Saturday 30 October 2021

இரவுப்பணி

இந்தியப் பாரம்பர்ய நாட்காட்டி ஆண்டுகள் மொத்தம் அறுபது என்கிறது. பிரபவ, விபவ, சுக்ல என்று தொடங்கி ரக்தாட்சி, குரோதன, அட்சய என ஒரு சுற்று நிறைவு பெறும் அறுபது ஆண்டுகள். விவசாயத்தில் விதைத்தல், நடவு, களை எடுத்தல், அறுவடை என செயல்கள் கிரமமாக நடப்பது போல இந்த ஆண்டுகள் அறுபதும் மீண்டும் மீண்டும் கிரமமாக நிகழும் என்பது ஒரு கோணம்; ஒரு வகையான புரிதல். இயற்கை இவ்வாறான ஒரு சுற்றை தன்னகத்தே கொண்டுள்ளது எனக் கொள்ளலாம். லௌகிகத்தின் பெரும்பாலான விஷயங்கள் இந்த சுற்றுக்குள் அடங்கும் என்றும் கொள்ளலாம். 

ஷேக்ஸ்பியர், ‘’ஆல் தி வேர்ல்டு இஸ் ஸ்டேஜ் ; வுமன் அன் மென் ஆர் மியர்லி பிளேயர்ஸ்; தே ஹேவ் தேர் எக்ஸிட்ஸ் அண்ட் தேர் எண்ட்ரண்ஸஸ்’’ என்கிறார். வெளியேறும் வழியான எக்ஸிட்டை ஏன் முன்னால் சொன்னார் என்பது யோசிக்க சுவாரசியமானது. இந்த கவிதையில் மகவாக, சிறுவனாக,இளைஞனாக, நடுத்தர வயதுக்காரனாக, முதியோனாக என மனித நாடகம் நகர்வதை கவித்துவமாகக் காட்டியிருப்பார்.  

ஆதி சங்கரரின் சுலோகம் ஒன்று குழந்தைப் பருவத்தில் பொம்மைகள் மீது ஆர்வம்; இளம் வயதில் செல்வத்தின் மீது ஆர்வம்; முதிய வயதில் வாழ்நாட்கள் மீது ஆர்வம்; மனிதனுக்கு எப்போது தான் ஆத்மன் மீது ஆர்வம் ஏற்படும் என்கிறது. 

பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால், நான் கட்டுமானத் தொழிலுக்கு வந்தேன். பட்டப் படிப்பு படித்து முடித்ததுமே சுயதொழில் மட்டுமே செய்வது என்ற முடிவுடன் இருந்தேன். எனது தந்தையும் கட்டுமானப் பொறியாளர். எல்லாத் தந்தைகளைப் போலவே அவரும் மகனின் திறமைகளை சற்று குறைத்தே மதிப்பிட்டார். வேறொரு விதத்தில் சொன்னால் சரியாக மதிப்பிட்டார். 

எனது தந்தையின் நண்பர் ஒருவர் வெளிநாடு செல்ல நேரிட்டதால் அவர் செய்ய இருந்த பணி ஒன்றை தந்தை செய்ய நேரிட்டது. எனது பணித்திறன் என்ன என்பதை அந்த பணி மூலம் அறிந்து விடலாம் என்பதால் அந்த பணியில் இணைந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு தந்தார். 

கட்டுமானத்துக்குத் தேவையான பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். நான் ஆர்வத்துடன் காலவாய்களுக்குச் சென்று விசாரிப்பேன். செங்கல்லின் தரத்தினைப் பரிசோதிப்பேன். கட்டுமான இடம் எங்கே என்று கூறி கல்லை அங்கே கொண்டு வந்து சேர்க்கச் சொல்வேன். அவர்கள் நாளும் நேரமும் சொல்வார்கள். நான் தந்தையிடமும் பணியாளர்களிடமும் அதனைத் தெரிவித்து விட்டு அந்த நேரத்தில் காத்திருப்பேன். பெரும்பாலும் செங்கல் வராது. காத்திருந்து விட்டு விசாரிக்க அங்கே சென்றால் ஏன் கல் அனுப்பவில்லை என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். தந்தை செங்கல்லுக்கு சொன்னால் நேரத்துக்கு வந்து நிற்கும். ஒரு சில முறைக்குப் பின்னால், அந்த நுட்பம் எனக்கு பிடிபட்டது. 

நான் இளைஞன் என்பதாலும் அவர்கள் சொல்வதை நான் நம்புவேன் என்பதாலும் என்னை கன்வின்ஸ் செய்ய முடியும் என்பதாலும் நான் ஆர்டர் கொடுத்த பின்னால் ஏதேனும் புது ஆர்டர் வந்தால் அதற்கு முன்னுரிமை கொடுத்து சப்ளை செய்து விடுவார்கள். என்னிடம் செவ்வாய்க்கிழமை என்று சொன்னால் வெள்ளிக்கிழமைதான் சப்ளை செய்வார்கள். அந்த விபரம் பிடிபட்ட பின்னர் நான் கறாராக சப்ளையர்களிடம் கூற ஆரம்பித்தேன் : நீங்க சொல்ற நாள்ல நேரத்துல சப்ளை செய்றதுன்னா செய்ங்க. உங்களால சொன்னபடி சப்ளை செய்ய முடியாம ரெண்டு நாள் கழிச்சு கொண்டு வந்தா நான் வண்டியை சைட்ல அன்லோட் பண்ண அனுமதிக்க மாட்டேன். திருப்பி அனுப்பிடுவேன். என் மேல வருத்தப்படாதீங்க. 

கட்டுமானம் என்பது பலவிதமான சுபாவமும் பழக்கமும் கொண்டவர்கள் சேர்ந்து செய்யும் தொழில். ஒரு சப்ளையர் ஆர்வமுள்ளவராக இருப்பார். ஆனால் அவருடைய டிரைவர் போதிய திறமை இல்லாதவர் என்றால் வண்டியை எங்காவது சேற்றில் இறக்கி சிக்க வைத்து விடுவார். வண்டியை சேற்றிலிருந்து வெளியே எடுக்க ஜே. சி. பி வாகனத்தைத் தேடி எடுத்து வர வேண்டும். அது நம் வேலை இல்லை ; டிரைவரின் வேலை என்று இருக்க முடியாது. சைட்டுக்கு செல்லும் வழியெல்லாம் சேறாக இருக்கிறது ; வண்டி மாட்டும். அந்த சைட் ஆர்டரை எடுக்காதீர்கள் என்று சப்ளையரிடம் தகவல் தெரிவித்து விடுவார்கள். 

கொள்முதல் விஷயங்களையும் முழுதாகப் பார்க்க வேண்டும். காலையிலிருந்து மாலை வரை நடக்கும் வேலையையும் மேற்பார்வையிட வேண்டும். வேலையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். என்னுடைய பணி காலை ஏழு மணிக்குத் துவங்கும். இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வருவேன். அன்றைய கணக்கை டைரியில் எழுதி வைத்து விட்டு குளிக்கச் செல்வேன். இரவு உணவு அருந்த பத்து மணி ஆகி விடும். நாள் முழுதுமான அசதியால்  கண்ணை மூடியவுடன் தூங்கி விடுவேன். விழித்துப் பார்த்தால் அடுத்த நாள் விடிந்திருக்கும். 

பம்பரம் என சுழன்று வேலை செய்து கொண்டிருந்ததால் எனக்கு முதல் வேலையிலேயே நல்ல பேர் உண்டானது. எனது தந்தை ‘’பரவாயில்லையே’’ என்று நினைக்கத் தொடங்கினார். எனது அபிப்ராயங்களை கேட்கவும் என்னுடன் விவாதிக்கவும் ஆரம்பித்தார். 

அந்த சைட்டில், பேஸ்மெண்ட் ஃபில்லிங் செய்ய சவுட்டு மண் தேவைப்பட்டது. அந்த ஏரியாவில் அப்போது சவுட்டு மண்ணுக்கு டிமாண்டு. யாருக்கும் கிடைக்கவில்லை. லோடுக்கு அதிக விலை கொடுக்க நினைத்தும் எங்கும் மெட்டீரியல் கிடைக்கவில்லை. யாருக்கும் கிடைக்காததைக் கொண்டு வர நான் முயல்கிறேன் என்று தந்தையிடம் அனுமதி கேட்டேன். ‘’சரி’’ என்றார். 

