Wednesday 2 January 2019

ஒரு பயணம் நிகழும்

கிளம்பியிருக்கும்
ஒவ்வொரு பேருந்தையும்
தவிர்த்து விட்டு
சற்று தள்ளி நின்று
கவனத்தை அங்கேயே வைத்திருக்கும்
கணவன்
அருகில் வந்து
ஓரிரு வார்த்தைகள்
பேசும் போதெல்லாம்
கண்ணீர் மல்கும் தாயின்
அருகாமையில்
இருக்கும் சிறுவன்
சூட்கேஸ்களில் அமர்ந்து
எழுந்து
மெலிதாக எழும் அழுகுரல்
உண்டாக்கும்
அதிர்வுகளுக்கு
அப்பால்
பேருந்துப் பயணத்தில்
முகத்தில் மோதப் போகும்
காற்றையும்
நில்லாமல் ஓடும் மரங்களையும்
கற்பனை செய்கிறான்

அந்த கணவன்
எதற்காகக் காத்திருக்கிறான்?
உறுதியளிக்கப்பட்ட கடனுக்காகவா?
வந்து சேர வேண்டிய தொகைக்காகவா?
குடும்ப பிரச்சனையா?
நெருங்கியவர்கள் மரணமா?

சட்டென முடிவெடுத்து
மூவரும்
ஒரு பேருந்தில்
ஏறி அமர்கின்றனர்

துயரங்களிலிருந்து
துயரமின்மைக்கும்
ஒரு பயணம் நிகழும்