகக் கூடும். 

கிராமத்தில் காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை மூன்று மணி நேரம், நேரம் ஒதுக்கினால் 20 குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு விஷயத்தை விளக்கி அவர்களுக்கு மா, பலா, வாழை, நெல்லி, கொய்யா , எலுமிச்சை ஆகிய மரக்கன்றுகளை அளிக்க முடியும். கிராமத்தின் எல்லா குடும்பங்களுக்கும் மரக்கன்றுகளை கொண்டு சேர்க்க இதே திட்டமிடலில் 30 நாட்கள் ஆகும். 

பணி இத்துடன் முடிந்து விடாது. அவர்கள் எவ்வாறு மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்கள் என்பதையும் ஆய்வு செய்து அவர்களுக்கு இடத்துக்கு தக்கபடி ஆலோசனைகள் வழங்க வேண்டும். அவர்கள் வாரம் இருமுறை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதை உறுதி செய்ய வேண்டும். 

Wednesday 26 April 2023

வண்ணமயம்

 

வீட்டில் வண்ணப்பூச்சுப் பணி நடந்து கொண்டிருக்கிறது. நம் நாட்டில் ஆண்டுக்கொரு முறை வீடுகளுக்கு சுண்ணாம்பு பூசும் வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. கிளிஞ்சல் சுண்ணாம்பினை வீட்டுச் சுவர்களில் தை மாதத்தில் பூசுவார்கள். மழைக்காலமும் குளிர்காலமும் முடிந்து சூரியன் உத்வேகம் பெறும் வானியல் மாற்றத்தின் காலகட்டத்தில் வீடுகளின் சுவர்களில் சுண்ணாம்பு பூசுவார்கள். சுண்ணாம்பு கடலிலிருந்து அதன் மூலப்பொருளான கிளிஞ்சலிலிருந்து உற்பத்தி செய்யப்படுவது. கடலுக்கு தூய்மையான இயல்பு உண்டு. அதன் உப்புத்தன்மை அனைத்தையும் உண்டு செரிக்கும் தன்மை கொண்டது. அவ்வாறான கடலில் உற்பத்தியாகும் கிளிஞ்சலுக்கும் தனது சூழலைத் தூய்மைப்படுத்தும் தன்மை அதன் இயல்பிலேயே இருக்கிறது. தங்கள் வீடுகளில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் மங்கலத்தையும் விரும்பும் மக்கள் தங்கள் வாழிடம் புத்துணர்வுடன் இருக்க தை மாதத்தில் வீட்டுச் சுவர்களில் சுண்ணாம்பு பூசுவார்கள். 

கான்கிரீட் கட்டிடங்களின் சுவர்களில் கூட சுண்ணாம்பு பூசும் வழக்கம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இருந்தது. அதன் பின்னர் ‘’செம்’’ எனப்படும் சிமெண்ட் பெயிண்ட்கள் சந்தைக்கு வந்தன. அவற்றிலும் சுண்ணாம்பு மூலப்பொருள். ஆனால் கடல் கிளிஞ்சல் சுண்ணாம்பு அல்ல. பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் சிமெண்ட்டுக்கான மூலப்பொருளான சுண்ணாம்பு. நேரடியாக அதனைப் பயன்படுத்த முடியாது ; சில வேதிமாற்றங்களுக்கு உட்படுத்தி வண்ணப்பொடியாக மாற்ற வேண்டும். 

இப்போது சந்தையை ‘’எமல்ஷன்’’ பெயிண்ட்கள் ஆக்கிரமித்துள்ளன. அவை முழுக்க முழுக்க செயற்கையான வேதிப்பொருட்களால் ஆனவை. ‘’காரீயம்’’ எனப்படும் ‘’லெட்’’ என்னும் உலோகமே அவற்றின் முக்கியமான அடிப்படைப் பொருள். காரீயம் மனித சுவாசத்துக்கும் மனித நுரையீரலுக்கும் பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியது. எனது நண்பர் ஒருவர் வீட்டில் சில மாதங்களுக்கு முன்னால் பெயிண்டிங் வேலை நடைபெற்றது. அது மழைக்காலம். பெயிண்ட் காயும் நேரம் கூடுதலாக தேவைப்படும். மழைக்காலம் என்பதால் வீட்டின் உள்ளே வேலை செய்திருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் நண்பரின் பெற்றோர் இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு விட்டது. இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் நிலை உண்டாகி விட்டது. 

சில மாதங்களுக்கு முன்னால், காதி இந்தியா நிறுவனம் மாட்டுச்சாணத்தை அடிப்படையாய்க் கொண்ட ‘’எமல்ஷன்’’ பெயிண்ட் உற்பத்தி செய்துள்ளது என்ற செய்தியை அறிந்தேன். இல்லத்துக்கு வண்ணம் பூசினால் அந்த பெயிண்டைப் பயன்படுத்த வேண்டும் என முடிவெடுத்தேன். சாணத்தால் வீட்டை மெழுகுதல், வீட்டுச் சுவர்களை மெழுகுதல் என்னும் வழக்கம் இன்றளவும் கிராமங்களில் உள்ள நடைமுறை. பசுஞ்சாணம், கோநீர், நெய், தயிர், பால் என பசுவிலிருந்து கிடைக்கும் இந்த ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘’பஞ்சகவ்யா’’ ஆலயங்களின் இறைத் திருமேனிகளைத் தூய்மைப்படுத்த பயன்படுவது. மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஆதரிக்கும் விதத்திலும் கிராமப் பொருளாதாரத்தில் மேம்பாடைக் கொண்டு வர பல ஆண்டுகாலமாக செயலாற்றி வரும் மத்திய அரசின் ஆதரவைப் பெற்ற காதி இந்தியா நிறுவனத்தின் படைப்பை ஆதரிக்கும் விதத்திலும் ‘’பிரகிருதிக்’’ எனப் பெயர் கொண்ட ‘’எமல்ஷன்’’ பெயிண்டால் வீட்டில் வண்ணம் தீட்டினேன். 

