Tuesday 11 June 2019

வி. பி. சிங்

எனது தந்தை தீவிரமான காங்கிரஸ் ஆதரவாளர். அவரிடமிருந்தே எனக்கு சுதந்திரத்துக்குப் பின் இந்தியா சந்தித்த சவால்கள் குறித்த சித்திரங்கள் உருவாயின. அப்போது  தொழில்நுட்பத்தின் மீது தீராப் பற்று கொண்டிருந்தார்.  இப்போதும். தொழில்நுட்பமே நாட்டின் எல்லா சிக்கல்களுக்குமான தீர்வு என்று உறுதியாக நம்பினார். அந்த காலகட்டத்தின் இயல்பு அது. ‘’இருபத்து ஓராம் நூற்றாண்டை நோக்கி’’ என்பது அன்றைய ஆகப் பெரிய கோஷம். ஆதலால் அன்று காங்கிரஸுக்கு எதிரான அத்தனை சக்திகளும் பிற்போக்கு சக்திகளாக அடையாளம் காட்டப்பட்டன. அப்பா என்னிடம் அவரது எண்ணங்களைத் தொடர்ந்து சொல்வார். எனக்கு அவர் சொல்வது அத்தனையும் முக்கியமாகத் தோன்றும். எனது சித்தப்பா அப்பா சொல்லும் விஷயங்களில் இருக்கும் இடைவெளிகளை என்னிடம் சுட்டிக் காட்டுவார். அவற்றை நான் நானே யோசித்துக் கேட்பதாக அப்பாவிடம் கேட்பேன். அல்லது மனதுக்குள் வைத்துக் கொள்வேன். அப்பா வி.பி.சிங்கை கடுமையாக விமர்சித்தார். அவரது கடுமையான விமர்சனங்கள் மூலமே எனக்கு வி.பி. சிங் அறிமுகமானார். சிறுவனாயிருந்த எனக்கு வி.பி. சிங் முகத்தைப் பார்க்கும் போது அவர் நல்லவர்; நம்பகமானவர் என்ற எண்ணம் உண்டாயிற்று. 

அப்பா ஒருமுறை கடுமையாக வி.பி.சிங்கை விமர்சித்த போது, ‘’சில நாட்கள் முன்பு வரை அவர் காங்கிரஸ் தலைவர்தானே. கட்சியிலிருந்து விலகியதும் எல்லா தீமைக்கும் அவர் காரணமாகி விட்டாரா’’ என்று கேட்டேன். அப்போது எனக்கு ஒன்பது வயதிருக்கும் என்று நினைக்கிறேன். வி. பி. சிங் பிரதமரான போது நான் மகிழ்ந்தேன். அப்போது தூர்தர்ஷனில் ஆங்கிலச் செய்திகளிலும் தமிழ்ச் செய்திகளிலும் ‘’தேசிய முன்னணி’’ அரசாங்கம் குறித்த செய்திகள் வரும். அந்த அமைச்சரவையில் பிரதமரை அடுத்து நான் மிகவும் விரும்பியது ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸை. 

‘’பரீக்‌ஷா’’ ஞாநி வி. பி. சிங்கின் தமிழ்நாட்டு சுற்றுப்பயணங்கள் போது உடனிருந்து அவரது ஹிந்தி உரைகளை தமிழில் மொழிபெயர்ப்பவர். அதைப் பற்றி ‘’தீம்தரிகிட’’ இதழ்களில் எழுதியிருக்கிறார். கிண்டலும் பகடியும் வாக்கியத்துக்கு வாக்கியம் வெளிப்படும் உரைகள் அவை என்கிறார். அக்கட்டுரைகளில் வி.பி.சிங்கின் இயல்புகள் குறித்த தன் அவதானங்களை எழுதுகிறார் ஞாநி.

வி.பி.சிங் ஓர் ஓவியர். ஞாநியிடம் தமிழில் வி.பி.சிங் என்று எழுதிக் காட்டி தமிழில் தன் பெயரை இப்படித்தானே எழுத வேண்டும் என்று கேட்டாராம். ஞாநி வியப்புடன் எவ்வாறு அறிந்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். சுவரெழுத்துக்களில் பார்த்தேன். ‘’தேசிய முன்னணி’’ தேர்தல் சுவரெழுத்துக்களில் இரண்டு எழுத்து பெயருக்கு முன் வருவது எனக்குத்தான் என்பதால் இதுவே தமிழில் என் பெயரை எழுதும் முறை என்று அறிந்தேன் என பதில் சொல்லியிருக்கிறார்.

‘’மண்டல் கமிஷன்’’ பரிந்துரைகளை செயலாக்கியது அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கை. அவர் மீதும் அவர் அரசின் மீதும் எந்த ஊழல் புகாரும் இல்லை.