Friday 31 May 2019

மகாத்மா - ஒரு செயல்திட்டம்

இந்திய சமூகம் ஒருங்கிணைய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் தங்கள் பணியை மகாத்மாவிலிருந்தே துவக்குகிறார்கள். மகாத்மாவின் வாழ்க்கையும் சொற்களும் நம்மை எப்போதும் வழிநடத்தக் கூடியதாக இருக்கின்றன. இன்றைய இளைய தலைமுறைக்கு மகாத்மா குறித்த அறிமுகத்தை அளிக்க கிராமங்களுக்குச் சென்று இளைஞர்களைச் சந்திக்கலாம் என்று இருக்கிறேன். நாம் யார் - நமது சமூகத்தின் இன்றைய நிலை என்ன- நமது விடுதலைப் போராட்டத்தில் காந்தி எவ்விதமான பங்காற்றினார்- நமது சமூகம் எப்படி இருக்க வேண்டும் என அவர் விரும்பினார்- போன்ற பல விஷயங்களை இன்றைய இளைஞர்களுக்குத் தெரிவிக்கலாம் என்று எண்ணுகிறேன். 

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் லூயி ஃபிஷரின் ‘’லைஃப் ஆஃப் மகாத்மா காந்தி’’ நூலை வாசித்தேன். அந்நூல் எனக்கு பெரும் ஆறுதல் அளித்தது. நம்மை எப்போதும் மன்னிக்கும் நேசிக்கும் மண்ணின் மகத்தான மனிதனை அறிய நேரிட்டதன் ஆறுதல் அது. பின்னர் வாசித்த ஜெயமோகனின் ‘’இன்றைய காந்தி’’. காந்தி மீது அரசியல் காழ்ப்புணர்வால் முன்வைக்கப்படும் பொய்யான பல குற்றச்சாட்டுகளுக்கான பதிலை முன்வைத்தது. 

காந்தியை அறிமுகம் செய்து கொள்வதன் மூலம் சுருக்கமாக இந்திய வரலாறு குறித்த அறிமுகத்தை இளைஞர்கள் பெற முடியும். 

சில நாட்களுக்கு முன்னால் எழுந்த எண்ணம் இது. நான் முக்கியமான காந்தி குறித்த நூல்களை வாசித்தவன். இப்போது அவற்றை மீண்டும் வாசிக்க உள்ளேன். நண்பர்கள் சிலரிடம் இதனை எவ்விதமாக முன்னெடுக்கலாம் என ஆலோசனை கேட்டுள்ளேன். அவர்கள் பயனுள்ள சில ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த விஷயம் தொடர்பாக முன்னெடுக்கும் செயல்களை தளத்தில் தொடர்ந்து பதிவிடுகிறேன்.

காந்திய வழிமுறைப்படி, சிறு அளவில் துவங்கி செய்து பார்க்கலாம் என உத்தேசித்துள்ளேன். ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள இளைஞர்களைச் சந்தித்து ஒரு மரத்தடியில் அல்லது ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து எளிய முறையிலான உரையாடல் மூலம் கூற நினைப்பதைக் கூறுவது எனத் திட்டமிட்டுள்ளேன். இதில் பொருட்செலவு ஏதுமில்லை. நேரம் கொடுத்தால் மட்டும் போதும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கொடுத்தால் கூட போதும். கிராமப்புற இளைஞர்கள் எவ்விதம் எதிர்கொண்டார்கள்- எவ்விதம் புரிந்து கொள்கிறார்கள்- என்ன கேள்விகள் அவர்களுக்கு காந்தியைக் குறித்து இருக்கின்றன என்பதை அவதானிக்கவும் நேரடியாகப் புரிந்து கொள்ளவும் முடியும். அவை நம் நிகழ்காலத்தை நமக்கு உணர்த்தும். வெள்ள நிவாரணப் பணிகளில் நிவாரண உதவிகளைச் சேகரித்த மக்களுக்கு வழங்கிய கள அனுபவம் எனக்கு உண்டு. காந்தி குறித்த செயல்திட்டம் குறித்து தங்கள் எண்ணங்களையும் அபிப்ராயங்களையும்  எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளையும் வழங்குமாறு நண்பர்களையும் வாசகர்களையும் கேட்டுக் கொள்கிறேன். சிறு ஆலோசனையும் திட்டமிடுதலிலும் செயலாக்கத்திலும் மிக முக்கியமானதாக  இருக்கக் கூடும்.

 எனது மின்னஞ்சல் முகவரி : ulagelam(at)gmail(dot)com

Thursday 30 May 2019

உச்சிக்காலம்

அறிவுப் பெருவெளியில்
ஆடிக் கொண்டிருக்கிறான்
ஆடலரசன்
அக்னி நட்சத்திர அனல்
காய்கிறது
வெளிப் பிரகாரத்தில்
கைக்குழந்தையைச் சுமக்கும் பெண்ணின்
ஒரு கையை கெட்டியாக பிடித்துக் கொள்கிறான்
குழந்தைக்கு மூத்தவன்
சுடராட்டின் போது
பரவசம் கொள்ளும் தாய்க்கு
எப்போதுமே
பிராத்தனை ஒன்று
வெண்கல மணியை
தூரத்தில் கேட்கிறார்
கோவிந்தராஜன்
காலத்தின் உச்சியில்
சயனித்திருப்பவனும்
ஓயாமல் ஆடுபவனும்
அருகருகே
நடை சாத்தி விட்டு
சாயரட்சை எத்தனை மணிக்கு
என்று
சொல்லி அனுப்புகிறார்
தீட்சிதர்

Wednesday 29 May 2019

காட்சி

உன் இருப்பு
மூச்சிறைக்க வைத்த
என் அகங்காரங்களைக்
கரைத்தது
அவை உன் உலகில் இல்லை
அப்படி சில இருக்கக்கூடும்
என்ற சாத்தியமே
உன் எண்ணங்களில் இல்லை
குழந்தைகளும் பெண்களும்
பண்டிகைக்கு
ஆர்வமாக
வீட்டை  அலங்கரிப்பது போல
நான் மகிழ்ந்திருந்தேன்
பட்சிகளும் புல்வெளிகளும்
குளிர் தரு நிழல்களும்
என் உலகமாய் ஆனது
இப்போது
உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
இவ்வளவு பெரிய உலகில்

தொடர்

சில வார்த்தைகள்
சொல்ல முடியாமல் போகின்றன
அறைக்குள் மேகங்கள் மிதக்கின்றன
கரண்ட் கட் ஆனதும்
காணாமல் போகிறது வெளிச்சம்
இருளில் இருக்கிறது டார்ச்
டார்ச்சில் வெளிச்சம்

Tuesday 28 May 2019

அன்பின் பொழுதுகள்

உன்னுடைய ஓர் இமையசைவு
எப்போதோ சில கணங்களில்
மிக மெலிதாய் உச்சரித்த
மென்குரல் சொற்கள்
ஒரு கணத்தின் புன்னகையில்
பூத்திருந்த உனது  உடல்
தலை சாய்த்த பார்வைகள்
திரும்பத் திரும்ப
நாட்கள் வருவது போல
இல்லாவிட்டாலும்
அன்பின் பொழுதுகள்
எப்போதாவது வரும்தானே?