சைட்டிலிருந்து பத்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ஒரு ஊர். அங்கே நிலப்பரப்பே சவுட்டு மண்ணால் ஆனதாக இருக்கும். அது என் நினைவில் இருந்தது. அங்கு சென்றேன். அங்கே ஒரு நில உரிமையாளரைச் சந்தித்து அவர் வயலில் இருந்து சவுட்டு மண் சப்ளை செய்ய முடியுமா என்று கேட்டேன். அவருக்கு சப்ளை செய்து பழக்கம் இல்லை. 

‘’தம்பி ! இன்னும் பதினைஞ்சு நாள்ல எங்க வீட்டுல பொண்ணு கல்யாணம் இருக்கு தம்பி. கல்யாண வேலை ஏகப்பட்டது இருக்கு. என்னால இந்த வேலைல மெனக்கெட முடியாது’’

‘’நீங்க பகல்ல சப்ளை செய்ய வேண்டாம். நைட்ல சப்ளை செய்ங்க.’’

‘’நான் ஆளுங்ககிட்ட பேசிப் பாக்கறன்’’

‘’எனக்கு நாப்பது லோடு வேணும். நீங்க முழுக்க சப்ளை செஞ்சா உங்களுக்கு கல்யாண செலவுக்கும் கணிசமா பணம் கிடைக்கும்’’

‘’என்ன தம்பி பழக்கம் இல்லாத விஷயத்தை செய்யச் சொல்றீங்க’’

‘’இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு சைட்ல லோடுக்காக வெயிட் பண்றன்’’

இரவு ஏழு மணி அளவில் கட்டுமானப் பணி முடிந்தது. பணியாளர்களுக்கான ஊதியத்தை பட்டுவாடா செய்து விட்டேன். அன்று பணியிடத்துக்கு அப்பா வந்திருந்தார்கள். அப்பா புறப்பட்டார்கள். 

’’பிரபு ! நேரா வீட்டுக்குத்தானே’’

வீட்டுக்கும் கட்டுமானப் பணியிடத்துக்கும் இருபது கிலோ மீட்டர் தூரம். 

‘’இல்லை. நீங்க போங்க. இன்னைக்கு நைட் சவுட்டு மண் லோடு வருது. நான் இருந்து இறக்கிட்டு வர்ரேன். ‘’

’’யார் சப்ளையர்?’’

நான் விஷயத்தை சொன்னேன். 

‘’நீ சொல்றதெல்லாம் நடக்கற விஷயமா? கல்யாண வேலைல இருக்கறவரு நகைக்கடை, ஜவுளிக்கடை, கேட்டரிங் ஏற்பாடுன்னு அலைஞ்சுகிட்டு இருப்பாறா இல்லை சவுட்டு மண் அடிப்பாரா? முதல்ல அவரு ரெண்டு டிராக்டர் டிப்பர் அரேஞ்ச் செய்யணும். மண் ஏத்தி விட ஆளுங்க எட்டு பேராவது வேணும். டீசலுக்கு கொடுக்க அவர் கையில பணம் இருக்கணும். ராத்திரி நேரத்துல இத்தனை விஷயமும் நடக்கணும். நீயே யோசிச்சுப் பார். இதெல்லாம் சாத்தியமா? ’’

‘’நீங்க வீட்டுக்குப் போங்க. நான் ஒன்பது மணி வரைக்கும் பாத்துட்டு வரேன்.’’

அப்பா அதிருப்தியுடன் கிளம்பினார்கள். 

நான் அந்த கிராமத்தின் சிறிய தேனீர்க்கடை ஒன்றில் இட்லி சாப்பிட்டு விட்டு பணியிடத்தில் காத்திருந்தேன். அங்கே ஊரிலிருந்து சென்றிருந்த கட்டுமானப் பணியாளர்கள் தங்கியிருந்தனர். யாருக்கும் நம்பிக்கையில்லை. நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர். அலைபேசி அப்போது தான் அறிமுகமாகிக் கொண்டிருந்தது. மண் அடிக்கச் சொன்னவரிடம் தொலைபேசியே கிடையாது. அலைபேசி எம்மாத்திரம்? மிகவும் தனியாக உணர்ந்து அமர்ந்திருந்தேன். மணி ஒன்பது ஆனது. பத்து ஆனது. பதினொன்று ஆனது. பத்தரை மணிக்கு ஊரின் கடைசி பஸ்ஸூம் போய்விட்டது. 

ஒரு தொழிலாளர் வந்து ‘’சார் ! இங்கயே தூங்கிடுங்க. நடுநிசில ஊருக்கு கிளம்பி போக வேண்டாம். கருக்கல்ல போங்க. எங்கயாவது வண்டி பஞ்சர்னா கூட ஒன்னும் பண்ண முடியாது’’ என்றார். 

பன்னிரண்டு மணி வரை பார்த்து விட்டு டூ - வீலரில் ஊருக்குப் புறப்படுவோம் என எண்ணினேன். 

நேரம் 11.45

தூரத்தில் ஒரு டிராக்டர் வரும் சத்தம் கேட்டது. 

அதனை பணியாளர்களிடம் சொன்னேன். 

‘’சார் ! நாங்களும் உங்க கூட தான் இருக்கோம். எப்படி உங்களுக்கு மட்டும் கேக்குது’’ என்றனர். 

வண்டியை எடுத்துக் கொண்டு கிராமத்துச் சாலையில் அரை கிலோ மீட்டர் தூரம் சென்றேன். இரண்டு டிராக்டர் டிப்பர்கள் பளிச்சிடும் ஹெட் லைட் வெளிச்சத்துடன் வந்து கொண்டிருந்தன. நான் அவற்றின் முன் சென்று நின்றேன். 

‘’சார் ! சவுட்டு மண் லோடு வந்திருக்கு’’

நான் வண்டியை பணியிடம் நோக்கித் திருப்பினேன். 

என் டூ -வீலர் முன்னால் வர அதன் பின்னால் இரண்டு டிராக்டர் டிப்பர்களும் வர பணியிடத்தில் நுழைந்தோம். 

ஹைட்ராலிக் லிவர் பயன்படுத்தி சவுட்டு மண் அன்லோடு ஆனது. 

‘’சார் ! மொத்தம் நாலு டிப்பர். ரெண்டு பின்னால வருது. நாங்க முன்ன கிளம்பினோம். அந்த வண்டி இந்நேரம் லோடு ஆகி கிளம்பி இருக்கும்.’’

நான்கு டிப்பர்களும் மாற்றி மாற்றி லோடு அடித்தன. 

நாற்பது லோடு நான் சொல்லியிருந்தேன். முப்பத்து எட்டு லோடு வந்து இறங்கிய போது நேரம் காலை மணி 6. 

‘’சார் ! மண் ஏத்தி விடற லோடுமேன் எல்லாரும் நைட்வேலையால சோர்ந்துட்டாங்க. இத்தோட முடிச்சுக்கிறோம் ‘’ 

நான் 38 லோடு சவுட்டு மண் சைட்டில் இறங்கி விட்டது என்பதை காலை 6.15க்கு ஃபோன் செய்து அப்பாவிடம் சொன்னேன். 

ஊருக்கு வந்து குளித்துத் தயாராகி சாப்பிட்டு வங்கிக்கு சென்று பணம் எடுத்துக் கொண்டு சவுட்டு மண் அடித்த விவசாயி வீட்டுக்குச் சென்றேன். 38 லோடுக்கான பணத்தைக் கொடுத்தேன். அவர் மிகவும் மகிழ்ந்தார். 

‘’புஞ்சை நிலத்தை நஞ்சையா மாத்தணும்னு ரொம்ப நாள் நினைச்சன் தம்பி. உங்களால அந்த விருப்பமும் நிறைவேறுச்சு. இந்த பணம் கல்யாண செலவுக்கும் உபயோகமாகும். ரொம்ப நன்றி தம்பி’’ என்றார். 

பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் பெரிய கட்டுமானங்களைச் செய்து கொண்டிருந்த காண்டிராக்டர்கள் என்னிடம் வந்து தங்களுக்கும் சவுட்டு மண் தேவை என்றனர். விவசாயியின் விலாசம் சொல்லி அனுப்பி வைத்தேன். 

***

இது நடந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. 

60 ஆண்டுகள் சுழற்சிக்குள் நிகழும் ஒரு உள் சுழற்சி. 

