Thursday 25 April 2019

பெருமழை

உன்னிடமிருந்து அகன்று கொண்டிருந்தேன்
கரை வழியப் பாய்ந்த நதி பாதத்தில் அனலாய் தகித்தது
கோடையின் நிலத்தின் மேல் வட்டமிட்டன பருந்துகள்
வெளுத்த தரையில் நின்றிருந்த மரங்கள் சோராமல் வான் பார்த்தன
கொதிக்கும் பாறைகள்
சப்பாத்திக் கள்ளிகள் முட்செடிகள்
நம்பிக்கை இழக்காத கீரிகள் காத்திருந்து சாலையைக் கடந்தன
மண்ணிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டேயிருந்தது எறும்பு நிரை
உனது மென்பாதங்கள் நினைவில் இருந்து அகன்றன
மனமெங்கும் நிறைந்த துயர்
பாதையில் தீண்டிய முட்களால் சிந்தப்பட்டது குருதி
தாகத்துக்கு அலையும் தோறும்
ஒவ்வொரு கணத்திலும்
நினைவில்
நீங்கிக் கொண்டேயிருந்தது
உன் உள்ளங்கையின் ரேகைகள்
மூச்சை மட்டும் பற்றி
உடல் பிரக்ஞை அகற்றி
சென்று கொண்டேயிருந்தேன்
நரகங்களே எதிர்ப்பட்டாலும் கடக்கும் வெறியுடன்
எரிவிண்மீன் என
எப்போதாவது உன் புன்னகை
காட்சியாய்த் தெரிந்தது
உணர்ச்சி வசப்படாது
ஒரு கணம் கலங்காது
வறண்ட விழிகளால்
நிலம் நோக்கிக் கொண்டேயிருந்தேன்
கோடையின்
வெப்பமும் வறட்சியும்
நிறைந்தது
அகமெங்கும்
பாறைகள்
பிளந்த நிலங்கள்
ஆழ்ந்த ஆழங்கள்
தீராப்பசி
கட்டுக்களிலிருந்து இப்போதே விடுபட எண்ணும் மனம்
தாகம் மட்டுமே உணர்வென ஆகி
வீழ்ந்தது
மண்ணில்
மூடிய இமைகளில் கரும் இருள்
இருளின் முடிவற்ற சுழல்கள்
ஒரு பதட்டம்
எல்லாம் இவ்வளவு தானா
என்னும் பதட்டம்
இதுதான் முடிவா என்னும் வெறுமை
இனி செய்ய ஏதுமில்லை
என்னும்
கையறு நிலை
நினைவுகள் அற்றுப் போன
உணர்வுகள் முற்றும் வறண்ட
கணத்தில்
சேற்றின் செந்தாமரையென
நீ
அகத்தில் எழுந்தாய்
மாசற்ற முகம் கொண்டு
நோக்கினாய்
புழுதி மணம் எழ
முதல் மழைத்துளி
என் மேல் விழுந்தது
பாலை நிலமெங்கும்
பெய்யத் துவங்கியது
உயிரின்
ஓயாப் பெருமழை