கண்ணீர் சிந்தும் போது

ஒரு துக்கத்தில்
ஒரு வேதனையில்
ஒரு கசப்பில்
கண்ணீர் சிந்தும் போது
பால்ய நினைவுகள்
தொடர்பில்லாமல் வருகின்றன
பிரியம் காட்டிய சிலரின் குரல் கேட்கிறது
எப்போதோ
இறந்து போனவர்கள் முகத்தை
கடைசியாகப் பார்த்த
நினைவு
இதோ
வந்து விடுகிறேன்
என்று
தனியாக விடப்பட்ட
யாருமற்ற இடத்தில்
ரொம்ப நேரமாய்
காத்திருந்தது
ஞாபகம் வருகிறது

Monday 27 May 2019

தனித்திருப்பவர்கள்

தனித்திருப்பவர்கள்
சொல்ல விரும்பும் சில சொற்களை
மீண்டும் மீண்டும்
சொல்லிப் பார்த்துக் கொள்கின்றனர்
அவை
சொல்லப்படுவதற்கான
சந்தர்ப்பம்
வராமலே போகக் கூடும்
என்பதை
உள்ளூற மனதில் அறிந்திருந்தாலும்
எஞ்சும் ஒரு நம்பிக்கையை
வெறுமனே பார்க்கிறார்கள்
எஞ்சிய நம்பிக்கை
அவர்களை
நூதனமாக்குகிறது
தனித்திருப்பவர்கள்
கண்ணீர் சிந்த விரும்புகிறார்கள்
அவர்கள்
கண்ணீருக்குப் பின்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
இந்த பூமியின் பாரம்
அவர்கள் தோளில்
இன்னும் கூடுகிறது

Sunday 26 May 2019

வேறேதும்

அன்பின் நீர்மை
நிறையும்தோறும்
மென்மையாகிக் கொண்டேயிருக்கிறது
நீர்மத்திலிருந்து
நீராவியாக
கரையும் அகத்தில்
எதுவுமே இல்லை
கரைதலைத் தவிர
வாழ்க்கையில்
வாழ்வைத் தவிர
வேறேதும்
இருக்கிறதா என்ன?

Friday 24 May 2019

தேர்தல்


1989ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் எனது நினைவில் இருக்கிறது. அப்போது நாங்கள் பாபநாசத்தில் குடியிருந்தோம். எனக்கு எட்டு வயது. பாபநாசம் தொகுதியின் வேட்பாளர்களில் ஒருவர் ஜி. கே. மூப்பனார். அவருக்கு ஆதரவாக பரப்புரை செய்ய அன்றைய பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தி கும்பகோணம் வந்திருந்தார். கல்லூரி மைதானம் ஒன்றில் ராஜிவின் ஹெலிகாப்டர் வந்திறங்கியது நினைவில் இருக்கிறது. அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னால் ராஜிவை சீர்காழியில்  பார்த்தேன். தனது ஜீப்பை தானே ஓட்டியவாறு வந்தார். உடன் பயணித்தவர் சோனியா. ’89 சட்டசபை தேர்தலில் ஓட்டு கேட்டு மூப்பனார் எங்கள் தெருவுக்கு பலமுறை வந்தார். நான் மூப்பனார் வெற்றி பெற வேண்டும் என விரும்பினேன். தி.மு.க காரர்கள் ஓட்டு கேட்டு வீட்டுக்கு வந்த போது நான் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையா என்று கேட்டனர். இருக்கிறார்கள் ஆனால் எங்கள் வீட்டில் எல்லாரும் மூப்பனாருக்குத்தான் ஓட்டு போடுவோம் என்று சொன்னேன். எனது அரசியல் அவதானம் அங்கிருந்தே தொடங்கியது.

எனது பாட்டனார் காந்தியைப் பார்த்திருக்கிறார். தீவிரமான காங்கிரஸ் ஈடுபாடு கொண்டவர். எனது தந்தை காமராஜர் மேல் பெரும் அபிமானம் கொண்டவர். அவரே எனக்கு இந்தியா குறித்த இந்திய தேசியம் குறித்த துவக்கச் சித்திரங்களை அளித்தார். அவரது சொற்கள் வழியாகவே இந்திய அரசியல் குறித்த அபிப்ராயங்கள் எனக்கு உருவாயின. வீட்டில் அனைவரும்  தினமணி வாசகர்கள். அப்போது அதன் ஆசிரியர் திரு. ஏ. என். சிவராமன். அப்பா துக்ளக் வாங்குவார். சட்டசபை, திராவிடக் கட்சிகளின் பொதுக்குழு ஆகியவற்றுக்கு கூட்டமாக கழுதைகள் செல்லும் கார்ட்டூன்கள் அரசியலை வேறு கோணத்தில் காண வைத்தன. தினமணியில் வந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விளம்பரம் ஒன்று ‘’காங்கிரஸ் என்றால் மக்கள்’’ என்றது. மாடு மேய்ப்பவர்கள் கைகளுக்குக் கூட ரேடியோவை கொண்டு சேர்த்திருக்கிறோம் என்றது.

நான் வி.பி.சிங்கை விரும்பினேன். அவர் நம்பத் தகுந்தவர் என்று தோன்றியது. அவரது தோற்றம், மெல்லிய புன்னகை, மென்குரல், அவரது கம்பளித் தொப்பி ஆகியவை அவரை மனதுக்கு அணுக்கமாக ஆக்கின. அவரது அமைச்சரவை சகாவான ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸும் மனதுக்குப் பிரியமானவர் ஆனார். அவர்கள் வழியே ஜெயப்பிரகாஷ் நாராயணன் குறித்து அறிந்தேன். நெருக்கடி நிலை குறித்த செய்திகளையும்.

அறிஞர் என்பதால் நரசிம்ம ராவ் மீது பெரும் மதிப்பு இருந்தது. பலமொழிகள் பேசத் தெரிந்தவர். பார்ப்பதற்கு சாதுவானவர். ஆனால் உறுதியாகச் செயல்படக் கூடியவர் என்பது அவர் மீதான விருப்பத்துக்கு காரணமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் ‘’இந்தியா டுடே’’ தமிழ் இதழ் வாசிப்பேன். அதன் வண்ணப்படங்கள். புள்ளிவிவரங்கள். கருத்துக்கணிப்புகள் ஆகியவை ஆர்வமளித்தன.

1996ல் வாஜ்பாய் ஆட்சியமைக்க அழைக்கப்பட்டார். மாநிலக் கட்சிகள் அவரை ஆதரித்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். பதிமூன்று நாட்களே அந்த அரசு நீடித்தது. பின்னர் ‘98ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்தது. பதிமூன்று மாதங்கள் நீடித்த அந்த அரசு ஒரு வாக்கில் தோற்றது வருத்தம் தந்தது. அப்போது எனக்கு 18 வயது. ‘99ம் ஆண்டு எனது முதல் வாக்கை பதிவு செய்தேன்.

எனது அரசியல் ஆர்வமும் ஈடுபாடும் பலவிதமான நூல்களைத் தேடிப் படிக்க வைத்தன. மார்க்ஸியம் குறித்து வாசித்தேன். ஆயுதப் போராட்டங்கள் குறித்து படித்தேன். உலகப் போர்கள் குறித்து படித்தேன். இந்திய வரலாற்றை வாசித்தேன். லூயி ஃபிஷரின் ‘’தி லைஃப் ஆஃப் மகாத்மா காந்தி’’ வழியாக மகாத்மா காந்தியிடம் வந்து சேர்ந்தேன்.