***

நேற்று, ஒரு காலிமனைக்கு கம்பிவேலி இட பணியாளர்களை காலை 5.30 மணிக்கே வரச் சொன்னேன். பணியாளர்கள் வந்து விட்டனர். நானும் சென்று விட்டேன். நாங்கள் சென்று சேர்ந்ததிலிருந்து அடைமழை பெய்யத் தொடங்கி விட்டது. மாலை 5 மணி வரை தொடர் மழை. அதன் பின்னர் மழை விட்டது. 

இரவு 9 மணிக்கு வானம் எப்படி இருக்கிறது எனப் பார்த்து விட்டு இரவில் வேலை செய்யலாம் என முடிவு செய்தோம். 

நான் 9 மணிக்கெல்லாம் ஸ்பாட்டுக்கு சென்று விட்டேன். 

பணியாளர்கள் வந்து சேர 10.30 ஆனது. 

அதன் பின்னர் பணி தொடங்கி இரவு 1.30க்கு வேலை முடிந்தது. 

***

பணியை மேற்பார்வை இட பணியிடத்தில் இருந்த போது 15 ஆண்டுக்கு முன்பு நடந்த சம்பவம் துல்லியமாக நினைவில் எழுந்தது. 

--------------- 

பாரதி துதி

எனது நண்பன் ஒருவன் கவிஞன். மத்திய அரசாங்க ஊழியன். இப்போது கோரக்பூரில் குடித்தனம்.  ஒரு வலைப்பூவை உருவாக்கி எழுதி வருகிறான். தான் அவ்வப்போது எழுதும் கவிதைகளைப் பதிவிடுவான். சாதாரணமாக என்னுடன் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பேசுவான். அலுவலகத்தில் வேலை கடுமையாக இருந்தால் அவன் பேசுவதன் இடைவெளி அதிகரிக்கும்.  இடைவெளி அதிகமானால் நானே அழைப்பேன். நேற்று அவனை அழைத்தேன். 

‘’என்னப்பா! பேசி ரொம்ப நாளாச்சு. ஐ ஹோப் ஆல் இஸ் ஃபைன்’’

‘’ஆல் இஸ் வெல். ஆஃபிஸ்ல ஆடிட் முடிஞ்சுதுல்லயா! கொரிஸ் க்கான ரிப்ளையை என்னை தயார் பண்ண சொல்லிட்டாங்க. அதான் ஃபோன் பேச முடியல’’

‘’உன்னோட பிளாக் பாத்தன். கடைசியா மே மாசம் புது போஸ்ட் போட்டிருக்க. அதுக்கப்பறம் ஏன் அவ்வளவு பெரிய இடைவெளி’’

’’புதுசா எழுதுன சில போயத்தை அப்டேட் செய்யணும். ஆஃபிஸ் ஒர்க் பிரஷர் ரொம்ப இருக்கு’’

‘’நீ ஏன் உன்னோட ஆஃபிஸ் அனுபவங்கள எழுதக் கூடாது?’’

‘’அப்படியா சொல்றீங்க’’

‘’நிச்சயமா எழுதணும். உ.வே.சாமிநாத ஐயரோட என் சரித்திரத்தில ஒரு இடம் வருது. அவரோட மாஸ்டர்ல ஒருத்தர் சொல்வாராம் : நாம படிச்சத ஒரு கம்பத்துக்கிட்டயாவது பாடம் சொல்லணும்னு. படிச்சத கத்துக்கிட்டத திரும்ப திரும்ப சொல்லும் போது தான் அது மனசுல ஆழமா உறுதியாகும்னு.’’

‘’நீங்க சொல்றத நான் கன்சிடர் பண்றன்’’

‘’இந்திய மரபு ஆய கலைகள் 64ன்னு சொல்லுது. அந்த 64 கலைகளுக்குமான தெய்வம் வாணி. எந்த ஒரு கலைஞனும் தனது கலையை - கலை உணர்வை - தனது படைப்பை வெளிப்படுத்தும் போது கலைவாணி மகிழ்ச்சி அடைகிறாள். எல்லா கலை வெளிப்பாடுமே பாரதிக்கு செய்யப்படும் வெவ்வேறு விதமான துதிகள் தான். அதனால தொடர்ந்து எழுது. உன் ஆஃபிஸ் அனுபவங்களையும் எழுது. எழுத்துக்கு எல்லாமே நிமித்தம் தான்.’’ 

***

தொடர்ச்சி... 

(பாரதி துதி பதிவுக்குப் பின்னர் நிகழ்ந்த உரையாடல் அதே பதிவுடன் பின்னர் இணைக்கப்பட்டது)

***

 ’’பாரதி துதி’’ பதிவை வாசித்து விட்டு ஆதித்ய ஸ்ரீநிவாஸ் ஃபோன் செய்தான். 

’’அண்ணன்! உங்களுக்கு நிறைய ஃபிரண்ட்ஸ் இருக்காங்க’’ 

‘’அது ஒரு கோணத்துல உண்மை. முழு உண்மைன்னு சொல்ல முடியாது.’’

‘’அந்த இன்னொரு கவிஞர் யாருண்ணா?’’

‘’உன்னைப் போல் ஒருவர்’’

‘’ நீங்க நிறைய பேரோட பேசறீங்க. விவாதிக்கறீங்க.’’

‘’நானா பண்ற ஃபோன்கால் கம்ப்பேரிடிவ்லி ரொம்ப குறைச்ச தான். இடம் பொருள் ஏவல் னு சொல்லுவாங்க இல்லையா. இப்பவும் செல்ஃபோன் இல்லாம லேண்ட் லைன் மட்டும் இருந்தா எனக்கு இன்னும் கன்வீனியன்ட்டா இருக்கும்னு தோணிட்டே தான் இருக்கு. பார்க்கலாம்’’ 

‘’அண்ணா! ஆஃபிஸ் ஒர்க் பிரஷர் ரொம்ப இருக்கு. காலைல விழிச்சதுமே அன்னைக்கு இருக்கற ஆஃபிஸ் வேலை ஞாபகம் வந்திடுது. அதுவே ஒரு நெருக்கடியை உருவாக்கிடுது. சாயந்திரம் ஆஃபிஸ் முடிஞ்சும் அது கண்டினியூ ஆகுது.’’

‘’நீ ஒரு கிரியேட்டர். கிரியேட்ட்டிவ் பிராஸஸ் என்பது என்ன? நம்மோட அகத்துல ஒரு பகுதி எப்போதும் கூர்மையா இருக்கறது. நம்மையும் நம்ம சூழலையும் கூர்ந்து கவனிக்கறது. அத கான்ஷியஸ்ஸா செய்யணும்னு இல்லை. சப் கான்ஷியஸா நடக்கும். நம்ம மரபுல ’’சாட்சி பாவம்’’னு சொல்றாங்க.’’

‘’ஒர்க் பிரஷர் ரொம்ப கடுமையானது அண்ணா.’’

‘’மனுஷ உடம்பும் மனசும் உச்சபட்ச நெருக்கடியிலதான் உச்சபட்ச துல்லியத்தோட செயல்படுது’’

‘’நீங்க உங்க கான்செப்ட்டை கன்வின்சிங்கா சொல்லி அக்செப்ட் பண்ண வச்சிருவீங்க. ஆனா அதை எக்ஸிகியூட் பண்றது அவ்வளவு ஈசியா இல்ல’’

‘’நான் யாரையும் கன்வின்ஸ் பண்ண நினைக்கறது இல்ல. உரையாடற எல்லாரோடயும் சேந்து யோசிக்கறன். விவாதிக்கறன்.’’

‘’அண்ணா! நான் என்னோட படைப்புலகத்தை என்னோட அக உலகத்துக்கு நெருக்கமா மட்டுமே வச்சுக்க பிரியப்படறன். நான் பாக்கற உத்யோகம் என்னோட புற உலகம். அது பெருசா பிரம்மாண்டமா நம்மால வகுக்க முடியாததா இருக்கு. அதுல இருந்து என்னோட அக உலகத்தை எவ்வளவு தள்ளி வச்சுக்கிறனோ அந்த அளவுக்கு நல்லதுன்னு நான் பழகியிருக்கன்’’

’’சங்க கவிதைகள்ல அகம் சார்ந்து  எழுதன புலவர்கள் தான் புறம் சார்ந்தும் எழுதியிருக்காங்க இல்லையா?’’