பெயிண்டர்கள் என்னிடம் கூறினர். ‘’ சார் ! எமல்ஷன் பெயிண்ட் 20 லிட்டர் வாலியை திறக்கும் போதே ‘’குப்’’ன்னு கெமிக்கல் நெடி அடிக்கும். அந்த நெடியோட பெயிண்ட் அடிக்கும் போது மூச்சுத்திணறலே வந்துடும் போல சுவாசம் இருக்கும். ஆனா இந்த பெயிண்ட்ல கெமிக்கல் நெடி சுத்தமா இல்ல சார். கவரேஜ் ஏரியாவும் நல்லா இருக்கு. நல்லா இருக்கு சார் இந்த பெயிண்ட்’’

Monday 24 April 2023

காய்ச்சலும் பாய்ச்சலும்

பயிர் சிறப்பாக வளர பயிரின் வேருக்கு தண்ணீர் ‘’காய்ச்சலும் பாய்ச்சலும்’’ என்ற அடிப்படையில் - பாணியில் விடப்பட வேண்டும். அதாவது பயிர் வளர எவ்வளவு நீர் தேவையோ அந்த அளவு நீரே செடியைச் சுற்றி இடப்பட வேண்டும். அவ்வாறு விடப்படும் நீர் மண்ணுக்குள் சென்று பயிரின் வேர்ப்பகுதிகளில் ஈரத்தை நிலைநிறுத்தும். மேல்மண் சூரிய ஒளியால் காயத் துவங்கும். ஈரமான வேர்ப்பரப்பிலிருந்து காய்ந்த மேல்பரப்புக்கு ஈரம் வந்து வெயிலில் ஆவியாகும். பயிரின் வேர் தண்டுக்கும் இலைகளுக்கும் நீரைக் கடத்தி பயிரை வளரச் செய்யும். பயிருடன் களைகளும் வளரும். அந்த களைகளை பிடுங்கி வேரை முறித்து நீக்கி விட்டு தாள்களை பயிரைச் சுற்றி போட்டு விட வேண்டும். அவ்வா\று செய்தால் மேல்மண் சூரிய ஒளியால் உடனடியாகக் காயாது. சில தினங்களுக்கு அந்த களை மூடாக்கு ஈரத்தைத் தக்கவைக்கும். இந்த காய்ச்சலும் பாய்ச்சலும் முறை எல்லா பயிருக்குமே மிகவும் உகந்தது. 

‘’காவிரி போற்றுதும்’’ தேக்கில் அதிக கவனம் செலுத்துவதால் தேக்குச் செடிகளுக்கு குடத்தில் நீர் விடுமாறு கேட்டுக் கொள்வேன். வாரம் இருமுறை அரைக்குடம் தண்ணீர் விட்டால் கூட போதுமானது. 

காவிரி வடிநிலத்தின் விவசாயிகள் மோட்டாரைப் போட்டு விட்டு வயல் முழுதும் நீரைக் கட்டித் தேக்கும் விவசாயத்துக்குப் பழகியிருக்கிறார்கள். அதன் மறுபக்கமாக மரப்பயிர்கள் தண்ணீர் இன்றி தானாக வளரும் என்றும் எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு கன்றுக்கு வாரம் இருமுறை அரைக்குடம் தண்ணீர் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். 

காய்ச்சல் இருக்கும் போது கன்று நீருக்கு ஏங்கும். நீர் ஊற்றப்பட்டதும் நீரை உண்டு செடி வேகமாக வளரும். நீரைத் தேடி வேரும் மண்ணை அகழ்ந்து சென்று வேர்பிடிக்கும். 

எனக்குத் தொழில் விவசாயம் இல்லை. எனினும் விவசாயத்தை முழு நேர - முழு வாழ்க்கைப் பணியாக செய்யும் விவசாயிகளிடம் அவர்கள் நோக்கத் தவறும் செயலில் விடுபடும் விஷயங்களை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. 

காய்ச்சலும் பாய்ச்சலும் தானே விவசாயம். அதுதானே வாழ்க்கையும்.  

Monday 17 April 2023

கள ஆய்வு

 இன்று செயல் புரியும் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். செல்லும் வழியில் பள்ளி சென்று திரும்பும் கிராமத்துச் சிறுவர்கள் ‘’லிஃப்ட்’’ கேட்டு வண்டியை நிறுத்தினர். மாலை நேரத்தில் அங்கு செல்லும் போது வீடு திரும்பும் சிறுவர்கள் எதிர்படுவார்கள். அவர்களை கிராமத்தில் கொண்டு சேர்ப்பேன். இந்த சிறுவர்களைப் பார்த்த போது கிராமத்துச் சிறுவர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்க வேண்டுமே என்ற எண்ணம் ஏற்பட்டது. எப்போதும் மனதில் இருக்கும் எண்ணம் தான். இருப்பினும் இந்த குழந்தைகளைக் காணும் போது அந்த எண்ணம் மேலும் வலிமை அடைந்தது. நல்ல திட்டம். உபயோகமான திட்டம் . என்றாலும் பட்ஜெட் ‘’ஹெவி’’. நிதிப் பற்றாக்குறையால் நிலுவையில் உள்ளது. 