ஓர் எழுத்தாளனாக இன்று நான் அரசியலைப் புரிந்து கொள்ளும் விதம் முற்றிலும் வேறானது. தகவல் தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியனையும் சென்று சேர்ந்திருக்கும் இக்காலகட்டத்தில் மக்களாட்சியின் அடிப்படை அலகான மக்கள் சமூகப் பிரக்ஞை கொண்டிருப்பதும் சமூகத்தில் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றுவதுமே எல்லாருக்கும் நன்மை தரும். ஜனநாயகத்தில் எல்லா அரசியல் கட்சிகளுமே மக்களின் கருவிகளே. மக்களை குடிமைப் பண்புகளுக்கு பயிற்றுவிக்கும் அரசியலே இப்போது தேவை. 

இந்திய சமூகம் மேலும் சமூகப் பிரக்ஞை கொள்ளட்டும். 



தனிமை

கால்கள் நீரில் நனைய
அலைகடல் முன்
நிற்பவன்
உணரும் தனிமை
எத்தன்மையது?

Thursday 23 May 2019

உறங்குவது போலும்

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
- திருக்குறள்

நடைபாதைக் கடையில்
ஈரம்சொட்டிக் கொண்டிருக்கும்
விரிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தாளுக்கு மேலே
அடுக்கி வைக்கப்பட்டுள்ள
கொய்மலர்கள்
புத்தம் புதிதாய்ப் பார்க்கின்றன
மா நகரத்தின் அதிகாலை பாதசாரிகளை
அங்காடிக் காய்கறிகள் பசுமை
பேரன்பாய் நிறைந்து
பயணப்படுகின்றது
வயர் கூடைகளுக்கு வெளியே
தலைநீட்டிக் கொண்டு
பரபரப்பாக அடுப்பை பற்ற வைக்கிறாள்
தோசைக்கடை வைத்திருக்கும் பெண்
எரிவாயு அடுப்பின் ரீங்காரம்
அறிவிக்கிறது
அவகாசத்தையும் அவசரத்தையும்
உறங்கி விழித்தவர்கள் முன்னால்
எல்லையற்று
விரிந்து கிடக்கிறது
இந்த உலகம்

Wednesday 22 May 2019

இடம்

இடம்
அன்பு செலுத்துகிறது
அறிந்திருக்கிறீர்களா?
மனமின்றி
தவிர்க்க முடியாமல்
நீங்கிச் சென்ற
பயணியை
எப்போதும் பிரியத்துடன்
அழைக்கிறது
அன்பின்
நதிக்கரை படித்துறைகள்
சிறு குன்றின் அந்திகள்
அலைகளற்ற சமுத்திரங்கள்
மௌனமான வனப்பாதைகள்

Tuesday 21 May 2019

குரல்

ஆற்று மணலில்
கதைகேட்டு நடந்தவன்
எதிரே
ஒரு கரை இருந்தது
பின்னால்
அவன் இறங்கி வந்த கரை
ஆற்றின் பெரும்பாதி மணல்
ஆற்றின் சிறுபாதி ஓட்டம்
பாட்டி இரவின் கதையை
உச்சிவெயிலில் சொல்கிறாள்
ஐயனார் குதிரையில் வந்த கதை
அனுமன் லங்கை போன கதை
பெண்ணின் கண்ணீரை தெய்வம் சகியாது
பாட்டி உறுதியாய் சொல்கிறாள்
ஐயனாரின் குதிரை அவ்வப்போது கனைப்பது
கேட்கிறது கதை கேட்டு நடப்பவனுக்கு
சில அழுகுரல்களும்

தன்னைப் போல்

சமீபத்தில்
பட்டறையை மூடிய கார் மெக்கானிக்
ஒரு டூ-வீலர் ஒர்க் ஷாப்பில் அமர்ந்திருக்கிறார்
ஒரு சின்ன ஸ்டூலில்
டூ-வீலர் மெக்கானிக்களுக்கு
அவரால் எந்த விதத்திலும் உதவமுடியவில்லை
அது அவரை சங்கடப்படுத்துகிறது
ஏதோ ஒரு வெளியூர் கார்
சாலையில் நின்று போகும் போது
ஊர்க்காரர்கள்
ஊரில் இருக்கும் ஒரே மெக்கானிக்
என அடையாளப்படுத்தி
இவர் இருக்கும் இடம் சொல்லி
அனுப்பிவைக்கின்றனர்
ஒரு சிறு மூட்டையாய் கட்டப்பட்டிருக்கும்
அவரது உபகரணங்கள் முழுமையாக ஒத்துழைக்கின்றன
சிக்கல்களை சரிசெய்து விடுகிறார்
ஒரு நாளைக்கு இரண்டு மூன்று வாகனமாவது
வேலைக்கு வருகிறது
ஒரு வேப்ப மர நிழலில்
காரை நிறுத்தி வசதியாக வேலைபார்க்கிறார்
மழைக்காலத்தில் எப்படி வேலை செய்வீர்கள்
கேட்கிறான் காரில் பயணித்த குடும்பத்தின் சுட்டிப்பையன்
வானத்தைக் காட்டி
தெய்வம் உதவி செய்யும் என்கிறார்
நீங்கள் எங்களுக்குச் செய்தது போலவா
என்கிறான் சுட்டிப்பையன்

ஒரு புதிய சூரியன்

ஒரு புதிய சூரியன் உதித்தது
சிலர் காத்திருந்து பார்த்தனர்
பார்க்காமல்  இருந்தனர்  பலர்
சூரியனே இல்லாத உலகில் வாழ்ந்து கொண்டிருந்தனர் சிலர்
புதிய சூரியன் உதித்த போது
ஒரு புதிய இடத்தில்
புதிதாய் ஆரம்பிப்பது போல
புதிய துவக்கத்தை நோக்கி
நடக்கத் தொடங்கினர்
சங்கடங்கள் ஏதும் இல்லை
என மனம் சொன்னதை
அதானே
என்பது போல் வியந்தனர்
உலகம் பழையதாய் இருந்தாலும்
ஒரு புதிய சூரியன்
புதிதாக ஏதும் செய்யும்
அல்லது
பழையவற்றிலிருந்து
வழக்கம் போல் மீட்கும்
என்று நம்பத் தொடங்கினர்
நடைபாதையில்
உருண்ட ரப்பர் பந்து
அப்போது ஆடத் துவங்கியிருந்த
பாலர் மைதானத்திலிருந்து
தரையிலிருந்து தரைக்கு
மட்டை காற்று மார்க்கமாக
வந்திருந்தது

மர்ஃபியின் அன்பு

மர்ஃபி சிறுகை அளாவிய பண்டங்களை
எப்போதும்
பகிர்ந்து கொடுப்பான்
சிறு குழந்தையாய் இருந்ததிலிருந்தே
அவன் நெகிழும் மென்குரலில்
பிரியமாய் அழைப்பான்
அவனது ஒவ்வொரு அழைப்புக்கும்
வானில் ஒரு மீன் கண்சிமிட்டும்
ஓடி விளையாடி மூச்சிறைக்கும் போது
புதிதாய் பூக்கும் சிறுமலர்கள்
அவன் மகிழும் தருணம்
ஒவ்வொன்றிலும்
கடவுள் நிம்மதியடைகிறார்
இந்த உலகு பற்றி