ஆதித்யா அமைதியாக இருந்தான். 

நான் சொன்னேன் : ‘’ஆனா அது கிரியேட்டரோட சாய்ஸ்’’ 

’’நானும் என்னோட தினசரி அனுபவங்கள எழுதலாம்னு சொல்றீங்களா?’’

‘’எழுதுன்னுதான் நான் சொல்வேன்.’’

‘’அது வேற உலகம்’’

‘’அந்த உலகத்தையும் உன்னோட கிரியேட்டிவ் சென்ஸ்ஸால அணுகிப் பாரு. என்ன நடக்குதுன்னு பாக்கலாம்’’

Wednesday 27 October 2021

இருமை

2003ம் ஆண்டு என்னுடைய பொறியியல் கல்லூரிப் படிப்பை முடித்தேன். எல்லா இளைஞர்களையும் போலவே பெரியவர்களின் உலகத்துக்குள் நுழைந்து விட்டோம் என்பதில் பேருவகை கொண்டிருந்தேன். அனைத்தும் எளிது எனத் தோன்றும் மாயத்தை அனைவருமே இளமையில் உணர்ந்திருப்பார்கள். அதில் நானும் விதிவிலக்கல்ல.   

நானும் எனக்கு ஒரு வருடம் முன்னால் கல்லூரிப் படிப்பை முடித்த என்னுடைய சீனியர் ஒருவரும் ஒரு இணைய மையத்துக்குச் சென்றோம். அவர் தீவிரமான பெருமாள் பக்தர். இனிய மனிதர்.  இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இணையம் அப்போது தான் எங்கள் ஊர் போன்ற நகரங்களில் பரவலாகிக் கொண்டிருந்தது. தமிழ் யூனிகோட் உருவாகி விட்டது என்று ஞாபகம். வெளியூர்களில் - வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம். வாரம் ஒரு நாள் இணைய மையம் செல்வோம். ஒரு மணி நேரம் இணையம் பயன்படுத்த ரூ. 30 கட்டணம் என்று ஞாபகம். அவர் வேலை தேடிக் கொண்டிருந்தார். ரெஸ்யூம் ஃபார்வர்டு செய்வார். நானும் உடன் செல்வேன். 

அப்போது ஊரின் மத்தியில் இருக்கும் வணிக வளாகம் ஒன்றில் இணைய மையம் ஒன்று இருந்தது. அந்த வளாகத்துக்கு உள்ளேயும் கடைகள் உண்டு. வளாகத்தின் வெளிப்பக்கத்திலும் கடைகள் உண்டு. அவையும் அந்த வளாகத்தைச் சேர்ந்தவையே. முதல் தளம் , இரண்டாம் தளம் என இரண்டு தளத்திலும் கடைகள் உண்டு. 

நான் என்னுடைய இரு சக்கர வாகனத்தை அந்த வணிக வளாகத்தின் உள்ளிருந்த பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு மாடியை நோக்கி நடந்தோம். நண்பர் என்னிடம் , ‘’ இன்னைக்கு நிறைய வேலை இருக்கு. கொஞ்சம் டைம் ஆகும். நாம ஒரு பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கிப்போமா?’’ என்றார். வளாகத்தின் வெளிப்பக்கத்தில் இருந்த பேக்கரியை நோக்கி செல்லத் துவங்கினோம். 

வளாகத்தின் காவலாளி எங்களிடம் வந்து ‘’சார் ! வெளிய போறீங்கன்னா வண்டியை இங்க பார்க் பண்ணாதீங்க. வண்டியை எடுத்துட்டு போய்டுங்க’’ என்றார். 

‘’நாங்க உங்க காம்ப்ளக்ஸூக்கு வந்திருக்கோம். உங்க காம்ப்ளக்ஸூக்கு வெளிப்பக்கம் இருக்கற பேக்கரிக்கு இப்ப போகப் போறோம். எங்க கிட்ட நீங்க எப்படி இந்த மாதிரி சொல்ல முடியும்?’’

’’அவுட்சைட் வெஹிக்கிள் அதிகம் இங்க பார்க் பண்றாங்க. அத அவாய்ட் பண்ண தான் சார் இப்படி சொல்றோம்’’

‘’உங்களுக்கு காம்ப்ளக்ஸ் மெயிண்டய்ன் பண்றதுல்ல ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதெல்லாம் நீங்க தான் சால்வ் பண்ணிக்கணும். உங்க இடத்துக்கு வந்த கஸ்டமர் கிட்ட இப்படித்தான் பிஹேவ் பண்ணுவிங்களா?’’

‘’சார்! எனக்கு சொல்ற வேலையை நான் செய்றன். அவ்வளவுதான்’’

நான் அந்த இடத்தில் ஸ்திரமாக நின்று விட்டேன். ‘’ உங்க ஓனரை இங்க வரச் சொல்லுங்க. நான் அவர்கிட்ட நடந்ததைச் சொல்லி ஒரு கஸ்டமர் கிட்ட உங்க ஸ்டாஃப் நடந்துகிட்டது சரியான்னு கேக்கறன். அத கேக்காம நான் இங்கிருந்து நகர மாட்டேன்.‘’

நண்பர் என்னிடம் ‘’இஸ்யூ எதுவும் வேண்டாம் பிரபு. நாம இங்கயிருந்து வேற பிரவுஸிங் செண்டர் போயிடுவோம். லெட்  அஸ் ஃபர்கெட் திஸ்’’ என்றார். 

’’என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க. ஒரு வணிக நிறுவனம் யாருக்காக நடத்துறாங்க? கஸ்டமருக்காகத்தானே? ஓனருக்கு இங்க என்ன நடக்குதுன்னு தெரியணும். ஓனர் இங்க வரணும். ஓனரைப் பாக்காம நான் இங்கிருந்து நகர மாட்டேன். ‘’

வணிக வளாகமே என்ன நடக்கிறது எனப் பார்த்துக் கொண்டிருந்தது. 

சில நிமிடங்களில் மோட்டார்சைக்கிளில் ஒரு மனிதர் வளாகத்தினுள் நுழைந்தார். வண்டியை பார்க் செய்து விட்டு எங்களிடம் வந்தார். மிகவும் பணிவாக, ‘’நான் தான் சார் இந்த காம்ப்ளக்ஸ் மேனேஜர். வீட்டில இருந்தன். காம்ப்ளக்ஸ்ல இருந்து ஃபோன் வந்தது. என்னன்னு பாக்க உடனே வந்திருக்கன். என்ன விஷயம் சொல்லுங்க’’ என்றார். 

நண்பர் விஷயத்தைச் சொன்னார். 

‘’தப்பு எங்க செக்யூரிட்டி மேல தான் சார். நடந்த தப்புக்கு நான் மன்னிப்பு கேக்கறன். செக்யூரிட்டிய நான் தனியா கண்டிக்கறன்.’’ 

நான் , ‘’உங்க ஓனர் எப்ப வருவார்? அவர் கவனத்துக்கும் விஷயத்தைக் கொண்டு போகணும்.’’ என்றேன். 

‘’அவர் ஃபாரின்ல இருக்கார் சார். மூணு வருஷத்துக்கு ஒரு தடவை தான் வருவார். நான் தான் இங்க ஃபுல் இன்சார்ஜ். நான் உங்க கிட்ட மன்னிப்பு கேக்கறன்.’’

நண்பர் என் தோளில் கையைப் போட்டு என்னை பேக்கரிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் முதல் தளத்தில் இருந்த இணைய மையத்துக்கும் சென்றோம். 

சில ஆண்டுகள் ஓடின. 

எனது நண்பர் ஒருவர் அந்த வளாகத்தில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நான் அந்த கடையில் அவருடன் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்போது அந்த வளாகத்தின் மேனேஜர் நண்பரின்  கடையைக் கடந்து சென்றார். அவர் கடந்து சென்றதும் என்னிடம் இவர்தான் இந்த வளாகத்தின் உரிமையாளர் என்று சொன்னார். 

‘’இவர் ஓனர் கிடையாதுங்க. மேனேஜர். ஓனர் ஃபாரின்ல இருக்கார்’’ என்றேன். 

’’இவர் மேனேஜர்னு உங்க கிட்ட யார் சொன்னது?’’

‘’அவரே தான் என்னிடம் சொன்னார்’’. நான் சம்பவத்தை விளக்கினேன். 