கிராமவாசி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சென்னை சென்று மருத்துவம் பார்த்து திரும்பியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அவரைச் சந்தித்து நலம் விசாரிக்க விரும்பினேன். வயதில் மூத்தவர். ஜூரம் என்று ஒரு மருத்துவரைக் காண சென்றிருக்கிறார். அவர் அளித்த ஆண்டிபயாடிக் மருந்துகள் மிக வீரியமானவை. இளைஞர்களுக்கும் நடுத்தர வயதினருக்கும் அளிக்கப்பட வேண்டியவை. வயதில் மூத்தவரான அவருக்கு அந்த மருந்து பரிந்துரைக்கப்பட்டதால் அவரது குடல் பாதித்திருக்கிறது. அதனை சரி செய்ய சென்னை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவரைப் பார்த்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். 

ஆறு மாதங்களுக்கு முன் விஜயதசமி அன்று ஒரு விவசாயியின் நிலத்தில் தேக்கு மரக்கன்றுகளை நட்டோம். தண்ணீர் ஊற்ற வேண்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அவரிடம் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தேன். ஒரு மாயக் கணத்தில் தண்ணீர் முறையாகக் கொடுத்தால் கன்றின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டார். வாரம் ஒருநாள் முறையாக இப்போது தண்ணீர் பாய்ச்சி விடுகிறார். அந்த வயலைச் சென்று பார்த்தேன். கன்றுகள் சிறப்பாக வளர்ந்திருந்தன. 

இரண்டு ஆண்டுகள் முன் கன்று கொடுத்தவரின் வயலில் இப்போது தேக்கு மரங்கள் இருபது அடி உயரம் சென்றுள்ளது. அதனையும் பார்வையிட்டேன். 

அந்த ஊரில் உள்ள இளைஞர் ஒருவர் தனது சகோதரியின் ஒரு ஏக்கர் நிலத்தில் தேக்கு பயிரிட வேண்டும் என்று சொன்னார். வயலைச் சென்று பார்ப்போம் என்று சொன்னேன். ஊரில் உள்ள விஷ்ணு ஆலயத்தைச் சுற்றி ஒரு நந்தவனம் அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தை என்னிடம் கூறினார். தேவையான மரக்கன்றுகளை அளிப்பதாக உறுதி அளித்தேன். 

சென்ற ஆண்டு குடியரசு தினத்தை ஒட்டி அளித்த நந்தியாவட்டை கன்றுகள் அனைத்தும் சிறப்பாக வளர்ந்து சிறப்பாக பூக்கின்றன. அவற்றை ஒவ்வொரு முறை காணும் போதும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

Sunday 16 April 2023

சமூக மாற்றம்

எனக்கு இந்தியா என்பது விதவிதமான நிலங்களின் விதவிதமான வாழ்க்கைமுறைகளின் தொகுதி. அவை அனைத்தையும் இணைக்கும் சரடாக இந்தியப் பண்பாடு இருக்கிறது என்பது எனது முதல் புரிதல். இந்த நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளாக மேலாக இந்த பண்பாடு நிலைபெற்றுள்ளது ; இந்தியர்களின் அன்றாட விழுமியங்கள் இந்த பண்பாட்டிலிருந்து முளைத்தெழுந்தவை. இயற்கையை தெய்வ ரூபமாகக் காணுதல், உணவு உற்பத்தியைப் பெருக்குதல், விருந்தினருக்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகிய கூறுகள் நாடு முழுமைக்கும் பொதுவாக உள்ளன என்பது எனது பார்வை. இன்னும் வெவ்வேறு கோணங்களில் மேலும் பல பார்வைகள் இருக்கக்கூடும். அவை அனைத்தும் இணைந்ததே இந்தியப் பண்பாடு. 

இந்தியாவின் வரலாற்றைப் பயிலும் எவராலும் இந்திய நிலம் ஐயாயிரம் ஆண்டுகளாக வணிகத்தாலும் வணிகப் பாதைகளாலும் இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஐயாயிரம் ஆண்டுகளாகவே வங்காளம் துறைமுகங்களால் ஆனது. பல நாட்டு வணிகர்கள் வங்காளம் நோக்கி வந்திருக்கிறார்கள். பூம்புகாரும் கொற்கையும் பல நாட்டு வணிகர் வர்த்தகம் மேற்கொண்ட மாநகரங்கள். துவாரகை உலகெங்கிலும் உள்ள வர்த்தகர்களை தன்னை நோக்கி ஈர்த்த துறைமுக மாநகரம். வணிகப்பாதைகளுக்காகவே சாலைகள் இந்திய மண்ணில் பெரிதாக எழுந்தன. வனங்கள் நிறைந்த மண் என்பதால் ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்துக்குச் செல்வதற்கு சுற்றிச் செல்லும் நீண்ட பாதைகள் அமையப் பெற்றிருக்கின்றன. 

( தமிழறிஞர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் ’’வேங்கடம் முதல் குமரி வரை’’ என்ற நூலை எழுதினார். பின்னர் ’’வேங்கடத்துக்கு அப்பால்’’ என்ற நூலை எழுதினார். தமிழகத் திருத்தலங்களுக்கும் வட இந்தியத் தலங்களும் நேரில் சென்று அவற்றைப் பற்றி தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தி எழுதப்பட்ட நூல்கள் அவை. இந்த நூல்கள் 1960களில் எழுதப்பட்டவை. அதில் வட இந்தியாவில் இருக்கும் சில திருத்தலங்களுக்கு செல்லும் மார்க்கம் பற்றி அவர் எழுதியதை வாசித்த போது நான் திகைத்துப் போனேன். அதாவது அவர் அந்நூலை எழுதிய போது இப்போது இருக்கும் சாலை மார்க்கங்கள் அப்போது இருந்திருக்கவில்லை. ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு பல ஊர்களைச் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியதாயிருந்திருக்கிறது. 