Monday 20 May 2019

கதை ஆனது

அதாவது
கதை என்ன ஆனது என்றால்
எல்லாரும் எதிர்பார்த்த
எல்லார் கவனமும் கூரான
இடம்
எல்லார் ஞாபகத்திலும் இருந்தது
ஆனால்
கதாபாத்திரங்கள்
கதையில் அந்த இடத்தை
தன் போக்குக்கு
மாற்றியமைத்துப் பார்த்தனர்
எங்கேயோயிருந்த வெட்டவெளி
இங்கே வந்து சேர்ந்தது
மேய புல் தேடிய சில ஆட்டுக்குட்டிகள்
சுவாரசியமில்லாமல் கடந்து சென்றன
களத்துமேட்டில் பல நாளாக நின்ற டிராக்டரை
இழுத்து வந்து போட்டனர்
சட்டெனக் கூடிய ஒரு கும்பல் வாய்ச்சண்டையில் இறங்கியது
சுவாரசியமாகக் கதை கேட்டவர்கள்
கதை என்ன ஆனது
கதை என்ன ஆனது
என்றனர்
நான் தான் சொல்கிறேனே
என்றான்
வெட்டவெளியின் கதை சொல்லும்
கதைசொல்லி

உச்சி

கதவுகள் மூடியிருக்கின்றன
விதவிதமான கதவுகள்
விதவிதமான கதவடைப்புகள்
யாரோ சிலர் வாசலில் தயங்கி நிற்கிறார்கள்
கலைந்து கிடக்கும் செருப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
உச்சிவெயிலில் வீதியில் தனியாக
நடந்து செல்கின்றனர் வழிப்போக்கர்
குடிக்க தண்ணீர் வேண்டும்
பார்வையில் நிரம்பி
மெல்ல வயிற்றில் நிரம்பும்
குளிர்ந்த நீர்
வேப்பமர நிழலில்
முத்து மாரியம்மன்
வந்து சேர்ந்த
நாதஸ்வர கோஷ்டி
தவில் நாதஸ்வரத்தை
பத்திரப்படுத்தி விட்டு
துண்டை விரித்துப் படுக்கிறது
கிளைகளில் கிரீச்சிடுகின்றன
அவ்வப்போது
சில குருவிகள் 

யாத்திரை

அவியிடுகிறோம்
நாள் என்னும் தீயில்
எங்கள் துயரங்களை
எங்கள் கண்ணீரை
இன்னும் சொல்லாக்காமல் இருக்கும்
எங்கள் உணர்வுகளை

எங்கள் உடல்கள் இன்னும் உழைக்கட்டும்
எங்கள் மனங்கள் இன்னும் விரியட்டும்
எங்கள் உணர்வுகள் வானளவு உயரட்டும்

கணமும் ஓயாமல்
இமைப்பொழுதும் சோராமல்
மெய்வருத்தம் பாராமல்
ஒவ்வொரு
சிற்றடிகளாய்
உறுதியாய்
முன்னேறும்
எம் பயணம் தொடரட்டும்
எம் பயணம் தொடரட்டும்

மர்ஃபியின் கோடை

கோடை விடுமுறை
மர்ஃபிக்கு பொழுதுகள் சரியாக இருக்கின்றன
வேலையும் நிறைய இருக்கிறது
பள்ளியின் நேரத்தில்
எங்கெங்கோ
சுற்றிக் கொண்டிருப்பது
அவனுக்கு உற்சாகமாக இருக்கிறது
ரைஸ்மில்லுக்குப் போகிறான்
மளிகைக் கடைக்குப் போகிறான்
மெக்கானிக் ஷாப்புக்குப் போகிறான்
இந்த உலகம்
பெரிதாக இருப்பதாகவும்
நிறைய பேர் இருப்பதாகவும்
எண்ணிக் கொள்கிறான்
எல்லாம் நன்றாக நடக்கின்றன
புதிதாக என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான்
விமானம் இருந்தால் பறக்கலாம்
பறத்தலுக்கு முடிவே இல்லை
பறத்தலுக்கு சலிப்பே இல்லை
பறவையைப் போல

Sunday 19 May 2019

அகம்

வீட்டில் எங்கும் ஒட்டடையே இருக்கக் கூடாது
உனது கண்டிப்பான ஆணை
வாகனங்கள் தினமும் தூய்மையாக துடைத்து இருக்க வேண்டும்
உனது எதிர்பார்ப்பு
எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்
உனது விருப்பம்
பொருட்கள் ஏதேனும் பழுதடைந்தால் உடனே சீர் செய்ய வேண்டும்
உனது எண்ணம்
நீ நிறைந்திருக்கிறாய்
நமது அகத்தில்
நீ நிறைந்திருக்கிறாய்
என் அகமாய் 

Saturday 18 May 2019

பாறை நீர் மென்மை

ஒரு பேரழகுக்கு முன்னால்
நுண்ணிய மென்மை அடர்ந்திருக்கும்
பெருமௌனத்தின் முன்னால்
கணங்களை ஒளிரச் செய்யும்
அன்பின் அற்புதங்களுக்கு முன்னால்
ஓர் எளிய மனம் வழங்கும்
மன்னிப்பின் முன்னால்

வெள்ளம்
சில நாட்கள்
வடிந்த
நதியின் தடத்தின்
பாறை வழுவழுப்பை

மழலை மாறா
தன் உள்ளங்கைகளால்
ஒட்டி
எடுத்துச் செல்கிறான்
இன்னும் நடை பயிலா குழந்தை

Friday 17 May 2019

அலை அகம்

நீ அளித்தது
ஒரு வார்த்தை
நீ வழங்கியது
மாசில் புன்னகையின்
ஓர் ஒளிக் கீற்றை
உன் கண்களில் திரண்ட
நீர்த்திரையின்  அடர்த்தியில்
பனிப்புகையாய்
அலைகிறது
அக நிலம்

Thursday 16 May 2019

மழை இரை

முன்காலையிலேயே
கோடை  அனல்
பற்றத் துவங்கியிருக்கிறது
அந்தக் கிராமத்தில்
காயும் வெயிலின்
அதிகாரம்
நீர்த்தாகமாய்
நிறைகிறது உயிர்களிடம்
ஈரமற்ற குளத்தின் கரையில்
பேரால மரங்கள் மூன்று
அதன் கிளையில்
இடைவிடாது சலம்புகின்றன
சிறு புள்ளினங்கள்
மேகமற்ற வானத்திடம்
யாவர்க்கும்
நீர் கேட்டு
யாசிக்கிறான்
எதையோ
தேடி வந்த ஒருவன் 

Wednesday 15 May 2019

ஆக்கம்

இந்த வாழ்க்கை நாடகத்தில்
நாடக மேடைகள்
காட்சி முடிந்த பின்னர்
வெறிச்சோடி இருக்கின்றன
ஒப்பனை அறைகள் கலைந்து போயின
நடிகர்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்
அன்னையுடன் வந்திருந்த சிறுவன்
நினைவில் நீங்காமல் இருந்த ஒரு வசனத்தை
உறங்கச் செல்லும் முன்
மெல்ல
சொல்லிப் பார்க்கிறான்
எங்கெங்கோ தொடங்குகின்றன ஒத்திகைகள்

Tuesday 14 May 2019

நீர்மரம்

நீ
அறையில்
அமர்ந்திருக்கும் போது
உன் வானில்
மேகங்களுக்கு நடுவே பறந்தமர்ந்த
தோகைமயிலின் பீலியை
இருபுறமும் பார்த்து விட்டு
மேஜை மேல் வைக்கிறாய்
அக்கண்கள் உன் கண்களை
ஓயாமல் நோக்குகின்றன