நண்பர் யோசித்துப் பார்த்து விட்டு, ‘’அந்த நேரத்துல உங்களை சமாதானப்படுத்த ஓனர் தன்னை மேனேஜர்னு சொல்லியிருக்கார். ஓனர் தான் தான்னு சொல்லியிருந்தா நீங்க இன்னும் கொஞ்சம் கடுமையா ரியாக்ட் பண்ணி இருப்பீங்க. அத அவாய்ட் பண்ண இப்படி சொல்லியிருக்கிறார்’’ என்றார்.  

இரு உரையாடல்கள்

நேற்று காலை என்னை ஒரு நண்பர் சந்திக்க வந்தார். ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர். ஊரில் பெரிய வீடொன்று இருக்கிறது. வீடு கட்டி 10 ஆண்டுகள் இருக்கும். அவரது தந்தை தனது ஓய்வூதியப் பலன்களைக் கொண்டு கட்டியது. நண்பர் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.  ஊதியத்தின் ஒரு பகுதியை முதலீடு செய்ய வழி கேட்டார். ஊருக்கு அருகில் இருக்கும் நகராட்சிப் பகுதியிலோ அல்லது ஏதேனும் ஒரு மாநகராட்சியிலோ மனையோ அல்லது வீடோ அல்லது அடுக்கக வீடோ வாங்குமாறு சொன்னேன். வீட்டுக்கடன் வங்கிகள் வழங்கும். லாபமான முதலீடாக இருக்கும் என்று சொன்னேன். 

ஸ்மார்ட் ஃபோனை வைத்து இ.எம்.ஐ கணக்கைப் போட்டு போட்டு பார்த்தார். 

‘’நம்ம சூழ்நிலைல சேவிங்க்ஸ் செய்யணும்னா அதுக்கு பிரத்யேகமான மைண்ட் செட் வேணும். இருக்கறத சேமிக்கணும்னு நினைக்கற ஒருத்தர் எளிமையான லைஃப் ஸ்டைல ஈசியா அடாப்ட் செஞ்சுக்கறவரா இருக்கணும். அது ரொம்ப டஃபா இருக்கு. இப்ப நீங்க கிராமத்துல வீடு கட்டியிருக்கீங்க. உங்க குடும்பத்துக்கு சிம்பிளா 1000 சதுர அடி போதும். ஆனா கிட்டத்தட்ட ரெண்டு மடங்கு ஏரியா கட்டப்பட்டிருக்கு. ஒரு சிட்டில இருக்கற வீட்டுக்கு செய்யற அத்தனை செலவும் செஞ்சிருக்கீங்க. ரெண்டல் இன்கம்முக்கும் வாய்ப்பில்லை. ஒரு பெரிய வீடு இருக்குங்கற உணர்வு உங்களை ரியல் எஸ்டேட்ல இன்வெஸ்ட் பண்ணாம தடுத்துடுச்சு. சென்னைல ஒரு வீடு ரெண்ட்டுக்கு எடுத்திருக்கீங்க. அதுக்கு மாசம் 15,000 ஆகுது. குடும்ப செலவு ஆகிட்டே இருக்கு. கையில இப்ப உங்கள்ட்ட சேவிங்ஸ் இல்லை. நீங்க கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு வீடு வாங்குனா இழுத்து பிடிச்சு இருந்தாலும் சமாளிச்சிடலாம். யோசிச்சு முடிவு பண்ணுங்க.’’

அவருக்கு உகந்தது என நான் நினைத்ததை அவரிடம் சொன்னேன். 

மாலை நடைப்பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தேன். 

ஓர் இளைஞர் மோட்டார்சைக்கிளில் வந்தார். என்னைப் பார்த்ததும் வண்டியை ஆஃப் செய்து விட்டு வண்டியிலிருந்து இறங்கி என்னை நோக்கி வந்தார். 

‘’சார்! இந்த ஏரியால வீடு ஏதும் விலைக்கு கிடைக்குமா?’’ என்றார். 

சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் என்னிடம் ஏன் கேட்கிறார் என்பது எனக்கு வியப்பு அளித்தது. 

‘’தம்பி! வாக்கிங் போயிட்டு இருக்கன். ஒரு மணி நேரம் கழிச்சு என்னோட வீட்டுக்கு வா. நாம டிஸ்கஸ் செய்வோம்’’ என்றேன். எனது வீட்டின் அமைவிடத்தைச் சொன்னேன். 

வாக்கிங் முடிக்க ஒரு மணி நேரம் ஆனது. நான் வீடு திரும்பி 10 நிமிடம் கழித்து அந்த இளைஞன் வீட்டுக்கு வந்தான். 

அவனுக்கு ஊரின் மையப்பகுதியில் ஒரு பெரிய வீடு இருக்கிறது. கணிசமான விலை அந்த வீட்டுக்கு கிடைக்கும். அதனை விற்று விட்டு சிறியதாக ஒரு வீட்டை வாங்கி அங்கே குடி வந்து விடலாம் என்பது அந்த இளைஞனின் திட்டம். பாதிப் பணம் அதற்கு செலவானால் கூட மீதிப் பணத்தைக் கொண்டு ஏதேனும் தொழில் தொடங்கலாம் என்று எண்ணம். 

’’தம்பி! வீடா வாங்கறத விட மனையா வாங்கி சிம்பிளா கட்டிக்கங்க. ரிஜிஸ்ட்ரேஷன் செலவு மிச்சமாகும். மீதி இருக்கற பணத்தை முழுசா ஒரு தொழில்ல போடாதீங்க. 20 பெர்சண்ட்டை தொழில் தொடங்க யூஸ் பண்ணிக்கங்க. 80 பெர்சண்ட்டை போஸ்ட் ஆஃபிஸ்ல டெபாசிட் செய்ங்க. அதுல கிடைக்கற இண்ட்ரஸ்ட்டே உங்களோட மன்த்லி எக்ஸ்பெண்டிச்சருக்குப் போதும்.’’

நான் சொன்னதைப் பரிசீலிப்பதாகச் சொல்லி விட்டு இளைஞன் புறப்பட்டான். 

Sunday 24 October 2021

ஒரு வாசிப்பு

இன்று ஒரு மேற்கத்திய நாவலை வாசித்தேன். மரணத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டது. மிகக் குறைவான கதாபாத்திரங்கள். ஐரோப்பிய அகம் மரணத்தைக் கண்டு எப்போதும் அஞ்சியே இருந்திருக்கிறது. அந்த அச்சம் அவர்களுக்கு வாழ்க்கை மேலும் படர்ந்த படி இருக்கிறது. அது அவர்களை மரணம் குறித்த மர்மப்படுத்தலை மேலும் மேலும் என உருவாக்கச் செய்கிறது.  

ஜீவனின் நெடிய பயணத்தில் ஒரு ஜென்மம் என்பது குறிப்பிட்ட கால அளவே என்கிறது இந்திய மரபு. அந்த குறுகிய காலத்தில் தம் அருஞ்செயல்களால் விடுதலை பெற்றவர்கள் உண்டு. பல பிறவிகளில் - பல ஜென்மங்களில் - பிறந்து இளைத்தவர்கள் உண்டு. 

சாவு கொண்டாடப்படும் காசி மாநகரமே ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக  ஆராதிக்கும் நகராக இருந்திருக்கிறது.  

Saturday 23 October 2021

முன்னே உள்ள பாதை

இன்று நண்பர் ஒருவருடன் மாலைநடை சென்றேன். வானம் கருத்து மழை பொழிவதற்குத் தயாராய் இருந்தது. லேசான தூறல் அவ்வப்போது தூறி ஓய்ந்தது. குளிர்க்காற்று வீசிக் கொண்டிருந்தது. மழைக்காலத்தில் நாம் காணும் புறவுலகம் எழில் கொள்கிறது. எப்போதும் நாம் பார்க்கும் பகுதி என்றாலும் மழைக்காலம் அவற்றில் புதிய சில மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. காற்றில் இருக்கும் தூசித் துகள்கள் நீரின் அடர்த்தியால் கழுவப்பட்டு விடுவதால் காணும் காட்சிகள் அனைத்தும் துலக்கம் பெற்றிருக்கின்றன. செப்புப் பாத்திரத்தை துலக்கி ‘’பளிச்’’ என வைப்பது போல. அந்த தூய்மையும் எழிலும் நம் அகத்தை இளகச் செய்கின்றன. நம்பிக்கை கொள்ளச் செய்கின்றன.  

‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளை நிலைப்படுத்துவது தொடர்பாக பேசிக் கொண்டே நடந்தோம். ஒரு விஷயத்தை முன்வைத்து அதில் எனது எண்ணங்களையும் அபிப்ராயங்களையும் தெரிவித்து விட்டு மற்றவர்கள் என்ன எண்ணுகிறார்கள்; அபிப்ராயப்படுகிறார்கள் என்பதை முழுவதும் தெரிந்து கொள்வேன். 

உண்மையில் இப்போது, ‘’காவிரி போற்றுதும்’’ புதிதாக சிறகு முளைத்த இளம்புள்ளின் ஆர்வத்துடன் உவகையுடன் உத்வேகத்துடன் உள்ளது. எனினும் இப்போது இன்னும் பலரை இணைத்துக் கொள்ள வேண்டிய நேரம் உருவாகி விட்டதாக நான் எண்ணுகிறேன். அதனை நண்பரிடம் சொன்னேன். நமது பணியில் இன்னும் பலரை ஈடுபடுத்த வேண்டியிருக்கிறது. அதற்கான பணிகளையும் நாம் தான் முன்னெடுக்க வேண்டும். நம் முன்னே உள்ள பாதை மிகப் பெரியது. மிக நீண்டது. அதில் இன்னும் பலருடன் நாம் முன்னகர வேண்டும். 

ஒரு சிறு குழுவாக ‘’காவிரி போற்றுதும்’’ செய்த செயல்களை சுயமதிப்பீடு செய்து கொண்டோம். 

‘’காவிரி போற்றுதும்’’ ஒரு இந்தியக் கிராமத்தை இந்தியப் பண்பாட்டின் அடையாளமாகப் பார்க்கிறது. ஏதேனும் ஒரு இந்தியக் கிராமத்தையாவது முழுத் தன்னிறைவு கொண்ட ஒன்றாக ஆக்க தனது முயற்சிகளை எப்போதும் மேற்கொள்ளும். 

1. விவசாயிகளின் விவசாய வருமானத்தை அதிகரிக்க அவர்களுக்கு உதவுதல்

2. கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் வங்கிக்கடன் மூலம் சுயதொழில் தொடங்கச் செய்வதிலும் உதவுதல்

3. கிராமத்தின் பொது இடங்களில் அதிக மரக்கன்றுகள் நடுதல்

4. இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பர்யத்தை கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திடமும் கொண்டு சேர்த்தல் 

இவையே ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள். 

Thursday 21 October 2021

நீங்குதல்

மூன்று வாரங்களாக பால், தேனீர், காஃபி என மூன்றையும் நீங்கியுள்ளேன். வெகு நாள் பழகிய பழக்கம் ஒன்றிலிருந்து நீங்குதல். இளம் வயதில் மூன்று நான்கு முறை இவற்றைத் தவிர்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் மூன்று நான்கு ஆண்டுகள் நீடித்திருக்கிறது. பின்னர் பல காரணங்கள். கட்டுமானப் பணி நடக்கும் போது பணி இடத்தில் தேனீர் ஒரு நாளைக்குப் பலமுறை சுழன்று கொண்டிருக்கும். தவிர்ப்பது சிரமம். சமீப காலங்களில், பலமுறை முயன்று தோல்வி அடைந்தேன். இப்போது வாய்த்திருக்கிறது. தேனீர் அருந்தும் நேரங்களில் வென்னீர் குடித்துக் கொள்கிறேன். பால் தேனீரை இப்போது நினைத்தால் எப்படி இவ்வளவு அடர்த்தியான திரவத்தை குடலுக்குள் கொண்டு செல்வது என்று தோன்றுகிறது. பால் தேனீரை நிறுத்தி விட்டு காலையில் ஒருமணி நேரம் நடைப்பயிற்சி செய்யத் துவங்கினேன். உடல் எடை குறைய ஆரம்பித்து விட்டது. காலை மாலை நேரங்கள் காலியான வயிறாக இருப்பதால் யோகாசனங்களும் செய்ய முடிகிறது. நல்ல பசி எடுக்கிறது. ஆழமான நிம்மதியான தூக்கம். 

ஊக்கம் கொண்ட மன அமைப்பு கொண்டவர்கள் நிச்சயம் சிறிய அளவிலாவது உடலுக்கு உழைப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். மனித உடல் என்பது தினசரி குறைவான நேரமாவது வியர்க்க வேண்டும். அது ஒரு எந்திரம் போல. எந்திரத்தின் எல்லா பகுதிகளும் அவற்றுக்கு உரிய பணிகளுடனும் ஒருங்கிணைப்புடனும் இருக்க வேண்டும். நவீன வாழ்க்கை உடலை பின்னுக்குத் தள்ளி மனத்தை முன்னே கொண்டு வந்து விட்டது. மனம் உடலளவுக்கு ஸ்தூலமானது அல்ல எனினும் அதன் எவ்விதமான அலைவும் உடல் உறுப்புகளைப் பாதிக்கும். வலிமை கொண்ட உடல் வாழ்க்கையை மிக எளிதாக அணுகும். ஆரோக்கியமான உடல் என்பது நாம் அடையச் சாத்தியமான ஆகச் சிறந்த லாபம் என்கிறது மகாபாரதத்தின் யட்சப் பிரசன்னம். 

வயலில் பாய்ச்சல்காலில் நீர் பாய்வது ஓசை எழுப்புவது போல நடைப்பயிற்சிக்குப் பின் நாள் முழுவதும் காலில் பாயும் குருதியின் ஓசையை மானசீகமாக கேட்க முடிகிறது. 

மனம் பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டுள்ளது. தொழில் நிமித்தமான பணிகள். சமூகம் சார்ந்த பணிகள். படைப்புச் செயல்பாடுகள். அவை அனைத்துக்கும் பால் தேனீரை நீங்கியதும் நடைப்பயிற்சி , யோகா செய்வதும் உதவியாக உள்ளது. 


 

Wednesday 20 October 2021

பாராட்டு

நேற்று மயிலாடுதுறையில் உள்ள ஒரு அமைப்பு அவர்களுடைய மாதச் சந்திப்புக்கு அழைத்திருந்தார்கள். நூறு பேருக்கு மேல் கலந்து கொண்ட நிகழ்ச்சி. இறை வழிபாடும் அன்னதானமும் அவர்களுடைய பிரதானமான வழிமுறை. சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்களை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கௌரவிக்கிறார்கள். ஒரு கிராமத்தின் அத்தனை விவசாயக் குடும்பத்துக்கும் மரக் கன்றுகள் கொடுத்தது, ஒரு கிராமத்தில் எல்லா குடும்பங்களையும் தடுப்பூசி இட்டுக் கொள்ள அழைத்தது ஆகிய பணிகளுக்காக என்னைப் பாராட்டினார்கள். சமூகப் பணியில் எப்போதுமே என்னை ஒரு கருவியாகவே உணர்ந்திருக்கிறேன். உணர்கிறேன். பாராட்டப்பட வேண்டியவர்கள் நான் பணி புரிந்த கிராமத்தின் மக்களே. அவர்கள் தான் அவர்களுக்கு அளிக்கப்பட்ட மரக்கன்றுகளை தங்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளர்க்கிறார்கள். என் பணி பத்து சதவீதம் அளவானதே. மீதம் உள்ள 90 % பணியைச் செய்தவர்கள் கிராம மக்களே. தடுப்பூசி விஷயத்திலும் நாம் சொன்னதை ஏற்றுக் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வத்துடன் முன்வந்த கிராம மக்களே பாராட்டுக்குரியவர்கள். கிராம மக்களின் பிரதிநிதியாக உணர்ந்து - அவர்களின் பிரதிநிதியாக பாராட்டை ஏற்றுக் கொண்டேன்.  சமூகப் பணிகளின் மூலமாக சமூகத்தையும் என்னையும் மேலும் புரிந்து கொள்கிறேன். ‘’என் கடன் பணி செய்து கிடப்பதே’’ என்கிறது தமிழ் மரபு. 