தமிழகத்தைப் பொறுத்து ஒரு உதாரணம் கூற முடியும். தமிழகம் 960கி.மீ நீளம் கொண்ட கடற்கரையைக் கொண்டது. அந்த நீளம் நெடுக ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு மீனவ கிராமம் என்ற முறையில் மீனவர்கள் கடற்கரையை ஒட்டி வாழ்கிறார்கள். ஆனால் அந்த கிராமங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு என சாலை மார்க்கமான தொடர்பைக் கொண்டிருக்கவில்லை. 1990ம் ஆண்டுக்குப் பின்னரே சென்னையும் புதுச்சேரியும் கிழக்குக் கடற்கரை சாலையால் இணைக்கப்பட்டன. முன்னரும் அந்த சாலை இருந்தது. மிகச் சிறிய சின்னஞ்சிறு சாலையாக இருந்தது. பட்டுக்கோட்டையிலிருந்து இராமேஸ்வரம் வரையான கடற்கரைச் சாலைக்கு ‘’சேது ரஸ்தா ‘’ என்று பெயர். தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர்களால் அமைக்கப்பட்ட சாலை. 2004ம் ஆண்டுக்குப் பின்னரே பெரிய சாலையாக அமைக்கப்பட்டு நாகப்பட்டினம் கிழக்குக் கடற்கரை சாலையுடன் இணைக்கப்பட்டது. 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இப்போதும் பெரும் சாலைகள் அமைக்கும் பணிகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன )

சாலைகள் இல்லையென்றாலும் கூட எங்கெல்லாம் மக்கள் சமூகங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் மானுடம் மேல் மானுட நலன் மேல் அக்கறை கொண்ட துறவிகள் சென்று மெய்மையின் சொற்களை இந்திய நிலமெங்கும் இருக்கும் மக்களுக்கு உரைத்திருக்கிறார்கள் என்பதும் அதுவே இந்தியப் பண்பாடு என உருவாகி நிலைபெற்று இருக்கிறது என்பதும் பெரும் வியப்புக்குரிய ஒன்று. 

லௌகிகம் பேரலையென எழுந்து மானுட சமூகத்தை நோக்கி பெருவேகத்துடன் அணுகும் காலகட்டம் இது. கோடிக்கணக்கான மக்கள் நோய்மையால் அவதியுறுகின்றனர். அவர்களின் நோய்மையை சில நூறு பேர் காசாக்கிக் கொள்கின்றனர். இன்னும் உணவுத் தேவை முழுமையாகப் பூர்த்தியாகாத மக்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். உலகின் ஒரு பகுதிக்கு அதிக அளவிலான உணவு உண்பதால் ஏற்படும் மிகைப் பருமன் தீர்க்க முடியாத சிக்கலாக இருக்கிறது. மெல்லக் கொல்லும் நஞ்சை உணவாகப் புசிக்கிறனர் மக்கள். 

விஷயங்களை மேலான விதத்தில் புரிந்து கொள்வதற்கு மக்களுக்கு எவ்வகையிலெல்லாம் உதவ முடியுமோ அவ்விதங்களிலெல்லாம் உதவ வேண்டும். சமூக மாற்றம் அவ்வாறே நிகழும். 

Friday 14 April 2023

தொடக்கம்

இந்திய மரபு அறுபது ஆண்டுகள் என்பதை ஒரு வட்டம் என உருவகிக்கிறது. நிலவின் சூரியனின் இயக்கத்தை அவதானித்து அதன் படி அமைக்கப்பட்ட நாட்காட்டிகள் இந்திய நிலத்தில் சிறு சிறு வேறுபாடுகளுடன் அமைந்துள்ளன. யுகாதி, சித்திரை, வைசாகி ஆகிய புது வருடங்கள் ஒரே பருவத்தில் நிகழ்பவை. 

வாழ்க்கை ஒரு வட்டம். நாம் துவங்கிய இடத்துக்கு மீண்டும் ஒருமுறை வர வாய்ப்பு அமையும். தொடங்கிய இடத்துக்கு மீண்டும் வரும் போது நிறைவு இருக்குமாயின் அடுத்த சுற்று என்பதும் அடுத்தடுத்த சுற்றுக்கள் என்பவையும் இனிமையானவையே. துவங்கிய இடத்துக்கு மீண்டும் வரும் போது நிறைவின்மை எய்யப்படவில்லை எனில் நமது முயற்சிகளையும் உபாயங்களையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

நமது நாட்காட்டிகள் பிரபவ , விபவ, சுக்ல எனத் தொடங்கி ரக்தாட்சி , குரோதன, அட்சய என அறுபது ஆண்டுகளைக் கொண்டவை. 

ஒரு மானுடனுக்கு நல்முயற்சி இருக்குமெனில் அறுபது ஆண்டுகளில் சிறப்பான நிலையை அடைய முடியும். சிறப்பான நிலை என இங்கு குறிப்பிடப்படுவது திருப்தியான நிலையே. தீவிரமான முயற்சி இருக்குமென்றால் அறுபது ஆண்டுகளில் ஐந்தில் ஒரு பாகமான பன்னிரண்டு ஆண்டுகளிலேயே கூட அந்நிலையை எட்டி விட முடியும். 

இந்திய மரபின் கதைகளில் 12, 13, 14 ஆகிய ஆண்டுகள் சிறப்பிடம் பெறுபவை. மகாமகம் மற்றும் கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசமும் ஒரு ஆண்டு அக்ஞாதவாசமும் என நாட்டை விட்டு வெளியேறி இருந்தனர். ரகுகுல ராமன் ஈரேழு பதினான்கு ஆண்டுகள் வனமேகினான். 

மானுடம் ஒட்டுமொத்தமாக நலம் பெறும் நாள் வரும் என்று என் மனதில் படுகிறது. 