பீலியின் கண்கள்
காணும்
இரு வைரங்கள்
முன்னர்
பேருறக்கம் கொண்டிருந்தன

அகழப்பட்ட போது
ஆழங்கள்
அளித்தன
கணந்தோறும்
தாம் புரிந்த தவத்தை

ஆழங்களின் தவத்துக்கு
இறைவன்
அளித்தது
தன்னின் ஒரு துளி

ஒரு துளி நீர்
ஆன
மாபெரும்
நீராலான
நீர்மரமாய்
நீ
ஆனாய்

உன் விரல் நகங்களில்
நீண்ட கைகளில்
மென் தோள்களில்
பறக்கும் கூந்தல் இழைகளில்
கூட்டமாய் அமர்ந்தன
பூமியின் பறவைகள்

இன்னும் உலகறியாத
குழவிப்புள்
வற்றாமல் இருப்பது எது
என்று கேட்ட போது
தாய்ப்புள் சொன்னது
தொட்டனைத்தூறும்
அன்பின் ஊற்றுக்கள்

ஜி எஸ் எம் ஃபோனும் ஸ்மார்ட் ஃபோனும்

நான் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்ளவில்லை. வாட்ஸப்பில் இல்லை. வேறு எந்த சமூக ஊடகத்திலும் இல்லை. 2004ம் ஆண்டிலிருந்து அலைபேசி பயன்படுத்துகிறேன். இப்போது பயன்படுத்துவது என்னுடைய மூன்றாவது அலைபேசி. அலைபேசி பயன்படுத்த ஆரம்பித்த நாளிலிருந்து நான் சில நியதிகளைப் பின்பற்றுகிறேன். நான் ஒருவரைச் சந்திக்க  செல்லும் போது என்னுடைய  செல்ஃபோனை Silent Modeல் வைத்திருப்பேன். ஒருவரை வீட்டிலோ அலுவலகத்திலோ சென்று நான் சந்தித்தால் அவர்கள் என் அலைபேசி ஒலித்துக் கேட்டிருக்கவே முடியாது. அப்போதைய மிஸ்டு கால்களை சந்திப்பு முடிந்ததும் மீண்டும் அழைத்துப் பேசிவிடுவேன். பேச முடியாத சூழ்நிலை இருந்தால் எஸ். எம். எஸ் கொடுத்து விடுவேன். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளைத் தவிர மிகப் பெரும்பாலும் எல்லா மிஸ்டு கால்களையும் மீண்டும் அழைத்துப் பேசிவிடுவேன். அன்றோ அல்லது மறுநாளோ.

ஜி.எஸ்.எம் ஃபோனில் அலாரம் வைத்துக் கொள்வேன். டிராஃப்டில் சில விபரங்களை வைத்திருப்பேன். என்னுடைய லேப்டாப்பில் மின்னஞ்சல்கள் பார்ப்பேன். எழுதுவேன். பிரசுரமான எனது எல்லா எழுத்துக்களும் நான் லேப்டாப்பில் எழுதியவையே.

என்னுடைய கட்டுமானத் தொழில் சார்ந்து நான் பலரை தினமும் சந்திப்பவன். சப்ளையர்கள். தொழிலாளர்கள். வியாபாரிகள், லோடுமேன்கள், சர்க்கார்வாலாக்கள், மீடியேட்டர்கள், வாடிக்கையாளர்கள் என பலரையும் சந்திப்பவன். பலருடன் இணைந்து - பலரை ஒருங்கிணைத்து - செயலாற்றும் தன்மை கொண்ட தொழிலை மேற்கொள்பவன். நேர மேலாண்மையும் ஒருங்கிணையும் பயிற்சியும் எங்கள் தொழிலுக்கு முக்கியமானது. அது என்றுமே எனக்கு லகுவாகவே இருந்திருக்கிறது.

பஸ் பயணங்களிலும் ரயில் பயணங்களிலும் இப்போதும் ஜன்னல் ஓர சீட்டில் ஆர்வமாக அமர்ந்து கொண்டு காட்சிகளை வேடிக்கை பார்க்கிறேன். இந்த உலகம் எத்தனை காட்சிகள் கொண்ட நாடகம் என்ற வியப்பும் ஆர்வமும் இப்போதும் இருக்கிறது. இருபத்து இரண்டு நாட்கள் இந்திய நிலத்தில் மோட்டார் சைக்கிளில்  ரிஷிகேஷ் வரை பயணித்தேன். ஆனால் கையில் அலைபேசி எடுத்துக் கொள்ளவில்லை.

இன்றுவரை பலர் என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்ள சொல்லி பரிந்துரைத்தாலும்  இன்னும் நான் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்ளவில்லை. நான் என்னுடைய லௌகிக செயல்களை ஸ்மார்ட்ஃபோன் இன்றியே நன்றாகச் செய்ய முடிவதாகவே எண்ணுகிறேன்.  இன்று ஒரு நண்பர் 1. ரயில் பயணச்சீட்டு 2. ரயில் முன்பதிவு 3. பீம் செயலி ஆகியவற்றை மட்டும் கொண்ட ஒரு ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

இந்த மூன்றுக்காக அவ்வளவு பெரிய தொகை செலவழிக்க வேண்டுமா என்று மனதில் கேள்வி எழுந்தது.

ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு நான் ஒரு பரிந்துரையை அளிப்பதுண்டு. அதில் Star Gazing App என ஒன்று உண்டு. ஸ்மார்ட்ஃபோன் கேமரா வழியே வானத்தைக் கண்டால் அதில் உள்ள பெயரிடப்பட்ட விண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பெயருடன் அடையாளப்படுத்தும். வானத்தின் புதிர்கள் மேல் ஆர்வம் கொண்டவர்களுக்கு மிகவும் துணையானது. நான் தினமும் இரவு மாடியில் அமர்ந்து வானம் பார்ப்பவன்.

Star Gazingக்காக மட்டும் ஒரு ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தலாமா என்று யோசிக்கிறேன். பேசுவதற்கும் கையில் எடுத்துச் செல்வதற்கும் சாதாரண எளிய ஜி.எஸ்.எம் ஃபோன். Star Gazingக்கு ஸ்மார்ட் ஃபோன். 






Saturday 11 May 2019

வான் நதி கடல்

நதி
கடல் செல்லும்
அலைவாயில்
உன் பாதச்சுவடுகள்
பதிந்திருக்கின்றன
கரை மணலில்
உனக்கு அப்பால்
ஒளிர்ந்து  மறையும்
கலங்கரை விளக்க
ஒளிப்பட்டையை
தொடுவானில் பார்க்கிறாய்
அற்புதக் கணம் ஒன்றில்
உன் உள்ளங்கை விரல்கள்
உன்  கன்னங்களைத் தொட்டுக் கொள்வதைப்
பார்க்கிறேன்
நதி
மெல்ல
சென்று கொண்டிருக்கிறது
கடலுக்குள்

Friday 10 May 2019

அணி

அவள் மிகவும் அழகானவள்
உலகின் மிக அழகிய பெண்களில் ஒருத்தி

அவள் அணிகள்
ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு வளையல்
ஒரே ஒரு வளையல்
மிகச் சிறிதாய்
மிக மிகச் சிறிதாய்
ஒரு ஜோடி தோடு
செவிமடலுக்குக் கீழே
பட்டிழை இடைவெளியில் வளைந்து
உடன்
மேல் செல்லும் தோடு
மெலிந்த
மிக மெல்லிய
ஒற்றைக் கழுத்துச் சங்கிலி

எப்போதும்
எந்த
ரசாயனமும்
பூசிக்  கொள்ளாத முகம்
இருக்கிறதா
இல்லையா
என அறுதியிட முடியாத
சின்னஞ்சிறு
ஸ்டிக்கர் பொட்டு

