Monday 18 November 2019

ஒரு கருவி

ஒரு கருவி. கையடக்கமானது. டார்ச் லைட் போல் எளிதில் ஆன் செய்ய வேண்டும். ஆஃப் செய்ய வேண்டும். சகலவிதமான வங்கி மற்றும் வணிகச் செயல்பாடுகளின் பணப் பரிமாற்றத்துக்கும் பயன்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அமேசான் கிண்டில் புத்தகம் படிப்பதற்காக மட்டும் என இருப்பதைப் போல. மிகக் குறைவான நேரத்தில் – சில நிமிடங்களில் சார்ஜ் ஆகக் கூடியதாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் ஏடிஎம் கார்டுகள் வந்த போது மக்கள் அதனை மிக இயல்பாகப் பயன்படுத்தத் துவங்கினர். வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு அது மிகவும் பயன் உள்ளது எனக் கருதினர். வணிக நிறுவனங்கள் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள நுகர்வோர் வற்புறுத்தியிருக்க வேண்டும். இந்திய நுகர்வோருக்கு அப்படி பழக்கம் இல்லை. வணிகச் செயல்பாடுகள் அனைத்தும் வங்கிக் கணக்கில் வருவதை பெரும்பாலான வணிகர்கள் விரும்புவதில்லை. ஆதலால் ஒரு பொருளை வாங்கச் செல்லும் போது ஏடிஎம் சென்று பணம் எடுத்துக் கொண்டு கடைகளுக்குச் செல்கின்றனர். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை வணிக நிறுவனங்களில் எலெக்ட்ரானிக் முறையைப் பயன்படுத்துமாறு ஆலோசனை சொல்லலாம். பள்ளி கல்லூரி மாணவர்களிடம் இதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துச் சொல்லலாம். இந்திய வங்கியியல் வரலாற்றில் அவர்கள் எப்போதுமே வாடிக்கையாளர்களை நோக்கிச் சென்று – பேசி- விவாதித்து- எடுத்துரைத்து- பயிற்றுவித்ததில்லை என்பதே உண்மை. வங்கிகள் வங்கிச்சேவைகளை மக்களிடம் கொண்டு செல்ல தற்காலிக ஊழியர்களைக் கொண்ட ஒரு தனி அமைப்பை உருவாக்கிக் கொள்வது இந்தியா போன்ற நாடுகளுக்கு நல்லது. அதை அவர்கள் செய்வதில்லை. ஊழியர்கள் அதில் பெருமளவு ஆர்வம் காட்ட மாட்டார்கள். வங்கிக் கணக்குகள் அதிகரிப்பது அவர்களின் வேலைப்பளுவைக் கூட்டும்.

சகாயமான விலையில் இந்த நோக்கத்துக்காக மட்டும் ஒரு கருவி உருவாக்கப்படும் எனில் சாமானிய இந்தியன் அதன் மூலம் தனது தினசரி வாழ்வின் நுகர்வுத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள அது உதவும்.