Saturday 16 October 2021

தழல்

இன்று
நீ
சுடர்ந்து கொண்டிருக்கிறாய்
செந்தழல் அலைவுகளுடன்
உன் உவகைகள்
மழை பொழிந்த நிலத்தில்
நிறையும் பசுமையென
விரிகின்றன
உன் முன்னால்
ஒரு அன்பை
ஒரு சொல்லை
ஒரு பிரியத்தை
ஒரு வாழ்த்தை
சொல்லும் கணம்
மேலும்
நுண்மையாகிக் கொண்டேயிருக்கிறது
உன்னைப் போலவே

Friday 15 October 2021

துவக்கம்

புதிதாக ஒன்றைத் துவக்குவதற்கும் பல்லாண்டு கால பயிற்சியினை புதுப்பித்துக் கொள்வதற்கும் விஜயதசமி ஆகச் சிறந்த நாள். இந்தியாவெங்கும் குழந்தைகளுக்கு இந்த தினத்தில் வித்யாரம்பம் என்னும் கல்வித் துவக்கம்  நிகழும். போர்க்கலை பயில்பவர்கள் இந்நாளில் தாங்கள் கற்றவற்றை அனைவருக்கும் செய்து காட்டுவார்கள்.  

இன்று காலை ஒரு சிறுகதையை எழுதினேன். அது நிறைவான அனுபவமாக இருந்தது. சொல்லரசியைப் போல் பிரியம் காட்டும் இன்னொரு தெய்வம் இருக்கக் கூடுமா என்று தெரியவில்லை. காணும் பொருளாய் - காண்பதெல்லாம் காட்டுவதாய் என்றான் பாரதி. 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், விஜயதசமி நாளில் தான் காவிரிக் கரையிலிருந்து கங்கைக் கரை வரை ஒரு மோட்டார்சைக்கிள் பயணத்தைத் துவக்கினேன். அந்த நினைவுகள் நெஞ்சில் எழுந்தன. 

இன்று மாலை ஒரு சிறு பயணம் மேற்கொண்டேன். விளநகர் சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டேன். சிவன் துறை காட்டும் வள்ளல். அம்பிகை வேயுறு தோளி அம்மன். அங்கே தலவிருட்சம் வன்னி மரம். அதன் அடியில் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தேன். 

நிறைய பணிகளும் நிறைய பயணங்களும் இந்த ஆண்டு காத்திருக்கின்றன. அவற்றுக்கு இன்றைய நாள் நல் தொடக்கமாக அமைய வேண்டும். 

Wednesday 13 October 2021

காலைப் பொழுதுகள்

ஊரில் நல்ல மழை பெய்கிறது. மாலையில். இரவில். பகலில். காலை நேரங்களிலும் கூட. மழையின் சப்தம் கேட்டவாறு வீட்டில் இருப்பது என்பது ஓர் இனிமையான அனுபவம். அகம் நோக்கிச் செல்ல மழை ஒரு நல்ல வாய்ப்பு.  காலையில் எழுந்து நடைப்பயிற்சிக்குச் செல்லும் போது வானில் மேகங்கள் விதவிதமான தோற்றங்களில் உள்ளன. வானை மேகங்கள் நிறைத்திருப்பதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. ஒரு நாளைக்கு காலை, மாலை இரண்டு வேளையும் நடக்கிறேன். வீட்டு வாசல்களில் மலர்கள் மலர்ந்திருப்பதைப் பார்த்தவாறு நடந்து செல்வேன். விருட்சிப் பூ, செம்பருத்தி, பவழமல்லி, நந்தியாவட்டை, அலரி ஆகிய பூக்கள் பூத்திருப்பதைக் கண்டவாறு செல்வது என்பது பெருமகிழ்ச்சியை அளிக்கும் செயல். நம் அகமும் புறமும் மலர்களால் நிறைய வேண்டும். 

Monday 11 October 2021

கொலு

கொலுக்களை
கொலு பொம்மைகளை
காணும் 
ஒரு சிறுவனுக்கு
ஆனந்தமானது
இந்த உலகம்
என்று 
தோன்றிவிடுகிறது
அல்லது
ஆனந்தமானது
கொலு பொம்மைகளின் உலகம்
என்று
செட்டியார் பொம்மை
அவனுக்குப் பிடித்திருக்கிறது
ஆச்சி பொம்மையும்
மிருதங்கம் வாசிக்கும் நந்தி
அர்த்த நாரீஸ்வரர்
மீனாட்சி கல்யாணம்
சீதா கல்யாணம்
அமைதியாய் இருக்கும் நரசிம்மர்
மானுடக் கல்யாண கோஷ்டி ஒன்று
ராமன் கிருஷ்ணன் அனுமன் இலக்குவன்
அரவில் பள்ளி கொள்ளும் பெருமாள்
அம்மாக்களும்
அக்காக்களும்
பாட்டிகளும்
அமைக்கும் 
கொலு 
ஒவ்வொன்றையும்
அவன் ஒவ்வொரு முறையும்
ஆர்வத்துடன் பார்க்கிறான்
அவர்கள்
மகிழ்ச்சியான உலகை
உருவாக்க
அல்லது
மகிழ்ச்சியின் வெவ்வேறு வடிவங்களைக்
காட்சிப்படுத்துவதாய்
எண்ணம் தோன்றுகிறது
கொலு அமைப்பவர்கள்
ஏன்
அத்தனை மகிழ்கிறார்கள்
என அறிய வேண்டும்
என்ற தீரா ஆவல் 
அவனுக்கு உண்டாகிறது
கேட்கத் தெரியாமல் கேட்கிறான்
அவர்கள் மௌனமாகப் புன்னகைக்கின்றனர்
அந்த புன்னகை
மகிழ்ச்சிக்கானது
என
அவனுக்குப்
புரிகிறது

Thursday 7 October 2021

ஆண்டவன் கட்டளை

இன்று காலை எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். 

இங்கேயிருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு ஊரைக் குறிப்பிட்டு அங்கே உள்ள சிவாலயத்துக்குச் சென்று வருவோமா என்று கேட்டேன். 

நண்பர் ‘’சரி’’ என்றார். 

ஒரு சிறு கிராமம். சிறியதாய் ஒரு திருக்குளம் கோவிலுக்கு எதிரில். கோவில் அர்ச்சகரும் சிப்பந்தி ஒருவரும் மட்டுமே நாங்கள் சென்ற நேரத்தில் இருந்தனர். அர்ச்சகர் சுவாமிக்கு பிரசாதத்தை நிவேதனம் செய்து கொண்டிருந்தார். சிப்பந்தி மலர்மாலை கட்டிக் கொண்டிருந்தார்.  ஏகாந்தமான சூழ்நிலை நிறைந்திருக்க சிவனை வணங்கினோம். 

புறப்படும் போது நண்பர் சொன்னார் : ‘’நமக்கு கிடைச்ச தரிசனம் இன்னும் பல பேருக்கு கிடைக்கணும் பிரபு’’

அவர் உணர்ச்சிகரமாயிருக்கிறார் எனப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தேன். 

’’இந்த ரூட் டூரிஸ்ட் அதிகம் பயன்படுத்தற ரூட். அவங்களுக்கு இங்க இப்படி ஒரு கோயில் இருக்குன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. எதிரே இருக்கற பகுதியை ஒரு நந்தவனம் மாதிரி ரெடி பண்ணோம்னா இன்னும் நிறைய பேர் தினமும் வருவாங்க’’

’’செஞ்சிருவோம் அண்ணன்.’’ 

’’காவிரி போற்றுதும் - நிறைநிலவுச் சந்திப்பு’’க்கு  ஒரு மாதத்துக்கான திட்டம் கிடைத்தது என்று எண்ணினேன். 

‘’அப்படியே கோயிலோட சிறப்பை எடுத்துச் சொல்ற மாதிரி ஒரு போர்டு வைப்போம். ஃபிளக்ஸ்ல இல்லாம ஆண்டிக் அண்ட் டிரடிஷனல் லுக் இருக்கற மாதிரி செஞ்சு வைப்போம் அண்ணன்’’ என்றேன் நான். 