ஒருநாள் ஒப்புதல்  வாக்குமூலம் தந்தாள்
’எனக்கு அணி செய்து கொள்ளத் தெரியாது
சிறு  வயது முதலே பழக்கமில்லை’

தனது
எளிய
தூய
அகத்தால்
கணமும்
தான்
அணிசெய்யப்படுவதை
அவள்
அறிந்திருக்கிறாளா
என்பது
தெரியவில்லை

Thursday 9 May 2019

நொடி

கையில் கட்டியிருக்கும்
துடிக்கும் இதயம்
சீர்மை கொண்டிருக்கிறது
அதில் பிசிறுகள் இல்லை
ஏற்ற இறக்கங்கள் இல்லை
நினைத்தால்
நீக்கி வைத்து
மீண்டும்
பொருத்திக் கொள்ளும்
வாய்ப்பு இருக்கிறது

எப்போதோ
அது
காட்சிகளாக நகர்கிறது
எப்போதோ
அது
முகங்களாக நகர்கிறது
எப்போதோ
அது
தொடர் நினைவுகளாக
நகர்கிறது

எப்போதும்
வாழ்க்கையாக
நகர்கிறது

Wednesday 8 May 2019

மிதத்தல்

கரை எங்கோ தெரியும்
ஆற்றில்
மிதக்கும்
ஒற்றைப் படகென
பரபரப்பான
சாலையில்
செல்கிறது
நீ
இயக்கும்
வாகனம்

நீர்மை

நீ
ஓர் அகம் கரைதலாக
தூய்மையின் சுடர் நெருப்பாக
கருணையாய்ப் பரவிடும் ஒளியாக
அன்பின் தருநிழலாக
பிரியங்களின் மேகமாக
இருக்கிறாய்

தாகம்  தீர்க்கிறது
தண்ணீர்

Tuesday 7 May 2019

தூது

என் வீட்டு மாடித் தோட்டத்தில்
சிறகு இமைக்கும்
வண்ணத்துப்பூச்சியை

பாதையில்
கம்பி வடங்களில்
அமர்ந்திருக்கும்
கரிச்சானை

வாசல் மாமரத்தின்
பொந்தில்
வசிக்கும்
பச்சைக்கிளியை

வீட்டுக்கு அருகிருக்கும்
சிறுவனத்தில்
அலைந்து திரியும்
நீலமயிலை

தூதாக அனுப்புகிறேன்
ஒரு சொல்லுடன்
அது எப்போதும்
உனது பெயராக இருக்கிறது

அவை தினமும்
உனைக் கண்டு
சொல் உரைத்து
திரும்பி வருகின்றன
உனது மௌனத்துடன்

Monday 6 May 2019

சுற்றம் சூழ்தல்

தினமும்
பொழுது விடிந்ததும்
வீட்டு வாசல் படியில்
வந்தமர்ந்து விடுகின்றன
சில
தவிட்டுக் குருவிகள்
மைனாக்கள்
தேன் சிட்டுக்கள்
காகங்கள்
அணில்கள்

அதிகாலை நடை முடித்து
திரும்பி  வரும்
என்னைக் கண்டதும்
கிச் கிச் என்று
குருவிகள்
சிலம்பும்
வீட்டின் கூடத்துக்குள்
என்னைத் தொடர்ந்து வரும்
காம்பவுண்டு சுவரின் மேலிருந்து
காகங்கள் மிரட்டுவது போல் கரையும்

வாசலில் நிற்கும்
காரின்
டூ வீலரின்
ரியர் வியூ ஆடியை
டொக் டொக் என்று
அலகுகளால் கொத்தும்

அப்பாவும் அம்மாவும்
தானியங்கள் போடுவார்கள்
குருவிகள்
தினமும்
தத்தம்
புதிய புதிய நண்பர்களை
கூட்டிக் கொண்டு வருகின்றன

அப்பா ஊருக்குச் சென்றால்
என்னிடம்
காலையிலேயே குருவிகளுக்கு
தானியம் இட்டு  விடு
என்று
ஒவ்வொரு முறையும்
சொல்லி விட்டு செல்கிறார்

அம்மா இல்லையென்றால்
குருவிகள் கூடுதல் குரலெழுப்பும்
காக்கை குருவியின்
சுற்றம் சூழ இருப்பது
ஒளி மிக்கதாக்குகிறது
ஒவ்வொரு நாளையும்

லஷ்மிகரம்


அந்த இளம்பெண்
பணி விடுமுறையாயிருந்த
ஞாயிற்றுக்கிழமை ஒன்றில்
தாமதமாக ஆற்றிய
எல்லா அன்றாடப் பணிகளுக்கும்
அப்பால்
முன்மதியத்தில்
தன் அன்னையிடம்
மருதாணி பூசிக் கொள்ள
மென்மையான
தன் உள்ளங்கைகளை
இணைத்து வைத்துக் கொண்டாள்

இணைந்திருந்த அந்த கைகள்
பொழியும் அருவியைப் போலிருந்தன
நதியின் பாதைகள் குறிக்கப்பட்ட
தேச வரைபடம் போலிருந்தன
அந்த பெண்ணின் அன்னை
மருதாணி இடும் முன்
அவள் உள்ளங்கைகளில்
முத்தமிட விரும்பினாள்
அவள் பிறந்த போது
இட்ட
முதல் முத்தத்தைப் போல
சொல்லாக்க இயலாத உணர்வுடன்
ஈரம் கொண்ட மருதாணிப் பத்தை
வைக்கத் துவங்கினாள்
மருதாணி மகுடம் தரித்தன
பத்து விரல்கள்
பச்சைக் கோலம்
பரவியிருந்தன மற்ற பகுதிகள்

தன் மூச்சால்
ஏறி இறங்கும்
தோள்களைக் கவனித்தவாறு
சிறிது நேரம் அசைவின்றி
அமர்ந்திருந்தாள்
மணிக்கட்டுக்கு வந்த வளையல்களை
அன்னையிடம்
மேலேற்றி விடச் சொன்னாள்
பக்கத்து வீட்டு குழந்தையிடம்
தன் மூக்குக் கண்ணாடியை
சரிசெய்யச் சொன்னாள்
அக்குழந்தை கண்ணாடியை
கையில் எடுத்துக் கொண்டு ஓடியது
துரத்திப் பிடித்து
மூக்குக் கண்ணாடியை மீட்டாள்
கைகளைக் கழுவலாமா என
அவ்வப்போது அன்னையிடம் கேட்டாள்
இன்னும் மூன்று மணி நேரத்துக்கு
அசைக்கவே கூடாது
என அன்னை சொன்னதை
சிணுங்கலுடன் கேட்டுக் கொண்டாள்
அன்றைய மதிய உணவை
தட்டில் பிசைந்து
ஊட்டி விட்டாள்
அவள் அன்னை
கைகள் அசையாமல்
சிறிது நேரம் உறங்கி
விழித்து
நீரால் கைகளைக் கழுவி
அந்தி வானமெனச்
சிவந்திருந்த உள்ளங்கைகளை
அன்னையிடம் ஆர்வமாகக் காட்டினாள்

அவள் உள்ளங்கைகளைத்
தன் கண்ணில் ஒற்றிக் கொண்ட
அன்னை
நீ லஷ்மி
நீ லஷ்மி
என்று சொன்னாள்