இன்று காலை மயிலாடுதுறை வள்ளலார் கோவில் என்ற சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டேன். சிவன் தக்‌ஷணாமூர்த்தியாகிய அமர்ந்துள்ள தலங்களில் சிறப்பு வாய்ந்தது. பணிபவர்களுக்கு அருளை அள்ளி அள்ளி வழங்குபவர் என்பதால் இங்கு சிவன் வள்ளல் எனப்படுகிறார். வள்ளலார் என்று மேன்மையுடன் அழைக்கப்படுகிறார். 

மக்கள் காலையிலேயே புதிய ஆண்டுத் தொடக்கத்தை ஆலயத்தில் தீபமேற்றி கொண்டாடிக் கொண்டிருந்தனர். அந்த சூழலில் அங்கிருந்தது நிறைவளித்தது. 




  

Thursday 13 April 2023

சுழற்சி

எனது இலக்கிய நண்பர் ஒருவர் ஊருக்கு வந்திருந்தார். அவரது பூர்வீகம் ஊருக்குப் பக்கத்தில். அங்கே அவரது வீடு இருக்கிறது. சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அவர் எனக்கு 20 ஆண்டுகளாக நண்பர். 20 ஆண்டுகளுக்கு முன்னால் நான் அவரை முதல் முறையாக சந்தித்தேன். சந்தித்த முதல் நாளிலிருந்து இன்று வரை அந்த நட்பு தொடர்கிறது. நான் சந்தித்த போது அவருக்கு 50 வயது இருந்திருக்கும். எனக்கு அப்போது 22 வயது. இலக்கியம் வாசிப்பவர் என்பதால் வாசித்த புத்தகங்களைக் குறித்தும் இலக்கியப் படைப்பாளிகள் குறித்தும் உரையாடுவது வழக்கம்.  

எனக்கு இலக்கியத்துடன் கூட வரலாறு, சமூகவியல், பண்பாடு ஆகிய விஷயங்களிலும் ஆர்வம் உண்டு. நான் எந்த விஷயத்தையும் வரலாற்றின் பெரும் பரப்பில் வைத்து மதிப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். இந்திய மரபு வகுத்தளித்திருக்கும் கருவிகளைத் துணையாகக் கொண்டு சிந்திப்பவன். 

அவருடைய சிந்தனை முறையும் வாழ்க்கை நோக்கும் ஐரோப்பிய அடிப்படை கொண்டது. 

எங்கள் இருவருக்கும் வேறு வேறு நோக்கு இருப்பினும் பரஸ்பரம் மிகுந்த அன்பும் பிரியமும் எங்களுக்குள் உண்டு. நான் பழகும் எல்லாரிடமும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று எண்ணுபவன். 

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் மாலை நேரங்களில் இலக்கியம் பேசியவாறே காலாற உலவுவோம். அன்றைய தினம் என் மனதில் நிறைந்திருக்கும் விஷயம் குறித்து பேசுவேன். ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் ஏதோ ஒரு விஷயம் நிறைந்திருந்திருக்கிறது என்பதை இப்போதும் எண்ணிப் பார்த்தால் உணர முடிகிறது. 

சில நாட்கள் முன்னால் ஊருக்கு வந்திருந்தார். நண்பருக்கு இப்போது 70 வயது. உடலும் மனமும் சற்றே சோர்வுற்றிருக்கின்றன என்பதை அறிய முடிந்தது. 

‘’வாக்கிங் ஸ்டிக்’’ யூஸ் பண்ணுங்க சார்’’

‘’நடக்கும் போது சின்னதா ஒரு பேலன்ஸ் மிஸ் ஆகுது . அவ்வளவுதான். நடக்க முடியாத அளவு இன்னும் வயசாகலை’’ 

‘’சார் வாக்கிங் ஸ்டிக்குக்கும் வயசுக்கும் சம்பந்தம் இல்லை சார். உங்க உடம்பு எடையை கால்கள் முழுமையாக் பேலன்ஸ் செய்யலை. ஸ்டிக் யூஸ் பண்ணா உங்க உடம்பு வெயிட்டோட பெரும்பகுதியை கை வழியா ஸ்டிக்குக்குக் கடத்தி பூமிக்குக் கொண்டு போய்டுவீங்க. உங்களோட இயல்பான வேகம் உங்களுக்கு திரும்ப கிடைச்சுடும். இன்னும் வேகம் கூடக்கூட செய்யும்.’’

அவர் எனது நோக்கில் திருப்தியடையவில்லை. அவர் மனம் வாக்கிங் ஸ்டிக்கை வயதுடன் தொடர்புபடுத்தியே வைத்திருந்தது. 

வாசிப்பு சவாலில் ஆர்வமாக பங்கேற்று தினமும் நூல்களை வாசிப்பது குறித்து சொன்னேன் ; 20 ஆண்டுகளுக்கு முன் புத்தகங்கள் குறித்து பேசும் அதே உற்சாகத்துடன். 

Monday 10 April 2023

நூறு நாட்கள்

 ஜனவரி 31 பிப்ரவரி 28 மார்ச் 31 இப்போது ஏப்ரலில் 10 தேதி என ‘’1111 மணி நேர வாசிப்பு ‘’ நூறு நாட்களை எட்டியுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணி நேரம் வாசித்திருக்கிறேன். நூறு நாட்களிலும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் வாசிக்க வேண்டிய ஒரு மணி நேரம் என்ற இலக்கை விடுபடல் இன்றி வாசித்திருக்கிறேன். சில நாட்களில் அதிகபட்சமாக ஒன்பது மணி நேரம் வரை வாசிப்பு நீண்டிருக்கிறது. 

