Wednesday 19 June 2019

வரலாறும் கற்பனையும்

புறவயமாக எழுதப்பட்ட இந்திய வரலாறு என்பதை இந்தியாவில் பிரிட்டிஷார் எழுதத் தொடங்குகின்றனர். கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆவணங்களின் அடிப்படையில் அவர்களின் வணிகப்பரவலின் அடிப்படையில் அவர்கள் இந்த பணியைத் தொடங்குகின்றனர். பின்னர் ’’இந்தியவியல்’’ என்ற துறை கல்விப்புலத்தில் உருவாகிறது. இந்திய மொழிகளை சிற்பவியலை பயின்று இந்தியவியல் அறிஞர்கள் உருவாகின்றனர். அவர்கள் இந்திய இலக்கியங்களை, சிற்பவியலை, கல்வெட்டுக்களை, கட்டுமானங்களை பயின்ற பின்னர் அவற்றைத் தொகுத்து இந்திய வரலாற்றை தங்கள் கோணத்தில் யூகிக்கின்றனர். அது ஐரோப்பியப் பார்வை கொண்டுள்ளது. அதில் அவர்களின் அரசியல் அபிலாஷைகள் கலந்திருந்தன. பின்னர் இந்தியர்கள் இந்தியவியலைப் பயின்று இந்திய வரலாறை எழுத முயல்கின்றனர். இயல்பாக அவர்கள் ஐரோப்பியர்கள் எழுதியவற்றின் போதாமைகளையும் இடைவெளிகளையும் சுட்டிக் காட்ட முயல்கின்றனர். தங்கள் கோணத்தை முன்வைக்கின்றனர். இன்றுவரை இந்திய வரலாற்று ஆய்வாளர்களில் இந்த இரண்டு தரப்பும் வலுவாக இருக்கிறது. ஐரோப்பியப் பார்வையில் இந்திய வரலாற்றை அணுகுவது, இந்தியத் தன்மையுடன் அணுகுவது. 

கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்படும் இந்த துறையில் முன்வைக்கப்படும் விஷயங்கள் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன. பரிசீலிக்கப்படுகின்றன. வரலாறு எழுதப்படுவதன் முறைமைகள் சார்ந்து கூட ஒரு பிரத்யேக அறிவுத்துறை உருவாகியுள்ளது. வரலாறு மிகப் பெரியது. எழுதப்பட்ட வரலாற்றுக்கு இணையாகவே இன்னும் எழுதப்படாத வரலாறும் பயணிக்கிறது. வரலாற்றுத் துறையில் நிகழும் விவாதங்களை அரசியல் அவ்வப்போது பயன்படுத்துகிறது.

இந்திய ஜனநாயகம் உருவாகி நிலைபெற்ற காலகட்டம் சவாலானது. மதக் கலவரங்கள், பஞ்சம், வெளிநாட்டுத் தாக்குதல்கள், அன்னியத் தலையீடு மற்றும் உள்நாட்டுக் குழப்பங்கள் ஆகியவற்றைத் தாண்டி வந்துள்ளது. இந்தியாவில் இன்றும் ஊழல் மிகப் பெரிய சிக்கல். அதிகாரவர்க்கம் அரசைச் சுரண்டுவதை அதிகார முறைகேடுகளை எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்கிறது. அது பிரிட்டிஷ் ஆட்சிமுறையின் தொடர்ச்சி. இந்திய மனநிலை அதனை இயல்பாக ஏற்கிறது. இந்தியாவில் சிவில் விஷயங்களை அரசியலின் மையத்துக்குக் கொண்டு வந்தது மகாத்மா காந்தி ஒருவரே. அவரது அனைத்துப் போராட்டங்களும் அரசு எவ்விதம் இயங்க வேண்டும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டவை என்பதுடன் இதை இணைத்து யோசித்துப் பார்க்கலாம்.

இப்படி யோசித்துப் பார்ப்போம். இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்க்கை எவ்விதம் இருந்திருக்கும். நாம் வாழும் ஊரை எடுத்துக் கொள்வோம். 1969ல் ஊரின் மக்கள்தொகை எவ்வளவு? எத்தனை கால்நடைகள் இருந்தன? அதில் மாடுகள் எத்தனை? ஆலயங்களில் எத்தனை கால பூஜை நடந்தது? திருவிழாக்கள் அக்கோயிலில் ஆண்டுக்கு எத்தனை நடந்தன? அக்கோயிலின் குத்தகை வருமானம் என்ன? மக்கள்  அதிகமாக பாதிப்புக்குள்ளான நோய்கள்  என்ன? கல்வி நிலையங்கள் எத்தனை இருந்தன? மாணவர்களில் ஆண்கள் எத்தனை? பெண்கள் எத்தனை? ஊரில் விவசாய நிலத்தில்  சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் எத்தனை டன்? ஊரில் என்னென்ன தொழில்கள் நடந்தன? யார் யார் வருமானவரி செலுத்தினார்கள்? எவ்வளவு செலுத்தினார்கள்? எத்தனை பேருந்துகள் ஓடின? எத்தனை ரயில்கள் ஓடின? என்னென்ன ஊர்களுக்கு பேருந்துகள் சென்றன? சினிமா தியேட்டர்கள் எத்தனை? அதில் வருடத்துக்கு எத்தனை படங்கள் திரையிடப்பட்டன? வானொலி எத்தனை பேரிடம் இருந்தது? எத்தனை சைக்கிள்கள் இருந்தன? எத்தனை இரு சக்கர மோட்டார் வாகனங்கள் இருந்தன? எத்தனை நான்கு சக்கர வாகனங்கள் இருந்தன?  என்னென்ன காரணங்களால் ஊர்மக்கள் பயணம் செய்தார்கள்? அதிகமாக பயணம் செய்பவர்களாக யார் யார் இருந்தார்கள்? ஒரு விஷயம் கவனிக்க முடியும். இன்றைய சமூக வாழ்க்கையின் அடிப்படையில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த சமூக வாழ்க்கையை அறிய முயல்வதன் வழிமுறை இது. இன்று ஒரு கிராமத்தில் ஐந்நூறு குடும்பங்கள் இருந்தால் அதில் நானூறு குடும்பங்களிடம் டூ-வீலர் உள்ளது. அன்று டூ-வீலர் அந்த கிராமத்தில்  யாராவது ஒருவர் அல்லது இரண்டு பேரிடம் இருந்திருக்கும். பயணிக்க வசதி குறைவு என்பதால் பயணம் நிகழ்வதன் சாத்தியங்கள் குறைவாக இருந்திருக்கும். தரவுகளின் மூலம் வரலாறை கற்பனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும். வரலாற்றுத் துறை அவ்விதமே இயங்க முடியும்.