சிரித்துக் கொண்டே
அந்த இளம்பெண்
தன் பெயர் லஷ்மி அல்ல என்று சொல்லி
தன் பெயரைச் சொன்னாள்
அந்த பெயரும்
லஷ்மிகரமாகவே
இருந்தது



மூக்குக்கண்ணாடி

அவள்
அணிந்திராத போதும்
நன்றாய் அறிந்திருந்த
அவள் விழியசைவுகளை
பயிற்சி செய்து பார்க்கிறது
அவள் மூக்குக்கண்ணாடி
மேஜை மேல் இருந்த
மூக்குக்கண்ணாடியைப் பார்த்து
கிண்டர் கார்டன் செல்லும்
ஒரு குழந்தை
லிட்டில் ஸ்டார்
என அவள் கண்ணாடியை
கையில் எடுக்கப் போனது

அவள்

அவள் ஒரு மலர்
அவ்வப்போது வான் நோக்குவாள்
அப்போது
ஒளி மிக்க வேறொரு
மலராவாள்
மென்மையாய்ப் புன்னகைக்கும் போது
ஒரு மலர்க்கொத்து
என்றாவாள்
அவள் கருணை வெளிப்படும்
கணங்களிலெல்லாம்
அபூர்வ மணம் கொள்வாள்
அவள் நீங்கிச் சென்ற பின்னும்
நீங்காமல் இருக்கும்
அந்த மணம்
அவள் எப்போதாவது சிந்தும்
விழிநீர்
புல்வெளிகளுக்கு இடையே
பூத்திருக்கும்
சிறுமலர்களாய்

அடர்த்தி

நம் உரையாடலில்

உன்னைப் பற்றிய புகழ்மொழிகள் எதையும் நான் உரைத்ததில்லை
நான் கண்ட உன் இயல்புகளைக் கூறியிருக்கிறேன்
அவை என் சொற்களுக்கு அப்பாலும் ஒளிர்கின்றன
சொல்லாக்கப்பட்டால் உன் இயல்புகளின் முழுமையை வெளிப்படுத்த இயலாதோ என தயங்கி
எப்போதும் மௌனத்தை வெளிப்படுத்துகிறேன்

நம் மௌனங்கள் அடர்த்தி கொள்கின்றன

நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஓர் இரவில் பெய்த அப்பெருமழையைச்
சுமந்திருந்த மேகங்களின் அடர்த்தி எத்தனை
அதுதான் அலைவாயில் கடல் தீண்டியதோ?

நீ திறந்திருக்கிறாய்
வானம் போல
காணும் தோறும்
அற்புதங்கள் பெருகும் வெளியென

Sunday 5 May 2019

தவம்

வான் தீண்ட எழும்பும்
வேள்வித்தீயின்
ஆயிரமாயிரம்
நாக்குகள்
காதல்
உன்
அன்பின் மழைக்காக
நித்ய
தவமியற்றுகிறது
பூமி

Saturday 4 May 2019

உயிர்

நீ

அலைகள் ஆர்ப்பரித்த போது
ஆழ்கடலின் அமைதியுடனிருந்தாய்

மேகங்கள் நிறைந்திருந்த
வானமாய் இருந்தாய்

வான்மீன்களுக்கு நடுவே
அரசியென கொலு அமர்ந்தாய்

இலையெல்லாம்
பூவாக
மரத்தில் மலர்ந்திருந்தாய்

படிக ஒளி
மூக்குத்தியில்
ஒளிர்ந்தது
கலங்கரை விளக்கம் போல

இறைமையின்
பிரியத்துக்குரிய
தோழியானாய்

அன்பு குறித்து சில அவதானங்கள்

அன்பின் சொற்கள்
மௌனத்துக்கும் மெல்லொலிக்கும்
இடையில்
இருக்கின்றன

அன்பின் வெளிப்பாடுகள்
நுண்ணியதிலும்
நுண்ணியதாக
உருவம் பெறுகின்றன

அன்பின் பிரதேசங்கள்
விண்ணுக்கும்
புவிக்கும்
அப்பால் உள்ளன

அன்பின் முதற்சொல்
உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது
யுகாந்திரங்களாக

அசைவற்ற புவியை
சலனமுறச் செய்தது
அன்பின் இருப்பு

நம்பிக்கை

புயலால்
அலைக்கழிக்கப்பட்ட
ஒற்றைப் படகைச் சுற்றி
திசையெங்கும் கடல்
படகிலிருப்பவன்
நம்பிக்கையுடனிருக்கிறான்
எஞ்சிய கலனில்
சேகரித்துக் கொள்கிறான்
பெய்யும்
மேகங்களின் நீர்த் துளிகளை

அடுத்த கண
நிகழ்வுகளின்
எண்ணம் இன்றி
கரிப்பை
இனிக்கச் செய்யும்
ரசவாதத்தை நினைத்துப் பார்க்கிறான்
அன்பின் மாய ரசவாதத்தை
அன்பின் ரசவாதியை

சில கணங்கள்

நீ
என்னிடம் பேசிக் கொண்டிருந்தாய்
உன் மீது பிரியமாய் இருந்தவர்களை
உன் மீது பெரும் நம்பிக்கை வைத்தவர்களை
உன்னை எப்போதும் மனமுவந்து பாராட்டியவர்களை
உன்னை வாழ்த்துபவர்களை
குதூகலம் தந்த அலைகடல் கரைகளை
மலைப்பிரதேசங்களின் குளிரை
மனிதர்கள் பொங்கும் நகரங்களை
காண விரும்பும் புதிய நிலப்பரப்புகளை
மலர்கள் பூத்திருக்கும் நீண்ட புல்வெளிகள் கொண்ட பூங்காக்களை

இவற்றைப் பற்றி
கூறியபோது
நீ
சில கணங்கள்
துக்கம் கொண்டு
மீண்டது
ஏன் என்பதை
நான்
யோசித்து யோசித்துப்
பார்த்தேன்

சொல்லாதல்

நீ
ஒரு காட்சியாக
உள்நுழைந்தாய்
ஓர் இனிய காட்சியாக
உனது கண்கள்
உனது மென்மையை
வெளிப்படுத்திக் கொண்டிருந்தன
கருணையின் நீர்மையால்
ஈரம் கொண்டிருந்தன
இந்த உலகைப் பார்க்கும்
உனது கண்கள்
பிரியமானவை
உனது சொற்கள்
உனது சொற்களுக்கு இடையே
ஏற்படும்
இடைவெளிகளும் தயக்கங்களும்
மேலும்
பிரியம் கொண்டிருந்தன
உனது கனவுகளின் பிரதேசம்
வெள்ளிப் பனிமலைகளும்
அலைகடல் ஆழங்களும்
உனது காட்சியை
சொற்களாக்குகையில்
என்னைச் சூழ்கின்றன கார்மேகங்கள்
தென்றல் தீண்டிச் செல்கிறது
உடனிருக்கிறது அருவிச்சாரல்
அனல் நீக்கும் குளிர் நிறைகிறது
எங்கும்

Friday 3 May 2019

ஊற்று

வீட்டு மாடியில்
கோடை இரவில்
நட்சத்திரங்களுக்குக்  கீழே
தென்றல் உலவுகையில்
வானம் பார்த்து
படுத்திருக்கிறேன்
பொங்கும் ஊற்றென
தென்னை மட்டைகள்
மண்ணிலிருந்து விண் நோக்கி
பொங்கும் ஊற்றுகள்
அருவியென
சில
வழியவும் செய்கின்றன
மாடித் தரை தொட்டு

உன்னிடமிருந்து

உன்னிடமிருந்து
எவ்வளவோ பெற்றுக் கொண்டேன்
ஒரு விஷயத்தை
மேன்மையாகப் புரிந்து கொள்ளும்
வழிமுறைகள் மட்டுமே
உன்னிடம் இருந்தன
யாருடைய துக்கத்துக்காகவும்
நீ துயரப்பட்டாய்
பிறருக்காக சிந்துவதற்கு
எப்போதும்
உன்னிடம் கண்ணீர் இருந்தது
பிழைகளைத்
தவறுகளை
இயல்பாக மன்னித்தாய்
நீ நினைக்கப்படும் போதெல்லாம்
அங்கே நிறைகிறது
உன் நேசத்தின் நறுமணங்கள்
உன் அகம்
அன்பால்
ஒட்டுமொத்தமாக
இந்த உலகை
ஒரு குழந்தையாக
மாற்றுகிறது

வான் தெய்வங்களின்
நிஷ்டையை
அவ்வப்போது
கலைத்தது
புவியில்
உன் இருப்பு
...