Wednesday 6 October 2021

இந்திய வழி

 

{நூல் : இந்திய வழி - நிச்சயமற்ற உலகுக்கான வியூகங்கள்  ஆசிரியர் : எஸ். ஜெய்சங்கர்  வெளியீடு : தி இந்து தமிழ் திசை  விலை : ரூ. 350}  

ராஜதந்திரிகளின் நூல்களை நான் ஆர்வத்துடன் வாசிப்பதுண்டு. அவர்களுடைய தொழிலும் வாழ்க்கைமுறையும் சொற்களின் மேல் ’’இரட்டைத் தாழ்ப்பாள்’’  போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கக் கூடியவை. எனினும் பேசியாக வேண்டிய இடத்தில் பேசியாக வேண்டும். செயல்பட வேண்டிய இடத்தில் கட்டாயம் செயல்பட்டாக வேண்டும். சொல்லின் செயலின் நற்பலன்களை எப்போதுமே அளிக்க வேண்டும். விருந்துகள் , மாநாடுகள் என்பவை அவர்கள் வாழ்வின் மேல்பக்கம் என்றால் தேசங்களின் உறவுகள் என்னும் எரிமலை அவர்களுக்கு அடியில் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் தங்கள் அனுபவங்களை முழுமையாக எழுதிட முடியாது. இன்னொரு நபரிடம் சொல்லப்படாது - பகிரப்படாது என்ற உறுதிமொழியுடன் அவர்கள் ஆற்றிய செயல்கள் மிகுதி இருக்கும். இருப்பினும் பல ராஜதந்திரிகள் தங்கள் அனுபவங்களை சுவாரசியமாகவே எழுதியிருக்கின்றனர். ராணுவ, உளவு அதிகாரிகளின் அனுபவங்கள் அளிக்கும் சுவாரசிய வாசக அனுபவத்தினும் மேலான வாசிப்பு அனுபவத்தை அளித்த ராஜதந்திரிகளும் உண்டு. 

’’இந்திய வழி’’ நூல் முற்றிலும் வேறுபட்டது. உலக அரசியல் பலவிதமான மாற்றங்களை இப்போது அடைந்திருக்கிறது. எனவே ராஜதந்திர அணுகுமுறைகளும் மாற்றம் கொண்டுள்ளன. ராஜதந்திரியான ஜெய்சங்கர் அவர்கள் இப்போது வெளியுறவுத் துறையின் அமைச்சராகவும் இருப்பதால் வெளிநாடுகள் - உள்நாடு என எந்த விஷயத்தையும் இணைத்துப் பார்த்து இருபுறமும் செயல்களை முன்னெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். முன்னெடுக்கவும் செய்கிறார். 

உலகம் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்ட பின்னர், ஒரு குறிப்பிட்ட பிரதேசம் சார்ந்த மக்களின் பழக்கங்கள் , தேவைகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு உலகின் வேறு ஏதோ பகுதியில் இருக்கும் பிரதேசம் தனது உற்பத்தியை வடிவமைத்துக் கொள்கிறது. இந்த நிலையில் பொருளாதாரமே யுத்தத்தின் மிகப் பிரதானமான இடத்தை வகிக்கிறது. முன்னர் பல நூற்றாண்டுகளாக இப்படி இருந்திருக்கிறது என்றாலும் முன்னர் உள்ள நிலைமைக்கும் இப்போது உள்ள நிலைமைக்கும் வேறுபாடு உண்டு. பொருளாதாரம் இன்று பல போர்களை நிகழ சாத்தியமில்லாமல் ஆக்கி விடுகின்றன. வேறொரு விதத்தில் சொன்னால் இனி வணிகப் போர்களே போருக்கான களத்தை அமைக்கும். 

இந்தியாவில் நடக்கும் மாற்றங்கள் இன்று உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தியாவின் - இந்தியர்களின் நுகர்வு எவ்விதத்தில் இருக்கிறது என்பது சர்வதேச வணிகத்தின் முக்கிய காரணியாகத் திகழ்கிறது. உதாரணத்துக்கு, இந்தியாவில் மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் எனில் வளைகுடா நாடுகள் அதனால் நேரடியாக பாதிக்கப்படும். மின்சார வாகனங்களுக்கான பாகங்களை நாமே உற்பத்தி செய்வோமாயின் அன்னியச் செலாவணி நமக்கு பெரும் மிச்சமாகும். சர்வதேச சந்தையை பாதிக்கும் இச்செயல் இந்தியர்களின் நுகர்வு பழக்கத்தில் இருக்கிறது. 

இந்நூலில் ஆசிரியர், வாய்ப்பு உள்ள இடங்களில் இணைந்து செயல்படுவது மோத வேண்டிய இடங்களில் மோதிக் கொள்வது என்பதே இன்றைய உலகின் ராஜதந்திரமாக இருக்கும் என்று தெரிவிக்கிறார். 

மும்பை நகரம் பாகிஸ்தானால் ஏவப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட  போது இந்தியா பதிலடி கொடுக்காமல் அமைதி காத்தது சாமானிய இந்தியர்களின் மனநிலையை சுக்குநூறாக்கியது.  யூரி - பதான்கோட் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி ‘’சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’’ ஆக இருந்தது. தன் பணியைச் செய்ய இந்திய ராணுவம் எந்த எல்லை வரையும் செல்லும் என்ற உறுதியான தகவல் உலகுக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களையும் சுட்டிக்காட்டி மாறியிருக்கும் இந்திய அணுகுமுறையை குறிப்பிடுகிறார் ஆசிரியர். 

இந்திய ஒற்றுமை என்பது சர்வதேச அரங்கில் இந்தியா முதன்மை பெற முக்கியமான தேவை என்பதை எடுத்துரைக்கும் ஆசிரியர் இந்திய ஒற்றுமையைக் குலைக்க கருத்தியல் தளத்தில் செயல்படும் சக்திகளை - அவர்களுக்குப் பின்னால் இருக்கும் நாடுகளை - இந்தியர்கள் அடையாளம் காண்பது நலம் பயக்கும் எனக் கருதுகிறார்.  

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவின் ராஜீய உறவுகளை பலகட்டங்களாகப் பிரித்து தன் அபிப்ராயங்களைத் தெரிவித்திருக்கிறார். சர்வதேச உறவுகளையும் சர்வதேச வணிகத்தையும் நாடுகளின் சமூகவியலையும் குறித்து சாமானிய வாசகனுக்கும் தெளிவாக விளங்கும்படி எழுதப்பட்ட நூல். 

Tuesday 5 October 2021

தேவி

 நீ
ஒளிகளால்
தளிர்களால்
நீர்மையால்
ஆக்கப்பட்டுள்ளாய்
நித்தம் நிகழ்கிறது உன் மலர்தல்
மரணமில்லாப் பெருநிலை
வாய்க்கப் பெற்றவன்
உன்னை நோக்கி
எடுத்து வைக்கிறான்
ஒவ்வொரு அடியாக
முடிவின்மையில்

Saturday 2 October 2021

நிறைநிலவுச் சந்திப்புகள் - ‘’காவிரி போற்றுதும்’’

’’காவிரி போற்றுதும்’’ தன் செயல்பாடுகளைத் துவக்கி 18 மாதங்கள் ஆகிறது. ஒரு சிறிய குழுவால் எத்தனை முயற்சிகள் மேற்கொள்ள முடியுமோ அத்தனையையும் முயன்று பார்த்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்ற வேண்டிய பணிகள் கடல் போல் முன்னால் விரிந்து கிடக்கின்றன. எந்த நீண்ட பயணமும் சிறிய உறுதியான முதல் அடியிலிருந்தே துவங்குகிறது. பெரும் சவால் நிறைந்த ஒரு காலகட்டத்திலும் ‘’காவிரி போற்றுதும்’’ உறுதியான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது. 

பழக்கமான வழமையான பாணிகள் இன்றி, நட்பாலும் சரியான புரிதலாலும் பிரியத்தாலும் பரஸ்பர நம்பிக்கையாலும் தம் செயல்களை ஆற்றியது ‘’காவிரி போற்றுதும்’’. இனியும் அவ்வாறே நிகழும். 

ஒவ்வொரு மாதமும் நிறைநிலவு தினத்தன்று இரவு 7 மணிக்கு குழு நண்பர்கள் சந்தித்து உரையாடி சென்ற மாதத்தில் நிகழ்ந்த பணிகளை மதிப்பிட்டு வரும் மாதத்தில் ஆற்ற வேண்டிய பணிகளைக் குறித்து விவாதித்து திட்டமிடலாம் என எண்ணம். ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஓர் நற்செயலைத் திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும் என்பது விருப்பம். 

மகாத்மாவின் ஜெயந்தி தினத்தில் இந்த முன்னெடுப்பை அறிவிப்பது மகிழ்ச்சி தருகிறது. 

02.10.2021