ஒரு தமிழ் வாசகனுக்கு தமிழ் இரண்டாயிரம் ஆண்டு தொன்மையான பிரதியிலிருந்து இன்று எழுதப்படும் பிரதி வரை என மிக நீண்ட காலபரப்பை வழங்குகிறது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு ; ஒவ்வொரு தனித்தன்மை. சமஸ்கிருதம் தமிழ் அளவுக்கே தொன்மையான மொழி. இந்திய நிலத்தின் எல்லா மொழிகளுடனும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் உரையாடலில் உள்ள மொழி. ஆங்கில மொழி அறிந்த வாசகனுக்கு உலகின் எல்லா மொழிகளிலும் எழுதப்பட்ட நூல்களை ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அறிவுச் செயல்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எந்த மொழி மீதும் துவேஷம் கொள்ள மாட்டார்கள். 

இந்த நூறு நாட்கள் எனக்கு என்னுடைய பால பருவத்தின் வாசிப்பை நினைவில் கொண்டு வந்தன. என்னுடைய ஐந்து வயதில் நான் ‘’தினமணி’’ செய்தித்தாளை எழுத்துக் கூட்டி வாசிப்பேன். மாலை பள்ளி சென்று வீடு திரும்பிய பின் செய்தித்தாளை சோஃபாவில் அமர்ந்து வாசிப்பேன். வீட்டுக்கு வரும் உறவினர்கள் அதனை ஆர்வத்துடன் பார்ப்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. வீட்டில் பூந்தளிர் கோகுலம் ஆகிய குழந்தைகள் இதழ்கள் வாங்குவார்கள். அவற்றை முழுமையாக வாசிப்பேன். வாசித்த பழைய இதழ்களை மீண்டும் மீண்டும் வாசிப்பேன். ‘’வாண்டு மாமா’’வின் எழுத்துக்களை மிகவும் விரும்புவேன். பல முக மன்னன் ஜோ, கபீஷ் ஆகிய சித்திரக் கதைகளும் அதன் கதாபாத்திரங்களும் என்னால் மிக அணுக்கமாக உணரப்பட்டன.

என்னுடைய பத்து வயதில் ‘’பொன்னியின் செல்வன்’’ வாசித்தேன். பைண்டு செய்யப்பட்ட நூலின் ஐந்து பாகங்களும் ஒருசேர என் கைக்கு வந்தன. கல்கியில் தொடராக வந்ததை ஒவ்வொரு வாரமும் எடுத்து வைத்து பைண்டு செய்யப்பட்ட தொகுப்பு. ‘’ஆதி அந்தமில்லாத காலவெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி பயணிக்குமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்’’ என்னும் அழைப்புடன் கல்கி தனது நாவலைத் துவக்கியிருப்பார். சிறுவனான நான் அந்த அழைப்பை ஏற்று கல்கியின் பிரதிக்குள் நுழைந்தேன். சோழர் ஆட்சி செய்த மண், காவிரியும் அரசலாறும், வங்கக் கடல், குழகர் கோவில், கோடிக்கரை கலங்கரை விளக்கம் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சென்று வாழ்ந்து கொண்டிருந்தேன். வந்தியத்தேவனும் அவன் குதிரையும் மறக்க இயலாமல் மனதில் நிறைந்தார்கள். அந்த பைண்டு தொகுப்பு என்னிடம் நீண்ட நாட்கள் இருந்தது. பதினைந்து வயதுக்குள் ‘’பொன்னியின் செல்வனை’’  15 முறையாவது முழுமையாக வாசித்திருக்கிறேன். எல்லா காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு விடுமுறையிலும் ஒருமுறை வாசிப்பேன். சாதாரண நாட்களுலும் வாசிப்பது உண்டு. அந்த காலகட்டத்தில் பலவிதமான நூல்களை வாசிக்கத் தொடங்கினேன். 

பிரதியின் மீது மனம் முழுமையாக ஈடுபடுவதே நல்வாசிப்பு. அவ்வாறு வாசிக்கும் மனம் எப்போதும் இளமையுடன் இருக்கிறது. 

இந்த காலகட்டம் கடுமையான பணிச்சுமையால் நிறைந்திருக்கிறது. தொழில் சார்ந்த பணிகள் நேரத்தை மிக அதிகமாக எடுத்துக் கொள்கின்றன. ஒரு நாளின் லௌகிகப் பணிகளுக்கான பொழுது என்பது காலை 10 மணிக்குத் துவங்கி மாலை 6 மணி வரையே. தொழில் சார்ந்த பணிகள் அந்த நேரத்துக்கு உட்பட்டவையே. வாசிப்பை காலை பொழுது புலர்ந்ததிலிருந்து இரண்டு மணி நேரமும் இரவு உறங்குவதற்கு முன் இரண்டு மணி நேரமும் என வகுத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் புத்தக வாசிப்புக்குக் கொடுக்க முடியும். 

நூறு நாட்கள் நிறைவளிக்கின்றன. மூன்றில் இரு பகுதி இன்னும் மீதம் இருக்கிறது. அவற்றை மேலும் நிறைவான விதத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். 

Thursday 6 April 2023

பயிற்சி

2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியிலிருந்து ‘’ஆயிரம் மணி நேர வாசிப்பு’’ நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன். தினமும் ஒரு மணி நேரம் வாசிக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் வாசிக்கலாம்.  

பயிற்சிகள் அனைத்துமே எளியவையே. அவை பயிற்சியாளர்களின் உறுதியையும் நிலைத்தன்மையையும் சோதிக்கின்றன. பயிலப் பயில பயிற்சியாளனை வலிமைப்படுத்துகின்றன. நிகழ்வு நூறு நாட்களைத் தொட இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்ற குறைந்தபட்ச வாசிப்பை எல்லா நாட்களிலும் நிகழ்த்தியிருக்கிறேன். பல நாட்கள் ஆறு மணி நேரத்துக்கு மேல் வாசித்திருக்கிறேன். குறைந்தபட்ச ஒரு மணி நேர வாசிப்பும் அதிகபட்ச வாசிப்புகளும் இணைத்து கணக்கிடப்படுகையில் குறிப்பிடத்தக்க வாசிப்பு சராசரி உருவாகியுள்ளது. இந்த நூறு நாட்கள் ஒரு அடித்தளம். இதனைக் கொண்டு அடுத்த நூறு நாட்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். 

