Monday 22 July 2019

தேடலும் வேட்டையும்

சில மாதங்களுக்கு முன்னால், புதுச்சேரி நண்பர்களுடன் நடுநாட்டில் இருக்கும் மூன்று நரசிம்ம ஷேத்திரங்களுக்குச் சென்றிருந்தேன். பரிக்கல், பூவரசங்குப்பம் மற்றும் அபிஷேகப்பாக்கம். காலை சென்னை எக்ஸ்பிரஸைப் பிடித்து விழுப்புரத்தில் நான் இறங்கிக் காத்திருந்தேன். நண்பர்கள் காரில் வந்தனர். அவர்களுடன் இணைந்து கொண்டேன். 

ஆங்காங்கே சந்தனக் கடத்தல்காரன் வீரப்பனின் ஆளுயர பேனர்கள். மாலை போட்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். எனக்கு அருவருப்பாக இருந்தது. பலரைக் கொன்ற - தன் சொந்த மகளான கைக்குழந்தையைக் கொன்ற-  ஒரு கொலைகாரனுக்கு எப்படி விசிறிகள் உருவாக முடியும் என்பது அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் வாழ்க்கை இப்படியான பல சமூக அதிர்ச்சிகளை  எப்போதும் அளிக்கவே செய்யும். 

இன்று சில அரசியல் கட்சிகள் பல யானைகளைக் கொன்ற வீரப்பனை ‘’இயற்கையின் காவலன்’’ என்கின்றனர். மணிமண்டபம் கட்டுவோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுகின்றனர். 

ஒரு காவல்துறை ஆய்வாளரின் மகனாகப் பிறந்து சட்டம் படித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று நிர்வாகப் பணியைத் தேர்ந்தெடுக்காமல் காவல்துறைப் பணியைத் தேர்ந்தெடுத்து சவாலான கடும் பணிகளை கேட்டு பெற்றுக் கொண்டு ஏற்ற பல பொறுப்புகளை நிறைவுடன் செய்து முடிக்கிறார் கி. விஜயகுமார் ஐ.பி.எஸ்.,. அவர் வெற்றிகரமாக முடித்த பல பணிகளில் ஒன்று ‘’ஆபரேஷன் ககூன்’’. 

அது பற்றி அவர் எழுதியிருக்கும் Veerappan chasing the brigand என்ற நூலை சமீபத்தில் வாசித்தேன். சிறப்பு அதிரடிப்படையின் தலைமையை ஏற்கிறார் விஜயகுமார். அப்போது அவருக்கு ஐம்பது வயது. அவர் மனைவி அவரிடம் பணி ஓய்வு பெறுவதற்குள் வீரப்பனைப் பிடித்து விடுவீர்களா என்று கேட்கிறார். எட்டு வருடம் தேவைப்படும் என்று நினைக்கிறாயா என்று பதிலுக்குக் கேட்கிறார் விஜயகுமார். வீட்டுக்குள் இடம் மாறியிருக்கும் பொருளைத் தேடவே சிரமப்படுவீர்கள் என்பதால் கேட்கிறேன் என்கிறார் அவர் மனைவி.

வீரப்பனைத் தேடும் வேட்டையில் இருபது ஆண்டுகளாக இருப்பவர்கள்- வீரப்பனை நூலிழையில் தவற விட்டவர்கள் என அனைவரையும் சந்தித்து அவர்கள் அனுபவங்களைக் கேட்டுத் தொகுத்துக் கொள்கிறார். அதைத் தொகுத்ததும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது அவர் மனத்தில் மூட்டமாகப்  புலப்படுகிறது. இந்த நூலே அவ்வாறுதான் விஷயங்களைத் தொகுக்கிறது.

பலர் பல வருடங்களாக தேடிக் கொண்டிருந்த - காத்துக் கொண்டிருந்த - கணம் அவர்கள் முன் வந்து சேர்கிறது. ’’ஆபரேஷன் ககூன்’’ வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது.

வாசிக்க சுவாரசியமான புத்தகம்.