பசுமை

வெம்மைப் புகை எழும்
புழுதியாலான பிரதேசத்தில்
மண் உறையும்
புல் வேராய்
நீ
காத்திருக்கிறாய்
ஒரு சிறு மழை
பொழிந்து
பசும் உயிராய்
அந்நிலம்  முழுதும்
உன் அன்பால்
அணைத்துக் கொள்ள

Thursday 2 May 2019

கடவுள் காணும் காட்சி

லட்சம் பேர் திரண்டிருக்கும்
அம்மைதானத்தில்
அந்த இளைஞன் முகம்
சிறுவனைப் போல
நாணிச் சிவந்திருந்தது

கால்பந்துக்கும்
அவனுக்கும்
மெல்லிய
நுட்பமான
ரகசிய
புரிதல்
இருந்தது

அணைக்கையில்
பூரணமாய்
ஒப்புக் கொடுத்திருக்கும்
காதலியைப் போல
கால்பந்து
அவனிடம்
நடந்து கொண்டது

அவனும்
கால்பந்தும்
பரிபாஷையில்
உரையாடிக் கொண்டிருந்தனர்
ஒருங்கிணைக்கப்பட்டிருந்தனர்

அவன் கண்கள்
அக்கால்பந்தின்
மேலேயே
இருந்தது

அவனுக்கு
நான்கடி முன்னால்
உருண்டு கொண்டிருந்த
கால்பந்து
அவன் கால் தொடும் முன்னாலேயே
அவன் மனம் நினைத்த திசைக்கு
திரும்பியது

அவனும்
பந்தும்
கால்பந்தாட்டத்துக்குள்
ஒரு
தனி விளையாடலை
ஆடிக் கொண்டிருந்தனர்
ஒரு தனி உலகை
உருவாக்கிக் கொண்டு
அதில் உலவிக் கொண்டிருந்தனர்
காதலர்களைப் போல

அவனால்
goal விழும் போதெல்லாம்
ஒவ்வொரு முறையும்
கடவுள் பார்த்தார்
தன் வேலைகளை
ஒதுக்கி வைத்து விட்டு


இருந்து விட்டு போகிறேன்

இந்த நகரில்

ஓர் அன்னையிடமிருந்து
அவள் குழந்தையை
சற்று நேரம் வைத்திருந்து
திருப்பித் தருபவனாக

ரயில் கடக்கையில்
உற்சாகமாய் கையசைக்கும்
மைதானத்துச் சிறுவர்களைப் பார்த்து
புன்னகைத்துக் கையசைப்பவனாக

தினமும் காலைப் பொழுதில்
வீட்டு வாசலுக்கு வரும்
குருவிகளுக்கு
தானியம் அளித்து
மகிழ்ந்து பார்த்திருப்பவனாக

பெருஞ்சுமை சுமந்து
சோர்ந்திருப்பவர்களுக்கு
சில கணங்கள்
ஆசுவாசம் அளிப்பவனாக

முடிவற்ற
தீராக்காதலை
தூய சொற்களில்
தெரிவித்துக் கொண்டேயிருப்பவனாக

அன்பின் பாலம்
உருவாக்கப்படும் போதெல்லாம்
அணில் போல
பிரியத்தின்
கைமணலை இடுபவனாக

இருந்து விட்டு போகிறேன்

புரிதல்

உன்னைப் புரிந்து கொள்வது
என்பது
மிக எளிதான ஒன்று
உனது மனம்
மேன்மைகளால்
குதூகலங்களால்
அன்பின் ஒளியால்
புத்தம் புது உணர்வுகளால்
உலகின்
எப்போதுமிருக்கும் அற்புதம்
உணரும் தன்மையால்
பிரியத்தால் இறைமை கொள்ளும் இயல்பால்
ஆனதாக
இருக்கிறது

என்னால்
உனது கண்ணீரைப்
புரிந்து கொள்ளவே முடியவில்லை

Wednesday 1 May 2019

நீர்மை

பள்ளி விட்டதும்
ஹோ என ஒலி எழுப்பி
திறந்திருக்கும் பெரிய gateன் வழியே
வெளியே பாயும்
குழந்தைகள் கூட்டம் போல்
இன்று இரவு 9.16க்கு
வந்தது
மழை
தார்ச்சாலையில் படும் சத்தம்
மண்பரப்பில் கொட்டும் சத்தம்
கார் பார்க்கிங் ஷீட் மேல் கேட்கும்
டமார சத்தம்
என
ஜூகல் பந்தி கச்சேரி
கரண்ட் கட் ஆனது
வீட்டுக் கூடத்தின் காற்றில்
நிரம்பியது நீர் ஈரம்
சிறு மழை கூட
இந்த வாழ்க்கை மேல்
சட்டென
கூடுதல் நம்பிக்கையை
அளித்து விடுகிறது

ஆழம்

மௌனம் அடர்ந்திருக்கும்
மலைகளின்
குளிர்க் காலைப் பொழுதுகளைப் பற்றி
கேட்டுக் கொண்டிருந்த போது
புல்நுனி பனிநீரின் தூய்மை
உன் முகத்தில்
நிறைந்தது

முற்பகலில் கடந்து சென்ற
வனாந்தரங்களின் நிழல்
குறித்து சொன்ன போது
அடர்ந்த இலைகளால்
கூரையிடப்பட்ட
ஈரப்பசுமை
உன் சொற்களில்
வெளிப்பட்டது

பிற்பகலில்
ஒரு சிறு சாலையில்
கிளை பிரிந்து சென்ற
மண்பாதையின்
முடிவில்
இருந்த சிற்றாலயத்தின்
கருங்கல் படிக்கட்டுகளில்
அமர்ந்து கண்ட
தடாகத்தைக் காட்சிப்படுத்திய போது
நீ
கணந்தோறும் மலரும்
மலரானாய்

மாலையில்
ஒரு சிறு குன்றின்
பாறை
ஒன்றின் மீதமர்ந்து
கண்ட
முதல் நட்சத்திரம் குறித்து
கேட்ட போது
நீ புன்னகைத்தாய்
விண்மீன் போல

அந்த மாநகரின் இரவில்
அன்னையின் தோள்களைக்
கட்டிக் கொண்டு
வெட்கத்தால் முகம் நாணும்
குழந்தையைப் பற்றி
உன்னிடம் சொன்ன போது
நீ ஆனாய்
ஒரு பிள்ளையாக
ஓர் அன்னையாக