இந்த பயிற்சியை நிமித்தமாகக் கொண்டு நான் என்னைச் சூழ்ந்திருக்கும் பல விஷயங்களை அவதானித்தேன். லௌகிகப் பணிகள் பெருமளவில் நிறைந்திருக்கும் காலகட்டம் இது. உத்யோகம் சார்ந்த பணிகள் நாளின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்கின்றன. எதிர்பார்ப்புகள் , காலதாமதங்கள் என மனைவணிகத்துக்கே உரிய விஷயங்கள். லௌகிகம் உருவாக்கும் மனநிலை வாசிப்பில் எதிரொலிக்கும். சற்று ஆசுவாசமாக இருக்கும் நாளில் அதிக நேரம் வாசிக்க முடியும். பணி அழுத்தம் அதிகமாக இருந்தால் குறைந்தபட்ச நேரம் மட்டுமே வாசிக்க முடியும். 

வாசிக்கும் நூல்கள் உருவாக்கும் மன எழுச்சிகளுக்கும் வாசிப்பு நேரத்தை தீர்மானிக்கும். ஒரு நூலில் ஒரு சொல் உருவாக்கும் பரவசம் இருக்கும் இடத்திலிருந்து கிளம்பி ஒரு சிறு பயணம் செய்யத் தூண்டும். இந்த நாட்களில் , அவ்வாறும் நிகழ்ந்தது. 

இந்த பயிற்சி உண்மையில் வாசிப்பையும் லௌகிகப்பணிகளையும் தனித்தனியே அணுக பலவிதமான உபகரணங்களை அளித்துள்ளது என்பது சிறப்பானது.  

Tuesday 4 April 2023

கோடைமழை

நேற்று இங்கே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நல்ல மழை பொழிந்தது. மழையின் ஒலி கேட்கத் துவங்கியதும் மனம் செயல் புரியும் கிராமத்தில் இருக்கும் தேக்கு மரங்களுக்கு போதிய ஊட்டம் கிடைக்கும் என்ற எண்ணத் துவங்கியது. விவசாயியின் மனநிலை. விவசாயி பயிர் வளர்க்கும் போது குறிப்பிட்ட சில நாட்கள் மழை இல்லாமல் இருப்பது அதிக மகசூலுக்கு உதவி செய்யும். நெற்பயிர் பூ வைக்கும் சமயத்தில் மழை பெய்தால் பூக்கள் உதிர்ந்து விடும் ; பூ கதிராக மாற வேண்டியது. ஆகவே அந்த சமயத்தில் மழை ஆபத்து. கதிர் முற்றியிருக்கும் நிலையில் மழை பெய்தால் பயிர் மண்ணில் சாய்ந்து விடும். எனவே இந்த இரு காலகட்டங்களிலும் மழை இல்லாமல் இருக்க வேண்டும். மரங்களுக்கு அப்படியில்லை ; எல்லா காலகட்டத்திலும் மழை மரங்களுக்குப் பயன்படும். குறிப்பாக தேக்குக்கு. மழை நீர் உடனே வடிந்து விடவும் வேண்டும். அதற்காகத்தான் மேட்டுப்பாத்தி முறையில் தேக்கு நடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.  

Sunday 2 April 2023

நண்பர் - மரங்கள்

25 ஆண்டுகளுக்குப் பின்னால் சந்தித்த நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது உரையாடல் மரங்கள் குறித்து திரும்பியது. நண்பர் நகரின் தென்பகுதியில் பிரதான சாலையை ஒட்டி உள்ள பகுதி ஒன்றில் இடம் வாங்கி வீடு கட்டியிருக்கிறார். அவரது வீட்டைச் சுற்றி இன்னும் பக்கத்து வீடுகள் கட்டப்படவில்லை. வாங்கிப் போட்ட மனைகளாகவே உள்ளன. அந்த மனை உரிமையாளர்கள் தங்கள் மனைகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்திருக்கிறார்கள். நண்பரின் வீட்டிலும் வேம்பு , கொய்யா, தென்னை ஆகிய மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு பெரிய விருட்சங்களாக உள்ளன. நண்பரின் தாயார் மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். வேப்ப மரம் வளரும் போது பக்கக் கிளைகளை கழித்து விட்டு நேராக வளர்ந்து மேலெழ அந்த மரத்துக்கு உதவியிருக்கிறார். மரம் உயர வளர்ந்து குறிப்பிட்ட உயரத்துக்குப் பின் கிளை பரப்பியிருக்கிறது. பக்கக் கிளைகள் இல்லாததால் மரம் பருத்திருக்கிறது. மூன்றடி சுற்றளவு இருக்கும். செயல் புரியும் கிராமங்களில் வளரும் தேக்கு மரங்கள் இந்த பருமன் கொண்டிருந்தால் அங்கிருக்கும் விவசாயிகளுக்கு பயன் தருமே என்ற எண்ணம் ஏற்பட்டது.  

மரங்களுக்கு நம் மனதில் சிறு இடம் கொடுத்தால் கூட அவை நம் மனமெங்கும் நிறைந்து விடும். மரங்கள் எப்போதும் நிழலையும் நம்பிக்கையையும் பலன்களையும் அளிப்பவை. அவற்றுக்குத் தீங்கிழைப்பவர்களுக்குக் கூட நன்மையே செய்பவை. தன்னை வெட்ட வருபவர்களுக்கும் அது நிழல் கொடுக்கிறது. அந்த தன்மையின் மூலம் அது மனித குலத்துக்கு ஒரு பாடத்தை நடத்துகிறது. 

நண்பர் வீட்டில் இருந்த வேப்பமரத்தை தழுவிக் கொண்டேன். என் உள்ளங்கைகளை அந்த மரத்தின் மேல் வைத்து சில நிமிடங்கள் நின்றேன். மனம் அமைதியடைந்தது. மரங்களுடனான உறவு என்பது ஆத்மார்த்தமானது. 

‘’14 மரங்கள்’’ விஷயத்தை நண்பரிடம் சொன்னேன். 

நேற்று மாலை ஊரிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கும் கடற்கரைக்கு நானும் நண்பரும் பைக்கில் சென்றோம். பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சந்தித்திருப்பதைக் கொண்டாடும் விதமாக. அப்போது ‘’14 மரங்கள்’’ வெட்டப்பட்ட வீதியையும் அதன் பின் அங்கே வைக்கப்பட்டு வளர்ந்திருக்கும் 100 மரங்களையும் நண்பருக்குக் காட்டினேன். 100 ம்ரங்களும் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன. பல மரங்கள் 15 அடி உயரம் சென்றுள்ளன. அவற்றைக் கண்டது பெரும் மகிழ்ச்சி தந்தது. 

எல்லா உயிர்களையும் தன்னில் ஒரு பாகமாக இணைத்துக் கொள்ளும் தன்மையை மரங்கள் தன் இயல்பாகக் கொண்டுள்ளன. மரங்களுக்கு அடியில் மண்ணில் மண்புழுக்கள் வாழ்கின்றன. மரத்தின் நிழலும் அவை உதிர்க்கும் இலைகளும் மண்புழுக்களுக்கு உணவாகிறது. பல்வேறு விதமான பூச்சிகள் மரக்கிளைகளில் இருப்பு கொள்கின்றன. மரப்பொந்துகளில் கீரிகள் வசிக்கின்றன. எண்ணற்ற பறவைகள் மரக்கிளைகளில் வாசம் செய்கின்றன. மரத்துடன் உணர்வுபூர்வமாக தொடர்புபடுத்திக் கொள்வதன் மூலம் இத்தனை உயிர்க்குலங்களுடனும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு உருவாகிறது. 

Saturday 1 April 2023

25 ஆண்டுகளுக்குப் பின்

நேற்று எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடன் பள்ளியில் பயின்ற நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதாவது யூ-டியூபில் எனது உரை ஒன்றைக் கேட்டதாகவும் அதன் பின் எனது வலைப்பூவைக் கண்டடைந்ததாகவும் எழுதியிருந்தார். மின்னஞ்சலில் பெயரைக் கண்டதும் அவர் யாரென நினைவுக்கு வந்து விட்டது. மின்னஞ்சலில் அவர் குறிப்பிட்டிருந்த அலைபேசி எண்ணுக்கு அழைத்துப் பேசினேன். ஊருக்கு வந்திருப்பதாகச் சொன்னார். அவருடைய இல்லம் எங்கே இருக்கிறது எனக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இன்று காலை சந்திப்பதாகக் கூறினேன்.  

நாங்கள் 11ம் வகுப்பும் 12ம் வகுப்பும் ஒரே பள்ளியில் படித்தோம். வேறு வேறு வகுப்புகள். 12ம் வகுப்பு முடித்த பின் அவர் குடும்பத்துடன் தஞ்சாவூர் சென்று விட்டார் என்ற தகவல் அ|றிந்திருந்தேன். அதன் பின் 25 ஆண்டுகள் தொடர்பு இல்லை. மீண்டும் இப்போது தான் சந்திக்கிறோம். அவர்கள் தஞ்சாவூரில் ஐந்து ஆண்டுகள் இருந்து விட்டு பின்னர் பெங்களூரில் பல ஆண்டுகள் வசித்து ஐந்து ஆண்டுகள் சென்னை வாசத்துக்குப் பின் சொந்த ஊரில் வீடு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள். 

’’சங்கிரகம்’’ என்ற தலைப்பில் வெளியான பதிவுகள் மூலம் நான் பொதுப் பணிகளில் ஈடுபட்டிருப்பது குறித்து அறிந்ததாகக் கூறி அச்செயல்களுக்கு தனது மகிழ்ச்சியை என்னிடம் தெரிவித்தார். ஒரு அமைப்பாக செயல்படுகிறீர்களா அமைப்பின் பெயர் என்ன என்று கேட்டார். 

‘காவிரி போற்றுதும்’’ என்று கூறினேன். 

அவர் சற்று யோசித்தார். நான் விளக்கம் கொடுத்தேன். 

‘’அதாவது , சிலப்பதிகாரம் ‘’திங்களைப் போற்றுதும்’’னு துவங்குது. திங்கள்னா நிலவு. இங்க நிலவு பெண்மையைக் குறிக்குது. சிலப்பதிகாரம் கண்ணகியோட சிறப்பை பேசுன நூல் தானே. மேலும் நீதி , அறம் ஆகிய விஷயங்களுக்கும் குறியீடா நிலவைச் சொல்றார். அதனால தான் திங்களைப் போற்றுதும்னு சிலப்பதிகாரத்தைத் துவங்குகிறார். நான் அதுல இருந்து போற்றுதும் ங்கற வார்த்தையை எடுத்துக்கிட்டன். அது முன்னாடி காவிரியை சேத்து ‘’காவிரி போற்றுதும்’’னு அமைப்புக்கு பேர் வச்சேன். ‘’ என்று சொன்னேன். 

நண்பரின் குடும்பத்தினர் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தேன். நண்பருக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதைச் சொன்னார். குழந்தையின் பெயர் என்ன என்று கேட்டேன். 

‘’சந்திரா’’ என்றார்.